இன்றைய அவசர உலகில் சடங்குகள் யந்திரரீதியாகவே நடத்தப்படுகின்றன. யாரும் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொண்டு அதன் தேவையை உணர்ந்து அதன் பெருமையையும், உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொண்டு செய்வதில்லை. மேலும் ஆண்களுக்குச் செய்யப்படும் உபநயனம் என்பதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இது குறிப்பிட்ட ஒரு சமூகமே குறிப்பாய் பிராமண சமூகமே இன்றளவும் கடைப்பிடிப்பதால் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் தவறான கருத்தும் நிலவுகிறது. நித்ய கர்ம அநுஷ்டானங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இதிலே பிராமணர் மற்ற சமூகம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் பிராமணர்களிலேயே பலருக்கும் இந்த உபநயனம் குறித்த முழு அறிவு இல்லை. இதை ஒரு ஆடம்பரச் சடங்காக மாற்றியதோடு மட்டுமில்லாமல் ஆடம்பரமாகவும் நடத்திப் பெருமை கொள்கின்றனர். மேலும் உபநயனம் செய்து கொள்ளும் ஆண் குழந்தையின் வயதும் இக்காலங்களில் குறைந்த பக்ஷம் பதினைந்தாகிவிடுகிறது.
இன்னும் சில குடும்பங்களில் முதல் நாள் உபநயனம் பேருக்குப் பண்ணிவிட்டு மறுநாள் கல்யாணம் எனச் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்பதோடு அதன் உண்மையான பொருளையும், அதன் தேவையையும், அது கொடுக்கும் மனக்கட்டுப்பாட்டையும் அதன் மூலம் மேம்படும் ஆன்மிக வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வதற்காகவே இந்தப் படைப்பு. உபநயனம் ஏன் என்பதைக் குறித்துச் சிறு சிறு குறிப்புக்களாக அச்சிட்டு உபநயனங்கள் செய்யுமிடத்தில் விநியோகிக்கலாம். இதன் மூலம் உபநயனம் செய்வதன் காரண, காரியங்கள் புரிய வரும். மறைந்து வரும் நல்ல நல்ல கலாசாரங்களை மீண்டும் வழிமுறைப்படுத்தி நெறிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம். இன்றைய இளம்பெற்றோர் முதல் இளைஞர்கள் வரை படித்துப் பயனுறவேண்டும் என்பதும் இன்னொரு முக்கிய நோக்கம்.
தகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சே ஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
Leave a Reply