வெங்கட் நாகராஜ்
[email protected]
மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com
மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
வெங்கட் நாகராஜ்
[email protected]
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
விதம் விதமாய் சாப்பிட வாங்க…….
பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அதைப் போலவே சாப்பிடுவதும் என்று சொன்னால் என்னை நன்கு தெரிந்தவர்கள் திட்டுவார்கள் – பசிக்கு சாப்பிட வேண்டுமே தவிர, ருசிக்கு சாப்பிடக் கூடாது என்று அவ்வப்போது என் மனைவியிடமும் அம்மாவிடமும் சொல்வது வழக்கம். இருந்தாலும் நானே சமைத்து சாப்பிட வேண்டிய நேரங்களில் விதம் விதமாய் சமைப்பதுண்டு! போலவே பயணம் செய்யும் சமயங்களில் எந்தெந்த ஊரில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுவதே எனது வழக்கம். வட இந்தியாவில் இருந்து கொண்டு, அதுவும் வடக்கின் எல்லை மாநிலங்களில், தமிழகத்திலிருந்து வெகு தொலைவு வந்த பிறகு சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என சாப்பிடக் கிடைக்குமா என்று தேடினால் பயணம் முழுவதும் பட்டினி தான் இருக்க வேண்டும். மசாலா தோசை என்ற பெயரில் புளித்த மாவில் செய்த தோசை மீது உருளைக்கிழங்கு மசாலா வைத்து மகா மோசமான சுவையில் கொடுப்பார்கள் – அதைச் சாப்பிடுவதற்குச் சும்மா இருந்து விடலாம்.
இப்படி சில அனுபவங்கள் கிடைத்த பிறகு, எங்கே சென்றாலும், அந்த ஊரின் உணவு என்னவோ அதையே கேட்டு வாங்கிச் சுவைப்பது எனது வழக்கம். வடக்கே பெரும்பாலான ஊர்களில் காலை உணவு பராட்டா தான் – பயப்பட வேண்டாம் – இது மைதா பராட்டா அல்ல – கோதுமை பராட்டா, கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தயிரும்! ஆனாலும், ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும், வித்தியாசமான உணவு வகைகள், அவை தயாரிக்கப்படும் முறைகள் என கேட்டு சாப்பிடுவது வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் உணவுக்காக படும் அவஸ்தைகள், தேடல்கள் என நிறையவே அனுபவங்கள். பயணக் கட்டுரைகள் எழுதும் போது அந்தந்த ஊரில் உணவு உண்ட அனுபவங்களையும் எழுதுவது வழக்கம். அது பலருக்கும் பிடித்தமானதும் கூட! அப்படி எழுதியது தவிற, சமையலுக்காகவே சில தனி பதிவுகளும் எனது வலைப்பூவில் எழுதியதுண்டு.
பல ஊர்களில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. உதாரணத்திற்கு மில்க் மெய்ட் தேநீர் – வட கிழக்கு மாநிலங்களில் பயணித்த போது மலைப் பிரதேசங்களில் பால் தட்டுப்பாடு – பெரும்பாலும் லால் சாய் எனப்படும் கட்டஞ்சாய் தான். பால் விட்டு தேநீர் கேட்டால், கட்டஞ்சாயில் ஒரு ஸ்பூன் மில்க் மெய்ட் விட்டு கலக்கி தந்து விடுகிறார்கள். வாயில் வைக்கமுடியாத சுவை – ஒரு முறை அதைக் குடித்த பிறகு எங்கே சென்றாலும் பால் விட்ட தேநீர் கேட்கவில்லை!
உத்திரப் பிரதேசத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக அலஹாபாத், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் போது காலை வேளையில் பால் [அ] தயிரில் தோய்த்த ஜாங்கிரிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் இருக்கிறது என சுவைத்தும் பார்த்திருக்கிறேன். பாலில் ஜாங்கிரியா? படிக்கும்போதே குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்….. ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த வரவேற்பும், ரசிகர்களும் உண்டு! வித்தியாசமான சில உணவு வகைகள், உணவு சம்பந்தமான அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு. பயணக் கட்டுரைகள் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட்ட எனக்கு, சாப்பாடு அனுபவங்களையும் மின்புத்தகமாக வெளியிடலாமே என்ற எண்ணம் வரவே, அதன் தொடர்ச்சியாய், இதோ எனது ஐந்தாவது மின் புத்தகம் – ”சாப்பிட வாங்க!”
புத்தகம் பற்றிய எண்ணம் வந்ததும், எனது “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவில் எழுதிய சமையல்/சாப்பாடு அனுபவங்களையும் இங்கே தொகுத்து இருக்கிறேன். தொகுத்து வைத்த கட்டுரைகளை பிரபல பதிவர், எழுத்தாளர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு அனுப்பி வைக்க, அவர் தொகுப்பு பற்றிய தனது எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார். திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் எண்ணங்கள் வரும் பக்கங்களில் கருத்துரையாக! இந்தத் தொகுப்பில் இருக்கும் அனுபவங்கள்/உணவுகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். நீங்களும் படித்து, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் மின்புத்தகத்தினை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்…….
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சாப்பிட வாங்க epub” Saapida%20Vaanga.epub – Downloaded 3221 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சாப்பிட வாங்க mobi” Saapida%20Vaanga.mobi – Downloaded 1305 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சாப்பிட வாங்க A4 PDF” Saapida%20Vaanga.pdf – Downloaded 4432 times –செல்பேசிகளில் படிக்க
Download “சாப்பிட வாங்க 6 inch PDF” Saapida%20Vaanga-6%20inch.pdf – Downloaded 1723 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/SaapidaVaanga
புத்தக எண் – 307
ஆகஸ்ட் 9 2017
Leave a Reply