கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. வேலையில் சேர்கிற பெண்கள் அனைவரும், திருமணத்திற்குப் பின்னும், மக்கட்பேறுக்குப் பின்னரும் பணியைத் தொடர்வதில்லை. இதனை ஒரு புனல் வடிவில் உருவகப்படுத்தலாம்.

இதில் ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால், இந்தப் பிரச்சனை நமக்கு மட்டுமல்ல. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering, Maths – STEM) சார்ந்த துறைகளில், உலக அளவில் இதே நடப்பு தான் காணப்படுகிறது. STEM துறைகளில், பெருமளவில் பெண்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதில் உலக அரங்கில் பல நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன. நிரலாக்கத்துறையைப் பொருத்தமட்டில், Girls Who Code, Rails Girls, Elixir Girls போன்ற அமைப்புகள் அவற்றுள் சில. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பெண்களுக்கு மட்டுமான நிரலாக்கப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதோடு, மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும், பெண் சமூகத்தின் பிரதிநிதிகளாக, தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றனர். இந்தியாவிலும், குறிப்பாக சென்னையில்  Women in Tech, Women Who Code, PyLadies போன்ற சில குழுக்கள் இயங்கி வருகின்றன. மென்பொருளாக்கத்தில் ஈடுபாடுள்ள பெண்கள் அதில் கலந்துகொண்டு பயனடையலாம்.

STEM துறைகளின் முன்மாதிரிகளாக முத்துலெட்சுமி ரெட்டியையும், ஜானகி அம்மாளையும், கடாம்பினி கங்குலியையும், படித்து வளர்ந்த நமக்கு, நிகழ்கால பங்களிப்பாளர்களை அடையாளம் காட்டவேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. அந்த வகையில், நமது கணியம் வலைத்தளத்திலும், FreeTamilEbooks.com தளத்திலும், பங்களித்து, தாங்கள் பெற்றதையும், பெற விரும்பியதையும் சமூகத்திற்கு திருப்பிக்கொடுத்திருக்கும் பெண்களை இங்கே முன்னிறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சீ. இராஜேஸ்வரி, ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர். முன்னாள் கல்லூரி ஆசிரியர். FreeTamilEbooks.com வலைத்தளத்தில் மின்னூலாக்கத்தில் பங்களித்து வருகிறார். இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கியுள்ளார்.

அனிதா – கணியம் அறக்கட்டளையில், Youtube அல்லது நம்மிடம் உள்ள ஒலிக்கோப்பை ஒலியோடையாக எளிதில் வெளியிடும் மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விரைந்து பல ஒலியோடைகளை வெளியிடலாம். CommandLine ல் இயங்கும் இதை இணைய வழி மென்பொருளாக, மாற்றி வருகிறார். இவர் தற்போது Cognizant ல் பணிபுரிகிறார்.

கமலினி புருஷோத்தமன் – வேலுரைச் சேர்ந்த இவர், அமீரகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை வரலாற்று நூலை ஒலிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

திவ்யா, பவித்ரா, சோபியா – கடந்த 2016ம் ஆண்டிலிருந்து விக்கிமூலம் தளத்தில் தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மெய்ப்பு பார்ப்பதில் பங்களித்து வருகின்றனர்.

து. நித்யா – நீங்கள் படிக்க விரும்புகிற புத்தகத்தை நீங்களே எழுதவேண்டும் என்றொரு கூற்று உண்டு. அதற்கேற்ப கணினி நுட்பங்களைத் தமிழில் படிக்க விரும்பியவர், எளிய தமிழில் எழுதித் தள்ளுகிறார். தற்சமயம் இயந்திர வழி கற்றல் பற்றிய தொடரை எழுதி வருகிறார். இதுபற்றிய காணொளிகளையும் வெளியிடுகிறார். தான் எழுதிய தமிழுக்கான சந்திப்பிழை திருத்திக்கான நிரலை மூலந்திறந்த உரிமத்தில் வெளியிட்டிருக்கிறார். கடந்த வருடத்திற்கான தகவல் தொழில்நுட்பத்துறையின் தனித்திறமையாளர் விருதினை, ஊருணி அறக்கட்டளை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.

பிரியா – பிறருக்கு வேண்டுமானால் ரூபி என்றவுடன் மாணிக்கக்கல் நினைவுக்கு வரலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பிரியாவுக்கோ ரூபி என்ற நிரல்மொழிதான் நினைவுக்கு வரும். இந்த எளிய இனிய கணினி மொழியைப் பயில விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒரு மின்னூலினை எழுதியுள்ளார்.

இல.கலாராணி – தாட்வொர்க்ஸ் நிறுவனத்தில் நிரலராகப் பணியாற்றுகிறார். மென்பொருளாக்கத்திலும், நிரலாக்கத்திலும் தானறிந்தவற்றை கட்டுரைகளாக எழுதி வருகிறார். ஆத்திசூடி என்ற செயலியையும், கதம்பம் என்ற சொல்விளையாட்டையும், ஆண்டிராய்டு செயலிகளாக வெளியிட்டிருக்கிறார்.

நிர்மலா ராகவன்

வி.ஆஷாபாரதி

கார்த்திகா சுந்தர்ராஜ்

கீதா சாம்பசிவம்

மைதிலி சிவராமன்

உஷா தீபன்

கி.பிரேமாமோனி

தேமொழி

ர.திவ்யா ஹரிஹரன்

பார்வதி இராமச்சந்திரன்

சந்திரவதனா

இரா. பாரதி

காமாட்சி மஹாலிங்கம்

ஜயலக்ஷ்மி

பவள சங்கரி திருநாவுக்கரசு

சுபாஷிணி

தேவி ஜகா

ரஞ்சனி நாராயணன்

ஆகியோர், FreeTamilEbooks.com வலைத்தளத்தில், தங்கள் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வழங்கியுள்ளனர்.

தமிழும், தொழில்நுட்பமும், நாமறிந்த விசயங்கள். தமிழின் தொடர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்பத்தைப் பரப்ப தமிழையும் பயன்படுத்திப் பயனடைவோம்!

சென்ற நூற்றாண்டைவிடவும், சென்ற பத்தாண்டுகளை விடவும் இன்றைய நிலை முன்னேறியிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரமும், அளக்க வேண்டிய ஆழமும் அதிகம். தொடர்ந்து, இணைந்து பயணிப்போம்!!