சேகுவேரா

Download free ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சேகுவேரா epub” che-guevara.epub – Downloaded 29136 times – 908.48 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சேகுவேரா A4 PDF” che-guevara-A4.pdf – Downloaded 46940 times – 3.52 MB

செல்பேசிகளில் படிக்க

Download “சேகுவேரா 6 inch PDF” che-guevara-6-inch.pdf – Downloaded 19993 times – 3.53 MB

“இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்” என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் பறந்து உலகத் தலைவர்களோடு கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தவர் அவர். தன் குழந்தைகளைக் கொஞ்சி ஆரத்தழுவிக் கொண்டவர் அவர்.

எல்லாவற்றையும் ஒருநாள் விலக்கிவிட்டு மீண்டும் காடுகளை நோக்கித் துப்பாக்கியோடு செல்கிறார். எல்லோருக்குமான ஒரு கனவு உலகத்தைப் படைக்க வேண்டும் என்னும் தணியாத பேராசையின் பயணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேட்டை. தவம் போலச் செய்கிறார். தன்னை முன்னிறுத்தி, தன்னையே பலியாக்கி வெளிச்சத்தைக் காட்டுகிற வேள்விதான் அது. கடைசி வரைக்கும் அவரது கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. மார்கோஸ் அதைப் பார்த்திருக்க வேண்டும்.

அந்தக் கண்களைப் பார்த்து அவர்களும் இப்போது வருகிறார்கள். சேவின் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருப்பது தெரிந்து எதிரிகள் பதறுகிறார்கள். அடுத்த சதியை அரங்கேற்றுகிறார்கள். கழுகின் நிழலாய் அது நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. ரச்சல் ராபர்ட் என்னும் கட்டுரையாளர் 2002 மார்ச் 15ம் தேதி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் எழுதிய வரிகளில் அப்படியொரு செய்தி இருக்கிறது.

“என்னுடைய சொந்த நகரமான பைரான்பேயில் சேகுவாரா வாழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறார். நான் வழக்கமாக அவரைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் இரவில் ரெயில்வே பாருக்கு வந்து குடித்துவிட்டு இசையைக் கேட்டுச் செல்கிறார். சில நேரங்களில் நண்பர்களோடு டீக்கடைகளில் நின்று அரட்டையடிக்கிறார். பெரும்பாலும் போஸ்ட் ஆபிஸில் அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றிருக்கிறேன். சிட்னியிலும், மெல்போர்னிலும் இருக்கிற நண்பர்களுக்கு அவர் போஸ்ட் கார்டுகள் அனுப்புவார்” இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘நெஞ்சில் இல்லாவிட்டாலும், மார்புகளில் சேகுவாரா வசிக்கிறார்”. ரேச்சல் ராபர்ட் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்போது புரிந்திருக்கும். இளைஞர்கள் அணியும் டீ ஷர்ட்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும் சேகுவாராவைத்தான் அவர் குறிப்பிடுகிறார். உலகத்து மக்களால் நேசிக்கப்பட்ட அந்த முகத்தைக் காட்டி லாபம் சம்பாதிக்கும் காரியத்தை முதலாளித்துவம் செய்கிறது. ‘எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்’ என்ற குரலை அந்த முகத்திலிருந்து விலக்கி வைக்கிற கபடம் இது. போராட்டங்களின், அடக்கப்பட்டவர்கள் எழுச்சியின் வடிவமாய் இருக்கும் அந்த மனிதனை, எதோ சாகசங்கள் நிறைந்தபொழுது போக்கு நாயகனாக, சில்வஸ்டர் ஸ்டாலோனாகச் சித்தரிக்க முயலுகிறர்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.

மார்கோஸின் பேனாவிலிருந்து சேவின் இரத்தம் நிரம்பி வழிகிறது. இதுதானா சேகுவாரா. இவ்வளவுதானா அவரது வடிவம். இதற்குத்தானா அவரது வாழ்வும் மரணமும். சேவின் மரணத்தைத் திரும்ப ஒருமுறை உலகத்துக்கு உரக்க வாசிக்க வேண்டி இருக்கிறது. அதுதான் அவர் மீது படிய வைக்கப்பட்டு இருக்கும் அழுக்குகளையும், தூசிகளையும் துடைத்துத் தெளிவாகக் காண்பிக்கும்.

உணர்ச்சிக் கொந்தளிப்பும், அவசரமும் கொண்ட மனிதராக இல்லாமல் மிக நிதானமாக இருக்கிறார். ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லியவர் இல்லை. தனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருந்தது என்று மட்டுமே சொல்ல விரும்பியிருக்கிறார். ஒரு நூற்றாண்டின் நீண்ட முயற்சியில் தன் உயிரும்  ஒரு சில ஆண்டுகள் பங்கேற்றது என்பதே பெருமையாய் இருக்கிறது அவருக்கு. ‘புரட்சி தானாக உருவாவதில்லை….நாம் உருவாக்க வேண்டும்” என்கிறார். “தீ பற்ற வை. மக்கள் நெருப்பென எழுவார்கள்’ என்கிறார். பொலிவியா, அர்ஜெண்டினா, பெரு என தீ படர்ந்து படர்ந்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவி, ஏகாதிபத்தியம் என்னும் பயங்கர மிருகத்தின் ரோமம் கருகுகிற நாற்றத்தை தனது சுருட்டில் உணர்கிறார்.

ஏகாதிபத்தியம் தொடர்ந்து தோற்றுப்போன கதைதான் சேகுவாரா. கியூபா புரட்சியில் முதலில் காஸ்ட்ரோவிடமும் அவரிடமும் தோற்றுப்போனது. அடுத்து அவர் மீது அவதூறுகளைப் பரப்பியது. அவருக்கும், காஸ்ட்ரோவுக்கும் இடையில் முரண்பாடுகளை அதுவாக உருவாக்கிப் பார்க்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. பொலிவியாவில் அவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் போகச் செய்கிறது. அதிலும் தோற்றுப் போகிறது. சே மண்ணிலிருந்து எழும்பி வருகிறார். இப்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர் பிம்பத்தை அதுவே கையிலெடுத்துச் சிதைக்கப் பார்க்கிறது. இதிலும் தோற்றுப் போகும். சே தோற்றுப் போகிறவர் அல்ல. ஏகாதிபத்தியம் தனக்கு அறைந்து கொள்ளும் சவப்பெட்டியின் முதல் ஆணியாக அவர் இருக்கப் போகிறார்.

அதற்குத்தான் அவர் திரும்பி வந்திருக்கிறார். கியூபாவிலிருந்து வெளியேறி மீண்டும் கியூபாவிற்கு அவர் வந்து சேர்கிற முப்பதாண்டுகள் நிறைய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. சே பற்றி அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ மாறி மாறி குறிப்புகளைத் தயார் செய்து கொண்டே இருக்கிறது. வெற்றி அல்லது வீரமரணம் என்று போர்க்களத்தில் நின்ற சேவின் பொலிவிய நாட்குறிப்புகளில் நம்பிக்கை…நம்பிக்கை. நம்பிக்கை மட்டுமே இருக்கிறது. சி.ஐ.ஏவின் குறிப்புகளில் வார்த்தைகளுக்குள் குவிந்து கிடக்கின்றன.

மார்கோஸின் எழுதப்படாத பக்கங்களில் சே இன்னும் உயிரோடு நிரம்பி இருக்கிறார். அவர் விளையாடுகிறார். இது ஒரு நீண்ட செஸ் விளையாட்டு. ஆயுதங்களோடு இருக்கும் யுத்த களம். புத்தியால் காய்களை நகர்த்துகிற விளையாட்டு. சே தன்னையே ஒரு சிப்பாயாக ஓரடி முன் நிறுத்துகிறார். வெட்டப்படுகிறார். ஆட்டம் நின்று போகவில்லை. அடுத்த அசைவினை சே யோசிக்கிறார். காலத்தின் கட்டங்களில் காய்களை நகர்த்தும் இந்த விளையாட்டில் முப்பத்தேழு ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமான நேரமே. உலகம் காத்திருக்கிறது…

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்)

மாதவராஜ்

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com

அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த்

மின்னூலாக்கம் – ப்ரியா

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

புத்தக எண் – 75

சென்னை

மே 27  2014

மேலும் சில வாழ்க்கை வரலாறுகள்

  • சிந்தா நதி (நினைவலைகள்) – சுயவரலாறு – லா.ச.ராமாமிருதம்
  • என் பார்வையில் கலைஞர்
  • கஸ்தூர்பா காந்தி
  • கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – வாழ்க்கை வரலாறுஇ – என். வி. கலைமணி

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “சேகுவேரா”

  1. Ramachandran Avatar
    Ramachandran

    உலகம் இன்னமும் அதிகமாய் நேசிக்கவும், பின்பற்றவும் ஆசைப்படுகிற ஒரு உன்னதமான வழிகாட்டி. எல்லோராலும் தலைவனாகி விட முடியும். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே வழிகாட்டியாக இருந்து வழிநடத்த முடியும். அப்படி பட்ட வழிகாட்டி பற்றிய ஒரு உன்னதமான நூல்… வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் விருதுகளும் கௌரவங்களும் எவ்வளவு சொன்னாலும் அது தகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.