தமிழ் விக்கிமூலம் தளத்தில் நான்கு இலட்சம் பக்கங்கள், உலகில் ஆறாவது இடம்.

தமிழ் விக்கிமூலம் என்பது ஒரு கட்டற்ற இணைய நூலகம் ஆகும். இத்தளத்தில் 2000க்கும் மேற்பட்ட நாட்டுடைமையான நூல்களை ஏற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

இந்நூல்களின் PDF கோப்புகளை இங்கு காணலாம்.

கூகுளின் ஒளிவழி எழுத்துணரி கருவியைக் கொண்டு இந்நூல்களின் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் பதிவேற்றப்பட்டு, உலக மொழி விக்கிமூலங்களில் தமிழ் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூல்களைப் பதிவேற்ற உரிய ஒப்பம் தந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த த. இ. க. இயக்குநர் அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூல்களுக்கான கோப்புகளைத் தந்து உதவிய த. இ. க. உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி அவர்களுக்கும் இப்பணியில் உதவிய த. இ. க. அலுலவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் விக்கிமீடியா சார்பாக பின்வருவோர் இப்பணியில் ஈடுபட்டனர்:

* தகவல் உழவன் – த. இ. க.  உடன் இணைந்து ஆறு மாத காலம் உறைவிட விக்கிமீடியராக செயற்பட்டு, இக்கோப்புகளைப் பெற்று பதிவேற்றும் பணியை ஒருங்கிணைத்தார்.

* த. சீனிவாசன் – https://github.com/tshrinivasan/OCR4wikisource என்னும் கட்டற்ற கருவியின் மூலம் இலட்சக்கணக்கான பக்கங்களைப் பதிவேற்றுவதை இலகுவாக்கினார். இவரது கருவியை மற்ற மொழி விக்கிப்பீடியர்களும் பயன்படுத்தி இலட்சக்கணக்கான பக்கங்களைப் பதிவேற்றி வருகிறார்கள் என்பது சிறப்பு.

* சிபி, சண்முகம், அரவிந்த், சதீசு குமார், இரவி, தினேசு குமார் – மேற்கண்ட கருவியின் துணையுடன் பக்கங்களைப் பதிவேற்றுதல்.

அடுத்த  கட்டமாக இப்பக்கங்களை முறையாக மெய்ப்பு பார்த்து மின்னூல்களாக வெளியிடுவதற்கான திட்டத்தை வகுத்துச் செயற்பட இருக்கிறோம்.

நீங்கள் எழுதிய நூல்கள் அல்லது உங்கள் நிறுவனம் வெளியிடும் நூல்களும் தமிழ் விக்கிமூலம் தளத்தில் இது போல் இடம் பெற தகுந்த படைப்பாக்கப் பொதும உரிமத்தில் இந்நூல்களைக் கையளிக்குமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

இரவி,

தமிழ் விக்கிமீடியர்கள் சார்பாக.

Posted

in

by

ஆசிரியர்கள்: