நூல்களும் நேர்மையும்

என். சொக்கன்

நூல்களும் நேர்மையும்

 

பதிப்பகங்கள்/ எழுத்தாளர்கள்/ ராயல்டி பிரச்னைகள்பற்றி பா. ராகவன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானது: http://www.writerpara.com/paper/?p=10673

பொதுவாக இந்தப் பிரச்னையை அதிகப்பேர் பேசுவதில்லை. காரணம், எழுத்தாளன் என்கிறவன் சமூகத்துக்காகப் பணியாற்றவேண்டியவன், அவன் தனது பணியை உழைப்பாகக் கருதுவதோ அதற்கு நியாயமான கூலி எதிர்பார்ப்பதோ சரியல்ல என்பதே பரவலான எண்ணம். இதோ இந்தப் பதிவுக்குக்கூட, பலர் ‘நீங்கள் எல்லாரும் உங்கள் புத்தகங்களைப் பொதுவில் வைத்துவிடவேண்டும். அறிவைப் பரப்புவதுதானே உங்கள் பணி?’ என்கிற தொனியில்தான் பதில் எழுதுவார்கள்.

ஒரு பேச்சுக்கு, அது சரி என்றே வைத்துக்கொள்வோம். சமூகப்பணி செய்கிற ஒருவனுடைய உழைப்பை (சரி, தவத்தை என்று வைத்துக்கொள்வோம்!) இன்னொருவர் பயன்படுத்திப் பொருளீட்டுவதற்குமட்டும் அனுமதி உண்டா? இந்தத் துறைசார்ந்து என்னுடைய மிகப்பெரிய பிரச்னையே இதுதான்.

என்னுடைய அலுவலகப்பணி மற்றும் தனிப்பட்டமுறையில் நான் எத்தனையோ துறைகளில் பல்வேறு காரணங்களுக்காகப் பணியாற்றியிருக்கிறேன், தமிழ்ப் பதிப்பகத்துறைபோல் Unorganized, Unprofessional தொழில்துறையொன்றை வேறு எங்கும் கண்டதில்லை: நூல்களுக்கான யோசனைகள் எங்கிருந்து வருகின்றன, அவற்றை யார் எழுதுவது என்று எப்படித் தீர்மானிக்கப்படுகிறது, எப்படி எழுதுகிறார்கள் என்பது எப்படிச் சரிபார்க்கப்படுகிறது, எதன் அடிப்படையில் நூல்கள் ஏற்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன, எப்போது அச்சிடப்படுகின்றன, என்ன விலை வைக்கப்படுகிறது, எங்கே விற்கப்படுகிறது, அதற்கான கணக்குகள் எங்கே, வரவு என்ன, செலவு என்ன… சகலமும் பூடகமாகவே நடக்கிறது.

ஆங்கிலத்திலும் இப்படிதானா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எட்டு வெவ்வேறு பதிப்பகங்களில் எழுதிய அனுபவத்தில் சொல்கிறேன்: ஓரிரு பதிப்பகங்களைத்தவிர மற்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல, அந்த ஓரிருவரும் தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கிறார்கள், ஆகவே, அதைத் தொழிலில் பின்பற்றுகிறார்கள், அவ்வளவுதான். ஒரு தொழில்துறை என்றமுறையில், தமிழ்ப் பதிப்பகத்துறை எந்தவிதமான Transparencyக்கும் இடமளிப்பதில்லை. அதைக் கோருகிற எவரையும் ஆவேசமாகவே அணுகுகிறது, அல்லது, புறக்கணிக்கிறது.

இதனால்தான் ‘நூல்கள் விற்பதில்லை, பெருநஷ்டம்’ என்ற பிம்பத்தை எளிதில் இவர்களால் உருவாக்க இயலுகிறது. அது பொய் என்று நான் சொல்லவில்லை, ஆனால், அது உண்மை என்பதற்கான எந்தச் சான்றும் இல்லை, அதை வழங்கும் நிலையில் இந்தத் தொழில்துறை இல்லை.

ஆகவே, சந்தேகத்தின் பலனை எழுத்தாளர்களுக்கே நான் வழங்குவேன், தான் எழுதிய நூல்களுக்கு ராயல்டி கோரும் முழு உரிமை எழுத்தாளர்களுக்கு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

தற்போது என்னுடைய ஐம்பது நூல்களாவது அச்சில் இருக்கின்றன, (ஓரளவு) நன்றாக விற்றுக்கொண்டும் இருக்கின்றன. ஆனால், இந்த வருடம் எனக்கு ராயல்டியாகக் கிடைத்த தொகை மிகச் சொற்பம். அதுவும் மேற்சொன்ன நேர்மையாளரான நண்பர்கள் மனமுவந்து தந்தது. அவர்கள் வாழ்க!

மற்ற பதிப்பகங்கள் ஒவ்வொருவரிடமும் மின்னஞ்சலில், SMSல், ஃபோனில் கெஞ்சிக்கெஞ்சித் தன்மானம் கெடுகிறது. எப்போது கேட்டாலும் பதில் இல்லை, அல்லது, ‘அடுத்த வாரம்’ என்கிற நீர்மேல் எழுத்து. இதையே கேட்டுக்கொண்டிருக்க நாமென்ன சவலைப்பிள்ளைகளா? அந்த நேரத்தில் வேறெதையாவது மனத்துக்குப் பிடித்ததை எழுதித்தொலைக்கலாமே!

பதிப்பகங்களில் இருவகைத் தொடர்புகள் நமக்கு அமையும்: உள்ளடக்கத்தைக் கவனிப்போர், நிறுவனத்தை நிர்வகிப்போர். இதில் முதல் வகையினர் நமக்கு நல்ல நண்பர்களாவார்கள், நிர்வகிப்போர் பின்னால் இருந்தபடி அதனை அங்கீகரிப்பர். நூல்கள் வெளிவரும், அதன்பிறகு, அந்த முதல்வகையினரின் கைகள் கட்டப்பட்டுவிடும், அவர்களும் சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள்தானே.

ஆகவே, நாம் அந்த நிர்வாகிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்குவோம். அவர்கள் முரட்டுச்சுவர்களாகவே இருப்பர். முட்டிமுட்டித் தலை வலிக்கும்.

கோபத்தில் நாம் முதல்வகையினரிடம் கத்துவோம். அந்த நட்பு கெட்டுப்போகும். பணத்துக்காக எத்தனையை இழப்பது?

இதனால்தான், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் நூலெழுதுவதை நிறுத்தத் தீர்மானித்தேன். வேறு பணிகளில் (எழுத்து/ மொழிபெயர்ப்பு) ஈடுபடத் தீர்மானித்தேன். அங்கேயும் தொல்லைகள் உண்டு. ஆனால், அவை பதிப்பகங்களைவிட மிகவும் Organized/ Professionalஆக இருக்கின்றன. இனி ஒருபோதும் நானே பதிப்பகங்களை நாடிச்செல்வதாக இல்லை.

இன்னொரு கோணம்:

நேற்று காலை, பா. ராகவனிடம் WhatsAppமூலம் பேசியபோது, ‘நாமே நம் நூல்களைப் பதிப்பிக்கலாமே’ என்றேன். மறுநிமிடம் தெளிந்து, ‘ம்ஹூம், அது சரிப்படாது சார்’ என்றும் சொல்லிவிட்டேன்.

நானும் ஓராண்டு பதிப்பகம் நடத்தினேன், பாராவுக்கு இதில் இன்னும் பலமடங்கு அதிக அனுபவம் உண்டு. நாங்கள் தெரிந்துகொண்டது: விற்றல் வேறொரு கலை, எழுதுபவன் விற்பவனாக ஒரு மனமாற்றம் தேவை, அது சாதாரணமல்ல.

ஒரு பதிப்பகம் நடத்துவதில் ஆயிரம் சிக்கல்கள், தலைவலிகள் உண்டு, அவைதான் அவர்களை Unprofessionalஆக இயங்கச்செய்கிறதோ என்னவோ.

ஆகவே, பதிப்பாளர்களை நான் மதிக்கிறேன், அவர்களது நிலைமையைப் புரிந்துகொள்கிறேன், அதேசமயம் அவர்களது வெளித்தன்மையற்ற நடத்தையால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுக்கிறேன்.

இனி, நான் எழுதும் நூல்கள் எவையும் மின்னூல்களாக (இலவசமாகவும் விலைக்கும்) வரும். அல்லது, தனிப்பட்டமுறையில் நேர்மையாளர்களாக இருக்கும் நண்பர்களின் பதிப்பகங்களில் அச்சுநூல்களாக வரும், அவர்களது நேர்மை தொடரும் என்ற நம்பிக்கையுடன்தான்.

துறை எதுவானாலும், அதுதானே அடித்தளம்!

***

என். சொக்கன் …

26 01 2016

நூல்களும் நேர்மையும்


Posted

in

by

ஆசிரியர்கள்: