இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்



ரவி நடராஜன்

முன்னுரை

சொல்வனம்’ இதழில் 2009 மற்றும் 2010 –ல் எழுதிய இணையம் சம்மந்தப்பட்ட கட்டுரை தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமல், அதை பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு, இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது மற்றும் அதை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரைகள்.

அடுத்த மூன்று கட்டுரைகள் இணையம் எப்படி அச்சுத் தொழிலுக்குச் சவாலாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரைகள். உதாரணத்திற்கு, இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ பத்திரிகை இத்தகைய தொழில்நுட்பத்தால் உருவானது. மேலும் இன்று நீங்கள் இந்த மின்னூலைப் படிப்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் என்றால் மிகையாகாது. பெட்டிக்கடையில் வாங்கினால்தான் புத்தகம் என்ற காலம் போய்விட்டது. இணையத்தில் படிக்க ஆசை இருப்பவர்களுக்கு அவர்களது சுவைக்கேற்ப பரிமாறப் பல தளங்கள் உள்ளன.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படிபகுதி 1

எஸ்.பி.பி யின் கொஞ்சல் குரலைக் கேட்டுக்கொண்டு, எஸ் எம் எஸ் அனுப்பும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நம்மிடையே ஏராளம். தொடர்கதையில்அடுத்த வாரம்…’  போடுவதை போல, சர்வ சாதாரணமாய், ‘ஃபேஸ் புக்கில் இரவு சந்திப்போம், அல்லது, ஓர்கூட்டில் அல்லது டிவிட்டரில் தொடர்கிறார்கள். நண்பர்கள் அதிகம் இருப்பதை காட்டிக் கொள்ள, மற்றும் மின் அரட்டை அரங்கம் நடத்த இந்த இணைய சமாச்சாரங்கள் மிகத் தேவையாக நினைக்கிறோம். இந்த ஜந்துக்களால் சில நன்மைகள் இருந்தாலும், கூடவே சில அந்தரங்க அபாயங்களும் நாம் அறியாமலே நம்மைத் தொடர்கின்றன. நண்பரைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு, நண்பரின் நண்பரின் நண்பரை பற்றித் தெரியுமா? இது சமூக வலையமைப்பு மென்பொருளின் (Social Networking software) தீயமுகம். இது போன்று பல மின்னணு அந்தரங்க சமரசங்கள் (electronic privacy compromises) பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம்.

கூகிள், ஆப்பிளிடம் சரணம்

மார்ச் 1, 2010, : கூகிள் நிறுவனம், பல அமெரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்டது. எதற்கு? அவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்காமல் அலட்சியப் படுத்தியதற்கு. அப்படி என்ன செய்து விட்டது கூகிள்? உதாரணத்திற்கு. நீங்கள் விடுமுறையின்போது என்ன நீச்சல் உடை வாங்க வேண்டும் என்று உங்கள் தோழியை கேட்டு ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள். உங்கள் தோழியின் பதிலைப் படிக்கும் போது நீச்சல் உடை விளம்பரத்தை கவனித்தீர்களா? கூகிளுக்கு உங்கள் அந்தரங்கமான நீச்சல் உடைபற்றி தெரிய என்ன தகுதி? விளம்பரம் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையயும் படிக்கப்படுகிறது. ஒரு சொற்ப, ஆனால் மோசமான செய்தி. கூகிள் டாக் என்ற உடன் செய்தி பரிமாற்ற மென்பொருளில் நீங்கள் எழுதும் வார்த்தைகள் சேமிக்கப் படுகின்றன. தேடப்படுகின்றன. அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி?

மார்ச் 1, 2010 : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவி மிகப் பிரபலமடைந்த நிலையில் அதன் பாதுகாப்பின்மை அனவருக்கும் பிடிபட தொடங்கியுள்ளது. டைகர் ஸ்கிரிப்ட் என்ற மென்பொருள் வந்துள்ளது. அனுப்பி 30 வினாடிக்குள் ஒரு செய்தியைப் படித்தபின் (படித்தவ்ரிடம், அனுப்பியவரிடம்) அழித்துவிடலாம். இது டைகர் உட்ஸ் காதல் விவகாரத்திலிருந்து வந்த குறும்பு மென்பொருள்! அந்தரங்கம் யாவுமே, இப்படி இப்படி!

2009 ஆண்டின் கடைசியில் வெளி வந்தபா’  திரைப்படத்தில் 12 வயது ஆரோ வேடத்தில் நடிக்கும் அமிதாப், பள்ளிக்கு வந்த எம் பி மீது கோபம் கொண்டு, அவரை இணையத்தில் தேடுகிறார்.. ”கூகிளிடமிருந்து தப்பி எங்க போகப் போகிறார்என்று அவரை தேடி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதாக காட்சி. நசைச்சுவை நன்றாக இருந்தாலும், சற்று வேறு விதமாக யோசிப்போம். கூகிள் மூலமாக எம் பி யை அடைந்து அவருக்கு எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவருடைய அந்தரங்கம் சமரசப்படுத்துவது உண்மை. ஆரோவின் நோக்கம் சிறு பிள்ளைத்தனமானது. ஆரோவிற்கு பதிலாக ஒரு பயங்கரவாதியும் அதைச் செய்ய முடியும். 12/26/08 அன்று, மும்பை தாக்குதல்கள் நடந்த போது, தொலைக்கட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. பயங்கரவாதிகள் தொலைக்காட்சி இல்லாத எங்கோ இருந்து விட்டால் பாவமே என்று, சி என் என் அதை இணையத்திலும் காட்டிய வண்ணம் இருந்தது! நம் பாதுபாப்பு துறையினரின் அந்தரங்கம் சமரசப்படுத்தப்பட்டது.

சிங்கார சென்னையில் நடக்கும் ஒரு கற்பனை 2013 உரையாடல்:


கபாலி: “சர்யான தொயில் தெரியாத கத்துகுட்டியாக் கீற. ஒன் ரோதன தாங்கல சிங்காரம். பெயில் குட்து வெளில கொண்டுவரதுக்குள்ள பெண்டு நிமிருதில்ல.


சிங்காரம்: “மன்னிச்சுகண்ணே. அப்பால இது மாரி நடக்காது. சூடம் மேல சத்தியம்!”


கபாலி: ”பெரிய சத்தியம் பண்ற மூஞ்சியப் பாரு. செய்ர திருட்டுத் தொயில்ல சுத்தம் வேணும்டா. எதுக்குடா உனக்கெல்லாம் ஒரு தொட கம்பூட்ட்ரு அப்றம் கைபோனு.குடுத்து ரெய்னிங் வேற?’


சிங்காரம்: ”மெய்தாண்ணே. அந்த கூகிள் என்னதுஸ்டீர்ட் வ்யூ சரியா புரியல. வயக்கம் போலத் தொயில் செய்யப் போய் மாட்னது என் தப்புதான். மன்னிச்சு விடுண்ணே!”


கபாலி: யார்ரா, கம்ப்யூட்டர் கண்ணாயிரத்தை. வரச் சொல்லு. இனிமே தொயிலுக்கு யார் போனாலும் ஸ்டீர்ட் வ்யூ பாத்து, சரியான சந்து வயியா போய் அள்ளிகினு வரனும், சரியா. சிங்காரம், நம்ம குமாரப் பாரு.. போன தப, சரியா ஸ்டீர்ட் வ்யூ பாத்து, அந்தம்மா நகைகடத்தனமா இருந்தத கவனிச்சு, சுட்டியா அள்ளினா பாரு. புத்தி யூஸ் பன்னு தலைவா.. ”.

சற்று மிகையான உரையாடல்தான். ஆனால் கூகிள் ஸ்டீர்ட் வ்யூ (Street View – Google Maps) மிகவும் சர்ச்சைக்குரிய மென்பொருள். ஒரு இடத்திற்கே போகாமல், அந்த இடத்தின் முகவரி மட்டுமே இருந்தால், காரின் மூலம் அந்த வீதியில் பயனித்தால், எப்படி இருக்கும் என்று விடியோவே இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். ஒரு முகவரியின் எல்லாப் பக்கங்களிலும் என்னவென்ன கட்டிடங்கள் மற்றும் நில அமைப்புகள் இருக்கின்றன என்று பயன திட்டமிட உருவாக்கப்பட்ட மென்பொருள். நான் மேலே சொன்ன திருட்டு விஷயத்திற்கும் சத்தியமாகத் திட்டமிடலாம். ரொம்ப கவலை வேண்டாம். இன்னும் இந்திய நகரங்கள் ஸ்டீர்ட் வ்யூவில் வரவில்லை. ஆனால், உங்களின் அந்தரங்கம் எப்படி எப்படியோ பறிபோக வாய்ப்புள்ளது.

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவதுஎன்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. நம் அரசியல் சட்டம் இயற்றியவர்கள் நம்முடைய அந்தரங்கத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். இன்று பயங்கரவாதத்தை காரணம் காட்டி அரசாங்கங்களும் அத்து மீறச் சட்ட வியூகங்கள் ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றன. இதனால் சாதாரண மனிதர்கள் அவர்கள் அறியாமலே பாதிக்கப்படுகிறார்கள்.

ஆரம்ப அசட்டுத்தனம்

மனிதர்கள் ஆப்பிரிக்காவில் உருவானவர்கள் என்ற தியரிப்படி பார்த்தால், நமக்கு ஆப்பிரிக்கர்கள் உறவுக்காரர்கள் தானே? 90 களில் அப்படி எனக்கு பல ஆப்பிரிக்க உறவுக்காரர்கள். கேள்வியே படாத ஆப்பிரிக்க தேசத்தில் சர்வாதிகாரி பல கோடி டாலர்கள் சொத்தை அனுபவிக்காமல் மண்டையை போட, அவரின் சொத்தை அனுபவிக்க 50/50 முறையில் எனக்குத் திடீரென்று நெருக்கமான ஆப்பரிக்கர் ஒருவர் என் அமெரிக்க டாலர் வங்கி கணக்கு எண்ணை அன்புடன் மின்னஞ்சலில் கேட்பார். இவர்கள் கேட்கும் விதம் மிகவும் உண்மையானதாக ஆரம்பத்தில் தோன்றும். அடுத்த நாளே, இன்னொரு ஆப்பிரிக்க தேச சர்வாதிகாரி மண்டையைப் போட, இன்னொருவர் உங்களது நெருக்கமான உறவினராகத் துடிப்பதைப் பார்த்து உஷாராகி விடுவீர்கள். பிறகு, உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்வி, ‘இவர்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது?’.  இது ஆரம்ப கால அந்தரங்க தாக்குதல். ஒரு இணைத்தள சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பட்டியலைத் திருடிவிட்டால், இப்படி ஒரு பொது மின்னஞ்சலை அனுப்புவது எளிது. ஏமாந்தவர்களிடம் சுருட்டலாம். ஆனால் இன்று இது ஒரு பெரிய தொழிலாகி பல மடங்கு இயக்கத்திறமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.

இப்படி அசட்டுத்தனமாகத் தொடங்கிய அந்தரங்க ஆக்கிரமிப்பு, சில வல்லுனர்கள் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தது மாறி, ஒரு பொது பிரச்சினையாய் மேலை நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இணைத்தள நுகர்வோர் (Internet usersஅதிகரிக்க இப்பிரச்சினையும் வளர்ந்துவிட்டது. வளரும் நாடான இந்தியா இதற்கு விதி விலக்கல்ல. பலர் அதிக அனுபவமின்றி இணையத்தில் மேய்வதால் இப்பிரச்சினை புதியவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, தன் பிள்ளை, பெண்கள் மேலை நாடுகளில் வசிப்பதால், இந்திய பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் தேவைபடுகின்றன. பேரன் பேத்தியைப் பார்க்க பிகாஸா என்று தொடங்கி, தன்னை அறியாமலே ஸ்கைப் மற்றும் மெஸசஞ்சர் போன்ற உடன் தொடர்பு மென்பொருள் வரை வளர்ந்து மேலை நாட்டவருக்கும் நமக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இந்தியாவில் ஐஃபோன் போன்ற புதிய கைதொலைபேசிகள் மிகவும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பொதுவாக, கம்பியற்ற தொலைதொடர்பில் பாதுகாப்பு, கம்பி வழியே இணைதளங்களை உபயோகிப்பதை விடச் சற்று குறைவுதான். அடுத்த சில ஆண்டுகளில் கம்பியில்லா விவர தொலைதொடர்பு (wireless data communicationஇந்தியா போன்ற நாடுகளில்தான் பரிசோதனை செய்யப்படும். காரணம், 50 கோடி கைத்தொலைபேசிகள் உள்ள நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இது என்னவோ, மேல் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி வைக்க முடியாது.

அடுத்த கட்ட தாக்கம்

புதிதாக மின்னஞ்சல் அனுப்ப தொடங்கியவர்கள் சில ஆரம்ப கால அனுபவங்கள் தவிர்க்க முடியாதது. யாரோ ஒருவர் வரிந்து கட்டிக்கொண்டு உங்களுக்கு வயக்ரா தேவை என்று சில பல போலி இணைதளங்களை காட்டி  தீவிரமாகப் பிரசாரம் செய்வார். கடலூரில் இருக்கும் உங்களுக்கு, கனடாவில் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று உப்பு சப்பில்லாத மின்னஞ்சல் அனுப்புவார். சில நாட்களில் இது ஒரு புதிய மீடியாவின் இரைச்சல் என்று புரிந்துவிடும். ஆனால், பல புதியவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு சரியாக அறிந்து கொள்ளாமல் பல மின்னஞ்சல்களை முன்னோக்கம் (forward)  செய்வதுதான். நோக்கியா இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு முன்னோக்கி அனுப்புவதால் இலவச கைதொலைபேசி தருகிறார்கள் என்று அப்த்தமான அறிவுப்புகள், உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிந்து கொள்ள நடத்தும் மோசடி. மின்னஞ்சலில் பிள்ளையார் படமும் அதே மோசடிதான். பக்தி வயப்பட்டால் கோவிலுக்குச் செல்லுங்கள்முன்னோக்கி அனுப்பாதீர்கள்.

நிறைய பூச்சாண்டி காட்டியாகிவிட்டது. சற்று பேயையே சந்திப்போமே!

இருமுக ராட்சசன்

இந்த அந்தரங்க பிரச்சினைக்கு இரு முகங்கள் :

1) தனிப்பட்ட அந்தரங்கம்

2) பொது அந்தரங்கம்.

தனிப்பட்ட அந்தரங்கத்தில் பல விஷயங்களை உள்ளன. உங்களது உறவுகள், பொருளாதார, மற்றும் மருத்துவ விஷயங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பொதுவாக, தனியார் நிறுவனங்கள், உங்கள் அந்தரங்கத்தை உபயோகித்து பல பொருட்களை நீங்கள் விரும்பாமலே வாங்க வைப்பதில் முயற்சி செய்யலாம். உங்கள் மருத்துவ அந்தரங்கங்களை அறிந்து சில மருத்துவ வசதிகள் உங்களுக்கு மறுக்கப் படலாம். உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் அரசாங்க எண்ணைப் பயன்படுத்தி உங்களுக்கு மிக பெரிய நிதி இழப்பு ஏற்படலாம்.

அதென்ன பொது அந்தரங்கம்? அரசாங்கம் சம்மந்தப்பட்ட ரகசியங்கள், பயங்கரவாத விஷயங்கள், பொது இடங்களில் உங்கள் நடத்தை விவரங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பயங்கரவாதத்தை காரணம் காட்டி, உங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படலாம். பொது ஒழுங்கு என்ற பேரில் அரசாங்கம் உங்களைத் தர்மசங்கடப் படுத்தலாம். பயங்கரவாதத்தினால். விமான நிலயங்களில், தனிப்பட்ட தேடல்கள் சற்று அந்தரங்கத்தை உதாசீனப்படுத்துவதை இன்று நாம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

பாதுகாப்பு வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பாதுகாப்பே நமக்குப் பெரிதாகப் படுகிறது. பொது நலன் வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பொதுநலனே நமக்குப் பெரிதாகப் படுகிறது. அதே போல, பயங்கரவாத ஒடுக்கமும், தனி மனித உரிமைகளும் வைத்துப் பார்த்தால், தனி மனித உரிமைகள் மறக்கப்படுகின்றன. நிறைய பணம் கொடுத்து மென்பொருள் வேண்டுமா அல்லது விளம்பர வரவால் உருவான இலவச மென்பொருள் வேண்டுமா? இலவச மென்பொருளின் விலை உங்கள் அந்தரங்கம் என்று கூகிள் இன்று ஒப்புக் கொள்கிறது.

மின்னணு அந்தரங்கம் என்பது ஒரு விஸ்தாரமான துறை. இதை நாம் இரு முகங்களாகப் பிரித்தாகிவிட்டது.

தனிப்பட்ட அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்:

1) RFID என்ற நுட்பம். இது நுகர்வோர் பொருள் வாங்கும் வழக்கங்களை மாற்றும் முயற்சி. இத்தொழில்நுட்பத்திற்கு ஒரு பொது அந்தரங்க தாக்கு முகமும் உண்டு.

2) ஆரோக்கிய அந்தரங்கம்மரபணுச் சோதனைகள் மற்றும் காப்புரிமை பற்றி அலசுவோம்

3) Phishing என்ற நிதி மோசடி செய்யும் அந்தரங்க தாக்குதல்கள்.

பொது அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்:

1) ஒட்டுக் கேட்தல்உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதன் விளைவுகளை ஆராய்வோம்

2) மெய் வருடல் தொழில்நுட்பம்இதை பையோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்றும் சொல்வார்கள்.

3) விடியோ கண்காணிப்பு. இத்தொழில் நுட்பத்தால் வரும் அந்தரங்க மீறல்களை அலசுவோம்.

மிகப் புத்திசாலித்தனமாக நம் அந்தரங்கங்கள் இவ்வாறு பறி போவதை எத்தனை பேர் உணருகிறோம்? சமீபத்தில், ஒரு இந்திய குடும்பத்தின் இணைய உபயோக முறை என்க்கு மிகவும் வினோதமாகப் பட்டது. குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஒரே மின்ஞ்சல் முகவரி. வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அண்ணன், தங்கை என்று அனைவரும் ஒரே கடவுக்சொல் (passwordஉபயோகிக்கிறார்கள்! குடும்பத்தில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்று பெருமை வேறு. இவர்கள் மின்னஞ்கல் உடைக்கப்பட்டால், குடும்பமே தெருவில் வந்தது போல அல்லவா?

மின்னணுவியல் துறத்தல்

1998 ஆம் ஆண்டு வெளி வந்த ஹாலிவுட் திரைபடம்The Enemy of the State’. மிக விறுவிறுப்பான இப்படத்தில் வில் ஸ்மித் ஒரு தொழிலாளர் வழக்கறிஞர். அவரின் மனைவிக்காகப் பரிசு வாங்கும் இடத்தில் ஒருவர் மிகவும் பகிரங்கமாக அரசாங்கத்து அதிகாரிகளால் கொலை செய்யப் பட்ட போது எடுத்த ஒரு விடியோவை அவரிடம் விட்டுச் சென்று மண்டையை போடுவார். பாவம் வில், ஓடு ஓடென்று படம் முழுவதும் ஓடுவார். ஹாலிவுட் மசாலாக்கள் தடவப்படிருந்தாலும், இப்படத்தில், அவருடைய அந்தரங்கம் பறிக்கப்படுவதை மிக அழகாக் காட்டியிருப்பார்கள். அவருடைய ஒவொரு பேச்சும் ஒட்டுக் கேட்கப்படும். அவருடைய வங்கிக் கணக்கு காலி செய்யப்படும். அவருடைய கிரெடிட் கார்ட உறையவைக்கப்படும். அவருடைய அடையாளமே மாற்ற்ப்படும். அவருடைய பல அரசாங்க பதிவுகள் மாற்றப்பட்டு அவரை ஒரு குற்றவாளியாக்கும் மின்னணு முயற்சிகள் அவரைப் பைத்தியமே பிடிக்கும் வகையில் காட்டியிருப்பார்கள். அவர் படும் அல்லல்கள் இப்படத்தின் கதை.

70 களில் முதன் முறையாக டில்லி செங்கோட்டை அருகே நெரிசல் மிக சாந்தினி செளக் அனுபவம் மிக அசாதாரணமானது. சென்னை மூர் மார்கெட் போலல்லாமல் அன்புடன் ஏமாற்றுவார்கள். பயணப்பை (travel bag) ஒன்று அழகாக இருக்க, உடைந்த இந்தியில் விலை விசாரித்தேன். விலை மிக அதிகமாகக் கடைக்காரர் சொன்னதால், வேண்டாம் என்று விட்டுவிட்டு நடையைக் கட்டினேன். பத்தடி நடந்தவுடன் கடைக்காரர் தொடர்ந்தார்விலை பாதியாகியது. எனது பொருளின் தரம்பற்றிய சந்தேகம் இரட்டிப்பாகியது! வேண்டாம் என்று இன்னும் பத்தடி நடக்கையில் கடைக்காரர் என்னைத் தொடர்ந்து விலையைக் கால்வாசியாக்கினார். விட்டால் போதுமென்று அடுத்த தெருவுக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

சொல்லி வைத்தாற்போல் இன்னொரு கடைக்காரர் பயணப்பை ஒன்றை என்க்கு வேறு விலையில் தொடங்கி விற்கப் பார்த்தார். என்க்கு சந்தேகம், ‘என் நெத்தியில் பயணப்பை வாங்குபவன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா?’. எப்படி இவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்? விட்டால் போதுமென்று செளக்கின் வேறு பகுதிக்கு விரைந்தேன்.

உங்களை உதறவிடாமல் மின்னணுவியலால் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? வில் ஸ்மித் போல ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட சமாச்சாரம் RFID. (Radio Frequency Identification Tag)  வானொலி அலைவரிசையில் வேலை செய்யும் நுட்பம் இது. 1999 ல் இதன் ஆரம்பம் என்னவோ சரக்கு விவரம்  எடுப்பதற்காக (inventory controlஉருவாக்கப்பட்டது. இதற்கு முன்னால், பட்டை குறியீடு (bar code) நியமான UPC (Universal Product Codeஉபயோகப்படுத்தப்பட்டு வந்தது. RFID வந்த பிறகு சரக்கு விவரமெடுத்தல் இயக்கத்திறமை மிகவும் முன்னேறியது. வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருள் தயாரிப்பாளர்களை RFID நியப்படி பொருள்களை அடையாளம் காட்டினால்தான் வங்குவோம் என அடம் பிடிக்கத் துவங்கின. இதற்கும் டிஜிட்டல் அந்தரங்கத்துக்கும் என்ன சம்மந்தம்? உள்ளது, விளக்குவோம்.

முதலில் இந்த RFID எப்படி வேலை செய்கிறது? பொருளின் மேலே ஒரு நுண்ணிய மின்னணு சிப் மற்றும் ஆண்டெனா அடக்கம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட எண்இதைடேக்(Tagஎன்று அழைக்கிறார்கள். இந்த Tag ஐப் படிக்க ஒரு படிக்கும் மின்னணு கருவி (RFID electronic reader)  தேவைஇதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு நூறு அடிவரை தள்ளியிருந்தவாறு படிக்கும் மின்னணு கருவி Tag ஐப் படித்துவிட முடியும். இதனால் பல அன்றாட வேலைகள் சுலபமாகிறது. கால்நடை, நுகர்வோர் பொருட்கள், மற்றும் தயாரிப்பு சம்மந்தமான கச்சா பொருட்களை நிர்வகிப்பது எளிதாகிறது. பட்டை குறியீடு போலல்லாமல், பல பொருட்களை ஒரே நேரத்தில் படிககவும் முடியும்.

முதன்மையான பயனை நீட்டி வேறு விதத்தில் பயன்படுத்த முற்படுகையில் வந்தது வினை. இந்த நுட்பம் விற்பனையாளர்களின் கனவு. உதாரணத்திற்கு, ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டில் பல முக்கிய இடங்களில் படிக்கும் கருவிகளை வைத்துவிட்டால், உங்களின் வாங்கும் முறைகள் நீங்கள் அறியாமலே பதிவு செய்யப்படலாம். பொருட்கள் ஒவ்வொன்றிலும் Tag  உள்ளதால், அதை நீங்கள் எடுக்கும்போது எளிதாக பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் கேட்கவே வேண்டாம். எந்த பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு வாங்காமல் விட்டீர்கள் என்று உங்கள் வாங்கும் ஜாதகமே விற்பனையாளர் கையில்.

விற்பனையாளர்களின் நெடுநாள் கனவு இது: உங்கள் வீட்டின் வெளியே உங்களுக்காக ஒரு குப்பை தொட்டி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உபயோகித்த பொருட்களின் உறைகளை அதில் எறிவீர்கள்விற்பனையாளர் ஒரு படிக்கும் கருவி தாங்கிய வண்டி ஒன்றை உங்கள் வீதிவழியே அனுப்புவார். உங்கள் குப்பைதொட்டியில் உள்ள tags படித்தால், உங்கள் குடும்பம் வாரத்திற்கு எத்தனை பால், ரொட்டி, முட்டை, கோக் உபயோகிக்கிறீர்கள் என்று கணித்துவிடலாம். உங்கள் அருகில் உள்ள சூப்பர் மார்கெட் உங்களது உணவுப் பொருட்களைத் தகுந்த மாதிரி அனுப்பி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்வார்கள். சில விற்பணையாளர்கள் ஒரு படி மேலே போய், உங்களது குளிர்சாதன்ப் பெட்டியில் இப்படியொரு படிக்கும் கருவியை நீங்கள் நிறுவினால், இன்னும் மேல் என்று ஆசை காட்ட முயன்று வருகிறார்கள். உங்களின் தேவைகள் உங்கள் கையில் இருக்காது. ஆசை காட்டி, தேவைக்கு மேல் பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடத் திட்டம்தான் இது.

வில் ஸ்மித் துரத்தப்படுதல் ஒன்றுமில்லை

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் உல்கிலேயே மிகப் பெரிய நில எல்லை. மிக அதிக பன்னாட்டு வியாபாரம் நடக்கும் எல்லையும் இதே. வேலை காரணமாய் இரு நாடுகளிலிருந்தும் எல்லை நகரங்களில் வசிப்போர் எல்லையை நாள்தோரும் கடக்கிறார்கள். அமெரிக்கர்களுக்காக ஒரு வசதியைச் சில எல்லை மாநிலங்கள் கொண்டு வந்தன. அமெரிக்கர்கள் தன்னிச்சையாக இந்த  வசதியை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு எல்லை கடவை எளிதாகும். அதாவது, கார்களில் லைஸன்ஸ் தகடில் RFID பொருத்திவிட்டால், எல்லையில் நிற்கவே வேண்டாம். நூறு அடிக்கு முன்னமே நீங்கள் வருவதை எல்லை ஏஜண்ட் படிக்கும் கருவியில் படித்து, உங்களைக் கடக்க விடுவார். விளைவுகளை அறியாமல், பல அமெரிக்கர்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்கள். இத்தனை வசதி வாய்ந்த விஷயத்தில் என்ன விளைவு இருக்க முடியும்?

எல்லை ஏஜண்டைப் போல திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் அனைவரும் ஒரு படிக்கும் கருவியை வைத்துக் கொண்டால், உங்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கலாம். எங்கெல்லாம் கிரெடிட் கார்டு உபயோகிக்கிறீர்கள், எந்த வங்கியில் கணக்கு வைதிருக்கிறீகள்எல்லாம் மிக எளிதாக ஏமாற்றுக்காரர்கள் கையில். அவ்வளவு எளிதா இது? நம்ப மாட்டீர்கள், அவ்வளவு எளிது. பல்வேறு பொருள் கிடங்குகளிலும் உபயோகப்படுத்தும் நுட்பம் இது. இதில் எந்த வித பாதுகாப்பும் இல்லைஅமெரிக்க எல்லை ஏஜண்டுகள் உபயோகிக்கும் (EPC Global Gen2) RFID முறையில்.

பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை முக்கிய ஆணவங்களுக்கு கொண்டு வர திட்டம் தீட்டி வருகின்றன. பல பாதுகாப்பு வல்லுனர்கள் புதிய ஆணவங்களின் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டுவதுடன் தகர்த்தியும் காட்டியுள்ளார்கள். இங்கிலாந்து, மற்றும் ஜெர்மனீய பாஸ்போர்டுகள் இதில் அடக்கம். இந்த ஓட்டைகள் பல நாடுகளை RFID தழுவுவதிலிருந்து குறைக்கக் காணோம். உதாரணமாக மலேசியா 25 மில்லியன் தேசிய கார்டுகளை அதன் குடிமக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. கதார் அரசு இப்படிப்பட்ட ஒரு கார்டில் விரல் ரேகையுடன் வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா மிகப் பெரிய RFID திட்டம் ஒன்று தொடங்கியுள்ளதுஅதன் 130 கோடி குடிமக்களுக்கும் மின்னணு கார்ட் வழங்குவது திட்டத்தின் குறிக்கோள்.

மற்ற நாடுகள் அமெரிக்கா போலல்லாமல் ஓரளவுக்கு பாதுகாப்புடன் உள்ள நியத்துடன் (ISO 14443) RFID நுட்பத்தை உபயோகிக்கின்றன. சீன அரசுடைய  கெடுபிடி சற்று அதிகம். அந்த கார்டில் மற்ற நாட்டைவிட விவரம் அதிகம். உங்கள் பெயர், பாலினம், மதம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொலைபேசி எண், வேலை நிலை எல்லாம் பதிவு செய்யப்படும். ஜனங்களின் எல்லா விவரங்களையும், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் இயக்கத்தை இப்படி கண்காணித்த வண்ணம் இருக்கிறது. எங்கே அந்தரங்கம்?

அரசாங்கங்கள் இதைக் கட்டுப்படுத்த அதிகம் நடவடிக்கை எடுப்பதில்லை. தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டங்களும் சரியாக நிறுவப்படவில்லை. இன்நிலையில் RFID நுட்பத்தால் தனியொருவர் அந்தரங்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது.

ஆரோக்கிய அந்தரங்கம்

வளர்ந்த நாடுகளில் தனி நபரின் ஆரோக்கியம் மிகவும் அந்தரங்கமான ஒன்று. நம் கலாச்சாரம் சற்று வேறுபட்டது. உதாரணம், 2002 ல் வந்தபஞ்ச தந்திரம்என்ற தமிழ் திரைப்படத்தில் நாயராக வரும் ஜெயராமின் மகனுக்கு இருதயத்தில் ஓட்டை என்று படம் முழுவதும் நகைச்சுவை என்ற பேரில் ஊருக்கொல்லாம் தம்பட்டம் அடிப்பது நம் கலாச்சாரம். சமுதாய சூழலில் மற்றவர்களுக்கு வந்துள்ள நோய்களைப் பற்றி அதிகம் வம்படிக்கிறோம்.

இவ்வாறு, பொதுவாக ஆரோக்கிய மற்றும் நோய்களைப் பற்றிப் பேசுவதன் விளைவுகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. 1990 களில் மனித மரபணுத் திட்டம் (human genome projectஇந்த வழக்கங்களை மாற்றும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை தந்தது. பல தீர்க்க முடியாத நோய்களின் காரணம் மரபணுக் கோளாறுகள் என்பதை இன்று நாம் அறிவோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் (இந்தியாவிலும் இது நகர்புறங்களில் தொடங்கி விட்டது) ஆரோக்கியத்துக்குக் கவனிப்பு வேண்டுமானால் ஆரோக்கியக் காப்புரிமை தேவை. பொதுவாக, காப்புரிமை கொடுப்பதற்காகச் சில பல ஆரோக்கியம் பற்றிய கேள்விகளை உங்களிடம் ஒரு ஆலோசகர் கேட்பார். உங்களின் பதில்படி (உங்களின் நினைவாற்றலைப் பொருத்து) காப்புரிமையின் சட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்படும். இதில் ஆலோசகர் முக்கியமாக ஆராய்வது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகள் பற்றியே (Preexisting conditions). உதாரணத்திற்கு, உங்களுக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தால், அது காப்புரிமைக்குள் அடங்காது. அந்த இருதய நோயைக் காப்புரிமையில் சேர்க்க அதிக கட்டணம்  (premium) கட்ட வேண்டும்.

இன்று ஓரளவுக்கு சாதுரியமாய் பேசி நீங்கள் உங்களுடைய ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை ஆலோசகரிடமிருந்து மறைக்கலாம். உங்களது மின்னணு ஆரோக்கிய பதிவு, அதாவது .ஹெச்.ஆர் (Electronic Health Recordஆலோசகர் கையில் கிடைத்தால், உங்கள் ஜல்லியடி பலிக்காது. அவை டாக்டரின் கிறுக்கல் கையெழுத்தில் உங்களிடமோ, மருத்துவரின் அலுவலகத்திலோ இருக்கும் வரைதான் உங்களது பொய்கள் செல்லும். உங்களது .ஹெச்.ஆர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். கனடா, டென்மார்க் போன்ற நாடுகளில், அரசாங்கம் நோயாளிகளின் பக்கம். அமெரிக்காவில் இழுத்தடிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சில காப்புரிமை நிறுவனங்கள், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை வைத்து, உங்களுக்குக் காப்புரிமை அளிக்க மறுக்கலாம். உங்களுக்கு ஆரோக்கிய கவனிப்பு மறுக்கப்பட்டதற்கு சமம் இது.

சில அரிதான நோய்கள் முழுவதும் குணப்படுத்த முடியாமல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இன்னமும் சவாலாக இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும், மரபணுக் கோளாறுகள் (genetic disorders). உதாரணம், CF  என்று அழைக்கப்படும் Cystic Fibrosis  மற்றும் MD  என்று அழைக்கப்படும் Muscular Dystrophy  போன்ற நோய்கள். தமிழ் சினிமாவில் வரும் ரத்தப் புற்றுநோய் (Leukemia) இதில் உண்டா என்று அனாவசிய ஆராய்ச்சி வேண்டாம்! ஒருவருக்கு மரபணுச் சோதனை (genetic test) செய்தால், அவருக்கு இவ்வகை மரபணுக் கோளாறு வர வாய்ப்புண்டா என்று சொல்லிவிட முடியும். மேல்வாரியாகப் பார்த்தால் இது நல்ல முன்னேற்றம். இன்று 2000 க்கு மேற்பட்ட மரபணுச் சோதனைகள் கருவிலிருந்து தாத்தாவரை செய்கிறார்கள். இவ்வகைச் சோதனைகளால், சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குழந்தைகள், பேரன் பேத்திகள் அனைவருக்கும் நோய் வர வாய்ப்புண்டா என்றும் சொல்லிவிடலாம்.

இந்த மரபணுப் பரிசோதனை அறிக்கை யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். காப்புரிமை நிறுவனத்திடம் அறிக்கை கிடைத்தால், குடும்பத்திற்கே மருத்துவக் காப்பு மறுக்கப்படலாம். வேலை தேடும் கம்பெனியிடம் கிடைத்தால், வேலையே மறுக்கப்படலாம். இது ஒரு வகை மரபணுப் பாகுபாடு (genetic discriminationஉருவாகும் அபாயம் உள்ளது. இன்றைக்கு இது பெரிய பிரச்சினையில்லை. ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில், சீக்கிரத்தில் இது விஸ்வரூபம் எடுக்கலாம். மருத்துவ அந்தரங்கம் மிகவும் சீரியஸான விஷயம்.





அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படிபகுதி 2

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களைப் பற்றி அறிந்து இவர்களைத் தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம்பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

உங்களிடமிருந்து நீங்கள் அறிந்தும் அறியாமலும் மிக சாதுரியமாய் உங்களது அந்தரங்க நிதி சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களைப் பெறும் முயற்சிகளுக்குஃபிஷிங்(phishing) என்கிறார்கள். பொதுவாகஃபிஷிங்முறைகள் பல தொடர்பு மீடியாக்கள் மூலம் செய்யப் பட்டாலும் (கடிதம் மற்றும் தொலைபேசி) இக்கட்டுரையில் இணையத்தில் நடப்பவை பற்றிச் சற்று அலசுவோம்.

ஆப்பிரிக்க சர்வாதிகாரி பெரிய சொத்தை விட்டு விட்டு மண்டையை போடும் சமாச்சாரம் நினைவிருக்கிறதா? அதன் வளர்ந்த, முதிர்ந்த மோசடி வடிவம்தான்ஃபிஷிங். பொதுவாக, இவர்கள் அனுப்பும் கடிதம் ஒரு பெரிய நிதி நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதைப் போல தோன்றும். இம்மாதிரி நடிப்பு மின்னஞ்சல்களைப் பல்லாயிரம் பேருக்கு அனுப்புவார்கள். மிக சாதுரியமாய் எழுதப்பட்ட மின்னஞ்சல். ஆயிரக்கணக்கான அஞ்சல்கள் அனுப்புவதில் சில ஏமாளிகள் கிடைத்தாலே இவர்களுக்கு வெற்றி. மின்னஞ்சல் அனுப்ப அதிகம் செலவொன்றும் இல்லை.



அப்படி உங்களிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? பெரிதாக ஒன்றும் இல்லைஉங்களது கிரெடிட் கார்டு எண், அதன் பாதுகாப்பு எண், உங்களது வங்கிக்கணக்கின் கடவுச்சொல் (password) , உங்களது அரசாங்க எண், அல்லது உங்களது தாயின் பிறப்புப் பெயர். இதை வைத்து என்ன செய்வார்கள்? முதலில் உங்களது கிரெடிட் கார்டில் சில சின்ன சில்லரைப் பரிவர்த்தனைகள் செய்து சரி வருகிறதா என்று பார்ப்பார்கள். பிறகு, முடிந்த வரை சுருட்டல்தான். இதே போலபே பால்(Pay Pal) போன்ற வசதிகளின் எண் மற்றும் கடவுச் சொல் கிடைத்து விட்டால், சில பல டிவி, குளிர்சாதன பெட்டி, சோபா என்று உங்கள் செலவில் புதுக் குடித்தனமே ஆரம்பித்து விடுவார்கள்!

எப்படி உஷாராவது? முதலாக, உங்கள் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களது வங்கியின் சின்னம் (logo) நிஜம் போலவே இருக்கும். ஆனால், ‘அன்பான வாடிக்கையாளரேஎன்றுதான் தொடங்குவார்கள், ‘அன்பான திரு முருகன் அவர்களேஎன்று எழுதுவதில்லை. உடனே உஷார்! இவர்களது மின்னஞ்சலில் உங்கள் வங்கி அனுப்புவது போலவே ஒரு இணைப்பு (link) வேறு தருவார்கள். உங்களது நலன் மேல் அக்கறையுடன் , ”உங்கள் கிரெடிட் கார்டில் மோசடி நடந்திருப்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. தயவு செய்து கீழே உள்ள இணைப்புக்குச் சென்று உங்களது உண்மையான எண் மற்றும் பாதுகாப்பு எண்களை பதிவு செய்து விடுங்கள்!” என்று அன்பை பொழிவார்கள். அப்படியே நீங்கள்திரு. முருகன் அவர்களேஇல்லாததைக் கவனிக்காவிட்டாலும், இணைப்பின் மேலே மெளசை மேவ (க்ளிக் செய்யாதீர்கள்) விடுங்கள். இவர்களது இணைத்தளத்தின் முகவரி மூலம் (உங்கள் வங்கி இணைத்தள முகவரி இருக்காது) குட்டு அடிபடும். இது இரண்டாவது உஷார்.

இது போன்ற மின்னஞ்சலுக்குச் சரியான இடம் ஸ்பாம் (Spam) என்ற விசேஷ குப்பைத்தொட்டி. ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் வங்கியை அழைத்துப் பேசுங்கள். மேற்கத்திய வங்கிகள் இது போன்ற ஏமாற்றுக்கார பரிவர்த்தனைகளை மென்பொருள் கொண்டு உடனே (24 மணி நேரத்துக்குள்) பிடித்து, கார்டு சொந்தக்காரரைத் தொடர்பு கொண்டு உங்களது பரிவர்த்தனையா என்று விசாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் என் வங்கியைத் தொடர்பு கொண்டு இந்தியா செல்வதைத் தெரிவிப்பேன். இல்லையேல், மியூசிக் லேண்டில் கணக்கர் அலுத்துக் கொள்வதைக் கேட்க வேண்டி வரும், ‘அரை ட்ராயரும், தண்ணி பாட்டிலும் எடுத்துட்டு ஃபாரின்லிருந்து வந்துர்றாங்க. கிரெடிட் கார்ட் மட்டும் உதைக்குது!”

ஒட்டுக் கேட்தல்

தமிழ் சினிமாக்களில், கதாநாயகி, காதலனுடன் மாடியில் பேசுவதை கீழே அவரது அப்பா ஒட்டுக் கேட்பார். உடனே கதாநாயகியைத் தரதரவென்று இழுத்து கொண்டு ஒரு படுக்கையறையில் தள்ளிக் கதவை சாத்துவார். அதென்ன, அத்தனை இந்திய சினிமா கதாநாயகிகளும் மல்லாக்கவே படுக்கையில் விழுந்து அழுகிறார்கள்? இதைப் பற்றி யாராவதுசொல்வனத்தில்ஆராய்ச்சி செய்தே ஆக வேண்டும்! பிறகு கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் கைத் தொலைபேசியில் உரையாடல் தொடர்கிறது! கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கைத்தொலைபேசியில் ஒட்டுக் கேட்பது சற்று கடினம். சிம் கார்டை வேறு மாற்றிப் பேசுபவரின் அடையாளத்தைக் கண்டு கொள்வது மிகவும் கடினமாக்கப் படுவதை நாம் பல சினிமாக்களில் பார்க்கிறோம்.

கணினியும் தொலைதொடர்பியலும் கல்யாணம் செய்த காலம் போய், இணையத் தொலைதொடர்பு (Internet Telephony) என்ற குழந்தையே பிறந்துவிட்ட காலம் இது. ஒட்டுக் கேட்பது ஒரு அந்தரங்க மீறல். கை தொலைபேசி போன்ற கருவிகளில்லாத காலத்தில் இருந்தே ஒட்டுக் கேட்தல் (wire tapping) நடந்து வரும் ஒரு சமாச்சாரம். ஒட்டுக் கேட்பதற்கு சட்டப்படி ஒரு தேடுதல் ஆணை (warrant) தேவைப் பட்டது. ஆரம்ப காலத்தில், தொலைபேசிப் பரிமாற்றம் (phone exchange) வழியாக ஒரு மனித உதவியுடன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வந்தன. தொலைபேசிப் பரிமாற்றத்தில் ஒரு சிறு மாற்ற்ம் மூலம் இருவர் பேசுவதை பாதுகாப்பு மற்றும் சட்ட நிர்வாகப் பணிமணைகள் கேட்க முடிந்தது. ஓரளவுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க இது தேவையாகவும் இருந்தது.

நிலமை ரொம்ப மாறிவிட்டது. கைத்தொலைபேசித் தொழில்நுட்பம் மிகவும் மதிநுட்பமிக்கதாக ஆகிவிட்டது. அத்தோடு இணையத் தொலைதொடர்பு இன்னும் ஒட்டுக் கேட்பதைக் கடினமாக்கிவிட்டது.

இன்னிக்கு டான்ஸ் வகுப்பில் என்ன சொல்லிக் கொடுத்தா உங்க டீச்சர்?’

என்று சென்னையில் உள்ள பாட்டி, மேஜிக் ஜாக்கில் மயாமியில் உள்ள பேத்தியை விசாரிப்பாள். இணையம் மூலமாகப் பேசும் பாட்டியின் தொலைபேசி எண்ணைப் பார்த்தால். பாஸ்டனிலிருந்து பேசுவதைப் போலத்தான் சொல்ல முடியும். இது இணைய தொழில்நுட்ப விந்தை. (Local Number Portability என்ற இடமற்ற நுட்பம்) இதே போல பெய்ரூட்டில் வாழும் ஒரு ஹெஸ்புல்லா தீவிரவாதி தன் அமெரிக்கக் கூட்டாளியுடனும் எதையாவது தாக்கத் திட்டம் போட முடியும். சிக்கல் என்னவென்றால், இரு பேச்சாளர்களிடையே, சில பல தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் உள்ளன. மயாமி உரையாடலை எடுத்துக் கொள்வோம். சென்னை நகரத்தில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் ஆரம்பம். பிறகு மேஜிக் ஜேக் நிறுவனம். இத்தனைக்கும் பாட்டிக்கு, ஒரு பாஸ்டன் நகர எண்ணிலிருந்து தான் அழைப்பது தெரியாது. பிறகு, மயாமியில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் முடிவு. நடுவில், சாட்டிலைட்,, மைக்ரோவேவ், கோஆக்ஸ் போன்ற சிலபல தொட்ர்பு இடை சமாச்சாரங்கள். எப்படி ஒட்டுக் கேட்பது? தேடுதல் ஆணை என்பது உள்நாட்டு சட்ட ஆணை. தோற்றத்தில் உள்நாட்டு உரையாடல் போல தோன்றினாலும், இது ஒரு பன்னாட்டு உரையாடல்.

ஸ்கைப் போன்ற வசதிகள் இதை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இரு ஸ்கைப் பேச்சாளர்களிடையே தொலைபேசி எண்ணே தேவையில்லை. சதி செய்கிறார்களா அல்லது வியாபாரம் பேசுகிறார்களா என்றே சொல்ல முடியாது. இந்த வளர்ச்சி ஓரளவுக்கு தனிப்பட்டோர் அந்தரங்கக் காவலுக்கு வெற்றி என்று கொண்டாலும், பொது நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் இரு பக்கம் இருப்பது தெளிவு. தனி மனித அந்தரங்கம், நம் அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளத்தால், இது ஒரு ஜனநாயகப் பிரச்சினை. பயங்கரவாதத்தால், இது ஒரு பாதுகாப்புப் பிரச்சினையும்கூட. உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளில் அதிக சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு முக்கிய விஷயம் இது.

மெய் அந்தரங்கங்கள்

காவல் துறையினர் குற்றங்களைக் கண்டுபிடிக்க 100 ஆண்டுகளுக்கு மேலாகக் கைரேகையை உபயோகித்து வருகிறார்கள். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (homeland security) ஒரு படி மேலே போய், பயணிகள் சிலரிடம் பத்து விரல் ரேகைகளையும் பெற்றுக் கொண்டு அவர்களது நாட்டுக்குள் அனுமதிக்க முடிவெடுக்கிறார்கள். விரல்கள் ஒவ்வொருக்கும் வெவ்வேறு ரேகையுண்டாம். ஒரு விரல் ரேகையை ஏமாற்றி விடலாம். ஆனால் பத்து விரல் ரேகைகளை வைத்து ஏமாற்றுவது சற்று கடினம். பல உயர் பாதுகாப்பு தளங்களில் பத்து விரல் ரேகையுடன் எண்ணைப்பசை மற்றும் உஷ்ணம் கொண்டு ப்ளாஸ்டிக் பித்தலாட்டம் நடக்கிறதா என்று மிக சக்தி வாய்ந்த வருடிகள் முடிவெடுக்கின்றன. புதிய மடிக்கணினிகளில் கைரேகை வருடிகள் (fingerprint scanner) வரத் தொடங்கிவிட்டது. இதைப் பற்றி அதிகம் பேசப்படாத சமாச்சாரம் இது: ஒரு ஆயிரம் வருடல்களில் 5 வருடல்களாவது தவறு செய்ய வாய்ப்புள்ளது. சமுதாயப் பார்வையில் கைரேகை என்பது குற்றங்களுடன் சேர்த்து பார்க்கப்படுகிறது. ஒருவரின் கைரேகை எடுக்கப்பட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடு கீழிறங்குவது இயல்பு. இது மாறுவது மேற்படி நடைமுறைகள் பரவலானால் ஏற்படலாம்ஆனால் மேற்படி நடைமுறைகள் இந்த மதிப்பீடுகளுக்கு வணங்கி மாறுதல்களை அடைவதும் நேருமா என்று பார்க்க வேண்டும்.

முக வடிவு வருடிகள் (Facial Scanner) பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முகவடிவு மாறக்கூடியது. தாடி, மீசை வளர்த்தாலோ, அல்லது சிகை அலங்காரம் மாறினாலோ வருடிகள் குழம்பி தப்பு முடிவெடுக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முகவடிவு கைரேகை மற்றும் இதர நுட்பங்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனியாக முடிவெடுக்க உகந்த நுட்பமில்லை. இதுவும் குற்றவாளிகளைத் தேட காவல்துறையினர் உபயோகிக்கும் முறைகளில் ஒன்று.

கருவிழி வருடிகள் (iris scanning) பல உயர் பாதுகாப்பு தளங்களில் சில வருடங்களாக உபயோகப்படுத்தப்படுகிறது. பல ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். கை ரேகையுடன் கருவிழி (ஸ்டார் ட்ரெக்கில் புளித்துப் போன விஷயமிது!) வருடலும் செய்தவுடன் ஒரு வினோதk கதவு வழக்கத்துக்கு மாறாகப் புதுக் கோணத்தில் திறக்கும்! கருவிழிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுமாம். முக வடிவு அளவு இல்லாவிட்டாலும், கருவிழி வருடல்களிலும் தவறு நேர வாய்ப்புள்ளது. அத்தோடு, இப்புதுமை வருடிச் செயலாக்கு அல்காரிதம் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் செல்லாது. பொது மக்களுக்கு இதன் செயல்முறைகள் வெளியிடப்படுவதில்லை.

மனிதக் குரல் வைத்துப் பாதுகாக்கும் துறை இப்பொழுதுதான் வந்துள்ளது. ‘சிவாஜி, ரஜினிக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். ஜலதோஷம் பிடித்தால் குழம்பி விடும்!

இது போன்ற மனித உறுப்புகள் வழி வருடல்கள் பயோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இம்முறை வருடல்கள் ஒரு தனியார்/அரசு நிறுவனத்தின் அனுமதிப்புக்கு (authentication) உகந்த நுட்பங்களேபரந்த திரளுக்கு இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் எழலாம்.

விமான நிலையங்கள் மற்றும் பல பொது இடங்களில் செய்யப்படும் வருடல் பதிவுகள் (scanned electronic records) ஒரு தனி நபர் சொத்து. பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டாலும் மின்னணுப் பதிவாக இருப்பதால் எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. தவறான கைகளில் சிக்கினால் இதைக் கொண்டு ஒரு அப்பாவிக்குப் பல சிக்கல்கள் ஏற்படுத்த முடியும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் மூச்அதிகம் பேசுவதில்லை. கைரேகை சமாச்சாரம் குற்றங்களை ஆய்ந்து தண்டனை அளிப்பதறகு என்று நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மற்ற பயோமெட்ரிக் விஷயங்களில் பொதுமக்களை, நம்மைக் கலந்து ஆலோசிக்காமல்  ரகசியத்தில், அவசரமாக முடிவெடுப்பது சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஓரளவுக்கு இது அரசாங்கங்கள் தனிநபர் அந்தரங்க உரிமைமீது நடத்தும் தாக்குதல்தான். ஜனநாயக முறையில் நாம் வாக்களித்து அமர்த்திய அரசாங்கமே சட்டத்தை உபயோகித்து, பாதுகாப்பைக் காரணம் காட்டி இப்படி செய்வது நவீன வாழ்க்கையின் சோகம்.

விடியோ கண்காணிப்பு

விடியோ காமிராக்கள் மிக மலிந்து விட்டதால், அவற்றின் பழைய உபயோகங்கள் சற்று பழகிவிட்டன. வளரும் குழந்தையின் வளர்ச்சிக் குதூகலங்கள், பழைய நண்பர்களுடன் சந்திப்பு என்று எழுதத் தொடங்கினால் பலர் அடுத்த கட்டுரையைப் படிக்கப் போய்விடுவார்கள். மேற்கத்திய நாடுகளில் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு நாளும் நடக்கும் நடைமுறை ஒன்றை பார்ப்போம்:

1. காலை மணி 6:00: சாமிநாதன் தன் காரை கராஜிலிருந்து வெளியே எடுக்கிறார். அவரது அடுத்த வீட்டு விடியோ விழித்து அவரின் செயல்களைப் பதிவு செய்கிறது.

2. காலை மணி 6:05: சாமிநாதன் சிவப்பாகி விட்ட ஒரு போக்குவரத்து விளக்கைக் (traffic light) கடக்கிறார். சிவப்பு விளக்கைப் பார்க்காமல் கார் ஓட்டுகிறாரா என்று ஒரு விடியோ அவரது காரை மீண்டும் பதிவு செய்கிறது.

3. காலை மணி 6:10: சாமிநாதன் ஒரு பெட்ரோல் பம்பிற்குள் சென்று காருக்கு பெட்ரோல் நிரப்புகிறார். காசு கொடுக்காமல் ஓடிவிடுவாரோ என்று விடியோ காமிரா அவரைப் பதிவு செய்கிறது.

4. காலை மணி 6:20: சாமிநாதன் அவரது வங்கியின் ஏடிஎமில் பணமெடுக்க செல்கிறார். அவரது முழு பரிவர்த்தனையையும் ஒரு சின்ன விடியோ காமிரா பதிவு செய்கிறது.

5. காலை மணி 6:20 முதல் 6:50 வரை: சாமிநாதன் ஒரு சின்ன டிவி நட்சத்திரமாகப் போகிறார். அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒரு பெரிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து ஒரு 30 கி.மி. பயணிக்கிறார். ஒவ்வொரு 5 கி.மி.க்கும் ஒரு விடியோ காமிரா அவர் வேக எல்லைக்கு மேல் பயணிக்கிறாரா என்று பதிவு செய்கிறது. இது போக்குவரத்து நெரிசல் நிர்வாகத்துக்கும் உபயோகிக்கப்படுகிறது.

6. காலை மணி 6:55: சாமிநாதன் காஃபிக் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அங்கும் அவரைப் பதிவு செய்ய ஒரு விடியோ தயார்.

7. காலை மணி 7:05: சாமிநாதன் அவருடைய கம்பெனி கார் நிறுத்துமிடத்திற்கு உள்ளே வருகிறார். கம்பம் ஒன்றுக்கு ஒரு விடியோ காமிரா அவர் எங்கு நிறுத்தினாலும் பதிவு செய்யத் தயாராக இருக்கிறது.

8. காலை மணி 7:10: சாமிநாதன் அவருடைய கம்பெனி நுழைவில் அவருடைய அடையாள ப்ளாஸ்டிக் அட்டையை ஒரு வருடியில் சறுக்குகிறார். அங்கும் ஒரு விடியோ காமிரா அவரது செயலைப் பதிவு செய்கிறது.

இது சாதாரண அன்றாட மேற்கத்திய நாட்டுக் காலை. மேலே சாமிநாதன் அவரது அலுவலகத்திற்குள் நுழையவே இல்லை. குறைந்தபட்சம் 13 முறை படமெடுக்கப்பட்டுள்ளார் (அவர் தாண்டிய சில பல போக்குவரத்து விளக்குகளை இங்கே விட்டு விட்டோம்).. சற்று யோசியுங்கள். அவர் என்ன கமலஹாசனா? அவரிடம் யார் அனுமதி கேட்டார்கள்? பார்க்கப் போனால் பாப்பராட்ஸி தொடரும் ஹாலிவுட் நடிகைக்கும், சாதாரண மனிதருக்கும் அதிக வித்தியாசமில்லை. சாதாரணமானவரின் புகைப்படத்தை யாரும் அச்சடித்துக் காசு பண்ணுவதில்லை. இத்தனைக்கும், படமெடுத்த பாதி காமிராக்கள் சாமிநாதனின் வரிப்பணத்திலிருந்து வாங்கியவை! இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொது இடங்களில் விடியோ கண்கானிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் துறையில் பாதுகாப்புக்காக உபயோகம் செய்யப்படும் கண்காணிப்பைப் பற்றி நாம் இங்குப் பேசப் போவதில்லை.

பொதுவாக விடியோ கண்காணிப்பு பொது மக்களின் பாதுகாப்புக்காக் செய்யப்படுவதாக அரசாங்கங்கள் சொல்கின்றன. இதில் ஓரளவுக்கு உண்மையுண்டு என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக, 1994ல் அமெரிக்கா ஓக்லஹொமாவில் நடந்த குண்டுத் தாக்குதலுக்கு முக்கிய துப்பு, ஒரு ஏடிஎம் காமிரா என்பதை அறிவோம். லண்டன் பாதாள ரயில் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விடியோ காமிராக்கள்தான் உதவின. போலிஸார் எல்லா குற்றம் நடக்கின்ற இடங்களிலும் இருக்க முடியாதேகுற்றம் செய்வதே போலிஸார்தானே என்பீர்கள். அது வேறு விஷயம்!

விடியோ கண்காணிப்பு பற்றிய பொது விவாதம் சற்று சிக்கலானது. சில இடங்களில் காமிராக்கள் இருப்பது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும், அதுவே மிகையானால் பாதுகாப்பே சற்று பயமாக மாறுவது வினோதமானது. “உங்களிடம் மறைக்க ஒன்றும் இல்லையெனில் ஏன் பயப்பட வேண்டும்என்பது ஒரு வாதம். ஆனால் இவ்வாதம் முக்கியமான ஒரு கோணத்தைப் புறக்கணிக்கிறது. “தனியொருவரின் அந்தரங்கம், அரசியல் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டது. ஏன் அரசாங்கம் அன்றாட வாழ்க்கையில் ஊடுறவ வேண்டும்?” என்பது மிக முக்கியமான கேள்வி. மேலும் எல்லாரையும் எப்போதும் சந்தேகத்துடன் இந்தக் காமிராக்கள் பார்க்கின்றன என்பது சமூகத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? மக்களை நம்ப முடியாது என்று கருதும் சமூகத்தின் இயல்பு என்ன வகை?

பொது இடங்களில் ஏறக்குறைய அந்தரங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை சற்று ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே படுகிறது. மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகள் நடக்குமிடங்களில் (ஒலிம்பிக், ஓடிஐ,, சூப்பர் பெளல்) குற்றவாளிகளை பிடிக்க, குற்றங்களை தவிர்க்க விடியோ சாதனங்கள் உதவுகின்றன. இவ்விடியோ பிம்பங்களுடன், முக வடிவு கண்டறிதல் ( face recognition technology) தொழில்நுட்பமும் இணைந்தால், விளைவுகள் கவலைக்கு இடமளிக்கிறது. குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் மட்டுமே இந்த அரசாங்க தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும் என்று யாரும் உத்தரவாத்ம் கொடுப்பதில்லை. இதே நுட்பம்தான் நமது விமான/ரயில் நிலயம் மற்றும் பல முக்கிய பொது இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. காமிரா தொழில்நுட்பம் வளர்ந்து, காமிராக்கள் சுழன்று மற்றும் ஜூம் செய்து துல்லியமாய் படமெடுக்கும் திறனைப் பெற்றுவிட்டன. குத்து மதிப்பான ஒரு உருவத்தை மென்பொருள் கொண்டு துல்லியமாக்கும் திறமையும் இன்று வந்துவிட்டது.

விளைவுதேவைப்பட்டால், உங்களின் ஒவ்வொரு பொது இயக்கத்தையும் அரசாங்கத்தால் கண்கானிக்க முடியும்.

கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், பொது மக்களின் அந்தரங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் Privacy Commissioner என்ற ஒரு உயர்பதவி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் எதை, எங்கிருந்து, எப்பொழுது, எப்படி கண்காணிக்கலாம் ஆகிய விதிமுறைகளை இந்த அமைப்பு வெளியிட்டு அமலாக்கவும் செய்கிறது. ஓரளவுக்கு இது போன்ற அமைப்புகள் பொது மக்களைத் தேற்றினாலும் அரசுடைய செயல்கள் குறித்த சந்தேகம் முழுவதும் நீங்கியதாகப் படவில்லை.

சில உருப்படியான யோசனைகள்

1. கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? டெண்டுல்கரே கேட்டாலும் உங்கள் கடவுச்சொல்லை கொடுக்காதீர்கள்.

2. கடவுச்சொல்லை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். சும்மா மகன் பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். இதற்குப் பல நல்ல முறைகள் இருக்கின்றன. உதாரணம், நீங்கள் கடந்த பத்து வருடங்களில் 7 வீதிகளில் வசித்திருக்கலாம். அந்த 7 வீதிகளின் முதல் எழுத்தை, உங்களுடைய திருமண வருடத்தோடு இணைத்து ஒரு கடவுச்சொல்லை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. குடும்பத்து உறவினரிடம் இக்கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

3. ஒரு இணைத்தளத்தில் பதிவு செய்து அத்தளத்தை நிறைய உபயோகிக்க விருப்பமா? பதிவு செய்தவுடனே அத்தளம் உங்களுக்கு அனுப்பும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை அழித்துவிட்டு, கடவுச்சொல்லை ஒரு முக்கிய புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

4. ஆர்குட்டில் தெரியும் என்று உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை மூன்றாமவரிடம் (நான்காமவர், ஐந்தாமவரும் இதில் அடங்கும்) பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

5. என்னிடம் ரகசியமே இல்லை என்று உங்கள் புகைப்படம் மற்றும் முகவரியை பகிரங்கமாய் ஃபேஸ்புக்கில் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்.

6. கூகிள், ஹாட்மெயில், யாஹு போன்ற இணைய அமைப்புகள் பல்வேறு சேவைகளை வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு ஜிமெயில் கணக்கு ஒன்று உண்டு என்று வைத்துக் கொள்வோம். அதற்கான Profile ஒன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பள்ளி நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஒரு கூகிள் குழு ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். அதே கூகிள் Profile மீண்டும் உபயோகிக்கப்படும். பள்ளி நண்பர்களுக்காக உங்கள் முகவரி, புகைப்படம், உங்கள் நாய்க்குட்டியின் பெயர் என்று சகலத்தையும் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்களின் அத்தனை கூகிள் சம்பந்தப்பட்ட தொடர்பிலும் இத்தனை விவரங்களையும் சம்மந்தப்பட்டவர்கள் பார்க்கலாம். மிக யோசித்து உங்கள் Profile உருவாக்குங்கள்.

7. உங்கள் வங்கிபோல பாசாங்கு செய்யும் மின்னஞ்சல் வந்தால் வங்கியை அழைத்து விசாரியுங்கள்.

8. நீங்கள் கடும் சிவ பக்தரா? திருவண்ணாமலை செல்லுங்கள். அனாவசியமாகச் சிவன் படத்தை மின்னஞ்சலில் முன்னோக்கி அனுப்பாதீர்கள்.

9. மறைந்த ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பணக்கார சர்வாதிகாரிகள் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில் இருக்க வேண்டியவர்கள்.

10. கனடாவில் குறைந்த விலை மருந்துகள், வயாக்ரா, இலவச நோக்கியா -மறக்காமல் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில். முடிந்தால் ஸ்பாம் காப்பு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள்.

11. இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. படித்த ஏமாற்றுக்காரர்கள் அதிகம் உலவும் இடம் இணையம்.

12. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையா? உங்கள் இணைத்தள முகவரி https:// என்று ஆரம்பிக்கிறதா என்று பார்க்கவும். கடைசியில் உள்ளsபாதுகாப்பான இணைத்தளத்தை குறிப்பது. (Secure http – SSL encrypted). வங்கிக்கணக்கு மற்றும் ஏடிஎம் எண்கள் அல்லது பே பால் (Paypal), மற்றும் கிரெடிட் கார்ட், அரசாங்க எண் (Social Security Number) எதையும் கொடுக்குமுன் நீங்கள் கவனித்துப் பார்த்தால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஆசையாய் அண்ணன் மகள் சிடி விற்கிறாள் என்று http:// துவங்கும் இணைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு கிரெடிட் கார்ட் எண்ணைக் கொடுக்காதீர்கள்.

13. அரசாங்கம் ஏதோ ஒரு சலுகையைத் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் அந்தரங்கம் பற்றி சற்று யோசித்து முடிவெடுங்கள்.

14. ஆஸ்பத்திரியில் சகட்டு மேனிக்கு (என்ன பொருத்தம்!) மரபணுச் சோதனைகள் எடுத்தால், அறிக்கையை யாரிடம் அனுப்புவார்கள் என்று விசாரியுங்கள். காசு கொடுக்கும் உங்களுக்கு அறிக்கையைக் கொடுக்கக் கோருங்கள். தகவலைப் பெறும் நபர்களைக் குறைந்த பட்ச எண்ணிக்கைக்குக் குறுக்க முயலுங்கள்.

முடிவுரை

எஸ்.பி.பி யின் பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்:

அந்தரங்கம் யாவுமே, சொல்வதென்றால் பாவமே

ஏழையின் தனிமையை (காதலை) மாளிகை அறியுமா?

இக்கட்டுரையை படித்துச் சிலரேனும் தங்கள் இணைய/ஷாப்பிங் வழக்கங்களைச் சற்று மாற்றிக் கொண்டால், அல்லது அந்தரங்கக் கோணத்தில் தங்களது நிதி, சுகாதார, அரசாங்க விஷயங்களை யோசித்தால், இக்கட்டுரையை எழுதியதற்கு பயனிருக்கும்.



வலையில் சிக்கித் தவிக்கும் அச்சுத்தொழில்

ஜூன் 26, 2010: விடாது மழை பெய்த நாள் இது. பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக இசை மழையில் நனைந்து வெளியே பயங்கர கோடை மழை டொரோண்டோவில். தடுமாறி காரைக் கண்டுபிடித்து விரட்டினால், ஊரின் மையப் பகுதியில் ஒரே கலவரம் என்று ரேடியோ மழை பெய்தது. G20 மாநாடு என்ற அரசியல் ஸ்டண்ட் பல நாடுகளில் அவ்வப்பொழுது தலைவர்கள் செய்ய முடியாத காரியங்கள் பற்றி ஒரு அறிக்கை விடும் வேடிக்கை நிகழ்ச்சி. இம்முறை டொரோண்டோவில் மாநாடு என்று ஒரே பாதுகாப்பு கெடுபிடி. போலீஸ் நகருக்குள் குவிக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்புக்கும் மீறிப் பல கலகக்காரர்கள் கண்ணாடிகளை உடைத்து, சில கார்களை கொளுத்தினார்கள். பெரும் அமைதிப் பூங்காவான கனடாவுக்கு (வெறும்அமைதிப் பூங்காதமிழ்நாட்டின் காப்புரிமை!) இதெல்லாம் புதுசு. பல ஊர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதைவிடப் புதுசு, இந்த செய்தி எல்லோரையும் சென்றடைந்த விதம். டொரோண்டோவில் சில நூறு ரேடியோ நிலயங்கள், சில நூறு டிவி சானல்கள், ஒரு 30 செய்தித்தாள்கள் என்று மீடியாவுக்கு பஞ்சமே இல்லை. ரேடியோவில், டிவியில் வரும் முன்பு, டிவிட்டர் என்ற சமூக வலையமைப்பு மூலம் இந்த சம்பவங்கள் நடக்க நடக்க டிவிட் (சில வாக்கியங்களே கொண்ட செய்திகள்) செய்யப்பட்டது. கலவரம் நடக்கையில் சில போலீஸ் அத்துமீறல்களும் நடந்தன. அதையும் டிவிட் செய்தார்கள். மேலும் பலர் செல்பேசி காமிராக்களில் படம் பிடித்து வலையில் உலவ விட்டார்கள். எல்லாம் 777 போல திடீர் பத்திரிகையாளர்கள்! அடுத்தநாள் நகரின் பெரிய செய்தித்தாளான டொரோண்டோ ஸ்டார்எப்படி அதன் நிருபர்கள் டிவிட் செய்தார்கள் என்று விலாவாரியாக விளக்கியிருந்தது. என்ன நடக்கிறது? பெரிய செய்தித்தாளின் நிறுபர்கள் ஏன் டிவிட் செய்ய வேண்டும்?

அடுத்தபடியாக அதிகாரிகள் பூசி மொழுகினார்கள். நம்மூரில் சொல்வார்களேலேசான தடியடி பிரயோகம்கிட்டத்தட்ட அது மாதிரி மழுப்பினார்கள். பெரிய பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. சிறப்பு எழுத்தாளர்கள் (columnists) தங்களது விசேஷ கருத்துக்களை தங்களுடைய புகைப்படங்களுடன் அலசித் தள்ளினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், இது ஜனநாயக உரிமை என்று சிலர் ஊர்வலம் நடத்தினார்கள். அரசாங்க சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் ரஷ்ய உளவுக் கூட்டம், உலகக்கோப்பை கால்பந்து என்று ஏறக்குறைய G20 யை மறக்க வாய்ப்பிருந்தது.

ஆனால் மறக்க விடவில்லை டிவிட்டர் கோஷ்டி. இதில் பல குழுக்கள். டிவிட்டரின் சக்தி வாய்ந்த hash tags என்ற குறி வார்த்தைகளைப் பயன்படுத்தி, பல புது பத்திரிகையாளர்களும் நடந்தவற்றை சாட்சியங்களுடன் அலசி அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்தினார்கள். ஜூலை முதல் வாரத்தில் போலீஸ் அத்து மீறியதா என்ற ஆராய விசாரணை கமிஷன் அமைக்க அரசாங்கம் முடிவெடுக்கும்படி ஆகிவிட்டது. பெரிய பத்திரிகைகள், தொலைக்காட்சி வலையமைப்புகள் செய்ய முடியாத ஜனநாயகக் கடமையை 50,000 டிவிட்டர்கள் 250 வார்த்தைக்குள் பல செய்திகளாய் இணையத்தில் இணைந்து அரசாங்கத்தையே பதிலளிக்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்துடன் விடுவதாக இல்லை. விசாரணையின் ஒவ்வொரு நாளும் டிவிட் செய்து கொளருபடி ஏதாவது நடக்கிறதா என்று அனைவரையும் ஒழுங்காக நடக்கும்படி எச்சரிக்கை வேறு விட்டுள்ளார்கள்!

ஜூலை 7, 2010: வட அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். இதில் ஏராளமான டாலரும் கூட. அன்று காலை விளையாட்டு தலைப்பு செய்தி: Chris Bosh என்னும் டொரோண்டோ ராப்டர்ஸ் டீம் வீரர் மயாமி ஹீட்ஸ் என்ற அமெரிக்க குழுவில் சேர முடிவெடுத்திருப்பது. இதில் என்ன பெரிய விஷயம்? கிரிஸ், பத்திரிகையாளர்களைக் கூட்டித் தன் முடிவைச் சொல்லவில்லை. ஜூலை 6ஆம் தேதி இரவு தன் விசிறிகளுக்கு டிவிட் செய்தார். டிவி, ரேடியோ, செய்தித்தாள்கள் எல்லோரும் டிவிட்டரை மேற்கோள் காட்டி எழுதி/பேசினார்கள். விறைப்பாக டை கட்டிக் கொண்டு, ராய்டர்ஸ், ஏபி சொன்னால்தான் செய்தி என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. பெரிய செய்தியாளர்கள் டிவிட்டரையும் ஃபேஸ்புக்கையும் நம்பி செய்தி தேடுகிறார்கள். இதற்கான உதாரணங்களை இந்தியாவிலேயே கூட பார்க்கலாம். டிவிட்டரில் உலவும் பிரபலங்கள் முக்கியமாக ஏதேனும் சொன்னால் உடனுக்குடன் அவை mainstream செய்தி நிறுவனங்களில் மீள்பதிவு செய்யப்படுகின்றன.

பிப்ரவரி, 2010: வட அமெரிக்க டிவியில் இரவில் காமெடி காட்சிகள் ரொம்ப பிரபலம். இதை Stand Up comedy என்கிறார்கள். நல்ல நகைச்சுவையாளர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் சம்பளம் வருடத்திற்கு. இந்த இரவு காமெடி நேரத்தில் பங்கெடுக்க விளம்பரதாரர்கள், பங்கேற்பாளர்களிடையே கடும்போட்டி. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, விஞ்ஞானம் என்று எல்லாவற்றையும் கிண்டலடிப்பார்கள். இப்படி NBC என்ற அமெரிக்க சானலுக்கு Conan O’Brien என்னும் நகைச்சுவையாளர் வார இரவுகளில் 1 மணி நேர காட்சி பல வருடங்களாகச் செய்து வந்தார். திரைக்குப் பின்னால் நடந்த சில குழப்பங்களால் இவரை பிப்ரவரி 2010-ல், NBC நிகழ்ச்சியிலிருந்து நீக்கியது. கூடவே, அவர் எந்த தொலைக்காட்சி நிரலிலும் தோன்றக் கூடாது என்று காண்ட்ராக்ட் வேறு! ‘மலரும் நினைவுகள்என்று புத்தகம் எழுதுவது ஒன்றுதான் விட்டு வைத்திருந்தார்கள்.

பார்த்தார் கானன்டிவிட்டரில் ஒரு அக்கவுண்ட் திறந்தார். 1 மணி நேரத்தில் இவரை 30,000 பேர் பின் தொடர்ந்தார்கள்! 24 மணி நேரத்தில் 300,000 பேர்! சில பல ஜோக்குகள் சொல்லி வந்தார். இன்று 1 மில்லியன் பின்பற்றுவோர். பிறகு, இவர் செய்தது எந்த மீடியா வரலாற்றிலும் இல்லை. யூட்யூப் சேனல் ஒன்றை கூகிளுடன் சேர்ந்து அவரது நகைச்சுவை காட்சி ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். பிறகு, டிவிட்டரில் ஊர் ஊராய் காட்சி நடத்துவதாய் அறிவித்தார். டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்தன! அவருடைய காண்ட்ராக்டை சற்றும் மீறவில்லை. ஆனால் டிவியை விட அதிகம் கலக்கத் துவங்கிவிட்டார்.

யூட்யூப் மற்றும் டிவிட்டர்தொலைக்காட்சி நிறுவனம் இல்லை. ஆனால் அதைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. NBC கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்கத்தான் முடியும். அமெரிக்காவில் டிவி, செய்தித்தாளை மீறி ஒன்றும் இயங்க இயலாது என்ற எண்ணத்தையே உடைத்துவிட்டார் கானன்.

உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் பயணிகள் சேவையில் பின்தங்கியே உள்ளன. அதுவும் தொலைந்து/உடைந்து போன சாமான்களைத் திருப்பித் தருவதில் ஒரே குழப்பம்தான். அமெரிக்காவில் உள்ள யுனைட்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் பல வகைகளிலும் போராடி, வெற்றி இல்லாமல், இசைக்கலைஞர் ஒருவர் வித்தியாசமாக இதைக் கையாள முடிவு செய்தார். யுனைடெட் பற்றி யூடியூப்பில் ஒரு விடியோ வெளியிட்டார். தர்மசங்கடப்பட்ட யுனைடெட், அவரது பிரச்னையைத் தீர்க்க ஒழுங்காக முன்வந்தது!

ஆகஸ்ட் 6, 2010: டானர் பிரவுன் என்ற பத்து வயது கனேடிய சிறுவன் மிகவும் சோகமாக இருந்தான். அப்படி என்ன சோகம் பத்து வயதில்? டானருக்கு வினோத நோய் ஒன்றால் (Duchenne muscular dystrophy) மின்சார நாற்காலி இல்லாமல் நகர முடியாது. இன்னும் 2 வருடங்களே வாழ்வான் என்று நிர்ணயிக்கப்பட்டது. டானருக்கோ சில சின்ன ஆசைகள். அதில் ஒன்று நியுயார்க் நகரத்தைப் பார்க்க வேண்டும் என்பது. பயணத்தின்போது அவனுடைய மின் நாற்காலியை ஏர் கனடா சேதம் செய்து விட்ட்து. விசேஷ மின் நாற்காலி இல்லாத டானர் வலியில் துடித்துள்ளான். விமான நிறுவனம் வழக்கமான நழுவல் வார்த்தைகளைச் சொன்னது. பார்த்தார் டானருடைய அத்தைவிமான அனுபவத்தைப் பற்றி டிவிட் செய்தார். ஒரு மணி நேரத்தில் 15,000 பேர் ஏர் கனடாவுக்கு எதிராகக் குவிந்தார்கள். நாங்கள் பழுது செய்து தருகிறோம், புதியது வாங்க பணம் இதோ என்று, பல வித செய்திகள் பறக்க, ஏர் கனடா தன் தவறை உணரத் தொடங்கியது. ஒழுங்காக மின் நாற்காலியைப் பழுது செய்து மேலும் டானருடைய இன்னொரு கனவையும் நிஜமாக்க முன் வந்த்து. அது, டானரும், அவனுடைய இரு உறவினர் குழந்தைகளையும் இலவசமாக ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னிலாண்டிற்கு இலவசமாக ஏர் கனடாவில் (அடுத்த முறை, ஒழுங்கான மின் நாற்காலியுடன்) ஒரு வருடத்திற்குள் பயணம் செய்வது. டிவிட்டரால் சில நாட்களே உயிவாழவிருக்கும் சிறுவனின் சோகம் நீங்கியது என்று சொன்னால் மிகையாகாது. இன்று, சமூக வலையமைப்பு இணைத்தளங்கள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைவிட அதிகம் கவனிக்கப் படுகின்றன.

2009-இல் பாடகி ஷ்ரேயா கோஷலின் விசிறி ஒருவர் அவரைப் புது டில்லியில் சந்தித்து அவருடைய இணைத்தளத்தில் (blog) ஒரு பேட்டி வெளியிட்டார். இவர் ஷ்ரேயாவின் பாடல்களை பற்றி பல கட்டுரைகள் எழுதியவர். எப்படி பேட்டி கிடைத்தது? டிவிட்டர் மூலம் ஷ்ரேயாவிடம் சந்திப்பு பற்றி எல்லா ஏற்பாடுகளும் செய்து அவரை 1 மணி நேரம் சந்தித்துள்ளார். இவர் ஒன்றும் பெரிய செய்தி நிறுவனத்துக்கு வேலை செய்யவில்லை.

நாம் பார்த்த ஆறு உதாரணங்கள் 2010-இல் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக உலகில் வீசும் சூறாவளிக் காற்றை எடுத்துக்காட்டுகிறது. பல நூறு ஆண்டுகளாக ஆளுமை செய்து வந்த அச்சுத்தொழில் இணையப்புரட்சியால் கலக்கம் கண்டுள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிப்பதே இத்துறையின் அதிவேக முன்னேற்றத்தால்தான். அச்சு மீடியாவில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, சற்று தடுமாறும் நிலையில்தான் உள்ளார்கள். தொலைக்காட்சி மீடியா கடந்த 40 வருடங்களாக மிகவும் சக்தி வாய்ந்ததாக வளர்ந்துள்ளது. இதிலும் சற்றுஇணையஅடிதான். ராஜாக்கள் போல சுற்றி வந்த பல புத்தக வெளியீட்டாளர்களும் இணையத்தால் சங்கடத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் மேற்குலகில் காணக்கிடைப்பது. ஆனால் மேற்கில் ஏற்படும் எந்த ஒரு வர்த்தக, தொழில்நுட்ப மாற்றமும் உடனடியாகவோ, சற்று தாமதமாகவோ இந்தியாவையும் பாதிக்கிறது என்பதால் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகிறது இணையத்தின் வளர்ச்சி.

சரி, இணையமும் வழக்கமான மீடியாவும் அவரவர்கள் தொழிலைக் கவனிக்கலாமே என்று தோணலாம். அங்குதான் சிக்கல். சகல மீடியாவையும் இயக்குவது விளம்பரப் பணம். இது கொஞ்ச கொஞ்சமாக இணையம் பக்கம் திரும்பியுள்ளதால் வழக்கமான மீடியாவுக்கு ஜுரம். மீடியா ஜுரம் பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம். இதை மூன்று பகுதிகளாய் அலசுவோம் :

1) புத்தகங்கள் மற்றும் அச்சு வெளியீடு (print publishing)

2) செய்தித்தாள்கள் & தொலைக்காட்சி .

விவரமாக இப்பகுதிகளை ஆராய்வதற்கு முன் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள ஆசை. புறநகர் பகுதியில் வசிக்கும் நான், கடந்த பத்து வருடங்களாக, ரயிலில் அரை மணி நேரம் வேலைக்குப் பயணிக்கிறேன். சில நாட்கள் ரயிலில் இடம் கிடைக்காது. மற்ற பயணிகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பது சுவாரசியமான விஷயம். இந்த கவனிப்பு இக்கட்டுரையுடன் தொடர்புடையது. முதலில், எது நடந்தாலும் பயணிகளில் ஒரு 20% முன்னிரவு சரியாகத் தூங்காமல் ரயில் பயணத்தின்போது தூங்குவார்கள். 2000 முதல் 2004 வரை பலர் பெரிய செய்தித்தாள்களை (ஒரு 40%) கொச கொச வென்று தூங்குபவர்களை எழுப்பும் வில்லன்களாய் படிப்பார்கள். ஒரு 20% பத்திரிகை மற்றும் நாவல்கள் படிப்பார்கள். சிலர் தீவிர மத நூல்களைப் (காலைப் பயணத்தில்) படிப்பார்கள். சிலர் வேலை, படிப்பு சம்மந்த புத்தகங்கள் படிப்பார்கள். இதில் 2004-இல் சிலர் மடிக்கணினிகளில் ரயிலில் வேலை செய்யத்