ஸ்ரீ ஸம்பத்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
எழுத்தால் விரிவடைந்த நட்பு எல்லை…
பள்ளி, கல்லூரி கால பாடங்கள் தவிர பிற வாசிப்புகள் புரிதலை விசாலமாக்குகிறது. பல நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வைக்கிறது. பிற வற்றின் மீது கேள்வி கேட்க தூண்டுகிறது. வாசித்தலோடு நின்றுவிடாமல் நமக்கு தோன்றியதை பிறருக்கு சொல்ல எழுதுவது என்பது நம்மை பிறருக்கு அறிமுகப்படுத்தும் வழியாக அமைகிறது.
பொதுவாக இன்றைக்கு எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏராளமான வசதிகள் உள்ளது. யாரும் பிரசுரிக்க வேண்டும் என காத்திருக்க வேண்டியதில்லை. நமக்குத் தோன்றிய கதையோ, கட்டுரையோ, கவிதையோ எழுதி நமக்கு நாமே ஒரு வலைப்பதிவு கணக்கு துவக்கி அதில் பதிவு செய்துவிட்டு குறைந்தபட்சம் நமது நட்புகளிடம் பகிர்ந்தால் அந்த எழுத்துக்கள் பலரை சென்றடைகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையோடு வாசகர்கள் எண்ணிக்கை என்பது நின்றுவிடும். ஒவ்வொரு எழுத்தாளனின் கனவும் தன் எழுத்தை அச்சு வடிவில் பார்க்கவேண்டும், பத்திரிக்கை ஊடகம் வாயிலாக பலரை சென்றடைய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். வலைப்பதிவில் சில காலம் எழுதியபின் அதிகமான நபர்களின் ஈர்ப்பு என்ற நிலை எழுமானால் அத்தகைய நபர்களுக்கு ஒன்றிரண்டு பத்திரிக்கைகளிலும் வாய்ப்பு என்பது கிடைக்கும்.
ஆனால் என்னுடைய எழுத்தைப் பொறுத்தவரை துவக்க நிலையிலேயே “தினமணி” நாளேட்டில் நடுப்பக்க கட்டுரை என்ற வாய்ப்பு கிட்டியது. அதனை தொடர்ந்து மறுக்கப்படும் நீதி> மலிவாகிப் போன மனித உயர்கள், ஊடகங்களுக்கு தேவை ஒழுக்கம் என எனது ஆறேழு கட்டுரைகள் வரை அவ்வப்போது தினமணியில் பிரசுரமாகியது.
இந்த நிலையில்தான் வலைப்பதிவுகளில் நுனிப்புல் மேய்வது மற்றும் இரண்டு வலைப்பூ (ondrusear.blogspot.com, sathikkalaam.blogspot.com) கணக்குகளை துவக்கி சில பத்திரிக்கை பதிவுகளை மீள் பதிவு செய்வது என்றிருந்தது எனது எழுத்துப்பயணம்.
அதோடு வினவு தளத்தின் தோழர் ஒருவரின் தொலைபேசி நட்பு கிடைத்தது. தி இந்து மற்றும் பிரண்ட்லயன் போன்ற பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளை மொழிபெயர்த்து “சித்ரகுப்தன்” என்ற புனைப் பெயரில் அனுப்ப ஆரம்பித்தேன். குறிப்பாக தி இந்துவின் பி.சாய்நாத் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாளர். அவரின் சில கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன். எனது மொழிபெயர்ப்பு கட்டுரைகள் உடனுக்குடன் வினவு தளத்தில் வெளியிட்டதில் எனது ஆர்வம் அதிகரித்தது.
இந்த சூழலில் திருப்பூர் “தேவியர் இல்லம்” என்கிற வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவந்த திரு ஜோதிஜி என்கிற ஜோதி கணேசன் அவர்களின் நட்பு கிடைத்தது. பிறரின் எழுத்துக்களை பாராட்டி ஊக்கப்படுத்துவதில் அற்புதமான நண்பர் அவர். அவர் மூலமாக கிழக்கு பதிப்பகத்தின் திரு ஜி.மருதன் என்கிற தோழரின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
துவக்கத்தில் எனது எழுத்தின் எல்லை என்பது புதிய பொருளாதாரம்> தொழிலாளர் வேலை இழப்பு, தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் தனியார் மய தாக்குதல்கள் என்பது சார்ந்த ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்து அது பலரை சென்றடைய வேண்டும் என்பதும், மற்றபடி நான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியிலிருப்பதால் எனக்கு தெரிந்த பயணிகள் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த கட்டுரைகளை எழுதுவது என்பதற்குள் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த வகையில் படிக்கட்டு பயண அபாயம் குறித்தும், டீசல் விலை உயர்வு குறித்தும் எழுதிய கட்டுரைகள் 2013 துவக்கத்தில் திரு மருதன் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்த ஆழம் எனும் மாதப்பத்திரிக்கையில் பிரசுரமாகியது.
அதே சமயம் வலைப்பதிவுகளில்> இணையங்களில் தனியார்மயத்திற்கு ஆதரவாக தொடர்ந்துகுரல் கொடுத்து வரும் திரு அதியமான் என்பவர் ஆழத்தில் “ஜனநாயகமா, சர்வாதிகாரமா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால்தான் அடிப்படை ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்ட முடியும் என தெரிவித்திருந்தார். அந்த கட்டுரையை படித்த மறு நிமிடமே, திரு மருதன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் முற்றிலுமாக நான் மாறுபடுகிறேன் என்கிற வகையில் எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதினால் பிரசுரிப்பீர்களா என கேட்டேன். அவரும் உடனே அனுப்பச் சொன்னார். அடுத்த இதழிலேயே எனது கட்டுரை “சுதந்திர சந்தைப் பொருளாதாரம் – வளர்ச்சியா, வீழ்ச்சியா” பிரசுரமாகி பலத்த வரவேற்பை பெற்றது. அது ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.
ஏனென்றால் அதனை தொடர்ந்து திரு மருதன் அவர்கள் எனது பார்வையை போக்குவரத்து தொழிலாளர் என்கிற எல்லையோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள், முக்கியங்கள்> போராட்டங்கள் என சமூக அடிப்படையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுங்கள் என ஊக்கப்படுத்தினார். சில மாதம் தலைப்பு அவர் சொல்வார்> சில மாதம் நான் சொல்லும் தலைப்பை அப்படியே ஏற்று பச்சைக் கொடி காட்டுவார். அந்த வகையில் பல்வேறு தலைப்புகளில் இரண்டரை ஆண்டுகளில் ஏறக்குறைய 20 கட்டுரைகள் ஆழத்தில் பிரசுரமாகியது.
பொறுப்பாசிரியர் திரு மருதன் என்றாலும், ஆழம் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் திரு பத்ரிசேஷாத்ரியும் எனது எழுத்துக்களில் பெரிய அளவில் திருத்தங்கள் ஏதும் சொல்லாமல் மாதந்தோறும் அங்கீகரித்து வந்தார். வெளியிடுவதற்கு அனுமதியளித்து வந்துள்ளார். அது என்னைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன். அவரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் இந்த எழுத்துக்கள் எனது நட்பு எல்லையை மிக அதிகமாக விரிவாக்கியது. மும்பை பகுதியில் ரூரல் எடிட்டராக பல காலம் பணியாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிண்டு நிறுவனத்திலிருந்து வெளிவந்துவிட்ட திரு பி.சாய்நாத் அவர்களின் தொலைபேசி தொடர்பு கிடைத்தது.
அவர் கடந்த ஆண்டு சென்னையில் தனது இணையதளம் பற்றிய பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தப்போகும் தகவல் அறிந்து ஆழம் பத்திரிக்கைக்காக நேர்காணல் மேற்கொள்ள வேண்டும் என கேட்ட போது பிரியமுடன் அனுமதி நல்கினார். அவரின் அந்த நிகழ்ச்சியில் சொல்லிய தகவல்களோடு எனது சில கேள்விகளுக்கும் நட்புடன் பதில் அளித்தார். அந்த வகையில் ஆழம் தொடர்பில் பல கட்டுரைகளோடு நேர்காணல் என்கிற வகையில் திரு பி.சாய்நாத் மற்றும்தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மதுரையைச் சேர்ந்த திரு கதிர் (எவிடென்ஸ் கதிர்) ஆகிய இருவரிடம் நான் மேற்கொண்ட நோ்காணல் வாயிலாக பல அரிய செய்திகளை வெளிக்கொணர முடிந்தது. ஆழம் பத்திரிக்கை வருவது தற்போது நின்று விட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் மேற்சொன்ன எழுத்துப் பயணத்தோடு இணையாக சட்டக்கதிர் எனும் சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழில் தொடா்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் தமிழாக்கம், நீதிபதிகள், சட்ட வல்லுனர்களின் கட்டுரைகள் தமிழாக்கம் பிரசுரமாவது என்கிற அங்கீகாரமும் கிடைத்தது.
நடுவில் தி இந்து தமிழ் நாளிதழில் தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா என ஒரு நடுப்பக்க கட்டுரை பிரசுரமாகியது. மற்றும் கடந்த ஆண்டில் தினமலர் நாளிதழில் “பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்ற தலைப்பில் தகவல் அறியும் சட்டம் வெளிவந்து 10 வது ஆண்டு துவக்கத்தில் ஒரு கட்டுரை, “நீதியரசர் வி.ஆா்.கிருஷ்ணய்யரின்” நினைவஞ்சலி கட்டுரை> பெரிய சாலை விபத்தினை தொடர்ந்து “ஓய்வின்றி ஓட்டாதே வாகனத்தை” என்ற ஒரு கட்டுரை வெளியானது. நாளிதழ் என்பது சென்றடையும் வீச்சு என்பது மிகப் பெரியது. அதன் வழி கிடைக்கும் அங்கீகாரம்> பாராட்டு என்பதும் நிச்சயமாக அதிகமானதே.
இது வரையிலான எனது எழுத்துப்பயணத்தில் திருப்பூர் திரு ஜோதிஜி, கிழக்கு பதிப்பகம் திரு பத்ரி சேஷாத்ரி, திரு மருதன், சட்டக்கதிர் ஆசிரியர் திரு விஆர்எஸ் சம்பத், தி இந்து திரு ரெங்காச்சாரி, திரு சமஸ், தினமணியில் முன்பு பணியாற்றிய திரு எம்.சந்திரசேகர், தி இந்து (ஆங்கிலம்) முதன்மை செய்தியாளர்கள் திரு எஸ்.விஜய்குமார், திரு ஸ்ரீகிருஷ்ணா, தினமலர் மூத்த செய்தியாளர்கள் திரு தனசேகர், திரு சுப்பிரமணியன், செய்தி ஆசிரியர் திரு ரமேஷ் குமார் என பலரும் நன்றிபாராட்டுதலுக்குரியவர்கள்.
குறிப்பிட்டு சொல்லும் அளவிலான கட்டுரைகள்தான் என்ற போதிலும் இவற்றை மின்நூல்களாக ஆவணப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது. அந்த எண்ணத்தை பகிர்ந்தவுடன் ஊக்கப்படுத்தியவர்கள் திரு ஜோதி கணேசனும், திரு மருதனும் ஆவார்கள். பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகள், இணையத்தில் வெளியிட்ட மொழி பெயர்ப்பு கட்டுரைகள், சட்டம் சார்ந்த கட்டுரைகள் என 3 தொகுதிகளாக மின்நூல்களாக வெளியிட வேண்டும் என்ற ஆவலின் முதல் பகுதி இது. இலவச மின்நூல் பதிப்பிற்கு ஊக்கம் அளித்த திரு டி.ஸ்ரீனிவாசன், திரு அன்வர், திரு சிவமுருகன் மற்றும் அட்டைப்பட வடிவமைத்த எனது மகள் ஸ்ரீஜா ஸம்பத் ஆகியோருக்கும் எனது அன்பான நன்றிகள்.
பதிவிறக்குங்கள், படியுங்கள், ஊக்கமளியுங்கள்
நட்புடன்
ஸ்ரீ(னிவாசன்) ஸம்பத்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? epub” thozhilarillathavalarchiya_epub.epub – Downloaded 2960 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? A4” thozhilariillathavalarchiya_A4.pdf – Downloaded 5119 times –செல்பேசிகளில் படிக்க
Download “தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? 6inch” thozhilariillathavalarchiya_6inch.pdf – Downloaded 1197 times –புத்தக எண் – 251
மார்ச் 22 2016
Leave a Reply