கிண்டிலில் இந்திய மொழி மின்னூல்கள்

டிசம்பர் 1, 2016 அன்று அமேசான் நிறுவனம், இந்திய மொழிகளில் மின்னூல்களை விற்கத் தொடங்கியுள்ளது. தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மின்னூல்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு வரை, ஆங்கிலத்தில் மட்டுமே அமேசானில் மின்னூல்களை வாங்க, விற்க முடியும். இப்போது கிடைத்துள்ள, இந்திய மொழிகளில் மின்னூல் எனும் வாய்ப்பு, நமது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிடைத்துள்ள ஒரு மிகச்சிறந்த வரம்.

http://www.amazon.in/indian-language-ebooks/b/ref=nav_shopall_ebooks_indic?ie=UTF8&node=10837926031
கிண்டில் பேபர்ஒயிட், அதற்கு முந்தைய தொடுதிரை கொண்ட கிண்டில் ஆகியவற்றில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் தெளிவாகத் தெரிவதற்காக, அவற்றின் மென்பொருள் மேம்பாடுகளையும் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை தவிர ஆன்டிராய்டு, ஆப்பிள் கருவிகளிலும் நாம் வாங்கும் மின்னூல்களைப் படிக்கலாம். ஒரு முறை மின்னூல் வாங்கினால் போதும். அதை மேற்கண்ட எந்தக் கருவி வழியாகவும் லாகின் செய்து படிக்கலாம்.

தமிழில் இதுவரை 1200 மின்னூல்கள் விற்கப்படுகின்றன. தொடர்ந்து புது மின்னூல்கள் சேர்க்கப்படுகின்றன. சென்ற இரு ஆண்டுகளாக இந்தியப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்களை அமேசான் நிறுவனத்தினர் சந்தித்து, விற்பனை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்டில் அன்லிமி்ட்டட் – எல்லையில்லாக் கிண்டில்

அமேசானில் நான் விரும்பும் ஒரு இனிய வசதி, இந்த Kindle Unlimited. பல மின்னூல்களை நாம் ஒரு முறை படித்தாலே போதும். அதற்காக அவற்றை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. அச்சு நூல்களை நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்துப் பின் திருப்பித் தருதல் போல, இங்கும் மிகவும் குறைந்த விலைக்கு மின்னூல்களைப் பெற்று, படிக்கலாம். மாதம் சுமார் 200 ரூ. ஆண்டுக்கு 1800 ரூ என சந்தா செலுத்தி, மின்னூல்களின் கடலில் மகிழ்ச்சியாக நீந்திக் களிக்கலாம். ஆயினும் அமேசானில் உள்ள எல்லா மின்னூல்களும் இந்தத் திட்டத்தில் கிடைப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்ட மின்னூல்கள் இந்தத் திட்டத்தில் கிடைக்கின்றன. அச்சு நூல்களின் விலை, பராமரிப்பு, பாதுகாப்பு காரணமாக நாம் வாங்கத் தயங்கும் பல மின்னூல்களை இந்தத் திட்டத்தால், நாம் எளிதில் வாங்கிப் படிக்கலாம்.  இதில் ஒரு நேரத்தில் 10 மின்னூல்களை மட்டுமே நமது கணக்கில் சேர்க்க இயலும். மேலும் புதிதாக ஒரு மின்னூல் சேர்க்க, பழைய ஒரு மின்னூலை நமது கணக்கில் இருந்து நீக்க வேண்டும்.

https://www.amazon.in/kindle-dbs/hz/signup?ref=sxts_snpl_3_1_869697767&_encoding=UTF8&pd_rd_wg=DiGkj&autoSubscribe=1&pd_rd_w=39oW4&qid=1485904374&pd_rd_r=V7N87KQSNZJRFHCGMJS1

மின்னூல்களை விற்பது எப்படி?

ஆங்கில மின்னூல்களை Self Publishing முறையில், நாமே அமேசானில் ஏற்றி, விற்பனை செய்யலாம். ஆனால் இந்திய மொழிகளுக்கு அப்படி செய்யும் வசதி இன்னும் வரவில்லை. ஆயினும் அமேசான் தனது சார்பாக, சில விற்பனை முகவர்களை நியமித்துள்ளது. கிழக்கு பதிப்பகம் தமிழுக்கும், புஸ்தகா ( http://pustaka.co.in ) நிறுவனம் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கும் அமேசானில் மின்னூல் விற்கும் உரிமை பெற்ற சில நிறுவனங்கள். உங்கள் மின்னூல்களை விற்க இந்த நிறுவனங்களை அணுகலாம்.

பரிசளியுங்கள்

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு, மின்னூல்களின் மாய உலகத்தை பரிசளியுங்கள். கிண்டில் பேபர்ஒயிட் ரூ 9000 , சாதாரண கிண்டில் ரூ 6000, (விழாக்காலங்களில் 1000-2000 ரூ தள்ளுபடி கூடக் கிடைக்கும்), ஒரு ஆண்டு கிண்டில் அன்லிமிட்டட் சந்தா ரூ 1800 என உங்களுக்குத் தோதான ஒரு பரிசை அளித்து, அமேசான் காட்டிற்கு உங்களோடு அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

இந்திய எழுத்தாளர்கள், வாசகர்களின் பன்னெடுங்காலக் கனவுகளை நனவாக்கி வரும் அமேசான் நிறுவனத்திற்கு நன்றிகள்.


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “கிண்டிலில் இந்திய மொழி மின்னூல்கள்”

  1. சுரேன் Avatar

    பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை எந்த உரிமையில் விற்கின்றனர்? அச்சுப்புத்தகமெனில் விலை வைத்தல் தகும். காப்புரிமை இல்லாத மின்னூலை எப்படி இவர்கள் விற்க இயலும்?