சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம்

 

சுருக்கமாக –

 

1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

சில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal

இப்போது, கணினியில் பதிவிறக்கம் செய்து வாசிக்கும் வகையில் புது வலைத்தளத்தை வெளியிட்டுள்ளோம்.

சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் தொகுக்கும் இம்முயற்சியில் பங்களிக்க உங்களையும் அழைக்கிறோம். இத்தளத்தில் விடுபட்ட, காப்புரிமை நீங்கிய,  (ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் ஆனவை) பழைய நூல்கள், அச்சு நூலாகவோ, மின்னூலாகவோ உங்களிடம் இருப்பின் எமக்கு அனுப்ப வேண்டுகிறோம். [email protected] , [email protected]

விரிவாக –

தமிழில் செவ்விலக்கியப் பதிப்புப் பனுவல்கள் பற்றிய ஆய்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. பனுவல்களை மொத்தமாக ஆராய்வதோடு அவற்றை மறுபதிப்பு செய்தல், முன்னுரைகளைத் தொகுத்தல், முதல் பதிப்புகளை ஆராய்தல் எனச் செவ்விலக்கிய பதிப்புகள் குறித்த ஆய்வுகள் பல்வேறு வகையில் நிகழ்கின்றன. என்னதான் மறுபதிப்புகளையும், முன்னுரைத் தொகுப்புகளையும் ஆய்வு செய்தாலும், மூலப் பதிப்புகளை ஓர் ஆய்வாளர் நேரடியாகப் பார்த்து ஆய்வு செய்வதுபோல இருக்காது. ஆனால், மூலப்பதிப்புகளோ ஒரு சில நூலகங்களில் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. அவற்றைத் தேடி எடுத்துப் படித்து ஆய்வு செய்ய காலமும் செலவும் மிக அதிகமாகும். உலகமெங்கும் இருக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கு உடனுக்குடன் நல்ல தமிழ்ப்பதிப்புகள் சேர வேண்டும் என்னும் நோக்கில் 1812 முதல் 1950 வரையிலான பதிப்புகள் சேகரித்து அதை அழிவுபடாமல் காத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்னும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு “Uploading and Permanent Preservation of Earlier Editions of Classical Tamil Books In Cloud Based Web and to Give Multiple Uses (1812-1950)” என்னும் தலைப்பில் ஒரு திட்டப்பணி செய்ய கோரியிருந்தேன். அத்திட்டப்பணிக்கு ஒப்புதலும் நிதிநல்கையும் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கியது. 2015 இல் தொடங்கிய இப்பணி 2018 இல் முடிவடைந்தது. 1812 முதல் 1950 வரையிலான பதிப்புகளில் 280 பதிப்புகள் கிடைத்தன. அதனை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, இலக்கணம், காப்பியங்கள் என்ற ஐந்து வகையில் பிரித்து, ஒரு குறுஞ்செயலி மூலமும், வலைதளம் மூலமும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு இக்குறுஞ்செயலியும் வலைதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தொகுத்த நூல்கள் அனைத்தும் archive.org இல் பதிவேற்றிவிட்டோம் என்பதையும் இவ்விடத்தில் மகிழ்வோடு தெரியப்படுத்திக்கொள்கிறோம். சங்க இலக்கியப் பதிப்புகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் எளிமையாகச் சேரவேண்டும் என்னும் நோக்கத்திலேயே இந்த வலைத்தளமும், குறுஞ்செயலியும் வடிவமைக்கப்பட்டது. தமிழ் ஆய்வாளர்கள் தேவையான சங்க இலக்கியப் பதிப்புகளைப் படித்துப் பயன்பெறலாம்.

பொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இவை எந்த இலாப நோக்கமும் இல்லாதது. சான்றாக, புறநானூறு உ.வே.சா பதிப்புகளைப் படிக்க வேண்டும் என்றால், எட்டுத்தொகை என்பதனுள் சென்று புறநானூற்றிற்கு இதுவரை வந்த பதிப்புகளில் உ.வே.சா.வின் பதிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மேலும் இப்பதிப்புகள் அனைத்தும் OCR மூலம் word படிகளாவும் மாற்றப்பட்டுவரும் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் படிகளை வரும் ஆண்டுகளில் பதிவேற்றியவுடன் தேவையான பகுதிகளைத் தரவிறக்கம் செய்து அவற்றை ஆய்வுக்கட்டுரைகளுக்கும், ஆய்வேடுகளுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் ஆய்வாளனுக்குக் காலவிரயம் ஏற்படாது. அதேவேளையில் இங்குக் காணப்படாத பதிப்புகள் தங்களுக்குக் கிடைத்தால் அதைத் தாங்கள் archive.org பதிவேற்றிவிட்டு எங்களுக்கு [email protected], [email protected]  என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். அப்பதிப்பு 1950க்கு முந்தைய பதிப்பு என்றால் நாங்கள் அதனை எங்கள் குறுஞ்செயலி பதிப்புகள் பட்டியலில் சேர்த்துவிடுவோம். அல்லது நேரடியாக எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் போதும், அதை நாங்கள் archive.org பதிவேற்றுவதோடு எங்கள் குறுஞ்செயலியிலும், வலைதளத்திலும் சேர்த்துவிடுவோம். இது தமிழ் ஆய்வாளர்களுக்கான சமூகப்பணி. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு அதன் மூலப் பதிப்புகளைப் படிக்கச் செய்வதன் மூலம் தரமான ஆய்வேடுகளை உருவாக்க முடியும். பெரும்பாலும் ஏழைகளே தமிழ்நாட்டில் தமிழ் ஆய்வுப் படிப்புகளைப் படித்துவருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காக அலையும் நேரத்தை மீதப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய சேவை செய்கிறோம் என்பதை இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.

இத்திட்டப்பணி சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெறுவதற்குப் போதிய உதவிகளைச் செய்து கொடுத்தவர் அக்கல்லூரியின் மேனாள் முதல்வராக இருந்த முனைவர் அமுதா பாண்டியன் அவர்கள். 2016க்குப் பிறகும் இத்திட்டப்பணி தொய்வின்றி சிறப்பாக நடைபெற எல்லா உதவிகளையும் செய்தவர் தற்போது முதல்வராக இருக்கும் முனைவர் இரா. பிரபாகரன் அவர்கள். இவ்விருவர் துணையின்றி இம்மாபெரும் பணி வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.

ஒரு தமிழ்க் குறுஞ்செயலியையும், வலைதளத்தையும் உருவாக்குவது அவ்வளவு எளிதான பணியில்லை. அதற்கு அத்துறை சார்ந்த பட்டறிவும் தொழில்நுட்ப தெளிவும் நிரம்பியிருக்க வேண்டும். என் நல்லூழின் துணையால் எனக்குக் கிடைத்தவர்கள் திரு. த. சீனிவாசனும், திரு. கலீல் ஜாகீரும். இவர்களில் சீனிவாசன் கணியம் அறக்கட்டளை நிறுவனராக இருப்பதோடு கட்டற்ற மென்பொருள் பரப்புரையாளராகவும் இருக்கிறார். தமிழ் விக்கிசோர்ஸில் இவரது பங்களிப்பு மிக அதிகம். எனவே, என் திட்டப்பணி குறித்த விவரங்களைக் கணத்தில் உள்வாங்கி செயல்படத் தொடங்கிவிட்டார். கலீல் ஜாகிர் ஆண்ட்ராய்ட் டெவலெப்பராக இருக்கிறார். இக்குறுஞ்செயலியை வடிவமைத்து பராமரிப்பு செய்பவர் அவரே. இவர்கள் இருவரது தன்னலமற்ற சேவையோடு அமெரிக்காவில் மென்பொருள் ஆலோசகராக இருக்கும் திரு. ராஜாமணி டேவிட்டும் தோன்றாத் துணையாக இத்திட்டப்பணிக்கு உதவியுள்ளார். அவரது ஊக்கமும், ஆலோசனையும் இத்திட்டப்பணியைச் செய்வதற்கு முழுமையான தன்னம்பிக்கையைத் தந்தன. வலைதளத்தை செல்வி. அனிதா சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

இத்தளத்தோடும், செயலியோடும் தொடர்புடைய பலருக்கு இந்நேரத்தில் நன்றியைக் கூறவேண்டும். தமிழ் நலத்தில் மாறாத பற்றுகொண்டிருக்கும் நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இத்திட்டப்பணியின் செயலாக்கத்திற்கும், குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் துணையாக நின்றார்கள். குறிப்பாகப் பேராசியர் க. பலராமனின் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். இக்குறுஞ்செயலி பயிற்சிப்பட்டறையில் சேர்ந்து OCR மற்றும் தமிழ் விக்கிசோர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர். அதில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவி திவ்யா குறிப்பிட்டுச் சொல்ல தகுந்தவர். இவர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூறக் கடமைபட்டுள்ளேன்.

முனைவர் கை. சங்கர்,

முதன்மை நெறியாளர்,

அரசு ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை

[email protected]

 

நன்கொடை

கணியம் அறக்கட்டளையின் பணிகளைக்கு நன்கொடை வழங்கி ஆதரியுங்கள் !

கணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79

Union Bank Of India
West Tambaram, Chennai

IFSC – UBIN0560618

Account Type : Current Account

நன்கொடை விவரங்களை [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 


Posted

in

by

ஆசிரியர்கள்: