273
காரைக்குடி உணவகம்

(ருசியா சாப்பிட்டு பழகுங்க)


ஜோதிஜி திருப்பூர்


மின்னஞ்சல் - powerjothig@yahoo.com


வகை – அனுபவம்


வெளியீடு : .ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com


மின்னஞ்சல் - tshrinivasan@gmail.com


எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.


உரிமை Creative Commons License


This eBooks is licensed under a Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US


You are free to:

Share — copy and redistribute the material in any medium or format

The licensor cannot revoke these freedoms as long as you follow the license terms.

Under the following terms:

Attribution — you must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.

Non Commercial — you may not use the material for commercial purposes. http://deviyar-illam.blogspot.com/

No Derivatives — If you remix, transform, or build upon the material, you may not distribute the modified material.

No additional restrictions — You may not apply legal terms or technological measures that legally restrict others from doing anything the license permits. At the end of the book, add the contents from the page.

Free Tamil EBooks

எங்களைப் பற்றி


http://freetamilebooks.com/about-the-project/
என் வாழ்க்கையில் மற்றும் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்ட நண்பர் இராஜராஜனுக்கு இந்த மின் நூலை சமர்ப்பிக்கின்றேன்.உள்ளே


முதல் பகுதி - உணவே மருந்து


  1. காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு


  1. காரைக்குடி உணவகம் – சத்துணவகம்

3.காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


4 காரைக்குடி உணவகம் - ருசியா சாப்பிட்டு பழகுங்க


5 ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா?


6. கழுகுக்கூட்டங்கள்


7. நாம் (மட்டுமே) தான் காரணம்


8. அவன் ஒரு தீவிரவாதி


பகுதி இரண்டு - ஆன்மீகம் (எண்ணமே வாழ்க்கை)


9 ஆசான்


10. யோகா கலையும் யோகக்காரர்களும்?


11. கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள்


12. கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 2


13. கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள் 3

14. கடற்கரைச் சாலை – பயணக்குறிப்புகள் 4

15. பயணமும் படங்களும் - பசியும் ருசியும் 5


16. பயணமும் படங்களும் - அரை நிர்வாண பக்கிரி 6


17. கடற்கரைச் சாலை - செந்தில்நாதன் அரசாங்கம் 7


18. பயணமும் படங்களும் - மணலுக்குக் கீழே பிணங்கள் 8


19. ஆன்மீகம் என்பது யாதெனில்?


20. ஆன்மீகம் எனப்படுவது யாதெனில் 2


21. ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்?


பகுதி மூன்று - அரசியல் (ஆயுதம் ஏந்தாத யுத்தம்)


22. காசு, பணம், மணி, துட்டு


23. இந்தியா -- பணக்காரர்களின் உலகம்


24. ஊரெல்லாம் மினுமினுப்பு 2013


25. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும்


26. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 1


27. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 2


28. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 3


29. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 4


30. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - 5


31. மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை


32. நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்
என்னுரை


வணக்கம்.


இது என் ஏழாவது மின் நூல். முந்தைய ஆறு மின் நூல்களின் பட்டியலை இந்த மின் நூலின் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ளேன். முதல் மின் நூல் 2013 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டேன். கடந்த 14 மாதங்களில் ஆறு மின் நூல்கள் வழியாக 66000+ பேர்களை சென்றடைந்துள்ளேன். இது வரையிலும் அச்சுப் புத்தகமாக டாலர் நகரம் என்ற முதல் புத்தகம் வெளி வந்தது. மேலும் இரண்டு புத்தகங்கள் அச்சுக்காக காத்திருப்பில் உள்ளது. இணையம் என்றொரு வசதி மட்டும் வந்து இருக்காத பட்சத்தில் நானும் சராசரி திருப்பூர் வாசியாகத் தான் என் வாழ்க்கையை கழித்துருப்பேன். கடைசி வரைக்கும் எனக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை கண்டிருக்க முடியாது. இணையத்தில் தமிழ் எழுத்து வரவழைக்க, பரவலாக்க உழைத்த அனைவருக்கும் என் வணக்கம்.


என் தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட கட்டுரைகளை இதில் உங்களுக்கு தொகுத்துக் கொடுத்துள்ளேன். உணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றுமே மக்களின் அவசிய தேவையாக உள்ளது. அரசியல் என்பதனை காலம் காலமாக மக்கள் நமக்கு தேவையில்லாதது எனக் கருதி ஒதுங்கிச் சென்று கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தின் வாயிலாக ஒவ்வொருவரையும் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் அரசியல் இருந்தது. ஆனால் இன்று பரிணாம வளர்ச்சியில் சாதி அரசியல், மத அரசியல், மொழி அரசியல், பிராந்திய வெறி அரசியல் என பல கூறுகளாக பிரிந்துள்ளது.


ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்களையும், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற பொதுத் தேர்தல்களையும் பொது மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம் ஓட்டுக்காக கிடைக்கும் சொற்பத் தொகை என்பது அவர்கள் குடும்பம் ஒரு மாதம் முழுக்க சேமிக்க முடியாத தொகையாக உள்ளது. மக்கள் ஓட்டுக்காக கூச்சமின்றி கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளும் வெட்கமின்றி கொடுத்துப் பழகி விட்டனர்.


இதில் தொகுக்கப்பட்டுள்ள 31 கட்டுரைகளும் என் வலைபதிவில் வெளியிட்ட இரண்டு நாளைக்குள் ஆயிரம் பேர்களுக்கு மேல் படிக்கப்பட்ட கட்டுரையாகும். படித்த பலரும் தங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு பகிர்ந்ததாக பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தனர்.


காரைக்குடி உணவகம் பகுதியில் எழுதப்பட்ட ஒவ்வொரு கட்டுரையும் வாசித்தவர்களின் குடும்ப நலனில் அக்கறை செலுத்தியது. ஆன்மீகம் குறித்த கட்டுரைகள் அவர்களின் சிந்தனைகளை உரசிப் பார்த்தது. எப்போதும் போல அரசியல் கட்டுரைகள் அதிக வாசகர்களை தளத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. ஒவ்வொரு கட்டுரையும் தனிப்பட்ட முறையில் எனக்கும் திருப்தி அளித்தது.


கடந்த ஐந்து வருடமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு நான் சார்ந்துள்ள ஆயத்த ஆடைத் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு என்னால் ஆன விருப்பங்களை வலைபதிவில் வாயிலாக பலரின் பார்வைக்கு படைத்துள்ளேன். நான் வாழும் சமூகம் குறித்த விமர்சனங்களை இங்கே வைத்துள்ளேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உறுதியாக நம்புகின்றேன். நிச்சயம் இங்கே மாறுதல் வரும் என்ற எண்ணத்தில் பொழுது போக்கு விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒவ்வொருவரின் சிந்தனைகளுக்கான விதைகளை ஒவ்வொரு சமயத்தில் விதைத்து வந்துள்ளேன். வாசிப்பவர்களுக்கு திருப்தியைத் தந்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. நன்றி.


நட்புடன்


(ஜோதிஜி திருப்பூர்)


03.03.2015


தொடர்புக்கு – powerjothig@yahoo.com


வலைபதிவு http://deviyar-illam.blogspot.com

உணவே மருந்து

  1. காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு


எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும்.


எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும்.


எல்லாவற்றையும் சாப்பிடனும்.

ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.

இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை? ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.


என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார். அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிரக் குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்குப் பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார். மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்குத் தினந்தோறும் சென்று வருவதைப் பார்த்து இருக்கிறேன்.


தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.


அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்குத் தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசிக் காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.


பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளைக் கவனித்துப் பாருங்கள். சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர். ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.


அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை.


இதற்குப் பினனால் உள்ள மருத்துவத் தண்டவாளங்களைப் புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.


எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.


இதைப் போலத்தான் என் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும். காரணம் சாப்பாடு மேல் கை வைத்து விடுவார்கள் என்ற பயம். மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாகப் பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார். ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. உணவு தான் அவரை மனிதனாகச் சுறுசுறுப்பான இளைஞராகக் கடைசி வரையிலும் கொண்டு செலுத்தியது.


20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே.


கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதைப் பார்த்துக் கொண்டே நான் செல்வதுண்டு.


என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.


கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.


ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.


கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை.


காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம்.


இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களைத் தழுவிக் கொள்கின்றதா? நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்.. காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.


பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும். மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும். வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மைத் தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.


பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்?


வாழ்க்கை முழுக்கச் சோதனை தான்.


இஞ்சித்தேன்.


இஞ்சியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இஞ்சியைக் காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.


இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்குச் சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும்.


காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?


முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளைச் சமாளிக்கப் பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும்.


பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.


எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க.


ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம்.


விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது.


தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தைத் தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாகப் பசியெடுக்கும். தேனின் மருத்துவக் குணங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை.


அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி


அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.


இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாகப் பச்சையாகச் சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சாறாக மாற்றித் தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம். இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.


நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.


சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும். பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம். செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே?


செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்?


வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.

இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு.


சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பார். இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.


ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா? மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார். நிறுவன வேலை பாதி. இந்த வேலை மீதி.


எப்பூடி?


அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள்,


மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.


எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான். இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை.


நெல்லியும் இஞ்சியுமே போதுமானது.2.சத்துணவகம்


சமீப காலமாக உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்க வேண்டாமா? என்கிற தொனியில் ஏராளமான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கிறது.


ஹார்லிக்ஸ் என்றால் எப்போதும் அதன் உள்ளே இருக்கும் அதே கோதுமை தான்.


ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தப் பாட்டிலின் வடிவமைப்பு, உள்ளே உள்ள கோதுமையின் நிறம், வெளியே ஒட்டப்படும் ஸ்டிக்கர், சுவைக்குச் சேர்க்கப்படும் ஃப்ளேவர் என்று மாறி மாறி விளம்பரங்களில் கவர்ச்சியாகக் காட்டப்படுவதோடு கூடுதலாக ஒரு தகவலும் அதே விளம்பரத்தில் வரும். இப்போது 20 சதவிகிதம் அதிக அளவோடு என்கிற ரீதியில் மக்களை வந்து தாக்கிக் கொண்டே இருக்கிறது.


ஹார்லிக்ஸ் மட்டுமல்ல.


பூஸ்ட், போர்ன்விட்டா, மால்ட்டோவா என்று தொடங்கி ஏராளமான பானங்களுக்குத் தேவைப்படும் அந்தக் குருணைப் பொருட்களுக்கு இன்று சந்தையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு மருந்துக்கடையில் சென்று முன்னால் உள்ள அல்லது மேலே உள்ள கண்ணாடிக்குப் பின்னால் அந்த வரிசைகளைப் பாருங்கள். குறைந்தபட்சம் 20 விதவிதமான டப்பாக்கள் உங்களைச் சுண்டியிழுக்கும். எதை வாங்குவது? என்று யோசிக்க வைக்கும். காரணம் இன்றைய நடுத்தர வர்க்கத்திற்குத் தங்கள் குடும்பத்தினர் மேலுள்ள அக்கறை என்பதாக எடுத்துக் கொள்வோம்.


ஆனால் இதற்குப் பெயர் அக்கறை அல்ல. அவலம்.


பூஸ்ட்க்கு விளம்பரம் செய்த சச்சினும் சரி, ஹார்லிக்ஸ்க்கு ஒவ்வொரு சமயம் காட்டன் புடவைகள் கட்டிக்கொண்டு விளம்பரம் செய்யும் நடிகைகளும் கல்லா கட்டுவதற்காகப் பல லட்சக்கணக்கான திருவாளர் நடுத்தரவர்க்கம் தெரிந்தே ஏமாந்து கொண்டிருக்கும் கேணத்தனம் தான் இதற்குப் பின்னால் உள்ளது.


எங்கள் வீட்டில் இரட்டையர் பிறந்த போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இந்த மாவு சமாச்சாரங்களோ, மண்டையில் மிளகாய் அரைக்கும் கருமாந்திரங்களையோ வாங்கி விடவே கூடாது என்பதில் அக்கறையோடு செயல்பட்ட காரணத்தால் அவர்கள் இப்போது எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் கும்மாங்குத்துக்களை நான் கைப்புள்ள கணக்காக இலவசமாக வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.


அன்று அவர்கள் உண்ட இயற்கை சார்ந்த வீட்டில் சுயமாய்ச் செய்து கொடுத்த உணவுகளின் காரணத்தால் இன்று அவர்களின் ஒவ்வொரு அடியும் இடி போல என்னைத்தான் தாக்குகிறது. ஒல்லியான அளவான தேகத்தில் உறுதியான சதைப்பற்றில் எனக்கு நேருக்கு நேர் சவால் விடுகின்றார்கள்.

இடையிடையே ஆசைப்படுகின்றார்களே என்று ஒரு சில கருமாந்திரங்களை என் திட்டுக்களையும் மீறி மனைவி வாங்கிக் கொண்டு வந்தாலும் முறைத்துக் கொண்டு அமைதி காத்து விடுவேன்.


இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் இருந்தாலும் எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது ஒரு தடவை ஒரு மருந்துக்கடையில் சத்துமாவு என்று போட்டிருந்த பாக்கெட்டை பார்த்து விபரம் கேட்ட போது குறிப்பிட்ட தானிய வகைகளைச் சேர்த்து மாவாக மாற்றியது என்றார்கள்.


கூழ் போலக் காய்ச்சி குடிக்கலாம் என்ற போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று வாங்கி வந்து முழுமையாக ஒரு வருடங்கள் முயற்சித்துப் பார்த்தோம். ஆனால் எனக்குத்தான் அது பயன் உள்ளதாக இருந்தது. காலை நேரத்தில் அவசரமாக ஓடும் எனக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு செல்ல வசதியாக இருந்தது.


ஆனால் அதில் உள்ள குறைபாடுகளை எனக்கு இனம் காணத் தெரியவில்லை. காலப்போக்கில் அதன் பலன் பூஜ்யமாக இருந்த காரணத்தால் அதையும் விட்டுவிட நேர்ந்தது.


பள்ளியில் இருந்து வருபவர்களைச் சில நாட்கள் கவனித்துப் பார்த்த போது அந்தத் தூக்க முடியாத புத்தக மூட்டைகளைப் புஸ் புஸ் என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க என்று வந்து சேர்வார்கள். நம் மேல் விழுவது போல வீட்டுக்குள் வருபவர்களை ஆரோக்கிய ரீதியாக மேலும் தயார் படுத்த வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். நமக்கும் அதே கதி தான்.


உண்ணும் உணவுக்கு அப்பாற்பட்டுத் தேவைப்படும் சத்துக்கள் என்பது உடம்பில் சக்கை போல இருப்பதால் அன்றாட உணவில் சில மாறுதல்களைக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தேடுதல் வேட்டை துவங்கியது.


அன்று மக்கள் தொலைக்காட்சியில் அல்மா ஹெர்பல் குறித்து ஒருவர் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது திருப்பூரில் உள்ள அவர்கள் கடையில் உள்ள பொருட்களை ஆராயும் பொருட்டுச் சென்ற எனக்கு அந்தக் கடையின் உரிமையாளராக இருந்த பெண்மணி கவர்ந்து விட்டார்.


ஏறக்குறைய சமவயது உள்ளவர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பலவிதமான ஏமாற்றங்களையும், பொருள் இழப்புகளையும் தாண்டி அல்மா ஹெர்பல் என்று தமிழ்நாடு, மலேசியா என்று இயங்கும் ஒரு நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்கு உரிமை எடுத்துத் திருப்பூரில் தொடங்கியிருந்தார்.


தொடர்ச்சியாகக் குடும்பத்திற்குத் தேவைப்படும் உருப்படியான பல சமாச்சாரங்கள் கிடைக்க, விலையும் இயல்பானதாக இருக்க மாதம் ஒரு முறை அங்கே செல்லும் பழக்கம் உருவானது. அப்போது மனதில் இருந்த சத்து மாவு குறித்த எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்களின் நிறுவனமும் அதே போலச் சில வகையான சத்து மாவுகளைச் சந்தைப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொன்னார்கள்.


ஆனால் நான் அவர்களிடம் இதன் அடிப்படை விசயங்களை எனக்கு எழுதித்தர முடியுமா? என்று கேட்ட போது தயங்காமல் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.


இன்று சந்தையில் ஏராளமான சத்துமாவு நிறுவனங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவைகள்.


தமிழ்நாடு அரசாங்கம் கூடச் சத்து மாவு குழந்தைகளுக்கு வழங்குகின்றார்கள். அதையும் நண்பர் மூலம் கேட்டு வாங்கிப் பார்த்தோம். நிச்சயமாக நன்றாகவே உள்ளது, அதற்குப் பிறகு தனியாளாகப் போட்டியின்று அரசாங்க பிரதிநிதிகளின் செல்லப்பிள்ளையாக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரு பத்திரிக்கையில் படித்த போது அந்த மாவு குறித்த தரத்தில் பயம் வந்து விட்டது


நீங்கள் கடையில் வாங்கும் மாவு உள்ள பாட்டிலின் மேல் உள்ளே உள்ள காகிதத்தில் உள்ளே உள்ள மாவில் எந்தந்த பொருட்கள் எந்தந்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் குறித்து இருப்பார்கள்.


செயல்முறை விளக்கத்தையும் அத்துடன் கொடுப்பார்கள். ஆனால் நமக்குத் தேவைப்படும் உண்மையான தரம் அதில் இருக்குமா? நாளொன்றுக்கு லட்சக்கணக்கான கிலோ தயார் செய்யும் ஒரு நிறுவனத்தில் அதுவும் குறிப்பாக நமது நாட்டில் தரம் சார்ந்த அக்கறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி? கடந்த ஆறு மாதமாக வீட்டில் நாங்கள் செய்து கொண்டிருக்கும் இந்தச் சத்து மாவு விசயங்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.


உடம்பில் அவசியம் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை இழந்து கொண்டிருப்பவர்களுக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது பயன்படக்கூடும். இது என்ன மாதிரியான பலன் தரும் என்று கேட்பவர்களுக்கு, ஒரு முறை செய்து குடித்துப் பாருங்கள் என்பது தான் என் பதிலாக இருக்கும்.


காரணம் திட்டமிட்ட பரிபூரண உணவு என்ற ஒரு வார்த்தை தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.


முந்திரி 100 கிராம்

பாதாம் 100 கிராம்

பிஸ்தா 100 கிராம்

கோதுமை கால் கிலோ

ராகிக் கால் கிலோ

கம்பு கால் கிலோ

சோளம் கால் கிலோ

சிவப்பு அரிசி கால் கிலோ (கடைகளில் தனியாகக் கிடைக்கின்றது)


பாசிப்பயறு கால் கிலோ

நிலக்கடலை கால் கிலோ

பொட்டுக்கடலை கால் கிலோ

சிவப்புப் பீன்ஸ் கால் கிலோ

சோயா கால் கிலோ


நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் அளவில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளது என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கருப்பு பிடித்து விடக்கூடாது.


முந்திரி போன்றவற்றை லேசாக வறுத்தாலே போதுமானது. சோளம் போன்றவற்றைச் சற்று நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக உலர வைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கருகே உள்ள மாவுக்கென்று தனியாக அரைக்கும் எந்திரத்தில் சென்று மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவசர கதியில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து விடலாம் என்று யோசித்தால் அந்த அளவுக்கு மாவு போல வருமா? என்பது கேள்விக்குறியே.


நாங்கள் முயற்சித்துப் பார்த்தோம். சரியாக வரவில்லை.


ஆனால் மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்களிடம் போகும் முன் கூட்டம் இல்லாத சமயத்தில் சென்றால் தான் வசதியாக இருக்கும். அவர்கள் அவசர கதியில் போட்டுக் குருணையாகத் தந்து விடவும், ஏற்கனவே அரைத்த விசயங்களைச் சுத்தம் செய்யாமல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு. பொறுமை அவசியம் தேவை.


மேலே சொன்ன அளவில் ஏறக்குறைய 450 ரூபாய் அளவுக்குச் செலவு வரும் (தற்போது சந்தையில் உள்ள எந்தப் பாட்டிலின் விலையை எடுத்துக் கொண்டாலும் இந்தத் தொகையில் இரண்டு பாட்டில்கள் தான் வாங்க முடியும். அந்த இரண்டு பாட்டிலின் உள்ளே உள்ள வஸ்துகள் அதிகபட்சம் மொத்தமாக 400 கிராம் இருக்கக்கூடும்.


காரணம் தற்போது சிப்ஸ் முதல் எந்தப் பொருளாக இருந்தால் அடைக்கப்பட்ட பையில் பாதிக் காற்றுப் பாதிப் பொருட்கள் என்கிற ரீதியில் தான் உள்ளது. ஏமாற நாம் தயாராக இருப்பதால் அவர்களை எந்த விதங்களில் குறை சொல்லவே முடியாது.)


இந்த மாவை நன்றாக உலர வைத்துத் தனியாகச் சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொண்டு விடவும். வீட்டில் காபி டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு அந்தச் சமயத்தில் இதைப் பருகலாம். காபி, டீ பைத்தியமாக இருந்த என்னை மாற்றிய பெருமைக்கு வீட்டில் உள்ள நிதி மந்திரிக்கு பத்ம வீபூஷன் விருது வழங்கலாம் என்று மனதில் வைத்துள்ளேன்.


ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கலக்கவும்.


மாவு கட்டியாக இல்லாமல் கலக்கி விட்டு அதில் நாட்டுச்சர்க்கரை (எக்காரணம் கொண்டும் ஜீனியை எந்த வடிவத்திலும் உணவில் சேர்க்காமல் இருப்பது பெரும் புண்ணியம். முக்கால்வாசி நோய்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் முக்கியக் காரணம் இந்த வெள்ளை எமன் தான் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவும்) அல்லது கருப்பட்டி என்று உங்களுக்குப் பிடித்ததை அதில் போட்டு கலந்து அதற்குப் பிறகு அடுப்பில் வைத்து கூழாக வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.


கவனமாகச் செயல்படாவிட்டால் கட்டியாக நின்று போய்விடும். பக்குவமாகத் தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும், கூழ் பக்குவத்தில் இறக்கி சூடு ஆறியதும் குடிக்கலாம். குடித்துப் பாருங்கள். கும்மாளமிடும் மனம்.


ஒரு மாதமாவது தொடர்ந்து குடித்து வரும் போது உங்கள் உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்கள் உணரக்கூடும்.


3.காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?


வேற என்ன செய்வது?


உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.


பழைய சாதம். தொட்டுக்கக் கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும். சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும். அதைச் சாப்பிட்டால் எனக்குச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?


அய்யோ? இந்தச் சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?


விதவிதமான புதிய வகைகளைச் சுவைத்துப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும்? வர வர பீட்ஸா, பர்கர் கூடப் பிடிக்கமாட்டுது.


அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்குச் சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூடச் சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?


இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.


இந்தப் பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .


இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு.


ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம். கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?


அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?


புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால் உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள். செய்தவர் அடிவாங்கி விடுவார். .


சொல்லிக் கொண்டே போகலாம். காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது. குழப்பமாக இருக்கின்றதா? இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு?


ருசி நம்மைத் தூண்டுவது என்பது வேறு.


திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாகச் சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க. இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க. வேறு எந்தக் கடைகளும் அந்தச் சமயத்தில் கண்களுக்குத் தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய் என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே?


அது தான் ருசியின் மகிமை.


கூழாக மாற்றுங்க.


இன்று ஒவ்வொருவரும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளைத் தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படிச் சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?


சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.


ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை. வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது. வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது. ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.


சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாகப் பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதிக் கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.


செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது...............


இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் தற்கு என்ன தான் தீர்வு?


நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றைச் சரியாகக் கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.


மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்குக் கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே?


காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும். அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும்.


அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும். அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது. காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை.


சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.


ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையைத் தராது.சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதைக் கூழாக்கி உள்ளே அனுப்புங்க. ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்4.காரைக்குடி உணவகம் - ருசியா சாப்பிட்டு பழகுங்க


எனக்கு ருசியா சாப்பிடத்தான் பிடிக்குமென்பவர்கள் மட்டும் இந்தப் பக்கம் வந்து நில்லுங்க?


என்ன எல்லோருமே மொத்தமாக வந்தாச்சா?


அப்ப எல்லாருமே என்னைப் போலத் தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான்.


இந்த நாக்கு ருசிக்கு அலைந்து அலைந்து பர்ஸ் கனம் குறைந்தாலும் கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிறு கதறினாலும் பாழும் மனசு கேட்டால் தானே என்கிறார்களா?


வாங்க இன்றைய ருசியைப் பற்றி ருசிகரமாகப் பேசுவோம்.

தொடக்கத்தில் காட்டில் கிடைத்ததை, கண்டதை பிடித்துப் பச்சையாகவே தின்றார்கள். பிறகு சுட்டுத்தின்றார்கள், அப்புறம் வேக வைத்தார்கள். கடைசியாகப் பல கலவைகளைச் சேர்க்கத் தொடங்கிய போது தான் ருசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்து அதன் பின்னே அலைய ஆரம்பித்தார்கள். இன்று ஒரு கோழி தான். ஆனால் இந்தக் கோழியில் ஆயிரெத்தெட்டு சுவை.


ஆனால் இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்து நாகரிகம் வளர்ந்து நாம் பலவகையில் முன்னேறி விட்டோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுங்க. அது தான் சத்தானது என்கிற நிலைக்கு வந்து விட்டோம். ஆனால் நாம் தான் எம்பூட்டு மாறிவிட்டோம் கித்தாய்ப்பாய் அலைகின்றோம்.


ருசி உணவா? இல்லை பசிக்காக உணவா என்று இன்று பட்டிமன்றம் முதல் பாட்டுமன்றம் வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ருசியைத் தொடர்ந்து விரும்பினால் கூடிய சீக்கிரம் உனக்குப் பசியே எடுக்காத அளவுக்குக் குடல் கெட்டு விடும் என்று பயமுறுத்துகிறார்கள்.


ஒரு தட்டு நிறையக் கஞ்சி. ஒரே ஒரு பச்சை மிளகாய்.


வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களின் கையைத் தொட்டுப் பார்த்தால் இரும்பு போல இருக்கும். எப்படி?


நோய்களுக்குக் காரணம் இந்த ருசியா?


முதலில் நோய்க்குக் காரணம் மனம்.


குழப்பமாக இருக்கின்றதா?


சாப்பாட்டில் நாம் பார்க்கும் சோறு, குழம்பு, காய், பொரியல், கூட்டு, மோர், ஊறுகாய் போல நம் பழக்கவழக்கங்களில் உள்ள விசயங்கள் எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கின்றது? நாம் சாகின்ற வரைக்கும் விரும்பி சாப்பிட நினைக்கும் அளவை எப்படிக் குறைக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.


இப்போதைய வாழ்க்கையில் சோறு தான் கவலை.


எல்லோருமே இதைத்தான் விரும்பி சாப்பிடுகின்றார்கள். இன்று கவலை இல்லாத மனிதனே இல்லை. அடுத்த வேளை சோற்றுக்கு அலைபவன் முதல் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு அதைக் காப்பாற்ற, அதற்கு மேலும் சாம்பாரிக்க அலைவர்கள் வரைக்கும் இந்தக் கவலை தான் படாய்ப் படுத்துகின்றது. இந்தக் கவலை எண்ணங்கள தான் முதலில் வயிற்றைத் தாக்குகின்றது.


ஒரு விசயத்தைக் குறித்து நீண்ட நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்து பாருங்கள். உங்கள் உடம்பில் மாறுதல்களை உங்களால் உணர முடியும்.


இப்போது சங்கடப்பட்டாலும் குடி சந்தோஷம் வந்தாலும் குடி என்பது போல எதற்குத் தான் கவலைப்படுவது என்கிற விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்த போதிலும் கவலைப்படுகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம்.


கவலைப்படுவதை விட அதைக் கணக்காகப் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்க. சிலசமயம் உடனடி தீர்வு கிடைக்கும். சிலவற்றுக்குப் பொறுமையாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். புள்ளைங்க படிக்க மாட்டேன் என்கிறது என்று கவலைப்படுவதை விட அந்தக் குழந்தை ஆர்வமாகப் படிக்க என்ன தடை? என்பதை உணர்ந்தாலே பாதிக் கவலைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும். நாம் டிவி பார்க்கனும். ஆனால் பிள்ளைகள் படிக்கனும் என்றால் ஆயுள் முழுக்க இது கவலையாகத்தான் இருக்கும்.


கவலைகள் நம்மை என்ன செய்யும்? எங்கே அழைத்துச் செல்லும்?


வயிறு பிசைகின்றதே என்பது போலத் தொடங்கும். வயிறு உருள்கின்றதே என்பதாக மாறும். அது தொடர்ந்து கொண்டே இருந்தால் வயிற்றுக்குள் அமிலம் சுரக்கும். அது வயிற்றுப் புண்ணாக மாறும். இரத்தம் குதியாட்டம் போட்டு பங்காளிங்களா வாங்க வாங்க என்று உடம்பில் உள்ள உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு அனுப்ப அடுத்தடுத்து கடிதாசி போடாமலேயே செய்திகள் கடத்தப்படும்.


கல்லீரல், மண்ணீரல், கனையம் என்று தொடங்கிய இந்தக் கடிதாசி பயணம் கடைசியில் நுரையீரல் போய்ச் சென்று ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கும்.


கடைசியில் இருதயம் வரைக்கும் போய்ச சேர்ந்து வாங்க பழகலாம் என்று சேர்ந்து ஆஞ்சியோகிராம் என்ற காதலியை அறிமுகப்படுத்தும்.


அது அலுத்துப் போனவுடன் தேசிய நெடுஞ்சாலை அதாங்க பை பாஸ் பயணத்தில் கொண்டு போய் விடும். .


நேத்து தான் பார்த்து விட்டு வந்தேன். காலையிலே செத்துட்டாருன்னு வந்து சொல்றாங்கப்பா என்கிற சாவுச் செய்திகளை இப்போது சர்வசாதரணமாகக் கேட்க காரணமே இந்தத் திருவாளர் கவலை தான்.


காரணம் அவருக்குள்ளே எத்தனை பிரச்சனைகள்? எத்தனை கவலைகள்?அணிவகுத்து நின்றதோ? எத்தனை நாட்கள் உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறினாரோ? எவருக்குத் தெரியும். தாங்க முடியாத போது இறுதிப் பயணத்திற்கு அழைப்பு வந்துவிடுகின்றது.


உணவு என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்ல. அது உங்களை மகிழ்ச்சியடைய வைக்க, உங்கள் வாழ்க்கையைத் திருப்தி படுத்த, திரும்பப் பெற முடியாத நேரங்களை நாம் அனுபவித்து வாழ்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த என்று இது போன்ற ஆயிரம் வழிகள் மூலம் நாம் நம் வாழ்க்கை அனுபவிக்க முடியும்.


அய்யோ இதைச் சாப்பிட்டால் ஒத்துக்காது. அந்தப் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ஏக்கத்தைச் சுமந்து கொண்டேயிருப்பவர்களின் வாழ்க்கையைப் பாருங்க. அனுபவிக்க முடியாத வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு நரக எண்ணங்களைச் சுமந்து கொண்டு தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.


நான் வாழ்ந்த தொடக்க 20 வருட கிராமத்தில் கோழி என்பதைப் பார்த்ததே இல்லை. அப்பாவுக்குப் பிடிக்காது. திருவிழா சமயங்களில் தான் உள்ளே திரியும் கோழிகள் குழம்பாக மாறும். ஆனால் ஆடும் கடல் உணவில் உள்ள அத்தனை சமாச்சாரங்கயையும் வகைதொகையில்லாமல் ரவுண்டு கட்டி அடித்தேன்.


தீனி என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. குழம்பு என்றால் ரெண்டு தடவை. எலும்புக் குழம்பு என்றால் அதுவும் ரெண்டு தடவை. தெறக்கி வைத்த கறியை தெவிட்டாமல் தினற் அந்தக் காலத்தின் சுவை இன்னமும் நெஞ்சில் இருக்கிறது.


அடுத்து வந்த பத்தாண்டுகளில் முழுக்கோழியை நானே செய்து ஒரு நாளில் ஒரே மூச்சில் அப்படியே விழுங்க முடிந்தது. திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை அசைவ உணவக வளர்ச்சியிலும் அய்யாவின் பங்களிப்பும் இருந்தது.

அடுத்தப் பத்தாண்டில் எல்லாவற்றையும் பொட்டி கட்டி வைத்து விட்டுப் புள்ளப்பூச்சி போல மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. தற்போது குழந்தைகள் சுவைக்காகத் தோன்றும் போது அவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றேன்.


ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும். அனுபவிக்கத் தெரிவது போல அடக்கத் தெரியவும் வேண்டும்.


அடுத்த ஒரு வாரத்தில் இவரின் காணொளி காட்சிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தால் உங்கள் வாழ்க்கை குறித்த உண்மையான புரிதல்கள் கிடைக்கக்கூடும். உங்களுக்குக் கிடைக்கும் நம்பகத் தன்மை உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்.


என்ன பிடிக்குதோ சாப்பிடலாம். ஆனால் உங்கள் மனம் விரும்பும் உணவாக இருக்க வேண்டும். கலவை சரி இல்லை என்றால் வரும் எச்சரிக்கையை உணர்ந்து கொள்ள வேண்டும். மீறுதல் கூடாது. உணர்ச்சி குவியலாய் இருப்பவர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறவில்லை என்றால் அவர்களின் அத்தனை எழுச்சியும் படுத்து விடும் என்று அர்த்தம்.


ருசி மட்டுமே வாழ்க்கை என்று பார்த்து சாப்பிட்டவர்களின் வாழ்க்கை பசியின் அருமையை உணராது.


பசித்த பின் உண். எப்போதும் பசியோடு இரு என்பதை அன்று முதல் இன்று முதல் சொல்லியிருப்பதன் காரணமே குடல் என்பது ஒரு சின்னச் சந்து. பத்து பேர் நிற்கினற இடத்தில் நூறு பேரை கொண்டு போய் அடைத்தால் என்ன ஆகும்?. கப்பு வாடை தூக்கத்தானே செய்யும். கடைசியில் நம்மை நான்கு பேர்கள் தூக்கிக் கொண்டு செல்லத்தான் உதவும்.


சாப்பிடுங்க. சாப்பிடுங்க. சாப்பிட்டுக் கொண்டேயிருங்க. இரண்டு பேர் போய் உணவகத்தில் 500 ரூபாய் கொடுத்து அவர்கள் கொடுக்கும் கொஞ்சூண்டு ருசியைத் தின்று விட்டு ஏக்கத்தோடு வருவதை விட அந்தக் காசுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் போது வாழ்வில் என்ன மாறுதல் உருவாகும்?.


ருசியான அளவில்லா சாப்பாட்டுடன் அருமை மனைவியுடன் காதலிக்கவும் நேரம் கிடைக்கும். சமையலின் போது தக்காளி வெங்காயத்தை நறுக்கிக் கொடுத்து நானும் உதவுகின்றேன் என்று சொல்லி நைஸ் செய்வது எப்படின்னு சொல்லித் தரவும் வேண்டுமோ?


நல்லாச் சாப்பிடுங்க. ருசியா சாப்பிடுங்க. ஆனால் வயிற்றில் எதையும் தங்க விடாதீங்க.


தங்கினால் அந்தப் பக்கம் சென்று விடாதீங்க.


5.ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா?


விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பெற்ற நவீன மருந்துகள் மட்டும் இல்லாவிட்டால் பழைய காலம் போல நம்முடைய மனித இனத்தின் ஆயுள் என்பது முப்பதோ அல்லது நாற்பது வயதுக்குள் முடிந்து போயிருக்கும்.


கலப்பின விதைகளும், ரசாயன உரங்களும் இங்கே வராவிட்டால் இன்னமும் இந்தியாவில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்.


சித்த மருத்துவத்தைப் பற்றிப் பேசினால் இவன் மாறிக் கொண்டிருக்கும் உலகத்தைப் புரிந்து கொள்ளாதவனாக இருப்பானோ? என்று சொல்லக்கூடிய நவநாகரிக உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.


தலைப்பிற்குரிய முழு விபரங்களைப் பற்றித் தனியாக எழுத வேண்டும் என்றாலும் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து இளவரசர் கேரளாவில் உள்ள குமரகம் ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்றார் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நேரம் இருப்பவர்கள் இந்தப் பெரிய கட்டுரையைப் படிக்கலாம்.


நமக்கு விஞ்ஞானத்தைக் கற்றுத் தந்தவர்களே கடைசியில் அடைக்கலமாகும் அளவிற்குச் சித்த மருத்துவம் இன்று வரையிலும் சிறப்பாக இருந்தாலும் நமக்குச் சிரிப்புச் சமாச்சாரமாகவே இன்று வரையிலும் உள்ளது.


மூட நம்பிக்கைகள என்ற பெயரில் நமது பழைய பொக்கிஷங்களைப் பகுத்தறிவு சட்டியில் போட்டு கிண்டி உண்ண முடியாத பொருளாக மாற்றிவிட்டோம்.


சித்தர்கள் நமது உடல் அமைப்பை எப்படிப் பகுத்துப் பிரித்தார்கள் என்பதற்காக இந்த ஆவணம், அரிய பொக்கிஷத்தை நாம் எப்படி இழந்துள்ளோம் என்பதற்காக இந்தக் கட்டுரை..


தமிழச்சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்


தமிழச்சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. இதைவிட ஒரு நோய் கூடவும் முடியாது குறையவும் முடியாது. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும்.


உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும்.


இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.


உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.


கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்


குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன.


அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.


கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்


குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.


குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.


கிருமிகள் உருவாகக் காரணம்


கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.


அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும்.


மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.


நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.


கண் நோய் :


கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.


பொதுக் காரணங்கள் :


வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்கச் சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.

அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்).


பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.


சிறப்புக் காரணம் :


சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.


காசநோய் :


கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.


வெள்ளெழுத்து


கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.


முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றிச் சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும்.


இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.


கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிறதெனலாம்.


தலைநோய் :


உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.


ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.


தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார்.


ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.


கபால நோயின் வகை :


வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.


தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன.


ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.


அம்மை நோய் :


அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.


மேலும், அம்மை நோய்க்கு குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.


அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.


இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.


அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.


சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு.


அவை,


1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை


என்பனவாகும்.


இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.


இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

6.கழுகுக்கூட்டங்கள்


நான் இருபது வயது வரைக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்றதே இல்லை. ஊரில் இருந்த ஒரே சிறிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் பெரும்பாலும் வயதானவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் போல அதே வெள்ளை மாத்திரை. ஊதா நிற களிம்பு. அங்குப் பணியிலிருந்தவர் தனியாகக் கிளினிக் வைத்திருந்தார். அவர் வரும் ராஜ்தூத் வண்டி இன்னமும் நினைவில் உள்ளது.


ஆனால் சித்த மருத்துவம் படித்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் வைத்திருந்த பத்துக்குப் பத்து அறையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நான் மட்டுமல்ல. குடும்பத்தில் எவருக்கும் அடிக்கடி மருத்துவமனைகள் பக்கம் செல்லும் நிலையில் இருந்ததே இல்லை. காரணம் செமத்தியான சாப்பாடு. அதற்குச் சமமான உழைப்பு. வீட்டில் வேலையாட்கள் அதிகளவு இருந்த காரணத்தால் வீட்டு விறகடுப்பு திருவண்ணாமலை தீபம் போலவே எப்போதும் எறிந்து கொண்டேயிருக்கும்.


நொறுக்குத் தீனி வகையாறாக்களோ, கடைகளில் விற்கும் நொந்து போன பலகாரங்களையோ தின்றதில்லை என்பதை விட அதற்கு வாய்ப்பும் அமைந்ததும் இல்லை.


ஊருக்குள் நிரம்பியிருந்த குளங்களிலும், வழிந்து நிற்கும் கண்மாயிலும், காட்டுச் சிவன் கோவில் பகுதியில் இருந்த தாமரைக்குளமும், ஒட்டியிருந்த பெரிய கிணற்றில் நீச்சலே தெரியாமல் குதித்து வெளியே வந்த போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜல்பு (ஜலதோஷம்) பிடித்ததே இல்லை.


இராமநாதபுர மாவட்டத்தின் வெயிலின் தாக்கம் மட்டும் வருடந்தோறும் மறக்காமல் உடம்பில் வேணல்கட்டியை கொண்டு வந்து விடும். முகம் முழுக்கக் கட்டி பெரிதாக வரும். வீட்டில் எப்போதும் போல மஞ்சளை அறைத்து போட அடுத்தச் சில வாரங்களில் காணாமல் போய்விடும்.


திருப்பூர் வந்த போது மாறிய பழக்கவழக்கங்கள், நேரந் தவறிய உணவுகள், உணவக சாப்பாடுகள், இரவு நேர தொடர் உழைப்பு என்று மூன்று வருடங்கள் கொடுத்தப் பலனால் டைபாய்டு வருடந்தோறும் வந்த போது சற்று முழித்துக் கொண்டேன். திருமணம் ஆகும் வரையிலும் ஒல்லி உடம்பில் ஓராயிரம் நம்பிக்கைகள் இருந்த காரணத்தால் அதுவே பல சமயங்களில் எதிர்ப்பு சக்தியாக இருந்து உதவி கொண்டிருந்தது.


குழந்தைகள் வந்த பிறகு தான் ஆங்கில மருத்துவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய போராட்டமே தொடங்கியது.


முதன் முதலாக நண்பர் சொல்லி பல்லடம் சாலையில் இருந்த தமிழ்நாடு திரையரங்கம் இருந்த அந்தப் பெண் மருத்துவரை சந்தித்தோம். பத்துக்குப் பத்து அறையில் தான் இருந்தார். பரிசோதனைகள் முடிந்த பிறகு "உங்களுக்கு இரட்டைக்குழந்தை" என்று அவர் சொன்ன போது "தப்பா எடுத்துக்காதீங்க " என்று சொல்லி விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்கமலேயே அவர் கையை வலிக்கும் வரையிலும் குலுக்கிய போது என்னை வினோதமாகப் பார்த்தார்.


அது தான் அவருடனான முதல் சந்திப்பு.


இனிதாகத் தான் தொடங்கியது. ஆனால் சில மாதத்திற்குப் பின்பு எங்கள் இருவருக்கும் கைகலப்பு என்கிற ரீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியது.


முதல் மாதம் சென்ற போது பரிசோதனைகள் முடிந்து அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை அவர் கிளினிக்கிற்கு வெளியே இருந்த மருந்துக் கடையில் வாங்கிய போது நான் அவசரத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


அடுத்த மாதம் அவர் கிறுக்கலாக எழுதிய வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டே குழப்பத்துடன் மருந்துக் கடையில் கொடுத்த மாத்திரைகளை எழுதப்பட்ட சீட்டில் உள்ள முதல் எழுத்தை வைத்து உத்தேசமாக வைத்துக் கொண்டு "என்னங்க மாறியிருக்கே?" என்ற போது தான் அவர் எதார்த்தமாக "இரண்டுமே ஒரே கம்பெனி" என்றார்.


மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.


ஒவ்வொரு மாதமும் மருந்தும் மாத்திரையும் மாறிக் கொண்டேயிருந்தது.


செலவும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அடுத்த மாதம் அவர் புதிததாக எழுதிய போது தைரியமாகக் கேட்டேன்.


"கொஞ்சம் புரியும்படியா எழுதலாமே?" என்றேன்.


"உங்களுக்குப் புரிஞ்சு என்ன ஆகப்போகுது? நான் எழுதிக் கொடுப்பதை வாங்கிக் கொடுங்க. வேற எந்த ஆராய்ச்சியும் செய்யாதீங்க " என்றார்.


இடையிடையே அவர் கேட்ட ஸ்கேன் ரிப்போர்ட் முதல் அவர் தனியாக வேலை செய்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அங்கே சோதிப்பது வரைக்கும் நடந்து கொண்டிருந்தது.


அடுத்த மாதம் ஒரு முடிவோடுதான் சென்றேன்.


மருந்துச்சீட்டு எழுதியவுடன் "எங்க சொந்தக்காரர் கடை வைத்திருக்கின்றார். நான் அங்கே வாங்கிக் கொள்கின்றேன்" என்றவுடன் வந்ததே கோபம்.


பொறிந்து தள்ளிவிட்டார்.


அதுவரைக்கும் அவர் எழுதிய மாத்திரை மருந்துகளின் விலையை மற்ற கடைகளில் ஒப்பிட்ட போது விலையோ மலைக்கும் மடுவுக்கும் இருந்தது. இது தவிர அந்தக் குறிப்பிட்ட மருந்துகள் அந்தக் கடையைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைக்காது.


நண்பர் வைத்திருந்த மருந்துக் கடையில் ஒவ்வொன்றையும் அவரிடம் விலாவாரியாகக் கேட்ட போது அவர் எழுதிக் கொடுத்த எதுவும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதையும் மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் செல்வதை நிறுத்தி விட்டோம்.


அதன் பிறகே என்ன ஆனாலும் பராவாயில்லை என்று காய்கறிகள், பழங்கள் என்று எங்களுக்குத் தெரிந்த வகையில் மாத்திரை மருந்துக்களைத் தவிர்த்து துணிவோடு இறங்கினேன்.


இன்று அவர் நகர்புறத்தில் மூன்று மாடிகள் உள்ள சொந்த கட்டிடத்தில் இருந்து கொண்டு மருத்துவச் சேவை செய்து கொண்டிருக்கின்றார். குழந்தைகள் வந்த பிறகு அடுத்தப் போராட்டம் தொடங்கியது.


கிடைத்த அனுபவங்களின் பலனாக இயற்கையான சத்து மாவுச் சமாச்சாரங்கள் என்று இரட்டையருக்கு கொடுத்து இந்த மருத்து மாத்திரைகளைத் தவிர்த்த போதிலும் எதிர்பாராமல் வரும் சளித் தொந்தரவில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு மருத்துவர் அறிமுகம் ஆனால் அவர் சரியானவர் சரியில்லை என்று உடனே முடிவுக்கு வந்து விடுவதில்லை.


அவர் சொல்லும் அத்தனை விசயங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்ட போதிலும் அடுத்த நான்கு மாதத்தில் அதே போலப் பிரச்சனை வரும் மாத்திரை மாறும். அதன் வீரியம் கூடும். செலவு அதிகமாகும். பல சமயம் இந்த வீர்யம் தாங்காமல் குழந்தைகளின் நாக்கு உதட்டிலும் புண் வரும்


எந்த மருத்துவரும் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் எழுதிக் கொடுக்கும் எந்த மருந்து மாத்திரையும் அவர்கள் குறிப்பிட்ட மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைப்பதே இல்லை.


நள்ளிரவில் பல சமயம் கொடுமையான சிக்கலில் மாட்டிய கதையெல்லாம் உண்டு.


குழந்தைகளுக்குப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் இது குறித்துக் கேட்ட போது அவர் சிரிக்காமல் சொன்ன பதில்.


"ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தானே" என்றார்.


நான் போட்டிருந்த செருப்பு வெளியே கழட்டி வைத்து விட்டு வந்த காரணத்தால் அமைதியாகத் திரும்பி வந்து விட்டேன்.


திருப்பூரில் உள்ள தண்ணீரில் மற்றொரு பிரச்சனையும் உண்டு.


வீட்டுக்கு வரும் தண்ணீரும், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வரும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பல சமயம் லாரியில் வரும் நீரின் தன்மை என்று வெவ்வேறாக இருக்க இதன் பாதிப்பு உடனடியாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கண்கூடாகத் தெரியும்.


சளியில் தொடங்கி வைக்கும். காய்ச்சலில் கொண்டு போய் விடும். சில சமயம் சளி கோழையாக நெஞ்சில் தங்கி விடும். வாங்கி வரும் மாத்திரையும், மருந்தும் அந்த நேரத்தில் கேட்கும். அதன் எதிர்விளைவுகளும் உடனடியாகத் தெரியும். வேறு வழியே இல்லை என்கிற போது பார்த்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும்.


கடந்த பத்து வருடங்களில் ஏறக்குறைய ஆறு குழந்தைகள் மருத்துவராவது பார்த்திருப்பேன். ஒன்று வீர்யத்தின் அளவைக் கூட்டி உடனடி நிவாரணத்தில் இறங்கி விடுகின்றார்கள்.அல்லது விற்காத பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கண்ட மருந்துகளை நம் தலையில் கட்டுவதைக் குறியாக இருக்கின்றார்கள்.


தற்போது ஒவ்வொரு மருத்துவரும் அவர்களின் மருத்துவமனையிலேயே மருந்துக்கடைகளையும் வைத்துள்ளார்கள்.


ஒவ்வொரு சமயமும் உடனடியாக மருத்துவரை மாற்றக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பலரையும் கேட்டு கேட்டு ஒவ்வொருவரிடமும் சென்றாலும் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே.


குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கும் வெங்கடாச்சலம் என்பவரை சில வருடத்திற்கு முன்பு சந்தித்தேன்.


நான் சந்தித்த போதே அவரின் வயது 70 இருக்கக்கூடும்.


அந்த ஒரு வருடமும் எந்தப் பிரச்சனையும் பெரிய அளவில் சந்திக்கவில்லை. அவரின் சிகிச்சை செய்யும் விதமும் வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விபரங்களைக் கேட்டு விட்டு நம்மை வெளியே அனுப்பி வைத்து விடுவார். அவர் மேஜையில் எப்போதும் கடலை மிட்டாய் வைத்திருப்பார். ஒன்றை எடுத்து முதலில் குழந்தைகளிடம் கொடுத்து விட்டுப் படிப்படியாகப் பேசத் தெரிந்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டே ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வருவார்.


சட்டையை முழுமையாகக் கழட்டச் சொல்லி அமைதியாகப் பரிசோதனை எல்லாம் முடித்த பிறகு கடைசியாக நம்மை அழைத்துச் சில பொட்டலங்களில் வைத்துள்ள பொடி போன்ற வஸ்துவை கொடுப்பார். சில மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுப்பார். மிக மிக அவசியம் என்றாலொழிய ஊசி போட மாட்டார்.


எட்டு வருடங்கள் கடந்து வந்து நின்ற போது குழந்தைகளின் ஆரோக்கியமென்பது நான் நினைத்த அளவிற்கு இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. ஒவ்வொரு முறையும் பேய்க்கு பயந்து பிசாசுக்களிடம் சிக்குவது போலவே இருந்தது. அப்போது தான் அவரைச் சந்தித்தேன்.


சித்த மருத்துவத்தில் இருந்தவர் அதனை விட்டு வெளியே வந்து வீட்டு புரோக்கர் தொழிலில் இருந்தார்.7. நாம் (மட்டுமே) தான் காரணம்


புதிய வீடு ஒன்று தேவை என்ற போது நண்பர் மூலமாகத்தான் அவர் அறிமுகமாயிருந்தார். அவரைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது. கைபேசியில் தொடர்பு கொண்ட போது "வீட்டுக்கே வந்து விடுங்க" என்றார்.


அவர் சொன்னபடி ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் வீட்டுக்குச் சென்ற போது எனக்கு அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


அந்த வீடு சமீபத்தில் தான் கட்டப்பட்டிருந்தது. புதிய வீடு. வெளியே அமர்ந்திருந்த போது ஜன்னல் வழியே உள்ளே உள்ள அறையின் அமைப்பு முழுமையாகத் தெரிந்தது. நூலகம் போன்ற ஒரு அமைப்பு தெரிய ஆர்வம் மேலிட எழுந்து சென்று உள்ளே எட்டிப்பார்க்க ஆயிரக்கணக்கணக்கான புத்தகங்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.


மனதிற்குள் குழப்பம் அலையடித்தது. இவர் தொழிலுக்கும் இங்குள்ள சூழ்நிலைக்கும் சம்மந்தமில்லாமல் ஏன் இத்தனை புத்தகங்கள்? என்பதை யோசித்துக் கொண்டே இருந்த போது பக்தி பழமாகப் பூஜையெல்லாம் முடித்து விட்டு வெளியே வந்து எங்களின் தேவையைக் கேட்கத் தொடங்கினார்.


நான் போன வேலையை மறந்து விட்டு எடுத்தவுடன் உள்ளே நூலகம் எதுவும் வைத்திருக்கீங்களா?என்று கேட்டு விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்காமலேயே நான் பார்க்கலாமா? என்று கேட்டேன்.


அவர் சற்று நேரம் யோசித்து விட்டு "அந்தப் புத்தகங்கள் உங்களுக்குப் புரியாது" என்றார். காரணம் கேட்ட போது அங்குள்ள அத்தனை புத்தகங்களும் சித்த மருத்துவம் சார்ந்த புத்தகங்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.


இவரின் தாத்தா, அப்பா என்று தலைமுறையே சித்த மருத்துவத் துறையில் இருந்தவர்கள். இவரும் ஆர்வத்துடன் இதற்கான படிப்பு படித்து, மேற்கொண்டு ஆர்வத்தின் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாங்கித் தன்னை ஒரு தகுதியான சித்த மருத்துவராக மாற்றிக் கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் கிளினிக் ஒன்றை தொடங்கியுள்ளார்.


தொடக்கத்தில் இருந்த மக்களின் ஆதரவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவரின் தனிப்பட்ட திறமைகள் சில பணக்காரர்களின் தொடர்பை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் அந்தப் பழக்கம் காசு சாம்பாரிக்க உதவவில்லை. இலவச ஆலோசனைகள் என்கிற ரீதியில் சென்று விடத் தடுமாற ஆரம்பித்துள்ளார். இதற்கு மேலாக இவர் மூலம் பலன் அடைந்தவர்களே பணம் என்கிற போது கவனமாகத் தவிர்த்து விடுவதும் வாடிக்கையாக இருக்கச் சித்த மருத்துவத்தை மட்டுமே படித்து வந்தவருக்கு அப்போது தான் மக்களின் மனங்களைப் படிக்கத் தொடங்கினார்.


தனக்கு எது வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு வீடு, அலுவலகம் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலில் இறங்கி விட்டார். எவரிடமும் தான் கற்று வைத்துள்ள சித்த மருத்துவம் குறித்து உரையாடுவது கூட இல்லை. காரணம் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள். இவரின் தொடர்பு கிடைத்து,


என் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக இந்தத் துறை குறித்த பல விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.


பல சமயம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவியுள்ளார். வீடு, அலுவலகத்திற்குக் கட்டிடங்கள் தேவை என்று எவர் என்னிடம் கேட்டு வந்தாலும் இன்று வரையிலும் இவரிடம் அனுப்பி வைப்பது வாடிக்கை. நல்ல தொடர்பில் இருந்தாலும், இவர் சொன்ன எதையும் முழுமையாக எதையும் நான் பின்பற்றியதே இல்லை. காரணம் சில உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் கட்டுப்பாடுகள் என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். 48 நாட்கள் என்றால் முழுமையாக விடாமல் கடைபிடித்து மருந்துகளை உண்ண வேண்டும். லேகியம், மற்றும் சூரணம் வகையான பொடிகளைக் குழந்தைகளை உண்ண வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும். பலன் கிடைப்பதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.அசட்டை பாதி. அவநம்பிக்கை பாதியென மனம் ஊசலாட்டத்தில் தவித்தாலும் எப்படியாயினும் இந்த ஆங்கில மருத்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவில் வருகின்றது.


வீட்டில் ஒருவருக்குத் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உருவானது. நாள்பட நாள்பட அது படையாக மாறியது. மேலே உள்ள நண்பருடன் இது குறித்துக் கேட்க வந்து பார்த்து விட்டு வேலிப்பருத்தியை கொண்டு வந்து தினந்தோறும் கசக்கி அதைச் சாறாக்கி அந்த இடத்தில் தடவி வாருங்கள் என்றார்.


தேடிக்கண்டு பிடிப்பதில் உண்டான சவாலின் காரணமாக அதனைத் தொடர்ச்சியாகச் செய்து வர முடியவில்லை. ஆனால் அந்தப் படையின் அளவு மட்டும் பெரிதாகிக் கொண்டேயிருக்க மனதில் பயம் வர திருப்பூருக்குள் இருக்கும் தோல் மருத்துவர் குறித்து ஆராய்ச்சி தொடங்கியது. கடைசியாக இவர் தான் சிறப்பான மருத்துவர் என்று நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டவரிடம் சென்ற போது சில மாதங்கள் அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்ட போதிலும் சரியானபாடில்லை.


ஒவ்வொரு முறையும் ஐந்நுறு ரூபாய்க்குக் குறையாமல் தீட்டிக் கொண்டிருந்தார்.


அன்றொரு நாள் கோபத்தில் இதைச் சுட்டிக்காட்டி சொன்ன போது "ரத்த பரிசோதனை செய்து விடுங்க" என்றார்.அதையும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்த போது "இது பிறவியிலேயே வந்த கோளாறு. ஹீமோகுளோபீன் குறைவாக உள்ளது. நிரந்தரமாகக் குணமாகக்க முடியாது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். மாதம் ஒரு முறை வந்து காட்டி விட்டு போங்க" என்றார். இந்தத் தகவல் கிடைக்க ஏழு மாதங்கள் அவர் மருத்துவமனை சென்று காத்திருந்த நேரங்கள் என்று ஒவ்வொன்றும் மனதில் வந்து போனது.


மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமோ? என்று யோசித்துக் கொண்டு மற்றொரு நண்பரை அழைத்துக் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனையைச் சொன்ன போது அவர் ஒருவரின் கைபேசி எண் கொடுத்து இவரைப் போய்ப் பாருங்க. இரண்டு மாதத்தில் நிரந்தரமாகக் குணமாகி விடும் என்றார்.


ஆர்வம் பாதி அவநம்பிக்கை பாதி என அவரைச் சந்தித்த போது அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.


சித்த மருத்துவத்துறையில் மாவட்ட அளவில் உயர் அதிகாரியாக இருந்தவர்.


அரசாங்கம், அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருத்துவர்களைப் போடாமல் இவரைப் படுத்தி எடுக்க விருப்ப ஓய்வு பெற்று விட்டு தனது சொந்த ஊரான திருப்பூரிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அடிப்படையில் வசதியான குடும்பம் என்பதால் பெயருக்கென்று கிளினிக் ஒன்று வைத்துக் கொண்டு நண்பர்கள் மூலம் வருகின்றவர்களுக்கு மட்டும் அவர் வீட்டிலேயே தயாரிக்கும் மருந்துகள் மூலமும், பல இடங்களிலிருந்து வரவழைக்கும் மருந்துகள் மூலம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.


மகளை அழைத்துச் கொண்டு போய்க் காட்டியதும் முழுமையாகப் பரிசோதனை செய்து விட்டு "ஒரு வாரம் கழித்து வாருங்க. ஒரு பொடி தருகின்றேன். தேனில் கலந்து இரண்டு மாதங்கள் சாப்பிட வைங்க. இந்தப் பிரச்சனை முழுமையாகப் போய் விடும்" என்றார்.


எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் பெண் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தேன். அவர் சிறிய டப்பாவில் கொடுத்த பொடிக்கு நானூறு ரூபாய் வாங்கிய போது எரிச்சலாகவே இருந்தது.


எங்கள் விடத் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆர்வமாக இருந்த காரணத்தால் முழுமையாக இரண்டு மாதமும் அவர் சொன்னபடியே செய்து முடித்த போது அந்த இடத்தில் சிறிய கரும்புள்ளி (மச்சம்) என்பது போல மாறி மற்ற அனைத்தும் அப்படியே மறைந்து போய் விட்டது. தோல் நோயால் உருவான அரிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள், கரும்படலம் என்று அனைத்தும் மறைந்து போன பின்பு தான் இந்தச் சித்த மருத்துவத்தின் மேல் முழுமையாக நம்பிக்கை வந்தது.


எனக்குச் சித்த மருத்துவத்தில் அரைகுறை நம்பிக்கை. ஆனால் வீட்டில் இருப்பவருக்கோ நம்பிக்கை என்பது துளி கூட இல்லை. ஆனால் இந்தத் தோல் வியாதிக்கு ஒரு சிறிய டப்பா பொடி கொடுத்தத் தாக்கத்தினால் என்னை விட இவரே ஆர்வமாக இருப்பதால் எனக்கு முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்து விட்டது.


இந்தச் சமயத்தில் தேன் நெல்லி, இஞ்சித் தேன், சத்து மாவு என்று இயற்கை சார்ந்த விசயத்தில் குடும்பத்தின் ஆர்வம் முழுமையாக மாற வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் ஆங்கில மருத்துவம் மிக அவசியம் தேவை ஏற்பாட்டாலொழிய அது அடிப்படை ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையில்லை என்கிற நிலைமைக்கு வந்துள்ளோம்.


கடைசியாகத் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேச வேண்டும். கல்வித்துறை, காவல் துறை, நீதித்துறை, மருத்துவத்துறை இந்த நான்கு துறைகளையும் சமூகத்தில் சேவைத்துறை சார்ந்தது என்கிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறை என்பது மிக முக்கியமானது.


ஆங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் மக்களின் மனோநிலை தான் அவர்களை அப்படி மாற்றுகின்றது என்பதில் என்னைப் பொறுத்தவரையிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


பத்துக்குப் பத்து அறையில் இருந்து கொண்டு மருத்துவம் பார்க்கும் உண்மையான மருத்துவருக்கு எந்த மரியாதையும் இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் திடம் மணம் குணம் போன்ற ஆடம்பர அட்டகாசங்கள் அவசியம் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் கடன் வாங்கிக் கட்டிடங்கள் கட்டுவதும், மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. கடன்களைக் கட்ட மக்களைக் கடன்காரர்களாக மாற்றுவது தான் நடக்கும். அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.


இயல்பாகச் சேவை மனப்பான்மையில் பணியாற்றும் நூற்றில் பத்து மருத்துவர்களைக் கூட நம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தோற்றத்தை வைத்து எடை போடுவது தான் நம்மவர்களின் வாடிக்கை. மேலும் நம் மக்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஒரேடியாகத் திணிக்க அவர்களும் பாதை மாறத் தொடங்கி விடுகின்றார்கள்.


ஆசை கொண்ட மனம் மாறுமா?


மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி யோசிக்க மனமில்லாமல் மக்களின் சுய சிந்தனைகள் மழுங்கி எதற்கெடுத்தாலும் மாத்திரை, உடனே மருத்துவர், எப்போதும் பயம் என்கிற சூழ்நிலையில் வாழப் பழகி விட்டதால் பணம் தின்னிக் கழுகுகளாக மருத்துவர்கள் மாறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.


இன்றைய மருத்துவ உலகம் என்பது கார்ப்பரேட் கலாச்சாரம் என்கிற பாதைக்கு மாறி பல வருடங்களாகி விட்டது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் ஷிப்ட் முறையில் மருத்துவர்கள் பணியாற்றுவது. ஒரே நபர் பல இடங்களில் ஒரு மணி நேரம் தொடங்கி மூன்று மணி நேரம் வரையிலும் பணியாற்றுவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் பல மருத்துவர்களின் காலில் சிக்கிய பந்தாக மாறியுள்ளது. நாமும் குளிர்சாதன வசதியுடைய மருத்துவமனைகளையே தேடிச் செல்லும் போது அவர்கள் குனிய வைத்து தான் குத்துவார்கள். குத்துதே, குடையுதே என்ற கத்த முடியுமா?


இன்று வரையிலும் சித்த மருத்துவம் என்றாலே பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அணுகுபவர்கள் தான் அதிகம். என் ஆண் குறி அதிக நேரம் விறைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?_ என்பது போன்ற கேள்விகளைத் தான் படித்த புத்திசாலிகள் கூடச் சில சித்த மருத்துவப் பதிவு எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்பதாக ஒருவர் எழுதியிருந்தார்.


நம்மவர்களின் அடிப்படை பலவீனமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. இதைப் பயன்படுத்தி முடிந்தவரைக்கும் லாபம் பார்க்க விரும்புவர்களால் சித்த மருத்துவத்தின் மீது இருந்த நம்பிக்கையும் போய் விட்டது.


சித்த மருத்துவம் என்பது அறிவு சார்ந்த பொக்கிஷம். ஆனால் குரு சிஷ்யன் என்ற நோக்கில் பாதி விசயங்கள் அடுத்தத் தலைமுறைக்கு வராமல் போய்விட்டது. மீதி எழுதப்பட்டு இருந்த ஓலைச்சுவடிக்களைக் கரையான் தின்று விட்டது. தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் போன்ற இடங்களில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்க மனமில்லாத அரசாங்கம் ஒரு பக்கம். மிச்சம் மீதி வைத்திருப்பவர்கள் அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க மனமில்லாமல் இருப்பது மறு பக்கம்.


இது குறித்துச் சிறிதளவே தெரிந்தவர்கள் இன்று வரையிலும் கிடைத்த விசயங்களை வைத்து எப்படிக் காசாக்கலாம்?என்று தான் யோசிக்கின்றார்களே தவிர மேலைநாட்டுக் கலாச்சாரம் போல அதைப் பொதுவில் வைத்து அதன் நம்பகத்தன்மையை உணர வைத்து உலகறியச் செய்வது என்ற பழக்கம் நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் எந்தக் காலத்திலும் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் இடையே உள்ள வேறுபாடுகள்


ஆங்கில மருத்துவம் நோய்களை உடம்பு என்கிற ஒரே வரையறைக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. சித்த மருத்துவம் நோய்களை உடல், உயிர், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கின்றது. சித்த மருத்துவத்தின் அடிப்படைத்தன்மை ஆன்மீகம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆன்மா அமைதி பெறும். ஆங்கில மருத்துவத்தில் ஆன்மா என்றால் கிலோ என்ன விலை?


மேற்கித்திய மருத்துவமுறைகளில் சோதனை முக்கியம். இன்று காய்ச்சலுக்கு ஒரு மாத்திரை என்றால் அதை விட நாளை ஒன்று வந்தால் இது மறக்கப்படும். முக்கியமாக நிரூபிக்கப்பட வேண்டும்.


நமது மருத்துவத்தில் ஒரே ஒரு மூலிகை என்றாலும் அதை எந்தச் சமயத்தில் எதனுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தும்.


ஆங்கில மருத்துவத்தில் மனித உடம்பு என்பது சோதனைச் சாலை.


சித்தர்களின் பார்வையில் உடம்பு என்பது இறந்து போகும் வரையிலும் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.


சித்த மருத்துவமென்பது உணவே மருந்து. அதற்கு நேர்மாறானது ஆங்கில மருத்துவம். இங்கே கண் கெட்ட பிறகே சூர்ய நமஸ்காரம்.


ஐம்புலன்களை அடக்க வேண்டிய அவசியத்தைப் போதிப்பது சித்த மருத்துவம். ஆனால் புலனாவது புடலங்காயவது என்பது ஆங்கில மருத்துவம். எல்லாவற்றுக்கும் மாத்திரை ஒன்றே போதும்.


சித்த மருத்துவத்தில் பட்டினி கிடப்பது பல முக்கியமான நோய்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். ஆனால் இங்கோ அத்தனைக்கும் ஆசைப்படு. கடைசியில் இருக்கவே இருக்கு அறுவை சிசிக்சை.நடைமுறை சிக்கல்கள்


2,50,000 மூலிகை சமாச்சாரங்கள் அடங்கிய இந்தச் சித்த மருத்துவத்தில் இன்று எத்தனை மூலிகைகள் இருக்கும் என்று நம்புகின்றீர்கள்.


ஆனாலும் தற்போதைய நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப பலரும் டானிக் போன்ற வகைகளில் இந்த மருந்துகளைத் தயாரிப்பதும், விபரம் புரிந்து வைத்திருப்பவர்களும், கடைசியாக வேறு வழியே இல்லை என்று இந்தச் சித்த மருத்துவத்திடம் அடைக்கலம் ஆனவர்களையும் பல இடங்களில் பார்க்க முடிகின்றது.


நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது உணர முடிகின்றது. இருமலுக்கு, சளிக்கு துளசி கண் கண்ட நிவாரணி. இதைக்கூட டானிக் முறையில் கொண்டு வந்துள்ளார்கள். ஒரு வருடத்தில் தீராத பிரச்சனை நாற்பது ரூபாயில் தீர்த்ததோடு நிரந்தர நிவாரணியாகவும் உள்ளது.


சித்தர்களால் சொல்லப்பட்ட விசயங்களும், சராசரி வாசிப்பு உள்ளவர்களுக்குப் புரிய வைக்க முடியாத சூட்சுமமான பாடலாகவே ஒவ்வொருவரும் எழுதியிருப்பதால் இது பலருக்கும் செல்லாமல் இன்று இதன் பலன் தெரியாமலேயே போய்விட்டது. தமிழர்களிடத்தில் எதையும் ஆதரிக்கும் தன்மை குறைவு. ஆதரிப்பவர்களையும் அதட்டி உட்கார வைத்து விடும் தன்மை அதிகம்.


சுய முனைப்பு அறவே இருக்காது. தங்கள் சிந்தனைகளைச் சுருக்கியே வாழப் பழகிக் கொண்டதுமான தமிழர்களின் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.


ஆனால் உருவாக்கியவர்களை விட அதைத் தானே செய்து சாதித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் நம்மவர்களுக்கு மிஞ்சியவர்கள் எவருமே இல்லை.


இதற்கு மேல் வேறென்ன சொல்ல?


உங்கள் ஆரோக்கியம். உங்கள் சிந்தனைகளிலிருந்து தொடங்கட்டும்.


8.அவன் ஒரு தீவிரவாதி


அவனின் நோக்கம் ஒன்று மட்டுமே. இலக்கை அடைய வேண்டும். உருவாகும் விபரீதங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.ஆனால் செயலாக்கம் முக்கியம். புத்தி பொறுமையாக இரு என்று எச்சரிக்கும். ஆனால் மனம் மறுக்கும். இடைவிடாத இந்தப் போராட்டத்தில் உணர்ச்சி கொந்தளிப்பாகி மனம் கழிவிரக்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.


நடந்ததை, நடக்கப்போவதை யோசித்து,இப்படி நடந்து விடக்கூடுமோ என்று பயந்து நம்மைச் சர்வகாலமும் அலைகழித்துக் கொண்டே இருக்கும்.


இந்தத் தீவிரவாதி ஒவ்வொரு மனதிலும் நிரந்தரமாகவே இருப்பவர்.இவர் நாட்டைச் சீர் குலைக்கும் தீவிரவாதி அல்ல.


ஆனால் அதை விடக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்துபவர். இவரை நாள்தோறும் நம்மோடு வாழ அனுமதித்துக் கொண்டுருக்கின்றோம். அவரின் பெயர் தான் திருவாளர் கவலை.. தீவிரமான எண்ணங்கள் கவலைகளை உருவாக்குகின்றது. பல சமயம் வெறுத்துப் போய்ச் சிலரை காதல், சாதி, மத, பணத் தீவிரவாதியாகவும் மாற்றி விடுகின்றது.


நடந்த சம்பவங்கள்,காணும் காட்சிகள் என்று ஒவ்வொன்றையும் கண்கள் உள்வாங்க, மூளையில் பிரதிபலிக்க ந்யூரான்கள் ஒவ்வொன்றையும் இது தேவை இது தேவையில்லை என்று பிரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனம் உள்ளே புகுந்து டேய் சோமாறி நீ கம்னு கிட என்று சொல்லிட நரம்புகள் வழியே தனது இலக்கை அடைகின்றது.


திருவாளர் கவலைக்கு உடம்பில் அதன் இலக்கென்பது வயிற்றுப்பகுதியில் இருப்பதால் மனிதர்களின் ஒவ்வொரு கவலையின் பிரதிபலிப்பும் இங்கே வந்து முடிகின்றது. பலருக்கு வாழ்க்கை முழுக்கப் போராடக்கூடிய (ஆரோக்கிய) போராட்டங்களும் இங்கிருந்தே தொடங்குகின்றது.


நாம் உண்ணும் உணவை செறிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric Acid )என்பதை இயல்பாகவே இயற்கை உருவாக்கி வைத்துள்ளது.இந்த அமிலத்தை ஒரு குடுவையில் எடுத்து ஒரு இரும்புத்துண்டை அதில் போட்டு வைத்தால் இருந்த இடம் இல்லாமல் மாயமாகக் கரைந்து விடும். இது இல்லாவிட்டால் நாம் அம்பேல்.


பர்கர் சாப்பிட்டாலும், பாயாசம் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் சென்றால் செரிமானமாக மாறாவிட்டால் ஆய் ஊய் என்று கத்தி ஊரை கூப்பிட்டு இறுதிப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். அளவோடு வளமோடு என்பது உடம்பில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உள்ளது. இப்படித்தான் யாரோ ஒருத்தரு நம்முடைய கண்ணுக்குத் தெரியாத சூத்திரத்தை நிரலியாக எழுதிவைத்துள்ளனர். இதைப் பலர் விதி என்கிறார்கள். புத்திசாலிகள் மதி என்றும் சொல்கின்றார்கள்.


நல்லா பசிக்குது. போய் ஒரு கட்டு கட்டனும்ன்னு நீங்க கிளம்பிட்டீங்கன்னா உள்ளே இந்த அமிலம் சுரக்கத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம். பசித்த போது சாப்பிட்ட முடியாதவர்களுக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரந்து இரைப்பை மற்றும் சிறுகுடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa)படலத்தைச் சிதைத்து புண்ணாக மாற்றுகின்றது.


உள்ளே உள்ள வயிற்றுச் சுவரே பல சமயம் சாப்பாடாக மாறிவிடுகின்றது. இந்தக் குடல் புண் உருவாக ஏராளமான காரணங்கள் இருந்தாலும் மற்ற எல்லாவற்றையும் விடக் கவலைகள் கொடுக்கும் அல்வாத் துண்டுகள் தான் நம் ஆரோக்கியத்தை விலை பேசத் தொடங்கி விடுகின்றது.


குடல் புண்ணில் இரண்டு வகை உள்ளது.வாயுக்கோளாறால் உருவாக்குவது Gastric Ulcer


சிறுகுடலில் ஏற்படும் புண் Duodental ulcer


இரண்டையும் சேர்த்து உருவாவதை peptic ulcer


நாம் பேசப்போவது மனித உடற்கூறியல் பற்றியல்ல.


இந்தக் குடல்புண்களை அதிக அளவு உருவாக்கும் தீவிரவாதியான கவலையைப் பற்றியே.


கலைகளில் விருப்பமில்லாதவர்களைக் கூட நாம் பார்த்திருப்போம். ஆனால் கவலையில்லாத மனிதனை சித்த சுவாதீனம் இல்லாதவன் என்றே தற்போதைய சமூகம் அர்த்தப்படுத்துகின்றது.


நாம் அணிந்திருக்கும் ஆடைகளைப் போலவே எப்போதும் நம்மோடு இருப்பவை பயமே. சின்னப் பயம், பெரிய பயம் என்ற பாரபட்சமின்றி எப்போதும் ஏதோவொரு பயம் நம்மோடு இருக்க அதுவே நமக்குத் தேவையானதாகவும் அன்றாடச் செயல்பாடுகளையும் அதுவே தீர்மானிக்கின்றது.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, குழப்பம் போன்ற பல காரணிகள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றது.


விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் கொண்டு போய் விடுகின்றது. இவற்றைத் தவிர இந்த மன அழுத்தத்தை நாமே விலை கொடுத்து வாங்கவும் செய்கின்றோம்.


அதாவது புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை போன்றவையே. இந்த மன அழுத்தம் உருவாக இயல்பாகவே பயமும் பங்களாளியாக நம்முடனே தங்கி விடுகின்றது.


பல சமயம் பயங்கள் சொல்லும் வாழ்க்கையே நம்மைப் பக்குவப்படுத்தவும் செய்கின்றது.


ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்குத் தேவைப்பட்டாலும் அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். காரணங்கள் அறியப்படாவிட்டால் மன அழுத்தம் முதல் மனநோய் வரைக்கும் என்ற கட்டுரைக்கு நமக்குத் தகவல் கிடைத்து விடும் வாய்ப்புள்ளது.


பதட்டம் பயத்தை உருவாக்குகின்றது. பயம் கவலை வரவேற்கின்றது. கவலைகள் மன அழுத்த கதவை திறக்க இனம் கண்டு கொள்ளாத போது உலகே மாயம் வாழ்வே மாயம் என்று தெருவில் அலையும் பரதேசி வாழ்க்கை அறிமுகமாகின்றது.


குறிப்பிட்ட செயலை செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் முக்கியம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ எல்லையை மீறத் தொடங்க மனதில் இனம் புரியாத வேகமும் உருவாகி விடுவதைக் கவனித்தால் புரியும்.


நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன. நேர்மறையென்பது சாலை விதிகளை மதித்து வண்டியை ஓட்டுதல். எதிர்மறையென்பது வலது பக்கம் கையைக் காட்டி இடது பக்கம் வண்டியை திருப்புதல் போன்றது. காலையில் எழும் வரையிலும் உயிரைப் பற்றித் தெரியாத உடம்பு கண்விழித்து உலகத்தைப் பார்க்கத் தொடங்க ஒவ்வொரு சிந்தனையிலும் இந்தப் பயங்கள் நம்மில் ஒட்டிக் கொண்டுவிட எழுந்து ஓட வைக்கின்றது.


பாடங்களைச் சரியாகச் சொல்லத் தெரியாத போது ஆசிரியரை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம்? என்ற பயம் நம் வாழ்க்கையைத் தொடங்கி வைக்கின்றது. படித்து முடித்துச் சரியான வேலைகள் கிடைக்காத போது எதிர்கொள்ளும் கேள்விகளை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம் என்ற பயம் தொடர வைக்கின்றது.


மனைவி கேட்ட பூ முழம் முப்பது ரூபாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது வாழ்க்கை குறித்த அக்கறை பயம் வருகின்றது. மகளுக்குத் திருமணம், வீட்டு வாடகை, வங்கியில் மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகை என்று பயமென்பது வாழ்நாள் முழுக்க வளர்பிறையாகவே உள்ளது.இதற்குத் தேய்பிறை என்பதே இல்லை.


இன்றைய மருத்துவம் அனைத்தையும் கூறுபிரித்துக் காட்டினால் மனம் சார்ந்த செயல்பாடுகளை ஒரு அளவுக்கு மேல் அதனால் பாகுபடுத்திப் பிரித்துக் காட்ட முடியவில்லை.


ஆனால் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் மனமே மருந்து என்று எளிதாகச் சொல்லிவிட்டுச் சென்று விட்டது.


ஆனால் இந்த மனத்திற்கு எந்த மருந்துகளும் கடைசி வரையிலும் வேலை செய்வதில்லை. பயிற்சி தான் தீர்வாக உள்ளது. அந்தப் பயிற்சியைக் கொண்டு வர முடியாமல் தான் நாம் தடுமாறுகின்றோம். தடுமாற்றமே தடம் புரள வைக்கின்றது.


தற்போதைய சமூகத்தில் ஆழ் மன பயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரமாக இன்று இருப்பவை பணம்.


இந்தப் பணமே எதிர்காலப் பயத்தை உருவாக்குகின்றது. வளர்க்கின்றது. நாமும் அதையே விரும்புகின்றோம் என்பதால் பயங்களை நம்மோடு ஒட்டி வாழக்கூடிய ஒன்றாகவே இருந்து விடுகின்றது.


பணமில்லாதவன் பசிக்காக ஓட அதுவே பணமிருப்பவர்கள் உடம்பை குறைக்க ஓடுகின்றார்கள். இரண்டு செயலும் ஒன்று. ஆனால் காரணங்கள் வெவ்வேறு.


அறிவு வளர வளர சிந்தனைகளின் வளர்ச்சியை இன்றைய சமூகம் கொண்டாடுகின்றது. உருவாகும் கேள்விகளுக்குப் பதில் தேட அதுவே வளர்ச்சியின் பாதை என்கிறார்கள். எதையும் கேள்வியாகக் கேட்டுப் பழகு என்றும் சொல்கின்றார்கள்.


ஒருவகையில் பார்த்தால் அறியாமையே ஆயுதம் போலத்தான் உள்ளது. எதையும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மனதில் குழப்பங்கள் உருவாவது இல்லை. இருப்பதே சிறப்பு என்கிற சிறிய வட்டமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கையை இயல்பாக அனுபவித்து வாழ முடிகின்றது.


தற்போது வெற்றி என்பதை எளிதாக வரையறைத்து வைத்துள்ளனர்.


வெற்றி என்பது என்ன?


தேவையான அளவுக்குப் பணம் இருந்தால் அவன் வெற்றி பெற்றவன்.


மிதமிஞ்சிய பணமிருந்தால் அவனே சாதனையாளன்.


ஒருவனிடம் இருக்கும் பணமே சகலத்தையும் தீர்மானிக்கின்றது. அந்தஸ்த்து, அதிகாரம், செல்வாக்கு என்று சகல திசையிலும் பரவி நிற்கின்றது. பணம் தவிர மற்றவற்றைப் பேசுபவர்களை இறுதியாகப் பரதேசி என்கிற நிலை வரைக்கும் நம்மவர்கள் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றார்கள்.


பணத்தை மெத்தைக்குக் கீழே வைத்து தூங்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கமும் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் மறுபக்கம் போராடிக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.


பணத்தைத் தேவைக்கு அதிகமாகச் சேர்த்தவர்களும் எதையும் முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.


வாழ்க்கை தேவைக்குத் தேடிக் கொண்டிருப்பவர்களும் ஆசைப்படுவதை அடைய முடிவதில்லை.


இந்தப் பணம் ஒவ்வொரு மனிதரையும் நாள்தோறும் மாற்றிக் கொண்டேயிருந்தாலும் நமக்குப் பணத்தாசை குறைவதில்லை.


பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்


கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்


துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்


பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

(தேவையான சமயத்தில்) அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்

ஆன்மீகம் - எண்ணமே வாழ்க்கைநண்பர் இராஜராஜனுடன் ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்கள்(ஆசான் வாழ்ந்த இடங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக அவருடன் நண்பர்கள் துணை கொண்டு பயணித்தேன். கூடவே மனதில் உருவான ஆன்மீகம் குறித்த எனது பார்வை)


பயண வழித்தடம்


(தமிழ்நாடு - கடற்கரையோர சாலை வழியே பயணம்)


1. திருப்பூர் – சென்னை

  1. சென்னை – திருச்செந்தூர்


  1. திருச்செந்தூர் – மதுரை

  1. மதுரை – திருவாவாடுதுறை

  2. திருவாவாடுதுறை - திருப்பூர்


ஆசான் காணொளிக் காட்சிகள்


https://www.youtube.com/watch?v=bL31QvVTzaM


https://www.youtube.com/watch?v=GDHlPU_bhpY


https://www.youtube.com/watch?v=-gfgB5Ylf44


https://www.youtube.com/watch?v=eWWl6vwlmgY(பயணம் செய்த மாதம் - ஜனவரி 2014)

9. ஆசான்


நாங்களிருவரும் அவரை ஆசான் என்று தான் அழைப்போம். நாங்கள் என்றால் நானும் இராஜராஜனும். இராஜராஜன் எனக்கு வலைபதிவுகள் மூலம் வாசகராக அறிமுகமாகி நண்பராக மாறி என் குடும்பத்து அங்கத்தினராக மாறியவர். என் எழுத்துலக வாழ்க்கையில் எண்ணிக்கையில் அடங்கா உதவியைச் செய்தவர். இன்று வரையிலும் செய்து கொண்டிருப்பவர். என் நலமே அவர் நலம் போல கருதிக் கொண்டு எனக்கு உதவிக் கொண்டிருப்பவர்.


நான் எழுதி வெளியிட்டுள்ள “தமிழர் தேசம்” என்ற மின் நூலே இவருக்குத் தான் முறைப்படி சமர்பிக்கப்பட வேண்டும்.


நான் வலைபதிவில் எழுத வந்த முதல் ஆண்டில் தமிழர்களை, தமிழ் மன்னர்களை, அவர்களது காலடித்தடங்களை, சங்ககாலத்தைப் பற்றி எழுதத் தொடங்கிய போது அறிமுகமாகி கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய அத்தனை துயரங்களில் பங்கெடுத்து என்னை மீட்டெடுத்தவர். தமிழ் மன்னர்களில் சோழப் பேரரசில் வாழ்ந்த இராஜேந்திர சோழன் குறித்து இது வரையிலும் அறியப்படாத் தகவல்களைச் சேகரித்து எழுத வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை விரட்டிக் கொண்டிருப்பவர்.


இன்று வரையிலும் நாங்கள் இருவரும் வெவ்வேறு துருவங்களாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எண்ணங்கள். கருத்து ரீதியான செயல்பாட்டில் இருந்தாலும் இரும்பு காந்தம் போல ஏதோவொன்று இருவரையும் இணைத்து வைத்துத் தண்டவாளம் போல எங்கள் இருவரின் நட்பும் இயல்பான புரிதலுக்கு அப்பாற்பட்டுப் பலமாக உள்ளது.


இராஜராஜனுக்கு அறிமுகமான ஆசானை முதன் முதலாக இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் அவர் வீட்டில் நான் சந்தித்தேன். ஆசான் ஈடுபட்டுள்ள யோகாசனம் துறையில் எனக்குப் பெரிதான ஆர்வம் இல்லாத காரணத்தால் அவருடன் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன். அப்போது இராஜராஜன். ஆசான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த யோகாசனம் குறித்த விபரங்களைப் புத்தகமாக மாற்றுவதில் உதவி புரிந்து கொண்டிருந்தார்.


ஆசான் யோகாசனம் குறித்து சில புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அதில் ஒன்று தான் "உங்கள் ஆரோக்கிய வாழ்வு" என்ற பெயரில் பாரதி பதிப்பகம் சென்னை வெளியீடாக வந்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இந்தப் புத்தகம் முக்கிய பாடமாக உள்ளது. சிறந்த இயற்கை உணவுகளை எப்படிச் சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி அது குறித்த வழிகாட்டுதலை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். “இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்” போல இவரும் தமிழ்நாட்டில் முக்கியமான நபராகக் கருதப்பட வேண்டியவர். இயற்கை உணவுகள் மற்றும் யோகக்கலையில் குறிப்பிட்டத்தக்க ஆளுமை கொண்டவர்.


நான் ஒவ்வொரு முறையும் திருப்பூரில் இருந்து அலுவலக மற்றும் சொந்த வேலையாகச் சென்னை செல்லும் போதும் ஆசான் வீட்டில் நானும் இராஜராஜனும் தங்குவோம். கீழே வீடும் மேலே யோகா கற்றுக் கொடுக்க ஒரு அற்புதமான வடிமைப்பில் ஒரு நீண்ட ஹால் போன்ற வடிமைப்பில் நான்கு புறமும் ஆள் உயர கண்ணாடி அற்புதமான ரசிக்கக்கூடியதாக இருக்கும். நடுநாயகமாக உள்ள ஊஞ்சலில் ஆடிக் கொண்டே நானும் இராஜராஜன் கருத்து ரீதியான விவாதங்களில் புயலை உருவாக்கிக் கொண்டிருப்போம்.


ஆசானின் முழுப் பெயர் திரு. கிருஷ்ணன். திருச்செந்தூரில் பிறந்து சென்னையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.


தனது வாழ்க்கையை யோகா என்ற கலைக்காக அர்ப்பணித்தவர். இன்று அவரின் வயது 70. திருமணம் செய்து கொள்ளவில்லை.


தமிழ்நாட்டில் உள்ள அரசியல், திரைப்பட, சமூகப் பிரபல்யங்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யோகக்கலையைக் கற்றுக் கொடுத்தவர்.


கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். அப்படியென்றால் வசதியாக வாழ்பவர் என்ற கற்பனைக்கு வந்து வீடாதீர்கள்.


பணத்திற்கு ஆசைப்படாமல், எவருடனும் எதற்காகவும் அண்டிப்பிழைக்கும் எண்ணம் இல்லாமல் ஆச்சரியப்படத் தக்க வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் நோக்கம், தன் செயல்பாடு, தன் சுதந்திரம் என்பதில் மட்டுமே இன்று வரையிலும் குறியாக இருந்து தான் கற்று வைத்துள்ள கலையை முடிந்த வரைக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.


தன்னைச் சந்தைப்படுத்திக் கொள்ள (மார்க்கெட்டிங்) விரும்பாமல் தான் உண்டு தன் கடமை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு சென்றவர்கள், உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் மணிக்கு இத்தனை டாலர் என்று சம்பாரித்துக் கொண்டிருந்த போதிலும் இவருக்கு இன்று வரையிலும் பணம் சார்ந்த விசயங்களில் அதிக அளவு அக்கறையோ ஆர்வமோ இல்லாமல் இருப்பது கண்டு பலமுறை நானும் இராஜராஜன் வியந்து போய் இருக்கின்றோம்.


மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பச்சைக்காய்கறிகள், பழங்களை மட்டுமே தன் உணவாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்.


தொலைக்காட்சிகளின் வாயிலாக இன்று தமிழ்நாட்டில் பிரபல்யமாக அறியப்படும் பல காசு பார்க்கும் மனிதர்கள் அறியாத நூற்றுக்கணக்கான யோகக் கலையைக் கற்று வைத்திருப்பவர். பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர்களுக்கே இப்படிப்பட்ட ஆசனங்கள் உண்டா? என்று யோசிக்கக் கூடிய வகையில் பன்முகத் திறமை கொண்டவர் தான் ஆசான்.


ஆனால் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. எவரையும் தரக்குறைவாக மற்றவர்களுடன் சொல்வதும் இல்லை. இதைப்பற்றிக் கேட்கும் போதெல்லாம் தயாராக ஒரு பதிலை வைத்திருப்பார்.


"அவரவர் வினைவழி. அவர்வர் வழி" என்பார்.


இராஜராஜனுக்கு இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்தது. சென்னையில் இருந்த போது அந்த முயற்சி கைகூடவில்லை. இதன் காரணமாக இந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இதுவொரு சவலான வேலையாகும். காரணம் ஆசான் ஒரு வகையில் குழந்தை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.


தற்கால நடைமுறைக்கு அவரைக் கொண்டு வந்து நிறுத்துவது அத்தனை சுலபமல்ல. இதைப் பலமுறை சொல்லியே இராஜராஜன் இந்தப் பணியை என்னிடம் கொடுத்திருந்தார். நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டதும், முதலில் ஆசானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் முறை சென்னைக்குச் சென்ற போது அவர் வைத்திருந்த பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து படித்தேன்.


இரண்டாவது முறை இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கி அவர் வாழ்ந்த இடங்களை, பழகிய மனிதர்களைப் பற்றி நேரிடையாகச் சென்று தெரிந்து கொண்டு வந்து விடுவோம் என்று ஒரு நீண்ட பயணத்தை நண்பர்களுடன் தொடங்கினேன்.


காரணம் இராஜராஜன் சிங்கப்பூரில் இருப்பதால் அவர் மூலம் அறிமுகமான திரைத்துறையில் உள்ள நண்பர் மதன் ஒருங்கிணைப்போடு ஒரு குறுகிய காலப் பயணத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தேன். அப்போது பயணங்களில் எடுத்த படத்தை, வாகனத்தில் சென்ற போது அவருடன் உரையாடியதை வைத்து நான்கு காணொளித் தொகுப்பை உருவாக்கி உள்ளோம்.


இடங்களைத் தேர்வு செய்தல் (லோகேசன் பார்த்தல்) என்று சொல்வார்கள். பயணத்தின் போது எடுத்த படங்களை, அவர் குரலை, அவர் கற்று வைத்துள்ள பலதரப்பட்ட யோகா வழிமுறைகளை முதலில் ஆவணப்படுத்தி வைத்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதத்தில் இதை ஒரு குழுவினரோடு சேர்த்து உருவாக்கினோம்.


10.யோகா கலையும் யோகக்காரர்களும்?


யோகா கலை - சில புரிதல்கள்


ஆரோக்கியமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடம்பு என்பதைப் பற்றி முதலில் புரிந்து கொள்வோம்.


நாம் விரும்பும் அத்தனை வசதிகளும், விரும்பும் வாய்ப்புகளும் நம்மிடம் இருந்தால் இதனைத் தான் தற்பொழுது ஆரோக்கியமான சமூக வாழ்க்கை என்கிறார்கள். மற்றவர்களால் மதிக்கப்படும் வாழ்க்கையைத் தான் சிறப்பான "அங்கீகாரம்" என்றும் சொல்கின்றார்கள். இதைப் போலவே ஆரோக்கியமான உடம்பு என்பதனை வெளித் தோற்றத்தை வைத்து தான் மதிப்பிடுகின்றார்கள்.


ஒரு ஆண் அல்லது பெண் பார்க்க அழகாக, புஷ்டியாக, களையாகத் தோற்றப் பொலிவோடு இருந்தால் அவர்களைப் பார்த்தவுடன் விரும்புகின்றார்கள். கவர்ச்சியான மனிதர் என்றும் சொல்கின்றார்கள். இதற்கு மேலாகக் ஆண்களும், பெண்களும் கூடுதல் ஒப்பனைகளைச் சேர்த்துக் கொள்ளச் சமகாலத்தில் அழகுக்கு அழகு சேர்ப்பது என்று முலாம் பூசி உடம்பை கெடுத்துக் கொள்கின்றார்கள். கடைசியில் அனைவரும் இழந்து போன இளமையை நினைத்து அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் இங்கே தான் பிரச்சனையும் தொடங்குகின்றது. இறப்பு நமக்கில்லை என்ற நம்பாத மனமும், இளமை என்பது மறையக் கூடியது என்பதனை ஏற்காத மனதையும் கொண்டவர்கள் ஆயுள் முழுக்க அவஸ்த்தைப்பட வேண்டியவர்கள். அவர்களைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற சூழ்நிலையில் தான் ஆரோக்கியம் என்பதன் உண்மையான அர்த்தமும் மாறிவிடுகின்றது.


அன்றாடம் நாம் செய்யும் உடற்பயிற்சிக்கும், யோகா கலைக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உடற்பயிற்சி என்பது உடலை வலுவாக்குவது. யோகா என்பதை மனதை அமைதிப்படுத்தி ஆன்மாவை இனம் காண வைப்பது.


உடல் முழுக்கப் பரவியுள்ள சக்தி ரூபங்களை அடையாளம் காண உதவுவது.


இன்று தினசரி நடைப்பயிற்சி, அதிகமான தண்ணீர் குடித்தல் என்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறி அறிவுரை வழங்கி பலரின் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


பத்திரிக்கைகளும் மருத்துவர் போலவே அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதால் எது உண்மை? எது தேவை என்பதே எவருக்கும் தேவையில்லாமல் போய்விட்டது. விளம்பர மோகம் ஒரு பக்கம். விபரிதமான பழக்கவழக்கங்கள் மறு பக்கம்.


மொத்தத்தில் இன்று ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையிலும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத கரும்பக்கங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளாத மனம். ஆசையைக் குறைத்துக் கொள்ள முடியாத வாழ்க்கை சூழ்நிலை. இதனால் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையை அமைதியிழந்த மனதுடன் தான் வாழ வேண்டியதாக உள்ளது.


ஆனால் யோகா என்ற கலையின் தன்மையே வேறு. இது உடற்பயிற்சி அல்ல. உங்களின் சக்தியை, உங்களுக்கே தெரியாத சக்தியை உங்களுக்கே உணர்த்திக் காட்டும் வல்லமை உடையது.


யோகா என்ற கலையானது இந்திய நாட்டின் சிறப்பு அடையாளங்களின் ஒன்று. இதனை வெளியே இருந்து எவரும் இங்கு வந்து கற்றுத் தரவில்லை. இங்கே வாழ்ந்த சித்தர்கள் உருவாக்கிய கலையிது.


ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இங்கே ஒவ்வொன்றையும் அறிவுத்தராசில் நிறுத்தி, எதனையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து நமக்கே உரித்தான பல பாரம்பரிய கலைகள் நம்மை விட்டுச் சென்று விட்டது. இதனை மேற்கித்திய சமூகம் "பிராண்ட்" பெயரோடு மறுபடியும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது அதற்குத் தனி மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்து நாமும் அதனைத்தான் உண்மை என்று நம்பத் தொடங்குகின்றோம்.

யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லாகும்.


தமிழில் யோகா என்பதன் அர்த்தம் "இணைதல்" என்பதாகும். ஒலி அலையின் வேகத்தை விட அதிகமானது மனித மனதின் வேகம். நம் மனதில் வேகத்தை ஒரே இடத்தில் நிறுத்துவது தான் இதன் முதல் கடமை. அதற்கான பயிற்சி தான் இந்த யோகா நமக்குக் கற்றுத் தருகின்றது. ஒவ்வொரு ஆசனமும் நமக்கு ஒவ்வொரு விதமாக உணர்த்துகின்றது.


நம்முடைய மனம் அலைபாயுதலை நிறுத்தினால் தான் ஆரோக்கியம் என்ற வார்த்தையின் முதல் படியை நாம் தொட முடியும். அடுத்தடுத்த பயிற்சிகளின் மூலம் மேற்கொண்டு செல்ல முடியும். இதனைத் தான் சித்தர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், தாங்கள் படைத்த பாடல்களின் மூலம் நமக்குப் புரிய வைத்தனர்.


மனதை ஒரு நிலைப்படுத்த மூச்சுப் பயிற்சி அவசியம் தேவை. இதன் மூலம் மட்டுமே நம்மிடம் உள்ள அற்புத ஆற்றலை நாம் பெற முடியும். படபடப்பு, பரபரப்பு என்று வாழ்க்கை மாறிப்போன சூழ்நிலையில் நாம் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் யோகா மட்டுமல்ல எந்தக் கலையையும் முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது.

இதனை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.


நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது, அவர் படபடப்பாக வந்தாலும் சரி, பயத்தோடு வந்தாலும் சரி உடனே "வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று தான் தொடங்குகின்றோம். உட்கார்ந்தால் மட்டுமே படபடப்பு குறையும், மனம் நிலைப்படும். அதன் பிறகே நம் உரையாடல் உணர்த்தும் உண்மைகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முதலில் அமர வேண்டும்.


அதன் பிறகே மூளை அமைதியான நிலைக்கு வருகின்றது. யோகாவின் ஆரம்பமே அமர்தலில் இருந்தே தொடங்குகின்றது.


இந்தக் கலையில் உள்ள ஒவ்வொரு ஆசனங்களின் மூலம் நமக்குப் பல்வேறு பரிணாமங்கள், பயிற்சிகள் மூலம் தொடர முடியும். தலை முதல் பாதம் வரைக்கும் உள்ள நரம்பு மண்டலங்களுக்கு நம்மால் புத்துணர்ச்சி அளிக்க முடியும்.


உடற்பயிற்சி என்பது உணவோடு சம்மந்தப்பட்டது. உங்கள் சக்தி குறைய மேலும் உணவு தேவைப்படும். உண்ட உணவு உடற்பயிற்சிகள் மூலம் எரிக்க மேலும் தேவைப்படுகின்றது. இது இடைவிடாத சுழல் போன்றது.


ஆனால் யோகா உங்கள் மனதோடு சம்மந்தபட்டது. உங்கள் உறுப்புகளை வலுவாக்குவதை விட எல்லாவிதமான உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவல்லது.


இழந்த சக்தியை, உள்ளே உள்ள தெரியாத சக்தியை அடையாளம் காண வைப்பது. ஆசனங்கள் மூலம் மட்டுமே உடலும் மனமும் ஒரே சமயத்தில் சீராகும்.


உடல் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நாள்தோறும் கவலைகளால் மனம் அரித்துக் கொண்டே இருக்கின்றது என்றால் ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்? "உள்ளே அழுகின்றேன். வெளியே சிரிக்கின்றேன்" என்ற கதையாகத் தான் வாழ்க்கை இருக்கும்.


அனைவருக்கும் தெரிந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்று வைத்திருந்த திருமூலர் என்ற சித்தர் 84 லட்சம் யோகக்கலைகளை அறிந்தவர் என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்கின்றது. ஆனால் இங்கே மதம், கலைகள் என்ற இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொண்டு பலரும் திக்குத் தெரியாத காட்டில் உலாவும் மிருகங்கள் போல மனித ரூபத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


ஒரு பக்கம் எதைப் பார்த்தாலும் சந்தேகம். எப்போதும் அவநம்பிக்கை. மற்றொரு பக்கம் எதைப் பார்த்தாலும் புனிதம். தாங்கள் பின்பற்றும் மதக் கொள்கைகள் தான் பிரதானம் என்று மனிதர்கள் இரு கோடுகளாகப் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.


ஆசான் திரு. கிருஷ்ணன் ஒரு சமயம் உரையாடலின் மூலம் தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அவருக்கு மொத்தம் 2800 ஆசனங்கள் தெரியும் என்றார். ஆனால் நடைமுறையில் கைவிரல்களுக்குள் அடங்கக்கூடிய ஆசனங்களை வைத்தே பலரும் காசு சம்பாரிக்கப் பிழைப்பு வாதிகளாக மாறிவிட்டனர் என்று வருத்தத்துடன் சொன்னார்.


நம் சிந்தனையில் தெளிவு இருந்தால் மட்டுமே அன்றாட வாழ்வில் அமைதி கிட்டும். நாம் உருவாக்கிக் கொள்ளும் அமைதியே நம்மை எல்லா நிலைகளிலும் வழி நடத்தும்.


உங்களுக்கு மதம், மார்க்கம், தத்துவஞானிகள் சொல்லிய கருத்துக்களை விட உங்களை உணர்ந்து கொள்வது மிக முக்கியம். நம்மை நாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெரிய சாதனையாளர்களாக வர முடியாவிட்டால் கூட அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ முடியும். அதற்கு உங்களுக்குப் படிப்படியான பயிற்சி முக்கியம்.


எந்தப் பயிற்சி தேவை? அதுவும் எப்போது தேவை என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்?

11.கடற்கரைச் சாலை - பயணக்குறிப்புகள்


ஆசான் திரு. கிருஷ்ணன் அவர்களைப் பற்றிக் குறும்படம் எடுக்கத் திட்டமிடுதலுக்காகச் சென்று வந்த ஊர்களின் பார்வையும் சந்தித்த மனிதர்கள் தந்த தாக்கமும் குறித்த என்னுடைய எண்ணத்தைச் சில அத்தியாயங்களில் எழுதி வைத்து விடுகின்றேன்.


இதற்காக நான் பயணித்து வந்த தூரம் ஏறக்குறைய 1400 கிலோமீட்டர். சென்னையில் இருந்து கடற்கரைச் சாலை வழியாகத் தனுஷ்கோடி. அங்கே இருந்து மீண்டும் கடற்கரைச் சாலை வழியாகப் பட்டுக்கோட்டை. இதன் தொடர்ச்சியாகக் கும்பகோணம் அருகே உள்ள திருவாவாடுதுறை.


கடைசியாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூருக்குத் திரும்பி வந்தேன்.

நான் இன்னமும் தமிழ்நாட்டிற்குள் பார்க்க வேண்டிய ஊர்கள், பயணம் செய்ய நினைக்கும் ஊர்கள் பல பட்டியலில் இருந்தாலும் இந்தப் பயணத்தின் மூலம் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்த பல ஊர்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை என்ற நவீன வசதிகள் கொடுத்த சுகமான பயணத்தை, பயத்தை நேரிடையாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது.


சென்னை


ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் சென்று திரும்பி வரும் போது ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் பாடங்களைக் கற்றுக் கொண்டு வருவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத்தின் அவசர வாழ்க்கையை விடப் பெருநகர அவசரங்கள் மனிதர்களைப் படிப்படியாக யோசிக்கவே முடியாத அளவுக்கு எந்திரமாக மாற்றி வைத்து விடுகின்றது. இது போன்ற பெரு நகரங்களில் சராசரி வருமானம் மற்றும் சராசரிக்கும் கீழே உள்ள அன்றாடம் காய்ச்சி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் அவஸ்த்தைகள் தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை உருவாக்குகின்றது.


இந்த வர்க்கத்தினர் இதனையே விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். வேறு எந்த மாற்று ஏற்பாடு குறித்தோ, வேறு இடங்களில் உள்ள வாய்ப்புகளைக் குறித்தோ யோசிக்க மனமில்லாது வாழ்பவர்கள் தான் என் பார்வையில் சாதனையாளர்களாகத் தெரிகின்றார்கள்.


பெருநகரங்கள் ஒவ்வொரு மனிதர்களையும் காந்த பூமி போல இழுத்து வைத்துள்ளது.


பெரிய வீடுகள், வசதியான வீடுகள் என்று எப்படி இருந்தாலும் சென்னையில் கூவம் நதி ஓடும் பாதையில் மற்றும் அதன் அருகே உள்ள வீடுகளிலும் மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரையிலும் வாழ்வதும் உறங்குவதும் தனிப்பட்ட பயிற்சி எடுத்தால் மட்டுமே சாத்தியப்படும் போலத் தெரிகின்றது.


கொசுக்களின் ரீங்காரம் தான் இந்தப் பகுதிகளில் வாழ்பவர்களின் தேசிய கீதமாக உள்ளது. கொசுக்கள் இரவில் வந்து நம்மைக் கடிப்பது இயல்பானது. ஆனால் இரவில் கொசுப்படைகளின் மத்தியில் வாழ்வதும், கட்டியிருக்கும் கொசு வலையைச் சுற்றிலும் இடைவிடாது போராடி பணி செய்யும் கொசு பகவான்களின் கருணையே கருணை.


கனவுத் தொழிற்சாலை