மனித குலத்தில் எல்லா ஆண்களுமே கெட்டவர்களோ, அல்லது அனைத்துப் பெண்களுமே உத்தமிகளோ அல்லர். ஆனால், நளாயினி, சாவித்திரி, கண்ணகி போன்ற பெண்டிரைப்பற்றிதான் நமக்குத் தெரியும். `முற்காலத்தில் எல்லாருமே பத்தினித் தெய்வங்களாக இருந்திருக்கிறார்கள்! இப்போதுதான் கலி முற்றி, காலம் கெட்டுவிட்டது!’ என்பவர்கள், அப்போதும் எல்லா வகையினரும் இருந்திருக்கக்கூடும், ஆனால் அவர்களால் பெருமை கிடையாது என்பதால் யாரும் அவர்களைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிட்டார்கள் என்று யோசிப்பதில்லை.
முன்பெல்லாம், மலேசியப் பத்திரிகைகளில் வரும் கதைகளில், ஆண் என்றால் பொறுப்பானவன், தாய் என்றால் அன்பின் சிகரம் என்றுதான் பாத்திரப் படைப்பு காணப்படும்.
இங்கு அன்னையர் தினத்தை ஒட்டி, வாசகர்களை அவரவர் தாய்மார்களைப்பற்றி எழுதச் சொல்லி, சிறந்த தாய்க்குப் பரிசு வழங்கும் ஒரு ஆங்கில தினசரி. `தந்தையர் தினமும் இப்படிக் கொண்டாடலாமா?’ என்ற கேள்விக்கு, அனைத்து வாசகர்களும் கண்டனம் தெரிவித்து, `அப்பா என்றாலே குடிப்பவர், பெண்டாட்டி பிள்ளைகளை பலவித வதைக்கு உள்ளாக்குபவர்’ என்று பதில் எழுதியிருந்ததாக ஆசிரியர் (அவரும் பெண்தான்) குறிப்பிட்டிருந்தார்.
`அப்படியில்லை!’ என்று நான் என் பாணியில் (உள்ளடக்கிய கோபத்துடன், ஆணித்தரமாக), என் கணவரையும் ஒரு உதாரணமாகக் காட்டி எழுதியிருந்தேன். (`அப்பா திட்டினா பயமா இருக்கு, ஆனா, நீ திட்டினா ஏம்மா பயமா இல்லே?’ என்று கேட்டாள் மகள். அப்போது அவளுக்குப் பதினைந்து வயதிருக்கும். `ஏன்னா, நான் எப்பவுமே திட்டறேன்!’). குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், இரவில் கண்விழித்து அவர்களுக்கு மருந்து கொடுப்பது, அப்போது வாந்தி எடுத்தால் அவர்களையும், தரையையும் சுத்தம் செய்வது எல்லா வேலைகளையும் அவரே விரும்பி ஏற்றுக்கொண்டார். (இதனால், எங்களுக்குள் சண்டையே வராது என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது). என் தந்தையும் எனக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்று நானறிந்த பல ஆண்களைப்பற்றி நல்லவிதமாக எழுதியிருந்தேன். (விரைவில் தந்தையர் தினமும் பிரபலமாகி, என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது). என் மகளுடன் படித்த பதின்ம வயதுப் பையன்கள் ஓடி வந்து, `ஆன்ட்டி! நீங்கள் ஆண்களைப்பற்றி எழுதியிருந்ததைப் படித்தோம்!’ என்று மகிழ்வுடன் தெரிவித்தார்கள். (`நான் சொன்னேனே, இதைப் படித்துவிட்டு, எல்லா ஆண்களுமே என்மேல் காதல் வசப்பட்டுவிடுவார்கள் என்று!’ என்று நான் கூற, மகள் பெரிதாகச் சிரித்தாள். பையன் வாயிழந்துபோனான்! என் கணவர் வழக்கத்துக்கு விரோதமாக மௌனமாக இருந்தார். நானே புகழ்ந்துவிட்டதில் அதிர்ச்சியாம்).
பொதுவாக எல்லா ஆண்களையும் ஒரு எழுத்தாளர் குறை கூறினால், நல்ல குணமுடைய ஆண்கள் அயர்ந்துபோகிறார்கள். இருபாலரில் யாருமே நூறு சதவிகிதம் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதில்லை. இதைத்தான் என் கதைகளில் ஆராய்கிறேன். ஆனால், நான் ஒரு `கெட்ட’ ஆணைப்பற்றி எழுதியபோது, நிறைய ஆண்கள் சண்டைக்கு வந்திருக்கிறார்கள். (`ஒங்களைப்பத்தி எல்லாம் நாங்க எழுதினா?’ என்று ஒரு எழுத்தாளர் மிரட்டியபோது, `தாராளமா எழுதுங்க! ஒரு ஆண் கெட்டவன் என்றால், பெண் நல்லவள் என்று அர்த்தமாகாது!’ என்றேன் நான்).
அதேபோல், `ஒங்க வானொலி நாடகங்களிலே வர்றமாதிரி, எந்த அம்மாவாவது கெட்டவங்களா இருப்பாங்களா?’ என்று ஆண், பெண் இருபாலருமே விவாதம் செய்திருக்கிறார்கள். மருமகளிடம் ஆத்திரப்பட்ட மாமியார்கள், `இவ தாலி அறுத்தாதான் எனக்கு சந்தோஷம்!’ என்று வாய்க்கு வாய் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். அதாவது, தான் பெற்ற மகன் போனாலாவது பரவாயில்லை, மருமகள் துன்பமும் துயரமும் பட்டால்தான் தனக்கு நிறைவு என்று நினைக்கும் தாய்க்குலம்! அம்மா செண்டிமெண்டை காதில் பூசுற்றும் தமிழ்ப்படங்களுக்கு விட்டுவிடுவோம்.
இத்தொகுப்பில் நிறைய பெண்ணியக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. துயர் மிகுந்த தம் வாழ்க்கையிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமலே, அல்லது விரும்பாமலே, பலர் வாழ்க்கையை நடத்தி முடிக்கிறார்கள். `இப்படியே இருக்காதீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழவும் இயலும்!’ என்று அக்கதைகளில் பல வழிகளை ஆராய்ந்திருக்கிறேன்.
ஒரு ஆண் எழுத்தாளர் கூறினார், `பெண்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா, எல்லா பெண்களும் சேர்ந்து குரல் குடுக்கறீங்க! ஆனா, நாங்க புழு மாதிரி! சத்தம் போடாம செத்துடுவோம்!’
அப்படிப்பட்ட ஒரு ஆணின் கதைதான், இத்தொகுப்பின் தலைப்புக்கான கதை மற்றும் `ஓங்கிய கை’. இவர்கள் பரம சாது. மனைவிக்கு எல்லா உரிமையும், சுதந்திரமும் கொடுத்தும் ஏன் பயனில்லாமல் போய்விட்டது என்று குழம்புபவர்கள்.
எல்லாருமே தாம் எதிர்பார்த்தபடி ஆனந்தமான வாழ்க்கையே வாழ்ந்தால், எழுத்தாளர்கள் கதைகளுக்கு எங்கு போவார்கள்?
அன்புடன்,
நிர்மலா ராகவன், கோலாலம்பூர்
பி.கு: `ஒரு கதையிலேயாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கிடையாது!’ என்று கதைகளோடு, அவைகளை எழுதத் துணிந்த என்னையும் சேர்த்துத் திட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு இத்தொகுதி.
வணக்கம்.
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
அட்டைப்பட மூலம் – http://pixabay.com/en/background-black-detail-food-275934/
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த்
மின்னூலாக்கம் – சித்தார்த்தன் – [email protected]
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download free ebooks
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “உன்னை விட மாட்டேன் epub” unnai-vida-matten.epub – Downloaded 8309 times – 560.50 KB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “உன்னை விட மாட்டேன் mobi” unnai-vida-matten.mobi – Downloaded 2360 times – 1.35 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உன்னை விட மாட்டேன் A4 PDF” unnai-vida-matten-a4.pdf – Downloaded 16634 times – 1.99 MB
செல்பேசிகளில் படிக்க
Download “உன்னை விட மாட்டேன் 6 Inch PDF” unnai-vida-matten-6-inch.pdf – Downloaded 4809 times – 2.06 MB
புத்தக எண் – 54
சென்னை
ஏப்ரல் 4 2014
Leave a Reply