விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி எஸ். பி. வெங்கடாசலம் எண்ணச் சிதறல்கள்
எழுத்து வடிவம் – திருமதி தி. பவளசங்கரி, ஆசிரியர், வல்லமை இணைய இதழ் www.vallamai.com
வெளியீடு – படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு 638 003
சாதி, மதம், மொழி கடந்து ஈரோடு மக்கள் அனைவராலும் தோழர் எஸ்.பி.வி. என அன்புடன் அழைக்கப்பட்டவரும், கட்சி, அரசியல் கடந்து அனைவராலும் நட்புறவுடன் அன்பு பாராட்டப்பட்டவரும், சுதந்திரப் போராட்டத் தியாகி மற்றும் பொதுவுடமைப் போராளியுமான அமரர். எஸ். பி. வெங்கடாசலம் ஐயா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் எண்ணச் சிதறல்களை நூல் வடிவாக்கி, ‘இப்படிக்கு நான்’ எனப் பெயரிட்டு, ஐயா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் 12 – 03 – 2014 அன்று சான்றோர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், எஸ். பி. வி. அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான திருவாளர் சு. முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து சான்றோர்களும், அரசியல் தளத்தில் வேறுபட்டிருந்தாலும், மனித நேயம் என்ற ஒற்றை சொல்லில் ஒன்று பட்டிருந்ததாலேயே ஒரே மேடையில் ஒன்று கலந்து உறவாட முடிந்தது. உண்மையில் இது அந்த மனித நேயத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அனைவரின் எண்ணங்களும் உண்மையான, தன்னலமற்ற மக்கள் சேவை என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது தனிச் சிறப்பு!
இந்த நூலின் சாரங்கள், காணொலி வடிவாக, திரு இரவிச்சந்திரன் அவர்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட 9 காணொலிகளிலிருந்து எழுத்துருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது பெரும் பேறாக எண்ணுகிறேன். ‘இப்படிக்கு நான்’ என்ற இந்நூல் அவர் கூறியவாறு இயன்றவரை அவர் நடையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் திரு ஜீவானந்தம், திரு கல்யாண சுந்தரம் போன்றவர்களுடன் ஐயா கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளும், அது குறித்த பல சம்பவங்களும் சுவைபட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. இந்நூல் ஐயாவின் வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து மிகச் சிறந்த இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும். இலக்கியம் என்பதே காலத்தின் கண்ணாடி என்ற வகையில், திரு எஸ் .பி. வி. அவர்களின் நினைவலைகள் அனைத்தும் அக்காலத்தைத் துல்லியமாக, பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறைமைகள், மக்களின் மன நிலைகள், இன்ப துன்பங்கள் என அனைத்தையும் மிக வெளிப்படையாக, எந்த அலங்காரப் பூச்சும் இல்லாமல் பிரதிபலிப்பதாக உள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த நிகழ்ச்சிகளை வெகு துல்லியமாக தேதி, நேரம், காலம், பெயர்கள் வாரியாக நினைவில் கொண்டு அவர் கொடுத்துள்ள தகவல்கள் ஆச்சரியமேற்படுத்துபவை. நாட்டு நலம் தம் உயிர் மூச்சோடு இணைந்த ஒன்று என்பதை தம் ஒவ்வொரு சொல்லிலும் தெளிவாக்குகிறார்.
“சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து இறுதி வரை செயல்பட்டவர். ஈரோடு நகர் மன்றம் தமிழ் நாட்டில் மிகப் பழமையானது. தந்தை பெரியார் அவர்களை உருவாக்கிய பெரிய நகரம் ஈரோடு. இது தமிழ்நாட்டின் அரசியல், சமூக மாற்றம், சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பொதுவுடமை இயக்கம் ஆகிய அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் உந்துசக்தியாக இன்றும் விளங்கிவருகிறது. ஈரோட்டுப் பகுத்தறிவுப் பாசறையோடு நெருங்கிய தொடர்புடன் பிறந்து வளர்ந்த அனுபவங்களையும் நிகழ்வுகளையும் தோழர் எஸ்.பி.வி. அவர்களின் முதிய வயதில் வாய் மொழியாகவே பதிவு செய்து அதிலிருந்து எழுத்து வடிவமாக இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. இந்நூல் நிலையான ஆவணமாகும்” – திரு இரா. நல்லகண்ணு அவர்களின் அணிந்துரையிலிருந்து…
இந்நூலை மின்னாக்கம் செய்து அனைவரும் எளிதாக வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ள FreeTamilEbooks குழுவிற்கு என் மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும்.
ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள். உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
[…] […]