நாம் ஏன் படிப்பதே இல்லை?

பிரபல மின்னூல் தயாரிப்பு மென்பொருளான PressBooks.com மற்றும் ஒலிப்புத்தகத் திட்டமான Librevox.org ன் நிறுவனர் Hugh McGuire எழுதிய “Why Can’t we read anymore?” என்ற கட்டுரையின் தமிழாக்கம். அனுமதி தந்த Huge அவர்களுக்கு நன்றி.

மூலம் — https://medium.com/@hughmcguire/why-can-t-we-read-anymore-503c38c131fe

தமிழாக்கம் : த.சீனிவாசன் [email protected]

நாம் ஏன் படிப்பதே இல்லை?

இணைய போதையிலிருந்து மீள்வது எப்படி?

https://medium.com/@tshrinivasan/why-can-t-we-read-anymore-e72925e48e16#.57vkabygz

கடந்த ஆண்டு, நான் நான்கு புத்தகங்களை மட்டுமே படித்தேன்.

நீங்களும், அதிக புத்தகங்கள் படிக்க வேண்டும் என நினைத்து, குறைவான புத்தகங்களையே படித்திருந்தால், உங்களுக்கே காரணம் தெரியும். புத்தகம் முழுதும் எங்கு பார்த்தாலும் வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள். படிக்கப் படிக்க வந்து கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் சேர்ந்தாற்போல இரண்டு பக்கம் படித்தாலே தலை சுற்றுகிறது. மூச்சு வாங்குகிறது. இந்த நிலையில் எப்படி ஒரு முழு புத்தகத்தையும் படித்து முடிப்பது? அட. ஒரு புத்தகம் படித்து முடித்தால், அடுத்த புத்தகம் காத்திருக்கின்றது. நினைத்தாலே மயக்கம் வருகிறது.

எனது முயற்சிகள்

மிகவும் கடினமாக இருந்தாலும் புத்தகம் படிப்பதற்கான எனது முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. சென்ற ஆண்டு முழுவதும், இரவு தூங்கப் போகும்போது, ஒரு புத்தகத்தையோ, கிண்டில் மின்னூல் கருவியையோ கையோடு எடுத்துச் சென்றேன். நாள் தவறாமல் படிக்கத் தொடங்கி விடுவேன். முதல் வரி. ஆயிற்று. இரண்டாவது வரியும் படிச்சாச்சு.

இதோ மூன்றாவது வரி.

அவ்வளவுதான். இப்போது வேறு எதையாவது செய்தாக வேண்டும். மூளையில் ஏதோ ஒன்று குறுகுறுவென்று நடனம் ஆடுகிறது. கைபேசியில் மின்னஞ்சல் பார்க்கிறேன். அவற்றுக்கு உடனே பதில் தருவதில் ஒரு மகிழ்ச்சி. பின் சிறிது நேரம் டுவிட்டரில் மேய்கிறேன். சில நல்ல கீச்சுகளை மறுகீச்சு செய்கிறேன். பிறகு செய்தித் தளங்கள். சில புத்தக விமரிசனத் தளங்கள். அதற்குள் சில மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றுக்கும் பதில் தந்து விடுகிறேன்.

வேறு ஏதோ செய்து கொண்டிருந்தேனே? ஆங்! புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் படிப்போம். நாலாவது வரி படிக்கிறேன். நா…லா…வ…து…வ…ரி…!

ரொம்பக் கஷ்டமா கீது பா!

புகைப்பிடித்தலை தீவிரமாக ஒரே நாளில் கைவிடுபவர்கள் நான்கு மாதம் கூடத் தாண்டுவதில்லையாம். கடுமையான டயட்டில் இருப்பவர்கள் நான்கு மாதத்தில் பெரிதாக எடை குறைவதில்லை. (Kelly McGonigal: The Willpower Instinct எ்ன்ற நூலில்)

அதெல்லாம் சரி. எனக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் படிப்பதற்கே ரொம்ப நேரம் ஆகிறது.

ஐந்தாவது வரி படிப்பதற்குள் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறேன்.

போன வருடம் முழுதும் இதே நிலைமைதான். தட்டுத்தடுமாறி ஒரு புத்தகம் படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒரு வருடத்தில் நாலே நாலு புத்தகங்கள். ரொம்பவுமே குறைவு. இதற்கு முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை. இந்த லட்சணத்தில் என் வாழ்க்கையே புத்தகங்களைச் சுற்றித்தான் இருக்கிறது. மின்னூல் தயாரிக்கும் மென்பொருளான PressBooks.com, ஒலிப்புத்தகங்கள் வழங்கும் தளமான LibreVox.org இரண்டையும் நடத்தி வருகிறேன். புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய ஒரு மின்னூலையும் எழுதியுள்ளேன்.

என் வாழ்வில் பெரும்பகுதியை புத்தகங்களுக்காகவே செலவிட்டுள்ளேன். ஆனால், என்னால் இப்போது ஒரு புத்தகம் கூடப் படிக்க முடிவதில்லை.

உங்களால் முழு கவனத்துடன் ஒரு புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க முடிகிறதா? பெரிய ஆள்தான் நீங்கள். வாழ்த்துக்கள்.

சமீபத்தில் கேள்விப்பட்டேன். நியூயார்க் நகர மக்களால் ஒரு பாடல் கூட முழுமையாகக் கேட்க முடிவதில்லையாம். இப்படியே போனால் புத்தகங்களின் நிலை என்ன ஆகும்?

Newyorker Podcast ல் சமீபத்தில் எழுத்தாளரும் புகைப்படக்கலைஞருமான Teju Cole அவர்களின் பேட்டியைக் கேட்டேன்.

கேள்வி :

“மனித இனத்தின் மீதான, தற்போதுள்ள பெரும் சிக்கல், கவனச் சிதறல். இது உலகெங்கும் உள்ளது.என்னால் ஒரு பாடலைக் கூட முழுதாகக் கேட்க முடிவதில்லை. எதிலுமே முழு கவனம் செலுத்த முடிவதில்லை. நீங்கள் எப்படி? ”

Teju Cole:

“அட. சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் இதே வியாதி உள்ளது. பெரும் அவஸ்தையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.”

இந்தக் கேள்வியைக் கேட்டவரை கட்டிப்பிடித்துக் கொஞ்சலாம் போ இருந்தது. எனது பிரச்சனையை ஒரே கேள்வியில் படம் பிடித்துக் காட்டி விட்டாரே. ஒரு பாடல் கூட கேட்க முடியாதவர், எப்படிப் புத்தகங்கள் படிப்பார்?

Teju ஐயும் பாராட்ட வேண்டும். இவ்வளவு சிக்கலிலும் தொடர்ந்து எழுதுகிறார். புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முயல்கிறார்.

மகளின் அற்புத நடனம்

என்னதான் பிரச்சனை எனக்கு? ஏன் ஒரு புத்தகம் கூட முழுதாகப் படிக்க முடிவதில்லை? புத்தகம் படிப்பது மட்டுமா? எந்த வேலையையுமே முழு மனதுடன் செய்ய முடிவதில்லையே. மண்டைக்குள் அடிக்கடி ஒரு சைரன் அடித்துக் கொண்டே இருக்கிறது. 5 நிமிடத்துக்கு ஒருமுறை மொபைலை எடுத்து நோண்ட வேண்டும். இல்லையென்றால் மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது.

என் சின்ன மகள், இரண்டு வயது தேவதை. பள்ளியில் ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடுகிறாள். நல்ல உடைகளுடன் சிறந்ந அலங்காரம். மேலும் 5 குட்டி தேவதைகள் கூட ஆடுகிறார்கள். பார்வையாளர்கள் அரங்கத்தை நிரப்பியுள்ளனர். குழந்தைகள் அற்புதமாக ஆடுகிறார்கள். என் செல்ல மகள், ஆச்சரியம் காட்டும் அகன்ற விழிகளால் பார்வையாளர்களைப் பார்த்து வியக்கிறாள். வியப்பும் பயமும் சேர்ந்து அவள் முகத்தை இன்னும் அழகாக்குகின்றன. அவள் மேடையில் ஆடுவதை, நான் என் மொபைலில் வீடியோ எடுக்கிறேன். என் மகளின் இனிய தருணங்களைப் பதிவு செய்வது எனக்கு பெரு மகிழ்ச்சி.

அதே நேரத்தில் மீண்டும் மண்டைக்குள் சைரன்.

மின்னஞ்சல், டுவிட்டர், முகநூல் பார்க்கிறேன். இந்த நேரத்தில் அவசர பதில் கேட்டு ஒரு மின்னஞ்சல். அதற்குப் பதில் தரும் நிலைகூட இல்லை. முகநூல் அரட்டையில் நண்பன் ஒருவன் அழைக்கிறான். அவனுக்குப் பதில் சொல்கிறேன். இதற்குள் என் மகள் நடனத்தை முடித்துவிட்டு, மேடையை விட்டுக் கீழே இறங்கி விடுகிறாள்.

இதற்கு வெட்கப்படுவதா? வருத்தப்படுவதா? என்று தெரியவில்லை. ஏன் இப்படி இருக்கின்றேன்?

முன்பு ஒருநாள் அப்படித்தான். என் 4 வயது மூத்த மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். வாய் அவளிடம். கண் மொபைலில். வட கொரியா பற்றி ஏதோ செய்திகள் படித்து்க் கொண்டிருந்தேன். அவள் பேசியது என் காதில் விழவேயில்லை. அவள் என் முகத்தைப் பிடித்து இழுத்து, “அப்பா. என்னைப் பாருங்கள். நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று பாருங்கள். என் மகளை விட எனக்கு மொபைல் நோண்டுவதே எனக்கு முக்கியமாகி விட்டது.

இதே போலத்தான் குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசும்போதும் ஏற்படுகிறது. மண்டையில் பெரும் சைரன்.

“மொபைலை எடு. டுவிட்டர் பார். உலகில் ஏதோ பெரிய அற்புதம் நிகழ்ந்துள்ளது. அதைத் தெரிந்து கொள். முகநூல் பார். அட சும்மாவாவது மொபைலைத் தடவிக் கொண்டிரு. என்ன சுகம். இதை விடுத்து இந்த மொக்கை மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாயே!”

படிக்கும்போதும் எழுதும்போதும் பிற மனிதருடன் பேசும்போதும் என எப்போதும் இந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அலுவலகத்திலும் இதே நிலைமைதான். இந்தக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் பல்வேறு தொலைபேசி அழைப்புகள், வருமான வரிக் கணக்குள், வங்கியில் பணப் பரிமாற்றங்கள் செய்து விட்டேன். இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் டுவிட்டர், முகநூல் பார்த்து விட்டால்தான் நிம்மதியாக இருக்கிறது. மின்னஞ்சல் பார்க்கும் பழக்கம் இன்னும் மோசம். உடனுக்குடன் பதில் தருவது என் வழக்கம் என்பதால், நிமிடத்துக்கு ஒரு முறை மின்னஞ்சல் சோதிப்பது வழக்கம். வீடு, அலுவலகம், ஓய்வுநாள், விடுமுறை நாள் என மின்னஞ்சல் பார்க்காத நாளோ, இடமோ இல்லை. எல்லா மின்னஞ்சல்களுக்கும் பதில் தந்து முடித்தவுடன், அதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதே மறந்து விடும்.

டிஜிட்டல் உலகம் தரும் டோபோமைன் (Dopamine) போதை

இந்த இணையம், மொபைல், செயலிகள், டிஜிட்டல் கருவிகள் எல்லாமே எந்நேரமும் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆம். என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விடுத்து இவற்றைப் பார்க்கச் செய்வதே இவற்றின் வேலை.

சமீபத்திய நரம்பியல் ஆய்வுகள் இவற்றின் மூலக்காரணங்களை ஆய்ந்து வெளியிட்டுள்ளன.

1. புதுத்தகவல்கள் மூளையில் டோபோமைன் எனும் வேதிப்பொருளை அளிக்கின்றன. இது மனத்திற்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.

2. மேலும் மேலும் மகிழ்ச்சி கிடைக்க அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக புதுத் தகவல்கள் வேண்டும்.

3. தொடர்ந்து புதுத்தகவல்கள் அளிக்கும் டிஜிட்டல் கருவிகள் மேலும் மேலும் டோபோமைனைது தூண்டி நம்மை ஒரு போதைக்கு அடிமையாக்கி விடுகின்றன.

ஒவ்வொரு புது மின்னஞ்சலும், புது ட்வீட், புது முகநூல் செய்தியும் கொஞ்சம் டோபோமைன் தருகின்றன. உற்சாகமாக உணர்கிறோம். விரைவில் இது பழகி விடுகிறது. அதிக மகிழ்ச்சிக்கு அதிக டோபோமைன் வேண்டும். அதற்கு அதிக செய்திகள் வேண்டும். நிமிடத்துக்கு ஒரு முறை மின்னஞ்சல், டோபோமைன், டுவிட்டர், டோபோமைன், முகநூல், டோபோமைன். இது ஒரு தொடர் சுழற்சியாகி விடுகிறது. புகைப்பிடித்தல், சாராயம் போன்றதை விட அதிக அளவில் போதை தந்து நம்மை அடிமையாக்கி விடுகின்றன இந்தக் கருவிகள்.

இந்தக் கலவரத்தில் புத்தகங்கள் என்ன செய்யக்கூடும்?

மரண போதை

எலிகள் மீதான ஒரு ஆய்வு பற்றி படித்தேன். ஒரு பட்டனைத் தொட்டால் சிறு மின்சார அதிர்வு வருமாறு எலிகளை இணைத்தனர். அந்த அதிர்வு எலிகளின் மூளையில் டோபோமைனைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டது.

அந்த எலிகள் உணவை மறந்து பட்டனை அழுத்திக் கொண்டிருந்தன. கலவியை மறந்து பட்டனுக்கு அடிமையாகக் கிடந்தன. ஒரு மணி நேரத்தில் 700 முறைக்கு மேல் பட்டனை அழுத்தின. இறுதியில் பட்டனை அழுத்தியபடியே இறந்தே விட்டன.

எனது மொபைல் பட்டனும் இது போலத்தானே. அடிக்கடி அதைத்தடவி, புது செய்தி பார்த்தே ஆக வேண்டும்.

Choices: Part 1 (xkcd)

மொபைலைத் தாண்டி வெளியே ஒரு அழகான உலகம், மக்கள் இருப்பதோ, எனக்கான வேலைகளோ, படிக்க விரும்பும் புத்தகங்களோ என் கண்களுக்குத் தெரிவதே இல்லை.

புத்தகங்களின் அவசியம் என்ன?

என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். முன்பெல்லாம் இப்படி இருந்ததே இல்லை. அப்போது நிறைய புத்தகங்கள் படிப்பேன். அவையே என்னை உருவாக்கின. உலகைப் பலவிதங்களில் புரிய வைத்தன. மக்கள் மனதைப் படிக்கவும், மனிதர்களின் அருமையை உணரவும் வைத்தன.

புத்தகம் ஒரு கலையோ, இசையோ இல்லை. அது நம்மை வேறு ஒருவர் கோணத்தில் யோசிக்க வைத்து, ஒரு புது உலகைக் காட்டக் கூடியது. பிறர் பார்வையில் பார்க்கத் தொடங்கினால், நம் வாழ்வின் பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் எழுத்தாளரோடு, நம்மை அவர் காணும் உலகிற்கு அழைத்துச் செல்கின்றது. மிக மெதுவான செயல் இது. மனதிற்கும் மூளைக்கும் இதம் தரும் அவசரமில்லாத, இனிய, மெதுவான செயல் வாசிப்பு. ஆசிரியரின் கருத்துகளும் உலகின் மீதான பார்வையும் நம் கருத்துகளோடு இணைந்து அல்லது மாறுபட்டு, புதுக் கருத்துகளை உருவாக்கும் ரசவாதம் நடக்கும் விந்தையே வாசிப்பு.

புத்தகங்கள் புதுக் கருத்துகள், உணர்வுகளைத் தூண்டுவதோடு, வாசகரை ஆசிரியரின் உயரத்திற்கு அழைத்துச் சென்று, உலகை புதுக் கோணங்களில் காட்டுகின்றன. குழந்தையைத் தோள் மீது தூக்கி, திருவிழாவைக் காட்டும் ஒரு தந்தை போல.

புத்தகங்களில் தன்னைத் தொலைப்பதும் தியானமே. மீண்டும் புத்தகங்களோடு இணைந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். இணையக் கருவிகளின் டோபோமைன் தூண்டுதல் தொந்தரவு இல்லாமல், எனது இனிய புத்தகங்கள் என் வாழ்வில் எனக்கு மீண்டும் கிடைக்குமா? முடிவில்லாத ஒரு தகவல் வெள்ளத்தில் இருந்து விடுதலை கிடைக்குமா? அப்படி நடந்தால் , மீண்டும் நிறைய புத்தகங்கள் படிப்பேன். எனது மூளையும், நேரமும், மனிதர்களும் எனக்கு மீண்டும் கிடைக்கும்.

இணையக் கருவிகளின் சிக்கல்கள்

நாம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். முழு முட்டாளாகி விடுகிறோம். Glenn Wilson எனும் ஆய்வாளர், இந்தப் பல வேலைகள் செய்யும் பழக்கத்தால் மூளையில் ஏற்படும் விளைவுகள் ஒரு பெட்டி சிகரெட்டை விட அதிகம் என்கிறார். (இந்த ஆய்வின் முடிவுகள் ஊடகங்களால் திரிக்கப்பட்டதும் நடைபெற்றுள்ளது. http://www.drglennwilson.com/Infomania_experiment_for_HP.doc)

இதனால் நம்மால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. எதையும் முழுமையாகச் செய்து முடிப்பதில்லை. திருப்தி இல்லாத வேலைகள் வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் விழுங்கி விடுகின்றன. வீட்டில், அலுவலகத்தில், குழந்தைகளுடன், விளையாட்டில் என எதிலுமே முழுமையாக இருக்க முடிவதில்லை.

ஒரு வேலையைச் செய்யும் போது, புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்தால், அதைப் பார்க்கத் தூண்டும் எண்ணங்கள், நம் மூளையின் IQ ஐ 10 புள்ளிகள் குறைத்து விடுகின்றன. (The Organized Mind, by Daniel J Levitin)

எனது நிலையை யோசித்துப் பார்த்தால், நான் பார்க்கும் மொபைல் கருவிகள், என் மூளைத்திறனை காலி செய்து வெறும் டப்பாவாக்கி விட்டிருக்கும் என நினைக்கிறேன்.

வேலை, மின்னஞ்சல், டுவிட்டர், வெட்டிப் பேச்சு எனக் கலந்துகட்டி வேலையைச் செய்யும் நாட்களே மிகவும் மோசமான நாட்கள். நாளின் இறுதியில் பெரும் மன அழுத்தம், இறுக்கத்தை உணர்வேன். ஒவ்வொரு நாளும் இது தொடர்வதுதான் பெரும் சோகம்.

அடிக்கடி ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு கவனத்தை மாற்றுவதால், மூளைத்திறன் குறைகிறது. ஆனால் ஒரே வேலையில் கவனத்தைக் குவித்தால், மூளைத்திறன் அதிகரிக்கிறது. வேலையை ஒழுங்காகச் செய்து முடித்தால் வரும் திருப்தியும் மகிழ்ச்சியும் அலாதியானது. (The Organized Mind, by Daniel J Levitin)

என்னதான் பிரச்சனை?

எனக்கு என்னதான் பிரச்சனை என்று கண்டு பிடித்து விட்டேன்.

1. இணையக் கருவிகள் தரும் அளவுக்கு அதிகமான டோபோமைனுக்கு என் மூளை பழகி விட்டது. அதனால் புத்தகங்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

2. இந்த டோபோமைன் போதையால், என்னால் வேலையில், குடும்பத்தில், விளையாட்டில், குழந்தைகளுடன் என எதிலுமே முழு கவனம் செலுத்த முடிவதில்லை.

இதுதான் எனக்கு உள்ள பெரிய பிரச்சனை.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி, தொல்லைக்காட்சியாகி ரொம்ப காலம் ஆகி விட்டது. அதில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும், நாம்தான் அவற்றைப் பார்க்காமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுகிறோம்.

சில வருடங்களாகவே என் மாலைப் பொழுது கழிவது இப்படித்தான். வேலையில் இருந்து வீட்டுக்கு வருவது, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, நான் சாப்பிடுவது, குழந்தைகளைத் தூங்க வைப்பது. இதற்கே பெரும் அசதி. பிறகு தொலைக்காட்சி பார்ப்பது. இடையே மின்னஞ்சல். பின் தூங்கப் போவது. அங்கேயும் மின்னஞ்சல், பின் டுவிட்டர், முகநூல். கடும் அசதி. வெறுமை. பின் எனக்கே தெரியாமல் தூங்கிப் போவது.

புத்தகம் படிப்பவர் தம் உலகை வெல்கிறார். தொலைக்காட்சி பார்ப்பவர் தம் உலகை இழக்கிறார் – (Werner Herzog)

உண்மைதான். புத்தகங்கள் போல எனக்கு அறிவூட்டிய, என்னைப் பண்படுத்திய, புதுக் கருத்துகள் அளித்து, புது மனிதனாக உயர்த்திய, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் இதுவரை பார்த்ததில்லை.

மாற்றம், முன்னேற்றம்

இந்த ஆண்டு ஜனவரி முதல், சில மாற்றங்களைச் செய்து வருகிறேன். அவை,

1. வேலை நேரத்தில் டுவிட்டர், முகநூல், செய்திகள் என எதுவுமே கிடையாது.

2. சும்மா வெறுமனே இணையத்தை மேய்ந்து, கண்ட கட்டுரைகளைப் படிக்கக்கூடாது.

3. படுக்கையறையில் தொலைக்காட்சி, திறன் பேசி, இணையக் கருவிகள் எதுவும் கூடாது.

4. இரவு உணவுக்குப் பின் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

5. மாறாக, படுக்கையறைக்கு ஒரு புத்தகம் அல்லது கிண்டில் மின்னூல் கருவியைக் கொண்டு செல்ல வேண்டும். தினமும் படிக்க வேண்டும். இதை ஒரு தவம் போல உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

மிக விரைவாகவே, புத்தகம் படிக்கும் பழக்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. வார்த்தைகள், வரிகள், பத்திகள், பக்கங்களில் கவனம் செலுத்துவது கடினம் என்று நினைத்தேன். இணைய இடையூறுகள் ஏதும் இல்லாததால், கவனம் செலுத்துவது நினைத்ததை விட, எளிதாகவே உள்ளது. மொபைல் இல்லை, டுவிட்டர் இல்லை, முகநூல், மின்னஞ்சல், தொலைக்காட்சி என தொல்லைகள் எதுவுமே இல்லை. நானும் புத்தகமும் மட்டும்தான். மீண்டும் புத்தகங்கள் காட்டும் புதுப்புது உலகங்களில் உலாவத் தொடங்கினேன்.

மிக அற்புதமான நாட்கள் இவை.

இத்தனை ஆண்டுகள் படித்ததை விட மிக அதிகமாகப் படித்து வருகிறேன். செய்யும் செயல்கள் யாவிலும் அதிக கவனத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறேன். என்னால் முழுமையாக டோபோமைன் போதையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. செயல்பாட்டிலும் காண முடிகிறது. புத்தகங்கள் கவனச் சிதறலை நீக்கி, ஒருமுகமான மனதை அளிப்பதை மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

புத்தகங்கள் என்னை இணைய போதையில் இருந்து மீட்டு, புது மனிதனாக்கி உள்ளன. நீங்களும் விரைவில் இணைய போதையில் இருந்து விடுபட்டு, புத்தகங்களில் உலகில், உங்களைத் தொலைக்க அழைக்கிறேன்.

வேலை நேரத்தில், அடிக்கடி மின்னஞ்சல் பார்ப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே சிக்கல். அதையும் விரைவில் தீர்த்து விடுவேன். இதற்கு உங்களிடம் ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்களேன்.

(புத்தகங்கள், வாசித்தல் சார்ந்த செய்திகளுக்காக ஒரு செய்தி மடல் தொடங்கியுள்ளேன். இங்கே பதிவு செய்ய அழைக்கிறேன்)

 


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

6 responses to “நாம் ஏன் படிப்பதே இல்லை?”

  1. Sivaprabu Ganesan Avatar
    Sivaprabu Ganesan

    Nice article but suddenly changing not change the habit step by step avoid gadgets

  2. Santhosh Avatar
    Santhosh

    மிகவும் அற்புதமான பதிவு. பகிர்ந்தமைக்கும், சிறப்பான மொழி ஆக்கதிர்க்கும் நன்றிகள்.

  3. […] நாம் ஏன் படிப்பதே இல்லை? […]

  4. இராய செல்லப்பா Avatar

    அருமையான அலசல். இணையம் நம்மை அடிமையாக்கிவிட்டது. அதிலிருந்து நம்மை நாம்தான் விடுவித்துக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு நான் வாங்கிவைத்து இன்னும் படிக்கத்துவங்காத 62 புத்தகங்களை இன்னும் மூன்று மாதத்தில் முடித்தாக வேண்டும் என்று இந்தக் கட்டுரை வழங்கிய உத்வேகத்தில் உறுதிபூண்கிறேன்.

  5. கு. அருளரசன் Avatar
    கு. அருளரசன்

    அருமையான நூல் நல்ல எழுத்து நடை