இந்திய தேசியச் சின்னங்கள்ஏற்காடு இளங்கோ

மின்னூல்

என்னுரைநாடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பும் எல்லையும் இருக்கும். அதே போல் நாட்டிற்கு என்று ஒரு தனிக்கொடி,முத்திரை என்றும் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் கொடிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். கொடியை தங்களின் உயிரினும் மேலாகக் கருதி அதனை பாதுகாப்பார்கள்.கொடிக்கு தனி மரியாதை செலுத்துவார்கள்.கொடியும்,முத்திரைகளும் பண்டைய ராஜாக்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துணியில் ஆனக் கொடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ரோமானியர்கள் ஆவர்.கி.பி.1218 ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதை தேசியச் சின்னமாக உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்.அதன் பிறகே உலகின் அனைத்து சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்களுக்கு என்று தேசியக் கொடியை உருவாக்கிக் கொண்டனர்.

இந்திய நாட்டிற்கு என்று தேசியக் கொடி உள்ளது.அதுதவிர தேசிய பாடல் ,தேசியகீதம் ,முத்திரை காலண்டர் என பல சின்னங்கள் உள்ளன.தேர்வு செய்யப்பட்ட சின்னங்கள் யாவும் மிகவும் கவனத்துடனே தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.அதனைப் பற்றிய தகவல்களை இப்புத்தகத்தில் காணலாம்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு..தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமிகு.செ.நமசிவாயம் அவர்களுக்கும்,தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு .பெ.சாம்சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட திருமிகு.சீனிவாசன் அவர்களுக்கும் மற்றும் திருமிகு.ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்த்துகளுடன்,

~ஏற்காடு இளங்கோ1.தேசியக் கொடி

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் கொடி இருக்கிறது. இந்தியாவின் தேசியக் கொடி மூவர்ணம் கொண்ட கொடியாகும்.இதனை மூவர்ணக்கொடி என்றும் அழைக்கிறார்கள்.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மூவர்ணம் கொண்ட தேசியக் கொடி உருவாகிவிட்டது.தேசியக் கொடியை நாட்டு குடிமக்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திருப்பூர் குமரன் கொடியை காக்க தனது உயிரையே தியாகம் செய்தார்.இந்திய தேசியக் கொடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு.

வரலாறு:

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது சுதந்திர உணர்வையும் ,ஒற்றுமையையும் மக்களிடம் உருவாக்க ஒரு கொடி தேவைப்பட்டது.1904 ஆம் ஆண்டில் நிவேதிதா என்பவர் முதன்முதலாக ஒரு கொடியை உருவாக்கினார் .சிவப்பு வண்ணத்தில் சதுர வடிவத்துடன்,மஞ்சள் நிற உள் வடிவத்தையும் ,நடுவில் வெள்ளைத்தாமரையையும் கொண்டிருந்தது.இதில் வந்தே மாதரம் என்ற வார்த்தை வங்க மொழியில் இடம் பெற்றிருந்தது.சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தையும், மஞ்சள் வெற்றியையும்,வெள்ளை நிறம் தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் நோக்கத்துடன் கொடி உருவாக்கப்பட்டது.

முதன்முதலாக மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடி 7,ஆகஸ்ட் 1906 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் கிரீன் பார்க்கில் ஏற்றப்பட்டது.அந்தக் கொடி நீள் வடிவில் ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை என மூன்று பாகங்கள் கூடியதாக இருந்தது.இக்கொடி சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் ஏற்றப்பட்டது.இக்கொடியின் நடுப்பாகத்தில் தேவநாகரி எழுத்துருவில் வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது .மேடம் பைக்கஜி காமா என்பவர் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 அன்று பாரிஸில் ஏற்றினார் .இதுவும் முதல் கொடியைப்போலவே மூவர்ணக் கொடியாகவே இருந்தது.

இக்கொடியில் பச்சை,இளம் சிவப்பு,சிவப்பு என மூன்று பாகங்கள் இடம்பெற்றிருந்தன.பச்சை இஸ்லாமியத்தையும்,இளம் சிவப்பு இந்துவத்தையும், சிவப்பு புத்த மதத்தையும் குறிக்கும் நோக்கில் உருவாக்கபட்டிருந்தது.மேலும் இக்கொடியில் தாமரையும், ஏழு நட்சத்திரங்களும்,நடுப்பாகத்தில் வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

பாலகங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன.இதில் ஏழு நட்சத்திரங்களும்,இடது மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும் , வெள்ளை நிறத்தில் பிறை நிலாவும், நட்சத்திரமும் கொண்ட கொடியை உருவாக்கினர். இக்கொடியை 1917 ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தின்போது ஏற்றினார்கள்.


பிங்காலி வெங்கய்யா :

விஜயவாடாவில் 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது.அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கய்யா (Pingali Venkaiyya) என்ற இளைஞர் இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு கொடியை வடிவமைத்து மகாத்மா காந்தியிடம் வழங்கினார்.இவர் ஆந்திராவின் மசிலிபட்டி என்னும் ஊரில் (2,ஆகஸ்ட்,1876 – 4,ஜூலை,1963) பிறந்தார்.இவர் நிலவியல் பட்டம் பெற்று வைரச்சுரங்கத்தில் வேலைபார்த்தார்.தென்னாப்பிரிக்காவில் நடந்த போரில் இந்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்து பணிபுரிந்தார்.அப்போது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

இவர் உருவாக்கிய கொடியில் இந்து,முஸ்லீம்களை குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி அதில் வெள்ளை நிறத்தை சேர்க்குமாறு கூறினார்.அதனுடன் ஒரு சுழலும் சக்கரத்தை வைக்குமாறு ஆலோசனை கூறினார்.இக்கொடியில் இடம் பெற்றிருந்த நிறமானது வெவ்வேறு மதங்களைக் குறிக்குமாறு அமைந்திருந்தன.இதில் இடம் பெற்றிருந்த சக்கரம் எல்லா வண்ணங்களிலும் இடம் பெற்றிருந்தன.

கராச்சியில் 1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் குழு கூடியது.பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த காவி,வெள்ளை,பச்சை வண்ணங்களுடன் நடுவில் சக்கரத்தைக் கொண்ட கொடியை குழு ஏற்றது.இக்கொடியில் காந்தியின் இராட்டைச் சக்கரம் இடம் பெற்றிருந்தது.இக்கொடியை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தினர்.

தேசியக் கொடி அங்கீகாரம் :

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நம் நாட்டின் தேசியக் கொடியை தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது . ராஜேந்திர பிரசாத் அவர்களின் தலைமையில் பி.ஆர்.அம்பேத்கார்,அபுல் கலாம் ஆசாத்,சரோஜினி நாயுடு ,கே.எம்.பணிக்கர்,சி.ராஜகோபாலச்சாரி ,கே.எம்.முன்ஷி ஆகியோர் கொண்ட குழு கொடி சம்பந்தமாக பரிசீலனை செய்து 14,ஜூலை,1947 இல் முடிவுக்கு வந்தது.அதில் மத அடையாளத்தை மாற்றி,தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது. கொடியில் எந்தவித மதசாயலும் இருக்கக் கூடாது.சக்கரத்திற்குப் பதிலாக சாரநாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது.

தீர்மானம்:

இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஜவகர்லால் நேரு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் .தேசியக் கொடி செவ்வகமாகவும்,அதன் நீள அகலம் 3:2 என்னும் விகிதத்திலும்,கொடியில் மூன்று வர்ணங்களில் காவி மேல்புறத்திலும் , பச்சை கீழ் புறத்திலும்,இவற்றிற்கு இடையே வெள்ளை நிறமும்,அதில் நீல நிறத்தில் தர்ம சக்கரம் அமையும்படியாக இருக்கும். 1947,ஜூலை 22 இல் நடந்த அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.இக்கொடி முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 இல் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.

தேசியக் கொடியானது கரும்காவி,கரும்பச்சை,மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது,மூன்று வர்ணப் பகுதிகளும் அளவில் சமமானவை.வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 ஆரங்களை உடைய அசோகச் சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறமானது தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும் ,பச்சை நிறம் நம்பிக்கை,பசுமை,விவசாய செழிப்பு போன்றவற்றை குறிப்பதாக கற்பிக்கப்படுகிறது. நடுவில் இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம் வாழ்க்கைச் சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கொடியைக் கையாளும் விதிமுறைகள்:

கொடி தயாரிப்பிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு.சர்வதேச அளவு முறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறை 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் கொடியின் நீள,அகலம்,நிறங்களின் அளவு,அடர்த்தி,பளபளப்பு,துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத் தன்மையையும் பற்றியும் விவரிக்கின்றது.கொடித்தயாரிப்பில் விகிதாசாரங்கள் மீறுவது மிகப் பெரிய குற்றமாகும்.கொடித்துணியானது காதி என்கின்ற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்க வேண்டும்.பருத்தி,பட்டு மற்றும் கம்பளி இவற்றில் ஒன்றால் கையினால் நெய்யப்பட்ட கைத்தறித் துணியாகத்தான் இருக்க வேண்டும்.

தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம் (FlagCode Of India) 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை அணியும் உடை,பயன்படுத்தும் கைத்துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண்,தரை,தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. கொடி கிழிந்த நிலையிலோ.நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது.

சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.அதே போல சூரிய அஸ்தமனத்திற்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும்.தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு,அவமரியாதை ஏற்படாத வகையில் கையாள வேண்டும்,ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது.இதற்குப் பின்னர் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் இந்தியக் குடிமக்களுக்கு தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிடலாம் என்கின்ற உரிமையும் கிடைத்துள்ளது.

2 . தேசியச் சின்னம்

இந்தியாவின் தேசியச் சின்னம் (Emblem Of India) என்பது அரசு முத்திரைகள், ரூபாய்,நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது.கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது.இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .

தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன.முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன.இந்தச் சிற்பத்தை படைத்தவர் அசோக பேரரசர் ஆவார். இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அசோகச் சக்கரம் என்றும் அழைக்கின்றனர்.அசோகர்:

இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர் அசோகர் ஆவார்.இவரின் அரசை மௌரிய அரசு என்று அழைத்தனர்.அசோகரின் காலம் என்பது கி.மு 273 முதல் கி.மு 232 வரை ஆகும்.அசோகர் 18 வயதில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.அசோகர் கி.மு 261 இல் கலிங்க நாட்டின்மீது போர் தொடுத்தார்.இப்போரில் சுமார் 1,50,000 போர்வீரர்கள் மரணமடைந்தனர்.இதைப்போல லட்சக்கணக்கான வீரர்கள் காயமடைந்து ஊனமானர்கள்.இதனைக் கண்டு அசோகர் மனம் வருந்தினார். ஆகவே எவ்வுயிர்க்கும் தீங்குச் செய்யக்கூடாது என்கின்ற புத்த மதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பின்னர் மிகச் சிறந்த அரசராக மாறி மக்களுக்கு பணிபுரிந்தார்.

அவர் சாலை ஓரங்களில் நிழல் தரும் ஆலமரம்,மாமரங்களை நட்டார்.பயணிகள் தங்குவதற்கு சத்திரங்களைக் கட்டினார்.குடி தண்ணீருக்காக கிணறுகளை வெட்டினார். சிறந்த சாலைவசதிகளை ஏற்படுத்தினார்.பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து பொதுச் சுகாரத்தைப் பாதுகாத்தார்.

பிற நாட்டின்மீது போர் தொடுப்பதை நிறுத்தினார்.மக்களின் வரி பணத்தைக் கொண்டு மக்களின் நலனுக்காக செலவிட்டார்.சாதி,மதவெறி போன்ற நடவடிக்கைகளை தடுத்து மக்கள் ஒற்றுமையை காக்க பாடுபட்டார்.மக்களுக்குச் செய்திகளை சொல்ல முதன்முதலில் கல்வெட்டுகளை பயன்படுத்தினார். புலனடக்கம், தூய எண்ணம்,நன்றியுடைமை,அறக்கொடை புரிதல்,அன்பு,தூய்மை,சத்தியம்,சேவை மனப்பான்மை,ஆதரவு தருதல்,பெரியோர்களை மதித்தல் ஆகிய நன்னெறிகளை கடைப்பிடித்ததோடு,மக்களை கடைபிடிக்க வலியுறுத்தினார்.

அசோகத் தூண் :

வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அசோகரால் கி .மு 3 ஆம் நூற்றாண்டில் பல தூண்கள் நிறுவப்பட்டன.இவற்றில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் தூண் சாரநாத் தூண் ஆகும்.இது கி .மு .250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது.புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் வெளியிட்டார்.ஆகவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார்.அதன் உச்சியில் சிங்கங்களும்,மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நான்கு சிங்கங்கள்,அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் (Dharma Chakra) உள்ளது.இந்த கல்தூண் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வாரனாசியின் புறநகரப் பகுதியான சாரநாத்தில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தூணில் நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.மலர்ந்த தாமரை மலரும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.தூணின் மகுடமாக தர்ம சக்கரம் விளங்குகிறது.

தேசியச் சின்னம்:

இந்தியாவின் தேசியச் சின்னம் அசோகர் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.அசோகத் தூணின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சின்னமே நமது நாட்டின் தேசியச் சின்னமாகும்.இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக ஆன தினத்தில் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாதவ் சாஹ்னி (Madhav Sawhney) என்பவர் அசோகத் தூணிலிருந்து சின்னத்தை எடுத்து நமது தேசியச் சின்னத்தை 1958 ஆம் ஆண்டில் வடிவமைத்தார்.இதில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரிகிறது.நான்காவது சிங்கம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு உள்ளது.அசோகச் சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது.வலது புறத்தில் எருதும்,இடதுபுறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளது.வலது,இடது கோடிகளில் தர்மசக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன.பீடத்தின் கீழிருந்து தாமரை நீக்கப்பட்டுள்ளது.

பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜெயதே” என்ற குறிக்கோள் கொண்ட வார்த்தை தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஸ் ஆட்சியில் ஸ்டார் ஆப் இந்தியா (Star Of India) என்கிற சின்னம் 1857 முதல் 1947 வரை பயன்படுத்தப்பட்டது.இச்சின்னம் இன்றைக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)பயன்படுத்தி வருகிறது.

தேசியச் சின்னத்தின் முத்திரையை மத்திய,மாநில அரசு அலுவலகங்களின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.மத்திய அமைச்சர்கள்,ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரபூர்வமான முத்திரையாக இச்சின்னம் உள்ளது.

தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும்,அதிகாரிகள் பயன்படுத்தும் தாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும்.மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.தேசியச் சின்னத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.இதை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு(Supreme Court of India) என்று தனிச்சின்னம் உண்டு. அதேபோல் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) தனிச்சின்னம் உண்டு.ஆனால் இவற்றிலும் ஒரு சில மாற்றங்களைத் தவிர தேசியச் சின்னமே இடம் பெற்றுள்ளது.

3.தேசியகீதம்

நமது இந்தியாவின் தேசியகீதம்(National Anthem) ஜன கண மன.... என்கிற பாடலாகும்.இதுவே நமது நாட்டுப்பண் எனப்படும் நாட்டு வணக்கப் பாடலாகும்.நாட்டு மக்கள் தங்கள் நாட்டின்மீது அன்பும்,பற்றுணர்வும் தோன்றுமாறு அமைந்த நாட்டுப்பற்றுடைய இசைப்பாடல்.இப்பாடலைப் பாடும்போது நம் நாட்டின் பழக்கவழக்கம்,வரலாறு,உயர்வாக நாம் கடைப்பிடிக்கும் கொள்கை,நாட்டுப்பற்று ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நாட்டு வணக்கப் பாடல். நாட்டு வணக்கப் பாடல்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக தோன்றின. தேசியகீதத்தைப் பாடுபவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து பாடுவதே நாட்டுக்கு நாம் செய்யும் பெருமை.

இரவீந்திரநாத் தாகூர்:

தேசிய கீதமான ஜன கண மன... என்கிற பாடலை இரவீந்திரநாத் தாகூர் என்பவரே இயற்றினார்.தேசியகீதம் ஒலித்தால் நம்மையும் அறியாமல் நமது உடல் சிலிர்த்து,ஒரு வலிமையை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு.இப்பாடலை இவர் சம்ஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் எழுதினார்.இப்பாடல் கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.இப்பாடலை 1911 ஆம் ஆண்டு அவர் எழுதினார்.இவரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப்பாட்டின் முதல் பத்தி மட்டுமே தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று நடந்தது.இந்த மாநாட்டில் முதன்முதலாக இப்பாடல் பாடப்பட்டது.இதனை தாகூரின் உறவினர் சரளாதேவி செளதுராணி பாடினார்.தாகூரும் தானே இசையமைத்துப் பாடினார்.1912 ஆம் ஆண்டு தாகூரின் தத்துவ போதினி பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின்கீழ் இப்பாடல் வெளிவந்தது. அன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் இப்பாடல் பாடப்பட்டது.1919 ஆம் ஆண்டில் தாகூர் ஆங்கிலத்தில் Morning Song Of India என்று இப்பாடலை எழுதினார்.இவரே தன்னுடைய பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.இவர் கைப்பட எழுதிய மொழியாக்கம் மதனப்பள்ளி தியசஃபிகல் கல்லூரி நூலகத்தின் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

இசை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற ஊரில் பெசன்ட் தியசஃபிகல் கல்லூரி உள்ளது.இங்கு இரவீந்திரநாத் தாகூர் 1911 ஆம் ஆண்டு சென்றார்.இக்கல்லூரியின் அப்போதைய முதல்வர் ஜேம்ஸ் ஹெச் கசின்ஸ்(James H.Cousins).இவர் தாகூரின் நெருங்கிய நண்பர்.ஜேம்ஸின் மனைவி மார்கரட் கசின்ஸ். இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்,ஜன கண மன ....பாடலுக்கு பலவித மெட்டுகளை போட்டுக்காண்பித்தார்.கடைசியாக மனதை கவரும் மெட்டில் 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாடினார்.இந்த மெட்டில் தான் நாம் அனைவரும் இப்பாடலை பாடுகிறோம்.

நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவப் படையின் (INA) தேசியகீதமாக இப்பாடலை பயன்படுத்தி வந்தார்..என் .ஏ வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங், இதற்காக நேதாஜி தங்கப்பதக்கம் வழங்கி ராம்சிங்கை கவுரவித்தார்.

தேசியகீதம் முதன்முதலாக பாடப்பட்டு 100 ஆண்டுகள் 2011 ஆம் வருடம் டிசம்பர் 27 இல் நிறைவடைந்தது.அதை நாடு முழுவதும் கொண்டாடினர்.இதில் ஒரு சிறப்பம்சமாக ஆந்திராவில் மதனப்பள்ளி என்ற இடத்தில சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் கலந்துகொண்டு தேசியகீதத்தைப் பாடினார்கள்.பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.தேசியகீதம்:

ஜன கண மன.... பாடலை இந்தி மொழியில் ஆபித் அலி என்பவர் மொழிபெயர்த்தார்.இப்பாடல் பல ஆண்டுகள் கழித்து இந்திய அரசியல் அமைப்பால் தேசியகீதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஜன கண மன.. பாடல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.இராஜேந்திர பிரசாத்தால் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.ஜன கண மன அதிநாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே

தவ சுப ஆசிஸ மாகே

காஹே தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ,

ஜய ஜய ஜய ஜய ஹே !தமிழாக்கம் செய்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு அரசு பாட நூல்களில் பயன்படுத்தப்படுகின்றது. தேசியகீதத்தின் அர்த்தத்தைக் காண்போம்..

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையையும்,சிந்துவையையும்,கூர்ச்சரத்தையும்,

மராட்டியத்தையும்,திராவிடத்தையும்,ஒரிசாவையும்,வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய,இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை,கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன;நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

விதிமுறை:

தேசியகீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.முழுப் பாடலையும் 52 வினாடிகளில் பாடி முடித்து விடலாம்.தேசியகீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.முழு பாடலும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும் கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் பாடப்படுகிறது.குறுகியதை 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.சுதந்திர தினம் , குடியரசு தினம் ஆகிய நாட்களில் நாட்டின் தலைநகரான புதுதில்லி செங்கோட்டையில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து விதமான அரசு நிகழ்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெறுகிறது.தேசிய கீதம் பாடும் போது அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் பழக்கம் உள்ளது.தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் அனைத்திந்திய வானொலியில் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.ஆரம்பக் காலத்தில் திரையரங்குகளிலும் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.அதாவது திரைப்படத்தின் முடிவில் தேசியக் கொடி திரையிலும் ,தேசியகீதம் ஒலியிலும் வந்தன.திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்த பின்னரே சென்றனர்.தற்காலத்தில் இது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.

4.தேசியப் பாடல்

இந்தியாவின் தேசியப் பாடல் (National Song ) வந்தே மாதரம் (Vande Mataram) என்பதாகும்.இதனை பக்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் வங்காள மொழியில் எழுதினார்.இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதனை இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

பக்கின் சந்திரர் என்பவர் வந்தே மாதரம் பாடலை 1876 ஆம் ஆண்டில் எழுதினார்.வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார்.ஜாதுணாத் பட்டாச்சார்யா என்பவர் இப்பாடலுக்கு மெட்டமைத்துக் கொடுத்தார்.சந்திர சாட்டர்ஜி ஆனந்த மாதா (Anantha Matha) என்கிற நாவலை 1882 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.இந்தப் புத்தகத்தில் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றிருந்தது.

வந்தே மாதரம்:

கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் 12 ஆவது மாநாடு 1896 ஆம் ஆண்டு நடந்தது.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக முதன்முதலாக வந்தே மாதரம் பாடல் இரவீந்திரநாத் தாகூர் முயற்சியால் பாடப்பட்டது.இதற்கு இரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதே இப்பாடலின் பிரதான அர்த்தமாக இருந்தது.இது ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது.

இந்திய மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்துவதாக இப்பாடல் அமைந்தது.ஆங்கிலேய அரசு இப்பாடலை பொது இடங்களில் பாடுவதற்கு தடை விதித்தது.தடையை மீறி பாடியவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இரவீந்திரநாத் தாகூர் பல்வேறு இடங்களில் இப்பாடலை பாடினார்.மகாத்மா காந்தி எழுதும் கடிதங்களின் தலைப்பில் வந்தே மாதரம் எனக் குறிப்பிட்டார்.வந்தே மாதரம் என்பது தேச பக்தியை உருவாக்கும் மந்திரச் சொல் என்றார் அரவிந்தர்.

வந்தே மாதரம் முழுப் பாடலின் தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக் கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா! அப்லா #2 என்று உன்னை அழைப்பவர் எவர்?


பேராற்றல் பெற்றவள்

பேரு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப்படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன்அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தையும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்.

தேசியப் பாடல்:

வந்தே மாதரம் எழுச்சியை ஏற்படுத்தியபோதிலும் அது தாய் மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் துர்க்கையுடன் ஒப்புமைப்படுத்துவதாக கருதப்படுகிறது.இது சமய சார்பற்றதாக கருத முடியவில்லை. ஆகவே தேசியகீதமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.பாடலின் முதல் இரு பத்திகளை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வது என தேசிய காங்கிரஸ் 1937 இல் முடிவு செய்து அறிவித்தது.

வந்தே மாதரம்!

சுஜலாம் ,சுபஹலாம் ,மலையஜ ஷிதலாம்,

ஷஷ்யஷியாமலம்,மந்தரம்!

வந்தே மாதரம்!

ஷுப்பரஜ்யோச்ன புலகிட்யமினிம்

புல்லக்குசுமித துரமதல ஷோப்கினிம்

சுகாசினிம் சுமதுர பர்ஷினிம்,

சுகதம் வரதம் மந்தரம்!

வந்தே மாதரம் ,வந்தே மாதரம்!


இதனை ஆங்கில உரைநடையில் அரவிந்தர் மொழிபெயர்த்துள்ளார்.


I bow to thee,Mother,

richly-watered,richly-fruited,

cool with the winds of the south,

dark with the crops of the harvests,

The Mother!

Her nights rejoicing in the glory of the moonlight,

her lands clothed beautifully with her trees in flowering bloom,

sweet of laughter,sweet of speech,

The Mother ,giver of boons,giver of bliss.


அரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்


அம்மா நான் வணங்குகிறேன்.இனிய நீர் பெருக்கினை,இன் கனி

வளத்தினை,தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை,பைந்நிறப்

படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன்.வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை,குறுநகையின் செலார் குலவிய மாண்பினை

நல்குவை இன்பம்,வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன்.

இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இசை மற்றும் கவியாக்கம் நடந்துள்ளன.அமர் ஆஷா,ஆனந்த் மத் ஆகிய திரைபடங்களில் இடம் பெற்றுள்ளன.வந்தே மாதரம் என்ற பாடல் 1997 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மாதுஜே சலம் என்ற பாடலுடன் ஒலித்தபோது இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்தது.வந்தே மாதரம் தாய் மண்ணே வணக்கம் என்கிற பாடலை 1997 இல் கவிஞர் வைரமுத்து எழுதினார்.இதனை இசையமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார்.இது இசை ஆல்பமாக வெளிவந்துள்ளது.63 ஆவது குடியரசு தினத்தின் போது புதிய இசையில் பாடப்பட்டது.பிக்ராம் கோஷ் இசையமைக்க பின்னணிப் பாடகர்கள் 21 பேர் சேர்ந்து பாடியுள்ளனர்.இது ஆறு நிமிடங்கள்வரை ஓடக்கூடிய இந்தப் பாடல் பாலிவுட்,கிளாசிக்கல்,ராக் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இசையமைக்கப்பட்டுளது.நாடு முழுவதும் குடியரசு தினத்தின்போது டி.வி சேனல்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இசைக்கப்பட்டன.

5.தேசிய நாட்காட்டி

இந்திய தேசிய நாட்காட்டியை சக நாட்காட்டி (SSaka Calendar) என அழைக்கின்றனர்.சக ஆண்டு 365 நாட்களைக் கொண்டது.ஆண்டிற்கு 12 மாதங்கள் உடையது.ஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன.ஆண்டு பூஜ்ஜியம்(0) என்பதற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி.78 ஆகும்.முதல் மாதம் கி.பி.78 ஆம் ஆண்டு தொடங்குவதாக எடுத்துக்கொள்வோம்.இது ஆட்சிக்கு வந்த ஆண்டுக்கு இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு(லீப் வருடம்) எனில் சக ஆண்டும் நெட்டாண்டுதான்.

சக ஆண்டு நாட்காட்டியை தேசிய நாட்காட்டியாக 1957 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.நாட்காட்டி சீரமைப்புக் குழு (Calendar Reform Committee) 1957 ஆம் ஆண்டு இதனை பரிந்துரை செய்தது.இதன்படி தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சக ஆண்டு சைத்ரா (சித்திரை) மாதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கிறது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும்.லீப் வருடத்தில் முதல் தேதி 21 ஆகும்.தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ஆம் ஆண்டு சைத்ரா முதல்தேதியில் துவங்கியது. லீப் வருடங்களில் சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு.அந்த ஆண்டின் முதல்தேதி மார்ச் 21 அன்று துவங்கும்.சக நாட்காட்டியை சிலர் இந்து நாட்காட்டி என்றும் அழைக்கிறார்கள்.

இந்து நாட்காட்டி:

இந்து நாட்காட்டி என்பது ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ளது.அவற்றில் ஒன்று இந்தியத் தேசிய நாட்காட்டி.ஆகவே இந்து நாட்காட்டி என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.இந்திய நாட்காட்டியானது வானவியல் அறிஞர்களான ஆரியப்பட்டா (கி.பி.499) மற்றும் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிதர் வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்துள்ளன.

லீப் வருடம்:

லீப் வருடம் அல்லது நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒரு முகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ , கிழமையையோ,ஒரு மாதத்தையோ கொண்ட ஆண்டாகும்.பிப்ரவரி மாதத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதிலாக 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு எனக் குறிப்பிடலாம். பருவங்களும், வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே சரியாக ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி,காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும்.இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ,கிழமையையோ,ஒரு மாதத்தில் கூடுதலாக இணைப்பதன்மூலம் இதனை சரி செய்யலாம்.லீப் வருடத்தைத் தவிர பிப்ரவரி 28 நாட்கள் கொண்ட ஆண்டு சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது

கிரெகோரியின் நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்தில் கூடுதலான 29 ஆவது நாளை, நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது.அது எவ்வாறு என்றால் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே என்பன லீப் வருடங்கள்.அதே சமயத்தில் 1700,1800,1900 என்பது லீப் வருடங்கள் அல்ல.இவை சாதாரண ஆண்டுகளே.

கிரெகோரியன் நாட்காட்டி:(Gregorian calendar)

கிரெகோரியன் நாட்காட்டியானது (Gregorian calendar) போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.இது சர்வதேச அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.மற்றும் பயன்பாட்டில் இருக்கிறது.இது மேற்கத்திய நாட்காட்டி என்றும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்படுகிறது.இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கிரெகோரியன் நாட்காட்டியான இது கி.மு.45இல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் ஜீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின்(Julian Calendar) திருத்தப்பட்ட வடிவமாகும்.இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்(Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன் வைக்கப்பட்டது.இது 24,பிப்ரவரி 1582 ஆம் ஆண்டில் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரகோரியன் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது.இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு”கிரெகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காட்டியின்படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.மேலும் இக்காலப்பகுதி “ஆண்டவரின் ஆண்டு ” எனவும் பெயரிடப்பட்டது.இது கி.பி 6 ஆவது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ்(Dionysius Exiguus) என்னும் கிறித்துவத் துறவியால் ரோமில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரெகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி ,பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த்,இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரெகோரியின் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன.1582 அக்டோபர்முதல் இவை கிரெகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தத் தொடங்கின . இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரெகோரியின் நாட்காட்டியை அங்கீகரித்தன.ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரெகோரியன் நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும்.1923 பிப்ரவரி 15-இல் தான் இந்நாடு கிரெகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

தேசிய நாட்காட்டி:

இந்தியாவின் அலுவல் முறை குடிமை நாட்காட்டியாகும்.இந்த நாட்காட்டி கிரெகோரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ்(Gazette of India),அனைத்திந்திய வானொலி மற்றும் அரசின் நாட்காட்டிகள்,ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.எண்

மாதம்

காலம்

துவங்கும் நாள் (கிரெகோரியின்)

1

சைத்ரா

30/31

மார்ச் 22 *

2

வைசாகா

31

ஏப்ரல் 21

3

ஜ்யேஷ்டா

31

மே 22

4

ஆஷாதா

31

சூன் 22

5

சிராவணா

31

சூலை 23

6

பத்ரபாதா

31

ஆகஸ்ட் 23

7

அசுவின்

30

செப்டம்பர் 23

8

கார்த்திக்

30

அக்டோபர் 23

9

அக்ரஹாயானா

30

நவம்பர் 22

10

பௌசா

30

டிசம்பர் 22

11

மாக்

30

ஜனவரி 21

12

பல்குனா

30

பிப்ரவரி 20

இதில் இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.ஆகவே குறிப்பிட்ட நாள் மாதம் ஆகியவற்றை கிரெகோரியின் நாட்காட்டியுடன் ஒப்பிட்டு பார்க்க சிரமம் ஏற்படுவதுண்டு.

6.தேசியப் பறவை

இந்தியாவின் தேசியப் பறவை மயில்(Peacock) ஆகும்.இந்தியாவில் சுமார் 2000 வகையான பறவைகள் உண்டு.இந்தியப் பறவைகளில் மிகவும் கவர்ச்சியானது மயில் மட்டுமே.மயில் இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.இதனைப் பற்றி ரிக் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.இந்திய கலாச்சாரத்தில் மயில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.சமஸ்கிருதத்தில் மயிலை மயியூரா(Mayura) என அழைக்கப்படுகிறது.

இந்திய கோவில் சிற்பங்கள்,கவிதைகள்,கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் மயிலுக்கான சிறப்பு கொடுக்கப்படுகிறது.பல இந்துக் கடவுள்களுடன் மயிலைத் தொடர்புப்படுதியுள்ளனர்.கிருஷ்ண பகவான் மயில் இறகை தனது தலை கிரீடத்தில் செருகி வைத்துள்ளார்.முருகன் கடவுளின் வாகனமாக மயில் சித்தரிக்கப்படுகிறது.இதேபோல் புத்த மதத்திலும் மயில் அறிவு சார்ந்ததாக வர்ணிக்கப்படுகிறது.தவிர இதன் இறகுகள் ஒரு புனித அலங்காரப் பொருளாகக் கருதப்படுகிறது.இந்திய கோயிலின் கட்டிடக்கலையிலும் பழைய நாணயங்களிலும், துணி,திரைச்சீலைகளிலும்,நவீன கலைகளிலும் மயிலை பொறித்துள்ளனர்.

மயில் வகை:

மயில்களில் பலவகை உண்டு .குறிப்பாக இந்திய மயில் (Paro cristarus) மற்றும் பச்சை மயில் (Pavo mmuticus) ஆகிய மயில் வகைகள் பிரபலமானவை.இந்திய மயிலை நீல மயில் என்பர். இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பச்சை மயில் பர்மா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் காணப்படுகிறது.வெண்மை நிற மயில்களும் பரவலாகக் காணப்படுகிறது.

பச்சை நிற மயில் அழியும் அபாயத்தில் உள்ளது.இதே போல் இந்திய மயில்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.மயிலை ஆங்கிலத்தில் பீக்காக் என அழைக்கிறோம்.இது ஆண் மயிலை மட்டுமே குறிப்பதாகும்.ஆண் மற்றும் பெண் மயில் இரண்டையும் சேர்த்து பீபௌல்(Peapowl) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

இந்திய மயில்:

இது பிரகாசமான பெரிய கோழி இனப் பறவையாகும்.மயில்கள் தோகைக்காகவே பிரபலம் அடைந்தன.நீண்ட தோகையும்,கொண்டையும் கொண்டிருக்கும்.கொண்டை விசிறி போன்ற இறகுகளை உடையது.கண்ணுக்கு அடியில் வெள்ளை நிறப் பட்டை புருவம்போல் காணப்படுகிறது.நீண்ட கழுத்தும்,உறுதியான மார்பும் இருக்கிறது.ஆண் மயில் பெண் மயிலைவிட பெரியது.அதுமட்டும் அல்லாமல் பெண் மயிலைவிட ஆண் மயிலே அழகானது.

ஆண் மயில் வண்ணமயமாக இருக்கும்.இதன் மார்பும்,கழுத்தும் சற்று ஒளிரும் நீல நிறத்தில் இருக்கும்.ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருக்கும்.இது பெண் மயிலை கவர்ந்து இழுப்பதற்காக தோகையை விரித்தாடும்.சுமார் 200 நீண்ட தோகைகள் இதன் வால்பகுதியில் இருக்கின்றன.ஒவ்வொரு தோகையிலும் கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாக அனைவரையும் கவரும் வகையில் காட்சி தருகிறது.ஆண் மயில் தன் துணையை கவர்ந்து இழுக்க கார்மேகம் சூழ்ந்திருக்கும் சமயத்தில் தோகையை விரித்து ஆடும்.

பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும்,பளபளப்பான நீளமும்,பச்சை கலந்த சாம்பல் நிறமும் கொண்டிருக்கும்.பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது .மயில்களால் அதிக உயரம் பறக்க முடியாது.ஆகவே மரங்களில் ஏறி அமர்ந்திருக்கும்.மயிலின் குரல் கரடுமுரடாக இருக்கும். ஆனால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.பிஹூன்,பிஹூன் என்று கிரீச்சிட்டுக் கூவும் .இது பலவிதங்களில் கூவும். சருகுகளின்மீது நடக்கும்போதும்,பொழுது சாயும்போதும் ஒரு ஒலியும்,அதிகாலை விடியும் போது ஒரு விதமான ஒலியுடன் கூவும்.

மயில் கூடு கட்டி ,முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்.சருகுகளை ஒன்று சேர்த்து,லேசான பள்ளத்தை உண்டாக்கி அதில் முட்டை இடும்.நான்கு முதல் ஆறு முட்டைகளை இடும்.அரிதாக வேறு பறவையின் கூட்டிலும் முட்டை இடும்.மயில் தாவரங்கள் மற்றும் புழு,பூச்சிகளை சிறு பிராணிகளை உண்ணும். அத்திப்பழத்தை விரும்பி உண்ணும். கிழங்குகள், இலைகள்,தேன் ஆகியவற்றையும் உண்ணும். தவளைகள்,பாம்புகளைக் கண்டால் கொத்தி தின்று விடும்.

தேசியப் பறவை:

அரசர்கள் காலத்தில் பொன்னுக்குச் சமமாக மதித்தனர்.சாலமோன் மன்னனுக்கு இந்திய மன்னர்கள் மயில்களை அன்பளிப்பாக வழங்கினர்.மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து தன் நாட்டிற்கு மயில்களை கொண்டுச் சென்றார்.இதன்மூலம் மயில் ரோம் நாட்டுக்கும் மற்ற நாட்டிற்கும் மயில் பரவியது.இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மயில் தோகை அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மயிலின் அழகைக் கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக 1963 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.எனினும் மயிலை வேட்டையாடப்படுவதாலும்,அது வழித்தடத்தின் பரப்பளவு குறைவதாலும் இந்த இனம் அழிந்துகொண்டிருக்கிறது.விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை உண்பதால் இதனை கொல்லவும் செய்கிறார்கள்.மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என நம்புகிறவர்கள் உண்டு.இதனாலும் இதனைக் கொன்று உண்கின்றனர்.மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என்பது தவறான மூட நம்பிக்கை.ஆகவே மயில்களை பாதுகாக்க 1972 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை என்பதை மறந்து விடாதீர் !!!

7.தேசிய மலர்

இந்தியாவின் தேசிய மலர் தாமரை(Lotus).1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது.தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர்.ஏனெனில் தாமரை சேறு நிறைந்த,அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கின்றன.சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்பதற்குப் பொருத்தமாக உள்ளது.தாமரை மலர் தன்னைதானே தூய்மைபடுத்திக் கொள்கிறது எனக் கூறுவார்கள்.

இந்திய சமய தத்துவங்களில் தாமரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.இதனை நற்குணமாக இந்திய கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது.தாமரை மலர் கடவுள் லட்சுமியின் ஆசனமாக கருதப்படுகிறது.செல்வ வளத்தைக் குறிக்க இரு கைகளில் தாமரை ஏந்தி இருப்பது,வெள்ளைத் தாமரையில் சரஸ்வதி வீற்றிருப்பதாக கூறப்படுவது போன்றவை தாமரை மலருக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே. இதேபோல் பல தேவதைகளின் கைகளிலும் தாமரை இடம்பெற்றிருக்கும்.புத்தர் உருவிலும் தாமரையுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.தாமரை மலரை ஆன்மீகத்தோடு தொடர்புப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.பழங்கால கட்டிடக் கலைகளிலும்,சிற்பங்களிலும் தாமரை மலர் இடம் பெற்றுள்ளன.அது தவிர ராஜாக்களின் ஆட்சிக் காலத்தில் தாமரைச் சின்னம் பொறித்த நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன.ஒழுக்கம்,சாதனை,நீண்ட வாழ்க்கை நற்பண்புகளை தாமரை போதிக்கிறது என ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர்.

தாமரை:

தாமரை ஒரு நீர்வாழ்த்தாவரம்.இது பல்லாண்டுகள் வாழும் தன்மை உடையது. இதன் தாவரவியல் பெயர் நெலும்போ நூசிபேரா(Nelumbo nnucifera) என்பதாகும். நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே அதிகம் காணப்படும்.குறிப்பாக 25 முதல் 35° cc வெப்பநிலையில் நன்கு வளரும்.பண்டைய எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையோரம் பரவலாக வளர்ந்தது.எகிப்தியர்கள் இதனைப் புனிதமாக போற்றி வழிபாட்டிற்குப் பயன்படுத்தினர்.தாமரையின் பூக்கள்,இதழ்கள்போன்றவை அக்கால ஆயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகிறது.எகிப்திலிருந்து அசிரியாவிற்குப் பரவிய தாமரை அங்கிருந்து பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் பரவியது.

தாமரைக்கு மட்டத்தண்டு கிழங்கு உண்டு.இது சேற்றில் புதைந்து இருக்கும்.நீரின் மட்டத்திற்கு ஏற்ப நீண்ட காம்புடன் கூடிய இலைகள் நீரின்மீது மிதக்கும்.தாமரையின் இலையின்மீது தண்ணீர் ஒட்டாது.மழை பொழியும்போது இலையின் மீது தண்ணீர் பட்டு ஓடி விடும்.இதற்கு காரணம் இலைகளில் கெட்டியான மெழுகுப் பூச்சு உள்ளது.இது தூசு மற்றும் பாக்டீரியா போன்றவற்றை ஒட்டாமல் பாதுகாக்கிறது.இதனால் தாமரை இலை சுத்தமாகப் பளிச்சிடுகிறது.சேற்றில் அழுக்கு நீரில் வளர்ந்தாலும் இலையும்,பூவும் சுத்தமாகவே இருக்கும்.

ஆசியக் கண்டத்தில் தண்ணீர் தோட்டங்களில் தாமரை பெருமளவில் வளர்க்கப்படுகிறது.தாமரையின் விதைகள் பல ஆணடுகளுக்கு முளைக்கும் திறன் கொண்டவை.தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப் பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும்.இவ்விதைகள் மிகக் கடினமாக இருக்கும்.

வளர்ப்பு:

இது ஒரு சதுப்பு நிலத்தாவரமாகும்.இதை நமது வீடுகளில் வளர்ப்பதில் சிரமம் இல்லை.ஆனால் வளர்க்கும் முறை தெரிந்திருக்க வேண்டும்.விதைகளில் வளர்ப்பது மிகவும் சிரமம்.விதை கடினமானதாக இருப்பதால் விதையை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்துவிட வேண்டும்.இதனால் நீர் உள்ளே புகும்.அதனால் முளைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.விதையின் வெளிப்புற உறை கடினமாக இருந்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முளைப்புத் திறனோடு இருக்கும். நீரில் அப்படியே வைத்திருந்தால் முளைக்க பல ஆண்டுகள் ஆகும்.உடனே முளைக்க செய்வதற்காகத்தான் உப்புத்தாளில் தேய்க்க வேண்டும்.

விதையை உப்புதாளில் தேய்த்து நீரில் வைத்தால் அது 24 மணி நேரத்தில் இரண்டு மடங்கு பெரிதாக வேண்டும்.அப்படி ஆகவில்லை என்றால் மீண்டும் உப்புகாகிதத்தால் தேய்க்க வேண்டும்.24 மணி நேரத்தில் விதை 2 மடங்கு பெரிதாக வேண்டும். அப்படி ஆகவில்லை என்றால் மீண்டும் தேய்க்க வேண்டும்.விதையை நீரில் வைத்திருந்தாலே போதும்.

விதை முளைக்க உகந்த வெப்பநிலை 29-28° cc ஆகும்.இந்த வெட்பநிலையில் ஒரு வாரத்தில் விதை முளைத்துவிடும்.முதல் இலை வெளிவந்தவுடன் ஒரு சதுப்பான அடித்தளத்தில் அல்லது ஒரு தொட்டியில் நட வேண்டும்.நீர் 30 செ.மீ உயரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.நீர்த்தொட்டியின் அடிப்புறத்தில் சரளையாக இருந்தால் நல்லது. இதில் மீன்கள் இருந்தால் இந்த தாமரை நன்கு வளரும்.கோடைக் காலத்தில் இதனை குளத்திற்கு மாற்றலாம்.வீடுகளில் கான்கீரிட் தொட்டிகளில் வளர்க்கலாம்.

பயன்கள்:

தாமரை ஒரு மூலிகைத் தாவரம்.தாமரையின் அணைத்து பாகங்களும் உண்ணக் கூடியவை.விதையை உடைத்து உண்ணலாம்.தாமரை கிழங்கு,தண்டுகளை சமைத்து உண்ணலாம்.விதைகளை உலர்த்தி பாப்கார்ன்போல பொரிக்கப்பட்டு சாப்பிடலாம். மூன்கேக் போன்ற சீன இனிப்பு வகைகளில் தாமரை விதைப் பசை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.தாமரையின் கிழங்கும், விதையும் முகுந்த ஊட்டச்சத்து மிக்கவை.

கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.வைட்டமின் சி,மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.தாமரை மலரை நிழலில் உலர வைத்து,இதனை கஷாயம் செய்து குடிக்கின்றனர்.தாமரை விதையின் பருப்பை சாப்பிட்டால் இதயம் பலப்படும். சிறுநீரகங்கள் வலுப்படும்.

சித்தவைத்தியத்தைவிட ஆயுர்வேதத்தில் தாமரை அதிகம் பயன்படுகிறது.நமது நாட்டைப் பொறுத்தவரை தாமரையை ஒரு மூலிகையாகப் பார்ப்பதில்லை.அதனை ஒரு ஆன்மீக மலராகத்தான் பார்க்கின்றனர்.தாமரையை ஒரு மங்களப் பொருளாகவே பார்க்கின்றனர்.8.தேசிய பழம்

இந்தியாவின் தேசியக் கனி(National Fruit) மாம்பழம் (Mango) ஆகும். உலகிலேயே மக்கள் அதிகமாக உண்ணும் பழம் மாம்பழம் மட்டும்தான்.இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது.தமிழ் இலக்கியத்தில் மா,பலா.வாழை ஆகிய மூன்றையும் முக்கனிகள் எனக் கூறப்படுகின்றன.பழம் சாறு நிறைந்தது. பழமாகவும், பழச்சாறாகவும் மற்றும் காயாகவும்,பிஞ்சாகவும் பலவித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வேதங்களில் மாம்பழம் பற்றிய குறிப்புகள் உள்ளன.வேதங்களில் கடவுளின் உணவாகக் குறிக்கின்றன.மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானது எனக் கருதப்படுகிறது.இந்தியாவில் சுமார் கி.மு.4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன . கி.பி.1800 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் மரத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர்.

மாம்பழத்தில் சுமார் 35 சிற்றினங்கள் உள்ளன.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன.உலகிலேயே அதிகப்படியாக விளையக் கூடியதும்,அதிகப்படியாக உண்ணக்கூடிய பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். மாமரங்கள் பூமியின் மையப்பகுதியின் வெப்பமண்டல பிரதேசங்களில் அதிகம் வளர்கின்றன.இவற்றுள் இந்தியாவை தாயகமாக கொண்ட சிற்றினமான மாஞ்சிபெரா இண்டிகா(Manjifera indica) என்பதே உலகளவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வெவ்வேறு உருவத்தில்,அளவில்,நிறத்தில் நூறுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.மாம்பழத்தின் பெருமையை கவி காளிதாசர் (Kalidasar)கி.மு 4 ஆம் நூற்றாண்டில் தமது கவிதைகளில் புகழ்ந்து பாடியுள்ளார்.மாவீரர் அலெக்ஸாண்டரும் ,சீனப் பயணி யுவான் சுவாங் (Hieun Tsang) ஆகியோரும் மாங்கனியை சுவைத்து புகழ்ந்துள்ளனர்.16 ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் அக்பர்(Akbar) சுமார் ஒரு லட்சம் மாமரங்களை பீகாரில் உள்ள தர்பங்காவில் வளர்த்தார்.தற்போது இந்த இடம் லாகி பாஹ் என அழைக்கப்படுகிறது.இந்திய தவிர பாகிஸ்தானின் தேசியக் கனியும் மாம்பழமே.

மாமரம்:

மாமரம் 30 முதல் 40 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.இதன் இலை எப்போதும் பசுமையாக இருக்கும். நல்ல நிழல் தரும் மரம்,கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும்,வளர வளர பச்சையாக மாறுகின்றன.பூக்கள் கிளை நுனியில் கொத்துக்கொத்தாக இருக்கும்.பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள்வரை இருக்கும்.இவற்றில் பெரும்பாலான பூக்கள் ஆண் மலர்களே.மற்றவை இருபால் மலர்களாகும்.குறிப்பாக நிழலில் வளரும் பூக்கள் இருபால் மலர்களாக இருக்கும்.குளிர்ந்த தட்பவெட்பமும்,உலர்ந்த சூழலும் மாமரம் பூப்பதை தூண்டுகிறது.பூக்கள் சிறியதாகவும்,வெண்ணிறமாகவும்,குறைந்த மணத்துடனும் இருக்கும்.

பூக்கள் முடிந்த பிறகு 3 முதல் 6 மாதத்தில் காய்கள் கனிகின்றன.நீண்ட காம்புடன் மரக்கிளைகளில் கனிகள் தொங்கும்.மாங்காய் நன்கு முற்றியவுடன் அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சளாக மாறும்.பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளி நோக்கி மஞ்சளாக மாறும்.முழுவதும் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன.

பழுத்த மாம்பழம் மஞ்சள்,ஆரஞ்சு,சிகப்பு ஆகிய நிறங்களில் பிரகாசிக்கும்.தரத்தைப் பொறுத்து கனியின் நிறம் இருக்கும்.பொதுவாக சூரியனின் ஒளிபடும்பாகங்கள் சிவப்பாகவும்,மற்ற இடங்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கும்.பழத்தின் நடுவே கடின ஓடுடன் கூடிய ஒற்றை விதை இருக்கும்.ஓட்டினுள் விதைப் பருப்பு இருக்கிறது.ரகத்தைப் பொறுத்து இந்த ஓடு நார்களுடன் அல்லது வழுவழுப்பாக இருக்கும்.மாங்கொட்டை ரகத்திற்கு தகுந்தாற்ப் போல் அளவு மாறுபடும்.சில ரகங்களின் பழங்கள் 2.5 கிலோ கிராம் எடை கொண்டிருக்கும்.சுவையும் ரகத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும்.தற்போது பீகார் மாநிலத்தில் விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

பயன்கள்:

மா இலைகள் மங்கள நிகழ்ச்சிகள்,விஷேச நாட்கள்,வாயிலில் தோரணம் கட்ட பயன்படுகிறது.மாம்பழம் அப்படியே பழமாக உண்கின்றனர்.பழங்களை துண்டுகளாக்கி உண்பது இந்தியர்களின் வழக்கம்.பழத்தை கூழாக்கி மாம்பழச் சாறாக பருகுகின்றனர். சாருடன் சர்க்கரை சேர்த்து மிட்டாய் தயாரிக்கின்றனர்.பாலுடன் கலந்து குளிர்பானமாகவும் பருகுகின்றனர்.ஐஸ்கிரீம் தயாரிக்கவும் பயன்படுகிறது. மாம்பழத்தையும்,தயிரையும் கலந்து லஸ்ஸி தயாரிக்கின்றனர்.

மாங்காயும் உலகமெங்கும் உண்ணப்படுகிறது.மாங்காயைக் கொண்டு குழம்பு, ஊறுகாய்கள்,பச்சடிகள் தயாரிக்கின்றனர். மாங்காய் சட்னியை பல நாடுகளில் தயாரிக்கின்றனர்.மாங்காயை உலர்த்தி அதனை அரைத்து ஆம்ச்சூர் என்ற சமையல் பொடியைத் தயாரிக்கின்றனர்.சாம்பார் மற்றும் குழம்புகளில் புளிக்குப் பதிலாக இப்பொடியைப் பயன்படுத்துகின்றனர்.

மாம்பழம் சத்துகள் நிறைந்த பழம்.சாறு நிறைந்த இப்பழத்தில் வைட்டமின் A,C,D ஆகியவவை உள்ளன.தாதுப்பொருட்கள்,என்சைம்கள், ஆகியவையும் அடங்கியுள்ளன. இவை சீரணத்துக்கு உதவும்.மாம்பழ சதையில் 15 சதவீதம் சர்க்கரை, 1 சதவீதம் புரதம் உள்ளது. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாகவே இருக்கும்.சில மட்டுமே சற்று புளிப்பாக இருக்கும்.

மாங்காயில் பால் இருக்கும்.இதில் அமிலப்பொருட்கள் இருக்கின்றன.இது தோலில் பட்டால் சிலருக்கு எரிச்சலும்,கொப்புளங்களும் உண்டாகும்.தோலை உண்டால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுண்டு.மாங்காய் தோலில் பல ஆண்டி-ஆக்ஸிடண்ட் பொருட்கள் உள்ளன.ஆகவே தோலை பதனிட்டு ஆண்டி-ஆக்ஸிடாண்ட் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்திய மாம்பழங்களை உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும்.ரத்த இழப்பு நிற்கும்,இதயம் நலம் பெறும் என நம்பப்படுகிறது.மாங்காயில் மாவுச்சத்து அதிகம்..இதுதவிர சிட்ரிக்,ஆக்ஸாலிக் போன்ற அமிலங்களும் உள்ளன.இது பித்த நீர் சுரக்கவும்,வயிற்றை கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது.மிருதுவான முற்றாத காயில் பெக்டின் என்ற பொருள் உள்ளது.இது பேதியை குறைக்கும்.மாம்பழங்களில் மேலும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

9.தேசிய விலங்கு

இந்தியாவின் தேசியவிலங்கு (Natinal Animal) வங்காளப் புலி (Bengal Tiger) ஆகும்.இதனை ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) எனவும் அழைக்கின்றனர் .இதன் விலங்கியல் பெயர் பந்தேரா டைகரிஸ் (Panthera Tigris).இது இந்தியா, பாகிஸ்தான்,வங்காளதேசம்,நேப்பாளம்,பூடான்,மியான்மர் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.இவை வடமேற்குப் பகுதியைத் தவிர இந்தியா முழுமையிலும் காணப்படுகின்றன.இவை காடுகள்,வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன.

புலி பூனை இனத்தைச் சேர்ந்தது.உயர்நிலை ஊன் உண்ணி.இது ஆங்கிலத்தில் டைகர் என்று அழைக்கப்படுகிறது.இது கிரீஸ் என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டது.ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது.புலியின்மேலே பட்டைபட்டையாக கோடுகள் உள்ளன.இதன் மேல் உள்ள மஞ்சள் வண்ண மென்மயிர் தோலில் கருப்புப்பட்டைகள் காணப்படுகின்றன.

தேசியவிலங்கு:

புலி அழகான தோற்றம் உடையது.இதன் வலிமை,விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவையே இந்தியத் தேசியவிலங்கு என்னும் பெருமையை இதற்குப் பெற்றுத் தந்தன.பெங்கால் புலி இந்தியாவின் தேசியவிலங்காக 1973 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை சிங்கமே தேசிய விலங்காக இருந்தது. இதேசமயத்தில் பழங்காலத்திலயே புலி இந்தியாவின் சின்னமாக கருதப்பட்டு வந்தது. கி.மு.25இல் பயன்படுத்திய புலி முத்திரைகள் கிடைத்துள்ளன.சோழ மன்னர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் புலியை தங்களது அரசு சின்னமாக கடைப்பிடித்து வந்துள்ளனர்.

குணம்:

வங்கப் புலிகள் விலங்குகளை வேட்டையாடி உண்ணுகின்றன.இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல்,மான்,காட்டெருமை ,ஆடு,காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுகின்றன.இவை மரங்களில் ஏறி குரங்குகளையும் வேட்டையாடுகின்றன.பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன.வேட்டையாடிய இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றே உண்ணுகின்றன.இவற்றால் ஒரே சமயத்தில் 20 கிலோகிராம்வரை உண்ண முடியும். இப்புலிகள் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை.

புலிகள் வழக்கமாக மனிதர்களை உணவாக உண்பது கிடையாது.ஆனால் மனிதர்களைக் கொன்றுள்ளன. புலிகள் வாழிடங்களில் அழிக்கப்படும் பகுதிகள் ,மரம் வெட்டுதல் போன்ற இடங்களில் மனிதர்களை புலிகள் கொல்கின்றன.வயதான பல் விழுந்த,வேட்டையாட முடியாத புலிகள் மட்டுமே மனிதர்களைக் கொன்று உண்ணுகின்றன.மனிதர்களை உண்ணும் புலிகள் எனக் கருதப்படும் அனைத்துமே கண்டுபிடித்து சுட்டுக்கொல்லப்படுகின்றன.காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான தாக்குதல் சுந்தரவனக் காடுகளில் அதிகரித்துள்ளன.

காடுகளில் வாழும் ஆண் புலிகளின் எடை 205 முதல் 227 கிலோவாகவும்,பெண் புலிகளின் எடை சராசரியாக 141 கிலோ வரையிலும் இருக்கின்றன.இருப்பினும் வட இந்தியப் புலிகளும்,வங்கப்புலிகளும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளில் வாழக்கூடியவை,கொழுத்தவையாக உள்ளன.இங்கு காணப்படும் ஆண் புலிகளின் எடை சராசரியாக 235 கிலோவாக இருக்கும்.

ஆபத்து:

புலிகளுக்கு எப்போதுமே மனிதர்களால் ஆபத்து. புலிகளின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.புலிகளின் தோலுக்காக அவை வேட்டையாடப்படுகின்றன.புலிகளின் உடலில் இருந்து பல மருந்துகள் ஆசிய நாடுகளில் செய்கின்றனர்.இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.அதுதவிர அதன் உடல் பாகங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.புலிகள் ஊருக்குள் புகுந்து மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளைக் கொல்கின்றன.ஊர்மக்கள் புலிகளைக் கொல்கின்றனர்.20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகளவில் சுமார் ஒரு இலட்சம் புலிகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு மிகக் குறைந்தளவிலேயே வாழ்கின்றன.சுமார் 20000 புலிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் ஓரளவு அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 4580 வங்கப் புலிகளே காடுகளில் உள்ளன.இந்தியாவில் 3500-3750 ,வங்கதேசம் 300-440 ,நேபாளம் 150-440,பூடான் 50-140,சீனா 30-35 வரை உள்ளன.புலிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு :

இந்தியாவில் புலிகளை பாதுகாப்பதற்காக 1972 ஆம் ஆண்டில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் (Tiger Project) கொண்டுவரப்பட்டது.இது 1973 ஆம் ஆண்டுமுதல் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது.சுமார் 25 புலிகள் சரணாலயம் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டது.இதுவரை 27 புலிகள் காப்பகங்கள் இத்திட்டத்தின்கீழ் 37761 சதுர மைல் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1200 என்ற எண்ணிக்கையில் இருந்த வங்காளப் புலிகள் 1990 ஆம் ஆண்டுகளில் 3500 என மூன்று மடங்காக உயர்ந்தன.ஆனால் இதில் சந்தேகம் எழுந்தன,ஏனெனில் 2007 ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு இந்தியாவில் நடந்தது.12,பிப்ரவரி 2008 இல் அறிக்கை வெளியிடப்பட்டது.புலிகளின் எண்ணிக்கை 1411 எனக் குறிப்பிடப்பட்டது.இந்தளவிற்கு புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டதே காரணம் எனத் தெரியவந்தது.

பிடித்தமான விலங்கு:

அனிமல் ப்ளானெட்(Animal Planet) நடத்திய கணக்கெடுப்பில் நாயைவிடப் புலிகளே உலகின் மிகப் பிடித்தமான விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.உலகில் 73 நாடுகளிலிருந்து சுமார் 50000 பார்வையாளர்கள் வாக்களித்தனர்.புலிக்கு 21 சதவீதம், நாய் 20 சதவீதம்,டால்ஃபின்கள் 13 சதவீதம்,குதிரை 10 சதவீதம்,சிங்கம் 9 சதவீதம் ,பாம்புகள் 8 சதவீதம் மற்றும் யானை ,சிம்பன்சி ,உராங்குட்டான் என வாக்களித்தனர் .மக்கள் புலியை தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் புலிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.புலிகள் காக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்துள்ளனர்.

10.இந்திய தேசிய நூலகம்

அறிவை வளர்க்கும் ஆலயங்கள் என நூலகங்களை அழைக்கின்றனர். இந்தியாவின் தேசிய நூலகம் (National Library of India) கொல்கத்தாவில் உள்ளது.இதுவே இந்தியாவின் மிகப் பெரிய நூலகம். இது கொல்கத்தா நகரில் அலிபூர் என்னுமிடத்தில் இயங்கி வருகிறது.இந்நூலகம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

நூலக வரலாறு:

உலகளவில் நூலகம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் களிமண்ணைத் தகடுகளாக்கினர். அதில் தங்கள் கதைகளை கோட்டு ஓவியங்களாகக் கிறுக்கி கோவில்களிலும், அரண்மனைகளிலும் வைத்துப் பாதுகாத்தனர்.அதுதான் நூலகத்தின் தொடக்கக் காலமாக கருதப்படுகிறது.

எகிப்தியர்கள் கி.மு.300 ஆம் நூற்றாண்டுகளில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்தனர்.இதுவே முதல் நூலகமாக அறியப்படுகிறது.கி.மு.4 ஆம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்களை உருவாக்க முயற்சி எடுத்துள்ளார்.

அச்சுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்ட பின்னரே நூலகத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.கி.பி.18 ஆம் நூற்றாண்டில் பொது நூலகத்தின் தேவை அனைவராலும் உணரப்பட்டது.1897 ஆம் ஆண்டில் நூலகச் சங்கம் ஒன்று உலகில் உருவானது.இங்கிலாந்து நாட்டில் பொது நூலகச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதன்மூலம் இங்கிலாந்து முழுவதும் பொதுநூலகம் நடைமுறைக்கு வந்தது.இதேபோல் பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் பொது நூலகங்கள் துவங்கப்பட்டன.

பெரிய நூலகம்:

உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது.அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகமே உலகில் பெரியது.இது 1800 இல் தொடங்கப்பட்டது.இந்த நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகளும்,லட்சக்கணக்கான நூல்களும் உள்ளன.இதுதவிர ஒலி,ஒளி நாடாக்களும் உள்ளன.இதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போட்லி என்ற நூலகம் செயல்படுகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகம் ஆகும்.


இந்தியா:


கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் 1830 ஆம் ஆண்டில் பொது நூலகமாக செயல்படத் துவங்கியது.1903 ஆம் ஆண்டில் கர்சன்பிரபு என்பவர் இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பிரியல் நூலகத்தை இணைத்து தி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார்.இந்த நூலகமே 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்றுமுதல் இந்திய தேசிய நூலகம் என்ற பெயரில் செயல்படத் துவங்கியது.1990 ஆம் ஆண்டுவரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது 22 லட்சம் நூல்கள் ,மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது.இந்திய தேசிய நூலகத்தில் இந்தியாவின் அனைத்து மொழி நூல்களும் உள்ளன.இதுதவிர உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.வங்காள மொழி,இந்தி,தமிழ் ஆகிய மொழிகளைச் சேர்ந்த நூல்களே அதிகளவில் உள்ளன.இதேபோல் ரஷ்ய,அரபி,பிரெஞ்சு மொழிகளைச் சேர்ந்த பிற நாட்டு மொழி நூல்களும் அதிகளவில் உள்ளன.இந்தியாவில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களும் இங்கு சேர்க்கப்படுகின்றன.தமிழின் அறிய சுவடிகளும் இங்குள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு ஆவணங்கள்,ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் போன்றவையும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல அறிய நூல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


பிற நூலகங்கள்:

இந்தியாவின் மிகப் பழமையான நூலகம் கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது. இது கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகம் 12,டிசம்பர் 1856 இல் துவங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் செனெட் இல்லத்தில் செயல்பட்டு வந்தது.1912 ஆம் ஆண்டில் தனிக்கட்டிடத்திற்கு மாறியது.இது 1935 ஆம் ஆண்டுவரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்டது. தற்போது ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுகிறது.இங்கு தற்போது சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன.

இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து உருவாக்கிய நூலகம் டெல்லி பொதுநூலகமாகும்.1951 ஆம் ஆண்டில் இந்நூலகம் உருவாக்கப்பட்டது.இந்த நூலகமே ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகமாகும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் கண்ணிமரா பொதுநூலகம் பிரபலமானது.இது 1896 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு இந்தியாவின் அனைத்து வெளியீடுகளும், யுனெஸ்கோ வெளியீடுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆளுநராக இருந்த கல்வியாளர் கண்ணிமரா பிரபு 1890 ஆம் ஆண்டில் ஒரு நூலகத்தை சென்னையில் கட்ட முடிவு செய்தார்.1890 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பாந்தியன் திடலில் 6 லட்சம் ரூபாய் செலவில் நூலகத்திற்கான கட்டிடப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.கலை நுணுக்கங்களுடன் இக்கட்டிடம் 1896 இல் கட்டி முடிக்கப்பட்டது.கட்டிடம் கட்டி முடிப்பதற்கு முன்பே கண்ணிமரா பிரபு பணி உயர்வு பெற்று லண்டன் சென்று விட்டார்.இருப்பினும் அவரின் சேவையைப் போற்றும் வகையில் கண்ணிமரா என்ற பெயரையே நூலகத்துக்கு சூட்டினார்கள்.

ஆரம்பத்தில் 40 ஆயிரம் நூல்களோடு கண்ணிமரா நூலகம் தொடங்கப்பட்டது.தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் உள்ளன.இவற்றில் தமிழ்நூல்கள் மட்டும் 1 லட்சம் .உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கண்ணிமரா நூலகம்தான்.இதுதவிர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இதழ்கள், பிரெய்லி நூல்களும் உள்ளன.

ஆன்லைன் மூலம் சுமார் 4 லட்சம் புத்தகங்களின் தலைப்புகளில் பார்க்கும் வாய்ப்பு கண்ணிமரா நூலகத்தில் உள்ளது.இதுதவிர 5000 தமிழ் நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.இங்கு விக்டோரியா மகாராணிக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான அட்லஸ் உள்ளது.1781 இல் வெளியிட்ட கிறிஸ்தவ பிரச்சார நூல்களும் உள்ளன.குறிப்பாக 1600 ஆம் ஆண்டில் பருத்தி நூலிழை காகிதத்தில் அச்சிடப்பட்ட பைபிள் உள்ளிட்ட ஏராளமான பழைமையான நூல்களும் உள்ளன.இங்கு நிரந்தர புத்தகக் கண்காட்சியும் உண்டு.


11.தேசிய அருங்காட்சியகம்

இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் (National Museum) புதுடில்லியில் உள்ளது.இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமாக விளங்குகிறது.இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச்(Pre-history) சேர்ந்த பொருட்கள்முதல் தற்காலக் கலைப் பொருள்கள்வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ்(ministry Of Culture) செயல்பட்டு வருகிறது.இது ஜன்பாத்தும்,மௌலான ஆசாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்:

மிகவும் அரிதான அரும்பொருட்களை சேகரித்து அதனைப் பாதுகாத்து, மக்களின் காட்சிக்காக வைத்து மகிழ்ச்சி,கல்வி,ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.இது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்,மனிதன்,உயிரினங்கள், இயற்கை ஆகியவை கடந்து வந்த பாதைகளை அறிய உதவுகிறது.இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகங்கள் அறிவியல்,கலை,பண்பாடு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்துப் பாதுகாத்து வருகிறது. இப்பொருட்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன.பெரிய அருங்காட்சியகங்கள் யாவும் உலகின் பெரிய நகரங்களில் இயங்கி வருகின்றன. சிறியவர்கள், பெரியவர்கள், மாணவர்கள், குறிப்பிட்ட தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலதரப்பட்ட பார்வையாளர்களுக்காக விளக்கம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் பொருட்களை தொட்டுப் பார்க்க அனுமதிப்பதில்லை.வகைகள்:

அருங்காட்சியகங்களில் பல வகைபாடுகள் உள்ளன.நுண்கலைகள்,பயன்பாடு கலைகள்,கைப்பணி,தொல்லியல்,மானிடவியல்,ஒப்பாய்வியல்,வரலாறு,பண்பாட்டு வரலாறு,அறிவியல்,தொழில்நுட்பம்,இயற்கை வரலாறு, தாவரவியல், விலங்கியல், நாணயவியல் எனப் பல வகைபாடுகளுடன் பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.இது தவிர ஓவியங்கள், நவீன ஓவியங்கள்,வானூர்தி பயண வரலாறு,பிரபஞ்சவியல் என அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.மேலும் புதியபுதிய பிரிவுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

தேசிய அருங்காட்சியகம்:

இந்திய தேசிய அருங்காட்சியகம் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்டது.அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ஆர்.ராஜகோபாலாச்சாரி அவர்களால் ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது.பின்னர் 1955 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை முந்தைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டினார்.கட்டிடம் 1960 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இது 18,டிசம்பர் 1960முதல் அருங்காட்சியமாக மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய பொருட்கள் காட்சிக்கு உள்ளன.இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.இவை சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியாவின் பண்பாடு,கலை,வரலாறு,அறிவியல் ஆகியவற்றை விளக்குகின்றன. இங்கு தொல்லியல் பொருட்கள்,படைக்கலங்கள்,அழகுக் கலைப்பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் போன்றவையையும் உள்ளன.

மானிடவியல்,இன ஒப்பாய்வியல், கட்டிடக்கலை, நாணயங்கள், ஆபரணங்கள், நெசவு, பதப்படுத்திய மம்மிகள், பழங்கால விலங்குகளின் தொல்படிமங்கள் எனக் காட்சிக்கு வைக்கப்படுள்ளன.நாம் இதுவரை கண்டிராத,கேட்டறியாத பல பொருட்களை இங்கு காணலாம்.தொன்மையான கட்டிடங்கள்,சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்,தொழில்நுட்பவரலாறு,நாட்டுப்புற மக்களின் கலை,வரலாறு போன்றவற்றையும் கண்டு நமது பண்பாட்டு வரலாறுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர்,மைசூர் ஓவிய அரங்குகளும் உள்ளது.தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் பெரும்பாலும் மூன்று பிரிவுகளில் உள்ளன.தஞ்சாவூர் ஓவிய அரங்கில் உள்ள ஓவியங்கள் 1830 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சிவாஜி,நவநீத கிருஷ்ணனுடன் இருக்கும் ஓவியம்,19ஆம் நூற்றாண்டின் நடராஜர்,ராமர் பட்டாபிஷேகம்,இரண்டாம் சரபோஜி மன்னரின் தர்பார் ஆகிய ஓவியங்களும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பது சாத்தியமில்லை. அருங்காட்சியகத்தை திங்கட்கிழமை தவிர தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மக்கள் பார்வையிடலாம்.

12.தேசிய மரம்

இந்தியாவின் தேசிய மரம் (National Tree) ஆலமரம் (Banyan Tree) ஆகும்.இதன் தாவரவியல் பெயர் ஃபைகஸ் பெங்கலன்சிஸ்(Ficus bengalensis) என்பதாகும்.ஆலமரம் மிகப் பிரமாண்டமாக வளரக் கூடியது.பல ஆயிரம் ஆண்டுகள்வரை உயிருடன் வாழும்.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது.சாலை ஓரங்கள்,ஆலயங்கள்,மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகில் வளர்க்கப்படுகின்றன.கிராம வாழ்க்கையின் மையமாக ஆலமரம் விளங்குகிறது.ஊர்க்கூட்டங்கள் யாவும் ஆலமரத்தின் நிழலிலேயே நடக்கின்றன.

இம்மரம் நீண்ட வாழ்நாளைக்கொண்ட அழியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.மேலும் இந்திய புராணங்களிலும்,பழங்கதைகளிலும் ஒன்றிணைந்ததாக விளங்குகிறது.இது தமிழக நாட்டுக் கோவில்களில் தல விருட்சமான மரமாகக் கருதப்படுகிறது.ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டும் எனப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். பறவைகள்,மிருகங்களுக்கும் வாழ்வழிக்கிறது. மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் முக்கிய மரமாக இது விளங்குகிறது.

அலெக்சாண்டர் ஆலமரத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.இவரின் 7000 படைவீரர்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கி ஓய்வு எடுத்தனர்.தமிழ் உள்பட பல மொழிகளில் ஆலமரத்தைப் பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன.நாட்டுப்புறக் கதைகள்முதல் சினிமாக் கதைகள்வரை ஆலமரத்தைச் சுற்றி உருவானவை பல உள்ளன.இது போதி மரம் என புத்தமதத்தினரால் அழைக்கப்படுகிறது.

ஆலமரம்:

ஆலமரம் அத்திக் குடும்பத்தைச் சேர்ந்தது.மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டது.இது 20 முதல் 35 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது.மிகவும் பருத்த அடிமரத்தைக் கொண்டிருக்கும்.அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டரும் அதற்கு மேலும் இருக்கும்.மரத்தின் கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்கும்.விழுதுகள் தூண்போல் காட்சி தருகின்றன,கிளைகளைத் தாங்கி நிற்கும்.விழுதுகளை நாட்டின் ஒற்றுமைக்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.மிகப் பெரிய மரமானது சூரிய ஒளியைத் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கிறது.

ஆலமரம் நன்கு நிழல் தருவதால் இதனைக் கிராமங்களில் நடுகின்றனர்.ஆலமரம் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் தரைக்குள் நுழைந்து வேர்களாக மாறி விடுகின்றன.ஆலமரத்தின் அடிமரம் அழிந்து விட்டாலும் இதன் விழுதுகள் அதனைத் தாங்கிக் கொள்ளும்.விழுதுகள் ஆலமரம் போலவே செயல்படுகின்றன.ஆழமாக வேரூன்றி,விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பல ஆயிரம் உயிர்கள் வாழ இடம் தரும் மரமாக ஆலமரம் விளங்குகிறது.

இந்த மரம் பல ஏக்கர் நிலப்பரப்பு அளவில் விரிந்து படர்ந்து வளரும்.ஒரு மரமே ஒரு காடுபோல காட்சி தரும்.இதன் பழங்களை மனிதர்கள் உண்பதில்லை.இதன் தடித்த இலைகளை ஆடு,மாடுகள் உணவாக உண்கின்றன.இம்மரத்தின் விழுது கட்டை போன்று உறுதியானது.அது கூடாரக் கம்புகள்,வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது.ஆலமரப் பட்டை நாட்டு மருத்துவம்,சித்த மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலமரத்திலிருந்து கிடைக்கும் பால் ஒட்டும் தன்மை கொண்டது.இது இரப்பராகவும் பயன்படுகிறது.இந்தப் பாலை மூட்டு வலிக்குப் பயன்படுத்துகின்றனர்.பட்டை நீரிழிவு நோயைத் தீர்க்கும்.விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது.ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்துகின்றனர்.ஆலமரத்தின் கட்டைகளை காகிதம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இலை,கனி,பட்டை,பால் என ஆலமரத்தின் அனைத்து பகுதியுமே மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.

மிகப் பெரிய ஆலமரம்:

ஆலமரத்தின் தாயகம் இந்தியா.இந்தியாவிலிருந்து கொண்டுசென்று அமெரிக்காவிலும் நட்டுள்ளனர்.உலகிலேயே மிகப் பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ளது.கொல்கத்தா அருகில் உள்ள கௌரா என்னுமிடத்தில் ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் உலகின் மிகப் பெரிய ஆலமரம் உள்ளது.இதனை கிரேட் பேனியன்(The Great Banyan) என அழைக்கின்றனர்.இம்மரம் கிளைகள் படர்ந்து ஒரு சிறு வனம் போல் காட்சி தருகிறது.இம்மரத்தின் வயது 250 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுற்றுலா புத்தகங்களில் இம்மரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இம்மரம் 1884 மற்றும் 1886 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய புயலால் பாதிக்கப்பட்டது.அப்போது சில முக்கியமான கிளைகள் ஒடிந்தன.அதில் காளான் தொற்று ஏற்பட்டது.இதன் முக்கிய அடிமரம் முழுவதும் இற்றுப் போனது.இது 1925 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.இம்மரத்தில் அதிகப்படியான விழுதுகள் இருப்பதால் மரம் தாங்கி நிற்கிறது.முதன்முதலில் ஆலமரம் முளைத்து வளர்ந்த இம்மரத்தின் ஒரிஜினல் தண்டு தற்போது இல்லை.

மரத்தில் தோன்றிய விழுதுகள்,பெரிய பெரியத் தூண்களாக மாறி மரத்தின் கிளைகளை தாங்கி நிற்கின்றன.பந்தல் போட்டதுபோல் பல விழுதுகளால் மரத்தின் கிளைகளும்,இலைகளும் தாங்கி நிற்கின்றன.இம்மரம் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளது.அப்புறப்படுத்தப்பட்ட மரத்தின் சுற்றளவு தரையிலிருந்து 15.7 மீட்டர் உயரத்தில் 1.7 மீட்டர் இருந்தது.

இம்மரம் 14500 சதுர மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ளது.அதாவது 4 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.மரத்தின் இலை படர்ந்த மகுடம் ½ கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ளது.உயரமான கிளை 25 மீட்டர் உயரம்வரை உள்ளது.தற்போது 3300 விழுதுகள் மூலம் ஆலமரம் விரிந்து,பரந்து ஒரு காடுபோல காட்சி தருகிறது.

13.தேசிய நதி


இந்தியாவின் தேசிய நதி கங்கை (Ganga River) ஆகும்.இது இந்தியாவின் மிக நீளமான நதி.இதனை கேன்ஜஸ்(Ganges) என்றும் அழைப்பார்கள்.கங்கையை இந்துக்கள் புனித நதியாகக் கருதுகின்றனர்.கங்கையை ஒரு நதி என்று மட்டும் கூறி விட முடியாது.இது இந்திய நாடு முழுவதும் ஒன்றிணைக்கும் அம்சமாக உள்ளது.இது 2510 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது.

கங்கை நதி இமயமலையில் உற்பத்தியாகிறது.கங்கோத்திரி என்னும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப்பகுதியில் பாகீரதி என்ற பெயரில் உற்பத்தியாகிறது. இதன் பின்னர் அலகானந்தா,யமுனா,சன்,கெளதமி,கோசி,காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து பெரும் நதியாக உருவெடுக்கிறது.பிறகு உத்தரப்பிரதேசம்,பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று ஹூக்ளி,பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து முறையே மேற்கு வங்காளம் ,வங்கதேசம் வழியாகச் சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்குகிறது.இது வங்காள விரிகுடாவில் கடைசியாக கலக்கிறது.வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என்ற பெயரில் ஓடுகிறது.

கங்கையைச் சார்ந்து மனிதன் உள்பட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன.உலகிலேயே மிகவும் வளமான பகுதி கங்கை நிலப்படுகையாகும்.இங்கு அதிகமாக மக்கள் வாழ்வதோடு விவசாயம் அதிகம் செய்கின்றனர்.கங்கை பாய்ந்து செல்லும் பகுதி சுமார் ஒரு கோடி கி.மீ சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது.கங்கையின்மீது இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில் ஒன்று ஹரித்துவாரில் உள்ளது.மற்றொன்று பராக்காவில் உள்ளது.

கங்கை ஆற்றின் கரையோரம் ரிஷிகேஷ், ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி, பாட்னா,கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் அமைந்துள்ளன.கங்கைக்கரையில் அமைந்துள்ள பெருநகரங்களில் முக்கியமான சமய சடங்குகள் நடக்கின்றன.கங்கையின் பயணம் வங்காள விரிகுடாவில் சென்று கலப்பதற்கு முன்பாக பங்களாதேஷில் உள்ள சுந்தரவனச் சதுப்பு நிலத்தின் கழிமுகப் பகுதியில் இது அகன்று விரிவடைந்து காணப்படுகிறது.

மாசு:

கங்கை புனித நதி என்று கூறப்பட்டாலும் , இது உலகிலேயே அதிகம் மாசு அடைந்த ஒரு நதியாக உள்ளது.மலம்,பிளாஸ்டிக் குப்பைக்கூளங்கள்,பூ,மாலை,பாதி எரிந்த பிணங்கள் என கங்கையில் சேர்கின்றன.கங்கை நதிக்கரை ஓரத்தில் 90 சுடுகாடுகள் உள்ளன.பிணத்தின் உறவினர்கள் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும்போதே நதியில் தள்ளிவிடச் சொல்கின்றனர்.ஏனென்றால் இறந்தவர் அப்போதுதான் நேராக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என நம்புகின்றனர்.இதனை பி.பி.சிடாக்குமெண்டரியில் காணலாம்.

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது.இதன் அளவு 20 மில்லியன் காலனாகும்.நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக்கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.ஆண்டுதோறும் மோட்சத்துக்காக 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டு கொல்லப்படுகின்றன.இதன் விளைவாக 1927,1963 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் முக்கியமானது இந்தியாவில் மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் ஆயிரத்திற்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.மேலும் கங்கை நதிக்கரை நகரங்களில் வசிக்கும் மக்கள் பத்துக்கு மூன்று பேர் வீதம் நீர் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.


பீகாரில் துர்க்காபூர்,பொகாரோ,பிலாய்,டாடா ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும்,உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அமோனியா ,சயனைடு,நைட்ரேட் முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாக கலக்கின்றன.பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக, அந்த சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலைகளின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது அந்த கங்கையில்தான்.இவற்றை எல்லாம் விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு.கங்கை புனித நதி பாயும் பகுதிகளில்தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்தளவிற்கு கங்கைக்கரை ஓரம் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.(தி பயணியர் 27.7.1997).

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரிவாரி இறைத்துள்ளது.

காலையில் புனித கங்கையில் முழுக்கு, இரவோ மது,மாது, மாமிச விருந்து தடபுடல்கள்.சிரகான் இடைத் தேர்தலுக்காகக் கடுமையான பிரச்சாரத்தில் நாள் முழுவதும் ஈடுபட்ட பிரச்சாரக்காரர்கள் ஒரு பெருங் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருந்தனர்.இந்தப் பெருவிருந்து வேறு எந்த ஓட்டலிலும் நடைபெறவில்லை.கங்கையில் குளிக்கும் இடத்தில் இருந்த இரு தோணிகள் மற்றும் ஒரு பெரிய படகில்தான் அந்த விருந்து நடந்தது.மது,பீர்,கோழிக்கறி,புலவு,ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் மிகப் பொருத்தமாக இருந்தன என்று விலாவரியாக எழுதியது டைம்ஸ் ஆஃப் இந்தியா (விடுதலை தலையங்கம் 27-4-2013).கங்கையை புனித நதியாகக் கருதாமல் இவ்வாறு இதனை மாசு அடையச் செய்கின்றனர்.

புற்றுநோய்:

புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில்,தற்போது கங்கை நீரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.

இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயத்தில் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும் தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால் , அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.

இந்நிலையில் இந்த அளவுக்கு மாசடைந்து போயிருக்கும் கங்கை நீரில் , புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் புற்றுநோயை உண்டாக்ககூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.தேசிய புற்றுநோய் பதிவு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நாட்டின் பிறப்பகுதிகளில் வசிப்பவர்களைக் காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசயானமும்,குறிப்பாக உத்திரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதிப்படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் மேலும் கூறப்படுள்ளது.

தேசிய நதி:


கங்கை நதியைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் 4,நவம்பர் 2008 ஆம் ஆண்டில் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று தேசிய கங்கை நதி ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.இதன்மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் உருவானது.2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அரசு கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

14.தேசிய நீர்விலங்கு

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு டால்பின் (Dolphin)ஆகும்.டால்பின் என்றால் கடலில் வாழும் டால்பின் அல்ல .டால்பின்களில் பல இனங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஆற்றுநீரில் அதாவது நன்னீரில் வாழ்கின்றன.அந்தவகையில் இந்தியாவின் கங்கை நதியில் டால்பின்கள் வாழ்கின்றன.இதனை கங்கை டால்பின்கள் (Gangetic Dolphin) என்கின்றனர்.இதன் விலங்கியல் பெயர் பிளாடானிஸ்டா கேன்ஜிட்டிக்கா(Platanista gangetica) என்பதாகும்.கங்கை டால்பினை இந்தியாவின் தேசிய நீர்விலங்காக (National Aquatic Animal) 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அறிவிக்கப்பட்டது.இந்த கங்கை டால்பின் மட்டுமே சுத்தமான மற்றும் நன்னீரில் வாழக்கூடிய டால்பின் ஆகும்.

டால்பின்:

டால்பின்களை தமிழில் ஓங்கில் என்கின்றனர்.இது நீரில் வாழும் ஒரு பாலூட்டி.சுமார் 40 இனங்கள் இதில் உள்ளன.வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது.அதன் நுனி கூர்மையாய்,விளிம்பில் சுழியுடையதாக இருக்கிறது . டால்பின்கள் 1.2 மீட்டர் நீளம்முதல் 9.5 மீட்டர்வரை உள்ளன.இவற்றின் எடை 40 கிலோமுதல் 10 டன்வரை உள்ளன.இவை மீன்களை உணவாக உண்கின்றன. அனைத்து டால்பின் இனங்களும் ஊன் உண்ணிகளே.இவை உலகம் முழுவதும் ஆழம் குறைவான கடல்பகுதிகளில் வாழ்கின்றன . இதன் சராசரி வயது 20 ஆண்டுகள்.

டால்பின்கள் அறிவு வாய்ந்தவை.இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.இதற்கு மூளை பெரியதாக உள்ளது.அதே சமயத்தில் சிக்கலான அமைப்பு கொண்டது. பாலூட்டிகளுக்கு முடிகள் இருப்பதுபோல் டால்பின்களுக்கு உடலில் முடி கிடையாது. பிறப்பதற்கு முன்பு அல்லது பிறந்த பின்பு அலகைச் சுற்றி ஒரு சில முடிகள் மட்டுமே இருக்கும்.நீரில் எளிதாக நீந்திச் செல்லும் வகையில் இதன் உடல் நீள் வடிவில் உள்ளது.சில டால்பின் இனங்களுக்கு 250 பற்கள்வரை முளைக்கும்.டால்ஃபின்கள் தங்கள் தலைக்குமேல் ஒரு உறிஞ்சும் துளைமூலம் மூச்சு விடுகின்றன.இதன் மூச்சுக்குழாயானது மூளையின் பின்புறம் உள்ளது.

டால்பின்கள் பகுத்தறிவோடு வாழும் விலங்கு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மனிதனிடம் பழகும் நாய்,யானை போன்ற விலங்குகளைப் போலவே டால்பின்களும் மனிதனிடம் நெருக்கமாக பழகுகின்றன.கடல் டால்பின்களை பயிற்சியளித்து மனிதர்கள் பயன்படுத்துகின்றனர்.அமெரிக்காவில் டால்பின்களை உளவு பார்க்கும் பணிக்கும் பயன்படுத்துகின்றனர்.

டால்பின்கள் சோனார்(Sonar Sensesense) எனப்படும் ஒலியலைகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன.குறிப்பாக நீரில்வாழும் பாலூட்டிகளில் டால்பின்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பண்பு உண்டு.ஒலியலைகளை உணர்வதன் மூலமாகவே இவை இரையைத் தேடுகின்றன. டால்பின்களால் 2 லட்சம் ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ராசோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும்.இதற்கு காரணம் இவைகளுக்கு பார்வைக் குறைபாடு உள்ளது.ஆகவே இக்குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.மனிதர்களின் காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தியைப் பெற்றுள்ளன.ஆனால் டால்பினின் கேட்கும் சக்தி மனிதர்களைவிட 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உள்ளது.

ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சமிக்கை ஒலியை எழுப்புகின்றன . மனிதர்களின் கைரேகையானது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுவேறாக இருக்கும் . அதுபோலவே டால்ஃபின்கள் சமிக்கை ஒலியும் வேறுபாடுடன் தனித்தன்மை கொண்டதாக உள்ளது.கங்கை டால்ஃபின்கள்:

கங்கை டால்பினை குருட்டு டால்பின்கள் எனவும் அழைக்கின்றனர்.ஏனென்றால் இதற்கு பார்வைத்திறன் மிகக் குறைவு.சில டால்பின்களுக்கு கண்களே தெரியாது.இதன் மேல்,கீழ் தாடைகளில் பற்கள் உண்டு.அவை வெளியே தெரியும். உடல் தடித்தும்,வெளிறிய சாம்பல் மற்றும் பழுப்பு நிற தோல் நிறத்தில் காணப்படுகின்றன.இதன் நெற்றி உயர்ந்து புடைத்து இருக்கும்.இதில் மிகச் சிறிய கண்கள் உள்ளன.பெண் டால்பின் ஆண் டால்ஃபினைவிடப் பெரியது.

இவை சுவாசிக்கும்போது ஒருவித ஓசை வெளிப்படுகிறது.இதன் ஒலியைக்கொண்டு உள்ளூர் மக்கள் இதனை சூசு(Susu) என அழைக்கின்றனர்.கங்கை நதியில் வாழும் டால்பின்கள் கடலில் வாழும் டால்பின்களைவிட உருவம்,அளவு,குணம் போன்ற பண்புகளில் முழுவதும் மாறுபட்டு உள்ளன.

இந்தியாவில் சிந்து,கங்கை,பிரமபுத்திரா ஆகிய நதிகளில் டால்பின்கள் வாழ்கின்றன.இந்தியா தவிர கங்கை நதி டால்பின்கள் நேபாளம்,பூடான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நதிகளில் வாழ்கின்றன.கங்கையில் வாழும் டால்பின்கள் சூசு என்றும்,சிந்து நதியில் வாழும் டால்பின்கள் புலான் என்றும் அழைக்கப்படுகின்றன.

கங்கை டால்பின்கள் நீண்ட மூக்கோடு பெரிய தலையைக்கொண்டுள்ளன.இது 8 அடி நீளம்வரை இருக்கும்.இவை சுமார் 100 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.இவற்றின் மேல் மற்றும் கீழ் தாடையில் 28 கூரிய பற்கள் உண்டு.இவை பாலூட்டி இனம் என்பதால் மனிதனைப்போல் நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன.சுவாசிப்பதற்காக 30-50 நொடிகளுக்கு ஒரு முறை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து செல்லும்.

டால்பினின் கர்ப்பகாலம் 9 மாதங்கள்.புதியதாக பிறக்கும் குட்டியானது சுமார் 65 செ.மீ நீளம்வரை இருக்கும்.குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலைக் குடிக்கும்.சற்று வளர்ந்த பிறகு சிறு மீன்கள்,இறால் போன்றவற்றை உண்ணும்.இந்தவகை டால்ஃபின்கள் சுமார் 35 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

ஆபத்து:

கங்கை டால்பின்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன.கங்கையில் 600, பிரமபுத்திரா நதியில் 400 என்கிற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.இவைகளுக்கு பார்வைக்குறைபாடு உள்ளதால் எதன் மீதோ மோதி இறக்கின்றன.மனிதர்கள் பயன்படுத்தும் படகுகள்,மீன் வலைகளில் தெரியாமல் மாட்டிக் கொண்டு உயிர் இழக்கின்றன.அதுதவிர நீர்மாசு அடைதல்,பாலம் கட்டுதல்,அணை கட்டுதல்,தடுப்பு வெளி அமைத்தல் போன்ற காரணங்களாலும் டால்பின்கள் இறக்கின்றன.

கங்கை டால்பின் வேகமாக அழிந்து வரும்(Endangered) இனமாக உள்ளது.இதனை பிரிவு 1 என்ற பட்டியலில் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 (Wildlife PProtection Act) இன்படி இதன் மாமிசத்தை உண்ணவோ, வேட்டையாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக டால்பின்களின் மீன் எண்ணைக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இதனைக் கொல்பவர்கள்மீது கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை தண்டனை வழங்கப்படுகிறது.இருப்பினும் திருட்டுத்தனமாக வேட்டை நடக்கிறது.

கங்கை டால்பின்கள் வேகமாக அழிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு டால்பின்களை பாதுகாக்க அதனை தேசிய நீர்விலங்காக 2009 ஆம் ஆண்டில் அறிவித்தது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி,மீதி இருக்கும் டால்ஃபின்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

15.தேசிய விருது

இந்தியாவில் குடிமக்களுக்கு தேசிய விருதுகள் (National Award) வழங்கப்படுகிறது.தேசிய விருதுகளில் முதன்மையானது பாரத ரத்னா (Bharat Ratna) .இதற்கடுத்து இரண்டாவது உயரிய விருதாக வழங்கப்படுவது பத்ம விபூசண்(Padma Vibhushan)விருதாகும்.இந்தியாவில் மிகச் சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.இதுதவிர பிற துறையைச் சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கும் வகையில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது.

பாரத ரத்னா என்பதற்கு இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள்.ஒருவரை புகழ்வதற்கு இதைவிட சிறந்த வார்த்தை தேவையில்லை என்றே சொல்லலாம்.இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.விருது பெற்றவர் தங்களின் பெயருக்கு முன்போ அல்லது பின்போ பாரத ரத்னா என்கிற அடைமொழியை போட்டுக்கொள்ளக்கூடாது என விதி 18(1) கூறுகிறது.அப்படி போட்டுக்கொள்ள விரும்பினால் ,ஆசைப்பட்டால் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசிய அளவில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தேசிய விருது வழங்குவது என 1954 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.இதற்காக பாரத ரத்னா என்பது 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்விருது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரையறை உருவாக்கப்பட்டது.ஒரு வட்டவடிவமான தங்கப்பதக்கத்தில் சூரிய சின்னமும் ,பாரத ரத்னா எனவும் எழுதப்பட வேண்டும்.தங்கப்பதக்கம் 35மி.மீ வட்டம் கொண்டிருக்க வேண்டும்.பாரத ரத்னா என்பது இந்தி மொழியில் எழுதப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.எழுத்திற்குக் கீழே மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும்.

பதக்கத்தின் பின்புறம் அரசு முத்திரையும்,தேசிய வாசகமும் (Motto) இடம் பெற வேண்டும்.இதப் பதக்கம் வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும்.இதுபோன்று ஒரு விதியை உருவாக்கினர்.ஆனால் அதன்படி பதக்கம் தயாரிக்கப்படவில்லை.ஆனால் 1955 ஆம் ஆண்டில் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

பாரத ரத்னா விருதானது ஒரு தங்கப்பதக்கம்.அரச மர இலையில் சூரியனின் உருவமும்,பாரத ரத்னா என்ற சொல் தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது.பாரத ரத்னா விருதினை முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் பெற்றவர்கள் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சக்கரவர்த்தி இராஜகோபாலலாச்சாரி, சர் சி,வி.இராமன் ஆகியோர் ஆவர்.

பாரத ரத்னா விருது மகாத்மா காந்திக்கு வழங்கப்படவில்லை.ஏனென்றால் 1954 ஆம் ஆண்டில் இருந்த சட்டப்படி மரணம் அடைந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது.ஆனால் 1955 ஆம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.அதன்படி மரணம் அடைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்பதாகும்.அதன்பின் 10 நபர்களுக்கு அவர்கள் இறந்ததற்குப் பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை இந்தியர்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்கிற விதிமுறை எதுவும் இல்லை.ஆகவே வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் பிறந்து இந்தியாவின் குடியுரிமை பெற்று மக்களுக்கு சிறந்த சேவை புரிந்த அன்னை தெரெசாவுக்கு 1980 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இதைத் தவிர இந்தியர் அல்லாத இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.கான் அப்துல் கபார் கானுக்கு 1987 ஆம் ஆண்டிலும்,தென்னாப்பிரிக்க விடுதலைக்காகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990 ஆம் ஆண்டிலும் விருது வழங்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மறைவிற்குப் பின்பு 1992 ஆம் ஆண்டில் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.ஆனால் சில சட்டச் சிக்கல் காரணமாக இவ்விருது திரும்ப பெறப்பட்டது.இவ்விருது 2014 ஆம் ஆண்டுவரை 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டில் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்ம விபூசன்:

பத்ம விபூசன் என்பது ஒரு தங்கப்பதக்கமும்.இத்துடன் ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாக விளங்கும் ஒருவருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுவரை 294 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.16.தேசிய பாரம்பரிய விலங்கு

இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு (National Heritage Animal) என்பது ஆசிய யானை (Asian Elephant)ஆகும்.இதன் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவே இதனை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளனர்.யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத் துறை அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று அறிவித்தது.இந்திய கலாச்சார வரலாற்றைப் பொறுத்தவரை யானையைத் தனியாக பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்ட யானை சமீப காலமாக அழிந்து வருகிறது.நாடு முழுவதும் 29000யானைகள் மட்டுமே உள்ளன.இதனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது.புலிகளைப் பாதுகாப்பது போல் யானைகளையும் சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டும் என யானை திட்டக்குழு முடிவு செய்தது.இக்குழு தங்களின் பரிந்துரையை வனவிலங்கு வாரியத்திடம் ஆகஸ்ட்,2010 இல் சமர்ப்பித்தது.வனவிலங்கு வாரியம் இதனை ஏற்றுக்கொண்டு தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைத்தது.இதனால் தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 25000 யானைகள் காட்டிலும்,3500 யானைகள் மிருகக் காட்சி சாலை,கோவில்கள்,குறிப்பாக கேரளக் கோவில்கள் மற்றும் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

யானை:

மனிதர்கள் வியந்து பார்க்கப்படும் ஒரு விலங்கு யானை.யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டது.யானையே நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது.இது தாவர உண்ணி.இது சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.யானை மிக வலிமையானது.மனிதர்களைத் தவிர யானையை யானையை எந்த விலங்கும் வேட்டையாடுவது கிடையாது.

யானைகளில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் இவற்றிற்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன.ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. ஆப்பிரிக்க யானையின் காது மிகப் பெரியது.ஆண்,பெண் ஆகிய இரண்டும் தந்தங்களை கொண்டிருக்கின்றன. முதுகுப்புறம் தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும்.இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு நீட்சிகள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்கள் இருக்கும்.பின்னங்கால்களில் மூன்று நகங்கள் இருக்கும்.

யானைகள் 16 மணி நேரம் உணவு தேடுகின்றன.இதற்குக் காரணம் இவற்றின் செரிமானத்திறன் மிகவும் குறைவு.எனவே உண்ணும் உணவில் 40 சதவீதம் மட்டுமே செரிக்கப்படுகிறது.எனவே அதிக உணவை உட்கொள்ள வேண்டும்.நன்கு வளர்ந்த யானை தினமும் 140-270 கிலோவரை உணவு உட்கொள்கின்றன.

யானைகளில் ஆண் யானையானது உயரமாக இருக்கும்.இது 3 மீட்டர் உயரமும்,6000 கிலோ எடையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் மிகவும் தடிப்பானவை.இருப்பினும் தோல் மெத்தென இருக்கும்.யானைக்கு நான்கு கால்கள் தூண்போல இருக்கும்.பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் நெடுங்குத்தான மலைமீது இதனால் எளிதாக ஏற முடியும்.

யானைக்கு துதிக்கை இருக்கும்.மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சம் துதிக்கையே.துதிக்கை என்பது நீண்ட மூக்குதான்.துதிக்கையின் மூலமாக யானை மூச்சு விடும்.துதிக்கையின் நுனியில் மூக்குத்துளைகள் உள்ளன.அது தவிர விரல் போன்ற நீட்சியும் இருக்கின்றன.இது மிகவும் உணர்வுள்ளது.விரல் நீட்சியால் சிறிய குண்டூசிகளைக் கூட இதனால் எடுக்க முடியும்.துதிக்கையால் பெரிய பெரிய மரங்களைக்கூடத் தூக்க முடியும்.துதிக்கையானது நாலாபுறமும் எளிதில் வளையக் கூடியது.இதில் சுமார் 40000 தசைகள் உள்ளன.நீர் பருகுவது,உணவை எடுப்பது,பகை விலங்குகளை தாக்குதல் ஆகிய அனைத்திற்கும் துதிக்கையையே யானை பயன்படுத்துகிறது.ஆசிய யானை:

ஆசிய யானையை இந்திய யானை என்பர்.இதன் விலங்கியல் பெயர் எலிஃவாஸ் மேக்சிமஸ் என்பதாகும்.இவை இந்தியா,இலங்கை,இந்திய சீனத் தீபகற்பம் போன்ற இடங்களில் அதிகம் வாழ்கின்றன. இந்தோனேசியாவில் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.ஆசிய யானைகளின் காதுகள் ஆப்பிரிக்க யானையைவிடச் சிறியவை.வளர்ந்த யானை காதுகளின் ஓரம் வெளிப்புறமாக மடிந்து இருக்கும்.இவை 7 முதல் 12 அடி உயரம் வரை வளர்கின்றன.சுமார் 3000 முதல் 5000 கிலோவரை எடை கொண்டவையாக உள்ளன.

யானைகளுக்குத் தந்தம் இருக்கும்.இது கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும்.ஆசியப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு.ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும்.துதிக்கையானது மேலுதடும் ,மூக்கும் நீண்டு உயர்வானது.துதிக்கையின் நீளம் 1.5 முதல் 2 மீட்டர்வரை இருக்கும்.துதிக்கையில் ஏறத்தாழ 60,000 தசைகள் உள்ளன.யானைக்கு அதன் துதிக்கையே மிக முக்கியமானது.ஆசிய யானையின் துதிக்கையின் நுனியில் ஒரேயொரு விரல் நீட்சி மட்டும் இருக்கும்.முன்னங்கால்களில் 5 நகங்களும் ,பின்னங்கால்களில் 4 நகங்களும் இருக்கின்றன.யானையின் துதிக்கையானது பல்வேறு பொருட்களைப் பற்றி எடுக்கவும்,பல்வேறு விதமான வேலைகளை செய்யவும் பயன்படுகிறது. தும்பிக்கையில் ஏறத்தாழ 4 லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும்.

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகப் பெரியது.நினைவாற்றலும் ,புத்திசாலிகளாகவும் யானைகள் இருக்கின்றன.அன்பு காட்டினால் 10-20 ஆண்டுகள் ஆனாலும் மறப்பதில்லை.யானைகள் 60 கட்டளைகளைப் புரிந்துகொள்ளும். யானைகள் தமக்குள் பேசிக்கொள்கின்றன.முனகல் மூலமாகவும்,உரக்கப் பிளிறுதல் மற்றும் பலவித ஓசைகள் மூலம் செய்திகளை பரிமாறிக் கொள்கின்றன.யானைகள் மிகச் சிறந்த கேட்கும் திறனையும், மோப்பத்திறனையும் பெற்றுள்ளன.தண்ணீர் இருக்கும் இடத்தை 5 கி.மீ தொலைவிலிருந்தே வாசனை மூலம் தெரிந்து கொள்கின்றன. யானை ஒரு நாளைக்கு 350 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.24 மணி நேரம் தொடர்ந்து தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உயிரை விட்டுவிடும்.

யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.நோயுற்ற யானைக்கு தண்ணீரையும் , உணவையும் எடுத்து வந்து ஊட்டும்.நோயுற்ற யானையை தடவிக் கொடுத்து ஆறுதல்படுத்தும்.யானை தன்னுணர்வு கொண்டவை.யானைகள் கண்ணாடி முன் நின்றால தன்னை அடையாளம் கண்டு கொள்கின்றன.

ஆசியக் கண்டத்தில் 60 சதவீத யானைகள் இந்தியாவிலேயே வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் யானைகள் உள்ளன.யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. யானைகள் இல்லாத இந்தியாவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆகவே நமது தேசிய பாரம்பரிய விலங்கான யானையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

17.இந்திய ரூபாயின் குறியீடு

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் உள்ளன.அமெரிக்காவின் பணத்திற்கு டாலர்,இங்கிலாந்து நாட்டின் பணம் பவுண்டு,ஜப்பானுக்கு யென்,ஐரோப்பிய நாடுகளில் யூரோ எனக் குறியீடுகள் உள்ளன.அதுபோல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு (Indian Rupee Sign ) உள்ளது. இதன்``மூலம் அமெரிக்கா,பிரிட்டன்,ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில் ரூபாயின் குறியீடு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய்:

இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பணத்தினை ரூபாய் என்று அழைக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கியே ரூபாயை வெளியிடுகிறது.இந்தியாவில் பெரும்பாலும் ருபீ, ரூபாய்,ரூபயி போன்ற வார்த்தைகளில் அழைக்கின்றனர்.அதே சமயத்தில் மேற்கு வங்காளம்,அசாம்,ஒரிசா போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் பணத்தை டாக்கா என்ற பெயரில் அழைக்கின்றனர்.உலகளவில் Rs. அல்லது gINRINR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்தது. INR என்பது இந்திய ரூபாயின் எஸ் 4217 குறியீடு.

குறியீடு:

இந்திய ரூபாய்க்கான குறியீடு ஒன்றை தேர்வு செய்வதற்காக 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்தது.இப்போட்டியில் 3331 நபர்கள் கலந்து கொண்டு ரூபாய்க்கான குறியீடுகளை தயாரித்து அனுப்பினர்.இதில் 5 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டன.இந்த 5 குறியீடுகளில் சிறந்த குறியீடு ஒன்றை 2010 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று தேர்வு செய்தனர்.

இந்திய ரூபாயின் புதிய குறியீடு தேவநாகரி (இந்தி) எழுத்தான ( ` -`RA) ````மற்றும் ரோமன் எழுத்தான RR(ஆர்) ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் “ர” வர்க்கத்தின் குறியீட்டையும்,ஆங்கில எழுத்து “RR” ஐயும் பிரதிபலிக்குமாறு உள்ளது.மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு(Sleeping Line) சேர்க்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் R என்ற எழுத்தின் பாதியில் அதன்மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது.இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர் மும்பை ..டி முதுகலைப் பட்டதாரி மாணவர் டி.உதயகுமார் (D.Udayakumar) ஆவார்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்களில் குறியீடுகள் போட்டியில் கலந்து கொண்டன.இதில் உதயகுமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது.இதற்காக இவருக்கு 2.5 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இந்தப் புதிய குறியீடுக்கு மத்திய அமைச்சரவை 15,ஜூலை 2010 இல் ஒப்புதல் அளித்தது.தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி அமைச்சரவையின் முடிவை வெளியிட்டார்.

இந்தப் புதிய குறியீடு இந்திய ரூபாயை இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாக தெரியப்படுத்துவதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், நேபாளம்,இலங்கை,இந்தோனேசியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கின்றனர்.இப்போது வெளிவந்துள்ள இந்திய ரூபாயின் குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.

உதயகுமார்:

இந்திய ரூபாயின் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.இவர் 10,அக்டோபர் 1978 ஆம் ஆண்டில் பிறந்தார்.இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.உதயகுமாரின் தாயார் பெயர் ஜெயலட்சுமி.இவரின் பெற்றோர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வருகின்றனர்.

உதயகுமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜூனியர் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.அதன் பிறகு மும்பை ..டி யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலைப்பட்டம் பட்டம் பெற்றார்.அங்கு பி.எச்டி பட்டமும் பெற்றார்.

இந்திய ரூபாயின் அடையாளக் குறியீடு தேர்வு செய்யப்பட்டது கண்டு உதயகுமார்