நானும் எங்க ஊரும்
நான் பிறந்த ஊர் புதுவயல் என்றொரு கிராமம். தமிழ்நாட்டில் காரைக்குடி தாலூகாவில் உள்ளது. தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. பிறகு பசும்பொன் தேவர் திருமகனார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று கூட மாறியது. அதுவே இன்று சிவகங்கை மாவட்டமாக மாறியுள்ளது. நான் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் படித்து முடியும் வரையிலும் முதல் இருபது ஆண்டுகள் அங்கு தான் வாழ்ந்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன்.
நான் 1992ல் திருப்பூருக்குள் நுழையும் போது இந்தப்பகுதி கோவை மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது திருப்பூர் தலைநகராகவும் அத்துடன் மாவட்டம் என்ற புதிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஊர்களுக்குப் பின்னால் நம்ப முடியாத மாற்றங்கள்.
மனிதர்களுக்குண்டான வரலாறு போல ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுவராசியங்கள் உண்டு என்பதை நாம் வாழும் போது, வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இதுவே நாடு குறித்து யோசிக்கும் பொழுதும், நம் தென் இந்திய வரலாறுகளைப் பற்றி படிக்கும் பொழுதும் இந்த மாற்றத்தில் தானே நம் முப்பாட்டன்களும், அவர்களின் முன்னோர்களும் வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.
நான் தற்பொழுது திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் இருந்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் பலதரப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போது எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு அதிக ஆச்சரியங்களை தந்தது.
அதையே 2009 ஜுலை முதல் வலைபதிவு என்ற தமிழ் இணையம் எனக்கு அறிமுகமாக என்னைப் பற்றி, நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழிலையைப் பற்றி எழுதிக் கொண்டே வந்தேன்.
இதுவே என் முதல் புத்தகமாக “டாலர் நகரம்” என்ற பெயரில் வந்தது.
நம்முடைய முன்னோர்களான தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை படிக்கத் தொடங்கினேன். எண்ணிக்கையில் அடக்க முடியாத ஏராளமான வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே இருந்தாலும் மாறிக் கொண்டே வரும் சூழலுக்கு ஏற்ப வாசிப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்ளாத அளவுக்கு எழுத்து நடையும், கடின மொழியாக்கமும் இருந்ததை உணர்ந்து கொண்டேன். காரணம் புத்தகத்தை எழுதியவர்களின் காலச்சூழலும், மாறிக் கொண்டே வரும் காலமும் வெவ்வேறு நிலையில் இருப்பதால் இன்றைய நிலையில் பழைய வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி வாசிக்க விரும்புவர்களுக்கு பழைய எழுத்தாளர்களின் எழுத்து நடை மிகுந்த சவாலாகவே உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் புத்தகங்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. இணைய தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வர வாசிப்பவர்களின் எண்ணமும், அவர்களின் நோக்கத்திலும் அதிகமான மாறுதல்களும் உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. நாள்தோறும் உருவாகிக் கொண்டு வரும் புதிய தொழில் நுட்ப வசதிகளும், விஞ்ஞான முன்னேற்றங்களும் வாசிப்பு பழக்கத்தில் அதிக தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படத்துறை என்பது சாதாரண மனிதர்களுக்கு கனவு உலகம். எண்ணிப்பார்க்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று கையில் கொஞ்சம் காசிருந்தால் ஒரு குறும்படத்தை எடுத்து விட முடியும். யூ டியூப்பில் ஏற்றி உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்து விட முடியும். மாயத்திரையை வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தொழில் நுட்பம் உடைத்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களும் தேவதூதன் போலவே பார்க்கப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்து கொண்டேயிருந்தது.
ஆனால் இன்று தமிழ் இணையதள வளர்ச்சியின் காரணமாக வாசகனுக்கும், எழுத்தாளர்களுக்குமிடையே உள்ள இடைவெளி குறைந்ததோடு ஏராளமான புதுப்புது எழுத்தாளர்களை நாள்தோறும் நவீன தொழில் நுட்பம் உருவாக்கிக் கொண்டே வருகின்றது.
கீச்சுக்கள் என்று சொல்லப்படும் ட்விட்டரில் எழுதப்படும் இரண்டு வரிகள் தொடங்கி முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் எழுதப்படும் பத்து வரிகள் வரைக்கும் இன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரும் எதிர்பார்க்கும் அங்கீகாரமும் எளிதில் கிடைத்து விடுகின்றது.
வாசகனின் ஆழ்ந்த உள்வாங்கலை இணைய தள வாசிப்பு நீர்த்துப் போக வைத்து விட்டது என்ற பழமையான குற்றச்சாட்டுக்கும், “எங்கள் சுதந்திரம் எங்களின் எண்ணங்கள்” என்றொரு புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் கற்பனைகளை நாள்தோறும் ஏதோவொரு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.
செல்லும் இடங்களுக்கு புத்தகங்களை சுமந்து கொண்டு சென்று வாசித்தவர்களுக்கு இன்று எளிய கையடக்க கருவிகள் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேமித்து வாசிக்க அறிவியல் தொழில் நுட்பம் இன்று வசதிகளை தந்துள்ளது.
எதுவும் சுருக்கமாக, சுவராசியமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு ஆற அமர உட்கார்ந்து ஆராய்ந்து படிக்க நேரமிருப்பதில்லை. பொருளாதார கடமைகள் ஒரு பக்கம் துரத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை நாம் விரும்பியபடி எவராது தருவாரா? என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும்.
நீங்கள் ஆராய்ச்சி மனப்பான்மையில் உள்ளவரா? இதில் கொடுத்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு புத்தகங்களை தேடிப்படியுங்கள். இது முழுமையானது என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம். உங்கள் முயற்சிகள் தான் உங்கள் ஆர்வத்தை முழுமைப்படுத்தும். இந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று எந்த இடத்திலும் நான் சிபாரிசு செய்யமாட்டேன்.
காரணம் எல்லாப்புத்தகங்களிலும் ஏதோவொரு விசயம் இருக்கத்தான் செய்யும். பயணம் தொடங்கினால் மட்டுமே பாதை தெரியும்.
ஒரு மாவட்டத்திற்குப் பின்னால் இத்தனை சுவராசியங்களா? என்று இந்த மின் நூலை வாசித்து முடித்ததும் உங்களுக்கு எண்ணம் உருவானால், ஆச்சரியப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகம் செய்து வையுங்கள்.
என் நோக்கம் “தமிழர் தேசம்” என்றொரு பெரிய நூலை குறிப்பாக தொல்காப்பியம் தொடங்கி படிப்படியாக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு என்றொரு மாநிலம் உருவானது வரைக்கும் எழுத வேண்டும் என்பதே.
ஆனால் அதற்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தை நினைத்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் இல்லாதபோதும் கூட அதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை கருதிக் கொள்கின்றேன்.
இதனை மனதில் கொண்டே எளிமையாக சுருக்கமாக சுவராசியமாக சொல்ல முயற்சித்த போது 2000 வருடத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவானது. எனது தேவியர் இல்லம் வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதிய தமிழர்களின் வரலாற்றை முதல் பகுதியில் தந்துள்ளேன்.
இதனைத் தொடர்ந்து நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நீண்டதாக போய்க் கொண்டே இருக்க நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத பட்சத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவங்களை, முக்கியமான நிகழ்வுகளை இரண்டாவது பகுதியில் தொகுத்துள்ளேன்.
மின் நூலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்ற அச்சம் போய்விட்டது.
காரணம் என்னுடைய முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெற்றி பெற்று அதனை நிரூபித்தது.
அதனைத் தொடந்தே “வெள்ளை அடிமைகள்” மின் நூல் உருவாக என்னை உழைக்க வைத்தது. இப்போது உங்கள் பார்வையில் என்னுடைய மூன்றாவது மின் நூல்.
தரவிறக்கம் செய்து ஆதரவளித்த அனைவருக்கும், இதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த நண்பர் சீனிவாசன் மற்றும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.
தமிழர் தேசம் மின் நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த அவர்கள் உண்மைகள் தள நண்பருக்கு என் ப்ரியத்துடன் கூடிய நன்றிகள்.
நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
தேவியர் இல்லம்,
28.02.2014
Leave a Reply