என் நாடு இந்தியா. நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இந்த மின் நூலை வாசிக்கத் தயாராகும் உங்களிடம் சில கேள்விகள்.
இந்தியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மொத்த இந்திய நிலபரப்பு குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா? இங்குள்ள மொழிகள், பலதரப்பட்ட கலாச்சாரம் குறித்து உங்களுக்கு முழுமையான புரிதல் உண்டா? இந்தியாவின் கிழக்கு மேற்காக, தெற்கு வடக்காக பயணப்பட்டதுண்டா?
குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் செய்வதற்காக படித்த இந்திய சரித்திரத்திற்கு அப்பாற்பட்டு புத்தகங்கள் வாயிலாக இந்த நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சித்ததுண்டா? 90 சதவிகித இந்திய மக்கள் நிச்சயம் இல்லை என்றே சொல்லக்கூடும். இது தான் உண்மை. இப்போது மட்டுமல்ல? இங்கு வாழ்ந்து விட்டு மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைமுறையுமே இந்தியாவை முழுமையாக புரிந்து கொள்ளாத, உணர்ந்து கொள்ளாத இந்தியனாகவே வாழ்ந்து மறைகின்றனர். உலகில் உள்ள மற்ற நாடுகளை விட ஆதி காலம் தொட்டு பண்பாட்டு கலாச்சாரத்தின் உச்சமும், ஆச்சரியமும் அதிசயமும் அதிகம் நிறைந்துள்ள இந்த நாட்டைப் பற்றி பலமுறை யோசித்துள்ளேன்.
குறிப்பாக தமிழர்களின் வரலாற்றை அதிகம் படித்துள்ளேன். இந்த வாசிப்பு இடைவிடாத பயணம் போல இன்று வரையிலும் போய்க் கொண்டேயிருக்கின்றது. இன்னமும் முழுமையடைந்தபாடில்லை. நான் படித்த புத்தகங்கள் வாயிலாக உணர்ந்தவற்றை வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.
நான் இன்று வரையிலும் டெல்லி சென்றதில்லை. இருபது வயதிற்கு பின்பு தான் சென்னையைப் பார்த்தேன். இந்தியாவின் சில பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தொழில் முறை பயணமாக பயணித்துள்ளேன். காரணம் தமிழ்நாட்டிற்குள் நான் பயணிக்க வேண்டிய இடங்களே பாதிக்கும் மேற்பட்டு உள்ளது.
இன்று வரையிலும் பத்திரிக்கைகள் தரும் செய்திகள் என் மனதில் இருக்கும் இந்தியாவின் உருவமும் அதன் பிரம்மாண்டமும். வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் கடைசி வரைக்கும் வசிக்கும் இடம் இந்தியா என்ற எண்ணத்தில் காலம் முழுக்க வாழ்ந்து முடித்து விடுகின்றனர்.
நவீன வசதிகள் உருவாகாத காலங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க வாய்ப்பு இல்லாமல் வாழ்ந்த மக்களைப் போல தற்பொழுது வசதிகளும் வாய்ப்பும் இருந்தும் அன்றாட அடிப்படைக் கடமைகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் சாதாரண நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவனின் சார்பாளனின் நானும் ஒருவன்.
இது தான் இந்த நாட்டின் பலமும் பலவீனமும். கன்யாகுமரியில் வாழ்பவருக்கு காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாது. காஷ்மீரில் வாழ்பவருக்கும் கன்யாகுமரி மக்களின் வாழ்க்கை குறித்து சொன்னாலும் புரியாது. இவர்கள் இருவருக்கும் வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர் குறித்து முழுமையாகவே புரியாது. ஆனாலும் இந்தியாவில் 28 மாநிலங்கள் (தற்போது ஆந்திராவில் உருவாகப்போகும் தெலுங்கானாவைச் சேர்த்தால் 29) மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் சேர்த்து கற்பனையில் கூட நினைத்தே பார்க்க முடியாத பிரம்மாண்ட தோற்றம் கொண்ட இந்தியாவை இந்த மின் நூல் வாயிலாக கழுகுப் பார்வை பார்த்துள்ளேன்.
இந்த இடத்தில் நீங்கள் மற்றொன்றையும் மனதில் வைத்திருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பாகிஸ்தான், தற்போதுள்ள வங்க தேசம் என்று மொத்தமாக ஆங்கிலேயர்களின் ஆளுமையில் இருந்தது.
கொஞ்சம் கற்பனையில் கொண்டு வந்து பாருங்கள்?
இத்தனை பெரிய நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் எப்படி ஆண்டு இருப்பார்கள்? நான் படித்த பலதரப்பட்ட புத்தகங்கள் மூலம் உணர்ந்த தமிழர்கள், இந்தியா என்பதனையும் கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் பொறுப்புக்கு வந்த பிறகு இந்தியாவில் உருவான மாறுதல்களையும் ஒரே நேர்கோட்டில் யோசித்துப் பார்த்த போது ஒரு உண்மை தெரிந்தது.
அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம். இன்று பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மன்மோகன் சிங் இந்திய நாட்டை மீண்டுமொரு அடிமை நாடாக மாற்ற முயற்சித்து வெற்றி கண்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.
நாம் என்றுமே வெள்ளையருக்கு அடிமைகளே.
இந்த மின் நூலில் சிலவற்றைப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். வரலாறு என்பதன் உண்மையான அர்த்தம் “வந்த பாதை” என்பதே ஆகும். ஆனால் நாம் வந்த பாதையைப் பற்றி யோசிப்பதே இல்லை. எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றியே அதிகம் யோசிக்கின்றோம். ஆள்பவர்களும் “கனவு காணுங்கள்” என்று நம்மை உற்சாகப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கின்றார்கள்.
2009 ஜுலை முதல் கடந்த நாலரை வருடங்களாக தேவியர் இல்லம் வலைப்பதிவில் எழுதிய முக்கியமான கட்டுரைகளை மின் நூலாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், இது எனது இரண்டாவது மின் நூலாகும்.
முதல் மின் நூல் “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளியிட்ட இரண்டு வாரத்தில் 1400க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்து மகத்தான ஆச்சரியத்தையும் ஆதரவையும் தந்த காரணத்தால் இந்த மின் நூலையும் உருவாக்கும் எண்ணம் உருவானது.
வாசிக்கும் உங்களுக்கு என் நன்றி.
இதை நீங்கள் வாசிக்கும் பொழுது சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள், நிகழ்வுகள் நடந்த காலகட்டத்தையும் மனதில் இருத்திக் கொள்ளவும். ஒவ்வொரு சமயத்திலும் வலை பதிவில் எழுதிய கட்டுரை என்பதால் காலமாற்றத்தை கணக்கில் கொள்ளவும். இதை படித்து முடித்து விட்டு இது குறித்து தேடுதல் மனம் கொண்டு உங்களால் மேற்கொண்டு பலதரப்பட்ட இந்தியாவின் வரலாற்று சம்பவங்களை நீங்கள் தேடிப்படிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
இதனை குறிப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாடென்பதால் அது சார்ந்த படங்களை இந்த மின் நூல் முழுக்க அங்கங்கே கொடுத்துள்ளேன். இந்த மின் நூல் முக்கியமானதாக நீங்க கருதினால் உங்கள் நட்பு வட்டத்தில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். பலருக்கும் சென்று சேர உதவுங்கள்.
உங்கள் நேரம் கருதி எளிமையாக குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். நன்றி.
நட்புடன்
ஜோதிஜி. திருப்பூர்
தேவியர் இல்லம்.
29.01.2014
மின் அஞ்சல் முகவரி – [email protected]
வலை பதிவு முகவரி – http://deviyar-illam.blogspot.
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வெள்ளை அடிமைகள் epub” white-slaves.epub – Downloaded 16103 times – 8.41 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “வெள்ளை அடிமைகள் mobi” white-slaves.mobi – Downloaded 2700 times – 14.57 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வெள்ளை அடிமைகள் A4 PDF” white-slaves-A4.pdf – Downloaded 26060 times – 4.31 MB
செல்பேசிகளில் படிக்க
Download “வெள்ளை அடிமைகள் 6 Inch PDF” white-slaves-6-Inch.pdf – Downloaded 6029 times – 2.66 MB
புத்தக எண் – 27
சென்னை
ஜனவரி 29 2014
Leave a Reply