கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்

1. பதிப்புரிமை

பதிப்புரிமை (Copyright) என்பது ஓர் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், பயன்படுத்துதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை உரிமையாளருக்குப் படைப்பின் மீதான கட்டுப்பாட்டினையும் இலாபமீட்டும் உரிமையையும் தருகிறது. சில சந்தர்ப்பங்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

பதிப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிப்பாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. முந்திய காலங்களில் பதிப்புரிமைச் சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது. காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.

பதிப்புரிமையின் சாதக பாதகங்கள்

பதிப்புரிமையின் முக்கியமான சாதக அம்சம் பொருளாதார ரீதியில் எழுத்தாளர்களுக்கு பயன் கிடைப்பதனை உறுதி செய்வதே ஆகும். அதாவது ஒரு நூல் எத்தனை பிரதிகள், எந்தப் பதிப்பகத்தால், எப்போது வெளியிடப்படலாம் என்ற முடிவுகளை எழுத்தாளர் எடுக்க முடிகிறது. விற்பனையாகும் நூல்களின் இலாபத்தில் சிறு பகுதியினை எழுத்தாளர் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

பதிப்புரிமையின் மூலம் இலாபம் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ள போதிலும் அறிவு பரவுதலும் அறிவு விருத்தியும் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. இதற்கான காரணம் பதிப்புரிமையின் இறுக்கமான கட்டுப்பாடுகளே ஆகும். ஓர் எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகளின் பின்னரேயே அவரது படைப்புக்கள் பொதுவெளிக்கு வருகின்றன. அதுவரை அப்படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்படாவிடினும் அல்லது படைப்புக்கு உரிமை கோர எவரும் இல்லாவிடினும் கூட வேறெவரும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

சமூக நலன் கருதிய படைப்புக்கள் கூட – அவை சென்று சேர வேண்டிய மக்களைச் சென்றடையாமல் – பதிப்புரிமையின் பெயரால் தடுக்கப்படுகின்றன. எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு அச்சமூகங்களில் உருவாகவேண்டிய சிந்தனைப் பள்ளிகள் தோன்றாமலேயே போய்விடுகின்றன. தமது சிந்தனைகள் மூலமாக – அவை அவர்களுக்கு பின்பான தலைமுறைகளால் கடத்தப்படுவதனூடாக வரலாற்றில் தொடர்ச்சியாக வாழ வேண்டிய சிந்தனையாளர்கள் பதிப்புரிமையினால் கட்டுப்படுத்தப்படுவது கவலைக்குரியது.

அறிவின் பல்கிப்பெருகும் தன்மையே சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியது. சமூகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு சமூக அறிவு சகலராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் பதிப்புரிமையின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை.

தற்போதைய பதிப்புரிமை வடிவத்தின் பாதகமான அம்சங்களை எவ்வாறு சாதகமான அம்சமாக மாற்றுவது?

படைப்பாளியின் நலன் பாதுகாக்கப்படவும் வேண்டும் அதேவேளை அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகமும் பயன்பெற வேண்டும். சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இப்புள்ளியில் நின்று சிந்தித்து அதற்கான தீர்வைப் பெற வேண்டும்.

இதற்காக உருவாக்கப்பட்டதே கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதும உரிமங்கள் ஆகும். இந்த உரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் நூல்களின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும்.

அதேநேரம் படைப்புகளை யாவரும் பகிர்தல், அறிவைப் பரவலாக்குதல், விருத்தி செய்வதற்கான வழிகள் திறக்கப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது, அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்து நிற்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன. இவ்வுரிமங்களில் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் ஆவணப்படுத்தல், அறிவுவிருத்தி, கல்வி மேம்பாடு ஆகிய சமூகநல நோக்குகளுடன் இயங்கிவரும் நூலக நிறுவனம், விக்கிபீடியா போன்ற அமைப்புக்களும் தொடர்ச்சியாக இயங்கக் கூடியதாக இருக்கிறது.

2. கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதுமங்கள்

கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons – படைப்பாக்கப் பொதுமங்கள் என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்பட்டது.

http://creativecommons.org

இது படைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது (அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் வரையான பல்வேறு தெரிவுகள்) படைப்பாளர்களுக்குச் சாத்தியமாகின்றது. இது முழுமையான கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும் முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாதத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவிரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாயமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதும உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார்.

இந்த நிறுவனமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதுமங்களின்) உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் படைப்பாளர்கள் அவர்கள் தெரிந்தெடுக்கும், அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிடுவதைச் சாத்தியமாக்குகின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஆறு உரிம ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கிரியேட்டிவ் காமன்ஸ் – படைப்பாக்கப் பொதும உரிமங்கள்

ஒருவருடைய படைப்புகளை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், கிரியேட்டிவ் காமன்ஸ் (படைப்பாக்கப் பொதும) உரிமங்கள் எனப்படுகிறன. கிரியேட்டிவ் காமன்ஸ் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது.

மூல உரிமங்கள்

    Attribution குறிப்பிடுதல் / Attribution (by)

ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, பகிர, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

மூல படைப்பாளி மற்றும் மூல படைப்பு கிடைக்கும் இடம் போன்ற தகவல்களை அளித்தே பகிர வேண்டும்.

    Non-commercial இலாபநோக்கமற்ற / NonCommercial (nc)

ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இலாப நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே.

விற்பனை செய்யக்கூடாது.

    Non-derivative வழிப்பொருளற்ற / NoDerivatives (nd)

ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.

    Share-alike அதே மாதிரிப் பகிர்தல் / ShareAlike (sa)

வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும்.

ஆறு முதன்மை உரிமங்கள்

ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. Creative Commons Attribution BY – குறிப்பிடுதல் (CC-BY)


படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோடு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு. சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும் என்றில்லை.

மாற்றங்கள் செய்த பின் பயனர் வேறு உரிமத்திலும் பகிரலாம்.

 

2.Creative Commons Attribution-ShareAlike குறிப்பிடுதல் – அதே மாதிரிப் பகிர்தல் (CC-BY-SA)

இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும். சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.

 

3. Creative Commons Attribution-NoDerivs குறிப்பிடுதல் – வழிப்பொருளற்ற (CC-BY-ND)

உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது. சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.

 

4. Creative Commons Attribution-NonCommercial குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற (CC-BY-NC)


இந்த உரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.

5. Creative Commons Attribution-NonCommercial-ShareAlike குறிப்பிடுதல் – இலாப நோக்கமற்ற – அதே மாதிரிப் பகிர்தல்(CC-BY-NC-SA)


இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது. சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.

 

6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் “இலவச விளம்பர” ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும். சுருக்கமாக

ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.

மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.

வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை

இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.

இந்த ஆறு உரிமங்களில் ஒன்றை உங்கள் படைப்புகளுக்கு அளிப்பதன் மூலம், அவை பலரால் பகிரப்பட்டு சாகாவரம் பெறுகின்றன.

உங்கள் வலைப்பதிவுகள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என எந்த படைப்பையும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமைகளில் வெளியிடலாம்.

இந்த இணைப்பின் மூலம், உங்களுக்கு தேவையான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையை தெரிவு செய்யலாம்.

http://creativecommons.org/choose/

உங்கள் படைப்புகளை பலரும் பகிரும் போது, உங்கள் அறிவு பலரையும் சென்றடைகிறது.

எழுத்தாளருடைய பதிப்புரிமை எப்போதும் அவரிடமே இருக்கும். படைப்பாளியின் பதிப்புரிமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், குறித்த படைப்பாளியின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் சகல மக்களுக்கும் கொண்டு சென்று சேர்த்து புதிய சிந்தனைப்போக்குக்கள் உருவாக்கத்திற்கான அறிவுப் பரவலாக்கத்தை மாத்திரமே கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை செய்கின்றது.

இந்த அனுமதியின் நன்மைகள்

படைப்பாளர்களுக்கு

படைப்பாளரது படைப்பு, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும் உள்ள வாசகர்களைச் சென்றடைகின்றது. இதன் மூலம் படைப்பாளருடைய அறிவும் கருத்துக்களும் சிந்தனைகளும் வளர்ந்து வரும் படைப்பாளர்கள் மத்தியிலும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் சென்றடைகின்றன. ஒரு படைப்பாளரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துக்கள் சிந்தனைகள் பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதே அவருடைய முதன்மை நோக்கம் என்ற வகையில் அவருடைய எண்ணம் நிறைவேறுகின்றது.

பல்வேறுபட்ட நாடுகளில் உள்ளவர்களையும் படைப்புக்கள் சென்றடைவதன் மூலம் அவர்களது கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் நிலமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஒரு படைப்பாளருடைய படைப்பு/கருத்து/சிந்தனை வாசகர்கள் மத்தியில் தாக்கத்தைச் செலுத்தும் போதும் வாசகருடைய வாழ்வியலிலும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் போதும் அப்படைப்பாளி சாகாவரம் பெற்று தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றார்.

வாசகருக்கு

வாசகர் தாம் படிக்கும் நூல்களை நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம். தமது வலைப்பதிவில் பகிரலாம். தாம் விரும்பிய புகைப்படத்தை தமது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

சமுக வலைத்தளங்களில் பகிரலாம். மின்னூலாக்கி பல கருவிகளில் படிக்கலாம்.

மாற்றங்கள் செய்யும் உரிமை இருந்தால், விரும்பியவாறு மாற்றயும் பகிரலாம். வணிக உரிமை இருந்தால், விற்பனையும் செய்யலாம்.

பகிர்தல் என்பது மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. நாம் விரும்பும் எதையும் பகிர்வது நம் உரிமை.

புகைப்படங்கள்

Flickr.com, commons.wikimedia.org போன்ற தளங்களில், நீங்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரலாம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் பகிரப்பட்ட படைப்பகளை தேடி, அவற்றை உங்கள் நூல்களில், வலைப் பதிவுகளில் பயன்படுத்தலாம்.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள படங்களுக்கான தேடுபொறி இதோ.

http://search.creativecommons.org/

அடுத்த முறை உங்களுக்கு ஒரு படம் தேவைப்படும் போது, சும்மா கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தை பயட்படுத்துவதை விட, இங்கே தேடி, பகிரும் உரிமை உள்ள படங்களை பயன்படுத்துங்கள்.

கல்யாண் வர்மா என்ற புகழ்பெற்ற வன விலங்கு புகைப்பட நிபுணர், தமது அரிய புகைப்படங்கள் யாவையும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டதால், தாம் பெற்ற சிறப்புகளையும், பயன்களையும் பற்றி இந்த காணொளியில் பேசுகிறார்.

http://www.inktalks.com/discover/117/kalyan-varma-free-art-is-profitable

 

மின்னூல்கள் – FreeTamilEbooks.com திட்டம்

பல தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் ‘காப்புரிமை உள்ளது’, ‘எங்கும் நகலெடுத்து பகிரக் கூடாது’ என்று பார்த்திருப்பீர்கள். இதனால் வாசகருக்கு எந்த உரிமையும் இல்லை.

இணைய செலவை சேமிக்க, நீங்கள் அந்த வலைப்பதிவுகளை சேமித்து வைத்து, பிறகு படிக்கலாம் என்று நினைப்பது முடியாது. ODT, PDF, DOC கோப்புகளாக மாற்றக் கூடாது.

சில ஆண்டுகளில் அந்த வலைத்தளம் மூடப்பட்டால்,அவ்வளவுதான்.

அதில் இருந்த தகவல்களை யாரும் வைத்திருக்க முடியாது. கூடாது.

இதுபோல் அழிந்த வலைத்தளங்கள் ஏராளம். தமிழில் புகழ்பெற்று விளங்கிய ‘அம்பலம்’ மின்னிதழ் போல, காப்புரிமை கொண்டு, அழிந்த பின் Backup கூட இல்லாத தளங்கள் பல.

இவ்வாறு காப்புரிமை கொண்டுள்ளதால், எழுதியவருக்கு நட்டம் அதிகம். பல வாசகரை அடைய எழுதிய படைப்புகள், வலைத்தளம் தவிர வேறு வடிவங்களில் வாசகரை அடைய முடிவதில்லை.

இப்போது, படிப்பதற்கென கிண்டில், டேப்லட் என பலவகை கருவிகள் உள்ளன. இவற்றில் யாரும் வலைத்தளங்களை படிப்பது கடினம். ஆனால் இவற்றில் படிப்பதற்கேற்ப epub, mobi, PDF என பல வகை கோப்புகள் உள்ளன.

வலைத்தளங்களை இது போன்று மின்னூலாக்கினால், வாசகர்களை எளிதில் படிக்க வைக்கலாம். ஆனால் இது போன்று மின்னூலாக்கி பகிர்வதை ‘காப்புரிமை’ தடுக்கிறது.

ஆனால், சிலர் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது வலைப்பதிவுகளையும், நூல்களுயும் வெளியிட்டுள்ளதால், FreeTamilEbooks.com திட்டக் குழுவினர், அவற்றை மின்னலாக்கி வெளியிடுகின்றனர். இந்த நூல்களை யாவரும், படிக்கலாம். பகிரலாம்.

இதுவரை சுமார் 100 மின்னூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு மின்னூலும் குறைந்தநு 100 பதிவிறக்கங்கள், சில மின்னூல்கள் 15,000 பதிவிறக்கங்கள் என உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை இந்த மின்னூல்கள் அடைகின்றன.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையால் மட்டுமே இது போன்ற புது முயற்சிகள் சாத்தியமாகின்றன.

இது போல, மேலும் புது வகை முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது.

ஏட்டில் இருந்து அச்சு நூலுக்கு வந்ததே, அதிகம் பேரே சென்றடைய. அச்சிலிருந்து இணைய வடிவிற்கு மாறியது உலகெங்கும் சென்றடைய. ‘காப்புரிமை’ கொண்டு இந்த பரவலை தடுக்காதீல்கள். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்யும் உரிமை கொடுங்கள்.

வாசகர்கள் உங்களை வாழ்த்திக் கொண்டே படிப்பர். பகிர்வர். உங்கள் படைப்புகளும் சாகாவரம் பெறும்.

 

மேலும் படிக்க.

https://creativecommons.org/licenses/

http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101

 

http://creativecommons.org/videos/get-creative

http://www.slideshare.net/DonnaGaudet/creative-commons-32865734

http://www.assortedstuff.com/stuff/?p=413

http://thepowerofopen.org/

 

 

நன்றி – நூலக நிறுவனம் வெளியிட்ட கையேடு ‘படைப்பாக்கப் பொதுமங்கள் – எழுத்தாளர்களுக்கான அறிமுகம்’

உரிமை – Creative Commons Attribution/Share-Alike License

http://creativecommons.org/licenses/by-sa/3.0/

 

 

த.சீனிவாசன்

[email protected]


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்”

  1. […] We have tutorial text in English and a tutorial video in Tamil. We also have an introduction to the Creative Commons license in Tamil. We ask the new volunteers to read the tutorial and see the video. This ensures that […]