எழுத்து. மனித இனம் தான் பெற்ற அறிவை, பிறருக்கு தருவதற்காகக் கண்டுபிடித்த ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு. ஒலியானது வரி வடிவம் பெற்ற பின்புதான், தலைமுறைகளைத் தாண்டி வாழும் சிறப்பு பெற்றது. இயல்பாகவே மனிதருக்கு தாம் அறிந்தவற்றை பிறருக்கும் தரும் பரந்தமனம் உள்ளது. அதன் வெளிப்பாடுகளே இன்றும் நாம் படித்த புத்தகம், பார்த்த திரைப்படம், கேட்ட பாடல் போன்றவை பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம்.
பனை ஓலை காலங்களைத் தாண்டி, காகித வடிவம் பெற்றதுமே, உலகினில் பெரும் அறிவுப் புரட்சி ஏற்பட்டது. உலகின் எல்லா அரசியல் புரட்சிகளுக்குப் பின்னும் சிறந்த எழுத்தாளர்களும், புத்தகங்களுமே இருந்து வருகின்றன. தமிழிலும் எல்லா அறிவுகளும் புத்தகவடிவில் கிடைத்து வந்தன. போனதலைமுறை வரை.
சங்ககால இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள், சோதிட, வானியல் நூல்கள், சித்தமருத்துவம், விவசாயம், ஆன்மீகம், சிறுதொழில்கள் என பல்வேறு துறையினரும் தம் துறைசார் படைப்புகளை உருவாக்கி, நூல்களாக வெளியிட்டு வந்தனர். ரேடியோ ரிப்பேர் செய்வது முதல் நீச்சல், வீணை, காதல் வரை அனைத்தையும் சொல்லித்தரும் நூல்கள் பெருமளவில் வந்தன. எங்கோ உள்ள ரஷ்யாவில் எழுதப்பட்ட பல்வேறு உயர்தர அறிவியல் நூல்கள், மிர் பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு, எல்லா சிற்றூர்களின் கிளை நூலகங்களையும் சென்று அடைந்தன.
உலக அரசியல் முதல் உள்ளூர் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தையும் தமிழிலேயே பெறச் செய்தனர் போன தலைமுறையினர். ஆனால் இன்றைய இளைய இணைய தலைமுறைக்கு, இணையத்தில் கிடைப்பது என்ன?
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிய போது, சில அதிர்ச்சியான உண்மைகளை அறிந்தேன்.
‘நான் ஏன் தமிழைக் கற்றுக் கொள்ளவேண்டும்? உலக அறிவு அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. என் அறிவுத் தேவைகளை தமிழ் தீர்ப்பதில்லை. நூலகங்களில் குவிந்து கிடக்கும் போன தலைமுறை நூல்கள் இணையவாசிகளான எங்களுக்கு கிடைப்பதும் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு அவை என்றும் கிடைக்கப் போவதே இல்லை.’
‘இணையத்தில் இல்லாத எந்த ஒரு விஷயமும் எங்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை தான். எளிதில் பெற இயலாமல் எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டி, நூலகங்களிலும், புத்தகக்கடைகளிலும் ஒளிந்து கிடைக்கும் அறிவைப் பெற இங்கு தேவை மிகவும் குறைவு. அறிவியல், இலக்கிய ஆய்வு செய்வோர் இவற்றை தேடி எடுத்து அவற்றை நுகர முடியும். இன்றைய நவீனத் தேவைகளுக்கு, தேடுபொறியில் தேடி கிடைப்பவை மட்டுமே மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.’
‘உண்மைதான். ஆனாலும் இப்போது தமிழில் நிறையபேர் எழுதுகிறார்களே.!’
‘ஆம். இணையத்தில் இப்போது எழுதுபவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சினிமா. அரசியல். இவற்றிலும் இவர்கள் சாதிச் சண்டைகள், சினிமா கதாநாயகரைத் தொழும் அடிமைத்தனங்களே அதிகம். கொஞ்சம் இலக்கியம் வகையான கவிதைகள், சிறுகதைகள், தொடர்கள். அறிவு சார்ந்து எழுதுபவர்கள் 1 அல்லது 2 சதம் மட்டுமே. எங்கே தமிழில் ஒரு கணிணியை Assemble செய்வது பற்றியோ, ஒரு பைக் டயருக்கு பங்சர் ஒட்டுவது பற்றியோ, இணையவழியில் ஒரு சினிமா டிக்கட் பதிவு செய்வது பற்றியோ தேடிப் பாருங்களேன். ஒன்றுமே கிடைக்காது. கணிதம், அறிவியல் போன்றவற்றுக்கு பள்ளிப் பாடநூல்கள் தவிர, அவற்றை விளையாட்டாக சொல்லித் தரும் ஒரு தளமும் இல்லை. பல்லாயிரம் கைத்தொழில்களும் குலத்தொழில்களும் அழிந்து வரும் இந்த நிலையில் அவற்றைத் தமிழில் ஆவணப் படுத்த எவரும் இல்லை.’
‘டிரான்சிஸ்டர் காலத்தில், அவற்றை நாமே உருவாக்கவும், அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவும், பழுது பார்க்கவும், பல புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன. இப்போது Raspberri Pi, Arduino காலத்தில் ஏன் அவை பற்றி தமிழில் இல்லை? அட ஒரு நல்ல ஸ்மார்ட் போன், மடிக்கணிணி, மின்சாரகுக்கர், வாஷிங் மெஷின், மிக்ஸி வாங்க, அவற்றின் நிறை குறைகளை அலசும் தளம் கூடஇல்லையே. இவை எளிய தேவைகள். பல்வேறு மென்பொருட்கள், கணிணி மொழிகள், நோய்கள், மருத்துவ ஆலோசனைகள், பொருளாதாரம், வணிகம், மார்க்கெட்டிங் என துறைசார்ந்த அறிவு எதுவும் தமிழில் பதியப் படுவதில்லையே.’
‘ஆம். பட்டு சேலைகள் நெய்வது எப்படி? என்று தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. “How to weave silk saree?” என்று தேடினால் பல வீடியோக்களும் இணையதளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. காலம் காலமாக பட்டு நெசவு செய்யும் எமது காஞ்சிபுரம் மக்கள் ஒருவர் கூட தமிழில் தம் தொழிலையும், திறமையையும், அறிவையும் பகிராதது வருத்தமே.’
‘இவ்வாறு அறிவு சார் விஷயங்கள் மிகக் குறைவாகக் கிடைக்கும் மொழி இன்னும் எத்தனை தலைமுறைகள் தாண்டும்? ‘ தக்கன தழைக்கும் ‘ என்ற டார்வின் விதி மொழிக்கும் பொருந்தும். தமிழில் அறிவைப் பெற இயலாதபோது, ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? கற்கவேண்டும்?’
‘என்னதான் இருந்தாலும் தமிழ் நம் தாய்மொழி அல்லவா? அதைக் கற்காமல் விடலாமா?’
‘ஹாஹாஹா. என் மம்மி, டாடிதான் தமிழர். ஆனால் என் தாய்மொழி ஆங்கிலம். என் மம்மி, டாடி வீட்டில் என்னிடம் ஆங்கிலம்தான் பேசினர். பள்ளியிலும் அதேதான். என் சொந்த ஆர்வத்தில்தான் ஓரளவு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் தமிழில் அறிவூட்டும் இணையதளங்கள் இல்லாதபோது, தமிழைப் பயன்படுத்துவது பெரிதும் குறைகிறது. என்னளவில் பேச்சு மொழியாக மட்டும் இருந்து விட்டு, என் பிள்ளைகளிடம் போய்ச் சேருவது கடினமே.’
உண்மைதானே. கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய தமிழ், ஒவ்வொரு தலைமுறையினரும் செய்த பங்களிப்புகளால் மட்டுமே அடுத்த தலைமுறைக்குச் சென்றது. இதன் பல்வேறு இலக்கியச் செல்வங்கள் மட்டுமே இந்ததலைமுறைக்குப் போதுமானதல்ல. நூற்றாண்டுகள் பழமையான மொழி, நம் தலைமுறையினர் தம் அறிவைப் பகிராமல் போவதால், அழிந்து போனால், அது மிகவும் சோகமானது.
வாருங்கள். நமக்குத் தெரிந்த யாவற்றையும் தமிழில் எழுதுவோம். WordPress.com, blogger.com, medium.com என அட்டகாசமான வலைப்பதிவுகள் உள்ளன. தமிழில் எழுத உதவும் மென்பொருட்களும் நிறைய உள்ளன. உங்கள் மொபைலில் கூட தமிழில் வலைப்பதிவு எழுதலாம். விக்கிப்பீடியாவும் அறிவைப் பகிர ஒரு சிறந்த தளம்.
ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுனர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆ்ங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்தை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே.
இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்.
போன தலைமுறை தம் அறிவைப் பகிர புத்தகங்கள் உருவாக்க எவ்வளவு கஷ்டப் பட்டார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.
நமக்கு அப்படியெல்லாம் இல்லை. சும்மா, தட்டச்சினாலே போதும்.
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சுப் பழக்கம்.
அட. தட்டச்சு கடினம் என நினைத்தால், எடுங்கள் உங்கள் மொபைல் போனை. உங்கள் துறை சார் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து YouTube.com போன்ற தளங்களில் வெளியிடுங்கள். மென்பொருள் பாடங்கள், பைக் ரிப்பேர், புது மொபைல் போன் அறிமுகம், வேட்டி, சேலை நெய்தல், மர வேலை, வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், போன், மோட்டார் பழுது பார்த்தல், நடனம், உடற்பயிற்சி, விளையாட்டு என உங்களுக்குத் தெரியும் அனைத்தையும் தமிழில் பேசி, பதிவு செய்து வெளியிடுங்கள்.
இணையத்தில் இல்லாத எதுவும் இல்லை என்றே ஆகிவிடும்.
நம்மிடம் இருக்கும் வெள்ளித் தட்டில், போன வாரம் என்ன உணவு இருந்தது என்பது முக்கியம். அதைவிட இப்போது என்ன உணவு இருக்கிறது என்பதே நம் உயிரின் தேவை. மொழிக்கும் அதேதான்.
நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா நமக்குத் தந்ததை விட இன்னும் அதிகமாக நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் தரலாம் வாருங்கள்.
பின்குறிப்பு –
கணிணி பற்றி தமிழில் அறிய – http://kaniyam.com
தமிழில் புகைப்படக்கலை – http://photography-in-tamil.blogspot.co.in
தமிழில் பங்கு வணிகம் – https://kaalaiyumkaradiyum.wordpress.com/
இது போல உங்களுக்குத் தெரிந்த துறைசார் தளங்கள் பற்றிய விவரங்களை பின்னூட்டமாகத் தரலாமே.
••
பின்குறிப்பு
முகநூல் வருகைக்குப் பின், வலைப்பதிவுகள் குறைந்து விட்டன. இது மிகப் பெரும் இழப்பு. வலைப்பதிவுகளில் எழுதுபவை மட்டுமே இணையத் தேடுபொறிகளில் கண்களில் கிடைப்பவை. முகநூலில் நீங்கள் எழுதுபவற்றை, உங்களாலேயே கூட தேடி எடுக்க இயலாது. தேடுபொறிகளிலும் கிடைக்காது. எனவே, முகநூலில் மட்டும் எழுதி, உங்கள் எழுத்துகளை ஒரு மாபெரும் பாழும் கிணற்றில் எறிந்து
விடாதீர். வலைப்பதிவாகவும் உங்கள் எழுத்துகளை சேமித்து வாருங்கள்.
••••••••••
மலைகள் இதழ் 77 ல் எழுதிய கட்டுரை.
http://malaigal.com/?p=6928