கோவை2தில்லி
[அனுபவக் கட்டுரைகள்]
ஆதி வெங்கட்
kovai2delhi@gmail.com
மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com
மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
வெங்கட் நாகராஜ்
venkatnagaraj@gmail.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
கோவை2தில்லி!
ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடியதாக அமைகிறது! மிதமான தட்பவெப்பத்தில், அழகான கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த என்னை, அதிக வெயில், அதிக குளிர், பாஷை புரியாத, அழுக்கான தில்லிக்கு ஏற்றி அனுப்பியது திருமணம்! மனதிற்குள் ஒரு வித பயத்துடனும், எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடனும் தான் தலைநகர் தில்லிக்கு முதல் முறையாக பயணம் செய்தேன்.
கோவையில் இருந்தவரை வீடு, அப்பா, அம்மா, தம்பி, நெருங்கிய உறவினர்கள், மிகக் குறைவான நட்பு வட்டம், தெரியாத வெளியுலகம் என இருந்த எனக்கு தலைநகரத்துக்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது என்னவரின் நட்பு வட்டம் எவ்வளவு பெரியது என! தங்கியிருந்த பகுதியில் இருந்த அனைத்து தென்னிந்த மனிதர்களுக்கும் [அது இருக்கும் நூற்றுக்கணக்கில்!] தெரிந்தவராக இருந்தார் என்னவர். வீட்டிற்கு வரும் நண்பர்கள், நேரே சமையலறைக்கு வந்து “என்ன சமையல் இன்னிக்கு?” என்று கேட்கும்போது வரும் உதறல் கொஞ்சம் நஞ்சமல்ல! சாப்பிட்ட பிறகு தான் செல்வார்கள்! சென்ற புதிதில் நிறையவே பயந்திருக்கிறேன்.
வெளியே போனால் எப்போது திரும்புவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு பொதுச் சேவை அவருக்கு! இரவு திடீரென தொலைபேசி/அலைபேசியில் அழைப்பு வந்தால், “இதோ வரேன்!” என்று புறப்பட்டு விடுவார் – தனியே இருந்தே பழக்கம் இல்லாத எனக்கு இரவு முழுவதும் உறக்கம் வராது – பயத்தில்! ஒரு முறை இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை! நான் வீட்டில் தனியாக உறங்காமல் இருக்க, அவரும், அவருடைய ஒரு நண்பரும் இன்னுமொருவர் வீட்டில் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு – அவர்களுக்குத் துணையாக இறந்து போன அந்த வீட்டு மனிதரின் உடல்! அதிகாலை வீட்டுக்கு, சர்வ சாதாரணமாக இதைச் சொல்லி, ஒரு குளியல் போட்டு கிளம்பினவர், எல்லா வேலைகளும் முடிந்து வீட்டுக்கு வரும்போது மாலை ஐந்து மணி!
என்னதான் விஷாரத் வரை ஹிந்தி படித்திருந்தாலும், ஒரு மொழியைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் நிறையவே வித்தியாசம்! ஹிந்தி தெரிந்திருந்தாலும், தில்லி மக்கள் பேசும் ஹிந்தி புரியாமல் விழிபிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்திருக்கிறேன். ஒரு முறை மார்க்கெட் சென்றபோது “நாஸ்பதி நாஸ்பதி” எனக் கூவிக் கூவி விற்க, என்னவரிடம் “என்னங்க ராஷ்ட்ரபதியை கூவிக் கூவி விற்கறானே” என்று கேட்டுவிட, அவர் இன்றளவும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்! அவர் விற்றது பேரிக்காய் வகைகளில் ஒன்று – அதன் பெயர் ஹிந்தியில் நாஸ்பதி! இப்படி பல முறை பல்பு வாங்கி இருக்கிறேன். ஹிந்தியே தகராறு எனும்போது, ஹர்யான்வி, பஞ்சாபி என பல மொழி பேசும் தில்லி மக்களிடம், “என்னதான் சொல்ல வராங்க?” என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறேன்!
மாற்றம் முதலில் பயமுறுத்தினாலும், நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் – வட இந்திய சமையல் முதல் ஃபுல்கா எனப்படும் சப்பாத்தி செய்வது வரை, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை, சக மனிதர்களை, பாஷையை, என நிறையவே விஷயங்கள் தெரிந்து கொண்டது, புதிய நட்புகளைப் பெற்றது ஆகிய எல்லாமே இந்த மாற்றத்தினால் தான். கோவை2தில்லி தந்த மாற்றங்கள், சில சுவையான நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்! வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக, சேமிப்பாக, மின்புத்தகமாக வெளிக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி.
கோவை, தில்லி என மாற்றி மாற்றி எனது அனுபவங்களைச் சொல்லி இருக்கிறேன். சொல்லி இருக்கும் நிகழ்வுகள், அவை மீட்டெடுத்த உங்கள் நினைவுகள், பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரியப் படுத்தலாமே!
நட்புடன்
ஆதி வெங்கட்
kovai2delhi@gmail.com
15-09-2017
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “கோவை2தில்லி - epub” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.epub – Downloaded 1143 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “கோவை2தில்லி - mobi” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.mobi – Downloaded 726 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “கோவை2தில்லி -A4 PDF” Kovai2delhi%20-%20Adhi%20Venkat.pdf – Downloaded 1622 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
செப்டம்பர் 16 2017