உலகில் கொண்டாடப்படும்

சிறப்பு தினங்கள்









ஏற்காடு இளங்கோ























மின்னூல்

என்னுரை

சர்வதேச அளவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல தினங்கள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தினங்கள் யாவும் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களை கொண்டாடுவதன்மூலம் மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது.

உலகளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இருந்தபோதிலும் நாம் கொண்டாட வேண்டிய தினங்கள் எவை, எவை என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுதேர்வுகள் எழுதுவோர்க்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்குடனே இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். அந்த வகையில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. . தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. . இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



வாழ்த்துகளுடன்

- ஏற்காடு இளங்கோ











உலக தினங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் தினமும் ஏதாவது ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அந்நாடு சார்ந்த முக்கிய தினமாக இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சில தினங்களை உலகளவில் கொண்டாடுகின்றன. இவற்றில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்த தினங்களே அதிகம். .நா. சபை, யுனெஸ்கோ, உலகச் சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம், உணவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய அமைப்பு, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, ஐக்கிய நாடு சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு போன்றவை அறிவித்துள்ளன. இது தவிர அறிவியல் அமைப்புகளும், சில தினங்களை அறிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த அனைத்து தினங்களையும் அதன் 192 உறுப்பு நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. இத்தினங்கள் யாவும் பொழுதுபோக்கிற்காகக் கொண்டாடப்படுபவை அல்ல. உலகில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனே இத்தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தினங்கள் ஒவ்வொன்றும் உலகளவில் மாற்றத்தைக் கொண்டுவரவே கொண்டாடப்படுகின்றன.

1. ஜனவரி - 1 :

ஆங்கிலப் புத்தாண்டு

(New Year)

ஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.



2. ஜனவரி - 1 :

உலக குடும்ப தினம்

(Global Family Day)

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த போரும், பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.



3. ஜனவரி - 4 :

ஐசக் நியூட்டன் பிறந்த தினம்

(Isaac Newton’s Birth Day)

ஐசக் நியூட்டன் 1643ஆம் ஆண்டு ஜனவரி 4இல் இங்கிலாந்து நாட்டில் உல்சுதோர்ப் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வுகள்மூலம் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒரு-­-­வராகக் கொண்டாடப்படுகிறார். இவரின் இயக்க விதியை நியூட்டன் விதி என்று அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பின்மூலம் அறிவியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.



4. ஜனவரி - 8 :

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்

(African National Congress Foundation Day)

தென்னாப்பிரிக்க கருப்பு இன மக் களின் உரிமைகளுக்காகப் போராட தென்னாப்பிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ் 1912ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சியின் முதலாவது தலைவர் சோல் பிளாட்ஜி. இக்கட்சியின் பெயர் 1923ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது. இது தற்போது தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியாக உள்ளது.



5. ஜனவரி - 10 :

உலக சிரிப்பு தினம்

(World Laughter Day)

முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் நாள் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாகவே அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6000 சிரிப்பு கிளப்புகள் நடந்து வருகின்றன. உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது. இதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.



6. ஜனவரி - 17 :

பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம்

(Benjamin Franklin Birth Anniversary Day)

பெஞ்சமின் பிராங்க்ளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார். மின்னலில்கூட மின்சாரம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். மின்சாரம், இடி, மின்னல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் (Bifocal Glasses) கண்டுபிடித்தார். அமெரிக்காச் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பெஞ்சமின் ஆவார்.



7. ஜனவரி-19 :

ஜேம்ஸ் வாட் பிறந்த தினம்

(James Watt Birth Anniversary Day)

ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். கல்வியை தாயாரிடம் வீட்டிலேயே கற்றார். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். நீராவி இயந்திரத்தில் இவர் செய்த மேம்பாடுகளே பிரிட்டிஷ் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட அடிப்படையாக அமைந்தன.



8. ஜனவரி - 21

லெனின் நினைவு தினம்

(Lenin Death Anniversary Day)

லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர். ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் சோவியத் மார்க்சியம் - லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். சமூகப் புரட்சியாளர் லெனின் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் இயற்கை எய்தினார்.



9. ஜனவரி - 26

சர்வதேச சுங்க தினம்

(International Customs Day)

சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு அதன் முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன் பின்னர் 161 சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். இந்த அமைப்பு உலகின் 98 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. சர்வதேச சுங்க தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.



10. ஜனவரி - 27

சர்வதேச இன அழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள்

(International Day of Commemeration in Memory of the Victims of the Holocaust)

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் படைகள் 1945ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நாஜி மரண முகாமில் இருந்த யூதர்களை விடுவித்தது. இனப்படுகொலை மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா. அமைப்பு இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.



11. ஜனவரி கடைசி ஞாயிறு

உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்

(World Lebrosy Eraication Day)

தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். தொழுநோயாளிகள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள்மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை 2006ஆம் ஆண்டு டிசம்பர் 13இல் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.



12. பிப்ரவரி - 2

உலக ஈரநிலங்கள் தினம்

(World Wetland Day)

பிப்ரவரி மாதம் 2 அன்று 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிப்ரவரி 2 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



13. பிப்ரவரி - 4

உலகப் புற்றுநோய் தினம்

(World Cancer Day)

உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



14. பிப்ரவரி - 6

பெண் இனப்பெருக்கத்தை அழிப்பதை ஒழிக்கும் சர்வதேச தினம்

(International Day of Zero Tolerance to Female Genital Mutilation)

பெண் பிறப்புறுப்பு சிதைப்புடன் சுமார் 125 மில்லியன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற 29 நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இது பெண்களுக்கு எதிரான தீவிர பாகுபாடாகும். இது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையாகும். இதனை ஒழித்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட 2012 இல் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.





15. பிப்ரவரி - 8



டிமிட்ரி மெண்டெலீவ் பிறந்த தினம்

(Dmitry Mendeleev Birth Anniversary Day)

கனிம அட்டவணையின் தந்தை என மெண்டெலீவ் அழைக்கப்படுகிறார். இவர் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் ரஷ்யாவில் பிறந்தார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். இதனை மார்ச் 6, 1869இல் ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.



16. பிப்ரவரி - 11

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்

(Thomas Alva Edison Birth Anniversary Day)

தாமஸ் ஆல்வா எடிசன், 1847ஆம் ஆண்டில், பிப்ரவரி 11 அன்று அமெரிக்காவில் பிறந்தார். படிக்காதமேதை, பட்டம் பெறாதவர். ஆனால் கண்டுபிடிப்புகளின் சக்கரவர்த்தியாக விளங்கினார். மிக அதிகப்படியான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். இவரின் கண்டுபிடிப்புகளுக்காக 1093 பதிவுரிமைகளைப் பெற்றார். மாணவர்களால் கொண்டாடப்படும் முக்கிய தினமாகும்.



17. பிப்ரவரி - 12

சார்லஸ் டார்வின் பிறந்த தினம்

(Charles Darwin Birth Anniversary Day)

பரிணாமத்தின் தந்தை எனப் போற்றப்படுவர் சார்லஸ் டார்வின் ஆவார். உயிர்கள் எப்படித் தோன்றின என்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். விலங்குகள் மற்றும் உயிரினங்களின் பரிணாமம் என்பது இயற்கைத் தேர்வு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தன என்பதைக் கண்டறிந்தவர். இயற்கை விஞ்ஞானியான இவர் 1809ஆம் ஆண்டு, பிப்ரவரி 12 இல் பிறந்தார்.



18. பிப்ரவரி - 12

ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம்

(AbrahamLinco In Birth Day)

ஆப்ரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 இல் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். அடிமை முறையை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1865இல் அரசியல் சட்டத்திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.



19. பிப்ரவரி - 13

உலக வானொலி தினம்

(World Radio Day)

ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.



20. பிப்ரவரி - 14

உலக காதலர் தினம்

(World Valentine’s Day)

ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்துவைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி. 269ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.



21. பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு

உலக திருமண தினம்

(World Marriage Day)

உலக திருமண தினம் 1986ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட உறவுமுறையாகும். திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.



22. பிப்ரவரி - 15

கலிலியோ கலிலி பிறந்த தினம்

(Galileo Galilei Birth Anniversary Day)

கலிலியோ 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரை நவீன வானவியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை எனவும் அழைக்கின்றனர். தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்திற்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.



23. பிப்ரவரி - 19

கோப்பர்நிக்கஸ் பிறந்த தினம்

­(Copernicus Birth Anniversary Day)





கோப்பர்நிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற பூமி மையக்கோட்பாட்டை மாற்றி சூரிய மையக்கோட்பாட்டை அறிவித்தார். பூமி உள்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற புரட்சிகரமான கொள்கையை வகுத்து, வானியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டார்.



24. பிப்ரவரி - 20

உலக சமூக நீதி தினம்

(World Day of Social Justice)

உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.



25. பிப்ரவரி-21

சர்வதேச தாய்மொழி தினம்

(International Mother’s Language Day)

உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டுமுதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.



26. பிப்ரவரி - 22

உலக சாரணர் தினம்

(World Scout Day)

தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கியவர் ஸ்மித் பேடன்பவலின் என்பவராவார். இவர் 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று பிறந்தார். இவரின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படும் இத்தினம் 1995ஆம் ஆண்டில் உலக சாரணர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூரும் தினமாக உள்ளது.



27. மார்ச் - 3

அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம்

(Alexander Graham Bell Birth Anniversary Day)

கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் பிறந்தார். இவர் 1876ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்காக 600க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு சென்று, வழக்குகளைச் சந்தித்து, வெற்றி பெற்ற பிறகே தொலைபேசிக்கான உரிமையைப் பெற்றார். இவரே பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார்.



28. மார்ச் - 8

சர்வதேச பெண்கள் தினம்

(International Women’s Day)

.நா. சபை பெண்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது மனித அடிப்படை உரிமை எனக் கூறி 1945ஆம் ஆண்டில் கையொப்பம் இட்டது. அதன்பின்னர் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தனது உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டது. 1946ஆம் ஆண்டுமுதல் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.



29. மார்ச் 2 ஆவது திங்கள்

காமன்வெல்த் நாடுகள் தினம்

(Commonweath Countrie’s Day)

மேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல்த்தின் கொடியாக உள்ளது. தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது. காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா (Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.



30. மார்ச் - 2ஆவது வியாழக்கிழமை

உலக சிறுநீரக தினம்

(World Kidney Day)

உடலுக்கு மூளை, இதயம் எப்படி மிக முக்கியமோ அதுபோல் சிறுநீரகமும் மிகமிக முக்கியமானது. சிறுநீரகம் செயல்படவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். ஆகவே சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும், நோய்வராமல் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2006ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



31. மார்ச் - 14

பை தினம்

(Pi Day)

பை (TT) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் நாளை பை நாளாகக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். பை தினம் முதன்முதலாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்டது.



32. மார்ச் - 14

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்

(Albert Einstein Birth Anniversary Day)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்டவர். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டதோடு, குவாண்டம், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.



33. மார்ச் - 15

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

(World Consumer’s Rights Day)

நுகர்வோர் என்பவர் நாம் அனைவரும்தான். பாதுகாப்பு உரிமை, கேட்கும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, இழப்பீட்டு உரிமை போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. தரமற்றப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்வதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1983ஆம் ஆண்டுமுதல் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.



34. மார்ச் - 18

ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்

(Rudolf Diesel Birth Anniversary Day)

ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று பாரிஸ் நகரில் பிறந்தார். இவரின் கண்டுபிடிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் நீராவி இயந்திரத்திற்குப் பதிலாக டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவரின் கண்டுபிடிப்பு உலகை வேகமாக மாற்றி அமைத்தது.



35. மார்ச் - 20

சர்வதேச மகிழ்ச்சி தினம்

(International Day of Happiness)

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.



36. மார்ச் - 20

உலக சிட்டுக்குருவிகள் தினம்

(World Sparrow Day)

நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இதுதவிர தெருக்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.



37. மார்ச் - 21

உலக பொம்மலாட்டம் தினம்

(World Puppetry Day)

பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.



38. மார்ச் - 21

உலகக் கவிதைகள் தினம்

(World Poetry Day)

எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.



39. மார்ச் - 21

உலக காடுகள் தினம்

(World Forestry Day)

வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.



40. மார்ச் - 21

சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்

(International Day of the Elimination of Racial Discrimination)

இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.



41. மார்ச் - 21

உலக டவுன் சிண்ட்ரோம் தினம்

(World Down Syndrome Day)

நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.



42. மார்ச் - 21

சர்வதேச நவ்ரூஸ் தினம்

(International Day of Nowruz)

நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.



43. மார்ச் - 21

சர்வதேச கைது மற்றும் காணாமல் போன பணியாளர்களின் ஒற்றுமை தினம்

(International Day of Solidarity with Detained and Missing Staff Members)

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அவரது உடல் 2009ஆம் ஆண்டில் கிடைத்தது. இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



44. மார்ச் - 3ஆவது வெள்ளி

உலக தூக்க தினம்

(World Sleep Day)

உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது. தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூக்க மருந்து உலக சங்கம் 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.



45. மார்ச் - 22

உலக தண்ணீர் தினம்

(World Water Day)

தண்ணீர்தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்றும் ஏதுமில்லை. தண்ணீர் வற்றாத செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



46. மார்ச் - 23

உலக வானிலை தினம்

(World Meterological Day)

உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.



47. மார்ச் - 24

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை

மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம்

(International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations

and for the Dignity Victims)

பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.



48. மார்ச் - 24

உலக காசநோய் தினம்

(World Tuberculosis Day)



காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.



49. மார்ச் - 25

சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்

(International Day of Remebrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade)

கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



50. மார்ச் - 27

உலகத் திரையரங்க தினம்

(World Theater Day)

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.



51. ஏப்ரல் - 1

முட்டாள்கள் தினம்

(April Fool’s Day)

ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.



52. ஏப்ரல் - 2

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

(World Autism Awareness Day)

ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.



53. ஏப்ரல் - 2

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்

(International Children’s Book Day)

இத்தினம் 1967ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



54. ஏப்ரல் - 4

நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்

(International Day for Land Mine Awareness and Assistance in Mine Action)

நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும். பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன. நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



55. ஏப்ரல் - 6

சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்

(International Day of Sport for Development and Peace)

விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். அது வளர்ச்சி, அமைதி, சமாதானம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, புரிதல் ஆகியவற்றை உள்ளூர், நாடு மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையையும் ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.



56. ஏப்ரல் - 7

உலக சுகாதார தினம்

(World Health Day)

மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் சார்பு நிறுவனம். இது 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.



57. ஏப்ரல் - 7

ருவாண்டா இனப்படுகொலை நினைவு தினம்

(Day of Remembrance of the Rwanda Genocide)

ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று இனப்படுகொலை தொடங்கியது. இது 100 நாட்களுக்கு மேல் நடந்தது. இதில் 20 சதவீதமான மக்கள் இறந்தனர். அதாவது 80000 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



58. ஏப்ரல் - 12

உலக விண்வெளி தினம்

(World Space Day)



ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது.



59. ஏப்ரல் - 12

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்

(International Day for Street Children)

உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.



60. ஏப்ரல் - 14

தீத்தடுப்பு தினம்

(Fire Extinguishing Day)

தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1723ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆம்புரோஸ் காட்ஃபரே என்பவர் தீயணைப்பானைக் கண்டுபிடித்தார். தீயணைப்பானைக் கொண்டு நாமே தீயை அணைத்துவிடலாம்.



61. ஏப்ரல் - 16

உலக தொழில் முனைவோர் தினம்

(World Entrepreneurship Day)

ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயலை தொழில் என்கின்றனர். ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக்கொண்டு, அவருடைய சமூகநிலை நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலானது நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பைக் கொடுத்து, வறுமையைப் போக்கும். உலகளவில் தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.



62. ஏப்ரல் - 17

உலக ஹீமோபீலியா தினம்

(World Hemophilia Day)

மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



63. ஏப்ரல் - 18

உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்

(World Heritage Day)

சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.



64. ஏப்ரல் - 21

சர்வதேச வானவியல் தினம்

(International Astronomy Day)

தொலைநோக்கிமூலம் கிரகங்கள், நிலாக்கள் மற்றும் வான் நிகழ்வுகளையும் அதன் வியப்பையும் அடித்தட்டு மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4ஆம் நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.



65. ஏப்ரல் - 22

உலக புவி தினம்

(World Earth Day)

பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். இவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களைக்கொண்டு நடத்தினார். புவியைப் பாதுகாக்க 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார். இதுவே உலக புவி தினமாக மாறியது.



66. ஏப்ரல் - 23

உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

(World Book and Copy right Day)

யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.



67. ஏப்ரல் - 23

ஆங்கிலமொழி தினம்

(English Language Day)

ஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



68. ஏப்ரல் - 24

உலக ஆய்வக விலங்குகள் தினம்

(World Day for Laboratory Animals)

உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.



69. ஏப்ரல் - 25

உலக மலேரியா தினம்

(World Malaria Day)

ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.



70. ஏப்ரல் - 26

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

(World Intellectual Property Day)

அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



71. ஏப்ரல் - 27

சாமுவெல் மோர்ஸ் பிறந்த தினம்

(Samuel Morse Birth Day)

சாமுவெல் மோர்ஸ் 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று அமெரிக்காவில் பிறந்தார். மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார். ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். 1844ஆம் ஆண்டு மே 24 அன்று உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன் டிசிஇலிருந்து பால்டிமோருக்கு அனுப்பி புரட்சியை ஏற்படுத்தினார்.



72. ஏப்ரல் - 28

வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்

(World Day for Safety and Health at Work)

வேலைத் தொடர்பான விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா. சபை ஏப்ரல் 28ஐ இத்தினமாக அறிவித்துள்ளது. அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.



73. ஏப்ரல் கடைசி சனிக்கிழமை

உலக கால்நடை தினம்

(World Veterinary Day)



உலக கால்நடை அமைப்பு 1863ஆம் ஆண்டில் டாக்டர் ஜிம் எட்வர்டு (Jim Edward) மற்றும் இவரின் மனைவி பாம் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் விலங்குகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை தினமாகக் கொண்டாடி வருகிறது.



74. ஏப்ரல் - 29

சர்வதேச நடன தினம்

(International Dance Day)

சர்வதேச நடனக் கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறது. ஏப்ரல் 29 அன்றுதான் ஜூன் ஜார்ஜ்ஸ் நோவீர் (Jean - Georges Noverre) என்ற நடனக் கலைஞர் பிறந்த நாளாகும். நடனத்தின் மூலம் பாலியல் வேறுபாட்டைப் போக்கி சமத்துவத்தைக் கொடுக்கலாம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.



75. ஏப்ரல் - 29

இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்

(World Day of Remembrance for all Victims of Chemical Warface)

இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



76. ஏப்ரல் - 30

சர்வதேச ஜாஸ் தினம்

(International Jazz Day)

ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது. ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ் பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இத்தினத்தை ஐ.நா. சபை 2011 இல் அறிவித்தது.



77. மே - 1

உலகத் தொழிலாளர் தினம்

(International Labour Day)

உலகத் தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என்பன 8 மணி வேலை நேரம் கேட்டுப் போராடியதால் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, கியூபா, சிலி போன்ற நாடுகள் 1890ஆம் ஆண்டில் மே - 1 ஐ தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடித்தனர். இதே சமயத்தில் சர்வதேச பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை உலகம் முழுவதும் கொண்டு வர மே - 1 ஐ தொழிலாளர் தினமாக கொண்டாட அறைகூவியது.



78. மே - 3

உலக பத்திரிகைச் சுதந்திர தினம்

(World Press Freedom Day)

பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.



79. மே முதல் செவ்வாய்

உலக ஆஸ்துமா தினம்

(World Asthma Day)

ஒருவருக்கு தொடர்ந்து சளி பிடித்தால் அவர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. இந்த நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சிகரெட் புகை, காற்று மாசுபாடு, பாஸ்ட்புட், பவுடர், வாசனை திரவியம் பூசுதல் போன்ற காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 1999ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



80. மே - 4

சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள்

(International Fire Fighter’s Day)

ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



81. மே - 5

சர்வதேச மருத்துவச்சி நாள்

(International Midwives Day)



மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.



82. மே - 8

உலக தாலசீமியா நோய் தினம்

(World Thalassemia Day)

தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த சோகை. தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 8 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



83. மே - 8

செஞ்சிலுவை தினம்

(Red Cross Day)

போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ். இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்டு. இவர் 1828ஆம் ஆண்டு மே 8 இல் பிறந்தார். முதன்முறையாக 1948ஆம் ஆண்டு மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1984ஆம் ஆண்டிலிருந்து செஞ்சிலுவை தினம் மற்றும் சிகப்பு பிறை நிலா தினமாக மே 8 இல் கொண்டாடப்படுகிறது.



84. மே 8 - 9

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு நாள்

(Time of Remembrance and Reconciliation for Those who last Their Lives during the Second world war)

இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.



85. மே - 10, 11

உலக வலசை போதல் தினம்

(World Migratory Bird Day)

பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



86. மே - 12

சர்வதேச செவிலியர் தினம்

(International Nurses Day)

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ஆம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார். இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 ஐ சர்வதேச செவிலியர் தினமாக 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



87. மே - இரண்டாவது சனிக்கிழமை

உலக நியாயமான வர்த்தக தினம்

(World Fair Trade Day)

உலகம் முழுவதும் நியாயமான வர்த்தகம் செய்பவர், உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக நியாயமான வர்த்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலக நியாயமான வர்த்தகர் சங்கம் இத்தினத்தை அறிவித்துள்ளது. 75 நாடுகளில் 450 அமைப்புகளின் ஒப்புதலுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



88. மே - இரண்டாவது ஞாயிறு

உலக அன்னையர் தினம்

(World Mother’s Day)

அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார். தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.



89. மே - 13

வெசாக் தினம்

(Day of Vesak)

வெசாக் என்பது மே மாதத்தின் முழு நிலவு நாள். இதே நாளில் கி.மு. 623ஆம் ஆண்டில் புத்தர் பிறந்தார். ஆகவே உலகம் முழுவதும் உள்ள புத்தமதத்தை பின்பற்றுவோர் இத்தினத்தை புனித நாளாகக் கருதுகின்றனர். இத்தினத்தை ஐ.நா. சபையும் சர்வதேச தினமாக 1999ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் பிரகடனம் செய்தது.



90. மே - 15

சர்வதேச குடும்ப தினம்

(International Day of Families)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.



91. மே - 17

உலக தொலைத்தொடர்பு தினம்

(World Tele Communication Day)

உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே - 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.



92. மே - 17

உலக உயர் இரத்த அழுத்த தினம்

(World Hypertension Day)

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



93. மே - 18

சர்வதேச அருங்காட்சியக தினம்

(International Museum Day)

அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.



94. மே - 18

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

(World AIDS Vaccine Day)

எச்..வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.



95. மே - 3 ஆவது ஞாயிறு

சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்

(International AIDS Candlelight Memorial Day)

உலகில் தற்போது 33 மில்லியன் மக்கள் எச்..வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்..வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும். சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 115 நாடுகளில் 1200 சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.



96. மே - 21

உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்

(World Day for Cultural Diversity for Dialogue and Development)

கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. .நா. பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஐ உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.



97. மே - 22

உலக கோத் தினம்

(World Goth Day)

உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினர். ஒவ்வொரு வருடமும் மே 22 இல் இந்த நிகழ்வை நடத்துவது என முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.



98. மே - 22

உலக பல்லுயிர் பெருக்க தினம்

(World Biodiversity Day)

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.



99. மே - 23

கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்

(Carl Linnaeus Birth Day)



கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 இல் சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். இவர் புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.



100. மே - 23

சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்

(International Day to End Obstretric Fistula)

வளரும் நாடுகளில் சுமார் 2 - 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம்முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003இல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. .நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.



101. மே - 23

உலக ஆமைகள் தினம்

(World Turtle Day)

ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.



102. மே - 29

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்

(International Day of UN Peacekeepers)

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா. சபை பணியமர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.



103. மே - 31

உலகப்புகையிலை ஒழிப்பு தினம்

(World No - Tobacco Day)

புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.



104. ஜூன் - 1

சர்வதேச குழந்தைகள் தினம்

(International Children’s Day)

உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் - 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.



105. ஜூன் - 1

உலக பெற்றோர் தினம்

(Global Day of Parents)

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.



106. ஜூன் - 4

ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம்

(International Day of Innocent Children Victims of Aggression)

இனக்கலவரம், மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். .நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.



107. ஜூன் - 5

உலகச் சுற்றுச்சூழல் தினம்

(World Environment Day)



உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எங்கு மக்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வாழ்கிறார்களோ, அங்கு நன்றாக வேலை செய்வார்கள். அங்கு வாழும் குழந்தைகள் நன்கு படிப்பார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, சுற்றுச்சூழலின்மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.



108. ஜூன் - 8

உலகப் பெருங்கடல் தினம்

(World Ocean Day)

சுற்றுச்சூழல் பாதிப்பால் கடலும் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களும் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும், கடல் உணவுகள் பற்றி அறியவும், பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு, ஜூன் 8 அன்று பூமியைப் பாதுகாப்போம் என்கிற உடன்படிக்கை உருவானது. அன்றைய தினத்தை உலகப் பெருங்கடல் தினமாகக் கொண்டாடுகிறோம்.



109. ஜூன் - 11

எஃப்.எம். வானொலி ஒலித்த நாள்

(F.M. Radio Transmission Day)

பல நிகழ்ச்சிகளை பண்பலை வானொலி நிலையங்கள் காலை தொடங்கி நள்ளிரவு வரை ஒலிபரப்புகின்றன. வானொலியின் இரைச்சலைக் குறைத்து எஃப்.எம். ஒலிபரப்பு அறிமுகம் ஆனது. இதனை எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1933ஆம் ஆண்டில் எஃப்.எம். ரேடியோவுக்கான காப்புரிமை பெற்று 1935, ஜூன் - 1 அன்று பொதுமக்களுக்காக ஒலிபரப்பப்பட்டது.



110. ஜூன் - 12

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

(World Day Against Child Labour)

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.



111. ஜூன் - 14

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்

(World Blood Donor’s Day)

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.



112. ஜூன் - 15

உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்

(World Elder Abuse Awareness Day)

உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது. இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது. சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.



113. ஜூன் - 17

உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்

(World Day to Combat Desertification and Draught)

மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.



114. ஜூன் - 20

உலக அகதிகள் தினம்

(World Refugee Day)

மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்கள்தான் அகதிகள். அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 20 ஐ உலக அகதிகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.



115. ஜூன் - 21

உலக இசை தினம்

(World Music Day)

மொழி தெரியாதவர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. ஆகவே இசையை ஒரு உலக மொழி என்கின்றனர். இசையே நாட்டியத்திற்கு அடிப்படை. மனிதர்கள் அனைவரையும் ஆட்டி வைப்பது இசை. இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் 1982ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பிரான்சில் கூடினர். அந்த நாளையே உலக இசை நாளாக அறிவித்தனர்.



116. ஜூன் - 21

உலக யோகா தினம்

(World Yoga Day)

யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு கலையாகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை. சர்வதேச யோகா கூட்டமைப்பு 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உலக யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது.



117. ஜூன் - 23

சர்வதேச விதவைகள் தினம்

(International Widow’s Day)

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. சபை விவாதித்து ஜூன் 23 ஐ சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து, ஆதாரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



118. ஜூன் - 23

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்

(United Nations Public Service Day)

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23 ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.



119. ஜூன் மூன்றாம் ஞாயிறு

உலக தந்தையர் தினம்

(World Father’s Day)

சோனாரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் அமெரிக்காவில் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். தனது தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தைக் கொண்டாடினார். இதனை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி 1966ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தை அறிவித்தார்.



120. ஜூன் - 24

உலக இளம் மருத்துவர்கள் தினம்

(World Young Doctor’s Day)

மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.



121. ஜூன் - 26

மனித மரபணுவின் மாதிரி வரைபடம் வெளியான நாள்

(Human Genome Mapping Day)



மனித உடலில் உள்ள டி.என்.. இரசாயன அடிப்படை இணைவுகள் உருவாக்கப்பட்ட விதம் சார்ந்த ஆய்வு 1984இல் தொடங்கப்பட்டது. மரபணுவின் மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்ட செய்தி 2000ஆம் ஆண்டு ஜூன் 26இல் அமெரிக்காவின் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டனின் அதிபர் டோனி பிளேர் இணைந்து வெளியிட்டனர். ஆய்வின்படி மனித இனத்தில் 20,500 விதமான மரபணுக்கள் உள்ளன எனத் தெரியவந்தது.



122. ஜூன் - 25

உலக வெண்புள்ளி தினம்

(World Vitiligo Day)

வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது. இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும். இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



123. ஜூன் - 25

மாலுமிகள் தினம்

(Day of the Seafarer)

உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. இதற்கு மாலுமிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும் அவர்களை கௌரவிக்கவும் ஜூன் 25 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தை சர்வதேச கடல்கள் அமைப்பு 2011ஆம் ஆண்டு அறிவித்தது. இது ஐ.நா. தினப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.



124. ஜூன் - 26

சர்வதேச போதை ஒழிப்பு தினம்

(International Day Against Drug abuse and Illicit Trafficking)

போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது இளைஞர்கள்தான். இதனால் ஊழல், வன்முறை, குற்றங்கள், பாலியல் நோய்கள், எய்ட்ஸ், உடல் நலக்கோளாறு, மனநல நோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனிதசமூகத்திற்கு பின்னடைவும், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இத்தினம் 1988ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



125. ஜூன் - 26

சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினம்

(International Day Support of Victims of Turture)

சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா. சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது. சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர்க் கைதிகள்வரை தொடர்கிறது. 1997ஆம் ஆண்டில் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.



126. ஜூலை - 6

உலக ஜூனோசிஸ் தினம்

(World Zoonoses Day)

ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி, பறவைகள்மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள்மூலம் பரவுகின்றன. விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.



127. ஜூலை முதல் சனிக்கிழமை

சர்வதேசக் கூட்டுறவு தினம்

(International Co-operative Day)

ஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதுதான் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிந்து காணப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்தன. 100 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.



128. ஜூலை - 11

உலக மக்கள் தொகை தினம்

(World Population Day)

உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா. சபை ஜூலை 11 ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



129. ஜூலை - 12

மலாலா யூசுப்சாய் தினம்

(Malala Yousafzai Day)

பாகிஸ்தானில் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டனர். ஆபத்தான நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றார். ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகை மாற்றிவிடும் என்றார். இளைஞர்களிடம் புத்தகங்களைக் கொடுங்கள், துப்பாக்கி ஒருபோதும் வேண்டாம் என ஐ.நா. சபையில் உரையாற்றினார். .நா. சபை கல்விக்காக குரல் கொடுத்த இவரது 16ஆவது பிறந்த தினத்தின்போது மலாலா தினமாக அறிவித்தது.



130. ஜூலை - 17

சர்வதேச உலக நீதி தினம்

(World Day for International Justice)

சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.



131. ஜூலை - 18

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

(Nelson Mandela International Day)

தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.



132. ஜூலை - 20

மனிதன் நிலவில் இறங்கிய நாள்

(Moon Landing Day)

அமெரிக்காவிலிருந்து அப்பலோ 11 என்கிற விண்கலம் நிலாவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று தரை இறங்கியது. முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை 21 அன்று அதிகாலை 2.56 மணிக்கு நிலவில் தனது காலை பதித்தார். மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் என்பவரும் நிலவில் கால் பதித்தார்.



133. ஜூலை - 20

கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்

(Gregor Mendel Birth Day)

கிரிகோர் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று ஆஸ்திரிய நாட்டில் பிறந்தார். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மரபுப்பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டன.



134. ஜூலை - 20

சர்வதேச சதுரங்க நாள்

(International Chess Day)

உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20 இல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20 ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.



135. ஜூலை - 26

உலக சதுப்புநிலக் காடுகள் தினம்

(World Mangrov Forest Day)

புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள் அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றினை அழியாமல் பாதுகாத்திடவும், இதன் பெருமைகளை உலகறியச் செய்யவும் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் நாளை உலக சதுப்புநிலக் காடுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.



136. ஜூலை - 28

உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம்

(World Hepatities Day)

கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் A வைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



137. ஜூலை - 28

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

(World Nature Conservation Day)

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



138. ஜூலை - 29

சர்வதேச புலிகள் தினம்

(International Tiger’s Day)



உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.



139. ஜூலை - 30

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்

(World Day Against Trafficking in Persons)

ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.



140. ஜூலை - 30

சர்வதேச நட்பு தினம்

(International Day of Friendship)

அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, ஜாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வேறுபாடுகளைக் கடந்து உள்ளத்தை மட்டுமே நேசிக்கும் உயரிய பண்பு கொண்டது நட்பு. இளைஞர்களே நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள். அவர்களை நட்பின்மூலம் இணைப்பதால் உலகளவில் சமாதானம், அமைதி நிலைபெறும் என்பதற்காக ஐ.நா. சபை ஏப்ரல் 2011இல் இத்தினத்தை அறிவித்தது.



141. ஆகஸ்டு - 1

சர்வதேச தாய்ப்பால் தினம்

தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், குழந்தையின் மரணத்தை தடுக்கவும், மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.



142. ஆகஸ்டு முதல் வெள்ளி

சர்வதேச பீர் தினம்

(International Beer Day)

சர்வதேச பீர் தினம் 2007ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ், கலிபோர்னியாவில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது உலகின் 50 நாடுகளில் 207 நகரங்களில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பீர் நண்பர்களை ஒன்று சேர்க்கிறது. அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடுவதன்மூலம் பீர் பாதைகளின் கீழ் உலகம் ஐக்கியம் ஆகிறது என இத்தினத்தைக் கொண்டாடுபவர்கள் கூறுகின்றனர்.



143. ஆகஸ்டு முதல் ஞாயிறு

உலக நண்பர்கள் தினம்

(World Friendship Day)

அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



144. ஆகஸ்டு - 6

ஹிரோசிமா தினம்

(Hiroshima Day)

இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின்மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



145. ஆகஸ்டு - 8

உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினம்

(World Plastic Surgery Day)

முதலாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீரர் வால்டர் இயோ என்பவருக்கு முதல் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 அன்று சர் ஹெரால்டு கில்லீஸ் (Harold Gillies) என்கிற மருத்துவர் முகச் சிகிச்சை செய்தார். இதுவே உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி ஆகும். அதனால் ஹெரால்டு கில்லீஸ் என்பவரை பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்கின்றனர்.



146. ஆகஸ்டு - 8

உலக பூனை தினம்

(World Cat Day)

பூனைகள் உலகின் அனைத்து இடங்களிலும் மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மனிதனிடம் சுமார் 9500 ஆண்டுகளாக வாழ்கின்றன. சிறந்த இரவுப் பார்வையும், சிறந்த கேட்கும் திறனும் கொண்டவை. அதிக விளையாட்டுத்திறன் கொண்டுள்ளது. பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது. உலக பூனை தினம் முதன்முதலாக 2014ஆம் ஆண்டில் துவங்கியது.



147. ஆகஸ்டு - 9

நாகசாகி தினம்

(Nagasaki Day)

அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று பேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின்மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



148. ஆகஸ்டு - 9

சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

(International Day of the World’s Indigenous People)

.நா. பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்டு 9 ஐ உலக பூர்வ குடிமக்கள் தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.



149. ஆகஸ்டு - 12

சர்வதேச இளைஞர் தினம்

(International Youth Day)

இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, அவர்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற பார்வை 1995ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் கவனத்திற்கு வந்தது. ஆகஸ்டு 12 ஐ சர்வதேச இளைஞர் தினமாக 1998ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.



150. ஆகஸ்டு - 13

சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்

(International Left Hander’s Day)

உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையோர்களாக இருக்கின்றனர். இடது கைப்பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவரின் மூளை வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. இவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் இத்தினம் 1992ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.



151. ஆகஸ்டு - 19

உலக மனித நேய தினம்

(World Humanitarian Day)

போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.



152. ஆகஸ்டு - 19

உலக புகைப்பட தினம்

(World Photography Day)



லூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.



153. ஆகஸ்டு - 23

சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

(International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)

ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791 ஆகஸ்டு 22 நள்ளிரவுமுதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



154. ஆகஸ்டு - 29

சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்

(International Day Against Nuclear Test)

அணு ஆயுதம் முதன்முதலாக 1945ஆம் ஆண்டில் வீசப்பட்டது. அதன் பிறகு இதுவரை 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும், சுற்றுச்சூழலும், நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இன்றைக்குள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள்பற்றியும் அதன் பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



155. ஆகஸ்டு - 29

உலக விளையாட்டு தினம்

(World Sports Day)

உடல் வலிமையும், ஆற்றலும் மிக்கவர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் அவசியம் தேவை. விட்டுக் கொடுக்கும் பண்பு, சகிப்புத்தன்மை, சிந்தனை தூண்டல் ஆகியவை விளையாட்டுக்கு உண்டு. ஆகவே குழந்தைகள், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.



156. ஆகஸ்டு - 30

சர்வதேச காணாமற் போனோர் தினம்

(International Day of Disappeared)

உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.



157. செப்டம்பர் - 2

சர்வதேச தேங்காய் தினம்

(International Coconut Day)

ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.



158. செப்டம்பர் முதல் சனிக்கிழமை

சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்

(International Vulture Awareness Day)



உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.



159. செப்டம்பர் - 5

சர்வதேச கருணை தினம்

(International Day of Charity)

குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.



160. செப்டம்பர் - 8

உலக எழுத்தறிவு தினம்

(International Literacy Day)

அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.



161. செப்டம்டர் - 10

உலக தற்கொலை தடுப்பு தினம்

(World Suicide Prevention Day)

உலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது. தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.



162. செப்டம்பர் - 12

தெற்கு தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம்

(United National Day for South - South Cooperation)

நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு - தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா. வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012 இல் மாற்றப்பட்டது.



163. செப்டம்பர் - 15

அனைத்துலக மக்களாட்சி நாள்

(International Day of Democracy)

சனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.



164. செப்டம்பர் - 16

உலக ஓசோன் தினம்

(World Ozone Day)

பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.



165. செப்டம்பர் - 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

(World Water Monitoring Day)

உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003இல் அறிவித்தது.



166. செப்டம்பர் - 21

உலக அமைதி தினம்

(World Peace Day)

உலக யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து அமைதி தினம் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் நடந்து வந்தது. .நா.வின் பொதுச்சபை 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூடும் முதல் நாளை உலக அமைதி தினமாக அறிவித்தது. அதன்பின்னர் தங்களின் உறுப்பு நாடுகளின் வாக்குகளை அதிகம் பெற்று செப்டம்பர் 21 ஐ உலக அமைதி தினமாக அறிவித்தது. இது 2002ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.



167. செப்டம்பர் - 22

மைக்கேல் பாரடே பிறந்த தினம்

(Michael Faraday Birth Day)

மின்சாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மருத்துவத் துறைகளிலும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் தொலைகாட்சி, ரயில், மின் விசிறி, கணினி, தொழிற்சாலைகள் என பலவும் இயங்காது. மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை முதன்முதலில் மைக்கேல் பாரடே கண்டுபிடித்தார். இவர் 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.






168. செப்டம்பர் - 22

உலக கார் இல்லாத நாள்

(World Car Free Day)

நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து செல்வதே பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. நடந்து செல்லும் தூரத்திற்குக்கூட காரை எடுத்துச் செல்கின்றனர். ஆகவே மிக அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்ல வேண்டும். காரை செப்டம்பர் 22 அன்று ஒரு நாள் பயன்படுத்தாமல் இருக்க வாஷிங்டன் போஸ்ட் இத்தினத்தை 1995இல் அறிவித்தது.



169. செப்டம்பர் - 27

உலக சுற்றுலா தினம்

(World Tourism Day)

பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் உலக சுற்றுலாஅமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு செப்டம்பர் 27ஐ உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இத்தினம் 1980ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் சுற்றுலா துறைகள் அதிகம் லாபம் ஈட்டும் துறையாக மாறியுள்ளன.



170. செப்டம்பர் - 28

பசுமை நுகர்வோர் தினம்

(Green Consumer Day)

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.



171. செப்டம்பர் - 28

உலக ரேபிஸ் தினம்

(World Rabies Day)

ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.



172. செப்டம்பர் - 29

சர்வதேச காப்பி தினம்

(International Coffee Day)

பலரும் விரும்பி அருந்தக்கூடிய மிகவும் பிரபலமான பானம் காப்பி. கொட்டையை பக்குவாமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீரை பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி. உலகில் 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டில் ஜப்பானில் சர்வதேச காப்பி தினம் கொண்டாடப்பட்டது.



173. செப்டம்பர் கடைசி வாரம்

உலக கடல்வாழ் பாதுகாப்பு தினம்

(World Maritime Day)

கடலின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக ஐ.நா. அமைப்பானது சர்வதேச கடல்வாழ் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பானது செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதோ ஒரு நாளை உலக கடல்வாழ் பாதுகாப்பு தினமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடல் மாசு அடையாமல் பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.



174. செப்டம்பர் கடைசி ஞாயிறு

உலக இதய தினம்

(World Heart Day)

புகையிலைப் பழக்கம், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள், கொழுப்பு போன்றவை இதய நோயை ஏற்படுத்துகின்றன. சரியான உணவுப் பழக்கம் இல்லாததாலும் இதயக் கோளாறு ஏற்படுகின்றது. உலக இதய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாட்டின் விளையாட்டு மற்றும் முன்னேற்ற அமைப்பு ஒன்றிணைந்து உலக இதய தினத்தை 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக கொண்டாடியது.



175. செப்டம்பர் கடைசி ஞாயிறு

காது nhதோர் தினம்

(World Deaf Day)

சிலர் பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமோ காது nhதோர் ஆகின்றனர். காது கேட்கும் திறனை இழந்து விட்டால் வாழ்வு முடிந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. இவர்களின் தொடர்புக்கு சைகை மொழி கைகொடுக்கிறது. இவர்களையும் சக மனிதர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



176. அக்டோபர் - 1

உலக முதியோர் தினம்

(International Day of Older Persons)

மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



177. அக்டோபர் - 1

உலக சைவ தினம்

(World Vegetarian Day)

தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



178. அக்டோபர் - 2

சர்வதேச அகிம்சை தினம்

(International Non-Violence Day)

காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007இல் அறிவித்தது.



179. அக்டோபர் முதல் திங்கள்

உலக குடியிருப்பு தினம்

(World Habit Day)

மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது. இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா. பொதுச்சபை 1985ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதன்படி அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது. நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.



180. அக்டோபர் - 3

சர்வதேச போராட்ட தினம்

(International Day of Action)

போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு, சம உரிமைகள் பெற்றிடவும், தொழிலாளர்கள் போராட வேண்டியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு உலகத் தொழிற் சங்க சம்nனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆம் நாளை சர்வதேச போராட்ட தினமாக அனுசரிக்குமாறு உழைப்பாளிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



181. அக்டோபர் - 4

உலக வனவிலங்குகள் தினம்

(World Animal Day)

உலக வனவிலங்குகள் தினம் முதன்முதலாக இங்கிலாந்து நாட்டில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 4 இல் கொண்டாடப்பட்டது. காட்டு விலங்குகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளை பாதுகாக்கலாம்.



182. அக்டோபர் - 5

உலக ஆசிரியர்கள் தினம்

(World Teacher’s Day)

ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



183. அக்டோபர் முதல் திங்கள்

உலக கட்டிடக்கலை தினம்

(World Architecture Day)

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில் நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும். சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.



184. அக்டோபர் முதல் வெள்ளி

உலகப் புன்னகை தினம்

(World Smile Day)

புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963இல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலகப் புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.



185. அக்டோபர் - 9

உலக அஞ்சல் தினம்

(World Post Day)

உலகத் தபால் யூனியன் என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. உலகத் தபால் யூனியனின் மாநாடு 1969ஆம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்றது. இதில் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9 அன்று கொண்டாடுவது என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.



186. அக்டோபர் - 10

உலக மனநல தினம்

(World Mental Health Day)

இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.



187. அக்டோபர் - 2 ஆவது புதன்

சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம்

(International Day for Natural Disaster Reduction)

புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவையும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.



188. அக்டோபர் - 11

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

(International Day of the Girl Child)

பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டால், சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகிறது. அது தவிர குழந்தை திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 11 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா. சபை 2011இல் அறிவித்தது.



189. அக்டோபர் 2ஆவது வியாழன்

உலகக் கண்பார்வை தினம்

(World Sight Day)

உலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார் 124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75 சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.



190. அக்டோபர் - 12

உலக ஆர்த்ரைடிஸ் தினம்

(World ArthritisDay)

ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



191. அக்டோபர் - 14

உலகத்தர நிர்ணய தினம்

(World Standards Day)

உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.



192. அக்டோபர் - 14

உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை தினம்

(World Day for Organ Donation and Transplantation)

நாம் இறந்த பிறகும் ஒருவரை வாழவைப்பது என்பது உடல் உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் நடக்கிறது. ஒருவர் இருபதிற்கும் மேற்பட்ட உறுப்புகளை தானமாக வழங்கலாம். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாது போகின்ற உறுப்புகளை தானம் செய்வதன்மூலம் பலரை வாழ வைக்கலாம். உடல் உறுப்புதானத்தை வலியுறுத்தி 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.



193. அக்டோபர் - 15

உலக வெண்மைத்தடி தினம்

(World White Lame Day)

பிரிஸ்டல் நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவர் 1921ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்போது தனது பார்வையை இழந்தார். இவர் சாலையை கடக்கும்போது தனது கையில் வெள்ளைத் தடியைப் பயன்படுத்தினார். வெண்மைத்தடி பயன்படுத்தும் முறை என்பது 1931ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. 1964ஆம் ஆண்டில் உலக வெண்மைத்தடி தினம் அறிவிக்கப்பட்டது.



194. அக்டோபர் - 15

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

(International Day of Rural Women)

விவசாயத் துறையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் கிராமப்புற பெண்களாவர். உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறக்க முடியாது. இவர்கள் கிராம வளர்ச்சிக்கும், உணவு பாதுகாப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் பாடுபடுகின்றனர். அதுதவிர நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதுகாக்கின்றனர். .நா.சபையானது 2008ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தைக் கொண்டாடுகிறது.



195. அக்டோபர் - 15

உலக கைகழுவும் தினம்

(Global Handwash Day)

முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.



196. அக்டோபர் - 16

உலக உணவு தினம்

(World Food Day)

உணவு மற்றும் nhண்மை அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பிரச்சினை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பதைக் கண்டு ஐ.நா. சபை வேதனையடைந்தது. மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1980இல் இத்தினத்தை அறிவித்தது.



197. அக்டோபர் - 17

உலக வறுமை ஒழிப்பு தினம்

(World Poverty Eradication Day)

உலகின் மிகப்பெரிய 3 பணக்காரர்களின் ஆண்டு வருமானத்தைவிட 46 ஏழை நாடுகளின் வருமானம் குறைவாகவே இருக்கிறது. உலகில் வாழும் மக்களில் பாதி பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்குக் குறைவான பணத்தில் தான் உயிர் வாழ்கின்றனர். தினமும் வறுமையின் காரணமாக 30,000 குழந்தைகள் இறந்துவிடுவதாக யூனிசெஃப் கூறுகிறது. இந்த வறுமையினை ஒழிக்க அக்டோபர் 17இல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



198. அக்டோபர் - 18

உலக வேசெக்டொமி தினம்

(World Vasectomy Day)



ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இந்த அறுவைச் சிகிச்சையை வேசெக்டொமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள். உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 18ஐ உலக வேசெக்டொமி தினமாக 2013இல் அறிவிக்கப்பட்டுள்ளது.



199. அக்டோபர் - 20

உலக எலும்புப்புரை தினம்

(World Osteoporosis Day)

மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு எலும்புப்புரை நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். உலக எலும்புப்புரை அமைப்பு 1996ஆம் ஆண்டில் அக்டோபர் 20 ஐ உலக எலும்புப்புரை தினமாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



200. அக்டோபர் - 20

உலகப் புள்ளியியல் தினம்

(World Statistics Day)

ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20ஆம் தேதியை உலகப்புள்ளியியல் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. புள்ளிவிபரங்களின் வெற்றி மற்றும் சேவையைக் கொண்டாடுவதே இத்தினத்தின் நோக்கம்.



201. அக்டோபர் 2ஆம் வெள்ளி

உலக முட்டை தினம்

(World Egg Day)

உலக முட்டை தினம் 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்டிற்கு சராசரியாக 180 முட்டைகள் சாப்பிட வேண்டும். முட்டை கலப்படம் செய்ய முடியாத உணவாக விளங்குகிறது. முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



202. அக்டோபர் - 21

உலக அயோடின் தினம்

(Global Iodine Day)

ஆண்டுதோறும் உலக அயோடின் தினம் அக்டோபர் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் சத்துக் குறைபாட்டால் இனம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்க்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும்.



203. அக்டோபர் - 24

ஐக்கிய நாடுகள் தினம்

(United Nations Day)

ஐக்கிய நாடுகள் சபை 1945ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் ஆகியன அக்டோபர் 24 அன்று அமுலுக்கு கொண்டுவரப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு அரசு அல்ல. இந்தச் சபை எந்தப் பொருள் பற்றியும் விவாதம் செய்யவும், ஆராயவும், உலகின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் கொண்டுள்ளது.



204. அக்டோபர் - 24

உலக தகவல் வளர்ச்சி தினம்

(World Development Inforamtion Day)

உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஐ ஐ.நா. சபை அறிவித்தது. 1973ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா. சபை கூறுகிறது.



205. அக்டோபர் 4ஆவது திங்கள்

சர்வதேசப் பள்ளி நூலக தினம்

(International School Library Day)

அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் (Blanche Wools) என்கிற பெண்மணி சர்வதேச அளவில், பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக 1999ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திங்கட்கிழமை சர்வதேசப் பள்ளி நூலக தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் இத்தினம் கொண்டாடப்படுகிறது.



206. அக்டோபர் - 27

உலக ஆடியோ பாரம்பரிய தினம்

(World Day for Audiovisual Heritage)

யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.



207. அக்டோபர் - 31

உலக சிக்கன தினம்

(World Thrift Day)

பணத்தை சேமித்து வைக்க வங்கி, தபால் துறை, சிறுசேமிப்பு அலுவலகம், இன்சூரன்ஸ் போன்றவை இருக்கின்றன. அரசு நிறுவனங்கள் நியாயமான வட்டியை வழங்குவதோடு, உங்கள் பணத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் கம்பெனிகளில் ஏமாந்த கதைகள் ஏராளம் உண்டு. முறையான பாதுகாப்பு வழியில் பணத்தை சேமிக்க இத்தினம் வலியுறுத்துகிறது.



208. நவம்பர் - 6

சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம்

(International Day for Preventing the Exploitation of the Envirenment in war and Armed Confliet)

போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.



209. நவம்பர் - 7

மேரி கியூரி பிறந்த தினம்

(Marie Gurie Birth Day)



மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார். உலகில் இரண்டு பரிசுகளைப் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.



210. நவம்பர் - 9

சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்

(International Guinness World Records Day)

கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார். உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர். முதன்முதலாக கின்னஸ் தினம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் கொண்டாடப்பட்டது. கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.



211. நவம்பர் - 10

உலக அறிவியல் தினம்

(World Science Day)

உலக அறிவியல் தினம் 1994ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இத்தினம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவே கொண்டாடப்படுகிறது. அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.



212. நவம்பர் - 12

உலக நுரையீரல் அழற்சி தினம்

(World Pneumonia Day)

நிமோனியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது கிருமித்தொற்றினால் ஏற்படுகிறது. இதனால் இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை அதிகளவு சளி மற்றும் அசௌகரிய நிலை என்பன காணப்படும். சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.



213. நவம்பர் - 14

உலக சர்க்கரை நோய் தினம்

(World Diabetes Day)

சர்க்கரை நோய் என்பது வலியில்லாமல் ஆளைக்கொல்லும் நோயாக உள்ளது. இந்த நோய்க்கு இன்சுலின் மருத்தினை பிரட்ரிக் பான்ரிங் என்பவர் 1921இல் கண்டுபிடித்தார். இவரின் பிறந்த தினமான நவம்பர் 14ஐ உலக சர்க்கரை தினமாகக் கொண்டாடுகின்றனர். சர்க்கரை நோயாளி இல்லாத உலகைக் காண்போம் என்கிற நோக்கில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



214. நவம்பர் - 16

சர்வதேச சகிப்புத் தன்மை தினம்

(International Day for Tolerance)

யுனெஸ்கோ அமைப்பு தனது 50ஆவது ஆண்டு விழாவை 1995ஆம் ஆண்டில் கொண்டாடியது. யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.



215. நவம்பர் - 16

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

(World Chronic Obstructive Plumonary Digsease Day)

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் சுமார் 210 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு கணித்துள்ளது. புகையிலை, ரசாயனப் புகை, காற்று மாசுபாடு போன்ற பல காரணங்களால் 2030ஆம் ஆண்டில் உலகளவில் இந்த நோயால் அதிக மரணம் ஏற்படப் போகிறது என எச்சரித்துள்ளது. இந்நோய் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்த 2002ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.



216. நவம்பர் - 17

உலக குறைப்பிரசவ குழந்தை தினம்

(World Prematurity Day)

உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.



217. நவம்பர் - 17

சர்வதேச மாணவர்கள் தினம்

(International Students Day)

செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது. நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



218. நவம்பர் - 19

உலகப் கழிப்பறை தினம்

(World Toilet Day)

உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 ஐ உலகக் கழிப்பறை தினமாக 2013ஆம் ஆண்டில் அறிவித்தது.



219. நவம்பர் - 19

சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்

(International Journalist’s Remembrance Day)

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் குண்டு வெடிப்பு அல்லது கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார். 2012ஆம் ஆண்டில் 86 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் கடமையை நிறைவேற்றும் வேலையில் தங்கள் வாழ்க்கையை இழந்த பத்திரிகையாளர்களுக்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



220. நவம்பர் - 19

சர்வதேச ஆண்கள் தினம்

(International Men’s Day)

சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடுவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல. இத்தினம் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில்தான் உள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கௌரவப்படுத்தவும், சமூகத்திற்கு புரிந்த மகத்தான தியாகங்களை நினைவு கூரவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.



221. நவம்பர் - 20

ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம்

(Africa Industrialization Day)

ஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.



222. நவம்பர் - 20

சர்வதேசக் குழந்தைகள் தினம்

(Universal Children’s Day)

.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.



223. நவம்பர் - 21

உலகத் தொலைக்காட்சி தினம்

(World Television Day)

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கு இத்தினம் சிறப்பானதாக கருதப்படுகிறது. .நா. சபையானது 1996ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நவம்பர் 21 ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.



224. நவம்பர் 3ஆம் வியாழன்

உலக தத்துவ தினம்

(World Philosophy Day)

நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள்மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டுவரமுடியும். தத்துவங்களே உலகை ஆள்கின்றன. தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்த்துப் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கில் யுனெஸ்கோ உலக தத்துவ தினத்தை அறிவித்துள்ளது.



225. நவம்பர் - 25

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்

(International Day for the Elimination of Violence Against Women)

உலகளவில் பெண்கள், பலவிதமான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்குக் காட்டி அதற்கான, நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். .நா. சபை 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.



226. நவம்பர் - 24

படி வளர்ச்சி நாள்

(Evolution Day)

சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று வெளியிட்டார். நூல் வெளியிடப்பட்ட நாள் படிவளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்ட 150ஆவது ஆண்டு நிறைவு விழாவானது 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.



227. நவம்பர் - 26

உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்

(World Anti-Obesity Day)

கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 2.6 மில்லியன் மக்கள் உளகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.



228. நவம்பர் - 29

சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்

(International Day of Solidarity With the Polestinian People Day)

அமைதி திரும்பாமல் தொடர்ந்து கலவரம் நடக்கும் ஒரே நாடு பாலஸ்தீனம்தான். .நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனது. பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.



229. டிசம்பர் - 1

உலக எய்ட்ஸ் தினம்

(World AIDS Day)

எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். இது எச்..வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.



230. டிசம்பர் - 2

சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

(International Day for the Abolition of Slavery)

அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் - 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.



231. டிசம்பர் - 2

உலக கணினி கல்வி தினம்

(World Computer Literacy Day)

கணினிப் பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.



232. டிசம்பர் - 3

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

(International Day of Disabled Persons)

மனித சமூகத்தில் காது nhதவர், கண் தெரியாதவர், வாய் பேச முடியாதவர், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்கள், மன நோயாளிகள் அனைவரையுமே ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக, மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கின்ற முறை 2007ஆம் ஆண்டில் ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டது. 2012ஆம் ஆண்டுமுதல் டிசம்பர் 3ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.



233. டிசம்பர் - 5

சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்

(International Volunteer Day for Economic and Social Development)

தன்னார்வ சேவையை உலகம் முழுவதும் செய்ய வேண்டும். நாடுகள் பாதிப்படையும்போது பொருளாதார உதவி மற்றும் உணவு உதவிகளையும் செய்ய வேண்டும். இதற்காக ஐ.நா. சபை 1985ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. தன்னார்வலர்களைப் பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை தனியார் நிறுவனங்களும் 2006ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடுகின்றன.



234. டிசம்பர் - 7

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்

(International Civil Aviation Day)

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.



235. டிசம்பர் - 9

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

(International Anti-Corruption Day)

ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.



236. டிசம்பர் - 10

நோபல் பரிசு விழா

(Nobel Prize Ceremony)

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895இல் ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 இல் நோபல் பரிசு விழா நடக்கிறது.



237. டிசம்பர் - 10

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்

(International Animal Rights Day)

மனித உரிமைகளுக்காக போராடுவதற்காக மனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும். ஆண்டுதோறும் கோடிக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் என உயிர்கள் கொல்லப்படுகின்றன. விலங்குகளின் நலன் கருதி இத்தினம் டிசம்பர் 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.



238. டிசம்பர் - 10

உலக மனித உரிமைகள் தினம்

(World Human Rights Day)

.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது. சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடுகாட்டி வேறுபடுத்தக் கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.



239. டிசம்பர் - 11

சர்வதேச மலைகள் தினம்

(World Mountain Day)

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஐ சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.



240. டிசம்பர் - 12

சர்வதேச கன உலோக தினம்

(International Day of Heavy Metals)

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் நாள் உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் விளையாடி ஆல்பங்களை வெளியிடுகின்றனர். வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.



241. டிசம்பர் - 15

சர்வதேச தேயிலை தினம்

(International Tea Day)

தேயிலை என்றாலே தேநீரை நமக்கு ஞாபகப்படுத்தும். தேநீரை அனைவரும் விரும்பி அருந்துகின்றனர். தேயிலையில் பல ரகங்கள் உண்டு. வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனிப்பட்ட கலாச்சாரம் ஒன்று உள்ளது. தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் டிசம்பர் 15ஐ புதுடில்லியில் சர்வதேச தேயிலை தினமாக அறிவித்து 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடுகிறது.



242. டிசம்பர் - 17

முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள்

(Ist Flight Wright Brothers)

ரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.



243. டிசம்பர் - 17

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும்

அனைத்துலக நாள்

(International Day to End Violence Against Sex Workers)

அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.



244. டிசம்பர் - 18

சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம்

(International Migrants Day)

வேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.



245. டிசம்பர் - 20

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

(International Human Solidarity Day)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது.



246. டிசம்பர் - 26

சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்

(Charles Babbage Birth Day)

சார்லஸ் பாபேஜ் என்பவர் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று லண்டனில் பிறந்தார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். இதனால் இவரை கணினியின் தந்தை என்றும் அழைக்கின்றனர். இவரால் உருவாக்கப்பட்ட கணினி மிகப்பெரிய அறைக்குள் ஏராளமான இயந்திரங்களைக் கொண்டது.





ஆசிரியர் பற்றிய குறிப்பு

தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கிய பங்காற்றுகிறார். 2000ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் அதிசய தாவரங்கள் அன்றிலிருந்து 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகளும், மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய காரணியாக உள்ளார்.

இவருடைய பழங்கள் மற்றும் செவ்வாய் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு நூல்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர்.

எழுத்துச்சிற்பி, அறிவியல் மாமணி ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டார்.

தம் இறப்பிற்கு பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.

1992ஆம் ஆண்டு ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத்தாமரைகளை மாணவர்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.

சிறிய அளவிலும், பெரிய அளவிலும் 71 புத்தகங்கள் இதுவரை எழுதியுள்ளார். இவர் தொடர்ந்து அறிவியல் நூல்களை எழுதி வருகிறார்.