தமிழ் இணையக் கல்விக்கழகம் தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியின் நல்விளைவுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். இதன் மூலம், மற்ற பல கல்வி சார் நிறுவனங்களைக் கட்டற்ற ஆக்க உரிமங்களைப் பயன்படுத்தக் கோர தக்க முன்மாதிரி கிட்டியுள்ளது. இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ்ப்பரிதிக்கும் தகவல் உழவனுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு இந்தியக் கல்வி நிறுவனமும் இவ்வாறு தன்னுடைய முழு ஆக்கங்களுக்கும் கட்டற்ற ஆக்க உரிம அறிவிப்பு வெளியிட்டது இல்லை. இம்முயற்சியை வாழ்த்திப் பாராட்டுவதன் மூலம், இது போன்ற இன்னும் பல முன்னோடி முனைவுகளைத் தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் மேற்கொள்ள முடியும். தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நமது நன்றி உரித்தாகுக.அறிவிப்பு பின்வருமாறு:
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
சென்னை,
திசம்பர் 18, 2015
தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனம் ஆகும்.
உலகெலாம் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்நோக்கத்தை எட்டுவதற்குத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஆக்கங்கள் யாவும் அனைவரும் எளிதில் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் பகிரவும் தகுந்த வகையில் கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் கிடைப்பது இன்றியமையாதது ஆகும்.
எனவே, தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து ஊடக ஆக்கங்களும் (உரை, படிமங்கள், ஒலிக்குறிப்புகள், நிகழ்படங்கள், தரவு முதலியன) படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு-பகிர்வுரிமை 4.0 ( Creative Commons Attribution ShareAlike 4.0 license (CC BY-SA 4.0) விவரங்களுக்கு https://creativecommons.org/
தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து கணிமை ஆக்கங்களும் (மென்பொருள், நிரல்கள் முதலியன) குனூ பொது மக்கள் உரிமம் 2.0 (அல்லது அதன் புதிய பதிப்புகள்) (GNU General Public License Version 2 or later (GPLv2+) விவரங்களுக்கு https://www.gnu.org/licenses/
இவ்வாக்கங்களைப் பகிரும் போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற நிறுவனப்பெயரை ஆக்குநர்சுட்டாகக் குறிப்பிட வேண்டும்.
—இரவி
https://ta.wikipedia.org/wiki/