உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
இலங்கை மரபுக் கதைகள் பற்றி அறிமுகம்
மரபுவழிக்கதைகள் எல்லாம் ஆதாரமுள்ளவை அல்ல. பெரும்பாலும் அவை வாய்வழி வந்தவையே. சிகிரியா, சாலியா, அசோகமாலா காதல் கதை, விகாரமகாதேவி, பூதத்தம்பி கதை, கடைசி கண்டி மன்னன் கதை போன்றவை வரலாற்று நூல்களில் பதிவாகியுள்ளன. வெளிநாட்டவர்கள் மரபு வழிக் கதைகளோடு தொடர்புள்ள ஊர்களைத் தேடிப் போய் பார்ப்பார்கள்.
இலங்கையின் தமிழ்பகுதிகளில் பல மரபுக் கதைகள் கோவிலுடன் தொடர்புள்ளவை. இராமயாணத்தில், சிவபக்தனான இராவணன் இலங்கையை ஆண்ட மன்னன் என்று குறிபிட்டுள்ளது. இது பலருக்குத் தெரிந்த கதை. இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட இராவணனின் அரண்மணை இருந்த இடம், சீதை சிறைவைக்கப்பட்ட இடம், ஹணுமான் எரித்த அசோக வனம், இராவணனின் புஷ்பக விமானம் நிறுத்தி வைக்கப்படட விமதனத்தளம் இருந்த இடம், அமைத்த சுரங்கப் பாதைகள் ஒரு மரபுக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரும் இருபது கதைகள், இந்துக்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் வழிவந்த மரபுக் கதைகள். இது போன்று பல கதைகள் உண்டு. வாசித்து இரசியுங்கள். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு, வெளிநாடுளில் புலம் பெயர்ந்து வாழும்; இளம் சமுதாயததினருக்கு இக்கதைகளை சொல்லுங்கள். நம்பினால் நம்பட்டும்.
பொன் குலேந்திரன் kulendiren2509@gmail.com
♣♣♣♣♣
அணிந்துரை
பொன் குலேந்திரன் அவர்கள் அனுப்பிய மரபுக்கதைகள் தொகுப்பை படிக்க எடுத்த நான் அதைக் கீழே வைக்கவில்லை. இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்த பின்னரே அதை மூட முடிந்தது. கதைகள் அத்தனை சுவாரஸ்யமாக இருந்தன. மரபுக் கதைகள் அழிந்து கொண்டு வருகின்றன. அவை வாய்வழியாக சந்ததி சந்ததியாக தொடர்பவை. இப்பொழுதெல்லாம் கதை சொல்லிக் கேட்பது குறைந்துவிட்டது. ஆகவே அழியும் நிலையில் உள்ள கதைகளுக்கு அச்சுருவம் கொடுத்து நிலைபெறச் செய்யும் ஆசிரியருக்கு நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது.
நான் சிறுவனாக இருந்தபோது அம்மா சொல்லிய பல கதைகள் ஞாபகத்தில் உள்ளன. அவை அச்சுருவம் கண்டனவோ தெரியாது. ஒரு கதை பாட்டு வடிவில் இருக்கும். ’பண்டாரக் குளத்தடி முத்தனை கொண்டானே சேனாதிராசன்’ என்று தொடங்கும். அம்மா முழுப் பாடலையும் பாடமாக்கி வைத்திருந்தார். நல்லூரில் நடந்த கொலையைப் பற்றியதுதான் பாட்டு. கோர்ட்டிலே சாட்சியை விசாரிக்கும் இடம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்.
குறுக்குக் கேள்விகள் அனேகமானவை
கூட்டில் துரைச்சாமி தம்புவும் கேட்டிட
நறுக்குத் தலைக்காரன் முத்துதான் என்றவள்
நாட்டினாள் அஞ்சாது பாருமடி.
குடுமி இல்லாதவனை ’நறுக்குத் தலைக்காரன்’ என்று விவரித்தது எனக்கு அன்றும் சிரிப்பை வரவழைத்தது. இன்றும் வரவழைக்கிறது.
அசோகமாலா கதையை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது. கதை கிறிஸ்துவுக்கு முன்னான ஒரு காலத்தில் நடக்கிறது. இலங்கையை ஆண்ட அரசன் துட்டகைமுனுவுக்கு இரண்டு மகன்கள். முடிக்குரியவன் பெயர் சாலியா. ஒருநாள் அவன் அசோகமரக் காட்டிலே ஓர் அழகான பென்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவள் சண்டாளச் சாதி என்றாலும் தயங்காது அவளை மணக்கிறான். அரசன் அவர்களை அரண்மனையைவிட்டு துரத்திவிடுகிறான். அவர்கள் காட்டிலே வாழ்கிறார்கள். ஒருநாள் அசோகமால மூலிகையில் ரத்தம்பாலா என்ற பதார்த்தம் தயாரித்து அரசனுக்கு அனுப்புகிறாள். அரசன் கோபத்திலே அதை சுவற்றிலே எறிகிறான். சிறிது காலத்தில் அரசனுக்கு தீர்க்க முடியாத வியாதி வந்தபோது சுவற்றிலே ஒட்டியிருந்த உனவை மருந்தில் சேர்த்து சாப்பிட்டபோது நோய் குனமாகிவிடுகிறது. அரசன் மகனை மன்னிக்கிறான். அசோகமாலாவும் கணவனும் அரண்மனைக்கு திரும்புகிறார்கள். ஆனால் அரசன் இறந்தபோது சாலியாவால் அரசனாக முடியவில்லை. அவனுடைய தம்பி சாததிஸ்ஸவுக்கு ராச்சியம் கிடைக்கிறது. ராச்சியத்தை இழந்தாலும் அவன் காதல் மனைவியை கைவிடவில்லை. காதலைப் போற்றும் அதே சமயம் சாதியை எதிர்க்கும் அருமையான கதை.
இன்னொரு உருக்கமான கதை கண்டியில் உள்ள வைரவர் மலை சம்பந்தப்பட்டது. ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் கண்டியை ஆண்ட காலத்தில் கன்னிப்பெண்ணை பலி கொடுத்தால் நாட்டில் சுபிட்சம் நிலவும் என்ற நம்பிக்கை இருந்தது. மன்னனின் அதிகாரி துணுவில என்பவன் பலி கொடுப்பது என்று நம்பவைத்து பெண்களை பலவந்தமாக அனுபவித்தான். ஒரு முறை கன்னிப் பென்ணொருத்தியை பலி கொடுப்பதற்காக காட்டிலே கட்டிப்போட்டுவிட்டு சேவர்கள் திரும்பிய பின்னர் துணிவில அவளை பலாத்காரம் செய்யமுயன்றான். அவளுடைய காதலன் ஒளித்திருந்து அவனைக் கொன்றுவிட்டு தன் காதலியுடன் கொழும்புக்கு ஓடித் தப்பினான். 1815ல் பிரித்தானியர்கள் கண்டியை கைப்பற்றிய பின்னர் அந்தப் பெண் தன் கணவனுடன் கண்டிக்கு திரும்பினாள்.
இந்த வகையாக சுவாரஸ்யமான பல கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. மரபுக் கதைகள் வாய்வழியாக வாழ்வதால் துளி உண்மையில் ஆரம்பித்து ஒவ்வொரு சந்ததியினரும் அதை தங்கள் கற்பனை வளத்தால் பெருப்பிப்பார்கள். பனி உருண்டை உருள உருள பெரிதாகிவிடுவதுபோல இந்தக் கதைகளும் வளர்ந்துகொண்டே போகும். இவற்றை தேடித் தொகுத்து அழகாக தந்த பொன் குலேந்திரனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். இதற்காக அவர் செய்த ஆராய்ச்சிகளும், தந்த சரித்திரக் குறிப்புகளும் படிக்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவருக்கு என் பாராட்டுகள். நீண்ட ஆயுளுடன் அவர் பணி மேலும் தொடரட்டும்.
அ. முத்துலிங்கம்
ரொறொன்ரோ, 14 ஏப்ரல் 2016
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
இணையத்தில் படிக்க- https://ceylontamillegendarystories.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/20HeritageStories
புத்தக எண் – 259
ஜூலை 7 2016