விமானம் ஓட்டிய

கைகள் இல்லாப் பெண்

 

 

 

 

 

ஏற்காடு இளங்கோ

 

 

 

 

 

 

 

 

 

 

மின் நூல்

 

 

 

 

 

 

 

என்னுரை

          ஆரோக்கியத்துடன் பிறந்து, ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும் எனக் கருதுவது தவறு. ஒருவரை ஊக்கப்படுத்துவதன் மூலமும், தன்னம்பிக்கையுடன் வளர்ப்பதன் மூலமும் மற்றவர்கள் செய்ய அஞ்சும் சாதனைகளைக் கூட செய்து முடிக்க முடியும். பெரும்பாலான மக்கள் செய்யத் தயங்கும் சாதனைகளை சாதித்துக் காட்டியவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இவர் பல சாதனைகளை தனது கால்கள் மூலம் செய்து மற்றவர்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளார். இவர் டேக்வாண்டோவில் இரண்டு கருப்பு பெல்ட்டுகளைப் பெற்றுள்ளார். தனது சொந்தக் காரை கால்களால் தினமும் ஓட்டிச் செல்கிறார். அத்துடன் மேலும் ஒரு உலக சாதனையாக விமானத்தையும் ஓட்டிக்காட்டி, விமானம் ஓட்டுவதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார்.

          வேதனையால் துவண்டுக்கிடக்கும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஜெசிக்கா காக்ஸ் ஊட்டி வருகிறார். அவர் ஒரு இளம் பெண். பல்வேறு சாகசங்களைப் புரிந்து பல்துறை வித்தகராக விளங்குகிறார். இவரை வீரப்பெண் என்றும், அபூர்வப்பெண் என்றும் பலர் புகழ்கின்றனர். இவரின் சாதனைகள் நமக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.  

          இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. . தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. . இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின் நூலாக வெளியிட்ட திருமிகு. சீனிவாசன் மற்றும் திருமிகு. ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்...

-    ஏற்காடு இளங்கோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக இருந்தாலே முழு மனிதன். ஏதாவது ஒரு உறுப்பு குறைபாடு இருந்தால் அவரை ஊனமுற்றவர் என்கின்றனர். தற்போது மாற்றுத் திறனாளி என்கிறோம். உலகளவில் குறைபாடுகளுடன் தினமும் குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர். அதுதவிர பிறரின் ஏளனத்திற்கும், இரக்கத்திற்கும் உட்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும்போது மட்டுமே சமூகத்தில் அவர்களால் உயர முடிகிறது. இல்லை என்றால் ஊனமுற்றவர்கள் சமூகத்திற்கு தேவையற்றவர்களாகவே போய்விடுகின்றனர்.

          தன்னம்பிக்கையும், தைரியமும், சுய கவுரவமும் கொண்ட மாற்றுத் திறனாளிகளே சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சராசரி மனிதர்களை விடச் சிறந்தவர்களாகவும், சாதனையாளர்களாகவும் விளங்குகின்றனர். உலக சாதனையாளர்கள் பட்டியலில், இரண்டு கைகளும் இல்லாதப் பெண்ணும் இடம் பெற்றுள்ளார். அவர் ஜெசிக்கா காக்ஸ் (Jessica Cox) என்பவராவார்.

          மனிதர்களுக்கு கைகள் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். உழைப்பதற்கும், உணவு உண்பதற்கும், எழுதுவதற்கும் என கைகளின் பயன் நீண்டுகொண்டே செல்லும். கைகள்தான் மூலதனம். வெறுங்கை என்பது மூடத்தனம், நம் பத்து விரல்களுமே மூலதனம் என ஒரு பழமொழி உண்டு. பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்தான் ஜெசிக்கா காக்ஸ். சாதாரண மனிதர்களே சாதிக்க சிரமப்படும் வேலையில் இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு பல்வேறு சாதனைகளை படைத்த சாதனையாளர் ஜெசிக்கா காக்ஸ். தன்னம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டு மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருக்கிறார்.

          வாழ்வில் சாதனைகள் புரிவதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை ஜெசிக்கா பலவழிகளில் நிரூபித்துக்காட்டியுள்ளார். இவரின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று விமானம் ஓட்டிக் காட்டியது. இவர் தனது கால்களால் விமானத்தை ஓட்டிக் காட்டினார். இரு கைகளும் இன்றி, கால்களால் விமானம் ஓட்டியது ஒரு உலக சாதனை. உலகின் முதல் கைகளற்ற விமானம் ஓட்டுநர் என்கிற பட்டத்தைப் பெற்றதன் மூலம் இவர் உலக வரலாற்றில் இடம் பிடித்தார். இப்படிப்பட்ட ஒரு சாதனைப் பெண்ணின் சாதனைகளைத் தெரிந்து கொள்வோம்.

 

குழந்தைப் பருவம் :

          ஜெசிக்கா காக்ஸ் 1983ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாவட்டத்தில் பிறந்தார். பிறக்கும் போதே இரு தோள்பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்தார். பிறக்கும்போதே பெயரும், காரணமும் தெரியாத ஒரு வியாதியால் இரு கைகளும் இன்றி பிறந்தார். இவர் பிறந்த ஊர் சியர்ரா விஸ்டா (Sierra Vista). இது ஒரு சிறிய நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும், 5 மலைத் தொடர்களும், கிழக்குப் புறத்தில் சான்பெட்ரோ ஆறும் ஓடுகிறது. ஒரு இயற்கை வளமும், பசுமையும் சூழ்ந்த ஒரு நகரமாக இது விளங்குகிறது.

          ஜெசிக்காவின் தாய் இனீஸ் (Inez), இவர் ஒரு நர்ஸாக பணிபுரிந்து வந்தார். கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்த போது குழந்தைக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கும் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறவில்லை. குழந்தை பிறந்தபோதுதான் ஆச்சரியமும், வேதனையும் அடைந்தனர். ஒரு பிறவி குறைபாடு உள்ள குழந்தையாக ஜெசிக்கா காக்ஸ் பிறந்தார். ஜெசிக்காவின் அண்ணன் ஜாசன் (Jason) மற்றும் தங்கை ஜாக்கி (Jackie) ஆகிய

இருவரும் எந்த குறைபாடும் இல்லாமலே பிறந்தனர்.

          ஜெசிக்கா ஒரு பிறவி குறைபாடுகொண்ட குழந்தையாகப் பிறந்ததைக் கண்டு இக்குழந்தை உயிர் வாழுமா என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. இக்குழந்தை உயிருடன் இருந்தால் மற்றவர்களைப்போல சாதாரணமான வாழ்க்கை வாழமுடியுமா என்கிற கேள்விகள் பல எழுந்தன. இது ஒரு பிறவிக் கோளாறு, கருவாக இருக்கும் முதல் மாதத்திலேயே மரபணுக்களில் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. மரபணு இயல்பு கோளாறு காரணமாக வளரும் கருவில் சேதம் ஏற்பட்டு, உடல் ஒழுங்கின்மை ஏற்பட்டு விடுகிறது.

          ஜெசிக்காவின் தந்தையான வில்லியம் காக்ஸ் ஒரு இசைப் பள்ளியின், இசை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். கைகள் இல்லாமல் பிறந்த குழந்தையைக் கண்டு அவர் கண்ணீர் வடிக்கவில்லை. இவர் அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியும் என்கிற தன்னம்பிக்கை கொண்டவராக இருந்தார். குடும்பத்தினரின் ஊக்கத்தின் காரணமாக ஜெசிக்கா தன்னம்பிக்கையுடன் வளர்ந்தார். தாய், தந்தையர் இருவரும் இவருக்கு முன் உதாரணமாகவே இருந்தனர்.

          ஜெசிக்காவால் பிறருடைய உதவியின்றி வாழமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது முற்றிலும் தவறு என்பதை ஜெசிக்கா காக்ஸ் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். முடியாதது அல்லது சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை; முயன்றால் அனைத்தையும் சாதிக்கலாம் என்பதை ஜெசிக்கா காக்ஸின் சாதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முடியாது என்கிற வார்த்தையைத் தவிர மற்றது எல்லாம் முடியும் என கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளார். அதுபோலவே ஜெசிக்காவின் வாழ்க்கையிலும் முடியாது என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

          இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததைக்கண்டு அவரது குடும்பத்தில் வேதனை அடைந்தனர். நண்பர்களும், உறவினர்களும் இக்குழந்தை உயிரோடு இருக்குமா என்பதில் சந்தேகம் அடைந்தனர். இரண்டு கைகளும் இன்றி எதிர்காலத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தமுடியும். இப்படி இரு கைகளும் இல்லாமல் பிறந்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இந்த பிஞ்சுக் குழந்தையால் யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமோ எனக் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். தாய் இனிஸ் மிகவும் வேதனைப்பட்டார். வளரும்போது ஜெசிக்காவை யார் பராமரிப்பது, எப்படி பராமரிப்பது என்கிற கவலையே தினமும் இருந்தது. ஆனால் தந்தைக்கோ சிறிதும் கவலை இல்லை. அவள் நன்றாகவே உள்ளாள், அவள் அனைத்தையும் சிறப்பாகவே செய்து முடிப்பாள் என்ற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவர் ஜெசிக்காவை ஒரு ஊனமுற்ற குழந்தையாகக் கருதவும் இல்லை. இந்த நம்பிக்கைதான் ஜெசிக்காவை ஒரு தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக வளரச் செய்தது.

          பிறந்த குழந்தை தவழ வேண்டும். அது முதலில் கைகளை ஊன்றி குப்புற படுக்க வேண்டும். கைகள் இல்லாத ஜெசிக்காவும் குப்புறப்படுத்தாள். தன் கால்களை கைகளாகப் பயன்படுத்தத் தொடங்கினாள். பிறந்த 5 மாதத்தில் தனது கால்பாதத்தை பயன்படுத்தி தரையில் ஊர்ந்து, நகர்ந்தாள். கால் பாதங்களை தரையில் தேய்த்து, தேய்த்து நகர்ந்தாள். இது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

          ஜெசிக்காவிற்கு 18 மாதங்கள் ஆனது. அப்போது அவள் எழுந்து நின்றாள், நடக்கவும் தொடங்கினாள். 3 வயது ஆனப் பிறகு தனது கால்களைப் பயன்படுத்தி தானே உணவு உண்ணக் கற்றுக் கொண்டாள். தனது கால்களை தானே கழுவிக்கொண்டார். அவர் இரண்டு கால்களையும், இரண்டு கைகளாகப் பயன்படுத்தத் தொடங்கினார். குழாயை ஒரு காலால் திறந்து தனது காலை சோப்பு போட்டு கழுவும் அளவிற்கு தனது கால்களைப் பழக் கப்படுத்திக் கொண்டார். பிறரின் உதவி இன்றி, தன்னிச்சையாக, சுதந்திரமாக தனது அன்றாட பணிகளை கால்களின் மூலமே செய்யக் கற்றுக் கொண்டார். கூடவே அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொண்டார்.

          குடும்பமே ஜெசிக்காவிற்கு உறுதுணையாக இருந்தது. சகோதரி ஜாக்கி, சகோதரன் ஜாசன் இருவரும் பல உதவிகள் செய்து ஜெசிக்காவின் கவலையைப் போக்கினர். பெற்றோர் அவரை பல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். எந்த வியாதியின் காரணமாக இரு கைகளும் இல்லாமல் பிறந்தார் என்பதைக் கண்டறிய முயற்சி செய்தும் அதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

          சிறுமியாக இருந்தபோதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயல்பாகவே வாழ பழகிக் கொண்டார். மூன்று வயது சிறுமியாக இருந்தபொழுதே ஜிம்னாஸ்டிக் (Gmynastic) கற்றுக் கொடுத்தனர். அதனால் அவரின் உடலை எளிதில் வளைக்க முடிந்தது. கால்களையும், உடலையும் வளைக்க முடிந்தது. பல் துலக்குவது, தலை சீவுவது, குளிப்பது, சாப்பிடுவது, உடைகள் அணிவது, முகத்திற்கு பவுடர் பூசுவது என்பது உள்ளிட்ட சுயபராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிக் கொண்டார். கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் கால்களால் செய்தார்.

கல்வி :

          தான் மட்டும் ஏன் இப்படி கைகள் இல்லாமல் மற்றக் குழந்தைகளிடமிருந்து மாறுபட்டு இருக்கிறேன் என தனது தாயிடம் அடிக்கடி கேட்டாள். தன்னுடைய சகோதரன் மற்றும் சகோதரி ஆகியவரைப்போல் அல்லாமல் ஏன் இப்படிப் பிறந்தேன் எனக் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். தன்னுடைய சகோதரன், சகோதரி இரு கைகளுடன் பிறந்திருக்கும்போது, தான் மட்டும் ஏன் இப்படி பிறந்தேன் என வேதனைப்பட்டார்.

          தாய்க்கு வேதனையாகவே இருந்தது. ஆரம்பத்தில் இது மிகப்பெரிய பிரச்சினையாகவே இருந்தது. மூன்று வயதுவரை ஜெசிக்கா மிகவும் சிரமப்பட்டார். மற்றக் குழந்தைகளை கவனிப்பதை விட ஜெசிக்காவிற்கு அதிகம் அக்கறையும், சேவையும் செய்ய வேண்டி இருந்தது. ஜெசிக்கா வளர்ந்தார். தனது கால்களை கைகளாக பயன்படுத்தக் கற்றுக் கொண்டார்.

          நீ உனது மனதில் என்ன செய்ய நினைக்கிறாயோ உன்னால் செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை ஜெசிக்காவின் தாயும், தந்தையும் ஊட்டினர். ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளின் வாழ்க்கைக்குத் தனிக் கவனம் செலுத்துவது வழக்கமே. ஆனால் ஜெசிக்காவின் தினசரி சராசரி காரியங்களை செய்வதற்கு உதவியும், பயிற்சியும் கொடுக்க வேண்டி இருந்தது.

          ஜெசிக்காவின் சொந்த ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். ஆரம்பத்தில் பள்ளி மாணவர்கள் ஜெசிக்காவை விநோதமாக பார்த்தனர். கைகள் இல்லாத குழந்தை என கேலியுடனும், பரிதாபத்துடனும் பார்த்தனர். ஆனால் ஜெசிக்கா மற்ற குழந்தைகளைப் போல் தனது பாடங்களை படித்தார். தனது கால் விரல்களால் எழுதிப் பழகினர். மற்றவர்கள் கைகளில் எழுதியதைப் போலவே காலின் மூலம் தெளிவாக எழுதினார். அதே சமயத்தில் வேகமாகவும் எழுதினார். மற்றக் குழந்தைகளைப் போலவே படித்தார். கல்வி பயில்வதில் மற்றக் குழந்தைகளைப் போலவே சிறந்த மாணவியாகவே விளங்கினார். ஜெசிக்காவிற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி செயற்கைகைகளை பொருத்தினர். ஆனால் அவருக்கு அது ஒத்து வரவில்லை. ஏனென்றால் கால்களில் செய்வதைவிட செயற்கைக் கைகளில் தனது பணியை செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகவே அவர் செயற்கை கைகளைப் பயன்படுத்தாமல் தனது கால்களையே நிரந்தரமாக பயன்படுத்தினார். ஆம் அவருக்கு எப்போதுமே கால்களே கைகளாக செயல்பட்டன. காலின் மூலம் எழுதியே தனது பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

 கல்லூரி :

          பள்ளியில் இவர் படிக்கும்போது ஆரம்பத்தில் இவரைச் சுற்றி மாணவள் நிற்பார்கள். அது இவருக்குக் கூச்சத்தை ஏற்படுத்தியது. பிறகு நண்பர்களாக பழகிய பிறகு அது மறைந்து போனது. இவர் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் 2002ஆம் ஆண்டில் சேர்ந்தார். அரிசோனா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உளவியலில் இளங்கலைப் பட்டத்தை 2005ஆம் ஆண்டில் பெற்றார்.

          அரிசோனா பல்கலைக்கழகம் அரிசோனா மாநிலத்தில் துஸ்கான் என்னுமிடத்தில் உள்ளது. இது 1885ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அரிசோனா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம். பிரபலமான பல்கலைக்கழகமாகக் கருதப்படுகிறது. சுமார் 40,000 மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர்.

          ஜெசிக்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கு பயில வந்த மாணவர்கள் இவரை வேடிக்கையாகப் பார்த்தனர். தனது அனைத்து வேலைகளையும் தனது கால்களின் மூலம், யாருடைய உதவியும் இன்றி செய்வதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இவருடன் மாணவர்கள் அன்பாக பழகினர். இவர் தனது தேர்வினை தனது கால்கள் மூலமே எழுதி முடித்தார்.

நீச்சல் :

          ஜெசிக்கா காக்ஸிற்கு 6 வயது இருக்கும்போதே பெற்றோர்கள் நீச்சல் கற்றுக் கொடுத்தனர். தண்ணீரில் தவறி விழுந்து விட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்தில் அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். குழந்தைகளுக்கு 5 வயதில் நீச்சல் கற்றுக் கொடுப்பது எளிது. அதற்குமேல் உடல் எடை கூடிவிடும். மூட்டுகளின் அசையும் தன்மையும், நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். ஆகவே 10 வயதிற்குள் நீச்சல் கற்றுக் கொள்வது நல்லது. நீச்சல் கற்றுக்கொள்வது ஒரு சொத்து என ஜெசிக்காவின் பெற்றோர்கள் கருதினர்.

 

          நீச்சல் கற்றுக் கொள்ளும் தகுதி ஜெசிக்காவிற்கு உள்ளதா என்பதை மருத்துவரிடம் சோதனை செய்தனர். அவரின் நுரையீரல்கள் மற்றும் இதயம் ஆகிய உறுப்புகளில் எந்தவித குறைபாடும் இல்லை என மருத்துவர் கூறினார். அதன் அடிப்படையில் ஜெசிக்காவிற்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்சியாளரின் உதவியுடன் மிதவைக் கருவியைக்கொண்டு அவருக்கு நீச்சல் கற்றுத்தந்தனர். பிறகு எந்தவிதக் கருவியும் இல்லாமல் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டார். நீரில் மிதப்பதற்கும், நகர்வதற்கும் கற்றுக்கொண்டார். மல்லாக்கப்படுத்துக்கொண்டு கால்களின் அசைவின் மூலம் மிதந்து கொண்டே நகர்ந்தார்.

          ஜெசிக்காவிற்கு நீச்சல் குளத்தில் நீந்துவது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நீந்துவது அவருக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொண்டது, நீச்சலைக் கற்றுக் கொள்வதற்கு எளிதாக அமைந்து விட்டதுகைகள் இல்லை என்றாலும் நீச்சல் அடிக்கலாம் என்பதை ஜெசிக்காவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

நடனம் :   

          ஜெசிக்கா நடனமும் கற்றுக் கொண்டார். அவருக்கு வயது 6 இருக்கும்போதே சியர்ரா விஸ்டா நகரத்தில் உள்ள தனது வீட்டிலேயே நடனம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். நடன ஆசிரியர் மிகவும் அன்பாக ஜெசிக்காவிடம் பழகினார். அக்கரை எடுத்துக் கொண்டு நடனங்களைக் கற்றுக் கொடுத்தார்.

          நடனப்பயிற்சி கொடுக்கப்பட்டப் பின்னர் மேடையில் அரங்கேற்றம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது. ஜெசிக்காவிற்கு மேடையில் ஏறி நடனம் ஆடுவது என்பது பயமாக இருந்தது. பொதுவாக பெரும்பாலோனருக்கு மேடை பயம் என்பது இருக்கும். வாய் சவால் விடுபவர்களும், கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பவர்களும்கூட மேடை ஏறி பேசச் சொன்னால் பயத்தின் காரணமாக பேச முடியாமல் தடுமாறுவார்கள். நன்றாக பேசுபவர்கள்கூட சில மாதங்கள் தொடர்ந்து மேடையில் பேசாமல் இருந்துவிட்டு, திடீரென பேச அழைத்தால் பேசுவதற்கு தடுமாறுவதும், பேச நினைத்த பல விசயங்களை மறந்துவிடுவதும் வழக்கம்.

          நடன ஆசிரியர் ஜெசிக்காவை மேடை ஏற்றினார். ஜெசிக்காவைச் சுற்றி மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். மேடையில் தன்னைச் சுற்றி பலர் நிற்கும்போதே ஜெசிக்காவிற்கு திடீர் பயம் (Shyness) ஏற்பட்டது. நடனத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சியின் போதே இப்படிப்பட்ட ஒரு பயம் ஏற்பட்டது. வெளிநபர்கள் மத்தியில் நடனம் செய்வது என்பது மிகவும் பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது.

          மேடையில் இருப்பதற்கு எனக்கு பயமாகவும், கூச்சமாகவும் இருக்கிறது. ஆகவே என்னை பின் வரிசையில் நிற்க வைத்து விடுங்கள் என நடன ஆசிரியரிடம் ஜெசிக்கா கெஞ்சி, வேண்டுகோள் வைத்தார். இந்த நடன நிகழ்ச்சியில் கடைசி வரிசை என்பது கிடையாது. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல், பயப்படாமல், தைரியமாக உன்னுடைய நடனத்தைச் செய் எனக்கூறி உற்சாக மூட்டினார்.

          மேடையில் நடனம் என்பது பாடலுக்கு ஏற்ப செய்து காட்டப்பட்டது. அச்சத்துடனும் தாழ்வு மனப்பான்மையுடனுமே ஜெசிக்கா நடனமாடினார். பிறகு அவருடைய தனிப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடனமாடினார். அவரிடம் இருந்த கூச்சம், பயம் விலகிப் போய் இருந்தது.

          ஜெசிக்கா நடனம் முடிந்தபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் உற்சாகமாக கரகோஷம் செய்தனர். அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல்கள். ஜெசிக்காவின் நடனத்திற்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அன்று கிடைத்த உற்சாகமான வரவேற்பின் காரணமாக ஜெசிக்காவிடம் இருந்த கூச்சமும், மேடை பயமும் போய்விட்டது. அது அவருக்கு ஒரு நம்பிக்கையையும், வாழ்வில் சவால்களை எளிதில் எதிர்கொள்ளலாம் என்கிற தன்னம்பிக்கையும் பிறந்தது. அது முதல் அவரது நடன நிகழ்ச்சி பல்வேறு மேடைகளில் நடந்தன.

          ஜெசிக்காவின் நடன நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர் மிகவும் உதவியாக இருந்தனர். வெளியே சென்று நடனமாடி காட்டும்போதுதான் என்ன வரவேற்பு கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என ஜெசிக்காவின் தாயார் கூறினார். நடன ஆசிரியரும் உற்சாகப்படுத்தியதோடு கடைசி வரிசையில் கடைசி நபராக நிற்க வைக்காமல் முன் வரிசையில் வரும்படி செய்தார். பின்புறம் செல்வதற்கு அனுமதிக்கவே இல்லை. இவர்கள் கொடுத்த உற்சாகமே அவரை ஒரு நடனமாடும் பெண்ணாகவும் மாற்றியது.

          ஜெசிக்காவுடன் நடனமாடிய குழந்தைகள் அனைவரும் தனது கைகளை ஆட்டி, அசைத்து ஆடினார்கள். அனைவரும் பிங்க் நிற உடையை அணிந்திருந்தனர். ஜெசிக்காவால் கைகளை அசைத்து ஆடமுடியவில்லை என்றாலும் தனது உடலை வளைத்து, நெளிந்து ஆடினார். மற்ற குழந்தைகளின் நடனத்தைவிட இவருடைய நடனம் எந்த வகையிலும் குறைபாடு இல்லாமலே இருந்தது. பிங்க் நிற உடையில் ஒரு தேவதையாகக் காட்சி தந்தார். தனது நடன பாவனைகள் மூலம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். கூடி இருந்த பார்வையாளர்கள் எழுப்பிய கரவொலி அவரை உற்சாகப்படுத்தியது. இந்த உற்சாகத்தின் காரணமாக ஜெசிக்கா தொடர்ந்து 14 ஆண்டுகள் நடனமாடி வந்தார்.

          நடனத்திற்கு ஊனம் என்பது தடையில்லை என்பதை ஜெசிக்கா நிரூபித்துக் காட்டினார். ஜெசிக்காவின் நடன நிகழ்ச்சியைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தனது குழந்தை எப்படி இதனை எதிர்கொள்ளப் போகிறது என்கிற கவலை ஜெசிக்காவின் தாய்க்கு இருந்தது. தாயாரும் மிக கடினமாகவே உழைத்தார். அவர்களின் உழைப்பும் வீண் போகவில்லை. ஜெசிக்காவின் நடன பாவனைகள் பெற்றோர்களுக்கு இருந்த கவலையைப் போக்கியது. தனது மகள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவாள் என்கிற நம்பிக்கை இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்டது. ஜெசிக்காவும் தனது பெற்றோரின் ஊக்கத்திற்கு கடமைப்பட்டவளாக வணங்கி ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார்.

டேக்வாண்டோ :

          குடும்பத்தினர் ஜெசிக்காவிற்கு முழுவதும் உறுதுணையாக இருந்தனர். ஒரு திறமைசாலியாக ஜெசிக்காவை வளர்க்க வேண்டும், வீரம் நிறைந்த பெண்ணாக வளர்க்க வேண்டும் என முடிவு செய்தனர். ஜெசிக்காவும் எப்போதும் சுறுசுறுப்பாக, உற்சாகம் நிறைந்த குழந்தையாகவே இருந்தார். உடலில் குறைபாடு இருந்தாலும், செயலில் குறைபாடு இல்லாதவராகவே இருந்தார். ஜெசிக்கா மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டார்.

          ஜெசிக்காவிற்கு முழுத் தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும். ஒரு கத்தியை கூர்மைப்படுத்துவதற்கு சாணைக்கல் தேவை. அதுபோல் அவர் மிகவும் திறமையுடைவராக மாற வேண்டும். அதற்கு தற்காப்புக் கலையான கராத்தே கற்றுத்தர வேண்டும் எனப் பெற்றோர்கள் ஆசைப்பட்டனர். கைகள் இல்லாத பெண்ணிற்கு கராத்தே கற்றுத்தர ஆசைப்படுகிறார்கள் என கிண்டல் அடித்தவர்களும் உண்டு.

          ஜெசிக்காவிற்கு 10 வயது இருக்கும்போது டேக்வாண்டோ பயிற்சியாளர் ஜிம் கன்னிங்ஹாம் (Jim Cunningham) என்பவரைச் சந்தித்தனர். தங்கள் வட்டாரத்திலேயே ஒரு நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளராக ஜிம் கன்னிங்ஹாம் விளங்கினார். ஜெசிக்காவின் பிறப்பைப்பற்றி அவரிடம் கூறினர். அவர் ஜெசிக்காவைப் பார்த்துவிட்டு, அவளால் கராத்தே கற்றுக் கொள்ள முடியும். மன ரீதியாக எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆகவே தன்னால் டேக்வாண்டோ கற்றுக் கொடுக்க முடியும் என உறுதி கூறினார். அன்று முதல் டேக்வாண்டோ தற்காப்புக் கலையின் பயிற்சியைத் தொடங்கினார்.

 

          டேக்வாண்டோ (Tackwondo) என்பது ஒரு தற்காப்புக் கலை; ஆனால் இது கராத்தே கிடையாது. இது ஒரு விளையாட்டு போன்றது. முறையான பயிற்சியாளர் மூலமே இதனைக் கற்றுக் கொள்ள முடியும். இதனைக் கற்றுக் கொள்வதற்கு தனி கவனமும், உடற்பயிற்சியும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், தன்னைக் காத்துக் கொள்ளும் மதிநுட்பமும் தேவை. இந்த தற்காப்புக் கலையின் பிறப்பிடம் கொரியா ஆகும். பழங்காலம் முதலே கோகாரியோ (Goguryeo), சில்லா மற்றும் பேக்ஜி போன்ற கொரிய ராஜ்ஜியங்களில் இந்த டேக்வாண்டோ கலை இருந்து வந்தது. உடலை வலிமைப்படுத்தவும், வேகத்தைக் கூட்டவும், தாக்குதலை உடல் தாங்குவதற்காகவும் வீரர்கள் கற்றுக்கொண்டனர்.

          டேக்வாண்டோ ஒரு பழைய தற்காப்புக் கலை என்றாலும் அதில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. டேக்வாண்டோ ஒரு விளையாட்டாக 1950ஆம் ஆண்டில் உருமாறியது. டேக்வாண்டோவில் ஒரு புதிய ஸ்டைலை (Style) ஹோய் ஹாங் ஹி (Choi Hong Hi) என்பவர் 1955இல் உருவாக்கினார். டேக்வாண்டோ என்கிற பெயர் பிரபலம் அடைவதற்கு இவரே காரணமாக இருந்தார். டேக்வாண்டோ என்கிற பெயரை முதலில் பரிந்துரை செய்தவரும் இவரே ஆவார். 1960ஆம் ஆண்டு முதல் தென்கொரிய அரசானது இராணுவம், பள்ளி, கல்லூரிகளில் டேக்வாண்டோவைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது.

          சர்வதேச டேக்வாண்டோ கழகத்தை (ITF) ஹோய் ஹாங் ஹி 1966இல் தொடங்கினார். உலக டேக்வாண்டோ கழகத்தை (WTF) டாக்டர் ஜிம் உன் யங் (Kim un yong) என்பவர் 1973இல் தொடங்கினார். டேக்வாண்டோவில் இரண்டு பிரதான மாடல்கள் (Style) உள்ளன. டேக்வாண்டோவானது 2000ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.

          கராத்தேவிற்கும், டேக்வாண்டோவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கராத்தேவில் உடலின் எந்தப் பகுதியையும் தாக்கலாம். அதுதவிர கை, கால் இரண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் டேக்வாண்டோவில் ஒருவரை இடுப்புப் பகுதிக்கு மேலேதான் தாக்க வேண்டும். இதில் குறிப்பாக கையைப் பயன்படுத்தக் கூடாது. காலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் புள்ளிகள் கிடைக்கும். உதாரணத்திற்கு முகத்தின்மீது காலால் அடித்தால் அதிகப்புள்ளிகள் கிடைக்கும்.

          டேக்வாண்டோ மிகவேகமாக விளையாடக்கூடிய விளையாட்டு. நன்கு பயிற்சிப் பெற்ற வீரரால் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 10 புள்ளிகள்வரை அடிக்கலாம். அந்தளவிற்கு ஆட்டத்தின் வேகம் அதிகமாக இருக்கும்.

          டேக்வாண்டோவில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இல்லை. மிகவும் குறைவான பெண்களே டேக்வாண்டோ கற்றுக் கொள்கின்றனர். ஜெசிக்கா காக்ஸ் டேக்வாண்டோவில் பயிற்சி பெற்று திறமையைக் காட்டினார். இவர் தனது 14ஆவது வயதில் கருப்பு பெல்ட்டை (Black Belt) பெற்றார். இதனை இவருக்கு சர்வதேச டேக்வாண்டோ பெடரேஷன் (International Taekwondo Federation) வழங்கி, அவரைப் பாராட்டியது.

 

கருப்பு பெல்ட் :

          டேக்வாண்டோவில் தரம் எனப்படும் ரேங்குகளை (Ranks) இரண்டு வகையால் பிரிக்கின்றனர். இதில் இளையோர் (Junior), மூத்தோர் (Senior) எனப் பிரித்துள்ளனர். இளையோரை 10 தரங்களாகப் பிரிக்கின்றனர். வெற்றிபெறும் இளையோருக்கு வண்ண பெல்ட்டுகள் வழங்கப்படும். தரத்தை அறிந்துகொள்ள பெல்ட்டில் வரிக்கோடுகள் இருக்கும். முதல் தரத்தைப் பெறும் மாணவரின் பெல்ட் என்பது சிகப்பு, அதில் வெள்ளை அல்லது கருப்பு வரிக்கோடுகள் இடம் பெற்றிருக்கும். பத்தாவது தரத்தில் உள்ளவர்க்கு வெள்ளை பெல்ட் வழங்கப்படும்.

          முதியோர் பிரிவினரை 9 தரங்களாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு ரேங்கிற்கும் கருப்பு பெல்ட் அல்லது டிகிரி (Degree) வழங்கப்படுகிறது. கருப்பு பெல்ட் என்பது முதல் டிகிரியிலிருந்து ஆரம்பம் ஆகிறது. டிகிரி என்பது பெல்ட் அதில் உள்ள வரிக்கோடுகள், ரோமன் எண்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

          கருப்பு பெல்ட் வழங்குதல் என்பது டிகிரி அல்லது பட்டம் பெற்றதைக் குறிக்கிறது. பெல்ட் கலரை அடிப்படையாகக்கொண்டு ரேங்குகள் வழங்கும் முறையை முதன்முதலில் கொண்டு வந்தவர் கானோ ஜிக்கோரோ (Kano Jigoro) என்பவராவார். இவர் ஜுடோ (Judo) எனப்படும் மற்போர் முறையை உருவாக்கியவர். முதன்முதலாக கருப்பு பெல்ட் என்பது 1880ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

          ஜுடோ என்பது ஜப்பானிய மற்போர் கலையாகும். இதனை உருவாக்கிய கானோ ஜிக்கோரோ (1860 - 1938) ஒரு கல்வியாளர். இவர் ஜப்பானிய பள்ளிகளில் ஜுடோ மற்றும் ஜென்டோ (Kendo) ஆகிய விளையாட்டுகளை பள்ளிகளில் அறிமுகம் செய்தார். இவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் ஆசிய உறுப்பினராக 1909 முதல் 1938ஆம் ஆண்டுவரை இருந்தார்.

          ஜுடோ 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடிபிடித்து எதிரியைப் பணிய வைப்பது. நெருக்கிப்பிடித்து முழுத் தாக்குதல் மூலம் நகர முடியாமல் கொழுவிப் பிடிப்பது, திணர வைத்து பணிய வைத்தல் என பல்வேறு நுணுக்களைப் பயன்படுத்தி எதிரியைத் தோற்கடிப்பதாகும். இந்த தற்காப்புக் கலையில் ஆயுதங்கள் பயன்பாடு கிடையாது. ஜுடோ ஒரு முக்கிய ஒலிம்பிக் விளையாட்டாக உள்ளது.

வீரப்பெண் :

          அரிசோனா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு சேர்ந்த ஜெசிக்கா, அங்கு அமெரிக்கன் டேக்வாண்டோ  கழகத்தை (American Taekwondo Association) உருவாக்கினார். இக்கழகம் அமெரிக்காவில் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை தென்கொரியாவைச் சேர்ந்த ஹெங் உங் லீ (Haeng Ung Lee) என்பவர் ஏற்படுத்தினார். இது அமெரிக்காவில் மிகப்பெரிய டேக்வாண்டோ அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இது உலக டேக்வாண்டோ அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

          பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட டேக்வாண்டோ கழகத்துடன் இணைந்து ஜெசிக்கா பல்வேறு விளையாட்டுப் பயிற்சியினை மீண்டும் பெற்றார். அவர் புதிய ஸ்டைலில் (Style) பல்வேறு நிற பெல்ட்டுகளைப் (Color Belt) பெற்றார். ஏற்கனவே டேக்வாண்டோவில் முதல் டிகிரிக்கான கருப்பு பெல்ட்டை பெற்று இருந்தார். மீண்டும் இரண்டாவது கருப்பு பெல்ட்டை அமெரிக்கன் டேக்வாண்டோ கழகத்தின் மூலம் பெற்றார்.

          இக்கழகத்தின் சார்பாக முதன்முதலாக கைகள் இல்லாமல் கருப்பு பெல்ட் பெற்ற முதல் பெண் என்கிற பட்டத்தைப் பெற்றார். இதன்மூலம் உலக அளவில் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் புகழைப் பெற்றார். இப்பட்டத்தைப் பெற்றவுடன் அமெரிக்கா முழுவதும் இவர் பிரபலம் அடைந்தார். கைகள் இல்லாத பெண் டேக்வாண்டோவில் இரண்டாவது கருப்பு பெல்ட்டைப் பெற்றார் என பத்திரிகைகள் புகழ்ந்தன. கைகள் அற்றவர்களும் டேக்வாண்டோவில் சாதிக்கலாம் என்பதை ஜெசிக்கா நிரூபித்துக் காட்டினார். இது உடல் ஊனமுற்றோர் பலருக்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைந்தது.

          ஜெசிக்கா தனது காலின் கட்டை விரலுக்கு இடையே கராத்தே சங்கிலியை பிடித்துச் சுற்றினார். கையால் எவ்வளவு வேகமாகச் சுற்ற முடியுமோ அதற்கு இணையான வேகத்தில் கால்களால் சுற்றினார். ஒரு டேக்வாண்டோ வீரருக்கு இருக்கும் ஆவேசம் அவர் முகத்தில் இருந்தது.

 

                         

 

          இவர் எதிரியிடம் மோதி பல புள்ளிகளைப் பெற்றே இந்தப் பட்டத்தைப் பெற்றார். எதிரியின் தாக்குதலுக்கு பலமுறை ஆளாகி கீழே விழுந்தார். இருப்பினும் போராடி பல புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு கருணை அடிப்படையில் இந்தப் பட்டம் வழங்கப்படவில்லை. பல பார்வையாளர்களின் முன்னிலையில், பல நடுவர்களின் முன்னிலையில் வெற்றி பெற்றதற்காகவே இந்தப் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைகள் :

          ஜெசிக்கா காக்ஸிற்கு கால்கள்தான் கைகள். அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய பணிகளை செய்து முடிக்க கைகளும், கால்களும் தேவை. ஒரு கை இல்லை என்றால் மற்றொரு கையைப் பயன்படுத்தி தன்னுடைய வேலைகளைச் செய்து முடித்துக் கொள்ளலாம். அது சிரமமாக இருந்தாலும், தினசரி தேவையின் அடிப்படையில் ஒரு கையை பயன்படுத்தியே தன்னுடைய பணிகளை செய்து முடித்துவிடலாம். அதற்கு சரியான பயிற்சியும் தேவைப்படுகிறது. அதே சமயத்தில் இரண்டு கைகளும் இல்லை என்றால் மேலும் சிக்கல்தான். -­

         

           

இரண்டு கைகளும் இல்லாமல் இருந்தாலும் அன்றாட பணிகளை சிறப்பாகச் செய்து கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாக ஜெசிக்கா காக்ஸையும் கூறலாம். ஜெசிக்கா காக்ஸ் சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக் மற்றும் நடனத்தையும் கற்றார். ஒரு காலில் நின்று உடலை சமன் நிலை செய்யக் கற்றுக் கொண்டார். ஒரு காலில் நின்றுகொண்டு மறுகாலை கையாகப் பயன்படுத்த கற்றுக் கொண்டார். அவர் தனது இரு கால்களையும் இரண்டு கைகளாகவும் பயன்படுத்த கற்றுக் கொண்டார். இரண்டு கைகளும் இல்லை என்றால், உரிய பயிற்சியின் மூலம் காலை கையாக மாற்றிக் கொள்ளலாம். சிரமம் என்றாலும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இது சாத்தியம் என்பதை ஜெசிக்கா நிரூபித்துக் காட்டியுள்ளார்.

 

              

          இவர் காலை பயன்படுத்தி உணவை உண்டார். தனது தலையை தானே வாரிக்கொண்டார். லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதும், கண் புருவத்திற்கு மைதீட்டுவதும், மேக்கப் போட்டுக்கொள்ளுதல், பல் துலக்குதல், முகம் கழுவுதல் ஆகிய பணிகளை காலின் மூலமே செய்து கொண்டும் பைப்பை திறந்துவிட்டு சோப்புப் போட்டு இரு கால்களையும் சுத்தமாக கழுவிக் கொள்கிறார். குளிப்பது  உள்பட அனைத்துப் பணிகளையும் பிறர் உதவி இன்றி தானே தனது கால்களின் மூலம் செய்து கொள்கிறார்.

          ஜெசிக்காவிற்கு செயற்கைக் கைகள் பொருத்தினர். ஆனால் அதனை பயன்படுத்துவது அவருக்கு மிகவும் சிரமாகவே இருந்தது. ஆகவே செயற்கைக் கைகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு தனது சொந்தக் காலில் நின்றுகொண்டே, சொந்தக் காலை கையாகப் பயன்படுத்தினார். தனது குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் ஊக்குவித்தனர். ஆகவே அவர் கால்களையே முழுவதும் கைகளாகப் பயன்படுத்தினார். அவருடைய கால்களை தலைவரை கொண்டு வரும் அளவிற்கு பயிற்சி எடுத்திருந்தார். இது வேண்டுமானால் மற்றவர்களுக்குச் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஜெசிக்காவிற்கு எளிமையானதாக மாறிவிட்டது. கைகளில் ஒரு வேலையை எவ்வளவு வேகத்தில் செய்ய வேண்டுமோ அதே வேகத்தில் கால்களில் தனது பணிகளை முடித்தார்.

டைப்பிங் :

          ஜெசிக்கா கணினியைக் கற்றுக்கொண்டார். அதன் மவுஸை கால்களிலேயே இயக்கினார். பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தபோது மனித மனம் மற்றும் உடல் திறன்களுக்கு இடையே உள்ள உறவைப் புரிந்துகொண்டார். கைகளுக்குப் பதிலாக கால்களை பயன்படுத்தியே வெற்றி பெற வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார். தனது பாடங்களுக்கான குறிப்புகளை எடுத்தார்.

          தட்டச்சு கற்றுக்கொள்வது என்பது கணினித் துறையில் வேலை பெறுவதற்கு மட்டும் அல்ல, ஜெசிக்காவிற்கு குறிப்புகள் எடுப்பதற்கும், பதில் தருவதற்கும் தட்டச்சு தேவைப்பட்டது. தட்டச்சு கற்றுக்கொள்வது ஒரு திறனை வளர்த்துக் கொள்ளும் செயல் மற்றும் பயனளிக்கக் கூடியது எனலாம். இதற்காகவே ஜெசிக்கா தட்டச்சு கற்றுக்கொண்டார்.

          டைப் செய்வதற்கு இரு கைகளையும் பயன்படுத்துவார்கள். இது டைப்பிங் வேகத்தை அதிகரிக்கும் வழி. ஒரு கை மாத்திரமோ அல்லது ஒரு சில விரல்களை மட்டுமே சிலர் பயன்படுத்துவார்கள். இதனால் மந்தகதியிலேயே டைப்பிங் நடைபெறும். ஜெசிக்கா தனது இரு கால்களின் விரல்களால் டைப்பிங் செய்யக் கற்றுக்கொண்டார்.

                    

           டைப்பிங் செய்வதற்கு பொருத்தமான ஓரிடத்தை தேர்வு செய்துகொண்டார். விசைப் பலகையை தரையில் வைத்துக் கொண்டும் தனது கால்விரல்களால் டைப் செய்தார். டைப் செய்யும்போது விசைப் பலகையில் உள்ள எழுத்துக்களை அடிக்கடி பார்ப்பதைத் தவிர்த்தார். அவரின் கால் விரல்களுக்கு எந்தஎந்த எழுத்துக்கள் எங்கு உள்ளன எனத் தெரியும் அளவிற்கு இருந்தது. அவரால் எழுத்துக்களைப் பார்க்காமலே வேகமாக வார்த்தைகளையும், வசனங்களையும் டைப் செய்ய முடிந்தது.

          எந்த ஒரு விசயத்தையும், அதிக முயற்சியும் எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவில் கற்றுக்கொள்ள முடியும் என்பதை ஜெசிக்காவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக அதிவேகமாக சராசரியாக 75 வார்த்தைகளை செய்ய முடியும். இது கைகளின் விரல்களில் டைப் செய்பவர்களால் மட்டுமே. ஜெசிக்காவிற்கு 14 வயது ஆனபோது அவர் டைப் ரைட்டரில் கால் விரல்களால் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்தினார். தட்டச்சு தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

பியானோ :

          பியானோ (Piano) என்னும் இசைக்கருவியை கின்னரப்பெட்டி என்கிறோம். மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும், அறையிசையில் (Chamber Music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது விலை உயர்ந்த இசைக் கருவியாகும். இது சுதிப் பலகையால் (Key board) வாசிக்கப்படும் ஒரு இசைக் கருவியாகும்.

        

          பியானோ முதன்முதலில் இத்தாலியில் தோன்றியது. 1700 இல் இத்தாலிய இசைக்கருவி தயாரிப்பாளர் கிறிஸ்டிஃபோரி (Crisfitori) என்பவரால் உருவாக்கப்பட்டது. அவை பியானோ என்கிற ஆங்கிலச் சொல் இத்தாலிய மொழியிலிருந்தே வந்தது. பியானோ மிகப் பெரிய அளவுகளில் உள்ளன. பெரும் பியானோ (Grand piano) மற்றும் நிமிர்ந்த பியானோ (Upright piano) என இரண்டு வகையான பியானோக்கள் உள்ளன. பெரும் பியோனோக்கள் 7 - 10 அடி நீளம் கொண்டவை.

          பியானோ பெட்டியின் சுதிப்பலகையில் உள்ள ஒரு சுதிக்கட்டையை (Key) அழுத்துவதன் மூலம் பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்குக் கம்பிகளின்மீது அடிக்கச் செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும்மீண்டும் அதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுறச் செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாக ஒலிப்பலகையின் (Sound board) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்த ஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது.

          அழுத்தப்பட்ட கட்டையிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால் (Damper) நிறுத்தப்படுகின்றன. பியானோவை கைகளாலேயே வாசிக்கின்றனர். வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேண்டுமானால் பியானோவை பார்க்க முடியும்.

          ஜெசிக்கா காக்ஸ் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். அவர் தனது கால் கட்டை விரல்களைக் கொண்டு பியானோவை வாசிக்கிறார். ஏதோ பியானோ வாசிக்கத் தெரியும் என்பதற்காக மட்டுமே அவர் வாசிப்பதில்லை. அவர் நன்றாக வாசித்து மற்றவர்களை ரசிக்கும்படி செய்கிறார். இவர் நிமிர்ந்த பியானோவை வாசிக்கிறார். பியானோ வாசிப்பதும் இவரின் ஒரு தனித் திறமையாகக் கருதப்படுகிறது. இசை அமைப்பாளர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

குதிரை ஏற்றம் :

          பலரும் கற்றுப் பயன்படுத்தப்படும் ஒரு திறனாக குதிரை ஏற்றம் (Horse backride) கருதப்படுகிறது. குறிப்பாக குதிரைப் படை வீரர்கள் குதிரை ஏற்றம் கற்றனர். இக்காலத்தில் குதிரை ஏற்றம் ஒரு விளையாட்டாகவும், ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது. குதிரை ஏற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தைரியமும், குதிரையை கட்டுப்படுத்தவும் தெரிந்திருத்தல் அவசியம்.

 

          குதிரையின் அழகே குதிரைமீது சவாரி செய்ய ஆசையைத் தூண்டுகிறது. குதிரையின் வேகம், தோற்றம், சுறுசுறுப்பு, அழகான பிடரி முடி, நீளமான உடல், தொங்கும் வால், மினுமினுப்பான தோல், கம்பீரமான தோற்றம் இதுவே குதிரையின் அழகு. அடுத்ததாக குதிரையைப் புகழ்வது அதன் வேகம். அதன் சக்தி அதன் கால்களில் உள்ளது எனலாம். குதிரை நான்கு அடிப்படை நடையில் நகரும். சராசரியாக குதிரை ஒரு மணி நேரத்தில் 6.4 கி.மீ. வேகத்தில் இயங்குகின்றது.

          குதிரை சவாரி செய்வதற்கு அங்கவாடி (Stirrup) என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சவாரி செய்யும்போது பாதங்களை உள்ளிட்டுக் கொள்ள உதவும் ஒரு உலோகப் பொருளாகும். குதிரைமீது அங்கவாடிகள் இரட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குதிரைச் சேணத்தில் உறுதியாக அமரவும், குதிரையை வேகமாகச் செலுத்தவும் உதவுகிறது.

          ஜெசிக்காவும் குதிரை ஏற்றத்திற்கான பயிற்சி எடுத்துக் கொண்டார். குதிரைச் சேணத்தில் உட்காந்து கொண்டார். தலையிலே பாதுகாப்பிற்கான ஹெல்மெட் அணிந்து கொண்டார். ஆனால் அவரது உடல் குதிரையின் உடலோடு கட்டப்படவில்லை. கையில் பிடிக்கும் கடிவாளத்தை காலிற்கு வருமாறு ஏற்பாடு செய்திருந்தனர். மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட மினுமினுக்கும் பழுப்பு நிறக் குதிரையின்மீது ஏறி சவாரி செய்தார். குதிரை ஏற்றம் என்பதும் அவருக்கு பிடித்தமான ஒன்றாகவே இருந்தது. பயிற்சியாளர் மூலமே குதிரை ஏற்றத்தையும் கற்றுக் கொண்டு, தனது தனித் திறனையும், தைரியத்தையும் வளர்த்துக் கொண்டார்.

சர்பிங் :

          சர்பிங் (Surfing) என்பது ஒரு வகையான நீர் சறுக்கு விளையாட்டு. கடல் அலை வேகமாக வரும்போது அதில் ஒரு பலகையில் நின்றபடி சறுக்கி வரும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் 3.6 மீட்டர் நீளம் கொண்ட சறுக்குப் பலகையைப் பயன்படுத்துவார்கள்

          இந்த விளையாட்டு 1700ஆம் ஆண்டுகளில் ஹவாய்த் தீவில் விளையாடப்பட்டது. இங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடையே இந்த சர்பிங் போட்டி நடந்து வந்தது. தங்களின் இனச் சிறப்பையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டும் போட்டியாக சர்பிங் கருதப்பட்டதுஇத்தீவில் ஐரோப்பியர்கள் குடியேறியதால் இந்த விளையாட்டு அங்கு முக்கியத்துவத்தை இழந்தது. 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த விளையாட்டு மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது.

          அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் காஹனாமாகோ என்பவர் நவீன சர்பிங் தந்தை எனப் புகழப்படுகிறார். இவர் ஒரு நீச்சல் வீரர். பல்வேறு திரைப்படங்களில் நடிகர்களுடன் சர்பிங் விளையாடி உள்ளார். சர்பிங் விளையாட்டு வீரர்கள் கோடைக் காலத்தில் சர்பிங் விளையாடுவதற்கு ஹவாய் தீவிற்குச் செல்கின்றனர்.

 

          சர்பிங் செய்பவர்கள் தங்கள் காலுடன் சறுக்குப்பலகையை இணைத்துக் கட்டிக் கொள்கின்றனர். கடலில் தவறி விழுந்தாலும் அவரது கட்டுப்பாட்டில் இருந்து சறுக்குப்பலகை வழுக்கிச் செல்லாமல் இருக்க உதவுகிறது. பொங்கி வரும் அலையின் வளைவுப்பகுதியை ஒட்டியே சர்பிங் செய்கின்றனர்.

          ஜெசிக்கா காக்ஸ் கோடை விடுமுறையின்போது ஹவாய் தீவு சென்றார். அவர் அங்கு சர்பிங் கற்றுக் கொண்டார். பயிற்சியாளர் அவருக்கு முதலில் சறுக்குப்பலகையில் எந்த இடத்தில் உட்கார வேண்டும், அது எப்படி சமன் நிலை கொடுக்கும் என்பதை விளக்கினார். பலகையில் படுத்துக்கொண்டு கையால் நீரைப் பின்னுக்குத் தள்ளி அவர் நீரில் சறுக்கிக் காட்டினார். ஜெசிக்காவிற்கு கைகள் இல்லாததால் தனது கால்களின் மூலம் நீரை பின்னுக்குத் தள்ளி சறுக்குப் பலகையை முன்னோக்கிச் செலுத்தினார்.

          சறுக்குப் பலகையில் நின்று உடலை சமன் நிலை செய்வதற்கான பயிற்சியை பயிற்சியாளர் கொடுத்தார். முதலில் ஜெசிக்கா சறுக்குப்பலகையில் நின்றபோது உடலை சமன்நிலைபடுத்த முடியாமல் தண்ணீரில் விழுந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் மூலம் அவரால் சறுக்குப் பலகையின்மீது நிற்க முடிந்தது.

          பயிற்சியாளருடன் அமர்ந்துக் கொண்டே நீரில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். பிறகு படிப்படியாக தனித்து நீரில் சறுக்கி விளையாடினார். அதன் பிறகு பொங்கி வரும் அலையின் வளைவுப் பகுதியை ஒட்டி சர்பிங் செய்தார். ஜெசிக்கா கோடை விடுமுறைக்கு ஹவாய்த்தீவிற்குச் சென்று சர்பிங் விளையாட்டிலும் ஈடுபடுகிறார்.

ஸ்கூபா டைவிங்

          கடலுக்கு அடியில் நீச்சல் அடிக்கும் ஓர் அற்புதமான விளையாட்டு ஸ்கூபா டைவிங் (Scuba diving) ஆகும். இது உற்சாகமான விளையாட்டும் கூட. கடலுக்கு அடியில் நீச்சல் அடிக்கும் போது ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கிறது. நன்கு பயிற்சி பெற்றவர்கள் கடலுக்கு அடியில் 25 மீட்டர் ஆழம்வரை செல்ல முடியும். ஸ்கூபா டைவிங்கில் ஈடுபடுவர் தனது முதுகுபுறத்தில் சுவாசிப்பதற்கான கருவியைக் கட்டி இருப்பார். நீரில் மூழ்கி இருக்கும்பொழுது அவரின் சுவாசத்திற்கு தேவையான காற்று முதுகுப்பகுதியில்  உள்ள சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும். ஸ்கூபா டைவிங்கிற்கான உடை இருக்கிறது. அதை அணிந்துகொண்டே கடலில் நீந்துவார். கடலின் ஆழத்தில் அங்கும், இங்கும் நீந்தி செல்வதற்கு ஏதுவாக கால்களில் மீன் துடுப்பு (Fins) போன்ற காலனியை அணிந்திருப்பார். இதன் உதவியால் அவர் எளிதில் கடல் அடியில் நீந்திச் செல்ல முடியும்.

          கடலுக்கு அடியில் உள்ள ரகசிய உலகத்தை ஸ்கூபா டைவர்கள் கண்டு மகிழ்கின்றனர். சூரிய ஒளியே படாத கடலின் அடிப்பகுதிக்குச் சென்று வருகின்றனர். கடல்வாழ் உயிரினங்களை நேரில் கண்டு மகிழ்கின்றனர். கடல் ஆழத்தில் மூழ்கி அதன் அற்புதமான காட்சிகளை தரிசிக்க ஸ்கூபா டைவிங் உதவுகிறது. கடல் உயிரினங்களை ஆராய்வதற்கும் ஸ்கூபா டைவிங் உதவுகிறது. கடலின் ஆழத்தில் உள்ள உயிரினத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு அம்சமாக ஸ்கூபா டைவிங் விளங்குகிறது.

           

          ஜெசிக்கா காக்ஸ் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். அவர் தண்ணீருக்கு அடியிலும் ஒரு சாதனை புரிந்து வெற்றி பெற்றார். வட அமெரிக்காவின் செய்தித்தாளின் பத்திரிகையாளர் டான் டக்ளா தனது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடும் போது ஜெசிக்கா காக்ஸ் தனது வாழ்க்கையை முழு நிறைவு செய்துள்ளார். வாழ்க்கை அர்த்தம் உள்ள வகையில் சாதித்துக்காட்டியுள்ளார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

          ஜெசிக்கா ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டார். அவர் பிலிப்பைன்ஸ் கடலில் உள்ள பவளத்திட்டுப் பாறைகளை (Coral reefs) கண்டு மகிழ்ந்தார். அவர் ஸ்கூபா டைவிங் மூலம் கடலின் அடிக்கு நீந்திச் சென்று பவளத்திட்டுப் பாறைகளையும், பவள பூச்சிகளையும், அதனைச் சுற்றித் திரிந்த வண்ண மீன்களையும் கண்டு மகிழ்ந்தார்.

          ஜெசிக்கா காக்ஸ் தனது உடல் குறைபாட்டைக் கண்டு வருந்தவில்லை. அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே கழித்தார். பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு, தனது திறமையின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அவர் ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துக்கொண்டதோடு, ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அவர் ஸ்கூபா டைவர் (Scuba diver) என்பதற்கான சான்றிதழையும் பெற்றார்.

          ஜெசிக்கா காக்ஸ் இந்தச் சாதனையை புரிவதற்கு உதவியாக இருந்தவர் ஜிம் எல்லியாட் (Jim Elliott) என்பவராவார். இவர்  ஸ்கூபா டைவிங்கில் உலகளவில் பிரபலமானவர். இவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். ஸ்கூபா டைவிங்கிற்கான முறையானப் பயிற்சியினை ஜெசிக்கா காக்ஸிற்கு கொடுத்து உதவியவர் ஜிம் எல்லியாட்டே ஆவார். இவர் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உடல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வந்தார்.

          ஸ்கூபா டைவிங் என்கிற விளையாட்டானது உலகளவில் உள்ள விளையாட்டுகளில் ஈர்ப்பு விசை இல்லாத விளையாட்டாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் புவி ஈர்ப்பு விசை என்பது அவசியம் தேவை. ஆனால் ஸ்கூபர் டைவிங்கிற்கு ஈர்ப்பு விசை தேவை இல்லை. சக்கர நாற்காலியில் உள்ளவர்கூட நீருக்கு அடியில் அது இல்லாமல் தனது உடலையும், உறுப்பையும் அசைக்க முடியும். நிலத்தில் சாதாரணமாக இயங்க முடியாத ஊனமுற்றவர்கூட, தண்ணீருக்கு அடியில் எளிதாக இயங்க முடியும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையும், ஊக்கமும் கிடைக்கும் என ஜிம் எல்லியாட் கூறியுள்ளார்.

          ஜெசிக்கா காக்ஸ் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டபோது அவர் தனது ஸ்கூபா கியரை (Gear) இயக்குவது புதிய சவாலாக இருந்தது. அவர் நீருக்கு அடியில் சென்ற பிறகு அவரது காலில் ஒன்று துடுப்பாக செயல்பட்டது. அது நீரில் இயங்குவதற்கும், நீரின் அடியில் பயணம் செய்வதற்கும் உதவியது. மற்றொரு காலைக் கொண்டு சுவாசக்குழாய் மற்றும் ஸ்கூபா கியரையும் திறமையாக இயக்கவும், கையாளவும் பயன்படுத்தினார். இது மிகவும் சிரமமான செயலாகவே இருந்தது. கைகள் இல்லாததால் அவர் ஒரு காலை  நீந்துவதற்கும், மற்றொரு காலை உயிர் காக்கும் செயல்பாடான சுவாசக்குழாய் மற்றும் இதர செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தினார். ஒரு திறமையான ஸ்கூபா டைவரால் இப்படி ஒரு காலில் ஒரு வேலையையும், மறு காலைத் தன் வாய் அருகில் கொண்டு சென்று இதர பணிகளையும் செய்வது கடினம். நீருக்கு அடியில் இவர் ஒரு காலில் உந்தி, முன்னோக்கி இயங்க முடிந்தது. அது ஒரு சவாலாக இருந்தாலும் அவருடைய கால் சுதந்திரமாக, தனித்து இயங்கியது. அவர் ஒரு திறமையான ஸ்கூபா டைவராக சிறப்பாகவும் இயங்கி வெற்றியும் பெற்றார். அவர் ஒரு ஹீரோயினி (கதாநாயகி) என்றே புகழப்பட்டார்.

உடை அணிதல் :

          நீங்கள் ஒரு கை அல்லது இரண்டு கைகளும் இல்லாதவராக இருந்தாலும் பரவாயில்லை, உங்களின் அன்றாடப் பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம் என ஜெசிக்கா காக்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் அன்றாடப் பணிகளை எந்தவித சிரமமும் இன்றி செய்யலாம். வேறு வழிகளில் இந்தப் பணிகளை நிறைவேற்ற அல்லது தீர்வுகாண முயற்சி எடுக்க வேண்டும். தனது கால்களை தனது கைகளாகப் பயன்படுத்த குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொண்டார்.

          கால்களை கைகளாகப் பயன்படுத்த வேண்டுமானால் உடல் வளைந்து கொடுக்க வேண்டும். அதேபோல் உடலை நன்கு சமன் செய்து கொள்ளப் பயிற்சி எடுக்க வேண்டும். கைகள் இல்லாதவர்கள் உடலை நன்கு வளைக்கவும், சமன் செய்யக்கற்றுக் கொண்டால் மட்டுமே கால்களை கைகளாகப் பயன்படுத்த முடியும் என ஜெசிக்கா காக்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொண்டதும், மாலை 6.00 மணிக்கு குழு நடனப்பயிற்சியில் ஈடுபட்டதின் மூலமே தனது உடலை நன்கு வளைக்க கற்றுக்கொண்டார். ஒரு காலில் நிற்கவும் கற்றுக்கொண்டார். ஒரு காலில் நின்று கொண்டு மறுகாலில் தனது வேலைகளை செய்யக் கற்றுக்கொண்டார். ஒரு காலில் நிற்கும்போது கீழே விழுந்துவிடாமல், தடுமாறாமல் இருக்க உடலை சமன்நிலைபடுத்த நன்கு கற்றுக்கொண்டார். இந்த இரண்டு சிறப்புத்தன்மையின் காரணமாகவே ஜெசிக்கா பல பணிகளை சிறப்பாகச் செய்தார்.

          ஜெசிக்கா காக்ஸ் தனது உடைகளைத் தானே அணிந்து கொள்கிறார். கைகள் இல்லாதவர்கள் எப்படி தனது உடைகளைத் தானே அணிந்து கொள்ளலாம் என்பதற்கான பல குறிப்புகளை (Tips) ஜெசிக்கா வழங்கியுள்ளார். அதே சமயத்தில் எது மாதிரியான உடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார். இரண்டு செயற்கைக் கைகள் பொருத்தி இருந்தாலும், பொருத்தவில்லை என்றாலும் உடையை அணிந்து கொள்வதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். உடல் நன்கு வளைந்து கொடுத்தாலே, நமது அன்றாடப் பணிகளை கால்களின் மூலம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துவிடும்.

          பேண்ட், பாவாடை, அரைக்கால் சட்டை ஆகியவற்றின் இடுப்புப் பகுதியில் எலாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். பொத்தான்களைப் பயன்படுத்தக் கூடாது. பொத்தான்களைப் பயன்படுத்தினால் உடையைக் கழட்டுவது எளிதாக இருக்காது. ஜட்டி போன்ற உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

          அணியப் போகும் உடையை தொங்கவிடுவதற்கான கொக்கி அல்லது கைப்பிடி போன்ற குழிழை சுவர் அல்லது கதவில் பொருத்தி இருக்க வேண்டும். இவை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக உறிஞ்சும் கோப்பையுடன் (Suction cup) பொருத்திவிட வேண்டும். சுவரில் பொருத்தப்பட்டுள்ள உறிஞ்சும் குமிழின் உதவியுடன் காலின் மூலம் நேராக நின்று உடையை அணியலாம்

          அணியப் போகும் உடை ஒவ்வொன்றையும் காலால் எடுத்து கொக்கி அல்லது குமிழில் மாட்டவேண்டும். தொங்கவிடும் போது ஆடையின் பெல்ட் லூப்பின் பின்புறத்தில் மாட்டவேண்டும். கொக்கி அல்லது குமிழ் இடுப்பு உயரத்திற்குள் இருக்க வேண்டும். உடையின் உள்ளே காலை நுழைத்து, குந்தி உட்கார்ந்த நிலையில், அப்படியும், இப்படியும் பக்கவாட்டில் வேகமாக அசைந்து செல்வதன் மூலம் ஆடை இடுப்பிற்குள் சென்று விடும். ஆடையின் உள்ளே கால்களை நுழைத்தவுடன் துரிதமான அசைவு கொடுப்பதன் மூலமே ஆடையை எளிதில் அணிய முடியும். மெதுவாக அசைவு கொடுத்தால் ஆடை அணிவது சிரமம்.

          காலிற்கு அணியும் காலுறை (Socks) மிக மெல்லியதாக இருக்க வேண்டும். ஜப்பான் விற்பனை செய்யும் ஜப்பானீஸ் லுவாண்டா சாக்ஸை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸ் மிக மெல்லியதாக இருக்கும். கைகளில் பயன்படுத்தும் உறை போன்றது. கால் பெருவிரலைத் தனியாகப் பயன்படுத்த முடியும். அணியும் சாக்சானது எலாஸ்டிக் தன்மையுடன் மீளும் ஆற்றல் கொண்டதாக இருப்பதால் அதனை அணிவதும், கழட்டுவதும் எளிது. இதனை அணிவதன் மூலம் பொருட்களை எளிதில் எடுக்க முடியும்.

          குளியல் அறையில் தலைவாறும் பிரஸ் மற்றும் சுத்தம் செய்யும் தடிமனான திண்டு ஆகியவற்றை சுவற்றில் பொருத்தி விட வேண்டும். பிரஸைக் கொண்டு தலைமுடியை திரும்பத் திரும்ப தேய்க்கலாம். குளிக்கும் சவரின் சுவர் பகுதியில் சுத்தம் செய்யும் பெரிய திண்டினையும் பொருத்தி இருக்க வேண்டும். தண்ணீரை திறந்துவிட்டப்பிறகு மழை போல் பொழியும் நீரின் ஊடே தலையையும், உடலையும் நன்கு தேய்த்து குளிக்கலாம். இப்படி யாரின் உதவியும் இன்றி உடலை தேய்த்துக் குளிக்கலாம்.

பாறை ஏறுதல் :

          பலர் தற்போது வித்தியாசமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பாரம்பரிய விளையாட்டின்மீது ஆர்வம் குறைந்து வருகிறது. ஏனென்றால் பாரம்பரிய விளையாட்டுகளில் பல விதிமுறைகள் உள்ளன. இதை செய்யக் கூடாது. இப்படித்தான் செய்ய வேண்டும் எனக் கூறுவதால் பலருக்கு விரக்தியும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே ஏதாவது வித்தியாசமான விளையாட்டில் ஈடுபட வேண்டும் என ஆசைப்படுகின்றனர். உடல் மற்றும் மன வலிமைiயக் காட்டக் கூடிய புதுப் புது விளையாட்டுகள், அதுவும் சாகச விளையாட்டுகளில்தான் தங்களது கவனத்தை அதிகம் செலுத்துகின்றனர். குறிப்பாக பாறை ஏறுதலை (Rock Climbing) அதிகம் விரும்புகின்றனர்.

            )  

          பாறை ஏறுதல் என்கிற விளையாட்டு பொதுவாக ஆபத்தான விளையாட்டாக பெற்றோர்கள் கருதுகின்றனர். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுத் தரலாம். பாறை ஏறுவதன் மூலம் உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமடையும். முறையான பயிற்சியாளர்கள் பாறை ஏறுதல் முறையைக் கற்றுக் கொடுப்பதால் மிகவும் பாதுகாப்புடன் ஏறுவார்கள்.

          பாறை ஏறுபவர்கள் அல்லது பங்கேற்பவர்கள் இயற்கை பாறை அமைப்புகளையும் அல்லது செயற்கை பாறைச் சுவர்களில் ஏறுகின்றனர். முழுவதும் ஏறுவதற்கான ஒரு நடவடிக்கை, இலக்கு உச்சியை அடைதல் என்பதாகும். வெற்றிகரமாக ஏறி முடிக்க ஒரு பாதுகாப்பான பாதை அடிப்படைத் தேவை. பிறகு கீழே திரும்பி வருதலும் ஒரு சாகசம்தான்.

          பாறை ஏறுதல் உடல் மற்றும் மனசோடு இணைந்து செயல்படக்கூடிய விளையாட்டு. இது உடல் வலிமை, மன உறுதிப்பாடு, சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, மனக்கட்டுப்பாடு ஆகியவற்றுடன் உடல் சமநிலையை சோதிக்கும் விளையாட்டு. பாறை ஏறுவதற்கு சரியான ஏறும் நுட்பங்கள் மற்றும் ஏறுவதற்கான உபகரணங்களும் தேவை. இது ஆபத்தான விளையாட்டு. ஆனால் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் ஆபத்து இல்லாமல் முழுவதும் ஏறி, வெற்றியை அடைய முடியும்.

          ஒலிம்பிக் கமிட்டியானது பாறை ஏறுதலை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, ஒலிம்பிக் விளையாட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளது. மலை ஏறுதல் மற்றும் பாறை ஏறுதல், அதுதவிர கீழ் இறங்குதல் ஆகியவை யாவும் ஒரு பிரபலமான சாகச விளையாட்டு. பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விளையாட்டு.

          கைகள் இருப்பவர்களால்தான் பாறை ஏறுதல், செயற்கை சுவர் ஏறுதல் என்பது முடியும். ஆனால் கைகள் இல்லாதவர்கள் கூட பாறை ஏற முடியும் என்பதை ஜெசிக்கா காக்ஸ் நிரூபித்துள்ளார். ஜெசிக்கா காக்ஸ் செயற்கைச் சுவர் மீது ஏறி தன்னாலும் ஏற முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார். தொழில் ரீதியாக பாறை ஏறுபவர் ரோன்னி டிக்சன் (Ronnie Dickson). இவர் பாறை ஏறுபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். சிறந்த பயிற்சியாளரும்கூட. இவரே ஜெசிக்காவிற்கு பாறை ஏறுபவதற்கானப் பயிற்சியினை அளித்தார். இவரின் உதவியுடன் உள்ளரங்கில் உள்ள செயற்கைப் பாறைச் சுவரின் மீது ஜெசிக்கா ஏறினார். ஜெசிக்கா காக்ஸ் ஏறுவதற்கு பயிற்சியாளர் ரோன்னி டிக்சன் சிறுசிறு உதவிகளையும், ஆலோசனைகளையும் கொடுத்தார். அதன் பலனாக ஜெசிக்கா சுவரின் முழு உயரத்தையும் வெற்றிகரமாக ஏறி முடித்தார்.

          செயற்கைப் பாறை சுவரில் ஏறுவதற்குமுன்பு நான் ஏறப்போகிறேன் என சப்தமாக கூறினார். உற்சாகமாக ஏறத் தொடங்கினார். தொங்கவிடப்பட்ட கயிறில் அவரது உடல் கட்டப்பட்டிருந்தது. அவர் ஒவ்வொரு சிறு படிக்கட்டுக் கல்லில் காலை ஊன்றி, காலை மாற்றி, மாற்றி எடுத்து வைத்து மிகச் சிரமப்பட்டே ஏறினார். இது இவருக்கு உடல் வலிமையைக் கொடுத்ததோடு, மன உறுதியையும் கொடுத்தது. மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

பனிச்சறுக்கு :

          பனிச்சறுக்கு என்பது பனி நடைக் கட்டைகளைப் (Snowboard) பொருத்திய காலணிகளை அணிந்து ஒரு பனிமலை உச்சியிலிருந்து சறுக்கிய வண்ணம் கீழ் இறங்குவதாகும். குளிர் நாடுகளில் இது ஒரு பிரபலமான விளையாட்டு. குளிர்பிரதேச பழங்குடிகளே பனிச்சறுக்கு விளையாட்டைப் பற்றி முன்னர் அறிந்திருந்தனர்.

          பனிச்சறுக்கு விளையாட்டு என்பது பனிச்சறுக்குக் கட்டைகளின் மூலம் சறுக்கிச் செல்லும் உடல் திறன் விளையாட்டு. உடல் வலிமையை அடிப்படையாகக் கொண்டு விளையாடுவதாகும். இந்த விளையாட்டில் ஈடுபடுவருக்கு உடல் தகுதி மட்டுமின்றி மன உறுதியும் தேவை. இந்த விளையாட்டு 1910இல் முதன்முதலாக விளையாடியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் கால்களுக்கு பிளைவுட் அல்லது மரக்கட்டை பயன்படுத்தப்பட்டது. பிறகு காலிற்கு ஸ்னோபோர்டு (Snowboard) என்பது 1960களில் பயன்படுத்த தொடங்கினர். 1965ஆம் ஆண்டில் நவீன ஸ்னோபோர்டு பயன்படுத்தப்பட்டது. ஷர்மன் போப்பென் (Sherman poppen) என்கிற பொறியாளர் தனது மகளுக்காக மிக்சிகன் நகரில் இதனை உருவாக்கினார். 1998ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டாக அங்கரிக்கப்பட்டுள்ளது.

          ஜெசிக்கா காக்ஸ் பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபட்டார். அவர் பயிற்சியாளரின் உதவியுடன் பனி மலைப்பகுதியில் பயிற்சி எடுத்துக்கொண்டார். பனிச்சறுக்கு விளையாட்டிலும் தனது திறமையைக் காட்டினார். பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் அளவிற்கு உடல் தகுதியும், உடல் வலிமையும், மன உறுதியும் ஜெசிக்காவிற்கு இருந்தது.

ஸ்கை டைவிங் :

          பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து பிறகு பூமிக்கு மேலே மிதந்தபடி பாராசூட் உதவியுடன் மெதுவாக தரையை அடையும் விளையாட்டு ஸ்கைடைவிங் ஆகும். முதலில் விமானத்தில் இருந்து குதிக்க வேண்டும். ப்ரீ பால்ஸ் என்னும் வானத்தில் டைவ் செய்து குதிக்க வேண்டும். குதித்த சில குறிப்பிட்ட வினாடிக்குள் பாராசூட்டை திறக்க வேண்டும். பாராசூட் திறக்கவில்லை என்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.

          பாராசூட் (Parachute) என்னும் வான்குடை வளிமண்டலத்தில் நகரும் ஒரு பொருளின் வேகத்தை பின் இழுவிசையை உருவாக்கிக் குறைக்கப்பயன்படும் ஒரு கருவி. பாராசூட் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் பட்டினால் செய்யப்பட்டன. இப்போது நைலான் செயற்கை இழையினால் செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் இறுதி செங்குத்துத் திசை வேகத்தினை (Terminal Vertical Velocity) குறைந்தபட்சம் 75 சதவீதம் குறைக்கக் கூடிய கருவிகள் மட்டுமே பாராசூட்டுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பாராசூட் என்கிற வார்த்தை இரண்டு பிரெஞ்சு சொற்களிலிருந்து தோன்றியது. பாரா மற்றும் சூட் என்ற இரண்டு சொற்களைக் கொண்டது. பாரா என்றால் தயாராகுதல் என்று பொருள். சூட் என்றால் விழு என்று பொருள்.

          எல்லோரும் வானில் பறக்கவே ஆசைப்படுகின்றனர். அதிலும் ஸ்கை டைவிங் என்னும் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்துத் தரை இறங்க வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் உண்டு. ஆனால் பயம் நம்முன் பெரிதாக இருக்கும். இது பயத்தையும், ஆபத்தையும் இணைக்கும் ஒரு வீர விளையாட்டு. இந்த விளையாட்டு திகிலும், சுவராஸ்யமும் சேர்ந்தது.

          ஜெசிக்கா காக்ஸ் இந்த சாகச விளையாட்டிலும் ஈடுபட்டார். நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் உதவியுடன் விமானத்திலிருந்து குதித்து, காற்றில் மிதந்தபடி தரையை அடைந்தார். பாராசூட்டை இயக்க கைகள் மிகவும் அவசியம். ஆகவே ஜெசிக்கா காக்ஸின் முதுகுபுறத்தில், பயிற்சியாளரின் உடலை சேர்த்துக் கட்டிக் கொண்டார். பயிற்சியாளரின் முதுகுப்புறத்தில் பாராசூட் இணைக்கப்பட்டிருந்தது. விமானத்திலிருந்து குதித்தவுடன் சில நிமிடங்கள் ப்ரிபால்ஸ் என்னும் முறையில் கீழே இறங்கிறனர். குறிப்பிட்ட சில வினாடிகளில் பயிற்சியாளர் தனது பாராசூட்டை விரியச் செய்தார். பிறகு காற்றில் மிதந்தபடி மெதுவாக தரையை அடைந்தனர்.

          ஜெசிக்காவிற்கு வானில் ஒரு பறவையைப்போல பறந்த அனுபவம் கிடைத்தது. ஸ்கை டைவிங்கில் ஈடுபடுவது என்பது செலவு அதிகம் கொண்ட ஒரு விளையாட்டாகும். பாராசூட்டின் விலை குறைந்தபட்சம் 3 லட்சம். அணியக்கூடிய பாதுகாப்புக் கண்ணாடியின் விலை பன்னிரண்டாயிரம் ரூபாய். ஒரு முறை ஸ்கை டைவிங் மூலம் குதிக்க பதினைந்தாயிரம் ரூபாய் ஆகும். ஜெசிக்கா வானிலிருந்து குதிப்பதற்கு ஒரு தன்னார்வ நிறுவனம் பண உதவி செய்தது. இதன் மூலம் வானிலிருந்து குதித்து தனது பயத்தையும், அச்சத்தையும் போக்கிக்கொண்டார். ஆபத்து நிறைந்த இந்த சாகச விளையாட்டிலும் கலந்துகொண்டு ஒரு சாதனையை படைத்தார்.

         

 

கார் ஓட்டுதல் :

ஒரு காரை ஓட்ட வேண்டுமானால் அதற்கு கைகள் மிகவும் அவசியம். கைகளால் ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்ட வேண்டும். சரியாக ஸ்டீயரிங்கை பிடித்து ஓட்ட வேண்டும். சரியாகப் பிடித்து ஓட்டவில்லை என்றால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுவும் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட கார்களில், சரியான இடத்தில் ஸ்டீயரிங்கை பிடித்து ஓட்டாவிட்டால் ஆபத்தை ஏற்படுத்தும், வாய்ப்பு உள்ளது. எப்படி ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்ட வேண்டும் என்பதற்கான சில அடிப்படையான விதிமுறைகள் உள்ளன.

          காரில் அமர்ந்து ஸ்டீயரிங் வீலைப் பிடிக்கும்போதே முழு நம்பிக்கையுடன் பயணத்தைத் துவக்க வேண்டும். சாலையின்மீது முழு கவனமும் இருப்பதோடு, கவனம் திசை திரும்பாமல் இருக்குமாறு நடந்துகொள்ள வேண்டும். கவனச் சிதறல் ஏற்படாமல் விழிப்புடன் எப்போதும் இருப்பது நல்லது. கவனக் குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

          ஸ்டீயரிங் வீலின் மீது ஒரே இடத்தில் இரண்டு கைகளையும் பிடித்தபடி ஓட்டுவது தவறானது. 180 டிகிரி கோணத்தில் கைகளை வைத்து ஓட்டுவதே சரியாக பிடிக்கும் கோணம் என்கின்றனர். அதாவது கடிகாரத்தின் 8 மற்றும் 4 ஆகிய எண்களில் முள் இருக்கும் வகையிலான கோணத்தில் கைகளைப் பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது. ரிவர்ஸ் எடுக்கும்போது உடம்பை வளைத்து பின்புறம் பார்க்க வேண்டியிருக்கும். அப்போது ஒரு கை ஸ்டீயரிங் வீலில் கொஞ்சம் மேலே வைத்துக் கொண்டு திருப்பினால் சவுகரியமாக இருக்கும்.

          வளைவுகளில் திரும்பும்போது ஒரே கையால் ஸ்டீயரிங் வீலை முழுவதுமாக வளைப்பது தவறு. தவிர குறுகலான நிலையிலும் யு டர்ன் போகும்போதுக் கைகளை ஸ்டீயரிங் வீல் முழுவதும் கொண்டு போய் பின்னர்விடுவதும் தவறு. இரண்டு கைகளாலும் ஸ்டீயரிங் வீலை கொஞ்சம் கொஞ்சமாக திருப்ப வேண்டும். கடிகாரத்தில் 10 மற்றும் 2 ஆகிய இடங்களில் முள் இருப்பது போன்று ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கும். இப்படி தவறாக ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்டினால் ஏர்பேக் விரியும்போது கை மற்றும் தலையில் காயத்தை ஏற்படுத்தும்.

          ஒற்றைக் கையால் டிரைவிங் செய்வது தவறு. ஒற்றைக்கையில் ஓட்டுவது அவசர சமயங்களில் கூடுதலான பதட்டத்தை ஏற்படுத்திவிடும். கடிகாரத்தில் உள்ள முள் 9 மற்றும் 3 இல் இருப்பதுபோல் ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்ட வேண்டும். அதாவது கைகளை 180 டிகிரி கோணத்தில் பிடித்து ஓட்ட வேண்டும். இதுதான் சரியானது. இருக்கையில் அமரும் இடத்திற்கும், ஸ்டீயரிங் வீலிற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். இருக்கையில் அமரும்போது ஸ்டீயரிங் வீலிலிருந்து உடம்பை 25 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

         

          நெடுஞ்சாலையில் செல்லும்போதும் நீண்ட தூரம் ஓட்டும் போதும் கடிகாரத்தில் 8 மற்றும் 4 ஆகியவற்றில் பெரிய முள் இருப்பது போன்ற கோணத்தில் ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்ட வேண்டும். இது சோர்வைக் குறைக்கும் என்பதுடன் சவுகரியமாக இருக்கும். சாலைகள் நிலைக்கு தக்கவாறு ஸ்டீயரிங் வீலை மாற்றிப் பிடித்து ஓட்டுவதற்கும் பழகிக் கொள்வது அவசியம். ஸ்டீயரிங் வீலைக் கையாளுவதற்கான வழிமுறைகளுடன் கையாள்வதே பயணத்திற்கு இனிதானது.

          கார் ஓட்டுவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதனை சரியாகப் பின்பற்றுவதன் மூலமே விபத்தில்லாமல் காரை ஓட்ட முடியும். கைகள் இல்லாத ஒருவர் கார் ஓட்டுவது எவ்வளவு சிரமம் என்பது கைகளால் கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும். கைகள் இல்லை என்றால் காரை ஓட்ட முடியாது என்றே நாம் கூறுவோம். ஆனால் ஜெசிக்கா காக்ஸ் தனது சொந்தக் காரை தினமும் ஓட்டுகிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தனது இரு கால்களின் மூலம் ஸ்டீயரிங் வீலைப் பிடித்து ஓட்டுகிறார். சிறு வயதிலேயே தனது கால்களை கைகளாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதாலேயே அவரால் காரை ஓட்ட முடிகிறது.

        

          ஜெசிக்கா காக்ஸின் காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கைகள் இல்லாதவருக்காக தயாரிக்கப்பட்ட காரும் அல்ல. ஆரம்பத்தில் அவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டபோது காரில் அவர் அமருவதற்கு ஏற்ப சில மாற்றங்களும், அவர் உடல் குறைபாட்டிற்கு ஏற்ப சில மாற்றங்களும் காரில் செய்யப்பட்டது. பின்னர் அதனை ஜெசிக்கா நீக்கிவிட்டார். தனது சொந்தக்காரில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர் விலைக்கு வாங்கியபோது எப்படி இருந்தததோ அதுபோலவே பயன்படுத்தப்படுகிறது. கார் வாங்கும்  போது அவருக்காக எந்த சிறப்பு ஏற்பாடும் செய்து, அந்த கார் தயாரிக்கப்படவில்லை. மற்றவர்கள் பயன்படுத்தும் அதே காரையே அவர் வாங்கி இருந்தார்.

          காரில் அமர்ந்தவுடன் தனது பாதுகாப்பு சீட் பெல்ட்டை ஒரு காலின் உதவியுடன் போட்டுக் கொள்கிறார். டச் ஸ்கீரினில் தனது கால் பெருவிரலால் தொட்டு வழித்தடங்களை கண்டறிகிறார். பெருவிரல் மூலம் காரை ஸ்டார்ட் செய்கிறார். ஸ்டீயரிங்கை 180 டிகிரி கோணத்தில் சுழற்றுகிறார். அவர் காரை நன்றாக ஓட்டுகிறார். நன்றாகப் பயிற்சி பெற்று கால்களாலேயே காரும் ஓட்டுகிறார். கால்களால் காரை ஓட்டிக்காட்டி முறையான ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். இவர் தடையற்ற கார் ஓட்டுநர் உரிமமும் (Unrestricted drivers license) வைத்துள்ளார். தடையில்லாத ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது இவருக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்திருக்கிறது. இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். பிறர் உதவியின்றி தன்னுடைய காலின் மூலம் தனது வண்டிக்கு பெட்ரோலையும் நிரப்பிக் கொள்கிறார்.

லென்ஸ் அணிதல் :

          ஜெசிக்கா காக்ஸ் பலமுறை தேசிய தொலைக்காட்சிகளில் காட்சியளிக்கக் கூடிய ஒரு பிரபலமான பெண்ணாக விளங்குகிறார். இவர் 6 மாதத்திற்கு ஒருமுறை வெளி நாடுகளுக்குச் சென்று வருகிறார். வெவ்வேறு விடுதிகளில் தங்குகிறார். எழுந்தவுடன் தான் அணியும் மூக்குக் கண்ணாடியைத் தேட வேண்டி இருக்கிறது. கண்ணாடியைத் தேடும்பொழுது தட்டுத்தடுமாறும் நிலை ஏற்படுகிறது. அவருக்கு கண்ணில் சில குறைபாடுகள் இருந்தது.

          அன்றாட வாழ்க்கைக்கு இது இடையூறாக இருந்தது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்வதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தினசரி வாழ்க்கை கவலை இன்றி போக்கலாம். ஜெசிக்கா காக்ஸ் தனது பார்வைக் குறைபாட்டை சரி செய்வதற்காக கண் மருத்துவர் டேனியல் டூர்ரி (Daniel Durrie) என்பவரைச் சந்தித்தார். இவர் டூர்ரிவிஷன் பவுன்டேசன் என்கிற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இவர் அமெரிக்கா முழுவதும் வருடத்திற்கு 300 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை அளித்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு புதுவாழ்வு கொடுத்து வருகிறார். ஒருவருக்கு பார்வை கிடைப்பதற்காக 5000 டாலர் வரை செலவு செய்கிறார்.

          மருத்துவர் டேனியல் விபத்தில் கை இழந்தவர்கள் அல்லது கைகளே இல்லாதவர்களுக்கு கண் குறைபாட்டை நீக்கி புது பார்வை ஒளியை வழங்கும் சேவையைச் செய்து வருகிறார். உடல் குறைபாடு கொண்டவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோயை குணமாக்குகிறார். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் அன்றாட வாழ்க்கை சீர்படும் என்கிற நோக்கத்தில் இந்த சேவையை அவர் செய்து வருகிறார். லென்ஸ் அல்லது கண்ணாடி போடாமலே சிறந்த பார்வை கிடைக்க உதவுகிறார்.

          அமெரிக்காவில் டூர்ரிவிஷன் மருத்துவமனை ஓவர்லேண்ட் பார்க் என்னுமிடத்தில் உள்ளது. இங்கு ஜெசிக்கா காக்ஸிற்கு பார்வைக் குறைபாட்டை லேசர் அறுவை மூலம் மருத்துவர் டூர்ரி மற்றும் குழுவினர் சரி செய்தனர். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதன் பின்னர் மருத்துவர் டேனியல் டூர்ரி மற்றும் ஊழியர்கள் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுத்தனர். அனைவரும் தங்களின் கை கட்டை விரலைக் காட்டி, வெற்றி என்பதை புன்னகையுடன் சுட்டிக் காட்டினர். ஜெசிக்கா தனது காலைத் தூக்கி கால் பெரு விரலை உயர்த்தி புன்னகை செய்தார்.

          அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஜெசிக்காவின் இரண்டு கண்களின் பார்வையும் சிறப்பாக இருந்தது. தனக்கு கண் சிகிச்சை செய்தவர்களுக்கு தனது நன்றியை கூறுவதற்கு போதுமான வார்த்தை இல்லை. நன்றி எனத் தெரிவிக்க முடியாத அளவிற்கு அவர்களின் உதவி இருந்தது. வெறும் வார்த்தைகளால் நன்றி எனக் கூறி விட முடியாது என அவர்களை ஜெசிக்கா காக்ஸ் புகழ்ந்தார்.

          அறுவைச் சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு ஜெசிக்காவிற்கு சற்று நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. தனது பார்வைக் குறைபாடு சரியாகி விடுமா என்கிற கவலையும் இருந்தது. ஆனால் அறுவைச் சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே பார்வை அவருக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை வாழ இந்த கண் அறுவைச் சிகிச்சை உதவியது. கண் அறுவைச் சிகிச்சை செய்ததன் மூலம் ஸ்கை டைவிங்கிலும் ஈடுபட்டு சாதிக்க முடிந்தது.

        ஜெசிக்கா காக்ஸ் தனது கண்ணாடி லென்ஸ்களை தானே கண்களில் பொருத்திக் கொள்கிறார். கண்களின் கருவிழியில் பொருத்துவதும், அதிலிருந்து மீண்டும் எடுப்பதையும் தானே செய்து கொள்கிறார். இதற்கு அவர் தனது காலின் கட்டை விரலைப் பயன்படுத்துகிறார். எனக்கு கைகள் இல்லை. ஆனால் கால்கள் உண்டு. நான் எனது கால்கள் மூலம் அனைத்தையும் செய்வேன், செய்து முடிப்பேன். அதற்கான யுக்தி எனது காலில் உள்ளது என ஜெசிக்கா காக்ஸ் கூறுகிறார். மூக்குக் கண்ணாடியை தானே அணிந்து கொள்கிறார். கண் லென்ஸ் உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார்.

விமானம் :

          கிராமத்தில் இருப்பவர்கள் விமானம் வானில் பறப்பதை வேடிக்கை பார்ப்பது வழக்கம். சுற்றுலா சென்றால் விமான நிலையத்திற்குச் சென்று தூரத்திலிருந்து விமானம் இறங்குவதையும், புறப்பட்டுச் செல்வதை பார்ப்பதும் ஒரு கண் கொள்ளாக் காட்சி தான். ஏனென்றால் நமக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு என்பது கிடைக்காது. விமானம் எப்படி பறக்கிறது என்பது நம்மில் பலருக்கு புரியாத புதிராகவே உள்ளது.

          மிகப்பெரிய விமானம் காற்றில் பறக்கிறதுஒரு விமானம் பறக்க நான்கு விதமான விசைகள் உண்டு. பறக்கும் பொருளுக்கு மேல் நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift), முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் (Thrust), கீழ்நோக்கி இழுக்கும் எடை (Weight) மற்றும் பின்னோக்கி இழுக்கும் டிராக் (Drag) என நான்கு விசைகள் செயல்படுகின்றன. விமானத்தின் கீழ்நோக்கி இழுக்கும் எடையும், மேல் நோக்கி இருக்கும் லிப்ட்டும் சமமாக இருப்பதோடு, பின்னோக்கி இழுக்கும் டிராக் மற்றும் முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் ஆகியவை அனைத்தும் சமமாக (Weight = Lift; Drag = Thrust) இருந்தால் ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்கும்.

          த்ரஸ்ட், டிராக்கைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை `லிப்ட் விசையைவிட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் `லிப்ட் விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். விமானம் முன்னே செல்வதற்கான விசையைக் கொடுப்பது விமானத்தின் இஞ்சின். அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின். அதே போல விமானத்தில் டிராக் விசையைக் கொடுப்பது காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள். இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே காரணம்.

          விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது. இதை செய்வதற்குக் காரணம் காற்றினால் சக்கரத்தில்  ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும். மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது.

          விமானத்தில் கீழ்க்நோக்குவிசையைக் கொடுப்பது விமானத்தின் சொந்த எடை மற்றும் புவியீர்ப்பு விசைதான். பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிரிறியால் வருகிறது என்பது பலருக்குத் தெரியும். ஆனால் விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதான் உள்ளது. மேலே எப்படி எழும்புகிறது என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.

          உண்மையில் விமானத்தின் மேலெழும்பு விசையைத் தருவதும் அதே எஞ்சின்தான், சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம் மற்றும் காற்று ஆகிய மூன்றும்தான். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்குசக்தி உருவாகாது, விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது. விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது. காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது.

          விமானத்தின் இறக்கையை மிகவும் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல்நோக்கி வளைந்திருக்கும். கீழ்ப்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது. அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்.

          இந்த மேல்நோக்கிய வளைவு விமானம் பறப்பதற்கு மிகவும் உதவுகிறது. காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. கீழ்ப்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒருபுறம் அதிக காற்றழுத்தம் ஒருபுறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றழுத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி.

          விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவு உள்ளதாக இருக்கும்.  

          விமானத்தின் வேகம், விமானத்தின் மேலெழும்பு சக்தி ஆகியவற்றைக் கொடுப்பது, விமானத்தின் இஞ்சின்தான். அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.

          ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறதுஆனால் விமானத்தின் முன்செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு ஒருபோதும் வராது.

          விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால்கூட தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிக்கும்போது, சில ஓட்டு வீட்டு மேலேக் கூறைகள் பிய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணம் இதுதான். அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது. அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்கத் துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது என்பது எல்லாம் விமானத்திற்குப் பொருந்தாது.

          இந்த இறக்கை எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியைத் தாண்டி விண்வெளிக்குச் சென்றுவிட்டால் பறற்கு இறக்கை தேவைப்படாது.

விமானம் ஓட்டுதல் :

          ஜெசிக்கா காக்ஸ் எல்லா விளையாட்டுகளையும் கால்களால் மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள் ஆழ்த்தினார். கால்களால் கார் ஓட்டுவதை எல்லாம் கடந்து அதைவிட பெரிய சாதனை படைக்க வேண்டும் என மன உறுதியுடன் இருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனடியாக அவர் டக்சன் நகரில் உள்ள விமானப் பயிற்சி மையத்திற்குச் சென்று தனது விருப்பத்தைக் கூறினார். கைகள் இல்லாமல் விமானத்தை ஓட்ட முடியாது என பயிற்சி நிறுவனத் தலைவர் கூறினார். ஆனால் ஜெசிக்கா தனது சொந்தக்காரை தானே ஓட்டிக் கொண்டு வந்தார் என்பதை அறிந்ததும் ஆச்சரியம் அடைந்தார். அவர் கார் ஓட்டுவதை நிறுவனத்தினர் நேரில் பார்த்தனர். அவர் காரை திறமையாக ஓட்டுவதைக் கண்டனர். கைகள் இல்லாத பெண் விமானம் ஓட்ட ஆசைப்படுவதைக் கண்டு வியந்தனர். அவரின் தைரியத்தையும், ஆர்வத்தையும் பாராட்டினார்கள். ஜெசிக்காவிற்கு விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி கொடுக்க முன் வந்தனர்.

          ஜெசிக்காவிற்கு விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி கொடுப்பதற்கு ஏற்ற விமானம் இல்லை. ஏனென்றால் தற்போது இருக்கும் விமானங்கள் கால்களால் இயக்கும் வசதிகள் இல்லாமல் இருந்தன. 1945-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிக்காவின் பயிற்சிக்குப் பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டது. இவருக்கு ஆபிள் ப்ளைட் (Able Flight) நிறுவனம் விமானப் பயிற்சிக்கான உதவித் தொகையை வழங்கியது.

          ஆபிள் ப்ளைட் நிறுவனம் ஒரு தன்னார்வ அமைப்பு, இது லாப நோக்கில் செயல்படவில்லை. சிறிய இஞ்சின் பொருத்தப்பட்ட விமானத்தின் மூலம் ஓட்டுனர் பயிற்சி அளிக்கவும், பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறது. சில விமானிகள் ஒன்று சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளனர். உடல் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் சேவை புரிகின்றனர்.

          ஆபிள் ப்ளைட் வருடத்திற்கு இரண்டு முறை உதவித்தொகை வழங்குகிறது. பிராட் ஜோன்ஸ் என்பவர் பயிற்சி எடுக்கச் சென்ற 6 மாதத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் தினமும் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பயிற்சியில் ஈடுபட்டதை கண்ட பெற்றோர்கள் கண் கலங்கினர். ஆனால் மன உறுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டு ஒரு பைலட் ஆனார். அவரது கதையைக் கேட்டு பலர் தன்னம்பிக்கை பெற்றனர். இது ஜெசிக்கா காக்ஸிற்கு ஒரு உந்துதலாகவும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

          கைகள் இல்லாத ஜெசிக்கா காக்ஸிற்கும் ஆபிள் ப்ளைட் நிறுவனம் உதவி செய்தது. காயமடைந்த வீரர்கள், பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்தவர்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் என பலர் வானில் பறப்பதற்கும், பைலட் பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஆபிள் ப்ளைட் நிறுவனம் உதவுகிறது. இறக்கைகளுக்கு இடையே AF என்கிற சின்னத்தை அவர்கள் பொறித்து வைத்துள்ளனர். ஆபிள் பைலட் உதவித்தொகை பெற்று விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றவர்கள் இந்தச் சின்னத்தை அணிந்து கொள்கின்றனர். தங்களாலும் விமானத்தை ஓட்ட முடியும் என்பதன் பெரிய கொடையாக இந்த சின்னத்தை பைலட்டுகள் கருதுகின்றனர்.

          ஊனமுற்றோர்கள் தங்கள் திறன் மூலம் விமானம் ஓட்டி தங்களது திறமையை நிரூபிக்க முடியும். தங்கள் திறமை மூலம் வெற்றியை எட்ட முடியும் என்பதற்காக பல ஊனமுற்றவர்க்கு பயிற்சி அளிக்கின்றனர். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர். இந்த வகையில் கைகள் இல்லாத ஜெசிக்கா காக்ஸ் தனது விமானம் ஓட்டும் பயிற்சியை எடுத்துக் கொண்டார். உடல் ஊனமுற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட்டாலும் இரண்டு கைகளும் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டது ஜெசிக்கா காக்ஸ் மட்டுமே.

          ஜெசிக்காவின் பயிற்சியாளராக பாரிஷ் டிராவிக் (Parrish Traweek) என்பவர் இருந்தார். ஜெசிக்காவிற்கு ஏற்றாற்போல ஒரு விமானம் தயார் செய்யப்பட்டு அதில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜெசிக்கா தனது உயிரையும் பணயம் வைத்து 3 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டார். 3 ஆண்டிற்குமான பயிற்சிக் கட்டணத்தை உதவித் தொகையாக ஆபிள் ப்ளைட் நிறுவனம் கொடுத்து உதவியது. இவருக்கு நான்கு விமானங்களில் இரண்டு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. புளோரிடா, கலிபோர்னியா, அரிசோனா ஆகிய மூன்று மாநிலங்களில் 89 மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

          மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு ஜெசிக்கா விமானம் ஓட்டுநர் உரிமத்தை 2008ஆம் ஆண்டு, அக்டோபர் 10 அன்று பெற்றுக் கொண்டார். உலகில் இரு கைகளும் இல்லாமல் விமானம் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் விமானி என்கிற பெருமையைப் பெற்றார். இரு கைகளும் இல்லாத உலகின் முதல் பெண் விமான ஓட்டி என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இரு கைகளும் இல்லாத உலகின் முதல் பெண் விமானி ஜெசிக்கா காக்ஸ் மட்டும்தான். இது ஜெசிக்கா காக்ஸின் ஒரு சாதனையே.

மாடல் 415C :

          ஜெசிக்கா காக்ஸ் 1946-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Ercoupe 415C என்கிற விமானத்தை ஓட்டி ஓட்டுநருக்கான பைலட் உரிமத்தைப் (Pilot’s License) பெற்றார். ERCO (Engineering and Research Corparation) என்கிற விமானம் அமெரிக்காவில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு வடிவமைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து பல மாற்றங்கள் யுத்தத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானத்தை முதன் முதலில் வடிவமைத்தவர் ஃபிரட் வெய்க் (Fred Weick) என்பவராவார். முதன்முதலாக 1937ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. Ercoupe 415C என்கிற விமான மாடல் 1946இல் உருவாக்கப்பட்டது. இது எடை குறைவான விமானம். இதன் நீளம் 6.32 மீட்டர், உயரம் 1.8 மீட்டர் (6 அடி), இடைவெளி 9.14 மீட்டர். இதன் வெற்று எடை 320.2 கிலோ கிராம். மொத்த எடை 571.54 கிலோ கிராம். இந்த விமானத்தின் பயண வேகம் பணிக்கு 176.99 கி.மீ., அதே சமயத்தில் இதன் அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 204.34 கி.மீ. ஆகும்.

          இந்த விமானம் மிகவும் எளிதாக பறக்கும் தன்மை கொண்டது. அதே சமயத்தில் மிகவும் பாதுகாப்பானது. இந்த விமானத்தை எளிதில் இயக்கவும், நன்றாக பராமரிக்கவும் முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொழில்முறை விமானிகள் இலக்காக இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இந்த விமானம் மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி செல்ல வரையறுக்கப்பட்ட டிகிரியில் செல்ல சுழல் ஆதாரம் (Spin - proof) இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

          இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட விமானங்கள் உற்பத்தி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் அலுமினியம் கிடைக்காததால் மரப்பலகைகளைக்கொண்டு தயாரித்தனர். அப்போது விமானத்தின் எடை அதிகமாக இருந்தது. ஆகவே இது விமானப்படை வீரர்களின் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

          அலுமினியம் 1946ஆம் ஆண்டுகளில் கிடைக்கப் பெற்றதால் 5000 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 1951ஆம் ஆண்டில் கொரிய போர் ஏற்பட்டதால் விமானம் தயாரிப்பது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு கம்பெனிகள் வெவ்வேறு பெயர்களில் இந்த விமானத்தை தயாரித்து பல்வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினர். இந்த வகை விமானங்கள் தயாரிப்பு என்பது 1970ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. Erco 415C என்'fe'feகிற மாடல் விமானம் தற்போது அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை :

          கிளன் டேவிஸ் (Glen Davis) என்கிற பயிற்சியாளர் முதலில் ஜெசிக்காவிற்குப் பயிற்சி கொடுத்தார். தனியாக விமானம் ஓட்டுவதற்கு முன்புவரை அவர் உடன் இருந்து பயிற்சி கொடுத்தார். கிளன் டேவிஸ் என்பவர்தான் ஜெசிக்காவின் முதல் பயிற்சியாளராக இருந்தார். பாரிஷ் டிராவிக் தலைமைப் பயிற்சியாளராக இருந்து ஜெசிக்காவிற்குப் பயிற்சி கொடுத்தார்.

          ஒரு விளையாட்டு விமானத்தை ஓட்டுவதற்கான மருத்துவ தகுதிகள் அனைத்தும் ஜெசிக்காவிற்கு இருந்ததும் ஒரு விமானத்தின் எடை, வேகம் மற்றும் அதன் பறக்கும் திறன் ஆகியவற்றை ஒரு விமானி முதலில் தெரிந்திருக்க வேண்டும் என்பது விதி. அந்த விதிமுறைகளை ஜெசிக்கா முதலில் கற்றுக்கொண்டார்.

             

          ஜெசிக்கா தன்னுடைய பிரச்சனைகளை அறிவுபூர்வமாக சிந்தித்து அதனை சரிசெய்து கொள்கிறார். புதிய யுக்திகளை பின்பற்றுகிறார். அவருக்கு முதல் சவலாக இருந்தது என்னவென்றால் விமானத்தின் உள்ளே சென்றவுடன் இருக்கையுடன் இருக்கும் பெல்ட்டை எப்படி போடுவது என்பதுதான். பெல்ட்டில் உள்ள கொக்கி (Buckle) எப்படி பொருத்துவது அல்லது இணைப்பது என்பது ஒரு பிரச்சினை. அவர் தனது சிந்தனைத் திறனால் மிகவும் எளிதாக அப்பிரச்சினையை தீர்த்துக்கொண்டார். உட்காருவதற்கு முன்பு சீட் பெல்ட்டின் கொக்கிகளை காலின் மூலம் பூட்டினார். பிறகு பெல்ட்டின் தோல் வாரை தளர்த்தினார். இருக்கையின்மீது நின்று பின்னர் சறுக்கியபடியே சீட் பெல்ட்டின் உள்ளே கால்களை நுழைத்தார். தனது வலது காலைக்கொண்டு சீட் பெல்ட்டை இறுக்கினார். அது அவரின் இடுப்பைச் சுற்றி பாதுகாப்பு அரணாக மாறியது

             

 

          ஜெசிக்கா விமானத்தில் அமர்ந்த பிறகு தனது ஹெட்செட்டை தனது காலின் உதவியால் காதோடு மாட்டிக்கொண்டார். அதற்கும் அவர் சரியாக பயிற்சி எடுத்திருந்தார். அவரின் கால் தலைவரை சென்றது. இருக்கையில் அமர்ந்த பிறகு அவரின் பார்வைக்கு ஏற்றவாறு கழுத்துப் பகுதி கண்ணாடிக்கு எதிராக இருந்தது. பயிற்சியாளர் அருகில் இருந்தபடியே விமானத்தை ஓட்டி வந்தார்.

          

 

          நீண்ட கால பயிற்சிக்குப் பின்னர் ஜெசிக்கா தனியாக விமானத்தை ஓட்டும் அளவிற்கு தகுதியும், திறமையும் கொண்டவராக மாறினார். அன்னையர் தினமான மே 11 அன்று ஜெசிக்கா விமானத்தை தனியாக ஓட்டினார். முதலில் விமானத்தின் உள்ளே நுழைந்து விமானத்தின் இரு கண்ணாடி சர்ட்டர்களையும் தனது காலால் மூடினார். பின்னர் இருக்கை பெல்ட்டையும், ஹெட்செட்டையும் மாட்டிக் கொண்டார். தனது காலால் விமானத்தை ஸ்டார்ட் செய்தார். விமானம் ஓடுதளத்தில் ஓடியது. பிறகு விமானத்தை மேலே எழும்படி செய்தார். காலால் விமானத்தின் ஸ்டீரியங்கை சுழற்றி உயரே பறந்தார். உயரே பறந்த ஜெசிக்கா பிறகு பத்திரமாக தரை இறங்கினார். தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

          விமானம் 6 உயரம் கொண்டது. ஜெசிக்கா 5.1 அடி உயரம் கொண்டவர். அவர் தனியாக பலமுறை விமானம் ஓட்டினார். அதன் பிறகு அவருக்கு அக்டோபர் 10, 2008ஆம் ஆண்டில் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் கிடைத்தது. விமானத்தை கால்களால் ஓட்டியே விமானம் ஓட்டுவதற்கான விமானி உரிமத்தைப் பெற்றார்.

          கடும் பயிற்சிக்குப் பிறகு மிகவும் லாவகமாகவும், கவனமாகவும் கால்களாலேயே விமானத்தை ஓட்டுகிறார். இது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பிரமிப்பூட்டும் செயலாகவே உள்ளது. இது உயிரை பணயம் வைத்து செய்யக்கூடிய சாதனை முயற்சி என்று கருதிவிட முடியாது. அவர் விமானத்தில் 10 ஆயிரம் அடி உயரம்வரை பறந்து சாதனையும் புரிந்துள்ளார். இந்த உயரத்தை கால்கள் மூலம் ஓட்டிய ஒரே நபர் என்கிற சாதனையையும் படைத்தார். கால்களால் அதிக உயரம் ஓட்டி சாதனை படைத்ததற்காக இவர் கின்னஸ் புத்தகத்திலும் தனி இடம் பிடித்தார். விமான ஓட்டும் வரலாற்றிலேயே கைகள் அல்லாது காலில் விமானம் ஓட்டிய முதல் பெண், முதல் பைலட் என்கிற பெருமையைப் பெற்றார். விமானம் ஓட்டுதல் வரலாற்றில் தனக்கு என்று இடத்தைப் பிடித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை தனது 25 ஆவது வயதில் செய்துமுடித்தார்.

      

          நீ எதை செய்ய நினைக்கிறாயோ அதை உன்னால் செய்ய முடியும் என ஜெசிக்காவின் தாயார் அடிக்கடிக் கூறுவார். அதன்படி அவர் விமானத்தை ஓட்டியும் காட்டிவிட்டார். பயிற்சியாளர் பாரிஷ் டிராவிக் கூறும்பொழுது, ஜெசிக்கா எப்படி ஹெட்செட்டையும், இருக்கை பெல்ட்டையும் தானாக அணிவார் என்கிற சந்தேகமும், கவலையும் இருந்தது. ஆனால் அதனை ஜெசிக்கா மிக சாமார்த்தியமாக செய்துமுடித்தார். விமானத்தை ஒரு காலால் ஓட்டிக்கொண்டு, மறுகாலால் விமானத்தின் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். ஜெசிக்காவின் கால்கள் மிகவும் வலிமையானவை எனப் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார்.

          தனியாக முதன்முதலில் விமானத்தை ஓட்டும்போது அவர் T சர்ட் அணிந்திருந்தார். அதில் என்னை பார் அம்மா கைகள் இல்லை (Look mum, no hands) என எழுதி இருந்தது. விமானம் ஓட்டியபிறகு எனது கைகளை பாருங்கள் என விமானத்தைக் காட்டினார்.

          ஜெசிக்கா 150 மணி நேரம் விமானத்தை ஓட்டி இருக்கிறார். அவருக்கு மாலை நேரத்தில் விமானம் ஓட்டுவது என்பது மிகவும் பிடித்தமான நேரமாகும். சூரியன் மறைவதற்குச் சற்றுமுன்பு அரிசோனா மலைப்பகுதியில் பறப்பது நன்கு பிடித்தமானது. கீழ்வானம் சிவந்திருக்கும் அந்தப்பொழுதில் விமானத்தில் பறந்து வரும் காட்சி மிகவும் அழகானது.

திருமணம் :

          விமானம் ஓட்டிக் காட்டிய ஜெசிக்காவின் மற்றொரு கனவு திருமணம், அந்தக் கனவும் நிறைவேறிவிட்டது. இவரின் திருமணம் மே 12, 2012 இல் நடந்தது. டேக்வாண்டோ பயிற்சியாளரான பேட்ரிக் சேம்பர்லின் (Patrick Chamberlin) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பேட்ரிக் டேக்வாண்டோவில் 4 பட்டங்களைப் பெற்றவர். இவரும் ஜெசிக்காவும் இரண்டு ஆண்டுகள் நண்பர்களாக இருந்தனர்.

          ஜெசிக்காவை மே, 2010 இல் டேக்வாண்டோ பள்ளியில் பார்த்தார். கைகள் இல்லாமல் டேக்வாண்டோவில் ஜெசிக்கா ஈடுபட்டிருப்பதையும், கைகள் இல்லாமலே பல காரியங்களை செய்வதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார். நண்பராக பழகியதோடு, உணவிற்காக வெளியே அழைத்துச் சென்றார். ஜெசிக்காவிற்கு கைகள் இல்லை என்பதை வித்தியாசமாக பார்க்கவில்லை. எந்தவித குறைபாடும் இல்லாத பெண் என்ற நோக்கிலேயே ஜெசிக்காவை பேட்ரிக் பார்த்தார். இதுவே இருவருக்கும் காதலாக மலர்ந்தது.

          திருமணத்தின் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான திருமண உடையை ஜெசிக்கா அணிந்திருந்தார். இந்த உடையை பிலிப்பினோ என்பவர் வடிவமைத்திருந்தார். இவரின் திருமணம் ஜெயின்ட் ஆண்ட் ரேவ்ஸ் தேவாலாயத்தில் நடந்தது. திருமணத்திற்கு கைகள் இல்லாமல் பிறந்த மாணவிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜெசிக்கா  காக்ஸ் முன்மாதிரியான ரோல் மாடலாக இருந்தார் என்பதுதான் இதன் சிறப்பு.

              

 

          ஜெசிக்காவிற்கு மோதிரம் அணிவதற்குப் பதிலாக அவரது இடதுகாலில் தங்க கொலுசு அணிவித்தார். ஜெசிக்கா தங்க மோதிரத்தை தனது கால்விரலின் மூலம் பேட்ரிக்கின் மோதிர விரலில் அணிவித்தார். பேட்ரிக் திருமண கேக்கை வெட்டினார். ஜெசிக்கா ஒரு கேக் துண்டை தனது காலின் மூலம் எடுத்து அதனை தனது கணவருக்கு ஊட்டினார். அங்கு கூடி இருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர்.

          ஜெசிக்காவின் குடும்ப வாழ்க்கை தொடங்கிவிட்டது. அவர் உணவுகளை சமைத்து காலின்மூலம் கணவருக்கு பறிமாறுகிறார். பாத்திரங்களை தனது காலின்மூலம் சுத்தம் செய்கிறார். இது ஒரு சிறந்த பங்களிப்பு எனக்கூறி ஜெசிக்கா சிரிக்கவும் செய்கிறார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்படுகிறார். பத்து லட்சம் குழந்தைகளில் ஏதாவது ஒரு குழந்தை கைகள் இல்லாமல் பிறக்கிறது. அதுபோல் தன்னைப் போன்றே கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தாலும் அதற்காக கவலைப்படமாட்டேன். நான் மகிழ்ச்சியே அடைவேன் எனக் கூறுகிறார். குழந்தையை வளர்ப்பது சிரமமானது. ஆனால் நான் எனது கால்கள் மூலம் சந்தோசமாக குழந்தையை வளர்ப்பேன் என்றும் கூறி வருகிறார்.

பேச்சாளர் :

          மனச்சோர்வு அடைந்தவர்களுக்கும் மன வலிமை ஊட்டும் வகையில் கருத்தரங்கில் பேசி வருகிறார். அவர் தனது திறமையில் எப்போதும் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக கூறும்போது கூடி இருப்பவர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். உலகில் உள்ள 17 நாடுகளுக்குச்

சுற்றுப்பயணம் செய்து தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளார். இவரின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் பற்றி அறிந்த 16ஆம் போப் பெனடிக்ட், ஜெசிக்காவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்துப் பாராட்டி, ஆசி வழங்கியுள்ளார்.   

          ஜெசிக்காவின் தாயார் மிகவும் சுதந்திரமானவர். அதேபோல் ஜெசிக்காவை சுதந்திரமாகவே வளர்த்தார். அதிக பாதுகாப்பு என்பது தேவையில்லை என ஜெசிக்கா கூட்டத்தில் பங்கு கொண்டவர்களிடம் கூறிவந்தார். மனதில் சிறு கஷ்டம் இருக்கும்போது நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுகிறேன். இதனால் மனது புத்துணர்ச்சி அடைகிறேன். மனச்சோர்வு அடையும் சமயத்தில் வேறு சில செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மீண்டும் புத்துணர்ச்சி பெறமுடியும். ஆகவே துன்பத்தைக் கண்டு சோர்ந்துவிட வேண்டாம் என ஜெசிக்கா மற்றவர்களுக்கு தனது பேச்சாற்றல்மூலம் உத்வேகம் ஊட்டி வருகிறார்.

          அவர் செல்லும் கூட்டங்களில் எல்லாம் தனது சொந்தக் கதையைக் கூறுகிறார். தனது காலணியில் உள்ள சூலேசை (Shoe laces) தானே கட்டுவதற்காக மிகவும் சிரமப்பட்டார். சூலேசைக் கட்டுவதற்காக பலமுறை முயற்சி செய்தார். தொடர்ந்து போராடினார். அதனால் சூலேசைக் கட்டும் யுக்தியைக் கற்றுக்கொண்டு தனது கால்களால் கட்டினார். இதை சாதித்து விட்ட ஒரு வெற்றி அவருக்கு ஏற்பட்டது. நான் இதை சாதித்துவிட்டேன். தான் சிறுவயதில் சூலேசைக் கட்டுவதற்கு எப்படிக் கஷ்டப்பட்டேன் என்பதை கூடி இருந்தவர்களிடம் விளக்கினார். அதுதவிர இரண்டு காலணிகளில் சூலேசை கட்டிக் காட்டினார். காலணியில் முதலில் லேசைக் கட்டி முடித்தப் பின்னர் தனது காலை நுழைத்துக்கொண்டார். அவர் தனது காலின் பெருவிரல் மூலம் சூலேசைக் கட்டுவதைக் கண்டு பலர் ஆச்சரியம் அடைந்தனர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது பேச்சுதிறன் மூலம் விளக்கினார். இவரின் பேச்சைக் கேட்டு அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இவர் ஒரு சர்வதேசப் பேச்சாளர் என்கிற அளவிற்குப் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் பேச்சைக் கேட்ட பலர் இவரை பாராட்டுவதற்காக ஜெசிக்காவின் காலோடு காலை தட்டினர். கையைப் பிடித்து குழுக்க முடியாத காரணத்தால் காலில் தட்டி ஜெசிக்காவை உற்சாகப்படுத்தினர்.

          ஜெசிக்கா 2008ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் சென்றுள்ளார். அங்கு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை எப்படி திறம்பட சமாளித்தார் என்பதை விளக்கிப் பேசினார். இவர் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மட்டுமன்றி, சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தார். தான் எப்படி சாதனைகளை புரிந்தார் என்பதை விளக்கினார். அதுதவிர உலகப் பொருளாதார மன்றம் மற்றும் பென்டகனிலும் பேசியுள்ளார். மேலும் குறிப்பாக பதினாறாம் போப் பெனடிக் (Pope Benedict XVI) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா (Obama) ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சிஎன்என் (CNN) தொலைக்காட்சி நடத்திய தி எல்லன் நிகழ்ச்சியில் (The Ellen Show) கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளார்.

          அரங்கக் கூட்டங்களில் சொற்பொழிவு முடிந்தப் பிறகு சிலரை சந்திக்க தனது நேரத்தை ஒதுக்குகிறார். ஊனமுற்றவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அறிவுரை வழங்குகிறார். கனவுகளை பெரியதாக காணுங்கள் என்றே கூறுகிறார். தன்னுடைய சொல்லகராதியிலிருந்து இரண்டு வார்த்தைகளை வெளியேற்றி விட்டேன் எனக் கூறுகிறார். முடியாது மற்றும் தோல்வி என்பதே அந்த வார்த்தைகள். என்னால் முடியாது என நீங்கள் இந்த வார்த்தையைக் கூறினால், நீங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார். அவர் ஊனமுற்ற நபர்களுக்கான வாய்ப்பின் முக்கியத்துவத்தை விளக்கிக்காட்டி, தன்னை சந்தித்தவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டி அனுப்புகிறார்.

சேவை :

          ஜெசிக்கா ஒரு விருந்தில் தனது நண்பர் மைகா பெவிங்டன் (Mica Bevington) என்பவரை சந்தித்தார். அவர் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஊனமுற்றோர் சர்வதேசம் (Handicap International) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பில் பணிபுரிந்து வருகிறார். ஊனமுற்றோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தரும் நோக்கில் உலகம் முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைப் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் ஜெசிக்காவிடம் நண்பர் விளக்கினார். இந்த அமைப்பு உலகம் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஜெசிக்கா உணர்ந்தார். இந்த அமைப்பு உலகின் 60 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. எத்தியோப்பியாவில் ஊனமுற்ற குழந்தைகளுக்காக கல்விச் சேவையை சர்வதேச ஊனமுற்றோர் அமைப்பு செய்து வருகிறது. அதுதவிர உலகளவில் 20 நாடுகளில் கல்விச் சேவையை செய்து வருகிறது.

          எத்தியோப்பியாவில் 2.4 முதல் 4.8 மில்லியன் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 3 சதவீதமான குழந்தைகள் மட்டுமே பள்ளிக்குச் செல்கின்றனர். வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் 98 சதவீதமான ஊனமுற்றக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கை கூறுகிறது. எத்தியோப்பியாவில் ஊனமுற்ற குழந்தைகளில் ஒரு சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்

         

          ஜெசிக்கா எத்தியோப்பியாவில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்காக சேவை செய்ய, உழைக்க ஆசைப்பட்டார். சர்வதேச ஊனமுற்றோர் அமைப்பின் லட்சியத்தை எத்தியோப்பியாவில் நிறைவேற்ற ஜெசிக்கா முன் வந்தார். தன்னுடைய வாழ்க்கை கதையை குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டார். குறைபாடுகள் இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.

          எத்தியோப்பியாவில் சர்வதேச ஊனமுற்றோர் அமைப்பின் கல்வித் திட்டத்தின்படி 6 முதன்மை பள்ளிகள் நடந்து வருகின்றன. இயலாமை - நட்பு பள்ளிகள் என்கிற மாதிரி பள்ளிகளாக அவை நடத்தப்படுகின்றன. ஊனமுற்ற குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள், ஆசிரியர்கள், சர்வதேச ஊனமுற்றோர் அமைப்பின் ஊழியர்கள் ஆகியோர்களிடம் நேரடியாக ஜெசிக்கா பணிபுரிந்தார். அரசு அதிகாரிகள், மற்றும் மக்களிடம் கருத்துகள் பரவும் வகைகளில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும், தன்னுடைய சாதனையைப் பற்றியும் பேசினார். ஊனமுற்றோர்கள் கல்வி கற்பது சாத்தியம் என்பதை வலியுறுத்தினார்.

          ஜெசிக்காவிற்கு கைகள் இல்லாததால் மற்றவர்களைவிட மாறுபட்டு இருந்தார். அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவிலிருந்து எத்தியோப்பியா செல்லும் அமெரிக்க பார்வையாளர்களைவிட ஜெசிக்காவை எத்தியோப்பிய மக்கள் தொட்டுப் பேசினர். தொலைக்காட்சி மற்றும் ரேடியோ பேட்டியின் மூலம் சுமார் 4.5 கோடி மக்கள் ஜெசிக்காவை பார்த்திருந்தனர். அதனால் அவர் செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடியது. பள்ளிகளுக்குச் செல்லும்போது அவரைச் சுற்றி குழந்தைகளும், பெற்றோர்களும் கூடி நின்றனர். அவர்களிடம் நேரடியாக பேச முடிந்தது. அதனால் ஜெசிக்கா சொல்லும் ஆலோசனைகளை பலர் கேட்டனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களை சந்தித்து கேட்டுக்கொண்டார்.

          ஊனமுற்ற குழந்தைகளின் முகத்தைக் கண்டு ஜெசிக்கா மனம் வருந்தினார். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். சர்வதேச ஊனமுற்றோர் கல்வித் திட்டத்தின் கீழ் ஜெசிக்கா அப்டீஸா பள்ளி என்பதை துவக்கி அதில் மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுத்தார். அவர் தனது காலின் மூலம் கரும்பலகையில் எழுதினார். பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். இவரின் வேண்டுகோளை ஏற்று பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

விருதுகள் :

   ஜெசிக்காவிற்கு பல்வேறு அமைப்புகள் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

D விமானம் ஓட்டுவதற்கான சான்றிதழ்.

D 2013ஆம் ஆண்டில் அமெரிக்கா டேக்வாண்டோ கழகம் வழங்கிய பயிற்சியாளர் சான்றிதழ்.

D விமானம் மற்றும் பைலட் இதழ் சார்பாக 10 சிறந்த விமானிகளில் ஒருவராக ஜெசிக்கா காக்ஸ் 2013ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது 2013 இல் வழங்கப்பட்டது.

D இங்கிலாந்து நாட்டில் பெண்களை உத்வேகப்படுத்துவதற்காக சர்வதேச இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்படுகிறது. சாதனை படைக்கும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்து நாடு ஜெசிக்காவிற்கு சர்வதேச இன்ஸ்பிரேஷன் விருதினை 2013ஆம் ஆண்டு வழங்கியது.

D பெண்களுக்கான இன்ஸ்பிரேஷன் விருதான மோஸ்ட் ஆஸ்பிரேஷனல் என்கிற விருதினை நவம்பர் 2012 இல் பெற்றார்.

D கின்னஸ் உலக சாதனை விருதினை கால்களால் விமானம் ஓட்டியதற்காக மார்ச் 2011இல் பெற்றார்.

D ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கன் புதிய தலைமுறை ஹீரோக்கள் என்கிற வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஃபிலிப்பைன்ஸ் மக்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் உலகளவில் செயல்படுபவர்களுக்கான விருதினை ஃபிலிப்பைன்ஸ் வழங்கி வருகிறது. சான்பிரான்சிஸ்கோ ஃபிலிப்பைன்ஸ் பொது தூதரகம் ஜெசிக்காவிற்கு ஜுன் 2012இல் சிறந்த சேவைக்கான சான்றிதழ் விருதினை வழங்கியுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் மக்களுக்கு கலங்கரை விளக்கமாக விளங்குபவர்களுக்காக இந்த விருதினை வழங்குகிறார்கள். உலகம் முழுவதும் ஃபிலிப்பைன்ஸ் மக்களை ஊக்கமூட்டும் சக்தியாக மாற்ற பாடுபவர்களை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

D தி ஃபிலிப்பைன்ஸ் அமெரிக்கன் இதழின் சார்பாக சிறந்த ஃபிலிபினோ விருது மே 2008ஆம் ஆண்டில் ஜெசிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

D அமெரிக்காவில் 100 மிகவும் செல்வாக்குள்ள ஃபிலிப்பைன்ஸ் பெண்கள் என்கிற பட்டியலில் ஜெசிக்கா இடம் பெற்றுள்ளார். ஃபிலிப்பினோ மகளிர் நெட்வொர்க் 100 சிறந்த பெண்மணிகளை தேர்வு செய்து விருதினை வழங்கியுள்ளது.

D அதிகம் பார்க்கப்பட்ட பெண் விமானியாக ஜெசிக்கா கருதப்படுகிறார். இதற்காக விமானிகள் சாய்ஸ் விருது 2010ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

D    பெரு நகர கல்வி ஆணைக்குழு சார்பாக 2001ஆம் ஆண்டில் கிரிஸ்டல் ஆப்பிள் விருது ஜெசிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

          இதுதவிர வேறு பல விருதுகளையும், சான்றிதழ்களையும் பாராட்டுகளையும் ஜெசிக்கா காக்ஸ் பெற்றுள்ளார். இவரை ஏரோ கிளப், சிசு கிளப், ரோட்டரி கிளப், டஸ்கன் என்ற ஃபிலிப்பைன்அமெரிக்கன் கிளப், விமானிகள் சங்கம் என பல அமைப்புகள் இவரின் திறமையை பாராட்டியுள்ளன.

ஆவணப்படம் :

          ரைட்புட்டேடு (Right Footed) என்கிற ஆவணப்படத்தை நிக் ஸ்பார்க் (Nick Spark) என்பவர் தயாரித்துள்ளார். இவர் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்யக்கூடிய திறமையான படத்தயாரிப்பாளர். இவரின் சமீபத்திய படம் புகழ்பெற்ற பெண் பைலட் புளோரன்ஸ் பான்கோ பர்ன்ஸ் பற்றிய வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டது. இந்தப் படத்தின் பெயர் The Legend of pancho Barnes என்பதாகும். இப்படம் எம்மி அவார்டு என்கிற விருதினைப் பெற்றுள்ளது.

       

 

          ஜெசிக்கா காக்ஸின் வாழ்க்கை சம்பவங்களை காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்டு ஆவணப்படத்தை நிக் ஸ்பார்க் தயாரித்துள்ளார். ஒரு பெண்ணின் தைரியம், உறுதிப்பாடு, காதல், வீரம் மற்றும் தன்னம்பிக்கையைப் பற்றி கதை சொல்கிறது. பிறக்கும் போதே கடுமையான பிறவிக் குறைபாடுகளுடன் கைகள் இல்லாமல் பிறந்த ஜெசிக்கா ஒரு திறமையான தற்காப்புக் கலைஞர், கல்லூரி பட்டதாரி, ஊக்கமூட்டும் பேச்சாளர், கால்களால் விமானம் ஓட்டும் ஒரு பைலட், ஊனமுற்றோர்க்கு வழிகாட்டி என பல்வேறு வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது அற்புதமான உண்மைக் கதை. மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட படம்.

          அமெரிக்கா தவிர உலகம் முழுவதும் பார்க்ககூடிய படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை குழுகுழுவாகவும், குடும்பம் குடும்பமாகவும், குழந்தைகளும் பார்த்து உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் நோக்கம் மற்றவர்களை ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்துவதுமே ஆகும். கடுமையான உடல் குறைபாடு உள்ள பெண் யாரும் நம்ப முடியாத அளவிற்கான சாதனைகளை செய்துவருவதை விளக்கும் ஆவணப்படமாக இது வெளிவந்துள்ளது. இது அனைவரையும் ஊக்குவிக்கும்  உலகளாவிய கதை. இது ஊனமுற்றவர்களிடம் மகத்தான மாற்றத்தை உருவாக்கக்கூடிய படம்.

          இந்தப் படம் லாப நோக்கில் தயாரிக்கப்படவில்லை. எத்தியோப்பியாவில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. Right fooded ஆவணப்படத்தை பார்த்துவிட்டு நிதி அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். ஜெசிக்காவின் ஆவணப்படத்தை இணைய தளத்தில் www.rightfooded.com இல் பார்க்கலாம்.

நிதி :

          ஜெசிக்கா காக்ஸ் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தனது கணவருடன் 2013ஆம் ஆண்டு சென்றிருந்தார். உடல் ஊனமுற்றவர்களின் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்விற்காக நிதி வழங்கினார். ஜெசிக்காவின் தாயார் பிறந்த நாடு ஃபிலிப்பைன்ஸ். தாயார் பிறந்த குய்யன் (Guiuan) என்னுமிடத்திற்கும் சென்றார். தன்னுடைய உறவினர்களையும் சந்தித்தார். ஜெசிக்கா உலகளவில் பிரபலமான பெண்ணாக விளங்குகிறார். அவரின் உடல் குறைபாட்டால் அல்லாமல் தனது சாதனை மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு செய்யும் சேவை மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார்.

          மனிலா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் ஜெசிக்காவை சந்தித்தனர். என்னுடைய தன்னம்பிக்கையின் காரணமாக நான் வளர்ச்சியடைந்தேன், சாதித்தேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் மற்றவர்களுக்கு ஊக்கத்தையும், தன்னம்பிக்கையை ஊட்டவும் பயன்படுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தப் பயணம் எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது எனப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

          ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரையும் சந்தித்து நிதி திரட்டினார். டைப்பூன் சூறாவளியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஊனமுற்றோருக்கு தன்னம்பிக்கையை ஊட்டினார். டைப்பூனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். நிதி சேகரித்து வழங்கினார். ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் 17 நாட்கள் தங்கி இருந்தார். அவருடன் சென்ற குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தனர்.

பயத்தை விடுங்கள் :

          சிஎன்என் (CNN) தொலைக்காட்சி நிரூபரான நிக்கோல் லேபின் என்பவர் ஜெசிக்கா காக்ஸை சந்தித்தார். ஜெசிக்கா எப்படி தன்னுடைய தடைகளைக் கடந்து வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு முன்னேறினார் என்பதை கேட்டுத் தெரிந்துக் கொண்டார். ஜெசிக்காவிடம் பல கேள்விகளையும் கேட்டார். அதற்கு ஜெசிக்கா தயங்காமல் பதில்களை கூறினார்.

          ஜெசிக்காவின் தந்தை ஜெசிக்கா ஊனமாக பிறந்ததைக் கண்டு கண்ணீர் சிந்தவில்லை என தன்னிடம் கூறியதாக நிருபர் தெரிவித்தார். ஆம். அவர் என்னை ஒரு குறைபாடு உள்ள குழந்தையாகவே பார்க்கவில்லை. எனது தந்தை ஒருமுறைகூட ஜெசிக்கா ஊனமுற்றவர் எனக் கூறியதே கிடையாது. அதனால்தான் ஊனமுற்றவர் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியதே கிடையாது என ஜெசிக்கா பதில் அளித்தார். குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊனமுற்ற பார்வையில் பார்க்காமல் வளர்த்தாலே அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல் கவலை இன்றி வாழலாம்.

          உங்களை வானில் பறக்கத் தூண்டியது யார் எனக் கேட்டதற்கு நான் பறப்பதற்கு பயந்தேன். ஒருமுறை எலியனர் ரூஸ்வெல்ட் (Eleanor Roosevelt) கூறியதாவது, உங்களுடைய மிகப்பெரிய பயம் எது என்று கண்டுபிடியுங்கள். பிறகு அதை நோக்கி நேராக மோதுங்கள். அப்போது உங்கள் பயம் ஓடிவிடும் என்றார். ரூஸ்வெல்ட்டின் வார்த்தையை படித்த பிறகு பயம் என்பது ஓடிவிட்டது. முதலில் போர் விமானி என்னிடம் வந்து பறக்க விரும்புகிறீர்களா எனக் கேட்டார். நான் உடனே பதில் கூறவில்லை. ஏனென்றால் எனக்கு அப்போது பயம் இருந்தது. அவருடன் சேர்ந்து பறந்தபோது எனக்கு பறக்க வாய்ப்பு கிடைத்ததைக் கண்டு மகிழ்ந்தேன். பிறகு விமானத்தை ஓட்ட வேண்டும் என்கிற ஆசை பிறந்தது.

          நான் மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து முழுவதும் மாறுபட்டே இருக்கிறேன். இதுதான் எனது வாழ்க்கை என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். நான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க விரும்பவில்லை. நான் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளவே விரும்புகிறேன். நான் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனை பயனுள்ள வகையில் செலவிடவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை என்பது முழுக்க மாறுபட்டது. அதனை நான் முழுமையாக மகிழ்ச்சியுடன் ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறேன்.

          இளம் தலைமுறைக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என நிக்கோல் லேபின் கேட்டார். மிக முக்கியம் பயத்தை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். பயத்தை தூக்கி எறிந்துவிட்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுங்கள். எனக்குள் இருந்த பயத்தை தூக்கி எறிந்ததால்தான் விமானத்தை ஓட்ட முடிந்தது. மூனரை ஆண்டுகள் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு தனியாக விமானம் ஓட்டினேன். தற்போது என்னால் தனியாக விமானத்தில் எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும். தன்னம்பிக்கையுடன் இருந்தால் பயத்தை வென்றுவிடலாம். தற்போதும் எனக்குள் சிறிது பயம் உள்ளது. ஆனால் அது எனது நல்லதுக்கு தான் என்பதை நான் அறிகிறேன். ஆகவே பயத்தை துரத்தி விரட்டுங்கள், அப்போது வெற்றி நம்மைத் தேடிவரும் என ஜெசிக்கா காக்ஸ் தனது பேட்டியில் இளைஞர்களுக்கு ஆலோசனை கூறினார்.

அபூர்வ பெண் :

          பெரும்பாலான மக்கள் தங்களின் கைகளில் எதையெல்லாம் சாதித்தார்களோ அதனை தனது கால்களில் மூலம் மிகச் சாதாரணமாக செய்து முடித்தார். இன்னும் சொல்லப்போனால் கைகளால் மட்டுமே செய்து முடிக்கக்கூடிய வேலைகளைக்கூட காலால் செய்து முடித்தார். இவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவராக இருந்ததன் காரணமாகவே இவரால் பல சாதனைகளை செய்து முடிக்க முடிந்தது. இரண்டு கால்களின் மூலம் அனைத்துக் காரியங்களையும் செய்துமுடிக்கிற ஜெசிக்காவிற்கு நான்கு கால்கள் இருந்தாலும் அந்த நான்கு கால்களையும் பயன்படுத்தி மேலும் பல சாதனைகளை படைப்பார் என பலர் அவரை மிகைப்படுத்திக் கூறுகின்றனர். அந்தளவிற்கு அவர் திறமை படைத்தவர்.

          ஜெசிக்கா விளையாட்டுகளின்மீது ஆர்வம் கொண்டிருந்தார். எந்த விளையாட்டாக இருந்தாலும் தன்னால் விளையாட முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தனது பெரும்பாலான நேரத்தை ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டார். அவர் எதற்கும்  கவலைப்பட்டது இல்லை. அவர் ஒரு சான்றிதழ் பெற்ற ஸ்கூபா டைவர். ஜெசிக்காவின் வாழ்க்கையை கவனித்தால் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது. அவர் மிகப் பெரிய சாதனைக்குச் சொந்தக்காரர். தனது வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் முழு நிறைவு பெற்றதாக, அர்த்தமுள்ளதாகவே ஆக்கியுள்ளார். அவர்தன் வாழ்நாள் முழுவதும் எதையாவது சாதித்துக்கொண்டே இருப்பார்.

          தனது வாழ்க்கை கவலை தருகிறது என்று ஜெசிக்கா கூறியது கிடையாது. அவர் மற்றவர்களின் கவலையை போக்கும் ஒரு சிறந்த தன்னார்வ தொண்டராகவும், தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளராகவும் விளங்கி வருகிறார். ஜெசிக்கா அதிகமாகவே உழைக்கிறார். தனது நேரத்தை ஊனமுற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடுகிறார். தன்னால் முடியாது என்பதை ஒருபோதும்  ஏற்றுக் கொள்வதில்லை. முடியாது என்கிற வார்த்தையை சொல்லகராதியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

          ஜெசிக்காவிற்கு இயலாமை என்கிற  உணர்வே மறைந்து போனது. ஊக்கப்படுத்துவதன்மூலம் பெரியபெரிய காரியங்களை கூட செய்து முடிக்கலாம். அவர் இதுவரை வாழ்ந்த காலம்கூட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது. வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பிடிப்பார்.

          பல்வேறு சாதனைகளை படைத்துவரும் ஜெசிக்கா காக்ஸை ஒரு அபூர்வ பெண் என்று அழைக்கலாம். அவர் ஒரு புதுமை பெண். வானில் பறந்த அவரை சாதனைப் பறவை என்று சொல்லலாம். ஆனால் அவர் தன்னை சாதனை பறவை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. தான் ஒரு சாதாரண பெண் என்றே தன்னடக்கத்துடன் கூறுகிறார். ஆணுக்கு நிகராய் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில் ஜெசிக்காவும் நட்சத்திரமாக மின்னுகிறார்.    

Reference :

1. இணைய தளங்கள்

2. Day Tamil

3. விமானம் எப்படி பறக்கிறது (அறிவியல் கட்டுரை) - கண்ணன்

4. www.rightfooded.com

5. www.ullatchithagaval.com

 

H H H H H