புத்தக வாசிப்பில் எல்லோரும் தான் நேரம் கிடைக்கும் சமயங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் புத்தகம் எப்படி? என்ற கேள்வியை வைத்தோமென்றால், பரவாயில்லை, வாசிக்க முடியலை, ஆரம்பம் நல்லா இருக்கு போகப் போக செரியில்லை! என்றே சொல்வார்கள். சிலர் வேறு பலர் ஒரு புத்தகத்தைப்பற்றி என்ன சொன்னார்களோ அதையே திரும்பச் சொல்லுவர்.
புத்தகங்களைப் பற்றி விரிவாய் பேசவோ எழுதவோ எழுத்தாளர்களுக்கு நேரமின்மை ஒருபுறம் இருக்க, அடுத்தவர் புத்தகத்தை பற்றி தான் ஏன் பேச வேண்டுமென்ற எண்ணமும் ஒரு காரணமே! ஒரு புத்தகத்தைப்பற்றி கருத்துரை பேச அழைப்பு வந்தால் மட்டுமே கூட்டத்தில் பேச வேண்டும் என்பதற்காக வாசித்து வருபவர்கள் இங்கு நிறையப்பேர். அப்படி பேசுகையில் எழுத்தாளனின் எழுத்துகள் செவ்வாய் கிரகத்தையே எட்டிப்பிடிக்கும் வகையில் உச்சத்தில் இருக்கிறதென மைக் வளையும் வரை பேசி விட்டு செல்வார்.
புத்தக விமர்சனம் என்பதை தமிழில் சிறப்பாக செய்ய ஆட்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேர்களும் எத்தனை புத்தகங்களுக்குத் தான் எழுதுவார்கள்? அவற்றை வெளியிட பத்திரிக்கைகளும் குறைவுதான் என்பதும் ஒரு பிரச்சனை தான். அவை புத்தகமாக வெளியிடப்படுகையில் கூட பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை.
புத்தகத்தைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொண்டே ஒரு புத்தகத்தை வாங்கும் மனநிலையில் பலர் இருக்கிறார்கள். அந்த வேலையையே நான் முகநூலில் அவ்வப்போது செய்து வருகிறேன். அதுவும் நானாக வாங்கிப் படித்த புத்தகங்கள், சில நண்பர்கள் அனுப்பி வைத்த புத்தகங்கள் இவற்றிற்கு மட்டுமே! அந்த பதிபகம் வெளியிட்ட புத்தகம் பற்றி நான் ஏன் முகநூலில் எழுத வேண்டும் என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. எதோ கொஞ்சமாச்சும் புத்தகம் பற்றி எழுதுறாப்ல கோமு! என்கிற பெயரை சீக்கிரமே பெற்றுவிட்டேன்.
இவற்றை வாசிப்பாளர்கள் வாசித்து தேவையான புத்தகத்தை நிச்சயம் வாங்கி வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்தப்புத்தகம் பற்றியும் விரிவாக நான் எழுத முயற்சியெடுக்கவில்லை என்பதை விட அவ்வளவு தான் என்னால் எழுத இயலுகிறது என்பதே உண்மை! முன்பாக பிரதிலிபி டாட் காமில் புத்தகங்கள் பற்றி ஒரு தொகுப்பு கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக நான் எழுதினவற்றின் தொகுப்பு இது.
புத்தகங்களை வாசித்ததும் அது பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன். ஆகவே புத்தகங்கள் பற்றியான என் பார்வைகள் தொடரும்.
அன்போடே என்றும்
வா.மு.கோமு.
விஜயமங்கலம் -638056
பேச : 9865442435
வெளியீடு: http://FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் : ஜெயகணேஷ்
மின்னஞ்சல் : sjayaganesh@gmail.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
புத்தக எண் – 177
மே 30 2015