முன்னுரை:
தமிழில் நூல்கள் பல படிக்க விரும்புவோரின் ஆர்வத்தை நிறைவு செய்யும் நோக்கிலும், நூல்களை வரலாற்றுப் பதிவுகளாக ஆவணப்படுத்தும் நோக்கிலும் இணையவழி முயற்சியாக மின்னூல்களை (eBooks) உருவாக்கும் செயல்பாடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. உலகில் எந்த மூலையில் இருந்தும் இணையம் வழியாகத் தமிழ்நூல்களை தங்கள் கணினி வழி படிக்கும் வாய்ப்பு பல தொழில் நுட்பங்களைக் கடந்து இக்காலத்தில் நன்கு மெருகேறிய நிலையில் உள்ளது எனலாம். நூல்களை html இணையப் பங்கங்களாக பலவகை ‘எழுத்துரு’க்களில் (fonts) உருவாக்கி அளித்த நிலையில் இருந்து முன்னேறி, ‘ஒருங்குறி’ (Unicode) எழுத்துருக்களைப் பயன்படுத்தும் முறைக்கு முன்னேறியது படிப்பவருக்கு உதவும் நல்லதோர் மாற்றம்.
மின்னூல்களின் வளர்ச்சி:
இப்பொழுது கணினி வழி படிப்பதையும் கடந்து கைபேசி, ஆமசான் ‘கிண்டில்’ அல்லது பிற ‘ஆன்ட்ராய்டு’ மின்பலகை (டேப்லட்) போன்றவை வழியாகவும் மின்னூல்களை பதிவிறக்கிப் படிக்கும் நிலை மிகப்பரவலாக வழக்கத்திற்கு வந்துவிட்டது. இது போன்ற புதுமுறை படிக்கும் கருவிகளுக்கான மென்பொருள்களும், அதற்கேற்ற வகையில் மின்னூல் வெளியீடுகளும் வந்துள்ளன. கிண்டில் வழி படிப்போர் ‘மோபி’ (mobi) மின்னூல் வடிவிலும், பிறர் ‘இபப்’ (EPub) வகையிலான மின்னூல்களைப் படிக்கும் முறையும் உள்ளது. கணினி, கைபேசி, மின்பலகை போன்ற எந்தப் படிக்கும் கருவி கொண்டும் ‘உருப்பட வடிவம்’ (PDF) வகை மின்னூல்கள் படிக்கும் முறை உள்ளது. மேலுமொரு 15 வகையில் (Format) மின்னூல்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Comparison_of_e-book_formats), PDF, EPub, mobi வகை மின்னூல்கள் வெளியீடே முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதனால் வணிக நோக்கு அல்லது சேவை நோக்கு என இருவகை மின்னூல் உருவாக்கும் பிரிவினரும் இந்த மூன்று வகையிலேயே பெரும்பாலும் நூல்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ் மின்னூல்களை உருவாக்கி வழங்கி வருவதில் தன்னார்வலர்களும் தமிழக அரசும் பெருமளவில் பங்களித்துள்ளார்கள்.
மின்னூல் வெளியீட்டாளர்கள்:
இதில் தமிழக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், அவர்களின் பலநூறு நூல்களை ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ (http://www.tamilvu.org/library/libindex.htm) வழியாக 2001 ஆண்டு முதல் படிக்க ஏற்பாடு செய்துள்ளதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம் பகுதியில் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பல ‘உருப்பட வடிவம்’ (PDF), ‘தட்டச்சு வடிவம்’ (text) போன்ற வகைகளில் படிக்கக் கிடைப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பெருமளவு உதவியாக அமைந்துள்ளது.
அதற்கடுத்து வணிக நோக்கின்றி, பல தன்னார்வலர்களும் களமிறங்கி அரும்பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் முன்னோடி ‘மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்’ (http://www.projectmadurai.org/pmworks.html) ஆகும். மதுரை திட்டத்தின் தன்னார்வக் குழுவினர் 1998 ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு 500 க்கும் மேற்பட்ட மின்னூல்களை ஒருங்குறி எழுத்துருவிலான வலைத்தளம், உருப்படம், மின்பலகையில் படிக்க ஆறு அங்குல அளவிலான உருப்படம் (html site in Unicode, PDF, Kindle (6-inch PDF) வகையில் மின்னூல்களை வழங்குகிறார்கள்.
ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உருப்பட வடிவம் நூல்களை 2005 ஆம் ஆண்டில் இருந்து ‘நூலகம்’ (http://www.noolaham.org) அமைப்பு வெளியிட்டு வருகிறது. அவ்வாறே, தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம் (http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html), தமிழம்.வலை (http://www.thamizham.net/) ஆகியன மின்னூல் வெளியீட்டில் முன்னணியில் உள்ளன. உலகின் பல நூலகங்களில் இருந்தும் தமிழ்நூல்களை மின்னூலாக்கி வழங்குவதில் கூகுளின் பணியும் சிறப்பானது (https://books.google.com/). இவர்கள் யாவரும் காப்புரிமை காலம் முடிந்துவிட்ட நூல்களையும், காப்புரிமை விலக்கு அளிக்கப்பட நூல்களையும் மின்னூல் வடிவத்தில் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். காப்புரிமை உள்ள மின்னூல்களை வணிக நோக்கில் விற்பனை செய்யும் பல பதிப்பகத்தாரும் இப்பொழுது உருவாகியுள்ளனர்.
ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்:
இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வழிமுறையில், ‘ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்’ (https://freetamilebooks.com/) தன்னார்வக் குழுவினர், எழுத்தாளர்களை அணுகி அவர்களது நூல்களைக் காப்புரிமையை நீக்கி அளிக்கும்படி ஊக்குவித்துக் கடந்த நான்கு ஆண்டுகளாக 300 க்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இவர்களால் வாரம் ஒரு மின்னூல் வெளியீடு என்ற கணக்கில் தற்பொழுது மின்னூல்கள் வெளியிடப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் காப்புரிமையை நீக்கி அளித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் உருவாக்கிய நூல்கள் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம், ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க – “epub” வகை நூல்களும்; புது கிண்டில் கருவிகளில் படிக்க – “mobi” வகை நூல்களும்; குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணினிகளில் படிக்க – “A4 அளவு PDF” வகை நூல்களும்; பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க – “6 அங்குல அளவு PDF” வகை நூல்களும் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழ் மின்னூல் படிப்பவர்கள், எந்தவகை மின்னூல்களை அதிகம் பதிவிறக்கம் செய்து படிக்கிறார்கள்? இதில் தொழில்நுட்பம் வளர வளரக் காலப்போக்கில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு இவர்கள் வலைத்தளத்தில் (https://freetamilebooks.com/htmlbooks/download-report.html) உள்ள தரவுகள் பட்டியலை ஆராய்வது பதிலளிக்கும்.
ஆய்வின் அணுகுமுறை:
ஜூலை2017 முடிவில் மின்னூல் பதிவிறக்கங்கள் குறித்த தரவுகள் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டு ஆராயப்பட்டது.
ஒவ்வொரு மின்னூலிலும் எத்தனை விழுக்காடு, எந்த வகை மின்னூலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டது என்று கணக்கிடப்பட்டது.
இந்த விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ (Median and Average) ஆகியனவும் கணக்கிடப்பட்டது.
முதல் இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்கள் பிற்காலத்தில் பதிவிறக்கங்கள் செய்ய நேரும்பொழுது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்பலகை வழி படிக்கும் Epub, mobi, 6 – PDF நோக்கில் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுவாக மின்னூல் பதிவிறக்கங்கள் எந்த நிலையை நோக்கி நகர்கிறது எனத் தெளிவாக பிரித்தறியும் பொருட்டு, கடந்த இரு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூறு நூல்களிலும் (நூல் வெளியீடு: 201 முதல் 300 வரை) தனியாக விழுக்காடுகளின் ‘இடைநிலை’ மற்றும் ‘சராசரி’ ஆகியன கணக்கிடப்பட்டது.
பதிவிறக்கம் செய்யப்பட்டதில் “epub” மற்றும் “A4 அளவு PDF” வகை மின்னூல்கள் தமிழ் மின்னூல்கள் படிப்பவரால் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படுவது தெரிவதால் அவற்றின் பதிவிறக்கங்கள் பிற மின்னூல் வகை வெளியீடுகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டது.
இந்த ஆய்வின் வழி கீழ்க்காணும் முடிவுகள் தெரிய வருகின்றன:
1. Epub வகை மின்னூல்களின் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது. விரைவில் இரண்டில் ஒரு மின்னூல் பதிவிறக்கம் Epub வகை மின்னூல் என மாறக்கூடும்
2. A4 – PDF மின்னூல்களின் பதிவிறக்கங்கள் குறையத் தொடங்குவது தமிழ் வாசகர்களிடம் மின்பலகை, கைபேசி வழி படிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. சற்றொப்ப மூன்றில் ஒருவர் மட்டுமே A4 – PDF நூல்களைப் பதிவிறக்கம் செய்கிறார்கள்.
3. mobi வகை மின்னூல்களின் பதிவிறக்கங்களில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை, தொடர்ந்து 6% தமிழ் மின்னூல் படிப்பவர்கள் mobi வகை மின்னூல்களைப் படிப்பவர்கள் என்ற அளவில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். பழைய கிண்டில் வழி படிப்பவர்களையும் கணக்கில் கொண்டால், பதிவிறக்கங்களில் ஐந்தில் ஒருவர் (20%) மட்டுமே mobi & 6–pdfமின்னூல் வகையைப் படிப்பவர்கள்.
4. ஐந்து பேரில் நால்வர் (80%) Epub & A4 – PDF வகை மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்தாலும், Epub வகை மின்னூல் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகிறது.
தமிழ்மின்னூல் படிப்போரின் தேவைகளை அடிப்படியாகக் கொண்டு மின்னூல்கள் வெளியிட விரும்புவோருக்கு ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் பல்வேறு மின்னூல் வகை பதிவிறக்கங்கள் குறித்து அளிக்கும் தரவுகளில் கண்ட இந்த முடிவுகள் உதவக்கூடும்.
நன்றி:
ஆய்வுக்கு உதவும் வகையில் தங்கள் தளத்தில் தரவுகளை வெளியிட்டுள்ள ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு நன்றி.
— தேமொழி
Comments
One response to “தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்”
என்னுடைய நூலை வணிகரீதியாக வெளியிட விரும்புகிறேன். தக்க ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.