உரிமம்: பேயோன்Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
முதல் மின்பதிப்பு: ஆகஸ்ட் 2016
அட்டை வடிவமைப்பு: பேயோன்
முன்னுரை
இருபத்தைந்து ஆண்டுகளாகவே நான் கவிதைகள் எழுதிவருகிறேன். கவிதைகளைவிட உரைநடைகளைத்தான் அதிகம் எழுதியிருக்கிறேன் என்றாலும் கவிதைதான் என் முதல் மனைவி. உரைநடை இரண்டாம் மனைவி. கவிதையை எடுத்துக்கொள்வோம் – ஒரு மனிதனால் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே மனைவியுடன் வாழ முடியுமா? முடியும். கவிஞனால் முடியும். கவிதைகளோடு முடியும்.
கால் நூற்றாண்டு காலமாகக் கவிதை எழுதுகிறேனே தவிர இப்போதும் கவிதையின் மாணவனாகவே என்னைக் கருதிக்கொள்கிறேன். என் குருநாதரே எனக்கு முதல் மனைவியாக அமைந்தது என்னுடைய பெரும்பேறு என்று சொல்ல வேண்டும். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் கவிதையின் சாயல் வரும், எப்படி எழுதினால் புரியாமல்போய் அதே சமயத்தில் ஏதோ இருப்பது போல் காட்டும், ஞாபகமில்லாமல் சும்மா உரைநடையாக எழுதித் தொலைத்துவிட்ட குறிப்பைக் கவிதையாக்குவது எப்படி, எங்கே கமா போட்டால் எடுப்பாக இருக்கும், உணர்வெழுச்சிக்கான ஃபார்முலாக்கள், இப்படிப் பல விஷயங்களைக் கற்கிறேன்.
என் பெயரின் கீழ் இது வரை இருநூறுக்கு மேற்பட்ட தொகுப்புகள் வந்துவிட்டன. இருந்தாலும் கவிதை எழுதுவதில் உள்ள ஆர்வம் அதிகரிக்கிறதே தவிரக் குறையவில்லை. மாத்திரை சாப்பிடுகிறேன். அன்றாட வாழ்வியலின் காலாதீத இண்டு இடுக்குகளில் – உதாரணமாக, மருத்துவரைப் பார்க்க அசௌகரியமானதொரு நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கும்போது – உரைநடை எழுத நேரமற்ற தருணங்களில், கவிதைதான் இந்த இடைவேளைகளை இட்டு நிரப்புகிறது.
கவிதை எழுதுவது அவ்வளவு எளிதாக இருக்கிறது. பேருந்து நிலையத்தில் ஒரு பெஞ்சியில் அமர்ந்திருக்கிறேன். எதிரே விசாரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு கோணி மூட்டை இருக்கிறது. அந்த மூட்டை மேல் ஒரு குருவி வந்து உட்கார்கிறது. குருவிகள் மிக அபூர்வமானவை. அவை காணுயிர்கள் அல்ல. அவற்றைப் பார்ப்பதரிது. அருகிவரும் குருவிப் பறவை மிகச் சாதாரணமான, சிறிதும் விசேடமில்லாத, வெறுப்பைக்கூடத் தரக்கூடிய ஒரு சூழலில் திடீரெனத் தோன்றுவது ஒரு தரிசனம் போலத்தானே? இதை வைத்துப் பத்து வரி தேற்றலாம். இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் கவிதையை உலகுக்குத் தருவது என் பணி.
வலப்பக்கம் ஒரு நோட்டுப் புத்தகம், இடப்பக்கம் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்து இரு கைகளால் கவிதையும் உரைநடையும் என வெவ்வேறாக எழுதும்போது வலதுகையால் எழுதுவது கவிதையைத்தான் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முந்தைய தொகுப்புகளைவிட இத்தொகுப்பில் கவிதைகள் அதிகம். கையோடு அவற்றின் நீளமும். ஒரு குழந்தையாய்க் கவிதை என்னுள் வளர்ந்துகொண்டிருக்கிறது. என் கவிதை, நீங்கள் பார்த்து வளரும் கவிதை.
பேயோன்
ஆகஸ்ட் 27, 2016
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும் (கவிதைகள்) epub” maappillai-payon.epub – Downloaded 2762 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும் (கவிதைகள்) mobi” maappillai-payon.mobi – Downloaded 1089 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும் (கவிதைகள்) A4 PDF” maappillai-payon.pdf – Downloaded 2514 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மாப்பிள்ளைக்குக் காராபூந்தி பிடிக்கும் (கவிதைகள்) 6 inch PDF” maappillai-payon_kindle6i.pdf – Downloaded 1253 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/maappillai-payon_poems
புத்தக எண் – 262
ஆகஸ்டு 29 2016
Leave a Reply