புத்தகங்கள் பற்றிப் பேசுவோமா!

(பகுதி இரண்டு)

வா.மு.கோமு

புத்தக வாசிப்பில் எல்லோரும் தான் நேரம் கிடைக்கும் சமயங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடம் புத்தகம் எப்படி? என்ற கேள்வியை வைத்தோமென்றால், பரவாயில்லை, வாசிக்க முடியலை, ஆரம்பம் நல்லா இருக்கு போகப் போக செரியில்லை! என்றே சொல்வார்கள். சிலர் வேறு பலர் ஒரு புத்தகத்தைப்பற்றி என்ன சொன்னார்களோ அதையே திரும்பச் சொல்லுவர்.

புத்தகங்களைப் பற்றி விரிவாய் பேசவோ எழுதவோ எழுத்தாளர்களுக்கு நேரமின்மை ஒருபுறம் இருக்க, அடுத்தவர் புத்தகத்தை பற்றி தான் ஏன் பேச வேண்டுமென்ற எண்ணமும் ஒரு காரணமே! ஒரு புத்தகத்தைப்பற்றி கருத்துரை பேச அழைப்பு வந்தால் மட்டுமே கூட்டத்தில் பேச வேண்டும் என்பதற்காக வாசித்து வருபவர்கள் இங்கு நிறையப்பேர். அப்படி பேசுகையில் எழுத்தாளனின் எழுத்துகள் செவ்வாய் கிரகத்தையே எட்டிப்பிடிக்கும் வகையில் உச்சத்தில் இருக்கிறதென மைக் வளையும் வரை பேசி விட்டு செல்வார்.

புத்தக விமர்சனம் என்பதை தமிழில் சிறப்பாக செய்ய ஆட்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேர்களும் எத்தனை புத்தகங்களுக்குத் தான் எழுதுவார்கள்? அவற்றை வெளியிட பத்திரிக்கைகளும் குறைவுதான் என்பதும் ஒரு பிரச்சனை தான். அவை புத்தகமாக வெளியிடப்படுகையில் கூட பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை.

புத்தகத்தைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொண்டே ஒரு புத்தகத்தை வாங்கும் மனநிலையில் பலர் இருக்கிறார்கள். அந்த வேலையையே நான் முகநூலில் அவ்வப்போது செய்து வருகிறேன். அதுவும் நானாக வாங்கிப் படித்த புத்தகங்கள், சில நண்பர்கள் அனுப்பி வைத்த புத்தகங்கள் இவற்றிற்கு மட்டுமே! அந்த பதிபகம் வெளியிட்ட புத்தகம் பற்றி நான் ஏன் முகநூலில் எழுத வேண்டும் என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. எதோ கொஞ்சமாச்சும் புத்தகம் பற்றி எழுதுறாப்ல கோமு! என்கிற பெயரை சீக்கிரமே பெற்றுவிட்டேன்.

இவற்றை வாசிப்பாளர்கள் வாசித்து தேவையான புத்தகத்தை நிச்சயம் வாங்கி வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்தப்புத்தகம் பற்றியும் விரிவாக நான் எழுத முயற்சியெடுக்கவில்லை என்பதை விட அவ்வளவு தான் என்னால் எழுத இயலுகிறது என்பதே உண்மை! முன்பாக பிரதிலிபி டாட் காமில் புத்தகங்கள் பற்றி ஒரு தொகுப்பு கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக நான் எழுதினவற்றின் தொகுப்பு இது.

புத்தகங்களை வாசித்ததும் அது பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன். ஆகவே புத்தகங்கள் பற்றியான என் பார்வைகள் தொடரும்.

அன்போடே என்றும்

வா.மு.கோமு.

விஜயமங்கலம் -638056

பேச : 9865442435

vaamukomu@gmail.com1. உருமாற்றம் – காப்கா

2. ஆகாசமாடன் – கறுத்தடையான்

3. ஆபரேஷன் நோவா – தமிழ்மகன்

4. காடோடி – நக்கீரன்

5. மூன்றாவது துளுக்கு – மயூரா ரத்தினசாமி

6. கனவினைப் பின் தொடர்ந்து – த.வெ.பத்மா

7. கலைக்க முடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்

8. கண்ணாடி நகரம் – ஜெயதேவன்

9. எலி – நாவல் முன்னோட்டம்

10. நடுகல் - சிற்றிதழ்

11. இறக்கை – சிற்றிதழ்

12. அன்புக்கு பஞ்சமில்லை – ம. வான்மதி

13. ஜூலி யட்சி – நிலா ரசிகன்

14. தனிமையின் 100 ஆண்டுகள் – மார்க்குவஸ்

15. அம்பாரம் – க.லெனின்

16. என் வீட்டின் வரைபடம் – ஜே.பி.சாணக்யா

17. சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை

18. குன்னூத்தி நாயம் – மு.ஹரிகிருஷ்ணன்

19. தற்கொலை குறுங்கதைகள் - அராத்துப்ரென்ஸ் காப்கா-வின் உருமாற்றம்மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாச்சார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்-அமரந்தா.தமிழ் நாவல்களில் இருக்கும் போதாமைகளை எப்போதும் மொழிபெயர்ப்பு நாவல்களே பூர்த்தி செய்து வருகின்றன. இப்படி இருக்க தமிழ் உரைநடையில் பெரும் மாற்றங்கள் சமீபகாலங்களில் நடந்தேறி வருகின்றன. வித்தியாசமான கதைக் களன்களில் எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். இலக்கியம் பல வடிவ மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. இதுவெல்லாம் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையால் நடந்தேறியவைகள் தான்.தமிழ் இலக்கியம் தேக்கமில்லாத இந்த சமயத்தில் மொழிபெயர்ப்பு புத்தகங்களின் வருகையும் அதிகப்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பு புத்தகங்களை கொண்டு வருவதில் ஆர்வமாய் இருக்கிறார்கள். சிறந்த மொழிபெயர்ப்பாளர்களும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புகளை தேடியெடுத்து வாசிக்கும் வாசிப்பாளர்களும் பெருகியிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு இது பட்டாடை உடுத்திய அலங்காரம் தான்.காப்காவை வாசித்தல் என்பது வாசிப்பாளனுக்கு சவாலான வேலையாக இருக்கிறது. என்னிடம் 1992-ல் க்ரியாவில் வெளிவந்த விசாரணை இன்னமும் படித்து முடிக்கப்படாமல் இருக்கிறது. காரணம் அந்த அளவு வாசிப்புத் திறன் என்னிடம் இல்லாமல் போனதால் தான். போக மொழிபெயர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக என்னால் வாசிக்க இயலாத புத்தகங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். அது அப்படியல்ல! என்பதை சமீபத்தில் நிழல்களின் உரையாடல்மார்த்தா த்ராபா வின் புத்தகம் அமரந்தா மொழிபெயர்ப்பில் 1997ல் வந்த புத்தகத்தை சமீபத்தில் தான் முழுதாக வாசிக்க முடிந்தது. இத்தனை காலம் நான் வாசிக்க கொடுத்தனுப்பிய நண்பர்களாலும் வாசிக்க இயலாத புத்தகம் அது. போக தமிழில் வெளிவந்த முதல் லத்தீன் அமெரிக்க நாவல் அது.80களின் இறுதியில் கெளதம சித்தார்த்தன் தன் உன்னதம் முதல் இதழைக் கொண்டு வந்த போது அதில் காப்காவின் உருமாற்றம் கதையின் ஒரு பகுதியை கொண்டு வந்தார். மீதம் அடுத்த இதழில் என்ற அறிவிப்பை பார்த்து எனக்கு ஏமாற்றம் தான். இருந்தும் அது புத்தகமாக வருகையில் தேர்ந்த வாசகர் ஒருவர் என்னிடம், கரப்பான் பூச்சியா மாறிடறான்டா இதுல ஒரு மனுசன்! என்றே அறிமுகம் செய்தார். என் அப்போதைய வாசிப்பில் கரப்பான் பூச்சி தான் மனதில் இருந்தது.யாரும் இந்த சிறுகதையில் (இது சிறுகதை தான்! குறுநாவலும் அல்ல) கரப்பானாகவோ, வண்டாகவோ மாறவேயில்லை என்பது தான் இப்போது நான் புரிந்து கொண்டது. போக எதிர்வெளியீடு தற்போது கொண்டு வந்திருக்கும் உருமாற்றம் புத்தகம் காப்காவை முன்னுரையில் மொத்தமாக, சுத்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தொகுதியில் ஆறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.வளை என்கிற சிறுகதை இத்தொகுதியின் உச்சம். படிப்போர் வளைக்குள் ஓடிக்கொண்டே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விலங்காகவே மாறி விடுகிறார்கள். கதை செல்லச் செல்ல இது என்ன விலங்காக இருக்கக் கூடும் என்ற கேள்வி வாசகனை நெருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவரவர் மனதில் இதுவாக இருக்க கூடுமோ? என்று யோசிக்கையில் அந்த விலங்கும் அல்ல என்பதை விலங்கின் நடவடிகைகள் சொல்லிச் சென்று கொண்டே இருக்கிறது. உடும்பாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்துப் படித்துக் கொண்டிருக்கையில் அதுவும் மாறுகிறது.வளை என்றால் பெரும்பாலும் எலியைத் தான் யோசிப்போம். எலியை வாயில் ஒருமுறை கவ்வியிருப்பதாகவும், ஏற்கனவே எலி பயன் படுத்திய பழைய வளை என்றும் வருகிறது. இறுதியாக எதிரியை நேருக்கு நேர் சந்திகையில் பற்களைக் காட்டி, என்று வருகையில் எல்லாமும் மாறுகிறது. காப்கா, பிரச்சனைகளை சந்திப்பவை அனைத்தும் விலங்குகளாக வைத்து விலங்குகளின் பார்வையில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது? எத்தனை சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை சொல்ல முயல்கிறார். ஆனால் அவரின் விலங்குகள் யாவையும் விலங்குகளே அல்ல! எல்லாமே உருவகப்படுத்தப்பட்ட விலங்குகள் தான். எல்லாமே தான் தங்கியிருக்கும் வீட்டைப் பாதுகாப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தான். எதிரிகளிடமிருந்து வீட்டை பாதுகாத்தல்! தேவையான உணவு வகைகளை வீட்டினுள் பத்திரப்படுத்துதல். சுறுசுறுப்பாக இயங்குதல். 


காப்கா தன் கடைசி காலகட்டங்களில் காசநோயினால் அவதிக்குள்ளாகியிருக்கிறார். அந்த அவதியின் நான்கு வருட காலகட்டத்தில் அவர் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் அவரது நோய்க்கூறுகளின் தீவிரத்தையும், ஓடியாடி உழைத்து சேமித்திருக்க வேண்டிய வாழ்க்கைத் தேவைகளையும் பற்றியே எழுதிச் சென்றிருக்கிறார். இப்போது அவரது கதைகளை வாசித்து உள்நுழைவதற்கான வாசல் திறக்கிறது.எல்லா விலங்குகளும் காப்கா தான். ராட்சத மூஞ்சூறு, ஒரு நாயின் ஆராய்ச்சி, வண்டு இவை யாவுமே. தன்னுடைய பதட்டம், தனிமை, தந்தை மீது தனக்கிருந்த மரியாதை, வேலைப்பழு, ஆசை, நோய்க்கூறு, துன்பத்தில் ஆழ்த்தும் உடல் வலி இவைகளே இக்கலைஞனுக்கு போதுமானவைகளாக இருந்திருக்கின்றன அவனது படைப்பாற்றலுக்கு. படைப்புகளில் இருக்கக்கூடிய நிதானம் கூட, அல்லது திரும்பத் திரும்ப ஒன்றை சொல்வதின் மூலமாக அவரது நோய்க்கூறுகளின் அவஸ்தை காரணமாக இருந்திருக்கலாம். அதற்காகவே அவர் அதீத கற்பனை வடிவத்தை ஆசையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார். அதிலும் அவருக்கு போதாமை இருந்திருக்கிறது என்பதை வாசிக்கையில் நாம் உணருகிறோம்.உருமாற்றம் கதையில் வெளி உலகம் செல்ல வேண்டும், தன் குடும்ப நிலையை உழைத்து சம்பாதித்து உயர்த்த வேண்டும் என்ற ஆசையை நினைவுகள் வாயிலாக கிரிகர் வெளிப்படுத்துகிறான். ஆனால் அவன் நோயின் தீவிரப்பிடியில் படுக்கையில் கிடக்கிறான். அவனது தந்தை அவன் நோய் பற்றி எந்த வருத்தமும் அடைவதில்லை. பதிலாக சொற்களால் விரட்டுகிறார். அந்த சொற்களில் ஒன்று தான் ஆப்பிள் வடிவில் அவன் முதுகில் ஆறாத வடுவாக ஒட்டியிருக்கிறது. அம்மா அவன் நோய்க்காக கண்ணீர் சிந்துகிறார். தங்கை வேறு வழியில்லாமல் அண்ணனுக்கு உதவுகிறாள்.கிரிகர் தன் உடல் உபாதைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உணவின் மீதும் ஆசையில்லை. அவனது அறை அவனுக்கான உலகமாகி விடுகிறது. அவன் அறையிலிருந்து வெளியேறினால் தந்தை விரட்டியடிக்கிறார் அறைக்குள்ளே அவனை. வீட்டை மாற்றிச் செல்லலாம் என்றால் நோவுக்காரனை இழுத்துக் கொண்டு எங்கு அலைவது? என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. கிரிகர் இறந்த பிறகு அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்த முனைகிறார்கள் என்று முடிகிறது. இதில் ஒரே விசயம் அவனது நோய்க்கூறுகளைப் பற்றியோ, அதை சரிப்படுத்துவது பற்றியோ வீட்டார் எதுவும் செய்வதில்லை. அவன் அப்படியே கிடக்கட்டும் என்று மட்டு விடுகிறார்கள். எல்லாமே குறீடுகள் தான்.2009-ல் நான் எழுதிய சிறுகதை நல்லதம்பியின் டைரிக் குறிப்புகள். அது ஒரு பிற்பகல் மரணம் தொகுதியில் வெளிவந்தது. அதை எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை. ஒரு பத்திரிக்கை காப்காவின் உருமாற்றத்தை ஞாபகப்படுத்துகிறது என்றது. அருமை! எனக்கே அப்போது தான் உறைத்தது. பூரான் கடியை சிறுவயதிலிருந்தே வாங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் கதைப்போக்கில் பூரானாக மாறி விடுவது. இதில் எந்த நோய்க்கூறுகளையும் நான் ஒளித்து வைக்கவில்லை. நேரடியாக சொல்லப்பட்ட கதை கொஞ்சம் வேடிக்கைகளை சேர்த்து. இனி அது திரும்பவும் திருத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.நல்ல சிறுகதை என்பது ஒரு பூடகக் கவிதை போன்று நாவல் வடிவங்களிலிருந்து வேறுபட்டது தான். சிறந்த சிறுகதை ஆன்மரீதியில் நாவலை விட நெருக்கமாக இருக்கத்தான் செய்கிறது. சிறுகதை தரம் கூட வேண்டுமானால் கெட்டிப்படுத்துதல் வேண்டும். வளையில் வரும் விலங்கு தன் பணியில் ஒன்றாக சுவற்றை கெட்டிப்படுத்தும் செயல் அதன் மூக்கருகில் ரத்தம் வருகையில் தான் உணருகிறது சுவர் கெட்டிப்பட்டு விட்டதென்பதை. பல்வேறு விதமான போக்குகளைப் பற்றி நுணுக்கமான பகுப்பாய்வுகள் எளிய முறையில் ஒன்றை விளக்க துணை புரியும்.வாசிப்பு என்ற செயல் வேகமான ஒன்றல்ல. படைப்பாளியோடு கைகோர்த்து இறங்கும் அல்லது பங்கு கொள்ளும் செயல். மேலோட்டமான வாசிப்புக்கு புத்தகங்கள் பல இருக்கின்றன. உண்மையான வாசிப்பைக் கோரும் புத்தகங்களாக மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. கவனமும் அக்கறையுமான வாசிப்பு மொழிபெயர்ப்புகளை வாசிக்கையில் தேவைப்படுகிறது. அப்போது தான் அதன் முழுவீச்சும் நமக்கு புலப்படும். இலக்கியம் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்துகொண்டே தான் இருக்கும்.உருமாற்றம் (ஃப்ரன்ஸ் காப்கா) 
தமிழில் : பேரா..வின்சென்ட்.
எதிர் வெளியீடு. விலை : 200. தொலைபேசி : 04259 226012.


000
ஆகாசமாடன் கறுத்தடையான் சிறுகதைகள்

சிறுகதைகள் பல வித யுக்திகளால் கையாளப்பட்டு பல வித வடிவங்களில் கடந்த பத்து ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆகாசமாடன் தொகுதியில் இருக்கும் கதைகளும் அப்படித்தான். வடிவ நேர்த்தி என்ற ஒன்றை விஞ்சி வேறு ஒரு வடிவத்தில் நமக்கு பழக்கமான கதைகளே திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. கறுத்தடையான் கவிஞராகவும் இருப்பதால் கதைகள் சொல்கையில் கூட கவித்துவம் அங்கங்கே நுழைந்து விடுகிறது. சில கதைகளை அவர் இப்படித்தான் நான் சொல்வேன் நீ படி! என்று வாசகனிடத்தில் பேசுகிறார். இப்படியான எழுத்து வடிவத்தை கைக்கொள்வதற்கு அவர் ஏராளமான புத்தகங்களை வாசித்து தாண்டி வந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. எழுத்தை சரளமாக எடுத்து வீசுகிறார்.கடும்பு என்ற கதை அலைபேசி பேச்சிலேயே முடிகிறது. நாயகன் மூன்று பெண்களிடம் வெகு விரைவாக பேசி முடிக்கையில் ஒரு அப்பட்டமான வாழ்க்கை பதிவாகி விடுகிறது. மணல் வீடு இதழில் வெளிவந்த வேசடை கதை அப்படியே ஹரிகிருஷ்ணன் கதையை வாசித்தது போன்ற அமைவில் இருக்கிறது. பச்சோந்தியுடல் மாறியவன் தொகுப்பில் திருநங்கை பேசும் கதையாக ஏற்கனவே சொல்லப்பட்டு சலித்துப் போன விசயங்களை விரைந்து சொல்லி வேறு விதமாய் முடிவடைகிறது. “என்னுடைய கவனிப்பை ஒரு கைக்குழந்தையாய் இடுப்பில் தூக்கிச் செல்கிறாள்!” ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வழியே நிறைய மனித மரங்களையும், கான்கிரீட் மனிதர்களையும், குழந்தைப் பூக்களையும் காண முடியுமென நினைக்கிறான். புதிய வரிகள் இந்தக் கதையில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.பால் சிறுகதை ஒரு பெண் தனக்கானவனிடம் பிரிந்து விடுவதைப் பற்றிப் பேசுவதிலிருந்து துவங்குகிறது! தொகுப்பில் மிக எளிமையான கதை என்றாலும் கூர்மையான சமகாலக் கதை! அது இப்படி முடிகிறது.. ஐஸ்கிரீமில் பால் சேர்க்கப்படுகிறது. பாலில் ஐஸ்கிரீம் சேர்க்கப்படுவதில்லை. பிறகென்ன அன்றும் கைத்துட்டு காலியானது வழக்கம் போலவே!மூன்று கண்கள் சிறுகதை ஒரு வடிவ முயற்சி தான். ரன் ரோலா ரன் என்ற ஆங்கிலப்படம் போன்றே! முதற்கண் கணவனின் கண்ணிலிருந்து (அதாவது பார்வையிலிருந்து), நடுக்கண் புது மனைவியின் கண்ணிலிருந்து சொல்லப்படுவதாகவும், அறையின் ஜன்னல் திறந்திருப்பதால் ஒரு இடுக்கண்.. பார்வையாளரால் சொல்லப்படும் பகுதியாகவும் அமைந்து வாசகனை அடடே! போட வைக்கிறது!முடிவின் ஆரம்பம் மின் தொடர் வண்டியில் நடைபெறும் சம்பவத்தை சொல்ல வருகிறது. நிஜமாகவே முடிவில் தான் கதையே துவங்குகிறது! இளநீரின் கடைசி மிடறை உறிஞ்சிக் குடிப்பது போல குடித்தான்! முத்தத்தின் அழுத்தத்தை ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவும், உடனே நினைவுக்கு கமல்ராசின் முத்த முயற்சிகளும் ஞாபகம் வந்து போனது எனக்கு மட்டும் தானா?பொஸ்தகம் சோறு போடுமால! ன்னு கேக்கும் அம்மாவுக்கும், கேக்காம போயிட்ட அய்யாவுக்கும், என்று புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார். இம்மாதிரியான இலக்கியக் கதைகள் சோறு போடாது என்றே சொல்லலாம். பேர் பெற்றுக் கொள்ளலாம் என்றால் அதை வைத்து ஓரமாய் அமர்ந்து தலை மயிர் ஒன்றிரண்டை பிடுங்கி நீளத்தை அளந்து கொண்டிருக்கலாம்!2013 ஏப்ரலில் வந்த தொகுதியை தாமதமாக வாசிக்கக் காரணம் நண்பர்கள் வாசித்து முடித்து விட்டு திரும்ப கால தாமதம் ஆனது தான்.வெளியீடு - மணல்வீடு, (எனக்கு வந்த பிரதியில் விலை காணப்படவில்லை) பேச -98946 05371.

000எருது உலகச் சிறுகதைகள்
உலகச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் நண்பர்களைப் பெற்று , எழுத்தாளனாய் வேறு நான் இருப்பது ரொம்ப ஜீரணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. மரப்பல்லி நாவலை ஆரம்பித்தபோது நண்பர் சொன்னார்.. ’கேவெல்லாம் அங்க எழுதி முடிச்சு புதுசுக்கு போயிட்டாங்க! இப்ப போயி மரப்பல்லின்னு லெஸ்பியன்களை பத்தி எழுதுறீங்களே? என்று நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜ் பேசினார். போக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் நாவல் இப்படி பயணிக்கிறதென சொல்லிக் கொண்டே செல்கையில் வறக்கிணறு அருகில் தென்படுமா என்று தேடிக் கொண்டிருந்தேன் குதிக்க! இருந்தும் ஆங்கில வாசிப்பிற்கு செல்லாமலிருப்பதும் நல்லது தான். அங்கிருந்து ஐடியாக்களை சுட்டு மசக்காளிபாளையத்தில் அப்படியாக்கும் என்று எழுதாமல் இருக்கிறேனே!அவ்வப்போது உலகச் சிறுகதைகளை சிற்றிதழ்கள் வாயிலாக முன்பெல்லாம் வாசித்ததோடு சரி. ஆனால் அப்போது மிக முக்கியமான சிறுகதைகளை மட்டுமே தேர்வு செய்து முடிந்த அளவு சுத்தமான மொழிபெயர்ப்பாக வெளியிட்டார்கள். அந்த வகையில் சிற்றிதழ்களின் அர்ப்பணிப்பு என்பது மிகப் பெரிய விசயம். மீட்சி, ங், கல்குதிரை போன்ற இதழ்கள் (இப்போதைக்கி ஞாபகம் வந்தவை) 90-களில் மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கென இயங்கின. பிரம்மராஜன் போர்ஹேவை தமிழுக்கு கொண்டு வந்தார். (இன்னமும் முழுதாக முடிவேனா? என்கிறது) அது மொழிபெயர்ப்பாளரின் பிரச்சனையாக இருக்காது என்று தான் நம்புகிறேன். காப்காவின் விசாரணையை 92-ல் வாங்கி வைத்து இன்னமும் பத்து பக்கத்தை தாண்ட இயலவில்லை. ஆக இதெல்லாம் என் குறைபாடு தான். ஆனால் தனிமையின் நூறு ஆண்டுகளை இரண்டு நாளில் முடித்து விட்டதற்கு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியான விசயங்களை தொடர்ந்து மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் வாசிப்பாளர்களே உணர்வர்.சீன எழுத்தாளர் மோ யானின், எருது சிறுகதை தொகுப்பின் மிக முக்கியமான பலமான கதை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலகட்டங்களில் நினைப்பதை வெளியில் பேசி விடாதே! என்ற அம்மாவின் அறிவுரையையே தன் புனைப்பெயராக அவர் வைத்து எழுதிய தகவல் அவர் பற்றியான குறிப்பில் வருகிறது. இது கதையை விட !!! மோ யான் என்றால் பேசாதேஎன்று பொருளாம்!தந்தைக்கும் மகனுக்குமான உறவை அப்படி அழகாகச் சொல்லிக் கடக்கிறார் இந்தக் கதையில். தந்தை அவமானப் படுகையில் சிறுவனாக இருந்தாலும் கொந்தளிக்கும் உணர்வுடையவனாக மகன் அப்பாவின் மெளனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். எல்லாக்குழந்தைகளுக்கும் தன் அப்பா ஒரு மிகச்சிறந்த நாயகர் என்றே தான் தோன்றும். அது இயல்பு தான். அவர்கள் அருகில் இரவு முழுதும் அடக்கி வைத்திருந்த சிறுநீரை லாவோ லான் பெய்கையில் தந்தை அமைதியாகவே அமர்ந்திருக்கிறார். கடைசியாக லாவோ லானை எருது முட்டி விட துரத்துகையில் சிறுவனின் தந்தை அதன் கவனத்தை ரூபாய் நோட்டுகளின் மீது செலுத்துமாறு செய்து அதன் முதுகில் தாவி அதன் மூக்கில் தன் விரல்களை நுழைத்து அதன் மூக்கணாங்க கயிற்றைப் பற்றி மேல் நோக்கி இழுத்து அடக்குகிறார். மீண்டும் அப்பா ஒரு திறமைசாலி என்றும் தன்மீதான அவமானத்தை துடைத்தெறிந்து விட்டார் என்றும் மகன் நினைக்கிறான். இருந்தும் கடைசியில் அப்பாவும் லாவோ லானும் கைகலப்பில் ஈடுபடுகிறார்கள். அது இரண்டு எருதுகள் மோதிக் கொள்வது போன்றே அமைகிறது!இக்கதை வாயிலாக சீன கிராமிய வாழ்வு கண்ணுக்கு முன் விரிகிறது! சிறிது நேரமே கதைக்குள் வரும் சிறுவனின் அம்மா யாங் யூஷென் தன் குடும்ப வாழ்வை நகர்த்தும் விதம் கொண்டு கிராமிய பெண்களின் நிலைமை தெரிய வருகிறது.வால்வோ என்ற கதை ரவுடியிசத்தை சொல்ல வருகிறது. ஒரு இடத்தில் பேசப்படும் ரவுடியின் ஆடம்பர வாழ்க்கையெல்லாம் சில காலம் மட்டுமே! அவன் மற்றொரு ரவுடியால் சிதைக்கப்படுவான் என்பதை கூற வந்த கதை. கதையாசிரியர் எட்மண்டோ பாஸ் சோல்டன். பொலிவியாவின் முக்கிய எழுத்தாளர். இந்த மொழியிலிருந்து ஒரு கதையை இத்தொகுப்பில் தான் முதலாக வாசிக்கிறேன். இஸ்ரேல் எழுத்தாளர் எட்கர் கெரத்தின் டாட் என்கிற கதை கதையை எழுதுபவரின் சங்கடங்களைச் சொல்கிறது. ’எனது நண்பன் டாட் பெண்களை அவனது படுக்கைக்கு அழைத்து வர உதவும் கதையொன்றை அவனுக்காக எழுத வேண்டுமென விரும்புகிறான்!’ என்றே இக்கதை துவங்குகிறது. சிறந்த கதையாக இதை கூற முடியாது என்பதே உண்மை!ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே வின் கவிஞன் என்கிற கதை இசைக்காகவும் கவிதைக்காகவும் தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டவனின் கதையை தொல்கதை சாயலில் சொல்கிறது.அமெரிக்க எழுத்தாளரின் சட்டமிடப்பட்ட சாளரம் , வேல்ஸ் எழுத்தாளர் ரைஸ் ஹ்யூக்ஸ்சின் கல்லறை சாட்சியம் இரண்டும் என் வாசிப்பிற்கு ஏற்ற ஆச்சரியப்படுத்தும் கதைகளாக அமைந்து விட்டன! அதிலும் கல்லறை சாட்சியம் கதை என்ன தான் சொல்ல வருகிறது என்று இன்னமும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். அது ஒன்றும் சொல்லா விட்டாலும் முன்பாக ஸ்பானிஷ் எழுத்தாளர் ஃபெர்னாண்டோ ஸோரண்டினோவின் ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்கிற சிறுகதை தந்த ஆச்சரியத்தை தந்தது. அதாவது, புரியாவிட்டாலும் ரசித்து விடு! என்பதே அது.மொழிபெயர்ப்பு தொகுப்பு வாயிலாக களமாட வந்திருக்கும் நண்பர் கார்த்திகைப் பாண்டியனை வரவேற்கிறேன்!எருது (உலகச் சிறுகதைகள்) எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259 226012. 98650 05084

000

ஆபரேஷன் நோவா விஞ்ஞான நாவல்


தமிழில் அறிவியல் கதைகளை வாசித்தது முன்பாக சுஜாதாவின் கதைகள் வழியாகத்தான். அறிவியல் கதைகளை அவரால் எளிதாக எழுத முடிந்தது. தமிழில் சரித்திரக் கதைகளைக் கூட எழுதுவதற்கு ஆட்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அப்படி அறிவியல் கதைகளை எழுத யாரும் முன்வராததற்கு அறிவின்மை என்பதே காரணமாக இருக்க வேண்டும். ராஜேஷ்குமாரின் நாவல்கள் பல அறிவியல் கதைக்களன்களை கொண்டிருப்பதாக நண்பர்கள் சொல்ல இப்போது அறிகிறேன். அவைகளில் சிலவற்றை சீக்கிரம் பிடித்து விடுவேன். இது போக வாசிக்க கையில் 6174 . சுதாகரின் நாவல் இருக்கிறது.தமிழ்மகன் எழுதிய ஆப்ரேஷன் நோவா பற்றி அ.முத்துலிங்கம் அருமையான அணிந்துரை வழங்கியிருக்கிறார். அது நாவலுக்குள் நாம் நுழைய போதுமான விளக்கங்களைத் தந்து விடுகிறது. வாசிக்கையில் அப்படியே சுஜாதாவை வாசிப்பது போன்றே இருந்தது நாவல் முடியும் மட்டும். சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாத அறிவியல் புதினம் இது. இடையிடையே நக்கலும் நையாண்டியுடனும் அப்படியே அவரின் பாணி!விஞ்ஞானக் கதைகளை வாசிக்கையில் ஒரு விதமான மலைப்பு வாசகனுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில் அவைகள் எளிதில் நம்மோடு ஒட்டுவதில்லை. அதுபற்றித் தெரிவதும் இல்லை. விஞ்ஞானக்கதைகளை வாசிக்கையில் வாசகன் அந்தந்த இடத்தில் தானும் இருப்பதாக நினைத்துக் கொள்வதும் நடப்பதில்லை. அது தான் இந்த நாவலிலும் நடந்திருக்கிறது.000

காடோடி - நக்கீரன்பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியளார் என்றே அறியப்பட்டவர். காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி. கட்டுரையாளர்கள் நாவல் என்ற வடிவத்திற்குள் வருகையில் தொய்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் சொல்லக் கூடிய விசயம் தீவிரத் தன்மை கொண்டமையால் தொய்வுகள் வாசகனுக்கு தெரிவதில்லை.நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. அன்னா,பிலியவ், பார்க்,ஒமர்,ரலா போன்ற கதாபாத்திரங்கள் நாம் நாவலில் தான் பயணிக்கிறோம் என்ற நினைவை அடிக்கடி நமக்கு தந்து உதவிக் கொண்டிருக்கின்றன. அதுவும் பிலியவ் என்ற கதாபாத்திரம் நாவலின் மையமாக ஒரு அமானுஷ்ய சக்தியுடன் செயல்படுகிறது.வனம் என்ற பிரமாண்டம் ஒன்றே நம்மை இந்த நாவலுக்குள் பயணிக்க வைக்க வல்லதாயிருக்கிறது. ஆனால் வனத்தின் அழிவைப்பற்றி இந்த நாவல் போன்று இதுவரை தமிழில் எந்த நாவலும் பேசவில்லை. ஒவ்வொரு மரம் வீழ்கையிலும் நம் இதயம் ஒருகணம் அந்தக் கட்டி வைக்கப்பட்டிருந்த கோழி கத்துவது போல துடித்தே நிற்கிறது. இந்த புத்தகத்தை முடிக்கும் தருவாயில் எனக்கென நான் வளர்த்திக் கொண்டிருக்கும் முருங்கை, எலுமிச்சை என்ற சின்ன வகை மரங்களின் மீது ஒரு தனி பாசம் ஏற்பட்டத்தான் செய்தது. போக தாய்மரம் வெட்டப்பட்ட பிறகு கதை சொல்பவர் அதன் மடியில் தலை சாய்த்து அழுவது எனபது கண்ணீரை வரவழைத்த இடம்.இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது. கொஞ்சம் நிலபுலன் வைத்திருக்கும் காட்டாளன் யாரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் போவதில்லை என்பது தமிழுக்கான சாபக்கேடு!இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு என்று வாசகர்களுக்கு சொல்வது கூட என் அறிவீனத்தின் ஒரு பகுதி தான்.காடோடி, அடையாளம் வெளியீடு, விலை 270. பேச ; 04332 273444

மூன்றாவது துளுக்கு - சிறுகதைகள்


தன் முதல் சிறுகதை 1998ல் விகடனில் பிரசுரமானதாக மயூரா ரத்தினசாமி தொகுப்பின் முகப்பில் அறிவிக்கிறார். பலரையும் போல வெகுஜன இதழ்களின் வாசிப்பாளராக துவங்கி பிற்பாடாக சிற்றிதழ்களின் சிறுகதை வடிவங்களைக் கண்டு கதையானது முன்னைப்போலவே முடிவுகளைத் தாங்கியிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை என்பதை உணர்ந்தவராகிறார். ஒவ்வொரு கதையும் முடிவிலிருந்து ஒரு நீட்சியை கொண்டதாகவே உள்ளதை கண்டுணரும் சமயம் ஒரு சிறுகதை எழுத்தாளாரக தன்னையே உணர்ந்து கொள்கிறார் மயூரா ரத்தினசாமி.சுழற்சி என்கிற முதல் கதையை வாசிக்கத்துவங்குகையில் அவரது வெகுஜன எழுத்தின் வாசிப்புத்தன்மை அப்படியே அப்பட்டமாக அதில் இருப்பதைக் கண்டு இதை இப்போதைக்கு வாசிக்கலாமா? இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா? என்றே யோசித்தேன். சிறுகதைக்காக கதைக்களன்களை எழுத்தாளனே முடிவு செய்து துவங்குகிறான். அவன் எங்கு முடித்துக் கொள்ள யோசிக்கிறானோ அங்கு முடித்து வைத்து விட்டு அவ்வளவுதான் என்கிறான்.

இந்தத் தொகுப்பில் விகடனில் வெளியான கதைகள் அனைத்தும் எதற்காக கடைசி வரிசைக்குச் சென்றன? என்ற கேள்வியும் இருந்தது எனக்கு.விகடனில் இம்மாதிரியான கதைகள் இப்போது வெளிவருவதில்லை என்பதே இப்போதைய நிலைமை. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெகுஜன இதழ்களும் சிறுகதைகளில் முற்றும் சொல்லும் கதைகளை நிராகரிக்கின்றன.பச்சைக்கண்ணாடி என்கிற கதை குழந்தைகளின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. சித்தப்பனின் கண்ணாடி உடைந்ததற்காக கன்னத்தில் அடித்த சித்தப்பனை வெறுப்பாய் குழந்தை பார்ப்பதில்லை. ஆனால் அண்ணி சுடுசொற்களைக் கூறி கதை சொல்பவனின் மனதை நோகடிக்கிறாள். குழந்தை தன்னுடைய உடையாத கலர் கண்ணாடியை சித்தப்பனுக்கு தருகிறது. விகடனில் இவர் எழுதிய கதைகளனைத்தும் வாழ்வியல் கதைகள். இதைப்போலவே காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை ஊடல்களை மிக அழகாக, பூட்டைத் தொலைத்து விடு கதை வாயிலாக சொல்கிறார்.வெயிலைக் கொண்டு வாருங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி. வானசஞ்சாரக்கதை என்று அத்தொகுப்பின் முதல்கதையை வாசித்த பிரமிப்பில் இவரும் அதைப்போன்றே எழுத முயற்சித்திருக்கிறார். இதை, போலச் செய்தல் என்றே குறிப்பிடுகிறார். போலச் செய்தல் தவறில்லை என்றாலும் எந்த சுவாரஸ்யமும் இன்றி இது நீள்கதையாகி வாசகனுக்கு சலிப்பைத் தருமாறு அமைந்து விட்டது. இம்மாதிரியான முயற்சிகளை மயூரா ரத்தினசாமி தவிர்த்தல் நலம் என்றே படுகிறது.மீண்டும் வருவார் தொகுப்பில் கடவுள் எழுந்தருளியதைப் பற்றி கதை பேசும் பகடி எழுத்து. இன்னமும் வேடிக்கை பலவற்றை சேர்த்திருக்கலாம். பல்லி வேட்டை இவரது மாற்று கதை சொல்லல் வடிவத்திற்கான முயற்சியாக கொள்ளலாம். வாசிக்க உகந்த கதைகளை தாங்கிய தொகுப்பாக மயூரா ரத்தினசாமியின் முதல் தொகுப்பு இருக்கிறது.இந்தத் தொகுப்பை முன்பாகவே வாசித்து நன்றாக இருக்கிறது கோமு என்று கூறிய விஜய் மகேந்திரனுக்கு இந்த இடத்தில் ஒரு நன்றியை சொல்லிவிடுகிறேன்.மூன்றாவது துளுக்கு- விலை 130 - எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259-226012.வரலாற்றின் கதைகள்!

முட்டையில இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா? மனுசனைக்கூட குரங்குல இருந்து வந்துட்டதா சொல்லிட்டாங்க! மேலே உள்ள கோமாளித்தனக் கேள்வியை சினிமா கூட தத்தெடுத்துக் கொண்டது முன்பாக! இந்த புத்தகத்தின் மூல ஆசிரியருக்கு சிறுவயது முதல்க் கொண்டே கேள்விகள் தான். பண்டைய மனிதர்களின் வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கற்பனைகள். கேள்விகளுக்கான விடைகளை ஆசிரியரிடமோ, ஆய்வாளர்களிடமோ கிடைத்து விடும். இந்தப்புத்தகம் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை என்று முன்பாகவே குறிப்பிட்டு விடுகிறார் ஆசிரியர். போக, கதை மாந்தர்கள் கற்பனை தான் எனினும் அறிவியல் பூர்வ வரலாற்று உண்மையோடு விடைகாண முயன்றதாகவும் முகப்பில் சொல்கிறார் .வெ.பத்மா.தமிழில் ஜே.ஷாஜஹான் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை மிக எளிதாக வாசிக்கும்படியான சரளமான மொழிபெயர்ப்பு இது. புத்தகத்தில் ஒவ்வொரு கதைகளையும் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. மூலநூலில் ஓவியங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை. ஓவியங்கள் பிஞ்சு விரல்களால் வரையப்பட்டன போன்ற அமைவில் உள்ளன. அது அழகும் கூட! (ஓவியங்கள் - பி.சரவணன் )கி.மு-வில் இரண்டு கதைகள் நடப்பதாகவும், கி.பி-யில் எட்டு வித கதைகள் நடப்பதாகவும் ஒரு முழுத் தொகுதி அமைந்திருகிறது.மனிதன் நாயை எப்போது ஏன் எப்படி தன்னோடு இணைத்துக் கொண்டான்? நாய் ஏன் மனிதனோடு நட்பு பாராட்டுகிறது? என்ற கேள்விக்கு பதிலாக முதலாக வேட்டையாடச் செல்லும் வாலிபன் வனத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் பதில் சொல்கிறார். தவிர கதை சொல்லும் முன்பாக முன்னோர்கள் வேட்டையாடிகளாகத்தான் திரிந்து பின் குழுக்களாக வாழத் துவங்கினர் என்பதை அனுமானிக்கத்தான் முடிகிறதாகவும். குழுவில் முழு மனிதனாக தன்னை நிரூபிக்க இளைஞர்கள் சாகசம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய முயற்சியில் சென்ற இளைஞனின் கதை என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது.நகரத்தில் ஒரு கிராமத்தான் கதை கி.மு. 2300 -ல்! சிந்துச் சமவெளி நாகரிகம் வளமுற்று விளங்கிய சமயத்தில் அவர்கள் எழுத்துகளை வாசித்தறிய முடியாததால் அந்நாளைய வாழ்வை அறிய சிக்கலாக இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் நகரமும் கிராமமும் இருக்கிறதாக வைத்து மொகஞ்சதாரோ நகருக்கு கிராமத்திலிருந்து சிறுவன் தன் தந்தையோடு சென்று வருவதாக கதை பின்னப்பட்டிருகிறது. ஒவ்வொரு கதைகளுக்கான குறிப்புகள் இவை தவிர புத்தகத்தின் பக்கங்களில் இது வரையிலான அகழ்வாராய்ச்சி முடிவுகள் பொடி எழுத்தில் கதைகளை ஒட்டியே வருகின்றன.பின் வரும் கதைகள் அனைத்தும் கி.பி என்பதால் வரலாற்றுத் தகவல்களோடு குறிப்புகள் தொடர்கின்றன. இந்தியாவில் கிரேக்கர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். யவனர்கள் இந்தியப்பெண்களை மணந்தனர். அத்தகைய கலப்பின தம்பதியினரின் மகன் அகாசிலஸ். அகாசிலஸ் ஒரு சிற்பி! உயர் குலத்தவரின் மகன் இவனை உன் நாட்டுக்குப் போ, பூனைக்கண் யவனா!’ என்றே வசை பொழிகிறான். இருவருக்கும் சண்டையும் நடக்கிறது. அகாசிலஸின் தந்தை வந்து இருவரையும் பிரித்து விடுகிறார். அகாசிலஸ் தன் தந்தையிடம் கேட்கும் கேள்வி.. ‘என் தேசத்தில் நான் ஒரு அந்நியனாக உள்ளேன். உங்களால் எப்படி புன்னகைக்க முடிகிறது?’ தந்தை அவனுக்கு விளக்கங்கள் சொல்கிறார். ‘அன்பை மறந்த கலைஞனால் எப்படி புத்தபிரானை செதுக்கிட முடியும்?’ முடிவில் சுபமாக முடியும் இச்சிறுகதை ஒரு காலகட்டத்தையே தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.கதைகள் நீதிகளை சொல்லி முடிப்பது போன்று அமையப் பெறலாம். அல்லது கதைகள் கதைகளாகவே கூட முற்றுப் பெறலாம். இந்தத் தொகுப்பு வரலாற்றின் தகவல்களை தன்னுள் வைத்துக் கொண்டு பல காலகட்டங்களை சிறுவர்களை வைத்து சொல்கிறது சிறுவர்களுக்காக! தமிழில் சிறுவர்களுக்கென வந்த புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகமாகப் படுகிறது. ஒவ்வொருவர் இல்ல நூலகத்தில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம்!இந்த புத்தகத்தை என் கிராமப் பள்ளிக்கு கொடுத்து விடுகிறேன்!கனவினைப் பின் தொடர்ந்து..

எதிர் வெளியீடு - பொள்ளாச்சி. பேச : 04259 226012 - விலை : 100.
கலைக்க முடியாத ஒப்பனைகள்


கலைக்க முடியாத ஒப்பனைகள் என்கிற சிறுகதை தொகுப்பு வண்ணதாசனின் முதல் சிறுகதை தொகுப்பு. இது எப்படி எடைக்கு போடாமல் விட்டேன் என்றால் இதன் தயாரிப்புக்காக! பிருந்தாவனம் அச்சகம் சேலத்தில் பரந்தாமன் அவர்களால் வெகு சிரமத்திற்கிடையில் நடத்தப்பட்டு வந்தது எழுபதுகளில். அவர் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். லினோ கட், வுட் கட் என்கிற வகைகளில் ஓவியங்களை கீறி ட்ரெடில் மிஷினில் அச்சடித்து புது விதமாக அவர் தன் இதழ்களை கலை நயத்துடன் கொண்டு வந்தார். அக் பிரதிகள் எடைக்கு போட்டாகி விட்டது. இருந்தும் அதன் கடைசி இதழ் அவரது துக்ககரமான இலக்கிய தாகத்தை பேசி வந்த இதழ் கைவசம் கிடக்கும். பஞ்சம் பிழைக்க போகிறேன் என்று அதில் கடைசியாக குறிப்பிட்டிருந்தார். ஃபரந்தாமன் என்றே அழைக்கப்பட்டவர். எனது நடுகல் இதழில் லாரி டியூப்பை கீறி வெட்டி ஓவியமாக்கி அதை ட்ரெடில் மிஷினில் ஏற்றி சில ஓவியங்கள் செய்து ஓட்டி கொண்டு வந்தேன். அக்காலகட்டத்தில் ப்ளாக் தயாரிப்பு செலவுகள் அதிகம் என்பதால் இப்படியான முயற்சிகள் சிற்றிதழ்களில் நடந்தேறின. அஃ இதழ் இவைகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி!

கலைக்க முடியாத ஒப்பனைகள் 1976 பிப்ரவரியில் வந்த புத்தகம். இந்த தயாரிப்புக்கு பரந்தாமன் டெல்லியில் பரிசு பெற்றார். வண்ணதாசன் இந்த புத்தகத்தை கண்ணில் பார்ப்பதற்குள் பொறந்த நாள் கண்டு விட்டதாக (அப்படித்தான்) கூறுகிறார் தன் கடிதங்கள் வாயிலாக! இருவருக்குமான கடிதப் போக்குவரத்து பெருந்தன்மையாக நடந்திருக்கிறது புத்தகம் கைக்கு வரும் காலம் வரை. தயாரிப்புக்கு 2 வருட காலங்கள் ஆகியிருக்கிறது. பரந்தாமனின் ஒரு வார்த்தை.. “எனக்கு பசித்துக் கொண்டே இருக்கிறது’’. ஒன்றை இப்போது கவனிக்கிறேன். புத்தகத்தில் பக்க எண்களே இல்லை! இருந்தும் அப்போதைக்கு இது பெரிய விசயம் தான்.

000

கண்ணாடி நகரம்கவிதை தொகுப்பு


கவிதைத் தொகுப்புகளின் படையெடுப்பு தமிழில் புற்றீசல் போல எப்போதும் கிளம்பி வந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான். மழைக்காலங்களில் தான் கிராமங்களில் ஈசலை நாம் புற்றுக்களில் பிடிக்க முடியும். அதற்கொரு லாந்தர் விளக்கே போதுமானது! ஆனால் கவிதைகள் என்று கிளம்பும் ஈசலை நாம் பிடிக்க நட்பு என்ற விளக்கை பயன்படுத்துகிறோம் என்றே நினைக்கிறேன். எழுதத் துவங்கும் யாரும் முதலில் செய்வது கவித் தொகுப்பு தான். முன்பெல்லாம் தொழில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் தான் சின்ன அட்டை வடிவில் கார்டு கொடுப்பார்கள். அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ன எண்ணில் இருக்கிறார்? போன்ற விவரங்கள் அதில் இருக்கும். இன்று புத்தக வடிவில் கவிதைகளை தங்களுக்கான அறிமுக விசயங்களாய் கவிஞர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.சினிமாத்துறையில் நுழைய முயற்சிக்கிறேன் என்பவர் தன் தொகுப்பொன்றைத்தான் அடையாளமாக தருகிறார். கவிதை தொகுப்புகளை இப்படி அறிமுக கார்டுகளாய் எல்லோருக்கும் வழஞ்கிய கவிநெஞ்சுடையவர்கள் பிற்பாடு அதிலிருந்து நழுவி நல்ல வேலையில் செட்டிலான பிற்பாடு திருமணம் முடித்து பிள்ளைகுட்டி பெற்று என்று வாழ்வில் செட்டிலாகிறார்கள். ‘அந்தக்காலத்தில் நாங்கள் எழுதாத கவிதையாடா இன்னிக்கி எழுதிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்?’ வசனங்களோடு ஒரு அற்புத வாழ்வு நிறைவடைகிறது!கவிதை தொகுப்புகள் பலகாலமாகவே வாசகர்களுக்கு இலவயமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பதிப்பகங்கள் கவிதை தொகுப்புகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு கவிஞர்களே காரணிகளாகி விட்டார்கள்! காசு இருப்பவர்கள் இன்று ஒரு தொகையை தொகுப்புக்கு கொட்டி பிரதிகளை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் இலவயமாக தருகிறார்கள். அதுவும் நண்பர்கள் கூட்டம் முடிந்தபிறகு வீட்டின் பரணில் தூங்குகின்றன.ஒவ்வொரு ஐந்து வருட காலத்திற்கு ஒருமுறை கவிதைகளின் வடிவங்கள் வேறு மாறி விடுகின்றன. குயில், நிலா, மரம், காந்தி தாத்தா, கடல், என்று தலைப்பிட்டு அதற்கு மெனக்கெட்டு பாடிய கவிப்புத்தகங்கள் புதைக்கப்பட்டு விட்டன. காதலனின் வரவை எதிர்நோக்கி தினமும் தேய்கிறாயோடி நீ? என்று நிலாவுக்கு கவிதை எழுதினால் இன்று திரும்பி நின்று சிரிப்பார்கள். பின்பாக சிவப்பு மலர்கள் பூக்கட்டுமென்றுகவிதைகளின் கடைசி வரிகள் அரங்கேறின. சிவப்பு சிந்தனை தாங்கிய கவிதைகளை தவிர்த்து எதை எழுதினாலும் வேடிக்கைப்பொருளாகின. அதற்கும் அதே நிலைமை சில காலம் கழித்து வந்தது.எப்படியிருப்பினும் கவிஞர்கள் நிதான மனமுடையவர்களாகவும், சில சமயங்களில் கோபக்காரர்களாகவும் இங்கு வெளிப்பட்டு தங்கள் முகத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இன்று முகநூலில் எல்லோருமே கவிஞர்கள் தான். பத்து கவிதைகளுக்கு இடையே ஒரு நல்ல கவிதையை அவர்கள் தந்து விடுகிறார்கள். நான்கு தொகுப்புகளை வாசித்த ஒருவன் தானும் எழுத முற்படுகிறான். அந்த வடிவம் அவனுக்கு இலகுவாக இருக்கிறது. கவிதைகளை சாகடிப்போம் என்று கிளம்பியவர்கள் வரிசையிலும் சிலர் இருந்தார்கள்.அவர்களின் தொகுப்புகளும் இங்கு பல கவிஞர்களின் பார்வைக்கு கிட்டத்தான் செய்தன. வரிகளை மடித்துப்போட்டு எழுதுவது கவிதை என்று பலரும் நம்பி வேலை செய்கிறார்கள். நகரப் பேருந்தில் அருகிலிருப்பவன் கவிஞனாய் இருக்கிறான். நகரத்தில் தெரியாமல் மோதி சாரி கேட்பவன் கவிஞனாய் இருக்கிறான். கழிவறையின் வரிசையில் தாங்க முடியாத வயிற்று வலியில் நிற்பவன் கவிஞனாய் இருக்கிறான். மதுபானக்கடையில் சகமனிதனால் அடிபடுவன் மூன்று தொகுப்புகள் போட்டவனாக இருக்கிறான். கவிஞர்களை மதிக்கும் தேசம் இதுவல்ல! என்று கொந்தளிக்கிறான்.போக தான் வேலை செய்யும் கம்பெனியில் எஜமான் நூறு பிரதிகள் வாங்கிக்கொள்வார். போக வேலையாட்கள் இரநூறு பேரும் வாங்கிக் கொள்வார்கள் என்பதற்காக கவிஞராய் அவதாரமெடுக்கும் பாரதிகளும் இங்குண்டு!நீண்டகாலமாக கவிதை எழுதி வரும் ஜெயதேவனின் ஐந்தாவது தொகுப்புகண்ணாடி நகரம். காலமாற்றத்தில் கவிஞர் தன் சட்டையை உரித்து புதிய அரிதாரம் பூசி வந்திருக்கிறார். கவிதைகள் நவீன சாயலை கொஞ்சம் கைப்பற்றி வந்திருக்கின்றன. இழந்து கொண்டு வந்திருக்கும் வாழ்வும், புதிதாய் பெற்றிருக்கும் வாழ்வும் அவரது பாடு பொருள்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை அவரை சித்தம் கலங்கச் செய்யவில்லை. கிராமிய வாழ்வியல் மீதான ஏக்கங்கள் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் காணாமல் போவது பற்றி இனி கவிஞர்கள் தான் வருத்தப்பட வேண்டுமோ! என்ற அச்சமும் பிறக்கிறது!எது எப்படியிருப்பினும் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்குமான விசயங்களை சொல்லி முடிக்கும் ஒரு தொகுப்பாக இந்த தொகுதி அமைந்திருக்கிறது. நவீனத்துவ கவிதைகள் பல இப்படிச் சொன்னவை என்றாலும் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிய வடிவில் கவிதைக்கான குணங்களோடு பேசும் சொல்முறையில் ஜெயதேவன் வெற்றி பெற்றிருக்கிறார். படித்தவுடன் புரியவும், வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவும் வைக்கும் கவிதைகள் இவைகள்!ஜெயதேவன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமான விசயமாகப் படுகிறது எனக்கு! ஏனெனில் கவிதை இன்னும் சாகவில்லை என்பதை இப்படியான தொகுதிகளும் சிலசமயம் நிருபணம் செய்து கொண்டேயிருக்கின்றன!

கண்ணாடி நகரம் (கவிதைகள்) ஜெயதேவன் -அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம். விலை -70. கவிஞரோடு பேச : 94869 26886

000

எலி - முன்னோட்டம்

லக்கி லுக் படிப்பவன் இவன். அதைக்கூட இவன் படிக்கும் சமயம் நான் பார்க்கவும் இல்லை. டெக்ஸ் வில்லரின் ரசிகனான எனக்கு அவரின் புத்தகங்கள் சொய்ங்கென வந்து விடும். அதை கையால் கூட தொடமாட்டான். எஸ்.ராமகிருஷ்ணனின் அண்டசராசரம், சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் இரண்டையும் இவனுக்காகத் தான் உயிர்மையிலிருந்து எடுத்து வந்திருந்தேன். அண்டசராசரம் 75 அகவை சாப்பாட்டு பிரியர் டீக்கடையில் வேலை செய்யும் பையனை வைத்துக் கொண்டு துப்பறியக் கிளம்பும் கதை. என்ன காரணமோ அது குழந்தைகள் வாசிக்க இயலாத கதையாக போய் விட்டது.சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் சிறுவன் நூலகம் சென்று புத்தக வாசிப்பில் இறங்குவதை சொல்கிறது. கூடவே மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து ரகசிய நூலகம் ஒன்றிற்குள் சில கட்டுதிட்டங்களுடன் நுழைகிறான். அங்கு ஆடுகள் பேசுகின்றன வாசிக்கின்றன. இப்படி செல்லும் கதை இன்றைய குழந்தைகள் வீடியோ கேம்ஸ் என்று அதிலேயே அமர்ந்து நேரத்தை வீணடிப்பதை கடுமையாக கண்டிக்கிறது. வாசிப்பு பழக்கத்தை ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு நிலா காட்டி சோறூட்டுவது போல ஊட்ட வேண்டியிருக்கிறது.எங்கள் ஏரியாவில் அரைமணி நேரம் கேம்ஸ் விளையாட பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். நல்லவேளை நான் குறுநகரில் இல்லை. என்னுடன் இணைந்து வருபவன் வாரத்தில் மூன்று முறையேனும் கேம்ஸ் விளையாட நுழைந்து விடுவான். அருகில் ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கிறது. அதில் அமர்ந்திருப்பவர் என் நண்பர் தான். அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் தினமும் இவனை இப்படி கேம்ஸ் விளையாட விடாதீங்க! என்றார். எனக்கு அது புரியவில்லை.நான் சிறுவனாய் இருக்கையில் எனக்கு இப்படியான உலகம் இல்லை! இவனுக்கு வாய்த்திருக்கிறது. பிள்ளை வளர்ப்பு என்பது ஆசிரியருக்கு மகனாக பிறந்தவனுக்கு மட்டும் தான் துள்ளியமாகத் தெரியும். தொட்டதிற்கெல்லாம் தடி எடுத்தவரின் மகனல்லவா நான். அதனால் தான் இப்படி வெளங்காமல் காலையில் அமர்ந்து பெரிய அதிசயத்தை சொல்வது மாதிரி இதை தட்டிக் கொண்டிருக்கிறேன்.அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏழாவதில் படிப்பவன் ஒரு ரூபாயை இவரிடம் கொடுத்து பத்து ரூவா குடுங்க, நான் கேம்ஸ் விளையாடப் போகணும் அப்பா மருந்து வாங்க வர்றப்ப அவர்கிட்ட பத்து வாங்கிக்கங்க!’ என்று நின்றானாம் வெகு நேரம். பின் அழுகை! மற்றொருவன் வீட்டில் 100 ரூபாயை திருடிக்கொண்டு வந்து அது தீரும் வரை கேம்ஸில் அமர்ந்து விளையாடியிருக்கிறான். அவ்வளவு வெறி கேம்ஸின் மீது!இந்த விசயங்கள் எனக்கு சற்று அதிர்ச்சியே தான். நான் விளையாட்டு போக்கில் இவனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நாளை இவனுக்கும் வெறி ஏறி விட்டால்? கத்தி நீட்டி கூட பைசா குடு என்பான்!நேற்று மாலை வண்டியில் இருவரும் வந்து கொண்டிருக்கையில், உனக்காக புத்தகம் வாங்கி வந்திருப்பதாக விசயத்தை ஆரம்பித்தேன்.துரை : படக்கதையாப்பா?நான் : இல்ல! இது நாவல்டா, கொழந்தைகள் படிக்கிற மாதிரி.துரை : போப்பா, படம் இருந்தா படிக்கிறக்கு ஜாலியா இருக்கும்.நான் : படிச்சு பழகுடா, ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா போகும். நீ டெக்ஸ் வில்லரை ஏன் படிக்க மாட்டீங்கறே?துரை : கலர்ல இருந்தாத்தான் படிக்க முடியும்பா. அதென்னமோ கறுப்பு வெள்ளையா இருக்குது.நான் : சரி நடுகல் புத்தகம் வந்துடுச்சாம் திலீபன் சொன்னான். எலி அப்படிங்கற நாவல் படிக்கிறியா?துரை : அதென்னப்பா கதை? (என்றவனுக்கு இப்படி இப்படி என்று கொஞ்சம் சொன்னேன்)துரை : இது படிக்கலாமாட்ட தான் இருக்குதுப்பா!

தீர்வு : ஒருவனை வளைக்குள் இழுத்து போட்டு கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட மெனக்கெடல்கள் கெட வேண்டி வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு புத்தகங்களை பார்க்கையில் இந்த வருடம் நானும் குழந்தைகளுக்காக புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணமும் வந்து சேர்ந்திருக்கிறது.

000

நடுகல்சிற்றிதழ் (1991 ஆவணிதிருப்பூர்)

எமது நடுகல் முதல் இதழ் ஆவணி 91ல் திருப்பூரில் இருந்து வெளிவந்தது. சர்ரியலிசம் சாம்பார்ரசம் கதைகள் எல்லாம் அதில் எழுதிப் பழகினேன். நண்பர்களின் ஒத்துழைப்பு இந்த இதழுக்கு இருந்தது. தமிழகம் முழுக்க படிக்கத் தெரிந்தவர்களுக்கு சும்மா போஸ்ட் செய்தோம். முதல் இதழ் மூன்று ரூபாய். கோவை விஜயாவில் பத்து புத்தகம் கிடத்தினோம். அடுத்த மாத புத்தகத்தை கொண்டு சென்ற போது வேலாயுதம் காசுக்கு புத்தகம் எடுத்துக்கங்க! என்று அன்போடு சொல்லி விட்டார்.முதல் ஆறு இதழ்கள் இத்தன பைசா என்று விலை போட்டிருந்தோம். பொறவு அது எதுக்கு சும்மா போடணும்னு விட்டுட்டோம். யூமா வாசுகி ஒருமுறை திருப்பூரில் அவர் நண்பரின் ஸ்கிரீன் ப்ரிண்டிங்கில் தங்கியிருக்கையில் குதிரை வீரன் பயணம் கொண்டு வந்தார். அவரை வைத்து ஒரு நடுகல் இதழ் அட்டை வடிவமைப்பு செய்தோம். அதற்கும் முன்பாக லாரி டியூப் வெட்டி அட்டை ஓட்டினவன் நான். அவைநாயகன் கடிதம் ஒன்றை சில்வர் இங்க்கில் கறுப்புத் தாளில் அச்சடித்துப் பார்த்தேன்.பத்து இதழ்களுக்கும் மேலாக வந்த இதழ்கள் அனைத்திலும் தஞ்சாவூர் படைப்பாளிகள் களம் இறங்கி விட்டார்கள். அனைவரும் கவிஞர்கள். தஞ்சை ப்ரகாஷ் சந்தோச மிகுதியில் கவிதைக் கூட்டத்தையே அனுப்பி வைத்தார். ஒரே முறை நட்சத்திரன் நடுகல் வளர்ச்சி நிதி என்று நூறு ரூபாயை என் பாக்கெட்டில் தள்ளினான். அதை நான் பமீலா ஒயின்ஸில் ஓரமாய் நின்று காலி செய்தது பெருந்துறையில்! 23 இதழ்கள் வந்த இந்த சிற்றிதழ் பல வருடங்கள் கூடித்தான் அந்த எண்ணிக்கையை தொட்டது. இதழின் அளவுகள் யாரும் பைண்டு செய்து பாதுகாக்க முடியா வண்ணம் பல வடிவங்களில் வர நான் அச்சக தொழிலாளியாக இருந்ததே காரணம்!தந்தையார் இறந்த பிறகு அவரின் கவிதைகளோடு நினைவஞ்சலி இதழாக வந்து தன் மூச்சை நிறுத்திக் கொண்ட இந்த சிற்றிதழ் தற்போது பதிப்பகமாக வளர்ந்து நிற்க நண்பர்களின் ஆதரவே காரணம்! நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே சுகமானது தான்!

இறக்கை -சிற்றிதழ்இறக்கை இதழ் நான் நடத்திய மூன்றாவது சிற்றிதழ்! நாற்பது இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதியாக 100 பிரதிகள் தமிழகம் முழுக்க இலவச பிரதியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அது எழுத்தோடும் எழுத்தாளர்களோடும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே! சில சிற்றிதழ்கள் பரிமாற்றுப்பிரதிகளாக வீடு வந்து கொண்டிருந்தன. சமயத்தில் ஹரிகிருஷ்ணன் வீடு தேடி வந்த போது அதை அச்சில் கொண்டு வரும் யோசனையை சொல்கையில் நான் மறுக்கவில்லை! உங்களோடு என்கிற தலையங்கம் வாசகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது! அதற்கு காரணம் என் மொழி! உங்களோடு முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான தொனி அதில் இயல்பாக இருந்தது. நன்றாக ஒரு இதழ் அனைவராலும் பேசப்படும் போது செத்து விடுவது நல்லது தான்.53 இதழ்கள் வந்த இறக்கை (எங்கு வேண்டுமானாலும் பறக்கும்) தன் புதை குழியை தேடிக் கொண்டது. பின்பாக எதை நோக்கி இப்படி சிற்றிதழ்களை நான் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தேனோ அதை நோக்கி படியேறி விட்டேன்! இனி சிற்றிதழ் நடத்தும் எண்ணமும் என்னிடம் இல்லை! ஒன்று இப்போது தெரிகிறது! என்னை யாரும் சிறப்பாக எழுதுகிறான் என்று என் முந்தைய எழுத்தாளர் யாரும் குறிப்பிடவேயில்லை! எனக்கான சரியான விமர்சனத்தை கூட யாரும் முன் வைத்ததுமில்லை! அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதுமில்லை! எனக்கான போராட்டத்திலேயே வந்தவன் நான். எனக்கும் ஹரிக்கும் பயங்கர சண்டை. அதனால் தான் ஹரி மணல்வீடு என்று தனிப் பத்திரிக்கை ஆரம்பித்து ஓடி விட்டான், என்றெல்லாம் பேசினார்கள். ஒரே தமாஸ் தான்!பாதைகளை அடுத்தவர்க்காக திறந்து விடுதல் என்பதை சண்டை என்று பேசி இன்புற்றார்கள்! நான் ஆசைப்பட்டு என் மண்பூதம் சிறுகதை தொகுதியை என் எழுத்தாள முன்னோடிகளுக்கு அனுப்பி எங்காச்சும் எழுதுவார்கள் என்று ஆசைப்பட்டு காத்திருந்தேன். அவர்கள் மூச்சு விடாமல் ஒரு வருடம் கழித்து என்னிடம் பேசுகையில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டீட்டு இருக்கேன் கோமு! அதுல கட்டுரை கொடுக்க வேண்டி இருக்குது! இதுல சிறுகதை ஒன்னு கொடுக்க வேண்டி இருக்குது...! பிரதிகளை நான் நண்பர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்! இனி நான் தான் நண்பர்களின் புத்தகங்களுக்கு எனக்கு தெரிந்தவரையில் எழுத வேண்டும் என்ற நிலைக்கும் வந்து விட்டேன்! ஒரு தனி மனித போராட்டம் நினைத்துப் பார்க்கையில் சந்தோசம் தான்!

000
அன்புக்கு பஞ்சமில்லை -கட்டுரைகள்


. பாவையர் மலர் என்கிற மாத இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வந்து கொண்டிருக்க அதன் ஆசிரியரின் உழைப்பே என்று இன்றென்ன எப்போதும் சொல்லலாம்! இதழுக்கான படைப்பாக்கங்களை தேர்வு செய்வது என்பது சாமானிய காரியமல்ல! ஒரு இலக்கிய இதழ் என்றால் நான்கு கவிதைகள், ரெண்டு சிறுகதை, ஒரு தலையங்கம், ரெண்டு புத்தக விமர்சனம், ஒரு கட்டுரை! அவ்வளவுதான். ஆனால் கமர்சியல் தன்மையோடு மாதம் தவறாமல் படைப்புகளை பெற்று தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்புவது வரை ஆளை கிடையில் கிடத்தி விடும் வேலை அது. தவிர ஆசிரியர் வேறு தொழிலில் முனைப்புடன் இருப்பவர்.பாவையர் மலரில் என் சிறுகதைகளும் சிலவும் ஆறு மாத தொடர் ஒன்றும் வந்திருக்கிறது. நண்பர் பாக்கியம் சங்கரின் தேனீர் இடைவேளை என்கிற வெற்றி பெற்ற தொடர் பாவையர் மலர் இதழில் வெளிவந்தது. பதிப்புத் துறையிலும் அதன் ஆசிரியர் .வான்மதி இறங்கியிருப்பதை நாம் பாராட்டுவோம். அவர் தன் பாவைமதி வெளியீடு என்கிற பதிப்பகத்தின் வழியாக இந்த வருடம் இரண்டு புத்தகங்களை கொண்டு வந்துள்ளார். புத்தகத் தயாரிப்பு என்கிற விசயத்தில் மிக கவனமாய் அட்டை வடிவமைப்பிலிருந்து எல்லாமே மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது.அன்புக்கு பஞ்சமில்லை என்கிற இந்தப்புத்தகம் ஆசிரியர் பாவையர் மலர் இதழில் ரோகிணி என்ற பெயரில் தொடராக சொல்லி வந்த விசயங்கள் தான். தொடராக வருகையிலேயே பலரின் பாராட்டை பெற்றது என்பதை அதன் வாசகர்கள் அறிவார்கள். ஆசிரியர் தான் சந்தித்த, தனக்கு தெரிந்த பெண்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற படிக்கல்லாய் இருந்தவர்கள் பற்றியும் மிக நேர்த்தியாகச் சொல்கிறார். சொல்லும் முறையில் பாலகுமாரனின் சாயல் இருந்ததை சில இடங்களில் கவனித்தேன். நன்றாக வழுக்கிச் செல்லும் எழுத்து முறைமை.புத்தகத்தை வாசித்தோர் சாலையில் பணிக்குச் செல்லும் எந்தப் பெண்ணையும் பார்க்கையில், வாழ்வில் வெற்றிக்கு உழைக்கும் பெண்ணாகவே பார்த்து வாழ்த்துவர். அப்படி வாழ்வில் போராடும் பெண்களை இந்தப்புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கும் தோழியோ, தந்தையோ, பின்னால் இருக்கிறார்கள். சுயமாக வெற்றி பெற்ற பெண்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கான உழைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.காதலனை நம்பி ஏமார்ந்த பெண்ணின் கதையும், கோழைக்கணவனைப் பெற்ற பெண் தன்னை விட வயது குறைந்த மற்றவனை மணந்து நிம்மதியான வாழ்வை வாழும் வாழ்க்கைகளும் நிரம்பியே இருக்கின்றன. போக ஆண்களால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவதும் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயலையும் சொல்லி முடிக்கிறார். இந்த உலகில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நிகழும், நிகழத்தான் செய்யும். அதை நோக்கி போராட பெண்களுக்குள் துணிவும் வேண்டுமென அதை ஊட்டும் புத்தகமாக அன்புக்கு பஞ்சமில்லை புத்தகம் வந்திருக்கிறது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புக்கு பஞ்சமில்லை -.வான்மதி விலை -120 பேச : 9380164747

000

ஜுலி யட்சி - சிறுகதைகள் நிலாரசிகன்மொத்தம் பத்து கதைகளோடு வந்திருக்கும் இத்தொகுப்பை அதீதங்களின் மீது ஈர்ப்புள்ளவர்களுக்கும், கனவுலகில் எப்போதும் கிட்டாத வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், இறுதியாக நவீன கவிதைகளின் பரிச்சியம் உள்ளவர்களுக்குமான சிறு தொகுப்பாக வந்திருக்கிறது. கனவுலகை பதிவு செய்பவர்களாக இதுவரை கவிஞர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். நிலாரசிகனும் கவிஞர் தான். இத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்துமே கதைகள் என்ற வடிவத்தை நோக்கி ஏங்கி ஏங்கிப் பயணிக்கின்றன. நவீனம் எல்லாவற்றையும் கலைத்துப் பார்க்கும், கலைத்துப் போடும் தன்மையை உள்ளடக்கியது தான். கதைகளை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்திற்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தீவிர வாசகர்கள் வந்து விட்டார்கள். ஆரம்ப நிலை வாசகனும் கூட இவரது கதைகளுக்குள் நுழைந்து வாசித்து இன்புறலாம். அதற்கு கொஞ்சம் கவிதைகளின் பரிச்சியம் இருந்தால் போதுமானது.கதைகள் எல்லாவற்றிலும் ஜன்னலில் நின்றோ, மொட்டை மாடியில் நின்றோ மரங்களையும், இயற்கையையும், நிலாவையும், கடலையும், ஏரியையும் உருவங்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கின்றன. வனக்காவலராக வரும் தந்தை வனப்பூக்களின் அரசியின் காலில் உள்ள காயத்திற்கு சிகிச்சை செய்கிறார். அவளுக்கு தர்ஷிணிப்பூ என்று பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர். தர்ஷிணிப்பூ என்று அவர் இட்ட பெயர் வனத்தில் வாழும் எந்த விலங்கினதுமாகக் கூட இருக்கலாம். இயற்கை விலங்குகளின் காப்பாளர்கள் இருக்கும் உலகில் அவற்றை தேவைக்காகவும் உணவின் ருசிக்காகவும் கொல்லும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது! யானை டாக்டர் என்றொரு சிறந்த சிறுகதையை ஜெயமோகன் முன்பாக எழுதினார். மீண்டும் ஒருமுறை அதை ஞாபகத்துக்கு கொண்டு வரச் செய்த கதை இது. கத்தியில் குத்தினால் ரத்தம் வரும் வலிக்கும் என்பது மாதிரி உடனே நிகழ்ந்த கதையிது.தொகுப்பில் ஏராளமான கதைகள் பெண் பார்வையில் நகருகின்றன. எழுதியது பெண் தானோ என்ற ஐயம் அடிக்கடி வந்து போனது எனக்கு. சந்தேகத்திற்கு ஒருமுறை நிலாரசிகையோ என்று அட்டைப்படத்தை பார்த்தேன். பெண்ணின் மனவுணர்வுகள் மிகநுட்பமாக பதிவாகியிருக்கின்றன. கதைகளில் வரும் எல்லாப் பெண்களும் மனதில் பெரும் பாரங்களாக தங்களின் துக்கங்களை சுமக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் கோரமாக நிகழ்த்தவும் தயங்குவதில்லை. தன்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஆடவனை கொலை செய்யும் யட்சியாக பெண் உருக்கொள்கிறாள். அழகற்ற பெண் அழகான வடிவம் பெற்று காதலிக்க வலிய அவந்து பேசும் ஆண்களை ஒதுக்குபவளாக மாறுகிறாள். சம்பளப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடுவதில் வாழத்துவங்குகிறாள். தனிமை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் வைத்து விடுகிறது சில நேரங்களில்.தொகுப்பில் கேவல் என்ற கதை வாசிப்பவர்கள் எல்லோருக்குமான கதையாக இருக்கிறது. ஆசிரியர் முன்பொரு காலத்தில் எழுதியிருக்கலாமோ என்னவோ! யாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு? என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல்!நகரம் தாறுமாறான ஒரு கலாச்சாரத்தை அங்கு பணிபுரியும் பெண்ணிடத்தில் திணித்திருப்பது பெருநகர சர்ப்பம் கதையில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்பட்ட வடிவ நேர்த்தியில் வேறு ஒரு தளத்திற்கு நிலாரசிகனை பயணிக்க வைக்கும் கதையிது.சிறுகதைகளுக்கு என்று வடிவ நேர்த்திகள் பலவுண்டு. நவீனத்தின் பாதையில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு விசயத்தையும் சொல்ல முற்படாத கதை கூட நேர்கோட்டில் சிறுகதைக்குண்டான வடிவ நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருந்தாலே போதும் அது சிறந்த கதை தான். சினிமாவில் சின்னச் சின்ன கட் ஷாட்டுகள் வருவது போல இரண்டு பாராகிராப் தாண்டியதும் பெட்டி வைத்து வேறு இடத்திற்கு தாவுவது வாசிக்க ஏதுவாக அமையவில்லை! இந்த இடத்தில் கவிஞனாக இருந்து சிறுகதைக்கு வந்த பாலைநிலவனின் கதைகளின் சொல்முறை அழகு ஞாபகம் வருகிறது எனக்கு.நிலாரசிகன் கதைகளில் டைனோசர்களும், தேவதைகளும், கன்னிகளும் தொடர்ந்து வரட்டும். நிதானமாகச் சொல்ல வேண்டிய கதைகளை ஏனோ மிக விரைவாக முடித்து விடுகிறார் சொல்ல அவ்வளவு தான் என்று. எழுத எழுதத் தான் அது கைவரும் என்பது போல நிலாரசிகனின் சிறுகதை முயற்சிகளை வரவேற்போம்!

விலை : 80 - பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - பேச : 90955 07547, 98422 75662.

000தனிமையின் 100 ஆண்டுகள்சில புத்தகங்களை படிப்பதற்கு நாம் தியான மனநிலைக்கு செல்ல வேண்டும். சில புத்தகங்களை படிக்க நாம் கொண்டாட்டமான மனநிலையில் இருக்க வேண்டும். ஓஷோ புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும் முன் நம் மனநிலை அதற்கு தயாராக வேண்டும். அப்படியான மனநிலையில்தான் மார்கேஸ் புத்தகத்தினுள் நுழைந்திருக்கிறேன். 80 பக்கங்கள் ஓடியிருக்கிறது! நான் இடங்களையும் காலங்களையும் மனதில் இருத்திக்கொண்டு வாசிப்பவனல்ல! என் தேவைகள் எழுத்தில் சொல்லப்படும் புது முறைகள். பல காலங்கள் ஆயிற்று நான் அடிக்கோடுகள் இட்டு படித்து! கையில் ஜிகினா பேனாவை வைத்துக் கொண்டு துவங்கி விட்டேன்.

பல காலம் முன்பு கல்குதிரை மார்கேஸ் சிறப்பிதழில் இதன் சைடு ரீலை வாசித்து பரவசத்தில் இருந்தேன். பின் புது எழுத்து இதழில் கொஞ்சூண்டு படிக்க என் மனது இடம்தரவில்லை! வாழும் காலத்தில் ஆங்கில அறிவு இல்லாத நான் தமிழில் படிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்னையறியாமலேயே! புத்தகத்தை வாங்கி பரிசளித்த ஐயா லட்சுமிபதிக்கு என் நன்றிகள்! பின் என்னிடம் ஏது இப்போது 350!!!!!!!()()()()()()()தனிமையின் 100 ஆண்டுகள்-221ம் பக்கத்திற்கு வந்து விட்டேன். மாய வீட்டிற்குள்ளும், பனிக்கட்டிகளாலான வீடுகள் நிறைந்த ஒரு நகரத்தை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா கனவு காண்பதைப் போல நாவல் என்னை கூட்டிப் போகும் பிரமிப்பின் கனவில் தவழ்கிறேன

. இது வரையிலான வாசிப்பில் தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலில் நடந்த வேலைத்தனங்கள் புரிய வருகிறது! 20 வருட காலத்திற்கும் முன்பே தமிழில் அவர் பணி தமிழுக்கு தேவையான ஒன்று தான். ஆரம்ப கால வாசிப்பில் அதுவும் என்னை ஆச்சரியப்படுத்திய நாவல்களில் ஒன்று தான். அவரது வார்ஸாவில் ஒரு கடவுள் (அதுவும் நண்பர் அளித்தது தான்) என்னால் 10 பக்கம் கூட படிக்க முடியவில்லை! கால மாற்றம் ஒரு படைப்பாளியை எந்த விதத்தில் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் அந்த வெளிநாடு பயணப்பட்ட கதை!

((அந்த திருமண நிச்சயம் முடிவில்லாத உறவாக மாறியது. அந்த ஓய்ந்த காதல் யாரும் கவலைப்படாத ஒன்றாகவும் ஆனது.பழைய நாட்களில் முத்தமிட்டுக் கொள்வதற்காக விளக்குகள் அணைத்த காதலர்கள் மரணத்தின் தன்னிச்சைக்கு எறியப்பட்டவர்களானார்கள். தன்னுடைய மனவுறுதியை முழுவதும் இழந்து, முற்றிலும் சிதைந்து போன ரெபேக்கா மறுபடியும் மண்ணைத் தின்னத் தொடங்கினாள்)

000இந்த உலகில் அன்பு இன்னமும் மரணிக்கவில்லை!.லெனின் எனக்கு சந்தோசமாய் வாசிக்கக் கொடுத்தஅம்பாரம்தொகுதியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டபோது ஒருவேளை இது கவிதைத் தொகுதியோ என்ற பயம் இருந்தது. பின் அட்டையில் இவை கட்டுரைத் தொகுதி என்று இருந்தமையால் எனக்கு என் மீதே நம்பிக்கை இருந்தது எப்படியும் வாசித்து விடுவேன் என்று. அது உடனே நடந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் முழு பகல்பொழுதும் மின்சாரம் இல்லாமை.படிக்கத் துவங்குகையில் இவை கட்டுரைத் தொகுதியில் சேர்த்தி அல்ல என்று உள்ளடக்கத்தை பார்த்த போதே தெரிந்துவிட்டது. இவைகள் நினைவோடைக் குறிப்புகள். லெனின் தன் இளமைக்கால நினைவுகளை திரும்ப ஒருமுறை தன் ஞாபக அடுக்கிலிருந்து வெளிக் கொண்டுவந்து நம் கண்முன் காட்டுகிறார். இவைகள் படிப்பவர்களையும் தங்களின் இளமைக்கால அனுபவங்களை நினைத்து அசைபோட வைக்கும் வேலையைச் செய்கின்றன.கவிஞர்களுக்குத்தான் இப்படியான அன்பு மனது வாய்க்கப்பெற்றிருக்கும். உதாரணமாக கலாப்பிரியா. கலாப்ப்ரியா தன் கவிதைகளில் சசியைப் பற்றி எழுதுகையில் கத்தி கொண்டுபோய் அந்த சசியை சொறுவி விட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். (அது சசியின் மீதான என் பால்யகால ஆசை..அதேபோல் நகுலனின் சுசீலாவையும்) அப்படியான கலாப்ப்ரியா பத்தி எழுத்துக்கு வந்த போது அவைகள் மிகச் சிறப்பாக இருந்தன. நன்றாக இருக்கிறது என்று நாலுபேர் சொல்ல அவர் தொடர்ந்து பத்தி எழுத்துகளையே எழுதிக் குவிக்க இப்போது கலாப்ப்ரியா என்று யாராவது சொன்னால் புன்னகையை வீசிவிட்டு நழுவுகிறேன்.வாசிப்புக்கே நேரம் வாய்க்கப்பெறாத ஊர் திருப்பூர். இங்கு மக்களின் வாழ்க்கை முறை பணம் நோக்கியே திருப்பப் பட்டிருக்கும். திருப்பூரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று மனிதர்களின் முகங்களைக் கண்டால் அவைகள் பணம் பணம் என்றே உச்சரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பவனை வேற்றுகிரகவாசியாய் பார்த்துச் செல்வார்கள். பொழைக்கிற பையன் பொஸ்தகத்தை விரிச்சிப் புடிச்சுட்டு உக்கோந்துட்டு இருக்குது பாரு.. ! தவிர திருப்பூரில் புழங்கிக் கொண்டிருக்கும் பணம் திருப்பூருக்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அங்கேயே சம்பாதிக்கப்பட்டும் அங்கேயே செலவீனமும் ஆகிக் கொண்டிருக்கும்.ரொம்பகாலம் ஆகிவிட்டது அம்பாரம் மாதிரி அன்பையும், பாசத்தையும் சொல்லும் புத்தகம் வாசித்து. இதில் மகளின் மீது கொண்ட ஒரு தந்தை தன் மகளின் விளையாட்டுத்தனங்களில் இருந்து தன்னையே திரும்பப் பார்த்துக் கொள்கிறான். இதில் கவனிக்க வேண்டிய விசயம் பெண்களுக்கு ஆண் குழந்தை என்றால் இஷ்ட்டம் அதிகமாகவும், பெண்குழந்தை என்றால் தந்தைக்கு இஷ்ட்டம் அதிகமாகவும் உள்ளதை எழுதப்படாத பாச வகைகளுள் ஒன்றாக மதிப்பிடலாம். எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லாமல் போயிற்றே என்று காலம் கழிந்ந்தபிறகு ... .. வருத்தப்படுகிறேன். என் நிதி நிலைமைகளுக்காக ஒதுக்கி வைத்தது இப்போது வருத்தம் கொள்ள வைக்கிறது!என் தோழி ஒருவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர் கணவர் டாஸ்மார்க்கில் பணத்தைக் கொடுத்து அரசாங்கம் பிழைக்க வழி செய்பவர். ஒருநாளும் அவர் அரசாங்கத்தை ஏமாற்ற மாட்டார். அவருக்கு தன் சின்னப்பெண் மீது தான் அதிக பாசம். “எங்க சின்னப் பொடுசு இன்னிக்கி போடா குடிகாரான்னு சொல்லிப்போடுச்சு! குடிச்சுப்போட்டு வந்து அம்மாளை அடிச்சுட்டே இருக்கியா நீயி! நாங்க பாட்டி ஊருக்கு பொட்டியக் கட்டீட்டு போயிடுவோம்! நீ சோத்துக்கு வட்டலைத் தூக்கீட்டு ஊருக்குள்ள போவ பாரு! அப்புடின்னு சொல்லிடுச்சு! எனக்கு ஒரு கோட்டர் மட்டும் போதும்!” என்பார்.அவர் தன் இரு சக்கர வாகனத்தில் மனைவியுடனும், அவர் பாப்பாக்களோடு நான் எனது இருசக்கர வாகனத்திலும் பெருந்துறை துணிக்கடல் ஒன்றுக்கு சென்றோம். அவரிடம் பணம் கொஞ்சம் அதிகம் விளையாடினால் அதிக பாசத்தையும் குடும்பத்தின் மீது கொட்டி விடுவார். அவர் பாப்பாக்களுக்கு துணிமணிகள் எடுத்து முடித்து பில் போடுகையில் திடீரென போதையில் இருந்தவர் ஜீன்ஸ் பேண்ட், சர்ட் என்று சின்னப்பாப்பாவுக்கு எடுத்து போட்டுப் பாரு சாமி! என்று நீட்டி விட்டார். அதுவும் போட்டு பையனைப்போல வரவே, ஜம்முன்னு இருக்குது சாமி! நேத்துக்கூட இப்புடி இல்ல போ! என்றார். பெரிய பொண்ணின் முகம் உம்மென்று ஆகிவிட்டது! தோழி என்னிடம் அழுதார். ”என்னுங்ணா இப்புடியே பண்ணுது இந்தாளு? பெருசு அப்ப இதுக்கு பொறந்ததில்லியா? அது எங்க போகும் பாவம்? வாங்குனா ரெண்டுக்கும் ஒரே மாதிரி வாங்கோணும்! சின்னதுக்கு மட்டும் மூனு செட்டு எடுத்துட்டு பெருசுக்கு ரெண்டுன்னா இது ஊடுபோயி அழுவுமுல்லண்ணா?” அப்புறம் என்ன? நண்பரிடம் சொல்லி பெரிய பொண்ணுக்கும் ஜீன்ஸ், சர்ட் என்று எடுத்துவிட்டுத் தான் வண்டி கிளம்பிற்று! பாசத்தில் சூப்பர் பாசம், அரைகுறை பாசம் என்ற வகையறாக்கள் இருப்பதை பல இடங்களில் கண்டு வந்தவனுக்கு இந்தப்புத்தகம் பாச மழையில் நனைத்தெடுத்து விட்டது.மயிலை, செவலை என்ற இரண்டு வளர்ப்பு மாடுகளைப் பற்றியான குறிப்பும் அவைகள் வயதான ஒரே காரணத்திற்காக கேரளாவுக்கு விற்கப்பட்டதால் அவற்றை பிரிய முடியாத அம்மாவின் அழுகையும் இன்னும் சிலநாள் என் மனதை விட்டு அகலாது! இது ஒரு குறும்படத்திற்கான தாக்கத்தை தன்னகத்தே தக்கவைத்திருந்தது! தொகுப்பில் மிக முக்கியமான பதிவு என்றால் இது தான். வளர்ப்பு மிருகங்கள் குடும்பத்தாரோடு ஒன்றியே வாழ்கின்றன என்று மீண்டும் ஒருமுறை சொல்லும் சோகம் மிகுந்த பதிவு.எளிமையான மொழியில் நாட்குறிப்புகளை படித்த நிறைவை இதை வாசித்து முடிக்கையில் உணர்ந்தேன். ஒரு சின்னப் புத்தகம் எதை எனக்குத் தரவேண்டுமோ அதை எனக்குத் தந்து விட்டது! இந்த உலகில் அன்பு, பாசம், நேசம் என்பவைகள் இல்லாம் இன்னமும் மரணிக்கவில்லை என்பதை பொட்டில் அடித்த மாதிரி எனக்கு புரியவைத்த புத்தகம் அம்பாரம்! வாழ்த்துக்கள் நண்பா! தொடர்ந்து எழுதுங்கள்!அன்போடே என்றும்

வா.மு. கோமு

30 -1 -2014

000ஜே.பி. சாணக்யாவின் என் வீட்டின் வரைபடம்ஜே.பி.சாணக்யா இப்போது எங்கே ஓடி ஒளிந்து மறைந்து திரிகிறார் என்று அதையும் காட்டும் என் பூத கண்ணாடிகூட ஆளைக் காட்ட மறுக்கிறது. சரி நமக்கு ஆள் ஒரு பிரச்சனையும் இல்லை. அவரது இரண்டு தொகுதிகள் உள்ளன.முதல் தொகுதி என் வீட்டின் வரைப்படம்.வாங்கி வைத்து ஐந்து வருடங்களாக அடுக்கில் தூங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சமீபத்தில்தான் வாசிக்க முடிந்தது. முழுத்தொகுதியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று பேசப் போவதில்லை நான்.மொத்தமே பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பில் ஒன்பதாவது கதையாக ஆட்டத்தின் விதிமுறைகள் என்ற கதை உள்ளது. தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாகவும் இதுவே உள்ளது. சிறுகதை எழுத வருபவர்கள் முதலில் மனிதனைப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாய் கலந்து புழங்க வேண்டும்.அந்தந்த மனிதர்களின்துக்கங்களின்,சந்தோசங்களையும் அறிந்திருக்க வேண்டும்.ஜே.பி.சாணக்யா எதையும் இட்டுக்கட்டி எழுதுவதில்லை.அவரின் ஆண்களின் படித்துறையே தூற்றியும்,போற்றியும் . சாணக்யா என்றால் படித்துறை கதைதான் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள். ஜே.பி. தனக்கு தெரிந்த மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆரவாரமின்றி நிதானமாக தன் கதைகளில் விவரித்துச் சென்றுள்ளார். அவரது பாத்திரங்கள் கற்பனைகளில் பிறந்து வரவில்லை.இவரது ஒவ்வொரு சிறுகதைகளும் நாவலுக்குண்டான விசயங்களை தன்னுள் கொண்டுள்ளன.ஜோசியன் கலியன் கதையின் துவக்கத்தில் தன் சைக்கிள் அருகில் நிற்க வற்றிய ஏரியின் ஓரத்தில் காலைவெய்யிலில் கிடக்கிறான். ஜோசியனுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண்கள் ஜோசிய தொழிலை விட்டு வெளியூர் சென்றுவிட்டதாக கூறுகிறார். மறுபடி கதைக்குள் இந்த மூவரும் வருவதே இல்லை.பெண் கன்னியம்மாள் தான் கணவன்வீட்டிலிருந்து வந்து விட்டதாக கதை ஆரம்பிக்கப்படுகிறது. பின் திருப்புக்காட்சிக்கு செல்கிறது.ஆசிரியரின் நான்கு பையன்களுக்கு ஜோசியம் பார்த்துவிட்டு அவர் தான் கிளம்புகையில் டவுனில் டெய்லரிங் கடை வைத்திருக்கும் பையனை கன்னியம்மாளுக்கு வயது 30 ஆகிவிட்டது பையனின் ஜாதகம் கிடைத்தால் போட்டு பார்த்து விடுவதாக ஆசிரியரிடம் கூறுகிறார் கலியன்.படிப்பு ஏறாத கன்னியம்மாள் கறுப்பு அழகி. உள்ளூரில் இவளை அரைப் பொம்பளை அரை ஆம்பளை என்கிறார்கள். நாலும் மூணும் ஏழு என்பாள். மூணும் நாலும் எவ்ளோ? என்றால் அது என்ன கணக்கோ என்பாள்.அந்த வார வெள்ளிக்கிழமை ஜோசியர் வீட்டில் கள்ளு வாடை! கன்னியம்மாள் நிச்சயம் செய்து போகிறார்கள். கன்னியம்மாளை கட்டிக் கொள்கிறான். இவர்கள் ஊருக்கும் இவள் புகுந்த ஊருக்கும் இடையில் ஐந்து ஊர்களே உள்ளதால் வாரம் ஒருமுறை கலியன் மகளை வந்து பார்த்துப் போகிறார். மாமியாருக்கும் பிடித்த மருமகளாக கன்னியம்மாள் மாறிப் போகிறாள்.கன்னியம்மாளுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது. குழந்தை பிறக்காததற்கு காரணம் தெய்வக்குற்றம் தான் என்று மாமியார் நம்புகிறார். அய்யனார் சாமிக்கும்,அய்யப்பன் சாமிக்கும் மாரியம்மனுக்கும் மூன்றுவித பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறாள் கன்னியம்மாள்.மணியனோடு டவுனில் சினிமா பார்க்கும் ஆசை கன்னியம்மாளுக்கு உண்டு. தொலைக்காட்சிப் படங்களை துண்டு துண்டாக பார்ப்பவள்.மணியனும் அழைத்துப் போவதாக சொல்லி ஒரு ஞாயிறு அன்று கன்னியம்மாளை அழைத்து கொண்டு புறப்படுகிறான். அம்மா பத்திரமாக சென்று வரும்படி அறிவுறுத்துகிறாள். அவர்கள் பேருந்து நிறுத்தம் வந்தபோது அன்று பஸ் ஓடவில்லை.ஜாதி தலைவரை கைது செய்ததால் பேருந்துகள் இல்லை.வருத்தமாக வீடு திரும்புகிறார்கள்.தெருவில் அவர்கள் திரும்பி வந்ததற்கான காரணத்தை சொல்லியே அலுத்துவிட்டது!அன்று ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் ஓடும் என்றும் வானொலி செய்தி கேட்டதாகவும் மணியன் கன்னியம்மாளிடம் கூறுகிறான்.அன்று மாலையே அவளை இழுத்துக் கொண்டு மணியன் புறப்படுகிறான். இவர்கள் தியேட்டருக்கு செல்கையில் ஆறு மணிக்கே படம் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாளுமில்லாத திருநாளா திருவிழாவுக்கு போனானாம்..திருநாளும் வெறும் நாளாய் போச்சாம்.. அந்தக் கதையா இருக்கு என்று கூறி சிரிக்கிறாள்.இருவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள்.இரண்டாம் ஆட்டம் பார்த்து கடைசி பஸ்சுக்கு காத்திருக்கிறார்கள்.கூட்டம் இல்லை என்றால் ஒவ்வொரு நாள் பஸ் ஊருக்குச் செல்லாது!நடக்க ஆரம்பிக்கிறார்கள்.அத்தைக்கு நீங்களே பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.பாலம் ஒன்றை கடக்கையில் நான்கு பேர் வருகிறார்கள். கன்னியம்மாளை தூக்கிப் போய் காரியம் பார்க்கிறார்கள். மணியன் வாயில் துண்டுத்துணி திணித்து கை கால் கட்டப்படுகிறான்.முடிவாக அவளுக்கு நல்ல மார்பகங்கள் என்று பேசிக்கொள்ள அவர்கள் கார் உறுமுகிறது.இருவரும் விசயத்தை வீட்டில் மறைக்கிறார்கள்.இரவுகளில் அவளை கட்டிக்கொண்டு மணியன் அழுகிறான்.அந்த மாதம் அவளுக்கு நாள் தள்ளிப் போகிறது வீட்டிலும் அனைவர் முகத்திலும் பிரகாசம். கன்னியம்மாள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிவிட்டாள். மணியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவள் செத்துப் போவாள் என்றும், தான் அழுவோம் என்றும் நாட்கள் கழித்து தனக்கு வேறு பெண்ணை கட்டி வைப்பார்கள் என்று நினைத்திருந்தான். மெதுவாக தாயிடம் விசயத்தை உடைக்கிறான். தாய் ஊருக்கெல்லாம் உடைக்கிறாள்.வீட்டில் ஆமை புகுந்து விட்டதாகவும் இந்த வீடு உருப்படாமல் போகப் போவதாகவும் .... பேச கன்னியம்மாள் திகைக்கிறாள். மணியனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.மணியன் அம்மாவின் சொல்லிற்கேற்ப கன்னியம்மாளை அவள் ஊருக்கே வந்து விட்டுப் போகிறான்.கன்னியம்மாள் நடந்த விசயங்களை கலியனிடம் சொல்லி அழுகிறாள்.அவர் கடவுளை திட்டுகிறார்.ஆசிரியர் பஞ்சாயத்து பேசுகிறார். மணியன் வருவதில்லை.கன்னியம்மாள் குழந்தை பெற்றெடுக்கிறாள். யாருக்கோ பிறந்த பிள்ளையை என் மகன் ஏன் பார்க்கணும்? என்று மணியன் கூவுகிறார்.ஆசிரியர் மற்றொருவருடன் மனியனை கடையில் சந்தித்து பேசுகிறார்கள்.அவன் இசைவது தெரிந்ததும் கடைக்கு அருகிலேயே வீடு பிடித்து குடும்பத்தைமாற்றும் எண்ணத்தில் துரிதமாக செயல்படுகிறார்கள். ஆனால் கன்னியம்மாள் அதற்கு ஒத்துவராமல் நானாச்சு என் பிள்ளையாச்சு என்கிறாள். கிராமிய சூழலில் இதில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தன்னளவில் குறுங்கிப் போய்த்தான் உள்ளனர்.தனக்குத் தெரிந்த நியாயங்களோடே அவர்கள் வாழவும் பிடிவாதமாய் உள்ளனர்.கன்னியம்மாவும் இந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் பிரமாதமான முடிவாய் ஒன்றும் எடுக்கவில்லை. கிராமிய சூழலில் உள்ள எனக்கு இது சாதாரண அன்றாட நிகழ்வு போன்று தான் என்றாலும் சொல்லும் முறையில் ஜே.பி. நிமிர்ந்து நிற்கிறார். கன்னியம்மாளுக்கு வாழ்வதற்கான பிடிமானம் கிட்டிவிட்டது!அவள் வாழ்வில் கணவன் தேவையில்லை தான்.இதேபோன்று கவியோவியத்தமிழனின் சிறுகதை ஒன்றில் கர்ப்பம் தரிக்காத பெண் கோவிலுக்கு செல்வார். துணையாக உள்ளூர் பெண்களும் செல்வார்கள். இராக்காலங்களில் கோவிலின் ஒதுக்குப்புறத்தில் செடிகள் ஆள் உயரம் வளர்ந்திருக்கும் பகுதிக்கு தோழி ஒருத்தி இவளை கூட்டிப் போவாள்.அங்கே ஆண்கள் இருப்பர்.ஒரு கை இருட்டில் இவளைப் பிடித்து தூக்கிப் போகும்.எதுவுமே நடவாதது போல வீடு வந்து விடலாம்.7.6.10 நக்கீரன் இதழில் வந்த விசயம் அதிர்ச்சிகரமாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை சலீம் தற்கொலைசெய்து கொண்டார்.நிகராபேகம் டிகிரி படித்த பெண்.அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். அம்மா ரசியாபேகம் தான் பொண்ணை வளர்த்துள்ளார்.ரசியா பேகத்துக்கு ஒரு பையனும் உண்டு.டிசம்பர் 16ல் மங்னா செய்தார்களாம்.மூன்றாவது நாளில் ரசியா பேகம் நிச்சயதார்த்த சிடி பார்க்க சலீமை அழைத்திருக்கிறார். சலீம் அண்ணன் நிஜாமிடம் சொல்ல... அப்படியே இன்னொரு காப்பி வாங்கிட்டு வா என்று தாட்டி விட்டிருக்கிறார். போனவர் மூன்று மாதம் பெண் வீட்டிலேயே தங்கிவிட்டிருக்கிறாராம்.(இந்த இடம்தான் எனக்கே உதைக்கிறது)மார்ச் 25ம் தேதி நிஜாமிற்கு போன் வருகிறதாம். மாப்பிள்ளையை பிடிக்கலை.நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணனும் என்று!சலீம் எழுதிய மரணவாக்குமூலம்:

நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நிகராவும் நானும் காதலித்தோம்... சுற்றினோம்.. படம் பார்த்தோம்.ரசியா பேகம் என்னை நிகரா ரூமில் தள்ளி கதவை சாத்திக் கொண்டார். நாங்கள் உல்லாசமாக இருந்தோம். ரசியாபேகம் சொன்னது என்ன என்றால் என் மகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக வேண்டும். சொந்தத்தில் நிறையப் பேருக்கு திருமணமாகியும் குழந்தைகள் இல்லை.என் மகளுக்கும் குழந்தையில்லாமல் போய்விடக் கூடாது! அதனால் குழந்தை முதலில் பிறகு திருமணம் என்றார்.அவர்கள் வீட்டிலேயே நான் இருந்தால் என் சொத்தில் சிலவற்றை விற்றுத்தர சொல்லி பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள்...எப்போது ரிட்டன் பண்ணுவீர்கள்? என்று கேட்க என் மகள் உன்னோடு இருந்ததற்கு சரியாய் போய்விட்டது என்றார்கள்.நிகராவும் எனக்கு குழந்தை உருவாக வேண்டும்..அது இல்லை என்றால் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றாள். இதனால் அடியேன் தற்கொலை செய்து கொள்கிறேன்... என்னை போல யாரும் பாதிப்படக்கூடாதுஒவ்வொருவரும் விதம் விதமாய்தான் யோசிக்கிறார்கள். விதவிதமாய் முடிவும் எடுக்கிறார்கள். இந்த விசயத்தில் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.எல்லாமே கேப்மாரித்தனங்கள் தான். இந்த மாதிரி விசயங்களும் இதைவிட பயங்கரமான விசயங்களும் நம்மை எந்த விதத்திலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதோ... பாதிக்கச் செய்வதோ இல்லை.என்னைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று சலீம் எழுதியிருக்கிறார்! உன்னைப் போல யார் தான் இந்த உலகத்தில் பாதிப்படைவார் சலீம்?குழந்தை இல்லை! குழந்தை இல்லை! என்கிற பிரச்சனை வரும் காலத்தில் இன்னமும் அதிகமாகும்தான்.அப்போது இதைவிட மேலான ஒழுக்கக் கேடுகள் நிகழவும் செய்யும் தான்! இதற்கெல்லாம் நம்கையில் எந்த தீர்வுகளும் இல்லை! வெறும் பார்வையாளர்கள் தான் நாம்.

000

சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை

நாடகம் ஹிந்தி மூலம் சுரேந்திரவர்மா1978ல் கிரியா 7 ரூவாயில் போட்ட சின்ன புத்தகத்தை இவ்வளவு காலமும் ஏதோ சரித்திர கதை போல என்று நினைத்து படிக்காமல் விட்டு ரொம்ப தாமதமாகி விட்டது. பார்த்தால் பட்டாஸ் கிளப்பும் அரண்மனைக்கதை இது. சமீபமாக என் ஆசை சரித்திர நாவல் ஒன்று எழுதுவது என்பது. என் கதையில் சரித்திரமாவது ஒன்றாவது? அதை பிறகு பார்ப்போம்.ஓக்காக் மல்ல நாட்டின் அரசன். அவன் ஆண்மை குறைபாடு உடையவன். அவன் மனைவி சீலவதி. 5 வருடங்களாக குழந்தையில்லை என்பதால் ராஜகுரு, சேனாதிபதி ஆகியோரின் முடிவில் தண்டோரா போடப்படுகிறது.பெளர்ணமி மாலை பட்டத்தரசி சீலவதி அரச மண்டபத்தில் கடமைப்பாவையாகி பவனி வருவார்கள். அச்சமயம் மல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வருகை தந்து அரசி யாரையேனும் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு இரவு மாற்றுக் கணவனாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்!சீலவதி அப்படி ஒரு இரவு தன் பழைய காதலனுடன் இரவு தங்கி வருகிறாள். அவள் பேசும் வசனங்கள் இந்த நாடகத்தில் முக்கியமானவைகளாக இருக்கின்றன. அசத்தும் புத்தகம். இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கடைசியாக நம்மெல்லாம் சும்மா போல ஆகிவிட்டது எனக்கு! இதை வாசித்ததும் நல்லது தான். இதற்கும் மேலாக எழுதினால் செய்ய விருப்பபடுவேன்!

000குன்னூத்தி நாயம்மு.ஹரிகிருஷ்ணன்
சிஷ்யப்பிள்ள பொத்துவத்துக்கு நாலுவார்த்தெ எழுதிலீன்னா நல்லாவா இருக்கும்! இவந்தான் தென்னகத்தின் மார்க்குவசுன்னு பெருசு முன்னயே சொல்லிப்போடுச்சே!ரொம்ப வருசமா இதே அழும்பா இருக்குதே, ஊருக்கவண்டமூட்டு கொட்டாயிக்குள்ள டொக்குப் போடறாங்கன்னே இவம் பேனா பச்சக் கலருல எழுதுதே..குசலம் பேசக் கூட ஒரு சனமில்லியா ஊருலே? இப்புடியே போனா குடிநாசுவஞ் செரைக்கிற கதைய சாவுமுட்டுலும் பொத்தவத்துல அச்சுப் போட்டுட்டே இருக்கானே..இவுனுத செரைக்க அந்தூருல சவரக்கத்தி இல்லியா? அட அதாம் போச்சாதுன்னு மேக்கொண்டு பாத்தா சனத்தோட கதையச் சொல்லிப்பிடறேன்னு எங்கப்பாரு சொன்ன அத்தரு பழசு ஜாமாங் காதைய இழுத்துக் கொண்டாந்து பொட்டனேரி பள்ளத்துல குக்கிட்டு கும்மியடிச்சு ஊரே கேளு நாடே கேளுன்னு கொட்டறானே.. இவங் கையக்கொண்டு சந்துல ஈரப்பதத்துல வெக்க!கருமாந்தரம் புடிச்செழவு இந்த மாடுக வேற ங்கொம்மா.. ங்கொம்மான்னு ன்னு கத்தியே ஊருல எழுவு வுழுந்துடும்போல இருக்கே.. போயிச் சித்த தண்ணி காட்டி தாட்டி உடலாமுன்னா கட்டக்கால புடிச்சி எந்திரிக்க முடியுதா ஒரு எழவா? எருதுக்கு கத்துற மாட்டெ எவண்டா போயி செனையேத்துவான்? ஊருல ஒருபய இல்லியாடா மாட்ட பதம்பாக்க? ஹரிகிருஷ்ணனை கூப்புட்டுக்கோங்க செனக்கி பதனமா மாட்ட நைச்சியம் பண்டி கூத்துப்பாட்டு பாடி கூட்டிட்டு போவாம்!இந்த மூனுஷா பிள்ளை இருக்காளே அவ தண்ணி வாத்தாலும் வாத்தா அந்த சீனுப்படத்தெ அத்தினி சாமிகளும் குட்டானா கொட்டாயில குந்தி அடிச்சுட்டுட்டே பாத்து ரசிக்குதுகளே! காஞ்சு போன நதியெல்லா வத்தாத நதியப்பாத்து மனசத் தேத்திக்கு! (ஆதாரம் இல்லியம்மா ஆறுதல் சொல்ல!)

ரமேசுபிரேமு, கோணங்கி, எம்.ஜி.சுரேசுன்னு தமிழ்ல சொய்ங் சொய்ங்கின்னு கரணமடிக்கிற எழுத்துகள எழுதுனாங்கள்ல.. அதே மாதெரி இதுவு உங்களப் பத்தி சொல்ற உங்க கதைக தாம்! ஆனா மனுச மக்க பேசுற எச்சுப்பண்ணாட்டு பேச்சாவே பொத்தவம் முழுக்க இருக்கும்!ஹரிகிட்ட நேர்ல பேசுங்க பொத்தவத்துல பேசுனாப்பிடி பேசமாண்டான்! மொழிவேற ஆள் வேற! இதுவரிக்கிம் கண்ட இலக்கியம் வேற இது வேற!

தானிக்கிம் தீனிக்கிம் சரியாப் போச்சி!

000தற்கொலை குறுங்கதைகள்அராத்து
அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் வாசித்து முடித்து விட்டேன். தமிழில் பாலியல் கதைகளுக்கு எப்போதுமே வறட்சி தான். அதை எழுதினாலோ, வாசித்தாலோ தமிழ் குடும்பங்கள் சீர்கெட்டு நாசமாகி விடும் என்று பலர் நம்பி இருளுக்குள் கடமைக்காக கோழிப்புணர்ச்சி புரிந்து கொள்கிறார்கள். மனைவிமார்களும் அந்தக் காரியமே அம்புட்டு நேரம் தானாட்ட இருக்குது என்று நம்பி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு நெற்றியில் பட்டையடித்து வாழ்கிறார்கள். தங்களுக்கு இயல்பாக வரும் க்கேசைக்கூட பொதுவெளியில் பம்மி அடக்கி நசுக்கி விட்டு விட்டு கூட்டத்தில் கலந்து விடுகிறார்கள்! அராத்துவின் கதைகள் எல்லாமே சாந்தி என்கிற பெண்ணின் காமச் செயல்பாடுகளாக மிக இயல்பாக சொல்லப்படுகின்றன! இவைகள் அனைத்துமே குறுங்கதைகள் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதற்கு முகநூலில் இவைகள் எழுதப்பட்டவைகள் என்பது காரணமாகப் படுகிறது! தமிழில் இந்த அளவுக்கு காமத்தை பெண் பேசுவது போல் ஒரு புத்தகம் இதுவரை வரவில்லை!மிக இயல்பான கதைகளுக்கு முன்னுரை என்று சாரு எழுதியிருக்கும் பயங்கரங்கள் தான் ஏன் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை! மார்க்கி தே சாத், டொனால்ட் பார்த்தெல்மே, ஜார்ஜ் பெரக், பின்நவீனம் என்றெல்லாம் சுத்தியடித்து (வழக்கமாக அடிப்பது, சாதாரணமாக படிப்பவனை மிரட்டுவது) மிரட்டும் அளவுக்கு புத்தகம் பிரம்மாண்டமில்லை! அழகான ரசிக்கத்தக்க கதைகள் என்ற அளவில் தான் நிற்கின்றன. அராத்து தன் முன்னுரையில் சொல்வது போல சாருவின் முன்னுரை வாசித்து ஒருவேளை பயங்கரமோ? என்று மிரண்டு மேலும் சில குறுங்கதைகளை சேர்த்ததாக குறிப்பிடுகிறார்.இந்த புத்தகத்தை வாசிக்கும் முன்பாக கன்னட பிரசாத்தின் இருட்டு உலகம் வாசித்தேன். எல்லா நடிகைகளையும் பிரசாத் புள்ளிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறார். அதில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன! டொனால்ட் பார்த்தெல்மே, போர்ஹே என்று இந்த புத்தகத்திற்கு ஜல்லி போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.1989ல் ஒரு புத்தகம் வந்தது. அதன் தலைப்பு .பேன்சி பனியனும். 11-8-89 அன்று பிரேம் முன்னுரை எழுதியிருந்தார். இந்த நாவலில் எவ்வகையான சொல்லாடல்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும், எவ்வகையான குறிகள் மற்றும் பிம்பங்கள் ஆற்றலழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் வாசிக்கும் பொழுதே இதை எழுதுபவனாகவும், இதில் எழுதப்படாத மெளனங்களையும் வாசிக்கிறவனாகவும் செயல்படும் ஒரு வாசகன் இதனுள் பின்னப்பட்டிருக்கும் பல செய்திகளை கட்டவிழ்த்து கலகம் என்பது இப்பிரதியாக்கத்தில் எந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறது என்பதை அறிவதன் மூலம் பிரதிக்கு வெளியிலும் இந்த ஆய்வை தொடர முடியும்! என்றெல்லாம் பயங்கர பில்ட்டப் வரிகள் நிரம்பியிருந்தன. உள்ளே நாவலில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை! இப்போது தற்கொலைக் குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன! ஆனால் முன்னுரையில் தான் …….பேதியாகும் போல் இருக்கிறது!

000வா.மு. கோமு நேர்காணல்கள்

""பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்!''

- வா.மு. கோமு நேர்காணல்வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், மண்ணின் மக்கள் பேசும் மொழியுடன் நவீன மொழியைக் கலந்து, தனக்கேயுரிய பகடி மூலம் படைப்பின் உன்னதத்தைக் கண்டடைகிறார். கோமு நவீனக் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டு எழுதினாலும், சிக்கனமான வடிவத்தில் எழுதும் சிறுகதைகளில் இவர் பேசும் விளிம்புநிலை மக்களின் அந்தரங்க யதார்த்தம் ஜி. நாகராஜனை நினைவூட்டக் கூடியது. எனினும் தனக்கேயுரிய இலக்கியச் செயல்பாட் டில் பிடிவாதமாக இருக்கும் இந்த இளம் படைப்பாளி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "நடுகல்' என்ற சிற்றிதழை யும், பின்னர் "இறக்கை' என்ற சிற்றிதழையும் நடத்தியவர். "அழுவாச்சி வருதுங் சாமி', "மண்பூதம்', "அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம்', "தவளைகள் குதிக்கும் வயிறு' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தற்போது "உயிர்மை' வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது முதல் நாவலான "கள்ளி' பரவலான கவனத்தையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. தற்போது "கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்' என்ற நாவலை எழுதி வரும் அவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்ததிலிருந்து...உங்கள் கதைகளை வாசிக்கிறபோது இசங்களின் பால் ஈர்ப்பு கொண்டு பல கதைகளை எழுதியிருக் கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே இசங்களை முற்றாக நிராகரித்து விட்டு நீங்கள் எழுதியிருக்கும் கதைகள், உத்திகளால் சிதைந்து விடாத படைப்புகளாக வெளிப்பட்டிருக்கின்றன. உண்மையில் இசங்களும் உத்திகளும் படைப்பிலக் கியத்திற்கு வலு சேர்க்கக் கூடியதா? அல்லது படைப்பை பலவீனப்படுத்தக் கூடியதா? உங்கள் எழுத்தனுபவம் வழியாக இதற்கான பதிலைச் சொல்லுங்கள்.""தொண்ணூறுகளில்தான் இசங்கள் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதுபற்றியான தெளிவு என்னிடம் இல்லை. ஆரம்பம் கொண்டே கட்டுரைகளை நான் வாசிப்பதில்லை. கட்டுரைகள் படிப்பது என்பது எனக்கு ஒவ்வாமையாகி விடுகிறது. எனது தந்தையாரின் சேகரிப்பில் இருந்த "சர்ரியலிசம் ஒரு அறிமுகம்', "எக்ஸிஸ்டென்சியலிசம் ஒரு அறிமுகம்' ஆகிய கனமான தொகுதிகள் இன்னும் என்னிடம் உள்ளன. இன்றுவரை பத்து பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை. தமிழில் மொழிபெயர்ப்பில் வந்த போர்ஹே, மார்குவஸ் சிறுகதைகளைச் சற்று ஆழமாக வாசித்த அனுபவத்தில், நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சோதனை முயற்சியாக எழுதி வெற்றியடைந்த படைப்பு களாக அவை மாறிவிட்டன. அதற்குக் காரணம் நமது மண்ணில் எனக்குத் தெரிந்த மனிதர்களையும் நிலத்தையும் வைத்து மாஜிக்கல் ரியலிசத்தைக் கரைத்துக் குடித்துவிட்டவன்போல எழுதிக்காட்டி... குறிப்பிட்ட வாசகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுவிட்டேன். மிகச் சிரமப்பட்டு எழுதும் கதைகள் பரவலான கவனத்தைப் பெறுவதில்லை என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். இருந்தும் இன்றும் அந்த ஆசை விடுவதில்லை. பத்து கதைகளுக்கு ஒரு கதையை எனக்கே புரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தீவிர வாசகர்கள் எதையோ ஒன்றைக் கண்டுபிடித்து அதைத்தானே சொல்றீங்க என்று விளக்கினால் ஆமாம் என்று கூறிவிடுவேன்.இசங்கள், உத்திகள் ஆகியவற்றைப் பெருமைக்கு வேண்டுமானால் சிறுகதைகளில் பயன்படுத்தலாம். பெருமைக்கு காக்கா இசி சாப்பிடப் போய், றெக்கையெல்லாம் இசி அப்பிக் கொண்டு வந்ததுபோல் ஆகிவிடாமல் சாமர்த்தியம் செய்வதன் அவசியம் இருக்கிறது! நவீன முயற்சியில் வெற்றி- தோல்வி பற்றிப் பிரச்சினை இல்லை. எப்படியாகினும் தமிழுக்கு லாபம்தான். புரியாத மொழியில் எழுதி மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேனோ என்று போர்ஹே கவலைப்பட்டாராம். எனக்கு அந்தக் கவலை இல்லை.''தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார இலக்கியம் என்பதாகப் பிரித்து வகைப்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? கொங்கு வட்டார வாழ்வியலை இலக்கிய வழியில் பதிவு செய்த படைப்பாளிகளின் வரிசையில் உங்களுக்கான இடம் எதுவென்று நினைக்கிறீர்கள்?""வட்டார இலக்கியம் என்று வகைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடு இல்லை. வட்டார இலக்கியம் என்று நகரத்தில் அமர்ந்துகொண்டு வட்டார மொழியைத் தங்களது படைப்புகளில் சிலர் உருவாக்குகிறார்கள். பேச்சு மொழியையும் உருவாக்கு கிறார்கள். இன்றுவரை நான் கிராமத்தில்தான் இருக்கிறேன். கிராம மக்களோடுதான் உறவாடுகிறேன். அது என் சில கதைகளில் இயல்பாகவே வந்துவிடும். இது எனது வட்டார பழக்க- வழக்கங்களை எனது கதைகள் வழியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகத் தெரிந்து கொள்கிறார்கள். நான் இங்குள்ள கோவில் விஷேசங்கள், இழவு காரியங்கள், திருமணச் சடங்குகள் என்று எழுதுகையில், கொங்கு வட்டார நிகழ்வுகளைத்தான் பதிவு செய்கிறேன் என்கிற எண்ணத்திலெல்லாம் எழுதுவதேயில்லை.எனக்கு முன்பாக ஆர். சண்முகசுந்தரம் தனது நாவல்களில் இவற்றைப் பதிவு செய்தார். சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளான கவுண்டர், முதலியார் இனமக்கள் கொங்கு மண்ணில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மட்டுமே நாவல்களில் பதிவாக்கினார். நான் தினமும் உறவாடுவது விளிம்புநிலை மக்களிடம் மட்டுமே. என் எழுத்துகள் விளிம்புநிலை மக்களை மட்டுமே பேசுவது இயல்பான விஷயமாகி விட்டது. இந்த மக்களைப் பற்றி என்னைத் தவிர யாரும் இங்கு பேசவில்லை.கொங்கு மண் விரிந்து படர்ந்திருக்கிறது. கோவையில் ஒரு மாதிரியாகவும் ஈரோட்டில் ஒரு மாதிரியாகவும் நாமக்கல்லில் ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள். ஏரியாவிற்கு ஏரியா பேச்சு வழக்கு மாறுபடுகிறது. சேலம் மாவட்டத்தில் ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த மு. ஹரிகிருஷ்ணன் கிராம மக்களின் பேச்சுமொழியை அப்படியே சுவீகரித்து எழுத்தில் வார்த்துவிடுவார். கொங்கு மண்ணைப் பதிவு செய்பவர்களில் என். ஸ்ரீராமும், .சீ. சிவகுமாரும் முக்கியமான வர்கள். இவர்கள் நாவல் எழுத வருகையில் இதுவரை பதிவாகாத விஷயங்கள் வெளிப்படலாம். எனது "கள்ளி' நாவல் வட்டார நாவல் என்கிற வட்டத்துக்குள் சிக்கிவிட்டது. வட்டாரம் என்கிற கிணற்றினுள் இனியும் நீந்த எனக்கு விருப்பமில்லை.''வட்டார பேச்சுமொழியின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கட்டமைப்பிற்குள் சிக்காத எளிய சொல் அடுக்குகளால் பின்னப்படும் உங்களது நவீன மொழி என்பது, விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவதற்கென்றே உருக்கொண்டதுபோல் தோற்றம் கொள்கிறது. இந்த மதிப்பீடு சரிதானா?""கடந்த மூன்று வருடங்களாக நான் எழுதியவை அனைத்துமே விளிம்புநிலை வாழ்வியல் கதைகளே! வட்டார மொழி என்பது ஒரு உபகரணம் மட்டுமே. அது நம்பகத் தன்மையைக் கதைக்குள் உயர்த்துகிறது.வட்டாரப் பேச்சுமொழி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது. இலக்கியம் தீர்மானிப்பது பேச்சுமொழி, உரையாடல் மட்டுமே அல்ல.இன்னமும் சொல்வதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைத்தான் மதுரை நண்பர் கூறுவார்- சாதாரண கதைகளை சாதாரண மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதி, அதெப்படி அற்புதமாய் வார்த்தெடுக்க முடிகிறது என்று. அதுதான் சாமர்த்தியம். எத்தனையோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?வட்டாரப் பேச்சுமொழியை என் கதைகளில் வலிந்து நான் திணிப்பதில்லை. அதுவாக வரும்போது மட்டும் பயன்படுத்துகிறேன். "உயிர் எழுத்து' வெளியீடாக வந்த "தவளைகள் குதிக்கும் வயிறு' சிறுகதைத் தொகுதியில், ஒரு ஐந்தாறு சிறுகதைகள் நீங்கள் குறிப்பிட்டது போல் அழகான வடிவத்தில் கச்சிதமாகப் பொருந்தி என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "போதை ஏறிப்போச்சு', "அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', "இந்த தடத்தில் உள்ள அனைத்து இணைப்பு களும் உபயோகத்தில் உள்ளன' போன்றவை அவை.''கிராமிய வாழ்வைக் களமாகக் கொண்ட உங்கள் கதைகளை மொத்தமாகப் படிக்கிறபோது, ஒரு நாவலைப் படித்த அனுபவம் ஏற்படுகிறது. எனினும் உங்களது "கள்ளி' நாவல் என்று வருகிறபோது கிராமிய அந்தரங்க வாழ்வின் முகத்தை அதிர்ச்சிகரமாக முன் வைக்கிறது. நவீன தமிழ் நாவல் என்பதில் புனைவு முக்கிய செயல் முறையாக மையம் கொள்ளும் காலகட்டத்தில், புனைவை உதறிவிட்டு அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து என்பது எந்த வகையில் அடங்குகிறது?""பாலுறவு தொடர்பான உறுப்புகள் பற்றியெல்லாம் சாதாரண மாகப் பேசுவதையே பாவமாகவும் ஒழுங்கீனமாகவும் கட்டமைத்துள்ள நீதி நியதிகள் நிலவுகின்ற சமூகத்தில், நான் வைக்கின்ற பாத்திரங்களின் உறவுகள் அதிர்ச்சிகரமானதாகத்தான் இருக்கும்.அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து புனைவோடு சம்பந்தப் பட்டதுதான். நான் காட்டிய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புனைவை உதறிவிட்டு அந்தரங்கம் பேசும் எழுத்து இல்லை. "கள்ளி' நாவலின் முதன்மையான நோக்கமே ஒழுங்கமைக்கப் பட்டுள்ள நீதி, நியதிகளை உடைத்து நொறுக்குவதுதான்.ஒவ்வொரு எழுத்தாளனின் முதல் நாவலும் அவனது சொந்த விஷயங்களையே பேசும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே எனது சொந்த விஷயங்கள் பல சிறுகதைகளாக எழுதப்பட்டுவிட்டன. நாவல் என்கிற களம் எனக்கு அறிமுகமில்லாதது. எனது தஞ்சை