B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
சென்னை
மதங்களின் பார்வையில் பெண்கள்
B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்
அட்டைப் பட மூலம் – மனோஜ் குமார்
அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார்
மின்னஞ்சல்: [email protected]
மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் – [email protected]
உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.
அணிந்துரை
தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. இதற்கான பின்புலமாக மார்க்சிய இயக்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இருப்பதுதான் உண்மை.
இந்த முயற்சியில், ஜார்ஜ் டிமிட்ரோவ் வரலாறை சற்று அலசிப் பார்த்திருக்கிறார். சில நூல்களைப் படித்து விவரம் சேகரித்திருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட வரலாறு உண்மையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான். ஆனால், அது அவன் கதையாக (History – His Story) மட்டும் இல்லாமல், அவள் கதையாகவும் (Her Story) இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. தோழர் லெனின், கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சியாளர்கள் இந்த அம்சத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். எந்த மதத்துக்கும் பாலின நிகர்நிலை பார்வை இருப்பதாகக் கூற முடியாது. சமூகக் கண்ணோட்டத்தைப் போலவே, மதங்களின் கண்ணோட்டத்திலும் பெண்கள் ஒரு மாற்று குறைந்தவர்கள்தான். இந்து மதக் கோட்பாடு சட்டம் கொண்டுவரப்படுவதற்கே 4 ஆண்டுகள் நாடாளுமன்றம் படாத பாடு பட்டது. 1951ல் முன்மொழியப்பட்ட மசோதா 1955ல் தான் சட்டமானது. அக்கால கட்டத்தில் இன்றைய இந்துத்வவாதிகளின் முன்னோடிகள், இம்மசோதாவை சட்டமாக்க விடாமல் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சொத்து கிடைத்தால் பெண்கள் கெட்டழிந்து விடுவார்கள் என்பது போன்ற அபத்தமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆண் வாரிசுதான் கொள்ளி வைக்க முடியும், எனவே அதற்காகப் பலதார மணம் தேவை என்றும் வாதிக்கப்பட்டது. மொத்தத்தில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற அம்சங்களில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் வந்த இந்து கோட்பாட்டு மசோதாவினால், இந்து சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தும் அனைத்துத் தூண்களும் ஆட்டம் கண்டு விட்டன என்று பதறினார்கள். இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற சூழலும் ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு. குழந்தைத் திருமணம், சதி, தேவதாசிமுறை போன்ற சமூக அவலங்கள் மதத்தின் பெயரால் இன்னும் நியாயப்படுத்தப்படுகின்றன. மனுதர்மம், பெண்களைப் பொறுத்தவரை, அதர்மமாக இருப்பதும் நமக்குத் தெரியும்.
ஆதாமின் விலா எலும்பிலிருந்தே ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்னும்போதே, கிறித்தவ மதம் ஆணுக்கு உட்பட்டவளாகத்தான் பெண்ணைப் பார்க்கிறது என்பது தெளிவாகி விடுகிறது. கிறித்தவ தனிநபர் சட்டங்கள் (Personal Law) விவாகரத்து, சொத்துரிமை போன்ற விவகாரங்களில் பெண்ணைப் பாகுபடுத்தியே பார்க்கின்றன. இசுலாமிய தனிநபர் சட்டங்களும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் பெண்ணுக்கு சம அந்தஸ்து அளிக்கவில்லை. மேரி ராய், ஷாபானு வழக்குகள் இவற்றுக்கு உதாரணம். இசுலாமிய சட்டங்கள் ஸ்தல மதகுருமார்களின் புரிதலுக்கு விடப்படாமல், தெளிவாக வரையறுக்கப்படவேண்டும் என்பதே இந்தியாவில் இசுலாமிய பெண்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திருச்சபைகளிலும், ஜமாத்துகளிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இவற்றுக்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
மதமும் பெண்களும் குறித்த பல அம்சங்கள் விரிவாகவோ, சுருக்கமாகவோ இதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஆதிகாலத்தில் புராதன பொதுவுடமை சமூக அமைப்பில், பெண்கள் உயர்நிலையில் இருந்தது குறித்த பகுதி வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்ணின் உயர்ந்த அந்தஸ்துக்குக் காரணமாக, அவளது மறு உற்பத்தித் திறன் (Reproduction) தான் பொதுவாக முன் வைக்கப்படும். அதுமட்டும் காரணமல்ல. அன்றைய (பொருள்) உற்பத்தி முறையில் (Production) பெண் மையப் பங்கை வகித்தாள் என்பதும் முக்கிய காரணம்.
இன்றைய நவீன தாராளமய காலத்தில், எல்லாமே மார்க்கெட்டாகிறது. பக்தியும் கூடத்தான்! கடவுள் சந்தை (God Market) என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், சாமியார்கள், ஆசிரமம் இவற்றுக்கான சந்தை உத்தி (Marketing strategy), விளம்பரங்கள், நிறுவனங்கள் என்று வலை விரிகிறது. மறுபக்கம், மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் அரசியலும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் மதத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறு அலசலும் நிச்சயம் ஒரு உரைகல்லாக உருவெடுக்கும். அதுவும், சமுதாயத்தில் சரிபாதியான பெண்கள் குறித்த மதங்களின் பார்வை அனைவரும் விமர்சனரீதியாக சிந்திக்க வேண்டிய அம்சம்.
ஜார்ஜ் டிமிட்ரோவ் அவர்களின் முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!
உ.வாசுகி
அகில இந்திய துணைத் தலைவர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மதங்களின் பார்வையில் பெண்கள் epub” women-as-seen-by-religions.epub – Downloaded 12474 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மதங்களின் பார்வையில் பெண்கள் mobi” women-as-seen-by-religions.mobi – Downloaded 2554 times – 4.85 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மதங்களின் பார்வையில் பெண்கள் A4 PDF” women-as-seen-by-religions-A4.pdf – Downloaded 60153 times – 1.16 MB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மதங்களின் பார்வையில் பெண்கள் 6 Inch PDF” women-as-seen-by-religions-6-inch.pdf – Downloaded 6218 times – 1.26 MB
புத்தக எண் – 114
நவம்பர் 3 2014
Leave a Reply