பிரபஞ்சன் 55

எழுதியவர் – வா.மணிகண்டன்
மூலம் – http://www.nisaptham.com/2017/04/55.html

 

தமிழ் சூழலில் உயிரோடு இருக்கும் ஓர் எழுத்தாளரைக் கொண்டாடுவது என்பது அபூர்வ நிகழ்வு. அப்படியொரு நிகழ்வாக பிரபஞ்சனைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை வெகு தீவிரமாகச் செய்து வருகிறார்கள். பிரபஞ்சனின் முதல் சிறுகதை வெளியாகி ஐம்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் நிகழ்வுக்கு ‘எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்று பெயர். பிரபஞ்சன் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து எழுதியும் பேசிக் கொண்டுமிருக்கிறார். அவரது வயதுக்கும் படைப்புக்கும் மரியாதை செய்கிறார்கள்.

 

பிரபஞ்சனிடம் எனக்கு நேரடிப் பழக்கமில்லை. சமீபத்தில் கே.கே.நகரில் காலை ஆறு மணிக்கு தோளில் ஜோல்னா பையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். வணக்கம் தெரிவித்தேன். சிரித்தார். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டேன். மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று யாரைப் பார்த்தாலும் பணிந்து ஒரு வணக்கம் செய்துவிடுவது வழக்கம். பேச எந்தச் செய்தியில்லையென்றாலும் அந்த வணக்கம் அவர்களுக்கான ஓர் அங்கீகாரம். எழுதுகிறவனுக்கு அதுதானே சந்தோஷம்? தன் எழுத்து வழியாகத் தன்னை அறிந்திருக்கும் ஒரு வாசகன் தம்மை அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறான் என்பது உள்ளூர மகிழ்ச்சியளிக்கக் கூடியது.

 

ஒரு வாசகன் தன்னை அங்கீகரிக்கிறான் என்பதே மகிழ்ச்சி எனும் போது பல நூறு வாசகர்கள் கூடினால்? அதைத்தான் இத்தகைய நிகழ்வுகள் உண்டாக்குகின்றன. எழுத்தாளரது படைப்பு குறித்து விவாதித்து, எழுத்தாளர் பற்றிப் பேசி, அவருடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து என அந்த எழுத்தாளனை எல்லாவிதத்திலும் மகிழ்வூட்டுகிறார்கள். தமது எழுத்து குறித்தும் வாழ்வு குறித்துமான திருப்தியை அவனுக்குள் உண்டாக்குகிறார்கள். விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் போதெல்லாம் அது குறித்து யாராவது எழுதுகிற விமர்சனங்களை வாசித்திருக்கிறேன். விமர்சனங்களையெல்லாம் தாண்டி அதுவொரு முக்கியமான செயல்பாடு. தமிழின் முக்கியமான மூத்த எழுத்தாளரைக் கொண்டாடுகிறார்கள் என்பதால் எந்தவிதமான விமர்சனங்களையும் தாண்டி அது தனித்துவம் பெறுகிறது.

 

இப்பொழுது எழுத்தாளர்கள் எஸ்.ராவும், பவா செல்லதுரையும், பதிப்பாளர் வேடியப்பனும் ஒருங்கிணைக்கும் ‘எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்னும் இந்நிகழ்வு எல்லாவிதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னுதாரணமானது.

 

ஏப்ரல் 29 ஆம் தேதியன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் நிகழ்வில் கருத்தரங்கு, நாடகம், குறும்படங்கள், நிழற்படக் கண்காட்சி, உரையாடல்கள், விவாதங்கள் என திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

தற்பொழுது பிரபஞ்சன் சென்னையில் தனியாக வசிக்கிறார். வெளிப்படையாக எழுதலாமா என்று தெரியவில்லை- எனக்குத் தெரிந்து பொருளாதார ரீதியில் அவர் சுதந்திரமான மனிதர் இல்லை. வருமானத்தையும் விடவும் அவருக்கு நிறைய செலவுகள் இருக்கின்றன- தவிர்க்க முடியாத மருத்துவச் செலவுகள் அவை. சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறவர்கள் அதையும் கருத்தில் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாக இருக்கும்பொருட்டு ஒரு தொகையைத் திரட்டி கொடுப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்- பத்து லட்ச ரூபாய். தனிப்பட்ட தொடர்புகளின் மூலமாக நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நிகழ்வை ஒருங்கிணைக்கும் வேடியப்பனிடம் ‘இதைப் பற்றி இணையத்திலும் எழுதலாம்’ என்றேன்.

 

‘பிரபஞ்சன் விரும்பமாட்டாருங்க’ என்றார். ஆனால் இந்தச் செய்தியைப் பரவலாகக் கொண்டு செல்வது வாசகனாக ஒரு கடமை என்று தோன்றுகிறது. பிரபஞ்சனின் வாசகர்களும் கூட தமது பங்களிப்பைச் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

 

தமிழின் முக்கியமான படைப்பாளி அவர். அவருக்கு செய்கிற உதவி ஒரு விதத்தில் தமிழுக்கும் அதன் இலக்கியச் செழுமைக்கும் செய்கிற உதவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

ஆன்லைன் பரிமாற்றம், டிடி அல்லது காசோலையாக அனுப்புவது குறித்த விவரம் அழைப்பிதழின் கடைசிப்பக்கத்தில் இருக்கிறது.

 

வாய்ப்பிருப்பவர்கள் பரிசீலிக்கவும்.