மதங்களின் பார்வையில் பெண்கள்B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்


அணிந்துரை

தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ், மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. இதற்கான பின்புலமாக மார்க்சிய இயக்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இருப்பதுதான் உண்மை.

இந்த முயற்சியில், ஜார்ஜ் டிமிட்ரோவ் வரலாறை சற்று அலசிப் பார்த்திருக்கிறார். சில நூல்களைப் படித்து விவரம் சேகரித்திருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட வரலாறு உண்மையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான். ஆனால், அது அவன் கதையாக (History - His Story) மட்டும் இல்லாமல், அவள் கதையாகவும் (Her Story) இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. தோழர் லெனின், கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சியாளர்கள் இந்த அம்சத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். எந்த மதத்துக்கும் பாலின நிகர்நிலை பார்வை இருப்பதாகக் கூற முடியாது. சமூகக் கண்ணோட்டத்தைப் போலவே, மதங்களின் கண்ணோட்டத்திலும் பெண்கள் ஒரு மாற்று குறைந்தவர்கள்தான். இந்து மதக் கோட்பாடு சட்டம் கொண்டுவரப்படுவதற்கே 4 ஆண்டுகள் நாடாளுமன்றம் படாத பாடு பட்டது. 1951ல் முன்மொழியப்பட்ட மசோதா 1955ல் தான் சட்டமானது. அக்கால கட்டத்தில் இன்றைய இந்துத்வவாதிகளின் முன்னோடிகள், இம்மசோதாவை சட்டமாக்க விடாமல் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சொத்து கிடைத்தால் பெண்கள் கெட்டழிந்து விடுவார்கள் என்பது போன்ற அபத்தமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆண் வாரிசுதான் கொள்ளி வைக்க முடியும், எனவே அதற்காகப் பலதார மணம் தேவை என்றும் வாதிக்கப்பட்டது. மொத்தத்தில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற அம்சங்களில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் வந்த இந்து கோட்பாட்டு மசோதாவினால், இந்து சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தும் அனைத்துத் தூண்களும் ஆட்டம் கண்டு விட்டன என்று பதறினார்கள். இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இதற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என்ற சூழலும் ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு. குழந்தைத் திருமணம், சதி, தேவதாசிமுறை போன்ற சமூக அவலங்கள் மதத்தின் பெயரால் இன்னும் நியாயப்படுத்தப்படுகின்றன. மனுதர்மம், பெண்களைப் பொறுத்தவரை, அதர்மமாக இருப்பதும் நமக்குத் தெரியும்.

ஆதாமின் விலா எலும்பிலிருந்தே ஏவாள் உருவாக்கப்பட்டாள் என்னும்போதே, கிறித்தவ மதம் ஆணுக்கு உட்பட்டவளாகத்தான் பெண்ணைப் பார்க்கிறது என்பது தெளிவாகி விடுகிறது. கிறித்தவ தனிநபர் சட்டங்கள் (Personal Law) விவாகரத்து, சொத்துரிமை போன்ற விவகாரங்களில் பெண்ணைப் பாகுபடுத்தியே பார்க்கின்றன. இசுலாமிய தனிநபர் சட்டங்களும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் பெண்ணுக்கு சம அந்தஸ்து அளிக்கவில்லை. மேரி ராய், ஷாபானு வழக்குகள் இவற்றுக்கு உதாரணம். இசுலாமிய சட்டங்கள் ஸ்தல மதகுருமார்களின் புரிதலுக்கு விடப்படாமல், தெளிவாக வரையறுக்கப்படவேண்டும் என்பதே இந்தியாவில் இசுலாமிய பெண்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திருச்சபைகளிலும், ஜமாத்துகளிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இவற்றுக்கான கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

மதமும் பெண்களும் குறித்த பல அம்சங்கள் விரிவாகவோ, சுருக்கமாகவோ இதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஆதிகாலத்தில் புராதன பொதுவுடமை சமூக அமைப்பில், பெண்கள் உயர்நிலையில் இருந்தது குறித்த பகுதி வலுப்படுத்தப்பட வேண்டும். பெண்ணின் உயர்ந்த அந்தஸ்துக்குக் காரணமாக, அவளது மறு உற்பத்தித் திறன் (Reproduction) தான் பொதுவாக முன் வைக்கப்படும். அதுமட்டும் காரணமல்ல. அன்றைய (பொருள்) உற்பத்தி முறையில் (Production) பெண் மையப் பங்கை வகித்தாள் என்பதும் முக்கிய காரணம்.

இன்றைய நவீன தாராளமய காலத்தில், எல்லாமே மார்க்கெட்டாகிறது. பக்தியும் கூடத்தான்! கடவுள் சந்தை (God Market) என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், சாமியார்கள், ஆசிரமம் இவற்றுக்கான சந்தை உத்தி (Marketing strategy), விளம்பரங்கள், நிறுவனங்கள் என்று வலை விரிகிறது. மறுபக்கம், மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கும் அரசியலும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் மதத்தைப் பற்றிய ஒவ்வொரு சிறு அலசலும் நிச்சயம் ஒரு உரைகல்லாக உருவெடுக்கும். அதுவும், சமுதாயத்தில் சரிபாதியான பெண்கள் குறித்த மதங்களின் பார்வை அனைவரும் விமர்சனரீதியாக சிந்திக்க வேண்டிய அம்சம்.

ஜார்ஜ் டிமிட்ரோவ் அவர்களின் முயற்சிக்கு மீண்டும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!

.வாசுகி

அகில இந்திய துணைத் தலைவர்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.மதம் பழங்காலம் முதல் இன்றுவரை உலக மக்களால் பின்பற்றப்படுகிறது. மதம் என்பது கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும், அமைதியின் வெளிப்பாடாகவும், வாழ்க்கை முறை, அறநெறிகள், சடங்குகள், சம்பிரதாயங்களை உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆன்மீகத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு சமூகக் கட்டமைப்பை உள்ளடக்கியது.

உலகளவில் இன்றைக்கு 4200 வகையான மதங்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. இது ஒருபுறம் இருந்தாலும் பொதுவாக உலகளவில் 15 மதங்களே பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. மதம் என்னும் சொல் லத்தின் மொழியிலிருந்து உருவானது. ரிலிஜியோ (Religio) என்பதிலிருந்து ரிலிஜியன் (Religion) என பிற்காலத்தில் மாறியது. இதன் அடிப்படையில் மதத்தை லத்தின் மொழியில் ரிலிஜியோ எனக் கூறியிருந்தாலும் பல்வேறு மொழிகளில் மதம் என்று பயன்படுத்தாமல் தர்மா என்று சமஸ்கிருதத்திலும், தெற்கு ஆசியாவில் “சட்டம்” (Law), மரபுகள், சக்தி என்று பயன்படுத்தப்பட்டு வந்தன.

மதத்தின் கோட்பாடு அன்பை அனைவரிடமும் போதிப்பதும், உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதே யாகும். இவை ஒரு நம்பிக்கையை சார்ந்துள்ளதால் இதன் மூலம் இறைவனுக்கு சேவை செய்வதும், இறைவனை ஆன்மீக வழிகளில் அடைவதற்கான ஒரு அமைதி தேடல் என்று பலரும் கூறுகின்றனர்.

உலகளவில் மக்களுடைய நம்பிக்கை என்னவென்றால் தங்களுடைய துயரத்தைப் போக்குவதாக மதங்கள் உள்ளன. இவை மனரீதியான பிரச்சினைகளை தீர்க்கிறது. வாழ்வில் ஏற்படும் இன்னல்களிருந்து விடுபடுவதற்கு மதங்கள் உதவுகின்றன. மதம் ஒரு ஆலோசகர்போல் பயன்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் மதத்தில் உள்ள முரண்பாடான கருத்துகள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறுபடுபவர்கள் உலகளவில் உள்ளனர். பலர் நாத்திகவாதிகளாகவும், மதமறுப்புக் கொள்கையுடன் நன்றாக வாழ்ந்து கொண்டும் வருகிறார்கள். இவர்கள் அறிவியல் பூர்வமாக அனைத்து நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்க்கின்றனர். மேலும் உளவியல், மனரீதியான செயல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து இவர்கள் மாறுபடுகிறார்கள்.

மதத்தின் தோற்றம் :

மதம் சுமார் 5400 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் தோன்றியதாக கணக்கிடப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் மதம் என்று பயன்படுத்தாமல் மனிதன் சடங்குகளை செய்து வந்தான். பிற்காலத்தில் சடங்குகள் அனைத்தும் மதமாக மாறிவிட்டன. மதத்தின் வளர்ச்சி 16ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சி அடைந்தது. இந்த இடைப்பட்ட காலமே மதத்தின் நவீன கால வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார்கள்.

மதங்களின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் உள்ளன. குறிப்பாக மதம் என்பது இயற்கையாகவே உருவானது; இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொண்டது. மற்றொரு கருத்து மனிதனுடைய வளர்ச்சி அவனுடைய சிந்தனையால் உதயமானது. அது தவிர பல்வேறு சூழ்நிலைகளில் மனிதனுடைய மனநிலை மாற்றங்களாலும், மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மதங்கள் தோன்றியது என்றும் கூறுகின்றனர்.

மனிதன் அன்றைய காலகட்டத்தில் இயற்கை மீதும் அதன் பேரழிவுகள் மீதும் மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தான். பொதுவாக மூன்று காரணங்களால் மனிதன் மதத்தை பின்பற்ற நேர்ந்தது.

1. இயற்கையின் மீதுள்ள அச்சமும், எந்த நேரத்திலும் தாக்கப்படலாம், அழிக்கப்படலாம் என்கிற பயமும், வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ளவும், மதத்தை ஒரு பாதுகாவலாக ஏற்றுக் கொண்டான்.

2. இயற்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை எதிர்கொண்டும், வலிமை பெறுவதற்காகவும் மதத்தை நாடிச் சென்றுள்ளான்.

3. மனிதர்கள் அனைவரும் மனரீதியாக வித்தியாசப்படுவார்கள். அவர்களுக்கு என்று தனி நம்பிக்கை, சடங்குகள், விருப்புவெறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தினரும் இதில் மாறுபடுவார்கள். மனரீதியான பிரச்சினைகள், மன அமைதி பெறுவதற்காக மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இறந்தவர்களைப் புதைக்கும் சடங்கானது சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா நாடுகளில் நடந்துள்ளது. புதைக்கப்பட்ட இடத்தை வழிபட்டு வந்தனர். இதுவே காலபோக்கில் மதமாக மாறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. எகிப்து பிரமிடுகளில் உள்ள மம்மிகளை வணங்கியது இதற்கு ஆதாரமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மதங்கள் சடங்குகள் அடிப்படையில்தான் உதயமானது என்றும் இதன் மூலம் மனிதன் மதத்தைப் பின்பற்ற காரணமாக இருந்து வந்துள்ளது. 3,000 - 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் மதத்தை முதன் முதலில் பின்பற்ற தொடங்கியுள்ளான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவை பழங்கால குகைகள், ஓவியங்கள் மற்றும் கலையின் மூலம் தெரிகின்றன.

பிறப்பு, இறப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளை மதச் சடங்குகளாக செய்து வந்துள்ளான். இதன் மூலம் இறைவனை எளிதில் அடையலாம் என்று ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது. அவன் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களை அவனுடனே புதைப்பது, மனிதன் மத சடங்குகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.

சிகப்பு நிறத்தை பெருமளவில் மதத்தின் அடையாளமாக அன்றைய மனிதன் பயன்படுத்தி வந்துள்ளான். சிகப்பு நிறமானது உலகில் உள்ள பல்வேறு மக்களால் அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. மனிதனுடைய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சிகப்பு நிறம் குறிப்பிடப்படுகிறது. இதில் குறிப்பிடப்படும் அடையாளங்கள், ஓவியங்கள், சின்னங்கள் பல தரப்பு மக்களுடைய மத வழிபாடுகளை வெளிப்படுத்துகிறது. சிகப்பு நிறத்தின் பொருளாக இரத்தம், பாலினம், வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, சடங்குகள், நம்பிக்கை போன்ற செயல்களை குறிக்கின்றது.

என்னதான் மதங்கள் சடங்குகளிருந்து தோன்றினாலும் இவை சிறு குழுக்களாகவேதான் இருந்தது. அதிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டு இருந்தது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக்குழு வாழ்க்கைமுறை தோன்றின. மனிதன் வேட்டையாடிய நிலை மாறி விவசாயத்தின்மீது அவனுடைய ஆர்வம் வளர்ச்சி பெற்றது. இதன் அடிப்படையில் மதங்களும் வளர்ச்சி கண்டன. அதேபோல் அதன் மீதான நம்பிக்கையும் அனாமிஷிய சக்தியாக மதத்தை வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் அரசர்கள் தோன்றிய போது புதிய அரசுகள் உதயமானது. பிறகு பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இறைவனுடைய தூதுவராக அரசர்கள் உள்ளனர் என்று ஆட்சியாளர்களும் மக்களை நம்பச் செய்தனர்.

மதங்களின் வகைகள் :

பல்வேறு மதங்களை உலகமக்கள் பின்பற்றி வந்தாலும், மதங்கள் அடிப்படையில் நான்கு வகையான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மதம் பலரால் பின்பற்றிய போதிலும், பலரிடம் எதிர்ப்பையும், மறுப்பையும் உண்டாக்கியுள்ளது.

1. உலக மதங்கள்

2. சிறுபான்மையான மதங்கள்

3. புதிய மத அமைப்புகள்

4. மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள்

1. உலக மதங்கள் :

அனைத்து மக்களால் பின்பற்றப்படும், ஒரு மாற்று கலாச்சார கோட்பாடுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. மதக் கோட்பாடுகளை உலகளவில் பரப்புவதும் அதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாக்கித் தருவதும் இதனுடைய நோக்கமாக அமைந்து வந்துள்ளது. இதில் பெருமளவு பங்கினை கிறிஸ்துவ மதம் சமுதாயத்திற்குச் செய்துள்ளது. தன்னுடைய அமைப்புகள் மூலமும், தேவாலயங்கள் மூலமும் மக்களுக்கு சமுதாயப் பணி மற்றும் மருத்துவச் சேவையை செய்து வந்துள்ளது.

2. சிறுபான்மையான மதங்கள் :

சிறுபான்மையான மதங்கள் ஒரு தேசத்திற்குட்பட்டு அல்லது ஒரு பகுதியான மக்களால் மட்டும் பின்பற்றப்படுவதாகும். குறிப்பாக மலைவாழ் மக்கள், ஆதிவாசி மக்களால் பெருமளவில் பின்பற்றப்படுகிறது. இவர்களுடைய கலாச்சார அடிப்படையில் உருவாக்கப்பட்ட மதங்கள் பல இனக்குழுக்களால் தொன்றுதொட்டு, இயற்கையை வணங்கி, வழிபடுகிறார்கள். இவ்வகையான குழுக்கள் ஆசிய, இந்தியப் பழங்குடி மக்களால் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இதுபோன்று சீனாவில் அதிகளவில் பின்பற்றப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

3. புதிய மத அமைப்புகள் :

மதங்களில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மாற்றுக் கொள்கையின் காரணமாக புதிய மத அமைப்புகள் உருவாகக் காரணமாகிறது. புதிய மத அமைப்புகள் பெருமளவில் சிறிய குழுக்களாகத்தான் செயல்படுகிறது. புதிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி தங்களுடைய மத குழுக்களை பரப்பியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி பிற மதங்களிருந்து மாறுபடுகின்றன.

4. மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் :

உலகளவில் 36% மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் உள்ளனர். இவர்கள் மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கின்றனர். கொள்கைரீதியாக அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கின்றனர். நாத்திகவாதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகளவில் உள்ளனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அறிவியல் வளர்ந்திருப்பதால், அனைத்தையும் அறிவியல் பார்வையுடன் பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு மூடநம்பிக்கை குறைந்துள்ளது. வளர்ச்சி அடையாத நாடுகளில் பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கை அதிகம் உள்ளன. மற்றும் அறிவியல் பார்வை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் குறைவாகவே உள்ளனர். மதமும், அறிவியலும் ஒன்று என்று வளர்ச்சியடையாத நாடுகளில் நினைப்பதால் இங்கு மதமறுப்பாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

மதங்களும் கோட்பாடுகளும்

மதங்கள் பற்றி கூறும்பொழுது இவைகளுக்கு என்று கோட்பாடுகள் உண்டு. அதிலும் பல்வேறு கோட்பாடுகள் மூலம் மானிட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இரண்டு வகையான கோட்பாடுகளால் இவை மாறுபடுகிறது.

1. அடிப்படையான கோட்பாடு

2. தேவைகள் சார்ந்த கோட்பாடு

அடிப்படையான கோட்பாடுகள்

மதங்களின் கொள்கைகள் மக்களையே சார்ந்துள்ளது. மக்களுடைய நம்பிக்கை, அறநெறிகள் எல்லாம் மதத்தின் மீது தாக்கத்தை உருவாக்கி தந்துள்ளது என்று கூறுகிறது. மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் நிறைவேறும்பொழுது மதத்தின்மீது அதிக நம்பிக்கை வரக்காரணம் என்று இந்த கோட்பாடு கூறுகிறது.

எட்வர்ட் பர்னட் டைலர் (Edward Burnett Tylor 1832 - 1917) மானிடவியல் நிபுணரான இவர் மதங்களின் கோட்பாட்டை பற்றி கூறும்பொழுது, மதங்கள் மக்களால் அதிகளவு பின்பற்றப்பட முக்கிய காரணமாக அனாமிஷிய சக்திகள் பற்றிய நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. கனவுகளில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடக்கும்பொழுதும், மாயாஜாலம், கட்டுக்கதைகள், புதிர்களைக் காணும்பொழுதும் ஏதோ ஒரு சக்தியுள்ளதாக உணர்கிறார்கள். இதனால் மதத்தினை நாடிச் செல்கின்றனர் என்று கூறுகிறார்.

ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் :

மானிடவியல் நிபுணரான ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (James George Frazer 1854 - 1941) மதக் கோட்பாடுகளை பற்றி கூறும்பொழுது மக்கள் மதங்களை நாடிச் செல்வதற்கு மாந்திரீகம், சடங்குகள், மாயஜாலம், அச்சம் ஆகியவை முக்கிய காரணம் என்கிறார். இதனால் பயத்தைப் போக்குவதற்கு மதத்தை நாடுகிறார்கள். மதம் அவனுடைய தவிர்க்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இயற்கை உலகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு மதமும் அதைச் சார்ந்த சடங்குகளைப் பின்பற்ற கற்றுக் கொண்டுள்ளான். மாயஜாலங்கள் அனைத்தும் கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்றும் இவை சடங்குகள் என்னும் பெயரில் பின்பற்றப்படுகிறது. இந்த உலகம் ஒருவரால் ஆளப்படுகிறது என்று மக்கள் நம்புகின்றனர் எனக் கூறுகிறார்.

ரடல்ப் ஓட்டோ:

மத நிபுணர் ரடல்ப் ஓட்டோ (Rudolf Otto 1869 - 1937) மதத்தைப் பற்றி கூறும்பொழுது மதம் பல்வேறு பாதைகளைக் கடந்து வந்துள்ளது. இதற்கு என்று தனியான கோட்பாட்டினை கூற இயலாது. மாறாக எல்லா குணங்களை கொண்டு இயங்கி வரும் ஒரு புரியாத புதிராக உள்ளது. இதன் அடிப்படையில்தான் மதங்கள் உருவாக காரணமாக இருந்து இருக்கும் என்கிறார்.

மனிதன் மூடநம்பிக்கையின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் பகுத்தறிந்து பார்க்காமல் போனதால் மனித மனதானது மதத்தை நாடியும், அறிவியலுக்கு முரண்பட்டும், அனாமிஷியங்கள்மீது அதிக நாட்டம் உருவாகக் காரணமாகிவிட்டது என்று கூறுகிறார்.

தேவைகள் சார்ந்த கோட்பாடு :

தேவைகள் சார்ந்த கோட்பாடுகளின்படி மதமானது சமூகம் அல்லது மனரீதியான செயல்களை நிறைவேற்றும் வகையில் ஒரு கூட்டத்தையும், மக்களை வழிநடத்தும் பாலமாக உள்ளது. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளும் செயலாக வழிவகுக்கிறது என்றும் மதத்தை பார்க்கின்றனர். சமுதாயத்தில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியும் என்று மதக் கோட்பாடு கூறுகிறது. தேவைகள் மனிதனுக்கு அடிப்படையான ஒன்று என்பதால் இதனைப் பெறுவதற்கு மதமும் சமுதாயத்துடன் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென்று கூறுகின்றன. பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கவும், தன் கொள்கைகளை மக்கள் தேவைக்கு ஏற்ப மாற்றும் வழியில் மதத்தை பயன்படுத்துகின்றனர்.கார்ல் மார்க்ஸ் (1818 - 1883) மதமும் அதனுடைய கோட்பாட்டை பற்றிக் கூறும்பொழுது இவை அனைத்தும் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதனுயை மனதானது சமுதாயத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது. இதனால் மனிதன் எப்பொழுது தனிமையில் இருக்கிறானோ அப்பொழுது தனது தனிமையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழிகாட்டியாக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறான். மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். எனவே மதம் ஒரு போதையூட்டும் பொருள். மனிதனுடைய கலாச்சாரத்திற்கு மதம் ஒருபொழுதும் உபயோகமாக இருக்காது. இது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது என கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

எமில் டர்கிம் (Emile Durkheium 1858 - 1917) மதத்தைப் பற்றிக் கூறும் பொழுது, மதம் ஒரு புனிதமான செயல், சமூகத்தின் வெளிப்பாடாகவும், கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது என்றார். மேலும் இவை அனாமிஷிய சக்திகளைக் கொண்டு செயல்படுவதில்லை. மாறாக ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக ஒருமித்தக் கருத்தினால் செயல்படும் ஒரு சமூக அமைப்பாக உள்ளது. இக்குழுக்கள் ஒன்று சேரும்பொழுது, ஒரு புதுவிதமான சக்தி பெற்று தங்களை மறந்து கடவுளுடைய அருளை பெறுகின்றனர். மதம் ஒரு தனிமனித இயந்திரம். இதன் மூலம் லட்சியத்தை அடையும் வழியை காட்டுகின்றது என்று கூறுகிறார். ஆனால் எந்தவிதமான மாயஜாலங்களும் கிடையாது. மாறாக மக்களுடைய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் சார்ந்துள்ளது.

மாக்ஸ் வீபர் (Max Weber 1864 - 1920) மதம் என்பது அறிவியலுக்கு முரண்பாடான செயல் என்றார். ஒவ்வொரு மதமும் தன்னுடைய சமூகத்தில் ஒருவகையான சுரண்டல் முறையைக் கையாளுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தாக்கமாக மதம் சமூகத்தை மாற்றியமைத்துள்ளது என்ற மார்க்ஸின் கொள்கையுடன் ஒத்துப் போகிறார். மதம் ஒருவருக்கு சுரண்டலை உண்டாக்கித் தருகிறது என்றும் கூறுகிறார்.சிக்மன்ட் ப்ராய்டு (Sigmund Freud 1856 - 1939) மதம் என்பது மனரீதியான வெளிப்பாடு என்றார். மக்கள் பெருமளவில் எந்த செயல்மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அது உண்மையாக வேண்டுமென்று நம்புகிறார்கள். மனிதனுடைய மனரீதியான தேவைகளுக்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அத்தேவைகள் என்றும் பூர்த்திசெய்யப்படாது மனரீதியான தேவைகள் மூலமாக மதம் என்னும் செயல் உதயமாகிறது என்கிறார். மதம் ஒரு வழிகாட்டி என்பதால் இதன்மூலம் மனஅழுத்தம் போன்ற இன்னல்களிருந்து, தனிமையை போக்குகிறது என்றும் கூறுகிறார்.

உலகளவில் பின்பற்றும் மதங்கள் :

உலகளவில் அதிகமாகப் பின்பற்றப்படும் மதங்கள் 10 என்றாலும் இதைத் தவிர பல்வேறு சிறுபான்மையான மதங்களும் பின்பற்றப்படுகிறது. உலகளவில் கிறிஸ்தவ மதம் முதன்மையாக பின்பற்றப்படுகிறது. இஸ்லாமிய மதம், இந்து, சீக்கிய மதம், ஜைனமதம், புத்த மதம், யூத மதம், சீனப் பழங்குடி மதம், புதிய மதங்கள், சின்டோஸ்ட்ஸ், பிற மதங்கள் என பல உள்ளன. இது தவிர மத மறுப்பு, நாத்திகவாதிகள் என மதம் சாராதவர்களும் இருக்கின்றனர்.

1. கிறிஸ்தவம் - 33.1 %

2. இஸ்லாம் - 20.3 %

3. இந்து - 13.3 %

4. சீக்கியம் - 0.4 %

5. ஜைனம் - 0.1 %

6. புத்தம் - 5.9 %

7. யூதம் - 0.2 %

8. சீன பழங்குடி மதங்கள் - 6.3 %

9. புதிய மதங்கள் - 1.7 %

10. சின்டோஸ்ட்ஸ் - 0.1 %

11. யஹாஸ் - 0.1 %

12. கன்பக்சனிஸ்ட் - 0.1 %

13. பிற மதங்கள் - 14.1 %

மதம் சாராதவர்கள் :

உலகளவில் மத நம்பிக்கையுடையவர்கள் அதிகமாக இருந்தாலும் மறுபுறம் மதம் சாராதவர்களுடைய எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மதங்களில் உள்ள மூடநம்பிக்கை, சடங்குகள், அனாமிஷியங்கள் போன்ற செயல்களாலும், கட்டுக்கதைகள், மாயாஜலங்கள் போன்ற அவநம்பிக்கையான செயல்களால் இவர்கள் மதங்களை பின்பற்றாமலும், இதிலிருந்து விலகியே இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். ஒருபுறம் இவ்வாறு இருந்தாலும் மதங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. இதனால் மதம் மனிதனுடைய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவியாக இருப்பதில்லை என்று எண்ணுகிறார்கள்.

மதமறுப்பவர்கள் வைக்கும் விவாதமானது மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. தனிமை என்பது மனரீதியாகவும், உளவியல் ரீதியான பிரச்சினையாகவும் பார்த்து சரிசெய்திட வேண்டும் என்கின்றனர். இவர்கள் மதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. மாறாக மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், தவறான வழிகாட்டுதல் போன்ற செயல்களை முற்றிலும் எதிர்க்கிறார்கள்.

எல்லாவற்றையும் ஒரு அறிவியல் பார்வையுடன் கையாள வேண்டும். அறிவியலால்தான் மனித வாழ்வின் அடிப்படையான செயல்களையும் செய்து முடித்திட முடியும். மேலும் உலகளவில் பல்வேறு இன மற்றும் பாகுபாடுகளால் நடக்கும் வன்முறைக்கு மதமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுத்திட முடியாது. மதங்கள் அன்பை போதிக்கின்றன என்பதிலிருந்து மாறுபட்டு இருப்பதால் மதம் சாராதவர்களாகவும், முற்போக்குவாதிகளாகவும், நாத்திகவாதிகளாவும் மாறியுள்ளனர்.

மதம் என்பது அவர்களுடைய வாழ்வில் தேவையற்ற ஒன்றாக கருதுகின்றனர் என்று கூறியாக வேண்டும். மதம் சாராதவர்களாக இவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. உலகளவில் 36% பேர் இவ்வாறு இருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. மதக் கோட்பாடுகளில் ஏற்படும் முரண்பாட்டால், மதம் சாராதவர்களாக மாறும் நிலைக்கு வருகிறார்கள். இன்றைய காலகட்டங்களில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் அதிகளவில் உள்ளது.

உலகளவில்

மத நம்பிக்கை உடையவர்கள் - 59%

மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 23%

நாத்திகவாதி - 13%

எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் - 5%

மதம் நம்பிக்கை நம்பிக்கையற்றவர்

கிறிஸ்து 81% 16%

இஸ்லாம் 74% 20%

யூதம் 38% 54%

இந்து 82% 12%

மத நம்பிக்கையற்றவர்களின் பட்டியல்

நாடுகள் மத நம்பிக்கை மத நம்பிக்கை நாத்திகவாதிகள் எந்த நம்பிக்கையும்

இல்லாதவர்கள் இல்லாதவர்கள்

1. சீனா 14 30 47 9

2. ஜப்பான் 16 31 31 22

3. கிரீஸ் குடியரசு 20 48 30 2

4. பிரான்ஸ் 37 34 29 0

5. தென் கொரியா 52 31 15 2

6. ஜெர்மனி 51 33 15 1

7. நெதர்லாந்து 43 42 14 1

8. ஆஸ்ட்ரியா 42 43 10 5

9. ஐஸ்லாண்டு 57 31 10 2

10. ஆஸ்திரேலியா 37 48 10 5

11. அயர்லாந்து 30 44 10 16

வளரும் நாடுகளில் மதத்தின் தாக்கம் அதிகமாகவும், மதம் சாராதவர்களுடைய எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என்று கூறலாம். இதற்குக் காரணம் மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி இல்லாதது, பகுத்தறியும் செயல்கள் குறைவாக உள்ளதுமே ஆகும்.

மதம் சாராதவர்கள் பற்றிய ஆய்வு 57 நாடுகளில், ஆண், பெண் என 50,000 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. கானா, நைஜீரியா, ஆர்மீனியா, மாசிடோனியா, ருமேனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் போன்ற நாடுகளில் 85-96 சதவீதம் பேர் மத நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். குறிப்பாக அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி அடையாத நாடுகளிலேயே மத நம்பிக்கை உடையவர்கள் அதிகம் உள்ளனர்.

உலகளவில் கல்லூரி அளவில் படித்தவர்களிடம் மத நம்பிக்கைக் குறைவாக உள்ளது. கல்வியறிவு இல்லாதவரிடம் மத நம்பிக்கை அதிகம் உள்ளது. வறுமையில் வாடுபவர்களே மதத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

வேறுபாடுகள் :

மதம் ஒரு நம்பிக்கையை சார்ந்த செயல் என்று கூறினாலும் எல்லா நம்பிக்கை முறையும் மதத்தை சார்ந்தது கிடையாது. மதத்தைப் பின்பற்றுவர்களுக்கும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுவது எளிது.

பல நேரங்களில் மக்கள் மத நம்பிக்கை முறையை மிகவும் கடினமான செயலாக கருதுகின்றனர். அதேபோல் அறிவியல் ஆய்வுகளை, மதத்துடன் ஒப்பிட்டு தங்களை குழப்பிக்கொள்கிறார்கள், ஆன்மீகத்தையும் அது ஒரு மதம் சாராத செயலாகவே கருதுகிறார்கள். ஏன் என்றால் மதம் பல்வேறு நேரங்களில் அவ்வப்பெயர்களை கொண்டு இயங்குகிறது என்று நினைக்கிறார்கள்.

மத நம்பிக்கையைக் கொண்டவர்கள் மதத்தில் கூறப்படும் விசயங்களை அப்படியே நம்புவதும், அதில் உள்ள சடங்குகளை பின்பற்றவதும் பெருமளவு காணப்படுகிறது. இதுவே மத மறுப்புடையவர்கள் மூட நம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல் அனைத்தையும் அறிவியல் பார்வையுடன் ஆய்வு செய்து பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இடையே வெவ்வேறு வகையான நம்பிக்கை முறைகள் உள்ளன. அதில் இரண்டு வகையான நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தன்னுடைய மதத்தைப் பற்றிய நம்பிக்கை. மற்றொன்று பிற மத நம்பிக்கையை அன்னிய சக்திகளாகக் கருதுகிறார்கள். ஆனால் மத நம்பிக்கையற்றவர்கள் தங்களுக்கு மதத்தின்மீது நாட்டமில்லை என்றாலும் அனைத்து மதத்தையும் மாண்போடு நடத்துகிறார்கள்.

மதமும், அறிவியலும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையது என்று மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மதமறுப்பு கொள்கையுடையவர்கள் மதம் என்பது வேறு, அறிவியல் என்பது வேறு. அவ்வாறு ஒன்று என்று கூறினால் இவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மதத்தைப் பின்பற்றுபவர்கள் கடவுள் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால் மதமறுப்பாளர் கடவுள் என்பது உண்மையானது கிடையாது. இவை அனைத்தும் மனிதனுடைய கற்பனையே என்று கூறுகின்றனர்.

மதமானது அபூர்வ சக்திகளைக் கொண்டது. இதன் மூலம் பல்வேறு நற்செயல்களை கொடுக்க வல்லது. மதமறுப்பாளர்கள் மதத்திற்கு அபூர்வ சக்திகள் என்று ஒன்றும் இல்லை. இவை அனைத்தும் ஒரு மூட நம்பிக்கையான செயலாகவே உள்ளது. மனிதன் மனரீதியான பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது அபூர்வ சக்தியுள்ளது என்று நம்புகிறான் என இவர்கள் கூறுகின்றனர்.

மதத்தைப் பின்பற்றுபவர்களிடம் பிற மதத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது புரிதல் கிடையாது. மேலும் பிறமதத்தினரை இழிவாக நினைப்பதும், வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆனால் மதமறுப்பு கொள்கையுடையவர்கள் மத மோதல்கள் கூடாது என்கின்றனர். மதம் இல்லை என்றால் எந்தவிதமான பிரச்சினைகளும் வராது, மத மோதல்கள் ஏற்படாது என்கின்றனர்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. இதற்கு என்று தனி ஆன்மா உள்ளது என மத நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பரிணாம வளர்ச்சியின் காரணமாக உருவானது. இதற்கு என்று ஆன்மா கிடையாது. பிறப்பு என்று இருக்கும்பொழுது இறப்பும் இருக்கும். இதில் எங்கு ஆன்மா உள்ளது என்று மதமறுப்பாளர்கள் கேட்கிறார்கள்.

மதங்கள் உலகளவில் பின்பற்றப்பட்டாலும் அது ஒரு தேவை சார்ந்த செயலாக உள்ளது. இதன் மூலம் முக்தியடைய முடியும் என்கின்றனர். நேரடியாக இறைவனை அடைய சிறந்த வழியாக மதம் உள்ளது என மதவாதிகள் கூறுகின்றனர். ஆனால் முக்தி என்பதே ஒரு மூடநம்பிக்கை. கடவுளை அடையமுடியும் என்பது ஒரு பொய்யான செயல். இதன் மூலம் சுரண்டலுக்கு மதம் இட்டுச் செல்கிறது என மதமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.

மதமும், மூடநம்பிக்கையும் :

மதமும், மூடநம்பிக்கையும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அவை சில மதங்களில் அதிகளவில் காணப்படுகிறது. சில மதங்கள் சற்று மாறுபட்டு முற்போக்குடன் உள்ளது என்றும் கூறலாம்.

கிறிஸ்தவ மதத்தில் கருப்புப் பூனையையும், பாம்பையும் சாத்தானுடைய அவதாரமாக சித்தரிக்கப்படுகிறது. அதேபோல் எண் 13, 666 மதத்திற்கு எதிரானது என்று கூறுகிறது. கிறிஸ்தவ புனித நூலான பைபிளில் கூறப்படும் செய்திகளை மறுப்பவர்கள் பாவம் செய்தவர் என்றும், நரகத்திற்குச் செல்வான் என்றும் கூறுகிறது. இதுபோன்ற பல நம்பிக்கை கிறிஸ்தவத்தில் பின்பற்றப்படுகிறது. பிற மதத்தை வணங்குவது தவறு அவ்வாறு செய்தால் பல எதிர்மறையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்றும் கூறுகிறது.

கிறிஸ்தவ மதத்தில் மட்டும்தான் இதுபோன்ற நம்பிக்கை இருக்கிறது என்பது கிடையாது. பிற மதங்களிலும் இதுபோன்ற மூட நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றனர். உலகளவில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் மூடநம்பிக்கை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்ப கதைகளையும் கூறுகின்றனர். இதுதான் மதத்திற்கு பாதகமாகவும், சில நேரங்களில் எதிராகவும் உள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமாகவுள்ள மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் பொழுது, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வந்தால் அந்நாள் கெட்ட நாளாகவும், அன்றைய தினம் கடவுளுக்கு ஏற்ற தினமாக இருக்காது கெட்ட அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்று நம்புகின்றனர். உள்ளங்கை அரித்தால் பணம் பறி போகும். அதேபோல் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றனர்.

முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அதில் முகம் பார்க்கக்கூடாது. கண்ணாடி என்பது நம் வாழ்க்கை போன்றது. அது உடையும்பொழுது அதிர்ஷ்டமில்லாமல் போய்விடும். கெட்ட அனாமிஷியங்களை தூண்டிவிடும் என்று நம்புகின்றனர்.

குதிரை லாடம் ரோட்டில் அல்லது எங்காவது கண்டு எடுத்தால் அதை வீட்டு முச்சந்தியில் கட்டிவைப்பதன் மூலம் நம்மிடம் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்கிறார்கள். வீட்டின் உள்ளே குடையைத் திறப்பதும், கருப்புக் குடையை வெய்யில் நேரங்களில் திறப்பதும் சூரிய பகவானை அவமானப்படுத்தும் செயலாகும். அவ்வாறு செய்யும்போது கெட்ட செய்திகள் வீடு தேடிவரும் என்று நம்புகின்றனர்.

மரக்கட்டையில் அல்லது மரத்தினை இரண்டுமுறை தட்டிப் பார்க்கும் பொழுது அதன் மூலம் இயற்கை வடிவில் உள்ள இறைவன் தீய சக்திகளை அழித்து அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. சிதறிய உப்பினை எடுத்து பிறர் மீது தெளிப்பது நற்செயல்கள் வந்து சேரும். அதேபோல் தீய சக்திகள் போன்றவை விலகி, அமைதி திரும்பும் என்று நம்புகின்றனர்.

கருப்புப் பூனையை பார்க்கும்பொழுது கெட்ட செய்தி வந்து சேரும், கருப்புப்பூனை என்பது சாத்தானுடைய உருவமாக கருதப்படுகிறது. கெட்ட செயல்கள் நடக்க வழிவகுக்கும். தீய சக்திகளைத் தூண்டிவிடுவதாக கருப்புப்பூனை கருதப்படுகிறது என்று உலகளவில் நம்பப்படுகிறது.


இவ்வாறு உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டாலும் மூடநம்பிக்கை சார்ந்த செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு வகையான பயமும்
, பீதியும் நிலவுகிறது என்று கூறித்தான் ஆக வேண்டும். இவை சில சமயங்களில் மதம் சார்ந்து இருந்தாலும் பல்வேறு நேரங்களில் மதத்தை மிஞ்சும் அளவிற்கு மிகவும் பிரபலமாக எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.

நம் நாட்டைப் பொருத்தவரை பல்வேறு மூடநம்பிக்கைகளை தினமும் நாம் பார்க்க நேரிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் மதம் சார்ந்த மூடநம்பிக்கையும் அதிகளவு பின்பற்றப்படுகிறது என்று கூறியாக வேண்டும். இந்தியாவில் வாழும் மக்கள் அன்றாடம் மூடநம்பிக்கையின்றி வாழ்க்கையை நடத்த இயலாது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பொதுவாக அனைத்து மூடநம்பிக்கையும் மனிதனைக் காக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவை என்றும், எதிர்காலத்தை தீர்மானிக்கும் செயலாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது விலங்குகள், பறவைகள் போன்றவற்றில் ஆரம்பித்து திருமணம், உற்றார், உறவினர்வரை தொன்றுதொட்டு பின்பற்றப்படுகின்றது. சில விலங்குகள், பறவைகள் நற்செய்திக்கும், சில விலங்குகள், பறவைகள் கெட்ட செய்திக்கும் அதிகளவு பின்பற்றப்படுகிறது. ஒரு யானையை எங்காவது பார்த்தால் நற்செய்தி மற்றும் அதிர்ஷ்டத்தை தேடித் தரும். இது கடவுள் கணேசனைக் குறிக்கிறது என நம்புகின்றனர். காகம் வீட்டின் அருகில் கத்தும்பொழுது விருந்தினர்கள் வருவார்கள் என்றும், மயிலை பயணத்தின்பொழுது பார்க்க நேர்ந்தால் அதிர்ஷ்டம் என்றும், நோயுற்றவர் அருகில் நாய் ஊளையிட்டால் அவர் இறந்துவிடுவார் என்றும், காலையில் பூனை அல்லது பசுவின் முகத்தில் விழித்தால் கெட்ட செய்தி தேடி வரும் என்றும் நம்பப்படுகிறது.

இவை ஒருபுறம் இருந்தால் மனிதனைச் சார்ந்த மூடநம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பயணத்தை தொடர்வதற்கு முன்பு ஜோதிடரை பார்ப்பது, விவசாயம் செய்வதற்கு ஏற்ற நாள் எது என்று ஜோதிடம் பார்க்கப்படுகிறது. ஒருவர் பயணம் செய்யும்போது யாராவது தும்பினால் “நீ இங்கே இரு எங்கும் போகாதே” என்று கூறுகின்றது. அதை மீறி பயணம் செய்ய நேர்ந்தால் அந்த பயணத்தில் பல தடங்கல்கள் ஏற்பட நேரிடும் என்கின்றனர்.

அதேபோல் ஒருவர் கனவு காணும்பொழுது கடவுள், பேய்கள், விலங்குகள் போன்றவற்றை கண்டால் அது நற்செய்திகள் கொண்டு வந்து சேர்க்கும். இரும்பு, தங்கம், எரிகற்கள், நிலநடுக்கம், இயற்கைப் பேரிடர்கள் காண நேர்ந்தால் இவை கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கும். கனவுகளுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த சக்தியும், எந்த நேரத்தில் எந்த கனவு வருகிறது, அதற்கு ஏற்ப நற்செயல்கள் மற்றும் தீய செயல்கள் நேர்ந்திடும் எனப் பெரும்பாலும் நம்பப்படுகிறது. வாரத்தின் நாட்கள் அடிப்படையில் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சவரம் செய்வது ஏற்ற தினமாக இருக்காது. உறவினர் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் வெளியூர் செல்லும்பொழுது யாரும் தலைக்குளியல் செய்திடக் கூடாது என்கின்றனர்.

இதைத் தவிர சில பொதுவான மூடநம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஒருவர் இரவு நேரங்களில் நகங்களை வெட்டுவது கூடாது. இவை கெட்ட ஆவிகளை துண்டிவிடும் என்கின்றனர். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீடுகளை கூட்டக் கூடாது, அவ்வாறு செய்தால் லட்சுமி வந்து சேராது. அதே போல் ஒருவருக்கு விக்கல் எடுக்கும்பொழுது அவரை யாரோ ஒருவர் நினைக்கிறார் என்று கூறுகின்றனர். இரவு நேரங்களில் புளிய மரங்களின் அருகில் செல்லக் கூடாது. பழைய பூட்டிய வீடுகளுக்கும், சுடுகாடுகளுக்கும் செல்வது பேய்களை ஈர்க்கும், இதுபோல் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுது இரவு நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. காலியாக உள்ள வீட்டுக்குள் செல்லக் கூடாது. அப்படிச் செய்தால் கெட்ட ஆவிகள் பிடிக்க வாய்ப்புள்ளது. கர்ப்பமாக உள்ள பெண்ணின் கணவர் சொந்தமாக வீடு கட்டக் கூடாது. அப்படி செய்தால் பூமி நற்பண்புகள் அனைத்தையும் இழந்துவிடும் என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் தந்தை குழந்தையை ஆறு மாதங்களுக்கு பார்க்கக் கூடாது. அவ்வாறு பார்த்தால் குழந்தைக்கு கெட்ட செய்தியை தேடித் தரும் என்கின்றனர். அதனால்தான் பெண்களை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பெண் மாதவிடாய் நேரங்களில் நற்காரியங்களில் கலந்து கொள்வது தவறு. சமையலறை அல்லது பிறருடன் கலந்து கொள்வது கூடாது. ஏன் என்றால் அவள் தூய்மையாக இருக்கமாட்டாள். அதற்குப் பதிலாக நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். கோயில்களுக்கு செல்லக்கூடாது. வீட்டில் யாரேனும் கோயிலுக்குச் செல்ல இருந்தால் அவர்களுக்கு உணவு மற்றும் பிற காரியங்களை செய்திடக்கூடாது என்கின்றனர்.

வலது உள்ளங்கை அரிக்கும் பொழுது நற்செய்தி, இடது உள்ளங்கை அரிக்கும்பொழுது கெட்டது என்றும், வலது கண் துடிப்பது கெட்டது என்றும், இடது கண் துடிப்பது நற்செய்தியை தேடித் தருமென்றும் கூறுகின்றனர். திருமணங்களில்கூட அதிகளவில் மூடநம்பிக்கைகள் பின்பற்றப்படுகிறது. புதிதாக பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும்பொழுது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறாள் என்றும், ஓராண்டிற்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் பெண்ணுடைய அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். எதாவது தீய செயல்கள் ஏற்பட்டாலும் பெண்ணைத்தான் சாரும் என்கின்றனர்.

விதவைப் பெண்களை பொறுத்தவரை அவர்கள் அதிர்ஷ்டமற்றவர்கள். பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அனுமதிப்பது கிடையாது. இவர்களுடைய வரவு கெட்ட செயல்களை தேடித் தரும் என்கின்றனர். புது மணப்பெண் ஒரு விதவையை பார்க்கக்கூடாது என்கிற மூடநம்பிக்கையும் பின்பற்றப்படுகிறது.

குழந்தையற்ற பெண்ணுக்கு சில வரைமுறைகளும், கட்டுபாடுகளும் உண்டு என்கின்றனர். பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. வளைகாப்பு, திருமணங்களில் பெரும்பாலும் கலந்து கொண்டாலும் இவர்கள் எந்த சடங்குகளையும் முன்நின்று செய்வதில்லை. இவர்கள் அருகில் சென்றால் எல்லா பாவங்களும் புதுப்பெண் அல்லது குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர். அதிகாலை உதயமாகும் பொழுதுகூட சில மூடநம்பிக்கையுள்ளது. ஒரு மணப்பெண்ணை பார்ப்பது, கடவுள் சிலை பார்ப்பது அதிர்ஷ்டம் என்றும், விதவைகள், அதிர்ஷ்டமற்ற நபர்களை பார்ப்பது கெட்ட செயல் என்று கூறுகின்றனர்.

மதமும், அறிவியலும்

மதமும், அறிவியலும் அன்றைய காலம் முதல் இன்றுவரை மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிக் கொண்டுதான் வருகிறது. மனிதன் முதன்முதலில் நெருப்பு கண்டுபிடித்ததிலிருந்து மதத்திற்கும், அறிவியலுக்கும் போட்டியையும் சர்ச்சையையும் உண்டாக்கிய வண்ணம் இருந்து வந்துள்ளது. அறிவியலானது அறிவு சார்ந்த செயல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அறிவியல்முறை ஆய்வுக்குட்பட்டது மற்றும் எதார்த்தமானது. மதமானது நம்பிக்கை சார்ந்தது மற்றும் புனிதமானது என்று பிரிக்கப்படுகிறது. எனினும் இரண்டும் வெவ்வேறானது என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர்.

மதத்திற்கும், அறிவியலுக்கும் மிகப்பெரியளவில் சர்ச்சைகள் அன்று முதல் இன்றுவரை இருந்து வந்துள்ளது. அவை ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியலும், மதமும், மனிதனிடையே வெவ்வேறு அனுபவங்களை கொண்டு சேர்த்துள்ளது. அவை அதன் எல்லையின் உள்ளே இருக்கும்வரை மட்டும் இவ்வாறு இருக்கிறது. அவை ஒன்றோடு ஒன்று மோதும்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உட்படுத்தப்படுகிறது என்று கூறுகின்றனர்.

மதமும், அறிவியலும் வெவ்வேறு துறைகளாக இருந்தாலும் பல்வேறு மதங்கள் அறிவியலை ஏற்றுக்கொள்கின்றன. சில நேரங்களில் மதங்கள் அறிவியலை எதிர்க்கவும் செய்கின்றன. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என மதங்கள் கூறுகின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி மூலமே தோன்றினான் என அறிவியல் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. சாதி, மதம், இனம், மொழி என்கிற பாகுபாடு அறிவியலுக்குக் கிடையாது. ஆனால் மதம், மனிதனை சாதி, இனம் என்று பிரித்துப் பார்க்கிறது.

புத்த மதம் :

புத்த மதம் கடவுள் இல்லை என்கிறது. அறிவியலோடு பெருமளவில் பொருந்திப் போகிறது. சில தத்துவங்கள் மற்றும் மனரீதியான போதனைகள் அனைத்தும் மேற்கத்திய அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்கின்றனர். புத்த மதம், இயற்கையை பல்வேறு வகையில் ஆய்வு செய்து பாருங்கள் என்கிறது. எதார்த்தத்தை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது. புத்த மதம் பொருட்செல்வங்கள் மீது ஆசைப்படுவது கிடையாது. புத்தமதத்தில் தவறாக ஏதாவது கூறியிருந்தால், அறிவியல் கூற்றின்படி அதை மாற்றியமைத்து, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

பாஹாய் மதம் :

பாஹாய் மதத்தின் அடிப்படைக் கோட்பாடு மதம் மற்றும் அறிவியல் நல்லிணக்கத்தைச் சார்ந்தது. அறிவியலும், மதமும் எப்பொழுதும் முரண்பாடுகளுடன் இருக்காது. மாறாக ஒற்றுமையுடன் சமூகத்தை முன்னடத்தி செல்வதற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறுகின்றன.

இந்த மதத்தைத் தோற்றுவித்த ‘அப்துல் பாஹா’ அறிவியலைப் பற்றி கூறும்பொழுது “மதம் இல்லாத அறிவியல் ஒரு மூடநம்பிக்கை என்றும் அறிவியல் இல்லாத மதம் ஒரு பொருளியம்” என்கிறார். மேலும் ஒரு உண்மையான மதமானது அறிவியல் கோட்பாடுகளின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாடு உடையதாக அமைந்திட வேண்டும் என்று கூறுகிறார்.

கிறிஸ்தவ மதம் :

கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை அறிவியல் வேறு, மதம் என்பது வேறு என்று கூறி வருகிறது. கடவுள்தான் உலகத்தைப் படைத்தார். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறுகிறது. அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள் மீது கொடூர தாக்குதல், கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தன. 15ஆம் நூற்றாண்டில் பல்வேறு புரட்சிகரமான விஞ்ஞானிகளுக்குப் பெரும் சிக்கலைத் தேடித் தந்தது. கோபர்னிக்கஸ், உலகம் உருண்டை, பூமி சூரியனைச் சுற்றிவரும் ஒரு கோள் என்று கூறியபொழுது கடும் எதிர்ப்பினை மதம் வெளிப்படுத்தியது. அதேபோல் கலிலியோவும், அறிவியல் கோட்பாடுகளில் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டு, கோபர்னிக்கஸின் அறிவியல் கோட்பாடு சரி எனக் கூறியதற்காக வீட்டுச் சிறையில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அக்காலத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது, மனிதனை ஆய்வு செய்வதற்கும் கிறிஸ்தவ மதம் தடையாக இருந்து வந்துள்ளது என்று கூறலாம். இன்றைய கால கட்டங்களில் அறிவியல் வளர்ச்சி பெரிதும் ஏற்பட்டுள்ளதால் அறிவியலும், மதமும் ஒன்று என்று கூறுகிறது.

இந்து மதம் :

இந்து மதத்தைப் பொருத்தளவில் அறிவியல் மற்றும் மதத்திற்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. சில காரணிகள் அடிப்படையில் வேறுபட்டாலும், அறிவியல் வளர்ச்சியின்றி தன்னுடைய கலை மற்றும் கருத்தோவியங்களை அக்காலத்தில் செய்து இருக்க முடியாது என்கின்றனர்.

இந்து துறவிகள் அறிவியல் பற்றி கூறும்பொழுது இது எதார்த்தமான ஒன்று மற்றும் அனைத்து செயல்களையும் நியாயப்படுத்தும் அறிவை சார்ந்த செயல் என்று கூறுகின்றனர். இந்து மதக் கோட்பாட்டின்படி, நவீன அறிவியலானது சட்டபூர்வமானது. ஆனால் இதன் மூலம் எதார்த்தத்தை அறிய முடியாது என்று கூறினாலும் அறிவியல் கூறும் செய்திகள் உண்மையாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். அதேபோல் இந்து மதமும் காலத்திற்குத் தகுந்ததுபோல் மாறிக்கொண்டு இருக்கும். தவறுகளை திருத்திக்கொண்டே வளர்ச்சி பெறும் என்கிறது. ஆனால் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.

மனிதன் தோன்றியதிற்கு அடிப்படைக் காரணமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றவர்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றனர். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு அழித்தலுக்கும், சிவன் காத்தலுக்கும் பயன்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. டார்வினுடைய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை இந்து மதம் எதிர்த்தாலும் இந்தியாவில் 15 சதவீதம் பேர் பரிணாம கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றனர்.

இஸ்லாம்:

இஸ்லாம் மதத்தைப் பொருத்தவரை அறிவியல் என்பது இயற்கையை உணர்வது மற்றும் புரிந்து கொள்வது. இந்த செயலை தாயஹீத் (Taushid) என்னும் கல்வெட்டுக் குறிப்பில் கூறியுள்ளது. அறிவியல் எல்லா துறையிலும் இருக்க வேண்டும் என்கிறது. இஸ்லாமிய மதத்தில் இயற்கை பிரிக்கப்பட்டு பார்க்கப்படுவதில்லை. மாறாக கடவுள், மனிதன் மற்றும் பூமி மூன்றையும் ஒன்றாகவே கருதுகிறது. பிற மதங்களைவிட இயற்கை மற்றும் அறிவியல்மீது அதிக நம்பிக்கையுடையது. இஸ்லாமியர்களுடைய புனித நூலான குரானில் அறிவியல் அறிவைப் பற்றி நன்கு குறிப்பிடப்படுகிறது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமிய நாகரீகங்கள் மூலம் அறிவியல் பற்றி நன்கு அறியலாம். நவீன அறிவியல் மருத்துவமுறை முதன் முதலில் ‘அல்ஹசின்’ என்னும் முஸ்லீம் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. இவர் கூறுகையில் அறிவியல் என்பது அறிவியல் சிந்தனை மற்றும் ஞானத்தால் உருவாக்கப்பட்டவை என்று இஸ்லாமிய நாகரீகங்கள் மூலம் உணரலாம் என்கிறார்.

அல்ஹசின் தன்னுடைய புத்தகங்களில் பல்வேறு அறிவியல் முறைகளை கூறி இருந்தார். இதன் மூலம் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. கிரேக்கர்கள்போல் இவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பராமரித்து வந்தனர். இஸ்லாமிய காலிப்புகள் மூலம் ‘பாக்தாத்’ பகுதியில் பல்வேறு நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை தொடங்கினர். மருத்துவம், வானியல், விவசாயம் போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

காலனி ஆதிக்கத்தால் இஸ்லாமிய அறிவியல் முறையானது இஸ்லாத்தையும், அறிவியலையும் வெவ்வேறு கோணத்திற்கு இட்டுச் சென்றது. எனினும் இஸ்லாமிய மதம் அறிவியலை ஆதரிக்கிறது. அதில் கூறப்படும் அறிவியல் செய்திகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு காலத்திற்கு தகுந்தவாறு மாற்றியமைத்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.

ஜைனம் :

ஜைன மதத்தைப் பொறுத்தளவில் மதம் வேறு அறிவியல் வேறு என்கிறது. பூமியை உருவாக்கியது கடவுள் என்னும் கோட்பாட்டை முற்றிலும் மறுக்கிறது. மாறாக அண்டமானது, பல்வேறு கோட்பாடுகளால் உருவானவை. காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். அண்டம் என்பது இயற்கை விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இதை உருவாக்க எந்த கடவுளாலும் முடியாது. மதம் மனிதனுடைய ஆன்மாவைப் பொறுத்தது, அறிவியல் வளர்ச்சி அதில் ஏற்படும் மாற்றங்கள் அவ்வப்பொழுது மாற்றியமைத்திட வேண்டும் என்று கூறுகிறது.

மனிதன் தன்னுடைய பாவங்களை போக்கும்பொழுது முக்தியடைய முடியும். இதில் எந்த கடவுளும் இல்லை என்று கூறுகிறது. கர்மா, மோக்ஷா போன்ற அறநெறிகளை பின்பற்றும்பொழுது முக்தியடைய முடியும் என்கிறது.

மதங்களும், பெண்களும்

மதங்கள் பல உள்ளன என வரலாறுகள் கூறுகின்றன. மதம் ஆண்களையும், பெண்களையும் சுரண்டுகின்றன என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றுகூட மதங்கள் அனைத்தும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. மத அடிப்படையில் பாலினம் இடையே பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இருந்து வந்தன. இதனை கிரேக்க கோட்பாடுகள் மற்றும் அதன் ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

மக்கள் இது போன்ற பாகுபாடுகளை எவ்வாறு உணர்கிறார்கள் என்றால் கடவுள் ஆண்களாக மட்டுமே இருக்க முடியும். பெண்கள் கடவுளாக இருக்க முடியாது என்று நம்பப்பட்டது. மத அமைப்புகள் பொதுவாகவே அதன் கோட்பாடுகளில் குறிப்பிடுகையில், ஆண்கள் மட்டுமே கடவுளாக இருந்திட முடியும் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் கிரேக்க நாகரீகத்தின் கோட்பாட்டின்படி கடவுளுக்கு எந்த பாலினமும் கிடையாது. எந்த பாலினத்தையும் குறிக்கும் வகையில் கடவுள் இருந்தது இல்லை என்கிறது.

கிறிஸ்தவ மதம், ஜுடாய்சிம் போன்ற மதங்கள் கடவுள் கண்டிப்பாக ஆணாகத்தான் இருக்க முடியும். கடவுளை குறிக்கும்பொழுது ‘அவர், அவனுடைய, அவன்’ என்று அழைக்கின்றனர். ஆண் கடவுள் எப்பொழுதும் நற்பண்புகள் உடையவர்களாகவும், பெண்கள் தீய செயல்களை உடையவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள் என்று கூறுகிறது. இதுவும் ஒருவகையான ஆண் ஆதிக்க மனப்போக்கு என்று பலரும் விமர்சிக்கின்றனர்.

பெண்ணிய கோட்பாடுகளும், தத்துவங்களும் :

மதம் என்று பார்க்கும்பொழுது பெண்களுக்குச் சாதகமாக எந்த மதமும் இல்லை என்ற நிலையுள்ளது. மதங்கள் பெண்கள்மீது உள்ள தங்களுடைய பார்வையை மாற்றியமைத்திட வேண்டும். மதங்கள் அனைத்தும் பழமையான வழிமுறைகள், தத்துவங்களை மாற்றியமைத்திட வேண்டும். பெண்களுக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர்.

மதம் பெண்கள்மீது ஒரு சுரண்டல் முறையைக் கையாளுகிறது. பெண்களுடைய பங்கு மதத்தில் அதிகமாக இருந்தாலும், ஆண் ஆதிக்க சிந்தனை மதங்களில் திணிக்கப்படுகிறது. பெண் என்றால் குழந்தை பெறுதல், தாய்மையடைதல் என்று தன்னுடைய வாழ்க்கையை மதமே தீர்மானிக்கிறது என பெண்ணிய தத்துவங்கள் கூறுகின்றன. குறிப்பாக பெண்கள் மதங்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெண்ணிய முன்னேற்றத்திற்கு மதங்கள் தடையாக இருக்கிறது என பெண்ணியக் கோட்பாடுகள் கூறுகின்றன. அது தவிர கடவுள் பொதுவாகவே பெண்ணாகத்தான் இருந்திட முடியும் என்றும் கூறுகின்றனர்.

பாலினம் மற்றும் கடவுள் :

பாலினம் மற்றும் கடவுள் பற்றிய விவாதங்கள் பல்வேறு இடங்களில் வேறுபட்டுக் கொண்டு இருக்கிறது. கடவுள் ஆணாக இருக்க முடியும் என்று பல மதங்கள் கூறுகிறது. இவை ஒருவகையான ஆணாதிக்க மனப்போக்கை மக்கள்மீது திணிக்கிறது. மதங்களில் பெண் கடவுள்கள் இருந்தாலும், முதன்மையாக ஆண் கடவுள்களைத்தான் அதிகம் வழிபடுகிறார்கள்.

பெண்ணியவாதிகளின் கருத்து அடிப்படையில் பெண் தெய்வங்களைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆண் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் சமூகத்தில் வழங்கப்படுகிறது. பெண் தெய்வங்களை பொதுவாக மென்மையாகவும், செல்வங்கள், செழிப்பு, தாய்மையடைதல், அழித்தல், நோய் உண்டாக்குதல் போன்ற செயல்களுக்கு மட்டுமே உரியவர் என சித்தரிக்கவும் செய்கின்றனர். இதுபோன்ற முரண்பாடுகள் மேற்கத்திய மதங்களிருந்து உருவானவை. பழமையான பழக்க வழக்கங்களால் உருவாக்கப்பட்டவை.

காலத்திற்கு ஏற்ப மதங்கள் ஆண், பெண் தெய்வங்களை உருவாக்கின. இவை அனைத்தையும் பின்பற்றும்பொழுது இதற்கான முரண்பாடுகள் தொடங்குகின்றன. ஆண் தெய்வங்கள் மிகவும் சக்தியடைந்தவர்கள் போலவும், பெண் தெய்வங்கள் மென்மையானவர்களாக உருவாக்கப்பட்டன. பெண் தெய்வங்கள் இவ்வாறு சித்தரிப்பது ஒரு தவறான சுரண்டல் முறையே. இது ஆண் ஆதிக்க சமுதாய சிந்தனையை கடவுளுக்கிடையேயும் நிலவச் செய்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் பெண்ணியம் :

கிறிஸ்தவ மதத் தத்துவங்களின் அடிப்படையில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள். இதில் எந்தவிதமான பாகுபாடுகளும் கிடையாது. முதலில் ஆண், பெண் சமத்துவத்தை பற்றிய புரிதல் இருந்திட வேண்டும். இருவரும் சமுதாய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சமமானவர்கள். இதன் மூலம் ஆளுமை திறன் மற்றும் ஆன்மீகத்தை அடைய முடியும் என கிறிஸ்தவம் கூறுகிறது.

கிறிஸ்தவ பெண்ணியவாதிகள் கூறுகையில் கடவுள் யாரையும் பாகுபாடாகவோ அல்லது வேற்றுமையுடனோ பார்ப்பதில்லை. ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை, பாலினம் மற்றும் இனம் என்று மிகைப்படுத்துவதில்லை. ஆனால் இவர்கள் கூறும் வாதமானது கிறிஸ்தவ திருமணங்களில் ஆண்களுடைய ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. பெண்களுக்கு என்று சமமான வழிபாடு, பாலியல் உரிமைகள், பெண் கடவுள்களுக்கு மதிப்பளிப்பது, பெண் போதகர்கள் மற்றும் பெண் பாதிரியார்களை உருவாக்கிட வேண்டுமென்று பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.

இஸ்லாமும் பெண்ணியமும் :

பெண்கள் இஸ்லாமியத்தில் முழு சமத்துவம் பெறுவதே இதன் குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. பாலின வேறுபாடுகள் இன்றி பொது வாழ்க்கை மற்றும் தனிநபர் வாழ்க்கையில் பெருமளவு சமத்துவம் பெற வேண்டுமென்கின்றது.

பெண்ணுரிமைகள், பாலின சமத்துவம், சமூக நீதி போன்றவை இஸ்லாமிய கட்டமைப்புகளுக்குள் வர வேண்டும் என இஸ்லாமிய பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். குரானில் கூறப்படும் இறை வாசங்களைப் பின்பற்றினால் பெண்ணியம் போற்றும் செயலாக இருக்கும். குரானில் கூறப்படும் செய்திகள், அனைத்தும் சமத்துவம் சார்ந்த செயல்களாக வேரூன்றியுள்ளதை நன்கு அறியலாம். இதே போல் ஆண் ஆதிக்க சிந்தனையை கடுமையாகச் சாடியும், சமூகத்தில் எவ்வாறு சமத்துவம் பெறுவதற்கான வழிகளையும், சட்டங்களையும் தன்னுடைய புனித நூல்களிலும் கூறிவந்துள்ளது.

ஒருபுறம் இவ்வாறு கூறியிருந்தாலும் இதனை யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக பெண்கள்மீது அடக்குமுறை, வன்முறை, ஆடை கட்டுபாடு போன்ற செயல்களில் பாலின வேறுபாட்டை காட்டி வருகிறது என்று பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். ஆகவே பல பெண்கள் இதற்காக போராட வெளியே வரவும் செய்கின்றனர்.

இந்து மதமும், பெண்ணியமும் :

இந்து மத தத்துவங்கள் பெண்களை மிகவும் உயர்வான நிலையில் நடத்திட வேண்டுமென்று குறிப்பிடுகிறது. ஆண்களைப்போல் பெண்கள் மிகவும் மரியாதைக்குரியவர் மற்றும் சமமானவர் என்று கூறுகிறது. மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி கூறும்பொழுது “ஒரு சமூகம் பெண்ணை மரியாதையுடன் நடத்திட வேண்டும், ஆனால் ஒரு சமூகம் பெண்ணை இழிவாக நடத்தினால் அங்கு பல இடையூறுகளும், பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்” என்று கூறுகின்றது. எனினும் பெண்களை இழிவாகவே நடத்துகின்றனர்.

வேதங்களிலும் பெண்களை மிகவும் மரியாதைக்குரியவராக, சமத்துவமானவளாக நடத்தப்பட்டது. வேத காலத்தில் பெரும்பாலும் ரிஷிகள் பெண்களாகவே இருந்தனர். ரிக் வேதத்தில் குறிப்பிடுகையில் பல பெண் ரிஷிகளுடைய பெயர்கள் இடம் பெறுகின்றன. இவர்களில் கோஷா, கோதா, கார்கி, அபாயா, உபனிஸ்த், பிரமஜெயா, இந்திராணி, சார்மா, ஊர்வசி போன்ற பலர் இருந்தனர். இவர்களும் ஆண்களைப் போல் பிரம்மச்சரியம் கடைபிடித்து, முக்தியடைந்ததாக கூறுகின்றன.

பல ஸ்லோகங்கள் பெண்களை அடிப்படையாகக்கொண்டு உச்சரிக்கப்படுகிறது. சமணம், சைவம், வைஷ்ணவமாக இந்து மதம் பிரிந்த பொழுது, பெண்ணிய வழிபாடு முறையான சக்தி உதயமானது. பெண்களுடைய வழிபாட்டு முறைகள் மற்றும் பெண்கள் அனைவரும் புகழ், பொருள், வளம், சத்தியம் போன்றவற்றிற்கு நிகரானவர்களாகக் கருதப்பட்டனர். நவீன காலகட்டங்களில் இவை அனைத்தும் எதிர்மறையாக இருந்து வந்துள்ளது. கலாச்சாரம் என்ற பெயரில் ஆண்கள் பெண்கள்மீது வன்முறை, அடக்குமுறை போன்ற பல கொடுமைகளை செய்கின்றனர் என பெண்ணியவாதிகள் கூறுகின்றனர்.

சீக்கிய மதமும் பெண்ணியமும் :

பெண், ஆணுக்கு நிகரானவர் என்று குரு கரன்த் சாஹிப் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. பெண்களை இழிவாக நடத்தக் கூடாது, சுயமரியாதையுடனும், பண்போடும் நடத்திட வேண்டும் என்கிறது.

சீக்கிய மத குருவான குருநானக் பெண்ணைப் பற்றி கூறும்பொழுது, ஒரு பெண்ணிலிருந்து, ஆண் உருவாகிறான். ஒரு ஆண், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவ்வாறு நடக்கும்பொழுது பெண், ஆணுடைய நண்பராகிறாள். பெண்ணின் மூலம் புதிய தலைமுறையை உருவாக்கித் தருகிறாள். ஆனால் அவள் இறந்துவிட்டால், ஆண் இன்னொரு பெண்ணை நாடிச் செல்கிறான், அவளுடன் குடும்பம் நடத்துகிறான். இதனால் பெண்ணை ஏன் தவறாக என்ன வேண்டும். பெண்ணிலிருந்து பல ராஜாக்கள், இளவரசர்கள் பிறக்கிறார்கள். பெண்ணிலிருந்து பெண் பிறக்கிறாள், எனவே பெண்ணில்லாமல் யாரும் இருக்க முடியாது என்று கூறுகிறார்.

சீக்கிய மதங்களில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இருந்தாலும் பெண்களை ஆண்கள் சமமாக கருதுவதில்லை. இதன் விளைவு பெண்களுடைய எண்ணிக்கை ஆணுக்கு நிகராக இல்லை.

மதங்களில் பெண்களின் உரிமை

மதங்களில் பெண்களுடைய நிலையானது மிகவும் பின்தங்கியும் சரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. பெண்களை கவுரவமாக நடத்துவதில் ஒன்றோடு ஒன்று முரண்பாடாகவே இருந்து வருகின்றன.

இந்து மதத்தில் பெண்களுடைய நிலை என்பது மிகவும் கவுரவமானது என்று கூறினாலும், பெண்களுக்கு எதிராகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் இம்மதத்தில் வெவ்வேறு வகையில் சுரண்டப்பட்டும், அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்து மதக் கோட்பாடு அடிப்படையில் சில முரண்பாடுகளை அறிஞர்கள் முன் வைக்கின்றனர்.

பெண் விவாகரத்து செய்யும் உரிமையற்றவர்.

சொத்துரிமை அல்லது பூர்வீகச் சொத்துக்கள்மீது உரிமை கொண்டாட இயலாது.

கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மிகவும் குறைவு. ஒரே சாதியில்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் அனைத்தும் பொருந்தி இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

பெண் வீட்டார் வரதட்சணை மற்றும் பிற சடங்குகளை அதிகளவு செய்திட வேண்டும்.

குழந்தைத் திருமணம் அதிகளவு ஊக்கவிக்கப்படுகிறது.

மறுமணம் செய்வதே தவறு.

விதவைகள் சபிக்கப்பட்டவர்கள், அவளுடைய மகன், மகளுடைய திருமணத்தில் பங்கேற்பதும் தவறு.

இந்து மதத்தில் பெண்களைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தாலும், சொத்துரிமை, மறுமணம், குழந்தைத் திருமண தடை போன்றவை நடைமுறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. எனினும் சொத்துரிமை, மறுமணம் போன்றவை மறுக்கப்பட்ட ஒன்றாகவே இன்றளவும், பின்பற்றப்படுகிறது. குழந்தைத் திருமணம் இன்றும் பல்வேறு சூழல்களில் நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கிறது.

இஸ்லாம் :

இஸ்லாம் மதத்தில் பெண்களுடைய நிலைப்பாடு என்பது மிகவும் பின்தங்கிய நிலையென்றாலும், அதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது. படிப்பறிவு, வேலை வாய்ப்பு, வறுமை போன்ற சமுதாயப் பாகுபாடுகள் இருந்தாலும் பெண்களுடைய நிலையை மிகவும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

இஸ்லாம் பெண்கள், இஸ்ஸாம் ஆண்களைப்போல் சமமான உரிமைகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எந்த விதமான ஏற்றத்தாழ்வும் கிடையாது.

ஆண் விவாகரத்து செய்வதற்கு உரிமையுண்டு என்றாலும், பெண்ணுக்கு சரிசமமான விவாகரத்து உரிமையுண்டு.

சொத்துரிமையுண்டு, பூர்வீக, தார்மீக உரிமைகள் பெண்களுக்கு உண்டு. அவளுக்குத் தேவையான எந்த ஒரு தொழிலை வேண்டுமென்றாலும் தொடங்கலாம். பிற மதங்களில் இவையில்லை என்று கூறலாம்.

இஸ்லாம் பெண்கள் எந்த ஒரு ஆணையும் திருமணம் செய்து கொள்ள உரிமையுண்டு. பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையை பெண்ணுடைய ஒப்புதல் பெயரில்தான் முடிவு செய்திட வேண்டும்.

வரதட்சணை என்பது ஆண்கள், பெண்களுக்குக் கொடுக்க வேண்டியது என்று கூறுகிறது.

இஸ்லாம் விதவைகள் மறுமணத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவளுடைய மறுமணம் என்பது முஸ்லீம் சமூகத்தின் கடமையாகும். இதை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்கின்றனர்.

கலப்புத் திருமணம் இஸ்ஸாம்களிடையே ஊக்குவிக்கப்படுகிறது. இன வேறுபாட்டை குறைக்க மிகவும் சிறந்தது என்று கூறுகின்றனர்.

ஒரு இஸ்லாம் தாய்க்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறது.

கிறிஸ்தவம் :

கிறிஸ்தவ மதம் உலகளவில் பின்பற்றப்பட்டாலும் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விவாதம் நீண்ட காலங்களாக இருந்து வந்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பல்வேறு சுதந்திரங்கள் அளிக்கப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் இவையாவும் பின்பற்றப்படுவதில்லை. பெண்களுடைய நிலை என்று கூறும்பொழுது பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

பெண்களுடைய நிலை என்பது மிகவும் தாழ்ந்ததாகவும், ஆணுக்கு நிகரானவர்கள் கிடையாது என்கிறது.

பிற மதங்களைப்போல் பெண்கள் தங்கள் வழிபாடுகளை தானாகவே செய்து கொள்ளலாம். ஆண், பெண் வழிபாடு என்ற பாகுபாடு கிடையாது.

பெண்கள் துறவிகளாகவும், கன்னியாஸ்திரியாகவும் மாறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

பெண்கள், கணவர்களை மதித்து நடந்திட வேண்டும். அவ்வாறு செய்யும் பெண்கள் மாண்போடும், மதிப்போடும் நடத்தப்படுவார்கள்.

பெண்களுடைய அழகு என்பது ஆடை, அணிகலன், கூந்தல் போன்றவற்றிலிருந்து பெறுவது கிடையாது. உள்ளத்திலிருந்து வரக்கூடிய அன்பு, அடக்கம், அச்சம் போன்றவற்றில் பெறப்படுகிறது.

பெண்கள் திருமணம் செய்யும்பொழுது தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். விதவை, மறுமணம், பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்வது தவறு. தூய்மையானவர்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்கிறது.

பெண்கள் பெற்றோரை மதித்து நடந்திட வேண்டும், பெற்றோரை மதிக்காதவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்கிறது.

பெண்கள் ஆலயங்களில் அமைதியைக் கடைப்பிடித்திட வேண்டும். அதே போல் அங்கு எந்த கேள்வியும் கேட்கக் கூடாது, பேசவும் கூடாது.

பெண்கள் மாதவிடாய் நேரங்களில் யாரும் அவளை தொடக்கூடாது. அவள் பயன்படுத்தும் பொருட்களை தொட்டு விடக்கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது, உடனே குளிக்க வேண்டும், துணிகளை துவைத்திட வேண்டும், இல்லையென்றால் மாலைவரை அவர் தூய்மையற்றவராக இருப்பார்.

ஒரு பெண், ஆண் குழந்தையை ஈன்று எடுக்கும்பொழுது ஒரு வாரம் தூய்மையற்றவளாக இருப்பாள். ஆனால் பெண் குழந்தையை ஈன்று எடுத்தால் இரண்டு வாரங்கள் தூய்மையற்றவளாக இருப்பாள்.

ஆண்கள், பெண்களை ஆளப்பிறந்தவர்கள். பெண்கள் குழந்தை பிறப்பு வலியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக கடவுள் உருவாக்கியுள்ளார் என்கிறது.

பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. ஆனால் வீட்டில் ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என்கிறது.

புத்தமதம் :

புத்தமதத்தில் பெண்களுடைய நிலை என்பது பிற மதங்களைவிட சற்று முன்னோக்கிதான் செல்கிறது என்று கூறலாம். பெண்களை மதிப்போடும், மாண்போடும் நடத்துகிறது. புத்த வழியில் அமைதியை நிலை நாட்டுவதே இதன் கோட்பாடுகளில் ஒன்று.

பெண்களை மாண்போடும், மதிப்போடும் நடத்திட வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு.

பெண்களை ஆன்மிக வழியில் நடத்திச் செல்வதும், வாழ்வில் உயர்வான இடத்திற்கு இட்டு செல்ல வேண்டும். சமுதாய வடிவமைப்பைப் பற்றி எந்தவிதமான பாகுபாடும் இல்லை.

பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது மற்றும் துறவிகளாகவும், ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என்கிறது.

ஆணுக்குப் பெண் நிகரானவர்கள். இதுவே பெண் சமத்துவத்தைப் பற்றி பேசிய முதல் மதமாகும்.

பெண்கள் தங்களுடைய கணவருக்கு எந்த தீங்கும் நினைத்திடக் கூடாது.

பெண்கள் கொடூரமாகவோ அல்லது வன்முறையிலோ ஈடுபடக் கூடாது.

பெண்கள் முதியோரிடமும், பிறரிடத்திலும் அன்பாக இருந்திட வேண்டும்.

அனைவராலும் மதிக்கப்படுபவளாக, மரியாதைக்குரியவளாக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்திட வேண்டும்.

பெண் கல்வி

இன்றைய காலகட்டத்தில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை பெண்களிடத்தில் அளித்து வந்துள்ளது. பெண்ணுக்கு கல்வி பெறுவது அன்று முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களை கண்ட வண்ணம் இருந்து வந்துள்ளது. பெண்கள் கல்வி பெறுவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வந்தது. மதங்கள் பெண் கல்வியை அங்கீகரித்தாலும், பல்வேறு மதங்கள் பெண்கல்வியை மறுத்து வந்துள்ளது. ஆனால் இன்று அனைவரும் கல்வி பயிலலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமும் பெண் கல்வியும் :

இஸ்லாமிய மதமானது பொதுவான கருத்தை வழிமொழிகிறது. அதற்கு ஏற்றார்போல் தன்னுடைய புனித நூலான குரானில் பெண் கல்வியைப் பற்றியும் அதனுடைய கடமைகளைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. ஒரு பெண் ஞானம் பெறுவது கல்வியின் மூலமே. இது ஒரு அடிப்படையான கடமையாகும். ஆண், பெண் என்ற பாகுபாடு அல்லாவிற்கு கிடையாது, கல்வி என்பது பொதுவான செயலாகும். இதன் மூலம் உலக ஞானம் பெறமுடியும் என்கிறார் நபிகள். ஒவ்வொரு இஸ்லாமியப் பெண் மற்றும் இஸ்லாமிய ஆண் ஞானம் பெறுவது கல்வியின் மூலமே. எனவே கல்வி இருவருக்கும் ஒரு அடிப்படையான கடமையாக இருந்து வந்துள்ளது.

வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும்பொழுது பெண்கள் கி.பி. 859ஆம் ஆண்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்தனர். அதில் கரோனி பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. பின்னர் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த ஆயுதத் வம்சம் பெண் கல்விக்கு உதவித் தொகைகள் வழங்கி வந்தது. முகமது நபியின் மனைவியான கத்திஜா கல்வி பெற்று மிகச் சிறந்த பெண் தொழிலதிபராக விளங்கினார். இதற்குக் காரணம் பெண் கல்வியை நபிகள் அதிகளவு ஊக்குவித்தார் என்பதாகும்.

இஸ்லாமியக் கோட்பாடுகள் அடிப்படையில் ஆணும், பெண்ணும் கல்வியறிவு பெறுவது ஒரு அடிப்படையான உரிமை என்றாலும் கல்வி மத கட்டுப்பாடுகளையும், கட்டளைகளையும் சார்ந்தே இருந்து வந்துள்ளது. பெண்கள் பொதுவாக மத அடிப்படையிலே கல்வி கற்க முடியும். குறிப்பாக போதனைகள், மசூதிகளில் பொது இடங்களில் மட்டுமே பயிலும் சூழ்நிலை இருந்துள்ளது. பெண்கள் கல்வி பயில்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. பள்ளிகள் சென்றோ அல்லது கல்லூரிக்குச் சென்று பயில்வது எளிதானதாக இருந்தது கிடையாது என்று அறிஞர்கள் கூறுகின்றார். இன்றைய காலகட்டத்தில் கூட இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மதத்தில் உரிமை கூறி இருந்தாலும் நடைமுறையில் ஆணாதிக்க மனபோக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பெண்களுக்கு இடையூறாக உள்ளது. இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வியறிவை பெற்றுத் தருவதை இஸ்லாமிய ஆண்கள் விரும்புவதில்லை. அதிகம் படித்தால் ஆண்களை கேள்வி கேட்பார்கள். பெண் கேள்வி கேட்பது தவறு என்னும் ஆணாதிக்க மனப்போக்கை இஸ்லாமிய பழமைவாதிகள் கடைபிடிக்கிறார்கள்.

கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கி இருப்பவர்கள் இஸ்லாம்கள்தான். அதிலும் குறிப்பாக இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதில் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். இஸ்லாம் ஒருபோதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாம் என தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக் கூடாது எனக் கருதியே மத பழமைவாதிகள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கின்றனர். பல்வேறு இடங்களில் பெண் கல்வி கற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் பெண்கள்மீது தாக்குதல் நடத்துவதோடு, வன்முறைகளைத் தூண்டியும் விடுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என மத தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெண்கள் கடைகளுக்குச் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தனர். இந்த சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் என்கிற 14 வயது மாணவி பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான பிரச்சாரம் செய்தார். மலாலாவை தலிபான் மதத் தீவிரவாதிகள் சுட்டனர். உயிருக்குப் போராடிய மலாலாவிற்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியது. தற்போது பெண் கல்விப் போராளியாக மலாலா உலகளவில் பிரபலம் அடைந்துவிட்டார்.

அரபு நாடுகளில் மூன்றில் ஒரு பெண் படிப்பறிவு இல்லாதவராக இருக்கிறார். இதில் பாதி பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுவதற்குப் போராட வேண்டி உள்ளது. உலகில் அதிக இஸ்லாம் மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தோனேஷியா, வங்க தேசம், பாகிஸ்தான், அரபு நாடுகளில் பெண் கல்வி மிகவும் குறைவாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆண்கள் 63% மற்றும் இஸ்லாம் பெண்கள் 50% எழுத்தறிவு பெற்றுள்ளனர். பிற மதங்களை ஒப்பிடும்பொழுது இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவில் மிகவும் பின்னடைவைப் பெற்றுள்ளனர். இஸ்லாம்கள் இந்தியாவில் 17 கோடி பேர் உள்ளனர். உத்திர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் அதிகளவில் இஸ்லாம்கள் வாழ்கின்றனர். ஆனால் எழுத்தறிவு என்று பார்த்தால் 35.6% உள்ளது. கேரள மாநிலத்தில் அதிகளவு இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளது. வட மாநிலங்களைப் பொறுத்தவரை ஹரியானாவில் இஸ்லாம் பெண்கள் எழுத்தறிவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தொடக்கக் கல்வியில் இஸ்லாம் பெண்கள் அதிகளவில் படித்தாலும் இடைநிலை கல்வியில் நிறுத்தப்படுகிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.

வறுமை அரசு சலுகைகளில் பாராமுகமான தன்மை.

இஸ்லாம் ஆண்கள் வர்த்தகம், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர தொழில்களில் ஈடுபடுகின்றனர். எனவே இடைநிலைக் கல்வியுடன் இவர்கள் நின்று விடுகிறார்கள்.

இஸ்லாம் பெண்கள் அதிகம் படித்து இருந்தால், படிக்காத ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பது கடினம். இதனால் பெண்கள் இடைநிலைக் கல்வியுடன் நிறுத்தப்படுகிறார்கள்.

இஸ்லாம் பெண்கள் பருவமடைந்த உடன் ஆரம்ப அல்லது தொடக்கக் கல்வியிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள்.

உருது பள்ளிகள் இன்றும் பழமையான கல்வியை போதிப்பதால் நடைமுறையில் உள்ள கல்வி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலவில்லை.

இஸ்லாமியர் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்தாலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.

பெண்கல்வியும் இந்துமதமும் :

பெண் கல்வியைப் பொறுத்தவரை ஆண், பெண் வேற்றுமை பெரிதும் உள்ளது. இந்து மதத்தில் பல பெண் தெய்வங்கள் இருந்தாலும், கல்விக் கடவுளாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். எனினும் பெண்கள் கல்வி கற்பது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இந்தியாவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் 80% பேர். ஆண்கள் மட்டுமே அதிகளவு எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். பண்டைய காலம் முதல் இன்றுவரை பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டே வருகிறது. இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தம், ஜைனம் மற்றும் சிறுபான்மையான மதங்களான சீக்கியம் போன்ற மதங்களில் பெண்கள் அதிகளவில் படித்தவர்களாகவும், எழுத்தறிவு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள பெண்கள் தொடக்கக் கல்வியை 70% படிக்கிறார்கள். ஆனால் அதற்குமேல் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைந்து விடுகிறது.

பெண்ணுக்குக் கல்வியென்பது மிகவும் அவசியமானது என்று இந்து மதம் கூறுகிறது. ஆனால் கல்வி கற்பது முக்கியமற்றதாகவும், அது எப்பொழுதும் இரண்டாம் இடத்தில்தான் பெண்களுக்கு வைக்கப்பட்டு இருந்தது. பெண் ஆண்களைப்போல் பள்ளிகளுக்குச் சென்று படிக்க முடியாது. பெண்கள் வீட்டினை பராமரிப்பது, பிற சடங்குகள் செய்வதில் திறம்பட இருந்ததாக வேதங்கள் கூறுகிறது. பெண்கள் திருமணம் செய்வதற்குமுன்பு வீட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். சமையல், கைவினைப் பொருட்கள், வீடுகளை பராமரித்தல், அழகு, கலை போன்ற 64 துறைகளில் தேர்ச்சி பெற்றவளாக இருந்தால் மட்டுமே பெண், கல்வி அறிவு பெற்றவராக கருதப்பட்டனர்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் கல்வியறிவு பெறுவதில் பின்தங்கியே உள்ளனர். இதற்கு இந்து சமூகம் இன்றும் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வருகிறது. சில மதங்களில் பெண்களுக்கு உள்ள அடிப்படை சுதந்திரம்கூட இந்து பெண்கள் பெறுவதில்லை. இந்து மதத்திலிருந்து பிரிந்த மதங்கள் பெண்களுடைய கல்வி, எழுத்தறிவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. தென் இந்தியாவில் இந்துப் பெண்கள் அதிகளவில் எழுத்தறிவு மற்றும் கல்வி பெற்று இருக்கிறார்கள். இதற்குக் காரணம் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பாகும். வட இந்தியாவில் எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் இந்துப் பெண்கள் அதிகளவு கல்வி பெறுவதை பெற்றோர்களே விரும்புவதில்லை. இதற்குப் பழமைவாதக் கருத்தே அடிப்படைக் காரணமாக உள்ளது.

வட இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கப் பஞ்சாயத்து என்ற பெயரில் பெண் கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. நகரங்களில் பெண்கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், கிராமப்புறங்களில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வறுமை போன்ற சமூக பிரச்சினைகள், மூட நம்பிக்கைகள் போன்ற முரண்பாடான கருத்துகளால் பெண்கல்வி முழுமைபடாமல் இருந்து வருகிறது.

ஆங்கிலேயர்கள் கல்வியில் செய்த மாற்றங்கள் மற்றும் இந்து மதத்தில் பெண் கல்வியில் இருந்த முரண்பாடான கருத்துகளால் பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஆரம்பித்தனர். தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு இந்து மதத்தில் கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் ஏற்பட்ட பிரச்சினைகள் சாதி பிரச்சினைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு கல்வி, மருத்துவம், நல உதவிகள் பெறுவதற்கு பலர் கிறிஸ்தவத்தை நாடினர்.

இவர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சிறுபான்மையான கல்வி நிறுவனங்களை கிறிஸ்துவ மதம் தொடங்கி கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை செய்து வந்தனர். இவர்களை தக்கவைத்துக்கொண்டு கிறிஸ்தவத்தை நாடு முழுவதும் பரப்புவதே இதன் பெரும் நோக்கமாகவே கொண்டனர்.கிறிஸ்தவ மதமும், பெண் கல்வியும்

கிறிஸ்தவ மதம் பெண் கல்வியைப் பற்றிக் கூறும்பொழுது, பெண்கள், ஆண்களுக்குக் கீழ்ப்படிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் பெண் கல்வியைப் பொறுத்தவரை 76% எழுத்தறிவு பெற்று இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவ மதம் அதிகளவில் கல்வி, சேவை, மருத்துவம், நலத்திட்டங்களில் பெருமளவில் ஏழை, எளிய மக்களுக்கு செய்து கொடுத்ததே ஆகும்.

கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் ஆண், பெண் பேதமின்றி கல்வி கற்றனர். பல்வேறு உதவிகளால் இருபாலரும் கல்வி கற்க முடிந்தது. கிறிஸ்தவ மதத்தில் பிற சிறுபான்மை மதங்களைவிட ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். பைபிளைப் பொறுத்தவரை பெண் கல்வியைப் பற்றி முரண்பாடான கருத்து இருந்து வந்துள்ளது. பெண்கள், கல்வியறிவைப் பெற வேண்டுமென்றால் ஒன்று கணவன் மூலமாகவோ அல்லது பிற ஆணிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் சர்ச்சுகளில் பேசக் கூடாது, மதம் சார்ந்த எந்த கேள்வியையும் எழுப்பக் கூடாது. வழிபாடுகளின்பொழுது கேள்விகள் கேட்கக் கூடாது. அவ்வாறு சந்தேகங்கள் எழுந்தால் தங்களுடைய கணவரை கேளுங்கள் என்கிறது.

பெண்கள் எப்பொழுதும் ஆணுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும், அவரே கடவுள் அருளைப் பெற்றவர். ஒரு ஆணிலிருந்துதான் பெண் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆண் அதிகம் தெரிந்தவனாக சொல்லப்படுகிறது. எந்தவிதமான, சந்தேகங்கள் எழும்பொழுதும் தன்னுடைய கணவனிடமோ அல்லது ஆண் தலைவர்களிடமோ கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. ஒரு பெண் பேசுவது, கேள்வி கேட்பது தவறு, இது மதத்திற்கே ஒரு அவமதிப்பு என்கிறது.

கிறிஸ்தவ மதத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை பெண் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மத மாற்றத்தின் மூலம் ஒரளவு கல்வியறிவு பெற்று இருந்தாலும் அவை முழுமை பெற இயலவில்லை என்னும் நிலைதான் இன்றும் உள்ளது. எனினும் ஓரளவிற்கு பொருளாதார மாற்றத்தை பெண்களுக்கு வழங்கியுள்ளது என்று கூறலாம்.

பிற மதங்களில் பெண் கல்வி :

பிற மதங்களிலும் பெண் கல்வி பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ஜெயின மதத்தில் 90% கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்து மத முரண்பாடுகளால் இம்மதத்திலிருந்து வெளியேறியவர்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள். சீக்கிய மதத்தில் 64%, பவுத்த மதத்தில் 70%, இஸ்லாம் 50%, கிறிஸ்தவத்தில் 76% என பெண்களுடைய கல்வி நிலை உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

பெண் கல்வியைப் பொறுத்தவரை இந்துக்கள் தொடக்கக் கல்விக்கு (75%) பெண்களை அனுப்புகிறார்கள். இடைநிலை, மேல்நிலை கல்விக்குச் செல்லும்பொழுது குறைவானவர்களே கல்வி பயில்கின்றனர். பிற மதங்களில் 90% பெண்களை தொடக்கக் கல்விக்கு அனுப்பினாலும் இதிலும், உயர்கல்வி செல்லும்பொழுது குறைவான பெண்களே செல்கின்றனர்.

எழுத்தறிவு பெறாத பெண்கள் என்று பார்த்தால், இந்தியாவில் சுமார் 59.5% இஸ்லாம் பெண்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்து மதத்தில் 42.2%, கிறிஸ்தவத்தில் 22.7%, ஜைனத்தில் 10%, பவுத்தத்தில் 30% உள்ளனர்.

பெண் கல்வி மூலம் பல பெண்கள் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். சில மத எதிர்ப்புகளையும் கடந்து, பெரிய நிலைக்கு வருகிறார்கள் என்பது உண்மை. மதங்களில் முரண்பாடான கருத்துக்களை நீக்க வேண்டும். பெண் சமத்துவம் என்பது கல்வி மூலமே சாத்தியம் என்று அனைவரையும் உணரவைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மதமும் ஆடைகளும்

மதம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை பல்வேறு வகையான ஆடைகள் பின்பற்றப்படுகிறது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தை மிகைபடுத்தி காட்டுவதற்காகவும், ஆடை, சடங்குகள், வழிபாடு போன்றவை பெரிதும் அமைகிறது. மதம் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். விருப்பமான ஆடை அணிவதற்கு மதம் எந்தவிதமான சுதந்திரத்தையும் பெண்களுக்கு அளித்ததில்லை. மாறாக அடக்குமுறையையும், ஆணாதிக்க மனப்போக்கையும் தந்துள்ளது. இன்றும் பல்வேறு மதத் தலைவர்கள் கூறும் ஒரு வாதம் பெண்கள் உடுத்தும் ஆடையால் பெருமளவு வன்முறை நடக்கிறது. பெண்கள் கண்ணியமான ஆடைகளை அணியுங்கள் என்று பெண்கள்மீது ஆடை கட்டுப்பாட்டை விதிக்கின்றனர். பல்வேறு இடங்களில் உடைக்கு எதிரான வன்முறையும், எதிர்ப்பும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இஸ்லாமிய பெண்களும் ஆடையும் :

இஸ்லாமிய பெண்களைப் பொறுத்தவரை ஆடைக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. ஆடையின்மீது அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. இஸ்லாமிய பெண்களுக்கு ஆடை உடுத்துவதில் சமத்துவம் கிடையாது. ஆணாதிக்க மனப்போக்கின் காரணமாக கட்டுப்பாடுகளான சமூகமாகவே இஸ்லாம் பெண்கள் பெரிதும் நடத்தப்படுகின்றனர். ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும்பொழுது அவர்கள் மீதான தாக்குதல் அதிகப்படியாக நடத்தப்படுகிறது. பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இவை பின்பற்றப்பட்டு வருகிறது.

பெண்கள் எந்த ஆடையை அணிந்தாலும் அதனுடன் புர்கா அல்லது நிக்காப் என்னும் ஆடையை அணிய வேண்டும். இந்த ஆடை தலைமுதல் கால் வரை முழுவதும் மூடப்பட்டு இருக்க வேண்டும். கைகள் மற்றும் கால்கள் மட்டுமே வெளியே தெரியவேண்டும். முகம் முழுவதும் மூடியும் பார்ப்பதற்கு மட்டும் ஒரு சிறிய துவாரம் இருக்கும். இஸ்லாமியக் கோட்பாட்டின் அடிப்படையில் பெண்கள் தன்னுடைய முகத்தை அல்லது உடலை கணவருக்கு மட்டும் காட்டவேண்டும். பிற ஆண்கள் பார்க்கக்கூடாத வகையில் புர்கா என்னும் ஆடை அணிய வேண்டும். பெண்கள் கண்ணியமான முறையில் ஆடை அணிந்திட வேண்டும். ஆபரணங்கள், நகைகள் போன்றவை வெளியே தெரியாதவாறு ஆடை அணிந்திட வேண்டும் என்கிறது.

புர்கா ஆடையை அறிவியல் பூர்வமாக பார்க்கும்பொழுது அன்றைய ரோமானிய ஆப்பிரிக்க டெர்முலியன் கிறிஸ்தவர்கள் புர்கா அணிந்தனர். இந்த ஆடை பாலைவன மணலிருந்தும், பாலைவன புயலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக பின்பற்றப்பட்டு வந்தன என்கின்றனர். அரபு மற்றும் பெர்ஷிய நாட்டுப் பெண்களால் புர்கா பெரிதும் உடுத்தப்பட்டதால் இதை இஸ்லாமிய பெண்கள் பின்பற்ற மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது.

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி புர்கா அணிவது ஒரு மரபு. மனிதன் உருவாக்கிய ஹீஜாப்பில் ஆண், பெண் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் ஆண்கள் ஆடை கட்டுபாடுகளை பெரிதும் பின்பற்றுவதில்லை. இவை பெண்கள்மீது மட்டுமே திணிக்கப்பட்டு வருகிறது என்று கூறலாம். பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் புர்கா அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புர்கா அணியவில்லை என்றால் கைது செய்தல், தாக்குதல், கவுரவக் கொலைகள் போன்றவை நடத்தப்படுகிறது. இவற்றிற்குப் பயந்து பல்வேறு பெண்கள் புர்கா அணிகிறார்கள். எனினும் புர்கா அணிவது அவர்களுடைய விருப்பம் மற்றும் உரிமை என்கின்றனர். இவ்வாறு இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடையின்மீது எந்தவிதமான கட்டுபாடுகளும் கிடையாது. புர்கா அணிவது அவர்களுடைய உரிமை சார்ந்தது என்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் பெண்கள் கட்டாயமாக நிக்காப் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதித்துள்ளனர். இது மீறப்படும்பொழுது இவர்கள்மீது வன்முறை தாக்குதல் நடத்தப்படுகிறது. தண்டனைகளிலிருந்து பெண்கள் தப்புவதற்காக இந்த ஆடைகளை ஏற்றுக் கொள்கிறார்கள். துருக்கி நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பெருமளவு புர்கா அணிவதில்லை. மதச்சார்பின்மை கொள்கையால் ஆடை கட்டுப்பாடு பெண்களுக்கு இல்லாமல் போனது.

துருக்கி மற்றும் துனிஷிய நாடுகளில் பள்ளிகள், அலுவலகங்கள், பல்கலைக் கழகங்களில் பெண்கள் ஹீஜாப்கள் உடுத்துவதை தடை செய்துள்ளது. சவூதி அரேபியா, ஈரான் நாடுகளில் ஆடைக் கட்டுபாடுகளை தளர்த்தவில்லை. இதனை கண்காணிக்க மதக்காவலர்களை நியமித்து ஆடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள்மீது கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

மேலை நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதில் உள்ள பிரச்சினைகளை இஸ்லாமிய போபியா என்று கூறுகின்றனர். இதில் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை, பல்வேறு நாடுகள் சந்தித்த வண்ணம் இருக்கிறோம் என்கின்றனர். பிரான்ஸ், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் முகம் முழுவதும் மூடும் புர்காவிற்கு தடை விதித்துள்ளது. பல்வேறு அரசு உதவிகளை பெறுவதற்கு பெரும் தடையாக புர்கா உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவை, அடையாளப்படுத்துவதில் மிகவும் கடினமாக உள்ளது. ஓட்டுனர் உரிமை வழங்குவதிலும் மற்றும் பல்வேறு உரிமங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது என்கிறது. பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து மறைந்துகொள்ள இது உதவுகிறது. இதனால் பல நாடுகளில் புர்காவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

புர்கா அணிவதால் பல்வேறு உடல் பாதிப்புகளை இஸ்லாமிய பெண்கள் சந்திக்கின்றனர். வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது, தோல்புற்று நோய், மார்பகப் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பிரிட்டிஷ் ஆய்வு கூறுகிறது. புர்கா அணிவது இஸ்லாமிய பெண்களுடைய மரபு, அவர்களுடைய உரிமை என்று பலரும் கருதுகின்றனர். உலகளவில் மேற்கொண்ட ஆய்வில் 33% முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவது தவறு என்கின்றனர். அதே சமயத்தில் பல பெண்கள் புர்காவை எதிர்க்கின்றனர்.

இந்து மதத்தில் ஆடை :

இந்து மதத்தைப் பொறுத்தவரை வேத காலத்து கலாச்சார முறையே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் மிகப்பெரிய பங்கினை சேலை ஆற்றி வருகிறது, பெண்களுடைய பாரம்பரிய ஆடையாகவே இன்றளவும் சேலை பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணங்களில் தொடங்கி பல்வேறு சுபகாரியங்கள், துக்கம் போன்றவற்றிற்கு சேலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் சேலை பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை ஒவ்வொரு மாநிலத்திற்குத் தகுந்தவாறு மாறுபடுகிறது என்று கூறலாம். ஒரு இந்து பெண்ணை அடையாளம் காண்பது எளிது. நெற்றியில் சிகப்பு பொட்டு வைப்பதும், குங்குமம் இடுவதும், பெண்கள் திருமணம் ஆனவர்களா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். இந்துப் பெண்களைப் பொறுத்தவரை பருவமடைந்தஉடன் காலில் கொலுசு போடுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு அவர்கள் கூறும் விளக்கம் காத்து, கறுப்பு பெண்ணை அண்டாமல் இருக்கும் என்கின்றனர். இதேபோல் திருமணமானவர் என்று காட்டுவதற்கும் மெட்டி பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆடையுடன் பெருமளவு நகைகளை சேர்த்துக் கொள்வதும் அழகுபடுத்தி காட்ட வளையல்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

உலகமயமாக்கல் கொள்கையால் பல்வேறு வகையான மேற்கத்திய ஆடையை இந்துப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெண்கள்மீது தாக்குதல் நடத்துகின்றனர். பெண்ணுக்கு ஏற்ற ஆடை சேலை, சோலி. இதனையே பயன்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராடுகின்றனர். பெண்கள் மேற்கத்திய உடைகளை அணிவதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாகக் கூறி அவர்களுக்கு எதிராக சிலர் போராடுகின்றனர்.

கிறிஸ்தவ பெண்களும் ஆடையும்:

கிறிஸ்தவ மதத்தில் ஆடைக்கு என்று எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஆடை என்பது அவர்களுடைய விருப்பம், எதை வேண்டுமென்றாலும் உடுத்தலாம். ஆனால் அநாகரிகமாகவோ அல்லது கண்ணியமற்ற முறையிலோ ஆடையை உடுத்தக் கூடாது என்கிறது. இதேபோல் ஆதாம், ஏவாள் காலத்தில் நிர்வாணமாக வாழ்ந்தனர். எப்போது பாவம் செய்தார்களோ அன்று முதல் ஆடையின் தேவையை உணர்ந்தார்கள் என்று பைபிளில் கூறப்படுகிறது.

ஆடைக் கட்டுப்பாடு கன்னியாஸ்திரிக்கும், போதகர்களுக்கும் மட்டும் பொருந்தும் என்று கூறுகிறது. இதர பெண்களைப் பொறுத்தவரை எந்தவிதமான ஆடைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. புதுமைக்கு தகுந்தவாறு ஆடைகளையும் கிறிஸ்துவ பெண்கள் மாற்றி வருகிறார்கள்.

சீக்கிய பெண்களும் ஆடைகளும் :

சீக்கிய பெண்களை பொறுத்தவரை ஆடை சுதந்திரம் இருந்தாலும், இவர்கள் பழமையான ஆடைகளை பெரிதும் விரும்புகிறார்கள். சீக்கியர்கள் பொதுவாகவே தலைப்பா கட்டுவது வழக்கம். சீக்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் பெருமளவு தலைப்பா கட்டுகிறார்கள். இன்று இவர்கள் மாற தொடங்கிவிட்டனர். நவீன மேற்கத்திய ஆடைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சீக்கியர்கள் அனைவரும் தலைப்பா கட்டுவது கிடையாது.

சீக்கிய பெண்கள் சல்வார்கமிஸ், மேற்கத்திய ஆடைகள், சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை உடுத்துகிறார்கள். எந்தவிதமான எதிர்ப்பையும் சீக்கிய ஆண்கள் தெரிவிப்பதில்லை. ஆடையைப் பொறுத்தவரை பெண்களுடைய விருப்பம். பெண்கள் மற்றவர்கள் மதிக்கும் வகையில் ஆடை உடுத்திட வேண்டும் என்று மட்டும் கருதுகின்றனர்.

புத்த பெண்களும் ஆடையும் :

புத்த மதத்தில் பெண்கள் ஆடை அணிவது பற்றி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆடை என்பது அவரவர் நாட்டிற்குத் தகுந்த மாதிரி மாற்றியமைத்து கொள்ள வேண்டும். எந்த ஆடை அவர்களுக்கு பொருத்தமாக உள்ளதோ அதனை அணியலாம். புத்த பெண்கள் புத்த முத்திரை பொறிக்கப்பட்ட ஆபரணங்களை கழுத்தில் போட்டுச் செல்வார்கள்.

புத்த துறவிகளைப் பொறுத்தவரை ஆடைக் கட்டுபாடு உள்ளது. தலையை மொட்டையடித்து, ஆரஞ்ச் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். செருப்பு அணியாமல் வெறும் பாதங்களில் நடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

வாக்குரிமை

ஆண்களுக்கு மட்டுமே வாக்கு அளிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. பெண்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்கிற இயக்கம் பிரான்சு நாட்டில் (1780-90) தோன்றியது. அன்டோனி கண்டர்செட் (Antoine Condorcet), ஒலிம்ப் டீ கௌக்ஸ் (Olympe de Gouges) ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். தேர்தலில் பங்கேற்கும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். உலகம் முழுவதும் ஆங்காங்கே சமூக சீர்திருத்தவாதிகள் போராடினர்.

சுவீடன், பிரிட்டிஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாகாணங்களில் வாக்களிக்கும் உரிமையை 1860ஆம் ஆண்டுகளில் பெற்றனர். பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து நாடு, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக 1893இல் சிறப்புற்றது. ஆஸ்திரேலிய குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895இல் வாக்குரிமை பெற்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன் முதலாக வாக்களிக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவில் 1919இல் தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் படித்த மற்றும் சொத்து உள்ள பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் என்பதால் மிகச் சிலரே வாக்களித்தனர்.அனைத்து நாடுகளிலும் பெண்கள் போராடியே தங்கள் வாக்குரிமையை பெற்றனர். பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமை என ஐ.நா. அமைப்பு 1979இல் தனது அறிக்கையில் கூறியது. இருப்பினும் சில நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில்தான் பூட்டான் நாட்டில் பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளர்களாக போட்டியிடும் உரிமையைப் பெற்றனர்.

பெண்களும் சொத்துரிமையும் :

பெண்களுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. உலகளவில் பெண்களுக்கு என்று 1% மட்டுமே சொத்துக்கள் உள்ளன. இதுவும் பல்வேறு போராட்டங்கள் மூலமே சாத்தியமான ஒன்றாக இருந்து வருகின்றன. உலகளவில் ஆணுக்கு சமமான விகிதத்தில் பெண்களுக்கு சொத்தில் பங்கில்லை என்று கூறலாம். ஒரு சில பெண்கள் மட்டுமே சொத்துக்களை வைத்துள்ளனர். வணிகம் செய்பவர்கள், தொழிற்சாலைகள், பங்குச் சந்தை, ஊடகம், நடிகைகள் போன்றவர்கள் மட்டுமே சொத்துக்களை தங்கள் பெயரில் வைத்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் பல போராட்டங்கள் நடத்திய பிறகுதான் சொத்துரிமை கிடைக்கும் வாய்ப்பினை பெற்றனர். உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் பெண்களை ஒப்பிடும் பொழுது இந்திய பெண்களுக்கு சமமான சொத்துரிமை என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. ஆண்களைவிட மிகவும் குறைவான அளவில் சொத்துரிமை வழங்கப்படுகின்றன. சொத்துரிமையைப் பொருத்தவரை வீட்டில் தொடங்கி மதம்வரை அனைவரும் மாறுபட்டே இருக்கிறார்கள். பல்வேறு மதங்களில் தனிச்சட்டங்கள் மூலம் சொத்துரிமை நிர்வகிக்கப்படுகிறது. தனிச்சட்டத்தின் அடிப்படையிலேயே பெண்களுடைய சொத்துரிமையும் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவிர மதத்திற்குள்ளே உள்ள பல்வேறு மத குழுக்கள் கலாச்சார ரீதியாகவும், பழக்க வழக்கங்களால் பெண்களின் சொத்துரிமையைத் தீர்மானிக்கின்றனர்.மண்ணிலும் பாதி, விண்ணிலும் பாதி. - மாசேதுங்

இந்து, சீக்கியம், பவுத்தம், ஜைனம் போன்றவை ஒருங்கிணைந்த சொத்துரிமை சட்டத்தை 1956ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ளது. அதேபோல் கிறிஸ்தவம் தனிப்பட்ட சட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இஸ்லாம் மதம் தன்னுடைய சொத்துரிமை பற்றிச் சரியாக குறிப்பிடவில்லை. பழங்குடியின பெண்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் மூலம் சொத்து நிர்வாகிக்கப்படுகிறது. மதச் சட்டத்தின் அடிப்படையிலேயே பெண்களுக்கு சொத்துரிமை என்பது வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை கிடையாது. பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே சொத்து கிடைக்கும் என்கிற நிலை உள்ளது.

இந்து பெண்களின் சொத்துரிமை :

இந்து பெண்களுக்குச் சொத்துரிமை என்பது இன்றளவும் மறுக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தாலே பாவமாக பார்க்கும் வகையில் தான் மதமும், மனுவிலும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தாலே அதிக வரதட்சணை வழங்க வேண்டும். இந்த நிலையுள்ளதால் பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றன. இதற்கு முன்னோடியான மாநிலமாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்றவை இடம்பெற்று வந்துள்ளது.

பெண்களுக்கு என்று எந்தவிதமான சொத்துகளும் கொடுக்கக் கூடாது என்று மனுவில் கூறப்படுகிறது. மாறாக 8 வயதில் பால்ய விவாகம் செய்யும்பொழுது வரதட்சணையாக பொருட்களை வழங்கலாம். அதற்குப் பதிலாக தந்தையின் சொத்து அல்லது பூர்வீகச் சொத்தில் சொந்தம் கொண்டாட இயலாது. பெண்களுக்கு சொத்தில் பங்களிப்பது ஒரு கெட்ட செயலாகவும், உலகமே அழிந்துவிடும் என்று நம்பினர். நேருவின் ஆட்சிக் காலத்தில் ‘ஹிந்து கோடு பில்’ (Hindu Code Bill) டெல்லியில் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.

இப்படியொரு செய்தி நாடு முழுவதும் பரவியதும் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மசோதாவை தாக்கல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல்வேறு இந்து அமைப்புகள் இந்தியாவில் போராட்டங்களை நடத்தினர். பல்வேறு இடங்களில் பெண்களே எங்களுக்கு சொத்தில் பங்கு வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி பெண்களுடைய தர்மத்தை காப்பாற்று என்று பெண்கள் தீர்மானம் போட்டனர்.

இந்த மசோதாவிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களைப் போட்டு டெல்லிக்கு தந்தி அனுப்பும் போராட்டங்களும் நடந்து வந்தன. மறுபுறம் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டும், அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்று பல முற்போக்கு அமைப்புகள் போராடின. இதன் காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்து மத வாரிசுகள் சட்டம் :

இந்து மத வாரிசுகள் சட்டம் 1956 இல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமே பெண்களுக்கு அதிகாரபூர்வமாகவும், சீரான சட்டமாகவும் பெண்களுக்கு அமைந்திட்டது. இந்து மதம் பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூகமாகவே இருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிட முன்வந்தது.

இந்து மத பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1937இல் வந்துள்ளது. அதில் விதவைகளுக்கு சொத்துரிமை கிடையாது. ஆனால் 1956இல் வந்த சட்டமானது விதவைகளுக்கு சொத்துரிமையை முதன் முதலாக வழங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் சார்ந்த சட்டமும் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து இந்து மத குழுக்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பாகும்.

இதன் அம்சங்கள்:

1. பெண்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தளவு சொத்து உரிமைகள் முழுமையான ஒன்றாக மாற்றப்பட்டது.

2. விதவை பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும் சொத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

3. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் வாரிசுகள், ஒரே நேரத்தில் எல்லா சொத்துகளில் பங்குகொள்ள முடியும் என்னும் நிலை அறிமுகப்படுத்தப்பட்டது.

4. மிட்டாக்ஷாரா அடிப்படையில் உள்ள சொத்துகள் அனைத்தும் இந்து சட்டத்தின்கீழ் செல்லும். ஆனால் பெண் வாரிசுகள் இருந்தால் அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு. எந்த காரணத்தாலும் அவர்களை புறக்கணிக்கக் கூடாது.

5. மறுமணம், மதமாற்றம் போன்ற காரணங்களைக் கூறிச் சொத்தில் பெண்களுக்கு பங்கில்லை என்று மறுக்க முடியாது.

6. கருவில் உள்ள குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் அவர்களுக்கும் சொத்தில் பங்குண்டு.

இந்து பெண்களுக்கு திருமணத்தின்பொழுது சீதனம் வழங்கப்பட்டது. அவை மட்டுமே பெண்களுடைய சொத்தாக இருந்தது. ஆனால் இந்து மத வாரிசுகள் சட்டம் 1937இல் வந்த பிறகு ‘குறைந்தளவே சொத்தில் பங்கு’ என்று கூறியது. இது பிரிவு 14ன் கீழ் முழுமையான சொத்துரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்று, “சுப்ரீம் கோர்ட் வி. துலஸ்லாமா Vs வி.சேஷாரெட்டி வழக்கில் பிரிவு 14 (1) (2) இந்து மத வாரிசுகள் சட்டத்தின் கீழ் பெண்களுடைய சொத்துரிமையைப் பற்றி கூறியுள்ளது.”

இந்த சட்டங்கள் மேலும் மறுஆய்வுக்கு உட்பட்டு 2005ஆம் ஆண்டு இந்து மத வாரிசுகள் சட்டம் புதுப்பிக்கப்பட்டது. ஆண், பெண் இருவருக்கும் சொத்தில் சரிபாதியான பங்குண்டு என்று பல்வேறு சட்டத்திருத்தங்களுடன் வெளிவந்துள்ளது. இந்தியாவில் பெண் தலைமையான குடும்பங்கள் 20% முதல் 35% உள்ளனர். ஆனால் இவர்களுக்கு சொத்தில் பங்கு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

இஸ்லாமிய பெண்கள் சொத்துரிமை :

இந்திய இஸ்லாம்கள் இரண்டு வகையான பிரிவுகளைச் சார்ந்துள்ளனர். இதில் ஷியா மற்றும் சுன்னத் இவற்றில் அடங்கும். சுன்னத் பிரிவு இந்தியா முழுவதும் பெரிதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் நான்கு உட்பிரிவுகளை கொண்டு இயங்கி வருகிறது. அதில் ஹானாபிஸ், ஷாபிஸ், மாளிக்ஸ், ஹன்பாலிஸ் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் அதிகளவில் ஹானாபிஸ் உள்ளனர். ஷியா மற்றும் சன்னி சட்டம் அதிகளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டங்கள் இதற்கு முன்பு ஹனாபி சட்டமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

1937 வரை இஸ்லாம் சட்ட மரபுகள் அடிப்படையில் சொத்துகள் பிரிக்கப்பட்டன. பல்வேறு ஏற்றத்தாழ்வுகளால் சரியான நீதி, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டதால் இதற்கு என்று ஒரு சட்டம் உருவாக காரணமாகிவிட்டது.

1937 இல் ஷரியத் சட்டம் கொண்டுவந்தபொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாம்கள் இந்த சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்பட்டனர். இதில் தனி நபர், சொத்துரிமை சம்மந்தப்பட்ட விசயங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. இந்த சட்டத்தில் எந்தவிதமான ‘சீர்திருத்தமோ’ அல்லது ‘குறியீடுகளோ’ மாற்றம் செய்யவில்லை. மாறாக ஆணாதிக்க சிந்தினையுடன் கையாண்டு வருகின்றன.

இந்து வாரிசு சட்டங்களிலிருந்து, இஸ்லாமிய வாரிசு சட்டங்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதில்,

(i) குரான் சில தனிநபர்களுக்கு சொத்தில் பங்கினை உறுதியளிக்கிறது.

(ii) சொத்தில் பங்கு என்னும் உரிமை கருவில் உள்ள குழந்தைக்கும் பொருந்தும்.

(iii) 1/3 பங்கு சொத்துகளை உயிலாக சொத்துக்காரர் எழுதி வைக்கலாம்.

இஸ்லாமிய பரம்பரை சட்டத்தின்கீழ் பெண்களுடைய சொத்துரிமை பற்றி சில மரபுகளை பின்பற்றுகிறது. இதில்,

(i) கணவன் அல்லது மனைவி ஒரே வாரிசுகளாக கருத வேண்டும்.

(ii) பெண்கள் மற்றும் உடன்பிறந்தோர் சொத்தில் பங்குகோர தகுதியானவர்கள்.

(iii) பொது விதியின் அடிப்படையில் பெண்களுக்கு, சொத்தில் ஒரு பங்கினை ஆணுக்கு நிகராக வழங்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மரபுகள் அடிப்படையில் இறந்தவரின் சொத்தில் சமமான பங்குள்ளது. எனினும் ஆணின் சொத்தில் பாதி வழங்கப்படும். (.கா) தங்கை மற்றும் அண்ணன் இருவருக்கும் சொத்தில் பங்குண்டு. எனினும் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் சொத்து வழங்கப்படுகிறது.

முகமதியன் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு இஸ்லாம் வாரிசும் உறுதியான சொத்து பகிர்வினை மரபு உரிமைகள் மூலம் அறியப்படுகிறது. அதிகார பகிர்வு உரிமையின் மூலம் ஒருவர் இறந்தபிறகு சொத்தில் பங்கினை பற்றி முகமதியன் சட்டம் விளக்கமளிக்கிறது. எனவே பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் அல்லது காப்பாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்து என்று எந்த வித்தியாசமும் இல்லை என்கிறது.

இதேபோல் ஹனாபி சட்டங்களில் பெண்களுக்கு உள்ள சொத்துரிமைகளைச் சொல்கிறது. ஹனாபி சட்டமானது வாரிசு முறைகளை ஏழு வகையாகப் பிரிக்கிறது. மூன்று முக்கியமானவையாகவும், நான்கு துணை ஒப்பந்தங்களாகவும் சேர்த்துள்ளது. மூன்று முக்கியமான ஒப்பந்தங்கள் குரானிக் வாரிசு முறையைப் பற்றியும், ஆண் பரம்பரையின் மூலம் வாரிசு ஒப்பந்தம் மற்றும் கருப்பை வாரிசுகள் ஒப்பந்தம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

குரானிக் வாரிசு சட்டப்படி கணவன், மனைவி இருவருமே முதன்மை வாரிசுகள். இவர்களை யாரும் பிரிக்க இயலாது. இருவரில் யாரையும் ஒதுக்கிவிட முடியாது. தங்களுடைய சொத்தின் பங்கினை மனைவிக்கு சரியாக ஒதுக்க வேண்டும். ஆனால் கருவில் குழந்தைகள் இருந்தால் சொத்தின் பங்கினை குறைக்கவும் செய்யலாம். தந்தை மற்றும் சகோதரிகள் தவிர மற்றவருக்கும் குரானிக் வாரிசு சட்டத்தின்படி சொத்தில் பங்குண்டு.

ஒருவர் இந்த சட்டத்தின்கீழ் தானாகவே சொத்திலிருந்து விலகிக் கொண்டால், இது பிறரையும் பாதிக்கும். தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள் உயிருடன் இருக்கும்பொழுது, தந்தை இரண்டு சகோதரிகளுக்கு பொறுப்பு ஏற்பதில்லை. எனினும் தாயின் 1/6 பங்கு சொத்தில் உரிமை கொண்டாட முடியும்.

வகுப்பு II (Class II) இதில் ஆண்கள் I (Group I) சொத்தில் உரிமையுண்டு, பெண்கள் II (Group II) மற்றொரு ஆண் வழி உறவினருக்கும் உரிமை கோர முடியும், குழு III (Group III) மற்றொரு உறவினர் மூலம் சொத்தில் உரிமை கோர முடியும்.

ஹலாடு சட்டத்தில் ஆண் குழந்தைகள், மகளின் மகன், தந்தை, சகோதரர், தந்தைவழி மாமா, அவருடைய மகன் போன்றவர்கள் இந்த சொத்தில் பங்கு கோரலாம். இவ்வாறு ஹலாடு சட்டத்தில் ஆண்கள் அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். இரண்டாவது பெண்கள் நான்கு விதமாக பிரிக்கப்படுகிறார்கள். பெண்கள், ஆண் உறவினர்களுடன் சமமாக இருக்கும் பொழுது, மகள் (மகன்), மகனின் மகள், சிறியவர், பெரியவர் என்ற ஏற்றத்தாழ்வு மூலம் பெண்களுக்கு சொத்து பிரிக்கப்படுகிறது.

இன்றளவும் இஸ்லாமிய பெண்கள் சொத்தில் சரிசமமான பங்கீனை பெற முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் போதுமான கல்வியறிவு இல்லாமை, ஆணாதிக்க மனப்போக்கு, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே. மக்கள்தொகையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தாலும் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வியறிவு, வேலை வாய்ப்பு, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது. பல இஸ்லாமிய பெண்கள் கல்வியறிவு பெறாத காரணத்தால் எளிதில் இவர்கள், ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள். இதன் மூலம் ஆணாதிக்க மனப்போக்கிற்கு இவர்கள் ஆளாகின்றனர்.

கிறிஸ்தவ, பார்சிய பெண்களும் சொத்துரிமையும் :

இந்திய வாரிசுகள் சட்டம் 1925இன் கீழ் பிரிவு 31 முதல் 49 பிரிவின்படி கிறிஸ்தவர்களுக்கும், பிரிவு 50 முதல் பிரிவு 56 வரை பார்சி இனத்தவர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பெண்கள் சொத்தில் பங்கினை பெற முழு உரிமையுண்டு. பிற வாரிசுகள் சொத்தில் பங்கு கோருவது கட்டுப்படுத்தப்படுகிறது. விதவைப் பெண்ணுக்கு மூன்றில் ஒரு பங்கு சொத்து உண்டு. கணவர் யார் பெயரிலும் உயில் எழுதவில்லை என்றால் அந்த சொத்து முழுவதும் அந்த விதவை பெண்ணுக்கே சேரும். தந்தை இறந்தபிறகு, தாய், சகோதரர்கள், சகோதரிகள் உயிருடன் இருந்தால் அனைவருக்கும் சரியான பங்கினை வழங்க வேண்டும். கணவர் இறந்துபோனால், எந்த சொந்தங்களும் இல்லையென்றால் முழு சொத்தும் மனைவிக்குச் சொந்தமாகிவிடும்.

பார்சிப் பெண்களை பொறுத்தவரை சொத்தில் மிகவும் சமமான பங்கினை வழங்குகிறது, விதவை பெண்ணாக இருந்தாலும், குழந்தைகள், மகன், மகள் போன்ற அனைவருக்கும் சொத்தில் சரி பங்குண்டு. உயில் எழுதவில்லையென்றால் பெற்றோர்கள், தந்தை மற்றும் தாய், குழந்தைக்கு சொத்தில் பாதி பங்குண்டு.

பாலியல் வன்முறை

உலகளவில் பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. யுனெஸ்கோ ஆய்வின்படி 80 சதவீதம் பாலியல் ரீதியான வன்முறை பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது நடத்தப்படுகிறது. குறிப்பாக போர், மதக் கலவரங்களின்போது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. பாலியல் வன்முறைகளை மத ரீதியாக பிரிக்க முடியாது. ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் அல்லது குழந்தைகளையே குறைகூறும் வழக்கத்தை மதங்கள் கையாளுகின்றன.

பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதாலேயே பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று மதத் தலைவர்கள் கூறுகின்றனர். ஆண்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதில்லை. குற்றச்சாட்டை பெண்கள்மீதே வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தவறாக கூறி, கேவலப்படுத்தும் நோக்குடனே செயல்படுகின்றனர்.

பெண்களை ஒரு பொருளாகவே மதத் தலைவர்களும் கருதுகின்றனர். கலாச்சாரம், உடை, தோற்றம் போன்ற காரணங்களைக் கூறி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்.

உலகளவில் பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தளவில் 90% பாலியல் வல்லுறவுகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுக்குத் தெரிந்த நபர்களால் நடக்கிறது என்று தேசிய குற்றவியல் புலனாய்வு மையம் (National Crime Records Bureau) தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 30 சதவீதம் பேர் காவல் துறை மற்றும் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

பாலியல் வல்லுறவு பட்டியல் 2011

நாடுகள் வழக்குகள்

1. அமெரிக்கா (U.S.A) 89,241

2. இந்தியா 21,397

3. இங்கிலாந்து (U.K) 15,084

4. மெக்ஸிகோ 14,078

5. ப்ரான்ஸ் 10,108

6. ஜெர்மனி 7,724

7. பெரு 6,751

8. ஸ்வீடன் 5,960

9. பிலிப்பைன்ஸ் 5,813

10. ரஷ்யக் குடியரசு 4,907

இந்தியா பாலியல் வல்லுறவு - 2011

மாநிலம் வழக்குகள்

1. மத்தியப் பிரதேசம் 3,114

2. மேற்கு வங்கம் 2,307

3. அஸ்ஸாம் 1,708

4. உத்திரப்பிரதேசம் 1,559

5. மஹாராஷ்டிரா 1,555

6. ராஜஸ்தான் 1,547

7. ஆந்திரப் பிரதேசம் 1,362

8. சட்டீஸ்கர் 991

9. ஒடிஸா 988

10. பீஹார் 793

மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் அதிக வன்முறைகள் நடைபெறுகின்றன. இது அமெரிக்காவில் நடைபெறும் பாலியல் வன்முறையைவிட அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வல்லுறவு நடக்கிறது. 2011ஆம் ஆண்டில் 228,650 வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டுள்ளது. இதில் 26.6% பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டுள்ளதாக வழக்குகள் கடந்த ஐந்தாண்டுகளில் பதியப்பட்டுள்ளதாக கூறுகின்றது.

2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பாலியல் வல்லுறவுகளின் பட்டியலில் முதன்மையான மாநிலமாக மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், சட்டிஸ்கர், ஒடிஸா, பீஹார் இடம் பெறுகிறது. இதேபோல் பெரு நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு இடம் பெறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டால் 11 சதவீதம் மட்டுமே நல்ல வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடிகிறது. மீதியுள்ள 89% பெண்கள் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் வெளியே சொல்வது கிடையாது.

காவல்துறை அதிகாரிகளிடம் நடத்திய பி.பி.சி. 17, ஜுலை 2011 (B.B.C. 17 July 2011) ஆய்வில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் 10 நபர்களில் ஒரு நபர் மட்டுமே காவல் நிலையத்தை அணுகுகிறார்கள். பல்வேறு நேரங்களில் காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை கவுன்சிலிங் கொடுத்து வழக்குகளை பதியாமல் அனுப்பிவிடுகிறார்கள். அரசியல் தலைவர்கள் குற்றவியல் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும்படி கூறுவதால் காவல்துறை அதிகாரிகள் வழக்குகளை பதியாமல் விட்டுவிடுகின்றனர்.

இந்தியாவில் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்பத்திற்கும், தன் சமூகத்திற்கும் அவமானத்தைத் தேடித்தந்து விட்டதாக 50% பெண்கள் கருதுகின்றனர். 45% பெண்கள் இதை அவமானமாக நினைப்பதில்லை. மாறாக பெண்கள்மீது நடத்தப்படும் அடக்குமுறை மற்றும் பாலியல் ரீதியான வன்முறை என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய உடை அணிவதாலும், குடிப் பழக்கத்தாலும் இவர்கள்மீது வன்முறை நடப்பதாக 35 சதவீதம் பெண்கள் கூறுகின்றனர். 65% பெண்கள் இதை மறுக்கின்றனர். இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தாலும், இவை பெரியளவு தாக்கத்தை உண்டாக்கித் தருவதில்லை. ஒரு பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால் இந்திய சமூகத்தில் ஒன்றிணைந்துப் போராடும் கொள்கை யாரிடத்திலும் கிடையாது. எனினும் சில இடதுசாரி கொள்கையுடைய அமைப்புகள் போராடினாலும் அது சிறிதளவே தாக்கத்தை உண்டாக்குகிறது.

இந்தியாவில் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்து கிடக்கின்றனர். ஒரு பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால், பெண்ணை முதலில் அவள் எந்த சாதியைச் சேர்ந்தவள் என்று பார்க்கிறார்கள். அடுத்தது பொருளாதார, சமூக ரீதியாக பலம் வாய்ந்தவளாக இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். மேலும் எந்த அரசியல் கட்சி அல்லது சாதியக் கட்சியுடன் தொடர்பு உள்ளவர் என்று பார்க்கிறார்கள். குறிப்பாக தலித் பெண்களாக இருந்தால் குற்றப்பத்திரிகை அல்லது முதல் தகவல் அறிக்கை கூட காவல் நிலையத்தில் பதிவதில்லை. மாறாக ஊர் பஞ்சாயத்துகள் மூலம் அபராதம் விதித்து, காவல் நிலையம் செல்லாத வகையில் தடுத்து விடுகின்றனர்.

உலகளவில் குற்றம் சுமத்தப்பட்ட பாலியல் வன்முறையாளர்கள்மீது 20% முதல் 50% மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கிரிமினல் வழக்குகளைவிட பாலியல் வழக்குகளே அதிகமாக உள்ளன. மேலும் ஆண்டிற்கு, ஆண்டு பாலியல் வன்முறைக்குட்பட்ட பெண்ணின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதேபோல் வழங்கப்படும் தீர்ப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இஸ்லாமிய நாடுகளில் குற்றவியல் நடவடிக்கை குறைவாக உள்ளது என்று எண்ணிவிட முடியாது. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் கலாச்சாரம், மதம் சார்ந்த செயல்களில் மிகவும் அபாயகாரமாக உள்ளன. இங்கே பாலியல் ரீதியாக பெண்களை வன்முறைக்கு உட்படுத்துவது மிக அதிகமாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியல்

1. பாகிஸ்தான் 24%

2. ஆப்கானிஸ்தான் 20%

3. சோமாலியா 20%

4. இந்தியா 13%

5. சூடான் 8%

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 5 நாடுகளில் 4 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகும். இந்தியாவிலும் 17 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இஸ்லாமிய நாடுகளில் பெண்கள்மீது பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிக்க நேரடிச் சாட்சி தேவைப்படுகிறது. அதுவும் ஆண் சாட்சியாக இருந்திட வேண்டும் என்கிறது.

இஸ்லாமிய நாடுகளில் பெண் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டால் குறைந்தது நான்கு ஆண் சாட்சிகள் இருந்தால் மட்டுமே அது வல்லுறவாக கருதப்படும் என்கிறது. அவ்வாறு இல்லையென்றால் அவை வல்லுறவாக கருதப்படாது. எனினும் அங்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் கொடூரமாகவும், மனித உரிமையை மீறும் செயலாகவே உள்ளது. கொடூரமான தண்டனை இருந்தும் குற்றங்கள் குறைவதில்லை.

இந்தியாவில் இன்றும் பெண்ணுக்கு கல்வி உரிமை, திருமண உரிமை (காதல்), வேலை வாய்ப்பு, விரும்பும் ஆடையை உடுத்துவது மறுக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதற்கும் பாராளுமன்றத்திலேயே எதிர்ப்பு உள்ளது. பல மதத் தலைவர்கள் இஸ்லாமியர்கள், பிற்போக்காக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு, தன்னுடைய மதத்தில் உள்ள பிற்போக்குத்தனத்தைப் பற்றியும், பெண் அடிமைத்தனத்தைப் பற்றியும் பேசுவதில்லை.

இந்துப் பெண்கள் இந்து கலாச்சார ரீதியாக முன்னேற வேண்டும். மேலை நாட்டு கலாச்சாரத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது எனக் கூறி இந்து அமைப்புகள் ஒன்று திரண்டு பெண்கள்மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஸ்ரீராம் சேனை காதலர் தினத்தில் பூங்காவில் காதல் ஜோடிகள், ஆண், பெண் பேசினால் கட்டாயத் திருமணம் செய்து வைப்போம், பெண்கள் கிளப்புக்குப் போனால் தாக்குவோம் என்கின்றனர். நமது கலாச்சார ஆடைகள்தான் உடுத்த வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளையிடுகின்றனர்.

இந்துப் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள புர்காவை அணியுங்கள் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். பெண்கள் உடுத்தும் ஆடையால்தான் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். வேலைக்குப் போகும் பெண்களை கேவலமாகக் கருதும் மதவாதிகளும் உள்ளனர். மதவாதிகள் எப்போதும் பெண்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

சாதி, மத, இன துவேசம் எதுவானாலும் பெண்ணுடல் பழிதீர்க்கும் களம்.

நவம்பர் 21, 2012 இல் சிவசேனை அமைப்பின் தலைவர் பால்தாக்ரே மரணத்தையொட்டி மும்பையில் நடைபெற்ற முழு அடைப்பு பற்றி கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மக்கள் மத்தியில் விரோதத்தைத் தூண்டியதாகவும், மோசமான கருத்தை வலைதளங்களில் வெளியிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்துவா மற்றும் இன அரசியலை வேரூன்ற செய்த பால்தாக்கரேவின் மரணத்திற்குப் பின்பு நடைபெற்ற முழு அடைப்பு, மரியாதை நிமித்தமாக நடைபெறவில்லை. மாறாக பயத்தால் நடைபெற்றது என்று குறிப்பிட்டு வலைதளத்தில் பதிவு செய்தனர். இதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சம்பவங்கள் கருத்து சுதந்திரத்தையும், பெண்ணுரிமையும் பாதிக்கும் செயலாக விளங்குகிறது. 2013ஆம் ஆண்டு டெல்லி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால் பல்வேறு போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் செயலை விட்டு விட்டு பெண்ணைப் பலர் குறை கூறினர். ஏன் இரவு நேரத்தில் அவள் வெளியே செல்ல வேண்டும்? உடைகள் ஏன் இவ்வாறு உடுத்துகிறாள் என்று பெண்ணை கொச்சைப்படுத்தும் செயலில் பல பிற்போக்காளர்கள் கருத்து கூறினர்.

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆணை குறை கூறுவது, அவர்களை கண்டிப்பது கிடையாது. பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் முன்பு தற்காப்பிற்காக, நீங்கள் என்னுடைய அண்ணன், என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுங்கள் என்று சில அமைப்புகள் கூறுவது வேதனையளிக்கிறது. சில நாடுகளில் சிறுபான்மை மதங்களில் உள்ள பெண்கள்மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, கட்டாயத் திருமணம் மற்றும் கட்டாய மத மாற்றத்தை பெண்கள்மீது திணிக்கிறார்கள். 29 நாடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலுறுப்புகளை அறுக்கும் பழக்கத்தை (Female Genetal Mutulation) வைத்துள்ளனர். இதனால் 70 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். இது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவு நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளும் உள்ளடங்குகிறது.

தீவிரவாதம்

உலகில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான போர்கள் நடைபெற்றுள்ளன. கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமே அதிகமான போர் நடந்துள்ளது. மதங்களை பரப்புவதற்கும், மதக் கொள்கைகளைப் பரப்புவதற்குமாகவே இப்போர்கள் நடந்துள்ளன. இந்தப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.

தற்போது தீவிரவாதம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மதத் தீவிரவாதம் என்று பார்க்கும்பொழுது, எல்லா மதங்களிலும் தீவிரவாத அமைப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளில் அரசே தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையாக உள்ளது. உலகளவில் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான்.

2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 10,000 தீவிரவாத தாக்குதல்கள் 70 நாடுகளில் நடைபெற்றன. இதில் 44,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 12,500 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் தீவிரவாத தாக்குதல் 12% குறைந்துள்ளது. இருப்பினும் மத தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 7,721 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, இதில் 9,236 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே 85% தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காவில் 978 தாக்குதல்கள் 2011இல் நடைபெற்றுள்ளன. இங்கு 11.5% உயர்ந்துள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் போகாஹாராம் என்னும் நைஜீரிய தீவிரவாத குழுவால் 136 நடத்தப்பட்டுள்ளது.அல்காய்தா மற்றும் சன்னி தீவிரவாதிகளால் 5700 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தலிபான்கள் 800 தாக்குதல்களை 2011இல் நிகழ்த்தியுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிலேயே அதிகளவு தாக்குதல்கள் நடக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.

இந்தியாவில் நடந்துள்ள மதக் கலவரங்களில் அதிகப்படியாக இஸ்லாமியர்களே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதே சமயத்தில் இந்துக்களும் இதுபோன்ற மத;க கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீக்கிய கலவரங்கள் 1984ஆம் ஆண்டு ஏற்பட்டபொழுது 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மதக் கலவரங்கள், மதக் குழுக்கள் மோதல் என பல நாடுகளில் நடக்கின்றன. இதுதவிர இந்து மதத்தில் பல்வேறு சாதிய பாகுபாடுகள் இருப்பதால் சாதிக் கலவரங்கள் அதிகம் நடக்கின்றன. இதில் தலித் மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர். இதிலும்கூட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

நாத்திகம்

கல்வி வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் அடைந்த நாடுகளில் நாத்திகவாதிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். ஐரோப்பாவின் சமூக ஜனநாயக நாடுகளில் நாத்திகவாதிகள் மிக அதிகமாக இருக்கிறார்கள். மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர உயர நாத்திகம் அதிகரிக்கிறது. நிகெல் பார்பர் என்னும் உளவியல் நிபுணர் தன் ஆய்வுகள் (137 நாடுகளில்) மூலம் விளக்கி உள்ளார். அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைகிறது. ஸ்வீடன் நாட்டில் 64 சதவீதம், டென்மார்க் 48 சதவீதம், பிரான்ஸ் 44 சதவீதம், ஜெர்மனி 42 சதவீதம், அமெரிக்கா 40 சதவீதம் ஆகிய விகிதங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் நாத்திகவாதிகள் ஏன் அதிகம் உள்ளனர் என்கிற ஆய்வினை ஜேம்ஸ் பிரேசா ஆராய்ந்துள்ளார். மதத்திற்குப் பதிலாக அறிவியல் ரீதியான கொள்கையைக் கடைபிடித்ததுதான் இதற்குக் காரணம். கல்வி அறிவு பெற்ற நாடுகளில் கடவுள் நம்பிக்கை குறைவாக உள்ளது. நாத்திகத்திற்கும், அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கம்யூனிச கொள்கை உடையவர்களும் நாத்திகவாதிகளாகவே உள்ளனர்.

பொருளாதார பாதுகாப்பு நாத்திகத்தை வளரச் செய்கிறது. சிறந்த ஆரோக்கிய பாதுகாப்பு, இளம் வயதிலேயே இறந்து போவோம் என்கிற அச்சத்தை போக்குகிறது. தங்களது வாழ்க்கை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உணர்வதால் மதத்தின் தேவை குறைகிறது. தொற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது என்பதை நிகெல் பார்பர் கண்டறிந்துள்ளார். வருமானம் சமமாகப் பிரிக்கப்படும் நாடுகளில் அதிகளவில் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செக் குடியரசு, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 நாடுகளில் இன்னும் சில ஆண்டுகளில் மதங்கள் அடியோடு அழிந்து போகும் என அமெரிக்கப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சமூக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவு கூறுகிறது. மதத்தை சார்ந்திருந்து, அதன் போதனைகளை பின்பற்றாமலே நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் நல்ல காரியங்களைக் காட்டிலும் அநீதிகள் அதிகம் என இவர்கள் கூறுகின்றனர். நாத்திகவாதிகளில் பெண்கள் 29 சதவீதம் இருக்கின்றனர். குறிப்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலனோர் நாத்திகவாதிகளாக உள்ளனர்.

பெண்ணின் நிலை :

ஆரம்ப காலத்தில் பெண்களை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்கள். வரலாற்று ரீதியில் பெண்களை தெய்வமாகவும், மிக உயர்ந்த சமூகப்பாத்திரமாகவும் தாய் வழி சமூகத்தில் வழிபட்டனர். சொத்தும் பெண்வழியில் இருந்தபடியால் பெண்ணுக்கு மதிப்பு இருந்தது. ஆண், பெண் பாகுபாடின்றி முழு சொத்தும் ஒரு குழுவிற்குச் சொந்தமாகக் கருதப்பட்டது.

பெண்களின் தொழிலாக விவசாயம் இருந்தது. ஆண்கள் ஆடு, மாடு மேய்த்தலில் ஈடுபட்டிருந்தனர். பிறகு ஆணின் தொழிலாக விவசாயம் மாறியது. விவசாய உற்பத்தி முறைக்கேற்ப பெண் வழி உரிமை ஆண் வழி உரிமையாக மாறியது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். சொத்து ஆண்களின் உடமை ஆனதால் பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

பெண் கடவுளுக்கு கன்னிப் பெண்களை நரபலி கொடுத்தனர். பெண் கடவுளர்களை கொடூரமானவளாக சித்தரித்தனர். பெண் தெய்வங்களுக்குப் பதிலாக ஆண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தினர். ஆண் கடவுளர்களை கருணை உள்ளம் கொண்டவராக சித்தரித்தனர். இதனால் பெண் கடவுள்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆண் உயர்ந்தவராகவும், பெண் இரண்டாம் நிலையில் பார்க்கும் அமைப்பு முறை வளர்ந்தது. பெண்ணை அடக்கப்பட்டவளாகவும், இந்த அமைப்புக்கு கட்டுப்பட்டவளாகவும் மாற்றினர். இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூக அமைப்பின்போதே மதங்கள் தோன்றின. மதங்களை ஆண்களே தோற்றுவித்தனர். ஆகவே மதத்திலும் பெண்கள் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டனர்.

பெண்கள் ஆண்களின் சொத்தாகவே கருதப்பட்டது. “பெண்ணே... நீ குழந்தைப் பருவம்வரை அப்பன் சொன்னதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்க வேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்” என மனு (இந்து மதம் எங்கே போகிறது?) கூறுகிறது.

கடவுள் முதலில் படைத்தது ஆணைத்தான். பிறகுதான் பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தார் என கிறிஸ்தவ மதம் கூறுகிறது. ஆகவே பெண் இரண்டாம் நிலைக்கு உரியவளாக கருதப்படுகிறாள். பெண்ணின் உடம்பு தீட்டுப்பட்டது, புனிதமற்றது, பாவத்தின் சின்னம் என்றே அனைத்து மதங்களும் கூறுகின்றன. பெண்களின் தாழ்நிலையை வலியுறுத்தி, ஆண்களின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டும் என பிரதான மதங்கள் கூறுகின்றன.

பெண் கடவுளராக இருந்தாலும் அதன் பூசாரியாகவும், பாதிரியாராகவும் ஆண்களே இருக்கின்றனர். உலகளவில் மத நம்பிக்கை அதிகம் உடையவர்கள் பெண்களே. பெண்கள் 86 சதவீதமும், ஆண்கள் 79 சதவீதமும் மத நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர். 2013ஆம் ஆண்டின் மக்கள் தொகை 715 கோடி. இதில் ஆண்கள் 50.4 சதவீதமும், பெண்கள் 49.6 சதவீதமும் உள்ளனர்.

மக்கள் தொகையில் சரிபாதி உடைய பெண்களை இரண்டாம் தர குடிமகளாகவே கருதுகின்றனர். மத நம்பிக்கையில் அதிக நாட்டம் கொண்ட பெண்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளனர். பெண்கள் போராடியே தங்களது உரிமையைப் பெற்றுள்ளனர். காலத்துக்கு ஏற்ப மதம் தங்களை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் மத நம்பிக்கையற்றவர்களும், நாத்திகவாதிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்.

பெண் விடுதலை என்பது ஆணுக்கு எதிரான கோஷம் அல்ல. பெண்களும் ஆணுக்கு நிகராக சரிசமமான உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும். இதற்காக பெண்களின் குரல் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களும் சரிநிகராக மதிக்கப்படுவார்கள்.

Reference :

1. இணைய தளம்

2. உலக வரலாற்றில் பெண்கள் - ரோஸ்லிண்ட் மைல்ஸ்

3. சமயம் பற்றி - (Gordge Thompson) தமிழாக்கம் நேத்ரா விடியல் பதிப்பகம்.

4. மத அடிப்படை வாதம் - விடுதலை வலை.

5. இந்து மதம் எங்கே போகிறது? - அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

6. The Everything Worlds Religions Book - Kenneth Shouler 2010

7. Global Intex of Religiosity and Atheism - 2012

34