விண்வெளியில் ஆய்வு நிலையம்

 

 

 

 

 

ஏற்காடு இளங்கோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மின்னூல்

 

 

என்னுரை

 

        மனித குல வரலாற்றில் மனிதன் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறான். தான் வாழும் பூமியில் மட்டுமே சாதனைகளைப் படைத்து வந்த பின்னர் பூமியைக் கடந்து விண்வெளிக்குச் சென்றது அவனுடைய சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. விரைவாக வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் மனிதன் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தான். இதன் மூலம் ஒரு விண்வெளி சகாப்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து மனிதன் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்தான். இத்துடன் முடிந்து விடாமல் செவ்வாய் உள்பட மற்ற கிரகங்களுக்கும், கிரகங்களின் சந்திரன்களுக்கும், ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி ஆய்வை மேற்கொண்டு வருகிறான். சூரியனின் சுற்றுப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி சூரியனையும் ஆய்வு செய்துள்ளான்.

          விண்வெளி என்பது மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடம். அங்கு வாழ்வதற்கான சூழலைக் கொண்ட விண்கலங்களைத் தயாரித்து, பூமியைச் சுற்றிக் கொண்டே ஆய்வுகளைச் செய்தான். பின்னர் நிரந்தரமாக விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக விண்வெளி நிலையத்தை விண்வெளியில் கட்டினான். விண்வெளியில்  ஒரு நிலையத்தைக் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. விண்வெளியில் ஒரு விண்வெளி நிலையத்தை மனிதன் 12 ஆண்டுகளாக கட்டி வருகிறான். இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கப் போகின்றன.

          பிரபஞ்சம் பயங்கர வேகத்துடன் விரிவடைந்து கொண்டே செல்கிறது. விண் பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருட்கள் விலகிச் செல்வதற்கு ஒரு வேளை கண்ணுக்குத் தெரியாத இருள் ஆற்றலாக இருக்கலாம் என வானிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றல் பற்றிய ஆய்வு சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்து வருகிறது.

          இந்தப் புத்தகத்தில் விண்வெளிப் பயணம் எப்படித் தொடங்கியது, விண்வெளியில் வீரர்கள் புரிந்த சாதனைகள், விண்வெளி நிலையங்கள், அவற்றின் பங்களிப்புகள், விண்வெளியில் வாழ்தல் போன்ற விபரங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இப்புத்தகத்தில் மூலம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி எப்படி இதனைச் சாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்; விண்வெளி சகாப்தத்தின் மூலம் மனித குலம் புரிந்த சாதனைகளைத் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், விண்வெளியைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் இந்த புத்தகம் ஆர்வத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.

          இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவிகள் புரிந்த எனது மனைவி திருமிகு. . தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றி. இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும், புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. . இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. மேலும் இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமதி. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

             வாழ்த்துக்களுடன்

                                                                               ஏற்காடு இளங்கோ

 

 

 

 


 

பிரபஞ்சம்

          பிரபஞ்சம் எனப்படும் பேரண்டம் எல்லையற்றது. அது பல விந்தைகளைக் கொண்டது. பிரபஞ்சம் எப்போதும் இடைவிடாது, ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அது தொடர்ந்து விரிவடைந்து கொண்டும் இருக்கிறது.

          பிரபஞ்சத்தின் தொடக்கம் எப்போது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரு புதிராகவே இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது பற்றி பல வானவியல் அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறி வந்த போதிலும், இப்பொழுது பெரு வெடிப்புக் கொள்கையைத்தான் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

          பிரபஞ்சம் எப்போது தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க வானவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர். பிரபஞ்சத்தின் தோற்றம் என்பது சுமார் 2000 கோடி ஆண்டுகளுக்கு முன்புஇருக்கலாம் என கணிக்கப்படுகிறது. பெரு வெடிப்பு அப்போதுதான் நிகழ்ந்தது. பெருவெடிப்பு நிகழ்ந்து 3 லட்சம் ஆண்டுகள் வரை எந்த சலனமும் இல்லாமல் இருந்த காலக் கட்டத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சு மாற்றத்தில் தான் பிரபஞ்சம் உருவான ரகசியம் மறைந்து கிடக்கிறது எனக் கருதப்படுகிறது. இந்தக் கதிர்வீச்சுக்கு பிரபஞ்ச நுண்ணிய ஒளிச்சிதறல் பின்னணி (காஸ்மிக் மைக்ரோவேல் பேக்ரவுண்ட்) என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

          பெருவெடிப்பு நிகழ்ந்த பிறகு கதிர்வீச்சு மாற்றத்தின் விளைவாக அண்டங்கள் உருவாகின. விண்மீன்கள் தோன்றின. சுமார் 2000 கோடி ஆண்டுகளில் இன்று நாம் காணும் எல்லையில்லா பிரபஞ்சம் விரிவடைந்திருக்கிறது என வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

          பெருவெடிப்பு நிகழ்ச்சி நிகழ்ந்து அண்டங்கள் உருவான பின் மிச்சம் மீதியாக வானில் ஒளிச்சிதறல் கதிர்வீச்சுகள் இருக்கின்றன. இந்தக் கதிர் வீச்சை ஆராய்ந்தால் அண்டங்கள் எவ்வாறு உருவாயின என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். அந்த ஒளிச்சிதறல் கதிர்வீச்சைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். 1965ம் ஆண்டில் ஆர்னோபென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற இரண்டு வானவியல் நிபுணர்கள் தற்செயலாக வானில் அந்த கதிர்வீச்சைக் கண்டார்கள். இதன் பின்னர் வானவியல் அறிஞர்கள் மத்தியில் புதிய உற்சாகம் பிறந்தது.

          இந்தக் கதிர்வீச்சானது மிக குறைந்த குளிர் நிலையில் உள்ளது. அதனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் ரகசியம் வெளியாகும் என வானவியல் நிபுணர்கள் முடிவு செய்தனர். அதற்காக ஒரு மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்புவது என முடிவு செய்தனர்.

 

 

          ஐரோப்பிய வானியல் ஆய்வு நிறுவனம் 2009ம் ஆண்டில் பிலாங்க் என்ற தொலைநோக்கியுடன் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவிற்குச் சென்று தொலை நோக்கி மூலம் புகைப்படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பத் தொடங்கியது.

          பிலாங்க் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் தெள்ளத் தெளிவாக பூமியை வந்து அடைந்தன. இதில் பல புகைப்படங்கள் பிரபஞ்சம் பற்றிய பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்தன. இதில் கிடைத்த படத்தை ஜுலை 5, 2010ம் ஆண்டில் ஐரோப்பிய வானியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. இதுதான் பிரபஞ்சத்தின் முதல் படம் என சொல்லும் படியாக அது இருக்கிறது.

          இந்தப் படத்தில் நமது சூரியக் குடும்பம் இடம்பெற்றுள்ள பால்வழி மண்டலம் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மேகக் கூட்டம் போல் காணப்படுகிறது. அதில்தான் பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அடக்கி இருக்கும் பிரபஞ்ச நுண்ணிய ஒளிச் சிதறல் கதிர்வீச்சுகள் இருக்கின்றன. இப்போது கிடைத்து இருக்கும் படம் பெரிய கண்டுபிடிப்பு அல்ல என்றாலும் மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

          பிலாங்க் தொலைநோக்கி இன்னும் சில மாதங்களில் மேலும்  பல புதிய புகைப்படங்களை அனுப்ப இருக்கிறது. அவற்றை ஆவலுடன் எதிர்நோக்கி ஐரோப்பிய வானியில் நிபுணர்கள் காத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் கிடைத்தப் பிறகு பிரபஞ்சத்தின் உற்பத்திக்குக் காரணமான கதிர்வீச்சு மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்

          இந்த கதிர்வீச்சு பற்றிய ஆய்வானது பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைக் கண்டுபிடிக்க உதவும். இந்தப் பிரபஞ்சம் இன்னும் எத்தனைக் கோடி ஆண்டுகளுக்கு இப்படியே இருக்கும் என்பதைப் பற்றி ஆராய உதவும். கதிர்வீச்சு முற்றிலும் அடங்கிய பிறகு பிரபஞ்சம் எப்போது அழியும் என்கிற ஆய்வுக்கு இது உதவும்.

சூரியக் குடும்பம்:

          எந்தக் கால கட்டத்திலும் பிரபஞ்சத்தின் எல்லை இதுதான் என வரையறை செய்துவிட முடியாது. அது வளர்ந்து கொண்டும், விரிவடைந்து கொண்டும் இருக்கிறது. ஆகவே அதன் எல்லையையும் எதிர்காலத்தையும் நாம் நிர்ணயிக்க முடியாது.

          இந்தப் பிரபஞ்சத்தின் மூலையில் ஒரு கடுகு போன்ற அளவில் இருப்பதுதான் நமது சூரிய குடும்பம். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள சூரியன் ஒரு நட்சத்திரம் ஆகும். பிரபஞ்சத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சுமார் 100 பில்லியன் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன் எனப்படும் நட்சத்திரமாகும். நட்சத்திர வெளி விளிம்பில் ஒரு பகுதியில் நமது சூரியக் குடும்பம் உள்ளது.

          நமது சூரியக் குடும்பத்தை போல் ஏராளமான வேறு பல சூரியக் குடும்பங்கள் உண்டு. சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் மற்றும் நெபுலாக்களையும் கொண்டது நாம் வசிக்கும் பால்வழி மண்டலமாகும். இதனை ஆங்கிலத்தில் மில்கிவே கேலக்ஸி என அழைக்கின்றனர். பால்வழி மண்டலம் போல் 10,000 கோடி அண்டங்களைக் கொண்டதுதான் பிரபஞ்சமாகும்.

          நமது சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமி இருக்கிறது. நமது சூரியனை 8 கோள்கள் சுற்றி வருகின்றன. நமது சூரியனை இவையாவும் சுற்றி வருவதால் இது சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்தில் 167 துணைக் கோள்கள், சிறு கோள்கள், ஏராளமான வால் மீன்கள், எரி மீன்கள் ஆகியவையும் உள்ளன.

          நமது சூரியக் குடும்பத்தில் 9 கோள்கள் இருந்தன. ஆனால் 9வது கோளாக இருந்த புளுட்டோ கிரக அளவில் சிறியது. மேலும் இது ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையின் இடையில் புகுந்து செல்வதால் இது ஒரு கிரக அந்தஸ்த்தை இழந்தது. புளுட்டோ ஒரு கிரகம் அல்ல; இது ஒரு குள்ளக்கோள் என ஆகஸ்ட் 24, 2006ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் நமது சூரியக் குடும்பத்தில் 8 கிரகங்கள் மட்டுமே உள்ளன.

பூமி:

          நாம் வாழும் பூமி ஒரு கிரகமாகும். பூமி சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு மிக அருகில் புதன் கிரகம் உள்ளது. அதற்கு அடுத்து வெள்ளி கிரகம் உள்ளது. சூரியனுக்கு அருகில் 3வதாக உள்ள கிரகம் பூமி ஆகும். இந்த பூமியில்தான் நாம் வாழ்கிறோம். பூமியின் சிறப்பம்சம் என்பது அதில் உயிர்கள் வாழ்வதுதான்.

 

            பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 14.6 கோடி கிலோ மீட்டர் ஆகும். நமது பூமிக்கு சந்திரன் என்கிற ஒரு துணைக் கோள் உள்ளது. இதனை நாம் நிலா என அழைக்கின்றோம். நிலா பூமியிலிருந்து 384399 கி.மீ. தொலைவில் உள்ளது.

          சூரியனிடமிருந்து 4வது இடத்தில் செவ்வாய் கிரகமும், 5வது இடத்தில் வியாழன், 6வது இடத்தில் சனி, 7வது இடத்தில் யுரேனஸ், 8வது இடத்தில் நெப்டியூன் உள்ளன. பூமியிலிருந்து எல்லாக் கோள்களுக்கும் விண்கலங்கள் செலுத்தப்பட்டு விட்டது. புளுட்டோவிற்கு 2005ம் ஆண்டில் நியூ ஹரைஸான் (New Horizon) என்னும் விண்கலம் ஏவப்பட்டது. இது 2015ம் ஆண்டில் அங்கு சென்றடையும். அவ்வளவு தொலைவில் புளுட்டோ என்னும் குள்ளக்கோள் உள்ளது. இது சூரியனிடமிருந்து சுமார் 591.35 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோள்கள்         -    சூரியனில் இருந்து தொலைவு

புதன்                  -    5.79 கோடி கி.மீ

வெள்ளி              -    10.82 கோடி கி.மீ.

பூமி                    -    14.6 கோடி கி.மீ.

செவ்வாய்           -    22.79 கோடி கி.மீ.

வியாழன்            -    77.83 கோடி கி.மீ.

சனி                    -    142.7 கோடி கி.மீ.

யுரேனஸ்            -    286.9 கோடி கி.மீ.

நெப்டியூன்          -    449.8 கோடி கி.மீ.

          பூமியில் உள்ள தூரங்களை நாம் குறிப்பிட கிலோமீட்டர் அல்லது மைல் போன்ற அளவுகளை குறிப்பிடுகிறோம். ஆனால் விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் ஆகியவற்றிற்கு கிடையே உள்ள தூரத்தைக் குறிப்பிட இந்த அளவு முறை பயன்படாது. எனவே வானவியல் அறிஞர்கள் ஒளி வருட தூரம் என்ற அளவைப் பயன்படுத்துகின்றனர்.

          இன்றைக்கு விண்கலம் மணிக்கு 28000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. நமது பூமியின் துணைக் கோளான நிலாவைச் சென்றடைய 60 மணி நேரம் ஆகிறது. அதாவது 2 1/2 நாட்கள் ஆகிறது. நமது சூரியனை அடைய 3 வாரம் (21 நாட்கள்) ஆகிறது. நமக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்றால் 5 லட்சம் ஆண்டுகள் ஆகும். அதற்கு அடுத்துள்ள விண்மீன் (Nearest galexy) கூட்டத்தை அடைய வேண்டும் என்றால் 20000 மில்லியன் ஆண்டுகள் ஆகும். 1 மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும். பேரண்டத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. ஆகவே விண்மீன் கூட்டத்தின் தூரத்தை மைல் அல்லது கிலோ மீட்டரில் அளவிடுவது என்பது மிக மிக சிரமமாகும். ஆகவே தான் ஒளி ஆண்டு என்கிற அலகில் கணக்கீட்டுச் சொல்கின்றனர்.

          ஒளியானது வினாடிக்கு 1,86,000 மைல் தூரத்திற்குப் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த ஒளியானது ஒரு வருடத்தில் செல்லும் தூரம் என்பது 6 டிரில்லியன் மைல். அதாவது 60 லட்சம் கோடி மைல். இதை ஒரு ஒளி ஆண்டு தூரம் என்கின்றனர்.

          நட்சத்திரங்களின் தூரத்தை பூமியிலிருந்தே கணக்கிடு கிறோம். சூரியனுடைய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. இதைப் போல கடைசியில் உள்ள குள்ளக்கோளான புளுட்டோவைச் சென்றடைய 4 1/2 மணி நேரமாகிறதுஎனவே புளுட்டோ குள்ளக் கோளானது சூரியனிடமிருந்து 4 1/2 ஒளி மணி நேர தூரத்தில் உள்ளது என்று சொல்லலாம்.

வளி மண்டலம் :

          பூமியைச் சுற்றி பல வாயுக்கள் கலந்த ஒரு காற்றுப் படலம் இருக்கிறது. இது பூமியைச் சுற்றி ஒரு உறை போல் இருக்கிறது. இதனை வளி மண்டலம் (Atmosphere) என்பர். இந்த வளி மண்டலம் பூமிக்கு ஒரு கேடயமாக இருக்கிறது. ஏனெனில் இது சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர், காஸ்மிக் கதிர்கள்எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவைகளைத் தடுத்து, ஒரு குடை போல் பூமியைக் காக்கிறது. அது மட்டும் அல்லாமல் பூமியின் ஈர்ப்பு விசையையும் காப்பாற்றுகிறது.

          பூமியின் தரையை ஒட்டி 90 சதவீதம் காற்றுக் கலவை உள்ளது. இது அடர்த்தியாக இருக்கும். பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல வளி மண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே போகிறது.

          வளிமண்டலம் பூமியின் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கிறது. பூமியில் உயிர்கள் இருப்பதற்கு வளிமண்டலத்தில் பல வாயுக்களால் ஆன காற்று இருக்கிறது. இந்த காற்றுக் கலவையில் பல்வேறு வாயுக்கள் சில குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கின்றன.

மாசு அடையாத காற்று கலவை

வாயுக்கள்                                      எடையில் சதவீதம்        கன அளவில் சதவீதம்

நைட்ரஜன்                                          75.54                    78.084

ஆக்ஸிஜன்                                          23.14                    20.946

ஆர்கான்                                             1.27                      0.934

கார்பன்-டை-ஆக்ஸைடு                        0.05                      0.033

நியான்                                                0.0012                   0.001818

ஹீலியம்                                             0.0007                   0.000524

கிரிப்ட்டான்                                        0.003                    0.000114

ஹைட்ரஜன்                                        0.00004                 0.00005

செனான்                                             0.000036               0.0000087

ஓசோன்                                              0.0000017              0.00005

மீதேன்                                                0.0000031              0.00015

          இவற்றுடன் நீராவி, கார்பன் மானாக்சைடு, நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம், நைட்ரஜன் டை ஆக்ஸைடு, அயோடின், அமோனியா, புழுதி, பாக்டீரியா, மகரந்ததூள், கரிமப் பொருள்கள், கரியற்ற பொருட்கள் ஆகியவையும் கலந்துள்ளன.

          பூமியின் வளி மண்டலத்தை 5 அடுக்குகளாகப் பிரித்துள்ளனர்.

ட்ரோபோஸ்பியர் :

          இது தரையை ஒட்டிய அடுக்காகும். இதனை அடி வளிமண்டலம் என்பர். இது தரையிலிருந்து 7 கிலோமீட்டர் முதல் 17 கிலோமீட்டர் வரை பரவி இருக்கிறது. அதாவது துருவப்பகுதியில் 7 கி.மீ. (23000 அடி) உயரத்திற்கும், பூமத்திய ரேகைப் பகுதியில் 17 கி.மீ. (56000 அடி) உயரம் வரை இருக்கிறது. இதில் சிறிய சிறிய மாற்றங்கள் காலநிலைக்கு ஏற்ப இருக்கிறது. இங்கு கீழே வெப்பமாகவும், மேலே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து கொண்டும் போகிறது.

ஸ்ட்ராட்டோஸ்பியர்:

        இதனை அடுக்குக் கோளம் என்பர். இது 17 முதல் 51 கிலோமீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. இது ட்ரோபோஸ் பியருக்கும், மீசோஸ்பியருக்கும் இடைப்பட்ட அடுக்காகும். இது 1,70,000 அடி உயரம் வரை பரவியுள்ளது. இந்த அடுக்கில் உயரம் கூட கூட வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த அடுக்கு மிக முக்கியமான அடுக்காகக் கருதப்படுகிறது. இங்குதான் ஒசோன் படலமும் உள்ளது. இந்த ஓசோன் படலம் ஒரு திரை போன்றது. புற ஊதாக் கதிர்கள் பூமியை நோக்கி வந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுப்பது இந்த ஓசோன் படலமாகும்.

மீசோஸ்பியர்:

          மீசோஸ்பியர் அடுக்கு 3வது அடுக்காகும். இதனை நடுக்கோளம் என்பர். இது 80 முதல் 85 கிலோ மீட்டர் (2,60,000-2,80,000 அடி) உயரம் வரை இருக்கும். விண்வெளியில் இருந்து வரும் விண் கற்கள் இந்த மண்டலத்தில் நுழைந்தவுடன் எரிந்து போகும். காற்று அடர்த்திக் குறைந்ததாக இருக்கும்.

தெர்மோஸ்பியர்:

          இது வெப்பக் கோளமாகும். இந்த அடுக்கு 85 கிலோ மீட்டர் முதல் 380 கிலோ மீட்டர் வரை இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் இங்கு தான் கட்டப்பட்டு வருகிறது.

 

எக்ஸோஸ்பியர்:

          இது வளி மண்டலத்தின் வெளி எல்லையில் உள்ள அடுக்காகும். இது 10,000 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி இருக்கிறது. இங்கு வெப்பம் 200 டிகிரி செல்சியஸ் முதல் 10,000 டிகிரி செல்சியஸிக்கும் மேல் இருக்கும். இந்த அடுக்கில் 1050 கிலோ மீட்டர் உயரம் வரை செயற்கைக் கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

விண்வெளி:

          பூமியில் காற்றானது தரையை ஒட்டி அடர்த்தியாகவும், மேலே செல்லச் செல்ல அடர்த்திக் குறைந்து கொண்டே செல்லும். 110 கி.மீ. உயரத்திற்கு மேல் காற்றின் அடர்த்தி மெல்லியதாக இருக்கும். காற்றின் அறிகுறிகள் முற்றிலும் மறைந்த இடம் வெற்றிடயாகும். காற்று மண்டலத்திற்கு வெளியே உள்ள வெற்றிடத்தையே விண்வெளி (Space) என்கின்றனர். விண்வெளி என்பது 200 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து துவங்கி விடுகிறது. காற்று மண்டலத்திற்கு அடுத்து விண்வெளி இருக்கிறது.

          விண்வெளி பல ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. விண்வெளியில் காற்று இல்லை. ஆகவே வெற்றிடமானது. வெற்றிடத்தில் ஒலி அலைகள் பயணம் செய்யாது. ஆகவே காது கேட்காது. காற்று இல்லாததால் சப்தம் மற்றும் வாசனை எதுவும் இல்லை. விண்வெளி இருண்டு போய் இருக்கிறது. ஏனெனில் ஒளியைப் பிரதிபலிப்பதற்கு ஏதும் இல்லை. பூமியில் ஒளியானது கடல், மலை, நிலம் மற்றும் வளி மண்டலத்தில் உள்ள துகள்கள் மூலம் பிரதிபலிக்கிறது. அதனால் பூமியில் வெளிச்சம் இருக்கிறது.

 

          விண்வெளியில் காற்று இல்லாததால் ஒளிச்சிதறல் ஏற்படுவதில்லை. இதனால் விண்வெளி ஊதா நிறத்தில் இல்லை. ஆகவே விண்வெளி கருமை நிற போர்வை போத்தியது போல் இருக்கிறது. இதில் நட்சத்திரங்கள் சிதறி புள்ளிகளாகத் தெரிகின்றன. விண்வெளியில் முழுக்க வெற்றிடத்தால் ஆனது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அதில் நட்சத்திரங்கள், கிரகங்கள், விண் கற்கள் என இருக்கின்றன.

          விண்வெளியில் பல கதிரியக்கங்கள் (Radiation) உள்ளன. அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர் போன்றவை சூரியனிடமிருந்து வருகின்றன. அது தவிர சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்களும் ஒளியின் வேகத்தில் தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களிடமிருந்து வருகின்றன.

          விண்வெளி எடையற்ற தன்மை கொண்டது. அங்கு புவி ஈர்ப்பு விசை கிடையாது. ஆகவே அனைத்தும் அங்கு மிதக்கும். ஆகவே மனிதன் அங்கு வாழ்வது சிரமம். இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு மனிதன் அங்கு விண்வெளி உடையை அணிய வேண்டும். பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தான்  மனிதன் அங்கு செல்லவோ, தங்கவோ முடிகிறது.

          விண்வெளியைப் பற்றி ஒன்றும் தெரியாத மனிதர்கள் அங்கு கடவுள்கள் வாழ்கின்றனர் என கதை கூறி வந்தனர். அனைத்து நாடுகளிலும் இது போன்ற கதைகள் உண்டு. மனிதனின் விண்வெளி நோக்கிய பயணம் அது உண்மை இல்லை என நிரூபித்துக் காட்டி உள்ளது.

ராக்கெட்

        தீபாவளிப் பண்டிகையின் போது ஒரு வகையான பட்டாசு மேலே சீறிப் பாய்ந்து வெடிக்கிறது. இதனை வேட்டு, வெடிக்கும் ராக்கெட் என அழைக்கிறோம். ஏனெனில் இது ராக்கெட் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. இது வெடி மருந்துகளால் உந்தப்படும் பட்டாசு ஆகும்.

          ராக்கெட்டுகள் என்பவை ஆரம்ப காலத்தில் போருக்காகப் பயன்படுத்தப்பட்டன. வெடி பொருளை எடுத்துச் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கப்பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு எதிரிக்கப்பல். விமானம், வேவு பார்க்கும் செயற்கைக் கோள், எதிரி முகாம் ஆகியவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. வெடி குண்டுகள், அணு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சுமந்து சென்று எதிரிகளை அழிக்கின்றன. இப்படி அழிவுக்குப் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை ஏவுகணை (Missile) என அழைக்கின்றனர்.

ஏவுகணை :

        வெடி மருந்தை சீன நாட்டைச் சேர்ந்த வூசிங் சங்யா என்பவர் கி.பி. 1044ம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன் பின்னர் போரின் போது வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. சீனர்களுக்கும் மங்கோலியர் களுக்கும் நடந்த யுத்தத்தின் போது 1232ம் ஆண்டு எரியும் தீக்கணைகளை (Fire arrows) மங்கோலியர்கள் மீது வீசினர். இதுதான் முதன் முதலில் பயன்படுத்திய ஏவுகணையாகக் கருதப்படுகிறது. இதன் பின்னர் ஐரோப்பா மற்றும் அரேபிய நாடுகளுக்கும் இது பற்றிய விபரங்கள் பரவின.

          ஏவுகணைகள் இந்தியா, இங்கிலாந்து, அரபி நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் புழக்கத்திற்கு வந்தன. இந்தியாவில் கி.பி. 1792ல் காரன்வாலிஸ் பிரபுவிற்கு எதிராக மைசூர் மன்னர் திப்பு சுல்தான் நடத்திய ஸ்ரீரங்கப்பட்டினப் போரில் ஏவுகணைகளை போர்க் கருவிகளாகப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகளைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேய வெடி மருந்து நிபுணர் வில்லியம் கான் கிரீவ் என்பவர் இதனை 1802ம் ஆண்டில் ஆராய்ந்தார். இவர் 1814ம் ஆண்டில் புதிய நவீன ஏவுகணைகளைத் தயாரித்தார். அவற்றை மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ஏவி வெற்றி கண்டார். 1860ம் ஆண்டில் நெப்போலியனுடன் நடந்த போரிலும் ஏவுகணைகள் பயன்படுத்தப் பட்டன. ஆகவே விண்வெளி கருமை நிற போர்வை போத்தியது போல் இருக்கிறது. இதில் நட்சத்திரங்கள் சிதறி புள்ளிகளாகத் தெரிகின்றன. விண்வெளியில் முழுக்க வெற்றிடத்தால் ஆனது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அதில் நட்சத்திரங்கள், கிரகங்கள், விண் கற்கள் என இருக்கின்றன.

          விண்வெளியில் பல கதிரியக்கங்கள் (Radiation) உள்ளன. அகச்சிவப்பு கதிர், புற ஊதாக் கதிர் போன்றவை சூரியனிடமிருந்து வருகின்றன. அது தவிர சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்களும் ஒளியின் வேகத்தில் தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களிடமிருந்து வருகின்றன.

          விண்வெளி எடையற்ற தன்மை கொண்டது. அங்கு புவி ஈர்ப்பு விசை கிடையாது. ஆகவே அனைத்தும் அங்கு மிதக்கும். ஆகவே மனிதன் அங்கு வாழ்வது சிரமம். இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு மனிதன் அங்கு விண்வெளி உடையை அணிய வேண்டும். பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தான்  மனிதன் அங்கு செல்லவோ, தங்கவோ முடிகிறது.

          விண்வெளியைப் பற்றி ஒன்றும் தெரியாத மனிதர்கள் அங்கு கடவுள்கள் வாழ்கின்றனர் என கதை கூறி வந்தனர். அனைத்து நாடுகளிலும் இது போன்ற கதைகள் உண்டு. மனிதனின் விண்வெளி நோக்கிய பயணம் அது உண்மை இல்லை என நிரூபித்துக் காட்டி உள்ளது.

இடைத்தரத் தொலைவு கணை:

          இந்த ஏவுகணைகள் 1500 கடல் மைல் (2800 கிலோ மீட்டர்) தொலைவு வரை சென்றுத் தாக்கும். ரஷியாவின் ஸ்கிராக், ஸகார்ப், அமெரிக்காவின் தோர், ஜீபிடர், போலாரிஸ் ஆகியவை இடைத்தரத் தொலை ஏவுகணைகளாகும்.

          ஏவுகணைகள் வடிவத்திலும், இயக்கத்திலும் ராக்கெட்டை ஒத்திருக்கின்றன. ஆனால் பயன்பாட்டில் மாறுபட்டவை. ராக்கெட்டுகள் வானவியல் ஆய்விற்கும், செயற்கைக் கோள்களை ஏவுவதற்கும், விண்கலங்களை ஏவுவதற்கும் பயன்படுகின்றன. ஆனால் ஏவுகணைகள் அணு ஆயுதங்கள், வெடி குண்டு ஆகியவற்றைச் சுமந்து சென்று எதிரிகளின் முகாம்களை அழிக்கப் பயன்படுகின்றன.

          ஏவுகணைகள் போர்க்களங்களில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பூமியின் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்கு ஏவி எதிரிகளின் முகாம்களை அழிக்கின்றனர். இதனை தளம் விட்டு தளம் செலுத்தப்படும் ஏவுகணை என்கின்றனர். வானில் பறந்து செல்லும் எதிரி விமானங்களைத் தகர்க்க தளத்திலிருந்து ஏவி காற்றில் பாய்ந்து சென்று அழிக்கும் முறையை தளம் விட்டுக்காற்றில் பாயும் ஏவுகணை என்கின்றனர். இந்தியாவின் திரிசூல், ஆகாஷ் போன்றவை இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன.

            போட்டி விமானங்களில் பறந்தவாறே காற்று வெளியில் திரியும் எதிரி விமானத்தை ஏவுகணை செலுத்தி அழிக்கும் முறையை காற்றிலிருந்து காற்றிற்குப் பாயும் ஏவுகணை என்பர். காற்றில் பறந்து கொண்டு பகைவர் முகாம் மீது வீசுவதை காற்றிலிருந்து தரைக்குச் செலுத்தப்படும் ஏவுகணை என்பர். இது மட்டுமல்லாமல் நீர் மூழ்கிக் கப்பல்களைக் குறிபார்த்து தாக்கும் நீரடி ஏவுகணைகளும் உண்டு. இதனை நிலம் விட்டு நீரடி பாயும் ஏவுகணை என்கின்றனர். இது தவிர நீரடிவிட்டு நிலம் பாயும் ஏவுகணைகள், நீரடியிலிருந்து நீருக்குள்ளேயே பாயும் ஏவுகணைகள், பீரங்கி எதிர் ஏவுகணைகளும் உண்டு. சீறிப்பாய்ந்து வரும் ஏவுகணைகளை நடு வழியிலேயே முறியடித்து சிதறடிக்கும் ஏவுகணைகளும் உண்டு.

          இந்தியாவும் பல்வேறு ஏவுகணைகளைத் தயாரித்துள்ளது. இந்தியாவின் முதல் ஏவுகணை ரோகிணி - 75 (Rohini - 75) ஆகும். இது 1967ம் ஆண்டில் தும்பாவிலிருந்து ஏவப்பட்டது. அது வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1977ம் ஆண்டில் முறைப்படி ஏவுகணை ஆய்வுகளில் இந்தியா ஈடுபட்டது. முதலில் திண்ம எரிபொருளைப் பயன்படுத்தினர். அதன் பின்னர் பல ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனைகள் வெற்றியடைந்தன.

ராக்கெட்

          ஏவுகணையின் வளர்ச்சியே ராக்கெட்டின் தோற்றமாகும். ராக்கெட் கண்டுபிடிப்பானது அறிவியல் வளர்ச்சிக்கும், விண்வெளிப் பயணத்திற்கும், விண்வெளி ஆய்விற்கும் வெற்றியாக அமைந்தது. இது ஒரு புதிய சகாப்தகத்தைத் தோற்று வித்தது.

          காற்றில் ஒலி பரவும் வேகத்தை விட பல மடங்கு வேகம் கொண்ட ஒரு ஊர்தியை ராக்கெட் (Rocket) என்கின்றனர். இதனை ஏவூர்தி எனவும் அழைக்கலாம். பொதுவாக உந்துதல் மூலம் ராக்கெட் செலுத்தப்படுகிறது. கொல்கலனில் உள்ள எரிபொருளை எரித்து உருவாக்கப்படும் ஆற்றல் மிகு வேகத்துடன் வெளித்தள்ளப்படும்  போது, அந்த ஆற்றலானது ஊர்தியை எதிர்த்திசையில் வேகமாக தள்ளுகிறது. அதனால் அது பறக்கிறது. இவ்வாறு ஏவப்படும் ராக்கெட்டில் பொருள்களையோ, கருவிகளையோ, மனிதர்களையோ ஏற்றிச் செல்லலாம்.

          ராக்கெட்டுகளில் பறக்க வேண்டும் என்கிற முயற்சியானது சீனாவில் 1250ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாற்காலியின் பின்புறத்தில் வெடிகளைப் பொருத்தி வைத்தனர். அதில் பயணம் செய்பவர் வசதியாக அமர்ந்து கொள்கிறார். நாற்காலியின் பின்னால் உள்ள வெடியை பணியாட்கள் வெடிக்கச் செய்வதன் மூலம் உண்டாகும் ஆற்றல் மூலம் நாற்காலி உந்தப்பட்டு சிறிது தூரம் பயணம் செய்கிறார். இது விளையாட்டிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்பட்டது. ஆனால் இதில் வெற்றி எதுவும் கிட்டவில்லை. இருப்பினும் ராக்கெட் உதவியுடன் பறத்தலுக்கு மேற்கொண்ட முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

          ஜேகன்ஸ் கெப்ளர் 1609ம் ஆண்டில் சூரியனை எவ்வாறு கோள்கள் சுற்றுகின்றன என்பதைப் பற்றிய சமன்பாடுகளை உருவாக்கினார். கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது என்றார். ஐசக் நியூட்டன் 1687ம் ஆண்டில் இயங்கு பொருள்களின் மூன்று விதிகளை கண்டு பிடித்தார். இவை ராக்கெட் பற்றிய சிந்தனைக்கு அடித்தளம் அமைத்தன. குறிப்பாக நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியின்படி ராக்கெட் செயல்படுகிறது. அதாவது ஒவ்வொரு வினைக்கும் ஒரு சமமான எதிர்விசை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாவது விதியாகும்.

          நியூட்டனின் விதியைப் பயன்படுத்தி ஒரு ஆங்கில இளைஞர் ஒரு எதிர்விசை ஊர்தியை உருவாக்கினார். ஒரு கொதிகலத்தில் நீர் அதிக அளவு கொதிக்க வைக்கப்படுகிறது. நீர் கொதிப்பதனால் உண்டாகும் நீராவி ஒரு சிறிய துளை மூலம் வெளியேற்றப்படுகிறது. நீராவி வெளியே அழுத்தத்துடன் செல்கின்றது. நீராவி எவ்வளவு வேகத்துடன் வெளியே செல்கிறதோ அதே வேகத்துடன் வாகனம் முன்னே செல்கிறது.

          வாகனங்கள் கண்டுபிடிப்பு, விமானங்கள் கண்டுபிடிப்பு என முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக பறந்து செல்லும் விமானங்களும், ராக்கெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

          ராக்கெட் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஒரு சிறிய பரிசோதனையின் மூலம் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஒரு பாலூனை எடுத்து அதில் காற்றை ஊதி நூலால் காற்று வெளியேறாதவாறு கட்டி விட்டால் பலூன் அதே இடத்தில் இருக்கும். ஆனால் பலூனில், வாய்ப் பகுதியை கட்டாமல், வாயை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, திடீரென கையை விட்டுவிட்டால் பலூன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகச் சீறி செல்கிறது. இதற்குக் காரணம் அடைபட்ட காற்று சிறிய வாய் வழியாக பின்புறம் நோக்கிச் செல்கிறது. நியூட்டனின் மூன்றாவது விதிப்படி பலூன் முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. இவ்வாறு தான் ராக்கெட் செயல்படுகிறது.

          நவீன ராக்கெட் தொழில்நுட்பம் உருவாவதற்கு முதன்மையானவர்கள் சிலர் இருந்தனர். இவர்களின் முயற்சியால் தான் ராக்கெட் புதிய வடிவம் பெற்றது.

ராக்கெட் தொழில் நுட்பத்திற்கு முதன்மையானவர்கள் :

          1.       கான்ஸ்டான்டின் சியேல் கோவ்ஸ்கி

          2.       ராபர்ட் எச். காட்டார்ட்

          3.       ஹெர்மன் ஒபெர்த்

          4.       வெர்னர் வான் பிரான்

          5.       செர்கி பாவ்லோவிச் கோரோலேவ்

கான்ஸ்டான்டின் சியேல்கோவ்ஸ்கி:

        கான்ஸ்டான்டின் சியேல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) என்பவர் ரஷியாவில் மாஸ்கோ அருகில் 1857ம் ஆண்டில் பிறந்தார். இவர்தான் உலகில் ராக்கெட் இயக்கம் பற்றி முதன் முதலில் கூறியவர். இவர் ஒரு ராணுவ வீரர். கப்பல் மாலுமி. பள்ளி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். நவீன ராக்கெட் உருவாவதற்கான அடிப்படைக் கோட்பாட்டை விளக்கியவர். விண்வெளிப் பயணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. அது துவங்கப் போகிறது என்றவர். இவர் எழுதிய புத்தகத்தில் விண்வெளி ஓடம் பற்றி குறிப்பிட்டார். அது மிகப் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியது.

 

          இவர் விண்வெளி சம்மந்தமான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல அறிவியல் புனைக் கதைகளை எழுதினார். விண்வெளிச் செல்வதாக அக்கட்டுரைகளும், கதைகளும் இருந்தன. இவர் ராக்கெட் எப்படி இருக்க வேண்டும் என்கிற வரைபடத்தை 1903ம் ஆண்டில் வரைந்தார். ராக்கெட்டின் உந்து சக்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான சமன்பாடுகளையும் அறிவியல் பூர்வமாக உருவாக்கினார்.

          ராக்கெட்டில் திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்றார். ராக்கெட் காற்றே இல்லாத வெற்றிடத்திலும் பறக்கும் என்றார். ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் பயன்படுத்தலாம் அவை சக்தி வாய்ந்த எரிபொருளாக இருக்கும் என்றார். இது தவிர ஆல்கஹால், மீத்தேன், மண்ணெண்ணெய் ஆகியவற்றையும்   பயன்படுத்தலாம் என்றார்.

          இவர் பல ராக்கெட் மாதிரிகளை படங்களாக வரைந்தார். விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகள் பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். இதனை இவர் ராக்கெட் ரயில் (Rocket train) என்றார். அதே சமயத்தில் ராக்கெட்டின் பக்கவாட்டிலும் இணைப்புகள் இருக்கலாம் என்பதை பற்றியும் கூறினார். ராக்கெட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கான சூத்திரங்களையும் வரைந்தார்.

          இவர் பூமியைச் சுற்றும் விண்கலங்களை உருவாக்க முடியும் என்றார். அது பின்னாளில் சாத்தியம் ஆனது. 1926ம் ஆண்டில் செயற்கைக் கோள் பற்றியும், மனிதன் விண்வெளியில் தங்கி அங்கிருந்து மற்ற கிரகங்களுக்கும் செல்ல முடியும் எனவும் எழுதினார்.

          இவர் தற்போதைய ரஷிய ராக்கெட்டுகள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமானவராக இருந்தார். இவரை ரஷியாவின் ராக்கெட் தந்தை என அழைக்கின்றனர். இவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. இவர் 1935ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

ராபர்ட்  எச். காட்டார்ட்:

          ராபர்ட் எச். காட்டார்ட் (Robert Hutchins Goddard) 1882ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1915ம் ஆண்டில் கிளார்க் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர்  பயன்தரத்தக்க வகையில் ராக்கெட் சம்பந்தமான ஆய்வை மேற்கொண்டார். திரவ எரிபொருள்களால் ராக்கெட்டின் உந்துதல் குறித்த கருத்துக்களைத் தெரிவித்தார். ராக்கெட்டின் பல பாகங்களை வரைபடமாக வரைந்து அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

          இவர் வியாபார ரீதியில் சில ராக்கெட்டுகளைத் தயாரித்தார்ராக்கெட் பாய்ந்து செல்லும் விசையை அளவிட்டார். அது செல்லும் உயரத்தையும், வேகத்தையும் கணக்கிட்டார். ராக்கெட் செல்வதற்கு முன்பு அதன் எடையைக் கணக்கிட்டார்.

          ராக்கெட்டில் வெப்பத்தை உருவாக்கும் வெப்ப எஞ்ஜின் அவசியம் தேவை. அது வெப்பத்தை ஆற்றல் சக்தியாக மாற்றுகிறது. இவர் ராக்கெட்டில் பல பீச்சாங்குழல்களை (Nozzle) வடிவமைத்தார். அது உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இவர் தயாரித்த நாசில்கள்  De Laval Nozzle என அழைக்கப்படுகிறது. அது வெற்றிடத்திலும் செயல்படும்.

                   காட்டார்ட் வளி மண்டத்தின் உயரத்தைக் கடக்கும் ராக்கெட்டைத் தயாரிப்பதற்காக வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் நிறுவனத்திடம் உதவி கோரினார். இந்நிறுவனம் இவருக்கு ஜனவரி 1917 இல் 5000 டாலர் நிதி உதவி செய்தது. அதனைக் கொண்டு ராக்கெட் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார்.

          காட்டார்ட் 1922ஆம் ஆண்டு தனது கருத்துக்களை மறுபரிசீலனை செய்தார். இவர் திரவ ராக்கெட் செய்வதில் ஈடுபட்டார். அதற்கான ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். இதன் மேல் பகுதியில் ராக்கெட் எஞ்ஜின் இருந்தது. இதற்கு இரண்டு வழிகளில் அடியில் உள்ள டாங்கிலிருந்து எரிபொருள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

          மார்ச் 16, 1926 அன்று இவரின் முதல் திரவ எரிபொருள் ராக்கெட் பரிசோதனை செய்யப்பட்டது. இது 20 வினாடி எரிந்து போதிய விசையுடன் பறந்தது. இவரின் மனைவி எஸ்தர் காட்டார்ட் ராக்கெட் பறப்பதை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார். ராக்கெட் வேகமாகப் பறந்ததால் அவரால் புகைப்படம்  எடுக்க முடியவில்லை. இந்த ராக்கெட் 41 அடி உயரம் பறந்தது. பின்னர் தரையில் வந்து மோதியது. இதெல்லாம் 2.5 வினாடியில் நடந்து முடிந்தது. இதன் சராசரி வேகம் மணிக்கு 60 மைல்கள் ஆகும்.

          இவர் ராக்கெட்டை ஏவுவதற்காக வெறும் பைப்புகளால் ஆன மேடையை மட்டுமே பயன்படுத்தினார். இவர் ஏவிய ராக்கெட்டில்  எரிபொருளாக திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டது. இவர் விண்ணில் ராக்கெட்டை ஏவியதன் மூலம் உலகம் நவீன ராக்கெட் யுகத்தில் அடி எடுத்து வைத்தது எனலாம். ஆனால் விண்வெளிக்கு ராக்கெட் செல்வதை இவரால் காண முடியவில்லை. இவர் புற்று நோயால் ஆகஸ்ட் 10, 1945ஆம் ஆண்டு இறந்தார்

ஹெர்மன் ஒபெர்த்:

          ஹெர்மன் ஒபெர்த் (Hermann Oberth) ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு கணிதப் பேராசிரியர். ராக்கெட் இயக்கவியல் மற்றும் விண்வெளிவியல் ஆகியவற்றில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். இவர் விண்வெளி விமானம் பற்றிய ஆலோசனைகளைக் கூறி வந்தார். இவர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை “The Rocket into Interplanetary Space” என்கிற தலைப்பில் செய்தார்.

              இவர் 1923ஆம் ஆண்டில் விண்வெளியில் ராக்கெட் என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதில் விண்வெளிப் பயணம், விண்கலம் தரையிறங்குதல், ராக்கெட்டில் பயன்படுத்த வேண்டிய எரிபொருள் பற்றி எழுதியிருந்தார்.

          இவர் விண்வெளிப் பயணம் பற்றிய கழகத்தில் 1927 முதல் உறுப்பினராக இருந்தார். இவர் 1930ஆம் ஆண்டில் ராக்கெட்டின் நாசில் துவாரத்தின் மூலம் 70 நியூட்டன் சக்தி வெளிப்பட்டத்தைக் கணக்கிட்டார். 10 நியூட்டன் சக்தியானது ஒரு கிலோகிராம் எடையைத் தூக்கிச் செல்லும் என்கிற கணக்கை வெளியிட்டார். 1932ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 600 நியூட்டன் சக்தி கொண்ட மோட்டார்கள் இருந்தன.

வெர்னர் வான் பிரான்:

        வெர்னர் வான் பிரான் (Wernher Von Braun) என்பவர் ஜெர்மனியில் 1912ம் ஆண்டில் பிறந்தார். இவர் ராக்கெட் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தார். 1930 முதல் 1970ஆம் ஆண்டு வரை

விண்வெளி ஆய்வில் நிபுணராக இருந்தார். விண்வெளிப் பயணம் பற்றி பலர் எழுதிய புத்தகங்களைப் படித்ததன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் கொண்டார். இவர் 1932ஆம் ஆண்டில் ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். இவர் இயற்பியலில் முனைவர் பட்டத்தை 1934ஆம் ஆண்டில் பெற்றார்

          1932ம் ஆண்டில் ராணுவத்திற்காக ஜெர்மனி ராக்கெட்டுகளைத் தயாரித்தது. இதற்கு வெர்னர் வான் பிரான் முக்கியமானவர். 1934ஆம் ஆண்டில் A2 ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இது 16000 நியூட்டன் உந்து சக்தியைக் கொண்டது. வெர்னர் பிரானின் மேற்பார்வையில் 12 டன் எடை கொண்ட ராக்கெட் உருவானது. இதன் ஏவுசக்தி 2,50,000 நியூட்டன்ஸ் ஆகும். ஒரு கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லக் கூடியது.

          ஜெர்மனியில் 1937ஆம் ஆண்டில் பால்டிக் கடலில் அமைந்த பீனிமுண்டே  என்ற தீவில் ராக்கெட் ஆராய்ச்சித் தளம் நிறுவப்பட்டது. இவர் ராணுவ  பரிட்சார்த்தnnமையத்தின் தொழில் நுட்ப இயக்குனராகப்  பணிபுரிந்தார். A3, A4, A5 என்கிற பெயரில் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. A4 ராக்கெட் என்பது V2 ராக்கெட் எனப் பெயர்மாற்றம் அடைந்தது. V2 ராக்கெட் என்பது “Vengeance Weapon 2” என்பதாகும்.

            V2 ராக்கெட்டின் வளர்ச்சிதான் அமெரிக்கா மற்றும் ரஷியா விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பியதற்கு அடித்தளமாக அமைந்தது. திரவ எரிபொருளால் இயங்கிய இந்த ராக்கெட் 46 அடி நீளம் கொண்டது. மணிக்கு 3500 மைல் வேகத்தில் சென்றது. இது 500 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ளதை சென்று தாக்கக்கூடிய சக்தி படைத்ததாக இருந்தது. இது 1942ம் ஆண்டில் முதன் முதலில் பறக்க விடப்பட்டது.

          இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் மீது  நூற்றுக்கணக்கான V2 ராக்கெட் ஏவுகணைகள் லண்டன் மீது வீசப்பட்டன. இந்த V2 ராக்கெட்டுகள் விமானத்தை விட வேகமாகவும், அதிக உயரமாகவும் பறந்து சென்று தாக்கின.

          இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மனி தோல்வி அடைந்தது. வெர்னர் வான் பிரானும், ராக்கெட் நிபுணர்களும் அமெரிக்காவிடம் சரண் அடைந்தனர். V2 ராக்கெட்டை ஆராய்ந்து அது போன்ற ராக்கெட்டை அமெரிக்கா தயாரித்தது

          இவர் அமெரிக்க ராணுவத்தில் 15 ஆண்டுகள் ராக்கெட் ஏவுகணைகளைத் தயாரித்துக் கொடுத்தார். இவர் 1950ம் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வின் மிக முக்கிய நபராக அமெரிக்காவில் பேசப்பட்டார். 1960ம் ஆண்டில் அமெரிக்காவில் ராக்கெட் கட்டுமானம் என்பது ராணுவத்திலிருந்து நாசா நிறுவனத்திற்கு சென்றது. இங்கு மிகப்பெரிய ராட்சத ராக்கெட் சாட்டர்ன் (Saturn) கட்டப்பட்டது. இவர் 1972ஆம் ஆண்டில் நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். ஜுன் 16, 1977ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அமெரிக்காவின் விண்வெளி ராக்கெட் திட்டத்திற்கு மிக முக்கியமான பங்கு வகித்தார்.

செர்கி பாவ்லோவிச் கோரோலேவ்:

          செர்கி பாவ்லோவிச் கோரோலேவ் (Sergay Pavlovich Korolyov) ஜனவரி 12, 1907ஆம் ஆண்டு ரஷியாவில் உக்ரைன் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தார். இவர் சோவியத் ரஷியாவின் பொறியாளர். விண்வெளித் துறையின் வடிவமைப்பாளரர்அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் இடையே 1950 முதல் 1960 வரை நடைபெற்ற விண்வெளிப் போட்டி காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர்.

          இவரை ஸ்டாலின் ரஷியாவின் ராக்கெட் வடிவமைப்பாளராக நியமனம் செய்தார். இவர் சோவியத் ரஷியாவின் விண்வெளிப் பயணத் திட்டத்தில் மிக முக்கிய நபராக விளங்கினார். 1944ஆம் ஆண்டில் ராக்கெட் உருவாக்குவதில் ஈடுபட்டார். இவர் ஜெர்மனியின் V2 ராக்கெட்டின் தகவல்களைப் பெற்றார். 1946ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு தொழிலாளர்களை ரஷியாவிற்கு கொண்டு வந்தது.

          ஸ்டாலின் ஏவுகணைகள் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். செர்கி நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வடிவமைத்தார். R-1 ஏவுகணை அக்டோபர் 1947-இல் பரிசோதனை செய்யப்பட்டது. 11 ஏவுகணைகள் ஏவியதில் 5 சரியான இலக்கைத் தாக்கின. இவர் R-2, R-3 ஏவுகணைகளை உருவாக்கினார். R-3 ஏவுகணை 3000 கிலோ மீட்டர் சென்று தாக்கக் கூடியது. R-7 என்கிற இரண்டடுக்கு கொண்ட ராக்கெட் ஏவுகணையை 1953-இல் தயாரித்தார். இது 7000 கிலோமீட்டர் வரை செல்லக் கூடியது. இது 5.4 டன் சிறப்புச் சுமையைச் (Payload) எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

          செர்கி விண்வெளிப் பயணவியல் தோன்றுவதற்கு அடிப்படையானவர். இவரின் யோசனைபடி பல ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன. ராக்கெட்டில் விண்கலத்தைப் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பலாம் என்கிற கருத்தினை வெளியிட்டார்.

          உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் இவரின் ஆலோசனைப்படியே உருவாக்கப்பட்டது. இது தவிர முதன் முதலில் விண்வெளிக்கு மனிதன் சென்றதும், இவர் வடிவமைத்த விண்கலத்தின் மூலம்தான்.

          இவர் எதிர்பாராத விதமாக 1966 ஆண்டில் இயற்கை எய்தினார். இவரின் இறப்பால் ரஷியா மனிதனை நிலவில் இறங்க வைக்க முடியாமல் போனது.

ராக்கெட் அமைப்பு :

          ராக்கெட் ஒரு குழாய் போன்றது. அதன் முன்பகுதி கூம்பு வடிவில் இருக்கும். ஒரு விண்வெளி ராக்கெட்டை வடிவமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும். அதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை என்பது போன்ற பல்வேறு கோட்பாடுகளும், கணக்கீடுகளும் தேவைப்படுகின்றன. ராக்கெட் தயாரிப்பில் வேதியியல் விஞ்ஞானிகள், வேதியியல் பொறியாளர்கள், உலோகவியல் நிபுணர்கள், மின்னணு நிபுணர்கள், மின்சாரப் பொறியாளர்கள், விண்வெளி நிபுணர்கள் என பல்துறை நிபுணர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

          கிரகங்கள் அவற்றின் உபகிரகங்கள் இவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க அனுப்படும் செயற்கைக் கோள்களை ஏவும் ஒரு ஏவூர்தியாகச் செயல்படுகிறது. ராக்கெட் மனிதர்களையும், செயற்கைக் கோள்களையும் ஏற்றிச் செல்லும் ஒரு வாகனமாகும்.

          செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்றால் குறைந்தது 150 கிலோ மீட்டர் உயரத்திற்குக் கொண்டு சென்று பறக்கவிட வேண்டும். இதனை விமானத்தின் உதவியால் செய்ய முடியாது. 150 கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருக்கும். எனவே விண்வெளியில் காற்றின் உதவியின்றி இயங்கும் எஞ்ஜின் தேவை.

          ராக்கெட்டின் எஞ்ஜின் செயல்பட காற்று தேவையில்லை. ஏனெனில் ராக்கெட்டில் எரிபொருள் மட்டுமன்றி, அதற்குத் தேவையான ஆக்ஸிஜனை அளிக்கக் கூடிய வேதிப் பொருள்களையும் வைக்கின்றனர். ராக்கெட் எந்திரக் கலத்தில் அதற்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதற்கு தேவையான ஆக்ஸிஜனை திட உருவத்திலோ, திரவ வடிவத்திலோ சேமித்து வைத்துக் கொள்கின்றது. ஆகவே வெளியில் இருந்து காற்றை இழுக்க வேண்டியதில்லை. இதனால் ராக்கெட் பூமியை விட்டு வெளிப்புறத்திலும் செயல்படுகிறது.

          ஆக்ஸிஜன் நேரடியாக எரிகலத்திற்குள் செலுத்தப்படுகிறது. எரிபொருள் நேரடியாகச் செலுத்தப்படாமல் ராக்கெட்டின் முன்பக்கமாக அனுப்பப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படுவதால் முன்பக்கம் குளிர்ச்சி அடைகின்றது. நன்கு தூய்மையாக்கப்பட்ட பெட்ரோல் அல்லது எரிசாராயம் பொதுவாக ராக்கெட்டின் எரிபொருளாக இருக்கிறது. எரிபொருளானது எரிகலத்தில் எரிக்கப்படும் போது காற்று அதிக ஆற்றலுடன் விரிவடைகின்றது. விரிவடையும், காற்று முன்னால் செல்ல முடியாது. அது பின்னால் உள்ள நாசில் துளை மூலம் மிக சக்தியுடன் பீறிட்டுக்கொண்டு பின்னே வெளியேறுகிறது. இதன் மறுவிளைவாக ராக்கெட் முழு வேகத்துடன்  முன்னே செல்கிறது. இதனால் ராக்கெட் வேகத்துடன் உயரே சீறி பாய்ந்து, பறந்து செல்கிறது.

ராக்கெட் எஞ்ஜின்:

          ராக்கெட்டை மிக வேகத்துடன் மேலே செலுத்த உதவும் திறன் மிக்க உறுப்பே ராக்கெட் எஞ்ஜின் (Rocket Engine) ஆகும். ராக்கெட்டில் பொதுவாக வேதி ஆற்றல், அணுக்கரு ஆற்றல், மின்னாற்றல் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் செயல்படக் கூடிய எஞ்ஜின் கட்டமைக்கப்படும். பொதுவாக விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளில் வேதி எரிபொருள்களால் இயங்கக் கூடிய  எஞ்ஜின்களே பொறுத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்ஜின் எரிபொருளை எரித்து வேதி ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும். அப்போது வெளிப்படும் அழுத்தமிக்க வாயு நாசில் வழியாக வெளியேறுகிறது. ராக்கெட்டிற்கு போதிய ஆற்றலை ஊட்டும் பணியைச் செய்வது எஞ்ஜினின் வேலையாகும்.

          ராக்கெட்டிலிருந்து விரைவாக வெளியே தள்ளப்படும் பொருளின் விளைவாக எதிர்த்திசை நகர்வு உண்டாக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் பொருளை உந்து பொருள் என்கின்றனர். உந்து பொருளானது ராக்கெட்டின் உள்ளேயே சேர்த்து வைக்கப்பட்டு  இருக்கும். வேதிப் பொருள்களால் இயங்கும் ராக்கெட்டுகளில் உந்து பொருள் வேதிக் கலவையாக இருக்கும். இப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேதிமாற்றங்களை நிகழ்த்தும் போது ஆற்றல் வெளிப்படுகிறது. சில ராக்கெட்டுகளில் திரவ வடிவ உந்து பொருள்களும், சில ராக்கெட்டில் திட வடிவ உந்து பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ராக்கெட் அமைப்பு :

          ராக்கெட்டை மேல் நோக்கிச் செலுத்தப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் ராக்கெட் உந்து எரிபொருள்கள் (Rocket  Propellants) எனப்படுகின்றன. எரிபொருள் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கலப்பு நிலை எரிபொருள் என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

          திட எரிபொருள் என்பது 13ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனர்கள் கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் கலந்த வெடி மருந்துகளால் ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தியுள்ளனர். 1886ஆம் ஆண்டில் வைல்லி என்பவர் புகையின்றி எரியும் நைட்ரோ செல்லுலோசைக் கண்டு பிடித்தார். இதன் பின்னர் 1890ஆம் ஆண்டில் ஆல்பிரட் நோபல் என்பவர் நைட்ரோ செல்லுலோஸ் நைட்ரோ கிளிசரின் கலவையை எரிபொருளாக பயன்படுத்தலாம் என கண்டுபிடித்தார். இதை ராக்கெட்டில் அல்லது ஏவுகணையில் பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தது. இதுவே திட எரிபொருளின் தொடக்கம் ஆகும்.

          திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டைத் தயாரிக்கலாம் என ரஷிய கணித அறிஞர் சியோல்கோவ்ஸ்கி 1903-இல் அறிவித்தார். காட்டார்ட் இதனை 1926ஆம் ஆண்டில் செயல்படுத்திக் காட்டினார். இதுவே திரவ எரிபொருளின் முன்னோடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.                 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு ஏற்பவே அதன் உள் அமைப்பு, எஞ்ஜின் வடிவம் ஆகியவை வேறுபடுகின்றன. திட எரிபொருள் ராக்கெட் உருவாக்குவதற்கான செலவு என்பது குறைவு. இதன் உள் அமைப்பு மிகவும் எளிமையானது. ராக்கெட்டிற்குத் தேவையான ஆக்ஸிஜனை அளிக்கிற பொருளை ஆக்ஸிகரணி (Oxidiser) என்று அழைக்கின்றனர். ஆனால் திரவ ராக்கெட்டில் எரிபொருளும், ஆக்ஸிகரணியும் தனித்தனி அறைகளில் வைக்கப்படுகின்றன. ராக்கெட்டைச் செலுத்துகிற கட்டத்தில் இரண்டும் எஞ்ஜின் அறையில் ஒன்று சேர்ந்து எரிய ஆரம்பிக்கின்றன.

          திட எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட்டில் எரிபொருளை முன் கூட்டியே நிரப்பி விடலாம். ஆனால் திரவ எரிபொருளை ராக்கெட்டைச் செலுத்தும் நேரத்தை முடிவு செய்த பின்பு, கடைசி நேரத்தில் தான் நிரப்புவார்கள். இதில் மேலும் ஒரு சிக்கல் என்ன வென்றால் ராக்கெட் ஏவுவது ரத்து செய்யப்பட்டால் திரவ எரிபொருளைத் திரும்ப எடுத்தாக வேண்டும்.

          திரவ எரிபொருள் ராக்கெட்டில் எரிபொருளும், ஆக்ஸிகரணியும் அடங்கிய அறையிலிருந்து ராக்கெட்டின் அடிப்புறத்தில் உள்ள எஞ்ஜின் அறைக்கு நீளமான குழாய் மூலம் கொண்டு வர பம்புகள் வேண்டும். இந்த பம்புகளை இயக்க மோட்டார் தேவை. இந்த மோட்டாரை இயக்கவும் எரிபொருள் தேவை. ஆனால் திட எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட்டில் பம்புகளோ, மோட்டாரோ தேவை இல்லை.

          திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட்டானது உயரே பயந்து செல்லும் போது அதில் உள்ள எரிபொருள் தளும்பும். ஆனால் திட எரிபொருள் கொண்ட ராக்கெட்டின் எரிபொருள் தளும்பாது. திட எரிபொருள் என்பது பல்வேறு வேதிப்பொருளின் கலவையாகும். இப்பொருளில் ஒன்று ஆக்ஸிகரணியாகச் செயல்படுகிறது. அமோனியம் பெர்க்ளோரைடை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

          ஆக்ஸிஜனை மைனஸ் 187 டிகிரி சென்டி கிரேட் அளவிற்கு படிப்படியாகக் குளிர வைத்து மிகுந்த அழுத்தத்திற்கு உள்படுத்தினால் அது திரவமாக மாறும். இதனை பிளாஸ்க்குகளில் வைத்திருந்து ராக்கெட் திரவ தொட்டிகளில் நிரப்புவார்கள். நைட்ரஜன் அமிலம், நைட்ரஜன் பெராக்சைட் ஆகியவையும் ஆக்ஸிகரணியாகப் பயன்படுத்தப்படுவது உண்டு. இது தவிர மண்ணெண்ணெய், ஹைட்ரஜன், திரவ ஹைட்ரஜன் ஆகியவையும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவ ராக்கெட்டில் பல எஞ்ஜின்கள் இடம் பெற்றிருக்கும். ராக்கெட்டில் எரிபொருள் எரிந்து உருவாகும் வெப்பம்  3000 - 4000 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும்.

          வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க விரிவடைந்து ராக்கெட்டின் அடிப்புறத்தில் உள்ள நாசில் திறப்பான் வழியாக பீச்சப்படுகிறது. ராக்கெட்டின் உந்து விசைத் திறனை கிலோ கிராம் கணக்கில் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்திய V2 ராக்கெட்டின் உந்து விசைத்திறன் 11250 கிலோகிராம் ஆகும். அதே சமயத்தில் நிலவிற்கு மனிதனை அனுப்பிய  சாட்டர்ன்- 5 என்கிற ராக்கெட்டின் உந்து விசைத் திறன் என்பது 35 லட்சம் கிலோ கிராம் ஆகும்.       
          ராக்கெட்டின் உள்ளே பல சிறிய சிறிய கணினிகள் இருக்கின்றன. அவை எரிபொருள் விநியோகத்தை வினாடிக்கு வினாடி கவனித்துக் கொள்கின்றன. அதே போல் ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்வதையும் ஒரு கணினி கவனித்துக் கொள்கிறது. ராக்கெட்டின் இயக்கத்தை விண்வெளி மையத்திற்குத் தெரிவிக்க ராக்கெட்டில் தகவல் தொடர்பு சாதனங்களும் இடம் பெற்றுள்ளன.

          செயற்கைக் கோளை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டுமானால் அது மணிக்கு 29000 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இந்த வேகத்தை சுற்றுப்பாதை வேகம் (Orbital Velocity) என்று சொல்கிறார்கள். இந்த வேகத்தில் செயற்கைக் கோளை செலுத்தினால் தான் அது பூமியின் மீது விழாமல் தொடர்ந்து பூமியைச் சுற்றி வரும்.

          பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து நிலா அல்லது வியாழன் அல்லது சனி போன்ற கோள்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் ராக்கெட் குறைந்தபட்சம் மணிக்கு 35000 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இந்த வேகத்தை விடுபடு வேகம் (Escape Velocity) என்று குறிப்பிடுகின்றனர். விண்கலம் சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு செல்ல வேண்டும் என்றால் அது மணிக்கு 59,700 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இந்த வேகம் அண்டவெளிவேகம்  (Cosmic Velocity) என்று குறிப்பிடப்படுகிறது.

அடுக்கு ராக்கெட் :

          செயற்கைக் கோளை அனுப்ப ஒற்றை அடுக்கு ராக்கெட்டால்  மணிக்கு 29000 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியாது. ஆகவே இரண்டு அல்லது பல அடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்து கின்றனர். ஒரு ராக்கெட்டின் பணி என்பது செயற்கைக்கோளையோ, அல்லது விண்கலத்தையோ பூமியின் கற்றுப்பாதைக்கு செலுத்தியப்பிறகு முடிந்து விடுகிறது. அதற்குப்பிறகு ராக்கெட்டிற்கும், செயற்கைக்கோள் மற்றும் விண்கலத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது.

          ராக்கெட்டில் எரிபொருளை ஒரே கொள்களில் எடுத்துச் செல்லுமாறு வடிவமைத்தால், உயரே செல்லச் செல்ல எரிபொருளின் அளவு குறையும். இதனால் கொள்கலனில் வெற்றிடம் ஏற்படும். கொள்கலனின் பளுவையும் சேர்த்து ராக்கெட் இழுத்துச் செல்ல வேண்டும். இதனால் ஆற்றல் வீணாக்கப்படுகிறது. எனவே கொள்கலனைப் பல சிறு சிறு கட்டங்களாக வடிவமைத்தால் அந்த பகுதியின் எரிபொருள் தீர்ந்தவுடன் அப்பகுதியை மட்டும் ராக்கெட்டிலிருந்து பிரித்து நீக்கிவிடலாம். இதனால் தேவையற்ற பகுதிகளை இழுத்து செல்ல தேவை இல்லை. ஆற்றலும் வீணடிக்கப்படுவதில்லை. இத்தனைய சில காரணங்களுக்காக ராக்கெட்டை ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கவும், நீக்கவும் கூடியதாக, பல்வேறு பகுதிகளாக (Rocket Staging) வடிவமைக்கப்படுகிறது. ராக்கெட் வடிவமைத்தில் ஏற்படும் சிக்கலைக் கொண்டு ஏழு கட்டங்களுக்கு மேல் ராக்கெட் உருவாக்கப்படுவதில்லை.

          ராக்கெட்டின் முதல்கட்டம் பொதுவாக மிகப் பெரியதாகவும், கடினமானதாகவும் வடிவமைக்கப்படுகிறது. இப்பகுதியே ராக்கெட்டை முதலில் உந்திச் செல்வதால் இது ஊக்கி (Booster) எனப்படுகிறது. மற்ற தொடர்ச்சியான கட்டங்கள் யாவும் முதலில் உருவாக்கப்பட்ட உந்து பாதையைத் தொடர்ந்து செல்ல உதவுவதால் அவை நிலை நிறுத்தி (Sustainer) எனக் குறிப்பிடப்படுகின்றன.

          ஒவ்வொரு கட்டமும் தன்னளவில் நிறைவான தனி ஊர்தியாகவே வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குத் தேவையான எரிபொருள், திசை மாற்றுங் கருவி, போதுமான அளவுள்ள கொள்கலன், கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக்கின்றன.

          பல அடுக்கு ராக்கெட்டுகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. முதல் அடுக்கு எரிந்து முடிந்தவுடன் கீழே விழுந்து விடுகிறது. இதன் பின் இரண்டாவது, மூன்றாவது அடுக்குகளுடன் முன்னே செல்கிறது. பின் இரண்டாவது அடுக்கு எரிந்து முடிந்தவுடன் கீழே விழுந்து விடுகிறது. பின் மூன்றாவது அடுக்கு மட்டும் முன்னே செல்கிறது.

          விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளில் உள்ள எந்திரங்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு முதல் பிரச்சனை என்பது வெப்பம் தான். இந்த வெப்பம், காற்றும் விண்வெளிக் கவசமும் உராய்வதனால் ஏற்படுகின்றது. ஆகவே அதன் வெப்பத்தை குளிரச் செய்வது ஒரு முக்கியப் பிரச்சனையாக அமைந்துள்ளது.

          மற்றொரு பிரச்சனை எரிபொருள் தொட்டி சம்பந்தப்பட்ட தாகும். தொட்டியில் சிறிது கூட கசிவு இல்லாமல் இருக்க வேண்டும். அதில் சிறிது கசிது ஏற்பட்டாலும் வெப்பம் வெளியேறி ராக்கெட் வெடித்துச் சிதறிவிடும். அதிக உயரத்தில் அதிக வேகத்துடன் செல்லும் போது மற்றொரு பிரச்சனை, அதன் எரிபொருள் சேமித்து வைப்பதில் உண்டாகும். இது தவிர மின் கம்பிகளைப் பாதுகாப்பதும் மற்றொரு பிரச்சனையாக உள்ளது.

ராக்கெட் நிலைகள்:

        பொதுவாக ராக்கெட்டுகள் மூன்று கட்ட நிலைகளைக் கொண்டிருக்கின்றன. முதல் கட்ட நிலையில் 27,000 பவுண்ட் வேகத்தில் அழுத்தப்படுகிறது. இது ராக்கெட்டை 65 கி.மீ. உயரத்திற்கு எடுத்துச் செல்கின்றது. அந்த இடத்தில் ராக்கெட்டின் வேகம் மணிக்கு 6500 கிலோமீட்டராக இருக்கிறது. முதல் கட்ட நிலையில் அது எரிந்து முடிந்தவுடன் கடலில் விழுந்து விடுகிறது.

          அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டம் எரிய ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் ராக்கெட் 225 கிலோ மீட்டர் உயரத்திற்குச் செல்கிறது. அப்போது இதனுடைய வேகம் மணிக்கு 17,500 கிலோமீட்டராக இருக்கிறது. இதன் இரண்டாவது கட்டமும் எரிந்து கடலில் விழுந்து விடுகிறது.

          மூன்றாவது கட்டத்தில் 480 கிலோமீட்டர் உயரத்தை அடைந்துவிடுகிறது. அப்போது விண்கலம் அல்லது செயற்கைக் கோள் விண்வெளியில் ஏவப்படுகிறது. மூன்றாவது கட்டமும் எரிந்து கீழே விழுந்து விடுகிறது.

          இப்படிப்பட்ட தொழில்நுட்ப உதவியால் தான் விண்வெளிக்கு ராக்கெட்டின் உதவியால் விண்கலங்களும், செயற்கைக் கோள்களும் ஏவப்படுகின்றன. இப்போது இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

செயற்கைக்கோள்கள்

        பூமியை இயற்கையாகச் சுற்றிக் கொண்டிருக்கிற நிலவைத் துணைக் கோள் என்கின்றோம். பூமியைப் போன்ற மற்ற கிரகங்களையும் துணைக் கோள்கள் சுற்றுகின்றன. அவை அக்கிரகத்தின் நிலாக்களாகும். இவை எல்லாம் இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக மனிதனால் உருவாக்கப்பட்டு பூமியைச் சுற்ற ஏவப்படும் துணைக்கோளை செயற்கைத் துணைக்கோள் என அழைக்கின்றனர். இதனைச் சுருக்கமாகச் செயற்கைக் கோள் (Artificial Satellite) என்கின்றோம்.

          ஒரு செயற்கைக் கோள் என்பது பூமியைச் சுற்றுவது அல்லது வேறு கிரகத்தைச் சுற்றுவது ஆகும். ஒரு இயற்கையான வான் பொருளை செயற்கையான ஒரு பொருள் சுற்றுவதைக் குறிப்பிடுகிறது. செயற்கைக் கோள் தகவல்களைச் சேமித்து உலக மக்களுக்கு அளிக்கிறது. செயற்கைக் கோளின் வளர்ச்சி என்பது பூமியில் வாழும்  உயிரின வாழ்க்கைக்கு உதவுகிறது.

          அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது. வீட்டின் உள் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது செயற்கைக்கோளாகும். உலகின் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையும், ஆழ்கடலில் வாழும் உயிரினங்களின் அழகைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது செயற்கைக் கோள் ஆகும். எப்போது மழை பெய்யும், புயலின் அறிகுறி ஆகியவற்றை முன் கூட்டியே அறிந்து கொள்ள உதவுகிறது. கடலில் மீன்கள் நிறைந்த பகுதி எது என்பதை மீனவர்களுக்கு சுட்டிக்காட்டும்  பணியைக் கூட செயற்கைக் கோள் செய்கிறது. செயற்கைக் கோள்கள் காற்றே இல்லாத இடத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அவை எந்த சப்தமும் இன்றி, இரைச்சலுமின்றி சுற்றுகின்றன. நாடுகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகின்றன

செயற்கைக் கோள் வரலாறு :

        செயற்கைக் கோள் வரலாறு என்பது ஒரு நீண்ட, ஆச்சரியப்படும் படியான ஒரு சாதனையாகும். ஐசக் நியூட்டன் என்கிற விஞ்ஞானி புவி ஈர்ப்பு விசை சம்பந்தமான கோட்பாட்டை 1687ஆம் ஆண்டில் வெளியிட்டார். அது செயற்கைக் கோளை அனுப்புவதற்கான வாய்ப்பை எடுத்துக் கூறுவதாக இருந்தது. ஒரு பந்தை மிக வேகமாக புவி ஈர்ப்பு விசையை மீறிச் செல்லும்படி வீசினால் அது பூமியைச் சுற்றி வரும் என நியூட்டன் தெரிவித்தார்.

          இருபதாம் நூற்றாண்டில் ரஷியாவைச் சேர்ந்த  சியேல்கோவ்விஸ்கி மற்றும் அமெரிக்க பேராசிரியர் ராபர்ட் காட்டார்ட் ஆகியோர் செயற்கைக்கோள் உருவாவதற்குப் பாதையைக் காட்டினர். சியேல்கோவ்விஸ்கியின் கோட்பாடானது வளி மண்டலத்திற்கு அப்பால் செலுத்தப்படுதல் பற்றி கூறியது. காட்டார்ட் செயற்கைக்கோளை எப்படி விண்வெளிக்கு எடுத்துச் செல்வது என்பது பற்றி ஆய்வு செய்தார். இவர்களைத் தவிர ரஷியாவின் செர்கி பாவ்லோவிச் என்பவர் செயற்கைக் கோளை ராக்கெட்டில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பலாம் என்றார்இவரே செயற்கைக் கோளை முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிபெற்றார்.

          செயற்கைக் கோள் உருவாக்கும் வரலாறு என்பது 1952ஆம்  ஆண்டில் துவங்கியது எனலாம். சர்வதேச அறிவியல் யூனியன் (International Council of Scientific Union) அக்டோபர் 1954ம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அது செயற்கைக் கோளைத் தயாரித்து பூமியைச் சுற்றி வர ஏற்பாடு செய்யுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை 1955ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் செயற்கைக் கோளை அனுப்பும் திட்டத்தை பல்வேறு ஏஜென்ஸிகளிடம் அறிவித்தது. 1955ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் கப்பல் துறை ஆய்வகம் வான்கார்டு என்கிறத் திட்டத்தை வெளியிட்டது. இதே ஆண்டில் ரஷியாவும் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை வெளியிட்டது. ரஷியாவின் ஸ்புட்னிக் திட்டம் முதலில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகின் பார்வையை ரஷியா தனது பக்கம் ஈர்த்தது.

ஸ்புட்னிக்-1 :

 

        சோவியத் ரஷியா செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவுவதற்காக சக்தி வாய்ந்த ராக்கெட்டைத் தயாரிக்கும் வேலையை 1957ஆம் ஆண்டில் துவக்கியது. ரஷியா R-7 என்கிற ராக்கெட்டை வடிவமைத்தது. இதன் புணைப் பெயர் செம்யோர்கா (Semyorka) என்பதாகும். இதற்கு லிட்டில் செவன் (Little Seven) என்பது பொருளாகும். இந்த ராக்கெட் 3,904 கிலோ நியூட்டன் உந்து விசை சக்தி கொண்டதாகும். மார்ச் 4, 1957ஆம் ஆண்டில் இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான ஏவுதளத்தை பைக்கனூர் (Baikonur) என்னுமிடத்தில் நிறுவியது.

          செர்கி பாவ்லோவிச் ஸ்புட்னிக் - 1 (sputnik-1) என்கிற செயற்கைக் கோளை வடிவமைத்தார். அது ஒரு எளிய வடிவம் தான். ஒரு மாதத்தில் தயாரிக்கப்பட்டது. இது ஒரு கூடைப்பந்து (Basket Ball) அளவிற்கு பெரியது. இது 53 செ.மீ. விட்டமும், 83.6 கிலோ எடையும் கொண்டது. இதில் இரண்டு 8 அடி நீளம் கொண்ட ஆண்டினாக்களும், இரண்டு 10 அடி நீளம் கொண்ட ஆண்டனாக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இது ரேடியோ சமிக்கைகளை பெற்று, ஒலி பரப்புவதற்காக பொருத்தப்பட்டிருந்தது. ஸ்புட்னிக்-1 என்கிற உலகின்  முதல் செயற்கைக் கோளின் ரஷியாவின் அரசு பெயர் என்பது “Fellow Traveler of the Earth” என்பதாகும்.

          இந்த செயற்கைக் கோள் ஜுன் மாதம் 1957ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை செப்டம்பர் 18, 1957ஆம் ஆண்டில் ஏவ திட்டமிட்டனர். ஆனால் ரஷியாவின் அக்டோபர் புரட்சி தினத்தை நினைவு கூறும் வகையில் அதனை அக்டோபர் 4,1957ஆம்

 ஆண்டு இரவு ரஷியாவின் நேரப்படி 10.28.04 மணிக்கு ஸ்புட்னிக்- 1 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அதிவேகமாக சென்று அது வானில் மறைந்தது. அது மீண்டும் 90 நிமிடம் கழித்துத்தான் தெரிந்தது.

          ஸ்புட்னிக்செயற்கைக் கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. அது மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றியது. பூமியை ஒருமுறை சுற்றி வர 1 மணி 36.2 நிமிடம் (98 நிமிடம்) நேரம் ஆனது. இது பூமிக்கு அண்மையாக 228 கிலோ உயரத்திலும், தொலைவு நிலையில் 947 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த செயற்கைக் கோள் பீப்பிடு (Peeped) என்கிற சப்தத்தை இடைவெளி விட்டு, விட்டு ஒலித்துக் கொண்டே சுற்றியது. இதனால் அது இருக்கும் இடம் நமக்குத் தெரிந்தது. இந்த செயற்கைக் கோள் ரேடியோ சமிக்கைகளைத் தொடர்ந்து அனுப்பியது.

          ஸ்புட்னிக் - 1 செயற்கைக் கோள் 92 நாட்கள் நன்றாக செயல்பட்டது. பின்னர் இது வளிமண்டலத்தின் உள்ளே நுழைந்து ஜனவரி 4, 1958இல் எரிந்து போனது.

          ஸ்புட்னிக் - 1 செயற்கைக் கோள் ரஷியாவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இது சோயத் ரஷியாவை விண்வெளி தொழில் நுட்பத்தில் முன்னோடியாக மாற்றியது, ஸ்புட்னிக் செயற்கைக் கோளின் வெற்றியானது. ஒரு புதிய விண்வெளி யுகத்தைத் தோற்றுவித்தது.

ஸ்புட்னிக் - 2

          ரஷியா மீண்டும் ஸ்புட்னிக் - 2 என்கிற செயற்கைக் கோளை நவம்பர் 3, 1957ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் செலுத்தியது. இதில்  உயிரியல் தகவல்களைச் சேகரிக்க லைக்கா என்கிற நாயை அனுப்பி வைத்தது. ரஷியாவும், அமெரிக்காவும் ஒரே சமயத்தில் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதிலும் ரஷியாவே இரண்டாவது முறையும் வெற்றி பெற்றது.

எக்ஸ் புளோரர் -1 :

          அமெரிக்காவின் வெர்னர் வான் பிரான் தலைமையில் எக்ஸ்புளோரர் (Explorer) திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரஷியா ஸ்புட்னிக்-1 என்கிற செயற்கைக் கோளை அனுப்பி நான்கு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கா  எக்ஸ்புளோரர்-1 என்கிற செயற்கைக் கோளை ஜனவரி 31, 1958 இல் முதன் முதலில் அனுப்பி வெற்றி கண்டது.

          இந்த செயற்கைக் கோளை அமெரிக்கா ஜுபிடர் - C (Jupiter-C) என்கிற ராக்கெட்டின் உதவியால் ஏவியது. இதனை கேப் கேனவரால் என்னும் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதற்கு ராணுவம் முழு பொறுப்பு எடுத்துக் கொண்டது.

          இந்த செயற்கைக் கோள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது. இது பூமிக்கு அண்மையில் 360 கிலோ மீட்டர் உயரத்திலும், பூமிக்குத் தொலைவில் 2460 கிலோ மீட்டர் உயரத்திலும் சுற்றி வந்தது. இது 8.3 கிலோ எடை கொண்டது.

          இந்த செயற்கைக் கோள் சிறிய அறிவியல் உபகரணங்களை எடுத்துச் சென்றது. இது பூமியைச் சுற்றியுள்ள காந்தப் புலன்களை கண்டறிந்தது. இந்த செயற்கைக் கோளில் சிறிய உபகரணங்கள் எடுத்துச் சென்றதை வைத்து, எடை குறைந்த பொருட்களை எடுத்துச் செல்லும் விண்கலம் உருவாக வழி வகுத்தது. அமெரிக்காவில் நாசா (NASA) என்கிற அமைப்பு உருவாக இந்த செயற்கைக் கோள் காரணமாக அமைந்தது.

          எக்ஸ்புளோரைத் தொடர்ந்து அமெரிக்கா விண்வெளிப் போட்டியில் ஈடுபட்டது. பல செயற்கைக் கோளைத் தயாரித்து அனுப்பியது. எக்ஸ்புளோரர்-1 என்கிற செயற்கைக் கோள் 1970ஆம் ஆண்டில் செயலிழந்தது. இந்த செயற்கைக் கோள் வான் ஆலன் வளையங்கள் (Van Allen ratiation belt) என்னும் கதிர்வீச்சு பகுதியைச் கண்டுபிடித்து ஆராய்ந்தது. இந்த செயற்கைக் கோளானது 12 ஆண்டுகளில் பூமியை 58376 முறை சுற்றியது.

          எக்ஸ்புளோரர் - 2 என்ற செயற்கைக் கோளை அமெரிக்கா மார்ச் 5, 1958 இல் அனுப்பியது. மார்ச் 15 இல் ரஷியா ஸ்புட்னிக்-3 செயற்கைக் கோளை அனுப்பியது. இதனை அடுத்து மார்ச் 17, 1958 இல் அமெரிக்கா வான்கார்டு (Vanguard) என்கிற செயற்கைக் கோளை அனுப்பியது. இதுதான் முதன்முதலில் சூரிய பேனல்களை பயன்படுத்தி இயங்கிய செயற்கைக் கோளாகும். முதல் தகவல் செயற்கைக் கோளான ஸ்கோர் (Score) டிசம்பர் 18, 1958 இல் ஏவப்பட்டது. இது 12 நாட்கள் மட்டுமே சுற்றியது. பாட்டரி செயலிழந்து போனது.

          அமெரிக்காவும், ரஷியாவும் 1958ஆம் ஆண்டில் 6 செயற்கைக் கோளையும், 1959ஆம் ஆண்டில் 14 செயற்கைக் கோளையும், 1960ஆம் ஆண்டில் 19 செயற்கைக் கோளையும், 1961ஆம் ஆண்டில் 35 செயற்கைக் கோளையும், 1962ஆம் ஆண்டில் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் ரஷியா மற்றும் அமெரிக்க நாடுகளின் உதவியுடனும் செயற்கைக் கோள்களை அனுப்பின. இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷியா 70 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது.

          1958ஆம் ஆண்டில் செயற்கைக் கோள்கள் பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தன. இதற்கு அடுத்தக் கட்டமாக நமது பூமியின் நிலாவை ஆய்வதற்கான வரலாறு 1959ஆம் ஆண்டில் துவங்கியது. ரஷியா லூனா -1 (Luna-1) என்கிற விண்கலத்தை

ஜனவரி 2, 1959ஆம் ஆண்டில் ஏவியது. இந்த விண்கலம் மணிக்கு 35000 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. இது பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு நிலாவை நோக்கிச் சென்றது. ஆனால் நிலாவின் சுற்றுப்பாதையை அடையாமல் சூரியனின் அருகில் சென்று சூரியனைச் சுற்றியது. அக்டோபர் 4, 1959ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட லூனா- 3 நிலாவின் சுற்றுப் பாதைக்குச் சென்றது. இது நிலாவின் மறுபுறத்தைப் புகைப்படும் எடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும், ரஷியாவும் பிற கோள்களை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பத் தொடங்கின.

          அதே சமயத்தில் புவியின் சுற்றுப்பாதைக்கு தகவல்களை அறிவதற்காக பல செயற்கைக் கோள்களை அனுப்பின. அமெரிக்காவின் நாசா அமைப்பு எக்கோ-1 (Echo-1) என்கிற செயற்கைக் கோளை ஆகஸ்ட் 12, 1960இல் ஏவியது. இது பூமியை 114 நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றியது. இது ரேடியோ சமிக்கைகளை பூமிக்கு திருப்பி பிரதிபலித்தது.

டெலிஸ்டார்-1 :

          டெலிஸ்டார்-1 (Telestar-1) என்கிற செயற்கைக் கோள் 1962ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. இது தொலைபேசி அழைப்பு மற்றும் புகைப்படங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒளிபரப்பியது. இது முழுக்க கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிபரப்பியது. இது 600 தொலைபேசி சேனல்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது. இதுதவிர தொலைக்காட்சி சேவைக்கும் உதவியது. டெலிஸ்டார்-2 என்கிற செயற்கைக் கோள் 1963இல் ஏவப்பட்டது. இது ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தியது.

          ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்தையும் மற்றும் விண்வெளியின் உள் பகுதியையும் ஆராய்ந்தன. அதன் பின்னர் செயற்கைக் கோள்கள் தொலைத் தொடர்பிற்கும், தொலைவில் தகவல்களை அனுப்புவதற்கும், தொலைபேசி கம்பெனிகளுக்கும், தொலைக்காட்சி கோள்களுக்கும், செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளுக்கும் உதவுவற்காக அனுப்பப்பட்டன. செயற்கைக் கோள்கள் ரேடியோ கதிர்கள் வடிவில் செய்திகளைப் பூமிக்கு அனுப்புகின்றன. ரேடியோ ராடார் சாதனங்கள்  மூலம் விண்வெளியில் சுற்றும் இவற்றை விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர்.

          செயற்கைக் கோள்கள் ஆரம்பக் காலத்தில் உருவாக்கப் பட்டதைப் போல் இன்று இல்லை. அவை நவீன வளர்ச்சி பெற்றுள்ளன. இவை கணினி மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தகவல்களைச் சேகரிக்கின்றன. இவை நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக உள்ளன. மனித வாழ்க்கையை மேலும்

மேலும் வளர்ச்சியடைய உதவுகின்றன.

          ஆரம்பக் காலத்தில் ரஷியாவும், அமெரிக்கவும் மட்டுமே செயற்கைக் கோளை அனுப்பின. பிற நாடுகளும் செயற்கைக் கோள்களை அனுப்ப ரஷியா மற்றும் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று அவர்களின் உதவியுடனே விண்வெளிக்கு அனுப்பின. இதன் பின்னர் ஆசியா, ஐரோப்பா ஆகியவையும் செயற்கைக் கோள்களை அனுப்பும் போட்டியில் ஈடுபட்டன. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி உருவாக்கப்பட்டது. ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகளும் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுயமாக அனுப்பின.

கட்டமைப்பு :    

          செயற்கைக் கோளின் வடிவம் என்பது பொதுவாக உருளை வடிவம், கன செவ்வக வடிவம், கோளக வடிவம், நான் முக வடிவம், எண் முக வடிவம் போன்ற அமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன. உருண்டை, உருளை, பெட்டகம் போன்ற வேறு பல வடிவங்களிலும் செயற்கைக் கோள்கள் உருவாக்கப்படுகின்றன. இது போல் உருவாக்கப்படும் செயற்கைக்க கோளின் எடை என்பது சிலவற்றில் ஏறத்தாழ 30 டன் கூட இருக்கும்.

          செயற்கைக் கோள்களை எடைக்குறைந்த அதே சமத்தில் உறுதிமிக்க சிறப்பு உலோகத்தால் உருவாக்குகின்றனர். அலுமினியம், பெரிலியம், மக்னீசியம், கிராபைட் என்னும் கரி இழை வலிவூட்டிய நெகிழிப் பொருட்கள் கொண்டு அவை கட்டமைக்கப்படுகின்றன. வெளியில் மெல்லிய பிளாஸ்டிக் தகடுகள் ஒட்டி அவற்றின் மேல் மெல்லிய அலுமினியம் அல்லது தங்கப்படலம் மூடிப்படுகிறது. இதுவே வெப்பத்தைத் தாங்கும் தடுப்புப் பூச்சாக (Thermal insulation) உள்ளது. விண்வெளியின் கடுங்குளிரிலிருந்து 7Kமீ வெப்பநிலை வரை தட்ப வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் இவற்றிற்கு இருக்கிறது. இதற்கென்றே விண்வெளிக்கு அனுப்பும் முன்பு, இச்செயற்கைக் கோள்களை நீர்ம ஹைட்ரஜன் பீப்பாய்க்குள் மூழ்கச் செய்தும், உயர் வெப்ப நிலைக்குச் சூடேற்றியும் அவற்றின் வெப்பம் தாங்கும் திறனை ஆய்வு செய்வர்.

          செயற்கைக் கோளில் உள்ள கணினி மற்றும் இதரக் கருவிகள் இயங்க அவற்றிற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக செயற்கைக் கோளின் இருபுறமும் இரண்டு இறகுகள் போன்று இரண்டு ஒளிர் பலகைகள் இருக்கின்றன. அவற்றில் சிறு சிறு துகள்களால் பதிக்கப்பட்ட சூரிய மின்கலங்கள் (Solar Cells) உள்ளது. இவை எப்போதும் சூரியனை நோக்கியே இருக்கின்றன. இது சூரியனின் ஒளியாற்றலை உட்கவர்ந்து அதை மின்சாரமாக்குகிறது. இதனை செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் பாட்டரிகளில் (Batteries) மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

          செயற்கைக் கோள் பூமியைச் சுற்றும் போது ஒவ்வொரு முறையும் பூமியின் இருண்ட பகுதிக்குச் சென்று வருகிறது. அப்போது பாட்டரியில் சேமித்து வைத்திருக்கும் மின்சாரத்தைச் செலவழிக்கிறது. ஒரு சில செயற்கைக் கோள்கள் சிறு அணு உலைகளையும் (Nuclear reactors) கதிரியக்கப் பயன்படுத்திக் கொள்கின்றன.

          ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து கட்டமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு செயற்கைக் கோளை உருவாக்க குறைந்தது. 50 கோடி ரூபாய் செலவாகும்.

சுற்றுப்பாதை:

          செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்திய பிறகு அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட, ஒரு நிர்ணயம் செய்யப்பட்ட பாதையில் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. இதன் பாதை என்பது எப்போதும் மாறுவதில்லை. செயற்கைக் கோளானது பூமியை ஒரு முறை சுற்றுவது என்பது அது பூமிக்கு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொறுத்தே அமைகிறது. பூமிக்கு அருகில் உள்ள செயற்கைக் கோள் பூமியை மிகக் குறைந்த நேரத்திலேயே ஒரு சுற்று சுற்றி விடுகிறது.

          பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது. பொதுவாக செயற்கைக் கோள் கிழக்கு மேற்காக சுற்றி வருகிறது. இதற்கு பூமியின் சுழற்சி வேகமும் கிடைக்கிறது. மேற்கு, கிழக்கு, வடக்குத்  தெற்கு, தெற்கு வடக்காக சுற்றும் செயற்கைக் கோள்களும் உண்டு.

          செயற்கைக் கோளின் சுற்றுப்பாதை பொதுவாக நீள் வட்டமாகவே இருக்கிறது. ஒரு சில செயற்கைக் கோள்கள் மட்டுமே வட்டப்பாதையில் சுற்றுகின்றன. செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு உயரத்தில் வெவ்வேறு வேகத்தில் சுற்றுகின்றன. ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் ஒரு சுற்றுப்பாதை உண்டு. இவை எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாது. ஆகவே செயற்கைக் கோள் விபத்துக்கள் ஏற்படாது.

          ஒரு செயற்கைக் கோள் 1000 கிலோ மீட்டர் உயரத்தில் வட்ட வடிமாக சுற்றும்படி ஏவினால் அதன் வேகம் மணிக்கு 26,489 கிலோ மீட்டராக இருக்கும். இதுவே 5000 கிலோ மீட்டர் உயரத்தில் வட்டப்பாதையில் சுற்றும் செயற்கைக் கோளின் வேகம் என்பது மணிக்கு 21,327 கிலோ மீட்டராக இருக்கும். செயற்கைக் கோள் 25000 கிலோ மீட்டர் உயரத்தில் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றினால் அதன் வேகம் மணிக்கு 12840 கிலோ மீட்டராக இருக்கும். ஒரு செயற்கைக் கோள் எந்தளவிற்கு பூமியிலிருந்து தொலைவில் இருக்கிறதோ அந்தளவிற்கு சுற்றுப் பாதையின் வேகம் (Orbital Velocity) குறைவாக இருக்கும். பொதுவாக செயற்கைக் கோளை 35,786 கிலோமீட்டர் உயரத்திற்கு மேல் யாரும் அனுப்புவதில்லை.

          செயற்கைக் கோளை ஒரு குறிப்பிட்டப்பாதையில் சுற்றி வர விட்டப்பின் அதன் பாதையை மீண்டும் மாற்றி அமைப்பது சிரமம். செயற்கைக் கோளைக் குறிப்பிட்ட வகையில் மாற்றுவதற்கு அதில் சிறிய ராக்கெட் வைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டால், ஹைட்ரசின் போன்ற திரவ எரிபொருள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த எரிபொருள்  செயற்கைக் கோளின் தகுதி மற்றும் நிறைக் கேற்ப நிறைக்கப் பட்டிருக்கும். இந்த ராக்கெட்டை இயக்குவதன் மூலம் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். ஆனால் செயற்கைக் கோள் சுற்றுகிற திசையை மாற்ற முடியாது.

          பூமிக்கு அருகில் செயற்கைக் கோள் இருந்தால் அது பூமியின் ஈர்ப்பு விசையின் பிடியில் சிக்காமல் இருக்க மிக வேகமாக சுற்றுகிறது. தொலைவில் செயற்கைக் கோள் சுற்றும் போது புவியின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கிறது. ஆதலால் செயற்கைக் கோளின் வேகம் குறைவாக இருந்தாலும் புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்க முடியாது.

சுற்றுதளம் :

          செயற்கைக் கோள் சுற்றி வரும் தளத்தைச் சுற்றுதளம் (Orbital plane) என்கின்றனர். துருவப் பகுதிகளின் வழியாக சுற்றி வரும் செயற்கைக் கோள்கள் கிழக்கு நோக்கியே விரைகின்றன. இவை 90O கோண அளவுக்குட்பட்ட சாய்மானத்துடன் சுற்றுகின்றன. பொதுவாக 0-90O வரை தள சாய்மானம் உடைய சுற்றுப்பாதைகள் முன்னோக்குச் சுற்றுப்பாதைகள் (Prograde Orbits) எனப்படும்.

          ஒரு செயற்கைக் கோளானது 90O டிகிரிக்கும் கூடுதலாகும் போது அந்த செயற்கைக் கோள் மேற்கு நோக்கி பயணம் செய்யும். இவ்வகைச் சுற்றுப்பாதைகளைப் பின்னோக்குச் சுற்றுப்பாதைகள் (Retrograde Orbits) எனலாம். இருப்பினும் ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் ஒரே குறிப்பிட்ட சாய்மானமுடைய சுற்றுதளத்திலேயே இயங்கும்.

          இதன் அடிப்படையில் காணும் போது செயற்கைக் கோள்கள் மூன்று வகையான சுற்றுப் பாதைகளில் பூமியைச் சுற்றுகின்றன. அவை தாழ் புவிச் சுற்றுப்பாதை, புவி நிலை வட்டப்பாதை மற்றும் சூரிய ஒத்தியக்கப்பாதை ஆகும்.

தாழ்புவிச் சுற்றுப்பாதை :

          பூமிக்கு மேல் ஏறக்குறைய 600 கிலோ மீட்டர் உயரம் வரை இயங்கும் செயற்கைக் கோளின் பாதையை தாழ்புவிச் சுற்றுப்பாதை அல்லது தாழ் புவி வட்டப்பாதை என்கின்றனர். இத்தகைய செயற்கைக் கோள்கள் பூமியை ஒரு முறை சுற்றி வர 1.30 மணி நேரம் ஆகிறது. இதற்கு உதாரணமாக இந்திய செயற்கைக் கோள்களான ஆர்யபட்டா, பாஸ்கரா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

          இந்த செயற்கைக் கோள்கள் வளிமண்டலம், அயன மண்டபம், காந்த மண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றன. இது தவிர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராணுவ படைத்தளங்களைக் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. மேலும் வானிலை ஆய்வு மற்றும் வேவு பார்க்கவும் இது உதவுகின்றன.

புவி நிலை வட்டப்பாதை :

          செய்தி பரிமாற்ற செயற்கைக் கோள்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒலி பெருக்கிகளைக் கொண்டிருக்கின்றன. பூமியின் புறப்பரப்பில் உள்ள தரை நிலையத்திலிருந்து பெறும் செய்தியைப் பெரிதாக்கி மீண்டும் பூமியின் வேறு ஒரு நிலையத்திற்கு அனுப்புகின்றன. இதனால் ரேடியோ, தொலைபேசி, தொலைக்காட்சி செய்திகள் உலகின் எல்லாப் பகுதிக்கும் செல்லும் வசதி கிடைக்கிறது. இதனை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டுமானால் செயற்கைக் கோள்கள் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது. ஆனால்  பூமியானது சுற்றுகிறது. ஆகவே பூமியின் சுற்று வேகத்திற்கு ஏற்ப செயற்கைக் கோளின் வேகமும் இருந்தால் ஒரே இடத்தில் செயற்கைக் கோள் இருக்குமாறு அமையும். இத்தகைய செயற்கைக் கோளை பூமியோடு ஒருங்கிணைந்த செயற்கைக் கோள் (Geosynchronous satellite) என்பர்.

          பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகிறது. ஒரு செயற்கைக் கோள் நில நடுக்கோட்டின் மேல் ஏறக்குறைய 36000 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கும் போது அதன் சுற்றுக் காலம் 24 மணி நேரமாக இருக்கிறது. ஆகவே இச்செயற்கைக் கோள் புவியோடு ஒத்த வேகத்தில் இயங்குகிறது.

          1962ஆம் ஆண்டு டெல்ஸ்டார் (Telstar) என்கிற செயற்கைக் கோள் அமெரிக்காவிற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்த அனுப்பப்பட்டது. அது 22 நிமிடங்கள் தொலைக்காட்சித் தொடர்பை அளித்துவிட்டு பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. செயற்கைக் கோளின் உயரத்தை அதிகரித்தால் அதன் கடந்து செல்லும் வேகத்தைக் குறைக்கலாம் என்பதை உணர்ந்தனர். சுமார் 36000 கிலோமீட்டர் உயரத்தில் நில நடுக்கோட்டிற்கு மேலாக செயற்கைக் கோளை இயக்கினால் ஒரே நிலையில் 24 மணி நேரமும் செயற்கைக் கோள் தென்படும் என்றும், அறிந்தனர்.

          1963ஆம் ஆண்டு பிப்ரவரியில் சின்காம்-1 (Syncom-1) என்ற செயற்கைக் கோள் முதன் முதலாக புவியுடன் இணைந்து செயல்பட்டது. 1963ஆம் ஆண்டு ஜுலை 26இல் சின்காம் - 2 என்கிற செயற்கைக் கோள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அமெரிக்கா விண்ணில் செலுத்தியது. அதுவே புவியின் இணைந்து வெற்றிகரமாக இயங்கிய முதல் செயற்கைக் கோளாகும். 1964இல் சின்காம்-3 என்கிற செயற்கைக் கோள் பசிபிக் கடலுக்கு மேலாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதனால் ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளை அமெரிக்காவில் நேரடித் தொலைக்காட்சி மூலம் காண உதவியது.

          புவியுடன் இணைந்த செயற்கைக் கோள்கள்36000 கிலோ மீட்டர் உயரத்தில் மணிக்கு 11088 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றும்.

சூரிய ஒத்தியக்கப் பாதை :

        நில நடுக்கோட்டோடு ஏறக்குறைய 90 டிகிரி சாய்ந்த கோணத்தில் துருவங்களின் வழியாக 1000 கிலோமீட்டர் உயரத்தில்  சுற்றினால் அது ஒரு நாளைக்கு பூமியை 15 அல்லது 16 முறை சுற்றி வரும். 893 கிலோமீட்டர் உயரத்தில் 99 டிகிரி சாய்ந்த கோணத்தில் சுற்றுப்பாதை அமைந்தால் நாள் ஒன்றுக்கு 14 முறை பூமியைச் சுற்றி வரும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறிப்பிட்ட சுற்றின் போதும் நிலநடுக்கோட்டை ஒரு குறித்த தல நேரத்தில் (Local time) நடக்கும். அதாவது நாள் தோறும் அது நிலநடுக்கோட்டைக் கடந்து பறக்கும் இடம் சூரிய ஒளியில் ஒரே அளவு ஒளி பெற்றுத் திகழ்கிறது. அதனால் நிலநடுக்கோட்டின் அடுத்தடுத்த இடங்களை ஒரே பொழுதின் சீரான பகல் ஒளியில் படம் பிடிக்க முடிகிறது. இதனைத் துருவச் செயற்கைக் கோள்கள் (Polar Satellites) செய்கின்றன.

          பூமிக்குள் புதைந்து கிடக்கும் எண்ணெய், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய இவை உதவுகின்றன. இந்தியா 1988ஆம் ஆண்டு மார்ச்-17 அன்று வாஸ்டாக் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஐ.ஆர்.எஸ்-1A (IRS - IA) என்கிற முதல் தொலை உணர்வு செயற்கைக் கோளை ஏவியது. இது இந்திய நேரப்படி காலை 10.25 மணிக்கு நில நடுக்கோட்டைக் கடந்து செல்கிறது. சூரிய ஒளிக்கதிர்கள் ஒரே சாய்வாக விழும் பகுதிகளைக் குறிப்பிட்ட  நேரத்தில் பதிவாக்கும் இச்செயற்கைக் கோளின் பாதையைச் சூரிய ஒத்தியக்கப் பாதை என்று குறிப்பிடுகின்றனர்.

செயற்கைக் கோளின் பயன் :

          கடலின் அடியில் உள்ளதை அறிவதற்கு செயற்கைக் கோள்கள் உதவுகின்றன. பனிமலையில் பனி உருகுவதை அளவிட விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. நிலத்திற்கு அடியில் எங்கெங்கு கனிம வளங்கள் உள்ளன, எவ்வளவு ஆழத்தில் உள்ளன என்பதை கண்டறிய இது உதவுகிறது. புயல் வீசுவது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எங்கே மையம் கொண்டுள்ளது என்பதை அறியலாம். கப்பல்களுக்கு வழி சொல்லுதல், ராணுவத்திற்கு உதவுதல் மற்றும் விண்வெளியில் உள்ள கிரகங்கங்களையும், வான் பொருட்களையும் ஆராய்வதற்கு செயற்கைக் கோள்கள் உதவுகின்றன.

          புதிய நில அளவுப் படங்களை வரைய செயற்கைக் கோள்கள் உதவுகின்றன. பூமியின் ஈர்ப்பு விசையில் உள்ள முரண்பாடுகளை கண்டறிய உதவுகின்றன. பூமியின் உண்மையான வடிவத்தை அறிந்திட விஞ்ஞானிகளுக்கு உதவியது செயற்கைக் கோள் தான். ஒரு இடத்தையோ, அதன் தொலைவையோ மிகத் துல்லியமாக கணக்கிட உதவியதும் செயற்கைக் கோள் தான்.

          சில செயற்கைக் கோள்களில் புகைப்படம் பிடிக்கும் கருவிகள் உள்ளன. இதன் மூலம் வானிலையை அறிய முடிகிறது. சில செயற்கைக்கோளில் தொலை நோக்கிகளும் உள்ளன. இதன் மூலம் கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய இயலுகிறது. இதன் மூலம் தரையில் செயல்படும் ஆய்வு நிலையங்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் கிடைக்கின்றன. செயற்கைக் கோள் வசதி வந்த பிறகு வானவியல் நிபுணர்கள் புதிய சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

          சில செயற்கைக் கோள்கள் பூமியின் வளத்தைக் கண்டறிய உதவுகின்றன. இவை புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி பூமியின்  உள்ளே உள்ள பாறைகள், படிவங்கள், கனிமங்கள், நீர்ப்பரப்பு, நீர் நிலைகள் ஆகியவற்றைத் தந்து உதவுகின்றன.

 

 

வகைகள் :

          செயற்கைக் கோள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்குத் தேவையான காரியங்களுக்காகவே செயற்கைக் கோள்களை அனுப்பி உள்ளன; அனுப்புகின்றன.

          ஒரு செயற்கைக் கோள் எந்தப் பணிக்காக, எந்தக் காரியத்திற்காக அனுப்பப்படுகிறதோ அதன் நோக்கத்திற்கு ஏற்ப உபகரணங்கள் தயாரித்து உள்ளே வைக்கப்படுகின்றன. பல்வேறு பயன் கருதியே செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனஇச்செயற்கைக் கோள்களால் கிடைக்கும் பயன்களைப் பொருத்து செயற்கைக் கோள்களை பல்வேறு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1.  அறிவியல் ஆய்வு வகைச் செயற்கைக் கோள்

2.  தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்

3.  புவி அளவைச் செயற்கைக் கோள்

4.  பயண அமைப்புச் செயற்கைக் கோள்

5.  வேவுச் செயற்கைக் கோள்

6.  வானிலை ஆய்வுச் செயற்கைக் கோள்

7.  தொழில் நுட்பச் செயற்கைக் கோள்

8.  கடற் செயற்கைக் கோள்

9.  சுற்றுப்புறச் செயற்கைக் கோள்

          இவை தவிர வேறு பல செயற்கைக் கோள்களும் இருக்கின்றன. இந்த செயற்கைக் கோள்கள் தகவல் தொடர்புத் துறை, அளவியல், கப்பல் துறை, வளி மண்டலக் கட்டுப்பாட்டுத் துறை போன்றவற்றிற்கும் மிக இன்றியமையாதவைகளாக விளங்குகின்றன. அளவியல் தொடர்பான செயற்கைக் கோளின் செயல்பாடு, செயற்கைக் கோள்களில் உள்ள கருவிகளின் திசை எப்போதும் பூமியை நோக்கியே இருக்கும்.

          தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலைபேசி இணைப்பு போன்ற தகவல் தொடர்புக்குரிய கருவிகளைச் சுமந்து புவிவைச் சுற்றி வருகின்றன. இச்செயற்கைக் கோள்களின் மூலம் மக்களுக்கு நேரடியான பலன் கிடைக்கின்றது.

பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய 11 ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தை (European Space Agency) உருவாக்கி உள்ளன. இது தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா மாநிலத்தில் உள்ள கூறு என்னும் ஏவுதளத்திலிருந்து ஏரியன்- 3 என்னும் விண்கலத்தின் மூலம் ஒலிம்பஸ் என்னும் செயற்கைக் கோள் ஜுலை 12, 1989 இல் ஏவியது. இது உலகின் மிகப்பெரிய தொலைத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இதன் மூலம் வீடுகள் தோறும் செயற்கைக் கோளிலிருந்து நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பெற முடிகிறது.

          வேவு பார்க்கும் செயற்கைக் கோள்கள் (Spysatellite) மூலம் வேறு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக விண்வெளியில் மிகுதியாக சுற்றுகின்றன. ஆரம்பத்தில் அமெரிக்கா ரஷியா மற்றும் சீனாவை வேவு பார்ப்பதற்காக அனுப்பியது. இந்த செயற்கைக் கோள்களில் மிகவும் சக்தி வாய்ந்த கேமிராக்கள் உள்ளன. இது காரில் உள்ள நெம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்களைக் கூட துல்லியமாக புகைப்படம் எடுக்கும் சக்தி கொண்டது. சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் கூட படம் எடுத்துக் கொடுத்து விடுகின்றன. சுமார் 400 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றும் இவ்வகை செயற்கைக் கோள்கள் பூமியில் பேசுவதைக் கூட ஒட்டுக் கேட்கின்றன.

            ஜி.பி.எஸ். செயற்கைக் கோள்கள் பூமியின் பரப்பை வெகுவாக சுருக்கிவிட்டன. சமீபத்தில் செயற்கைக் கோளின் முன்னேற்றத்தில் ஒன்று ஜி.பி.எஸ். ஆகும். ஜி.பி.எஸ். என்றால் குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் என்பதாகும். இதனை தமிழில் உலக நிலைக் காட்டுத் தொகுப்பு என்கின்றனர். இதற்காக பூமியைச் சுற்றி 24 செயற்கைக் கோள்களை ஒரே இடத்தில் நிலை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த செயற்கைக் கோள்களின் தொகுப்பே ஜி.பி.எஸ். ஆகும்.

          உலகின் ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கான வரைபடத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. உலகில் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதை ஜி.பி.எஸ். மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்காக ஒரு ஜி.பி.எஸ். ரிசீவரை வைத்திருந்தால் போதும். உலகின் எந்த மூலையில் நிற்கும் ஒரு ஆளையும் கண்டுபிடித்து விடலாம். இன்றைக்கு அமெரிக்கா கார்களிலும், பஸ்களிலும் ஜி.பி.எஸ். ரிசீவரை பொறுத்தியுள்ளது.

          இது உலகின் முழுப்பரப்பையும் எட்டுகிறது. பயணம் செய்வதற்கு எளிதாக சுருக்கமான வழியைக் காட்டுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகியவற்றிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

          வருங்காலத்தில் மொபைல் போனிலும் இந்த வசதி வரப்போகிறது. ஒரு நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல ஜி.பி.எஸ். சிடம் கேட்டால், செல்போன் திரையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வரைபடத்தைக் காட்டும். ஆகவே அந்த இடத்திற்கு எந்த சிரமும் இன்றி, யாருடைய உதவியும் இன்றி சென்று விடலாம்.

செயற்கைக் கோளுக்கான எரிபொருள்:       

          ஒரு செயற்கைக் கோளை விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட பாதையில் கொண்டும் சேர்த்து, அதற்கு பக்கவாட்டில் ஒரு குறிப்பிட்ட வேகத்தைக் கொடுத்து விட்டால் அது பூமியைச் சுற்றி, சுற்றி வரும். இதற்கு எரிபொருள் தேவை இல்லை. எஞ்ஜினும் கிடையாது. அதாவது ஒரு பொருளைக் கூட விண்வெளிப்பாதையில் செலுத்தி விட்டால் அதுவும் செயற்கைக் கோளைப் போல் பூமியைச் சுற்றி வரும்.

          ஒரு செயற்கைக் கோளை 160 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல் கொண்டு சென்று மணிக்கு 29000 கிலோ மீட்டர் வேகத்தில்  பக்கவாட்டில் வீசினால் அது பூமியைச் சுற்றும் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டாலும், அதன் வேகம் காரணமாக பூமியில் விழாது.

ஆயுள் காலம் :

            ஒரு செயற்கைக் கோளின் ஆயுட்காலம் என்பது அது சுற்றும் உயரத்தைப் பொறுத்தது. ஒரு செயற்கைக் கோள் 3000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது என்றால் அது பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுட் காலத்தைக் கொண்டிருக்கும். ஒரு செயற்கைக் கோள் 150 கிலோ மீட்டர் உயரத்தில் வட்டப்பாதையில் சுற்றுகிறது என்றால் அதன் ஆயுட்காலம் மணிக்கணக்கில் அல்லது ஒரு நாளில் முடிவதாக இருக்கும்.

            பொதுவாக செயற்கைக் கோள்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி இறங்குகின்றன. செயற்கைக் கோள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி, இறுதியில் பூமியின் வளி மண்டலத்தின் உள்ளே நுழையும். அப்போது வளி மண்டலத்தின் பயங்கர வெப்பத்தால் செயற்கைக் கோள் தீப்பிடித்து முற்றிலும் அழிந்து போகும்.

          பூமி முழு உருண்டையாக, வளவளப்பாக இருந்தால் செயற்கைக் கோளின் சுற்றுப் பாதையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. ஆனால் அது முழு உருண்டை அல்ல. துருவப்பகுதி சற்று அழுத்தினால் போல் உள்ளது. பூமி ஆரஞ்சு பழம் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் பூமியின் மேல் பரப்பு மலை, கடல், கண்டங்கள் போன்றவை ஒழுங்கற்று இருப்பதால் புவி ஈர்ப்பு  விசை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதனால் செயற்கைக் கோளின் சுற்றுப்பாதையில் பாதிப்பு ஏற்படுகிறது.

          செயற்கைக் கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் போது பூமிக்கு அருகில் வரும் போது அதன் தொலைவு குறைவாக இருக்கும். அப்போது ஈர்ப்பு விசையால் பாதிப்பு ஏற்படுகிறதுஇதனால் ஒவ்வொரு சுற்றின் போதும் செயற்கைக் கோள் பூமியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. காலப் போக்கில் செயற்கைக் கோளின் சுற்றுப்பாதை வட்டமாகி, பின்  பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்து எரிந்து போகிறது.

தரைக் கட்டுபாட்டு நிலையம் :

          செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் புவியின் பல இடங்களில் உள்ளன. அவையே செயற்கைக் கோள்களைப் பின்பற்றி வழி நடத்தும் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் (Ground Control stations) ஆகும். செயற்கைக் கோள்களின் வேகத்தையும் அவை செல்ல வேண்டிய பாதையையும் கட்டுப்படுத்தி, செயற்கைக் கோள்களின் தடம் புரண்டு விடாமல் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் கவனித்துக் கொள்கின்றன.          தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் செயற்கைக் கோளுக்கு மின் குறிப்பலைகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. செயற்கைக் கோளை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. செயற்கைக் கோள் நிலை மாறும் போது அதனைக் கட்டுப்படுத்தி, அதன் இயக்கத்தைக் கண்காணித்து வழி நடத்துகின்றன. செயற்கைக் கோள்கள் புவியின் சுழல் வேகத்திற்குச் சமமான வேகத்தில் சுற்றுவதால் ஓரிடத்தில் நிலைத்திருக்கும்படி செய்யப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் ஒரு செயற்கைக் கோள் நாள் ஒன்றுக்கு 20 கிலோமீட்டர் தொலைவு வரை தன் நிலையிலிருந்து நகர்ந்து விடுகிறது. அப்போது தரையிலிருந்து கட்டுப்பாட்டுக் குறிப்பலைகளை அனுப்பி, செயற்கைக் கோளைப் பழைய நிலைக்கு கொண்டுவருவது இந்த நிலையங்களின் பணியாகும்.

          தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள் அனைத்தும் ஒரே வகையானது அல்ல. இந்த நிலையங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றன. அவை

1.  A வகை நிலையங்கள்

2.  B வகை நிலையங்கள்

3.  C வகை நிலையங்கள்

          தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களில் A வகை நிலையங்கள் பெரியதாகும். செயற்கைக் கோளுக்குக் குறிப்பலைகளை அனுப்பும் இதன் உணர் சட்டம் ஒரு பெரிய பரவளையம் போன்றது. இது 30 மீட்டர் விட்டம் கொண்டிருக்கும்.

          B வகை நிலையம் சிறியது. இதிலிலுள்ள உணர் சட்டம் பரவளையம் போன்றதே. இதன் விட்டம் 11 மீட்டராகும். A மற்றும் B வகை நிலையங்களின் கோளுக்கு அனுப்பும் அலையின் அதிர்வெண் 6000 மெகா ஹெர்ட்சாகும். செயற்கைக் கோளிலிருந்து பெறும் அதிர்வெண் 4000 மெகா ஹெர்ட்சாக இருக்கும்.

          மூன்றாவது C வகை நிலையத்தின் அலை அனுப்பும் உணர் சட்டத்தின் பரவளையம் 19 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த நிலையத்தின் அலை அனுப்புதல் அதிர்வெண் என்பது 14000 மெகா ஹெர்ட்ஸ் ஆகும். செயற்கைக் கோளிலிருந்து அலை பெறுதல் என்பது 11,000 மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.

          ஆஸ்திரேலியாவில் கர்ணர்வான் என்னுமிடத்தில் உள்ள நிலையம் பசிபிக் கடல் பகுதிக் கோளைக் கண்காணிக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள நிலையமும், ஜப்பானில் உள்ள இபராஜி நிலையமும் பசிபிக் கடற் பகுதி செயற்கைக்  கோள்களைக் கண்காணிக்கும் நிலையங்கள் ஆகும். ஜப்பானில் யாமகுச்சி என்னுமிடத்தில் உள்ள நிலையம் இந்தியப்பெருங்கடல் பகுதிக் கோளை நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் வெவ்வேறு கோள்களை நோக்கியபடி உணர் சட்டம் அமைக்கப்பட்டுள்ளன.

          இங்கிலாந்தில் கூன்கில்லி என்னுமிடத்தில் அமைந்துள்ள நிலையத்தின் உணர் சட்டங்கள் தனித்தனியே அட்லாண்டிக் கடல் பகுதிக் கோளையும், இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் பின் தொடர்கின்றன. ஹாங்காங்கிலுள்ள ஒரு நிலையம் பசிபிக் கடல் பகுதிக் கோளையும், இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் பின் தொடர்கின்றன.

            உள் நாட்டு செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டிலும் அதன் கட்டுப்பாட்டு நிலையம் உண்டு. உதாரணமாக இந்தியாவுக்குச் சொந்தமான இன்சாட் 1B செயற்கைக் கோளை வழி நடத்தும் நிலையம் புதுடெல்லிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

          செயற்கைக் கோள்கள் 1957ஆம் ஆண்டு முதல் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றன. செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வரை 3443 செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

            இவைகளில் சுமார் 560 செயற்கைக் கோள்கள் செயல்படுகின்றன. தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மற்ற செயற்கைக் கோள்கள் செயல்படாதவைகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக விண்வெளியில் செயற்கைக் கோள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், விண்வெளி வீரர்களால் கைவிடப்பட்ட ஸ்பேனர், போல்ட், ஸ்குரு, கையுறை இப்படி பல பொருட்களும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இப்படி மனிதனால் தயாரிக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் சுமார் 8000 சுற்றிக் கொண்டு இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சில நாடுகள் அனுப்பிய செயற்கைக் கோள்கள்

1.  ரஷியா            -    1400

2.  அமெரிக்கா      -    1000

3.  ஜப்பான்          -    100

4.  சீனா               -    80

5.  இந்தியா          -    52

6.  பிரான்ஸ்         -    40

7.  ஜெர்மனி         -    30

8.  பிரிட்டன்        -    25

9.  கனடா            -    25

10. இத்தாலி        -     பத்திற்கும் மேல்

11. ஆஸ்திரேலியா     -     பத்திற்கும் மேல்

12. இந்தோனேசியா    -     பத்திற்கும் மேல்

13. பிரேசில்         -     பத்திற்கும் மேல்

14. ஸ்வீடன்        -     பத்திற்கும் மேல்

15. அர்ஜெண்டீனா     -     பத்திற்கும் மேல்

16. தென் கொரியா     -     பத்திற்கும் மேல்

17. சௌதி அரேபியா  -     பத்திற்கும் மேல்

இந்தியாவின் செயற்கைக் கோள்

          இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியபட்டா ஆகும். இந்தியாவில் கணிதம் மற்றும் வானவியலில் சிறந்து விளங்கிய அறிஞரான ஆரியபட்டாவின் பெயரை இந்தியாவின் முதல் செயற்கைக் கோளுக்குப் பெயரிட்டனர்.

          ஆரியபட்டா செயற்கைக் கோள் சோவியத் ரஷியாவின் உதவியால் தயாரிக்கப்பட்டது. அது 360 கிலோ கிராம் எடை கொண்டது. இது 26 பக்க கோணங்களைக் கொண்ட வடிவத்தைக் கொண்டது.

          இந்த செயற்கைக் கோள் ரஷிய நாட்டின் ராக்கெட்டின் உதவியுடன் ரஷியாவிலுள்ள கபூஸ்டியன்யார் என்னும் ஏவு தளத்திலிருந்து 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது. இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து 619 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது.

 

          ஆரியபட்டா விண்வெளியில் 5 நாட்கள் நன்கு செயல்பட்டது. அதன் பின்னர் செயற்கைக் கோளுக்கு மின்சாரத்தைத் தயாரித்து தரும் பகுதி பழுதடைந்ததால் செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

          இந்தியா பாஸ்கரா என்கிற செயற்கைக் கோளையும் ரஷியாவின் உதவியுடன் 1979ஆம் ஆண்டு அனுப்பியது. பிறகு இந்தியா சுயமாக செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியா தயாரித்த ராக்கெட்டான எஸ்.எல்.வி. 3 (Satellite Launching Vehicle (SLV)) ராக்கெட்டின் உதவியால் ஜுலை 18, 1980ஆம் ஆண்டு ரோகிணி - 1B விண்ணில் செலுத்தப்பட்டது. இது இந்தியாவிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக் கோளாகும். இதன் பின்னர் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

விண்வெளியை சுத்தம் செய்தல் :

          பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக உலக நாடுகள் அவ்வப்போது செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழந்து விடுகின்றன. இன்னும் சில செயற்கைக் கோள்கள் தோல்வியடைகின்றன. இதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் விண்வெளியில் குப்பைகளாக மிதந்து கொண்டு பூமியைச் சுற்றுகின்றன. இவற்றினால் விண்வெளி மாசு அடைந்துள்ளது.

          விண்வெளிச் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, உடைந்த செயற்கைக் கோள் பாகங்களை  அகற்றுவதற்காக ரஷ்ய விண்வெளிக் கழகம் (எனர்ஜியா) திட்டமிட்டுள்ளது. இதற்காக 9000 கோடி செலவில் ஒரு அணுசக்தியில் இயங்கும் ஒரு செயற்கைக் கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இது மிதக்கும் கழிவுகளை பூமியை நோக்கி தள்ளிவிடும். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 600 செயற்கைக் கோளின் உடைந்த பாகங்கள் விண்வெளியிலிருந்து அகற்றப்படும் என எனர்ஜியா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் விலங்குகள்

        மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியுமா? விண்வெளியில் என்ன என்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும்? அங்கு மனிதன் வாழ முடியுமா என்பதை தெரிந்து கொள்ள விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் விரும்பினர். அதற்காக விண்வெளிக்கு விலங்குகளை அனுப்பி பரிசோதிக்க முடிவு செய்தனர். இந்த ஆய்வில் அமெரிக்காவும், ரஷியாவுமே முதலில் ஈடுபட்டன. அமெரிக்கா தனது ஆய்விற்காக குரங்குகளைப் பயன்படுத்தியது. ரஷியா தனது ஆய்விற்காக நாய்களைப் பயன்படுத்தியது. விண்வெளிப் பயணத்தின் போது எந்த மாதிரியான உயிரியல் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை  ஆய்வு செய்வதற்காகவே இந்த இரு நாடுகளும் இவைகளை அனுப்பின.

1940:

          அமெரிக்கா V2 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவியப் பிறகு அதில் உயிரினங்களை அனுப்பியது. முதன் முதலாக 1946ஆம் ஆண்டு ஜூலை மத்தியில் V2  ராக்கெட் மூலம் பழ ஈக்களும் (Fruit  Flies) அதனுடன் மக்காச்சோள விதைகளையும் அனுப்பியது. இதன் நோக்கம் உயரமான வளிமண்டலத்தில் கதிரியக்கத்தால் ஈக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்டறிவதாகும். இத தவிர V2 ராக்கெட்டில் உயிரியல் மாதிரிகளும், பாசிச் (Moss) செடிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.

                   இதன் பின்னர் அமெரிக்கா ஜூன் 11, 1948 இல் V2  ராக்கெட் மூலம் ஆல்பர்ட் - 1 (Albert - 1) என்கிற குரங்கை வானில் செலுத்தியது. இக்குரங்கே முதல் குரங்கு விண்வெளி வீரர் ஆகும். இது ஒரு ரீசூஸ் (Rhesus) குரங்கு இனத்தைச் சேர்ந்தது. இந்தக் குரங்கு V2 ராக்கெட் மூலம் 63 கிலோ மீட்டர் (39 மைல்) உயரம் வரை சென்றது. ஆல்பர்ட் குரங்கானது பறக்கும் போது மூச்சுத் திணறல் காரணமாக இறந்து போனது.

          அமெரிக்கா ஆல்பர்ட்-2 என்கிற பெயருடைய குரங்கை ஜுன் 14, 1949இல் V2 ராக்கெட் முதன்முதலாக 134 கிலோ மீட்டர் (83 மைல்) உயரம் வரை அனுப்பியது. இந்தக் குரங்கும் இறந்து போனது. இது ரீசூஸ் வகையைச் சார்ந்த குரங்காகும்.

          ஆல்பர்ட்-3 என்கிற குரங்கை செப்டம்பர் 16, 1949இல் V2 ராக்கெட் மூலம் அமெரிக்கா அனுப்பியது. இந்த ராக்கெட் 35,000 அடி (10.7 கி.மீ) உயரம் வரை சென்ற போது ராக்கெட் வெடித்துச் சிதறியதுஇதனால் இக்குரங்கும் இறந்தது. இது சைனோமோல்கஸ் (Cynomolgus) என்னும் குரங்கு வகையைச் சேர்ந்தது ஆகும்.

          ஆல்பர்ட்-4 என்கிற பெயருடையக் குரங்கு ரீசூஸ் வகையைச் சார்ந்தது. இந்த குரங்கு V2 ராக்கெட் மூலம் டிசம்பர் 8, 1949 இல் வானில் செலுத்தப்பட்டது. இது ராக்கெட்டில் மோதி இறந்து போனது.

1950:

          அமெரிக்கா ஆகஸ்ட் 31,1950 இல் V2  ராக்கெட் மூலம் ஆல்பர்ட் - 5 என்கிற பெயருடைய குரங்கை அனுப்பியது. இதனுடன் பல சுண்டெலிகளையும் அனுப்பியது. இந்த ராக்கெட் 137 கிலோமீட்டர் உயரம் வரை சென்றது. நாய் இறந்து போனது. இதனுடன் அனுப்பப்பட்ட சுண்டெலிகளில் ஒன்று மட்டும் உயிருடன் இருந்தது.

          ரஷியா வளிமண்டலத்தின் உயரமான பகுதிக்கும், விண்வெளிக்கும் நாய்களை அனுப்ப திட்டமிட்டது. நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படுவதால் எளிதில் பழகி விடும். நாய்கள் விண்கலத்தின் சூழலுக்கு ஏற்ப தங்களை விரைவில் சரி செய்து கொள்ளும் என ரஷிய விஞ்ஞானிகள் கருதினர். இதற்கு பெண் நாய்களையே தேர்வு செய்தனர். ஏனெனில் அவை சிறுநீர் கழிக்கும் போது காலைத் தூக்க வேண்டிய அவசியம் இல்லை.

            நாய்கள் நீண்ட காலம் நிற்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. நாய்க்கு விண்வெளி உடை அணிவித்தல், ராக்கெட் ஏவும் போது அதிர்வை தாக்குப்பிடித்தல் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

          ரஷியா முதன் முதலாக R1 ராக்கெட் மூலமாக டீஸிக் (Dezik) மற்றும் சைக்கான் (Psygan) ஆகிய இரண்டு நாய்களை ஜனவரி 29, 1951 இல் வான்வெளிக்கு அனுப்பியது. அந்த ராக்கெட் விண்வெளியில் சுற்றவில்லை. அது 100 கிலோமீட்டர் உயரம் வரை சென்றது. இந்த இரண்டு நாய்களும் உயிருடன் பத்திரமாக பூமி திரும்பின

          அமெரிக்கா ஆல்பர்ட் - 6 என்கிற பெயருடைய குரங்கை வான்வெளிக்கு அனுப்பியது. இதனுடன் 11 சுண்டெலிகளும் அனுப்பப்பட்டன. இவைகள் தான் ராக்கெட் பறத்தலின் போது உயிருடன் இருந்தன. இது அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. அவை பத்திரமாக தரை இறங்கின. ஆனால் ஆல்பர்ட்- 6 என்கிற குரங்கு தரை இறங்கி இரண்டு மணி நேரம் கழித்து இறந்து போனது.

          அமெரிக்கா மீண்டும் பேட்ரிசியா (Patricia) மற்றும் மைகா (Mika) என்கிற இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்தது. இதனை மே 21, 1952 இல் ராக்கெட் மூலம் ஏவியது. இந்த இரண்டு குரங்குகளும் உயிருடன் திரும்பி வந்தன. ஆனால் ராக்கெட் 26 கிலோ மீட்டர் உயரம் வரை மட்டுமே சென்றது. ஆனால் அக்காலத்தில் விண்வெளி என்பது 100 கிலோமீட்டர் உயரம் என வரையறுத்திருந்தனர். ஆகவே இந்த குரங்குகள் விண்வெளி வரை செல்லவில்லை.

          ரஷியா மீண்டும் டீலபிக் என்கிற நாயை செப்டம்பர் 1951 விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நாய் இரண்டாவது முறையாக வளிமண்டலத்தின் உயரமான பகுதிக்குச் சென்றது. இந்த நாயுடன் லிசா (Lisa) என்கிற நாயும் விண்வெளிக்குச் சென்றது. இவை விண்வெளியின் பகுதி சுற்றுப்பாதை வரை மட்டுமே சென்று உயிருடன் பத்திரமாக தரை இறங்கின.

          ரஷியா நாய்களை தொடர்ந்து விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக ஸ்மிலாயா (Smelaya) மற்றும் மலிஷிக்கா (Malyshka) என்கிற நாய்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. ஸ்மிலாயா ராக்கெட் ஏவுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு ஓடிவிட்டது. இந்த நாயை ஓநாய்கள் தின்று இருக்கும் என ரஷிய அதிகாரிகள் பயந்தனர். ஆனால் இந்த நாய் அடுத்த நாள் கிடைத்தது. இது மலிஷிக்கா நாயுடன் வெற்றிகரமாக வான்வெளிக்குச் சென்று திரும்பியது.

          செப்டம்பர் 1951 இல் போலிக் (Bolik) என்கிற நாயை ராக்கெட்டில் அனுப்புவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டது. அது ஓடிவிட்டது. ஆகவே ஜிப் (ZIB) என்கிற நாயை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாகத் திரும்பியது.

          இதனைத் தொடர்ந்து ரஷியா மீண்டும் விசா நாயை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த முறை விசா நாயுடன் ரூஜிக் (Rujik) என்கிற சிவந்த முடி கொண்ட நாயும் சென்றது. இந்த நாய்கள் ஜுன் 2, 1954 இல் விண்வெளிக்குச் சென்றன. இவை 100 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றன. இவை இரண்டும் பத்திரமாக பூமி திரும்பின.

          அல்பினா மற்றும் ஷைகேன்கா என்கிற இரண்டு நாய்கள் கேப்சூல் வடிவ கலத்தில் வான்வெளிக்குச் சென்றன. இவை 85 கிலோமீட்டர் உயரத்தில் கலத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டது. இவை பாரா சூட் உதவியுடன் தரை இறங்கியது. அல்பினா என்கிற நாயை ஸ்புட்னிக் - 2 என்ற திட்டத்தில் மீண்டும் அனுப்புதாக இருந்தது. ஆனால் பின்னர் இதனை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது.

லைக்கா:

          ரஷியா 1957ஆம் ஆண்டில் நவம்பர் 3 அன்று ஸ்புட்னிக்-2 என்கிற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம் கூம்பு வடிவம் கொண்டது. நான்கு மீட்டர் உயரமும், இரண்டு மீட்டர் விட்டமும், 508.3 கிலோ கிராம் எடையும் கொண்டது. இது ரஷியாவின் மூலம் இரண்டாவதாக அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக் கோளாகும். இதில் வாழ்வதற்கு ஏற்ற வசதி இருப்பதால் விண்கலம் ஆகும். இது வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றி வந்தது.

          இந்த ஸ்புட்னிக்-2 என்கிற விண்கலம் மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விண்கலமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் லைக்கா (Laika) என்கிற ஒரு பெண் நாய் அனுப்பப்பட்டது. இதற்கு முன்பு வரை அமெரிக்கா அனுப்பிய குரங்குகளோ, ரஷியா அனுப்பிய நாய்களோ விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றியது கிடையாது. லைக்கா என்கிற நாய் தான் உலகிலேயே முதன் முதலாக பூமியைச் சுற்றிய ஒரு உயிரினமாகும். இந்த நாய் தான் பூமியின் உருண்டை உருவத்தை முதன் முதலில் பார்த்த உயிரினம் ஆகும்.

          லைக்கா ஒரு பெண் நாயாகும். இதன் தாய் குட்ரியாவாக்கா (Kudryavaka) ஆகும். லைக்கா விண்வெளிக்குச் சென்றதால் இதன் தாய்க்கும் வரலாற்றில் இடம் கிடைத்தது. லைக்கா 6 கிலோ எடை கொண்ட ஒரு சிறிய நாய், இதற்கு 20 நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது.

          விண்கலத்தில் ஒரு பெட்டியில் லைக்கா பாதுகாப்பாக வைக்கப்பட்டது. லைக்காவிற்கு ஒரு வார காலத்திற்குத் தேவையான உணவு பசை வடிவில் வைக்கப்பட்டது. அது சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்ஸிஜனும், குடிப்பதற்கான தண்ணீரும் வைக்கப்பட்டன. நாயின் இதயத்துடிப்பை அறிவதற்கான கருவியும் அதனுடன் பொருத்தி இருந்தனர். கழிவுகளை வெளியேற்றக் கூடிய ரப்பர் பையும் பொருத்தப்பட்டிருந்தது. லைக்கா விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது அதன் அனைத்து இயக்கங்களும் தொலையுணர்வு கருவி மூலம் பூமியில் இருந்தே கண்காணிக்கப்பட்டன.

          லைக்கா பத்து நாட்கள் விண்வெளியில் உயிருடன் சுற்றி வந்தது. அதன் பின்னர் தானியங்கிக் கருவி மூலம் விஷ ஊசி ஏற்றப்பட்டு நாய் விண்வெளியில் கொல்லப்பட்டது. விண்வெளியின் முதல் தியாகி லைக்கா அது இறந்தது சோகமானது. ஆனால் அதன் மூலம் பல அறிவியல் தகவல்களைப் பெற்றனர். இந்தப் பயணம் என்பது முதன் முதலில் உயிரியல் தகவல்களை சேகரிக்க உதவியது.

          லைக்கா விண்வெளிக்கு சென்றதால் உலகம் முழுவதும் இப்பெயர் பிரபலம் அடைந்தது. பலர் தங்களின் நாய்களுக்கு லைக்கா எனப் பெயரிட்டனர்.

          ஸ்புட்னிக் - 2 என்கிற செயற்கைக் கோள் 163 நாட்கள் 2370 முறை பூமியைச் சுற்றி வலம் வந்தது. பின்னர் வளி மண்டலத்தில் புகுந்து சாம்பலானது. லைக்கா விண்வெளிக்குச் சென்றதைத் தொடர்ந்து மனிதனும் விண்வெளிக்குச் செல்லலாம் என்கிற நம்பிக்கை உருவானது. லைக்காவின் பயணம் மனிதன் விண்வெளியில் பறப்பதற்கான முதல் வெற்றிப் படிக்கட்டு என கருதப்பட்டது.

          லைக்கா விண்வெளியில் 10 நாட்கள் உயிருடன் இருந்ததால், எடையற்ற தன்மையில் விலங்குகள் உயிர் வாழ முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இது ரஷியாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

கோர்டோ:

          அமெரிக்கா கோர்டோ (Gordo) என்கிற குரங்கிற்கு பயிற்சி கொடுத்தது. இது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கூரல் (Squirrel) வகையைச் சேர்ந்த குரங்காகும். அமெரிக்கா ஜுபிடர்        AM - 13 என்கிற ராக்கெட்டின் மூலம் புளோரிடா ஏவுதளமான கேப் கேனவரலில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது விண்வெளிக்குச் செல்லும் வரை உயிருடன் இருந்தது. இது பூமிக்குத் திரும்பும் போது பாராசூட் விரியாத காரணத்தால் இறந்து போனது.

ஏபில் மற்றும் பேக்கர் :

          ஏபில் (Able) என்கிற குரங்கு அமெரிக்காவில் பிறந்த ரீசூஸ் (Rhesus) வகையைச் சேர்ந்தது. இது 3.18 கிலோ கிராம் எடை கொண்டது. பேக்கர் (Baker) ஒரு கருப்பு தொப்பி ஸ்கூரல் குரங்கு வகையைச் சேர்ந்தது. இது பெரு நாட்டின் குரங்காகும். இது 3.10 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த இரண்டு குரங்குகளும் ஜுபிடர் AM - 18 என்கிற ராக்கெட்டின் மூலம் மே 28, 1959இல் அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது. இவை பூமியை ஒரு பகுதி சுற்றி (Suborbiral) விண்வெளியிலிருந்து பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பின. இவைகள் தான் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த குரங்குகள் (Primates) ஆகும். ஆனால் இவை பூமியை முழுச் சுற்று சுற்றவில்லை.

          ஏபில் குரங்கு ஜுன் 1, 1959இல் இறந்து போனது. நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் உடலில் பொருத்தி இருந்த எலக்ட்ரோடால் (Electrode) ஏற்பட்ட பாதிப்பால், பாதிக்கப்பட்ட பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்த போது இறந்து போனது. இது மயக்க மருந்தால் ஏற்பட்ட பாதிப்பாகும். விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பிய இந்தக் குரங்கைப்  பதப்படுத்தி மக்களின் காட்சிக்காக ஸ்மித்சோனியன் விண்வெளி மியூசியத்தில் வைத்துள்ளனர்.

          பேக்கர் என்கிற குரங்கிற்கும், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கினர். இந்த குரங்கு 27 வயது வரை உயிருடன் இருந்தது. இது நவம்பர் 29, 1984இல் இறந்து போனது. இதனை அலபாமாவில் உள்ள விண்வெளி ராக்கெட் மையமான ஹன்ட்ஸ்வில்லியில் அடக்கம் செய்தனர்.

          அமெரிக்கா சாம் (Sam) என்கிற ரீசஸ் வகை குரங்கை 1959ஆம் ஆண்டில் மெர்குரி திட்டத்தின்மூலம் அனுப்பியது. ஆனால் இதன் பயணம் குறிப்பிடும் படியான வெற்றியைப் பெறவில்லை.

1960

          அமெரிக்கா 1960ஆம் ஆண்டில் மிஸ்சாம் என்கிற குரங்கை லிட்டில் ஜோ 13 என்கிற மெர்குரி திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. அதுவும் குறிப்பிடும் படியான சாதனை எதுவும் படைக்கவில்லை.

          ரஷியா ஜுலை 29, 1960 இல் பார்ஸ் மாற்றும் லைசிசிகா என்கிற இரண்டு நாய்களை ராக்கெட் மூலம் ஏவியது. ஆனால் ராக்கெட் வெடித்துச் சிதறியதால் நாய்கள் இறந்து போயின.

பெல்கா மற்றும் ஸ்டெரில்கா:

          ஸ்புட்னிக்- 5 என்கிற விண்கலத்தின் மூலம் ரஷியா பெல்கா மற்றும் ஸ்டெரில்கா என்கிற இரண்டு நாய்கள் ஆகஸ்ட் 19, 1960இல் விண்வெளிக்கு அனுப்பியது. இந்த இரண்டு நாய்களையும் ரஷியா  விண்வெளிக்கு அனுப்பிவதற்கு முன்பாக  அவைகளுக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாதக் கணக்கில் அவைகளுக்கு தொடர்ந்தாற்போல் கடுமையான  பயிற்சி அளிக்கப்பட்டது.

          இந்த இருநாய்களும் பூமியை பல முறை சுற்றி வந்தன. 20 மணி நேரம் விண்வெளியில் இருந்துவிட்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பின. இந்த விண்கலம் ஆகஸ்ட் 20, 1960இல் பூமி திரும்பியது. இந்தப் பயணத்தில் இரண்டு நாய்களுடன் சாம்பல் நிற முயல், 2 எலிகள், 40 சுண்டெலிகள், டிரோசோபில்லா (Drosophila) ஈக்கள் செடிகள் மற்றும் பூஞ்சைக் காளான்களும் அனுப்பப்பட்டன. அவை  அனைத்தும் உயிருடன் பத்திரமாக பூமி திரும்பின. இதில் இருந்த உயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

          விண்வெளிக்கு சென்று வந்தப்பிறகு ஸ்டெரில்கா ஒரே சமயத்தில் 6 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டியின் பெயர் பிஸ்இன்கா (Pushinka) இதனை ரஷியாவின் ஜனாதிபதி நிக்கிடா குருஸ்சேவ் (Nikita Khrushchew) அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடிக்கு பரிசாகக் கொடுத்தார்.

          பெல்கா மற்றும் ஸ்டெரில்கா ஆகிய இரண்டு நாய்களும் இறந்த பிறகு அதனைப் பதப்படுத்திப் பாதுகாத்து வருகின்றனர். பெல்கா மாஸ்கோ மியூசியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெரில்கா உலகம் முழுவதும் நடைபெறும் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

பெஹல்கா மற்றும் முஸ்கா :

          பெஹல்கா (Pchelka) மற்றும் முஸ்கா (Mushka) ஆகிய இரண்டு நாய்களும் ஸ்புட்னிக் - 6 என்கிற விண்கலத்தின் மூலம் டிசம்பர் 1, 1960இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இதனுடன் வேறு விலங்குகள், பூச்சிகள், மற்றும் செடிகளும் அனுப்பப்பட்டன. இவை ஒரு நாள் உயிருடன் விண்வெளியில் பூமியைச் சுற்றி வந்தன. இவை டிசம்பர் 2 அன்று பூமி திரும்பும் போது விண்கலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அனைத்து உயிர்களும் இறந்து போயின.

          முஸ்கா என்கிற நாய் ஸ்புட்னிக்-2 விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சி எடுத்து கொண்டது. அதனை ஸ்புட்னிக்-2இல் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது அது உணவைச் சாப்பிட மறுத்தது. இதனால் இது ஸ்புட்னிக் -2 இல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

 

சிம்பன்ஸி ஹேம் :

          பரிணாமத்தின் உயர்நிலையை அடைந்த ஒரு விலங்கு சிம்பன்ஸி குரங்கு ஆகும். ஹேம் எனப்படும் சிம்பன்ஸி குரங்கை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஹேம் ஆகஸ்ட் 1956ஆம் ஆண்டில் பிறந்தது. இதற்கு 4 வயது இருக்கும் போது டிசம்பர்  1960இல் விண்வெளிக்குச் செல்வதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. மின்சார ஒளி மற்றும் ஒசைக்கு ஏற்ப பயிற்சி கொடுக்கப்பட்டது

          ஹேம் விண்வெளிக்குச் சென்று வருவதற்கு என்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மிஷன் (Mission) உருவாக்கப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமென் ஏரோஸ்பேஸ் மருத்துவ மையம் இதனைத் தயாரித்தது.

          ஹேம் ஜனவரி 31, 1961இல் மெர்குரி ரெட்ஸ்டோன் -2 திட்டத்தின் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. கேப்சூல் MR-2வில் ஹேம் விண்வெளிக்குப் பயணம் செய்தது. கேப்சூல் பறக்கும் போது அதன் உள்ளே அழுத்தம் ஏற்பட்டது. ஹேம் அணிந்திருந்த உடையானது அதனைப் பாதுகாத்தது. ஹேம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச்

சென்று திரும்பியது. இந்தப் பயணம் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றிய பயணம் அல்ல. இதுவும் ஒரு பகுதி சுற்று (Sub orbital) பயணமாகும். இது விண்வெளியில் 666 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்று 16.5 நிமிடத்தில் திரும்பியது ஆகும். இருப்பினும் மனித மூதாதை ஒன்று விண்வெளிக்குச் சென்று திரும்பியது ஒரு வெற்றியாகும்.

          ஹேம் சென்ற கேப்சூல் (Capsule) மாடல் அட்லாண்டிக் கடலில் வந்து இறங்கியது. அதனைப் பத்திரமாக மீட்டனர்.

         

ஹேம் விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு 17 ஆண்டுகள் வாஷிங்டனில் உள்ள தேசியப் பூங்காவில் வாழ்ந்தது. அது இறப்பதற்கு முன்பு வடக்கு கரோலினா பூங்காவில் வாழ்ந்தது. ஹேம் தனது 27 வயது வயதில் ஜனவரி 19, 1983இல் இறந்தது. ஹேம் உயிருடன் இருக்கும் வரை தொடர்ந்து தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இது ஒரு திரைப்படத்திலும் (Kvel Knieval) நடித்துள்ளது.

 

          அமெரிக்கா ஈனோஸ் (Enos) என்கிற சிம்பன்ஸி குரங்கையும், கோலியாத் (Goliath) என்கிற ஸ்கூரல் வகைக் குரங்கையும், ஸ்கேட் பேக் (Scatback) என்கிற ரீசஸ் வகைக் குரங்கையும் 1961ஆம் ஆண்டில் மூன்று பயணங்களில் அனுப்பியது. இவை அனைத்தும் பகுதி சுற்றுப் (Sub Orbital) பயணமாகவே இருந்தது.

செர்னுஸ்கா :

          ஸ்புட்னிக்- 9 என்கிற விண்கலத்தில் செர்னுஸ்கா என்கிற நாய் அனுப்பப்பட்டது. செர்னுஸ்கா என்பதற்கு கருப்பு என்பது பொருள். இந்த ஸ்புட்னிக்-9 விண்கலம் மார்ச் 25, 1961இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் கினியா பன்றி, சுண்டெலி மற்றும் வடகத்திய லியோபேர்டு தவளை ஆகியவையும் சென்றன. இந்த விண்கலம் பத்திரமாக தரை இறங்கியது.

          இதனைத் தொடர்ந்து ரஷியா மார்ச் 25, 1961இல் ஸ்புட்னிக்-10 என்கிற விண்கலத்தின் மூலம் ஸீவிஸ்டக்கா (Zvezdochka) என்கிற நாயை அனுப்பியது. இந்த நாய்க்கு பெயரிட்டவர் யூரி ககாரின் ஆவார். இதற்கு சிறிய நட்சத்திரம் என்பது பொருளாகும். இதுவும் விண்வெளிக்குச் சென்று பத்திரமாக பூமி திரும்பியது.

பிரெஞ்ச் :

          பிரெஞ்ச் நாடும் விண்வெளிக்கு விண்கலத்தின் மூலம் உயிரினங்களை அனுப்பியது. பிப்ரவரி 22, 1961இல் முதன்முதலாக எலியை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 1962ஆம் ஆண்டு இரண்டு எலிகளை அனுப்பியது.

          பிரெஞ்ச் பிளிக்ஸ் (Felix) என்கிற பூனையை அக்டோபர் 18, 1963இல் அனுப்பியது. பூனையின் தலையில் எலக்ட்ரோடு (Electrode) பொருத்தப்பட்டிருந்தது. இந்தப் பூனை விண்வெளிக்குச் சென்றுவிட்டு பத்திரமாக உயிருடன் பூமி திரும்பியது. ஆனால் அடுத்த முறை அனுப்பிய பூனை இறந்துவிட்டது. இதன் பின்னர் மார்ச் 7, 1967இல் இரண்டு குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பியது. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இவை பயணத்திற்குப் பிறகும் உயிர் வாழ்ந்தன.

சீனா :

          சீனா 1964ஆம் ஆண்டில் விண்வெளிக்கு முதன் முதலாக சுண்டெலியை அனுப்பியது. அதனைத் தொடர்ந்து 1964 மற்றும் 1965ஆம் ஆண்டில் எலிகளை விண்வெளிக்கு அனுப்பியது. இதன்பின்னர் சீனா 1966ஆம் ஆண்டில் இரண்டு நாய்களை விண்வெளிக்கு அனுப்பியது. இந்தப் பயணம் சீனாவிற்கு வெற்றியைத் தேடித் தந்தது.

வெட்டராக் :

          ரஷியா பிப்ரவரி 22, 1966இல் வோஸ்காட் - 3 என்கிற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் வெட்டராக் (Veterok) மற்றும் உகோல்யாக் (Vgolyok) என்கிற இரண்டு நாய்கள் பயணம் செய்தன. இந்தப் பயணம் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. விண்வெளியில் 22 நாட்கள் சுற்றியது. இந்த காலக்கட்டத்தில் மனிதன் கூட இவ்வளவு நாட்கள் விண்வெளியில் சுற்றியது கிடையாது. இந்தப் பயணம் முடிந்து மார்ச் 13 அன்று இரு நாய்களும் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பின. நாய்கள் விண்வெளியில் அதிக நாட்கள் இருந்து சாதனை படைத்தன. இந்த வோஸ்காட்-3 விண்கலத்தில் தான். ஸ்கைலாப்- 2 ஜுன் 1971இல் விண்வெளிக்குச் சென்றது. அதுவரை இதுவே நீண்ட காலம் பயணம் செய்த விண்கலம் என்கிற பெயரைப் பெற்றது.

உயிரியல் செயற்கைக் கோள்

          அமெரிக்கா உயிரியல் செயற்கைக் கோள் -1 மற்றும் உயிரியல் செயற்கைக் கோள் - 2 (Biosatellite) ஆகியவற்றை 1966 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் விண்வெளிக்கு அனுப்பியது. இதில் பழ ஈக்கள், ஒட்டுண்ணி குளவிகள், மாவு வண்டுகள், தவளை முட்டைகள், பாக்டீரியா, தாவரங்கள் மற்றும் காளான்களையும் அனுப்பி ஆய்வுகள் செய்தது.

            ரஷியா முதன்முதலாக செப்டம்பர் 14, 1968இல் விண்வெளிக்கு ஒரு ஆமையை அனுப்பியது. நமக்குத்தான் ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படியாகாது. ஆனால் விண்வெளிக்கு இதெல்லாம் கிடையாது. ரஷியா அனுப்பிய ஹார்ஸ்பில்டு (Horsfield) ஆமையுடன் ஒயின் ஈக்கள், மாமிசப் புழுக்கள் மற்றும் வேறு சில உயிரியல் பொருட்களும் சென்றன. இந்த கேப்சூல் செப்டம்பர் 21 அன்று வெற்றிகரமாகக் கடலில் வந்து இறங்கியது. இவற்றில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் உயிருடன் இருந்தன.

          அமெரிக்கா போனி (Bonny) என்கிற F2 குரங்கை ஜுன் 29 அன்று உயிரியியல் செயற்கைக் கோள் - 3 (Biosatellite -3) மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம் விண்வெளியில் ஜுலை 8 வரை இருந்தது. விண்வெளியில் அதிக நாட்கள் உயிருடன் இருந்த குரங்கு போனியாகும். இச்சமயத்தில் மனிதன் விண்வெளியில் பல நாட்கள் இருக்கக்கூடிய விண்கலத்தில் சென்று வந்தான். இந்தக் குரங்கு தரை இறங்கிய அடுத்த நாளில் இறந்த போனது என்பது வேதனையான தகவலாகும்.

          ரஷியா 1950 முதல் 1970 வரை விண்வெளியின் பகுதி சுற்றுப் பகுதிக்கும் (Sub orbiral) மற்றும் விண்வெளியில் பூமியின் சுற்றுப் பகுதிக்கும் 57 நாய்களை அனுப்பியது. இவற்றில் சில நாய்கள் விண்வெளிக்கு ஒரு முறைக்கு மேல் சென்று வந்தன. விண்வெளிக்குச் சென்ற நாய்களில் 10 மட்டுமே தொழில் நுட்பக் கோளாறுகளால் இறந்து போயின.

1970:

          அமெரிக்கா நவம்பர் 9, 1970 இல் ஒட்டோலித் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பியது. இதில் இரண்டு தவளைகள்   (Bulltrogs) சென்றன. விண்வெளியில் இயக்க நோய்கள் பற்றி ஆராயப்பட்டது.

          அமெரிக்காவின் 5வது நிலவு பயணம் ஏப்ரல் 16, 1972இல் அப்போலோ- 16 மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் நிலவிற்கு நிமட்டோட்ஸ் (Nematodes) எடுத்துச் செல்லப்பட்டது. அப்போலோ - 17 பயணத்தின் மூலம் டிசம்பர் 7, 1972ஆம் ஆண்டில் நிலவிற்கான மனிதனின் ஆறாவது பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தின் போது நிலவின் சுற்றுப்பாதைக்கு 5 சுண்டெலிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் அவை இறந்து போயின.

          அமெரிக்காவின் ஸ்கைலாப்- 3 நவம்பர் 16, 1973ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்றது. இதில் சுண்டெலி, சிலந்தி மற்றும் மம்மிசாக் (Mummichog) என்கிற மீனும் பயணம் செய்தது.

          சோவியத் ரஷியாவும் இதே காலக்கட்டத்தில் உயிரியல் ஆய்வுகளை விண்வெளியில் செய்தது. எலிகள், மீன்கள் மற்றும் ஆமை ஆகியவற்றை விண்வெளிக்கு அனுப்பியது. சோயுஸ் 20 என்கிற விண்கலம் நவம்பர் 17, 1975இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதில் ஆமை ஒன்று அனுப்பப்பட்டது. இந்த ஆமையானது விண்வெளியில் 90.5 நாட்கள் இருந்து உலக சாதனைப்  புரிந்தது. சல்யூட்- 5 என்கிற விண்கலத்திலும் ஆமை மற்றும் மீன்கள் ஜுன் 22, 1976இல் எடுத்துச் செல்லப்பட்டன.

1980:

          ரஷியா விண்வெளிக்கு நாய்களை மட்டுமே ஆரம்பத்தில் அனுப்பி ஆய்வுகளைச் செய்து வந்தது. பின்னர் 1980களில் குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்தது. இதற்கு ரீசூஸ் வகைக் குரங்குகளைப் பயன்படுத்தியது.

          ரஷியா முதன்முதலாக ஏப்ரிக் (Abrek) மற்றும் பியான் (Bion) என்கிற குரங்குகளை பியான் - 6 என்கிற விண்கலத்தின் மூலம் டிசம்பர் 14, 1983இல் அனுப்பியது. இவை டிசம்பர் 20 அன்று உயிருடன் பூமி திரும்பின.

          பியான்- 7 விண்கலத்தின் மூலம் வெர்னி மற்றும் கோர்டி என்கிற இரண்டு குரங்குகள் ஜுலை 10, 1985 இல் விண்வெளிக்குச் சென்றன. இவை ஜுலை - 17 அன்று திரும்பி வந்தன. பியான்- 8 விண்கலம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12, 1987 வரை விண்வெளியில் இருந்தது. இந்தப் பயணத்தில் டீரிமா மற்றும் எரோசா ஆகிய குரங்குகள் விண்வெளிக்குச் சென்று வந்தன.

          பியான்- 9 விண்கலத்தில் ஷாகோன்யா மற்றும் ஜபியாகா என்கிற இரண்டு குரங்குகள் செப்டம்பர் 15, 1989இல் விண்வெளிக்குச் சென்றன. இவை 13 நாட்கள் 17 மணி நேரம் விண்வெளியில் இருந்து விட்டு செப்டம்பர் 28 அன்று பூமி திரும்பின.

          அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு ஸ்பேஸ் ஷட்டில் மூலம் 24 எலிகள் மற்றும் குச்சி பூச்சியின் முட்டைகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்தது. சேலஞ்சர் STS- 29 இன் மூலம் 1989ஆம் ஆண்டில் கோழி முட்டைக்கரு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

1990:

          1990ஆம் ஆண்டில் சீனா கினியா பன்றியை விண்வெளிக்கு அனுப்பியது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோயோகிரோ அக்கியாமா  (Toyohiro Akiyamma) என்கிற பத்திரிக்கையாளர் விண்வெளி வீரராக டிசம்பர் 1990இல் மிர் விண் நிலையத்திற்குச் சென்றார். இவர் தன்னுடன் ஜப்பானிஷ் மரத்தவளையை எடுத்துச் சென்றார்.

          அமெரிக்கா 1990களில் கொலம்பியா ஒடத்தின் மூலம் சுண்டெலி, எலி, தவளை, பழ ஈக்கள், நத்தை, நண்டு, சிப்பி, தேனீ, கடல் முள்ளம் பன்றி, குச்சி பூச்சியின் முட்டை என பல உயிரினங்களைக் கொண்டு சென்று ஆய்வு நடத்தியது.

          ரஷியா 4 குரங்குகளை இந்தக் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. பியான் - 10 விண்கலம் டிசம்பர் 29, 1992இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த கலத்தில் கிரோஸ் (Krosh) மற்றும் இவாசா (Ivasha) என்கிற குரங்குகள் சென்றன. இவை ஜனவரி 7, 1993இல் பூமி திரும்பின.

          ரஷியா பியான் - 11 என்கிற விண்கலத்தின் மூலம் லாபிக்  (Lapik) மற்றும் முல்டிக் (Multik) என்கிற இரண்டு குரங்குகளை டிசம்பர் 24, 1996 இல் விண்வெளிக்கு அனுப்பியது. இவை ஜனவரி 7, 1997 இல் பூமி திரும்பின. இவை தான் கடைசியாக விண்வெளிக்குச் சென்ற குரங்குகளாகும். முல்டிக் குரங்கு தரை இறங்கிய சிறிது காலத்திலேயே இறந்து போனது.

          ஜப்பான் முதன்முதலாக மார்ச் 18, 1995இல் Newt என்கிற உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்தது.

2000:

          அமெரிக்கா 2003ஆம் ஆண்டில் கொலம்பியா ஓடத்தின் மூலம் பட்டுப்புழு, கோல்டன் ஆர்ப் சிலந்தி, கார்பண்டர் ஈக்கள், எறும்புகள், ஜப்பானிஷ் ஜெல்லிபிஸ், நிமட்டோட்ஸ் ஆகியவற்றை அனுப்பியது. அங்கு ஆய்வுகள் செய்யப்பட்டன.

விண்வெளியில் மனிதர்கள்

        மனிதன் விண்வெளிக்குச் செல்ல வேண்டும், நிலாவிற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை நீண்டக் கால கனவாகவே இருந்து வந்தது. முதன் முதலில் விண்வெளிக்குச் செல்லக்கூடிய ஒரு விண்கலத்தின் (Space flight) மாதிரி வடிவத்தை ரஷியாவைச் சேர்ந்த  கான்ஸ்டான்டின் சியேல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky)  வரைந்தார். இவர் 1903ஆம் ஆண்டில் மனிதன் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்றும், விண்வெளியில் தங்க முடியும் என்றும் வேறு கிரகத்திற்கும் செல்ல முடியும் எனவும் கூறினார். ஆனால் அப்போது அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. இருப்பினும் விஞ்ஞானிகள் மத்தியில் ஆர்வம் உண்டானது.

          விண்வெளிக்கு மனிதன் விண்கலத்தின் மூலம் செல்லும் போது அது ஆபத்தானதாக இருக்கும். மனித உடலில் உள்ள சதையும் இரத்தமும் விண்வெளியின் சூழலைத் தாங்கக் கூடியதாக இருக்குமா? என்கிற சந்தேகம் இருந்தது. முதலில் ராக்கெட்டை ஏவும் போது G. Forces ஐ தாங்க வேண்டும். அது மிகவும் கொடூரமானது, பயங்கரமானது. இந்த விசையானது சாதாரணமாக மனித எடையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும்.

          விண்கலம் விண்வெளியை அடைந்து பூமியின் சுற்றுப் பாதைக்கு வரும் போது உடல் மிதக்கத் துவங்கும். அது எடையற்ற நிலை. அப்போது ரத்தத்தின் நிலை, இதயம், உடல் உறுப்பு நிலை எப்படி இருக்கும். செயல்படுமா? அல்லது செயல்படாதா என்கிற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு இருந்து வந்தது.         

          விஞ்ஞானிகள் ஜீ-விசையைக் (G-Force) கண்டறியத் தான் முதன் முதலில் உயிரினங்களை விண்வெளிக்கு அனுப்பினர். ரஷியா நாய்களைக் கொண்டும், அமெரிக்கா குரங்குகளைக் கொண்டும் பரிசோதனை செய்தன. முதலில்  உயரமான வளி மண்டலத்திற்கும், பின்னர் விண்வெளியின் பகுதிச் சுற்றிற்கும் (Sub-Orbital), பின்னர் விண்வெளியைச் சுற்றி வரவும் விலங்கினங்களை அனுப்பினர். ரஷியா அனுப்பிய லைக்கா என்கிற நாய் விண்வெளியை வெற்றிகரமாக உயிருடன் சுற்றியது. இந்த வெற்றி விஞ்ஞானிகளை மிகவும் உற்சாகப்படுத்தியது.

          விலங்குகள் எடையற்ற தன்மையில் வாழ முடியும் என்பதை லைக்கா மூலம் தெரிந்து கொண்டனர். ஆகவே மனிதனும் விண்வெளியில் குறைந்த நேரம் வாழ முடியும் என்கிற முடிவிற்கு வந்தனர்.

          மனிதனை விண்வெளிக்கு முதலில் அனுப்புவது யார் என்கிற போட்டி ரஷியா மற்றும் அமெரிக்க நாடுகளிடையே ஏற்பட்டது. இரண்டு நாடுகளும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பிவதற்கான விண்கலங்களைத் தயாரிக்கத் தொடங்கின. ரஷியா ஆளில்லாத விண்கலம் ஒன்றைத் தயாரித்து விண்வெளிக்கு அனுப்பியது. இதனை ரஷியாவின் செர்கி கோரோலெவ் வடிவமைத்திருந்தார். மனிதர்களையும் இது போன்ற விண்கலத்தில் அனுப்பலாம் என்கிற முடிவிற்கு வந்தார். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் வகையில் ஒரு விண்கலத்தை வடிவமைத்தார்.

முதல் பயணம் :

          ரஷியாவில் செர்கி கோரோலெவ் என்பவர் வோஸ்டாக்-1 (Vostok) என்கிற விண்கலத்தை வடிவமைத்தார். இது கூம்பு வடிவம் கொண்டது. இதில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் இருந்தது.இதில் வெளியேற்றும் இருக்கை இருந்தது. இதன் மூலம் வெளி வரவும் உட்புறம் செல்லவும் முடியும். வோஸ்டாக் என்றால் கிழக்கு என்பது பொருளாகும். இதற்கு கோரோலெவ் இப்பெயரை வைத்தார்.

          இந்த விண்கலத்தின் உள்ளே செயற்கையான  வளிமண்டலம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயத்தில் வீரர் தங்குவதற்கு போதிய இடம் இல்லாமல் மிகக் குறுகியதாக இருந்தது. விண்கலத்தின் உள்ளே தாராளமாக கை, கால்களை நீட்ட முடியாத அளவிற்கு இட வசதியற்றதாக இருந்தது. இது மொத்தத்தில் ஒரு சிறை போன்றது தான்.

          இந்த வோஸ்டாக் விண்கலம் ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டில் முதன் முதலில் மனிதனை விண்வெளிக்கு ஏற்றிச் சென்றது. இதில் யூரி ககாரின் (Yuri Gagarin)  என்கிற விண்வெளி வீரர் பயணம் செய்தார். மனித குல வரலாற்றில் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த வீரர் ஆவார். இவரை நெம்பர் - 1 (No. 1) விண்வெளி வீரர் என அழைக்கின்றனர்.

          மனிதனை முதன் முதலில் விண்வெளிக்கு ஏற்றிச் சென்ற முதல் மனித விண்கலம் வோஸ்டாக் - 1 ஆகும். இந்த விண்கலத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை. வெப்பத்தைத் தடுக்கும் சாதனம் இல்லை. பூமியில் தரையிறங்குவதற்கு முறையான வசதி இல்லை. விண்வெளி வீரர் பாராசூட் மூலம் குதிக்க வேண்டி இருந்தது. விண்கலம் வளிமண்டலத்தில் எரியக் கூடியதாக இருந்தது.

யூரி ககாரின் :

          யூரி ககாரின் மார்ச் 9, 1934ஆம் ஆண்டில் குளுசினோ (Klusino) என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரின் குழந்தைப் பருவம் இரண்டாம் உலகத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டது. இவரின் படிப்பும் தடைப்பட்டது. போரின் போது தனது பெற்றோர்களுடன் போர் முடியும் வரையில் பதுங்கு குழியில் தலைமறைவாக வாழ்ந்தார். போரில் ஜெர்மனிப் படை ரஷியாவிடம் தோற்றது. இதன் வெற்றியை யூரி ககாரினும் கொண்டாடினார்.

           யுத்தம் முடிந்தவுடன் மீண்டும் பள்ளிக்குச் சென்றார். 1950ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் வார்ப்படச் சாலையின் உலைக்கலத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் செய்த வேலை என்பது கடினமானது. வேலை செய்து கொண்டே மாலை நேரத்தில் தொழில்நுட்பக் கல்வியை 1955ஆம் ஆண்டில் முடித்தார்.

          இவருக்கு சிறு வயது முதலே விமானத்தில் பறக்க வேண்டும். அதை ஓட்ட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. எனவே இவர் ராணுவ விமானப் பள்ளியில் சேருவதற்கு மனு செய்தார். இவருக்கு ஓரன்பர்க்ஸ் விமானப்பள்ளியில் இடம் கிடைத்தது. வார்படம் சாலையில் வேலை செய்து கொண்டே இலகுரக விமானங்களை ஓட்டக் கற்றுக் கொண்டார். இவர் தனது 23வது வயதில் விமானம் ஓட்டுவதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதன் பின்னர் விமானப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் விமானம் ஓட்டும் போது பாராசூட்டிலிருந்து குதிக்கும் பயிற்சியையும் எடுத்துக் கொண்டார்.

விண்வெளி :

          சோவியத் ரஷியா செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. சோவியத் ராணுவம் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான பயிற்சிக்கு ஆள் எடுக்கத் துவங்கியது. ககாரினும், மனு செய்தார். சுமார் 2000 விமானப்படை வீரர்கள் மனு செய்திருந்தனர். இவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 20 பேரில் ககாரினும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          விண்வெளி வீரருக்கான பயிற்சி ஸ்டார் சிட்டியில் 1960 ஆண்டில் கொடுக்கப்பட்டது. தினமும் உடல்பயிற்சி செய்ய  வேண்டியிருந்தது. கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பாராசூட் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஏனெனில் விண்கலம் பூமி திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து குதித்து பாராசூட் உதவியுடன் தரையிறங்க வேண்டும். பாராசூட் மூலம் குதிப்பதற்கு மன தைரியமும், துணிச்சலும் தேவை. ககாரின் 40 தடவைக்கு மேல் பாராசூட்டிலிருந்து குதித்துப் பயிற்சி பெற்றார்.

          இவருக்கு அதிர்வு பயிற்சி, வெப்ப அறைப்பயிற்சி, உடை அணிவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. இது தவிர தனி அறையில் தனிமையில் இருக்கும் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இருட்டு அறையில் 24 மணி நேரம் தனிமையில் இருந்தார். மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எடையற்ற நிலையில் உணவு உண்ணுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

          யூரி ககாரின் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு அவரை நன்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். அவர் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. ககாரின் லிப்டு மூலம் ராக்கெட்டின் மீது இருந்த வோஸ்டாக் விண்கலத்திற்குச் சென்றார். வோஸ்டாக் விண்கலத்தின் கதவு மூடப்பட்டது. ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு மாஸ்கோ நேரப்படி காலை 9.07 மணிக்கு பைக்கனூர் ஏவு  தளத்திலிருந்து ராக்கெட் புறப்பட்டது. வோஸ்டாக் விண்கலம் 11 நிமிடம் 16 நொடியில் பூமியின் சுற்றுப் பாதையை அடைந்து, பூமியைச் சுற்றியது.

            பூமியின் வடிவத்தை முதன்முதலில் கண்ணால் கண்டார். பூமியை நேரில் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். யூரி ககாரின் விண்வெளியில் ஒரு ஆய்வைச் செய்தார். அது உணவு உண்பதுதான். உணவு பேஸ்ட் வடிவில் டியூப்பில் இருந்தது. உணவு டியூப்பை திறந்து வாயில் வைத்து நசுக்கினார். எளிதாக வாயினுள் சென்றது. அதனை மெல்ல மெல்ல மென்று விழுங்கினார். உணவு வயிற்றுக்குள் சென்றது. இதே போல் டியூப்பில் உள்ள பழரசத்தைப் பருகினார். இதனைக் குடிப்பதற்கு எந்தவிதச் சிக்கலும் இல்லை. எடையற்ற நிலையில் உணவை உண்ணவும், நீரைக் குடிக்கவும் முடியும் என்பதை முதன் முதலில் யூரி ககாரின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

          இவர் பயணம் செய்த வோஸ்டாக் விண்கலம் மணிக்கு 27400 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றியது. இது பூமியை 1 மணி 48 நிமிடத்தில் ஒரு முறை சுற்றி வந்தது. பூமியைச் சுற்றி வரும் போது இவர் நிலவின் மறுபக்கத்தையும் பார்த்தார். இவர் விண்வெளியிலிருந்து சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். இங்கு எந்தக் கடவுளையும் தான் காணவில்லை என்றார்.

          பூமியை ஒரு முறை சுற்றியவுடன் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. விண்கலம் தரையை நோக்கி மெதுவாக இறங்க, இறங்க புவி ஈர்ப்பு விசையானது அதிகரித்துக் கொண்டே போனது. பெருவிசை ககாரினை இருக்கையோடு சேர்த்து அழுத்தியது. இதனை ககாரின் சமாளித்துத் தாங்கிக் கொண்டார்.

          விண்கலம் 4000 மீட்டர் உயரம் வந்த போது ககாரின் ஆசனத்துடன் பாராசூட் மூலம் வெளியே வீசப்பட்டார். பின்னர் பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

          பூமிக்குத் திரும்பியதும் இவரை உலகமே கொண்டாடியது. உலகப் புகழ் பெற்றார். இவருக்கு மிகப் பெரிய வரவேற்பு விழா நடந்தது. சோவியத் தலைவர் குருஷேவுடன் செஞ்சதுக்கம் நோக்கி காரில் சென்றார். வழி நெடுக மக்கள் கை அசைத்து வரவேற்பு கொடுத்தனர்.

          விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு இவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. பல பரிசுகள் கிடைத்தன. இவர் வோஸ்டாக் 3, 4 மற்றும் 6 ஆகிய விண்கலத்தை உருவாக்கும் தொழில் நுட்ப இயக்குனராகவும் இருந்தார்.

          விண்வெளிக்குச் சென்று வந்த ககாரின் ஒரு விமான விபத்தில் 1960ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று இறந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 34 தான். அவர் உயிருடன் இருந்திருந்தால் மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருப்பார்.

ஆலன் செப்பர்டு :

          ஆலன் செப்பர்டு (Alan Shepard) என்பவர் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர். இவர் இரண்டாவதாக விண்வெளிக்குச் சென்ற மனிதர். இவர் அமெரிக்காவின் கிழக்கு டெர்ரியில் உள்ள நியூகேம்ஸியர் என்னுமிடத்தில் நவம்பர் 18, 1923ஆம் ஆண்டில் பிறந்தார்.

           இவர் அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பை அண்ணா போலிஸில் உள்ள அமெரிக்க கப்பல் கடை அகடமியில் 1944ஆம் ஆண்டில் முடிந்தார். கௌரவ மேல் பட்டப்படிப்பை 1962ஆம் ஆண்டில் முடித்தார். இவர் டெஸ்ட் பைலட்டாக பணிபுரிந்தார். இவர் 8000 மணி நேரம் விமானத்தில் பறந்துள்ளார். ஜெட் விமானத்தில் மட்டும் 3700 மணி நேரம் பறந்துள்ளார்.

          விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக நாசா அமைப்பு 1959ஆம் ஆண்டில் 110 டெஸ்ட் பைலட்டுகளை அழைத்தது. இதில் ஆலன் செப்பர்டும் ஒருவர். இவரை மெர்க்குரித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டதன் மூலம் விண்வெளி வீரர் ஆனார்.

 

 

          அமெரிக்கா தயாரித்த முதல் மனித விண்கலத்தில் செல்வதற்கு இவரை 1961ஆம் ஆண்டில் தேர்வு செய்தது. இது உண்மையில் அக்டோபர் 1960ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவுவதாக இருந்தது. சரியாகத் திட்டமிடாத படியால் பல முறை விண்வெளிக்கு ஏவுவது தள்ளிப் போனது. பிறகு மார்ச் 6,1961இல் அனுப்ப முடிவு செய்தனர். இதுவும் தள்ளிப் போனது. இறுதியாக மே-5, 1961ஆம் ஆண்டில் ஆலன் செப்பர்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதற்கு முன்பு ரஷியாவின் வீரர் யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றியதால் அவர் முதல் இடத்தைப் பிடித்தார்.

          ஆலன் செப்பர்டு மெர்க்குரி விண்கலம் மூலம் மே 5, 1961 அன்று காலை 9.34 மணிக்கு ரெட்ஸ்டோன் ராக்கெட் மூலம் ஏவப்பட்டார். இவர் சென்ற விண்கலத்திற்கு பிரிடம் - 7 (Freedom- 7) எனப் பெயரிடப்பட்டது. இவர் 116 மைல் உயரத்திற்குச் சென்று பூமி திரும்பினார். இவர் 15 நிமிடம் 22 நொடிகள் விண்வெளியில் பயணம் செய்து திரும்பினார். ஆனால் இவர் பூமியை முழுச் சுற்று சுற்றவில்லை. இவரின் பயணம் என்பது ஒரு பகுதி சுற்று (Sub Orbital) என்பதாகும். இருப்பினும் இவர் விண்வெளிக்குச் சென்று வந்த இரண்டாவது மனிதர் ஆனார். இவர் விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய காட்சியை அமெரிக்கர்கள் தொலைக்காட்சியில் கண்டனர். இதனால் இவர் அமெரிக்கா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

அப்பலோ:

          ஆலன் செப்பர்டு நிலவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு 1964ஆம் ஆண்டில் காதின் உள் பகுதியில் நோய் பரவியது. இதனால் நிலவிற்கு செல்லும் தகுதியை இழந்தார். ஆனால் இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு விண்வெளியில் பறப்பதற்கான முழுத் தகுதியைப் பெற்றார். இவர் அப்பலோ 13இல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவருக்கு அதிகம் பயிற்சி தேவைப்பட்டது. ஆகவே அப்பலோ 14இல் நிலவிற்குச் சென்றார்.

          அப்பலோ திட்டத்தின் மூலம் நிலவுக்குச் சென்றவர்களில் வயதானவர் ஆலன் செப்பர்டு ஆவார். அவருக்கு அப்போது வயது 47. அப்பலோ - 14 என்பது நிலவிற்குச் சென்ற 3வது மிஷன் ஆகும்.

          இவர் நிலவில் இறங்கிய ஐந்தாவது மனிதர் ஆவார். இவரின் பயணம் 1971ஆம் ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நீடித்தது. இவர் நிலவில் 33 மணி நேரம் இருந்தார். இவர் நிலவில் மொத்தம் 9 மணி 17 நிமிடங்கள் நடந்தார். இவர் நிலவில் நடந்த காட்சி முதன் முதலில் வண்ணத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

          இவர் நிலவை விட்டுத் திரும்புவதற்கு முன்பு, நிலவில் கோல்ப் விளையாடினார். இவர் பந்தின் மீது அடித்தார். பந்து 366 மீட்டர் தூரம் சென்றது. இதனை கோல்ப் விளையாட்டு வீரர்களும், லட்சக்கணக்கான மக்களும் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர்.

          இவர் 1974ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவருக்கு 15க்கும் மேற்பட்ட பட்டங்களும், விருதுகளும் கிடைத்தன. இவரின் பெயர் கப்பல்களுக்கும், துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டது. இவர் 1998ஆம் ஆண்டு தனது 78 வயதில் இறந்தார்.

கஸ் கிரிஸ்ஸம் :

          கஸ் கிரிஸ்ஸம் (Gus Grissom) என்பர் அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர். விண்வெளிக்குச் சென்ற மூன்றாவது மனிதர். இவரின் பெயர் விர்ஜில் இவன் கஸ் கிரிஸ்ஸம் (Virgil Ivan Gus Grissom) என்பதாகும். இவர் ஏப்ரல் 3, 1926ஆம் ஆண்டில் மிட்செல், இண்டியானாவில் பிறந்தார்.

          இவர் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கறிக்கடை மார்கெட் பகுதியில் செய்தித் தாள்களை விற்பனை செய்து வந்தார். இவர் பெட்போர்டு விமான நிலையத்தில் விமானம் பறப்பதை வேடிக்கை பார்த்தார். அதனால் இவருக்கு வானில் பறக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. ஒரு டாலர் செலவு செய்து விமானத்தில் எப்படி பறப்பது என்கிற அடிப்படையைத் தெரிந்து கொண்டார்.

          இவர் பட்டப்படிப்பை முடித்தார். பகுதி நேர வேலைகளை செய்து வந்தார். இவர் அமெரிக்க விமானப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றார். கொரியப் போரில் கலந்து கொண்டார். இவர் அக்டோபர் 1956ஆம் ஆண்டில் டெஸ்ட் பைலட் பள்ளியில் சேர்ந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் போர் படைப்பிரிவில் சேர்ந்தார். இவர் விமானத்தில் 4600 மணி நேரம் பறந்துள்ளார். குறிப்பாக ஜெட் விமானத்தில் 3500 மணி நேரம் பறந்துள்ளார். இவர் விமானப்படையின் பைலட்டாகப் பணி புரிந்தார்.

          இவர் 1959ஆம் ஆண்டில் செவன் மெர்குரி திட்டத்தின் விண்வெளி வீரர் ஆனார். இவர் மெர்குரி ரெட் ஸ்டோன்-4 என்கிற கலத்தின் மூலம் ஜுலை 21, 1961ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்றார். இவரின் பயணமும் ஒரு பகுதி சுற்று பயணமாகவே (Sub orbital) அமைந்தது. இவரின் விண்வெளிப் பயணம் 15 நிமிடம் 37 நொடிகள் ஆகும்இவர் பூமியைச் சுற்றி வரவில்லை.

          இவர் பூமி திரும்பிய போது இவரின் விண்கலம் கடலில்  விழுந்தது. அது கடலில் மூழ்கியது. தண்ணீர் உடையின் உள்ளே சென்றது. ஹெலிகாப்டரின் உதவியால் வெளியே எடுக்கப்பட்டார். எந்தவித பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை.

          இவர் மீண்டும் ஒரு முறை விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது. ஜெமின் 3 என்கிற விண்கலம் முதன் முதலில் இரண்டு வீரர்களை ஏற்றிச் சென்றது. இந்தப் பயணம் மார்ச் 23, 1965இல் நடந்தது. இந்தப் பயணத்தில் இவருடன் ஜான் எங் சென்றார். பூமியை 3 சுற்று சுற்றினார். இதற்கு 4 மணி 54 நிமிடங்கள் ஆனது.

          இதன் பின்னர் இவர் அப்பலோ திட்டத்திற்கு மாற்றப்பட்டார். அப்பலோ-1 ஏவுவதற்குத் தயாரான போது அது தீ பிடித்து  விபத்து ஏற்பட்டது. அதனால் ஜனவரி 27, 1967இல் தனது 40வது வயதில் இறந்தார்.

ஹெர்மன் ஸ்டீபனோவிச் டிட்டோவ் :

          யூரி ககாரின் விண்வெளியில் எடையற்ற தன்மையில் 1 மணி 48 நிமிடங்கள் இருந்தார். எடையற்ற தன்மை அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதை ரஷிய விண்வெளி விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். ஆகவே இரண்டாவது விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.

          ரஷியா ஹெர்மன் ஸ்டீபனோவிச் டிட்டோவ் (Gherman Stepanovich Titov) என்கிற 26 வயது இளைஞரை விண்வெளிக்கு அனுப்பியது. விண்வெளிக்கு சென்றவர்களில் மிக குறைந்த வயதுடைய வீரர் இவர்தான். இவர் தான் பூமியை இரண்டாவதாக சுற்றிய விண்வெளி வீரர்.

          இவர் செப்டம்பர் 11, 1995ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஸ்டாலின் கிரேடு ராணுவ விமானப் பள்ளியில் படித்தார். பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் விமானப் படையில் பைலட் ஆனார். இவர் விண்வெளி வீரருக்கான பயிற்சியை 1960ஆம் ஆண்டில் பெற்றார். இவர் பயிற்சி காலத்தில் பருரி கோரினுக்கு அடுத்தபடியாக திறமையானவராக விளங்கினார். ஆகவே ரஷியாவின் இரண்டாவது நபராக விண்வெளிக்குச் செல்ல தேர்ந்து எடுக்கப்பட்டார்.

          டிட்டோவ் வோஸ்டாக்-2 என்கிற விண்கலத்தின் மூலம் ஆகஸ்ட் 6, 1961ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்றார். இவர் விண்வெளியில் ஒரு நாளைக்கு மேல் இருந்தார். அதாவது 25 மணி நேரம், 18 நிமிடங்கள் இருந்தார். இவர் பூமியை 17 முறை சுற்றி வந்தார்.

          இவர்தான் முதன்முதலில் விண்வெளியில் தூங்கிய மனிதராவார். இவர் தூங்கும் போது இவருடைய கைகள் மிதக்கத் தொடங்கின. இதற்குக் காரணம் புவிஈர்ப்புத் தன்மை இல்லாதது. இதன் பின்னர் இவர் தனது கையை பாதுகாப்பு பெல்ட்டின் உள்ளே நுழைத்துக் கொண்டார். அதன் பின்னர் தூங்கும் பையின் உள்ளே சென்று தூங்கினார். திட்டமிட்டப்படி 30 நிமிடத்திற்கு முன்பே விழித்துக்  கொண்டார். கை, கால்களை சரிபடுத்தாமல் இருந்தால் ஒரு குழந்தையைப் போல் தூங்கலாம் என்றார். இவர் விண்வெளியிலிருந்து பத்திரமாக தரையிறங்கினார். விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு இவர் விண்வெளி நோயால் பாதிக்கப்பட்டார். விண்வெளி நோயால் பாதிக்கப்பட்ட முதல் மனிதரும் இவர்தான்.

          இவர் 1992ஆம் ஆண்டில் விண்வெளி திட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1995ஆம் ஆண்டில் மாநில டூமாவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது 65வது வயதில் செப்டம்பர் 20, 2000ஆம் ஆண்டில் மாஸ்கோ நகரில் இறந்தார்.

          இவர் சோவியத் அரசின் ஹீரோ விருது, 2 லெனின் விருது, பல வெளிநாட்டு விருதுகளைப் பெற்றார். நிலாவின் மறுபக்கத்தில் உள்ள ஒரு குழிக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜான் ஹெர்செல் கிளன் :

          ஜான் ஹெர்செல் கிளன் (John Herchel Glenn) என்கிற விண்வெளி வீரர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு பைலட் மற்றும் அரசியல்வாதி. இவர் அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். இவர் கொரியா நாட்டின் மீது நடந்த போரில் கலந்து கொண்டார். இவர் விண்வெளிக்குச் சென்ற ஐந்தாவது நபர். பூமியைச் சுற்றிய மூன்றாவது விண்வெளி வீரர். ஆனால், முதன் முதலில் பூமியைச் சுற்றிய அமெரிக்க விண்வெளி வீரர்.

          கிளன் 18, 1921ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் பிறந்தார். இவர் நாசா விண்வெளி வீரர்கள் குழுவிற்காக 1959ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 20, 1962ஆம் ஆண்டில் மெர்குரி அட்லஸ்-6 என்கிற மிஷன் மூலம் விண்வெளிக்குச் சென்றார். இவர் பூமியை 3 முறை சுற்றினார். விண்வெளியில் 4 மணி 55 நிமிடம் 23 நொடிகள் இருந்து பூமி திரும்பினார். இவர் தரை இறங்கும் போது விண்கலத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் பத்திரமாகத் தரை இறங்கினார்.

          பூமியை முதன் முதலில் இவர் சுற்றியதால் அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டம் நடந்தது. இவரை ஜனாதிபதி கென்னடி கௌரவித்தார். இவர் கென்னடியின் குடும்ப நண்பராக மாறினார்.

          இவர் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் தீவிர அரசியல்வாதியாக மாறினர். ஓகியோ மாநிலத்தின் செனட்டராக 1974 முதல் 1999 வரை இருந்தார்.

          கிளன் இரண்டாவது முறையாக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தனது 77வது வயதில் விண்வெளிக்குச் சென்றார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற வயதான மனிதர் என்கிற பெயரைப் பெற்றார். இவர் ஸ்பேஸ் ஷட்டில் டிஸ்கவரி STS - 95 என்கிற விண்வெளி ஓடத்தின் மூலம் சென்றார். விண்வெளியில் 9 நாட்கள் இருந்தார். இளமை காலத்திலும், வயதான காலத்திலும் விண்வெளியின் எடையற்ற தன்மை மனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வினைச் செய்தார். பல தகவல்களைச் சேகரித்துக் கொண்டு பூமி திரும்பினார்.

          நாசா அமைப்பானது ஜான் கிளன் ஆராய்ச்சி மையம் ஒன்றை ஓகியோவில் ஆரம்பித்துள்ளது. இவரின் பொது சேவைக்காக மே 23, 2010ஆம் ஆண்டில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவரைப் பற்றி டாக்குமெண்டரி படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட் கார்பெண்டர் :

             அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஸ்காட் கார்பெண்டர் (Scott Carpenter) என்கிற விண்வெளி வீரர் கிளன் விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு விண்வெளிக்குச் சென்றார். இவர் மெர்குரி அட்லஸ் 7 என்கிற கலத்தின் மூலம் மே 24, 1962ஆம் ஆண்டில் சென்றார். இவரும் பூமியை 3 முறை சுற்றினார். இவர் விண்வெளியில் 4 மணி 54 நிமிடங்கள் இருந்து பூமி திரும்பினார்.

ஆன்ட்ரியான் நிக்கோலயாவ்:

          ரஷியாவின் மூன்றாவது விண்வெளி வீரர் ஆன்ட்ரியான் நிக்கோலயாவ் (Andriyan Nikolayev) ஆவார். இவர் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். பைலட்டாகவும், மேஜர் ஜெனரலாகவும் சோவியத் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். இவர் செப்டம்பர் 5, 1929ஆம் ஆண்டில் பிறந்தார்.

          இவர் வோஸ்டாக்-3 என்கிற விண்கலத்தின் மூலம் ஆகஸ்ட் 11, 1962இல் விண்வெளிக்குச் சென்றார். இவர் விண்வெளியில் 3 நாட்கள் 22 மணிநேரம் இருந்தார். இந்த காலத்தில் இவர் பூமியை 64 முறை சுற்றினார். இவரின் வோஸ்டாக்- 3 விண்கலத்தை முதல் சோவியத் ரஷியாவின் இரட்டை விண்கலம் என அழைத்தனர். ஏனெனில் இதே சமயத்தில் விண்வெளியில் வோஸ்டாக் - 4 என்கிற விண்கலமும் பூமியைச் சுற்றியது. உலகில் இரண்டு மனித விண்கலங்கள் பூமியைச் சுற்றியதால் இதனை இரட்டை விண்கலங்கள் (Dual Mission) என அழைத்தனர்.

          இவர் விண்வெளியில் பூமியைச் சுற்றும் போது இந்த நிகழ்ச்சி முதன்முதலில் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. விண்வெளி வீரருக்கான பயிற்சி கொடுக்கப்பட்ட போது இவர் நான்கு நாட்கள் இருட்டு அறையில் தனிமையாக இருந்தார். இதனால் இவரை இரும்பு மனிதர் எனவும் அழைத்தனர்.

          இவர் நவம்பர் 3, 1963ஆம் ஆண்டில் வாலண்டீனா டெரஸ்கோவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்தான் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற வீராங்கனை ஆவார். இவர்களுக்கு ஒரு மகள். அவர் தற்போது மருத்துவராக உள்ளார்.

          இவர் இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்றார். சோயுஸ் 8 விண்கலத்தில் பயிற்சி எடுத்தார்சோயுஸ் - 9 என்கிற விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். இவர் விண்வெளியில் இந்த முறை 17 நாட்கள் இருந்தார். இவர் இரண்டு விண்வெளியில் பயணத்தின் மூலம் 21 நாட்கள் 15 மணி 20 நிமிடங்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

          இவர் விண்வெளி வீரர்கள் குழுவிலிருந்து ஜனவரி 26, 1982இல் ஓய்வு பெற்றார். இவருக்கு இரண்டு முறை சோவியத் யூனியன் ஹுரோ விருது வழங்கப்பட்டது. லெனின் விருது உள்பட பல வெளிநாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக ஜுலை 3, 2004ஆம் ஆண்டில் இறந்தார்

பாவெல் போபோவிச்:

          பாவெல் போபோவிச் (Pavel Popovich) ரஷிய நாட்டைச் சேர்ந்த உக்ரைன் விண்வெளி வீரர். உக்ரைன் இனத்தைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர். இவர் ரஷிய நாட்டின் 4வது விண்வெளி வீரர். பூமியை ஆறாவதாகச் சுற்றிய வீரர். எட்டாவது மனிதராக விண்வெளிக்குச் சென்றார்.

          இவர் அக்டோபர் 5, 1930ஆம் ஆண்டு உக்ரைனில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இவரின் பிறந்த ஊரை ஜெர்மனியர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் இவரின் பள்ளி சான்றிதழ் எரிந்து போனது. பின்னர் தச்சு வேலை செய்தார். 1951ஆம் ஆண்டில் கட்டிடப் பொறியாளர் பட்டம் பெற்றார். 1954இல் இளைஞர் கம்யூனிஸ்ட் லீக்கில் சேர்ந்தார்.

          இவர் விமானப்படையில் 1954ஆம் ஆண்டில் சேர்ந்தார். பைலட்டாகவும், கேப்டனாகவும், மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். ஒரு படைப்பிரிவின் தலைவராகவும் இருந்தார். பின்னர் மேஜர் ஜெனராலாகவும் 1976ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்றார். இவர் 1993ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

விண்வெளி:

          இவர் விண்வெளி வீரராக 1960ஆம் ஆண்டில் தேர்வு ஆனார். விண்வெளி வீரருக்கான பயிற்சியை எடுத்தார். பின்னர்

வோஸ்டாக் 2 மற்றும் 3 ஆகிய விண்கலத்திலும் பயிற்சி எடுத்துக் கொண்டார். இவர் ஆகஸ்ட் 12, 1962ஆம் ஆண்டில் வோஸ்டாக்-4 என்கிற விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றார். ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த வோஸ்டாக் - 3 என்கிற விண்கலத்தின் அருகில் 3.1 மைல் தொலைவில் இவரும் பூமியைச் சுற்றினார். இவர் பூமியை 48 முறை சுற்றினார். விண்வெளியில் 2 நாட்கள் 23 மணி நேரம் சுற்றினார்.

          இவர் 1964ஆம் ஆண்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பவராக இருந்தார். இவர் நிலாவிற்குச் செல்வதற்கான பயிற்சியை எடுத்தார். ஆனால் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை ரஷியா கைவிட்டது.

          இவர் 1968ஆம் ஆண்டில் சோயுஸ்- 2 கேப்டனாக பதவி கிடைத்தது. இவர் இரண்டாவது முறையாக சோயுஸ்- 14 என்கிற விண்கலத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்றார். இது சல்யுட் 3 என்கிற ஆய்வு நிலையத்துடன் இணைந்தது. இவர் இந்த முறை விண்வெளியில் 15 நாட்கள் 17 மணி 30 நிமிடங்கள் இருந்து பூமி திரும்பினார்.

          இவர் 18 விருதுகளைப் பெற்றார். 1993ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் வாழ்ந்தார். மாரடைப்பு காரணமாக செப்டம்பர் 29, 2009ஆம் ஆண்டில் இறந்தார்.

மெர்குரி அட்லஸ்:

          அமெரிக்கா அக்டோபர் 3, 1962ஆம் ஆண்டில் மெர்குரி அட்லஸ்- 8 என்கிற மனித விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அதில் வால்டர் ஷிரா (Walter Schirra) என்கிற விண்வெளி வீரர் சென்றார். இவர் பூமியை 6 முறை சுற்றினார். விண்வெளியில் 9 மணி நேரம் இருந்தார்.

          இதன் பின்னர் மெர்குரி அட்லஸ்-9 என்கிற விண்கலத்தை அமெரிக்கா மார்ச் 15, 1963இல் அனுப்பியது. இதில் கோர்டன் கூப்பர் (Gordon Cooper) என்கிற விண்வெளி வீரர் பயணம் செய்தார். இவர் தான் முதன்முதலில் ஒரு நாளைக்கு மேல் விண்வெளியில் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். இவர் பூமியை 22 முறை சுற்றினார். விண்வெளியில் 34 மணி 20 நிமிடங்கள் இருந்து பூமி திரும்பினார்.

பைக்கோஸ்கி:

          வெல்லரி பைக்கோஸ்கி (Valery Bykovsky) என்பவர் ரஷியாவில் பாவ்லோஸ்கி என்னுமிடத்தில் ஆகஸ்ட் 2, 1934ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் வோஸ்டாக் - 5 என்கிற ரஷிய விண்கலத்தின் மூலம் ஜுன் 14, 1963இல் விண்வெளிக்குச் சென்றார். இந்த விண்கலமும் ஒரு இரட்டை விண்கலமாகக் கருதப்படுகிறது. இவர் விண்வெளியில் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கும் போது வோஸ்டாக்- 6 என்கிற விண்கலமும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

          இவர் விண்வெளியில் 5 நாட்கள் 23 மணி நேரம் இருந்தார். பூமியை 81 முறை சுற்றினார். இவர் விண்வெளியில் 5 நாட்கள் இருந்து சாதனை புரிந்தார். இது விண்வெளிப் பயணம் தொடங்கிய அந்த காலகட்டத்தில் செய்த சாதனையாகும்.

          இவர் சோயுஸ்-22 மற்றும் சோயுஸ் 31 ஆகிய இரண்டு கலத்தின் மூலம் மேலும் இரண்டு பயணங்கள் விண்வெளிக்குச் சென்றார். இவர் தனது 3 விண்வெளிப் பயணத்தின் மூலம் 20 நாட்கள், 17 நாட்கள், 48 நிமிடங்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

          இவர் பைலட்டாகவும், மேஜர் ஜெனரலாகவும் சோவியத் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். இவர் 1988ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் மூன்று ஆண்டுகள் பெர்னிலில் அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறையின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார். இவர் சோவியத் ரஷியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

 

 

 

 

 

வாலண்டீனா டெரஸ்கோவா:

          வாலண்டீனா டெரஸ்கோவா (Valentina Tereshkova) என்பவர் மார்ச் 6,1937ஆம் ஆண்டில் ரஷியாவில் பிறந்தார். இவர் ஒரு பெண் விண்வெளி வீரர். இவர்தான் உலகில் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண் ஆவார்.

               இவரின் தந்தை டிராக்டர் டிரைவர். தாய் துணி ஆலையில் பணிபுரிந்தார். 1945ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்தார். ஆனால் 1953இல் பள்ளியை விட்டு நின்றார். ஆனால் இவர் அஞ்சல் வழிக்கல்வி மூலம் கல்வி பயின்றார். இவருக்கு தனது இளமை காலத்தில் பாராசூட் மீது ஆர்வம் ஏற்பட்டது. இவர் உள்ளூரில் உள்ள ஏரோகிளப் மூலம் பயிற்சி எடுத்தார். தனது 22 வயதில் பாராசூட் மூலம் குதித்தார். இவர் பாராசூட் மூலம் குதிக்கும் திறமையால் விண்வெளிக்கு செல்லும்  வாய்ப்பைப் பெற்றார்.

          இவர் 1961ஆம் ஆண்டில் இளம் கம்யூனிஸ்ட் லீக்கின் உள்ளூர் செயலாளராக இருந்தார். பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனார்.

            யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று வந்த பின்னர் ரஷியாவின் ராக்கெட் பொறியாளர் செர்கி கொரோலெவ் பெண்ணையும் விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்கிற யோசனையைத் தெரிவித்தார். விண்வெளிக்குச் செல்லும் பெண்களுக்கான தேர்வில் 400 மனுக்கள் இடம் பெற்றன. இதில் 5 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். வாலண்டீனா பிப்ரவரி 16, 1962இல் பெண் விண்வெளி வீரர்கள் குழுவில் சேர்க்கப்பட்டார். அப்போது இவருக்கு வயது 30. இவர் ஜெட் விமானத்தில் பயிற்சி எடுத்தார். 120 முறை பாராசூட்டிலிருந்து குதித்து பயிற்சி எடுத்தார். பல மாதங்கள் கடுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டார். எடையற்ற நிலையில் இருத்தல், தனிமையாக இருட்டறையில் இருக்கும் பயிற்சியினையும் எடுத்துக் கொண்டார்.

          இவர் வோஸ்டாக் - 6 என்கிற ரஷிய விண்கலத்தின் மூலம் ஜுன் - 16, 1968இல் விண்வெளிக்குச் சென்றார். இவர் பூமியை 48 முறை சுற்றினார். விண்வெளியில் 2 நாட்கள் 22 மணி 50 நிமிடங்கள் இருந்தார். இந்த காலக்கட்டத்தில் விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க வீரர்களை விட அதிக நேரம் விண்வெளியில் இருந்தார். இவர் விண்வெளியில் இருந்த காலத்தில் தானாக பல ஆய்வுகளைச் செய்தார். பெணின் உடலில் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்.

          வோஸ்டாக் - 6 விண்கலம் கடைசி விண்கலமாகும். இவர் விண்வெளியில் இருக்கும் போது வோஸ்டாக் - 5 விண்கலம் 3 மைல்  அருகில் வந்து சென்றது. இவரின் வோஸ்டாக் - 6 விண்கலம் பூமி இறங்கிய 3 மணி நேரம் கழித்து வோஸ்டாக் - 5 என்கிற விண்கலமும் 5 கி.மீ. தொலைவில் தரை இறங்கியது. இவர் விண்வெளிக்குச் சென்று வந்து 19 ஆண்டுகள் கழித்த பின்னரே அமெரிக்கா பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது.

          இவர் விண்வெளிக்குச் சென்று வந்த பின்னர் விண்வெளி வீரர் பொறியியல் பட்டப்படிப்பை படித்து பட்டம் பெற்றார். 1977ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1569ஆம் ஆண்டு முதல் பிரபலமான கம்யூனிஸ்ட்டாக இருந்தார். பல்வேறு இடங்களில் இருந்த கட்சி அலுவலகத்தில் வேலை செய்தார். சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு பல விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் கிடைத்துள்ளது.

வோஸ்காட் - 1:

          விண்கலத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சி என்பது வோஸ்காட் - 1 (Voskhod- 1) ஆகும். அது வரை விண்கலத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. இந்த வோஸ்காட் மிஷன் என்பது முதன் முதலாக விண்வெளிக்கு 3 பேரை ஏற்றிச் சென்றது.

          வோஸ்காட் மிஷன் 5320 கிலோ எடை கொண்டது. இதனை ரஷியா அக்டோபர் 12, 1964ஆம் ஆண்டில் பைக்கனூர் விண்வெளி நிலையத்திலிருந்து ஏவியது. இதில் விளாடிமீர் கோமரோவ் கமாண்டர் பைலட், காண்ஸ்டான்டின் பியோக்டிஸ்டோவ் பொறியாளர், போரிஸ் எக்கரோவ் மருத்துவ டாக்டர் ஆகிய மூன்று பேர் சென்றனர். மூன்று பேரும் ராணுவத்தை சாராதவர்கள் ஆவார்கள்.

          இந்த விண்கலம் 360 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று சுற்றியது. இது பூமியை 89.6 நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றி வந்தது. இந்த விண்கலம் பூமியை 16 முறை சுற்றியது. இதில் சென்றவர்கள் விண்வெளி உடையை விண்வெளியில் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விண்வெளியில் 1 நாள் 17 மணி 3 நிமிடங்கள் இருந்தனர். இவர்கள் அக்டோபர் 13, 1964இல் 7.47 மணிக்கு பூமி திரும்பினர்.

          இந்த விண்கலம் விண்வெளியில் பலர் எப்படி ஒன்றாகச் சேர்ந்து கூட்டாக வேலை செய்ய முடியும் என்பதற்காக அனுப்பப்பட்டது. இது பலர் விண்வெளியில் ஒன்றாகச் சேர்ந்து பணிபுரிய முடியும் என்பதை நிரூபித்தது. இதில் சென்றவர்கள் உயிரி மருத்துவ ஆய்வினைச் செய்தனர். இந்த விண்வெளி ஓடத்திற்குப் பிறகுதான் பலர் செல்லக்கூடிய விண்வெளி ஓடங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னரே விண்வெளிக்கு வீரர்கள் செல்வது என்பது அதிகரித்தது.

 

ஜெமினி - 3:

          அமெரிக்காவும் ஜெமினி - 3 (Gemini- 3) என்கிற இரண்டு நபர்கள் செல்லக்கூடிய விண்வெளி ஓடத்தை தயாரித்தது. அதனை மார்ச் 23, 1965ஆம் ஆண்டில் ஏவியது. இது 3236.9 கிலோ எடை கொண்டது. இந்த பயணத்தில் ஜான் எங் கமாண்டர் பைலட் மற்றும் கிரிஸம் பைலட் டாசே சென்றனர். கிரிஸம் இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்றனார். இந்த விண்கலம் ஜெமினி திட்டத்தின் முதல் மனித விண்கலம் ஆகும். இது தான் அமெரிக்கா தயாரித்த இருவர் செல்லக்கூடிய முதல் விண்கலம் ஆகும்.

          ஜெமினி - 3 விண்கலம் 224.2 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது. இது பூமியை 88.3 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றியது. இது பூமியை மூன்று முறை சுற்றிய பிறகு பூமி திரும்பியது. இதில் சென்ற வீரர்கள் 4 மணி 52 நிமிடம் 31 நொடிகள் விண்வெளியில் இருந்தனர். இந்த பயணத்தின் போது கடல் அர்சின் (Sea Urchin) முட்டையை எடுத்துச் சென்றனர். ஈர்ப்பு விசையற்றத் தன்மையில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்தனர்.

விண்வெளி சந்திப்பு:

          விண்வெளி சந்திப்பு என்பது முன்னேற்பாட்டால் பலர் சந்திப்பதாகும். இதில் இரண்டு விண்கலங்களில் சென்றவர்கள் சந்திப்பது என்பது நடந்தது. பின்னர் அடிக்கடி விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களை சந்திப்பதாக மாறியது. ஆரம்பத்தில் இரண்டு விண்கலங்களில் சென்ற மனிதர்கள் ஒரே சுற்றுப்பாதையில் மிக அருகில் சென்று பார்த்ததாகும். இவை இரண்டும் இணையாமல் இருந்தாலும் பார்வைக்கு இணைந்தது போல் தெரிந்தது

          சோவியத் ரஷியா 1962 மற்றும் 1963ஆம் ஆண்டுகளில் இரண்டு ஜோடி விண்கலங்களை ஒரே சமயத்தில் அனுப்பின. வோஸ்டாக் - 3, வோஸ்டாக் - 4 மற்றும் வோஸ்டாக் - 5, வோஸ்டாக் - 6 ஆகியவை ராக்கெட் உதவியுடன் மிகத் துல்லியமாக இரண்டும் குறிப்பிட்ட இடைவெளியில் சுற்றுமாறு ஏவப்பட்டது. ஆனால் இவை மிக அருகில் சந்திக்கவில்லை. இவைகளுக்கு இடையே இடைவெளி என்பது 5 கிலோ மீட்டர் முதல் 6.5 கிலோ மீட்டர் வரை இருந்தது. பின்னர் இவை 1000 கிலோ மீட்டர் தூரம் விலகிச் சென்றன.

          முதன் முதலில் உண்மையில் இரண்டு விண்கலங்கள் சந்திப்பு (Rendezvous) என்பது அமெரிக்க வீரர் வால்லி ஸ்கிரா (Wally Schirra) சென்ற விண்கலமாகும். ஏற்கனவே விண்வெளிக்கு டிசம்பர் 4, 1965ஆம் ஆண்டில் ஜெமினி 7 என்கிற விண்கலம் ஏவப்பட்டது. இதில் இரண்டு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இவர்கள் பூமியை 220 முறை சுற்றினர். விண்வெளியில் 13 நாட்கள் 18 மணி நேரம் இருந்தனர். டிசம்பர் 15, 1965இல் ஜெமினி - 6A விண்கலத்தில் வால்லி ஸ்சிரா பயணம் செய்தார். இந்த இரண்டு விண்கலமும் 1 அடி இடைவெளியில் சந்தித்தன. தொடர்ந்து இவை ஒரு அடி இடைவெளியில் 20 நிமிடங்கள் சுற்றின. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

முதல் இணைப்பு:

          முதல் இரண்டு விண்கலங்கள் விண்வெளியில் இணைப்பு (Docking) என்பது மார்ச் 16, 1966ஆம் ஆண்டில் நடந்தது. ஜெமினி 8 என்கிற விண்கலத்தில் பயணம் செய்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் ஜெமினி அஜினாவுடன் இணைந்தார். ஜெமினி அஜினா என்பது ஒரு ஆளில்லாத விண்கலமாகும். அதனுடன் இணைய வேண்டும் என திட்டமிடப்பட்டது. அதனை சாதித்ததன் மூலம் விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த இணைப்பு என்பது விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு வழி வகுத்தது. நிலவிற்கு மனிதன் செல்வதற்கும் அடித்தளமாக அமைந்தது.

          இதன் பின்னர் சோவியத் ரஷியா விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. ரஷியா முதன் முதலாக இரண்டு ஆளில்லாத (Unmanned) விண்கலங்களை தானாக இணையச் செய்தது. கோமோஸ் 186 (Comos - 186) மற்றும் கோமோஸ் 188 ஆகிய இரண்டு விண்கலங்கள் அக்டோபர் 30, 1967இல் இணைந்தன.  

            சோவியத் விண்வெளி வீரர். ஜியார்ஜி போர்கோவோய் (Georgi Boregovoi) என்பவர் தனது சோயுஸ்- 3 விண்கலத்தை ஆளில்லாத விண்கலமான சோயுஸ்- 2 உடன் அக்டோபர் 25, 1968இல் இணைத்தார். முதலில் விண்கலத்தை 200 மீட்டர் அருகில் கொண்டுவந்தார். பின்னர் ஒரு அடி அருகில் கொண்டு வந்த, பின்னர் இணைத்தார். சோவியத் ரஷியாவின் இரண்டு மனித விண்கலங்கள் சோயுஸ்- 4 மற்றும் சோயுஸ்-5 என்பவை ஜனவரி 16, 1969இல் இணைந்தன. இதில் இருந்த வீரர்கள் ஒரு விண்கலத்திலிருந்து அடுத்த விண்கலத்திற்கு மாறினார்கள்.

          இரண்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்கலங்கள் அருகில் சந்தித்து என்பது ஜுன் 17, 1975இல் நடந்தது. அப்பலோ விண்கலம் சோயுஸ் விண்கலத்துடன் இணைந்தது. இதனை அப்பலோ சோயுஸ் பரிசோதனைத் திட்டம் என அழைக்கப்பட்டது.

          முதல் பல விண்வெளி இணைப்பு என்பது சல்யுட் 6 விண்வெளி நிலையத்துடன் இணைந்ததாகும். சோயுஸ்- 26 மற்றும் சோயுஸ்-27 ஆகிய இரண்டு விண்கலங்கள் சல்யுட்- 6 இல் ஜனவரி 1978 அன்று இணைந்தது. இணைப்பு என்பது சிரமமானது. ஆனால் மிகச் சரியாக இணைந்ததன் மூலம் விண்வெளி ஆய்வு, வளர்ச்சி பெற்றது.

பயன்கள் :

          விண்கலம் அருகில் சந்திப்பது என்பது விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கு உதவுகிறது. மனித விண்கலங்கள் விண்வெளி நிலையமான சல்யுட், ஸ்கைலாப், மிர், சர்வதேச விண்வெளி நிலையங்களுடன் இணைந்தன. இன்றைக்கு விண்வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோயுஸ் மற்றும் ஸ்பேஸ் ஷட்டில்கள் சென்று வருகின்றன. ரோபாட்டிக் விண்வெளி ஓடம் (Robotic Space Craft) விண்வெளி நிலையத்திற்குப் பொருட்களை கொண்டு கொடுத்து வருகின்றன. சோயுஸ், புரோகிரஸ் விண்கலங்கள் தானியங்கிக் கருவி மூலம் விண்வெளி நிலையங்களுடன் இணைந்தன.

          சந்திப்பு என்பது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியுடன்  நடந்தது. அதனால் ஹப்பின் தொலை நோக்கியை பழுதுபார்க்க முடிந்தது. இணைப்பு என்பது வெற்றிகரமாக நடந்ததால் தான் மனிதன் அப்பலோ திட்டத்தின் மூலம் நிலவிற்கும் சென்று வர முடிந்தது.

          விண்வெளியில் இணைப்பு சாத்தியமான பிறகே பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்வெளிக்குச் சென்று வந்தனர்.

விண்வெளிக்குச் சென்றவர்கள்:

          பூமியிலிருந்து 100 கிலோ மீட்டர் (62 மைல்) உயரம் வரை சென்றவர்கள் விண்வெளிக்குப் பயணம் செய்தவர்களாக கருதப்படுகிறார்கள். தொழில் ரீதியான விண்வெளி வீரர்கள், ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் 80 கிலோமீட்டர் உயரம் வரை சென்றவர்களையும் அமெரிக்கா விண்வெளி வீரர்கள் பிரிவில் சேர்த்துள்ளது.

          விண்வெளிக்கு மனிதனின் பயணம் தொடங்கி ஜுன் 16, 2010 வரை 38 நாடுகளைச் சேர்ந்த 524 பேர் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களில் பலர் ஒரு முறைக்கு மேல் பலமுறை விண்வெளிக்குச் சென்று வந்தவர்களும் இருக்கின்றனர். 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒருமுறை மட்டுமே விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர்.

நாடுகளின் அடிப்படையில் சென்றவர்களின் எண்ணிக்கை

அமெரிக்கா                 -   332 பேர்

ரஷியா                        -   106 பேர்

ஐரோப்பிய ஸ்பேஸ்

ஏஜென்ஸியைச் சேர்ந்த -   33 பேர்

நாடுகள்

கனடா                        -   9 பேர்

ஜப்பான்                      -   8 பேர்

சீனா                           -   6 பேர்

பல்கேரியா                  -   2 பேர்

இந்தியா                     -   1 பேர்

இதர நாடுகள்              -   27 பேர்

நாடுகளின் அடிப்படையில் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்