வெகுஜன இலக்கியத்தில் கவிதைக்கான ஓர் வெற்றிடம் உள்ளது. சாதாரண இலக்கியத்தில் உரைநடையும் கவிதையும் இருப்பதற்கிணையாக வெகுஜன இலக்கியத்தில் உரைநடை உள்ளதே தவிர கவிதைக்கு இடமில்லாத நிலையே இருந்துவந்தது. பேயோனின் முந்தைய கவிதைத் தொகுப்பாகிய ‘காதல் இரவு’ இவ்வெற்றிடத்தினை ஓரளவு நிரப்பியது என்றே சொல்ல வேண்டும். எனினும் அதனை முழுவதுமாக நிரப்ப இன்னொரு தொகுப்பிற்கான தேவையிருந்தது. இத்தொகுப்பு அத்தேவையை நிறைவேற்றியுள்ளது.
கவிதை என்னும் வடிவம் உரைநடையின் “கஸின் பிரதர்” என்பது பேயோன் வாயிலிருந்து வருவதற்கே உரியதொரு கூற்றாகும். கவிதைக்குரிய நடையை அவரது கவிதைகளில் அரிதாகக் கண்டுவிட முடியும். கவிதையும் புனைவின் ஓர் உபவகை எனக் கூறும் இவர், உரைபுனைகளைப் போல் கவிதையிலும் குடும்பக் கவிதைகள், கிரைம், ஃபாண்டஸி, காதல் என வகையுருக்கள் (genre) இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
சர்க்கரையைக் குறை என்றால்
ஒரேடியாகக் குறைத்துவிடுகிறாய்
என்ற வரிகளைக் கொண்ட ‘சாப்ளின் காபி’ எனும் கவிதை குடும்பக் கவிதை வகையுருவில் சேர்க்கப்பட வேண்டியது. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை, ஊருக்குப் போ, குழந்தைகளின் சுயநலம் போன்றவையும் இவ்வகைப்பட்டவை.
‘போலீஸ் கேஸ்’-யை கிரைம் கவிதையாகவும் ‘ஃபேஸ்புக் கவிதை’யை சைபர் கிரைம் கவிதையாகவும் வகைப்படுத்தலாம். யங் அடல்ட் எனப்படும் வாசக இனத்தாருக்காகக் காதல் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். கவிஞருக்கு இயற்கையுடன் உள்ள காதல்-வெறுப்பு உறவைப் பனுவும் ‘ஐந்து நிமிட மழைக்கு’ போன்ற கவிதைகளை சுற்றுச்சூழல் பிரிவுக்கு உட்படுத்தலாம். ‘துன்பத்தின் பிம்பம்’, ‘கேலிச் சித்திரம்’, ‘பிரதிபலித்தல்’ போன்ற உருப்படிகளைத் தத்துவத் துறை படைப்புகளாகக் கொள்ள முடியும். வகைப்படுத்தப்பட முடியாத ‘என் வாட்ச்சு கொஞ்சம் ஸ்லோ’ மாதிரியான கவிதைகளும் உள்ளன. இவற்றை மொட்டையாக ‘பேயோன் கவிதைகள்’ என்றுதான் சொல்லியாக வேண்டும்.
பேயோனின் கவிதை அணுகுமுறை எனக்கு உவப்பானது. “கை வைத்தால் கவிதை” என்று அவர் அடிக்கடி சொல்வார். கவிதை எளிமையாக இருக்க வேண்டும் என்பார். படிமங்களை அடுக்குதல், கவிதையைப் பல அடுக்குகளைக் கொண்டிருப்பதாக ஆக்குதல் அல்லது மாற்றுதல் போன்றவற்றில் உடன்பாடுகள் ஏதுமற்ற மனிதர் பேயோன். இவருக்குக் கவிதை நன்றாக வருகிறது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.
லார்டு லபக்குதாஸ்
சென்னை – ஜனவரி, 2013
Leave a Reply