காகிதமா ? கணியமா ?
சுவடியுகம், காகிதயுகம், அச்சுயுகம், பதிப்புத்துறை மறுமலர்ச்சி என்பனவற்றையெலாம் கடந்து நவீன மின்னூல்கள் பயன்பாட்டிற்கு வந்தமை பற்றிய கட்டுரை
சபா வடிவேலு
காகிதமா ? கணியமா?
மனிதன் சிந்திக்கத்தொடங்கியதும் தன் எண்ணங்களை சகமனிதரிடம் பகிர விழைந்தான். விளைவு? சைகைமொழியும் ஊமைப்பேச்சும் உருவாகின. நாளடைவில், சைகையோடு வாயொலி எழுப்பியிருக்கக்கூடும். பின்பே சிறிது சிறிதாய் சொற்களும் சொற்றொடர்களும் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும். ஒலி வடிவச் சொற்கள் பொருள்நிறைந்த மொழியாகி சரளமாய்ப் பேசத்தொடங்கியதற்கு எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கக் கூடும்? வாய்மொழியாகவே கருத்துப்பரிமாற்றம் என்னும் நிலையிலிருந்து மொழியானது வரி வடிவம் கொள்வதற்கு மேலும் எத்தனை எத்தனை நூறாண்டுகள் ஆகியிருக்கக் கூடும்? மொழி வளர, சிந்தனை விரிய, கற்பனை பெருக, கருத்தாக்கங்கள் சிறக்க, இலக்கியம் பிறந்திருக்குமோ ? இலக்கியங்கள் வளர இலக்கணங்கள் பிறந்திருக்குமோ?
சிறு செய்திகளுக்காகப் பட்டுத்துணியில் வண்ணக் குழம்பில் தோய்த்த இறகு கொண்டு ‘பட்டோலை’ வரையும் பழக்கம் அரசர்களிடையும் செல்வந்தர்களிடையும் உருவாகியது. ஆயின், உண்மை நிகழ்வுகளைக் கற்பனைச் சுவையூட்டி கவின்மிகு பாடல்கள் இயற்றிய புலவர்கள் தேர்ந்ததோ பதப்படுத்தப்பெற்ற பனையோலைகள். இப்பெருவாய்ப்பின் விளைவாய் எழுதாக் கிளவியும் எழுதப்பெறலாயின. காலப்போக்கில் இவ்விலக்கியக் களஞ்சியங்கள் கறையான் வாய்ப்படலாயின. எத்துணையோ தமிழ் இலக்கியச் செல்வங்கள் இவ்வாறு இறந்துபட்டன. எஞ்சியவையே படியெடுக்கப்பெற்றுத் தப்பிப் பிழைத்தன.
வந்ததே காகித வாகனம் :
எகிப்து நாட்டில் கி.மு.3500 ஆம் ஆண்டு வாக்கில் காகிதம் போன்ற ஒரு பொருள் வடிவமைக்கப்பெற்று அதை எழுதற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும், நாம் இப்பொழுது பயன்படுத்தும் காகிதத்தை முதன் முதலில் சீனர்களே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். தனது கண்டுபிடிப்பை கி.பி.8 ஆம் நூற்றாண்டுவரை (600 ஆண்டுக் காலம்) கமுக்கமாய் வைத்திருந்தனர். அடுத்து வந்த காலக்கட்டத்தில்தான் (கி.பி.751) காகித உற்பத்தியும் பயன்பாடும் அரேபியரை அடைந்து பின் உலகையே தழுவின. இந்தியாவில் கி.பி. 1105 ஆம் ஆண்டு முதன் முதலில் கல்கத்தாவில் காகிதப் பயன்பாடு தொடங்கியது. சற்றேறக் குறைய நான்கு நூறாண்டுகள் காலம்வரை மை கொண்டு காகிதத்தில் எழுதிவந்ததை யடுத்து பிறந்ததே ஒரு பெரும் புரட்சி !
அச்சு எந்திரஅவதாரம் :
கைகொண்டு எழுதற்கு மாறாய் எந்திரம் கொண்டு அச்சுக்களாய்ப் பதிக்கும் வண்ணம் சீனாவில் அச்சு எந்திரங்கள் உருவாகின. இந்தியாவில் கோவாவில்தான் முதல் அச்சு எந்திரம் 1556 இல் வந்தடைந்தது. இந்திய மொழிகளில் அச்சுப்பதிப்பு முதலில் தமிழில்தான் கி.பி. 1578 ல் அயலவரால் நடந்தேறியது. ‘தம்பிரான் வணக்கம்’ என்பது அந்நூல். இந்திய மொழிகளில் முதன் முதலில் (கி.பி.1714) தமிழ் மொழியில்தான் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. 1812 ல் முதன்முறையாக திருக்குறள் அச்சேறியது.
ஒரே சீராயும் ஒழுங்குடனும்கூடிய எழுத்துருக்களைக் கொண்டு அசுர வேகத்தில் பல நூறு பிரதிகளையும் ஒரே நேரத்தில் அச்சடிக்க அச்சு எந்திரம் வழிகோலியது. இதன் பல நன்மைகளுள் தலையாயது என்னவெனின், இலக்கிய நூல்களும் பிறவும் பரந்துபட்ட மக்கள் தொகுதியை எளிதில் சென்றடைந்ததேயாம். இதன் அளப்பரிய பலன்தான் கல்விப் பரவல்.
சாமான்யர்க்கும் சாத்தியமானது கல்வி. இதுவே ஒரு சமூகப் புரட்சியின் வித்தானது. அனைத்தும் அச்சிலேறும், அனைவரையும் அடையும் என்றானதும் காகிதமின்றி எதுவும் நடவாது என்னும் நிலை வந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வியந்திரம் கண்டறியப்பெற்றிருப்பின் எத்தனையோ பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களைக் கறையானிடமிருந்தும் காலச் சிதைவிலிருந்தும் காப்பாற்றிக் காகிதத்தில் அச்சேற்றிப் பதிப்பித்திருக்கலாம்; ஓலைச் சுவடிகளில் ஒளிந்துகொண்டிருந்த பல தமிழ் நூல்களை மீட்டுருவாக்கம் செய்வித்திருக்கலாம்.
நவீன கணினிப் புரட்சி :
சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1950 களில்) கணினி கண்டுபிடிக்கப்பெற்று தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்டது. வணிகப் பயன் பாட்டிலிருந்து மாறுபட்டு தனியர் கணினி 1970 களில் உருவெடுத்தது. தொடர்ந்து வந்த இணையம் (1990) மேலும் பல புரட்சிகளுக்கு வழிகோலியது. இன்று மின்னணு தொழில்நுட்பம் அனைத்தையும்
புரட்டிப்போட்டுவிட்டதைக் காணலாம். அவற்றுள் ஒன்றுதான் மின்னூலாக்கம். பற்பல தரங்களிலும் வண்ணங்களிலும் மிகு மெருகுடன் அச்சிடப்பெற்ற நூல்களையெல்லாம் கபளீகரம் செய்துவிடுமோ என்று எண்ணத் தொடங்கிவிட்டோம். மின்னூலாக்கத்தில் நாளும் வகை வகையாய் மென்பொருள்களும் செயலிகளும் படைக்கப்பெறுவது ஆனந்தம் தரும் அனுபவமாகும்.
கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் வடிவில் பல வண்ணங்களிலும் அசைவூட்டம்பெற்ற வரைகலையில் உருவான மின்னூல்கள் இற்றை நாளில் பெரிதும் பெருகியுள்ளன. அசைவற்ற, அமைதி காக்கும் காகித நூல்கள், இன்று ஒளி, ஒலி உருப்பெற்று அசையவும் பேசவும் கூடிய காணொலிக் காட்சியாய் விரிகின்றன. காலமும் இடமும் கணக்கின்றி
சேமிப்பிற்குள்ளாகின்றன. தேடிச்சென்று நூலகங்களில் நூல்களைப் பயிலும் முயற்சியும் பெரிதும் சிக்கனமாகிறது. விரிந்து பரந்த பல்மாடிக் கட்டடங்களில் பல்லாயிரக் கணக்கான நூல்களைச் சேமித்தலும், பராமரித்தலும், பாதுகாத்தலும் பெருஞ் செலவும் பெரு முயற்சியும் முதலீடாய்க் கேட்பனவாம். தற்பொழுது உள்ளங்கையில் அடங்கும் கருவியில் சங்க இலக்கியம் முழுமையும் அடைத்துவிடலாம்.
இணையப் புரட்சி :
அனைத்திற்கும் மேலாய் இணையம் எனும் ஓர் அட்சயம் இன்று அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் அவதரித்துள்ளது. உலகில் எங்கும், எந்நேரமும், எவரும் பயன்படுத்த வல்லதாய் உருப் பெற்றுள்ளது. மின்னூல்களை குணம் குறையாது, சட்டைப் பையில் சுமந்து செல்ல ஏதுவாக நுண்கருவிகள் வந்து அனைவரும் பயன்படுத்துகின்றனர். பென் டிரைவ், குறுவட்டு, குறுந்தகடு, தட்டைக் கணினி, மடிக் கணினி, வலையேடுகள், மின்னூல் வாசிப்பான்கள், திறன்பேசிகள் என்னும் எண்ணற்ற ஊடுபொருள்களும் கருவிகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றால் இருந்த இடத்திலிருந்தே புத்துலக சஞ்சாரம் செய்ய ஏதுவாகிறது.
பல்வேறு வலை தளங்கள், வலைப் பூக்கள், வலை வாசல்கள், சமூகத் தளங்கள், கல்வித் தளங்கள், மின் நூலகங்கள், மின் கருத்தரங்கங்கள், இணைய இதழ்கள், இணையக் கலந்துரையாடல்கள், இணைய செய்தித் தாள்கள் என வாய்ப்புகள் இடையறாது வளர்ந்து வருகின்றன. செயல் தீரமிக்க தேடு பொறிகளும் உலவிகளும் உலகையே உலாவரச் செய்கின்றன.
இவற்றின் தாக்கம் காகிதத்தின் மீதும் கவிந்துள்ளது. அனைத்துவகைப் பயணங்களுக்கும் காகிதத்தில் பயணச்சீட்டுகள் தேவையற்றதாகி விட்டன. இன்றோ, தேர்வுகள் எழுதக்கூட தேவையற்றதாகி விட்டதே இக்காகிதம் ! இணையவழித் தேர்வுகளை அரசே நடத்துகின்றது. இணையப் பல்கலைக் கழகங்களும் உலகளாவி செயல்படுகின்றன. கணினியும் இணையமும் கலந்த கணியப் பயன்பாடு கல்வியில் வியத்தகு மாற்றங்களை உருவாக்கி, ஒரு மறு மலர்ச்சியையே ஏற்படுத்தியிருப்பினும், இக்கட்டுரையில் நூல்களைப்பற்றி மட்டிலும் சிந்திப்போம்.
மிளிரும் புதுப்பிறப்பு :
காகிதங்களில் அச்சிடப்பெற்ற நூல்கள் படிக்கவும் பயிலவும் ஏதுவாக இருப்பினும் நூல்களைப் பேணிக் காத்தல் என்பது தனிமுயற்சி வேண்டுவதாம். எத்துணை நூல்களை, எத்துணைக் காலம் காத்திடவியலும் ? ஓர் எல்லை உண்டல்லவா ? கால, இட வரையறைக்கு உட்பட்டதெனில் அதற்கென ஏற்படும் செலவுகளும் உண்டல்லவா ? இவ்விடர்களை யெல்லாம்
களைவதற்கென புதுப்பிறவி எடுத்து வந்துள்ளவையே நவீன மின்னூல்களும் மின்னூலகங்களுமாம்.
மின் பதிப்புகள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. எண்ணிறந்த பக்கங்களை மின்னாக்கம் செய்யவும், அவற்றை மின் பெட்டகமாகத் தொகுக்கவும், வேண்டும் வேளையில், வேண்டுவனவற்றை மட்டும் மீள்பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் மிக நவீன செயலிகளும், வாய்ப்புகளும் இலகுவாகவும், இலவசமாகவும் தொண்டுபுரிகின்றன. இணைய
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியும் வாய்ப்புகளும் விறுவிறுப்பான தொடர்கதைகளாகின்றன. எடுத்துக்காட்டாய், மகாத்மா காந்தியின் அனைத்து எழுத்துகளும் ஒருங்கிணைந்த மின்பதிப்பாக அண்மையில் வந்துள்ளது. கடைகளில் கிடைக்காத பழம்பெரும் நூல்கள் பலவும் இன்று இணையத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பெற்று உலா வருகின்றன. புத்தகக்
கடைகளுக்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தே இணையத்தில் தேடி, விலையையும் செலுத்தி பதிவிறக்கம் செய்து படிக்கலாம். கிடைக்கவொண்ணா பழம்பெரும் நூல்களும் இன்று அனைவரும் காணவும் படிக்கவும் இணைய தடங்கள் தளமமைத்துத் தந்துள்ளன.
மின்னூல்களில் பல புதுமைகள் புகுந்துள்ளன. பார்க்க விழையும் சொற்களும் சொற்றொடர்களும் நூல்முழுதும் எங்கெல்லாம் பரவியுள்ளனவோ அவற்றை யெல்லாம் நொடியில் கண்முன்னே சுட்டுவதைக் காணலாம். இத்தகு சொல்தேடிகள் மட்டுமின்றி சொற்களுக்கான பொருளையும் சொடுக்கியவுடன் அறிவிக்கும் அகராதி இணைப்புகளும் இடம் பெறுகின்றன. மேலும், நூலின் எந்தவொரு பக்கத்திற்கும் ஒரே தாவலாகச் சென்று பார்க்கலாம்; மீளலாம். பக்கங்களிடை முன்னும் பின்னும் ஊடாடலாம். படித்ததில் பிடித்தவற்றை சேமித்து வைக்கலாம். படிப்பவர் வசதிக்கேற்ப எழுத்துகளைப் பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொள்ளலாம். நூல் வரிகளை ஒலிக்கச் செய்தும் கேட்கலாம்.
நூலோர் கையில் மந்திரக்கோல் :
அனைத்திற்கும் மேலாக, நூலாசிரியர் தமது நூலை எத்துணைமுறை வேண்டுமாகிலும் இணைய வழியாகவே திருத்தல், சேர்த்தல், நீக்கல் என உடனுக்குடன் புதுப்பிக்கலாம். மறுபதிப்புவரை காத்திருப்பது போன்றதல்ல மின்பதிப்புகள். ஒருமுறை இணைய தடத்தில் சேர்த்துவிடின், நூலானது உலகம் முழுதும் உலா வரும். யாரும், எங்கும், எந்நேரமும்
நூலைப் பார்க்கலாம், வாங்கலாம், படிக்கலாம், கருத்துப் பதிவு செய்யலாம். இதற்கென கணினியிலும் கைபேசியிலும் மின்படிப்பானிலும் பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம். திருக்குறள் முழுதும் பலரது உரைகளுடன் கைபேசியில் பதிவிறக்கம் செய்து சேமிக்கும் செயலிகளைப் பலரும் இன்று பயன்படுத்துகின்றனர். பயணங்களில் படிக்க இது
பேருதவியாய் இருக்கும். படிக்கும்போது குறளை பண்ணுடன் ஒலிக்கக் கேட்கலாம். வள்ளுவர் இன்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்துபோவார் ! ‘எங்கும் நூலே, எவரும் படிக்கலாம்’ என்பதே மின்னூல் முழக்கமாகும் !
மின்னூலாக்க முறையில் பல செயலிகள் நூலாசிரியர்களுக்கு அரிய வாய்ப்புகளை அள்ளித் தருவது ஒர் இனிய அனுபவமே. எடுத்துக்காட்டாய், தமிழ் நூல்களில் சொல்லடைவுகளை நூலின் இறுதியில் இணைப்பதற்காக அவற்றை அகர வரிசையில் பட்டியலிடுவது என்பது அதிக நேரமும் முயற்சியும் வேண்டுவதாம். ஆனால், இதையே ஒரு சொடுக்கில் கோர்த்துவிடலாம்
என்பது எவ்வளவு மகிழ்ச்சி ! சொற்கள், வரிகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையையும் இதுபோன்றே எந்த முயற்சியும் இன்றிப் பெறலாம். சொல்லெண்ணிகள் கோப்புகளில் தானாகவே கிடைக்கப்பெறுகின்றன. வகை வகையான எழுத்துருக்களும் ஒருங்குறி எழுத்துருக்களும் நூலின் எழுத்து வடிவங்களுக்கு அணி சேர்க்கின்றன. தமிழ் எழுத்துருவே பதிவிறக்கம் செய்யப்பெறாத கணினிகளிலும் கைபேசிகளிலும்கூட தமிழில் படிக்கும் வாய்ப்பை ஒருங்குறி வடிவம் கொடையாய் அளிக்கின்றது. சொற்பிழை திருத்திகள், மாற்றுச்சொல் பட்டியல், வாக்கிய திருத்த பரிந்துரைப்புகள், யாப்புப் பரிசீலனைகள் எனப் பன்முகச் செயலிகள் ஏவா உதவியாளர்களாய் முந்திவருவது மின்னாக்கத்தின் உபரிக் கொடையெனலாம். இவையெல்லாம் நூலாசிரியர்களுக்குப் புதுமை வரமன்றோ ?
தமது நூல்களைப் பல்லூடகக் கலைக்களஞ்சியமாய்ப் பார்ப்பதில் எவ்வளவு ஊக்கம் பெறுவர் ! இவ்வளவிற்கும் மேலாக, கைகொண்டு எழுதற்குப் பதிலாக வாய்மொழியாய்ப் பேசினாலே சொற்களைத் திரையில் பார்க்கும் விந்தையும் வந்துவிட்டது ! வியாசர் மீண்டும் வந்து வேதங்களை எழுத விழையின், பிள்ளையாரின் உதவியை நாட வேண்டுவதில்லை.
சொல்லிக்கொண்டே போனால் போதும்; கணினியின் / கைபேசியின் செயலியே எழுதிக் கொள்ளும். உதாரணமாக, கூகுல் டாக்குமெண்ட்ஸ் மென்பொருளிலுள்ள செயலி உலகின் 40 மொழிகளில் குரல்வழி பேசப்படுவதைப் புரிந்துகொண்டு மின்னல் வேகத்தில் எழுதி முடிக்கும் திறனைப் பெற்றுள்ளது. இவற்றுள் இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே தற்போது இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளது. விரைவில் தமிழிற்கும் இவ்வாய்ப்பை சுந்தர் பிச்சை பெற்றுத் தருவார் என நம்பலாம்.
மகாத்மா காந்தி போல கையெழுத்தைப் பெற்றிருப்பவர்களுக்கு இனிக் கவலையில்லை. கையால் எழுதி, படியெடுத்து, பிழை திருத்தி, அச்சுக் கோர்த்து, மீண்டும் மெய்ப்பு திருத்தி நூலாக்கம் செய்தல் வேண்டுவதில்லை. பன்மொழி குரல்வழி தட்டச்சு செய்யும் செயலியே இவற்றையெல்லாம் கவனித்துக்கொள்ளும். கணினிக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்
பொழுதே ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குத் தாவலாம்; பின் அதே மொழிக்கு மீளலாம். இவ்விதம், தட்டச்சு அறியாதோர் / இயலாதோர் குரல் கொண்டு பேசியே எழுதுவித்துவிடலாம். கண்ணொளியற்றோர் கருத்தோவியங்கள் சமைக்கப் பேருதவி புரிவது அளப்பரும் தொண்டு புரியும் இணையச் செயலிகளாகும். திறன்மிகு மொழிபெயர்ப்பான்களும்
இணையத்தில் உலவுவதால் பிற மொழிகளிலும் பெயர்த்து வாசிக்கலாம்.
பழமையா, புதுமையா ?
இற்றை நாட்களில் மறுபதிப்பு காணாது முடங்கிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றையும் மின்னூல் சேகரத்தில் புதுப்பித்து இலவசமாய் அனைவருக்கும் தரும் பணியை சில இணைய தளங்கள் தமிழிற்கான பெருஞ்சேவையாய் செய்துவருகின்றன. இவை இனி இறவா வரம் பெற்றவை ஆயினவாம். மேலை நாடுகளில் இணைய நூலகங்கள் தவிர்த்து முழுதும் மின்னூல்களையே கொண்ட மின்னூலகங்கள் பலவும் நிறுவப்பட்டுள்ளன. பள்ளிகளில் பாடநூல்களும் பிற சிறார் நூல்களும் மின்னூலகமாய் மாறிவருகின்றன. இணைய யுகம் துவங்கிவிட்டது. இனிவரும் நாட்களில் கையேடு என்றால் எந்த செயலி எனக் கேட்பர்; நூல் என்றால் எந்தத் தளத்தில் உள்ளது என அறிய விழைவர்; நூலகம் பற்றி கேட்பின், ஓரிரு நூறு மின்னூலகங்களைத் தேடுபொறிகள் தேர்ந்து கொடுக்கும். இக்கட்டுரையைக்கூட நீங்கள் கைபேசியில்தான் படித்துக்கொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். சட்டைப் பையில் சகலமும் அடக்கம் !
எவ்வளவுதான் கணியப்பயன்பாடு நன்மைகள் புரியினும், நம்மில் இன்னும் பலருக்கு காகிதத்தில் அச்சிடப்பெற்ற நூல்களைப் படிப்பதில்தான் தனி சுகம். ஆனால், காகிதப் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். ஒரு டன் காகிதம் தயாரிக்க இரண்டரை டன் எடையுள்ள மரங்களை வெட்டவேண்டியுள்ளது ! மரங்களை வளர்த்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எனவே புகையிலை உற்பத்தியைக் குறைத்துக்கொண்டே போவதுபோல் காகித உற்பத்தியையும் குறைக்கும் நாள் தொலைவில் இல்லை. மரக்கூழிற்கு மாற்றுப் பொருள் கொண்டு காகிதம் செய்யும் முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென
விழைவோமாக ! அவ்வாறே விந்தைகள் புரியும் மின்னூல்களை வரவேற்போமாக !
Comments
One response to “காகிதமா ? கணியமா ?”
சுஜாதா சாரின், கற்றதும் பெற்றதும் பகுதியில் இதை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்று படித்த ஞாபகம். இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் நிறைய வரவேண்டும். வாழ்க அறிவியல்