உற்பத்தி அளவையியல்
MANUFACTURING METROLOGY
முனைவர் ப.அர.நக்கீரன்
B.E. Mech; MSc Engg.(Prod); Ph.D
பேராசிரியர் (ஓய்வு)
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
மேனாள் இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
மின்னூலாக்கம் – த.சீனிவாசன்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
என்னுரை
கலைச்செல்வங்கள் அனைத்தையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற தாகம் என் மாணவ பருவத்திலிருந்தே நெஞ்சில் நிலைத்து வந்திருக்கிறது. முடிந்த போதெல்லாம் தமிழில் அறிவியல், பொறியியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக, என் மனதுக்கு நெருக்கமான அளவையியல் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை பற்றி இந்நூலை எழுதத் தொடங்கினேன்.
அளவையியல் பாடத்தை நடத்தும் பணியும் எனக்கு தொடக்கம் முதலே வழங்கப்பட்டது. என்னுடைய ஆசிரிய பணி காலத்தில் பல பாடங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து நான் எடுத்து நடத்திய பாடம் ‘அளவையியல்’ ஆகும். அளவையியல் பாடம் நடத்துவதற்கு ஆய்வுக் கூட பணிகள் துணை நின்றன. ஆய்வுக் கூட பணிகளுக்கு அளவையியல் பாடங்கள் அடிப்படையாக அமைந்தன.
ஒரு ஆசிரியனாக என் பணியைத் தொடங்கிய இடம் அன்று கிண்டி பொறியியற் கல்லூரி என அழைக்கப்பட்ட இன்றைய அண்ணா பல்கலைக்கழக எந்திரவியல் துறையின் அளவையியல் ஆய்வுக் கூடம். என்னை மறந்து கால நேரம் பார்க்காமல் பணியாற்றிய இடம். நான் உள்ளே இருக்கும் போதே பணிமனையின் வாயில் கதவை பூட்டிச் சென்ற நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன. அந்த ஆய்வுக் கூடத்தில் இருந்த கருவிகளை பழுதுபார்த்து, செப்பனிட்டு, செயல்பட வைத்து, மாணவர்களின் பயன்பாட்டுக்காக சோதனைகளை வடிவமைத்து வழங்கிய காலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்ததாகும். இதற்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தி, உரிய ஆதரவை நல்கியவர் பேராசிரியர் A.M. சீனிவாசன் அவர்கள். அவருக்குப் பின்னர் உற்பத்தி பொறியியல் துறையின் தலைவர்களாக வந்த பேராசிரியர் S. சாதிக், பேராசிரியர் M.S.செல்வம் ஆகியோரும் தொடர்ந்து அளவையியல் ஆய்வுக் கூடத்தின் வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் தந்தனர்.
பொறியியலை தமிழில் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. எந்திரவியல் இளங்கலை தமிழிலும் நடத்தப்படுகிறது. அதில் அளவையியலும் ஒரு பாடமாகும். எனவே, தமிழில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு துணைவனாக இந்நூல் பயன்படும் என்று கருதுகிறேன்.
இந்நூல் அளவையியலின் அடிப்படையிலிருந்து, இன்றைய முன்னேற்றங்கள் வரையான, வளர்ச்சியை உள்ளடக்கிய 14 பாடங்களைக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய எளிய தமிழில் எழுத முயன்றிருக்கிறேன். தமிழ்க் கலைச்சொற்கள் முதலில் வரும் இடங்களிலெல்லாம் ஆங்கில சொற்களையும் அடைப்புக் குறிக்குள் தந்திருக்கிறேன். மேலும், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் கலைச்சொல் பட்டியலும் இறுதியில் தரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தமிழில் பாடங்களைப் படித்து புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
இந்நூலின் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும், படித்த பாடங்களை நினைவு கூறவும், புரிந்து கொள்ளவும், மேற்கொண்டு சிந்திக்கவும் ஏற்ற குறுவினாக்களும், நெடு வினாக்களும் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ள இவ்வினாக்கள் பயன்படும்.
இந்நூலின் ஒரு பகுதியாக, 18 அளவையியல் ஆய்வுக்கூட செய்முறைகளும், பொறியியல் பாட திட்டத்திற்கு ஏற்ப தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு செய்முறையும், நோக்கம், செய்முறைக்கு தேவைப்படும் கருவிகள், கோட்பாடு, வழிமுறை, மாதிரி அட்டவணை, மாதிரி கணக்கு, வரைபடம், முடிவு, தெரிவு என்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் மாணவர்கள், கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். மேலும், இப்பகுதியை அளவையியல் ஆய்வுக் கூடத்தினர் ஒரு கையேடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நூலாக்கத்தில் எனக்கு தொடர்ந்து ஊக்கமூட்டி, உரிய அறிவுரைகள் கூறி திருத்தம் செய்தவர்கள் முன்னாள் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. வெங்கடசாமி அவர்களும், என் பள்ளித் தோழரும், முன்னோடியுமான முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை அவர்களும் ஆவர். மேலும், பேராசிரியர் சு. வெங்கடசாமி அவர்கள் இந்நூலுக்கு நல்ல முகவுரையும் வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் வாழ்க்கையில் திசை தெரியாமல் தடுமாறிய காலங்களில் எல்லாம் வெளிச்சம் காட்டி நல்ல விழுமியங்களைக் கற்பித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் என் பேராசான் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அணிந்துரை வழங்கியிருப்பது என் பேறாகும். அவர் அறிமுகப்படுத்திய அறிவியல் தமிழுக்கு ஓர் அணிலாக நான் செய்யும் கடனே இந்நூல். என் நன்றி மலர்களை அவர் காலடியில் படைக்கிறேன்.
இந்நூலை தட்டச்சு செய்த திருமதி.சுஜிதா, செல்வி.மலர்விழி, திருமதி. ஜோதி, திருமதி. கெமிலாதேவி மற்றும் அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த திரு. கிரிஷ் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை – 600 025 முனைவர் ப.அர. நக்கீரன்
நாள் : 10.09.2013
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உற்பத்தி அளவையியல் epub” manufacturing-metrology.epub – Downloaded 10197 times – 6.75 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உற்பத்தி அளவையியல் A4 PDF” manufacturing-metrology-A4.pdf – Downloaded 11417 times – 22.26 MB
செல்பேசிகளில் படிக்க
Download “உற்பத்தி அளவையியல் 6 inch PDF” manufacturing-metrology-6-inch.pdf – Downloaded 3582 times – 20.37 MBபுத்தக எண் – 184
ஜூலை 1 2015
Leave a Reply