இமயம் குறித்த பெருமை இந்தியர் அனைவருக்கும் சிறு வயது முதலே உண்டு. அந்த இமயச் சிகரங்களில் ஒன்றான திருக்கைலை யாத்திரை என்பது எல்லாராலும் செல்ல முடிந்த ஒன்றல்ல. மிகக் கடினமான யாத்திரை. ஆனால் வருந்தத் தக்கது என்னவெனில் இந்த திருக்கைலை இந்தியர்கள் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் ஈசனே திருக்கைலாய நாதனாகவும் இருக்க, அது அமைந்திருக்கும் பகுதியோ சீனாவிடம் சென்றுவிட்டது. நினைத்த உடனே செல்ல முடியாத இடம். இதற்கும் நம் முன்னோர்கள், ஆசாரியர்கள் பலர் சென்று வந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்,ஒளவைப்பாட்டி போன்றோர் இங்கே சென்றுள்ளனர். காரைக்கால் அம்மையார் திருக்கைலையை மிதிக்கக் கூடாது எனத் தலையாலேயே தலைகீழாகச் சென்றார் எனக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகைய புண்ணிய சீலர்கள் மிதித்த, நடந்த திருக்கைலையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுவதிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா?
நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு
மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்
செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.
அப்படிப் பட்ட புகழ் வாய்ந்த திருக்கைலை யாத்திரை செல்வது என்பது சாமானியத்திலும் சாமானியமான எனக்குக் கிடைக்கப் பெற்றது என் வாழ்நாளின் தவப்பயனால் அன்றோ! அத்தகைய யாத்திரையை எனக்கு முன்னரும் பலரும் சென்றிருக்கின்றனர். பலரும் எழுதி இருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொருவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியானவை. இதிலே யாத்திரையின் போது நாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவங்கள், சங்கடங்கள் என அனைத்தையுமே பகிர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் செல்வோருக்கு இதில் நாங்கள் செய்த தவறுகளை அவர்கள் தொடராமல் இருக்க ஏதுவாக இருக்கும். மேலும் நாங்கள் சென்றபோது இருந்ததை விட இப்போது சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். அதோடு ஹெலிகாப்டர் பயணமும் செய்து கொடுக்கின்றனர். இதில் சாலை வழியில் செல்லும் ஐந்து நாட்கள் போக, திரும்ப ஐந்து நாட்கள் என்ற பத்து நாட்கள் மிச்சப்படுத்தலாம். ஆனால் பணம் கூடுதல். என்றாலும் சாலை வழிப் பயணத்தில் எதிர்கொள்ளும் ஆபத்து இதில் நேராதிருக்கும் எனக் கைலை நாதன் அருளை நினைத்துச் செல்லலாம். யாத்திரைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நாட்கள் பயணம் ஆனாலும் இந்தப் பொருட்கள் பட்டியலில் மாற்றம் இருக்காது. மேலும் இந்திய வழி, நேபாள வழி ஆகிய இரு வழிகளிலும் உள்ள நன்மைகள், தீமைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இந்திய வழி நீண்ட வழிப் பிரயாணம் என்றாலும் அதில் ஆபத்துக்கள் அதிகம் இருந்தாலும் அது தான் சரியான வழி. நேபாள வழி குறுக்கு வழி என்பதோடு மருத்துவப் பரிசோதனைகள் இல்லாமல் செல்லும் வண்ணம் ஏற்பாடுகள் செய்கின்றனர். இதில் நம் உடல்நிலைக்கு நாமே முழுப் பொறுப்பு. அதையும் நினைவில் கொள்ள வேண்டும். கைலைநாதன் அருளினால் நாங்கள் நல்லபடி சென்று வந்திருந்தாலும் பலரும் அவதிப்பட்டிருக்கின்றனர். உயிரும் இழந்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய பிரயாணம் செய்ய ஆசைப்படுபவர்கள் இள வயதிலேயே செல்வது தான் சரியானது. உடலில் இளமையும் வலுவும் இருக்கும்போது செல்வதே சிறப்பானது. மேலும் இந்திய வழியில் சென்றால் ஆதி கைலாசத்திலிருந்து வரிசையாக எல்லாக் கோயில்களும் பார்க்கவும் முடியும். மருத்துவ வசதிகளோடு பாதுகாப்பான பிரயாணமும் உறுதியாகக் கிடைக்கும்.
Leave a Reply