இங்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொருவரும் ஏதோவொன்றுக்காகப் பலவகைகளில் முயற்சி செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.
முயற்சி என்பது பெரும்பாலும் எல்லோருமே செய்யக்கூடியது. அவரவர் பணிபுரியும் துறைகளில் முயற்சித்து அடுத்தக் கட்டத்திற்கு நகர முயற்சி செய்வது அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சமயத்திலும் முயற்சித்துத் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது.
இவையெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் வளர்ச்சியோடு சம்மந்தப்பட்டது. ஆனால் இங்கு ஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள்.
அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ஒரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com
எனக்கு இந்தத் தளம் குறித்து, இதன் நோக்கம் குறித்து 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிய வந்தது. தமிழ் மொழி சார்ந்து, வளர்ச்சியின் பொருட்டு, அதன் பலகூறுகளின் அடிப்படையில் செயல்படத் தயாராக இருப்பவர்களும், அதற்காக முயற்சித்துக் கொண்டிருப்பவர்களும் என் பார்வைக்கு வரும் போது என்னால் ஆன செய்ய முடிந்த முன்னேற்பாடுகளை, உதவிகளைச் செய்வதுண்டு. அப்படித்தான் இந்தத் தளத்திற்கு என் முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” என்ற தொகுப்பினை அளித்தேன்.
ஏறக்குறைய 500 பக்கங்களுக்கு மேற் பட்டது. மின் நூல் வாசகர்கள் குறித்து, அதன் வீச்சு குறித்து எதுவும் தெரியாத போதும் ஆர்வத்தின் காரணமாக நானும் ஒரு அங்கத்தினராகச் சேர்ந்து புதிய முயற்சிகளில் நீர் ஊற்றி வளர்க்கும் நபராக இருந்தேன். இந்தத் தளம் குறித்து எனது வலைபதிவுகளில் தொடர்ந்து எழுதினேன். ஏனைய பிற சமூகத் தளங்களின் வாயிலாகத் தொடர்ந்து முடிந்தவரைக்கும் பலருக்கும் தெரிவித்தேன்.
முதல் மின் நூலுக்குக் கிடைத்த அபரிமிதமாக ஆதரவைக் கண்டு அடுத்தடுத்த மின் நூல்கள் வழங்கி ஏறக்குறைய ஏழு மின் நூல்கள் இந்தத் தளத்திற்கு வழங்கி உள்ளேன். அனைத்தும் எனது வலைபதிவுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் எழுதப்பட்ட 700 கட்டுரைகளில் குறிப்பிட்ட துறைகள் சார்ந்து தேர்ந்தெடுந்தவைகளே.
எனக்கே ஆச்சரியமாக உள்ளது.
இந்தத் தளத்தில் எனது முதல் மின் நூல் பயணம் தொடங்கிய 2013 டிசம்பர் முதல் 2015 ஜுலை வரைக்கும் மொத்தம் 87000+ மேற்பட்டோர் எனது மின் நூல்களைத் தரவிறக்கம் செய்துள்ளனர். ஏறக்குறைய 19 மாதங்களில் ஏழு மின் நூல்களையும் இந்தத் தளம் பலருக்கும் கொண்டு சேர்த்துள்ளது.
ஆச்சரியப்படுத்திய வெற்றியும் கூட.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக நான் கருதும் சில விசயங்கள்.
குறிப்பிட்ட மின் நூலை வாசிக்க விரும்பும் வாசகனுக்கு அவன் விரும்பிய தொழில் நுட்ப வசதிகளை உருவாக்கிய காரணத்தால் ஒவ்வொரு மின் நூலும் ஏராளமான நபர்களுக்கு எளிதாகப் போய்ச் சென்று சேர்ந்துவிடுகின்றது. இதற்கு மேலாக முக்கியமாக வாசிக்கலாம், பகிரலாம், ஆனால் பணம் தேவையில்லை என்ற கொள்கையே பலருக்கும் விருப்பமானதாக இருந்தது.
வாசிக்க விரும்புவர்களிடம் தள நிர்வாகம் பணம் கேட்கவில்லையே தவிர தளத்தை தொடர்ந்த நடத்திச் செல்ல இதற்குப் பின்னால் பலரின் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதாவது தமிழ் வாசிப்பு பழக்கம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் பலவகையில் தமிழ் மொழிக்காக அதன் நவீன கால வளர்ச்சிக்காக வெளியே தன் முகத்தை காட்டிக் கொள்ளாமல் தங்கள் உழைப்போடு பொருளாதாரம் சார்ந்தும் முதலீடு செய்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
எனது முதல் மின் நூல் இந்தத் தளத்தில் வெளியான போது ஒன்பதாவது மின் நூலாகப் பரபரப்பு இல்லாத தளமாக இருந்தது. இன்று பலரையும் கவர்ந்து 200 வது மின் நூலைக் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. என்னுடைய மின் நூல் மட்டுமல்ல. எழுத்துலகில் பிரபலமான, பிரபலமற்ற என்ற எந்தப் பாகுபாடும் இல்லாத அனைத்து எழுத்தாளர்களின் மின் நூல்களையும் ஒரே பார்வையில் கொண்டு சேர்த்தது இந்தக் குழுவினரின் மகத்தான சாதனையாகும்.
தமிழக புத்தகச் சந்தையில் எங்குச் சென்றாலும் மார்க்கெட்டிங் யூக்திகளின் காரணமாகவும், மலிவான தந்திரங்களின் விளைவாகவும் பல திறமைசாலிகளின் ஆக்கப்பூர்வமான படைப்புகள் பலரின் கண்களுக்குத் தெரியாமல் வெறுமனே காகிதமாக எங்கோ ஒரு மூலையில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் கொடுமையெல்லாம் இங்கில்லை.
மகா சமுத்திரம் போல தமிழ் இணையம் அகில உலகத்தையும் ஒன்றிணைப்பதால் நிமிட நேரத்தில் அடுத்தக் கண்டத்தில் இருப்பவரின் கணினிக்குப் போய்ச் சேர்ந்து விடும் வாய்ப்பிருப்பதால் இதன் அருமை பெருமை என்பது தேவைப்படுபவர்களுக்கு வரப்பிரசாதம். வேறொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு தமிழ் மின் நூல்கள் என்பது பொக்கிஷமே.
இந்த தளத்தில் எனது ஒவ்வொரு மின் நூல் வெளியிட்ட தினத்தின் போதும் பின்னூட்டம் வாயிலாகவும் பலரும் தங்கள் கருத்தை பகிர்ந்து உள்ளனர். இன்று வரைக்கும் ஒவ்வொரு மின் நூலைப் படித்தவர்கள் தனிப்பட்ட மின் அஞ்சல் வாயிலாகத் தங்கள் கருத்துக்களை வாழ்த்துகளைத் தெரிவிக்கும் போது வலைபதிவு மூலம் கிடைத்த அங்கீகாரத்தை விட அதிகப்படியான வாழ்த்துகளை பெற்றுள்ளேன்.
வலைபதிவுகளை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் இல்லாத நபர்களுக்கு கிடைத்த திருப்தி மனதளவில் அதிக மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒவ்வொரு மின் நூல்களும் பலதரப்பட்ட பார்வையை உருவாக்கக் காரணமாக உள்ளது. புத்தகத்தை படித்து விட்டு எழுதப்படும் புத்தக விமர்சனம் போல என் மின் நூல் படித்து விட்டு நண்பர்கள் எழுதிய பலதரப்பட்ட மின் நூல் விமர்சனங்கள் என் தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
அந்த அளவுக்கு மின் நூல்கள் தற்போது ஆதிக்கம் பெற்று வருகின்றது என்பது முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என் தொடர்பில் இருந்தவர்கள், என் மூலம் அறிமுகமான பலரும் தங்கள் படைப்புகளை இந்தத் தளத்திற்கு வழங்கியுள்ளனர் என்பதே இந்தத் தளக் குழுவினருக்கு நான் செய்த உதவியாகும். மிக விரைவில் ஆயிரமாவது மின் நூலை இந்தத் தளம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமுண்டு. இந்த தளத்திற்கு நேரிடையாக மற்றும் மறைமுகமாக தங்கள் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்.
நன்றி.
நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
22.07.2015
Comments
One response to “நூலாசிரியர் பேட்டி – ஜோதிஜி திருப்பூர்”
ஜோதிஜி வாசிப்பவர்களின் மனதின் ஆளுமைகளை புரிந்தவர் .அவரின் வருகை இன்னும் பலரை இங்கு அழையாத விருந்தாளியாக்கும் .