இலவச‌ மின் காலாண்டிதழ்

| இதழ் : 1 | பொங்கல் - 2015 |


ஆசிரியர்

சி. சரவணகார்த்திகேயன்


ஆலோசனைக்குழு

. பார்வதி யமுனா

இரா. இராஜராஜன்


வடிவமைப்பு

மீனம்மா கயல்


அட்டை ஓவியம்

பிரசன்ன குமார்


கௌரவ‌ ஆலோசனை

சௌம்யா

ஜெகன்


தொடர்புக்கு

மின்னஞ்சல் – [email protected]

வலைதளம் - http://tamizmagazine.blogspot.in/

அலைபேசி - +91 98803 71123


*


கதை, கவிதைகளில் வரும் பெயர்களும், நிகழ்வுகளும் கற்பனையே. கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் அதை எழுதுபவரின் சொந்தக் கருத்துக்களே. படைப்புகளின் உரிமை அந்தந்த ஆசிரியர்களையே சேரும்.


*


பொங்கல் - 2015 இதழ் சமர்ப்பணம்

காலச்சுவடு இதழின் நிறுவனர்

அம‌‌ரர் சுந்தர ராமசாமி அவர்களுக்கு


*

உலகம் யாவையும்…


ஒரு சஞ்சிகை தொடங்க வேண்டும் என்பது ஒரு தசாப்தத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் கனவு. கல்லூரி தினங்களில் நானும் நண்பன் இரா.இராஜராஜனும் 'தமிழ்' என்ற பெயரில் ஓரிதழ் தொடங்க முயன்றோம். அப்போதைய எங்கள் பொருளாதார மற்றும் அனுபவ‌ பலம் அதற்குச் சாதகமாய் இல்லை. இடைப்பட்ட காலம் கொணர்ந்த‌ மாற்றங்கள் இன்று ‘தமிழ்’ என்ற இந்த மின்னிதழைச் சாத்தியமாக்கி இருக்கிறது.


தமிழ்’ ஒரு காலாண்டிதழ். சீராக வருடத்திற்கு நான்கு இதழ்கள் கொண்டு வரத் திட்டம். இது ஓர் இலவச இதழ். இணையத்தில் இருக்கும் எவரும் சுலபமாகத் தரவிற‌க்கிக்கொள்ள ஏதுவாக இலவச PDF கோப்பாகக் கிடைக்கும். படைப்பாளிகள் அனைவரும் சன்மானம் ஏதுமின்றியே இவ்விதழில் பங்களித்திருக்கிறார்கள்.


இது குமுதம், விகடன், குங்குமம் போல் முழுமையான வெகுஜன இதழும் அல்ல; காலச்சுவடு, உயிர்மை, தீராநதி போல் அடர்த்தியான சிற்றிதழும் அல்ல. இப்போதைக்கு ‘தமிழ்’ ஓர் இடைநிலை இதழ். இதற்கு முன்னோடி என குமுதம் ஜங்ஷன், விண் நாயகன், இந்தியா டுடே இலக்கியச் சிறப்பிதழ்கள், டைம்ஸ் தீபாவளி மலர்கள், தி இந்து பொங்கல், தீபாவளி மலர்கள் போன்ற பத்திரிக்கைகளைச் சொல்லலாம்.

கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல், சமூகம், அறிவியல் ஆகிய விஷயங்கள் இந்த இதழின் பிரதான உள்ளடக்கங்களாக அமையும். முக்கிய விஷயம் இந்த இதழில் பங்களிப்பவர்கள் – சில நன்கறியப்பட்ட படைப்பாளிகளும், பல முகமறியாப் புதியவர்களும் இதில் எழுதுவார்கள். இவ்விதழில் எழுதியுள்ளவர்கள் சிலருக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் அல்லது வலைப்பூ தாண்டி இது தான் முதல் பத்திரிக்கைப் பங்களிப்பு.


வரும் இதழ்களிலும் சமூக வலைதளங்களில் பொழுதுதீர்க்கும் அக்கப்போர்கள் தாண்டி தரமாய் எழுதக் கூடியவர்கள் பங்களிப்பார்கள். சினிமாக்காரர்களால் பொதுவாய் வேலை வெட்டி இல்லாதவர்களின் குப்பை எழுத்து என முன்வைக்கப்படும் பொதுப்புத்திக் கருத்துக்கு எளிய எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்.


ஒவ்வொரு இதழிலும் ஒரு முக்கியமான சமகாலத் தமிழ் எழுத்தாளுமையின் விரிவான நேர்காணல் இடம்பெறும். அவரது முகமே அந்த இத‌ழின் அட்டையை ஓவியமாய் அலங்கரிக்கும். அவ்வகையில் இவ்விதழில் ஜெயமோகனின் நேர்காணல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு இதழும் ஒரு முன்னோடிப் பத்திரிக்கையாளருக்கு / எழுத்தாளருக்குச் சமர்ப்பணம் செய்யப்படும். இம்முறை காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமிக்கு. போலவே ஒவ்வொரு இதழையும் ஒரு முக்கியப்‌ பத்திரிக்கையாளர் / எழுத்தாளர் வெளியிடுவார். தொடக்கம் ஞாநி. அவர்களுக்குச் செய்யும் ஒரு மரியாதையாகவே இதைப் பார்க்கிறேன்.


இது முழுக்க முழுக்க ஒரு மின்னிதழ். தயாரிப்பு முதல் வெளியீடு வரை எல்லாமே இணைய வழி! இதழுக்குப் படைப்புகள் பெறுவது, தேர்ந்தெடுப்பது, நேர்காணல் செய்வது, வடிவமைப்பு செய்வது, வெளியீட்டு விழா எல்லாமே இணையத்தில் மூலமே நடக்கும். இது ஒரு பரிசோதனை முயற்சி.


இது ஒரு தொடக்கம். இதற்கு வாசகர்க‌ளின் வரவேற்பும், அன்பர்களின் ஆதரவும் கிட்டும் என நம்புகிறேன். இதன் வழி தமிழ் எழுத்தும் வாசிப்பும் சில அடிகள் முன்னகர்ந்தால் அதை வெற்றி எனக் கொள்வேன். இதழ் பற்றிய உங்கள் எதிர்வினைகளை (முக்கியமாய் எதிர்மறைக் கருத்துக்களை) எனக்கு எழுதுங்கள்.


உள்ளே...



நேர்காணல்

ஜெயமோகன் - 48


கவிதை

சௌம்யா கவிதைகள் - 5

பொன்.வாசுதேவன் கவிதைகள் - 26

சிரஞ்சீவியும் ஜீவிதாவும் / சொரூபா - 96

நா.ராஜு கவிதைகள் - 104

ஓர் ஆண் - ஒரு பெண் / அசோகர் - 117

நிறைவேறாத ஆசைகள் / மிருதுளா - 131


புனைவு

பைத்தியக் காலம் / நர்சிம் - 22

காரணம் / என்.சொக்கன் - 31

ரைலு / முத்தலிப் - 39

அன்றில் பறவை / சங்கீதா பாக்கியராஜா - 45

நளீரா / கர்ணாசக்தி - 97

0° F / மத்யமன் - 106

கானல் / மீனம்மா கயல் - 118

சிறகில்லாப் பறவைகள் / அல்டாப்பு வினோத் - 128

கேபியும் மூன்று பெண்களும் / ஜிரா - 133


விமர்சனம்

தமிழ்’ திரைப்பட‌ விருதுகள் 2014 - 7

Swappnam : கனவுகளுக்கான இசை / எஸ்.சுரேஷ் - 8

புதிய எக்ஸைல் : புனைவும் புனைவற்றதும் / சுரேஷ்கண்ணன் - 11

நியூரி பில்கே சிலான் : அற்புதக் கதைசொல்லி / லேகா இராமசுப்ரமணியன் - 42

ஸ்டான்லி க்யூப்ரிக் : இயக்குனர்களின் ஆசான் / நவீன் குமார் - 99

மாதொருபாகன் : சர்ச்சையும் போராட்டமும் / கிருஷ்ண பிரபு - 113


அனுபவம்

வினோத நகரம் / முரளிகண்ணன் - 28

பந்து புராணம் / இந்திரன் - 36

இணைய நூற்றாண்டு / சிறகு - 95

குவியொளி / SK செந்தில்நாதன் - 112

சங்கத்தமிழ் FOR DUMMIES / கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) - 122

அவர் ஒரு தொடர்கதை / கார்த்திக் அருள் - 136


நுண்கலை

நிழலோவியம் / பாலா மாரியப்பன் - 38

பொன்னாஞ்சலி / பரணிராஜன் - 138


சௌம்யா கவிதைகள்


மீ காதல்


காதலெல்லாம் வாய்விட்டுச்

சொல்லிக் கொண்டதில்லை

அதற்கெல்லாம் நேரமின்றிக்

காதலித்தபடி இருக்கிறோம்


ஒருமைக்கு மாறிய கணம்

சரியாய் நினைவிலில்லை

அஃதில்லாமல் இயல்பாய்

மாறியிருப்பதுதான் சுகம்


உன் கோரிக்கை எதையும்

நிறைவேற்றியதேயில்லை

உத்தரவிடுதலே ஆண்மை

என்று சீண்டுவதிலின்பம்


என் தேவைகளெதையும்

சொன்னதேயில்லை

உணர்ந்து சேவைகள்

செய்வதில் மன்னன் நீ


சம உரிமை வேண்டும்

எனக் கேட்டதேயில்லை

அளவற்ற செம்ம உரிமை

எனக்குண்டு உன் மீது


பெண்ணியம் பேசியதில்லை

இரவில் ஒளிரும் குளிரில்

உன் கண்ணியம் கலைத்து

ஆதிக்கம் செலுத்துகிறேன்


பொச‌ஸிவ் இல்லை

நான் – என் போல்

எவளாலுமுன்னைக்

காதலிக்கவியலாது.


ஆசை அறுபது நாள்

மோகம் முப்பது நாள்

காதல் ஆயுள் வரை

அன்பு ஏழ்பிறவிக்கும்.


*

இதழ‌திகாரம்


01

முத்தங்கள் யாசிக்கிறாய்

'கெஞ்சாதேடா' என்றால்

'சரி, முத்தம் தாடி' எனத்

திமிராய் மிரட்டுகிறாய்.


02

உள்ளங்கைக‌ளிலேந்திக்

கன்னங்கள் பற்றுகையில்

அனிச்சையாய்க் குவியும்

உன் இதழ்களின் இச்சை.


03

சிணுங்கும் கொலுசில்

நீ முத்தமிடுவது கண்டு

உடையக்காத்திருக்கும்

வளையல் சலசலக்கும்.


04

யுத்தம் நீடித்ததில்லை

சம்பவஇடம் சமீபித்தால்

சம்மதித்து விடுமென்

முத்தப் போராட்டம்.


05

இதழ் துவைக்கும் உன்

முரட்டு முத்தங்களுக்கு

ஒத்தடமிட்டு களைக்கும்

என் பெண் முத்தங்கள்.


*


ஊடலுணவு


நீண்டதொரு சண்டைக்குப்பின்

'ஏய், சும்மா அழுதிட்டிருக்காம

ஒழுங்கா சாப்பிட்டுத் தொலை'

என்றதட்டி நீ கிளம்புகையில்

கங்காய்க் கனன்றிருக்குமென்

கோபங்கள் தொலைக்கிறேன்.

***

'தமிழ்' திரைப்பட விருதுகள் – 2014


2014ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பாய்ப் பணியாற்றிய கலைஞர்களுக்கான மரியாதை இது. நட்சத்திர அந்தஸ்து, வியாபார வெற்றி எதையும் கணக்கில் கொள்ளாது கலைக்கு மட்டுமான அங்கீகாரம்.




***




Swappnam : கனவுகளுக்கான இசை

எஸ்.சுரேஷ்


இளையராஜா ஒரு நடன நிகழ்ச்சிக்கு இசையமைக்கிறார் என்ற செய்தி பலரை ஆச்சர்யபட வைத்ததோடு ஓர் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. Swappnam (ஸ்வப்னம்) எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சியின் சில தேந்தெடுக்கப்பட்ட பாடல்கள் குறுந்தகடு வடிவில் வெளிவந்தது. அப்பாடல்களை பற்றிய ஒரு பார்வை.



  1. Dreams of the Young – Symphony ஏழிசையாய் (அபிஷேக் ரகுராம்)


வயலின்கள் ஒன்று கூடி அலையென எழுகின்றன. மேற்கத்திய இலக்கணப்படி முன்ன‌கர்ந்திருக்கும் இசைக்குள் எப்படியோ காம்போதி ஊடுருவிவிடுகிறது. நாம் கச்சேரியில் கேட்கும் காம்போதி அல்ல. ஒரு கீற்று தான். எங்கிருந்தோ மிதந்தும் வரும் பெருங்காய வாசம் போல். அந்த மேற்கத்திய இசை முடியும் தருவாயில் ராகத்தை இன்னும் சற்று அழுத்தமாக அடியிட்டுக் காட்டுகிறார். அபிஷேக் சபாக்களில் பாடப்படும் காம்போதி பாடுகிறார். வீணையும் வேணுவும் அவருக்கு துணை வருகின்றன. மெட்டு இனிமையாக முன்னகர்கிறது. நடுவில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் என்று தாள வாத்யங்கள் தனிக் கச்சேரியை நடத்துகின்றன. பாடல் முடியும் பொழுது ஒரு கச்சேரி கேட்ட திருப்தி ஏற்படுகிறது.


  1. Adoration – திருவாசகம் : காதார் குழையாட (பூர்ணிமா சதீஸ் & வசுதா ரவி)


மாணிக்கவாசகர் அருளிய‌ திருவெம்பாவைப் பாடல் இது. ஜோக் ராகத்தில் அமைந்த இந்த பாடல் எடுத்தவுடன் களை கட்டி விடுகிறது. ‘வண்டின் குழாம் ஆட’ என்று பாடகர்கள் பாடியவுடன், வயலின்கள் சேர்ந்து வண்டின் ரீங்காரத்ததை ஒலிக்கின்றன. ஆனால் இது அப்பட்டமாக நம் காதில் கேட்காமால் ஜோக் ராகத்தின் இன்னொரு முகமாகக் கேட்க வைத்திருப்பது இசை ஞானிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. தாளம் சர்வலகுவில் சென்றாலும், தாளத்திற்கும் மேட்டிற்கும் நடுவில் ஏதோ ஒரு டென்ஷனை ஓட விட்டிருக்கிறார் இளையராஜா. இதனால் நம் கவனம் பாடலை விட்டு சிதறாமல் இருக்கிறது. பூர்ணிமாவும் வசுதாவும் இந்த படலை அழகாகப் பாடியுள்ளார்கள். நம்மை நடனம் ஆடச்செய்யும் பாடல் இது.


  1. Romance - பிரதீப்த ரத்னோஜ்வாலா (சரத் குழுவினர்)


இப்பாடலில் மிருதங்கமும் பக்வாஜும் சங்கீர்ணம் மற்றும் மிஷ்ரம் அடுத்தடுத்து வாசிக்கின்றன என ராஜேந்திர குமார் என்ற இசை ரசிகர் தன விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் நடக்கும் தாள ஜாலங்களை என்னால் இன்னும் உள்வாங்கமுடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.


இந்தப் பாடல் சேர்ந்திசைக்கு (குரல்) முக்கியத்துவம் கொடுக்கிறது. சொற்களுக்கு ஏற்றார்போல் மெட்டில் ஒரு காம்பீர்யம் இருக்கிறது. அதே சமயம் அதில் ஒரு மென்மையும் இருக்கிறது. இந்த இரண்டையும் எப்படி ஒன்று சேரக் கலந்தார் என்பது அந்த கடவுளுக்கும் இசைஞானிக்குமே தெரியும். நடுவில் வரும் ஸ்வரக்கோர்வைகள் பாடலை இன்னும் மெருகேற்றுகின்றன. சரத்தும் ஏனைய பாடகர்களும் அருமையான ஒரு கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். இந்த பாடல் வெறும் நான்கு நிமிட பாடல் என நம்பமுடியவில்லை. அந்த நான்கு நிமிடத்திற்குள் எவ்வளவு தந்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறான் இந்த மனிதன்.


  1. Recognition – Voice Symphony கூவின பூங்குயில் (பூர்ணிமா சதீஸ் குழுவினர்)


பிலஹரி ராகத்தை எடுத்து அதை மேற்கத்திய சேர்ந்திசைச் சட்டகத்திற்குள் கொண்டு வருவது சுலபமல்ல. இதற்கு முன் இளையராஜா ‘கூந்தலிலே மேகம் வந்து’ பாடலை பிலஹரி ராகத்தில் கொடுத்திருக்கிறார். ஆனால் அது செவ்வியல் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இங்கு பாடல் ஆரம்பிக்கும் முன்பு பல குரல்கள் பிலஹரியின் வெவ்வேறு ஸ்வரங்களை ‘ஹம்’ செய்ய எல்லாம் சேர்ந்து நம் காதில் இனிமையாக விழும். முற்றிலும் மேற்கத்திய ஹார்மனி பின்பற்றி செய்யப்பட்ட ஒன்று இது. அந்த vocal ஹார்மனி முடிந்தவுடன் பூர்ணிமா ‘கூவின பூங்குயில்’ விருத்தம் போல் பாடி முடிப்பார். அவர் முடித்தவுடன் பல குரல்கள் மறுபடியும் ஹார்மொனி பாட ஆரம்பிக்கும். இம்முறை ஹம் செய்வதற்குப் பதிலாக ஸ்வரங்களைப் பாடும். வேறொரு இசையமைப்பாளராக இருந்திருந்தால் இதை ஓர் அருமையான பரிசோதனை முயற்சி என்றும் அவரின் ஆக சிறந்த ஆக்கம் என்றும் நாம் போற்றியிருப்போம். ஆனால் ராஜா இது போல் பல விஷயங்கள் தினமும் செய்வதால் ராஜ ரசிகர்களாகிய நாம் ரசித்துவிட்டு இவற்றைக் கடந்துவிடுகிறோம்.


  1. Reverence - பஜேஹம் (ராஜஸ்ரீ பாதக் குழுவினர்)


இந்த ஆல்பத்தின் சிறந்த பாடகியான ராஜஸ்ரீ பாதக் நமக்கு இங்கு அறிமுகமாகிறார். இது பிரபலமான ஒரு பஜன். முன்பு ஒரு பாடலுக்குச் சொன்னது போல், இதிலும் ராஜா இரு முரண்களை ஒருங்கிணைக்கிறார். ஒரு பக்கம் பாடல் நம்மை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடலில் ஒரு கம்பீரம் இருக்கிறது. இவ்விரு உணர்வுகளையும் பாதக் த‌ன் குரலில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இடையிசையில் வரும் புல்லாங்குழலும் வீணையும் பாடலுக்கு மேலும் இனிமை கூட்டுகின்றன.


  1. Realisation - அம்மையே அப்பா (சுதா ரகுநாதன், வசுதா ரவி, ஸ்ரீநிவாஸ் மற்றும் குழுவினர்)


இந்தத் திருவாசக செய்யுள் ராஜாவின் ‘திருவாசகம்’ ஆல்பத்தில் நாம் கேட்ட ஒன்று தான். அங்கு அவர் மேற்கத்திய இசையைப் பின்பலமாக வைத்து பாட்டிற்கு இசையமைத்திருப்பார். இங்கு கானடா ராகத்தைத் தேர்ந்தெடுக்கிறார். முதலில் வெறும் வயலின் பக்கத்தில் ஒலிக்க சுதாவை பாட வைக்கிறார். சுதாவின் குரலில் தேனாக ஒலிக்கிறது கானடா. அவர் பாடி முடித்தவுடன் வீணை கானடாவை அதே இனிமையுடன் மீட்டுகிறது. இதற்குப் பிறகு குரல்களின் அருமையான சேர்ந்திசை தொடங்குகிறது. வசுதாவும் ஸ்ரீநிவாசும் செய்யுள் பாட, சேர்ந்த குரல்கள் கானடவை ஹார்மனி வடிவில் பாடுகின்றன. இந்த இசைக் கோர்வை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரே செய்யுள். பல்வேறு வடிவங்கள்.


  1. Wisdom - அய்யேமெத்த கடினம் (பரத் சுந்தர்)


இது நந்தனார் சரித்திரத்தில் உள்ள‌ பாடல். தண்டபாணி தேசிகர் பிரபலப்படுத்திய மெட்டு. மிருதங்கம் வாசிக்கும் நடை அருமையாக உள்ளது. மாறி வரும் நடை பாடலுக்கு கூடுதல் கவனத்தைச் சேர்க்கிறது. பரத் சுந்தர் நன்றாக பாடியிருக்கிறார்.


  1. Awakening - கோழி சிலம்ப (சரத், அபிஷேக் ரகுராம், வசுதா ரவி மற்றும் பூர்ணிமா சதீஸ்)


இரவு பத்து மணிக்குக் கேட்டாலும் நம்மை இந்தப் பாடல் காலை ஐந்து மணிக்குக் கூட்டிச் சென்றுவிடும். சூரியன் இன்னும் உதிக்காத இளங்காலை வேளைப்பாடலிது. மெதுவாக தட்டிக்கொண்டிருக்கும் மிருதங்கம் திடீரென்று ஒரு ஃபரன் வாசிக்கிறது. எல்லோரும் அருமையாகப் பாட, கடைசியில் வரும் சேர்ந்திசை இந்த பாடலை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. இரண்டு நிமிடப் பாடல்தான். இருந்தாலும் அதில் பல விஷயங்களைப் புகுத்தி, நம் மனதுக்குள் நுழைப்பது ராஜாவுக்குக் கை வந்த கலை.


  1. Dream of the Old - விஷ்வேச்வர் தர்ஷன் (ராஜஸ்ரீ பாதக், அபிஷேக் ரகுராம் மற்றும் குழுவினர்)


இது சுவாதித் திருநாளின் பிரபலமான மெட்டு. கச்சேரிகளில் அடிக்கடி பாடப்படுகிறது. மனதை வருடிக்கொடுக்கும் பாடல். ராஜஸ்ரீயும் அபிஷேக்கும் அருமையாகப் பாடுகிறார்கள்.


  1. Truth - அன்பும் சிவமும் (இசை ஞானி இளையராஜா)


ராஜாவின் குரலில் திருமூலரின் திருமந்திரம் வாசிக்கப்பட்டு ஆல்பம் நிறைவடைகிறது.


ஆல்பத்தில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன: ஒன்று இதில் வரும் வித விதமான தாள கதிகள். ஆல்பம் முழுதும் தாள வாதியங்கள் தம் ஸ்தானத்தை நிறுவிக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது சேர்ந்திசை. நம் கர்நாடக ராகங்களை வைத்து அற்புதமான சேர்ந்திசையை இசைஞானி கொடுக்கிறார். மூன்றாவது எல்லா மெட்டுக்களும் மென்மையாகவும் மதுரமாகவும் அதே சமயம் நாட்டியத்திற்கு உகந்ததாக உள்ளன.


ஒரு முறை ‘ஸ்வப்னம்’ ஆல்பத்தைக் கேட்டால் அதிலிருந்து மீள்வது கடினமாக இருக்கும்.


***


புதிய எக்ஸைல் : புனைவும் புனைவற்றதும்

சுரேஷ் கண்ணன்


எச்சரிக்கை

இக்கட்டுரையில் பாலுறவு தொடர்பான கொச்சையான வார்த்தைகளும் சம்பவங்களும் என்னையும் மீறி வரக்கூடும். பாசாங்குகளின் மூலம் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நிரூபிக்க விரும்புவர்கள், ஆபாச வார்த்தைகளைக் கேட்டவுடன் பிடிக்காதது போல் நடித்து முகஞ்சுளிப்பவர்கள் அல்லது இவைகளிலிருந்து உண்மையாகவே விலகி நிற்க வேண்டும் என நினைக்கும் ஆன்மீகவாதிகள், புண்ணியாத்மாக்கள் எல்லாம் இதனை வாசிக்கலாமலிருக்க வேண்டுகிறேன். கோபமெல்லாம் இல்லை, அன்பாகத்தான் சொல்கிறேன். நானும் பொதுவாக வேறு வழியில்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நிற்கும் வார்த்தைகளைக் கொண்டு எழுதுபவன்தான். ஆனால் பாருங்கள், இப்படி எழுத வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது சாருநிவேதிதா எழுதிய 'புதிய எக்ஸைல்' என்கிற இந்த தன்வரலாற்றுப் புதினம்தான். அது மாத்திரமல்ல.

இந்த 'தமிழ்' என்கிற மின்னிதழை துவங்கியிருக்கும் சி.சரவணகார்த்திகேயன் (வாழ்த்துகள் CSK) எழுதிய பரத்தை கூற்று என்கிற கவிதைத் தொகுதியில் சிலவற்றை வாசித்தேன். நான் பொதுவாக கவிதை என்கிற வடிவத்திலிருந்து ஒதுங்கியிருப்பவன். ஆனால் மனிதர் அதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா என்கிற வர்ச்சுவல் வடிவ அனாமிகாவை வர்ணித்து தினம் தினம் டிவிட்டரில் முயங்கிக் கொண்டிக்கிறாரோ என்று தோன்ற வைக்குமளவிற்கு தீவிரமாய் டிவீட்டிக் கொண்டிருப்பவர். அவருடைய இதழில் சைவமாக எழுதினால் அது கடவுளுக்கே அடுக்காது. சரியா?


*


1. தண்டபாணி அண்ணன்


என்னுடைய சிறுவயதில் நாங்கள் வசித்து வந்திருந்த ஒண்டுக்குடித்தன வீட்டின் முன்பாக நீளமான திண்ணை ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் யாரு திண்ணை வைத்து வீடு கட்டுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்தால், 'அந்தக் காலத்தில எல்லாம்...' தொனி வந்துவிடுமென்பதால் அதைத் தவிர்க்கிறேன். அந்தத் திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்றால் அது மிகையாகாது (இதுவும் பழைய பாணிதான்). அந்தத் திண்ணையின் சாட்சியுடன்தான் முதல் சிகரெட் (பயங்கர இருமல்), நடிகைகளில் யாருடைய க்ளீவேஜ் பெஸ்ட், சிக்கலான அல்ஜீப்ரா சூத்திரங்கள் என்று என் நல்லது, கெட்டது சகலத்தையும் கற்றிருக்கிறேன்.


அந்தத் திண்ணையில்தான் தண்டபாணி அண்ணனை அடிக்கடி பார்ப்பேன். வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியே வரும் போதும் ஏறக்குறைய அவர் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்திற்குள் இருக்கலாம். ஆனால் உழைத்து முறுக்கேறிய கட்டுமஸ்தான உடம்புடன் ஆள் இருபத்தைந்து போல் இருப்பார். கருப்பான முகத்தில் வெட்டுத் தழும்பு ஒன்றுடன் இருந்தாலும் அவரிடம் ஏதோவொரு விளக்கவொண்ணா கவர்ச்சியும் ஸ்டைலும் இருந்தது. அவர் சிரிக்கும் போது பார்க்க அத்தனை அழகாக இருக்கும், முகமே சிரிப்பது போல. சிலருக்குத்தான் அப்படி அமையும். சிகையலங்காரமும் ஏறக்குறைய ரஜினியுடையதைப் போலவே இருக்கும்.


எப்போதும் அவரைச்சுற்றி ஒரு ஜமா இருக்கும். ஏறக்குறைய அவர்வயதை ஒத்தவர்கள்தாம். ஆனால் ஒரு பெரியவரும் உண்டு. பெரும்பாலான கிண்டல்களில் அவர்தான் மாட்டிக் கொள்வார். பட்டை சாராயத்தின் நாற்றமும் மட்டமான பீடியின் மணமும் எப்போதும்சூழ்ந்திருக்கும். நாங்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்கவில்லை. மாதாமானால் வாடகையை மாத்திரம் வந்து வாங்கிப் போய்வார். எல்லோருமே குடித்தனக்காரர்கள் என்பதால் திண்ணையில் நிகழும் இந்தக்களேபரத்தை யாரும் கேட்கத் துணியவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை. மேலும் தண்டபாணி அண்ணன் ரவுடி வேறு. எதற்கு வம்பு?


ஆனால் தண்டபாணி அண்ணன் திண்ணையில் அமர்ந்திருப்பதைத் தவிர பொதுவாக யாருக்கும் எவ்வித தொந்தரவும் தரமாட்டார். வீட்டிலிருந்து பெண்கள் வந்தால் மரியாதையாக ஒதுங்கி அமர்ந்து கொள்வார். பெரும்பாலும் எம்ஜிஆர் பாடல்களை உரத்த குரலில் பாடிக் கொண்டிருப்பார். விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு எம்ஜிஆர் என்றாலே அப்போதெல்லாம் தெய்வம் மாதிரி. ஏன் அவர் மறைந்து இத்தனை வருடங்களாகியும் இன்றும் கூட அவருடைய பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் வீட்டின் வெளியே மேடையமைத்து புகைப்படத்தை சிங்காரித்து பெரிய சைஸ் ஸ்பீக்கர்களில் எம்ஜிஆர் படப்பாடல்களை நாள் முழுக்க அலற விடுவார்கள். வடசென்னையில் இன்றும் கூட தெருவிற்குத் தெரு இந்தக்காட்சியைப் பார்க்கலாம். இதில் அரசியல் சார்புடனும் ஆதாயத்துடனும் இயங்குபவர்கள் சிலர் உண்டு என்றாலும் எம்ஜிஆரை இன்னமும் கடவுளாகவே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். தன்னுடைய ஆளுமையை இத்தனை திறமையாக வளர்த்துக் கொண்டிருக்கும் எம்ஜிஆரின் மீது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. மார்க்கெட்டிங் குரு என இன்று டையுடன் சுற்றிக் கொண்டிருப்பவர் எல்லாம் ஒரு பிராண்டை வெற்றிகரமாக வளர்த்தெடுக்கும் விஷயத்தில் அவரிடம் பிச்சையெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


எம்ஜிஆர் பாடல்களை தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக பாடி முடித்தவுடன் சுற்றியிருக்கும் ஜமா பாராட்டி மகிழ்வார்கள். சில பாடல்களை மீண்டும் பாடச் சொல்வார்கள். அவரும் சலிக்காமல் அல்லது மறுக்காமல் அதே உற்சாகத்துடன் மீண்டும் பாடுவார். எப்போதாவது சிவாஜி (“தொப்பையோட பாட்டு ஒண்ணு எடுத்து விடு, தண்டம்”) பாடல்களும் இடையில் வரும். சமயங்களில் பீடிக்குப் பதிலாக கஞ்சா புகையும் காட்டமாக காற்றில் நிறைந்து விடும். இரண்டிற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கும் திறமையெல்லாம் அப்போதே எனக்கு வந்திருந்தது. தண்டபாணி அண்ணன் சோற்றுக்கு என்ன செய்கிறார், என்ன வேலை செய்கிறார், அவருடைய வீடு எங்கிருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பகல் முழுக்க ஏறக்குறைய அந்தத் திண்ணையில்தான் இருப்பார். அவர் இல்லாத சமயங்களில் திண்ணை வெறிச்சோடி ஒரு வித சோகத்தை ஏற்படுத்தும். அல்லது அப்படியாக நான் நினைத்துக் கொண்டேன்.


இப்படிப்பட்ட தண்டபாணி அண்ணன்தான் ஒரு நாள் அதே திண்ணையின் முன்பாக வெட்டிக் கொல்லப்பட்டார். நினைவு தெரிந்து அன்றுதான் மனதிற்குள் அழுதேன். அதைப் பிறகு சொல்கிறேன்.

பாடல்கள் பாடுவது தவிர தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக கதை சொல்வதிலும் விற்பன்னர். கதை என்றால் சினிமாக்கதைகளோ அல்லது 'ஒரு ஊர்ல...' என்பது மாதிரியான கதைகள் அல்ல. தன்னுடைய வாழ்விலேயே நிகழ்ந்ததாக விவரிக்கும் காஸனோவா கதைகள். பொதுவாக அந்த ஊரில் உள்ள இளவயது (சமயங்களில் நடுவயதும்) பெண்களில் யார் யாரையெல்லாம் எப்படி மேட்டர் செய்தார், அதற்கு எப்படி யெல்லாம் சம்மதிக்க வைத்தார், எப்படியெல்லாம் செய்தார் என்பதைக் கொச்சையான வார்த்தைகளுடன் விவரிப்பார். பிட்டு படம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் அமைதியுடன் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் ஜமா, அவர் சொல்லி முடித்தவுடன் கேலியாகக் கலாய்க்க ஆரம்பித்து விடும். அவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் “...த்தா பாடுகளா, உங்களுக்கெல்லாம் பொறாமைடா" என்று சிரித்து விட்டு இன்னொரு கதையைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்.

தண்டபாணி அண்ணனுக்கும் எனக்குமான உரையாடல்கள் அமைந்தது சொற்பமே. பெரிதும் தூரத்திலிருந்து தான் அவரைக் கவனிப்பேன். சிறுவர்களுக்கு எப்போதுமே பெரியவர்கள் உலகத்திற்கு போய் அவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்ய வேண்டும் என மனம் அரித்துக் கொண்டேயிருக்கும் அல்லவா? அந்த வகையில் எனக்குப் பிடித்த ஆளுமையாக தண்டபாணி அண்ணன் இருந்தார். அவர் விவகாரமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது திண்ணையின் விளிம்பில் அமர்ந்து ரகசியமாக ஆனால் கவனமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் ஒருமுறை என்னைக் கவனித்து விட்டு "---------- (ஒரு மோசமான கெட்ட வார்த்தை) என்னடா இங்க பாாக்கறே?" என்றார். ஆனால் அந்த வசையால் எனக்குக் கோபமே வரவில்லை. ஏனெனில் அவர் அப்படி கேட்டதே ஒரு குழந்தைகயைக் கொஞ்சுவது போல்தான் இருந்தது. ஏன் அவர் முகம்கூட வழக்கம் போல் சிரித்தவாறுதான் இருந்தது. "இல்லண்ணா… சும்மாதான்.” என்று இழுத்தேன். என் முகத்தில் அப்போது 'படிக்கற பையன்' களை இருந்தது. எனவே என்னிடம் அவர் கொச்சையான வார்த்தைகளை இறைத்து கலாட்டா செய்ய மாட்டார். கூட இருப்பவர்களும் அப்படியே. மற்ற பையன்கள் என்றால் கூப்பிட்டு வேண்டுமென்றே அடித்து அனுப்புவார்கள். அப்படியாக தண்டபாணி அண்ணன் கூறிய கதைகளில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு முன் இன்னொரு சம்பவம்.

2.
மூத்திர சப்த பெண்மணி

திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை அவர் பிரக்ஞையில்லாமல் அந்தத் திண்ணையில் படுத்திருக்கும் போது ஆசை தீரத் தடவிய சம்பவம் அது. இப்போது நினைத்தாலும் குற்றவுணர்வும் வெட்கமுமாகத்தான் இருக்கிறது. என்றாலும் அந்த வயதுக்குரிய பாலியல் தினவுடன் செய்த காரியம் அது. தண்டபாணி அண்ணன் பகல் நேரங்களில் திண்ணையில் புழங்குவதைப் போல இரவு நேரங்களில் இந்த பெண்மணி படுத்திருப்பார். சரத்குமாரை விட அகலமாக இருக்கிற இப்போதைய நமீதா அளவில் ஆஜானுபாகுவாக இருப்பார். ஆனால் ஆள் பார்க்க அத்தனை அழகின்றி அவலட்சணமாகத்தான் இருப்பார். காலை நேரத்தில் சிறுவர்களாகிய நாங்கள் தூக்கக் கலக்கத்துடன் வெளியே வரும் போது ஒரு காட்சியைப் பார்க்க நேரிடும். திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் எழுந்து எதிரேயிருக்கும் காவாயில் சேலையை ஏறக்குறைய தொடை வரை தூக்கிக் கொண்டு நின்றவாக்கிலேயே சளசளவென்ற சப்தத்துடன் மூத்திரம் போவார். தெருவில் நடமாடும் எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். நாங்கள் ஒருவித கிளர்ச்சியுடன் இக்காட்சியை மறைமுகமாக பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். சமயங்களில் நான் கரமைதுனம் செய்தவற்கு இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு. ஆனால் முடித்தபிறகு ஐயோ, இந்த பெண்மணியையா நினைத்துக் கொண்டோம் என்று அருவருப்பாக கூட இருக்கும். மனது இயங்கும் விசித்திரமான நுட்பங்களில் ஒன்று இது. ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் கோயில் குருக்கள், போத்தியிடம் தன்னுடைய ஆசையை சொல்லும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. உருப்படிகளை பெற்றுப் போடுவதற்கென்றெ வளர்க்கப்படும் மிக அவலட்சமான, விநோதமானதொரு விலங்கு போல இருக்கும் முத்தம்மையுடன் ஒரு நாளாவது படுக்க வேண்டும் என்ற குருக்களின் நீண்டகால ஆசையைக் கேட்டு போத்தி திகைத்துப் போவார்.

3.
பரமசிவ முதலியார்

ஒரு நாள் நண்பர்களுடன் மலையாளப்படம் ஒன்று பார்க்கச் சென்றிருந்தேன். தம்புராட்டி என்கிற பிரமிளா நடித்த திரைப்படம். தமிழகத்தைப் பொறுத்தவரை மலையாளப்படம் என்றாலே அது மூன்றாந்தர பிட்டுப் படம்தான். சென்னையின் மிகப்பழமையான தியேட்டர் அது. தமிழ்நாட்டின் முதல் டாக்கிஸூம் கூட. கினிமா சென்ட்ரல் என்ற அந்த அரங்கில்தான் இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆரா திரையிடப் பட்டது. போலவே தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸூம். சினிமாவில் ஆர்வமுடைய முருகேச முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. அவரது மறைவிற்குப் பின் அவரது மகனான பரமசிவ முதலியார் நிர்வாகத்தை மேற்கொண்டார். தியேட்டரின் பெயரையும் 'முருகன் டாக்கீஸ்' என மாற்றினார். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களாகத் திரையிட்டார். ஏறக்குறைய அனைத்துமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. அரங்கம் முழுக்க‌ பரமசிவ முதலியார் தமிழக நடிக, நடிகையர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் வரை அவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பார்வையாளர்களின் வழக்கம். (“மஞ்சுளாவோட முலையைப் பாருடா”) பெரும்பாலும் அவைகளில் எம்ஜிஆர்தான் இருப்பார். ஆனால் எம்ஜிஆர் முதல்வரான பின் அவரது படங்களின் மறுவெளியீடுகளும் ஓய்ந்து போய் தியேட்டர் நொடிந்து போன நிலையில் மலையாளப் படங்களாக போட ஆரம்பித்தார் முதலியார்.

பெரும்பாலும் பிரமீளா, தீபா போன்றவர்கள் நடித்த மசாலாப் படங்கள். இடையில் மூன்று நிமிடம் ஏதாவது பிட்டு படம் ஓடும். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கூட்டம் இந்தக் காட்சிகளை வாய்பிளந்து பார்த்து முடிந்ததும் பரபரவென வெளியேறி விடும். இத்தனைக்கும் அதில் உடலுறுவுக் காட்சிகள் கூட இருக்காது. மாமிச மலை மாதிரியிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி தொங்கியிருக்கும் மார்பகங்கள் குலுங்க உடம்பைச் செயற்கையாகத் தேய்த்துத் தேய்த்துக் குளிக்கும் காட்சிகள் மட்டும்தான். சமயங்களில் முகம் கூடத்தெரியாது. இடுப்பிற்கு கீழ் கேமிரா நகரும் போது சட்டென்று வெட்டப்பட்டு அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரிஜினல் திரைப்படம் காட்டப்படும். சில மலையாளத்திரைப்படங்களில் இவ்வாறு தனியாக இணைக்கப்படத் தேவையின்றி ஒரிஜினல்களிலேயே இதுபோன்ற காட்சிகள் இருக்கும்.  கொலைவெறியுடன் இந்தக்காட்சிகளுக்காக பொறுமையாகக் காத்திருக்கும் கூட்டம் ஒருவேளை இந்த பிட்டு சீன்கள் ஒளிபரப்பா விட்டால் வெறுப்படைந்து சேர்களைப் போட்டு டம்டம் என்று அடித்து உடைத்து விட்டு எரிச்சலுடன் வெளியேறுவர். பிட்டு சீன் விஷயத்தில் ஒரு சங்கேத முறையும் இருந்ததைக் கண்டுபிடித்தோம். அதாவது பரமசிவ முதலியார் திரையரங்கத்தின் வாசலில் சேர் போட்டு அமர்ந்திருந்தால் நிச்சயம் அன்று பிட்டு சீன் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. காவல்துறையினர் வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார் போல. அவர் இருந்தால் எங்களுக்கு கொண்டாட்டமாகி மகிழ்வுடன் டிக்கெட் எடுப்போம்.


4. திண்ணையில் ஒரு சல்லாபம்


படம் பார்க்கப் போயிருந்தேன் அல்லவா? அன்றைய நாள் சோதனை நாளாக அமைந்து பிட்டு சீன் எதுவும் காணாமல் அந்த திரைப்படத்தை பரிந்துரைத்த நண்பனை திட்டி விட்டு வெறுப்புடன் வீடு திரும்பினேன். இரவு மணி 12-க்கு மேல் இருக்கலாம். பத்து மணியானவுடன் வீட்டின் பிரதான கதவு அடைக்கப்படும். ஒரு நல்ல ஆசாரியால் செதுக்கப்பட்டு நல்ல வளைவு வேலைகளுடன் உருவான மரக் கதவு அது. வெளியில் உள்ள கைப்பிடியை பலமாக தட்டினால் யாராவது எரிச்சலுடன் எழுந்து வந்து கதவைத் திறப்பார்கள். சிலர் திட்டுவதும் உண்டு. இரும்புக் கைப்பிடியை பலமாகத் தட்டியும் எவரும் திறக்காததால் என்ன செய்வது என்கிற யோசனையுடன் திண்ணையில் அமர்ந்தேன். அப்போதுதான் திண்ணையின் மூலையிருட்டில் குறட்டைவிட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த, தெருவில் மூத்திரம் போகும் அந்த பெண் மணியைப் பார்த்தேன். எந்தச் சுரணையுமின்றி குடித்து விட்டுத் தூங்குகிறார் என்று நன்றாகத் தெரிந்தது. குறுகுறுப்புடன் சுற்றியும் பார்த்தேன். ஓர் ஈ காக்கா இல்லை. நழுவிச் சென்று அந்தப் பெண்மணியின் அருகில் பார்த்தேன். சேலை ஏறக்குறைய முழங்காலுக்கு மேல் ஏறி தென்னை மரம் போலிருந்த கால்கள் விரிந்து கிடந்தன. ஏதோ அழைப்பிற்கான சங்கேதம் போலவே இருந்தது. பயந்து கொண்டே கால்களின் மீது கை வைத்துப் பார்த்தேன். சொர சொரவென்று பாறாங்கல்லின் மீது கை வைத்தது போலவே இருந்தது. பயமாகவும் இருந்தது. ஆர்வமாகவும் இருந்தது. மறுபடியும் சுற்றிப்பார்த்து விட்டு தொடைகளில் முன்னேறினேன். கொசகொசவென்று கையில் பட்டது பணியாரம்தான் என்று நினைக்கிறேன். படுத்திருந்த உடலில் இருந்து அசைவு வரவே சட்டென்று ஒதுங்கினேன். சிறிது நேரம் கழித்து மறுபடி பணியாரத்தை தடவினேன். அசைவு ஏதும் இல்லாததால் இன்னும் தைரியம் பெற்று முலைகளை அமுக்கி பிடித்தேன். இருந்த வெறியில் அப்படியே மேலே ஏறி படுத்து மேட்டர் செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால் அந்தப் பெண்மணி கண்விழித்து ஊரைக் கூட்டினால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. அவர் ஊரைக் கூட கூட்ட வேண்டியதில்லை, பூஞ்சை மாதிரியிருந்த என்னை ஒற்றைக் கையால் பிடித்து அறைந்தால் கூட எனக்குக் காது செவிடாகும் போல. அத்தனை ஆஜானுபாகுவான பெண்மணி. எனவே என் திருவிளையாடலை அத்துடன் நிறுத்தி விட்டு அருகிலிருந்த பூங்கா ஒன்றிற்கு சென்று படுத்துக் கொண்டேன். இன்னொன்று, ஒருவேளை போதையிலேயே அந்தப் பெண்மணி என்னை அனுமதித்திருந்தால் கூட எப்படி கச்சிதமான போஸில் மேட்டர் செய்வது என்று தெரிந்திருக்காது. திணறியிருப்பேன். இன்னொரு சமயத்தில்தான் இந்த உண்மையை நான் புரிந்து கொண்டேன்.

5. பீ சந்தில் ஓர் உடலுறவு


தண்டபாணி அண்ணன் சொன்ன விவகாரக் கதைகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்.


சேரி அமைந்திருந்த பெரும்பாலான வீடுகளில் (குடிசைகள்) கழிவறை வசதி இருக்காது. குளிப்பது முதற் கொண்டு எதுவாக இருந்தாலும் மறைவாக தெருக்களில்தான் முடித்துக் கொள்ள வேண்டும். எனவே வெளிச்சம் வருவதற்கு முன்பு பெண்கள் மல, ஜல விஷயங்களை முடித்துக் கொள்வார்கள். நீர் வரும் பம்பு வேறு எங்களுடைய வீட்டிற்கு எதிரேயே இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக ஏற்படும் சண்டைகளில் இறைபடும் வசவுகள் இருக்கிறதே, சமயங்களில் காது கொடுத்துக் கேட்க முடியாது. பெண்கள் கூட தங்களுக்கு ஆணுறுப்பு இருப்பதான பாவனையில் பரஸ்பரம் திட்டிக் கொள்வார்கள். நாங்கள் கிளுகிளுப்பாக அந்த வசைகளை கேட்டு அனுபவிப்போம். இப்படியாக அதிகாலையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை எங்கள் வீட்டிலிருந்த கிழவர் ஒருவர் மறைந்திருந்து சன்னல் வழியாகத் தினமும் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து விட்டு அந்தப் பெண்கள் சண்டைக்கு வந்தார்கள். வேடிக்கை பார்த்த பெரிசு சும்மா பார்க்காமல் சுருட்டு ஒன்றை புகைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தது போல. இருட்டில் ஒளிர்ந்த வெளிச்சப்புள்ளியை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இருட்டில் சரி, பகல் வேளையில் மல, ஜலத்திற்கு என்ன செய்வார்கள்? அதற்காகவே இயற்கையாய் அமைந்தது பீ சந்து. சிறியதாய் அமைந்திருந்த சந்தில் எந்தவொரு வீட்டின் நுழைவு வழியும் இருக்காது. எனவே மலம் கழிக்கிறவர்களுக்கு இந்த சந்து வசதியாய் போயிற்று. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு போல விதவிதமான நிறங்களில் கூடிய மலங்கள் இரண்டு பக்கங்களிலும் நிறைந்திருக்கும். எனவே இந்தச் சந்திற்கு பீ சந்து என்று பெயர் வந்திருக்க வேண்டும். பொதுவாக யாரும் இந்த வழியைப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படியே அவசரத்திற்கு (இது வேறு அவசரம்) யாராவது போனால் குத்த வைத்து அமர்ந்திருக்கும் பெண்கள் சலித்துக் கொண்டே சற்று நேரம் எழுந்து நின்று கொள்வார்கள். இது குறித்து வசவு கூட ஒன்று உண்டு. “உன் மூஞ்சைப் பார்த்தா பேல்றவ கூட எழுந்திருக்க மாட்டா” என்பது அது. ஓர் ஆள் மொக்கையாக இருந்தால் “இவனுக்குப் போய் எழுந்திருக்க வேண்டுமா?” என்று மலம் கழிக்கிற பெண்கள் கூட எழுந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள் என்பது இதன் உட்பொருள். இப்படி மலம் கழிக்கிற பெண்களைக் கூட ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறவர்களும் உண்டு.

இப்படியான பீ சந்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட கதையைத்தான் தண்டபாணி அண்ணன் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் தண்டபாணியின் உறவு போல. எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்து அழைத்து வந்து விட்டார். ஆனால் மறைவான தோதுவான இடம் எதுவும் தென்படவில்லை. எனவே அருகிலிருந்த பீ சந்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலை முடிந்து இருட்டத் துவங்கியிருக்கும் அந்த நேரத்தில் எவரும் அங்கு மலம் கழிக்க வந்திருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரே அருவருப்பு. பின்னே, சுற்றியும் மலம் நிறைந்திருக்கும் ஓர் இடத்திலா உறவு கொள்ள முடியும்? இருந்தாலும் தண்டபாணி அண்ணன் எப்படியோ நைச்சியமாகப் பேசி எங்கெங்கோ முத்தமிட்டு அப்பெண்ணைச் சுவற்றில் சாய்த்து பாவாடையோடு சேலையைத்தூக்கி மேட்டர் செய்ய முயன்றிருக்கிறார்.


இந்தச் சிக்கலான போஸில் பெண்ணின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் உறவு கொள்ள முடியாது. நல்ல வசதியான கோணத்தில் நின்றால்தான் செய்ய முடியும். இதையும் பின்னர் ஒரு சமயத்தில்தான் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். ஆங்கில நீலப்படங்களில் எல்லாம் எத்தனையோ வசதியான இடமிருந்தாலும் ஏன் சிக்கலான இடங்களில் சிக்கலான கோணங்களில் சிரமப்பட்டு உறவு கொள்கிறார்கள் (காலில் செருப்பு மாத்திரம் இருக்கும்) என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தப் பெண்ணும் உணர்ச்சி மிகுதியில் தண்டபாணி அண்ணனுக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்த போது அந்த இடையூறு நிகழ்ந்தது.


மலம் கழிப்பதற்காகவோ அல்லது வேறு அவசரத்திற்காகவோ ஒரு பெண்மணி அந்த வழியாக வந்திருக்கிறார். தண்டபாணி அண்ணன் கண்களை மூடி இயங்கிக் கொண்டிருந்தார். ஒத்துழைத்துக் கொண்டிருந்த பெண்ணும் அதே பரவச நிலையில் இருந்தாலும் யாராவது வருகிறார்களா என்றும் கவனித்துக் கொண்டிருந்தது போல. பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். வருகிற இந்தப் பெண்மணியை பார்த்து விட்டது. உடனே தண்டபாணி அண்ணனைத் தள்ள முயன்றிருக்கிறது. ஆனால் அவரோ அதைப் பொருட்படுத்தாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் இவரை வலுவாக தள்ளி விட்டு ஓடிவிட்டது. நீட்டிக் கொண்டிருக்கும் குறியுடன் இவர் கழுதை மாதிரி நின்று கொண்டிருந்தாராம். தண்டபாணி அண்ணன் இதைச் சொல்லி முடித்ததும் சுற்றியிருந்த ஜமா வழக்கம் போல அவரை வெறுப்பேற்றுவது போல் சிரித்துத் தள்ளியது. ஆனால் கதை அத்தோடு முடிய வில்லையாம். பீ சந்தில் ஒரு பெண்மணி கடந்து சென்றார் அல்லவா? நீட்டிக் கொண்டிருந்த இவரது குறியைப் பார்தத மயக்கத்திலோ என்னவோ, போனவர் திரும்பி வந்து தண்டபாணி அண்ணன் அருகில் நின்றாராம். அப்புறம் என்ன, பாதியில் நின்று போன வேலையை அந்தப் பெண்ணோடு உற்சாமாகச் செய்து முடித்தாராம். இப்போது உரக்க சிரிப்பது தண்டபாணி அண்ணனின் முறையாக இருந்தது. சுற்றியிருந்தவர்களின் சிரிப்பில் சுருதி சற்று இறங்கி இருந்தது.

இந்தக் கதைகளையெல்லாம் உண்மையில் நீங்களெல்லாம் தண்டபாணி அண்ணன் வாயால் சொல்ல‌க் கேட்க வேண்டும். கொச்சையான, ஆபாசமான வார்த்தைகளுடன் அத்தனை சுவாரசியமாக இருக்கும். இப்போது ஃபோன் செக்ஸ் என்றலெ்லாம் சொல்கிறார்கள் அல்லவா? அது கூட இந்த சுவாரசியத்திற்கு முன்பு தோற்றுப் போய் விடும். என் எழுத்தில் கூட அந்த சுவாரசியத்தின் ஒருபகுதி குறைந்து விடுகிறது. இந்தக் கதைகளில் எத்தனை சதவீதம் உண்மை என்பதெல்லாம் தெரியாது. கேட்கும் அனைவருக்குமே இந்த சந்தேகம் வந்திருக்கலாம். என்றாலும் கதை கேட்கும் சமயத்தில் நமக்கு இந்த தர்க்கமெல்லாம் தோன்றவே தோன்றாது. அத்தனை சுவாரசியமாக இருக்கும்.


தண்டபாணி அண்ணன் ஊர்த்தலைவரின் பெண்ணொருவரை காதலித்திருக்கிறார். பீ சந்து சம்பவம் மாதிரியல்லாமல் உண்மையான காதல். இது அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் நாலைந்து ரவுடிகள் சேர்ந்து திண்ணையில் அமாந்திருந்தவரை இழுத்து பட்டாக்கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ளவர்கள் எவரும் பயத்தில் தடுக்கவில்லை. நான் பள்ளி முடிந்து மாலையில் வந்து போதுதான் இந்த கலாட்டாவே தெரிந்தது. ரொம்பவும் திகைப்பாக இருந்தது. ஆனால் பத்திரிகைகளில் இது பற்றிய செய்தி வரும் போது இந்த காதல் சமாச்சாரமெல்லாம் வரவேயில்லை. ஏதோ சில்லறைத் தகராறில் உணர்ச்சிவசப்பட்டு இந்தக் கொலை நடந்ததாகப் பதிவாகி இருந்தது. தங்களின் செல்வாக்கை உபயோகித்து மறைத்து விட்டார்கள்.

தண்டபாணி அண்ணன் திண்ணையில் ஒரு நாள் தனியாக அமர்ந்திருந்த போது என்னை அழைத்தார். கஞ்சா மயக்கத்தில் கண்கள் சொருகியிருந்தன. நான் என்ன படிக்கிறேன் என்பதையெல்லாம் விசாரித்து விட்டு 'நல்லாப் படிக்கணும்டா. அதுதான் உன்னைக் கடைசி வரைக்கும் காப்பாத்தும்" என்ற மாதிரி ஏதோ சொன்னார். அவர் மனதில் என்ன இருந்தது என்பதை உணராமல் நான் திகைத்து நின்ற சமயம் அது.


அப்போது வேறு மாதிரியான நபராக தெரிந்தார். நீண்ட காலத்திற்கு அந்த உரையாடலை நினைவில் வைத்திருந்தேன். என்னை நான் உருவாக்கியதில் தண்டபாணி அண்ணனின் ஆளுமையும் ஒருபகுதியாக கலந்திருந்தது என்பதைப் பிற்பாடு உணர்ந்து கொண்டேன். எத்தனை துயரங்கள் இடையூறு செய்தால் சிறுசிறு மகிழ்ச்சிகளின் மூலம் - அவை நிலையற்ற பொய்யானதாக இருந்தாலும் - வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை தண்டபாணி சொல்லாமல் சொல்லிச் சென்றார்.

*


(இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் ஆபாச வார்த்தைகளை, சம்பவங்களை வாசிக்க விரும்பாத நண்பர்களை விலகச் சொல்லியிருந்தேன். அதுவொரு காரணத்திற்காகத்தான். அதனால்தான் இதில் 'என்னமோ மேட்டர் இருக்கிறது போல' என்று நீங்கள் இந்த இடம் வரை வந்திருக்கிறீர்கள். நல்லது. வாருங்கள் தொடர்வோம்.)


ஆட்டோ பிக்ஷன் என்கிற அற்புதமும் அபத்தமும்


மேற்கண்ட பகுதிகளை வாசித்து விட்டீர்கள் அல்லவா? இதில் எத்தனை சதவீதம் உண்மை அல்லது பொய் என்று உங்களால் சொல்ல முடியுமா? தண்டபாணி அண்ணன் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தார் என்று கருதுகிறீர்களா அல்லது எழுதியவரின் கற்பனையா? இதில் நான்… நான்… என்று எழுதியிருப்பதை இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவராக கருதிக் கொண்டீர்களா அல்லது அதையும் புனைவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டீர்களா?

இப்போது உருவாகி வரும் புனைவுகளில், புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. ஏறக்குறைய அருகி விட்டது என்று கூட சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு சிறுகதை என்றால் சுவாரசியமான துவக்கம், அதை வளர்த்தெடுக்கும் நடுப்பகுதி, சுவாரசியத்தை நோக்கி விரையும் இறுதிப்பகுதி, கடைசி வாக்கியத்தின் முற்றுப் புள்ளிக்கு முன்னால் ஓர் அதிர்ச்சிகரமான திருப்பம் என்றொரு வடிவம் இருந்ததல்லவா? அந்த வடிவமெல்லாம் இப்போது காலாவதியாகி விட்டது. உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான சம்பவத்தை தன்வரலாற்று தொனியிலேயே எழுதி முடிக்கலாம். ஆனால் அது புனைவின் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அதிலுள்ள சவால்.


Auto Fiction
என்கிற புனைவிலக்கிய வகைமை, கலைகளைக் கொண்டாடுகிற ஆராதிக்கிற பிரான்சு தேசத்தில் தோன்றியது. செர்ஜ் துப்ரோவ்ஸ்கி எழுதிய Flis என்கிற நாவலே இதன் துவக்கம்.  இதன் அடையாளங்களாக நான் அவதானித்தவைகள்: தன்வரலாற்றையும் புனைவையும் ஒரு சரியான கலவையில் உருவாக்க வேண்டும். தன்னையே மூன்றாம் நபராக சித்தரிக்க வேண்டும். நிஜத்திற்கும் புனைவிற்குமான சம்பவங்களையும் தகவல்களையும் முரண்களையும் மாற்றி மாற்றி கலைத்துப் போட வேண்டும். இதுவொரு சுவாரசியமான புனைவு விளையாட்டு. எது புனைவு எது நிஜம் என்கிற மயக்கத்தை வாசகனுக்கு ஏற்படுத்துவது. ஆனால் இந்த தொகுப்பின் வடிவம் உதிரி உதிரியாக அமைந்திருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மையச்சரடோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


நாவல் மீதான விமர்சனம் -1


சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’ நாவலை அது வெளியான புதிதிலேயே வாசித்திருக்கிறேன். “தமிழின் நவீன இலக்கியத்தின் புதிய போக்குகளில் புது வெள்ளம் போன்று பல படைப்புகள் வந்தாலும் பழுப்பான நிறங்களில் சில வஸ்துகள் அதில் மிதந்து செல்கின்றன” என்று இந்த நாவலை கணையாழியின் கடைசிப் பக்கங்களில் முகச்சுளிப்புடன் அறிமுகப்படுத்தியிருந்தார் சுஜாதா. உடனே இதன் மீது ஆர்வம் கொண்டு வாசித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் எழுத்தில் புழங்கி வந்த அதுவரையான பாசாங்குகளை அதிரடியாக விலக்கிப் பயணித்திருந்தது இந்த நாவல். பாலுறவும் அது சார்ந்த எண்ணங்களும் விகாரங்களும் செயல்களும் அசூயையுடன் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியதில்லை. அவையும் நம்மின் ஒரு பகுதிதான். அவைகளை ஒதுக்கி வைப்பதென்பது நம்மையே நாம் நாடகத்தனத்துடன் ஒதுக்கி வைப்பதற்கு சமமானது. காமம் என்பது மறைத்து ஒளித்து வைக்கப்பட வேண்டியது ஒன்றல்ல, மாறாக அது கொண்டாடப்பட வேண்டியது என்பதையே சாருவின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தன. தன்வரலாற்று நினைவுகளுடன் எழுதப்பட்டிருந்த அந்த நாவல் மிக யோக்கியமான அப்பட்டமான தன்மையைக் கொண்டிருந்தது.


ஆனால் அதற்குப் பிறகு சாருவால் எழுதப்படும் நாவல்களில் (பழைய எக்ஸைல் உட்பட நான் சிலவற்றை வாசித்ததில்லை) மீண்டும் மீண்டும் இந்நினைவுகளே வேறுவேறு வார்த்தைகளில் மீள்கூறல் தன்மையைக் கொண்டிருக்கிறதோ என்றெழும் எண்ணத்தை 'புதிய எக்ஸைல்' மிக வலுவாக உறுதிப்படுத்தியிருக்கிறது.


சாருவின் முந்தைய நாவல்களையும், இணையதள பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இந்த நாவலில் சில இடங்களில் சலிப்பு வரலாம். முந்தைய நாவல்களிலும் இணையதளத்திலும் விவரித்த சம்பவங்களையும் சர்ச்சைகளையும் அனுபவங்களையும் சித்தர் பாடல்களையும் புராணக் கதைகளையும் சில மளிகை சாமான் பட்டியல்களையும் தூவி இறக்கி வைத்து விட்ட பண்டம் போலிருக்கிறது புதிய எக்ஸைல். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனைப் பொருட்களை வேறு வேறு கவர்ச்சியான வண்ணங்களில், பேக்கிங்குகளில் பல்வேறு விளம்பரங்களின் மூலம் விற்கும் வணிகத் தந்திரத்தையே இந்த நாவலும் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சாருவால் தன்னுடைய சுயஅனுபவங்களில் இருந்து முற்றிலுமாக விலகி கூடு பாய்ந்து இன்னொரு வேறுவிதமான உலகத்தை, எழுத்தை உருவாக்கும் நாவலாசிரியராக மேலெழ முடியாது என்பதாகவும் தோன்றுகிறது. கொக்கரக்கோவின் மூலமும் சமயங்களில் உதயாவின் மூலமும் இது குறித்த சுயபகடிகளையும் இந்த நாவல் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் ஒரே யோக்கியமான விஷயம்.

இந்நாவல் முழுக்க பெரிதும் மனிதர்களே கிடையாது. மரங்களையும் தாவரங்களையும் விலங்குகளையும் பற்றிய தகவல்களால் நிரம்பியது என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக சாரு ஒரு முறை எழுதியதாக ஞாபகம். ஆனால் அப்படியொரு சுக்கும் கிடையாது. அவர் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைப் பற்றிய தகவல்கள் தவிர தெருவில் வளரும் ஒரு நாயைப் பற்றிய தகவல்களால் துவக்க அத்தியாயங்கள் நகர்கின்றன. சம்பிரதாயத்திற்கு மரங்களைப் பற்றின தாவரவியல் பெயர்கள். அவ்வளவுதான்.

விளிம்புநிலை சமூகத்தில் பிறந்து வந்திருந்தாலும் தற்போது மதுவகை முதற்கொண்டு விலையுயர்வான பொருட்களை மாத்திரமே நாடும் சாருவின் இயல்பையே அவரது பிராணிகளும் கொண்டிருப்பது ஆச்சரியத் தற்செயல். அவர் போஷிக்கும் தெருநாய் கூட விலையுயர்ந்த பிஸ்கெட்டை மாத்திரம்தான் சாப்பிடுகிறது.

இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. கொக்கரக்கோ இந்த நாவலின் இடையில் விமர்சிப்பதைப் போன்று அஞ்சலியின் மீதான செயற்கையான சோகக்கதைகள் பல இதில் நீளும் போது, கலவிக் குறிப்புகளை சுவாரசியமாக அனுபவிப்பதற்கு இந்த சோகக்கதைகளே தடையாய் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தில் ரகளையானதொரு உடலுறவுக் காட்சி முடிந்தவுடன் அதே நடிகையே அடுத்த காட்சியில் தொலைக்காட்சி சீரியலில் வருவது போல் மூசுமூசுவென மூக்கைச் சிந்தி அழுது கொண்டிருந்தால் எப்படியிருக்கும்?

அஞ்சலியாவது தன் வாழ்நாள் துயரங்களையெல்லாம் உதயாவின் மூலம் கிடைக்கும் விதவிதமான கலவியின்பத்தின் மூலம் கடக்கிறாள். ஆனால் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எழுதும் போது கூட அந்தக் கவர்ச்சிகளின் பின்னுள்ள கண்ணீரின் மீதான கரிசனம் எழுத்தாளருக்கு ஏற்படவே இல்லை. அதிலும் உதயாவின் நண்பனான கொக்கரக்கோ இன்னமும் மோசம்.  உடனே லீக் ஆகி விடாமல் எப்படியெல்லாம் பாலியல் தொழிலாளிகளுடான நேரத்தை முழுமையாக உபயோகப்படுத்துவது என்று வகுப்பே எடுக்கிறான். இது மாத்திரமல்ல, பொதுவாகவே ஆசிரியரின் கண்ணோட்டம் தன்னுடைய செளகரியங்களை மாத்திரமே கவனிக்கிற தன்னுடைய கொண்டாட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்துகிற அப்பட்டமான சுயநலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. வீட்டு வாசலில் குப்பை பெருக்கும் தொழிலாளர்களுக்கு மனைவி தரும் பணத்தைக் கூட கண்டிக்கிறான்.

(
ஏனய்யா, நீர் ரெமி மார்ட்டின் அடிக்க இணையத்தில் காசு கேட்பது தவறில்லை எனும் போது அவர்கள் ஓல்ட் மாங்க் அடிக்க காசு அடிக்கக்கூடாதா? என்ன நியாயம் இது? அவர்களாவது சமூகத்தில் குப்பைகளை நீக்குபவர்கள். நீர் எழுத்தின் மூலம் குப்பையை சேர்க்கும் ஆசாமிதானே? - கும்மாங்கோ)


எக்ஸைல் என்றொரு தலைப்பை இந்த நாவலுக்கு எப்படி ஆசிரியர் பொருத்துகிறார் என்பதே புரியவில்லை. அடக்குமுறை கொண்ட பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் சூழலை எதிர்கொள்ளும் ஆபத்தானதொரு சூழலையா எழுத்தாளர் எதிர்கொள்கிறார்? எனில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற தலைமறைவு எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை என்னவென்று கூறிக்கொள்வர்? சில ஆயிரம் ரூபாய் சம்பாத்தியங்களுக்காக அந்நிய தேசங்களில் குப்பையள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து ஒப்பந்தங்களின் மூலம் மாட்டிக் கொண்டு மாட்டுக்கொட்டகை போன்ற இடங்களில் துன்புறும் தொழிலாளத் தோழர்களை என்னவென்று அழைப்பது?


இந்த நாவலை முடித்து வைக்க அதன் இறுதியில் நாவலாசிரியர் அல்லாடுவதைப் போலவே 'இந்த ராமாயணம் எப்போதடா முடியும்?' என்று வாசகனையும் அல்லாட வைத்திருப்பதை ஆசிரியரின் நுட்பமான திறமைகளுள் ஒன்றாகச் சொல்ல வேண்டும்.


இலக்கியம் என்பது காலத்தையும் கடந்து நிற்கும் சாஸ்வதத்தைக் கொண்டது என்கிறார்கள் அல்லவா? அந்த வகையில் இந்த நாவலைக் காலங்கடந்து நினைவு கூர்வார்களா என்பது சந்தேகமே. இப்படியாக இந்த நாவலின் மீது புகார்களை வைக்க முடியும் என்றாலும் சில குறிப்பிட்ட தன்மைகளின்படியும் கூறுகளின் படியும் இது சமகாலத்தில் நிராகரிக்க முடியாத தன்மையையும் கொண்டிருக்கிறது.

நாவல் மீதான விமர்சனம் -2 (வேறு கிளைமாக்ஸ்)


ஆனால் ஒன்றை முக்கியமாக சொல்லியேயாக வேண்டும். அது சாருவின் சுவாரசியமான எழுத்து. பெரும்பாலும் ஏற்கெனவே அறிந்த தகவல்களால் நிரம்பியிருந்தாலும் இந்த 867 பக்கமுள்ள நூலை மீண்டும் தொடர்ந்து வாசிக்க முடிகிற கொண்டாட்ட அனுபவத்தை தருகிறது இந்த நூல். கடகடவென்றும் வாசித்து தீர்க்கலாம். மதுக்கோப்பையை உறிஞ்சுவது போல நிதானமாகவும் வாசிக்கலாம். கடந்த ஆறு நாட்களிலேயே இந்த தலையணையை நான் வாசித்துத் தீர்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரே அடிக்கடி குறிப்பிடுவது போல சாருவை மிகக் காட்டமாக விமர்சிக்கும் சக எழுத்தாளர்கள் கூட சாருவின் எழுத்திலுள்ள போதையை ஒப்புக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான அறிவுஜீவி எழுத்தாளர்கள் கூட அவரைத் தொடர்ந்து ரகசியமாக வாசிக்கிறார்கள் என்பது சமயங்களில் அவர்கள் உடனுக்குடன் கோபமாக எழுதுகிற எதிர்வினைகளின் மூலம் தெரிகிறது. இதைவிட சாருவுடைய எழுத்தின் சுவாரசியத்திற்கு வேறு ஆதாரம் இருக்க முடியாது.

சாருவின் எழுத்தில் பொதுவாக என்னைக் மிகவும் கவர்ந்ததொரு விஷயமும் அதிகம் உடன்படும் விஷயமும் நுண்ணுணர்வுத் தன்மை பற்றியது. உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று புதுமைப்பித்தன் கிண்டலடித்தைப் போன்று தன் தொன்மையின் நாகரிகத்தை வெற்றுப் பெருமையுடன் சொல்லித் திரிகிற தமிழ் சமூகம் இத்தனை வருடங்களாகியும் கூட சில அடிப்படை விஷயங்களிலாவது நாகரிகத்தைப் பின்பற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. கல்வியறிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும் கூட சில அடிப்படை அராஜகங்களை செய்வதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. சாலையின் கண்ட இடங்களில் குப்பையைப் போடுவது, பின்னால் வருபவர் பற்றி கவலையில்லாமல் கண்ட இடத்தில் துப்புவது (அதிலும் இந்த பான்பராக் என்கிற விஷயம் உள்ளே நுழைந்த விட்ட பிறகு முந்தைய காலங்களில் வெற்றிலை போட்டு துப்புபவர்களை விட இவர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது) சினிமா போன்ற பொது நிகழ்ச்சிகளில் அடித்துப்பிடித்து நுழைவது, பிறகு எதற்காகவோ அது முடிந்த பிறகு அதே வேகத்தில் வெளியேறுவது என்று மிகப் பெரிய பட்டியலையே போடலாம். அந்நியராக இருந்தாலும் எதிரே கடந்து செல்கிற ஒரு சக மனிதனின் முகத்தைப் பார்த்து புன்னகையைக் கூட சிந்தாத சிடுமூஞ்சி சமூகம்.


எதிரேயிருக்கிறவன் அருவருக்காத வகையில் தயிர் சாதம் என்கிற வஸ்துவை சாப்பிடுகிற தமிழனை இதுவரையில் நான் கண்டதில்லை. நான் தினமும் சாப்பிடும் ஹோட்டலில் தினமும் இந்த அவஸ்தையை அனுபவிக்கிறேன். சோற்றின் மீது தயிரை அப்படியே ஊற்றி பிசைந்து பிசைந்து விநோத கலவையாக்கி கையில் வழிய சர்சர் என்ற சப்தத்துடன் எதிரேயுள்ள நபர் உறிஞ்சுவதைப் பார்க்கும் போது எனக்கு ஏறக்குறைய வாந்தியே வந்து விடும். இதற்காகவே நான் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் இது ஓர் உதாரணம்தான்.  இன்னும் பல ரகளையான விஷயங்கள் இருக்கின்றன. இதற்காகவே எதிரேயிருப்பவர் முகத்தைப் பார்க்காமலேயே தலையைக் குனிந்து சாப்பிட்டு விரைவில் வெளியே வந்து விடுவேன்.

இத்தனை வருடங்களைக் கடந்தும் சில அடிப்படையான விஷயங்களில் நாம் இன்னமும் கற்கால பழங்குடி மனநிலையைக் கொண்டிருக்கிறோமே என்று ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்கிற பழங்குடிகளின் கலாசாரத்தில் மாத்திரம் நாம் எதிர்திசையில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஐரோப்பியர்களின் நாகரிகங்களில் இருந்து, அதன் கலாசாரங்களில் இருந்து ஏறத்தாழ நூறு வருடங்கள் பின்தங்கியிருக்கிறோம். இது போன்ற விமர்சனங்களை 'மேட்டிமைத்தனம்' என்று புறக்கணித்து நம் தவறுகளை நியாயப்படுத்துவது முறையானது அல்ல. இப்படியாக ஒரு சமூகத்தின் நுண்ணுணர்வற்ற தன்மையைப் பற்றி சாருவின் எழுத்து சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது. நாம் எத்தனை மோசமான கலாசார பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம் என்பது அவர் சுட்டிக்காட்டும் போதுதான் இன்னமும் அழுத்தமாக உறைக்கிறது.

இந்த நாவலில் தான் கண்டதொரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் நுலாசிரியர். அவர் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கும போது எதிரே உள்ள நாற்காலியில் ஒரு பெரியவர் வந்து அமர்கிறார், வெயிலில் வந்த களைப்புடனும் சோர்வுடன் கடந்து செல்லும் ஒரு ஹோட்டல் பையனை நோக்கி 'கொஞ்சம் தண்ணி கொடப்பா' என்கிறார். அவனோ 'இந்த டேபிள் நான் பாக்கறது இல்ல' என்று அலட்சியமாகச் சொல்லிக் கொண்டே போய் விடுகிறான். இதுவோர் உதாரணம்தான். நகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களாலும் நடத்துநர்களாலும் வயது முதிர்ந்த‌ பயணிகள் நடத்தப்படும் அலட்சியத்தைப் பார்த்தால் ரத்தக் கொதிப்பே வந்து விடும். சாலையில் நடப்பவர்களின் மீது வாகன ஓட்டுநர்கள் கொள்ளும் அலட்சியமும் மூர்க்கமும் இன்னமும் கொடுமை.


இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவள் திருமணமானவள். பத்திரிகைகளில் இந்த மாதிரி விஷயங்கள் பற்றிய செய்திகளைப் போது 'கள்ளக்காதல்' என்கிற வார்த்தையோடு போடுவார்கள். எத்தனை முயன்றும் இந்த வார்த்தையின் பொருளை அறியவே முடியவில்லை.  அஞ்சலி தன் வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்தவள். (அப்படியா? - கும்மாங்கோ). ஒரு சராசரியான இந்தியப் பெண்ணின் பிரதிநிதி என்று அஞ்சலியை தாரளமாக சொல்லலாம். இந்த மாதிரியான முறையற்ற உறவுகளை, அவை ஏன் ஏற்படுகின்றன என்கிற சமூகக் காரணிகளின், பின்னணிகளின் புரிதல் இல்லாமல், அதற்குக் காரணம் தாங்கள்தான் என்று கூட தெரியாமல் கோபமும் எரிச்சலும் கொள்ளும் ஆண் சமூகத்தைப் பற்றி நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

சினிமாப் பாடல்களின் வரிகள் முதற்கொண்டு, அதில் வரும் ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனங்கள், அன்றாட வாழ்க்கையின் உரையாடல்கள், சாலையில் செல்லும் பெண்களைப் பற்றிய கமெண்ட்டுகள். பார்வைகள், பெருமூச்சுகள்… என்று பெரிதும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய நினைத்துக் கொண்டும் சுவாசித்துக் கொண்டும் இயங்கும் ஆண் சமூகம் பாலுறவு என்கிற விஷயத்தை நேரடியான யதார்த்தத்தில் கையாளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எத்தனை பலவீனமாக இருக்கிறது?

சுஜாதாவின் பிலிமோத்ஸவ் என்ற சிறுகதையை இங்கு நினைவு கூரலாம். பெண்ணுடல் பிம்பங்களைப் பார்த்து பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவன், அது நிஜத்தில் கிடைக்கும் போது பயந்து விலகுவான்.

அத்தனை வருடங்கள் காத்திருந்து நினைத்து நினைத்து சப்புக் கொட்டிய விஷயத்தை திருமணம் முடிந்த நேரனுபவத்தில் சந்திக்கும் போது மூன்றே நிமிடங்களில் கொட்டி விட்டு ஆயாசமாக திரும்பிப் படுத்துக் கொள்வது எத்தனையொரு முரண்நகை? காமசூத்ரா எழுதிய வாத்சாயனர் உருவான கலாசாரச்சூழலில்தான் இப்படியொரு முரண்பாடு. இதில் விவரிக்கப்பட்டிருக்கும் உடலுறவு போஸ்களையெல்லாம் ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டு ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாரு சொல்வதைப் போலவே ஒரு கிழட்டு மனநிலை வந்து மனைவியிடமிருந்து விலகி விடியற்காலையில் பெருமாள் கோயிலுக்கு ஓடி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தைக் கூட மன்னித்து விடலாம். எத்தனை ஆண்கள் தங்களின் மனைவியுடன் உட்கார்ந்து ஆதரவாக, அன்பாக சாவகாசமான நிமிடங்களை செலவழிக்கிறார்கள்? 'ஏவ்' என்கிற ஏப்பத்துடன் எழுந்து போகிறவர்கள் ஒருநாளாவது மனைவியின் சமையலை வாய் விட்டு புகழ்ந்திருப்பார்களா? சமையலில் உதவி செய்திருப்பார்களா? இது போன்ற சிறுசிறு அன்புகளைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். மூன்று மணி நேர கலவியைக் கூட அல்ல. இது கிடைக்காத பெண்கள்தான் வேறு வழியில்லாமல் சிறிது அன்பைக் கொட்டினாலும் பிற ஆண்களோடு ஒட்டிக் கொள்கிறார்கள். அன்பை எதிர்பார்த்து ஏங்கும் இந்த மனநிலையை (அப்படியா? - கும்மாங்கோ) .வெறும் உடல்த் தினவாகச் சித்தரித்து 'கள்ளக்காதல்' என்ற லேபிளில் கொச்சைப்படுத்துவது அறிவீனம். அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகளின் மூலம் இது போன்ற விஷயங்கள் வாசகர்களுக்குத் தெளிவாகின்றன.

சிறுவயதில் வளர்ந்து திரிந்த நாகூர் என்ற நிலப்பிரதேசம் பற்றின எழுத்தாளரின் சமகால விவரணைகள் கவர்கின்றன. போலவே 70களில் தமிழ்ச் சமூகத்தை ஆக்ரமித்த இந்தி சினிமா இசை பற்றிய விவரங்கள். இப்பகுதியை வாசித்தவுடன் 'ஆராதனா’ பாடல்களை உடனே கேட்க வேண்டுமென்று தோன்றியது. இது போல் மனவெழுச்சி தரும் (வெறும் மனஎழுச்சி மட்டும்தானா? -கும்மாங்கோ) நுட்பமான பகுதிகள் உள்ளன.

எக்ஸைல் என்கிற தலைப்பு இந்த நாவலின் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது. இங்கிருக்கிற அபத்தச் சூழல்களை, மனிதர்களை சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு நுண்ணுணர்வுள்ள மனிதன், எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியாதா என்றுதான் ஏங்குவான். அவ்வகையான மனப் போராட்டங்களையே இந்த நாவல் பல இடங்களில் நுட்பமாக முன் வைக்கிறது.


*


முடிவாக‌


நாவல் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சில சிறிய குறைகள்தான். அட்டை இன்னமும் ரகளையாக அமைந்திருக்கலாம். சில இடங்களில் ஆங்கில எழுத்துக்கள், எழுத்துருப் பிரச்சினையால் ஞணீஞனசனஞி என்பது போல் பிரசுரமாகியிருப்பதைக் கவனித்திருக்கலாம். அடிக்குறிப்புகளில் ஓரிடத்தில் 'பூம் பூம் = உடலுறவு’ என்றெல்லாம் விளக்கம் அளித்திருப்பதைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது. வாக்கியத்தின் தொடர்ச்சியிலேயே அது புரிந்து விட்டது. மேலும் சாருவின் எழுத்தில் இதையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமேயில்லை. அவரின் வாசகர்கள் என்ன இது கூட தெரியாத மு.கூ.-க்களா?


தன்னுடைய அடுத்த நாவலையாவது சாரு இது போன்ற ஆட்டோ பிக்ஷன் என்கிற பாணியில் ஜல்லியடிக்காமல் முற்றிலும் வேறு பின்னணியில் எழுத வேண்டும் என்பதே நம் கோரிக்கை.


(என்ன எழவுய்யா இது? பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல் ஒரு குழப்பமான கட்டுரை. புத்தகத்திற்குத் தொடர்பில்லாமல் வரும் த’ண்டபாணி அண்ணன் சமாச்சாரமெல்லாம் எதற்காக? அதுவும் ஆட்டோ பிக்ஷனா? புதிய எக்ஸைல் நன்றாக இருக்கிறதா, இல்லையா?, வாங்கிப் படிக்கலாமா? கூடாதா? இது வெறும் செக்ஸ் புத்தகமா? இல்லை இலக்கியப் பிரதியா? இந்தக் கட்டுரையில் இருந்து என்னதான் புரிந்து கொள்வது? கடவுளே, இவன் சாருவை விடக் குழப்பவாதியாக இருப்பான் போலிருக்கிறதே - கும்மாங்கோ)


***


பைத்தியக் காலம்

நர்சிம்


தை சென்னையில் இருக்கும் ஒரு பிரதான சாலை என்று சொன்னால் அபத்தமாய் இருக்கும். நெரிசலும் அழுக்கும் ட்ரை-சைக்கிளில் ஏற்றப்பட்ட சரக்குகளும், பைத்தியக்காரர்களின் ஓட்டமும் எனத் திமிறும் சாலை. எவ்வளவு கவனமாக ஓட்டினாலும் வாகனத்தில் கீறல் விழுவது உறுதி. ஒரு காலத்தில் இந்தச்சாலை அவனுக்கு வாழ்வின் அற்புதமான தரிசனங்களைக் காணக் கொடுத்திருந்தது. எல்லா அற்புதங்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அபத்தமாகத் திரிபடும் நிலை ஏற்படும். ஆனால் அவனுக்கு இன்னமும் அந்தச் சாலைக்குள் நுழைந்துவிட்டால் ஓர் இனம்புரியாத அற்புதத்தன்மை மிதக்கச் செய்யும். மிதந்து எதிரே இருந்த ‘மால்’ எனப்படும் பிரம்மாண்ட‌ வணிக வளாகத்துள் நுழைந்தான்.

 

ஒன்றைப் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதன் உட்புற உயரம்தான்.   அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்ததுமே அதன் உட்புற விதானத்தின் உயரம் பரவசம் கொள்ளச் செய்துவிடும். அவ்வளவு உயரமான மேற்கூரை ஒருவித ராட்ஸதத் தன்மையை உணர்த்திவிடுவதில் துவங்கும் ஆச்சர்யத்தை ஒவ்வொரு தளமும் அப்படியே தக்கவைத்துக் கொண்டு விடுகிறது என்று தோன்றியது அவனுக்கு. மன்னர்களைப் பிரம்மாண்டமாய்க் காட்டியது அவர்களின் அரியணையை விடவும் அதற்கு மேல் ஒய்யார உயரத்தில் இருந்த மேற்கூரைதானோ?, அதனால்தான் எல்லா மதக்கடவுள்களின் வசிப்பிடங்கள் கோபுரங்கள் என்ற பெயரில் உள்ளுக்குள் அவ்வளவு உயர மேற்கூரைகளோ என யோசித்தபடி அண்ணாந்து பார்த்தான்.

 

எஸ்கலேட்டரில் ஏறத் தயங்கி நிற்பவர்கள் பதட்டத்தை விளையாட்டு போன்ற பாவனையில் மறைத்து ஏற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு தன்னுடைய ஆரம்பக்கால எஸ்கலேட்டரில் தடுமாறி ஏறிய அனுபவங்கள் நினைவிற்கு வர மறுத்தது. அவர்களை ஒரு நாகரீகப்பார்வையில் ஒதுக்கி மேலே ஏகினான்.

 

மூன்றாவது தளத்தில் இருந்து மேலே பார்த்தபோதும் மேற்கூரையின் பிரம்மாண்டம் அப்படியே இருந்தது. கீழே பார்த்தால், எல்லாம் சிறிதாக அழகாகத் தெரிந்தன. நாம் உயரம் அடைந்து நமக்கு கீழே இருக்கும் உலகத்தைப் பார்த்தால், அழகாகத் தெரியத் துவங்கிவிடுகிறது எல்லாமும் என்று நினைத்துக் கொண்டான். இன்னும் மேலே போக வேண்டும்.

 

மேல்தளம் ஹோவென்ற சத்தத்தோடு திறந்தது. விதவிதமான மக்கள் விதவிதமான உணவுப்பொருட்களை ஒரேவிதமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களை மெல்லக் கடந்தவன் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு அமர்ந்தான். எப்போதும் அந்த மூலையில்தான் அமர்வான், அவளோடு. ஆனால் இப்பொழுதெல்லாம் இப்படித் தனியாகத்தான். இந்தத் தனிமை அவன் விரும்பி ஏற்ற ஒன்று. அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடித்தான்.

 

காலம் அவனை அங்கிருந்து எழுப்பி அழைத்துச் சென்றது. அவன் ஏன் அங்கிருந்து எழுந்தான் என்ற பிரக்ஞையேதுமின்றி எழுந்து காலிப்பாட்டிலை கரடியின் பிளந்த வாய்க்குள் போட்டுவிட்டு, கீழே இறங்கினான். நடந்தான். அங்கிருந்த திரையரங்கத்தின் வாயிலில் ’நுழையலாம்’ எனும் கட்டளைக்குக் காத்திருந்தார்கள் சிலர். அவன் பார்க்கவேண்டிய படத்தின் காட்சிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் என்பதால் இன்னும் நடந்தான். இறங்கினான்.

 

ஒரு கணம்தான். நாகம் கொத்த எடுத்துக்கொள்ளும் ஒரு நொடிக்கும் குறைவான கணத்தில் அக்காட்சியை அவன் கண்கள் பிரதி எடுத்துக்கொண்டன. அவள்தானா? அவள்தான். தன் கணவனுக்குக் காலணிகளைத் தேர்ந்தெடுத்துக் காட்டிக்கொண்டிருந்தாள். அவன் நிராகரிக்க நிராகரிக்க சளைக்காமல் வெவ்வேறு என அதே குதூகலம். அவளை மீண்டும் அவன் பார்த்தது அவள் வயிறு மேடிட்டு இருக்கிறதா என்பதைப் பார்க்கத்தானேயன்றி அவளின் கணவன் எப்படி இருக்கிறான் என்பதை அறிய அல்ல. ஆனாலும் பார்த்தான். ஜீன்ஸ் லேசாகக் கிழிபட்ட நவீனம், மீசை தாடி ஏதுமற்ற மழுமழுமுகத்தில் நவநாகரீகமாய் இருந்தான்.


காலம் அன்றைக்கான தன் வேலையைச் செய்திருந்தது. இவ்வளவு பெரிய நகரத்தில் ஒருவரையொருவர் காணக்கொடுக்காமலே வைத்திருக்கவும் அதற்குத்தெரியும். இத்தனை நாள் அப்படித்தானே வைத்திருந்தது.

 

திரையரங்கம் செல்ல வேண்டியது மறந்து, தானாக இறங்கிக் கொண்டிருந்தான், தானியங்கியில்.


தே காலம்தான் சிலவருடங்களுக்கு முன்னர், எங்கிருந்தோ அவளை அடித்துக்கொண்டு வந்து அவன் முன் நிறுத்தியது. அதற்குப்பிறகு அவனை சதா அவள்பின் நிறுத்தியது.


அந்த நெரிசலான வீதியில் அவள் நடந்து வரும்பொழுது ஒரு பைத்தியக்காரன் ஏதோ கேவலமான அங்க சேட்டை செய்து அவளைத் துரத்த, ஓடியவளை அந்தப்பக்கமாக கடந்த இவன் காத்து அந்தப் பைத்தியத்தை அடித்து விரட்டியதில் துவங்கியது அவர்களுக்கான பரிச்சயம். அதன்பிறகு ஒவ்வொரு முறை அவளை அவன் ஏற்றிக்கொள்ள வரும்பொழுதும் அந்தப் பைத்தியம் அவனை முறைத்துவிட்டு பயந்து ஓடுவான். அவன் பெருமையாய் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொள்வான்.

 

திகாலை, இளமாலை, நடுஇரவு, இசை, பயணம், குழந்தை, முதியோர், யானை, ரயில், சூரியன், நிலா என எல்லாவற்றையும் ஒரு பெண்ணால் அப்படி ரசிக்க முடியுமா? எதைப்பார்த்தாலும் இப்படிக் குதூகலம் அடையுமா மனது? அவளுடைய ரசனையை ரசிப்பதே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது. ரயிலும் பேருந்தும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதைப் பார்ப்பதற்காகவே பாரிஸ் கார்னர் அருகில் அழைத்துப்போகச் சொல்லுவாள். அப்படிப் போவதை ஒரு குழந்தையைப்போல் பார்த்துக் கைதட்டிச் சிரிப்பாள்.


இப்படி, ஆரம்பத்தில் அவனுக்கு விநோதமாகப் பட்டவைகளை இப்பொழுது அவன் தனியாகச் சென்று பார்த்து அனுபத்து வருகிறான்.

 

குறிப்பாய் இரவை அவள் எதிர்கொள்ளும் விதம் அவனுக்கு வாழ்க்கையின் வசீகரத்தைப் புரிய வைத்தது. அதற்கு முன்னர் எத்தனையே இரவுகள் வேலை முடிந்து வீட்டிற்குப் போவான். அதில், இவ்வளவு தாமதமாகப் போகிறோமே என்ற அலுப்பும் சுயகழிவிரக்கமும் மட்டுமே இருக்கும்.

 

ருநாள் அவளிடமிருந்து வந்து குறுஞ்செய்தியின் பொருட்டு, அவள் அலுவலகத்தில் இருந்து விடுதியில் விடவேண்டும் என்பதற்காகக் காத்திருந்தான். அவன் கண்களிலிருந்த தூக்கம், சோம்பல் அத்தனையையும் அவளிடமிருந்து வந்த ‘ஹே’ எனும் உற்சாகக் குரல் போக்கிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் உதவிக்காக அழைத்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே காருக்குள் அமர்ந்தவளின் குரலில் அந்த இரவிலும் அவ்வளவு உற்சாகம், சுகந்தம். பாட்டை சத்தமாய் வைத்துக்கொண்டே அன்றைய நாளின் தாமத்திற்கான காரணத்தைச் சொல்லி, அதற்கு நன்றியும் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். இரவின் வீதிகளில் அப்படி அவனோடு பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காகத்தான் அந்த நன்றி என்று அவள் சொன்ன நொடியில் அவன் கண்கள் விரியத் தொடங்கி இருந்தன.


புதிய பார்வையும் கோணமும் அவன் கண்களுக்குப் பழக ஆரம்பித்த நொடி அது.

 

அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கத் தயங்கியவள், மெல்ல அவன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தாள். அது முதல் தொடுகை என்று அவன் உணர்ந்து கொண்டிருக்கும் பொழுதே சற்றும் தயங்காமல், அந்த இரண்டு மணி இரவை இன்னும் கொண்டாட வேண்டும் என்று சற்றும் தயக்கம் இல்லாமல் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து ஸ்டியரிங்கில் வைத்து “போ” என்பது போல் சைகை செய்துவிட்டு மகாராணி போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கையைக்கட்டிக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். இரவின் மஞ்சள் ஒளி வெளிச்சத்தில் அவளின் அந்தச் சிரிப்பு ஒரு புகைப்படம் போல் அவன் கண்களுக்குள் உறைந்துபோனது.  

 

வள் போகச்சொன்ன இடம் பாரீஸ் கார்னர். அழுக்கும் நெரிசலும் சிறுவியாபரமுமாய் வெறுக்கவைக்கும் இடத்தை அந்த இரவில் அவள் அவனுக்குப் புதிதாய் அறிமுகப்படுத்தினாள். பழைய கட்டிடங்களின் பிரம்மாண்ட அழகை அந்த இரவு முதல்முறை அவனுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அவளின் குதூகல வர்ணனைக்காக மீண்டும் மீண்டும் அந்த வெற்றுச்சாலையை சுற்றி வந்தான். ‘அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்’ என்ற பாடலை ஹம் செய்துகொண்டே இந்த இடம்தானே அது என்றவளிடம் தலையசைத்துச் சிரிப்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

 

அவனை இரவின் ரசிகன் ஆக்கியிருந்தாள். மின்விளக்குகளின் வரிசையை எந்தக்கோணத்தில் பார்த்தால் பறவையின் சிறகுகள் போல் இருக்கும் என்பதில் ஆரம்பித்து இருள்நிறத் தார்ச்சாலையின் வளைந்து நீளும் அழகோடு பேசுவது வரை அவனுக்குப் பழகிக்கொடுத்தாள். அவன் தோளில் அவள் இயல்பாய் சாயும் பொழுதுகளுக்காக அவளை வெகுதூரம் கூட்டிச் சென்றான், ஒவ்வொரு முறையும்.

 

ருமுறை கோயில்களின் தொன்மம் குறித்துப் பேசிக்கொண்டே அக்கோயிலை அடைந்திருந்தார்கள். இறங்கியதும் உள்ளே ஓட்டமாக ஓடியவள் அங்கிருந்த‌ மாட்டுச்சிலையின் காதில் ஏதோ சொன்னாள்.

 

அதைப்பார்த்துச் சிரித்தவன், நந்தியின் காதில்தான் சொல்வார்கள். இது கோமாதா என்றான். இரண்டு சிலைகளும் ஒருபோலத்தானே இருக்கிறது என்பதுபோல் பார்த்தவளிடம், நந்தியின் வலது கால் தரையில் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக இருக்கும், கோமாதாவின் கால் நன்கு உள்நோக்கி மடங்கி இருக்கும் என்றும் விவரித்தான். ஆச்சர்யமாகி, நந்தி மற்றும் கோமாதா சிலைகளை ஆய்ந்து உறுதி செய்துகொண்டவள் தோள்களைக் குலுக்கி, சிறுவித்தியாசம்தானே அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்றதும் சிரித்துவிட்டான்.

 

அவர்களின் எல்லாச் சந்திப்புகளின்போதும் அவன் மீசையை அவ்வளவு சிலாகிப்பாள். அவனுக்கு கர்வமும் வெட்கமும் கலந்து வெளிப்பட அதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டே அவன் மீசையைப் பிடித்து இழுப்பாள். வெட்கிச் சிவக்கும் கன்னம். இருவருக்கும்.

 

எதிர்பாராத சந்திப்பை நட்பாக மாற்றியவளும் அவளே. அந்த நட்பை, மெல்ல அடுத்தக் கட்டம் நோக்கி முன்னேறச் செய்தவளும் அவளே. அப்படித்தான் ஒருநாள், அவன் அலுவல் நிமித்தம் தஞ்சாவூர் செல்லவேண்டியிருப்பதாகவும், தான் வெளியில் இருந்ததால் அவளைவிட்டு உடனே அவன் ரயிலில் செல்வதற்கு முன்பதிவை செய்யுமாறும் பணித்தான். சரியென்றவளிடம் இருந்து சற்றைக்கெல்லாம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. லூசாப்பா, காரில் குதூகளமாய்ச் செல்லாமல் ரயிலில் போகிறேன் என்கிறாயே என்ற அந்தச்செய்திக்கு உடனடியாக, அவ்வளவுதூரம் தனியாகச் செல்வதைவிடவும் மோசாமான முடிவு வேறொன்றும் இருக்காது என்ற அவனின் பதிலுக்கு வந்த அவளின் பதில் நல்ல ஆங்கிலத்தில் இப்படியாக இருந்தது, “யார் சொன்னது நீ தனித்து விடப்பட்டவன் என்று? நான் இருக்கிறேன்”.

 

அவ்வளவுதான். அவன் “அத்தனைக்கும் ஆசைப்படும்” ஒரு சந்நியாசியைப்போல சம்மதித்து இருவரும் தஞ்சை நோக்கிக் கிளம்பினார்கள். சிறுபிள்ளையின் குதூகலம் அவள் முகத்திலும் தெரிவையின் தெளிவு உடலிலும் குடிகொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டான். அவனின் அனாயசமான ஓட்டும்திறனை வியந்தோதியவள், அவன் இடது தோள்பட்டையில் சாய்ந்துகொண்டே, ஒரு மன்னன் தன் குதிரையின் மீது வைத்திருக்கும் ப்ரேமையையும் கட்டுப்பாட்டையும் போல் அவன் கார் ஓட்டும் லாவகம் இருப்பதாகச் சொன்னதும், அவனிடம் நளினமும் வேகமும் சேர்ந்துகொண்டது. அவளின் பிடிப்பும் இறுகியது.

 

தஞ்சையில், அவன் அலுவலக வேலை முடியும்வரை தான் தஞ்சை கோயிலில் இருப்பதாகச் சொன்னவள், கோயிலின் முகப்புத் தெரிந்ததும் அவளின் பெரிய கண்களை அகல விரித்து ஆச்சர்யம் தாங்கி, அவளின் வழக்கமான ‘வாவ்வ்’களோடு, அவனை விட்டு விலகி இறங்கி கிட்டத்தட்ட கோயில் நோக்கி ஓடத்துவங்கினாள். இவளின் இந்த ரசிக்கும் ஹார்மோன்கள் எங்கு எப்படி உற்பத்தியாகின்றன என யோசித்துச் சிரித்துக்கொண்டவன், ஓடும் அவளின் பின்னழகை நின்று ரசித்துவிட்டுக் கிளம்பினான்.


வேலையில் மனம் லயிக்கவில்லையென்ற உணர்ந்த நொடியில் சட்டென முடித்துக்கொண்டு சடுதியில் கோயிலை அடைந்துவிட்டிருந்தான். கோயிலுள் நுழையும்போதே அதன் பிரம்மாண்டமும் அமானுஷ்யமும் அவனை ஆட்கொள்ளத்துவங்கியதாக உணர்ந்தான். அவ்வளவு பெரிய நந்தியை நிமிர்ந்து பார்த்தவன், தன்னை ராஜராஜனாகவே பாவித்துக்கொண்டான். எங்கிருந்தோ ஓடிவந்தவள் அவன் பின்னாலிருந்து கட்டிக்கொண்டே, அந்த சிலை குறித்த தன் ரசிப்பை அடுக்கத்துவங்கினாள்.

 

உயர்ந்த கோபுரத்தை பார்த்த பரவசத்தில் இருந்தவனின் தோள்களில் தொங்கியவளின் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான். அவள் அழுதிருந்தது போல் தெரிய பதறியவனைப் பார்த்துச் சிரித்தாள்.

 

கோயிலின் நீண்ட வளாகத்தில் நெடும்மெளனத்தோடு நடந்தார்கள். அவ்வளவு சிலைகள். அத்தனை நேர்த்தியான வரிசை. எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டம் என மிதப்பில் இருந்தவனை நோக்கி மெல்லச் சொன்னாள், அவனைப்போலவே அவளும் காதலா காமமா நட்பாயென்ற குழப்பம் தாண்டி நேசிப்பின் உன்னதம் உணர்ந்ததாயும் ஆனாலும் தன் தந்தையிடம் இருந்த வந்த தொலைபேசி அழைப்பும் அவள் திருமணம் குறித்த தகவலும் என பேசிக்கொண்டே சென்றவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.

 

தந்தையா, ரசிக்கும் வாழ்க்கையா என்ற போராட்டமனநிலை அவளை எங்கு அழவைத்துவிடுமோ என்று பார்த்துக்கொண்டிருந்தவனை நோக்கி அழும் குரலில் என்ன செய்வது என்பதாகக் கேட்டாள். பிரகாரத்தைச் சுற்றி மீண்டும் அந்த நந்தியின் முன்னர் நின்று கொண்டிருந்தார்கள் அவனும் அவளும்.

 

இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்த நந்தியை நிமிர்ந்து பார்த்தவன் அவனையும் அறியாமல், அவள் ரசனையென்பது நதியின் நளினம் போன்றது என்றும் ஓடும் திசைகளில் இருக்கும் அற்புதங்களை ரசித்துக்கடக்கும் வல்லமை அந்த நதியைப் போலவே அவளுக்கும் இருக்கிறது என்றும், அதனால் தந்தை சொல் கேட்பதே சாலச்சிறந்தது என்றும் தெளியவைத்தான். ஒரு நொடி திகைத்தவள், தன் வாழ்வின் ஆகச்சிறந்த ஆசையாக அவள் நினைத்துக்கொண்டிருந்தது, நிறைமாத கர்பிணியாக அவனோடு வணிகவாளகத்திற்குள் வல‌ம் வரவேண்டும் என்பதாக இருந்தது என்றும் ஆனாலும் அப்பாவை தவிக்க விடுவது தவறு என்றும் உணர்ந்து சொன்னவள் அவன் தோளில் சரிந்து கொண்டாள்.

 

லேசாகச் சாய்ந்தவன் அவள் தலையின் மீது தன் தலையைப் பொருத்திக்கொண்டு அந்த உயர்ந்த கோபுரத்தைப் பார்த்தான். இரு தலைகளும் ஒட்டி நிற்கும் அவர்களின் நிழல் அவர்கள்முன் ரம்மியமாய் படர்ந்தது. படர்ந்ததை அவள்தான் சிறு கேவலுடன் அவனுக்கு சைகையில் சுட்டினாள். அதைப் புகைப்படமாக எடுத்துக்கொண்டான். ஆகச்சிறந்த ’நிழற்’படம் அது.

 

தஞ்சையை விட்டு வெளியேறி, சென்னை வந்ததும், அந்த கோயிலின் பிரம்மாண்டம் அகன்றதும்தான் அவனுக்கு இழப்பின் வலி புரிபட ஆரம்பித்தது. எப்படி அவ்வளவு எளிதாக ஒத்துக்கொண்டான் என்று எவ்வளவு யோசித்தும் அவனால் அந்த அபத்தமான முடிவை உணரவேமுடியவில்லை.

 

வளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் மீசை, நிறம் என அவனோடு ஒப்பிட்டு ஒவ்வொருவரையும் நிராகரிக்கத் துவங்கினாள். அவள் தந்தையின் அன்பிற்கு முன்னர் எதுவுமே பெரிது கிடையாது அவளுக்கு என்பதால், தந்தை கொடுத்த சுதந்திரத்தின் கைமாறாய், தந்தை சொல் மணமகனோடு திருமணம் என்பதையும் குதூகலமாய்த்தான் சொன்னாள்.

 

அவனோடுதான் திருமணத்திற்குத் தேவையான ஆடையணிகலன்களை வாங்கினாள், குதூகலத்தோடே இருந்தாள். அவனுக்கு மட்டும் ஏதோ ஒன்று கனமாகவே இருந்தது. வழக்கமான பாணியில் கார் ஓட்டமுடியாமல் திணறினான். இரண்டுமுறை சக சாலையோட்டிகளிடம் வசவுகள் வாங்கினான்.

 

எப்பொழுதும்போல் அவள் இறங்கும் இடம் வந்தது. எப்பொழுதும்போல் சட்டென இறங்கிவிடாமல் இருக்கையில் சாய்ந்து சற்று நேரம் அமர்ந்திருந்தாள். திடீரெனத் திரும்பி, அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள். அவன் மார்பில் புதைந்தழுதாள். அழுது முடித்ததும் நிமிர்ந்தவள் அவன் சட்டையிலேயே முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். தீபம் போல் தீர்க்கமாய் இருந்தது அப்பொழுது அவள் முகம்.

 

அவளுக்கும் காலத்திற்கும் மட்டும் தெரியும். அது ஏதோ ஒன்றின் இறுதி என்று.

 

தன்பிறகு காலம் அவனை இன்றுதான் அவள் முன் நிறுத்தியது. அதுவும் ஒருதலைப்பட்சமாக இவனை மட்டும் பார்க்க வைத்து. ஒருவேளை அவளும் பார்த்திருக்கக்கூடும், ஏனெனில் அவள் சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்த சட்டையைத் தான் அன்றும் அணிந்திருந்தான். அவள் கண்களுக்கு அது பட்டிருக்கும் என்றும் நினைத்துக்கொண்டே அந்த வளாகத்தில் இருந்து வெளிப்பட்டான்.

 

அவன் போல் மீசை அவள் கணவனுக்கு இல்லையென்றாலும், சிறிய விசயம்தானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வாள். சுரீரென்று வெயில் கண்ணாடியைத் தாண்டித் தாக்கியது.

 

திர்சாலையில் அந்தப் பைத்தியம் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஏதோ நினைத்தவன் காரை ஓரமாய் நிறுத்தி பைத்தியத்தை நோக்கி நடந்தான். வழக்கம்போல் பயந்து ஓட எத்தனித்த பைத்தியக்காரன் அவன் கண்களைப் பார்த்து மெல்ல நின்றான். சைகையால் சாப்பிட்டாயா என்று கேட்டவனைப் பார்த்த பைத்தியத்தின் வெடித்த உதடுகள் அனிச்சையாய் வெம்பித் துடித்தன. தெருமுனையில் இருந்த ’பாய்’ கடையில் பிரியாணி பொட்டலம் வாங்கியவன் அந்தப் பைத்தியத்திடம் கொடுத்து உண்ணச் சொன்னான்.

 

எப்பொழுதும்போல் தன் மொபைல் கான்டாக்ட் லிஸ்ட்டிற்குச் சென்று KANNAMMA என்று பதிந்த எண்களை விரலால் தடவிக்கொடுத்தான்.


ரு பைத்தியக்காரன் ருசித்துத் தின்பதை, அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று சாலையைக் கடக்கும் எல்லோரும் விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே கடந்தார்கள். காலமும்.


***




பொன்.வாசுதேவன் கவிதைகள்


01


இலை நரம்புகளில் விரவிக்கிடந்த

கிளைக்குழைவில் தேங்கிய 

கனி நுனி தளும்பிய

மலர்க்குழி மல்கி நிறைந்த

மரம் பின்னிய கொடியிடைக் கிடந்த

வேரடி மண் நெகிழ்த்திய

எல்லா நீரும் 

அதன் கனிந்த ஈரப்பதமும்

மழை முடிந்த மறுநாளில்

காற்றிலேகி விடுகின்றன


பாழுங்கண் கொண்டு துளைத்து

இரக்கமற்றுக் கீழிறங்கி

மறையேலெனச் சொல்லி

வெந்நா கொண்டு உறிஞ்சும் சூரியன்


அதிலும் தப்பி

வறளும் தருணம் நோக்கிக் காத்திருக்கும்

நுனி சுருண்ட இலைகளுக்குள் 

தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர்

சிற்றலை நெளிய மௌனப் பெருமூச்செறிந்தபடி.


*


02


ஒளிர்கிற வெளிச்சத்தில் மிளிர்ந்து
இருளிலொழிகிறது நிழல்

விரிதலையாய் வளிக்கிசைந்து சுழன்றாடி
உனக்கென் கவலை
உனக்கென் கவலையென
ஓங்கிச் சிதற ஒலியலை பதிகிறது

வாழ்தலின் பலி கொண்டலையும்
அற்பச் சிம்மாசனத்தின்
மூலையில் சுருளுற்றுக்கிடக்கும்
இருண்ட நான்
நீயறியாததொன்றில்லை


உயிரின் ரேகையெங்கும்

நுண் வேர்களாய் வலி பரவ

துன்முகம் சூழ
வீழ் பாதையினுள்ளாக
துள்ளத்துடித்தடங்கி
மெல்லச் சரிகிறது சுயம்
வெம்மண்ணின் புதைகுழிக்குள்.


*


03


பின்னிரவிற்ப் படரும் கூதற் காற்றின் வசீகரத்தில்
அலையென எழும்பிப் பரவெளி பாரிக்கும்
மென்னுறுமலுடன் உன் விழிப்பு

வேப்பம்பிசின் வாசனையென 
வசீகரித்துச் சப்தமற்ற காலடிகளோடு
உள்ளுக்குள் நடமாடும்
ஞாபகங்கத்தின் பழுப்பு வர்ணங்கள்

நொறுங்கிய கண்ணாடி குவியலுக்குள்
துண்டுக்கொன்றாய் என
கணக்கற்றுக் கொட்டிக் கிடக்கின்றது முகம்

விரல்களின் குருத்திலிருந்து
திரையில் சொட்டிக் கொண்டிருக்கிறது
வேரிழந்த எழுத்துகள்

பறந்தலையும் நினைவுகளை
ஒவ்வொன்றாய்ப் பிடித்ததன்
சிறகுகளைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாய்.


***

வினோத நகரம்

முரளிகண்ணன்


ஓல்ட் எம் ஆர் என்று தமிழ் சினிமா வினியோக வட்டாரங்களில் அழைக்கப்படும் பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவிட்டன. விருதுநகர் மாவட்டத்தைத் தவிர மற்ற ஐந்து மாவட்டக்காரர்களும் விருதுநகர் என்னும் ஊருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள். அவ்வளவு ஏன், விருதுநகர் மாவட்டத்திலேயே விருதுநகரைத் தவிர மற்ற ஊர்க்காரர்களும் கூட அவ்வூருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள்.


முக்கியமாக மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தங்கள் இளமைக்காலத்தை கழித்தவர்கள் விருதுநகருக்கு முதன்முதலாக வந்தால் பல வித்தியாசங்களை உணர்வார்கள். 1991-ஆம் ஆண்டு நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டு இருந்தபோது, என் தந்தை பணியிடமாறுதல் காரணமாக விருதுநகருக்கு குடிபுகுந்தோம். இரண்டு நாட்கள் கழித்து இரவு உணவு பார்சல் வாங்க சற்று தொலைவில் இருந்த கடைக்குப் போனேன். வாங்கும் போது, கடை கல்லாவில் இருந்தவர், புதுசா குடிவந்திருக்கீங்களா? என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏதாவது சின்ன ஊரில் ஒரு கடைக்காரர் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. ஆனால் ஒரு மாவட்டத் தலைநகரில், தமிழ்நாட்டில் பருப்பு, எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் கேந்திரங்களில் ஒன்றான விருதுநகரில் எப்படி கண்டுபிடித்தார் என ஆச்சரியம்!


வீட்டிற்கு வந்து பொட்டலத்தைப் பிரித்ததும் வீட்டிலுள்ளவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா புரோட்டா வாங்கிட்டு வரச் சொன்னா வரிக்கி வாங்கிட்டு வந்திருக்க என்றார்கள். நான் முழிக்க, பின்னர் தான் தெரிந்தது இங்கே புரோட்டா என்றாலே எண்ணையில் முக்குளிப்பாட்டிய புரோட்டாதான் என்றும், சாதா புரோட்டா கிடைப்பது அரிது என்றும்.


அடுத்த நாள் காலைக் காட்சிக்கு ‘மன்னன்’ திரைப்படத்திற்கு போனேன். அதற்கு முதல்நாள் மதுரையில் பயங்கர கூட்டம் இருந்ததை பஸ்ஸில் வரும்போது பார்த்திருந்தேன். ஆனால் இங்கே ஓரிருவர்தான் தென்பட்டார்கள். இத்தனைக்கும் படம் வெளியான முதல் வாரம். ஆனால் படம் பார்க்கும் போது பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் திரையைச் சுற்றி வண்ண விளக்குகளை ஒளிரவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால் சனி, ஞாயிறு 5 காட்சிகள் என்று போஸ்டரில் துண்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள், சனிக்கிழமை படத்துக்கு போய்விட்டு வந்து எவ்வளோ கூட்டம் என அலுத்துக் கொண்டார்கள்.


பின்னர் தான் தெரியவந்தது, அங்கே எந்தப்படம் என்றாலும், சனி ஞாயிறு 5 காட்சிகளும், மற்ற நாட்களில் 4 காட்சிகளும் என்று. எல்லோருமே சனி, ஞாயிறுகளில் தான் படத்துக்கு வருவார்கள், அந்த ஊரின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். திங்கட்கிழமை காலைக் காட்சி ஃபுல் ஆனால் அந்தப் படம் ஆண்டின் பிளாக்பஸ்டராக விநியோக வட்டாரத்தால் கருதப்படும்.


ஒரு மாதம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரரின் பெண் திருமணத்திற்கு அழைத்தார்கள். காலை மண்டபத்திற்குப் போனோம். தேவையற்ற சடங்குகள் இன்றி, சமுதாயப் பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் தாலி கட்டினார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மண்டபம் பாதி காலியானது. காலை உணவு முடிந்ததும் மண்டபத்தில் மணமக்கள் உட்பட பத்துப் பேர்தான் இருந்தோம். பெண் வீட்டிற்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு என்று தனித்தனியாக மண்டபம், சாப்பாடு எனத் தெரியவந்தது. அப்படிப் பிரிந்து சென்ற பின்னும் சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பி விடுவார்கள், மதிய சாப்பாட்டிற்கு என்று தனியாக வீட்டில் போய் அழைத்தால்தான் வருவார்கள் என்று கேள்விப்பட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது.


திருமண விழாக்களை எல்லாம் கொண்டாட்டமாக அனுபவித்த மதுரை மாவட்டத்துக்காரனுக்கு இது ஜீரணிக்க முடியாததுதான். ஓரளவு பழக்கமானவர்களாக இருந்தால் கூட முதல் நாளே மண்டபத்திற்குச் சென்று, கூடமாட ஒத்தாசையாக இருந்து, பந்தி பரிமாறி, சேரை இழுத்துப் போட்டு வட்ட சேர் மாநாடு கூட்டி, பாடல்களைக் கேட்டுக் கொண்டே வம்பு வளர்த்து, மண்டபத்தை ஒரு சேர காலி செய்து கிளம்பும் கலாச்சாரம் எங்கே? மணமக்கள் வீட்டார் தனித்தனியாக சாப்பிடும் கலாச்சாரம் எங்கே? நல்லவேளை மணமக்களாவது ஒரே மண்டபத்தில் சாப்பிடுகிறார்களே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளத்தான் முடிந்தது.


அதற்கடுத்த மாதத்தில் பங்குனி பொங்கல் என்னும் விருதுநகரின் பிரசித்தி பெற்ற திருவிழா வந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் இருந்த இரண்டு திருமணமாகாத பெண்கள் சர்வ அலங்காரத்துடன் கழுத்து நிறைய நகையுடன் குடும்பத்தார் சூழ கிளம்பினார்கள். நம்ம பக்கமும் இப்படித்தானே பொண்ணுங்க, திருவிழான்னாலே ஃபுல் கோட்டிங்கோட கிளம்புவாங்க, ஆனா இங்க இவ்ளோ நகையை போட்டுகிட்டு போறாங்களே என லேசாக சந்தேகம் வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்த போது, இங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர மாட்டாங்கப்பா, இன்ன தேதிக்கு கோவிலுக்கு இல்லாட்டி திருவிழாக்கு கூட்டிட்டு வாங்க, நாங்க பார்க்குறோம்னு பேசி வச்சிக்குவாங்க. அங்க வச்சு பொண்ண பார்த்திட்டு பின்னர் முடிவு சொல்லுவாங்கப்பா என்றார். பெண்ணுக்கு எவ்வளவு நகை போட உத்தேசித்திருக்கிறார்களோ, அந்த அளவு நகையை பெண் அணிந்து திருவிழாவுக்குச் செல்வார், வியாபாரத்தில் ஈடுபடும் மாப்பிள்ளைக்கு 100 பவுன் என்றால், அரசு அல்லது தனியார் வேலையில் இருப்பவருக்கு 50 பவுனுக்குக் குறைவாகத்தான் போடுவார்கள் என்றார். அடுத்த நாள் திருவிழாவுக்குச் சென்ற போது, ஜமுக்காளத்தை விரித்து, சுற்றத்தார் நடுவே பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, என்னையறியாமல் மெல்லிய புன்முறுவல் xஏற்பட்டது.


ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குச் செல்லும் போது, வீட்டுப் பெண்களுக்கு எளிதில் சிநேகிதம் அக்கம் பக்கத்தில் கிடைத்துவிடும். பள்ளி, கல்லூரி பையன்களுக்கும் அப்படியே. 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தலைவர்களுக்கு பணியிடத்தில் சிநேகிதம் கிடைத்தால்தான். மற்றபடி வெளியிடங்களில் ஆத்மார்த்த நட்பு கிடைப்பது கடினம். கல்லூரி மாணவனான எனக்கே எங்கள் தெருவிலும், சுற்றுவட்டாரத்திலும் நட்பு கிடைக்கவில்லை. பெரும்பாலும் பையன்கள் குழுவாகவே இயங்கினார்கள். அந்தக் குழுவில் இடம்பிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. மிகவும் கன்சர்வேடிவ்வாக இருப்பார்கள்.


எனக்கே இப்படியெனில், என் தந்தையின் நிலை படுமோசம். விருதுநகர் சம்சாரிகளின் சொற்கோவையில் அதிகபட்சம் ஐம்பது வார்த்தைகள் தான் இருக்கும். அதிலும் சரக்கு, கொள்முதல், டிடி கமிசன், கலெக்‌ஷன், சிட்டை, செக் ரிட்டர்ன் போன்ற சில வார்த்தைகளே அதிகப்படியாக உச்சரிக்கப்படும். சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வராத காலம் வேறு. வேறு வழியில்லாமல் என்னுடன் அவர் ஒரு நண்பனைப் போல் உரையாட ஆரம்பித்தார். விருதுநகர் சென்றதால் எனக்கு கிடைத்த போனஸ் அது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருப்பூர், சிவகாசி ஆகிய இடங்கள் பிழைக்கச் செல்லும் இடங்களில் முதலிடம் வகிப்பவை. மற்ற மாவட்டத் தலைநகரங்களுக்கு ஓரளவுக்கு மக்கள் இடம் பெயருவார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கும் விருதுநகருக்கு யாரும் பிழைப்பு தேடி வருவதில்லை. மத்திய, மாநில அரசு பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் போன்றோர்கள் இட மாறுதலுக்கு உட்பட்டு வருவார்கள். அதனால்தான் புதிதாக குடிவரும் ஆட்களை உள்ளூர்க்காரர்களால் அப்போது எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.


விருதுநகரைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் கமிஷன் வியாபாரம்தான். பல எண்ணெய் தொழிற்சாலைகளும், சில நூற்பாலைகளும் உண்டு. கமிஷன் கடைக்கு பத்துக்கு பத்தடி இடமும், ஒரு டேபிளும், ஃபோனும் போதும். பெரும்பாலும் உள்ளூர்காரர்களே குமாஸ்தா மற்றும் குடோனுக்கான லோடு மேனாக இருப்பார்கள். தொழிற்சாலைகளிலும் பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள்தான் இருப்பார்கள். அந்தமாதிரி வேலைகளுக்கு வெளியூரில் இருந்து வந்து, வீடுபார்த்து குடித்தனம் இருக்கும் படி சம்பளம் இருக்காது. அவ்வளவு பெரிய ஊரில் நல்ல டேபிள் போட்டு சாப்பிடும்படி ஒரே ஒரு சைவ ஹோட்டல்தான் இன்னும் இருக்கிறது என்பதில் இருந்தே அந்த ஊருக்கு ஒரு நாளில் உத்தியோகப்பூர்வமாக வரும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.


விருதுநகர் மக்கள் பணத்தைச் செலவு செய்வதில் மிகச் சிக்கனமாக இருப்பார்கள். நகை வாங்கினால் கூட நல்ல உருட்டாக, பெரிய நகையாக, அதிக சேதாரம் வராத டிசைனாக வாங்குவார்கள். லைட் வெயிட் கலெக்‌ஷன் அவர்களிடம் இருக்காது. வீட்டிலும் கூட ஆடம்பரப் பொருட்கள் இருக்காது. ஃபர்னிச்சர்கள் கூட நல்ல ரீசேல் வேல்யூ உள்ள மர ஃபர்னிச்சர்களாகத்தான் வாங்குவார்கள். மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் சாதாரணமாகக் கிடைக்கும் காஸ்மெட்டிக் அயிட்டங்கள், பிஸ்கட் வகைகள் கூட விருதுநகரில் அரிதாகத்தான் கிடைக்கும். பணம் ஒரு குறிப்பிட்ட சாராரிடமே சுற்றி வருவதால் மற்றவர்கள் திடீரென உள்ளே வந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.


மூன்றாண்டுகள் கழித்து என் தந்தைக்கு மீண்டும் பணியிட மாறுதல். மற்ற ஊர்களில் எல்லாம் வீடு மாற்றும் போது, கூடவே வண்டியில் வரும்வரை நண்பர்களைக் கொண்டிருந்த எனக்கு கையைசைத்து வழியனுப்பக் கூட யாருமில்லாத நிலை.


அடுத்து பத்தாண்டுகள் கழித்து, சில மாதங்கள் விருதுநகரில் தங்கும் சூழல். பெரிய அளவில் மாற்றத்தை உணரமுடியவில்லை. சுற்றிலும் உருவாகியிருந்த பொறியியல் கல்லூரிகளால் கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக குடிவர ஆரம்பித்து இருந்தார்கள். தாவணி அணிந்த பெண்கள் குறைந்து சுடிதார், நைட்டி அதிகம் தென்பட்டது. ஆனால் ஒரு நல்ல துணிகளுக்கான ஷோ ரூமோ, ஸ்டைலான சலுனோ தென்படவில்லை.


சில வாரங்களுக்கு முன்பும் விருதுநகரில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சனி, ஞாயிறு 5 காட்சிகளுக்குப் பதிலாக ஞாயிறு மட்டும் 5 காட்சிகள், ஒன்றிரண்டு புதிய பேக்கரிகள், விருதுநகரின் பிரதான அசைவ உணவு கடையான பர்மா ஹோட்டலுக்கு புதிய பிராஞ்ச் என சில மாற்றங்கள் தான். உத்தியோகப்பூர்வமாக நட்பாகியிருந்த விருதுநகர்காரரிடம் இப்பவும் முன்ன மாதிரி வெளி ஆட்கள் வர்றதில்லையா? எனக் கேட்டேன்.


நீங்க வேற, வியாபாரத்துல இருக்குறவங்க தவிர மத்த ஆளுகள்ல நிறைய பேரு ஐடி இண்டஸ்ட்ரிக்கு போயிட்டாங்க என்றார். அப்படியும் இன்னும் ஊர் மார்டன் ஆகலையேப்பா என்றேன். விருதுநகர்ல பிறந்து வளர்ந்தவன் விருதுநகர்காரனாத்தான் எங்கயுமே இருப்பான். எந்த மெண்டாலிட்டியில இங்க இருந்து கிளம்பி போனானோ அதே மெண்டாலிட்டிலதான் இங்க பொங்கலுக்கு வருவான் என்றார்.


இப்போதும் கூட வீட்டில் தந்தை - மகன் சுமுக உறவு இல்லாதவர்கள், அண்ணன் – தம்பிக்கு இடையே சுமுக உறவு இல்லாதவர்கள் விருதுநகர் சென்று குடியேறலாம். ஆறு மாதத்தில் அவர்கள் நண்பர்களாகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.


***


காரணம்

என். சொக்கன்


கெங்கையம்மன் கோயில் தாண்டி வலதுபக்கம் திரும்பணும்’ என்றான் குமரேசன்.


என்னது? கெங்கையம்மனா? அந்தப் பேர்லயெல்லாம்கூட ஒரு சாமி இருக்குதா?’ குழப்பத்துடன் கேட்டேன்.


அப்படியெல்லாம் பேசாதே கதிரு, ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்’ என்றபடி கன்னத்தில் போட்டுக் கொண்டான், ‘அந்தக் கோயிலுக்குள்ள போனாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும், நாத்திகனுக்குக்கூட கையெடுத்துக் கும்பிடத் தோணும்.’


எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை, ஒழுங்கா வழியைச் சொல்லு’ என்றேன் சலிப்போடு, ‘கங்கையம்மன் கோயில் தாண்டி லெஃப்ட் திரும்பணுமா?’ 


லெஃப்ட் இல்லை, ரைட்’ என்று காகிதத்தில் குறித்தான் குமரேசன், ‘அங்கிருந்து நூறு மீட்டர் தூரத்தில, இன்னொரு அம்மன் கோயில் வரும், அங்கே லெஃப்ட் திரும்பணும்.’


மறுபடியும் கோயிலா? போச்சு, எனக்கு சுத்தமாக் குழப்புது.’


டோண்ட் வொர்ரி, நான் தெளிவா மேப் வரைஞ்சிருக்கேன் பாரு.’


டேய், அதைப் பார்த்தப்புறம்தாண்டா இன்னும் தலை சுத்துது’ என்றேன், ‘என்னை வுட்டுடு மச்சி, நான் எங்கயாவது லாட்ஜ்ல ரூம் போடுத் தங்கிக்கறேன்.’


மறுபடியும் அதே கதையை ஆரம்பிக்காதே கதிரு, மெட்ராஸ்ல லாட்ஜ் வாடகை என்ன ஆவும் தெரியுமா?’


நாங்கள் மறுபடியும் வரைபடத்துக்குத் திரும்பினோம். எங்கே பார்த்தாலும் கோயில்கள், லெஃப்ட், ரைட் திரும்புதல்கள் என்று குழப்பமயம்.


இங்கே ஒரு புளிய மரம் வரும்’ என்றபடி சின்னதாக ஒரு பொம்மை வரைந்தான் குமரேசன், ‘அங்கிருந்து இடதுபக்கம் திரும்பினா ஒரு டீக்கடை, அதுக்குப் பக்கத்தில ...’


அம்மன் கோயில், சரியா?’


ம்ஹும், பெருமாள் கோயில்.’


சுத்தம்’ என்றேன் நான், ‘அநேகமா உங்க ஏரியால மனுஷங்களைவிட சாமிங்கதான் அதிகமா இருப்பாங்கன்னு நினைக்கறேன்.’


குமரேசன் முகத்தில் அடிபட்ட பாவனை, ‘ஏண்டா கிண்டலடிக்கிறே? ஊர்முழுக்கக் கோயில் இருந்தா என்ன தப்பு? நீ உன் வேலையை முடிச்சுட்டு, டெய்லி ஒரு கோயில்ன்னு போய்ட்டு வா, கோடி புண்ணியம்.’


நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டேன், ‘புண்ணியம் கிடக்கட்டும், முதல்ல உங்க வீட்டுக்கு எப்படிப் போறது? அதானே இப்ப பெரும் பிரச்னையா இருக்கு!’


பெருமாள் கோயில் பக்கத்தில ஒரு காலி நிலம் இருக்கும், ஊர்க் குப்பையெல்லாம் அங்கதான் கொட்டுவாங்க’ என்றான் குமரேசன், அந்த நிலத்திலிருந்து நூறு மீட்டர் தள்ளி, எங்க வீடு, வாசல் கேட்ல ரெண்டு சிங்கம் நிக்கறமாதிரி படம் வரைஞ்சிருக்கும்.’


சிங்கங்கள் உண்மையில் பூனைகளைப்போல்தான் தென்பட்டன. தகிக்கும் வெய்யிலில், கையில் இரண்டு பெட்டிகளுடன் அந்தக் கதவின்முன் நின்றிருந்தேன் நான்.


இந்த வீடுதானா? அல்லது, வழி மாறிவிட்டேனா? இன்னும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. எது அம்மன் கோயில், எது பெருமாள் கோயில், எது ரைட், எது லெஃப்ட் என்று தலை சுற்றியது.


குமரேசன் வரைந்து தந்த மேப்பின்படி இதுதான் அவனுடைய வீடு. சிங்கப் படம் வரைந்திருக்கிறது, பூட்டியிருக்கிறது, இதுதான்.


இப்போது குமரேசனின் அப்பா, அம்மா ஊரில் இல்லை. அவன் தங்கை பிரசவத்துக்காகக் கொல்கத்தா பயணம் போயிருக்கிறார்கள். நான் அலுவலக வேலையாகச் சென்னை கிளம்புகிறேன் என்றதும் ‘வீடு சும்மாதான் பூட்டிக் கிடக்கு, அங்கே தங்கிக்கோ மச்சி’ என்றான்.


சாவியைப் பக்கத்து வீட்ல கொடுத்திருக்கோம் கதிரு’ காதுக்குள் குமரேசனின் குரல் கேட்டது. ‘நான் மாமிகிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடறேன், உன்னைப் பார்த்ததும் சாவி கொடுத்துடுவாங்க.’


அது எப்படிக் கொடுப்பார்கள்? நான்தான் கதிர்வேல் என்று அவர்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்? குமரேசனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு சாவியை வாங்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்துக்கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வார்கள்?


அந்த மாமி அப்படியெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் பல வருடம் பழகியதுபோல் புன்னகைத்து ‘வாப்பா, சௌக்கியமா?’ என்றார்.


சௌக்யம்தான் மாமி’ என்றேன் சற்றே தடுமாறி. ‘என் பேர் கதிர்வேல்.’


தெரியும் தெரியும்’ என்ற மாமி நாற்காலியை இழுத்துப் போட்டார். ’வேகாத வெய்யில்ல வந்திருக்கே, கொஞ்சம் காத்தாட உட்காரேன், மோர் கொண்டுவரேன்.’


அதெல்லாம் வேணாம் மாமி, சாவி கொடுங்க.’


உட்காருப்பா, சாவி எங்க போறது’ என்றபடி உள்ளே போய்விட்டார் மாமி.


நான் பரிதாபகரமாக விழித்தேன். வேறு வழியில்லை, உட்கார்ந்துதான் ஆகவேண்டும்.


சின்னஞ்சிறு வீடு. சுவரில் மாட்டிவைத்த மடக்கு நாற்காலிகள், அவற்றுக்குக் கீழே வரிசையாக அடுக்கித் தூசு படிந்த ’தி ஹிந்து’க்கள், மூலையில் உறையிட்டு மூடிய டிவி பெட்டி, முப்பது விநாடிகளில் கூடத்து மூலையில் விரிசல் விட்டிருப்பதுவரை எல்லாம் பார்த்தாகிவிட்டது.


மோர் தம்ளருடன் வந்த மாமியைப் பார்க்கையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நாடகங்கள் ஞாபகம் வந்தது. நிஜமாகவே இன்னும் இப்படிப்பட்ட மக்கள் அப்படியேதான் வாழ்கிறார்களா?


லேசாக உப்புக்கரித்தாலும் வெயில் நேரத்திற்கு அந்த மோர் தேவைப்பட்டது. கடகடவென்று காலி செய்துவிட்டு ‘ரொம்பத் தேங்க்ஸ் மாமி’ என்றேன்.


நீ குமரேசனோட அத்தை பையனா?’


போச்சு. அடுத்த பிரச்னை ஆரம்பம். யாரோ ஒரு நண்பன் வருகிறான் என்று சொன்னால் மாமி ஏதாவது நினைத்துக்கொள்வார்கள் என்பதற்காக என்னைத் தன்னுடைய உறவுக்காரனாக அறிமுகம் செய்திருக்கிறான் குமரேசன். இப்போது இந்த அத்தை பையன் விவகாரத்தைச் சமாளித்தாகவேண்டும்.


என்னாச்சுப்பா?’


ஒண்ணுமில்லை மாமி, ஏதோ யோசனை’ என்று சமாளித்தேன். ‘சாவி கொடுக்கறீங்களா?’


மாமி அப்போதும் அசரவில்லை. ‘நீ குமரேசனுக்கு அத்தை பையன்தானே?’


ஆமாம் மாமி’ என்றேன். ‘ஒண்ணுவிட்ட அத்தை பையன்’ என்று பாதுகாப்பாக ஒரு கோடு போட்டுவைத்தேன்.


உங்க சொந்த ஊர் எது?’


மதுரை.’


இத்தனை வருஷத்தில குமரேசன் வீட்ல யாரும் மதுரைப்பக்கம் போனமாதிரியே தெரியலையே! உங்க ரெண்டு வீட்டுக்கும் எதுனா பிரச்னையா?’


எனக்குத் திக்கென்றது. பார்த்த ஐந்தாவது நிமிடம் டிவி சீரியல்போல் எங்களுக்குள் சண்டை மூட்டிவிடும் இந்த மாமியை என்ன செய்வது?


அன்று இரவு குமரேசனைத் தொலைபேசியில் அழைத்தேன். ‘என்னடா இந்த மாமி இப்படி தடால்ன்னு குண்டுமேல குண்டா வீசறாங்க?’


குமரேசன் புரிந்ததுபோல் சிரித்தான். ‘கொஞ்சம் வளவளான்னு பேசுவாங்க, மத்தபடி எதையும் மனசில வெச்சுக்கமாட்டாங்க, மாமி தங்கம்’ என்றான். ‘என்ன ஹெல்ப் வேணும்னாலும் அவங்களைக் கேட்கலாம்.’


கேட்கவேண்டிய அவசியமே நேரவில்லை. மறுநாள் காலை எட்டரை மணிக்குப் பாதி ஷேவிங்கில் இருந்தவனைப் பயமுறுத்தி அழைப்பு மணி ஒலித்தது. அவசரமாக வேலையை முடித்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்தால் கையில் பாத்திரத்துடன் மாமி.


என்ன மாமி?’ என்றேன் திகிலுடன்.


டிஃபனுக்குச் சப்பாத்தி பண்ணினேன். நீயும் ரெண்டு சாப்பிடுவியேன்னு கொண்டுவந்தேன்.’


ரெண்டு இல்லை. ஏழு சப்பாத்தி. கூடவே வெள்ளைவெளேர் தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசாலா.


தினமும் இதுபோல் ருசியாக வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால் அதற்காக, முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் இப்படி உதவி பெறுவது நன்றாகவா இருக்கிறது?


மாமி ஏனோ என்னை அன்னியனாக நினைக்கவே இல்லை. குமரேசனின் உறவினன், எனக்கும் அப்படிதான் என்பதுபோல் நடந்துகொண்டார். நான் எங்கே போகவேண்டும் என்று விசாரித்துக்கொண்டு ரயில் வழி குறித்துத் தந்தார், எந்த நேரத்தில் எந்த ரயிலில் கூட்டம் இருக்கும், எங்கே டிக்கெட் எடுக்கவேண்டும், முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும் இரண்டாம் வகுப்புக்கும் எவ்வளவு ரூபாய் வித்தியாசம், ஆட்டோவில் போனால் என்ன செலவாகும் என்று எல்லாத் தகவல்களும் தானாக வந்து கொட்டின.


ராத்திரிச் சாப்பாட்டுக்கு வந்துடுவியோல்லியோ?’


ஐயோ, எனக்காக சிரமப்படாதீங்க மாமி’ என்றேன் அவசரமாக. ‘நான் ஆஃபீஸ்லயே சாப்டுட்டு வந்துடுவேன்.’


ஒரு சிரமமும் இல்லைப்பா’ என்றார் அவர், ‘வெளிய கண்ட இடத்தில சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே.’


இல்லை மாமி, ஆஃபீஸ் கேன்டீன்தான்’ என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. விட்டால் மதியச் சாப்பாட்டையும் பொட்டலம் கட்டிக் கையில் கொடுத்துவிடுவார்போல.


ஜாக்கிரதைப்பா’ தெருவில் இறங்கி நடக்கும்வரை காதில் அவர் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.


அன்று மாலை, வேண்டுமென்றே பணியிடத்தில் வேலையைத் தாமதப்படுத்தி எட்டரை மணிவரை உட்கார்ந்திருந்தேன். அதன்பிறகு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்துத் திரும்புவதற்குப் பத்து மணி தாண்டிவிட்டது.


செல்ஃபோன் திரை வெளிச்சத்தில் கதவில் சாவித் துவாரத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது எதிர் வீட்டுக் கதவு திறந்தது, ‘சாப்டியாப்பா?’


எதிர்பாராத அதிர்ச்சியில் என் கையிலிருந்த சாவி தவறிக் கீழே விழுந்துவிட்டது. ‘... ஆச்சு மாமி’ என்றேன் தடுமாறி.


பாவம், வேலை ரொம்ப ஜாஸ்திபோல’ என்றார் அவர். ‘எல்லாக் கதவையும் ஜாக்கிரதையாப் பூட்டிக்கோப்பா. இங்கே திருட்டு பயம் ஜாஸ்தி.’


பகல் நேர வெயில் தணிந்திருந்த நேரம் அது. ஆனாலும் எனக்கு நன்றாக வியர்த்திருந்தது. இத்தனை கவனத்தை, அக்கறையைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.


பெருநகர அபார்ட்மென்ட் சூழலில் பிறக்கிற எவரும் அந்தத் தளம் தாண்டி வளர்வது சாத்தியமே இல்லை. எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாதபடி கதவை மூடி வைத்து வளர்க்கப்பட்ட தலைமுறை என்னுடையது.


இதனால், யாரேனும் நம்மீது அக்கறை காட்டினாலே அது நேர்மையான உணர்வாக இருக்கக்கூடும் என்று நம்பமுடிவதில்லை. அதில் அவர்களுக்கு என்ன ஆதாயம் இருக்கக்கூடும் என்று யோசிக்கிற குறுக்குபுத்திதான் முதலில் எழுகிறது.


இரவுமுழுவதும் தூக்கம் வரவில்லை. மாமியின் அதீத அக்கறைக்கு என்ன காரணம்? ஏதேதோ சாத்தியங்களை யோசித்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். உதாரணம் - மாமிக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறது, என்னை மாப்பிள்ளையாக்கிக்கொள்ளப் பார்க்கிறார். இது போல் இன்னும் நிறைய‌.

இவற்றில் ஏதேனும் ஒன்றுதான் அவருடைய அக்கறையின் உண்மையான காரணமாக இருக்கவேண்டும் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் கடைசிவரை அது எது என்று புரியவில்லை.


அன்றுமட்டுமில்லை, அடுத்த ஒரு வாரமும் இதே கதைதான். மாமி என்மீது அக்கறையைக் கொட்டுவதும் நான் அதற்குக் காரணம் யோசித்துப் பிடிபடாமல் நெளிவதும் குழம்புவதும் தொடர்ந்துகொண்டிருந்தது.


ஒருவேளை, கோயில்கள் அதிகமுள்ள பகுதிகளில் வாழ்கிற எல்லோரும் இப்படிக் காரணமில்லாமல் அடுத்தவர்கள்மீது அன்பு செலுத்தும்படி மாறிவிடுவார்களோ? எனக்குப் பயமாயிருந்தது.


அந்த வார இறுதியில், மாமிக்கு நன்றி சொல்லி சாவியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெங்களூர் திரும்பினேன். ரயிலில் ஏறி உட்கார்ந்தபிறகுதான் தோன்றியது, அவருக்கு ஒரு கிலோ இனிப்போ, காரமோ வாங்கிக் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம்.


அது எதற்கு? நான் தங்கியது குமரேசன் வீட்டில். இனிப்பு, காரம் வாங்கிக் கொடுப்பதென்றால் அவனுக்கோ அவனுடைய அப்பா, அம்மாவுக்கோதானே வாங்கித்தரவேண்டும்?


இப்படி யோசிக்கையில் ஒருபக்கம் குற்றவுணர்ச்சியாகவும் இன்னொருபக்கம் நிம்மதியாகவும் இருந்தது. நல்லவேளை, கோயில் சூழ்ந்த வீட்டில் எல்லோர்மீதும் நம்பமுடியாத தீவிரத்துடன் அக்கறை காட்டுகிற மாமியின் அருகே வாழ்ந்தும் நான் மாறிவிடவில்லை. அதே பழைய சுயநலவாதியாகவே இருக்கிறேன்!


குமரேசன் பைக்கைத் தூக்கிக்கொண்டு ரயில் நிலையத்துக்கே வந்திருந்தான். நான் பிளாட்ஃபாரத்தில் இறங்கியதும் ‘எப்படிடா எங்க ஊரு?’ என்றான்.


ஓகே’ என்றேன். அதற்குமேல் அவனிடம் பேசத்தோன்றவில்லை.


சில வாரங்களில், அடுத்தடுத்த வேலைகளின் பரபரப்பில் மாமி முகம்கூட மறந்துபோய்விட்டது. ஆனால் அந்தக் குழப்பம்மட்டும் தீரவில்லை. அவருடைய அந்த அக்கறை எனக்கான விசேஷமா? அல்லது, எல்லோருக்குமானதா? ஏன்? அவரது அக்கறைக்கு நான் கற்பித்துக்கொண்ட காரணங்களில் எது நிஜம்? அல்லது, அவை தாண்டியும் இன்னொரு காரணம் இருக்கிறதா? அதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளும்வரையாவது அந்தச் சென்னைப் பயணம் நீடித்திருக்கலாம்.


அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது. மூன்று மாதம் கழித்து ’ஒரு புதுக் கஸ்டமர் கழுத்தறுக்கறான், மெட்ராஸ்க்கு ஒரு நடை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்துடேன்’ என்றார்கள் ஆஃபீசில்.


இந்தமுறையும் ‘எங்க வீட்ல தங்கிக்கோ கதிரு’ என்றான் குமரேசன். ‘எங்க அப்பா, அம்மா இன்னும் கொல்கத்தாலேர்ந்து திரும்பி வரலை. வீடு காலியாதான் இருக்கு.’


இல்லைப்பா, வேணாம்’ நான் எங்கோ பார்த்தபடி சொன்னேன். ‘ஆஃபீஸ் பக்கத்திலயே ஒரு ஹோட்டல்ல ரூம் போடச் சொல்லிட்டேன்.’


குமரேசன் முகம் சட்டென்று சுருங்கிவிட்டது. ‘ஏண்டா? என்னாச்சு? எங்க வீட்ல எதுனா ப்ராப்ளமா? போனவாரம்கூட மாமி உன்னைப்பத்தி ஃபோன்ல விசாரிச்சாங்க கதிரு, மறுபடி உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.’


அதுதான் காரணம் என்று அவனிடம் எப்படிச் சொல்வது?


***


பந்து புராணம்

இந்திரன்


நம்மூரில் கிரிக்கட் கதைகளுக்குப் பஞ்சமிருக்காது. திரைப்படங்கள், சிறுகதைகள் என கிரிக்கட் தழுவி நிறையப் பார்த்திருப்போம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கூட ஒரு கிரிக்கட் கதை உண்டு. இந்தியா முதன்முதலில் உலகக்கோப்பை வென்றவுடன், இந்தியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கிரிக்கட் விளையாடுவதில் அபரிமிதமான திறமை கொண்டவர்கள் என்பதை நம்பத் தொடங்கினார்கள். நானும் நம்பினேன். போகவும், கிரிக்கட் மற்ற விளையாட்டுக்களை விட ஆடுவது எளிதானதாயிருந்தது. ஆட்டத்தின் இடையில் இத்தனை ஓய்வெடுத்துக் கொள்ளும் சவுகர்யம் வேறெந்த விளையாட்டிலும் இருக்காது. நான் சொல்லப்போகும் கிரிக்கட் சர்வதேச போட்டிகளை சடுதியில் காலி செய்துவிடும் அளவிற்கான விதிமுறைகள் கொண்டவை. டக்வொர்த் லூயிஸ் விதி போல் அத்தனை சுலபமில்லை. எங்கள் கிரிக்கட்டில் ஒவ்வொரு விதிமுறை பிறப்பின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.


என் இடது கையின் பெருவிரல் நகம் பிய்ந்து தெறித்தது, என் தம்பியின் நடு நெற்றி பிளந்து ஆறு தையல் போட்டது மேலும் சிற்சில ரத்தம் உறையும் திகில் சம்பவங்களால் கார்க் பாலிலிருந்து டென்னிஸ் பாலுக்கு மாறினோம். தனியொருவனால் பந்து வாங்குமளவிற்கு எங்கள் யாருக்கும் வசதி போதாது. அவரவர் சட்டைப் பையிலிருப்பதைப் பகிர்ந்துதான் பந்து வாங்குவோம். பின்னாளில் - அதுவும் சிகரட் பிடிக்க ஆரம்பித்த பின்னர்தான் - அப்பா சட்டைப் பையில் கைவைக்கும் அவசியம் வந்தது. டென்னிஸ் பால் விலை கருதியும், எத்தனை எளிதாக வந்தாலும் குருமணியின் கைகளுக்குள் அடங்காத கேட்சும், உடைந்து போனால் திண்டுக்கலில் படிக்கும் நான் மட்டுமே வாங்கி வரும்படியான சூழ்நிலையும் நிலவியதால், ரப்பர் பாலுக்குத் தாவினோம். KRI என்ற லேபிளில் வெள்ளை நிற பந்தது. பந்து வீச துக்கியடிக்க, பாய்ந்து பிடிக்க என எல்லா வகையிலும் சவுகர்யம் தந்தது. ஒரே குறை ஒரு மேட்ச் முடிவதற்குள்ளாகவே தெறித்துவிடும். ஊக்கினால் சிறு துளையிடும் எங்களின் விஞ்ஞான மூளையும் தகர்த்துவிட்டு உடைவது அதிலடிங்கிய சிறு சோகம். பின் Stumper என்ற பெயரில் வந்த பல நிறத்திலான பந்துகள் எங்களைக் கவர்ந்தன. அடிக்கடி உடையவும் இல்லை, சவுகர்யத்திற்கும் குறைவில்லை.


டோர்னமெண்ட், பக்கத்துத் தெரு / ஊர்களுடனான மேட்ச் தவிர்த்து, எங்களுக்குள் இரு அணிகள் பிரித்து விளையாடுவதில்தான் எங்கள் கவுரவம் அடங்கியிருந்தது. அணி பிரிக்கும் முறைகள்தான் குறிப்பிடத் தகுந்தவை. ஆரம்பத்தில், இரு கேப்டன்கள் நியமித்து அவர்களை ஓரமாக நிற்கச் செய்துவிட்டு இவ்விருவராக தூரம் சென்று, தங்களுக்கு வேறுவேறு பெயர் சூட்டிக்கொண்டு கேப்டன்களிடம் யார் வேண்டுமென கேட்போம். உதாரணத்திற்கு, ரஜினி, கமல் என்ற பெயர் சூட்டிக்கொண்டு ரஜினி வேண்டுமா கமல் வேண்டுமா எனக் கேட்போம். கேப்டன் எவர் பிரியரோ அவரை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் இதில் பிக்ஸிங்கெல்லாம் கூட நடக்கும். என்ன பெயர் கேட்டாலும், “நீ அவன்ட்ட போயிரு, நான் இவன்ட்ட போயிர்றேன்” என்பது மாதிரி. இங்கே பெயர் என்பது சும்மா பேருக்கு. இப்படி ஆள் பிரிப்பது சலிப்புத் தட்டவே, ரஜினி அணி, கமல் அணி, தல அணி, தளபதி அணி எனப் பிரிந்தோம். கொடுமை என்னவெனில் கமல் அணிக்கும், தளபதி அணிக்கும் எப்போதும் ஆட்கள் போதமாட்டார்கள். பெருந்தன்மையாய் மற்ற அணியிலிருந்து அவர்களுக்கு ஆட்கள் தந்து உதவுவார்கள்.


வெயில் - கிரிக்கட்டில் எங்களைப் பாடாய்ப்படுத்திய ஒரே வஸ்து. 20 ஓவர்கள் என்பது பதினைந்தாகி, பன்னிர‌ண்டாகி, பின்பு 8 ஓவர்களில் நின்றது. பிரச்சனை அத்தோடு தீரவில்லை. டெயில் எண்டர்களுக்கு பேட்டிங்கில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற பெரும் பிரச்சனை வெடித்தது. ஆலோசனைக் குழுவைக் கூட்டி உடனடி தீர்வென்னவென யோசித்ததில் டெஸ்ட் மேட்ச்கள்தான் ஒரே வழியாய் தோன்றியது.


எங்களுக்கு வெயில்தான் பெரிய பிரச்சனையாயிருந்தது. மைதானத்தின் வெளியே கட்டிடங்கள் சூழ ஓர் அரச மரத்தின் அடியில் பிட்ச் உருவாக்கினோம். அப்போது எங்களுக்கு எல்லாமே கிரிக்கட்தான். ஊர் மத்தியில் புதிதாக அமைத்த மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் கூட எங்களால் கிரிக்கட் மட்டுமே ஆட முடிந்தது. தீபாவளி, பொங்கல், ஊர்த் திருவிழா என எதுவாகினும் எங்கள் கொண்டாட்டம் பேட் பாலோடு மைதானத்தில்தான் இருக்கும். ஆயுதபூஜைக்கு பேட், ஸ்டம்புகளுக்கு பொட்டுவைத்த நிகழ்வுகளும் உண்டு.


டெஸ்ட் மேட்ச்கள், எங்களுக்குள் இருந்த ராகுல் ட்ராவிட்களை உசுப்பிவிட்டன. ஒருத்தர் விடாமல் கட்டை போட்டு சாவடித்தனர். போதாக்குறைக்கு ஒரேயொரு ஸ்டம்பைத்தான் நட்டு வைத்திருந்தோம். நேரடியாக அல்லாமல் ஒன் பிட்ச் பிடித்தாலே அவுட் என முடிவானது. இது ஓரளவு பலன் தந்தது. சரியாக ஸ்கொயர் ஃஆப் திசையில் யுவராணி வீடு இருந்ததால், ஆளாளுக்கு அங்கே தூக்கியடிக்க, சுவரேறி இறங்கி தாவு தீர்ந்தது. சிலர் தவிர்த்து அனைவருமே எல்லாத் திசையிலும் தூக்கியடித்தனர். கட்டிடத்தின் மேலே தூக்கியடித்தால் அவுட்டென முடிவானது. சிக்ஸர் என்பது கட்டிடச் சுவரில் நேரிடையாக மோதினால் மட்டுமே எனச் சுருங்கியது. விதிமுறைகள் இறுக்கமாகமாக வினோத் அடுத்த அஸ்திரத்தை எடுத்தான்.


போட்ட பந்து ஒன்றைக்கூட மட்டையில் வாங்காமல், உடம்பிலேயே வாங்கி, நிழலில் நின்றவர்களையும் சோர்வடையச் செய்தான். வேறென்ன செய்ய, தொடர்ந்து மூன்று முறை உடலில் வாங்கினால் அவுட் என்ற விதிமுறை இயற்றினோம். அதிலும் இருமுறை உடலில் வாங்கி மூன்றாவது பந்தினை அடிக்காமல் விலகியோடும் பெருமூளை வீர சாகசங்களும் அரங்கேறின. அடிக்கடி டாஸ் பந்துகள் போட்டு அதனால் நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஒன் பிட்ச்சில் தன் விக்கட்டைப் பறி கொடுத்த இழிநிலையைப் போக்க டாஸ் பால் வீசக் கூடாது என முடிவானது. நெடுங்காலன் வெங்கடேஷ் செய்தது அராஜகத்தின் உச்சம், லெக் சைடில் மரநிழல் இருக்கிறதெனினும் கட்டிட மறைவில்லையென்பதால், எத்தனை ஃபீல்டர் இருந்தாலும் ஃஆப் சைடில் மட்டுமே நிறுத்தியிருப்போம். போட்ட பந்துகள் அனைத்தையும் லெக் சைடிலேயெ அடித்து ஃபீல்டர்களை தெறிக்க விட்டான். பிறகென்ன மூன்று முறை லெக் சைடில் அடித்தால், லெக் சைடில் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பந்து நேரடியாக விழுந்தால் அவுட் என்ற விதிமுறை தயாரானது.


இத்தனையித்தனை விதிமுறைகளுக்கு பின்னால் நடந்த சண்டைகளும் கூச்சல், குழப்பங்களும் அழகழகான நாரதர் கலகங்கள். தவறுதலாக ஒரு பந்து அதிகம் வீசிவிட்டால் அதற்கொரு பஞ்சாயத்து. பந்து வீச இருக்கும் கோட்டினை கால் கட்டைவிரல் தாண்டினால் அதற்கொரு சண்டை. ஒரே பக்கத்தில் 50 மற்றும் சிங்கத்தை வடிமைத்த ஐம்பது பைசா நாணயத்தில் எது டெய்ல், ஹெட் என்பதில் இருந்த குழப்பம் இந்திய அரசையே கேள்வி கேட்கவல்லது. அடித்த பந்து மரத்திலிருந்து ஒன் பிட்ச் பிடித்து அவுட் கேட்டதால் கோபமுற்ற ஆனந்த், பேட்டினை இரண்டாக உடைத்தது மாதிரியான போர்க்காட்சிகளும் உண்டு. மரத்திலிருந்து நேராக அன்றி தரையில் பிட்ச்சாகிப் பிடித்தால் அவுட்டில்லை என்றானது.


சர்வதேச மேட்ச்கள் எதிர்கொண்ட ‘பந்தை எறிகிறான்’ பிரச்சனை எங்களையும் தாக்கியது. இத்தனைக்கும் நாங்கள் பந்து வீசியல்ல, எறிந்துதான் விளையாடினோம். எறிவதிலும், எறிகிறான் பஞ்சாயத்துக்கள் எழுந்தது சுவாரஸ்ய முடிச்சு. தூஸ்ரா, கேரம் முறைகள் போல் ‘அய்யய்யோ கொல்றான்’ முறையில் அம்மாதிரியான எறி பந்துகளை நோபால் என அறிவித்தோம். லெக் சைட் எல்லை தாண்டிய பந்துகளை மயிரிழையில் ஸ்கெட்ச் போட்டுக் காப்பாற்றும் கண்கட்டு வித்தைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரே நாளில் 7 டெஸ்ட்கள் கூட ஆடியிருக்கிறோம். 14 இன்னிங்ஸ். களைப்பென்ற வார்த்தைக்கு அர்த்தமறியாத காலமது.


யுவராணி தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் பற்றி சொல்லாமல், இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய முடியாது. காலம் போன கடைசியில் சைக்கிள் கற்றுக்கொள்ள வந்த பாக்யலஷ்மி. அவள் சைக்கிள் கற்றுக் கொள்கிறேனென மைதானம் சுற்ற நாங்கள் பந்தெடுக்கிறோம் என அவளைச் சுற்றினோம். ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல், ‘நானும் உங்களோட கிரிக்கட் விளையாட வரவா?’ எனக்கேட்டு அவளே கோதாவில் குதித்தாள். அவளுக்கு பேட்டிங் கற்றுக்கொடுத்தது நான்தான். திரைப்படங்களில் கதாநாயகிக்கு, நாயகன் வயலின் வாசிக்க கற்றுக்கொடுப்பானே அதுபோல். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு அவள் எங்களுடன் ஆடிய கிரிக்கட்தான் இதுவரையிலான எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான சற்றே சங்கடமான கிரிக்கட். ஒரு நண்பகலில் தெருச்சண்டைகளில் பெரும்புகழ் பெற்ற அவளம்மா, பாக்யலஷ்மி மயிர்க்கற்றையை கொத்தாக‌ப் பிடித்திழுத்துப்போனதோடு முடிந்தது அது.


இன்னொரு பெண் நாங்கள் விளையாடும் மைதானத்தின் பள்ளி வாட்ச்மேனின் மனைவி. ரொம்பவே களையான முகம் கொண்ட அக்கா. சோர்வான நேரத்தில் அவர் வீட்டில்தான் தண்ணீர் கேட்டு குடிப்போம். சொம்பில் தந்து கொண்டிருந்தவர், எங்களின் எண்ணிக்கை கருதி தினமும் ஒரு குடம் நிறைய தண்ணிரும் அதற்கொரு சொம்பும் வைத்துத் தந்துவிட்டார். தன் ஐந்து மற்றும் மூன்று வயது குழந்தையுடன் அவ்வப்போது மைதானம் விஜயம் செய்து பிள்ளைகளை ஓடியாடி விளையாடப் பணிப்பார். ஊருக்குப் புதிதென்பதால், ஊர் பற்றி நிறைய விசாரிப்பார். எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவார். அப்படி போகிறபோக்கில் அவர் கேட்ட கேள்விதான் ரொம்பவே விஷேசமானது. ‘இப்டி இங்கயே திரியிறீங்களே, உங்க எல்லாத்துக்கும் வேலைனு எதுவும் இல்லையாப்பா? இன்னும் எத்தன நாளைக்குத்தான் வீட்ல சும்மா சாப்ட்டுட்டே இருப்பீங்க?’ - இந்தக் கேள்விகள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் எங்களுக்கு தந்துவிடவில்லை. அப்போதைக்கு சிரித்து மழுப்பிவிட்டாலும், அதன்பிறகு அவரை நேருக்குநேர் எதிர்கொள்வதில் இருந்த சங்கடமும், பதற்றமும் எதையோ உணர்த்தியது.


பின் ஒவ்வொருவராக ஒவ்வொரு திசையில் பறந்துவிட்டோம். இப்போது அனைவருக்கும் வேலை உண்டு. தனியாளாக பந்தென்ன, பேட்டும் வாங்கிவிடும் அளவிலான பொருளாதாரம் இருக்கிறது. கூடி விளையாடத் தான் யாருமில்லை. சமீபத்தில் மகளை அழைத்துக்கொண்டு அவளின் புது சைக்கிளையும் தூக்கிக்கொண்டு அதே மைதானம் சென்றிருந்தேன். அரச மரத்தடியில் இன்னொரு கும்பல் விளையாடிக் கொண்டிருந்தது.


ஹேய் பேட்ல படவே இல்ல”

நான் ரீச்சான பின்னாடிதாண்டா அவன் ஸ்டம்ப்ல அடிச்சான்”

அய்யா ஹிட் விக்கட் இருக்குனு முன்னாடியே சொன்னீங்களா”


என்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மகளுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.


***


நிழலோவியம்

புகைப்படம்: பாலா மாரியப்பன்

ரைலு

முத்தலிப்


எச்செம் சார் காலை ப்ரேயர் கூட்டத்தில் அந்த அறிவிப்பைச் சொன்னதிலிருந்து கமர்நிசாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ”அடுத்த வாரம் மானாமதுரை ரயிலடிக்கு பள்ளியிலிருந்து ஒரு நாள் சுற்றுலா போகப் போறோம். விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வகுப்பாசிரியரிடம் பெயரைப்பதிவு செய்துகொள்ளவும்” என்றதும், மகிழ்ச்சியில் மாணவர் கூட்டம் “ஏஏஏஏ” என ஆர்ப்பரித்தது. உற்சாக மிகுதியில் சீட்டி அடித்த சிற்சில சில்வண்டுகள் பீட்டி வாத்தியின் மெல்லிய பிரம்படிக்கு இலக்காயின.


மெற்றாஸிலிருந்து, ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலைப்பற்றி கதை கதையாய்ச் சொல்லும் குலாம் மாமுவின் சுவாரசியப்பேச்சில், ரயிலைக் காணாமலேயே கற்பனையில் ஒரு ரயில் செய்திருந்தாள் கமர். “நீள்ள்ள்ள்ளமா இருக்கும், முன்னாடி இழுவ இஞ்சின்லருந்து பொஹ பொஹையா வரும், வெள்ளச்சட்ட போட்டு நைட்டு மொதப்பெட்டில ஏறி உக்காந்தா காலைல கறுப்புச்சட்டையோடதான் எறங்குவோம், வீல் வீல்னு கத்தும், நம்மூரு டௌன்பஸ்ஸுல போறதவிட கொள்ளப்பேரு போவாங்க...”


கமரின் ரயில் கொஞ்சம் விந்தையானது. அவ்வூர் டவுன் பஸ்ஸின் நிறம்தான் அதற்கும். ரயிலின் தலையில் ஒலியெழுப்ப பக்கத்து ஊர் மில்லில் உள்ளது போல சங்கு பொருத்தப்பட்டிருக்கும். ரயில் முழுவதிலும் அவளின் உறவினர்களும், தோழிகளான மரியம், கச்சா (கதிஜா), அங்குமாரி ஆகியோரே இருப்பர். ரயிலின் மேல் புகைக்கூண்டும் உண்டு. ரயிலின் சக்கரம் மாட்டு வண்டியின் பெரிய சக்கரம் போல் இருக்கும் (ரயிலுக்கு பெருசா இரும்பு ரோதையிருக்கும் என குலாம் ஒருமுறை சொன்னதிலிருந்து). ஒவ்வொரு கதையாய்க் கேட்பதிலிருந்து ரயிலின் தோற்றமும் அவ்வப்போது மாறிக்கொண்டே வரும்.


தற்போது கமருக்கு உள்ள மிகப்பெரிய சவால், அவளின் அத்தாவிடம் எப்படி அனுமதி வாங்குவது என்பது.


கமரின் அத்தா (தந்தை) கோபக்காரர். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் பழமொழிக்கு ராம்னாட் ஜில்லாவிலேயே தன்னிகரில்லா ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கி வருபவர். எதும் பிரச்சினை என்றாலோ, கோபம் வந்தாலோ முதலில் யாரையேனும் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் “இப்ப இங்க என்ன பிரச்சினை?” என்ற யோசனையே அவருக்கு வரும்.


வெளியில் புலி என்றால் வீட்டில் அடிபட்ட புலி. வெளிப்பிரச்சினைக்கு ஊர்ப்பெரியவர் யாரேனும் இவரைக் கடிந்து கொண்டால் அந்தக்கோபம் மொத்தத்தையும், வீட்டில் உள்ள செம்பு, பானை, குவளையிலிருந்து அம்மா, அண்ணன் வரை அடித்து நெளித்து இறக்கி வைப்பார்.


வீட்டில் ஒரு பொருள் கூட அது உருவானபோது இருந்த வடிவத்தில் இருக்காது. உலோக வஸ்துக்களாய் இருந்தால் நசுங்கிய நிலையிலும், மர வஸ்துக்கள் உடைந்த, பிளந்த நிலையிலும், அம்மா மட்டும் எத்தனையோ தழும்புகள் இருந்தும் இன்னும் சிரித்த நிலையிலும் காணப்படும் ஓர் அபூர்வ வீடு அது.


நினைவு தெரிந்து, கமரை ஒரு முறை எதற்கோ முதுகிலும் முகத்திலும் அத்தா விளாசி எடுக்க, அத்தம்மா (அத்தாவின் அம்மா) உள்ளே புகுந்து, “அடுத்தவீட்டுக்கு போற பொட்டப்புள்ளைய நொறுக்கி மொடமாக்கி வெச்சா யாருடா பாக்குறது?” என்று தடுத்திராவிட்டால் இன்று கமர் உயிரோடிருந்திருப்பாளா என்பது சந்தேகமே. இப்பேற்பட்ட அத்தாவிடம் எப்படி டூருக்கு அனுமதி வாங்க? அதைவிட டூருக்குப்பணமாய் ரெண்ட்ருவ்வாய் எங்கிருந்து வாங்க?


ஒருமுறை நோட்டு புஸ்தகம் வாங்க அண்ணன் காசு கேட்டதற்கு அவன் பைக்கட்டைப்பிடுங்கி அடித்ததும், பின் நினைவு வரும்போதெல்லாம் அவனை அடித்து நொறுக்கியதும் அவளுக்கு நினைவு வந்தது.


இந்த வருசத்தோட இந்தப்(புள்)ளைய பள்ளிக்கொடத்துலருந்து நிறுத்தணும். போதும் படிச்சுக்கிலிச்சது. மதர்ஸால சேத்து ஓத வெச்சு காலா(கா)லத்துல கொமர கரசேக்கனும்” என்று சொல்லிக்கொண்டிருப்பார் அடிக்கடி.


அன்று மாலை வீட்டுக்கு வந்து விஷயத்தை அம்மாவிடம் சொல்லி அத்தாவிடம் எப்படியாவது அனுமதி வாங்கித்தரச்சொன்னாள்.


ஏண்டீ? ஒங்கத்தா என்னய அடிச்சு நாளாச்சுன்னு நீனா அவருக்கு புதுசா எடுத்துக்குடுக்குறியா? போடியங்குட்டு. மகரி நேரமாச்சு, அந்தச்சாவல கூடைக்குள்ள புடிச்சு அட” என்று அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டாள்.


அன்று கனவில், முழுக்க சேவல்களால் நிரம்பிய ரயில், அத்தா இரு கைகளாலும் தன்னையும் அம்மாவையும் அடித்துக்கொண்டே செல்லும் ரயில், அவளின் பள்ளிப்பிள்ளைகளும், அத்தம்மாவும் இதைப்பார்த்து சிரிக்கும் ரயில் எனப் பல்வேறு ரயில்கள் வந்தன.


மறுநாள் வகுப்பில், டூருக்குச்செல்ல, பலர் தங்கள் பெயர்களைக் கொடுத்ததும் இவளுக்கு இன்னும் வருத்தமாக இருந்தது. அங்குமாரி, “நா ஒங்கம்மாட்ட வந்து கேக்கவாப்(புள்)?” என்றாள்.


போடி. எங்கத்தம்மா பாத்துச்சுன்னா ஒன்ன ஆஞ்சுபுடும். விடு. அல்லா நாடுனா நடக்கும் இன்சால்லா” என்றாள்.


ஒரு வாரம் ஓடியது.


இரவுணவு உண்டு கொண்டிருக்கும்போது, “கமரே...?” என அழைத்தார் சிக்கந்தர்.


இந்தா வந்துட்டேந்த்தா”


என்னமோ டூருக்கு போறியாமே?”


இல்லத்தா. பள்ளிகொடத்துல போறதா சொன்னாங்க. நா பேர்லாம் குடுக்கல” என்றாள் பயந்தபடி.


ஒங்க டீச்சர சந்தக்கடைல பாத்தேன். அவங்கள்ட்ட காசு குடுத்துருக்கேன். பத்தரமா போய்ட்டு வா. அவங்களோடயே இரு. தனியா எங்கயும் போய்ராத” என்றார்.


அப்போது கமரின் அம்மா அங்கே நெளிந்த செம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தது முற்றிலும் தற்செயல். முற்றிலும்.


கமருக்கு உற்சாகம் கொள்ளவில்லை. ஆனாலும் பயம் ஒரு பக்கம் இருந்தது. கமரால் இதை நம்ப முடியவில்லை. டூருக்கு அனுமதி கொடுத்தால் என்ன செய்கிறாள் என்று பார்த்து அதைக்காரணமாய் வைத்து அடிக்கப்போகிறாரோ என்ற பயம் ஒருபுறம். திடீரென்று மனசு மாறி டூருக்கு போக வேண்டாம் எனக்கூறிவிடுவாரோ என்ற சந்தேகம் ஒரு புறம். சொன்னவரை சந்தோஷம் என்று நினைத்து, “அல்ஹம்துலில்லா” என மனதுக்குள் பத்து முறை சொல்லி, அத்தா அடுத்து எதும் செய்துவிடுவதற்குள் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள்.


மறுநாள் பள்ளியில் ஏக குஷியில் வகுப்புத்தோழிகளிடம் இந்த விஷயத்தை சொல்ல, “ஒங்கத்தாவுக்கு திடீர்னு ஜின்னு (நம்மூரின் ’முனி’ போன்ற இஸ்லாமிய வஸ்து) அடிச்சிருச்சுப்புள்ள. அதான் இப்புடி திடீர்னு மாறிட்டாங்க” எனக்கேலி பேசினர்.


டூர் தினம். மூன்று பேருந்து கொள்ளளவுள்ள மாணவர் கூட்டத்தை ஒரே பஸ்ஸில் ஏற்றி, குழந்தைகளில் கொக்கரிப்புக் கூக்குரலோடு, குண்டு குழிகளுக்குள் ஆங்காங்கே தென்பட்ட கொஞ்ச நஞ்ச ரோட்டைத் தேடித்தேடித்துழாவியபடி ’அரசு நடுனிலைபள்ளி பருத்தியூர், கல்விச்சுற்றுலா’ என ஊதா மசியில் எழுதப்பட்ட வெள்ளை பேனரைக் கட்டிக்கொண்டு பஸ் ஊர்ந்தது.


முன் சீட்டுகளில் ஆசிரியர்களும், நடுவில் மாணவியரும், கடைசியில் மாணவர்களுமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு சீட்டிலும், கொள்ளமுடியா சூட்கேசில் துணிகளை அடைப்பதுபோல் மாணவர்கள் அடைந்து கிடந்தனர். சில வானரங்கள் கம்பிக்குக் கம்பி தாவியபடி இருந்தன. அப்போது ரேடியோவில் ஒலிபரப்பாகிய சில பிரபல சினிமாப்பாடல்களை மாணவியர் பாடிக்கொண்டிருந்தனர்.


ஒரு வழியாக, இரண்டு மணி நேரப்பிரயாணத்துக்குப்பின் மானாமதுரை ரயிலடிக்குப் பேருந்து வந்து சேர்ந்தது. பிள்ளைகள் யாரையும் இறங்கக்கூடாதென்று கட்டளையிட்டு, எச்செம் சாரும் மற்றொரு சாரும் ஸ்டேசனுக்குள் செல்ல, கணக்கு டீச்சரும் தமிழய்யாவும் கீழே இறங்கிப்பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திரும்பிய எச்சம் சார், மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, பீட்டி சார் பேருந்துக்குள் வந்து. “ஒவ்வொருத்தரா எறங்கி, வவுப்புப்படி வரிசைல நில்லுங்க” என்றார்.


கமர் அங்கே தெரிந்த ஒவ்வொன்றையும் கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தாள். விழுது விடத் துவங்கிய ரயிலடி ஆலமரமும், தொடர்ந்து வீசிய காற்றும், அங்கு நிலவிய பேரமைதியும், கரைந்து கொண்டும் கீச்சிக்கொண்டும் பறந்த பறைவைகளையும் அசட்டை செய்தவளுக்கு ரயிலடியின் ஒற்றைக் கட்டடம் பேருவகையைத் தந்தது. மானாமதுரை ஜங்சன் என கருப்பு எழுத்துகள் பதித்த மஞ்சள் நிறப் பலகை குதூகலம் தந்தது. கெயமுயகெயமுய எனப்பேசியபடி இறங்கிய சில சிறுவர்களின் முதுகில் அடியைப்போட்டு வரிசையை ஒழுங்கு படுத்தினார் பீட்டி வாத்தியார்.


பின் எச்செம் சார் முன்னே செல்ல, வரிசை ரயில்வே ஸ்டேசன் கட்டிடத்தை நோக்கி நகர்ந்தது. உள்ளே வெள்ளை பேண்ட்டுச்சட்டை பேட்டிருந்த ஒருவர் இவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று, அந்தக் கட்டிடத்தின் உள்ளே கூட்டிச் சென்றார். அடிவானத்தின் இரு முனைகளையும் தொட்டிணைக்கும் நீண்ட கருப்புத் தடத்தைக்காட்டி, “இதான் தண்டவாளம், இதுலதான் ரயில் போகும்” என்றார். பிள்ளைகள் ஆவலோடு எட்டிப்பார்த்து, “, இங்யாரு, தண்டவாளமாண்டி” என தங்களுக்குள் பேசிக்கொண்டன. “அந்தா தெரியுது பார் ஒசரமா. அதான் சிக்னல். அதப்போட்டதும் ரயில் அங்குட்ருந்து வந்து இங்குட்டு போவும்” என்றார். கமர் ரயில் வரும் திசையையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டத்திலிருந்து ஒரு தைரியச் சிறுவன், “ரைலு எப்ப வரும்?” என்றான்.


இன்னக்கி ராமேஸ்வரத்துல ரயிலுல கோளாறு. ரயிலு லேட். இங்ய வரதுக்கு ரவையாயிரும்” என்றார்.


எச்செம் சார் அங்கு வந்து, “புள்ளையளா, ஒங்க கட்டிச்சாப்பாட்ட எடுத்துட்டு வந்து சாப்புடுங்க. சாப்புட்டு ஊருக்கு கெளம்பறோம்” என்றார்.


மாணவர்கள் ஆங்காங்கே வட்டமாய் அமர்ந்து தங்கள் சோற்றுக்கட்டைப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர்.


கோளாறு வர்ற ரைலப்பத்தி குலாம் மாமு ஏன் சொன்னதேயில்ல என நினைக்கத்துவங்கினாள் கமர்.


அன்றிலிருந்து அவள் கனவில் ரயில்கள் வருவதில்லை.


***


நியூரி பில்கே சிலான்: அற்புதக் கதைசொல்லி

லேகா இராமசுப்ரமணியன்



"மனிதருக்குண்டான இயல்பான பலவீனங்களை கொண்டே என் கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். என் உருவாக்கம் சரியானது தானா என பார்க்க நான் என்னையே பரிசோதித்துக் கொள்கிறேன்." - சிலான் 


உலக சினிமா அரங்கில் பெண்களை முன்னிலைப்படுத்தி வெளிவந்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை முடிவற்றது. இத்தாலியின் பெடரிக்கோ பெலினி, மைக்கலேஞ்சலோ அந்தோனியோனி, ஸ்பெயினின் அல்மதோவர், ஸ்வீடனின் பெர்க்மன், பிரான்சின் லூயிஸ் பெனுயல் எனப் புகழ் பெற்ற இய‌க்குநர்களின் விருப்பத்திற்குரிய களம் பெண்களின் அகவுலகம் சார்ந்ததே. இவ்விதம் ஆண் மனச் சலனங்களை வேர் வரை ஊடுருவிச் சென்று திரைப்படம் படைத்தவர்கள் இங்கு மிகச் சிலரே. அவர்களுள் துருக்கி இயக்குனர் நியூரி பில்கே சிலான் (Nuri Bilge Ceylan) குறிப்பிடத்தகுந்தவர்.



பெண்களைப் போல ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் இல்லை. சட்டெனப் பிரியத்தை உணரச் செய்திடவும், கோபத்தை வெளிக்காட்டிடவும் தயங்குபவர்கள். ஆண்களின் மனவெளியில் அத்தனையும் உண்டு, அதை வெளிக்கொணர அவர்கள் பிரயத்தனப்படுவதில்லை. சிலானின் கதைகள் பெரும்பாலும் இத்தகைய ஆண் உணர்வுகளைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டவை. ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன், கலைஞன் - தொழிலாளி என பல்வேறு தரப்பட்ட மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைகளை பேசிச் செல்லும் படங்கள் இவருடையவை. ஆண் - பெண் உறவின் பொருட்டு நிகழும் துரோகங்களையும் விரிவாய் அலசிடத் தவறவில்லை அவர்.


உலகளாவிய திரைப்பட விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வரும் சிலானின் படைப்புகள் ஒன்றோடொன்று ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவை. தனித்து அலையும் புத்திஜீவிகள், சுமூகமான உறவற்ற தம்பதிகள், வேலையில்லா தொழிலாளிகள், ஆண் மனதை அறிய முயன்று தோற்கும் பெண்கள் என சிலான் உருவாக்கி நடமாடவிடும் கதாபாத்திரங்கள் எதார்த்தத்தில் காணக் கிடைப்பவர்கள்.


2002ஆம் ஆண்டு வெளிவந்த சிலானின் Distant நேர்எதிர் திசையில் பயணிக்கும் இரண்டு ஆண்களைப் பற்றியது. மெஹ்மத் நகரத்தில் வசிப்பவன், பணக்காரன், நடுத்தர வயதினன், படித்தவன், புகைப்படக் கலைஞன், தேர்ந்த ரசனைக்காரன், நாகரீகம் கற்றவன். யூசுப் கிராமத்து இளைஞன், படிப்பறிவற்றவன், ஏழை, வேலை தேடுபவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் குறிப்பே Distant. பாவப்பட்ட யூசுப்பை மெஹ்மத் நடத்தும் விதம் மோசமானது. அவன் கற்றறிந்த ஞானம் அந்த ஏழை இளைஞனிடம் காட்டும் வன்மத்தில் அர்த்தமற்றுப் போகிறது. புத்தக வாசிப்பும், உலக ஞானமும் நம்மை மேலும் மேலும் பக்குவபடுத்திக் கொள்ளவே. தன்னை பெரும் ரசனைக்காரனாக காட்டிக் கொள்ளும் மெஹ்முத் உண்மையில் பந்தம் என யாருமின்றி தனித்து விடப்பட்டவன். பெருவாழ்விற்குச் சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்தபட்ச அன்பு போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை இது.


துரோகம் என்கிற ஒற்றைச் சொல்லைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட சிலானின் திரைப்படம் Climates (2006). மகிழ்ச்சியற்ற காதலர்கள் இருவரின் சுற்றுலா பயணம் ஒன்றில் துவங்குகின்றது கதை. இருவருக்கும் இடையே நிலவும் மௌனம் அவர்களின் கடந்த காலத்தின் மிச்சம். வேறொரு பெண்ணுடனான உறவின் காரணமாக அவன் மீதான தீராத கோபம் அவளை விடாமல் துரத்துகிறது. அந்த கடற்கரை நகரில் இருவரும் பிரிவதெனப் பேசி விடைபெறுகின்றனர். தொடரும் வசந்த காலத்தில் அத்தனைக்கும் காரணமான அப்பெண்ணை அவன் மீண்டும் தொடர்பு கொள்கிறான். குற்ற உணர்ச்சி ஏதுமற்று தொடரும் நாட்களில் நிலவும் வெறுமை அவனை மீண்டும் காதலியை தேடிச் செல்லச் செய்கிறது. பனிக்காலத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பொய் சொல்லி அவளைச் சமாதானம் செய்கிறான். ஆனால் உணர்ச்சி பீரிட பெருங்குரலெடுத்து அழுதிடும் அவளின் உண்மைப் பிரியம் முன்னே அவன் தோற்றுப் போகிறான். துரோகத்தை மையப் புள்ளியாக வைத்து சிலான் வடித்திருக்கும் இக்காவியம் ஆண் - பெண் உறவின் பொருட்டு நிகழும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என்பதை உணர்த்துவது. Climates திரைப்படத்தின் மூலம் தான் ஓர் அற்புதமான நடிகனும் கூட என்பதை நிருபித்து உள்ளார் சிலான். சிலானின் மனைவியும் இயக்குநருமான எப்ரூ சிலான் இப்படத்தில் நாயகி வேடமேற்றுள்ளார். துரோகத்தின் வலையில் சிக்கிக் கொண்ட காதலர்களின் நிலையை இந்த ஆதர்ச தம்பதிகள் திரையில் வெகு இயல்பாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.


ஒருவனின் சுயநலத் தேவைக்காய் சிதைவுறும் ஒரு குடும்பத்தின் கதை சிலானின் Three Monkeys (2008). தெளிந்த நதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை ஓரிரவில் முற்றிலுமாக தடம்புரண்டால் என்னாகும். பணமானது ஒரு குடும்பத்தை ஆட்டிப் படைப்பதை முடிந்தவரை எதார்த்த மொழியில் அணுகியிருக்கிறார் சிலான். பணத்தின் தேவை அல்லது அதன் மீதான ஆசை ஒருவனை செய்யாத கொலைப் பழியை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது, நடுத்தர குடும்பத்தலைவியை கணவனுக்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறது. சிலானின் பிற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இதில். சஸ்பென்ஸ் த்ரில்லரை போலத் துவங்கும் கதை மெல்ல வேகம் குறைந்து பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் சுழல்கிறது. அதில் இருந்து வெளிவர அவர்கள் தேர்ந்தெடுக்கும் விபரீத முடிவுகள் என நீள்கின்றது. துரோகத்தின் கதை இதிலும் உண்டு. அதன் தொடர்ச்சியாய் நீளும் குற்றஉணர்வும், தடுமாற்றங்களும் கூட.


2011ம் ஆண்டு வெளிவந்த Once up on a time in Anatolia சிலானின் மாஸ்டர் பீஸ் என அறியப்படுகிறது. அனேக பாராட்டுகளோடு தீவிர விவாதங்களை முன்னெடுத்த திரைப்படம். கொன்று புதைத்த பிணத்தை அடையாளம் காட்ட குற்றவாளியோடு பயணிக்கும் மருத்துவர், வக்கீல், போலீஸ் அதிகாரி மூவரின் ஓரிரவு பயணமே கதை. அவர்களுக்குள் நிகழும் நீண்ட உரையாடல்கள் தத்துவம், திருமண வாழ்க்கை, அலுவல், உலக நெறிமுறைகள் என பலவற்றையும் பேசிக் கொள்கின்றனர். அவர்களின் பேச்சின் வழியே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியமும் நமக்கு புலப்படுகின்றது. வன்மமும், குரூரமும, இரக்கமும் கொண்டு அலைபாயும் ஆண் மன சலனங்களை மிக நுட்பமாய் இத்திரைப்படம் விவரிக்கின்றது. இரவில் விளக்கு வெளிச்சத்தில் அழகிய பெண் முகத்தை கண்டதும் வெடித்து அழுதிடும் கொலைக் குற்றவாளி, அவள் உருவில் கடவுளைக் கண்டவனைப் போல நடந்த உண்மையை போலீசிடம் விளக்கிடும் காட்சி ஒன்று போதும் சிலானின் மேதமையை விளக்க. கலங்கிய நதியைப் போல அத்தனை அழுக்குகளையும் தாங்கிச் செல்கிறது வாழ்க்கை என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.


சென்ற ஆண்டு வெளிவந்து பலதரப்பட்ட விமர்சனங்களை சந்திந்த சிலானின் Winter Sleep அவர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள படமே. புகழ் பெற்ற எழுத்தாளன் - திரைக்கலைஞன் - ஊரில் மதிப்புமிக்க நபர் - பெரும் பணக்காரர் எனப் பல முகங்கள் கொண்ட முதியவர் ஐதீன் தன்னைக் குறித்துத் தானே உருவாக்கிக் கொள்ளும் பிம்பம், அதைக் கட்டிக்காக்க சிரித்த முகத்தோடு விவாதங்களில் ஈடுபட்டு தோற்கும் பொழுதுகள், இருள் சூழ்ந்த அவரது தனிமை பொழுதுகள் என இத்திரைப்படம் வாழ்வில் தோல்வியுற்ற ஒருவனின் இறுதி நாட்களின் சில பக்கங்களைப் புரட்டிச் செல்கின்றது. அவரது தங்கை, மனைவி துவங்கி அனைவருக்கும் ஐதீனை வெறுக்க ஒரு காரணம் இருக்கிறது. படித்த படிப்பும், எழுதும் எழுத்தும் அர்த்தம் பெறுவது நம்மை சுற்றியுள்ளவர்களின் நன்மதிப்பை பெற்றால் தான் என்பதை அவர் புரிந்து கொள்ள ஓர் ஆயுள் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு ஏற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முகமூடியை மாற்றிக் கொள்ளும் ஐதீனின் நாடகம் சோர்வுற்று முடிவுறுகிறது.


நிலப்பிரபுத்துவக் காலத்தை போல இன்றும் பணக்காரர்களின் பிடியில் சிக்கியிருக்கும் அடித்தட்டு மக்களின் குரலாய் ஒரு குடும்பத்தின் கதையும் இதிலுண்டு. குளிர்காலமும், மழைக்காலமும், பனிக்காலமும் மைதீனின் மனமாற்றங்களோடு சேர்ந்து பயணிக்கின்றன. ஒரு விதத்தில் ஐதீன் கதாபாத்திரம் Distant திரைப்படத்தில் வரும் மெஹ்மூத்தை ஞாபகப்படுத்துவது. உலக ஞானத்தை மீறிய ஒன்று பிறரின் அன்பைப் பெறுவது என்பதை நினைவூட்டும் கதாபாத்திரங்கள்.


சிலான் மிகச் சிறந்த புகைப்பட கலைஞர். அவரது இணையதளத்தில் கொட்டிக் கிடக்கும் புகைப்படங்கள் சொல்லும் அவர் திறனை. மிகச் சிறந்த புகைப்படக்காரன் இயக்குநரானால் உண்டாகும் மாயாஜாலம் என்னவென்பதற்கு சிலானின் திரைப்படங்களே சாட்சி. துருக்கி தேசத்து நகரங்களும், கிராமங்களும், நதிகளும், மலை வெளிகளும் இவர் கேமராவின் மந்திரத்தால் பிரம்மாண்ட அழகு பெற்று விரிகின்றன. அதிலும் குறிப்பாக அனடோலியா பகுதி மீதான சிலானின் காதல். Distant, Winter Sleep உள்ளிட்ட இவரின் பல படங்கள் அப்பகுதியில் படமாகப்பட்டுள்ளன. கனவுகளுக்கு உயிர் கொடுத்ததை போன்ற கேமரா கோணங்கள் துருக்கி தேசத்தின் மீதான காதலை கூட்டுவது.


பருவ மாற்றங்களை தம் கதையோடும், கதாபாத்திரங்களின் மனநிலையோடும் இணைப்பதில் சிலானுக்கு நிகரில்லை. உதாரணமாக Distant திரைப்படம் பனிக்காலத்தில் துவங்கி வசந்த காலத்தில் முடிகிறது. பனியுருகிக் கரைவதைப்போல மெஹ்மத்தைச் சுற்றி இருந்தவர்கள் அவனை விட்டு விலகிப் போகின்றனர். போலவே Climates திரைப்படத்தில் வேனிற்காலத்தில் பிணக்கு கொண்டு விலகும் காதலர்கள் மீண்டும் பனிகாலத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இம்முறை உணர்ச்சிகள் அற்று உருகி ஓடத் தயாரான மனநிலையில் இருக்கிறார்கள். Winter Sleep திரைப்படத்தில் பனிக்காலமும், குளிர்காலமும் இரு கதாபாத்திரங்கள் எனலாம். 


சிலானின் படைப்புகள் எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள். தனிமை, துரோகங்கள், ஏமாற்றம் என மனவெளியில் நிகழும் சின்னத் தடுமாற்றத்தைக் கூடக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தி ஆச்சர்யபடுத்தும் பெருங்கலைஞன். சிலானின் கதையுலகம் பெரும்பாலும் உறவுகளுக்கிடையேயான மனப் போராட்டங்களை குறித்தவை, இருப்பினும் அதை மிகை உணர்ச்சியில்லாமல் எதார்த்தத்தின் வழி விவரிக்கிறார். மெஹ்மதை போல, யூசப்பை போல, ஐரீனைப் போல சிலான் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியேயும் நமக்குப் பெற்றுக் கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. தன் படைப்புகளின் வழி பார்வையாளனை மிகுந்த சிந்தனைக்கு உட்படுத்தி, சில தெளிவுகளை முன்வைக்கும் வகையில் சிலான் - நம் காலத்தின் கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை.


***


அன்றில் பறவை

சங்கீதா பாக்கியராஜா


அந்நியோன்யமாய் வாழ்றதுக்கு உதாரணமா எங்களைத்தான் சொல்வாங்க.


அந்நியோன்யம் அப்படீன்னா சண்டை போடாமல் போலி முகத்தோட வாழ்றதுன்னு நினைச்சீங்களா?


நானும் பூரணமும் போடாத சண்டையா! பிள்ளைகள எங்க படிப்பிக்கிறது என்றதில இருந்து தோட்டத்துல எந்த மரம் இருக்கணும் இருக்கக்கூடாதுங்கிற வரைக்கும் சண்டை பிடிச்சிருக்கோம். என்ன அவளோட சண்டை எல்லாம் கீச்சுக்கிளி போல அமத்தலாயிருக்கும். நான் தான் நாய் போல ஊழையிட்டு கத்துவேன்.


நூல் சேலை தவிர எதையும் அவள் உடுத்த விட்டதில்ல. வேற ஆடை உடுத்த அவளுக்கு விருப்பமானு கூட எனக்குத்தெரியாது. ஆனா எனக்கு என்ன, எங்கே, எப்படி வேணுங்கிறதெல்லாம் அவளுக்கு அத்துப்படி.


அதிர்ந்து பேச மாட்டாள், நடக்க மாட்டாள். அவளுக்கும் சேர்த்து என் சத்தம் தான் வீட்டில கேக்கும். பள்ளிக்கூடத்துல எப்படி நீ படிப்பிக்கிற என்று எத்தனையோ தடவை பரிகாசம் பண்ணியிருக்கேன்.


ஆனா பிள்ளையளுக்கு எந்த டீச்சரை அதிகம் பிடிக்கும் எண்டு கேட்டா பூரணம் டீச்சர் தான் என்று இவ பக்கம் கைகாட்டுவாங்க. நானும் தான் டீச்சராயிருக்கேன். எட்டி நின்று பவ்வியமாய் குட்மார்னிங் சொல்ற பிள்ளைகள், பூரணத்தின் சேலைத்தலைப்பை பிடித்தபடி பள்ளிக்கூடமெங்கும் அலையுறதை நானே எத்தனை தடவை கண்ணால பார்த்திருக்கேன்.


சிக்கனம் பற்றி சொல்லிக்கொடுத்தா, சேவை பற்றி சொல்லிக்கொடுத்தா, மற்றவங்களோட கதைக்கிறது எப்படி, பழகுறது எப்படி, யாருக்கு உதவி செய்ய வேணும், யாரை வீட்டுக்குள்ள சேர்க்க வேணும் எண்டு சொல்லிக் கொடுத்தா. சின்னப்பிள்ளைகள எப்படி தூக்குறது என்டது முதல் அவங்களுக்கு எப்படி பாலூட்டுறது என்கிறது வரைக்கும் செய்து காட்டினாள்.


ஊருக்குள்ள நாலு வீடு கட்டி, பிள்ளையளப் படிப்பிச்சி, ஆளாக்கி மாஸ்டர் தலை நிமிந்துட்டார்ன்னு சொன்னாங்கன்னா, அதன் காரணம் நானா? இல்ல, பூரணம் இல்லாட்டி என் வாழ்க்க பூரணமாயிருக்குமா?


அவளோட அழகுக்காக இல்ல, குணத்துக்காக தான் அவள கல்யாணம் கட்டினனான். அந்தக் காலத்திலயே ஊர எதிர்த்துக் காதல் கல்யாணம் பண்ணிக்கிற அளவு தைரியமும், திடமும் இருந்த அவளுக்கு, கோபப்படத் தெரியாதுண்டா யாராவது நம்புவாங்களா?


காதல் எண்டு சொல்லி கண்ட கண்ட இடத்தில அசிங்கம் பண்ணதில்ல. எங்கட பிள்ளையளுக்கே தெரியாமல் ஒவ்வொரு நாளும் எங்களோட அந்தரங்க வாழ்க்கை அப்படி அழகா போகும்.


ம்ம்ம். வயசு போனா காதல் போயிடுமெண்டு எந்த விசரன் சொன்னவன்? அறுபது வயசுக்குப் பிறகுதான் காதல் எண்டா என்னண்டு எனக்கு தெரியவந்துச்சு.


சின்ன முத்தங்களால எப்படி ஒருத்தனை சிலிர்க்க வைக்க முடியும் என்றத செய்து காட்டினாள் பூரணம்.

சாய்மணைக்கதிரையில சாஞ்சிருக்கிறப்போ தலைகோதிச் போகும் அந்த ஒரு நிமிஷம் போதும், தாம்பத்தியத்தின் சுகம் சொல்ல.

நகம் வெட்டுறேனெண்டு காலடில இருந்து கால்விரல்களுக்கு சொடுக்கெடுத்து, கைகளால முத்தம் வைக்கிற சுகம் இன்னும் மனசுக்குள்ள நிழலாடுது.


போகன்வில்லா முள்ளுக்குத்துனப்போ என்னை விட அதிக வலியை அனுபவிச்சவள் அவள்.

ஒற்றை மீன்துண்டை எனக்காக ஒளிச்சு வைச்சு தட்டுல போடுறதும், அதில ஒரு பாதிய நான் அவளுக்கெண்டு எடுத்து வைக்கிறதும்.


தோட்டத்துல பறிச்ச ரோசாப்பூவ யாருக்கும் தெரியாமல் சாமிப்படத்துக்கு மேல வைச்சிட்டுப்போக, குளிச்சிட்டு வந்து சாவதானமா எடுத்து அவ தன் தலையில வைச்சி என்னைப்பார்த்து கண்சிமிட்டிப் போறதும்.


வெளிய போயிட்டு வர நேரம் பிந்தினா வாசலுக்குப் பக்கத்துல கதிரைய போட்டுட்டு பேத்திக்கு தலைபாக்குற சாக்கில என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறதும்.


என் சாய்மணைக்கதிரையில யாரையும் இருக்க விடாமல் காவல் பண்ணுறதும், யாருக்கும் தெரியாமல் சாய்ந்து அழுறதுக்கு எனக்கு தோள் குடுக்குறதுக்கும்.


இதெல்லாம் இந்தக்காலப்பிள்ளையளுக்குத் தெரியுமா!


ஆச்சு, நெஞ்சு வலிக்குதெண்டு சொல்லி, '' எண்டு ஒரு சின்ன சத்தத்தோட ஆவி அடங்கிப்போன முகம் தான் காலையிலயும், ராத்திரியிலயும் என்ட கண்ணுக்குள்ள நிக்குது. எமன்கூட அவளுக்கு நோகாமல் தான் அவளக் கூட்டிட்டுப் போய்ட்டான் போல.

ஆனா எதுக்கும்மா என்ன விட்டுட்டு நீ முதல்ல போன?


பிள்ளையள் கண்ணுக்குள்ள வைச்சி பாக்கிறாங்க தான், பேரப்பிள்ளையள் தாத்தா தாத்தான்னு என்னையும் அவங்கட விளையாட்டுக்குள்ள இழுக்கிறாங்க தான். மருமக்களும் பழுதில்ல. பொங்கல் தீபாவளிக்கு மரியாதை செய்யுறதில இருந்து மருந்து வாங்கித்தாறது வரைக்கும் பாத்துப்பாத்து செய்யுறாங்க.


ஆனா என்ன செய்து என்ன?


அவளோட ஸ்பரிசம் இல்லாமல், வாசம் தெரியாமல், சின்னதாய் பேசும் சத்தம் கேக்காமல் பதுமைபோல் நடக்கிற பாதச்சுவடு பார்க்காமல் இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமாயிருக்குது.


நீ நட்டு வச்ச மாமரத்தையும், தென்ன மரத்தையும் தடவித்தடவி, உன்னோட தழுவல மீட்டிப்பார்க்கிறேன்.

மகள் சமைச்ச மீன்குழம்பில உன்னோட ருசி தெரியுதா எண்டு தேடிப்பாக்குறேன்


மடிச்சி வைச்ச வெள்ளை வேட்டில உன்ட கைரேகை இருக்கா எண்டு தொட்டுப்பாக்கிறேன். கனவுல கூட நீ கட்டித்தழுவுறதாய் கண்டு கரும் இருட்டைக் கட்டிப்பிடிக்க எத்தனிக்கிறன்.


இத்தனை ஆளுமை உனக்கிருக்கெண்டு தெரியாமல் போச்சே.


உன்னை இன்னும் கொஞ்சம் சந்தோசமாய் வைச்சிருக்கலாமோண்டு நினைச்சி நினைச்சி நான் ஏங்கி அழுறது உனக்கு கேக்குதா?


மூச்சு முட்டுது. சாவு கெதியில வராதா எண்டு தான் தினமும் கண்மூடித் தூங்கிப்போறன்.


பயமாயிருக்கு பூரணம். நீ இருக்கும் வரைக்கும் பூரணமாய் இருந்த உன்ட புருஷன் இன்டைக்கு வெத்து மனுஷன்.


ஆயிரம் பேரிருந்தாலும் நீ இல்லாத நான் அனாதை தான்.


உன்ட சாவுக்கு கூட நான் அழல்ல எண்டு எல்லாரும் சொல்றாங்க. நான் செத்தா அழக்கூடாதெண்டு சத்தியம் வாங்கிட்டு செத்துப்போய்ட்டாய். கண்ணீர் வடிக்கலன்றது தான் எல்லாருக்கும் தெரியுது ரத்தக்கண்ணீர் நரம்பெல்லாம் சுத்தி சுழண்டோடுறது உனக்கு மட்டுந்தானே தெரியும்.


எத்தனை இழப்புகள் வந்தாலும் தாங்கியிருந்தேன் நீ இருந்ததால, உன்ட இழப்பை தாங்குற ஜீவ சக்தி தேய்ந்து போச்சி.


இந்திரியங்களைக்கூட அடக்கிக்கொண்டு எந்திரமாய் வாழ்ந்துட்டு இருக்கேன் பூரணம். எனக்கு வாய்விட்டழுற வேதனையைக்கூட தரக்கூடாதெண்டு வாக்கு வாங்கிட்டு பறந்து போன உன்னை விட நான் சிறுமைப்பட்டவன் தான்.


இழத்தல் எப்பவும் வேதனை தான். என்ன விதவைகளின் வேதனை தபுதாரன்களுக்கும் இருக்குதெண்டு உலகத்துக்கு தெரியுறதில்ல.


சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற இந்த முதிய முரடனுக்கும் மனசிருக்கு உன்மேல இன்னும் தளும்பிக்கொண்டிருக்கும் காதலும் இருக்கு பூரணம்.


தொங்கிக்கொண்டிருக்கிற உன் சேலையில வேர்வை வாசம் அடிக்குதா எண்டு மணந்து பார்க்கிறேன்.

வாலிப முறுக்குண்டு சொல்வாங்க. வயசானவங்களுக்கும் காமம் காதலாய் வருமெண்டு யாருக்கும் தெரியுமா?


நீ இல்லாத இரவுகள், நீ தொடாத அங்கங்கள், நீ தழுவாத தோள்கள் எல்லாம் நீ வேணும் வேணும் எண்டு தினவெடுத்துத் திணறுது.


ஒவ்வொரு ராத்திரியும் உன்னை பாயில தேடி கைகளால் துழாவுறேன்.


உன்ட சீலை தான் எனக்கு போர்வை. அந்த வாசம் போகக்கூடாதெண்டு தோய்க்காமல் ஒளிச்சி வைக்கிறேன்.


***


எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!

நேர்காணல் : ஜெயமோகன்


தமிழ்ச் சூழலில் ஜெயமோகனுக்கு அறிமுகம் அவசியமில்லை. சமகாலத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நவீனத் தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் தவிர்க்கவியலாத பங்களிப்பை ஆற்றி இருப்பவர். எழுத்தாளர் மட்டுமல்ல சிந்தனையாளரும் கூட. தமிழ் மின்னிதழ் தொடங்க யோசனை எழுந்ததும் முதல் இதழில் ஜெயமோகனின் விரிவான நேர்காணல் இடம் பெற வேண்டும் என்பதும் சேர்ந்தே முடிவானது.


இது ஒரு மின்காணல் (electronic interview). மின்னஞ்சலில் நான் கேள்விகளை அனுப்ப, அவர் பதிலிலளித்து, அதனடிப்படையில் புதுக் கேள்விகள் முளைத்து, அவற்றுக்கான விளக்கங்கள் என உருவான ஒன்று. பதிலளிக்கையில் முகபாவங்கள் என்ன, எங்கே யோசிக்கிறார் என்பன‌ போன்ற விஷயங்கள் இதில் பதிவாகாது என்பது குறை தான் எனினும் சொல்ல விரும்பியதைத் திரிபடாமல் அப்படியே கொண்டு சேர்க்க பேச்சை விட எழுத்தே துல்லியமான வழி. தவிர, மின்னிதழுக்கு மின்காணல் தானே பொருத்தம்!




1. முதலில் இயல் விருதுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப்போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா?


எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தே தான். என் அம்மா என்னிடம் கதை எழுதிக்காட்டும்படிச் சொல்வதுண்டு. பிரசுரமானது எட்டாம் வகுப்பில் படிக்கையில். ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை. நான் அவரது கனவின் உருவாக்கம்.


சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முதலிடம் என நான் நினைக்கவில்லை. எழுத்து என்பது அப்படி கறாராக வகுக்கப்படத்தக்கது அல்ல. வெவ்வேறு எழுத்தாளர்களால் வெவ்வேறு இடங்கள் நிரப்பப்படுகின்றன. அது ஒரு கம்பளம் போல பலநூறுபேரால் நான்குதிசையிலும் பின்னி விரித்துச்செல்லப்படுகிறது. நான் என் இடத்தை நிறைக்கிறேன்


எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே முடியாது. இதை ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே ஐம்பதுக்கும் மேல் வயதாகும்போது உங்களுக்கும் இது தெரியும். எழுத எழுத எழுதுவதற்கான இடம் தெரிந்துகொண்டே இருக்கும். அப்படித் தெரியாமலாகும்போது நின்று விடுகிறோம். அப்போதுதான் திரும்பிப்பார்க்கிறோம்.


அதுவரை எழுத்து என்பது மொழிவழியாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொள்ளும் ஒரு கனவில் வாழ்ந்திருப்பதுதான். வாசகர்களுடன் சேர்ந்து நிகழும் ஒரு கூட்டுக்கனவு அது. எழுத்து உருவாகி வரும்போது நாம் நம்மை இழந்து அதற்குள் நுழையும்போது வாழ்க்கை பலமடங்கு ஒளியும் விரிவும் கொண்டதாக ஆகிறது. அந்த இன்பமே எழுதுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது. மற்றபடி அதில் சாதனை என ஏதுமில்லை.


ஆனால் இளம் வயதில் இருப்பவர்களிடம் அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அவர்கள் சாதனைகளையே குறிவைப்பார்கள். அவர்களே எழுதி எழுதி அதைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்


2. உங்கள் இளமை வாழ்க்கை, இலக்கியத்தில் நாட்டம் வந்தது குறித்துச் சொல்லுங்கள். உங்கள் நண்பன், பெற்றோரின் தற்கொலை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதித்தது? எழுத அது காரணமா?


நான் எப்போதுமே எழுத்தாளனாகவே உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னேன். அது என் அம்மாவால் எனக்கு அளிக்கப்பட்ட இலக்கு. எழுத்தாளன் ஆகவேண்டுமென்றால் வாசிக்கவேண்டும் என அம்மா சொன்னார்கள். சுட்டுவிரல் தொட்டு வாசிக்கும் வயதிலேயே நூல்களை அறிமுகம் செய்தார்கள்.


மிக இளம்வயதிலேயே நான் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போதுமே மிகச்சிறந்த வாசகனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன். இளம்வயதில் எல்லாவற்றையும் வாசித்துத் தள்ளவேண்டுமென்ற வெறி இருந்தது. இன்று அது இல்லை. அப்போது புனைவுகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். அக்கனவு அறுபடாமல் தேவைப்பட்டது. இன்று நானே புனைவுகளை உருவாக்கிக் கொள்கிறேன். ஆகவே வரலாறு, தத்துவம் தான் நான் இன்று அதிகமாக வாசிப்பவை.


வாசிப்பே என்னை எழுத்தாளனாக உருவாக்கியது. மொழிக்குள் வந்து விழுந்தேன். எழுதத் தொடங்கினேன். நடுவே அலைச்சலில் இருந்த சிலவருடங்கள் தவிர எப்போதுமே எழுதிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எழுத்து என்னை எப்போதும் பேணியிருக்கிறது. பட்டினி கிடக்கவிட்டதில்லை. இளவயதில் அற்புதமான பாலியல் கதைகளை எழுதியிருக்கிறேன் என நினைக்கையில் புன்னகை வருகிறது. எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு.


நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டதும் சரி அம்மாவின் தற்கொலையும் சரி அடிப்படை வினாக்களை நோக்கிச் செலுத்தின. மரணம் பற்றி, வாழ்க்கையின் சாரம் பற்றி. அவை நிகழாமலிருந்திருந்தால் என் எழுத்திலும் எளிய சமூகவியல் வினாக்களும் வாழ்க்கைச் சித்திரங்களும் மட்டும் இருந்திருக்கலாம். அவ்வினாக்கள் வழியாக நான் ஆன்மீகம் நோக்கிச் சென்றேன். தத்துவத்தைக் கற்றேன். ஆழ்படிமங்களை தியானித்தேன். இன்றுள்ள அகநிலையை அடைந்தேன்


இன்று எழுதுவதற்கு எது காரணம்? பிச்சையெடுக்கும் துறவியாக திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் என்னுடன் ஒரு முதிய துறவி இருந்தார். பேசமாட்டார். ஒருவேளை பிச்சை எடுத்து உண்பார். தனியாகவே இருப்பார். ஒருநாள் அவர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். நான் ஒரு போதும் துறவையோ யோக மார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க முடியாது என்றார். ’நீ கற்பனை உள்ளவன். கற்பனை யோக மார்க்கத்திற்கு உரியது அல்ல. அது பெருகிப்பெருகி யோக அனுபவத்தையே கற்பனையில் அடையத் தொடங்கிவிடும். சென்றுவிடு’ என்றார்.


நான் என்ன செய்யவேண்டும்?’ என்றேன். ‘கற்பனைதான் உன் வழி. தேடுவதும் கண்டடைவதும் அதன் வழியாகவே நிகழமுடியும்’ என்றார். அதுதான் நான் இன்று எழுதிக்கொண்டிருக்க காரணம். எனக்கு இது ஒருவகை யோகம். ஞானயோகம் என இன்னும் கச்சிதமாகச் சொல்வேன்.


3. உங்கள் குரு நித்ய சைதன்ய யதி பற்றிக் கூறுங்கள். எந்த வகையில் அவர் உங்கள் ஆளுமையின் உருவாக்கத்தில், சிந்தனை முறைகளில் பங்கு வகித்தார்? (குருவும் சீடனும் நூல் முன்னுரையிலும் உங்களின் வெவ்வேறு கட்டுரைகளிலும் காணக் கிடைக்கிறது எனினும் சுருக்கமாக விவரியுங்கள்)


எப்போதுமே ஆசிரியர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தவன் நான். இளமையிலேயே நல்ல ஆசிரியர்களும் எனக்கு அமைந்தார்கள். ‘குருசாகரம்’என ஓ.வி.விஜயன் ஓரு நாவல் எழுதியிருக்கிறார். குரு என்பவர் ஒரு கடல். அலைகளைத்தான் தனிமனிதர்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனக்கு இளமையில் தமிழ் கற்றுத்தந்த தமிழாசிரியர்கள், நான் பயணங்களில் கண்டடைந்த துறவிகள் அனைவருமே ஆசிரியர்களே.


நான் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை என் முதன்மையான ஆசிரியராகச் சொல்வேன். நவீன இலக்கியத்திற்கு என்னை அவர்தான் வழிநடத்தினார். பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கோவிந்தன் போன்றவர்களும் எனக்கு முக்கியமானவர்கள். சுந்தர ராமசாமி, ஞானி இருவரையும் அக்காலத்தில் சந்தித்தேன். இருவருமே எனக்கு இருவகையில் ஆசிரியராக அமைந்தவர்கள். நவீன இலக்கியத்தின் நெறிகளை சுந்தர ராமசாமியிடமிருந்தும் கோட்பாடுகளை ஞானியிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். பேராசிரியர் ஜேசுதாசன் செவ்வியல் நூல்களை அணுகுவதற்கு கற்பித்தவர். அவரது மாணவரான வேதசகாயகுமார், .கா.பெருமாள் ஆகியோரும் என் ஆசிரியர்களே.


ஆசிரியர் என்பதிலிருந்து ஒரு படி மேலானவர் குரு. ஆசிரியர் ஒரு துறையில் நமக்கு கல்வியளிப்பவர். குரு நம்மை முழுமை நோக்கி வழிநடத்துபவர். ஆசிரியர்கள் கல்வியை அளிக்கிறார்கள். குரு நம்முள் உள்ள கற்கும் அகத்தை முழுமை செய்கிறார். ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள். குரு படிப்பதைச் சொல்லித்தருகிறார். நித்யா எனக்கு அப்படிப்பட்டவர்


நான் தொடர்ந்து பல துறவிகளை ஞானிகளைச் சென்று சந்தித்துக்கொண்டே இருந்தவன், பெரும்பாலும் ஏமாற்றம். சிலர் எனக்குரியவர்கள் அல்ல என்று உணர்ந்தேன். எனக்குரிய குரு இலக்கியமும் தத்துவமும் இசையும் அறிந்தவராக, அறிவார்ந்தவராக, சிரிப்பவராகவே இருக்கமுடியும் என நித்யாவைச் சந்தித்த பின்னரே உணர்ந்தேன்


நித்யாவை முதன்முதலாகக் கண்ட ஐந்தாவது நிமிடத்திலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் அதிகாலையில் மலர்களை பார்த்தபடி நடைசெல்லக் கிளம்பிக்கொண்டிருந்த முதிய மனிதர் அப்போது பிறந்த குழந்தை போல புத்தம்புதியவராக இருந்தார். அந்தக் கணத்தை இப்போது கண்மூடினாலும் பார்க்க முடிகிறது.


ஆனாலும் நான் அவரைச் சோதனை செய்தேன். அவரது கல்வியை, நேர்மையை, சமநிலையை, விவேகத்தை, ஆன்மஞானத்தை. அது அவருக்கும் தெரியும், வேடிக்கையாக அவர் அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். ஒருகட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்ற வியப்பு ஏற்பட்டது. நான் அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்


என் ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தார்கள், என்னை வளர்த்தார்கள். குரு என்னை உடைத்தார். அவமதிப்பும் சிறுமையும் கொண்டு கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இனி இவருடன் இல்லை என பாதியில் கிளம்பிச் சென்றிருக்கிறேன். எனக்கு பேச்சை கவனிக்கத் தெரியவில்லை என அவர்தான் காட்டித்தந்தார். நினைவில் நிறுத்தத் தெரியவில்லை என்பதைக் காட்டித்தந்தார். திட்டமிட்டுச் செயல்படவும் எடுத்த காரியத்தை முடிக்கவும் அவர்தான் கற்றுதந்தார். அதைவிட முக்கியமாக சீராக, தொடர்ச்சியாக, தர்க்கபூர்வமாகச் சிந்திக்கப் பயிற்றுவித்தார். அத்துடன் புனைவுலகில் அந்த தர்க்கம் மீது ஏறி மேலே தாவிச்செல்லவும் வழிகாட்டினார்.


நித்யா எதையுமே சொல்லித்தரவில்லை என்றும் தோன்றுகிறது. அவருடன் நான் இருந்தேன். அவர் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் காடுகளில் உலவிக்கொண்டும் இருந்தார். அவரிடமிருந்து அவரது சாரம் எனக்கு வந்துகொண்டிருந்தது. நான் மிகமிக ஒழுங்கற்றவன். கட்டற்றவன். முழுப்பித்தன். இன்றும் அப்படித்தான். அது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் என் கலையில் அப்படி அல்ல. அங்கே நான் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்திகளுக்கு நிகரானவன். அது நித்யா கற்பித்தது.


4. உங்கள் பிரியத்துக்குரிய சுந்தர ராமசாமி பற்றிச் சொல்லுங்கள். உங்களிடையே ஆன உறவு, உங்கள் எழுத்தை அவர் எப்படி பாதித்தார் என்பது பற்றி (சுரா நினைவின் நதியில் எனத் தனி நூலிலும் வெவ்வேறு கட்டுரைகளிலும் சொல்லி இருக்கிறீர்கள் என்றாலும் இங்கே சுருக்கமாக)


சுரா பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவர் நான் நெருங்கிப்பழக நேர்ந்த மூத்த தலைமுறைத் தமிழ் எழுத்தாளர். தமிழ்ச் சிற்றிதழ் சார்ந்த எழுத்தின் அடையாளமாக அன்று அவர் இருந்தார். .நா.சுவின் சிந்தனைமரபின் சமகால நீட்சியாக விளங்கினார். எண்பதுகளில் நான் அவரைச் சந்தித்தபோது அவர் வாழ்ந்த அந்த உலகம் மிக வசீகரமாக இருந்தது. மிகச்சிறிய வாசகர் வட்டம். அங்கே எந்தப்பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் கலைக்காகவே வாழும் சிலர். அவர்களின் கோபதாபங்கள், வம்புகள். அவர்களில் ஒருவனாக ஆக ஆசைப்பட்டேன்.


சிற்றிதழ் என்பது அளித்த பரவசத்தை இன்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். வெளியே இருந்த உலகம் மிக மேலோட்டமானது என்றும், நாங்கள் அதி தீவிரர்கள் என்றும் கற்பனை செய்துகொண்டோம். குறைவாக எழுதுவது மட்டும் அல்ல எழுதாமலிருப்பதேகூட படைப்புச்செயல்பாடு என நம்பினோம். தோற்றுப்போவது போல, புறக்கணிக்கப்படுவது போல வசீகரமான இன்னொன்று இல்லை என எண்ணினோம். ஜேஜே - சிலகுறிப்புகள் இந்த மனநிலைகளின் மிகச்சரியான ஆவணம். அது தோல்வியைக் கொண்டாடுகிறது. தோல்வியடைவதில் புனிதமானதாக ஏதோ உள்ளது, அதுவே வரலாற்றில் வாழக்கூடியது என அது முன்வைக்கிறது


சுந்தர ராமசாமி அந்த சிற்றிதழ்மனநிலையின் அப்போஸ்தலர். எவருக்காகவும் இல்லாமல் தனக்காக மட்டுமே எழுதுவதில் உள்ள பேரின்பத்தை அவர் கற்றுத்தந்தார். தனித்து நிற்பதிலும் நிமிர்ந்து நிற்பதிலும் உள்ள பெருமிதத்தை காட்டித்தந்தார். மிகச்சிறிய வட்டத்திற்குள் செய்யப்பட்டாலும் அறிவார்ந்த செயல்பாடுகள் அவற்றின் தீவிரம் வழியாகவே பெரும் விளைவுகளை உருவாக்கும் என்று கற்பித்தார். அவர் உருவாக்கிய உத்வேகம் அபாரமானது. இளம் வாசகனாக, எழுத்தாளனாக அவருடன் பேசிக்கொண்டு நாகர்கோயில் நகரத்தெருக்களில் நடந்த காலங்களை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு சொல்லையும் நினைவிலிருந்து எடுக்கமுடிகிறது.


ஆனால் மெல்லமெல்ல எனக்கு அவரது உலகம் சலிப்பூட்டத் தொடங்கியது. நான் என்னை ஒடுக்கிக் கொள்ள விரும்பவில்லை. என்னை வெடித்துப்பரப்ப விரும்பினேன். நினைத்ததை எல்லாம் எழுத, எழுதி எழுதி என்னைக் கண்டுபிடிக்க என் அகம் விம்மியது. சொற்களை எண்ணி எண்ணி யோசித்து எழுதும் அவரது எழுத்துமுறை எனக்குச் சரியாகப்படவில்லை. வரலாற்றை இலக்கியத்திற்கு அன்னியமாகக் கருதி அனைத்தையும் தனிமனித அனுபவத்தை மட்டுமே கொண்டுஅளக்கும் நோக்கு குறுகியதென நினைத்தேன்.


எழுத்தாளன் நிகர்வரலாற்றை உருவாக்கவேண்டும் என்றும் பண்பாட்டையே திருப்பி எழுதிவிடவேண்டும் என்றும் சமகாலச்சிந்தனையை முட்டி உடைக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். எழுத்து சில வரிகளுக்குமேல் கட்டற்று தன்னிச்சையாகப் பெருகவேண்டும் என்றும் கச்சிதமான மொழி அப்போதுதான் நிகழும் என்றும் கருதினேன். அவரது எண்ணிக்கோர்த்த மொழி மிகவும் பரந்து கிடப்பதாகத் தோன்றியது. அதைப் பாதிக்கும் குறைவான சொற்களால் என்னால் சொல்லிவிட முடியும், அதற்கான உத்வேகம் நிகழுமென்றால் என்று கண்டுகொண்டேன். நான் என் பித்தையும் கட்டற்ற வேகத்தையும் எழுத்தாக்க விரும்பினேன்.


சிற்றிதழ்ச்சூழலின் காலம் முடிந்துவிட்டது என உணர்ந்தேன். தகவல்தொடர்புப் புரட்சியின் காலம் வந்துவிட்டது. புதிய கருத்துக்கள் புதிய எழுத்து முறைகள். சிற்றிதழ் மனநிலைகள் அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொள்ளவே உதவும். எழுத விஷயமில்லாதவர்கள் அந்தப் பாவனையுடன் சாராயம் குடித்து கலகக்காரர்களாக வாழ்ந்து கொள்ளலாம். அது பெரிய சுய ஏமாற்று, எனக்குரியதல்ல என்று தோன்றியது.


அத்துடன் எனக்கு அவரது ஐரோப்பியச் சார்பு அலுப்பூட்டியது. இந்திய மரபின் மீதான உதாசீனமும் அறியாமையும் ஏமாற்றம் அளித்தது. தத்துவம் அற்ற அவரது யதார்த்தவாதம் பொருளற்றிருப்பதாகப் பட்டது. அதை அவரிடமே விவாதித்தேன். மெல்லமெல்ல விலகிச்செல்லத் தொடங்கினேன்.


புராணத்தையும் தொன்மத்தையும் நாட்டார் மரபுகளையும் கொண்டு எழுதப்பட்ட என் கதைகள் ஒவ்வொன்றும் அவருக்கு திகைப்பளித்தன. விஷ்ணுபுரம் அவரிடமிருந்து நான் அடைந்த விலகலின் திட்டவட்டமான புள்ளியாக அமைந்தது. அதை அவரால் உள்வாங்க முடியவில்லை. அதேசமயம் அது அடைந்த பெரும் வரவேற்பு அவரைப் பதற்றமும் எரிச்சலும் அடையச்செய்தது. அவரால் தன் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர் தனக்குச் சௌகரியமான நட்புச்சூழலை உருவாக்கிக்கொள்ளத் தொடங்கினார். விலகல் முழுமை அடைந்தது.


இன்று யோசித்தால் நான் சற்று பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் ஒருகட்டத்தில் என் வழியைக் கண்டுகொண்டேன். நித்யாவை நெருங்கினேன். அதன்பின் நேர்ப்பேச்சில் அவர் மீதான விமர்சனங்களை குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவரேதான் விமர்சனங்களை ஊக்குவித்தார். அதை நான் உண்மை என நம்பினேன். உள்ளூர மனிதர்கள் நொய்மையானவர்கள் எனப் பின்னர் தெரிந்தது. அவர் இறந்து பத்தாண்டுகளுக்குப்பின். என் நடுவயதில். ஒன்றும் செய்யமுடியாது.


இப்போது யோசித்தால் புன்னகை வருகிறது. அவர் அமெரிக்கா மேல் பெரும் பக்தி கொண்டவர். அமெரிக்கா பற்றி அவர் சொன்னதெல்லாமே குழந்தைத்தனமானவை. அங்கே தேவையான சூடில் காபி கிடைக்கும், எத்தனை டிகிரி சூடு தேவை என்று சொல்லி வாங்கலாம் என்றார். சமையல் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லிக் கேட்டுச் சாப்பிடலாம் என்றார். அங்கே காலம் தவறுதலும் பிழைகளும் அனேகமாக இல்லை என்றார்.


ஒருமுறை சொன்னார். ‘நான் அங்க மால்களிலே ஜாலியா நான் பாட்டுக்கு படுத்துண்டிருப்பேன். பிள்ளைகள் விளையாடிண்டிருக்கும். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா. வேடிக்கை பாக்க மாட்டா. இன்னொருத்தர் சுதந்திரத்துக்கு அந்த மாதிரி எடமிருக்கு அங்க. எப்டி வேணா இருக்கலாம். இங்க எங்க பாத்தாலும் உத்துப்பாத்து உச்சு கொட்டுவா”.


அவர் மறைந்து பல வருடம் கழித்து நான் அமெரிக்கா சென்றேன். அவர் இருந்த கலிஃபோர்னியா ஃப்ரீமாண்ட் நகரில் ஒருவர் சொன்னார். அவர் சுந்தர ராமசாமியை எப்படி அறிமுகம் செய்துகொண்டார் என்று. சுந்தர ராமசாமி மால்களில் படுத்திருப்பார். “இங்கே அப்டி யாரும் செய்ய மாட்டாங்க. ரொம்ப வேடிக்கையா இருக்கும். வெள்ளைக்காரங்க விசித்திரமா பாத்துட்டு போவாங்க. எங்கிட்ட என்னோட வெள்ளைக்கார முதலாளிதான் அவரைச் சுட்டிக்காட்டி அவர் உங்க ஊரான்னு கேட்டார். அப்ப‌டித்தான் அவரை கவனிச்சேன். ஏதாவது மெண்டல் பிராப்ளம் இருக்கும்னு நினைச்சேன். அப்பதான் அவர் ரைட்டர்னு சொன்னாங்க” சிரித்துக்கொண்டேன். பாவம் சுந்தர ராமசாமி என்று தோன்றியது அப்போதுதான்.

5. உங்கள் தாய்மொழி மலையாளம். கேரளச்சூழல் எப்போதுமே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் பேர் போனது. அப்படி இருந்தும் அதை மறுதலித்து தமிழில் எழுதத்தொடங்கியதும், தொடர்வதும் ஏன்? நீங்கள் தமிழனாக உணர்கிறீர்களா அல்லது தமிழில் எழுதநேர்ந்துவிட்ட மலையாளியாக மட்டுமா? உங்கள் மனம் எம்மொழியில் சிந்திக்கிறது? (இக்கேள்வியின் காரணம் உங்கள் மீது மலையாளி என்ற முத்திரை குத்தி, அவர்களோடு ஒப்பிட்டு தமிழர்களை மட்டம் தட்டுவதாக எழும் விமர்சனங்களினால்)


என் தாய்மொழி மலையாளம். ஆனால் என் குடும்பத்திலேயே தமிழறிஞர்கள் உண்டு. ஏனென்றால் குமரிமாவட்டம் திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அதில் இருநூறாண்டுக்காலம் முன்புவரை அரசாணைகள் எல்லாமே தமிழில்தான் இருந்தன. பழைய சேரநாடு அது. தமிழ் ஆட்சிமொழியாக, செவ்வியல் மொழியாக இருந்தது. மலையாளம் பேச்சுமொழியாக. நான் பள்ளியில் கற்றது தமிழ். பதினைந்து வயதுக்குள் உரையில்லாமல் எந்தச்செய்யுளையும் வாசிக்கும் அளவுக்குத் தமிழ் கற்றவன். நவீனத் தமிழிலக்கியவாதிகளில் என் தலைமுறையில் முறையாகப் பழந்தமிழ் கற்றவர்கள் சிலரே.


என் சிந்தனை மொழி தமிழே. இதுதான் சிக்கல். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எல்லாமே அனிச்சையாக தமிழில் இருந்து மொழியாக்கம் செய்து எழுதுபவை. ஆகவே என்னால் மலையாளத்திலோ பிறமொழிகளிலோ எழுதுவதன் இன்பத்தை அடைய முடிவதில்லை. என்னிடம் மலையாளத்தில் கட்டுரை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எழுதவேண்டும் என நினைத்தாலே சோர்வாக இருக்கும். தமிழில் பேனா எடுத்தாலே போதும். என் மனம் நேரடியாகவே மொழியாகி எழுத்தாகிவிடும்.


நல்ல எழுத்தாளன் புகழ், அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவதில்லை. நான் எழுத வந்தபோது மலையாளத்தில் எழுத்தாளனுக்குக் கிடைத்த புகழும் அங்கீகாரமும் மிகப்பெரிது. தமிழில் அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை. ஆனால் அப்படி வாய்ப்பே இல்லை என்பதுதான் எனக்குக் கிளர்ச்சி அளித்தது. என்னை ஒரு தலைமறைவுப் போராளியாக, தற்கொலைப் படையாகக் கற்பனைசெய்து உத்வேகம் அடைந்தேன். சிற்றிதழ் மனநிலை அது.


தமிழன், மலையாளி என்பதெல்லாம் நம்மைச்சுற்றி உள்ள அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அடையாளங்கள். அவர்களின் அதிகாரத்துக்காக அந்த அடையாளங்களை அவர்கள் உருவாக்கி அதனடிப்படையில் மக்களைத் திரட்டுகிறார்கள். அத்தகைய அடையாளங்களை ஓர் எழுத்தாளன் தனக்காகச் சூடிக்கொள்வான் என்றால் அவனைப்போல உதவாக்கரை வேறில்லை. திரும்பத்திரும்ப அந்தக் கும்பல் என் வீட்டு வாசலில் நின்று ‘நீ தமிழனா மலையாளியா சொல்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். ‘போய் வேலையைப் பாருடா முட்டாள். என் எழுத்தின் முற்றத்தில் கால்வைக்கவே தகுதியற்றவன் நீ. உன்னைப்போன்றவர்களை மீறித்தான் எங்கும் எப்போதும் இலக்கியம் எழுதப்படுகிறது’ என்பதே என் பதில்.


சில விஷயங்களில் என்னை மலையாளப்பண்பாட்டின் தொடர்ச்சியாக உணர்வதுண்டு. சில விஷயங்களில் தமிழ் பண்பாட்டின் கண்ணியாக. மலையாளப்பண்பாட்டையே தமிழ்ப்பண்பாட்டின் ஒரு சிறு பகுதியாகவே எண்ணிக்கொள்கிறேன். அப்படித்தான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில். கொற்றவையில்.


தமிழ், மலையாளம் என்ற இந்தப்பிரிவினை அதிகபட்சம் முந்நூறு வருட வரலாறுள்ளது. இலக்கியத்திற்கு இதெல்லாம் ஒரு காலமே அல்ல. இதையெல்லாம் அது பொருட்படுத்தவும் முடியாது. அது கையாளும் பண்பாட்டுக் குறியீடுகள், ஆழ்படிமங்கள் பல்லாயிரம் வருடத் தொன்மை கொண்டவை. இந்துவாக, இந்தியனாக, கீழைநாட்டவனாக எல்லாம் நான் என்னை உணரக்கூடும். ஆனால் இந்த அடையாளங்கள் எல்லாமே நான் எனக்கு சூட்டிக்கொள்பவை. நானே அடையாளம் காண்பவை. அவ்வடையாளங்கள் வழியாக என்னைச் சூழ்ந்திருக்கும் இந்த வாழ்க்கையுடனும் இதன் நேற்றைய வரலாற்றுடனும் தொடர்புகொள்கிறேன். பிறர் என்னை அப்படி வகுத்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.


இவ்வடையாளங்களுக்கு மேலாக ஏதோ ஒன்று உள்ளது. அடையாளங்களுக்கு அப்பால் திமிறிக்கொண்டு நிற்பது. அதுதான் இலக்கியத்தை உண்மையில் உருவாக்குகிறது. தமிழனாக, மலையாளியாக, இந்துவாக, இந்தியனாக எல்லாம் ஆரம்பிக்கலாம். முடிப்பது அவ்வடையாளத்தில் அல்ல.


அது நிகழ்ந்தால்தான் அது இலக்கியம்.


6. இன்றைய தேதியில் விஷ்ணுபுரம் தான் உங்களின் ஆகச்சிறந்த படைப்பு. அது தன் உயரத்திற்கேற்ப வாசகர்களைச் சென்றடைந்ததாக நினைக்கிறீர்களா? பொன்னியின் செல்வன் போல் அது விற்றிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் இன்று வரை அந்நாவல் எதிர்கொள்ளப்படும் விதம் பற்றிக் கூறுங்கள்.


விஷ்ணுபுரம் என் சிறந்த படைப்பு என்பது உங்கள் விமர்சனக் கருத்தாக இருக்கலாம். பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை இரண்டும் வேறுவேறு வகையில் அதற்கு நிகரானவை என நினைக்கிறேன்.


பொன்னியின் செல்வன் போல விஷ்ணுபுரம் விற்றிருக்க முடியாது. எப்போதும் விற்கவும் விற்காது. பொன்னியின் செல்வன் தமிழில் கல்வியறிவு மிகக்குறைவாக இருந்த காலகட்டத்தில் ஆரம்பப்பள்ளிக் கல்வி மட்டுமே இருந்த பெண்களையும் உத்தேசித்து எழுதப்பட்டது. ஆகவே மிகமிக எளிய நடையில், நேரடியான அர்த்தம் மட்டுமே கொண்டு, குழந்தைக்கதை போல எழுதப்பட்டது. இன்று அது ஒரு குழந்தைக் கதை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களால் பெரிதும் வாசிக்கப்படுவது.


பொன்னியின் செல்வன் விற்ற அளவுக்கு ஏன் சிவகாமியின் சபதம் விற்கவில்லை என்று கேட்டுக் கொண்டால் அடுத்த பதில் கிடைக்கும். பொன்னியின்செல்வன் தமிழகத்தின் ஒரு பொற்காலத்தைக் கற்பனை செய்கிறது. எளிய ராஜாராணி சாகஸக்கதையாக அதை முன்வைக்கிறது. தமிழ்ப்பொற்காலக் கற்பனைகள் உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது அது.


விஷ்ணுபுரம் நேரடியாக வாழ்க்கையைச் சொல்லவில்லை. அது மெய்மையைத் தேடுபவர்களின் கதையை மட்டுமே சொல்கிறது. ஆகவே அந்தத் தளத்தில் ஒரு தேடல் கொண்டவர்களே அதன் வாசகர்கள். நேரடியாகவே தத்துவத்தைக் கையாள்கிறது. ஆகவே தத்துவத்தைக் கற்கும் மனநிலை கொண்டவர்களுக்குரியது அது. ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் உருவகங்களையும் கையாள்கிறது. முன்பின் பின்னிச் செல்லும் கதையோட்டம் கொண்டது அது. ஆகவே கற்பனைமூலம் நாவலை விரித்தெடுக்கும் நல்ல இலக்கிய வாசகனே அதை வாசிக்கமுடியும்


அவ்வகையில் பார்த்தால் விஷ்ணுபுரம் பெற்ற வெற்றி, அடைந்திருக்கும் வாசிப்பு, வியப்பூட்டுவதே. அதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த வெற்றிக்குக் காரணம் அதன் செறிவும் தீவிரமும் தமிழின் பொதுவாசகனுக்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும் அது பேசும் விஷயம் தமிழ் மனதுக்கு நெருக்கமானது என்பதே. ஒவ்வொரு ஊரிலும் தலைக்குமேல் கோபுரம் எழுந்து நிற்கிறது. தெய்வங்கள் நெருக்கியடித்து நின்றிருக்கின்றன. அவற்றின் பார்வை தலைமேல் கவிந்திருக்கிறது. தமிழ் மனம் ஒவ்வொரு கணமும் மரபின் நெருக்கடியை உணர்கிறது. அதை விஷ்ணுபுரத்தில் அது அடையாளம் கண்டுகொள்கிறது.


விஷ்ணுபுரம் வெளிவந்த நாள் முதலே நல்ல வாசகர்களால் உத்வேகத்துடன் எதிர்கொள்ளப்பட்ட ஆக்கம். ஆரம்பத்தில் மேலோட்டமாக சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டி சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. அவற்றில் உண்மையான எந்தப்பிழையும் சுட்டிக்காட்டப்படவில்லை. சக எழுத்தாளர்களின் சில்லறைக் காழ்ப்புகள் சில வந்தன. அத்துடன் இலக்கியம் என்றால் என்ன என்றே புரியாத அரசியல் விமர்சனங்கள் இருந்தன. பெரும்பாலும் விஷ்ணுபுரம் என்ற பெயரை மட்டுமே வைத்துச் செய்யப்பட்ட விமர்சனங்கள்.


ஆனால் வாசகர்கள் அவற்றைக் கடந்து அதில் தங்கள் தேடலைக் கண்டடைந்துகொண்டே இருந்தனர். மிகச்சிறந்த வாசிப்புகள் வந்தன. தொடர்ந்து விஷ்ணுபுரம் பற்றி கடிதங்கள் வந்துகோண்டே இருக்கின்றன. இத்தனை வருடங்களில் அது எப்போதுமே வாசகக் கவனத்தில் இருந்துகொண்டிருக்கிறது. .


அடுத்தடுத்த தலைமுறை வாசகர்கள் வர வர மிகச்சிறந்த வாசிப்புகள் நிகழ்கின்றன. சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது தலித் விமர்சகரான பால்ராஜ் பல ஆண்டுகளாக விஷ்ணுபுரத்தை இடதுசாரிகள் வாசிக்காமல் செய்த விமர்சனம் வழியாகவே அறிந்துகொண்டிருந்ததாகவும் அதை வாசித்தபோதுதான் அதன் உண்மையான சாரம் தெரிந்ததாகவும் சொன்னார். “அது விஷ்ணுவே இல்ல சார். இன்னும் கூட அது அவங்களுக்குத் தெரியலை” என்றார்.


இப்போதுகூட அந்நாவலை விஷ்ணு புராணம் என்று தப்பாகச் சொல்லிப் பேசும் விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்றால் இப்பேச்சுகளுக்கெல்லாம் என்னதான் அர்த்தம் இருக்கமுடியும்?

தமிழ் வாசகனுக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான். படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எளிதாகக் கடந்துசெல்லப்படும். அவையிரண்டும் அப்படிக் கடந்துசெல்லப்படாதவையாகவே இன்றும் உள்ளன என்பதை அவற்றைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான விமர்சனங்களை வாசிக்கும் எவரும் உணரமுடியும்.


7. பரவலாய் நிராகரிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் நான் மிக ரசித்த ஒரு நாவல். குறிப்பாய் அதன் craft பிடித்தமானது. அதை ஒரு தோல்வியுற்ற நாவல் என நீங்கள் கருதுகிறீர்களா?


பின் தொடரும் நிழலின் குரல் தொகுப்பு வடிவம் கொண்டது. நேர்கோடற்ற கதையோட்டம். அத்துடன் அது பேசும் சிக்கல் அனைவருக்கும் உரியது அல்ல. அரசியலின் அறம் பற்றி, கருத்தியலின் வன்முறை பற்றி தனிப்பட்ட முறையில் கேள்விகள் உடையவர்களுக்கு உரிய நாவல் அது. அது உண்மையில் இடதுசாரிகளை நோக்கிப் பேசுகிறது. அவர்கள் அதைப்பற்றி வெளியே பேசமுடியாது.


பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது இடதுசாரிகள் அது முன்வைக்கும் அறக்கேள்விகளால் நிம்மதி இழந்தனர். ஆகவே அதைப் புறக்கணிப்பதன்மூலம் வெல்ல முயன்றனர். நிராகரிப்புகள் எல்லாமே வாசிக்காமல் செய்யப்பட்டவை என்பதை அந்நாவலை வாசித்த ஒருவர் எளிதில் காணமுடியும். அது அனைத்துத் தரப்பு வினாக்களையும் முன்வைக்கிறது. ஆகவே அதை எளிய அரசியல் சமவாக்கியங்கள் அல்லது கோஷங்கள் கொண்டு விமர்சிக்க முடியாது. இங்குள்ள மார்க்ஸியர்களிடம் அதை விமர்சிக்கும் கருத்தியல் கருவிகள் என ஏதும் இல்லை. உண்மையில் இந்நாவல் ஸ்டாலினியத்தை நிராகரிக்கையில் மார்க்ஸிய இலட்சியவாதத்தை ஏற்கிறது என்றே கூட அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை


பின் தொடரும் நிழலின் குரலை இடதுசாரிகள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியமூட்டுவது. அவர்கள் அதன் ஆசிரியனை அவதூறு செய்யத் தொடங்கினர். என் மீது இன்றிருக்கும் மத, சாதிய, பிற்போக்கு முத்திரைகளெல்லாம் இந்நாவல் காரணமாக இடதுசாரிகளால் போடப்பட்டதே. அதன் வழியாக நாவலை பரவலாகச் சென்றடைய முடியாமலாக்க அவர்களால் முடிந்தது.


ஆனால் அது முதல்பதிப்புக்கு மட்டுமே. சென்ற வருடங்களில் இரண்டு வருடங்க்ளுக்கொருமுறை அது மறுபதிப்பாக வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அதை வரிவரியாக ஊன்றி வாசித்த வாசகர்களைக் காண்கிறேன். இலங்கைப் போராட்டத்தின் வீழ்ச்சியின் போது, டபிள்யூ ஆர் வரதராஜனின் தற்கொலையின் போதெல்லாம் பின்தொடரும் நிழலின் குரலைத்தேடிவந்து வாசித்தவர்கள் பலர். அது ஒரு பொழுதுபோக்கு நாவல் அல்ல. அதன் இடம் அடிப்படையான கேள்விகளுடன் தேடிவருபவர்களுக்கு உரியது.


ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றதைச் சொன்னேன் அல்லவா? அதே நாளில் ஒரு தொழிற்சங்கவாதியைச் சந்தித்தேன். வேலையை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வழக்கறிஞராக தொழில்செய்யப்போவதாகச் சொன்னார். ஏன் என்றேன். “பின் தொடரும் நிழலின் குரல் கதைதான் தோழர். அச்சு அசலாக அதே மாதிரி” என்றார்.


8. ஆர்த்தர் சி. க்ளார்க், ஐஸக் அஸிமோவ் பாணியிலான விஞ்ஞானக் கதைகளையே பெரும்பாலும் தமிழ் கண்டிருக்கிறது. பிரதான உதாரணம் சுஜாதா. விசும்பு சிறுகதைத் தொகுப்பின் மூலம் நீங்கள் நம் கலாசாரத்தில் வேரூன்றிய ஓர் இந்திய மரபார்ந்த விஞ்ஞானப் புனைவை முன்வைத்தீர்கள். அது முக்கியமான பங்களிப்பு. அதைப் பற்றிச் சொல்லுங்கள். விஞ்ஞான நாவல் எழுதும் திட்டமிருக்கிறதா?


அமெரிக்க ஐரோப்பிய அறிவியல்புனைகதைகளின் அடிப்படைகள் மூன்று. ஒன்று, அவர்களுக்கிருக்கும் நவீன அறிவியல் கல்வி. இரண்டு, அவர்கள் ஆழ்மனதை ஆண்டுகொண்டிருக்கும் கிரேக்க தொன்மவியல் மூன்று, அவர்களின் நிறுவன மதமும் அதற்கு எதிரான நாத்திகவாதமும் உருவாக்கும் தத்துவக்கேள்விகள்.


இம்மூன்று அடிப்படைகளையும் கலந்துதான் அவர்களின் அறிபுனைகள் உருவாகின்றன. அங்கே நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் பெரியதாக வளர்ந்துள்ளன. அவற்றை ஒட்டி புனைகதை எழுதவும் வாசிக்கவும் ஏராளமானவர்கள் வந்துவிட்டனர். அந்த வசதி இங்கே நமக்கு இல்லை. நாம் அறிவியலை முறையாகக் கற்றவர்கள் அல்ல. அறிவியலை தகவல் கல்வியாகவே நாம் கற்கிறோம். அறிவியல் கொள்கைகளை புரிந்துகொள்வதற்கும் தொடர்ந்து சிந்திப்பதற்கும் இங்கே நமக்குப் பயிற்சியே இல்லை.


மேலைநாட்டு அறிபுனைகளில் கிரேக்கத் தொன்மங்களின் கட்டமைப்பு ஒளிந்திருப்பதைக் காணலாம். ஆர்தர் சி கிளார்க்கின் கதையை ஒட்டிய திரைப்பட்த்தில் தலைப்பே ஸ்பேஸ் ஒடிஸி என்றிருக்கிறது. யுலிஸஸ் அல்லது ஹெர்குலிஸின் சாகஸங்கள். விதவிதமான பயங்கர மிருகங்கள். பேருருவம் கொண்ட தெய்வங்கள். அவற்றின் அடிப்படையான படிம அமைப்பையே அறிபுனைகள் மறு ஆக்கம் செய்கின்றன.


அத்துடன் அங்குள்ள அறிபுனைகளின் சாராம்சமாக உள்ளவை செமிட்டிக் மதங்கள் உருவாக்கிய தத்துவ நிலைபாடுகளின் அவற்றின் மீதான கேள்விகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகள். உதாரணமாக இயந்திரர்கள் பற்றிய ஐசக் அசிமோவின் கதைகள் அனைத்திலுமே ஆன்மா என்பது என்ன, அறிவு மட்டும்தானா என்ற வினா உள்ளது. சுதந்திரம், அன்பு போன்ற விழுமியங்கள் முழுமையாகவே அறிவில் இருந்து வரமுடியுமா, வரமுடியாதென்றால் அவற்றின் ஊற்றுக்கண் எது என்ற கேள்வி உள்ளது.


நாம் முற்றிலும் வேறான ஒரு சூழலில் வாழ்கிறோம். நாம் கீழைமதங்களான இந்துமதம், பௌத்தம், சமணம் வழியாக அடையும் வினாக்கள் வேறு. நம் சிக்கல்களும் முற்றிலும் தனித்தவை. நம்முடைய புராண மரபும் வேறுபட்டது. ஆகவே நம் அறிபுனைகள் வேறுபட்டவையாகவே இருக்கமுடியும்.


ஆனால் இங்கே எழுதப்படும் அறிபுனைகள் மேலைநாட்டு அறிபுனைகளின் தழுவல்கள் அல்லது மறுவிளைவுகளாகவே உள்ளன. ஆகவேதான் ஒரு விண்வெளிக்கதையில் இந்தியப்பெயர்களும் உரையாடல்களும் வந்ததுமே நமக்கு அது அன்னியமாகத் தெரியத் தொடங்குகிறது.


மேலும் நாம் இங்கே அறிபுனைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பல படைப்புகள் அறிவியலை அல்ல, தொழில்நுட்பத்தையே கருவாகக் கொண்டவை. வழக்கமான ஒரு கதையில் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சில விந்தைகளைக் கலந்துகொண்டு வியப்போ பிரமிப்போ பரபரப்போ உருவாக்கப்படுமென்றால் அதுவே அறிபுனைவு என நாம் நம்புகிறோம். உதாரணமாக சுஜாதா எழுதிய ஆக்கங்கள்.


அறிபுனைவு என்பது அறிவியல் கொள்கைகளையே முதன்மையாக புனைவுக்கு ஆதாரமாகக் கொள்கிறது. அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொள்கிறது. அவற்றின் வழியாக அது வாழ்க்கையின் அடிப்படையான தத்துவ வினாக்களைத்தான் பரிசீலிக்கிறது. அது இங்கே நிகழ்வதில்லை.


நான் அறிபுனை எழுதியதற்குக் காரணம் ஒன்றே. நவீன அறிவியலில் எனக்கு அதிக அறிமுகம் இலலை. ஆனால் விஷ்ணுபுரத்திற்காக ஆய்வு செய்தமையால் ரசவாதம், யோகமரபு, ஆயுர்வேதம் போன்றவற்றைப் பற்றி அறிவேன். ஆகவே நான் அறிந்தவற்றில் இருந்து அறிபுனைகளை உருவாக்கினேன். அவற்றில் வாழ்க்கை சார்ந்த அடிப்படை வினாக்களையே எழுப்பிக்கொண்டேன்.


அறிபுனை நாவல் ஒன்று எழுதவேண்டுமென ஆசை உள்ளது. ஒரு முன்வரைவும் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் யோகமரபு பற்றியது. மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு பற்றி. மூளை உடல்வழியாக உலகை உருவாக்குவது பற்றி. அடிப்படையில் அதன் வினா வேதாந்த ஞானமரபு கேட்பதுதான். இவ்வுலகென இங்குள்ள இவை எப்படி எனக்குள் உருவாகி வருகின்றன?

9. அறம் சிறுகதைத் தொகுப்பு உங்களின் முந்தைய சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து வேறுபட்டது. முக்கியமாய் அதன் நேரடியான கதை சொல்லல் முறை. கதைகளின் இலக்கிய ஸ்தானத்தை இந்த மாற்றம் பாதிக்கவில்லை என்ற போதும் உங்கள் எழுத்தின் அணுகுமுறையில் ஒரு முக்கிய மாற்றம். வெகுஜன / ஆரம்ப நிலை வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ப்ரக்ஞைப்பூர்வமாக dilute செய்தீர்களா, அல்லது அந்தக் கதைகள் அந்த எளிமையைக் கோரின எனக் கருதுகிறீர்களா?


அறம் கதைகள் பிரக்ஞைப்பூர்வமாக எழுதப்பட்டவை அல்ல. அவற்றை எழுதுவதற்கான ஒரு தேவை எனக்கிருந்தது. நானே எழுதிக் கொண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. நானே சொல்லியிருக்கிறேன். மானுட வாழ்க்கையில் விழுமியங்களின் இடமென்ன என்ற ஐயம் எனக்கிருந்தது. இடமே இலலையோ என்ற சோர்வு இருந்தது. ஓர் உடைவுக்கணத்தில் ஒரு கதையை எழுதினேன். அறம். அது ஒரு தொடக்கம். கதைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.


அக்கதைகளுக்குப் பொதுவாக ஒரு சட்டகம் இருந்தது. உண்மையான மனிதர்களின் கதைகள். அம்மனிதர்களைப் பார்க்கும் இன்னொருவரின் கோணம். பொதுவாக சிறுகதைகள் ஒருசில கணங்களை மட்டும் சுட்டிக்காட்டி நின்றுவிடும். குறிப்புணர்த்தும். ஆனால் இக்கதைகளுக்கு அவை போதாது. அவை அந்த இலட்சிய மனிதரை முழுமையாகக் காட்டிவிடவேண்டியிருந்தது. அதற்கான வடிவம் அவற்றில் அமைந்தது. ஒரு புள்ளியில் நிகழ்ந்து முடிவதற்குப் பதிலாக பல தளங்களிலாக தொடர்ந்து சென்று முடியும் கதைகள் அவை.


இக்கதைகளில் கணிசமானவை உணர்ச்சிபூர்வமானவை. ஆகவே அவை வாசகர்களால் எளிதில் வாசிக்கப்படுகின்றன. ஆனால் அவை எளியவை அல்ல. நீர்த்த வடிவிலும் அவை இல்லை. அவற்றை வாசகர்கள் பலவகைகளில் வாசித்து எழுதிய கடிதங்களிலேயே அதைக் காணலாம். மயில்கழுத்து, தாயார்பாதம் போன்ற கதைகளைப்பற்றி இன்றும் கூட புதிய வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இன்னமும்கூட அக்கதைகள் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அவற்றின் பல விஷயங்கள் தொடாமலேயே கடந்து செல்லபடுகின்றன.


பொதுவாக இங்கே சிறுகதைகளுக்கு என ஒரு வடிவம், ஒரு முன்வரைவு உருவாகி இருக்கிறது. நவீனத்துவச் சிறுகதைகளின் வடிவம் அது எனலாம். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத உணர்ச்சியற்ற நடையில் சுருக்கமாகச் சொல்லப்படும் ஒரு கதை. சிலநிகழ்வுகள் மட்டும். அதில் பூடகமாக ஒரு விஷயம் ஒளிக்கப்பட்டு ஒரு கோடி காட்டப்பட்டிருக்கும். வாசகன் அதை ஊகித்துக் கண்டுபிடிக்கவேண்டும். இது ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்குமான ஓரு விளையாட்டு. மூன்றுசீட்டு விளையாடுவதுபோல.


ஒளித்துவைத்ததை வாசகன் கண்டுபிடித்துவிட்டால் மகிழ்ச்சி அடைகிறான். அதை இலக்கிய அனுபவம் என நினைத்துக்கொள்கிறான். கொஞ்சகாலம் வாசித்துக்கொண்டிருப்பவன் எளிதில் அதைக் கண்டுபிடித்துவிடுவான். அவன் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. பல கதைகளில் எளிய சமூகவியல் உண்மைகள். அவ்வப்போது சில பாலியல் மீறல்கள். அவ்வளவுதான்.


இது எனக்கு சலிப்பூட்டியது. நான் அடிப்படைக்கேள்விகளை நோக்கி வாசகனைச் செலுத்த விழைந்தேன். ஆகவேதான் அறம் கதைகள் வெளிப்படையாக அமைந்தன. அவற்றில் பூடகமாக ஏதும் ஒளிக்கப்படவில்லை. அவற்றில் அப்பட்டமாகவே இருந்தது வாழ்க்கை பற்றிய ஒரு கேள்வி. அந்தக் கேள்வியைச் சந்தித்தவர்களுக்கு அவை எளிமையான கதைகள் அல்ல. விரிந்து விரிந்து செல்லும் கதைகள். கதையின் உடலுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு சிறிய விஷயத்தைத் தேடுவதையே வாசிப்பு என நினைப்பவர்களுக்கு கதை எளிமையானது. அது சொல்வது முன்னால் வந்து நிற்கிறது அல்லவா?


உதாரணமாக நூறு நாற்காலிகள். “எனக்கு வேண்டும் நூறு நாற்காலிகள்” என்பது அப்பட்டமான நேரடியான முடிவு. பூடகம் தேடும் வாசகனுக்கு அங்கே கதை முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த முடிச்சை வாழ்க்கையாகக் காண்பவனுக்கு அது பெரிய தொடக்கம். காப்பனின் குரு நாற்காலிகளை வெல்லும்படிச் சொல்கிறார். அம்மா நாற்காலி வேண்டாம் என்கிறார். அவன் குருவை தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அது சரியான முடிவுதானா? அம்மா ஏதேனும் உள்ளுணர்வில் அதைச் சொன்னாளா? அவ்வினாக்களை கேட்க ஆரம்பித்தால் முதல் வரிமுதல் கதை மீண்டும் விரியத்தொடங்கும்.


அதன் பின் எழுதிய முள் அல்லது பிழை போன்ற கதைகளில் இந்த அளவு வெளிப்படைத்தன்மை இல்லை. அவை பூடகமாக எதையும் ஒளிக்க முயலவில்லை. ஆனால் அவை முன்வைக்கும் அடிப்படையான சிக்கல் என்பது வாழ்க்கையின் அன்றாடத்தளம் சார்ந்தது அல்ல. ஆன்மீகமானது. அதற்குரிய வாசகர்களுக்கானது.


10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையிலான நுட்பமான படைப்புகளே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து தனித்த நகைச்சுவை எழுத்து என்பது இலக்கிய அந்தஸ்தைக் குறைக்குமா?


நகைச்சுவைக் கதைகள், அங்கதக்கட்டுரைகள் எனப் பொதுவாக தமிழின் தரம் மற்றும் அளவு மிகக்குறைவு என்பதே என் எண்ணம். நான் தமிழின் உயர்தர நகைச்சுவை எனக்கருதுவது ப.சிங்காரம், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் படைப்புகளைத்தான். சுஜாதாவின் சிலகதைகளில் மட்டுமே [உதாரணமாக குதிரை] சிறந்த நகைச்சுவை சாத்தியமாகியிருக்கிறது.


நகைச்சுவை எனப் பொதுவாகச் சொல்கிறோம். அதைப் பல வகையாக பிரித்துக்கொள்வதே தெளிவான புரிதலை நோக்கிக் கொண்டுசெல்லும். அங்கதம் [satire], சிரிப்பூட்டுதல் [joke], சொல்நகை [wit], எனப் பல வகைமைகள் உள்ளன. ஒவ்வொன்றின் இயல்பும் வேறுவேறு. அங்கதத்துக்கு மட்டுமே இலக்கியத்தில் இடமுண்டு. மற்றவை களிப்பூட்டும் எழுத்துமுறைகள் மட்டுமே. அங்கதம் என்பது நகைச்சுவைத்தன்மை கொண்டிருந்தாலும் உள்ளடக்கத்தில் தீவிரமானது. அது ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சமூகவிமர்சனம், தத்துவ விமர்சனம். அது ஓர் அழகியல் வெளிப்பாடு


அத்தகைய அங்கதம் இங்கே குறைவாக இருப்பதற்கான காரணம், எதை அது பகடி செய்கிறதோ அதை ஏற்கனவே அறிந்த வாசகர்கள் அதற்குத்தேவை என்பதே. உதாரணம் நாஞ்சில்நாடனின் பாம்பு என்ற சிறுகதை. தமிழில் கல்வித்துறை ஆய்வுகள் செய்யப்படும் லட்சணத்தை கொஞ்சமேனும் தெரியாத ஒருவருக்கு அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிந்தவர் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.


எனக்குப்பிடித்த அங்கத எழுத்தாளர் மலையாளத்தில் வி.கே.என். கதகளி, சம்ஸ்கிருத நாடகம், சம்ஸ்கிருத காவியமரபு மலையாளப்பண்பாடு தெரியாத ஒருவருக்கு அதில் பாதிப்பகடி புரியாது. நிறையத்தெரிந்தால் பகடி படு கீழ்த்தரமாகக்கூடப்போகும் என்பது வேறுவிஷயம். கம்பராமாயணம் தெரிந்த ஒருவர் நாஞ்சில்நாடன் எழுதிய பகடிகளின் விபரீதம் தெரிந்து பகீரிட்டுப் பின் சிரிப்பார்.


தமிழின் சராசரி வாசகனுக்கு சினிமா பற்றி மட்டும்தான் தெரியும். ஆகவே அதை வைத்துச் செய்யப்படும் பகடி மட்டும்தான் புரியும். அங்கதம் என்பதே பரந்துபட்ட ரசனையும் வாசிப்பும் தகவலறிவும் கொண்ட வாசகனுக்குரியது.


அங்கதநாவல் ஒன்று எழுதவேண்டும் என்ற திட்டம் உள்ளது. நாகர்கோயில் அருகே உள்ள தழுவியமகாதேவர் ஆலயத்தைப்பற்றி. அங்கே சிவலிங்கம் வளைந்திருக்கும். பார்வதி தழுவியதனால் முலை பட்டு வளைந்தது. சாமியே வளைந்திருப்பதனால் ஊரில் பெரும்பாலும் வீட்டுக்கொரு பைத்தியக்காரர் இருப்பார் என்பது நம்பிக்கை. ஒரு தெருவில் ஐம்பது பைத்தியம் இருந்தால் எப்படி இருக்கும் தெரு? அதுதான் கரு. எழுதவேண்டும்.


11. நீங்கள் எழுதிய குழந்தைகள் நாவல் பனி மனிதன். குழந்தை இலக்கியங்களின் முக்கியத்துவம் என்ன? பனி மனிதன் அது எழுதப்பட்டதன் நோக்கத்தை அடைந்ததா?


தமிழில் குழந்தைகள் நூல்கள் எழுதுவதில் உள்ள சிக்கலே தமிழ்ப்பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் நூல்களை வாங்கிக்கொடுப்பதில்லை என்பதுதான். படிப்பு கெட்டுப்போய்விடுமாம். ஆங்கில நூல்களைத்தான் வாங்கிக்கொடுப்பார்கள். குழந்தைகளுக்குச் சொந்தமாக வாங்கவும் வசதி இல்லை.


பனிமனிதன் என் நண்பர் மனோஜ் தினமணியில் பணியாற்றிய காலத்தில் கேட்டு வாங்கிப்போட்டது. அன்று குழந்தைகள் மிக விரும்பி வாசித்தனர். அதை வாசித்து என்னை அறிந்த பலர் இன்றும் என் வாசகர்களாக உள்ளனர். ஆனால் நூலாக வந்தபின் வாசித்த குழந்தைகள் மிகமிகக்குறைவு. என் வாசகர்கள்தான் அதையும் வாங்கிப்படிக்கிறார்கள்.


குழந்தைகளுக்கான எழுத்து எளிய நடையில் தீவிரமானதாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு தர்க்க புத்தி உண்டு. அதை அவ்வெழுத்து நிறைவுறச் செய்யவேண்டும். நாலைந்து சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்களை பெரிய காட்சியனுபவம் நோக்கிக் கொண்டு செல்லவேண்டும். பனிமனிதன் அப்படிப்பட்ட நூல்தான்.


தமிழில் வாசிக்கும் குழந்தைகளுக்குரிய நல்ல நூல்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் பொருத்தமற்ற மொழிபெயர்ப்புகள். குழந்தைக்கதைகள் எனப் பெரியவர்கள் நினைத்துக்கொள்ளும் பழைமையான மாயக்கதைகள். சிலநாட்களுக்கு முன் வார இதழ் சிறுவர் இணைப்பை இலவசமாக வாங்கிச்சென்று வாசிக்க அண்ணனும் தங்கையுமாக இரு குழந்தைகள் அந்தி நேரத்தில் ஒரு பார்பர் ஷாப்புக்கு வந்து தயங்கி நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பாவமாக இருந்தது. எத்தனை பசி. அவர்களுக்கு என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறோம்?


12. ஜெ.சைதன்யா சிந்தனை மரபு நானறிந்த வரை முன்னோடியே இல்லாத முதல் முயற்சி. அதில் சொல்லப்பட்டவற்றுள் எவ்வளவு தூரம் கற்பனை எவ்வளவு நிஜம்? சைதன்யா வளர்ந்த பின் இப்போது அதைப் படித்தாரா? அவரது அபிப்பிராயம் என்ன?


அது ஒரு புனைவு. சைதன்யா என்ற குழந்தை சொன்னது முக்கால்வாசி. சொல்லியிருக்கக் கூடுவது கால்வாசி. சைதன்யா இன்று தஸ்தயேவ்ஸ்கியையும் காஃப்காவையும் ஒப்பிட்டுப்பேசும் இலக்கிய வாசகி. கர்ட் வான்காட் வெறும் மொழிநடையாளர் என்று நிராகரிக்கும் அறிவுஜீவி. அவள் எட்டாம் வகுப்பிலேயே சைதன்யாவின் சிந்தனை மரபை வாசித்துவிட்டாள். அந்தக் குட்டி சைதன்யாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.


அவளுடைய மேஜை மேல் ஒரு வயதுள்ள தன் படத்தை வைத்திருந்தாள். கல்பற்றா நாராயணன் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு என்னிடம் சொன்னார் “அவளுக்கு பிறக்கப்போகும் மகள்... இப்போதே கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்”

13. இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்கள் முந்தைய ஆளுமைகளுக்கு நீங்கள் செய்த கறார் மதிப்பீட்டின் வழியான மரியாதை (அவற்றை வாசித்த பின் நான் அதே போல் சுஜாதா பற்றிய ஒரு நூல் விரிவாய் எழுத வேண்டும் என நெடுநாள் ஆசை). அந்த நூல் வரிசையைத் தொடரும் உத்தேசமுண்டா? ஆம் எனில் இனி அடுத்து யாரைப் பற்றிய நூல்களை எழுதப் போகிறீர்கள்?


அந்த நூல்வரிசையில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், வண்ணநிலவன், வண்ணதாசன் பூமணி நாஞ்சில்நாடன் வரை எழுத எண்ணமிருந்தது. அப்போதே எழுதியிருந்தால் எழுதியிருக்கலாம். தவறிவிட்டது. நாஞ்சில் பூமணி பற்றி நூலே எழுதிவிட்டேன். பிறரைப்பற்றி எழுதவேண்டும்

14. ஏற்கனவே எழுதப்பெற்ற இதிசாகாசங்களை, காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பின்னான உந்துதல் என்ன? இதன் இலக்கிய அவசியம் என்ன? சமகாலத்தில் இதை வேறந்த மொழியிலும் யாராவது செய்கிறார்களா? (உதாரணமாய் இலியட்டை மீட்டுருவாக்கம் செய்வது)


திருப்பி எழுதுவது என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்துமுறைகளில் முக்கியமானது. [பின்நவீனத்துவம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன், அது இங்கே பாலியல் எழுத்து என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது]. நவீனத்துவ எழுத்து எழுத்தாளன் என்ற தனிமனிதனின் அந்தரங்க உலகையே பெரிதும் வெளிப்படுத்தியது. அவனே புனைவின் மையமாக இருந்தான். எழுத்தின் வழியாக அந்த எழுத்தாளனின் தனியாளுமையை நாம் சென்று சேரமுடியும், அதாவது அவன் உருவாக்கிக் காட்டும் ஆளுமையை.


நவீனத்துவம் கடந்தபின்னர் வந்த புதிய எழுத்துமுறை என்பது பலவகையிலும் நவீனத்துவ எழுத்துமுறையின் எல்லைகளைக் தாண்டிச்சென்றது. இலக்கியம் என்பது இன்னொருவகை சமான வரலாறாக மாறியது. மொத்தப்பண்பாட்டையும் வரலாற்றையும் மீண்டும் சொல்லத்தொடங்கியது. ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கியது.


கிரேக்கத் தொன்மங்களையும், செமிட்டிக் தொன்மங்களையும் பலவகைகளில் திரும்பச் சொல்லும் முயற்சிகள் மேலை இலக்கியத்தின் தொடக்கம் முதலே வலுவாக உள்ளன. சாதாரணமாகத் தேடினாலே ஆயிரக்கணக்கான நூல்களை நீங்கள் காணமுடியும். எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தமான நூல்களில் நிகாஸ் கஸன்ஸகீஸின் லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட், எமிலி ஜோலாவின் பரபாஸ் ஆகியவை முக்கியமானவை. சமீபமாக இந்தியத் தொன்மங்களை வைத்து எழுதப்பட்ட ராபர்ட்டோ கலாஸோவின் கா ஒரு சுமாரான நூல்.


இந்த மறு ஆக்கங்கள் முழுமையடைந்த பின் அடுத்த அலையாக எழுபவை தான் இன்று அங்கே வந்துகொண்டிருக்கும் தொன்மங்களின் மறுஆக்கங்களின் மறுஆக்கம் என்று சொல்லப்படும் நூல்கள். தொன்மங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் உருவாக்கம் வரைச் செல்லக்கூடியவை. தொன்மங்களையும் அவற்றின்மீதான பண்பாட்டு எதிர்வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் நாவல்கள். அதாவது தொன்மங்களைக் ‘கையாளக்கூடிய’ நாவல்கள். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் போல. ராபர்ட்டோ பொலானோவின் 2666 போல. அல்லது லோசாவின் ஸ்டோரிடெல்லர் போல. அவை தொன்மங்களை ஒருவகையில் அம்மானக் கலைஞன் பந்துகளைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பதுபோல விளையாடுகின்றன.


இந்தியச்சூழலில் நாம் நம் தொன்மங்களுக்கான நவீன வாசிப்பையே ஆரம்பிக்கவில்லை. அவை நிகழ்ந்து விவாதிக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தகட்டமே இங்கு சாத்தியம். கொற்றவை, வெண்முரசு போன்றவை அந்த நவீன மறுவாசிப்புக்கான முயற்சிகள். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் பின்புலத்தில், இன்றைய பண்பாட்டுச்சூழலின் பின்புலத்தில் அவற்றைக் கொண்டு வந்து வைத்துப் பேசுகின்றன. விஷ்ணுபுரமும் அத்தகைய முயற்சிதான்.


இந்தப் பிரம்மாண்டமான மறுஆக்கம் நிகழ்ந்தபின் புதிய வடிவம் கொண்டு வந்து நிற்கும் தொன்மங்களைக் கொண்டுதான் இங்கே ஒருவர் 2666 போன்ற தொன்மக்குறியீடுகளால் ஆன நூலை எழுதமுடியும். அதை போல நாமும் எழுதுவதைச் சொல்லவில்லை. அதற்கு நிகரான இங்கே மட்டுமே உருவாகும் ஓர் எழுத்து முறையைச் சொன்னேன். எனக்கே அப்படி எழுதும் ஆசை உண்டு.


கொற்றவை உட்பட இந்தவகை நூல்கள் முழுமையான கவனத்துடன் வாசிக்கப்படவில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவர்களுக்கு தன் சொந்தவாழ்க்கையையும் கொஞ்சம் பகல்கனவையும் கொஞ்சம் சமகால அரசியலையும் கலந்து ‘சிறிய’ எழுத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே ஆர்வமிருக்கிறது. புனைவுகளின் பல அடுக்குகளை தொட்டு எடுக்கும் வாசிப்புகளே இங்கில்லை. முற்போக்கா பிற்போக்கா என்ற வகையான மோட்டாவான ஓர் அரசியல் வாசிப்பு, எளிய அரசியல்சரிகளை மட்டும் கண்டடைவது. இதெல்லாம்தான் இங்கே நிகழ்கிறது. அத்தகைய வாசிப்புதான் இவற்றை ‘மரபைத் திரும்ப எழுதுவது மட்டுமே, இதெல்லாம் பிஜேபி அரசியல் தோழர்’ எனக் கடந்துசெல்லும்.


சரி, உங்களுக்காக ஒன்றைச் சொல்கிறேன். கொற்றவை நாவலில் ஆறுபக்கத்துக்கு கிளிட்டோரிஸைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? கண்ணகியும் மணிமேகலையும் பேசப்படும் ஒருநாவலில் அந்தச் சித்தரிப்பு எப்படி உள்ளே வருகிறது? அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்ன? மொத்த மரபையே அது இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது அல்லவா? அதற்கான இடத்தை உருவாக்கவே இந்த மறுபுனைவுகள். அந்நாவலில் தமிழகத்தின் பெரும்பாலும் அனைத்து தொன்மங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. எல்லா தொன்மங்களுக்கும் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் அருகருகே வருகின்றன.


அந்நாவல் வந்து ஒன்பது வருடங்களாகின்றன. இன்றுவரை எவரேனும் அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா? ஏனென்றால் அதை நம்மூர் மோட்டா வாசகர்கள், சின்ன எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வருவார்கள். அதுவரை அந்நாவல் காத்திருக்கும்.


வெண்முரசைப்பற்றியும் அதையே சொல்வேன். அதன் ஒரு பக்கத்தை பொதுவாசகன் வாசித்துச்செல்வான். இன்னொருபக்கம் அது ஒரு முழுமையான தலைகீழாக்கத்தை செய்துகொண்டே செல்கிறது. நீலம் போன்ற ஒருநாவலின் தளம் நம் மரபை அறிந்து அதைத் தலைகீழாக கவிழ்த்து வாசிக்கும் ஒருவனுக்கே முழுமையாகக் கிடைக்கும். அது உருவாக்கும் பாலியல் உட்குறிப்புகளைக் கடப்பதற்கே ஒரு தனி வாசிப்புமுறை தேவை.


என் வரையில் இது ஒரு பெரிய தொடக்கம் என நினைக்கிறேன். ஒரு பிரம்மாண்டமான விதைத் தொகுதி.


15. வெண்முரசு அடுத்த பத்தாண்டுகளுக்கு உங்களது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறது. வெண்முரசு, சினிமா, கட்டுரைகள் மற்றும் இன்ன பிற இணையச் செயல்பாடுகள் தவிர்த்து நீங்கள் புனைவில் ஈடுபடவியலாமல் போகலாம். பத்திரிக்கையாளர் ஞாநி கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு வியர்த்தமான முயற்சி என்ற அவரது பார்வையைத் தாண்டி அதில் உண்மை இருப்பதாகவே படுகிறது. உங்கள் இலக்கிய வாழ்வில் முக்கியமான அமையக்கூடிய அடுத்த பத்து ஆண்டுகளை வெண்முரசுக்கெனவே எழுதி வைத்ததை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? உங்கள் திட்டப்படி வெண்முரசு எழுதி முடித்தால் விஷ்ணுபுரம் உள்ளிட்ட உங்கள் பிற ஆக்கங்கள் பின்னுக்குக் தள்ளப்பட்டு அதுவே உங்கள் பிரதான இலக்கிய முகமாகும். அதை விரும்புகிறீர்களா?


இந்த விவாதங்கள் எல்லாமே வெண்முரசு என்ன வகையான எழுத்து என அறியாமல் வாசிக்காமல் அது மகாபாரதத்தை திருப்பி எழுதுவது என்ற ஒற்றை வரியின் அடிப்படையில் சொல்லப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?


இதன் இதுவரையிலான பக்கங்களில் வந்துள்ள சமகால அரசியல், சமகால உணர்வுநிலைகள் மிகப் பரந்துபட்டவை. ஓர் உதாரணம், பாஞ்சாலியின் பலகணவர் முறைபற்றிய பகுதிகள். அதன் பண்பாடுப்புலம். அவளுடைய பாலியல்சார்ந்த ஆழ்மன ஓட்டங்கள். அவற்றுடன் தொடர்புள்ள தொன்மங்கள் என அது செல்லுமிடம் சமகால அக ஆழமே. பாஞ்சாலி ஒரு நவீனப்பெண். அவளை ஆராய்வது ஒரு சமகால நோக்கு. ஆனால் அதை மேலோட்டமாக இங்கிருந்து விலக்கி தொன்மத்தில் கொண்டு வைத்தால் மட்டுமே முழுமையாக ஆராய முடியும்.

இதன் அளவைப்பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இந்த எழுத்துமுறை என்பது இன்றைய, நாளைய சாத்தியம் என அவர்கள் அறிவதில்லை. பாருங்கள் ஒட்டுமொத்த சிலப்பதிகாரமும் நீட்டி அடித்தால் ஒரு குறுநாவல் அளவுக்கே வரும். ஏடுகளில் எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் மிகமிகச்சிறியவை. அச்சு ஊடகம் வந்ததும் நூல்கள் பத்துமடங்கு பெரியதாயின. பொன்னியின் செல்வன் அக்காலத்தில் மிகப்பெரிய திகைப்பை அளித்த நாவல்


இன்று மின்னணு ஊடகக் காலம். வெண்முரசு அச்சிலும் வெளியாகிறது. ஆனால் அது அச்சு ஊடகத்திற்குரியது அல்ல. அது சில ஆண்டுகளுக்குப்பின் அச்சிலேயே வராது போகலாம். ஆனால் மின்னணு வடிவில், இணையத்தில் இருக்கும். இணையத்தில் அது ஒரு டேட்டாபேஸ். ஒரு பெரிய கதைத்தொகுதி. ஒரு தொன்மக்குவியல். ஒரு தொன்மவிளையாட்டுக்களம். அதில் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எங்கிருந்து வேண்டுமென்றாலும் நுழையலாம். எந்தப்பகுதியை வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.


இது காகிதம் அகன்றபின் நீடிக்கப்போகும் எழுத்து. இப்போதே 70 சதவீத வாசகர்கள் செல்பேசியில் வாசிக்கிறார்கள். செல்பேசி வாசிப்பு இல்லாவிட்டால் வெண்முரசு இல்லை என்பதே உண்மை.


யோசித்துப்பாருஙக்ள் இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன் வாசிப்பது சென்ற காலத்தை விட 10 மடங்கு அதிகம். ஃபேஸ்புக் வாசிப்புதான். ஆனாலும் அது வாசிப்புதானே. சென்றகாலத்தில் ஒருவாரத்தின் குமுதம், விகடன் உள்ளிட்ட அத்தனை இதழ்களையும் நாளிதழ்களையும் சேர்த்தால் வரும் அளவுக்கு இவன் ஒரே நாளில் வாசிக்கிறான். வாசிக்கும் ஊடகத்தின் வசதிதான் காரணம். எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இப்படி வாசிப்பு பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்திற்குரியது இவ்வெழுத்து.


வெண்முரசு அது ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அதை நூற்றுக்கும் மேல் சிறிய நாவல்களாக ஆக்கலாம். ஆயிரக்கணக்கான சிறுகதைகளாக ஆக்கலாம். அதை நீங்கள் பிறர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களுடன் ஒப்பிடக்கூடாது. அதில் இனிமேல் மேலும் மேலும் படங்கள் சேர்க்கலாம். அனிமேஷன் சேர்க்கலாம். விரைவிலேயே ஆடியோ சேர்க்கவிருக்கிறோம்.


முழுக்கமுழுக்க அது ஒரு ‘ஹைப்பர் டெக்ஸ்ட்’ எழுத்து. இப்போதே இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளிணைப்புகள் உருவாகி விட்டன. சிலவருடங்கள் கழித்து அதன் குறுக்கு நெடுக்காக மேலும் மேலும் இணைப்புகள் அளிக்கமுடியும். அதைமட்டும் தொகுத்து வாசகன் அவனுக்கான ஒரு நாவலைக் குறுக்காகத் தொகுத்துக்கொள்வான். விதுரனை மட்டும் தொகுத்து ஒரு நாவலாக்கிக்கொள்ளலாம். அந்தவேலையும் நடக்கிறது. ஒருவர் எழுதும் நாவல் அல்ல இது. இதில் இப்போதே பல நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் பெருகும்.


நீங்கள் இன்றுவரை அறியாத ஒரு பெரிய இலக்கியவகை இது. நாவல் என்ற வார்த்தை இதற்கு மிகச் சிறியது. இதை வேண்டுமென்றால் ஒரு ஹைப்பர்லிங்க் புனைவு என்று சொல்லுங்கள்.


16. கடந்த பத்தாண்டுகளாகவே அசோகவனம் என்ற பிரம்மாண்ட நாவலைத் திட்டமிட்டிருந்தீர்கள். அது எதைப் பற்றியது? அப்பணி எந்த நிலையில் இருக்கிறது? வெண்முரசு காரணமாக அது தாமதமாகிறதா? அது எப்போது வெளியாகும்?


ஒரு மூன்றுமாதம் அமர்ந்தால் முடித்துவிடமுடியும் நிலையில்தான் அசோகவனம் உள்ளது. 2016ல் அசோகவனமும் வெளியாகும் என நினைக்கிறேன். வெண்முரசு அதன் தாமதத்திற்குக் காரணம் அல்ல. விரிவான ஆராய்ச்சி தேவைப்பட்டது. கேரள வரலாறு. நாயக்கர் கால வரலாறு.


17. ஆரம்ப காலத்தில் (80களின் இறுதி?) வேறு பெயரில் பல ஜனரஞ்சகக் கதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே திசையில் தொடர்ந்திருந்தால் சுஜாதா மட்டுமே உங்களுக்குப் போட்டியாளராக இருந்திருப்பார் எனச் சொல்லி இருந்தீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள். அவற்றைத் தொகுத்து வெளியிடும் எண்ணம் உண்டா?


இல்லை. பல கதைகள் கிடைக்கவில்லை. அதற்காக நேரம் செலவிடுவது வீண்வேலை என்று தோன்றுகிறது


18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் கவிதை ஏதும் எழுதுவதில்லை?


மொழியின் உச்சவெளிப்பாடு கவிதை அல்ல, காவியம்தான். இன்றைய கவிதை ஒரு முழுமையனுபவத்தை அளிப்பதில்லை. அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீனக் கவிதையின் இந்தத் துளித்தன்மை அதன் பலம். அதன் பலவீனமும் அதுவே. வரலாற்றை, பண்பாட்டை, மானுட அகத்தை நோக்கி எழுதும் எழுத்தாளனுக்கு அது ஆழ்ந்த போதாமையுணர்வை அளிக்கும்.


இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாவல்கள் பெரும்பாலும் கவித்துவத்தால் ஆனவையே. பாஸ்டர்நாக் சொன்னார் இருபதாம் நூற்றாண்டில் கவிஞன் எழுதவேண்டியது நாவலையே என்று. கவிஞரான அவர் டாக்டர் ஷிவாகோ எழுதி அதனூடாகவே அறியப்படுகிறார். நான் கவிதைகள் எழுதினால் அது ஒரு நாவலின் பகுதியாகவே இருக்கும். என் வரையில் கொற்றவை, நீலம் இரண்டும் தமிழின் எந்த கவிஞரின் மொத்தக் கவிதைத் தொகுதிகளைவிடவும் கவிதைகளைக் கொண்டவை.

19. இதுவரையிலான உங்கள் எழுத்துக்களில் மாஸ்டர்பீஸ் நாவல், சிறுகதை, நூல் என எவற்றைக் கருதுகிறீர்கள்? அதில் ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.


விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை என நான் ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிறேன். ஒவ்வொன்றும் இன்னொன்றை நிறைப்பவை. என் வரையில் முழுமையாக்கும்போது வெண்முரசுதான் என் பெரும்படைப்பாக இருக்கும். அதைக் கடந்துசெல்ல எழுதிமுடித்ததுமே முயல்வேன்.


20. ஓர் எளிய வெகுஜன வாசகன் உங்களை எங்கிருந்து வாசிக்கத் தொடங்கலாம்? என்னைக் கேட்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் எனத் தொடங்கினால் ஒருவேளை மிரளக்கூடும் என்ற அடைப்படையில் வாசிக்க இணக்கமாய் இருப்பவை என்ற அடிப்படையில் சிபாரிசு செய்வது விசும்பு, அறம், உலோகம். நீங்கள் வரிசைப்படுத்துங்களேன்.


அறம் கதைகள். அவை அவன் கண்டு அறிந்த ஒரு மானுடமேன்மையை திரும்பச் சொல்கின்றன. வாழ்விலே ஒருமுறை, சங்க சித்திரங்கள் போன்ற நூல்களும் சிறந்த தொடக்கங்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்


21. இடையில் சொல் புதிது என்ற சிற்றிதழைத் தொடங்கி சில காலம் நடத்தினீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள். இலக்கிய உலகிற்கு சொல் புதிது இதழ் செய்த பங்களிப்புகள் பற்றி? ஏன் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை? சிற்றிதழ்களின் நிலையாமை தெரிந்தது தான். ஆனால் அது தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா?


சொல்புதிதை என் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தொடங்கி சிலகாலம் நடத்தினேன். பின்னர் அவர் விலகினார். கடைசியில் நண்பர் சதக்கத்துல்லா ஹசநீயின் ஆசிரியத்துவத்தில் நடத்தினேன். அது பதிவுசெய்யப்படாத இதழ். போட்டி சிற்றிதழாளர் குழுவினர் எவரோ அவர் இஸ்லாமிய தீவிரவாதி எனப் புகார் செய்துவிட்டார்கள். அவரைக் கூட்டி வைத்து கொஞ்சநாள் விசாரித்தபின் விட்டுவிட்டார்க்ள். பதிவுசெய்ய முயன்றோம். நான் அரசூழியன், என் விலாசத்தை கொடுக்கமுடியாது. அவருக்குச் சொந்த வீடு இல்லை. அவ்வாறு நீண்டு நீண்டு சென்று அப்படியே நின்றுவிட்டது


சொல்புதிது பலவகையில் பலதரத்தில் வெளிவந்த சிற்றிதழ். சிற்றிதழ்களில் அதிகமான பக்கங்கள் கொண்டதாக இருந்தது. என்சைக்ளோபீடியா அளவில் 120 பக்க அளவு கூட வந்துள்ளது. இலக்கியத்துடன் வரலாறு, பண்பாடு சார்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளைப் போட்டதுதான் சொல்புதிது இதழின் சாதனை என்று சொல்லலாம். முக்கியமான நேர்காணல்களை எடுத்தோம். அவை இலக்கிய உரையாடல்கள் என்ற நூலில் உள்ளன. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி என்ற ஒன்று உண்டு. அதில் ஒரே தலைப்பின் கீழ் பலவகையான விஷயங்களைத் தொகுத்து அளித்தோம். மும்மாத இதழான சொல்புதிதை வாசித்து முடிக்க மூன்றுமாதமாகும் என்பார்கள் அன்று. அறிவியல் புனைகதைகள், முக்கியமான மொழியாக்கக் கதைகள் வெளிவந்தன.


சொல்புதிதுதான் தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாக போட்டு வந்த இதழ். அப்படி வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்புகள் வந்தன. சுந்தர ராமசாமியே கூப்பிட்டுச் சொன்னார். ஆனால் பின்னர் அதுவே ஒரு வழக்கமாக ஆகியது. வெங்கட் சாமிநாதனை அட்டையில் போட்டு வெளிவந்த இதழ் தான் சொல்புதிதின் முக்கியமான இதழ். தட்டச்சில் 700 பக்கம் அளவுள்ள விஷயங்கள் அதில் இருந்தன. .முத்துலிங்கம் உட்பட ஆறு கதைகள். தேவதேவனின் கவிதைகள். மிகவிரிவான எட்டு கட்டுரைகள்.


இப்போது சிந்தித்தால் நிறைவளிக்கும் இதழ் என்றே தோன்றுகிறது. ஆனால் கடும் உழைப்பு. ஒற்றை ஆள் வேலை. வெண்முரசு எழுதுவதெல்லாம் அந்த உழைப்புடன் ஒப்பிட்டால் குறைவுதான்.


22. சொல் புதிது இதழில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என விளித்து நாச்சார் மட விவகாரம் என்ற‌ கட்டுரை வெளியானதாகக் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதை எழுதியது யார்? இதழின் ஆசிரியராக நீங்கள் அதைத் தவிர்த்திருக்க வேண்டும் தானே? உண்மையில் நடந்தது என்ன?


நான் இருபத்தைந்தாண்டுக்காலமாக சிற்றிதழ் இலக்கியச் சூழலில் இருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட வகையான ஆட்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். எதையுமே வாசிக்க மாட்டார்கள். ஓர் இருபது பக்கம் அச்சடித்த எழுத்தை வாசிக்கச் சோம்பல்படுவார்கள். ஆனால் இலக்கியம் சார்ந்த எல்லா வம்புகளையும் தெரிந்து வைத்திருப்பார்க்ள். இதிலேயே இருப்பார்கள். காலப்போக்கில் ஒரு குட்டி இலக்கியவாதி என்ற அந்தஸ்து வந்துவிடும். அதற்கு வேண்டுமென்றால் ஓர் இருபது கவிதைகள் எழுதி குட்டிப் புத்தகமாக போட்டுக்கொள்வார்கள். இப்போது இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்று அறிகிறேன்.


இவர்களால் பேசிப்பேசி வாழவைக்கப்படும் வம்பு இது. சொல்புதிது எப்போதுமே மனுஷ்யபுத்திரனைப் போற்றிய சிற்றிதழ். அதில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கேட்டு வாங்கி பல பக்கங்களுக்குப் படங்களுடன் போட்டோம். அவர் சொல்புதிதில் நிறைய எழுதினார். நான் காலச்சுவடு இதழுடன் குறிப்பாக கண்ணனுடன் முரண்பட்டு வெளியே வந்த காலம். அப்போதும் மனுஷயபுத்திரன் சொல்புதிதில் எழுதினார்.


எனக்கு மனுஷ்யபுத்திரனுடன் எப்போதுமே நல்லுறவுதான். அவர் என்னைப்பற்றி மிகக் கடுமையாக எழுதியதுண்டு. ஆனால் ஒருபோதும் நான் கடுமையாக எழுதியதில்லை. கடுமையான மனவருத்தம் உருவானபோதுகூட அவரைப்பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்பதுதான் என் எதிர்வினை. ஏனென்றால் அவர் என் கவிஞர். அந்த இடத்தில்தான் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறார். அவர் தன் சிறிய ஊரில் ஒரு சிற்றறையில் தனிமையில் வாழ்ந்த இளமைக்காலம் முதல் தொடங்கிய உறவு அது. அவர் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அவரது கவிதைகளில் என்னை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்.


சதக்கத்துல்லா ஹசநீ அவர்கள் ஆசிரியராக இருந்த நாட்களில் சொல்புதிதில் வெளிவந்த பகடிக்கதை நாச்சார் மடத்து விவகாரங்கள். அது ஒரு பொதுவான பகடி. அதை எம்.வேதசகாயகுமார் எழுதினார். இன்று நீங்கள் வாசித்தால் அதில் எங்கே சுந்தர ராமசாமி சொல்லப்பட்டிருக்கிறார் அல்லது குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறார் என்றே தெரியாது. சதக்கத்துல்லா ஹஸநீ அதை வாஜ்பாய் அரசை பகடி செய்த கதை என்றே புரிந்துகொண்டார்.


அக்கதை பிரசுரமானபோது நான் ஊரில் இல்லை, குஜராத் அருகே இருந்த டாமனில் சோமசுந்தரம் என்ற நண்பரின் விருந்தினராகச் சென்றவன் அஜந்தா செல்லும் வழியில் அஜிதன் நச்சு உணவு காரணமாக பலநாள் ஆஸ்பத்திரியில் இருக்க நேரிட்டதனால் தாமதமாகத் திரும்பி வந்தேன்.


நான் வரும்போதே காலச்சுவடு அதை எனக்கெதிரான பெரிய ஒரு பிரச்சாரமாக ஆக்கியிருந்தது. எழுத்தாளர்களிடம் கையெழுத்து திரட்டி கண்டனத்தைப் பிரசுரித்தது. அக்கதையை தான் எழுதினேன் என வேதசகாயகுமார் அச்சிலேயே திட்டவட்டமாகச் சொல்லியும்கூட அதை நான் எழுதினேன் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.


அக்கதையில் நாய் வளர்க்கிறார் ஒரு பேராசிரியர். அதில் ஒரு நாய் நொண்டி. அது மனுஷ்யபுத்திரனைக் குறிக்கிறது எனறார்கள். அதை எப்படி அவர்கள் மனுஷ்யபுத்திரனை மீறி செய்தார்கள் என பின்னர் காலச்சுவடில் இருந்து வெளியே தள்ளப்பட்டபின் அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.


நான் எப்போதுமே சொல்லவேண்டியதை வெளிப்படையாகச் சொல்லி விளைவுகளை எதிர்கொள்பவன், மறைமுகமாகப் பேசுவது என் வழக்கம் அல்ல. ஒளிந்துகொள்வதும் இல்லை. ஆகவே காலச்சுவடின் அந்த தந்திரத்தால் சீண்டப்பட்டு சுந்தர ராமசாமி மீதான என் குற்றச்சாட்டுகளை நேரடியாகவே எழுதி அச்சிட்டு வெளியிட்டேன். இதுதான் நிகழ்ந்தது.


பல ஆண்டுக்காலம் காலச்சுவடு தொடர்ந்து என் மேல் அவதூறுக்கட்டுரைகள் பிரசுரித்தது. புனைவுகளை தரமாக எழுதிக்கொண்டிருக்கும் வரை எந்த ஊடகமும் எழுத்தாளனை ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது என் நம்பிக்கை. அதையும் சோதித்துப்பார்ப்போமே என்று நினைத்தேன். அக்கட்டுரைகள் எனக்கு நல்ல வாசகர்களைப் பெற்றுத்தந்தன என்பதுதான் நடந்தது.


23. சுந்தர ராமசாமி, நீங்கள் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது 1990களின் இறுதியில் குமுதம் வெளியிட்ட தீபாவளி இலக்கிய இணைப்பு மலர்களின் வழியாகத் தான். அது இல்லாது போயிருந்தால் நான் ஒருவேளை சுஜாதாவோடே நின்றிருக்கக்கூடும். இலக்கியத்தரமாக எழுதினாலும் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் வழி வெகுஜனத்தைச் சென்றடைந்தார். எஸ்.ரா. இன்னொரு உதாரணம். சங்கச் சித்திரங்கள் தொடருக்குப்பின் நீங்கள் ஏன் பிரபல இதழ்களில் எழுதவில்லை? (தி இந்துவில் எழுதும் கட்டுரைகள் தவிர்த்து). அறம் தொகுப்பில் உள்ள கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தால் இன்னமும் பன்மடங்கு அதிகம் பேரை சென்றடைந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. வெஜன இதழின் சட்டகத்துள் நின்று இயங்குவது படைப்பாளியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?


வெகுஜன இதழ்கள் அவற்றுக்கான வரைமுறை கொண்டவை. பக்க வரையறை மட்டும் அல்ல உள்ளடக்க வரையறையும்கூட. அவற்றுடன் சமரசம் செய்துகொண்டு எழுதவேண்டும். அங்கே முக்கியமான படைப்புகளை எழுதமுடியாது. எழுதும் படைப்புகளுக்கு ஒரு பதாகையை அங்கே நட்டு வைக்கலாம், அவ்வளவுதான்.


சங்கச் சித்திரங்கள் எனக்கு ஒரு வாசகப்பரப்பை உருவாக்கி அளித்தது. ஆனால் ஆனந்தவிகடனுடன் எனக்கு ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. மறைந்த பாலசுப்ரமணியனுடன் குறுகிய கடிதப் போக்குவரத்தே இருந்தது. அவரது ‘எஜமானத் தோரணை’யை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பணக்காரராக பிறந்தவர். முதலாளி. ஏதோ ஒருவகையில் அனைவரிடமும் கட்டளையிட்டுப் பழகியவர். நான் எங்கும் கட்டளைகளை வாங்கிக்கொள்பவனாக இருந்ததில்லை. இருபத்தைந்தாண்டுக்கால அரசூழியர் வாழ்க்கையில்கூட. அது ஆணவமாகக் கூட இருக்கலாம். அப்படிப் பழகிவிட்டேன்.


என் சுதந்திரப்போக்கால் நான் பெரிய ஊடகங்களிடம் நெருங்கவில்லை. சிற்றிதழ்களிலும் ஓம்சக்தி போன்ற இதழ்களிலும்தான் என் படைப்புகள் வெளிவந்தன. என் நண்பர்கள் எவரேனும் பெரிய ஊடகத்தில் இருந்து அவர்கள் கேட்கும்போது மட்டுமே நான் அவற்றில் எழுதியிருக்கிறேன். ஓம்சக்தி இதழின் ப.சிதம்பரநாதன் என் பலகதைகளைக் கேட்டு பிரசுரித்தவர்.


ஓரளவுக்கு மேல் நாம் வாசகர்களிடம் செல்லக்கூடாது என நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நான் தவிர்க்க இதுவே காரணம். நான் எழுதுவது புதியவாசகர்களுக்குத் தெரியவேண்டும். அதற்கு சில செய்திகள், பேட்டிகள் போன்றவையே போதும். அதன் பின் அவன் என்னைத் தேடி வர வேண்டும். நான் ஒரு மர்மமாக, சவாலாக அவனுக்குத் தெரியவேண்டும். என்னை முட்டித்திறந்து அவன் உள்ளே வரவேண்டும். என் நல்ல வாசகர்கள் பலர் என்னுடன் மோதியவர்கள். அதில் ஓர் அறிவார்ந்த அழகு உள்ளது.


அந்த வாசகனுக்காக நான் சமைத்துப்பரிமாறும் எளிய உணவையே அவன் உண்டுகொண்டிருக்கக் கூடாது. அது என் பெரிய எழுத்துக்கள் மீதான அவனுடைய வசீகரத்தை இல்லாமலாக்கிவிடும். ஜெயகாந்தன் மேல் இல்லாத வசீகரம் என் மீது இன்றும் இளம் வாசகனுக்கு உள்ளது. காரணம் அவன் முன் என் எழுத்து ஒரு சவாலாக நின்றுகொண்டிருக்கிறது.


24. உங்களைப் பற்றி தொடர்ச்சியாய் வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு நீங்கள் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆதாரவானவர் என்பது. நான் உங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக வாசிக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அப்படித் தோன்றியதில்லை. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் போன்ற விஷயங்களை எழுதியவர் என்பதற்காக ஒருவர் உங்களை அப்படி விளித்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை. Self restrospective செய்து சொல்லுங்கள். நீங்கள் ஓர் இந்துத்துவவாதியா? இல்லை எனில் இந்தப் பிழையான லேபிள் உங்களுக்கு சங்கடம் ஊட்டுகிறதா?


நான் எழுதவந்த காலகட்டத்தில் ஒரு கட்டுரையில் உபநிடத மேற்கோள் ஒன்றை அளித்திருந்தேன். என் ஆசான் ஞானி அதை வெட்டிவிட்டு நிகழ் சிற்றிதழில் வெளியிட்டார். நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அது மதச் சிந்தனை, நவீன இலக்கியத்தில் அதற்கு இடமில்லை என்றார். அதே இதழில் நான்கு வெவ்வேறு மேலைநாட்டு அறிஞர்களைப்பற்றிய மேற்கோள்கள் இருந்தன. அவர்கள் நேரடியாகவே மதச் சிந்தனையாளர்கள்தான். அதைப்பற்றி கேட்டபோது அது வேறு விஷயம் என்றார் ஞானி.


அந்த மனநிலை எனக்கு வியப்பளித்தது. அதைக் கடந்தேயாகவேண்டும் என முடிவெடுத்தேன். நமக்கு இங்கே மூவாயிரம் வருடத் தொன்மையுள்ள ஒரு மரபு உள்ளது. கலைகள், தத்துவம், இலக்கியம், தொன்மங்கள் என. அவை எல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசிவிட்டு நாம் என்னதான் சுயமாக எழுதிவிடமுடியும் என நினைத்தேன்.


நான் என் எழுத்தை முழுக்க முழுக்க இந்தியத்தன்மை கொண்டதாக அமையவேண்டும் என எண்ணுகிறேன். இங்குள்ள மரபிலிருந்து எழுவது. இதை விமர்சிப்பது, கடந்துசெல்வது. இதில் இருந்து துண்டித்துக்கொண்டு அரைகுறையாகத் தெரிந்த மேலைநாட்டு எழுத்துக்களை நகல்செய்து எழுதும் முறையை அபத்தம் என்று மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது.


இதுவே விஷ்ணுபுரம் போன்ற நாவலின் பின்னணி. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது எந்த இலக்கியத்தையும் புரிந்துகொள்ளமுடியாத அ.மார்க்ஸ் போன்ற மோட்டா விமர்சகர்கள் அதன் தலைப்பை மட்டும் வைத்து அது ஓர் இந்துத்துவப்பிரதி என்று பேசினார்கள். நம்மூரில் படிக்காமலேயே பேசும் கும்பல் அதிகம். ஒரு வாகான கருத்து கிடைத்தால் அதைத் தன் கருத்தாகச் சொல்லிவிடுவார்கள். அப்படியே அது ஒரு கருத்தாக ஆகியது.


பின் தொடரும் நிழலின் குரல் அடுத்த வருடமே வந்தது. அது இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வது. மார்க்ஸியத்தை அதன் ஆன்மீகசாரத்தின் அடிப்படையில் தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது. அவ்விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாதவர்கள் ‘அந்தாள் இந்துத்துவா... பாருங்க தோழர், விஷ்ணுவப்பத்தி எழுதியிருக்கார்’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.


சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன். அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சேர்ந்த பால்ராஜ் சொன்னார். ‘இப்பதான் விஷ்ணுபுரம் வாசிச்சேன். எத வச்சு அதை இந்துத்துவப் பிரதின்னு சொன்னாங்கன்னே தெரியல்லை”. நான் “விஷ்ணுவ வச்சு” என்றேன். “அது விஷ்னுவே இல்லியே. தலித்துக்களோட மூப்பன் தானே?”. நான் புன்னகை செய்தேன்.


இதுதான் இங்கே நிகழ்கிறது. இந்த மொண்ணைத்தனத்துடன் மோதுவதில்லை. நல்ல வாசகன் வருவான் என காத்திருக்கிறேன்.


நான் நூற்றுக்கணக்கான முறை சொல்லியிருக்கிறேன். என் இணையதளத்திலேயே குறைந்தது நூறு தடவை இது எழுதப்பட்டுள்ளது. இந்துஞானமரபும் பண்பாடும் வேறு, இந்துத்துவ அரசியல் வேறு. இந்த வேறுபாட்டை விளங்கிக்கொள்ளாமல் இந்திய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இடதுசாரிகள் இன்று ஒருவகை குறுங்குழுவாக கண்மூடித்தனமான மூர்க்கத்துடன் உள்ளனர். இந்த வேறுபாடை அறியாமலிருப்பது அவர்களைத் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.


இந்துத்துவ அரசியல் அடிப்படையில் ஐரோப்பியத்தன்மை கொண்டது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நவீனத்தேசியங்கள் உருவாகி வந்தன. கத்தோலிக்கத் திருச்சபையின் முற்றாதிக்கத்துக்கு எதிராகவே அவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. ஆகவே வட்டாரப் பண்பாட்டுக்கூறுகளின் அடிப்படையில் மக்களைத் தொகுத்து வலுவான அடையாளங்களை உருவாக்கி தேசியங்களை எழுப்பினர். அந்த வலுவான தேசியங்கள் உறுதியான மையம் கொண்ட அதிகாரமாக ஆக முடியும் என்றும் கண்டார்கள்.


ஆகவே இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான தேசிய உருவகங்கள் பிறந்தன. நாசிசமும் பாசிசமும் அதன் உச்சகட்ட எதிர்விளைவுகள். ஆனால் ஐரோப்பாவின் எல்லா தேசியங்களும் அப்படிப்பட்ட பண்பாட்டு அடிப்படை கொண்ட தேசியங்களே. இனம் மொழி ஆகியவை அடித்தளமாக அமைந்தன. பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் நவீன ஜனநாயகத்திற்கு வந்தனர். நவீன ஜனநாயகம் ஒற்றை அடையாளத்தை, மையத்தை முன்வைப்பது அல்ல. அது தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்க முனைவது.


ஐரோப்பாவில் இருந்துதான் நமக்கும் நவீனத் தேசியம் என்ற கருத்துக்கள் வந்தன. மாஜினி கரிபால்டி போன்ற பெயர்கள் இங்கே புகழ்பெற்றன. பாரதியே கூட மாஜினி கூறுவதாக கவிதை எழுதியிருக்கிறார். அதேபாணியில் சிவாஜி தன் படைகளுக்குக் கூறுவது என்ற கவிதையை எழுதினார்.


ஐரோப்பாவின் இரண்டு வகை தேசியங்களும் இங்கே வந்தன. ஏற்கனவே இங்கே இந்துமத மறுமலர்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த எழுச்சியில் இருந்து ஒரு நவீன ஜனநாயக தேசியம் நோக்கி காங்கிரஸ் சென்றது. காந்தி அதை வழிநடத்தினார். அதற்கு மாற்றாக இந்து மறுமலர்ச்சியில் இருந்து பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக் கொண்டு மதம்சார்ந்த ஒரு பண்பாட்டுத்தேசியத்தை நோக்கிச் சென்றவர்களே இந்துத்துவர்கள் எனப்படுகிறார்கள். இந்த இரண்டு அரசியலும்தான் இந்திய அளவில் இங்கு உள்ளன.


இந்த இந்துத்துவ அரசியலுக்கும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் பாரம்பரியத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. இம்மக்களின் பல்லாயிரமாண்டுக்கால நம்பிக்கைகள், ஆசாரங்கள், குறியீடுகள், தொன்மங்கள் ஆகியவை இந்துமதமாக இன்று திரண்டுள்ளன. அவற்றிலிருந்தே அவர்கள் தங்கள் கலையிலக்கியங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். தங்கள் அறங்களை அமைக்க முடியும். அவற்றை நம்பியே அவர்கள் கனவுகாண முடியும்.


இந்துத்துவ அரசியலை எதிர்க்கிறோம் என்ற பேரில் இங்குள்ள இடதுசாரிகள் இந்துமரபுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ அரசியலும் இந்துமரபும் ஒன்று என வாதிடும்போது நூறாண்டு கால வரலாறுள்ள இந்துத்துவ அரசியலை மூவாயிரமாண்டுக்கால வரலாறுள்ள இந்துமதத்துடன் பிணைக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன். இந்த மூடர்களிடமிருப்பது ஆணவமா அறியாமையா என்றே எனக்குப்புரியவில்லை.


இந்தியா என்ற இந்த நிலப்பரப்பு பல்லாயிரமாண்டுக்காலமாக மக்கள்திரள் இடம்பெயர்ந்து கலந்து உருவானது. இங்குள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் பலவகை இன, மொழி, மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்தியா என இன்றுள்ள இந்த அரசியலமைப்பு மட்டுமே இங்கே உண்மையான வளர்ச்சியை அளிக்க முடியும். இந்த அமைப்பு சிதறுமென்றால் வட்டார அளவில் பெரும்பான்மைவாதமே மேலெழும். மானுடவரலாற்றின் மாபெரும் அகதிப்பெருக்கே எஞ்சும். மிகச்சிறிய போடோ, நாகா பிரிவினைவாதக் குழுக்கள் கூட சக பழங்குடிகளைக் கொன்றுகுவிப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.


இந்தத் தேசியமானது இந்தியத் தேசியநாயகர்களால் உருவாக்கப்பட்டது. காந்தியும் அம்பேத்கரும் நேருவும் அதன் தலைவர்கள். இது நவீன ஜனநாயக இந்தியத் தேசியம். தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைக்க எண்ணுபவர்கள் அனைவருமே சாதியமோ மொழிவாதமோ இனவாதமோ பேசும் குறுங்குழுக்கள். ஃபாசிஸ்டுகள் என்பதைக் காணலாம்.


இந்தியதேசியம் என்பதே இந்துதேசியம் என்று ஒரு பிரச்சாரத்தை இங்குள்ள மதவெறியர்கள், அவர்களை இயக்கும் அன்னியசக்திகள் முன்னெடுக்கின்றன. அவற்றை நம்பும் முற்போக்கினர் இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தையே சிதைக்க எண்ணுகிறார்கள்.


நான் இந்து ஞானமரபில் பற்றுள்ளவன். இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். இந்துத்துவ அரசியல் இந்தியாவின் ஞானமரபின் அனைத்தையும் உள்ளடக்கும் பண்பை, விவாதங்களை அனுமதிக்கும் இயல்பை, கிளைவிட்டுப்பிரியும் செழுமையை அழித்து அதை ஒற்றைப்படையாக ஆக்கமுயல்கிறது என நினைக்கிறேன். ஆகவே அதை எப்போதும் எதிர்த்தே வருகிறேன். இதை நீங்கள் சென்ற பத்தாண்டுக்காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம், எம்.எஃப் ஹுசெய்ன் முதல் இன்று மாதொருபாகன் சர்ச்சை வரை நான் எழுதிய கட்டுரைகளில் காணலாம்.


நான் இந்தியா நவீன ஜனநாயக தேசமாக ஒன்றாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். அதன் மேல் தாக்குதல் தொடுக்கும் பிரிவினைவாத அமைப்புகளின் கீழ்மை மிக்க ஃபாசிசப்போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்துபவன். ஆனால் நான் இதை இந்துத்துவர்கள் ஓர் இந்து தேசியமாக எண்ணுவதை ஏற்கமாட்டேன். இது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நவீன நாடு என்றே எண்ணுகிறேன். என் தேசிய உருவகம் நேருவால் முன்வைக்கப்பட்டதே. எப்படியும் ஓர் ஐம்பது கட்டுரைகளில் இதை எழுதியிருக்கிறேன்.


இங்கே இந்துமதம், இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை முன்வைத்துவரும் கூலி அறிவுஜீவிப்படை ஒன்று உண்டு. இவர்கள் பெரும்பாலும் இங்கு சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் மதமாற்ற, மதவெறி அமைப்புகளிடம் நிதி பெற்று செயல்படுபவர்கள். பல்வேறு ஏகாதிபத்திய நிதியமைப்புகளின் கையாட்கள். இவர்களை நான் அம்பலப்படுத்தி விமர்சிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள என்னை இந்துத்துவத்தைப் பேசுவதாகச் சொல்லி முத்திரை குத்துகிறார்கள்.


ஒரு பத்துப்பக்கம் தொடர்ந்து வாசிக்கும் அறிவுத்திறன் இல்லாத பெருங்கும்பல் இந்தக்கூலிப்படையினரின் ஒற்றை வரிகள் வழியாக என்னை அறிந்து திரும்பித்திரும்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது.


நான் நாராயணகுருவை, நித்யசைதன்ய யதியைத்தான் ஆன்மீக தளத்தில் முன்வைத்து வருகிறேன். எந்த வகையிலும் அவர்கள் இந்துத்துவத்தை அல்லது இந்துப் பழமைவாதத்தை ஏற்றவர்கள் அல்ல. சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்கள். காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையுமே முன் வைத்து வருகிறேன். வேறெந்த அரசியலாளரையும் அல்ல.


மீண்டும் மீண்டும் இதைச் சொல்லி வருகிறேன். இந்துமெய்ஞான மரபின் மேல் மதிப்புள்ள ஓர் இந்து நான். இந்திய நவீன தேசியம் மீது பற்றுள்ள ஓர் இந்தியன் நான்.


25. எழுத்து தவிர்த்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை என எதைக் கருதுகிறீர்கள்? மேற்கில் எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் போராளிகளாகவும் இருந்துள்ளனர். ஓர் எழுத்தானை மதிப்பிடுகையில் அதுவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமா? சார்பற்ற கருத்துக்களைப் பதிவு செய்வதையும், உண்மையான வரலாற்றை எழுதுவதையும் தாண்டி அவன் நேரடிக் களப்பணி ஆற்ற வேண்டியது அவசியமா? உங்கள் பங்களிப்பு இதில் எவ்வகை எனக் கருதுகிறீர்கள்?


களப்பணி ஆற்றுவதும் ஆற்றாமலிருப்பதும் அந்தந்த எழுத்தாளனின் இயல்பை சார்ந்தவை. இளமையில் நான் தொழிற்சங்கம் மற்றும் சூழியல் செயல்பாடுகளில் நேரடியாக களப்பணியாற்றியவன். நான் எழுதியவற்றில் சூழியல் துண்டுப்பிரசுரங்கள் அதிகம் உண்டு


ஆனால் காலப்போக்கில் ஒன்று தெரிந்தது. களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படையான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கையை அளிக்கிறது. சூழியல் போராளிகளை எடுத்துக்கொண்டால் சூழியல் பிரச்சினையை சரிசெய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாதது.


ஆனால் அந்த ஒற்றைப்படை வேகம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியம் எப்போதும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாகவே இருக்கவேண்டும். ஆகவே எந்தவகையான தீவிரச் செயல்பாடும் இலக்கியத்தை வலுவிழக்கச்செய்யும் என்றே நினைக்கிறேன்.


தமிழின் புகழ்பெற்ற இதழாளர்கள் எழுதும் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் ஒப்பிட்டால் இதைக் காணலாம். அவர்கள் எப்போதும் ஒற்றைப்படையான குரல்கள்தான். அக்குரல்களுக்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் நான் எல்லா பக்கங்களையும் பார்க்கவே எப்போதும் முயல்கிறேன்.


மேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லாக் கலையும் அப்படித்தான் என்றாலும் மொழி இன்னும் சிக்கலானது. அது அன்றாடச்செயல்பாடு முதல் ஆழ்மனக் கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே இருந்து அதிலேயே வாழ்ந்தாலொழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்கமுடியாது.

26. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையே தூரம் இருக்கலாமா? உதா: முதலாளித்துவத்தை எதிர்த்து எழுதும் ஒருவர் ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கலாம். உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறதா?


எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே தூரம் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். என் வாழ்க்கைக்கும் என் எழுத்துக்கும் முரண்பாடு இருந்தால் எவரும் அதைச் சுட்டலாம். என் வாழ்க்கையில் ரகசியங்கள் என ஏதும் இல்லை. நான் எதை எழுதுகிறேனோ அதுவே நான்.


எழுத்தாளன் வாழ்வதற்காக சமரசம் செய்துகொள்ளக்கூடும். ஒத்துப்போகக்கூடும். ஆனால் அதையும் எழுத்தாக முன்வைக்கலாம். மறைத்தால் அவன் பொய் சொல்கிறான். ஒரு பொய் எல்லாவற்றையும் பொய்யாக ஆக்கிவிடும்.


முதலாளித்துவ ஊடகத்தில் வேலைபார்த்துக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்கலாம். ஆம், நான் இங்கே வேலைபார்க்கிறேன் என அவன் சொல்லும் பட்சத்தில் அது ஒரு தரப்புதான்.


முன்பு இங்கே இடதுசாரி தீவிரவாத இயக்கங்களில் அரசு உயரதிகாரிகள் பணியாற்றினர். மக்கள் தொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர், திமுகவுக்கு மிக நெருக்கமான ஜால்ராக்காரர், ஒரு நக்சலைட் கட்சியைத் தலைமைவகித்து, பத்திரிகையும் நடத்தினார் என்றால் நம்ப மாட்டீர்கள். மாளிகை மாதிரி வீடு கட்டி கப்பல் மாதிரி காரில் வாழ்ந்தார் அவர். அவரை நம்பிய பல இளைஞர்கள் மனநோயாளிகள் ஆனார்கள்.


இந்தவகையான இரட்டைவேடங்கள் படைப்பூக்கத்தையே போலியாக ஆக்கிவிடும். ஒருபோதும் எழுத்து இதிலிருந்து எழமுடியாது. சரி, உங்களை மறைத்துக்கொண்டு ஒரு போலி வடிவில் நீங்கள் எழுதினால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக அவ்வடிவை நீங்கள் கட்டி எழுப்பி நிறுவ ஆரம்பிப்பீர்கள். அது எழுத்தை போலியாக ஆக்கும்.


எழுத்தாளனின் சோதனைச்சாலை அவன் மனம் தான். அவன் வாழ்க்கைதான். அதைத்தான் அவன் வாசகர் முன் வைக்கிறான். என் எழுத்துக்கள் என் அகம்தான்.


27. கடவுள் நம்பிக்கை தொடர்பான நிலைப்பாடே ஒருவரின் எல்லாச் சிந்தனைகட்கும் மைய அச்சு என்பது என் புரிதல். நீங்கள் ஆத்திகரா நாத்திகரா? நான் வாசித்த வரை உங்கள் எழுத்துக்களில் ஆன்மீகத் தேடல், இந்து மதக் கோட்பாடுகளின் தத்துவ தரிசனம் இருக்கிறதே ஒழிய நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான தடயங்கள் தட்டுப்படவில்லை. ஓர் எழுத்தாளராக உங்கள் ஆன்மீக நிலைப்பாடு எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது அல்லது வழிநடத்துகிறது?


ஆத்திகரா நாத்திகரா என ஒருமுறை ஜெயகாந்தனிடம் கேட்டேன். “இது எத்தனை பழைய கேள்வி? நான் நாத்திகன் ஆனால் இந்து. நான் இறைநம்பிக்கை அற்றவன் ஆனால் ஆன்மீகவாதி” என்றார். அதுவே ஏறத்தாழ என் பதில்.


நாத்திகம், ஆத்திகம் என்ற வாதம் செமிட்டிக் மதங்களின் முழுமுதல் இறைவன் என்ற கருதுகோளில் இருந்து வருவது. அதாவது படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என நம்புகிறவன் ஆத்திகன். மறுப்பவன் நாத்திகன்.


இந்து, பௌத்த, சமண மதங்களுக்கு இந்தக்கேள்வியே பொருந்தாது [எளிமையாக வாசிக்க கார் சகனின் காட்ண்டாக்ட் நாவலிலேயே இந்த விவாதம் வரும்]. இங்கே தெய்வ உருவகங்கள் மூன்று. எளிய அன்றாட தெய்வங்கள், அதாவது சிறுதெய்வங்கள் ஒரு தளம். படைத்துக்காத்து அழிக்கும் பெருந்தெய்வங்கள் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் ஒன்று உண்டு. அது பிரபஞ்ச தத்துவம் ஒன்றை ஏற்றுக்கொள்வது. பௌத்தர்களின் தர்மம் போல. சமணார்களின் பவசக்கரம் போல. வேதாந்திகளின் பிரம்மம் போல. அது ஒரு கருத்து, ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான்.


இப்பிரபஞ்சம் இப்படி இயங்கலாம் என்ற ஓர் உருவகம் அது. அதில் நம்பிக்கை கொண்டவன் கடவுள் நம்பிக்கை கொண்டவன் அல்ல. அவனுக்கு பக்தி இல்லை. சடங்குகள் தேவை இல்லை. ஆகவே ஒருகோணத்தில் அவன் நாத்திகன். ஆனால் இங்கே நிகழ்வன அனைத்தும் வெறும் தற்செயல் என அவன் நினைக்கவில்லை. இவற்றை வெறும் அன்றாட நோக்கால் அணுகவில்லை. ஒரு மொத்த தர்க்கத்தை நோக்கிச் செல்ல முயல்கிறான். ஒரு சாராம்சமான உண்மையை அடைய நினைக்கிறான். ஆகவே அவன் ஆன்மீகவாதி.


நாராயணகுரு வேதாந்தத்துக்கும் பௌத்தத்துக்கும் நடுவே ஒரு தரிசனத்தை முன்வைத்தார். அவரது குருமரபில் வந்த நித்ய சைதன்ய யதியின் மாணவன் நான். அதுவே என் ஆன்மீகம். அது இறைநம்பிக்கை அல்ல. ஆகவே நான் நாத்திகனே. நாத்திகன் என்றால் மற்றவர்களைப்போல சும்மா ஃபேஸ்புக்கில் சொல்வது அல்ல. எல்லா வகையிலும். சொல் செயல் அனைத்திலும். அதேசமயம் நான் வேதாந்தி, இந்து.

28. நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை? உடல் நலன் கருதியா அல்லது ஒழுக்கக் கேடாகக் கருதுகிறீர்களா? அசைவ உணவுப் பழக்கம் பற்றிய உங்கள் கருத்தென்ன? (ஓர் எழுத்தாளனின் நேர்காணலில் இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனில் பொதுவாய் எல்லாப் படைப்பாளிகளுமே குடிக்கிறார்கள், போதை உச்சபட்ச படைப்பூக்கத்தையும் கற்பனை ஆற்றலையும் வழங்குவதாகச் சொல்பவர்கள் கூட உண்டு. இதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கிறீர்கள். அதனாலேயே கேட்கிறேன்.)


நான் கல்லூரியில் சேர்ந்த முதல்நாள் என் அப்பா என்னை அழைத்துப்போய் மூன்று அறிவுரைகளை மாமரத்தைப் பார்த்தபடி சொன்னார். குடிக்காதே, குடித்தால் தெருவில் கிடப்பாய். ஒருபெண்ணுக்குமேல் உறவு தேவை இல்லை, அவர்கள் உன்னை ஆட்டிப்படைப்பார்கள். தொழில் ஏதும் செய்யாதே, உன்னால் முடியாது.


என்னை மிக நன்றாக அறிந்த ஒருவர் சொன்னது. மேலும் அவர் உடனே செத்தும் போய்விட்டார். ஆகவே அதை மீறமுடியவில்லை. அவர் சொன்னது மிகச்சரி எனப் பின்னர் உணர்ந்தேன். நான் குடித்திருந்தால் பெருங்குடிகாரனாகி அழிந்திருப்பேன். என் இயல்பு அது.


நான் விதிவிலக்கு அல்ல. குடிக்கும் படைப்பூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. தமிழின் மிக உச்சகட்ட படைப்பாளிகள் எவரும் குடித்தவர்கள் அல்ல. புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன். தொட்டாலே கை அதிருமோ என அஞ்சவைக்கும் உச்சகட்ட படைப்புமனநிலையில் எப்போதும் இருக்கும் என் ஆதர்சம் ஒருவர் உண்டு, குடிப்பதில்லை அவர். இளையராஜா.


குடிப்பவர்கள் இருவகை. வெறும் குடிகாரர்கள். குடியின் குற்றவுணர்ச்சியை மறக்க கவிஞர், கலைஞர் என்றெல்லாம் பாவ்லா செய்பவர்கள். எண்ணிக்கையில் இவர்களே 90 சதவீதம்.


படைப்பு மனநிலையின் உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அந்த தட்டை வாழ்க்கையைத் தாளமுடியாமல் குடிக்கத் தொடங்கி பெருங்குடிகாரர்கள் ஆனவர்கள் உண்டு. அது ஒரு தவறான முடிவின் விளைவு. அவர்கள் குடிப்பதனால் எழுதுவதில்லை. எழுதாதபோது எழுத முடியாதபோது குடிக்கிறார்கள். அவர்கள் மிகச்சிலர்.


என் ஆசானாகிய மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன் அத்தகையவர். என்னிடம் மீளமீளச் சொன்னார், குடிக்காதே என. மூளையைக் கொதிக்கவிடு, குடியை ஊற்றி அணைக்காதே என. நான் கேட்டேன். வெடித்துவிடும்போலிருக்கிறதே மாஷே என்று. எங்காவது ஓடு. பயணம் போ. எவரையாவது திட்டு. எங்காவது சென்று அடி வாங்கு. ஆனால் மூளையைக் கொதிக்கவிடு. அதைக்கவனித்துக்கொண்டிரு.


போதை என்பது ஒரு மனமயக்க நிலை. மந்த நிலை. அதில் எந்த படைப்பூக்கமும் இல்லை. படைப்பூக்கம் என்பது பலமடங்கு கூர்மையான அகவிழிப்பு நிலை. வெண்முரசு போன்ற ஒரு நாவல்தொடரின் பல்லாயிரம் பக்கங்களை முழுமையாக நினைவில் வைத்திருந்து எழுதும் நிலை மனமயக்கத்தில் வருவது அல்ல. அது மூளை முழுமையாகச் செயல்படும் ஓர் உச்சநிலை. இறங்கி வந்தால் அது இருக்காது. ஒன்றுமே நினைவில் இருக்காது. நாலைந்து நாள் எழுதாவிட்டால் எழுதவே முடியாதோ என பயம் வந்துவிடும். எழுதி அச்சில் வந்த நூலைக் கண்டாலே பீதியாக இருக்கும், எப்படி எழுதினோம் என.


ஆனால் இதுவும் ஒரு போதை என்று சொல்லலாம்தான். மூளையின் ஒரு சில சாத்தியங்கள் முழுமையாக விழிக்க பல இடங்கள் அணைந்து போகின்றன. ஓரளவு மேனியா அல்லது அப்ஸெஷன் என்று சொல்லத்தக்க மனப்பிறழ்வு நிலை. நாம் கையாளக்கூடிய ஒரு கிறுக்கு நிலை.


உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கிறுக்கு நிலையை உருவாக்கிக்கொள்ளத் தடையாகக் குடி அமையும். அதற்குத்தேவையானது தனிமை. தன்னைத்தானே அவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலை. அதாவது மனச்சோர்வு நோயாளி அளவுக்கு பயங்ரமான தனிமை. கூட்டம் சேர்ந்து குடித்துக் கூத்தாடுவதுபோல அதற்கு எதிரானது ஏதுமில்லை.


எழுத்தாளனின் கடமை வெளியே கவனிப்பது. கூடவே தன்னையும் கவனிப்பது. மிகச்சிறந்த பார்வையாளனே எழுத்தாளனாக முடியும். எப்போதும் அவன் மூளை விழித்து கூர்ந்திருகக்வேண்டும். சாதாரண சமயங்களில் உள்ளே சென்று தேங்குவதே படைப்பின் வேகத்தில் வெளிவருகிறது. மூளையை மழுங்கடிப்பவை இரண்டு. ஒன்று போதை. இன்னொன்று வழக்கமான ‘ரொட்டீன்’ வாழ்க்கை.


29. சகல விஷயங்களுக்கும் உங்களிடம் கருத்து உண்டு என்று சிலர் கேலியாய் குறிப்பிடுவதுண்டு. ஆனால் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து ஒரு விஷயத்தில் உங்கள் அறிவு அல்லது அனுபவம் கணிசமான அளவு இருந்தால் தான் கருத்து சொல்கிறீர்கள் என்பதே என் புரிதல். எழுத்தாளன் எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினையாற்ற வேண்டுமா? ஒரு விஷயத்துக்கு கருத்து சொல்லாத போது கள்ள மௌனம் என ஜோடிக்கப்படுகிறது; கருத்துச் சொன்னால் துறைசார் பாண்டித்யம் இல்லாமல் சொல்லப்படும் கருத்து என விமர்சனம் எழுகிறது. உங்கள் நிலைப்பாடு என்ன? ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டுமா, வேண்டும் எனில் எப்போது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?


பலமுறை சொல்லியிருக்கிறேன். சகல விஷயங்களுக்கும் நான் கருத்து சொல்வதில்லை. எனது துறை என நான் நினைப்பது இலக்கியம், இந்தியத் தத்துவம், தமிழக வரலாறு. இம்மூன்றிலும் மட்டுமே நிபுணனாகக் கருத்துச் சொல்கிறேன். இவற்றுடன் தொடர்புள்ள அரசியல், பண்பாட்டு விஷயங்களிலும் கருத்துச் சொல்கிறேன். இத்துறைகளில் எவருக்கும் குறையாத வாசிப்பும், அவதானிப்பும் எனக்கு உண்டு. விஷயம் தெரிந்த எவரும் என் கருத்துக்களைப் புறக்கணிக்கமுடியாது.


தொழில்நுட்பம், அறிவியல், சினிமா, இசை, பொருளியல் என எதிலும் கருத்து சொல்வதில்லை. சிலசமயம் இத்துறைகளில் ஓர் எளிய வாசகனாக பிறரது கட்டுரைகளை வழிமொழிந்திருப்பேன் அவ்வளவுதான். உங்களுடைய ஓர் அறிவியல்கட்டுரையைக்கூட அப்படித்தான் வழிமொழிந்தேன்.


கருத்துத் தெரிவிப்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறேன். ஒரு பிரச்சினை போதிய அளவு பேசப்பட்டு அடங்கிய பின்னரே கருத்து தெரிவிப்பேன். அப்பிரச்சினையில் பிறர் சொல்லாத ஏதேனும் விஷயத்தை எழுத்தாளனாக நன் சொல்வதற்கிருந்தால் கருத்து தெரிவிப்பேன். அப்போது நான் ஏதும் தீவிரமாக எழுதாமலிருந்தால்தான் கருத்து தெரிவிப்பேன்.


30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன என்பது பற்றிய உடனடி மதிப்பீட்டிற்கு வந்தடைந்திருக்கிறேன். பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் வழக்கம். நீங்கள் உணர்ச்சிவசப்படாது உண்மையை எழுதுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இதனால் அவப்பெயரை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறதா? அஞ்சலிக் குறிப்புகளை எல்லாம் நூலாய்த் தொகுத்து வெளியிடுவீர்களா?


இன்று இணையத்தில் எதையுமே நக்கலாக்கி தங்களுக்கென எளிய அடையாளம் தேடுபவர்களுக்கு இதைச் சொல்லி புரியவைக்க முடியாது. இணையத்தில் எழுதுவதென்பது அடிப்படையில் தமிழின் மொண்ணைத்தனத்தை நேருக்குநேர் சந்திப்பது.


எண்பதுகளில் கலையிலக்கியத் தளங்களில் ஆளுமைகள் மறைந்தால் ஒரு சிறிய செய்திகூட நாளிதழ்களில் வெளிவராது. பல எழுத்தாளர்கள் மறைந்து பலமாதம் கழித்து சிற்றிதழ்களில் வரும் குறிப்புகள் வழியாகவே நண்பர்கள் அச்செய்தியை அறிவார்கள்.


நான் எழுத வந்தபோது இடைநிலை இதழ்கள் வெளிவரத் தொட்ங்கின. தினமணியில் இராம சம்பந்தம் ஆசிரியரானார். அவர் அஞ்சலிக்கட்டுரைகள் எழுத இடமளித்தார். சுபமங்களா வந்தது. இந்தியா டுடே வந்தது. அவர்கள் அளித்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலக்கியவாதிகளைப்பற்றி அஞ்சலிகளை எழுத ஆளில்லை. ஏனென்றால் சிற்றிதழாளர்கள் ஒரு குறிப்பு எழுத ஒருவாரமாகும்.


இராம சம்பந்தம் என்னிடம் எழுதும்படி சொன்னார். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். செய்திகேட்ட ஒரு மணிநேரத்தில் எழுதி தினமணி நிருபரிடம் கொடுத்து டெலிபிரிண்டரில் அனுப்பி செய்தியுடன் அஞ்சலிக் கட்டுரை வெளியிட்டேன். எழுத்தாளர்களும் அஞ்சலிக்கட்டுரைக்குத் தகுதியானவர்களே என தமிழ்ச் செய்தி ஊடகங்கள் அதன்பின்னரே உணர்ந்தன.


இணையம் ஓரு வாய்ப்பு. பல அஞ்சலிக்கட்டுரைகளை நான் அன்றி பிறர் எழுதியிருக்க மாட்டார்கள். உதாரணம் ஐராவதம் சுவாமிநாதன். ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளர் ஓர் அஞ்சலிக் குறிப்புகூட இல்லாமல் மறைவது என்பது ஒரு பெரிய அவமதிப்பு.


ஏனென்றால் எழுத்தாளனின் மரணம் ஒரு முக்கியமான நிகழ்வு. அவனுடைய பணி முழுமை அடைகிறது. அவன் அதுவரை எழுதியவை அனைத்தும் அவன் இறந்ததுமே ஒன்றாகச் சேர்ந்து ஒற்றை ‘டெக்ஸ்ட்’ ஆக மாறிவிடுகின்றன. அவனைப்பற்றி எழுதப்படுபவை வெறும் இரங்கல்கள் அல்ல. அவை ஓர் எழுத்தாளனின் முழுமையை சமூகம் உணரும் கணங்கள். அஞ்சலி கட்டுரைகள் இல்லாமல் மறையும் எழுத்தாளன் அச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன். இழிவு செய்யப்பட்டவன்.


முக்கியமான படைப்பாளிகளுக்கு, சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களுக்கு, அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. அது மேலும் நிகழலாகாது என்பதே என் எண்ணம். ஆகவே தான் அஞ்சலிக்கட்டுரைகளை எழுதுகிறேன். இன்று என் இணையதளம் தமிழின் மிக அதிகமான பேர் வாசிக்கும் ஓர் ஊடகம். அதில் வரும் அஞ்சலி வழியாகவே பலர் இறப்புச்செய்தியையே அறிகிறார்கள்.


என் அஞ்சலிக்குறிப்பு அவ்வாசிரியனைப்பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வழிகாட்டுவதைக் காணலாம். அதையொட்டி அல்லது வெட்டி தான் அதன்பின் அவன் அஞ்சலிக்கட்டுரைகள் வருகின்றன. சமீபத்தில் எஸ்.பொன்னுத்துரை பற்றிய குறிப்பை உதாரணமாக‌ச் சொல்வேன். இல்லையேல் ‘பாவம் நல்ல மனுஷர் போய்ட்டார்’ என்ற வகை கட்டுரைகளே இங்கே வந்துவிழும்.


அஞ்சலிக்கட்டுரை எழுதுவதில் எனக்கு சில விதிகள் உண்டு. எனக்கு நேரடியாகத் தெரிந்தவர்கள், அல்லது நான் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பு கொண்டிருப்பவர்கள் பற்றியே அஞ்சலிக் கட்டுரைகளை எழுதுவேன். அவர்களைப்பற்றி ஒரு பேச்சு தொடங்கவேண்டும் என விரும்புவேன். ஒரு மரணம் பற்றி ஏற்கனவே நிறைய அஞ்சலிகள் வந்துவிட்டால் என் கணக்கில் ஒன்றைச் சேர்க்கவிரும்பமாட்டேன்.


உதாரணமாக மறைந்த கே.பாலசந்தர் எனக்கு நன்றாக அறிமுகமானவர். பலமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் அவருடன் ஒரே அறையில் தங்கி இரவெல்லாம் பேசியிருக்கிறேன். எனக்கு அவர் நடித்துக் காட்டியிருக்கிறார். அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். ஆனால் எங்கும் அஞ்சலிக்கட்டுரைகளாக குவிகையில் மேலும் ஒன்றை நானும் எழுத விரும்பவில்லை. தேய்வழக்குகளை ஏன் எழுதவேண்டும் என்றுதான்.


சுந்தர ராமசாமி க.நா.சு. பற்றி எழுதிய க.நா.சு. நட்பும் மதிப்பும் என்ற அஞ்சலிக்கட்டுரை எனக்கு அக்காலத்தில் ஒரு பெரிய திறப்பு. அதில் க.நா.சு.வின் நினைவுகளை விரிவாக எழுதி கூடவே கறாரான மதிப்பீட்டையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். நான் அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். அது மரியாதைதானா என்று.


சுந்தர ராமசாமி சொன்னார் ‘ஓர் எழுத்தாளன் இறப்பது என்பது பிற இறப்புகள் போல அல்ல. அது ஒரு தொடக்கம். அவனை நாம் தொகுத்துக்கொள்ளவும் மதிப்பிடவும் ஆரம்பிக்கிறோம். அவனைப்பற்றிய ஒரு விவாதமாக அந்த அஞ்சலி நிகழவேண்டும். அப்போதுதான் அவன் பிறந்தெழ முடியும். வெறும் சம்பிரதாயமான சொற்களால் அந்த மறுபிறப்பு தடுக்கப்படும். அது அவனுக்குச் செய்யப்படும் அநீதி’.


என் கொள்கையும் அதுவே. கறாரான உண்மையான மதிப்பீட்டை முன்வைத்தே என் அஞ்சலியை எழுதுகிறேன். எனக்கும் அப்படி எழுதப்பட்டால் போதும்.


31. உங்கள் விமர்சன அளவுகோலில் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உளவியல் ரீதியாய்க் கணக்கில் கொள்கிறீர்கள். உதாரணமாய் கமலா தாஸின் புறத் தோற்றம், மனுஷ்ய புத்திரனின் உடற் குறைபாடு. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் எழுத்துக்களை மதிப்பீடு செய்ய உங்கள் தனி வாழ்க்கையை எடுத்துக் கொள்வதை ஏற்கிறீர்களா?


இலக்கியம், தத்துவம் போன்றவை உயர் அறிவுத்துறைகள். அங்கே நடுத்தரவர்க்க மனநிலைகள் உருவாக்கும் சம்பிரதாயங்கள், இடக்கரடக்கல்களுக்கு இடமில்லை. ஆனால் இங்கே இந்த இலக்கிய மதிப்பீடுகள் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் ‘அப்பாவி’ வாசகர்கள் அந்த மனநிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்களை எல்லாம் திட்டுவது என்றே எடுத்துக்கொள்வார்கள். ‘செத்துப்போனவங்களை குறை சொல்லக்கூடாது’ ‘பொம்புளைங்கள மதிக்கணும் சார், அவங்கல்லாம் பாவம்’ என்பது போன்ற அசட்டு சம்பிரதாயங்களை சொல்வார்கள்.


எலியட் சொல்கிறார் ஓர் எழுத்தாளன் முதலில் அவனைத்தான் வாசகன் முன் வைக்கிறான் என. அவன் அந்தரங்கத்தை வைக்கிறான். சடலம் என்கிறார், அதை நம்மிடம் அறுத்து ஆராயச் சொல்கிறான் ஆசிரியன் என்கிறார். தன் வாழ்க்கையை அவன் நமக்கு சான்றுகளாக அளிக்கிறான். ஆகவேதான் உலகம் முழுக்க எழுத்தாளர்களின் ஆளுமையும் தனிவாழ்க்கையும் ஆராயப்படுகிறது.


மேலைநாடுகளில் எழுத்தாளனின் அத்தனை அந்தரங்கங்களும் விரிவாக ஆராய்ந்து நூல்களாக வந்திருப்பதை நீங்கள் காணலாம், அந்தரங்கம் புனிதமானது என நம்புபவர்கள் அவர்கள். ஆனால் பொதுவாழ்க்கையில் வந்த ஒருவன், தன்னை முன்வைக்கும் எழுத்தாளன் அப்படி ஓர் அந்தரங்கத்துக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.


எழுத்தாளன் சொல்வதெல்லாம் அவனுடைய சொந்த மனப்பதிவுகளை, அகவெளிப்பாடுகளை. அவன் ஆய்வுண்மையைச் சொல்வதில்லை. புறவய உண்மையைச் சொல்வதில்லை. அந்தரங்க உண்மையைச் சொல்கிறான். அவனிடம் அவன் சொல்லும் ஒரு கருத்துக்குப் புறவய ஆதாரமிருக்கிறதா என நாம் கேட்பதில்லை. அது ஆத்மார்த்தமாகச் சொல்லப்படுகிறதா என்றுதான் கேட்கிறோம்.


ஆகவே அது எந்த அளவு உண்மையானது என்று அறிய வேண்டுமென்றால் அந்த எழுத்தாளனை நாம் அறிந்தாகவேண்டும். இதை அவன் மறுக்க முடியாது. எழுத்தைப்பார், எழுத்தாளனைப்பாராதே என்ற வரிக்கு உலக இலக்கியத்தில் எங்கும் இடம் இல்லை அப்படி ஓர் எழுத்தாளன் கூட விடப்பட்டதில்லை. ஷேக்ஸ்பியரின் காதலிகளை நாம் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் சில்வியா பிளாத் என்ன டிரக் எடுத்துக்கொண்டார் என்று நமக்குத் தெரியும். டெட் ஹுயூக்ஸின் காதலிகளைத் தெரியும்.


நாம் ஒரு கவிதையை ஆராய்வது எதற்காக? அதன் அனைத்துத் தளங்களையும் அறிவதற்காக. அதில் அந்த படைப்பாளியின் அந்தரங்கமும் முக்கியமாக இருந்தால் அதை அறிவதில் எந்தப்பிழையும் இல்லை. உலகம் முழுக்க அப்படித்தான். அன்னா கரீனினாவை ஆராய தல்ஸ்தோயின் மனைவிக்கும் அவருக்குமான உறவு முக்கியமான பின்புலமாக இருக்கிறது அல்லவா? யோசித்துப்பாருங்கள், எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது!


கமலாதாஸ் அவரே தன்னுடைய தோற்றம் மீதான தாழ்வுமனப்பான்மையை, அதுவே தன்னை எழுத்துக்குக் கொண்டுவந்தது என்பதை எழுதியிருக்கிறார். ‘என் கதை’ என்னும் சுயசரிதையில் அவரே அவரது பாலுறவுகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை ஆராயும் விமர்சகன் அதை குறிப்பிட்டால் ‘அய்யய்யோ கமலாதஸின் அந்தரங்கத்தை அலசுவதா?” எனப் பெண்ணுரிமையாளர் கொந்தளிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்கே பெண்ணியர்கள் வெறும் பேதைகள். அவர்களின் மதிப்பீடுகள் சமையற்கட்டு நம்பிக்கை சார்ந்தவை. சும்மா வந்து மேடைகளில் பாவ்லா காட்டுகிறார்கள். அறிவார்ந்த நிமிர்வும் திமிரும் இல்லாமல் இருந்தால் இவர்களெல்லாம் என்ன இலக்கியவாதிகள்?


மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் தொடக்கம் அவரது உடல்குறைபாடு பற்றிய தன்னிரக்கக் கவிதைகள். அதிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்ததை அவரே எழுதியிருக்கிறார். அவரது உள்ளம் பல்வேறுவகையில் புறந்தள்ளப்பட்டவர்களை நோக்கிச் செல்ல அவர் உடல்குறைபாட்டால் ஒதுக்கப்பட்டவராக இருந்த அனுபவம்தான் காரணமா என ஆராய்வதில் என்ன பிழை? அவை அப்படைப்புகளை ஆராய சில புதிய வாயில்களைத் திறக்கின்றன. அவ்வளவுதான்.


எழுத்தாளனை மேலே இருந்து இரக்கத்துடன் பார்ப்பவர்கள்தான் அய்யோ உடல்குறைபாட்டை நோக்குவதா என்றெல்லாம் பரிதாபப்படுகிறார்கள். அவன் சமகாலத்தின் ஒரு ‘சாம்பிள்’. எந்த ஈவிரக்கமற்ற சோதனைக்கும் தாக்குபிடிப்பான் என்றே நான் நம்புகிறேன்.


32. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டாக இருந்தீர்கள். பின் இந்துத்துவ ஆதரவளார் என்று சொல்லி உங்கள் மீது வலதுசாரி முத்திரை விழுந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஊழலெதிர்ப்புக்கட்சியாக தம்மை முன்வைக்கும் ஆம் ஆத்மியை ஆதரித்தீர்கள் (அவர்கள் ஓர் எல்லை வரை வலதுசாரிகளே). இன்று கட்சிகளை விடுத்து கோட்பாட்டுரீதியாக உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?


கோட்பாடு என்ன என்று சொல்லத் தெரியவில்லை. நான் அரசியலில் ஒரு ஜனநாயக மிதவாதப்போக்கை விரும்புகிறேன். லிபரல் டெமாக்கிராட் என்று சொல்லலாமா?


பொதுவாக எல்லாவகையான தீவிரக்குரல்களையும் சந்தேகப்படுகிறேன். அவை சமநிலை இல்லாத மனிதர்களால் முன்வைக்கப்படுபவை. பெரும்பாலும் எதிரிகளைக் கட்டமைத்து வெறுப்பைக் கக்குபவை. அவர்களை கூர்ந்து நோக்கினால் தெரியும், அவர்கள் பேசும் தீவிரமான அரசியல் என்பது அந்தரங்கமான வெறுப்புகளின் வடிகால் மட்டுமே. இதெல்லாம் முன்னால் கொஞ்சம் புகைமூட்டமாக இருந்தது. இப்போது ஃபேஸ்புக் வந்தபின் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.


தீவிரப்போக்குகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்குகின்றன. மக்களின் கூட்டான அகம் திரண்ட ஓர் ஆற்றலாக ஆகி செயல்பட வாய்ப்பளிக்கும் நிதானமான அரசியலையே நான் ஏற்கிறேன். எல்லாக் குரல்களும் எழவேண்டும். எல்லாச் சமூக விசைகளும் முட்டி மோதி சமநிலையை அடையவேண்டும். வலதுசாரி என்று உறுதியாக என்னைச் சொல்லமாட்டேன். சில இடதுசாரிக் கொள்கைகளும் பிடிக்கும். இன்று நான் மிக விரும்பும் அரசியல் தலைவர் அச்சுதானந்தன்தான்.


சமகால அரசியலில் எழுத்தாளன் ஈடுபடக்கூடாது என நினைக்கிறேன். அது பெரும்பாலும் சார்புநிலை கொண்டவர்களின் வெட்டிப்பேச்சுகளால் ஆனது. அதில் மாட்டிக்கொண்டால் சொற்கள்தான் விரயமாகும். ஆகவேதான் மொத்தப் பாராளுமன்ற அரசியலிலும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.


அரசியலை மனச்சிக்கல்கள் தீர்மானிக்கக் கூடாது. உணர்வெழுச்சிகள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே உணர்ச்சிக்கொந்தளிப்பான அரசியல் பேச்சை நான் ஒருவகை வாந்தியாகவே பார்க்கிறேன். எவர் பேசினாலும். இதனால் இந்துத்துவ வாந்தி எடுப்பவர்களும் என்னை திட்டுகிறார்கள். முற்போக்கு திராவிட வாந்தி எடுப்பவர்களும் திட்டுகிறார்கள். மின்னஞ்சலைத் திறந்து எல்லாத் தரப்பினரின் வசைகளும் மாறி மாறி வாசிக்கையும் சிரித்துக்கொள்வேன்.


33. தமிழ் வாசகப் பரப்பு என்பது ஆரம்பம் முதலே சோகையாகத்தான் இருக்கிறது. இங்கே எழுத்தாளன் எழுதி மட்டும் ஜீவிக்க முடியாது. அடுத்து எழுத்தாளனுக்கு மரியாதையும் இல்லை. சாதாரணர்கள் மத்தியில் மட்டுமின்றி பேரசிரியர்களிடமே இது தான் இடம். பத்துக் கோடி தமிழர்களில் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் தான் உங்களை வாசித்திருக்கக்கூடும். இச்சூழலில் எது உங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது? வரலாறு உங்களை நினைவிற்கொள்ளும் என்பது தான் உந்துதலா?


எழுத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையிலேயே எழுதுவதில் உள்ள பெரும் கனவே எழுதவைக்கிறது என. மிச்சமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நான் எழுதவந்தபோது 500 வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. 200 பிரதிகள் அச்சிடும் சிற்றிதழ்களில்தான் எழுதினேன். இதேயளவு தீவிரத்துடன். எனக்கு இன்றிருக்கும் இந்த எண்ணிக்கையே பெரியது.


எழுதுவது என்னை நான் கண்டுபிடிக்க. என் ஆழ்மனதை மொழியால் மீட்டி எழுப்ப. கனவு ஒன்றில் சமாந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்க. சமான இதயமுள்ள நண்பர்களுடன் அதைப்பகிர்ந்துகொள்ள. அதற்காக மட்டும்தான். எனக்கு உண்மையிலேயே ஐம்பது வாசகர்கள் போதும். அதற்குமேல் ஆசைப்படுவது புத்தகம் விற்று பதிப்பகம் நஷ்டமில்லாமல் தப்பவேண்டும் என்பதற்காக மட்டுமே.


34. இங்கே வாசிப்பு என்பது லௌகீக எதிர்பார்ப்பு சார்ந்ததாகவே உள்ளது. அதனால் என்ன பயன் என்பது தான் முதல் கேள்வி. சமையல், கணிப்பொறி, ஜோதிடம், கலவி, ரைம்ஸ் நூல்கள் அதிகம் விற்க இந்த மனநிலை தான் காரணம். மாறாய் இந்திய ஆங்கில இலக்கியம் ஒப்பீட்டளவில் ஓரளவேனும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இங்கும் அதுபோல் நிகழ என்ன செய்யலாம்?


வாசிப்பு என்பது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. கலாச்சார ரீதியான மாற்றம் வழியாகவே வாசிப்பு பெருகும். வணிக நட்வடிக்கை வழியாக அல்ல. கேரளத்திலும் வங்கத்திலும் கர்நாடகத்திலும் விரிவான வாசிப்பு இருக்கிறது என்றால் நாராயணகுரு போன்றவர்களின் சமூகமறுமலர்ச்சி இயக்கங்களும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களும்தான் காரணம்.


இங்கே இடதுசாரி இயக்கம் முளையிலேயே குறுகிவிட்டது. திராவிட இயக்கம் நாடகம், சினிமா, மேடைப்பேச்சு என வளந்தது. அது அறிவார்ந்த இயக்கம் அல்ல, பரப்பியல் [பாப்புலிஸ்ட்] இயக்கம். அது உண்மையான கலாச்சார மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. ஏற்கனவே இருக்கும் கலாச்சார இயக்கங்களின் கொள்கைகளை எடுத்து எளிய கோஷங்களாக்கி அரசியல் நடத்தும். திராவிட இயக்கம் அதற்கு முன்பிருந்த தமிழியக்கத்தில் இருந்து சிலகோஷங்களைக் கையிலெடுத்து மேடைமேடையாக முழங்கியது. அதன் சாதனைகளை இன்று தன்னுடையது என்கிறது.


தமிழில் நிகழ்ந்த கடைசிப் பெரிய அறிவியக்கம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம். அதன் மூன்று முகங்களான தமிழ் பதிப்பியக்கம், தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம். அதன் அலை இன்றும் நீடிக்கிறது. இன்றும் கூட தமிழகத்தில் உள்ள மிக அதிகமான இலக்கிய அமைப்புகள் தமிழ் மறுமலர்ச்சிக்காலத்தில் உருவானவைதான். இன்றும் அவை ஏதோ வகையில் செயல்படுகின்றன. உதாரணமாக கம்பன் கழகங்கள், வள்ளுவர் மன்றங்கள். நவீன இலக்கியத்திற்கு அப்படி ஒர் அறிவியக்கம் இங்கே நிகழவில்லை. அதன் குறைபாடு இங்குள்ளது.


அத்துடன் நவீனக் கல்வி நவீனச் சிந்தனைகளுக்கும் இலக்கியத்திற்கும் எதிரானதாக, தொழில்நுட்பப் பயிற்சி என்ற அளவில் மட்டுமே இங்குள்ளது. மொழிக் கல்வி தேங்கியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே கல்வித்துறை அறிவார்ந்த தன்மையை இழந்து ஊழலால் சீரழிந்துள்ளது. ஆகவே இங்கே வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவே இல்லை.


சமூக அளவில் பெரிய வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் நவீனத் தொழில்நுட்பம் மூலமோ அல்லது வேறு அரசியல் எழுச்சிகள் மூலமோ ஒரு பண்பாட்டு இயக்கம் நிகழவேண்டும். அதுவரை இங்கே அது ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் இருக்கும்.


35. இணைய தளத்தில் எழுதத் தொடங்கியது உங்கள் எழுத்தை எந்த வகையில் மாற்றி இருக்கிறது? இதை விரும்புகிறீர்களா? பிரசுர சம்மந்தமான பதற்றத்தை இணையதளம் அகற்றியுள்ளதல்லவா?


இணையதளத்தில் வருவதற்கு முன்னரே நான் தொடர்ந்து எழுதிவந்தவன் சொல்லப்போனால் சொந்தமாக சிற்றிதழ் நடத்தினேன். அது நின்றதுமே இணையம் வந்துவிட்டது. இணையம் வந்த ஆரம்பகாலத்திலேயே நான் மருதம் என்ற இணைய இதழை ஆரம்பித்துவிட்டேன். தமிழின் மிக ஆரம்பகால இணைய இதழ்களில் ஒன்று அது. அதன் பிரதிகள் அழிந்துவிட்டன.


நான் எந்த பிரசுர அமைப்பையும் சார்ந்து எப்போதும் செயல்பட்டதில்லை. ஆனால் பிரசுரம் சார்ந்த பதற்றமும் எனக்கு இருந்ததில்லை. என் நூல்களில் விஷ்ணுபுரம் மட்டுமே பிரசுரத்திற்குச் சற்று சிக்கலை அளித்தது. அன்று அவ்வளவு பெரிய புத்தகங்கள் எளிதில் வருவதில்லை. என் வாசகர்களிடமே முன்பணம் திரட்டி அதை வெளியிட்டேன். 1997ல். விஷ்ணுபுரத்தின் வெற்றிக்குப்பின் எப்போதும் பிரசுரம் ஒரு சிக்கலாக இருந்ததில்லை. எல்லா வருடமும் என் நூல்கள் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.


இணையம் எனக்கே உரிய ஓர் எளிய ஊடகமாக ஆகியது. இணையம் இல்லாமலிருந்தால் எனக்கு இத்தனை பெரிய வாசகர் பரப்பு உருவாகியிருக்காது. அவர்களை இணைத்து ஓர் அமைப்பாகச் செயல்பட முடிந்திருக்காது. நான் எழுதும் அனைத்து எழுத்துக்களும் ஒன்றாகத் தொகுத்திருக்க முடியாது.


36. எல்லோர் மனதிலும் இருக்கும் ஓர் ஆச்சரியக் கேள்வி. எப்படி இவ்வளவு எழுதிக் குவிக்கிறீர்கள்? அதுவும் தொடர்ச்சியாகவும் தரம் குன்றாமலும்? சுந்தர ராமசாமியின் பாணிக்கு நேர் எதிரானது இது. அதிகமாய் எழுதுவது தரத்தைப் பாதிக்கும் என்ற நெடுங்கால நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள்.


இங்கே ஏதேனும் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்களுக்குத்தெரியும் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் மிக எளிய அன்றாட மனநிலையில் லௌகீக வாழ்க்கையின் கடமைகளை செய்து லௌகீக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு படைப்புமனநிலை மிக அபூர்வமாகவே வாய்க்கிறது. உலகியலில் இருந்து அங்கே செல்ல பலவகையான சிக்கல்கள் இருக்கின்றன. ‘தொடங்கிட்டா போரும் எழுதிருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை வருடக்கணக்காக பார்க்கிறேன்.


எழுத்தின் தரம் என்பது எழுதும் மனநிலையின் தீவிரத்தை மட்டுமே சார்ந்தது. படைப்புமனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது தான் முக்கியம். நான் படைப்புமனநிலையில் எப்போதுமே இருந்து கொண்டிருப்பவன். அதை ஒரு யோகமாகப் பயில்பவன். அதை அறிவியல் பூர்வமாக அறிந்து செயல்படுத்துபவன். எனக்கு எழுத்து தற்செயல் அல்ல.


எனக்கு சுந்தர ராமசாமியை நன்றாகத் தெரியும். அடிப்படையில் அவர் ஒரு சுகவாசி. பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர். உரையாடல் நிபுணரும் கூட. எழுதுவதை முடிந்தவரை ஒத்திப்போடுவார். ஒரு கதை தோணுது என ஒருவருடம் சொல்லியிருக்கிறார். ஓரிரு பத்திகளை எழுதி விட்டுவிடுவார். ஒவ்வொருநாளும் நூறுவரி எழுதுவார். யோசித்து யோசித்து மாற்றி மாற்றி எழுதுவார்.


அத்துடன் அவர் எழுதுவதும் இல்லை. அவர் சொல்ல ஓர் உதவியாளார் தட்டச்சு செய்வார். அவர் சொல் சொல்லாகவே சொல்வார். சொற்றொடராகக் கூட அல்ல. ஆகவே சொற்றொடரின் ஒழுக்கு அவரில் இருக்காது. ஆகவே எழுதியபின் சத்தமாக வாசித்து திருத்தங்கள் போட ஆரம்பிப்பார். அது எழுதும் முறையே அல்ல. எழுத்து அப்படி பிரக்ஞைபூர்வமாகச் செய்வது அல்ல.


சொல்லப்போனால் அவர் கடைசிக்காலத்தில் பேசிப் பதிவுசெய்து பிரசுரித்த நினைவோடை நூல்கள் சரளமானவையாக, நுட்பமானவையாக இருப்பதைக் காணலாம். குறிப்பாக பி.ஆர்.மகாதேவன் எழுதியவை. அப்போது நிறையவும் எழுதினார். அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், எழுதும்போது எழுதுவதாக உணர்ந்தால் அது எழுத்தே அல்ல.


அத்துடன் அவர் வணிகத்தில் தீவிரமாக‌ இருந்தார். அதற்கான பயணங்களில் இருந்தார். ஆகவேதான் குறைவாக எழுதினார். அன்றைய சிற்றிதழ்சூழலில் அவ்வளவு எழுதினாலே போதும்.


சமீபத்தில் விஷ்ணுபுரம் விழாவில் ஓர் இளம் நண்பர் கேட்டார். சார் கசடதபற என்கிறீர்களே அது எத்தனை பக்கம்? அந்தக்கேள்வி துணுக்குறச் செய்தது. மொத்த கசடதபற இதழ்களையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட ஒருமாதம் www.jeyamohan.in தளத்தைவிட சின்னதாகவே இருக்கும். சொல்புதிதின் ஓர் இதழ் அளவுக்குச் சற்று மேலே இருக்கும். அதில் பெரும்பகுதி சாதாரணமான குறிப்புகளாகவும் இருக்கும்.


தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் உண்மையான அறிவியக்கம் அல்ல. அது கலைமகள், மணிக் கொடியில் தொடங்கி உடனே முடிந்துவிட்டது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மணிக்கொடி சிற்றிதழ் அல்ல, அக்காலத்திற்கு ஒரு பெரிய இதழ்தான். .நா.சு.வும் செல்லப்பாவும் தொடங்கியதுதான் சிற்றிதழ் மரபு.


சிற்றிதழ் இயக்கம் என்பது நவீன இலக்கிய மரபு அறுபடாமல் பார்த்துக்கொண்ட ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. சுந்தர ராமசாமி அது போதும் என அமைந்துவிட்டவர். ஆகவேதான் குறைவாக எழுதுவது, அபூர்வமாக எழுதுவது, எழுதாமலேயே இருப்பது எல்லாம் உயர்வான இலக்கியச்செயல்பாடுகள் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார். அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.


உலகமெங்கும் முக்கியமான படைப்பாளிகளில் கணிசமானவர்கள் எழுதிக்கொண்டே இருந்தவர்கள்தான். என் ஆதர்சம் டால்ஸ்டாய் போன்றவர்கள். கலைக்களஞ்சியங்களையே உருவாக்கிய சிவராம காரந்த் போன்றவர்கள். பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் எழுதிய கால அளவை வைத்துப்பார்த்தால் எழுதிக்குவித்தவர்கள் அவர்கள்.


ஏற்கனவே சொன்னதுபோல அச்சு ஊடகத்தைக் கடந்துவிட்டோம். ஓலையில் இருந்து அச்சு வந்தபோது எழுத்து பெருகியது போல அச்சிலிருந்து மின்னணு ஊடகம் வந்தபோதும் எழுத்து மேலும் பெருகுகிறது. அச்சு ஊடகத்தைப் பார்த்து ஓலையில் எழுதிய கவிராயர்கள் திகைத்திருப்பார்கள். அதைப்போல இன்று காகித எழுத்தாளர்கள் திகைக்கிறார்கள்.


இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். கடந்தகாலத்தில் மேலைநாட்டு எழுத்தாளர்களே நிறைய எழுதினார்கள். அவர்களுக்கு அதற்கான வாழ்க்கைவாய்ப்புகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்கள் வறுமையில் அடிபட்டு, வேலைசெய்து களைத்து எஞ்சிய நேரத்தில் எழுதியவர்கள். இப்போது இங்கும் அவ்வாய்ப்பு வந்துள்ளது.


37. சமூக வலைதளங்களின் வழி இன்று நிறையப்பேர் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். 12ம் வகுப்புக்குப் பின் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே மாறிப்போய் விடும் சூழலில் ஓர் எல்லை வரை இது முக்கியமான மாற்றமே. ஆனால் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்புச் சூழலில் இது ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதா? குறிப்பாய் உங்கள் வாசகப் பரப்பில் எண்ணிக்கையிலும் தரத்திலும் இதனால் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?


முந்தைய வினாக்களில் இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு முன்னகர்வும் ஒரு பின்னடைவும் இன்று உள்ளது. மின்னணு ஊடகமும் இணையமும் இணைந்து எழுத்து-வாசிப்பை பலமடங்கு பெருக்கிவிட்டன. விளைவாகவே நூல்களும் அதிகளவில் விற்கப்படுகின்றன.


ஆனால் பள்ளிகளில் தமிழ்க்கல்வி இல்லாமலாகி வருவதனால் தமிழ் வாசிப்பு பின்னடைவு கொள்கிறது. புதியதலைமுறையில் தேர்ந்த மாணவர்கள் தமிழில் வாசிக்கும் வழக்கமோ பயிற்சியோ அற்றவர்களாக உள்ளனர். ஆகவே ஒட்டுமொத்தமாக தற்காலிகமான ஒரு வளர்ச்சி உள்ளது. இன்று எனக்குள்ள வாசகர்கள் தமிழில் எந்தத் தீவிரமான எழுத்தாளருக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இந்த வாசகர் வட்டம் அடுத்த தலைமுறையில் நீடிக்குமா, தமிழ் வாசிப்பு இருக்குமா என்பதெல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. இப்படியே போனால் நீடிக்காது. தமிழ் வெறும் பேச்சுமொழியாகச் சுருங்கிவிடும். வெறுமே தமிழ்வாழ்க என்று கூச்சலிட்டுப் பயனும் இல்லை. ஆனால் வேறேதும் ஓர் அலை கிளம்பும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.


38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடக்கும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை).


இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம் தேவை என்று க.நா.சு கருதினார். ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என்ற அவரது நூல் புகழ்பெற்றது. [சாகித்ய அக்காதமி விருது அதற்குத்தான் கிடைத்தது] சிறிய அளவிலேனும் வெவ்வேறு இலக்கிய இயக்கங்கள் ஆரம்பிக்கபப்டவேண்டும் என்றார் அவர். அதற்கு பல தளங்களில் ஏராளமாக எழுதப்படவேண்டும் என வாதிட்டார். அவரே துப்பறியும் நாவல் வகையில் கூட எழுதிப்பார்த்தார்.


[அவர் இலக்கியத்தை இயக்கமாக ஆக்கக்கூடாது, தனிமனிதர்களே செயல்பட வேண்டும், கொஞ்சமாக எழுதவேண்டும் என்றெல்லாம் சொன்னவர் என்று சிலர் இன்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.]


இலக்கிய இயக்கங்கள் தமிழில் எப்போதுமே இருந்துள்ளன. தீவிரமான படைப்பாளிகள் அதை நடத்தினார்கள் டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி திரிலோக சீதாராம் நடத்திய அமரர் மன்றம் போன்றவை தமிழியக்கத்துக்கான இலக்கிய இயக்கங்கள் நா.வானமாமாலையின் ஆராய்ச்சி போன்றவை நாட்டுபுறவியல், தமிழாய்வு ஆகியவற்றுக்கான அமைப்புகள்.


.நா.சு., சி சு செல்லப்பா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்கள் அவரவர் அளவில் இலக்கிய இயக்கங்களை நிகழ்த்தியவர்கள். அவர்கள் பல ஆண்டுகாலம் தொடர்ந்து சந்திப்புகளை ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நண்பர் குழுக்களை வழிநட‌த்தி இதைச்செய்தனர். .நா.சு.வின் இலக்கியவட்டம், எம்வி.வெங்கட்ராம் காவேரிக்கரையில் நடத்திய தேனீக்கள், சுந்தர ராமசாமியின் காகங்கள், தஞ்சை பிரகாஷ் நடத்திய கதைசொல்லிகள் போன்றவை உதாரணம்.


இன்று இணையமும் பிற ஊடகங்களும் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னும் விரிவான அளவில் இலக்கிய இயக்கங்களை முன்னெடுக்கிறோம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அப்படிப்பட்ட ஓர் அமைப்பு. சமானமான எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு இது. இன்று குழுமங்களில் உரையாட முடிகிறது. அதை அவ்வப்போது தனிப்பட்ட சந்திப்புகளாக ஆக்கிக்கொள்கிறோம்.


இது ஒரு குறிப்பிட்ட கொள்கை, அழகியல் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது அல்ல. எதையாவது செய்யலாமே என்று தோன்றுபவர்களின் கூட்டம் என்று சொல்லலாம். தனியாக எதையும் செய்யமுடியாது. சமமான மனநிலை கொண்டவர்களுடன் இணைந்தே செய்யமுடியும். அதற்கு நட்புதான் அடிப்படையாக இருக்கமுடியும். ஆகவே இவ்வமைப்பு.


இது இலக்கியச்சந்திப்புகளை நடத்துகிறது. கூட்டங்களை நடத்துகிறது. மற்றபடி கருத்தியல்செயல்பாடு என ஏதும் இல்லை. நாங்கள் உத்தேசித்ததும் இதுவே. ஆரம்பத்தில் உத்தேசித்தது சுந்தர ராமசாமியின் காகங்கள் போல ஒரு சின்ன சந்திப்பு முயற்சி. இத்தனை பெரிதாகும், இவ்வளவு தீவிரமாக ஆகும் என நினைக்கவில்லை. இதற்கான ஒரு தேவை இருந்திருக்கிறது.


நேற்றும் இதைப்போன்ற சிறிய அளவிலான பல இயக்கங்கள்தான் இலக்கியத்தை முன்னெடுத்துவந்தன. இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி போன்ற பல அமைப்புகள் இருந்தன. இன்றும் கோவையில் களம் போன்ற அமைப்புகள உள்ளன.


ஆனால் க.நா.சு. கனவு கண்டது இன்னும் பெரிய ஓர் எழுச்சி. கிட்டத்தட்ட ஊருக்கு ஓர் இயக்கம். அவறை இணைக்கும் ஓர் ஒட்டுமொத்த இயக்கம். இதைப்போல பலவகையான இயக்கங்கள் பல தளங்களில் நடந்து மேலும் மேலும் அதிகமான வாசகர்கள் உள்ளே வரவேண்டும். இது மண்ணில் நீரூற்றிக்கோண்டே இருப்பதுதான். விதைகள் இருந்தால் முளைத்துவரும்.


கலாச்சாரச்செயல்பாடுகளின் விளைவுகள் மெல்லமெல்லத்தான் தெரியவரும். ஆகவே எதிர்பார்க்கலாம்.


39. உங்கள் சினிமா பங்களிப்பு திருப்திகரமாக இருக்கிறதா? இடைநிலைப் படங்கள் மட்டும் எனக் குறுக்கிக் கொள்ளக் காரணம் என்ன? திரைக்கதையிலும் உங்கள் பணி உள்ளதா? ஆலோசகராகவும் இருக்கிறீர்களா? (உதா: காவியத் தலைவன் போன்ற சரித்திரப் படங்களில் பயன்பட்டிருக்கக்கூடும்). தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா?


சினிமாவில் மதிப்பு மரியாதை பணம் எதுவும் குறைவில்லை. சொல்லப்போனால் நான் பெருமதிப்புடன் இருப்பதே சினிமாவுக்குள்தான். [அவமதிப்புகளை உணர்வது கல்லூரிகளில்]. சினிமாக்காரர்களுக்கு இலக்கியவாதிகள் மேல், அதிலும் தீவிரமாகச் செயல்படும் இலக்கியவாதிகள்மேல் பெரும் மதிப்பும் ஈடுபாடும் உள்ளது. அதை நீங்களே பார்க்கலாம். நான் நிகழ்த்தும் விழாக்களில் சினிமா நட்சத்திரங்கள் இலவசமாக வந்து பங்கெடுக்கிறார்கள். இந்த இயக்கம் முக்கியமானது, நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அது என் மேல் உள்ள மதிப்பினால்தான்.


ஆனால் இன்னமும்கூட சினிமாவில் எழுத்தாளனின் இடமென்ன என்பது வகுக்கப்படவில்லை. ஆகவே எழுத்தாளனை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று தெளிவாக இல்லை. எழுத்தாளன் என்பவன் இன்றும் ஓர் ஆலோசகனாக, விவாதித்து முடிவெடுக்கப்பட்ட விஷயத்தை மொழிவடிவில் எழுதி அளிப்பவனாக மட்டுமே இங்கே இருக்கிறான். அவ்வெழுத்துவடிவில் இருந்து வெகுவாக விலகியே சினிமா உருவாகி வருகிறது.


இது எவருடைய பிழையும் அல்ல. வணிக சினிமா என்பது பல்வேறு எதிர்வினைகள் மூலம் திரண்டுவரும் ஒரு கலை. அப்படித்தான் அது உருவாகி வந்திருக்கிறது. அதை மாற்றுவது எளிய விஷயமும் அல்ல. சினிமாவுக்குள் எழுத்தாளன் மற்றும் இயக்குநர் என ஒரு பெரிய நட்புக்கூட்டு ஒன்று நிகழ்ந்து அது வெற்றிகரமாக ஆனால்தான் ஏதாவது நிகழும். எம்டிவாசுதேவன் நாயர் + ஹரிஹரன் போல. லோகிததாஸ் + சிபி மலையில் போல. அது ஒரு தற்செயல்தான்.


40. சினிமா வசனங்களில் சுஜாதா அளவு வெற்றிகரமாய் நீங்களோ எஸ்ராவோ இல்லை என்பதே பரவலான கருத்து. ஓரளவு அது உண்மையும் கூட. சுஜாதா வெகுஜன எழுத்தாளராய் இருந்தது அவர் சினிமாவிலும் அதே பாணியில் கைதட்டல் வசனங்களை எழுத சுலபமாக இருந்தது எனலாமா?


சினிமா கதை வசனங்களில் மிக வெற்றிகரமானவர் ஆரூர்தாஸ் மட்டுமே. அக்காலத்தில் அவரைப்போல பலர் அடுத்தடுத்த படிகளில் இருந்தனர். பாலமுருகன், வியட்நாம்வீடு சுந்தரம்,


சுஜாதாவின் ஆரம்பகால திரை எழுத்துக்கள் எல்லாமே மிகப்பெரிய தோல்விகள். குமுதம் ‘சுஜாதாவை விட்டுவிடுங்கள்’ என்று ஒரு பெரிய கட்டுரையையே எண்பதுகளில் வெளியிட்டு தொடர் விவாதம் நடந்திருக்கிறது.


சுஜாதா முழுமையாகக் கதை - திரைக்கதை எழுதி வென்ற ஒரு படம் பெயர் சொல்லுங்கள். சரி, அவர் எழுதி ஓர் அறிமுக இயக்குநர் அல்லது இளம் இயக்குநர் எடுத்த வெற்றிகரமான படத்தின் பெயரைச் சொல்லுங்கள். சரி, அவர் எழுதிய ஒரு நடுவாந்தரப் படத்தை குறிப்பிடுங்கள். இன்றும் சொல்லும்படி இருக்கும் ஒரு திரைக்கதையைக் குறிப்பிடுங்கள். சுஜாதாவின் சினிமா என தமிழில் ஏதேனும் உண்டா, சொல்லுங்கள்.


சுஜாதாவின் வெற்றிகள் எல்லாமே ஷ‌ங்கர், மணிரத்னம் ஆகியோருடன் அவர்களின் வெற்றிப்படங்களில் அவர் இணைந்து இருந்ததனால் வந்தவை. அவர்களின் படங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை அவர்களின் படங்கள் மட்டுமே. அவற்றுக்கு ஓர் ஆலோசகராக, எழுதித்தருபவராக மட்டுமே அவரது பங்களிப்பு இருந்தது. மணிரத்னத்தின் ஆரம்பகாலப் படங்களின் வெற்றியிலும் பிற்காலப்படங்களின் தோல்வியிலும் சுஜாதா இருந்தார். அவை மணிரத்னத்தின் வெற்றி தோல்விகளே. மணி ரத்னம் சினிமாவின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாகவே கட்டுப்பாடுள்ள இயக்குநர்.


சுஜாதாவின் வெகுஜன எழுத்தில் இருந்த வெற்றிக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. அவர் எழுதியபடங்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தாலே தெரியும். எனக்காவது நான்கடவுள், அங்காடித்தெரு என சில படங்கள் இருக்கின்றன. காலம் கடந்தபின்னரும் அவை பேசப்படுகின்றன. விருதுகள் பெற்றிருக்கின்றன. நான் கடவுள் ஓரளவு என் படம் எனச் சொல்ல முடியும். நான் ஒரு நவீனத் திரைக்கதையை அனைத்து நுட்பங்களுடனும் முழுமையாகவே எழுத முடியும் என்று காட்ட ஒழிமுறி போன்ற ஒரு படமாவது உள்ளது. சுஜாதாவிற்கு அதுவும் எஞ்சவில்லை. என்னிடம் அவரே ‘என்னோடது ஸ்க்ரீன்பிளே இல்ல, ஃபோர்பிளே’ என்று சொல்லியிருக்கிறார்.


41. இலக்கியத்தில் தீவிரமாய் விமர்சனம் செய்யுமளவு நீங்கள் சினிமா, இசை இரண்டையும் தொடுவதில்லையே. அப்படியே சொல்லும் ஓரிரு விமர்சனங்களும் மிக மேலோட்டமானவையாகவே இருக்கின்றன, அவையும் எதிர்மறையாய் இருப்பதில்லை. அந்தத் துறையில் பங்களிப்பதால் சங்கடம் கூடாது என்பதாலா? அல்லது அதற்கான அவசியமோ பயிற்சியோ இல்லை எனக் கருதுகிறீர்களா?


சினிமா, இசை என இரண்டையும் நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. சினிமாவில் என் மகனும் மகளும் பார்த்திருக்கும் மாஸ்டர்பீஸ்களை நான் பார்த்ததில்லை. இசையில் என் நண்பர் சுகாவோ ஷாஜியோ அறிந்த எதுவும் எனக்குத்தெரியாது. என் எல்லைகளைச் சொல்லிவிட்டு சில கருத்துக்களைச் சொல்வேன். இசை அல்லது சினிமாவை நான் மதிப்பிடுவதில்லை. அவற்றின் பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலம் பற்றி மட்டுமே சொல்வேன். என் ‘ஏரியாவை’ விட்டு வெளியே போய் சொல்லி விடக்கூடாது என்ற கவனம்தான்.


என் எல்லைக்கு வெளியே செல்கிறேனோ என்று தோன்றும் எந்தக் கட்டுரையையும் சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர் ஒருவருக்கு அனுப்பி வாசிக்கவைத்து அதன்பின்னரே பிரசுரிக்கிறேன்.

42. எழுத்தின் பாணி மற்றும் உள்ளடக்கத்தில் நீங்கள் தமிழில் யாருடைய நீட்சி எனக் கருதுகிறீர்கள்? போலவே இப்போது உங்கள் வாரிசு என யாரைச் சொல்லலாம்?


நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் பாதிப்புடன் எழுதவந்தவன். அழகியல் கோட்பாட்டுத் தளத்தில் என் முன்னோடி என்றால் மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன். அரசியலில் எம்.கோவிந்தன்.


ஆனால் விரைவிலேயே அவர்களில் இருந்து வெளியே சென்றேன். அது என் நடையை உருவாக்கியது. இன்றைய என் எழுத்து எவருடைய நீட்சியுமல்ல. அது தனித்த ஒரு புனைவுலகம்.


இப்போது எழுதுபவர்களில் எவரிடம் என் பாதிப்பு உள்ளது என அவர்கள்தான் சொல்லவேண்டும். நான் சொல்வது முறையல்ல.


43. சமகாலத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? இந்திய அளவில் அதன் இடம் என்ன? தமிழ் எழுத்தாளர் எவரேனும் நொபேல் பரிசு தகுதி கொண்டிருக்கிறார்களா?


தமிழ் நவீன இலக்கியம் குறைவாக எழுதப்பட்டு அதைவிடக் குறைவாகவே வாசிக்கப்படுவது. ஆனால் எப்போதுமே அது உலக அளவில் எழுதப்பட்டுவந்த நவீன இலக்கியத்திற்கு நிகரானதாகவே இருந்து வந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர் காலத்தில் உலக அளவில் எந்த மொழியில் எழுதிய பெரும் படைப்பாளிகளுக்கும் நிகரானவர். இன்று எழுதுபவர்களில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள்தான்.


சமகாலத்தில் நோபல் பரிசுபெற்றுவரும், பரிந்துரைக்கப்படும் எந்தப்படைப்பாளியின் படைப்புலகுக்கும் நிகரானது என் படைப்புலகம். நோபல் பரிசு பெற்ற பலரை விடவும் தீவிரமானது விரிவானது. உதாரணமாக, 1997ல் என் பெயர் சிவப்பு நாவலும் விஷ்ணுபுரம் நாவலும் ஒரே சமயம் வெளிவந்தன. இரண்டுமே தமிழில் உள்ளன. ஒப்பிட்டுப்பாருங்கள். ஓரான்பாமுக் அவரது நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார்.


எந்த ஒரு முதன்மையான புனைவெழுத்தாளனையும்போல என் புனைவுலகும் தனித்தன்மை கொண்டது. ஆகவே என் ஆக்கங்களில் ஒன்றை உதிரியாக மொழியாக்கம் செய்தாலும் அதனால் பயனிருக்காது. ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஏற்கனவே வாசிக்கும் படைப்புகளில் ஒன்று அல்ல அது. இந்தப் புனைவுலகை இதன் நுட்பங்களுடன் மொழியாக்கம் செய்து தொடர்ந்து அறிமுகம் செய்து விவாதித்து, கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வகை கவனிப்புகள் இந்திய எழுத்தாளர் எவருக்கும் கிடைப்பதில்லை. தமிழில் சாத்தியமே இல்லை.


இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி தமிழிலக்கியத்திற்கு பெரிய மதிப்பு ஏதும் இன்று இல்லை. முதல் காரணம் மொழியாக்கங்கள். இங்குள்ள எளிய சமூக ஆவண நாவல்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவற்றை இலக்கிய வாசகர் எவரும் கலைப்பெறுமதி உள்ளவை என நினைக்க முடியாது. இங்குள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள், மதமாற்ற அமைப்புகள், நிதியளிக்கும் அமைப்புகள் இங்குள்ள வாழ்க்கை பற்றி உருவாக்கும் ஓர் எதிர்மறை நோக்கை மேலும் பிரச்சாரம் செய்வதற்கான புனைவுசார்ந்த ஆதாரங்களாகவே அவை மொழியாக்கம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு பெரிய அரசியல் வலை.


அபூர்வமாக நல்ல ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மோசமான மொழியாக்கங்கள். பாடப்புத்தக நடை கொண்டவை. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு சமகால புனைவுமொழியில் நல்ல மொழியாக்கங்கள் வரவேண்டும். அவை நல்ல பதிப்பகங்களால் வெளியிடப்படவும் வேண்டும்.


அத்துடன் பரவலாக அவை சென்றடையவும் வேண்டும். இலக்கியத்தைக் கொண்டுசேர்ப்பதற்கு தேசிய ஊடகங்களிலும் உலக அளவிலான ஊடகங்களிலும் அவற்றைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கும் இலக்கிய ஆர்வலர் [கனாய்ஸியர்கள்] தேவை. அப்படி இங்கே எவரும் இல்லை. கன்னடத்திற்கு ஏ.கே.ராமானுஜம் போல, வங்காளத்திற்கு காயத்ரி ஸ்பிவாக், மீனாட்சி முகர்ஜி போல, மலையாளத்திற்கு சச்சிதானந்தன்போல.


அதாவது நல்ல அறிவுத்திறனும் கலையுணர்வும் மொழிநடையும் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் நல்ல படைப்புகளை முன்னிறுத்தி எழுதவேண்டும். அது இங்கே நிகழ்வதில்லை. இங்கு கொஞ்சம் ஆங்கிலம் எழுதத்தெரிந்தால் அவர் தன்னையே இலக்கியமேதை என நினைத்துக்கொண்டுவிடுகிறார். ஆங்கிலமறிந்த இளைய தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை அறியும் ரசனை இல்லை. அப்படி எழுதப்பட்டிருந்தால் அசோகமித்திரனோ கி.ராஜநாராயணனோ தேசிய அளவில் அறியப்பட்டிருப்பார்கள்.


ஆகவே தமிழுக்கு நோபல் கிடைக்க வாய்ப்பு இந்தத்தலைமுறையில் இல்லை. இந்திய எழுத்தாளர்களுக்கேகூட நோபல் கிடைக்க வாய்ப்பில்லை. இந்திய ஆங்கில எழுத்துக்களையே இங்குள்ள ஆங்கில ஊடகங்கள், பல்கலைகள் முன்வைக்கின்றன. அவற்றைப்பற்றியே எழுதிக்குவிக்கப்படுகிறது. அவர்களில் எவரேனும் நோபல் வெல்லலாம்.


ஆனால் என்ன பிரச்சினை என்றால் அவர்கள் பல்வேறு சக்திகளால் நோபல் வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கே தரமில்லை என்பதனால் நிராகரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சர்வதேசப்புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் எனக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ஆங்கில எழுத்துக்களின் போலித்தனம் பற்றிப் புலம்பி எழுதியிருந்தார். ஆனால் இந்திய எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்தால் அவருக்கு மொழியின் முதிர்ச்சியின்மை காரணமாக வாசிப்பனுபவம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் புரியவும் இல்லை. இதுதான் இன்றுள்ள நிலை.


44. இன்று எழுதும் இளைய எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?


நம்பிக்கையூட்டுபவர்கள், கவனத்திற்குரியவர்கள் என எப்போதும் சில பெயர்களை சொல்வது என் வழக்கம். அது ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவசியம் இது ஒரு பெரிய பத்திரிகை என்றால் சொல்லியிருப்பேன். ஆனால் இங்கே அடுத்த தலைமுறையின் படைப்பாளிகளில் எவர் உண்மையிலேயே முக்கியமானவர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.


கறாராக நீங்கள் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையில் இருந்து அப்படி உத்வேகமூட்டக்கூடிய, புதிய திறப்பாக அமையக்கூடிய ஏதாவது வந்திருக்கிறதா?


இது ஏன் என்று பார்க்கிறேன். எனக்கு பொதுவாகச் சில விஷயங்கள் தோன்றுகின்றன. ஒன்று, புது எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. பலர் புத்தகங்களை ஒற்றைவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார்கள். அந்த புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள் என்ற தடையமே அவர்களின் மொழியிலும் நடையிலும் இல்லை. கடுமையான அரசியல், கோட்பாட்டு நூல்களை குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே பேசப்படுவனவற்றில் ஒரு கருத்து சற்று சிக்கலாக இருந்தால்கூட புரிந்துகொள்வதில்லை. அதன் மிக எளிமையான வடிவத்தையே எடுத்துக்கொண்டு மேலே விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.


அதேபோல சமகால எழுத்து அல்லது முன்னோடிகளின் எழுத்து பற்றி எழுதினால் மிக எளிமையான அரசியல்கருத்துக்களை தோண்டி எடுத்துவைத்துப் பேசுகிறார்களே ஒழிய வாழ்க்கை நுட்பங்கள் சார்ந்தோ கலையமைதி சார்ந்தோ ஒன்றுமே சொல்வதற்கில்லாமல் மொத்தையாக எழுதுகிறார்கள். நிராகரிக்க முனைந்து உட்காரும்போதுகூட மிக எளிய அரசியல்சரிநிலைகளைச் சொல்லித்தான் ஒரு படைப்பை அவர்களால் நிராககரிக்க முடிகிறது. சமீபத்தில் இப்படி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வாசித்தபோது வந்த சலிப்பு கொஞ்சமல்ல.


பலசமயம் இவர்களின் அரசியல், இலக்கியக் கட்டுரைகளை வாசித்தால் பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இனிமேல் ஒரு நூலைப்பற்றிச் சொன்னால் அதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரையை எழுதாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். சமகாலப் புனைவுகளை பற்றி ஆழ்ந்த கட்டுரை ஒன்றை எழுதாதவன் உலக இலக்கியம் அல்லது உலக சினிமா பற்றிச் சொல்வது அவனுடைய சொந்த எழுத்து அல்ல என்றே கொள்ளப்படவேண்டும்.


நல்ல நாவலாசிரியன் நல்ல கட்டுரையாளனாகவே ஆரம்பிக்கிறான் என்று இ.எம்.ஃபாஸ்டர் சொல்கிறார். சிக்கலான, பலமுனைகொண்ட ஒன்றை கட்டுரையாகச் சொல்லமுடியும் என்றால் மட்டுமே நாவலை எழுதமுடியும். நம் அடுத்த தலைமுறையில் அப்படி எழுதப்பட்ட ஒரே ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டுங்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதினால் அதில் சில ஒற்றைவரிகளை பிடுங்கி அதை திரித்து வம்புக்கட்டுரைதான் எழுதமுடிகிறது இவர்களால். இதுதான் கனமான புனைவை உருவாக்க முடியாத குறுகலை உருவாக்குகிறது. இது நிராகரிப்பு அல்ல, விமர்சனம். ஒருவகையில் எதிர்பார்ப்பும்கூட


இன்று வரும் நாவல்களை வாசித்ததுமே தூக்கிப்போடுகிறேன். ஆங்காங்கே சில விஷயங்கள் நன்றாக இருப்பதாகத் தோன்றும், அவ்வளவுதான். இப்போது எழுதுபவர்களில் கணிசமானவர்களுக்கு இங்கோ உலகமொழிகளிலோ எழுதப்பட்ட தீவிரமான இலக்கியம் பற்றிய வாசிப்போ அக்கறையோ இல்லை என்று தோன்றுகிறது. அவ்விலக்கிய மரபின் நீட்சியாக அவர்கள் தங்களை உருவகித்துக்கொள்வதில்லை. பரவலாக வாசிக்கப்படும் பல்ப் ஃபிக்ஷனின் நீட்சியாகத் தம்மை உருவகித்துக்கொண்டு எழுதுகிறார்கள்.


ஆகவே எந்த ஆழ்ந்த அவதானிப்பும் இல்லாத மேலோட்டமான பாலுணர்வு எழுத்துத்தன்மையே அதிகமாக காணக்கிடைக்கிறது. அது பரவலாகக்கொண்டு சேர்த்துவிடும்என நினைக்கிறார்கள். அவைகூட அனுபவமோ அவதானிப்போ அல்ல. வெறும் பகற்கனவுகள். என்னைப்போல ஐம்பதைக் கடந்த ஒருவனால் அந்தப் பகற்கனவுலகை ஒரு சிரிப்புடன் மட்டுமே பார்க்கமுடிகிறது. இந்த வகை எழுத்துக்களை பார்க்கையில் சின்னப்பையன்கள் ரகசியமாக அமர்ந்து தன்புணர்ச்சி செய்வதைப் பார்ப்பது போல உணர்கிறேன். சரிதான் சின்னப்பையன்கள், செய்துவிட்டுபோகட்டும் என்று சிரிப்புடன் கடந்து செல்லத்தான் தோன்றுகிறது


நான் ஒருவரை மனம் கவர்ந்தவர் என்று சொல்லவேண்டுமென்றால் அவர் நான் எழுதாத எழுதமுடியாது என எண்ணக்கூடிய ஓர் இடத்தை அடைந்தவராக இருக்கவேண்டும் இல்லையா? அப்படி அரிதாகவே காண்கிறேன். விதிவிலக்கு சமகாலக் கவிஞர்களில் சிலர். இசை முக்கியமானவர். அவர் எழுதும் எல்லாமே அவருடைய தனித்தன்மையுடன் ஆழத்துடன் இருக்கின்றன.


45. சாகித்ய அகாதமி போன்ற விருதுகளில் தொடர்ந்து நீங்கள் ஒதுக்கப்படுவதாகத் தெரிகிறது. சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கே கிடைக்காத விருது தான் எனினும் சமீப ஆண்டுகளாகத் தகுதி கொண்டவர்கள் (நாஞ்சில் நாடன், சு.வெங்கடேசன், ஜோ டி குரூஸ், பூமணி) பெறுவதும் நிகழ்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? வெள்ளை யானை கூட முக்கியமான ஒரு வரலாற்று நாவல் தான். சாகித்ய அகாதமி விருது வாங்கும் நிலையை எல்லாம் தாண்டி விட்டதாக என நினைக்கிறீர்களா?


சாகித்ய அக்காதமியை ஆரம்பம் முதல் விமர்சித்து வருபவன் நான். 1992ல் சாகித்ய அக்காதமியின் டெல்லி மேடை ஒன்றில் இந்தி திணிக்கப்பட்டதற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினென். பின்னர் கோவி மணிசேகரனுக்கு விருதளிக்கப்பட்டதற்கு எதிராக எதிர்வினை ஆற்றினேன். அதன்பின் அதன் எந்தப்பட்டியலிலும் நான் இல்லை. அதன் நிதிக்கொடைகளை நான் பெற்றுக்கொண்டதில்லை. அதன் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டதில்லை. அதன் பரிசுப்பரிந்துரைகளில் முதல் பட்டியலிலேயே நான் இருப்பதில்லை. அதை அறிந்துதான் நான் விமர்சித்தேன். விமர்சிக்கிறேன்


ஆம், இன்றைய நிலையில் சாகித்ய அக்காதமி எனக்கு மிகச்சிறிய விருதுதான். அதை என் வாசகர்கள் எவரும் அறிவார்கள். ‘உங்களுக்கு சாகித்ய அக்காதமி கிடைக்கணும் சார்’ என ஒருவர் என்னை வாழ்த்தினால் அவர் என் எழுத்துக்களின் வாசகர் அல்ல, என் எழுத்துக்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றே புரிந்துகொள்வேன். அவர் ஏற்கனவே வாசித்து ஒன்றும் பிடிகிடைக்காதவர் என்றால் அவரை முழுமையாக ஒதுக்கிவிடுவேன். அது என்னை அவமதிப்பதுதான்.


46. ஒரு படைப்பாளி தனக்குப் பிடித்த வேற்று மொழிப் படைப்பிற்குத் தரும் ஆகச் சிறந்த மரியாதை அதைத் தன் மொழியில் மொழிபெயர்த்தல். சுந்தர ராமசாமியின் படைப்புகளின் ஒன்றாகவே அவர் மொழி பெயர்த்த தகழியின் நாவல்களைப் பார்க்கிறேன். நீங்களும் ஒருகாலத்தில் தொடர்ச்சியாய் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டீர்கள். இப்போது மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லையா? அல்லது அவ்வளவாய் வேற்று மொழிப் படைப்புகளை வாசிப்பதில்லையா?


முக்கியமான விஷயம் நான் புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. ஒருநாளில் ஐந்துமணி நேரம் வாசிக்கிறேன். ஆனால் பெரும்பாலும் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, தொன்மங்கள் போன்றவை பற்றி. புனைவுகள் என்றால் என்னை உடைத்து ஆட்கொள்ளும் படைப்புகளாக இருக்கவேண்டும்.


ஆகவே மொழியாக்கம் செய்ய நேரமில்லை .ஆனால் மொழியாக்கம் செய்யவைப்பதுண்டு. தமிழில் பல நூல்கள் நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்து செம்மை செய்து வெளியானவை. கடைசியாக கல்பற்றா நாராயணனின் சுமித்ரா.


47. சில பெண் படைப்பாளிகள் தகுதி மீறி அங்கீகாரம் பெறுகிறார்கள் என்ற உங்கள் கருத்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாயிற்று. அம்பை உட்பட ஒரு பெண் படைப்பாளி கூட உங்கள் கருத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்து ஆதரித்ததாய்த் தெரியவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? நேர்மையான சுயபரிசீலனை என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டதா? அல்லது தோற்கக்கூடாது என்ற வீம்பா?


அதில் கோபம் கொள்ள ஏதுமில்லை. இயல்பான எதிர்வினைதான் அது. எதிர் விமர்சனம் கோபத்தையே முதலில் கொண்டுவரும். குழுவாகச் சேர்ந்து கொள்வதும் கன்னாபின்னாவென்று எதிர்த்தாக்குதல் செய்வதும் எல்லாம் அந்த கோபத்தின் விளைவு. ஆனால் கோபம் தணிந்ததும் சிலராவது எண்ணிப் பார்ப்பார்கள். அத்துடன் அத்தகைய கடும் விமர்சனம் வாச்கர்களை சிந்திக்க வைக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புகளைக் கூட்டுகிறது. அது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். உண்மையான விமர்சனங்கள் வீணாவதில்லை.


1990ல் தமிழ் நாவல்களைப்பற்றி நான் ஒரு கடும் விமர்சனத்தை முன்வைத்தேன். அவை நாவல்களாக இல்லை, தொடர்கதைகளோ குறுநாவல்களோதான் என. நாவலுக்கு ஒரு தரிசனம் அல்லது எதிர் தரிசனமும் அதனடிப்படையிலான ஒட்டுமொத்த வடிவமும் தேவை என. எதிர்விமர்சனங்களாக வந்தவை கசப்புகள் மட்டுமே. ஆனால் அதன்பின்னரே தமிழில் நாவலின் முழுமையை நோக்கிய முயற்சிகள் தொடங்கின. ஆழிசூழ் உலகோ, காவல்கோட்டமோ, மணல்கடிகையோ அந்த விவாதம் இல்லாவிட்டால் வந்திருக்காது.


தன்னம்பிக்கை இல்லாத படைப்பாளி விமர்சனத்தால் புண்படுகிறார். தன்னம்பிக்கை உள்ளவர் சீண்டப்படுகிறார். அப்படி எவரேனும் எழுந்து வருவார்கள்.


48. சுந்தர ராமசாமி போல் இறுதி வரை எழுத வேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது ஜெயகாந்தன் போல் ரிட்டயர்ட் ஆவீர்களா? இரண்டில் எந்த பதில் என்றாலும் ஏன்? பெரிய அளவிலான எதிர்கால எழுத்துத் திட்டங்கள் என்ன?


எழுதி எழுதி ‘தீர்ந்துவிடவேண்டும்’ என நினைக்கிறேன். தீர்ந்துவிட்டால் எழுதமாட்டேன். பயணம் செய்வேன். அப்படி நிகழ்ந்தால் இங்கிருந்து சென்று முற்றிலும் புதிய ஒரு நிலத்தில் முற்றிலும் புதிய ஒரு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என நினைக்கிறேன் இந்த மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலில் இருந்து முழுமையாகவே வெளியே சென்றுவிடவேண்டும்.


49. A private life question. அருண்மொழி நங்கை அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்த கதையைச் சொல்லுங்கள். உங்கள் பிம்பம் அறிவார்ந்த, கறாரான ஆளுமை என்பது தான். இப்படிப்பட்டவர் காதல் முகத்தை அறியும் முகமாகவே இக்கேள்வி.


என் நண்பர்களுக்குத் தெரியும், அறிவார்ந்த கறாரான ஆளுமை அல்ல நான் என. அது என் எதிர்வினைகள் வழியாக உருவானது. அதாவது அது சூழலின் விளைவு. நான் எப்போதுமே மிகமிக விளையாட்டான, கொஞ்சம் அசட்டுத்தனமான ஆள். சிரிக்காத எந்த நட்பு உரையாடலையும் விரும்பாதவன். தொழிற்சங்க அரசியலில் ‘கொஞ்சமாச்சும் சீரியஸா இருங்க தோழர்’ என்ற கெஞ்சலைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அருண்மொழி மட்டும் அல்ல அஜிதனும் சைதன்யாவும் கூட ‘ஒரு ரைட்டரா லட்சணமா இருந்தா என்ன?’ என்று கண்டிக்கும் இடத்தில்தான் இருக்கிறேன்.


அருண்மொழி என் வாசகியாக அறிமுகமானாள். 1990ல் ரப்பர் வெளிவந்தபோது. அவளை மதுரை வேளாண் கல்லூரியில் சந்தித்தேன். துடிப்பான இலக்கிய வாசகி. பெரிய கண்கள். ஜானகிராமனின் ஒரு கதாநாயகியைத்தான் மணம் செய்துகொள்ளவேண்டும் என நினைத்திருந்த நாட்கள் அவை. அவள் பேசிக்கொண்டே நடந்தபோது சட்டென்று இயல்பாகத் துள்ளி தன் கையில் இருந்த புத்தகத்தால் தாழ்வாக நின்ற கொன்றைப்பூமரக் கிளை ஒன்றை தட்டினாள் பொன்னிறப்பூக்கள் உதிர்ந்து அவள் தலையில் விழுந்தன. அந்தக்கணம் அவள்மேல் காதல் கொண்டேன்.


இப்போது கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. அந்தக்காதல் அதே வேகத்துடன் இன்றும் நீடிக்கிறது. என் வாழ்க்கையில் ஒரே பெண் தான். ஒரே காதல்தான். என்னால் எப்போதுமே பெண்களை விரும்பி நெருங்க முடிந்ததில்லை. பெண்களை தவிர்த்தேன். என் அறிவார்ந்த ஆணவம்தான் காரணம். பெண்கள் எனக்கு சலிப்பூட்டினார்கள். அழகிய பெண்கள் சூழ்ந்த கேரள அலுவலகத்தில் அவர்களை புறக்கணித்தே செயல்பட்டேன். எந்தப்பெண்ணிடம் பேசினாலும் மூன்றே நிமிடத்தில் சலிப்பு. இன்று என் மகனும் அதைத்தான் சொல்கிறான். நான் சலிப்படையாத பெண், ரசனையும் அறிவார்ந்த கூர்மையும் கொண்ட பெண் அருண்மொழி. அவளை காதலித்து மணம் செய்துகொண்டது ஒரு நல்லூழ்தான்.


பெண்களை வெறும் உடலாக மட்டுமே எண்ணி ஆர்வம் கொள்ளும் சிலர் அன்றி பிற அறிவார்ந்த ஆண்களுக்கு நம் பெண்கள் மிகமிக சலிப்பூட்டுபவர்கள் என்பதே என் எண்ணம். நீங்கள் இலக்கியவாசகர் என்றால், யோசிப்பவர் என்றால், மொத்த வாழ்நாளிலும் சுவாரசியமான நாலைந்து இந்தியப் பெண்களைக்கூட சந்திக்கப்போவதில்லை.


ஒருபக்கம் மழலையும் பேதமையுமாக தங்களை ஆக்கிக் கொள்ளூம் பெண்கள். இதை ஆண்கள் விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம் அறிவுத்திறனோ நுண்ணுணர்வோ இல்லாமல் வெறுமே ஒருவகை பாவனையையும் தோரணையையும் மட்டும் கொண்ட பெண்ணியப் பெண்கள். பொய்யான மிடுக்குகள். மிகையான வேகங்கள். எரிந்து கொண்டே இருப்பதுபோன்ற நடிப்புகள். Repulsing என்றுதான் சொல்லவேண்டும்.


தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் பலரை நேரில் தெரியும். சுத்தமாக நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள். சிரிக்காத ஒரு தமிழ் எழுத்தாளர் என்றால் எனக்குத்தெரிந்து சிலர் மட்டும்தான். சிரிக்காத ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு பெரிய வதை. பெண்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். விதிவிலக்கு சிலரே. முக்கியமாக லீனா மணிமேகலை. அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் எனக்குப்பிடித்த பெண்கவிஞர்.


இதைச் சொன்னால் என்னை மேல்ஷாவனிஸ்ட் பிக் என்றால் சரிதான். [சைதன்யாவிடம் ஒரு பேராசிரியர் சமீபத்திய பெண் எழுத்து பற்றிய விவாதம் பற்றி கேட்டாராம். அவள் Yes Madame, he is a male chauvinist pig, but unfortunately we intelligent women love these male chauvinist pigs only என்று சொன்னதாகச் சொன்னாள். கேட்க ஜாலியாக இருந்தது.]


எனக்கு அருண்மொழி மேல் காதல் ஏன் என்றால் அவள் எனக்கான அறிவுத்தோழியாக இருப்பதனால்தான். அவளுடன் சேர்ந்து சிரிக்க முடியும் என்பதனால்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் ஒருமுறை என் நண்பரான ஓர் ஓவியர் காதலியுடன் வீட்டுக்கு வந்தார். ‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே செவிகொடு ஸ்நேகிதனே’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.


அருண்மொழி அவர் காதலியிடம் சொன்னாள். ‘இந்தமாதிரி பாட்டெல்லாம் அவர் கேக்கக்கூடாது செவிய அறுத்து குடுத்திடுவார்”. அவர் இம்பிரஷனிஸ்ட் ஓவியர். வான்காவை கேள்விப்பட்டிராத அந்தப்பெண் விழித்துக்கோண்டிருந்தாள். நானும் அவரும் சிரித்தோம்.


நான் பெண்களில் இருந்து அருண்மொழியை வேறுபடுத்தி அறிவது இந்த அம்சத்தால்தான். இந்த அறிவார்ந்த தோழமைதான் காதலுக்கே அடித்தளமாக இருக்கிறது.


திருமணமாகி இத்தனை வருடங்களில் ஒருவகையான மேலாதிக்கம் அவளுக்கு என் மேல் வந்தது. மனைவி தாயாக ஆகும் இடம் என்று அதைச் சொல்லலாம். அதுவும் காதல்தான்.


50. அருண்மொழி நங்கை உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுணையாய் இருக்கிறார்? இன்னமும் உங்கள் எழுத்துக்களின் முதல் வாசகியாக நீடிக்கிறாரா? உங்கள் பிரபல்யம் மற்றும் செல்வாக்கு தாண்டி உண்மையில் உங்கள் விஸ்தாரத்தைச் சரியாய் உள்வாங்கி இருக்கிறாரா? அவரும் எழுத்தாளர். வீட்டைக் கவனித்துக் கொள்ள அவர் தன் எழுத்தார்வத்தைக் கைவிட்டாரா?


அருண்மொழிதான் இன்றும் என் எழுத்துக்களின் முதல் வாசகி. என் எழுத்துக்களை மட்டும் அல்ல சமகால எழுத்துக்கள் அனைத்தையும் வாசிப்பாள். அசோகமித்திரன், சு.வேணுகோபால் மீது பெரும் ஈடுபாடு உண்டு.


என் அரசியல் கருத்துக்களை அவள் பெரிதாக எண்ணுவதில்லை. அரசியலே வெறும் சில்லறை விவகாரம் எனப் பெரும்பாலான பெண்களைப்போல அவளும் நினைக்கிறாள். என் பிராபல்யம், செல்வாக்கு என ஏதும் அவளுக்கு தெரியவில்லை. கண்டித்து ஒழுங்கா வளர்க்கவேண்டிய ஆள் என்ற எண்ணம்தான் இருக்கிறது என நினைக்கிறேன். அருண்மொழி என் தனிவாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவள். என் நிதி விவகாரம் முதல் நண்பர்களுடனான உறவுகளைச் சீராக அமைப்பது வரை.


சமீபத்தில் சென்னை விஷ்ணுபுரம் விழாவுக்கு மனுஷ்யபுத்திரனை அழைத்திருந்தேன். பொதுவான மெயில் ஆக இருந்தாலும் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் எழுதியிருந்தார். மன்னிப்புக் கோரி நான் ஒரு நட்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ’எதுக்கும் நேர்ல போய் ஒருமுறை கூப்பிட்டிரு, அவர் உன் கவிஞர்’ என்றாள். உறவுகள் உடையாமல் கொண்டுசெல்வதில் தான் அவளுடைய மிகப்பெரிய பங்களிப்பு.


அருண்மொழி ஓரளவு எழுதிக்கொண்டிருந்தாள். ஏதோ ஓர் இடத்தில் எழுதவேண்டியதில்லை என்று தோன்றியிருக்கலாம். தொடர்ந்து எழுதும்படி அவளை தூண்டியிருக்கிறேன். வற்புறுத்தியும் இருக்கிறேன். ஒருமுறை கேட்டபோது நான் ரசிக்கும் படைப்புகளின் தரத்துக்கு என்னால் எழுத முடியாது என்றாள் “எழுதினா உன் அளவுக்கு தரமா நான் எழுதணும். இல்லேன்னா என் ஈகோ ஒத்துக்காது” என்றாள். . சரிதான்.


51. எழுத்தாளன் என்பதைத் தாண்டி தனி வாழ்வில் உங்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? சமீபத்தில் திருமதி சுஜாதா அவர்கள் தன் கணவர் குடும்பத்தைச் சரியாய் கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஓர் இதழில் பகிர்ந்திருந்தார். ஒரு கணவனாக, தந்தையாக உங்கள் செயல்பாடுகள் எப்படி?


அதை நான் செத்துப்போன பிறகு என் மனைவியும் பிள்ளைகளும் சொல்லவேண்டும். கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய அதிகாரத்தை நாம் எப்படி எளிதாகக் கொடுத்துவிடுகிறோம்.


ஆனால் என் வரையில் அவர்களுடன் மிக இனிய நட்பார்ந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். சுஜாதா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் ஒரு விலகலை குடும்ப உறுப்பினருடன் வைத்திருந்தது அக்கால வழக்கம். எனக்கும் அருண்மொழிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த விலக்கம் இல்லை. நான் அவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதில்லை. எதையும் கட்டாயப்படுத்துவது இல்லை. படிப்பு உட்பட. எப்போதும் அவர்களுடன் மிக நல்ல உரையாடலில் இருக்கிறேன். எங்கள் வீட்டில் இதுநாள் வரை சண்டைகள் மோதல்கள் என ஏதும் நிகழ்ந்ததில்லை.


என் மனதுக்கு மிகநெருக்கமான அறிவார்ந்த துணைவர்களாகவே மூவரும் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் வெண்முரசு பற்றி மூவரிடமும் விரிவாக உரையாடுகிறேன். பதின்பருவத்துப் பிள்ளைகள் நையாண்டி நிறைந்தவர்கள். அவ்வுலகில் சென்று அதில் விளையாடுவது ஓர் அற்புதம்.


கொஞ்சநாள் முன்னால் சுசீந்திரத்தில் மதம் சார்ந்த‌ எதிர்ப்பு என் எழுத்துக்கு வந்தது. என்னை மல்லாக்கப் போட்டு காளி என் நெஞ்சில் மிதித்து சூலாயுதத்தைக் குத்துவது போல ஒரு பெரிய பேனர் நகரில் வைத்திருந்தனர். சைதன்யா சொன்னாள், “சே, அந்த காளியப் பாத்தா அம்மா மாதிரியே இருக்கு”.


குடும்பத்தில் இலகுவாக இருக்கக் கற்றுக்கொண்டாலே போதும் வீடும் உறவுகளும் இனிதாக ஆகிவிடும் என்றே நினைக்கிறேன்.


அதோடு இன்னொன்றும் சொல்லவேண்டும். சுஜாதா குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்பதெல்லாம் பெரிய பொய். அவரை அறிந்த அனைவருக்கும் அது தெரியும். அவர் ஒரு குடும்பத்தலைவனாக தன் கடமையை முழுமையாகச் செய்தவர். மனைவி பிள்ளைகளுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். நானே அவரது குடும்பப் பொறுப்பை நக்கலடித்திருக்கிறேன்.


இந்தியக் குடும்பச்சூழலின் வன்முறை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இங்கே மனைவி கணவனை முழுமையாக தனக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறாள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்களுக்காக வளர்க்கிறார்கள். அது தங்கள் உரிமை என்றே உண்மையில் நம்புகிறார்கள். அவர்களின் அறிவார்ந்த சுதந்திரம் ஆன்மீகமான மலர்வு எதையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் அதை நோக்கிச் சென்றால் தங்கள் உரிமைகள் மீறப்படுவதாகவே எண்ணுகிறார்கள்.


நம் சூழலில் கணவன் ஒரு புத்தகம் படிப்பதை ஒப்புக்கொள்ளாத பெண்கள் உண்டு. என்னிடம் பல வாசகர்கள் சொல்வதுண்டு. தான் புத்தகம் படித்தால் தன் மனைவி உடனே சாப்பிட மறுத்துவிடுகிறாள் என்று என்னிடம் புலம்பியவர்கள் உண்டு. ஆகவே இங்கே ஒருவர் அன்றாட லௌகீகங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலையிலக்கியங்களில் ஈடுபட்டால், சேவைகளைச் செய்தால், ஏன் தனக்கென ஒரு பொழுதுப்போக்கை வைத்திருந்தால்கூட குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்படுவார். வெறுக்கப்படுவார். அநீதி இழைக்கப்பட்டதாக குடும்பமே புலம்பும். நான் இதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.


அத்துடன் இன்னொன்று. நமது பெண்கள் பெரும்பாலும் வென்றுசெல்லும் முனைப்பு இல்லாதவர்கள். அப்படி முனைப்பு இருந்தால்கூட வாழ்க்கையில் சாதிப்பதென்பது எல்லாருக்கும் உரியதல்ல. ஆண்களிலேயே பெரும்பாலானவர்கள் சாதிப்பதில்லை. அவர்கள் சமூகச்சூழலை குறை சொல்வார்கள். பெண்கள் கணவனைக் குறை சொல்வார்கள்.


சுஜாதா கொஞ்சம் மரபான மனிதர்தான். அதை நானே எழுதியிருக்கிறேன். அவரது ரசிகர்கள் என்னை அதற்காக திட்டினார்கள். ஆனால் அவரது அகவுலகை அவரது மனைவியால் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அதை அவர் அந்தரங்கமாக வைத்திருக்கலாம். அதற்காகத்தான் அந்த அம்மையார் அவரைக் குறைசொல்கிறார்.


52. நேர்காணல்கள் என்றால் என் மனதில் மூன்று முதன்மையாய் நினைவுக்கு வரும்: 1) சுபமங்களா நேர்காணல்கள் 2) காலச்சுவடு நேர்காணல்கள் 3) நீங்களும் சூத்ரதாரியும் இணைந்து எடுத்த இலக்கிய உரையாடல்கள். ‘தமிழ்’ மின்னிதழில் நேர்காணல்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என நான் தூண்டப்படக் காரணமே அவை தாம். நீங்கள் எடுத்ததில் உங்களுக்கு மிகத் திருப்திகரமாய் அமைந்த நேர்காணல் எது? போலவே நீங்கள் கொடுத்ததில் சிறந்த நேர்காணல்களைக் குறிப்பிட முடியுமா?


பொதுவாக இங்கே நேர்காணல்கள் ஒருவகை வம்புப் பேச்சுக்கள்தான். சமீபத்தில் அசோகமித்திரனை பேட்டி எடுத்த ஒரு கும்பல் ‘கணையாழியிலே நீங்கள் பொட்டலம் மடிச்சதுக்குமேலே என்ன செஞ்சிருக்கீங்க?’ என்று வரலாற்றுக்கேள்வியை கேட்டது. கணையாழி வழியாக ஓர் எழுத்துமுறையையே உருவாக்கிய முன்னோடி மேதையிடம் இப்படி ஒரு கேள்வி!


நான் exclusive வகையிலான பேட்டிகள் தமிழில் வரவேண்டும் என விரும்பினேன். விரிவான உரையாடல். அந்த ஆசிரியரை அணுக்கமாக அறிந்து எடுக்கப்படும் பேட்டிகள். பழைய encounter, esquire, partisan review இதழ்களில் வந்தவை போன்ற பேட்டிகள் கோமலிடம் அதைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்படிப்பட்ட பேட்டிகள் சுபமங்களாவின் அடையாளங்களாக ஆயின. அவற்றில் எனக்கும் பங்கிருந்தது.


பின்னர் காலச்சுவடு தொடங்கியபோது அப்படிப்பட்ட பேட்டிகளை மேலும் நீளமாக எடுக்கலாமெனச் சொல்லி அதற்காக முயன்றோம். கே.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ் நித்ய சைதன்ய யதி மூவருடைய பேட்டிகளும் அன்று தமிழில் வந்த முக்கியமான பேட்டிகள் மூன்றுமே முக்கியமானனவை.


பின்னர் சொல்புதிதுக்கு பேட்டிகள் எடுத்தோம். ஆனால் எல்லா பேட்டிகளும் நல்ல பேட்டிகள் அல்ல. பேட்டிகளில் பேட்டி கொடுப்பவர்கள் கொஞ்சம் இலகுவாக இருக்கவேண்டும் பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கவேண்டும்


சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் பேட்டிகளில் பயங்கரமாக எதிர்விசை கொடுப்பவர்கள். தப்பாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதனாலேயே ஒன்றையும் சொல்லாமல் தவிர்ப்பார்கள். இலக்கியவாதி ராஜந்தந்திரப் பேட்டி கொடுப்பதைப்போல அபத்தம் வேறில்லை.


சுஜாதாவை ஒரு பேட்டி எடுத்தேன். கவனமான ஒற்றைவரி பதில்கள். வீட்டுக்கு வந்தபின் அவருக்கு ‘இது ஒன்றும் சென்சஸ் கணக்கு ஃபாரம் இல்லை, இலக்கியப் பேட்டி. கிழித்துவீசி விட்டேன்’ என ஒரு கடிதம் போட்டேன். ‘நல்ல விஷயம். நானே சொல்லவேண்டுமென்று நினைத்தேன்’ என்று எழுதினார்.


அவரது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ நாவலுக்கு நாடார்ப் பேரவை அளித்த எதிர்ப்பு அவரை மிகவும் அச்சுறுத்தியிருந்தது. இளமையில் பிராமணனாக அவர் தன்னை உணர்ந்ததில்லை. இவர்கள் அதை அவர் உணர்ந்து குன்ற வைத்தார்கள். இருபதாண்டுகாலம் கழித்துக்கூட அதைப்பற்றி பேசினால் கைகள் நடுங்கும் அவருக்கு.


53. எழுத்தாளன் என்ற எல்லையைத் தாண்டி தமிழின் முதன்மைச் சிந்தனையாளர்களுள் ஒருவர் நீங்கள். உங்களை ஏற்கலாம் மறுக்கலாம். ஆனால் பொருட்படுத்தாமல் கடந்து போக முடியாது. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற ஓரிருவர் தவிர மற்ற எந்த தமிழ் எழுத்தாளரும் இப்படி சிந்தனைத் தளத்தில் பிரம்மாண்டம் கொண்டதில்லை. குறிப்பாய் சமகாலத்தில் மிகக்குறைவு. இருப்பவர்களும் ஓர் அரசியல் சார்புடன் தம்மைக் குறுக்கிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். படைப்பாளி ஜெயமோகன் ஏன் சிந்தனையாளராகவும் இருக்கிறார்?


புனைவுக்கு வெளியே வந்து சிந்தனைகளை முன்வைக்கும் எழுத்தாளர்கள் உண்டு. வைக்காத எழுத்தாளர்களும் உண்டு. இது பெரும்பாலும் சூழல் மற்றும் அவ்வெழுத்தாளனின் ஆளுமை சார்ந்தது.

எனக்கு இலக்கியமளவுக்கே தத்துவம் மீது ஈடுபாடுண்டு. சிலகாலம் தத்துவத்தையே முதன்மையாகக் கருதியும் இருக்கிறேன். இது என் ஆளுமையின் ஒரு பகுதி. புனைவிலக்கியம் தத்துவத்தை தவிர்த்து இயங்கினால் அது ஆழமாக இருக்காது என நினைக்கிறேன். தத்துவத்தைத் தூக்கிக்கொண்டு அது பறக்கவேண்டும். என் ஆதர்ச எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவவாதிகளாகவும் இருந்தவர்கள்தான்.


நான் ஆசிரியர்களாகக் கருதும் சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் பி.கேபாலகிருஷ்ணனும் ஒருவரிடமிருந்து உத்வேகம் பெற்றவர்கள். கேரளச் சுதந்திரச் சிந்தனையாளரான எம்.கோவிந்தன். ஜே.ஜே - சிலகுறிப்புகளில் அவரை எம்.கே.கோவிந்தன் என்ற பேரில் சுந்தர ராமசாமி சித்தரிக்கிறார். ஜே.ஜே யின் மூலமான சி.ஜெ.தாமஸின் நண்பர்.


கோவிந்தன் சிந்தனையாளர். ‘படைப்பாளியின் சிந்தனை’ என்ற விஷயத்தைப்பற்றி பேசியவர் என அவரைச் சொல்லலாம். படைப்பாளியின் சிந்தனையின் அடிப்படைகளாக அவர் சொன்னவை ஐந்து:

1. அச்சிந்தனைகள் அந்தப்படைப்பாளியின் அந்தரங்கமான அவதானிப்பு மூலமும் படைப்பியக்கம் மூலமும் கண்டடைந்தவையாக இருக்கவேண்டும் 2. அவை தர்க்கபூர்வமாக இருக்கவேண்டுமென்றில்லை. அவற்றை அவன் முன்வைக்கும் மொழியின் உண்மையான எழுச்சியே அவற்றை நிறுவப் போதுமானது 3. அவை வெறும் சிந்தனையாக இல்லாமல் அழகியல்நோக்குடனும் கலந்திருக்கும். 4. அவை அவ்வெழுத்தாளனின் புனைவுலகுடன் பிணைந்து ஒரு முழுமையான கருத்துலகை உருவாக்கவேண்டும் 5. பிற அனைத்து சிந்தனையாளர்களும் சொல்லாத ஒன்றைச் சொல்ல அவனால் முடியும். அவன் பங்களிப்பு அதுவே.


பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி ஆகியோர் கோவிந்தன் சொன்ன முறைமையில் சிந்தனைகளை முன்வைத்தவர்கள். அவை பிற அரசியல் சிந்தனையாளர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள், தத்துவச் சிந்தனையாளார்கள், சமூகச் சிந்தனையாளர்கள் சொன்னவற்றில் விடுபட்டுப்போகும் ஒன்றை எப்போதுமே சுட்டிக்காட்டின. நான் கோவிந்தனுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி, பி.கே.பாலகிருஷ்ணன் இருவரையும் அணுகியறிந்திருந்தேன்.

பிற சிந்தனையாளர்களின் கருவி புறவயமான தர்க்கம். புறவயமான தகவல்களைத் திரட்டி தர்க்கபூர்வமாக முன்வைப்பது அவர்களின் வழி. ஆகவே அவர்கள் எழுத்தாளர்களை முறைமை இல்லாமல் பேசுபவர்கள் என எப்போதும் சொல்வார்கள். ஆனால் எழுத்தாளன் அவர்கள் அறியாத ஓர் ஆய்வுக்கருவியைக் கொண்டவன், ஆழ்மனதை. அவன் சொல்வதை அவர் சொல்லமுடியாது என்றார் கோவிந்தன்.


அதேபோல அரசியல்வாதிகள். அவர்களுக்கு ஒரு தரப்பு உண்டு. ஒரு நிலைபாடு உண்டு. அதை மூர்க்கமாக வாதிட்டு முன்வைப்பார்கள். பிற அனைவரையும் எதிரிகளாகக் காண்பார்கள். எழுத்தாளன் அவர்களின் தரப்புகள் நடுவே மங்கலான பகுதிகளில் உள்ள உண்மைகளைக் கண்டு சொல்லமுடியும். அதுவே அவன் பங்களிப்பு.


படைப்பாளிக்கு வெளிஅரசியல் சார்பு தேவையில்லை, படைப்பாளிக்கு என்றே ஓர் அரசியல் இருக்க முடியும் என்று கோவிந்தன் சொன்னார். அந்த அரசியல் அவனுடைய மனசாட்சியின் அரசியல். ஆழ்மனதின் அரசியல். அதற்கும் சூழலில் ஒரு பெரிய இடமுண்டு என்றார்.


எழுத்தாளனின் சிந்தனை என்பது இவ்வகையில் தனித்தன்மை கொண்டது. அது முறைமைகளை விட கூறுமுறையை பெரிதாக நினைப்பது, தர்க்கத்தை விட உள்ளுணர்வை நம்புவது. அது அந்த எழுத்தாளனின் புனைவுலகுடன் இணைந்து முழுமை பெறுவது. உலகமெங்கும் எழுத்தாளர்களின் சிந்தனைகளின் இயல்பு இதுவே.


தமிழில் எழுத்தாளர்களின் சிந்தனைகள் பெரிய அளவில் முன்வைக்க இடமிருந்ததில்லை. அரசியல் அமைப்புகளை ஒட்டிப்பேசும் எழுத்தாளர்களே இங்கே அதிகம் பேசியிருக்கிறார்கள். நான் எந்தத் தரப்பையும் சாராது நின்று பேசமுயல்கிறேன். மரபிலிருந்து நவீனத்தை அடையும் ஓரு அசலான பாதையை அடைய, நமக்கே உரிய அழகியலை உருவாக்க, நம் அறவியலை வகுத்துக்கொள்ல முயல்கிறேன். அதுவே என் சிந்தனையின் இலக்கு.


54. எல்லா நேர்காணல்களிலும் இடம்பெறும் ஒரு க்ளீஷே கேள்வி. புதிதாய் எழுதுபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? (உங்கள் எழுத்துக்கள் தான் இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமைய முடியும். ஆனாலும் explicit-ஆக உங்கள் கருத்தைப் பதிவு செய்யும் முகமாகவே இதைக் கேட்கிறேன்.)


பொதுவாகச்சொல்ல விரும்பவில்லை. இப்போதுள்ள போக்குகளை வாசித்ததனால் சொல்லும் சிலவிதிகள்:


1. வாசியுங்கள். வாசித்தவற்றைப் பற்றிய விமர்சனங்களை தெளிவாக விரிவாக பதிவுசெய்யுங்கள். பிறர் எழுதிய படைப்புகளைப் பற்றி பேசும்போது வேறெவரும் சுட்டாத நுட்பங்களை நீங்கள் சுட்டமுடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான எழுத்தாளர்.


2. இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியைக் கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது.


3 மொழியை அளைந்துகொண்டே இருங்கள். மொழியில் உங்களுக்கென ஓர் அடையாளம் வரும் வரை நீங்கள் எழுத்தாளரே அல்ல. எளிய மொழி வாசகர்களுக்கு பிடிக்கும். ஏற்கனவே இருக்கும் மொழிநடையில் எழுதினால் அதிகம்பேர் வாசிப்பார்கள். ஆனால் நீங்கள் எழுத்தாளர் ஆகமாட்டீர்கள். மொழியே ஆழ்மனம். அதில் சிக்குவதே உங்களுடைய எழுத்து. அதைத் தியானியுங்கள்.


4 சிறிய அரசியலைப் புனைவுலகில் நுழைய விடாதீர்கள். அரசியல் எல்லாம் இலக்கியத்தின் முன் மிகமிகத் தற்காலிகமானவை. மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting-ஐ சமீபத்தில் மகளுக்கு பரிந்துரைத்தேன். டால்ஸ்டாய் அவளுக்குப் புதிய சமகால எழுத்தாளராகத் தெரியும்போது குந்தேரா பழையவராக தெரிந்தார். ஏனென்றால் அவர் பேசிய அரசியலே காலாவதியாகிவிட்டது. அரசியல் புனைவுகளில் இருக்கும் என்றால் அது மானுட அரசியலாக, தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் தொட்டு விரியும் அரசியலாக இருக்கவேண்டும்.


5. வடிவச்சோதனைகளில் பிரக்ஞைபூர்வமாக ஈடுப்டாதீர்கள். எந்தப் புதிய வடிவமும் பத்துவருடம் புதியதாக இருக்காது. சொல்லவரும் விஷயத்துக்கான வடிவமாகவே அது இருக்கட்டும்.


பத்திரிக்கை அனுபவமே இல்லாத ஒரு புதியவன் தொடங்கும் ஓர் இதழ், அதிலும் இணையத்தில் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கக்கூடிய மித வீச்சுடைய மின்னிதழ் என்கிற பாரபட்சம் பாராது எந்தவொரு கேள்வியையும் விலக்காது, நேரம், உழைப்பு, சிந்தனையைச் செலவிட்டு இவ்வளவு விரிவான, ஆழமான ஒரு நேர்காணலை அளித்தமைக்கு ஜெயமோகனுக்கு மிக நன்றி. ஜெயமோகன் என்ற‌ பேராளுமையின் பன்முகத்தன்மையை மனச்சாய்வுகளின்றி கணிசமாய் இந்நேர்காணல் பதிவு செய்துள்ளது என நம்புகிறேன்.


ஜெயமோகன் நல்ல ஆரோக்கியத்துடன், மனம்நிறை மகிழ்ச்சியுடன், குன்றாத சுய‌திருப்தியுடன் நீண்ட ஆயுள் வாழ்ந்து, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போல் அவரது மனதிற்குகந்த இன்னும் பல இலக்கிய உச்சங்களைத் தொட வேண்டும் என ‘தமிழ்’ இதழ் வாழ்த்துகிறது.


***


இணைய நூற்றாண்டு
சிறகு


மனித குல வரலாறு முழுக்க புத்தம் புது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது, அதன் வாயிலாகப் படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருந்த மனித சமூகம் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் முன்னேறிய வேகத்தில் எந்தக் காலத்திலும் முன்னகர்ந்தது கிடையாது. அந்த நான்கு நூற்றாண்டு கால அசுர வளர்ச்சிக்கு காரணம் - முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் / கடவுள் சொன்னார் என்பதற்காக எதையும் நம்பாது, ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி, தர்க்கித்து, பகுத்து ஆராய்ந்து பின்னர் ஏற்றுக் கொள்ள முயன்றதால் தான். இந்த நான்கு நூற்றாண்டு வளர்ச்சியையும் கடந்த 20 ஆண்டுகள் விஞ்சி நிற்கும் நிதர்சனத்திற்கு பெருவகையில் இணையத்தையும் தொலைதொடர்பு சாதனங்களின் எளிமையாக்கத்தையும், இவ்விரண்டின் பரவலாக்கத்தையும் காரணமாகச் சொல்லலாம்.


இணையம் வெகுமக்கள் பயன்பாட்டிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக திறந்து விடப்பட்டது முதலாகவே சிந்தனைத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதில் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கின்றன‌. எந்தத் தகவலும் நொடியில் கிடைத்துவிடும் என்பதே வாய்ப்பாகவும், ஆபத்தாகவும் இருக்கிறது. தகவல் களஞ்சியமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கின்றது இணையம். விட்டில் பூச்சிகள் எந்த விளக்கில் விழுகின்றன என்பதே தற்போதைய பிரதானக் கேள்வி.


பல நாடுகளில் அரசையே மாற்றிய இந்தச் சமூக வலைதள பலம் மூலம் மக்களின் எண்ணவோட்டத்தை நொடிக்கு நொடி ஒரு சிலர் அல்லது குழுவினர் மாற்றி அமைக்க முடியும் என்பது கவனம் கொள்ளத்தக்கது. ஒவ்வொரு நாடும் தன் இணைய கட்டமைப்பைப் பலப்படுத்த பெரிதும் கவனம் செலுத்துகின்றது. பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன் தரும் என்று இன்று இவை செய்யும் இந்தக் கட்டமைப்பு நாளை அரசியல் நிலையற்றதன்மைக்கான ஊற்றாக மாறுவதுடன், ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாய் உருவாகப் போவதுமுண்டு. கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் எப்படி தன்னை அழிக்கும் பாட்டாளி வர்க்கத்தை அதுவே வளர்த்தெடுப்பதாகச் சொன்னாரோ, அதே போல் எந்த அரசும் தனக்கான அழிவை தானே உண்டாக்கும் என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகலாம். இணையத்தின் மூலம் மக்களைத் திசைதிருப்பி அவர்களை மாற வைக்கும் வழி தெரிந்தவர்கள் ஆட்சியில் அமர முடியும் எனில் அவர்களை விரட்டி அடிக்கவும் அதே இணையம் கருவியாகும் என்பதையும் மறுக்க முடியாது.


துறைசார் வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், அதிகாரிகள் எனப் பொது மக்களிடமிருந்து எப்போதுமே தொலைவில் இருந்தவர்களை, அவர்களுக்கு மிகச் சமீபத்தில் நிறுத்தியிருக்கிறது இணையம். உச்சாணிக் கொம்பில் இருந்தவர்களின் பிம்பங்கள் அப்பட்டமாக பொதுவெளியில் உடைபட்டு அவரவர் உண்மை முகத்தை பார்த்துணரும் சாதாரணன், தான் கட்டமைத்து வைத்திருந்த பல விதிகளைத் தானே உடைத்து வெளிவருவதையும், மூர்க்கமாக செயல்படுவதையும் தன் சுதந்திரமாக நிறுவ முயல்கிறான்.


மெய்யுலகில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை, பழகிவந்த நாகரிகங்களை, முகம் பார்த்து நேருக்கு நேராக பேசமுடியா வார்த்தைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மெய்நிகர் உலகில் உடைத்தெறிவதே கட்டற்ற சுதந்திரம் என்று நம்பப்படுகிறது. தனி மனித அளவில் இணையம் அவர்களை பல்வேறு சேதிகளை தெரிந்து கொள்ள உதவிய போதிலும், பெரும்பான்மை மக்களிடையே தரவுகளைத் தேடும் பழக்கமே இல்லாமல் முதலில் வாசிப்பதே உண்மை என நம்பும் மனநிலையை வளர்த்தெடுக்கிறது. வலிமையான எழுத்து இருந்தால் எந்தச் சாத்தானும் கடவுளாவது எளிது, தனி மனிதனின் ஆழ்மன இயல்புகளான தயக்கம், வக்கிரம், குரூரம், பொறாமை என பொது வெளியில் முன்னிறுத்த முடியாதிருந்த உணர்வுகள் இப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக, அது வழங்கும் முகமூடி வாயிலாகப் பரவலாக வெளிப்படுகிறது. இயல்பிலேயே அமைதியாக இருப்பவர்கள் கலகக்காரர்களாய் அடையாளம் கொள்ளப்படுவதும், கோமாளிகள் போராளிகளாய்ப் புரிந்து கொள்ளப்படுவதும் நிகழ்வது இதனால் தான்.


எப்படிக் கையாள்வது என்பதற்கான பயிற்சியும், முதிர்ச்சியும் மக்கள் அடையும் முன்னமே பாகாசுரமாக வளர்ந்து நிற்கிறது இணையம். நேரத்தை, வாசிப்பை, புரிதலை, தர்க்கத்தை, பகுத்தறிவை, பிறரை மதிக்கும் நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கி, வசைபாடுவதையும், குழு மனப்பான்மையையும், சுயபரிசோதனையற்ற தன்மையையும், முன்முடிவுகளை நம்பிச்செயல்படும் போக்கையும், அவசரகதியில் வினையாற்றுவதையும் ஊக்குவிக்கிறது. படிப்பது குறைந்து வரும் அதே நேரம், எழுதுவது அதிகரித்து வருவது முரண் நகை.


சுயம் என்று தாம் நம்புவதை நிலைநாட்டிக் கொள்ளவும், தமக்குச்சரி என எண்ணுவதை முன்னிறுத்தவும் சமூக வலைதளங்களைப் பொறுத்தமட்டில் மக்கள் எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை எல்லாவற்றையும் குற்றம் சுமத்துவது, கேள்விக்குட்படுத்துவது, விடை காணும் முன்பே விலகிவிடுவது, மேலோட்டமாய் எதையும் அணுகுவது, உணர்ச்சியின் வயப்பட்டு முடிவுக்கு வருவது, தமது கருத்துக்கு எதிர்வாதம் செய்பவர்களின் வாதத்திற்கு பதில் அளிக்க முயலாமல் அவர்களின் தனி வாழ்வை நோக்கி விரல் நீட்டுவது என மெய்நிகர் போர்க்களமாய் மாறிவிட்ட இணையம் தான் அடுத்த தலைமுறையின் ஒரே வழிகாட்டியாய் இருக்கப்போகிறது என்பதை சமூகவியலாளர்கள் கவனத்தோடு அணுக வேண்டும்.


இணைய நூற்றாண்டு நாம் யாரும் எண்ணியே இருந்திராத காட்சிகளை நம் முன் அவிழ்க்கப் போகிறது. உண்மையான புதுயுகம் அப்போதுதான் பிறக்கும், அந்த யுகத்தில் உடைப்பதெற்கென்று எவ்விதியும் இராது.


***


சிரஞ்சீவியும் ஜீவிதாவும்

சொரூபா


கல்யாணத்திற்கு முன் கடிதம் தந்தோர்

கருணை கொண்டு பார்க்கிறார்


பெற்றவர் முழங்கால் கட்டி விசும்பியிருப்பாளென

முகவாய் தொட்டு கண்ணீர்த் தடம் தேடுகிறார்


மற்றவர் மாண்டார் மீளார் எனச் சொலல் வேண்டி

அழுது புரள்வதைக் காண விழைகிறார்


அள்ளி முடிந்துப் பின்னலிட சோம்பல்பட

சோகமென்றே சுகப்படுகிறார் நண்பர்


ஆறுதலுக்காய் ஏற்றும் மெழுகுவர்த்திகள்

உருகியோட காலெங்கும் கொப்புளங்கள்


பட்டாணி புலாவிற்குப் பசிக்கத்தான் செய்கிறது

இஞ்சி நறுக்க விரல் கொய்து வலி உயிர் போகிறது


யதேச்சை நகைச்சுவைக்குச் சட்டென சிரிப்பு வருகிறது.

பிடித்தவை மட்டும்தான் இன்னும் பிடித்திருக்கிறது


மடியமர்ந்து காதுகடித்து சிரஞ்சீவிதான் என நான் சிணுங்க

முன்னுச்சி முத்தமிட்டு இல்ல, ஜீவிதாடி என நீ சிரிக்க


எவரறிவார் - என்னுள் தேங்கிய நம் மும்மாதச் சிசு

உன்சவம் கண்டதிர்ந்து கலைந்தொழிந்து போனதை.


***

நளீரா

கர்ணாசக்தி


இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறதாம், டாக்டர் சொன்னதாய்ச் சொன்னாள். மேலும் வளர்ச்சி சீராக இருக்க டாக்டர் சொல்படி நிறைய மருந்து, மாத்திரைகளெல்லாம் வாங்கி வந்திருக்கிறாளாம். எல்லாவற்றையும் டாக்டரின் பரிந்துரைப்படி தவறாமல் சாப்பிடுவாள் என்றும், அப்போதுதான் நான் நல்லபடியாக அவளுக்குக் கிட்டுவேன் என்றும், எனைக் காணப்போகும், எனைக் கைகளில் ஏந்திக்கொள்ளப்போகும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறாள் எனவும், அந்த நாளே தன் வாழ்வின் பொக்கிஷமான நாள் எனவும் தன் குளிர்ந்த கரங்களால் ஒரு மெல்லிய இளஞ்சூட்டை வயிற்றினூடே பரப்பி வாஞ்சையுடன் சொன்னாள் உம்மா.


எனக்கும் அப்படித்தான் இருந்தது. நாள் முழுக்க என்னைப்பற்றியே சிந்தித்து, பேசி, உரையாடி, சிரித்து, மகிழும், அவள் முகத்தை இப்போதே பார்த்து, அவள் கைகளில் தவழ்ந்து, முலையில் முட்டி இறுகிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஃபரீதா என்பதுதான் உம்மாவின் பெயராம் மார்க்கத்தில் அப்பெயருக்கு இணையற்றவள் என்று பொருளாம், ஆம் உண்மைதான் அது, யாருக்கும் இணையற்றவள்தான் உம்மா.


சூல் கொண்ட நாள் முதல் என்னோடு செல்லம் கொஞ்சி உரையாடிக்கொண்டே இருக்கிறாள், அவளுக்கு என்னிடம் சொல்வதற்கு இல்லையென்று எதுவுமே இல்லை, எப்போதும் ஏதேனுமொன்றைப் பகிர்ந்தபடி என்னை உயிர்த்திருக்க வைத்திருக்கிறாள். என் ஒவ்வொரு துடிப்பிற்கும் அவளிடம் அக்கறை நிறைந்த, ரசவாதம் கொண்ட நீண்டதொரு உரையாடல் எதிர்வினையாகும். அது கேட்க கொள்ளை விருப்பம் எனக்கு.


இப்படித்தான் உம்மா எனக்குப் பெயர் வைத்த கதையை, ஓராயிரம் முறையேனும் சொல்லியிருப்பாள். இருந்தும் அது கேட்கத் திகட்டியதே இல்லை. வயிற்றில் நான் உருவானதை அறிந்த நாள் ஒன்றில், அவள் உறங்கும்போது வந்த கனவின் கதை அது. மென்சிவப்பாய் வானம் சூழ்ந்திருந்த ஒரு வனத்தின் நடுவே ஓடும் ஒரு நதியின் மறுகரையில் ஒர் ஒளியைக் கண்டாளாம் உம்மா. அந்த ஒளி கை நீட்டி அவளை அழைக்க, நதியை நடந்தே கடந்து அருகில் சென்று பார்த்தாளாம், அந்த ஒளியை அடைந்தபின் தான் அவளுக்கு தெரிந்ததாம் அது ஒரு நட்சத்திரம் என்று. அந்த நட்சத்திரம் கைகளை உயர்த்தி உம்மா என்றழைத்த நொடி அவள் அந்த நட்சத்திரத்தை ஏந்திக்கொண்டு மகிழ்ச்சியாக சிரித்தாளாம்.


இப்படியாகத் தான் அந்த கனவு வந்ததாம் உம்மாவிற்கு, இந்தக் கனவுக்கு பின்னர் தான், அல்லாஹ் தனக்குத் தந்த நட்சத்திரம் நான் என்று சொன்னாள். அதற்குப் பிறகே எனக்கு நளீரா எனப் பெயர் வைத்தாளாம், நளீரா என்றால் ஒளிரக்கூடியவள் என்று பொருளாம், இதுவே எனக்குப் பெயர் கிடைத்த கதை, இந்தக் கதையை வழக்கமான அவளின் கைகள் வருடித்தரும் இளஞ்சூட்டில் சொல்லி முடிப்பதை கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும் எனக்கு. அப்போதைய என் துள்ளலைத் தொடர்ந்து அவளுக்கும்.


நான் பிறந்து, கொஞ்சம் வளர்ந்த பின் அவள் கைகளைப் பிடித்துச் சுற்றி வரும் போதும், ஓடிப்பிடித்து விளையாடும் போதும், என்னிடம் சொல்ல ஒரு கவிதை தயாரித்து வைத்திருந்தாள். “யார் சொன்னது? / நட்சத்திரங்கள் சுற்றி வருவதில்லையென்று / சுற்றிச்சுற்றி வருகிறாளே நளீரா!”


பூமி, நிலா, மற்றும் இன்னும் சில கோள்களைப்போல சூரியனும் நட்சத்திரங்களும், எதையும் சுற்றி வராது மகளே, அது எப்போதும் ஒரே இடத்தில் மட்டும்தான் மின்னிக்கொண்டிருக்கும், அந்தக் கோடான கோடி நட்சத்திரங்களை பொறாமை கொள்ளச்செய்ய நீ இந்த உலகத்தையே சுற்றி வர வேண்டும், சீக்கிரம் வந்துவிடு நளீரா என்பாள். எனக்கு நட்சத்திரங்களை விட உம்மாவைக் காணத்தான் ஆசையாக இருக்கும்.


இதேபோல எனக்காக அவள் கையால் நெய்த இருபதாவது ஸ்வெட்டரின் கதையும் அந்தப் பெயர் கதையை போலவே கொள்ளை சுவாரஸ்யமானது, வெறும் நான்கு மதியப்பொழுதுகளிலேயே அதைப் பின்னி முடித்து விட்டாளாம், அதன் நிறம் என் நிறத்தைப் போலவே வெளிர்சிவப்பு நிறமாக இருக்குமாம். அந்த ஸ்வெட்டரின் இடதுபக்கம் ஒரு ரோஜாவின் படத்தை வரைந்து இருக்கிறாளாம், அவள் சொல்வாள்.


ரோஜா என்பது ஒரு பூ நளீரா. அது ஒரு நல்ல வாசனையும், அழகான நிறமும், மெல்லிய இதழ்களையும் கொண்டது. கிட்டத்தட்ட உன்னைப்போலவே, இல்லையில்லை உனக்கும் சற்று குறைவான அழகுதான் இருக்கும் அதற்கு. இந்த ரோஜா ஸ்வெட்டர் உனக்கு மிக பிடிக்கும் நளீரா என்பாள்.


அதை அணிந்து நான் சிரிப்பதாய் அடிக்கடி கனவு காண்கிறாளாம், நேரில் நான் அதையணிந்து சிரிக்கும் போது புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்தில் “ஒரு நந்தவனம் வீட்டுக்குள் வளர்கிறது” எனக் கவிதை எழுதி ஹாலில் மாட்டிவைப்பாளாம், என்னவெல்லாம் பேராசை காட்டுகிறாள் என் உம்மா! யார்க்கும் இணையே இல்லாத என் செல்ல உம்மா. தினம் ஒரு சேதி சொல்வாள், தினம் தினம் ஆசை கூட்டுவாள்.

உனக்குத் தெரியுமா நளீரா? நீ வரப்போகும் ஊர் ஓர் ஒப்பற்ற மனிதர் பிறந்த ஊர், இந்தத் தேசத்தில் மிக முக்கியமான ஊர், நீ வந்துபார் உனக்கு இங்கு எல்லோரையும் பிடிக்கும், உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும், நீ விளையாட நான், வாப்பா தவிர பக்கத்து வீட்டில் உன்னைப் போலவே குட்டியாக மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள், அங்கித், அமித், அனந்த் என்பது அவர்களது பெயர். மிக அழகாக இருக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் அமைதியாக விளையாடுவதைப்பார்க்க, உன்னைப்பார்த்தால் அவர்களுக்கும் மிக பிடிக்கும், எப்போதும் நீ எப்போது வருவாய் என்று விசாரித்து கொண்டே இருக்கிறார்கள். தினமும் அவர்களோடு நீ விளையாடலாம், சீக்கிரம் வந்துவிடு மகளே என அத்தனை செல்லமாக அழைப்பாள்.


எப்படியெல்லாமோ கண்ணும் கருத்துமாக மகிழ்வூட்டிய, இந்த உலகில் யாருக்கும் இணையில்லாத என் உம்மா எனும் தேவதை இப்போது வெடித்து அழுது கொண்டிருக்கிறாள், இதே நாளில் சற்று நேரத்திற்கு முன்பெல்லாம் வழமை மாறிய ஒரு நடுக்குறும் தடவலில், அதிகாரங்கள் எல்லாம் வேடிக்கைப்பார்த்தபடி இருக்க, அவர்கள் கைகளில் வாக்களார் பட்டியல் எல்லாம் வைத்துக் கொண்டு, நம்மை, நம்மவர்களை வீடுவீடாக வெறிபிடித்து தேடிக்கொண்டு வருகிறார்களாம் நளீரா, எனக்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது என்றபடி மிக வேகமாக ஓர் இருதயத்தின் துடிப்பைப் பகிர்ந்தாள்.


சில மணித்தியாலத்திற்குப் பிறகு இதோ இப்போது கதறிக்கொண்டு இருக்கிறாள், கதறிலினூடேயும் அவள் கை என் மீதுதான் அழுத்தியபடி இருந்தது, யாரிடமோ உரக்கக் கெஞ்சி அழுதபடி “விட்டுவிடுங்கள், தயவு செய்து விட்டுவிடுங்கள் அய்யா. நாங்கள் சாதரணர்கள், சத்தியமாக நாங்கள் எந்தக் கரசேவகர்களையும் எரிக்கவில்லை. நிறைமாதத்தில் இருக்கும் உங்கள் சகோதரியாய் எண்ணிக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், அய்யா விட்டுவிடுங்கள்” எனப் பெருஓலம் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.


எனைச்சுற்றி இருந்த தசை, நீர், எலும்பு, நரம்பு, இரத்தம், குடல் என அனைத்திலும் பெருவலி பரவ முரட்டுக்கரம் ஒன்று என் கால்களை பிடித்து, உயிர்நோக வெளியே இழுத்துப்போட்டது. சிறு துடிப்பிற்குக் கூட எதிரொலிக்கும் உம்மாவின் குரல், இப்போது கேட்கவே இல்லை, பலமாக மூச்சு திண‌றியது, கடைசியாக என்னுள் பதிந்த உம்மாவின் குரல் சொல்லிய வார்த்தை மட்டும் நினைவுக்கு வந்து எந்த கரசேவகர்களையும் நான் எரிக்க வில்லையென எனக்குத்தெரிந்த பாஷையில் பீறிட்டு அழுது சொல்லி முடித்தேன், முற்றிலுமாக மூச்சடைத்துப்போனது, திறக்காமலே இன்னும் இறுக மூடிக்கொண்டன‌ விழிகள்.


கடைசி ஓசையாக செவிகளில் விழுந்தது – “தூக்கி வீசு அந்தப் பிண்டத்தை, இதயம் நின்றுவிட்டது”.

***

ஸ்டான்லி க்யூப்ரிக்: இயக்குனர்களின் ஆசான்

நவீன் குமார்


பொதுவாக இந்திய சினிமா தவிர்த்து நாம் அதிகமாகப் பார்ப்பது ஹாலிவுட் சினிமா என்பதால், ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நம் வரையறை இதன் அடிப்படையில் தான் அமைகிறது. ஆங்கிலப் படங்களை தவிர்த்து வேற்று மொழிப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தால் இந்த கோட்பாடுகள் உடைய ஆரம்பிக்கும். உலக சினிமா என்பது எவ்வளவு பரந்தது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.


ஆனால் ஆங்கிலப் படங்களை அவ்வளவு எளிதில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம், உலக அளவில் சிறந்த இயக்குனர்களைப் பட்டியலிட்டால் அதில் சிலர் ஆங்கிலப் படங்களைக் கொடுத்தவர்கள். அதில் முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர் ஸ்டான்லி க்யூப்ரிக்.


ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகள் வெகு சுலபமாக நம்மைக் கவர்ந்து உள்ளிழுத்து விடுக்கூடியவை. இதற்கு பல காரணங்கள் உண்டு. மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது இவருடைய படங்களின் கதைக்களனில் உள்ள எளிமை. அதாவது படத்தின் போக்கில் நாமும் நகர எந்தவித விஷய ஞானமோ வரலாற்று அறிவோ தேவையில்லை, பொதுவாகவே படங்களை மிக எளிமையாக 'ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார்’ என்கிற கிராமக் கதை பாணியில் ஆரம்பித்து நகர்த்திச் செல்வார். மெதுவாக நம்மைக் கதைக்குள் அழைத்துச் ல்லும் விதமாய் அமைந்திருக்கும் இவரின் படைப்புகள். இப்படிப் பட்ட கதைகளைத் தான் நாம் இயல்பாகவே விரும்புகிறோம். எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒட்டிய படங்களை வந்தாலும் நாம் விரும்புவது எதார்த்தமான கதைகளில் நம்மைத் தொலைக்கத் தான்.


இப்படிப்பட்ட எளிமையான கதைக்களன்களைக் கையாள்வது மிகக் கடினமானதும் கூட. பலர் இதனை முயற்சித்துத் தோற்றிருக்கிறார்கள். வெற்றி கண்ட மிகச் சில இயக்குனர்களும் இது போன்ற எளிமையான நடையை கொஞ்சம் கடினமான அம்சங்களை உள்வாங்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது படத்தில் ஒழிந்திருக்கக் கூடிய சஸ்பென்ஸ் அல்லது குறியீடு போன்றவற்றை உணர்த்துவதற்காக கதையை மெதுவாக நகர்த்திச் செல்ல முயன்றிருப்பார்கள். இது சற்றே செயற்கையான உணர்வையே கொடுக்கும். க்யூப்ரிக்ப் படங்களில் இப்படி இருக்காது. எளிய நடையை மிக நேர்த்தியாகக் கையாண்டு கதையின் வலிமையை அதே நடையில் எடுத்துச் செல்வார். சுருக்கமாகச் சொன்னால், க்யூப்ரிக்கின் படங்களைப் பார்ப்பதற்கான மனநிலை எப்போதுமே நமக்கு இருக்கும். அதுவே அவரின் வெற்றி.


வேறெந்த‌ இயக்குனரும் க்யூப்ரிக் அளவிற்கு பல்வேறு வகைமைகளைத் தொட்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. இவரின் ஒவ்வொரு படத்திற்கு அவ்வளவு வேறுபாடுகள், எவ்வித ஒற்றுமையும் கண்டுவிட முடியாது, பிரம்மிப்பைத் தவிர. இவரின் பெரும்பாலான படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை. தன் படங்களுக்கான கதைகளை ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன் என பல்வேறு மொழிகளிலிருந்து க்யூப்ரிக் தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது.


இவர் படங்களின் மற்றொரு சிறப்பு அம்சம் வசனங்கள். மற்ற படங்களின் மூலம் நமக்கு இயல்பாகப் பழக்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்வி - பதில் வகையான வசனங்கள் மட்டுமல்ல. மொழியின் திறனை மிக அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ஆங்கிலத்தின் அழகை நான் அதிகமாக உணர்ந்தது க்யூப்ரிக் படங்களின் வசனங்களில் தான். தமிழில் கூட அவற்றினை அவ்வளவு அழகாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்று பலமுறை தோன்றியிருகிறது. இவற்றைத் தவிர இவருடைய படங்களில் இசை, கேமராவின் ஈடுபாடு பிரம்மிக்கவைக்கும். சினிமா உலகிற்கான க்யூப்ரிக்கின் ஈடுபாடு அளப்பரியது. திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, எடிட்டிங் என பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறார். மனித உளவியல் சார்ந்த பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் இவரின் படைப்புகள் வலிமையான உணர்வுகளைக் கொடுக்க வல்லவை. என்னளவில், க்யூப்ரிக் இயக்குனர்களின் ஆசான்.


*


க்யூரிக்கின் சிறந்த படம் எதுவென்று முடிவெடுப்பது கடினமான செயல். நான் கேட்ட / படித்த வரையில் ஒவ்வொருவரும் அவரது ஒவ்வொரு படத்தை - கிட்டத்தட்ட எந்த படத்தையும் மிச்சம் வைக்காமல் - சொல்லியிருக்கிறார்கள். ஆனால், Eyes Wide Shut அவ்வளவு வெகுவாக க்யூப்ரிக்கின் சிறந்த படமாகக் கருதப்படவில்லை என்பது சற்றே ஆச்சார்யமானது. இதன் காரணம் புரிந்துகொள்ளக் கூடியது தான்.



ஓர் உதாரணம், இயக்குனர் மணிரத்னம் எடுத்த படங்களில் மற்ற படைப்புகளின் சிறப்பினை கொஞ்சம் சுலபமாகவே புரிந்துகொள்ள முடிந்தாலும் மெளன ராகம் படத்தின் சிறப்பைப் புரிந்துகொள்வதில் சற்றே சிரமங்கள் இருக்கலாம். காரணம் அது உணர்வுகள் சார்ந்தது. Eyes Wide Shut அது போலவே, ஆனால் அதை விட பன்மடங்கு வலிமை வாய்ந்த படம். இதில் கையாளப்பட்டிருக்கும் மனித உளவியல் எளிதாகப் புரிந்து கொள்வதரிது. கணவன் மனைவி உறவின் ஆழத்தை இவ்வளவு நுணுக்கமாகச்சொன்ன படம் வேறில்லை.


1926-ம் ஆண்டு வெளிவந்த Traumnovelle எனும் ஜெர்மன் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம். படம் வெளியான ஆண்டு 1999. இப்படத்தின் கரு என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு கணவன்-மனைவியின் வாழ்வில் இரண்டே நாட்களில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதை தான் இது. அந்த இரண்டு நாட்களில் நடக்கும் சம்பவங்கள், அதனால் தம்பதிகளுக்கு இடையில் நடக்கும் மனப் போராட்டங்கள் தான் கதையை நகர்த்துகிறது. முக்கியமாக, கதையின் நாயகனுக்கு ஏற்படும் உளவியல் பரிமாற்றங்களே இப்படத்தின் மாபெரும் வலிமை. ஓர் ஆணின், தன்னை நேர்மையானவனாக நடந்த விரும்பும் ஒரு மனிதனின் நுண்மையான உணர்வுகளை இவ்வளவு தெளிவாகக் காட்டிய படைப்பு வேறு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. தாம்பத்தியம், காதல் போன்றவற்றையும் அதனுடன் பிணைந்த உணர்வின் வெளிப்பாடுகள், அதைத் தாண்டிய போராட்டங்கள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் ஆராய்கிறது இப்படம். கணவன் மனைவிக்குள் இருக்கும் உச்சபட்ச பகிர்வு, முதிர்ச்சி ஆகியவற்றை மிக அழகாக சித்தரிக்கிறது இப்படம். உங்கள் இணையுடன் சேர்ந்து பார்க்கக் கூடிய அழுத்தமான ஒரு படம்.


மருத்துவராக இருக்கும் நாயகன் தன மனைவி, குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியான, வசதியான, முக்கியமாக நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். தன் மனைவி, குழந்தை மீது தீராத அன்பு கொண்டவனாக இருக்கிறான். ஓர் இரவு, தம்பதிகள் தன் குடும்ப நண்பரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்கிறார்கள். இதுவே படத்தின் முதல் காட்சி. விழாவில் கணவனும் மனைவியும் தனித்தனியாகப் பிரிந்து கொண்டாடுகிறார்கள். தன் மனைவி வேறொருவனுடன் இணைந்து நடனம் ஆடுவதை நாயகன் கவனிக்கிறான். தன் கணவன் வேறு இரு பெண்களுடன் இருப்பதை நாயகி கவனிக்கிறாள். அடுத்த நாள் இயல்பாகவே நகர்கிறது. இதைப் பற்றி இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அன்றிரவு இருவரும் போதைப் பொருள் ஒன்றைப் புகைத்தபடியே அன்னியோன்யமாகக் ‌காதலில் ஈடுபடுகிறார்கள். அப்பொழுது மனைவி இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறாள். இப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட உரையாடல் நடக்கிறது.


உலக சினிமா பார்த்த classic conversation-களில் இந்த உரையாடலுக்கு முதல் வரிசையில் நிச்சயம் ஓர் இடம் உண்டு (என்னைக் கேட்டால் முதல் இடமே இதற்குத் தான்). தாங்கள் சென்ற விழாவில் தன் கணவனுடன் இருந்த இரண்டு பெண்களைப் பற்றி விசாரிக்கிறாள் நாயகி. பதிலுக்குத் தன் மனைவியுடன் நடனமாடிய ஆண் யார்? அவனுக்கு என்ன தேவை? என்று விசாரிக்கிறான் நாயகன். அதன் பிறகு நடக்கும் உரையாடலின் மிகச் சுருக்கமான வடிவம் இங்கே:


நாயகி: என்னுடன் நடனமாடியவனுக்கு என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஆசை.

நாயகன்: அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில், என் மனைவி பேரழகி.

நாயகி: நான் அழகி என்பதால் என்னிடம் பேச ஆண்களுக்கு இருக்கும் ஒரே காரணம் என்னைப் புணர வேண்டும் என்பது மட்டுமே. அப்படித் தானே?

நாயகன்: அவ்வளவு நிச்சயமாக அல்ல. ஆனால் கிட்டத்தட்ட அப்படியே. ஆண்கள் எப்படியென்று நம் இருவருக்குமே தெரியும்.

நாயகி: எனில், நீ ஏன் அப்படி இல்லை? நேற்றைய விழாவில் அந்த அழகிகளுடன் நீ ஏன் உடலுறவு வைத்துக்கொள்ள நினைக்கவில்லை?

நாயகன்: ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மணந்திருக்கிறேன். உன்னை காயப்படுத்த விரும்பவில்லை.

நாயகி: எனவே நீ அவர்களிடம் உறவு கொள்ளாதது என் மீது காட்டும் இரக்கமே தவிர, உண்மையில் உறவு கொள்ள எண்ணம் இல்லாமல் இல்லை?

நாயகன்: நாம் உட்கொண்ட போதைப்பொருள் உன்னை ஆக்கிரமிக்கிறது.

நாயகி: நேரடியாக பதில் சொல், உன் மருத்துவமனையில் உன்னை ஆலோசிக்க வரும் பெண் உன்னிடம் ஆர்வம் காட்டினால் உனக்கு என்ன தோன்றும்?

நாயகன்: அப்படி நடக்க வாய்ப்பில்லை. பெண்களால் அவ்வளவு சுலபமாக அப்படி எண்ண முடியாது.

நாயகி: இது தான் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் பரிணாம வளர்ச்சியா? ஆண்களுக்கு மட்டும் சுதந்திரம், ஆசைகள் உண்டு. பெண்கள் எனில் அடங்கி இருக்க வேண்டுமா?

நாயகன்: அப்படியில்லை. ஆனால் பெண்களுக்கு பொதுவாக இப்படியான ஆசைகள் இருக்காது.

நாயகி: ஆண்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.

நாயகன்: எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.


இதன் பிறகு நாயகி தன் கணவனைப்பார்த்து நீண்ட எள்ளலோடு சிரிக்கிறாள். சிரித்துவிட்டு தான் மறைந்து வைத்திருந்த ஒரு ரகசியத்தைத் தன் கணவனிடம் சொல்கிறாள். இதில் முக்கியமான விஷயம், நாயகி வெளிப்படுத்தும் அந்த ரகசியம் ஒரு சம்பவம் கூட அல்ல. வெறும் கற்பனைகள் நிறைந்த ஓர் ஆசை. ஒருவருக்கொருவர் காதலித்து மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருக்கும்போது தன் மனைவியிடம் இருந்த ஓர் ஆழமான ஆசையை உணர்ந்தபின் தடுமாறும் ஓர் ஆணின் உளவியல் வெளிப்பாடே இப்படத்தின் மைய உணர்வு என்று சொல்லலாம். இதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் நாயகனின் மனம் எவ்வித தடுமாற்றங்களைக் கொண்டிருக்கும் என்பதை மிகத் துள்ளியமாக எதார்த்தமாக விளக்குகின்றன.


உரையாடல் முடிந்த உடனே வரும் தொலைப்பேசி அழைப்பு தன் நண்பர் ஒருவர் இறந்ததாகச் சொல்கிறது. அவரைப் பார்க்கக் கிளம்புகிறான் மனதளவில் அதிர்ச்சி கொண்ட நாயகன். இறந்தவரின் மகளுக்கு ஆறுதல் கூறுகிறான் நாயகன். அவளோ தன் தந்தையின் பிணத்திற்கு முன்னரே நாயகனை முத்தமிட்டு காதலிப்பதாகச் சொல்கிறாள். தன் காதலனைப் பிரிந்து நாயகனிடம் வாழ ஆசைப்படுவதாகச் சொல்கிறாள். சற்று நேரத்தில் அவளுடைய காதலன் அங்கே வந்ததும் நாயகன் அங்கிருந்து கிளம்புகிறான்.


அன்று நடந்த சம்பவங்கள் அவனை வெகுவாக பாதிக்கின்றன. தான் உயிருக்குயிராகக் காதலித்த, தான் முழுமையாக நம்பிய தன் மனைவியின் வினோத ரகசிய ஆசையும், அதன் பின் நடந்த சம்பவங்களும் அவனுள் ஒரு வெறுமையை நிரப்பி விடுகிறது. வாழ்க்கை மீதும், பெண்கள் மீதும் ஒரு வித வெறுப்பு கலந்த அதிருப்தி ஏற்பட்டிருக்கும் மனநிலைக்குச் செல்கிறான். நாயகன் கொண்டிருக்கும் disturbed மனநிலையை மிக இயல்பான காட்சிகளின் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறது இத்திரைப்படம்.


தான் வந்துவிட்ட வேலை முடிந்தும் நாயகன் வீடு திரும்பாமல் சாலையில் நடந்தவாறே இருக்கிறான். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவனை ஆக்கிரமிக்கும் numbness, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க விரும்பாத மனநிலை போன்றவற்றை மிக இயல்பாக புரியவைக்கிறது இப்படம். ஓர் அதிர்ச்சி மனிதனின் வாழ்வின் மீதான நம்பகத்தன்மையை எவ்வளவு எளிதாக விரட்டியடிக்கும் என்பதை நாயகனின் உணர்வுகளின் மூலமாகக் காட்டியிருக்குறார் இயக்குனர். வெறுமை, வெறுப்பு, தனிமை, அவமானம், தூக்கி எறியப்பட்ட உணர்வு, வாழ்வின் மீது பற்றின்மை போன்றவற்றை எந்த‌ வசனமும் இன்றி நேர்த்தியாக சொல்லியிப்பது ஆச்சர்யம். இதன் பிறகு வரும் சம்பவங்கள் சில க்ளாஸிக் டச்.


சாலையில் நடந்தபடியே இருக்கும் நாயகனை ஒரு விலைமாது நெருங்குகிறாள். அழைக்கிறாள். இம்மாதிரியான வெறுமை கலந்த மனநிலையில் பொதுவாக ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை ஆக்கிரமித்துக் கொள்ள நினைப்பதே மனித மனம். குறிப்பாக ஆண்களின் மனம். இதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது இக்கதை. அதுவரை நேர்மையானவனாக, வேறு எந்தப் பெண்ணையும் நெருங்காத நாயகன் இப்பொழுது விலைமாதுவின் அழைப்பை ஏற்கிறான். அவள் மூலமாக தன் வெறுமையைத் தொலைக்க நினைக்கிறான். அவள் இடத்திற்குச் சென்று அவளிடம் நெருங்க ஆரம்பிக்கும்பொழுது அவனுடைய அலைபேசிக்கு மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது. சாதாரணமாக 'வீட்டிற்கு வர நேரம் ஆகுமா?' என்று விசாரித்துவிட்டு முடித்துவிடுகிறாள். அதன்பின் அவனால் தொடர முடியவில்லை. விலை மாதுவிடம் பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறான். மனதினுள் பாதித்த ஒரு விஷயம் மனிதனை எவ்வளவு எளிதாக உள்ளிழுத்து அவனை மாற்றக்கூடியது என்பதை சூழ்நிலைகளின் மூலமாக இதனை விட சிறப்பாக யாரும் உணர்த்த முடியாது.


இதன் பின் மறுபடியும் நாயகன் வீடு திரும்ப மனமில்லாமல் வெறுமை உணர்வோடு சாலையில் நடக்கிறான். அப்போது ஒரு பாரில் தனக்குத் தெரிந்த நண்பன் பியானோ வாசிப்பதாக அறிந்து அங்கே செல்கிறான். கனமான உணர்வுகளுடன் இருக்கும் மனம் தனக்கு comfort-ஆன ஏதாவது விஷயத்தில் தன்னை ஈடுபடுத்துக்கொள்ள விரும்பும். அதன் நீட்சியே நாயகன் இவ்விடங்களுக்குச் செல்வது.


பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் மேற்கொள்ளும் அதிரடி மாற்றங்கள், வில்லனாவது அல்லது தியாகியாவது, போன்ற exaggerated பாதிப்புகளையே பதிவிட்டிருப்பார்கள். சொல்லப்போனால் மனதில் ஏற்படும் பாதிப்பையே exaggerated உணர்வுகளாகவே பெரும்பாலான படங்கள் காட்டுகின்றன. ஆனால் இப்படத்தில் நாயகன் மேற்கொள்ளும் ஒவ்வொரு சம்பவமும் அது தொடர்பாக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு மனிதனின் இயல்பான reflex. அதன் அர்த்தமும் தேவையும் அவன் மனம் அனுபவிக்கும் போராட்டங்களால் விளக்க முடிந்தவை.


பியானோ வாசிக்கும் நண்பனைச் சந்திக்கிறான் நாயகன். அவன் அன்றிரவு ஓரிடத்தில் நடக்கப்போகும் இன்னொரு சுவாராஸ்யமான நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறான். அங்கே செல்ல விருப்பப்படும் நாயகனிடம் அதன் ஆபத்தை எடுத்துச் சொல்கிறான் நண்பன். நாயகன் கேட்பதாக இல்லை. அங்கே செல்வதற்குத் தேவையான உடைகள், முகமூடி போன்றவற்றை விளக்குகிறான் நண்பன். அனைத்துயும் வாங்கி தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இரவு நிகழ்ச்சி நடக்கும் Houseக்கு செல்கிறான் நாயகன்.


இதன் பிறகு படம் ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் பாதையில் பயணிக்கிறது. ஆபத்து எனத் தெரிந்தும் தன்னை அவ்வுலகத்திற்குப் போக வைத்து விடுகிறது நாயகனின் மனம். இதற்குப் பிறகு நடக்கும் விஷயம் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். படம் முழுக்க நாயகனுடன் நம்மை பயணிக்க வைத்துவிட்ட கதை, இந்த இடத்திற்குச் சென்ற நாயகனுடன் சேர்த்து நம்மை அவ்விடத்திற்கு கொண்டு சென்று ஒரு புது உலகத்தைப் பார்ப்பது போல ஆச்சர்யப்படுத்தும். உண்மையில் இது கதாசிரியர் உருவாக்கிய புது உலகம் தான். இந்தக் காட்சி நான் பார்த்த சுவாரஸ்யமான காட்சிகளில் ஒன்று. புராண கதைகளில் நாம் விரும்பிக் கேட்டிருக்கக் கூடிய சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு படுத்தக்கூடிய காட்சி. நாயகன் உட்பட அனைவரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள். அங்கே இருப்பவர்களையும் நடக்கும் விஷயங்களையும் ஆச்சர்யமாகப் பார்க்கிறான் நாயகன். அந்த ஆச்சர்யத்தில் மூழ்கி தன் உணர்வுகளையும் நேரங்களையும் அங்கே செலவிட நினைக்கிறான். அப்போது ஒரு பெண் நாயகனை அடையாளம் கண்டுகொள்கிறாள். நாயகன் மேலும் அதிர்ச்சியடைகிறான். முகமூடி அணிதிருக்கும் தன்னை எப்படி சரியாக இந்தப் பெண்ணால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்தப் பெண் யார்? என்கிற குழப்பம் ஏற்படுகிறது. அவள் நாயகனை எச்சரிக்கிறாள். இவ்விடம் பெரும் ஆபத்து நிறைந்தது. எனவே உடனே அங்கிருந்து சென்றுவிடும்படி அறிவுரை கூறுகிறாள். அவள் சொன்னது போலவே நாயகன் சிறிது நேரத்தில் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறான். எவ்வித ஆபத்தில் சிக்குகிறான் என்பது முதல், அதிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்கிறான், தன்னைக் காப்பாற்ற நினைத்தது யார், அதற்கான காரணங்கள் என்னென்ன என்று நாயகன் கண்டுபிடிப்பது வரை அனைத்தும் சுவாரஸ்யமானவை. படத்தின் இந்த சுவாரஸ்யப் பயணம் பார்ப்பவர்களை முற்றிலுமாக ஆக்கிரமிக்கக் கூடியது.


இதன் பிறகு நாயகன் வீடு திரும்பியதும் அவன் மனைவி தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். தான் கண்ட கனவை நாயகனிடம் சொல்கிறாள். அது நாயகனை மேலும் அதிர்ச்சியாக்குகிறது. மனைவி முன்பே சொன்ன அதிர்ச்சியான ஓர் ஆசையின் நீட்சியாக இருக்கிறது அவளின் இந்தக் கனவு. நாயகனின் உணர்வுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிகிறது. கைவிடப்பட்ட நிலையில் தன்னை உணர்கிறான். மறுநாள் தான் கடந்து செல்லும் சம்பவங்களும் அவனின் உணர்வுகளை வலிமைப்படுத்துகின்றன. உலகில் அனைத்துமே காமம் நோக்கி நகர்வதாக உணர்கிறான். அன்புக்கோ, காதலுக்கோ இடமில்லாத உலகில் தான் வீசியெறியப்பட்டதாக உணர்கிறான். மீண்டும் தன்னை எதிலாவது இணைத்துக்கொள்ள முற்படுகிறான். தான் சென்று வந்த விலைமாது, தான் சந்தித்த நண்பனின் இடம், தான் சென்ற மாய உலகமான House அனைத்திற்கும் மறுபடியும் செல்கிறான். House சம்பந்தமாக தன் கேள்விகள் அனைத்திற்கும் விடை கண்டுபிடிக்கிறான். எல்லாம் முடிந்து நாயகன் அன்றிரவு வீடு திரும்பியதும். சென்ற இரவு தான் Houseக்காக வாங்கிய முகமூடி தன் மனைவி அருகில் இருப்பதைக் காண்கிறான். அழுதபடியே சென்ற இரவு நடந்த அனைத்து உண்மைகளையும் மனைவியிடம் சொல்கிறான்.


இரண்டு உணர்ச்சிமிக்க விஷயங்கள். ஒன்று - நாயகியின் வலிமையான ஆசையும் அதை ஒட்டிய கனவும். இரண்டு - நாயகன் அன்றிரவு சென்று வந்த பாதைகள். இருவருக்கும் அடுத்தவர் சொன்ன உண்மைகள் அதீத வேதனையைக் கொடுக்கிறது. மனைவியின் கனவால் பாதிக்கபட்ட கணவன். கணவனின் ஓர் இரவு நிஜ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மனைவி என்கிற மனநிலையில் இருவரும் இருக்கிறார்கள்.


க்யூப்ரிக் வசனங்களின் சிறப்பைக் குறிப்பிட்டிருந்தேன். படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெறும் வசனம்:


Wife: The reality of one night, let alone that of a whole lifetime, can ever be the whole truth.

Husband: And no dream is ever just a dream.


ஒரு கனவும், ஓரிரவு நடந்த நிஜமும் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பதையே அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் உணர்த்துகின்றன. தான் மட்டும் அறிந்த தன் வாழ்வின் அந்தரங்கமான விஷயங்களை இருவரும் பரஸ்பரம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட பின் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும். அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ். வேதனை மிகுந்த தங்கள் உணர்வுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். பின் அவர்கள் இணைகிறார்களா? பிரிகிறார்களா? என்கிற முடிவை படத்தின் கடைசி ஒற்றை வார்த்தையில் சொல்கிறார் இயக்குனர். அது – FUCK.


***

நா.ராஜூ கவிதைகள்


இன்னுமொரு காதல்


அந்த முத்தத்தில்

பலவந்தமாகச் சிப்பியைத்

திறந்து பார்க்குமொரு

மூர்க்கம் இருந்தது.


தத்தமது நிலை மீண்ட

ஆசுவாசத்திற்குப் பின்

அவனேதான் அதைக்

காதல் என்றான்.


*


இங்கு...


'நல்லாருக்கா மச்சி’ என

நண்பன் தான் எடுத்ததாகக்

காட்டிய நிழற்படத்தின் அருவி

என்னைக் குடி என்கிறது

கண்களைச் சிமிட்டி!


அதன் மாறாப் பேரிரைச்சலிலும்

அவ்வறையின் ஓரத்தில்

கவிழ்த்து வைக்கப்பட்ட

தண்ணீர் கேன்

சொட்டிக் கொண்டிருக்கும்

சத்தம் அவ்வளவு துல்லியம்.


ஆமாம், எல்லாவற்றிற்கும்

உங்களை மீறிய

ஒரு பொருளுண்டு இங்கு


இதோ இந்தப் பறவை

பாடிப் பாடி தன் துயரத்தை

அறுத்துக் கொண்டிருக்கிறது

என்பதைப் போல.


*


திரும்புதல்


முன்னெப்போதோ ஒருமுறை

பரிச்சயமாகிப் பின் நினைவில்

மரித்துப் போனவர்களை

எதிர்ப்படும் முக அடுக்குகளில் தேடலாம்.


சுயம் தொலைத்து உங்கள்

வழியில் அலையும்

பைத்தியக்க்காரர்களின்

நாளையைக் குறித்து யோசிக்கலாம்.


கண்கள் மூடி

பக்கத்து இருக்கைப் பெண்ணை

கற்பனையில் எண்ணி

இரகசியச் சல்லாபம் துய்க்கலாம்.


அல்லது அப்படியே மடித்து வைத்து

கைகளுக்குச் சிக்கிய ஏதோவொரு

பாலிதீனில் கொண்டுவந்த

ஈர ஜட்டிகளை உலர வைக்கலாம்


முன்னேற்பாடுகள் எவையுமின்றி

தன்னைத் தானே நிகழ்த்திக் கொண்டு

சிரிக்கும் பயணங்களை

வேறெப்படித்தான் வெல்வது?

***

0° F

மத்யமன்


அந்த ட்வீட்டைப் பார்த்திருக்கக்கூடாது. எல்லாம் அதில் ஆரம்பித்தது. பிழைத்துக்கிடந்தால் முதலில் ட்விட்டரையே தலைமுழுகனும். ஃபேஸ்புக்கையும் சேர்த்து. ஏன் இணையத்தையே.

பிதற்ற ஆரம்பித்திருந்தேன்.


ஒரு சோகையான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் நாள் ஆரம்பித்தது. அனு வாரயிறுதிகளில் மட்டும் ஏதாவது வக்கனையாக சமைப்பாள். அவளை நேரில் கண்டால் ’ஞாயிறு மட்டுமா’ எனக்கேட்டு, ஒரு விவாக முறிவுக்குக் காரணமாகாதீர்கள். பிசிபேளாபாத் + உருளைக்கறி என தமிழக சைவர்களின் சம்பிரதாய சண்டே சமையல். சாப்பிட்டவுடன் நினைத்தது போல் சிறுதூக்கம் போட்டிருக்க வேண்டும்.


போடாது ட்விட்டரை எட்டிப்பார்த்ததில் வந்தது வினை. ”திருவாதிரை களி & கூட்டு” - நிலாமகள் போட்ட ட்வீட். சமைத்ததை படமெடுத்து போட்டது. களி குழையாது திரிதிரியாய் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.


இன்னைக்கு திருவாதிரையா? அம்மாவுடன் இருந்தவரை திடீரென ஒரு நாள் சம்பிரதாய சமையல் இல்லாது அசட்டுத்தித்திப்புடன் ஒரு களியும், ஏழுகறி கூட்டும் சமைத்தால் அன்று திருவாதிரை. அனு எப்படி மறந்தாள்? பொதுவாய் இது போன்றவற்றை மறப்பாளில்லை. என்னை விட பக்திக்காரி. ஆனால் கேட்க இயலாது. வேலையும், குழந்தையுமாய் என்னைவிட நெருக்கடி ஜாஸ்தி.


அட, திருவாதிரை என்றால் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இருக்குமே?


தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு இயல்பாகவே சிவனிடம் ஒரு வாஞ்சை உண்டு. சிவன் சற்று கடுகடு சாமி. முருகா, கணேசா, கிருஷ்ணா என கொஞ்ச முடியாது. ஏண்டாப்பா படுத்தற என்ற உரிமைமீறல்கள் செய்ய இயலாது. ஆனால் உள்ளுக்குள் நெக்குருக வைக்கும் சாமி.


நான் ஈவினிங் கோவிலுக்கு போறேன்டி”


நான் வரமுடியாது. வந்து…”


புரியுது. நான் போறேன்”


சிவசத்தியநாராயணாவா, கற்பக விநாயகரா?”


சிவசத்தியநாராயணா கோயில் தான்”


வசிப்பது டொரான்டோ, புலம்பெயர் தமிழர் தலைநகரம் என்றபடியால் கோவில்களுக்குப் பஞ்சமில்லை. வசித்த பேட்டையிலேயே சாமிக்கு ஒன்றாய், இனக்குழுவுக்கு ஒன்றாய் கோவில். வட இந்திய ராம் மந்திர் ராமநவமிக்கு, சதுர்த்தி என்றால் கற்பக விநாயகர், எல்லா சாமிக்கும் வேகமாய் சலாம் போட்டு லட்டு பிரசாதம் என்றால் குஜராத்தி ஹிந்து சபா என இந்த ஊர் ஓர் அகண்ட பாரத விலாஸ்.


இந்த‌ சிவசத்தியநாராயணா என்பது நம்மூர்க்காரர் கோவில். சந்துரு குருக்கள் என்ற வேலூர் பக்க ஐயர் ஒருவர் முதலில் தான் வந்து காலூன்றி, கரணம் போட்டு ஒரு குடவுன் கட்டடத்தைக் கோவிலாக மாற்றி, இளையாண்குடி ஆதீனத்திலிருந்து சல்லிசாய், ரிலீஜியஸ் ப்ரீஸ்ட் விசாவில் 2 பையன்களை வரவைத்து மைக்கில் சத்தமாய் ருத்ரம் சொல்லவைத்து, ‘அர்ச்சனா ஸ்பான்ஸர்ஸ் ப்ளீஸ் பய் டிக்கட் இன் ஆபீஸ்’ என கல்லா அவர் கண்ட்ரோலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் கோவில். உள்ளே நுழைந்தால் நம்மூர் கோவில் போலவே இருப்பதால் எனக்கு பிடித்தம்.


ஆறுமணி நடைதிறப்புக்கு கிளம்புவதற்குள் இருட்டி விட்டிருந்தது. மணி ஐந்தரை கூட ஆகியிருக்கவில்லை. கனடாவின் குளிர்காலத்துக்கென ஒரு குரூர முகம் உண்டு.


ஸ்னோ பெய்யறது வெளில. எப்படி போவ?”


ரொம்பல்லாம் இல்ல. அப்படியே போயிடுவேன். இன்னிக்கு ட்ராஃபிக் இருக்காது”


அப்படியே வர்றப்ப வால்மார்ட்ல வாங்கிடு” என லிஸ்ட் வந்தது. முக்கால்வாசி பாப்பாவுக்கான பள்ளி உணவுத்தேவைகள். பாப்பாவுக்கென்றால் தட்டிக்கழிப்பதில்லை நான்.


அவசரமாய் கிளம்பியதில் உடனே கவனிக்கவில்லை. சற்றுப்போன பிறகே காரின் பெட்ரோல் இண்டிகேட்டர் கடைசிக்கோட்டுக்கும் வெளியே விட்டுவிட்டு ஒளிர்வது தெரிந்தது. விட்டுவிட்டு ஒளிர்வது பிரச்சனையில்லை. தொடர்ச்சியாக ஒளிர்ந்தால் தான் ஓடும் ஆயுசு கம்மி.


பெட்ரோகனடா சேவிங்ஸ் கார்ட் என்ற வஸ்து கையில் இருந்தததால் அவர்கள் பங்க்கை தேடிக்கொண்டே ஓட்டினேன். லிட்டருக்கு 3 செண்ட் சேமிக்கலாம். மொத்தமாய் 50 லிட்டர் போட்டால், ஒன்றரை டாலர். ஒரு டிம் ஹார்ட்டன்ஸ் வரக்காப்பிக்கு ஆயிற்று. சாலையின் நான் போகும் பக்கத்தில் ஒரு பெட்ரோகனடாவும் தென்பட காணோம். வேறு சில கம்பெனிக்காரர்கள் பங்க் தான் கண்ணில் பட்டது.


வேண்டாம், ஒரு லிட்டருக்கு 3 செண்ட். ஒரு காப்பியாச்சே. கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் ஒரு பெட்ரோகனடா பார்த்த ஞாபகம். அதுவரை தாங்கும். என் காரை பற்றி எனக்கு தெரியும். ஒரு நண்பனை போல், வாழ்க்கைத்துணையை போல், வண்டியும் பழகிவிடுகிறது. தேவைகள், அதீத அழுகைகள், எச்சரிக்கைகளை புரிந்துகொள்ள முடிகிறது. புரிந்து உதாசீனப்படுத்தவும் முடிகிறது.


கோவிலில் மிதமான கூட்டம். ஆருத்ரா தரிசனம் முடிந்துவிட்டிருந்தது. ஒரு தேர்ந்த பொம்மலாட்டகாரன் ஆட்டுவிப்பது போல், மக்கள் சாமி கும்பிட்டுவிட்டு, பிரகாரம் சுற்றிவந்து, நவக்கிரகம் சுற்றி, உண்டியலில் காசு போட்டு, பிரசாதம் வாங்கி நகர்ந்து கொண்டிருந்தனர். கழுகுப்பார்வையில் ஒருநாள் ஏதேனும் ஒரு கோவிலைக் கவனிக்க வேண்டும். மனம் ஏன் இப்படிக் கண்டதும் யோசிக்கிறது? சிவனை கவனிப்போம்.


சிவலிங்கத்துக்குப் பட்டுவேட்டி கட்டியிருந்தார்கள். கொஞ்சம் நன்றாகவே வேண்டிக்கொண்டேன். போனவருடம் பட்டபாடு அப்படி. வாழ்க்கை கடுமையாக மாறமாற மனம் எந்த உதவியையும் ஏற்க தயாராகிவிடுகிறது. கடவுளிடம் இறைஞ்சுதல் அதில் முதன்மையாய் போய்விடுகிறது. கோவிலை விட்டு கிளம்புகையில் பிரசாதத்துக்கு வைத்த களியை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டேன்.


சௌக்கியமோன்னோ” - கோவில் ஆபிசில் சந்துரு குருக்கள் தென்பட்டார்.


சௌக்கியம் மாமா”


வர்றதில்லையே ரொம்ப. வேலையோ?”


ஆமாம் மாமா, சரி கெளம்பறேன்”


ம்ம்ம்”


சந்துரு குருக்கள் தொடர்ச்சியாய் சத்தியநாராயணபூஜை, ஆஞ்சநேயருக்கு வடமாலை, வைகுண்ட ஏகாதசி, அபிஷேகம் என பலதுக்கும் 50, 100 டாலர் என உபயதாரராய் இருக்கச்சொல்லிக்கேட்டு சலித்திருந்தார். என் கோவில் செலவுகள் 2, மிஞ்சிப்போனால் 5 டாலரை தாண்டுவதில்லை. முழு அபிஷேகத்தை உட்கார்ந்து இருமணிக்கூர் பார்க்கவும் பொறுமையில்லை. இவனால் கோவிலுக்குப் பெரியதாய்ப் பிரயோஜனமில்லை என நினைத்தோ என்னவோ, ரொம்ப சௌஜன்யமாய் சிரிப்பதில்லை இப்போதெல்லாம்.


வண்டியைக் கிளப்பினேன். அடுத்தது வால்மார்ட். இல்லை பெட்ரோல். ஒரு கிலோமீட்டரில் டாம்கன் ரோடு சந்திப்பில் ஒரு பெட்ரோகனடா உண்டு. காரின் வயிற்றை ரொம்ப காயப்போடக்கூடாது. ஏற்கனவே வண்டியைப் பெரியதாய் பராமரிப்பதில்லை. சரியாய்க் கழுவுவது கூட இல்லை. ஆனால் பாவம், ஒரு பழகிய குதிரை போல் அமைதியாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும்.


வண்டி தானாய் மெதுவாகச் செல்ல தொடங்கியிருந்தது. “டேய், இப்போ வேணாம். பாலத்தை தாண்டினா…”


கேட்பதாயில்லை. விக்குவது போல சற்று அலைந்து, ஆக்சிலேட்டரை தாண்டிய சுதந்திரத்தோடு மெல்ல ஊர்ந்து நின்றே விட்டிருந்தது. சிறிது தூரத்தில் பெட்ரோகனடா ஒளிர்ந்தது. பாலம் ஏறியிருந்தால் பங்க்.


அடச்சை. மனம் வேகமாய் யோசித்தது. ஒளிர்ந்து அமிழும் எமர்ஜென்சி லைட்டை முதலில் போட்டேன்.


கும்மிருட்டில் பின்னால் வேகமாய் வந்த கார்க்காரர்கள் இடிப்பது போல் வந்து, சுதாரித்து, மனதுக்குள் திட்டி, முறைக்க என் முகம் தேடி, அடுத்த லேனுக்கு நகர்ந்துகொண்டிருந்தார்கள். யாரும் நிறுத்தவில்லை, என்ன ஏது என கேட்கவில்லை. ரோட்டில் ஈ, காக்கா இல்லை. ஒரு சாலையோர விளக்கு கூட இல்லை.


ஹீட்டர். அந்த சனியன் தான் காரணம். என் கணிப்பில் இன்னும் 5 கிலோமீட்டராவது ஓடவேண்டியது. வண்டியின் ஹீட்டர் ஃபேன் பெரியதாய் வைத்து அது மிச்சமிருந்த பெட்ரோலை வேகமாய் குடித்திருக்கிறது. வண்டியின் அத்தனை லைட்களையும் அணைத்தேன். சாவியை திருப்பி மறுபடி இயக்க முற்பட்டேன். கொஞ்சம் ஓடினால் போதும். ம்ஹூம், கார் கிளம்புவதாயில்லை.


வெளியே பனி சற்றே தடித்த வெண்துகளாய் சீராக பெய்து கொண்டிருந்தது. குளிரைப் பொருட்படுத்தாது வண்டியை விட்டுவிட்டு பங்க்குக்கு நடக்கலாம். ஆனால் காரை அப்படியெல்லாம் விட்டுவிட்டு போகக்கூடாது. போனாலும் நம்மூர் போல் 2 லிட்டர் கோக் பாட்டிலில் பிடித்து தரமாட்டான்கள்.


யாரையேனும் அழைத்தேயாக வேண்டும். ஒழுங்காய் வருடாந்திர கார் ரோட்சைட் சர்வீஸ் எடுத்துத் தொலைத்திருக்கலாம். இப்போது கூப்பிட்டால் வந்து ஒரு லிட்டர் பெட்ரோல் தர 50, 60 டாலர் தாளித்துவிடுவார்கள். ஒன்றரை டாலர் சேமிக்க ஆசைப்பட்டு 60 டாலர் செலவு.


நண்பர்கள் யரரையாவது அழைக்கலாமா என ஃபோனை நிமிண்டினேன். சட்டென கணேஷின் ஞாபகம் வந்தது. இப்படியாவது எனக்கு முதல்முறையல்ல. முன்பொரு முறையும் இதே போல் வண்டி நின்று உதவியிருக்கிறான். என்னத்துக்கோ வீட்டில் ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல் வைத்திருப்பான். கொஞ்சம் கறாராய், முன் ஜாக்கிரதையாய் வாழ்பவன்.


மச்சி சொல்லுடா”


வீட்லதான் இருக்கியா? கேஸ் தீர்ந்து போச்சு வெளீல. வெச்சுருக்கியா?”


அடப்பாவி மறுபடியுமா? ஒரு 2 லிட்டர் இருக்கும். எங்க இருக்க?”


சிவசத்தியநாராயணா கிட்டக்க. டாம்கன் ரோடு பாலத்துக்கு கொஞ்சம் முந்தி”


சிவா டெம்பிளா? அங்கதான் கெளம்பிட்டிருக்கோம்”


ஓ எப்போ வர்ற?”


சித்ரா குழந்தைகளை கிளப்பிட்டிருக்கா. அங்கயே இரு ஸ்ரீ. ஒரு 15 மினிட்ஸ்குள்ள வந்துருவேன்.”


மச்சி கொஞ்சம் சீக்கிரம் வாடா”


சற்று உயிர் வந்தது. பிரச்சனைகளுக்கு அருகிலேயே தீர்வுகளும் ஒளிந்திருக்கிறன. ஆனால் தீர்வுகளுக்கு நம்மை முடிந்தவரை சோதிக்க பிடிக்கும் போல.


வண்டியை மொத்தமாய் அணைத்தபடியால் மெல்ல உள்ளே குளிர் ஊடுருவ தொடங்கியிருந்தது. குளிரில் 15 வருடம் இருந்து பழகிப்பழகி குளிரை அலட்சியப்படுத்த தொடங்கியிருந்தேன். கோவிலில் எளிதாய் கழற்றுவதற்குத் தோதான தேசலான ஷூவை போட்டுக்கொண்டு வந்தது பிசகு. முதலில் கால் விரல்கள் விறைக்கத் தொடங்கின. உஷ்ணம் வேண்டி ஷூவுக்குள் கால் விரல்களை உராய்ந்தேன். பொதுவாய் இதுபோன்ற குளிர்கால காத்திருத்தலில் ஒன்றுக்கு வேறு வந்துவிடும். இன்று பரவாயில்லை… இல்லை அதை யோசிக்கக்கூடாது. யோசித்தால் வந்துவிடும். ஆமாம், அதெப்படி யோசித்தால் வந்துவிடுகிறது?


டேய், வந்து தொலைடா சீக்கிரம்.


சொன்ன 15 நிமிடங்கள் ஆகியிருந்தது. அலைபேசியின் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தது மனதும், கண்ணும். மனம் 15வது நிமிட முடிவில் ஒரு தீர்வை எதிர்பார்த்திருந்தபடியால், அதற்கு மேல் தாங்காமல் பரபரக்க தொடங்கியிருந்தது. குளிர் தாங்கமுடியாது ஏறிக்கொண்டிருந்தது. உடம்பைக்குறுக்கிக்கொண்டேன்.

டேய், வந்து தொலைடா சீக்கிரம்.


வெளியே -18 டிகிரி செல்ஷியஸ் காட்டியது அலைபேசி. -18 டிகிரி செல்சியஸ் என்றால் 0 டிகிரி ஃபேரன்ஹீட் வருமே? F = 9/5C + 32, C = (F-32)5/9 இந்த இரு ஃபார்முலாக்களும் மறப்பதேயில்லை ஏனோ.


டேய், வந்து தொலைடா சீக்கிரம்.


இருபத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஜாக்கெட்டில் இருந்த தலையை மூடும் ‘ஹூடி’யை இழுத்து விட்டுக்கொண்டேன். க்ளவ்ஸை தாண்டி கைவிரல்கள் குளிரில் வலிக்கத் துவங்கியிருந்தன. உடல் நாய் மேல் தண்ணீர் பட்டவுடன் சிலிர்த்துக்கொள்வது போல் சீரான இடைவெளியில் சிலிர்த்து அடங்கியது. எதிர்வழியில் வரும் ஒவ்வொரு காரின் ஒரு நொடி வெளிச்சத்திலும் கணேஷின் காரை கண்கள் தேடியது.


டேய், வந்து தொலைடா சீக்கிரம்.


வீட்டிற்கு போனவுடன் அனு என்ன சொல்வாள்? அவளிடம் சொல்லலாமா? சொல்லாது இருக்கமுடியுமா! கோவிலில் எத்தனை நேரம் இருப்பேன், வால்மார்ட்டில் எப்போது இருப்பேன் எல்லாம் ஒரு கணக்கில் வைத்திருப்பாள். எதுவும் மறைக்க முடிவதில்லை வரவர. மனதில் நினைப்பதை கூட சொல்லிவிடுகிறாள்.


அப்பவே சொன்னேன், ஸ்னோல போகாதன்னு”


அப்பவே சொன்னேன், ஒழியுது 70 டாலருக்கு ரோட்சைட் சர்வீஸ் வாங்குன்னு”


அப்பவே சொன்னேன், கேஸ் போட்டுக்கோன்னு”


அவள் திட்டினால் கூட பரவாயில்லை, வீட்டுக்கு போகவேண்டும். இங்கேயே உறைந்து சாவதற்கு அது பரவாயில்லை. ஒரு சைனீஸ்காரன் குடும்பத்துக்காக ஒரேகானில் 3 நாள் குளிரில் அலைந்து செத்தானே?


டேய், வந்து தொலைடா சீக்கிரம்.


எதிர்பக்க சாலையில் ஒரு கார் வந்து நின்றது. கணேஷ் தலை தெரிந்தது. வெகுவேகமாய் இறங்கினேன். வெளியில் காற்றோடு சேர்த்து இன்னும் ஏகத்துக்கு குளிர்ந்தது. சாலையை கடந்து அவன் காரை அடைந்தேன். அவனும் இறங்கி காரின் ட்ரன்க்கை திறந்திருந்தான். ஒரு கேனை எடுத்து நீட்டினான்.


மச்சி, 2 லிட்டர் இருக்கும்னு நினைக்கிறேன். இனி நீ பார்த்துப்பல்ல? இல்ல இருக்கனுமா?”


உள்ளிருந்து சிறிய வெளிச்சத்தில் சித்ரா புன்னகைக்க முற்பட்டாள். குழந்தைகள் கார் நின்றது தெரியாது விழித்தன. அவர்களை இதற்குமேல் படுத்தக்கூடாது.


இல்ல பார்த்துப்பேன். நீ கெளம்புடா. ரொம்ப தேன்க்ஸ்”


அதற்குப்பின் ரோட்டை கடந்து, என் காரின் டேன்க்கை திறந்து, கேனில் இருந்த பெட்ரோலை கொட்டி, டேன்க்கை மூடி, காரை உயிர்ப்பித்தது கனவு போலவே நிகழ்ந்தது. ’இர்றா, வழிய வழிய உனக்கு ஊத்தறேன்’ என கறுவிக் கொண்டே பெட்ரோகனடாவுக்கு வந்து, அந்த பிரசித்திப்பெற்ற 3 செண்ட் சேமிப்பு அட்டையை தேய்த்தால் உள்ளே கடையில் ஆளை பாரு என்றது.


இத்தனை கஷ்டப்பட்டதுக்கு அந்த 3 செண்ட்டை விடுவதாயில்லை. பங்க்குக்கு நடுவாந்திரமாய் இருந்த சிறுபெட்டிக்கடைக்கு வேகமாய் குளிரில் நடந்தேன். காரில் ஹீட்டர் உறைக்க ஆரம்பித்திராது இன்னமும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. கை, கால் விரல்கள் இரண்டும் குளிரில் எரிந்தது.

பெட்ரோகனடா கார்டு வொர்க் ஆகலை” கோர்வையாய் பேசமுடியவில்லை.


ஆமா ப்ராப்ளம். உள்ள வேலை செய்யும். நம்பர் 7 தானே? கேஸ் போட்டுட்டு உள்ள பே பண்ணிடுங்க.”


தெளிவான ஆங்கிலத்தில் சொன்னான் கடையில் இருந்தவன். சரியென வெளியேற எத்தனித்தேன்.


இருங்க. அந்த vent கீழ நில்லுங்க ஒரு நிமிஷம்”


என்ன?”


இல்ல சூடா காத்து வரும் அதுக்கு கீழே”


கடையில் இருந்தவனை இப்போதுதான் முழுதாய் பார்த்தேன். வட இந்தியனா, பாகிஸ்தானியா என சொல்லமுடியாத ஒரு தெற்காசியன். இளைஞனாக இருந்தான். இங்கு படிக்கிறான் போலும்.


கைய தூக்கி அந்த வெண்ட் கிட்ட காட்டுங்க. இன்னும் பெட்டர்”


இல்ல வெளில கொஞ்சநேரத்துக்கு குளிர்ல இருந்தேன். அதான் தாங்கமுடியலை”


புன்னகைத்து “ரிலாக்ஸ் மை ஃப்ரெண்ட்” என்றான்.


சொன்னதுபோல் கையில் நேரடியாய் உஷ்ணக்காற்று பட்டவுடன் அதற்காகவே காத்திருந்தாற்போல் விரல்கள் தன்னிச்சையாக விரிந்து சூட்டை வாங்கிக்கொண்டது.


குளிர் இப்போ பரவால்லியா” ஹிந்தியில் கேட்டான்.


ரொம்ப. உயிரே வந்தது போல இருக்கு”


உரையாடல் அறுபட்டு ஓர் அடர்த்தியான மௌனம் நிலவியது. அதற்கு மேல் ஒரு பெட்ரோல் கடைக் காரனிடம் என்ன பேச? க்ரெடிட்கார்ட் மிஷினின் சிறுசத்தம் கூட பெரிதாய் கேட்டது. பெட்ரோலுக்கு காசு தந்து கிளம்ப எத்தனித்தேன். “இப்போ என் ஷிஃப்ட் முடியற நேரம்” என மௌனத்தை கலைத்தான்.


இதை எதற்கு என்னிடம் சொல்கிறான் எனத் தெரியவில்லை - “என்ன?”


இல்ல என் ஷிஃப்ட் முடியற நேரம். இனிமே கடை இருக்காது. வெளில கேஸ் ஸ்டேஷன் மட்டுந்தான்”


நல்லது குளிருக்கு இதமாய் வீட்டுக்கு போய் தூங்கு” சின்னதாய் சிரித்தேன்.


உடனே எங்க போறது? வெளில குப்பையை மூட்டைக்கட்டி, சாமானை உள்ள வெச்சுட்டு, கொஞ்சம் ஸ்னோ க்ளியர் செஞ்சு, பஸ்சை பிடிச்சு…” என்னோடு பேசிக்கொண்டே வெளியே வந்தான்.


ஹ்ம்ம். சரி பார்ப்போம்” என என் காருக்கு நடந்தேன்.


வெளியில் விற்பனைக்கு அடுக்கியிருந்த இஞ்சின்ஆயில் கேன்களை ஒவ்வொன்றாய் கடைக்குள் கொண்டு போகத்தொடங்கினான். விழுந்திருந்த பனியைக் காற்று புழுதி போல பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. காற்று வேகத்துக்கு கண்ணாடிக் கதவை அவன் அழுத்தித் திறக்க வேண்டியிருந்தது ஒவ்வொரு முறையும்.


அவனை நோக்கி நடந்தேன். நானும் சில ஆயில் கேன்களை எடுத்து உள்ளே வைக்க ஆரம்பித்தேன்.


குளிர் இப்போது அவ்வளவாகத் தெரியவில்லை.

***

குவியொளி



(சமூக வலைதளங்களில் எழுதிக் கொண்டிருக்கும் திறமைசாலிகளை அடையாளங்காட்டும் பகுதி.)



SK செந்தில்நாதன் | ட்விட்டர் | @skclusive










































***


மாதொருபாகன் : சர்ச்சையும் போராட்டமும்

கிருஷ்ணபிரபு


போராட்டக்கார்கள் தடைசெய்யக் கோரும் மாதொருபாகனின் அடுத்த பாகங்களான அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் ஆகிய இரு நாவல்களின் முன்னுரையில் பெருமாள்முருகன் ஒரு சிறு குறிப்பை எழுதிச் சேர்த்திருக்கிறார். புத்தக வெளியீட்டில் அதனை வாசிக்கவும் செய்தார்.


அய்யா, சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என் படைப்புகள், எழுத்துக்கள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள கிடையாது. ஏன் இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை. நான் எழுதுவது எல்லாம் அசுர லோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லாரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுரமொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவுசெய்து மாயையிலிருந்து மீண்டு விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.



மாதொருபாகன் தொடர்பாகக் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக பெருமாள்முருகன் சந்திக்க நேர்ந்த மர்ம நபர்களின் செல்பேசி மிரட்டல்களும், நெருக்குதல்களும், மன அழுத்தமும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று. மனித உறவுகளின் அகச்சிக்கல்களை முன்னிறுத்தும் படைப்புகளை விட‌, மனித உறவுகளின் வாழ்வியல் பிரச்சனைகளுக்குக் காரணமான புறச்சிக்கல்களை முன்னிருத்தும் படைப்புகளுக்கு சாதிய, மத அமைப்புகளின் பின்னணியில் இயங்கும் அமைப்புகள் எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் ஆர்பாட்டங்கள் செய்வதும் சமூகப் பின்புலத்தின் இழிநிலையைத் தான் காட்டுகிறது. தமுஎகச போன்ற முற்போக்கு அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி உடனடியாக ஆதரவு தெரிவித்தது படைப்புச் சூழலின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.


கால இடைவெளியில் ஏதேனும் ஓர் இலக்கியப் படைப்பு – இலக்கியச் சூழலுக்கு வெளியிலும், வாசகச் சூழலுக்கு வெளியிலும் பரபரப்புடன் பேசப்படுவது கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முகமது மீரான்), கருக்கு (பாமா), கோவேறுக் கழுதைகள் (இமையம்), ஆழிசூழ் உலகு (ஜோ டி குரூஸ்) போன்ற நவீன படைப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த வரிசையில், இந்துத்துவ அமைப்புகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக மேற்கூறிய பரபரப்புப் பட்டியலில் மாதொருபாகன் என்ற நாவலும் சேர்ந்திருக்கிறது.


நாவல்கள் தான் இதுபோன்ற பரபரப்புக்குப் பெரும்பாலும் உள்ளாகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் “நாவலானது வாழ்வின் முழுமையைக் குறியாகக் கொள்ளவேண்டும்” என்பது நாவலின் அடிப்படைகளுள் ஒன்று. தனிமனித வாழ்வின் முழுமையானது, அவனை / அவளைச் சார்த்த கலாச்சாரப் பின்னணியுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்திய கலாச்சாரம் பலநூறு சாதிகளையும், பலநூறு வழிபாடுகளையும் கொண்டது. எனினும் வண்டிச் சக்கரம் போல மதமும் சாதியும் அமைந்திருக்கின்றன.


மதமும் சாதியும் பின்னிப்பிணைந்த நாகங்களுக்கு ஒப்பானவை; கோரத்தை சாத்தியப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை; நஞ்சினை சுரக்கும் திசுக்களையும், அதன் நச்சுத்தன்மையைச் சமூகத்திற்குக் கடத்தும் கூரிய பற்களையும் கொண்டவை. அதனால் தான் மதமும் சாதியும் பின்னிருந்து இயக்கக்கூடிய சக்திகளால் கலாச்சாரத்தின் எதிர்பரிமாணங்களைத் தம் படைப்புகளில் யதார்த்தமாகப் பதிவு செய்யும் படைப்பாளிகள் நேரடியாகவே மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தொடர்ந்த நெருக்குதல்களுக்கும் ஆளாகிறார்கள். அவர்களது படைப்பினை தடை செய்யக் கோரியும், எழுத்தாளரைக் கைது செய்யக் கோரியும் சாதிய, மத அமைப்புகள் சமூகத்தின் முன் நின்று அந்தப் படைப்பாளிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.


கலாச்சாரமானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம், சூழலுக்குச் சூழல் மாறக்கூடியது. உதாரணமாக, ஐரோப்பியப் பழங்குடியினர்களில் ஒருவகையினர் பனிமலையில் கூடாரம் அடித்து வாழ்பவர்கள். அவர்கள் வழக்கப்படி வீட்டிற்கு உறவினர் வந்து அன்றைய இரவு தங்கினால், விருந்தினருக்குத் தனது மனைவியை படுக்கைக்கு அனுப்ப வேண்டும். இது அவர்களது தொன்மப்பழக்கம். நமக்கு வேண்டுமெனில் இச்செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இப்பழங்குடியினர்களைப் பற்றி எழுதும்போது இந்த‌ விஷயத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை தற்கால பழங்குடியினர் இந்தப் பழக்கத்தைத் துறந்து நாகரீக வாழ்வை மேற்கொள்ளலாம். வரலாற்றின் வேர் பிடித்துப் பார்க்கும் பொழுது நமக்கு அன்னியப்பட்ட அதிர்ச்சிகள் நிறையவே காத்திருக்கும். அதற்காக வரலாற்றினை இருட்டடிப்பு செய்ய முடியாதே!


வேத காலத்திலிருந்தே நியோக முறை இருக்கிறது. மகாபாரத்தில் கூட அம்பிகையும் அம்பாலிகையும் வியாசனிடமிருந்து விந்துதானம் பெற்றிருக்கிறார்கள். குந்தியும் மாந்திரியும் கூட தமது புதல்வர்களைப் பாண்டுவிற்குப் பெற்றெடுக்கவில்லை. இவையாவும், இந்துத்துவ அமைப்புகள் தேசிய நூலாக அறிவிக்கத் துடிக்கும் பகவத் கீதை இடம்பெற்றுள்ள‌ இதிகாசமான‌ மகாபாரதத்தில் வரக்கூடிய சாரமுள்ள தகவல்கள்.


போலவே, மாதொருபாகன் நாவலிலும் மகப்பேறற்ற‌ தம்பதிகளின் உளவியல் சிக்கல்களை முன்வைப்பதே படைப்பின் மையக்கரு என்று எடுத்துக்கொண்டாலும், குழந்தையற்ற பெண்கள் திருச்செங்கோடு மலைக் கோவிலில் நடக்கும் திருவிழாவில் பரிட்சியமற்ற ஒருவனிடமிருந்து சடங்கின் பெயரால் விந்து தானம் பெறுவது தான் நாவலின் துணை மையக்கரு. நாவல் இதனை நுட்பமாகப் பதிவு செய்கிறது.


அதனால் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பெருமாள்முருகனுக்கு நெருக்குதல் கொடுக்கிறார்கள். புத்தகப் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், எழுத்தாளரின் உருவத்தினை செருப்பால் அடித்தும் போராட்டம் செய்திருக்கிறார்கள். மாதொருபாகன் நாவலைத்தடை செய்யக்கோரியும், இந்நாவலின் அடுத்த பாகங்களான ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி ஆகிய நாவல்களின் முதற்பதிப்பை வெளியிடத் தடை செய்யக் கோரியும் குரலெழுப்பி ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்கிறார்கள்.


நிலப்பரப்பின் நீட்சியைப் பதிவு செய்வதினூடே, எளிய மனிதர்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் பதிவு செய்வது பெருமாள்முருகனின் தனிச் சிறப்புகளில் ஒன்று. நிழல்முற்றம் தவிர்த்து, ஏறுவெயில், கங்கணம், கூள மாதாரி, மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி, பூக்குழி ஆகிய எல்லா நாவல்களிலும் இந்தச் சிறப்பினை நாம் காண முடியும். இப்படைப்புகள் யாவும் கிராமங்களையும், சிறு நகரத்தையும் களமாகக் கொண்டவை. பல்வேறு காலகட்டங்களில் நிகழ்பவை. விவசாயிகளும், கூலியாட்களும், அந்தந்தக் கால கட்ட‌த்திற்கேற்ப வாழ்வினை எதிர்கொள்ளும் சிறுவியாபாரிகளுமே பாத்திரங்களாக உலவுகிறார்கள்.


மாதொருபாகன் 2010-ம் ஆண்டு வெளியான, சைவ கலாச்சார வழிபாட்டுடன் தொடர்புடைய ஆவணப் புனைவு. இந்நாவலின் ஆங்கில மொழியாக்கம் கடந்த ஆண்டு வெளியாகி, மிக விரைவில் இரண்டாம் பதிப்பும் கண்டு வாசக கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்புதினத்தில் வரும் மையப் பாத்திரங்களான காளியும் பொன்னாவும் குழந்தையில்லாத் தம்பதிகள். இவர்களது ஆழ்மனச் சிக்கல்களையும், அதற்கான தீர்வினை நோக்கியும் வாய்மொழி வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாக சர்ச்சைக்குள்ளான இந்நாவல் முன்வைக்கப்பட்டுள்ளது.


ஆங்கிலேயர்கள் காலத்தில் நடப்பதாகக் கதையும் பின்னப்பட்டுள்ளது. காளியும் பொன்னாவும் ஒருவரையொருவர் அளவு கடந்து நேசிக்கிறார்கள். தான் உயிருக்குயிராக விரும்பும் மனைவியைக் குழந்தைச் செல்வம் பெறுவதற்காக வேண்டி இன்னொருவனிடம் உடலுறவு கொள்ள அனுப்புவதைக் காளியின் மனம் ஏற்க மறுக்கிறது. இத்தனைக்கும் காம வேட்கையில் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு தனது பதின்பருவங்களில் சாமியாகச் சென்றவன் தான் காளி. குழந்தை இல்லாததைக் காரணம் காட்டித் தன்னிடமிருந்து காளியைப் பிரித்து விடுவார்களோ என்று உள்ளுக்குள் குமுறுகிறாள் பொன்னா. வெளிபடுத்த முடியாத எண்ணங்களால் அவர்களது உறவில் மர்ம விரிசல் ஏற்படுகிறது. இதனைப் பயன்படுத்தி பொன்னாவை 14-ம் நாள் தேர்த்திருவிழாவிற்கு அனுப்பிவிடுகிறார்கள்.


திருச்செங்கோடு மலையில் அர்த்தனாரியாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அர்த்தனாரியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒரே தெய்வத் திருத்தல‌மும் இதுதான் என்பது கோவிலின் தனிச் சிறப்புகளுள் ஒன்று. இந்த மலைக்கோவிலில் நடக்கும் 14 நாள் தேர்த் திருவிழாவானது பல்வேறு கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கி இருந்தாலும், 14-ஆம் நாளின் இரவுச் சடங்கு கல்யாணமாகியும் குழந்தையில்லாத பெண்களுக்கான விழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருநாள் மட்டும் குடும்பத்தார் அவளைத் தனித்து விட்டு விடுகிறார்கள். இரவுநேரத் திருவிழாவில் சுற்றித் திரியும் அவள், தனக்குப் பிடித்த ஒருவனைத் தேர்வு செய்து அன்றைய தினம் மட்டும் உடலுறவில் ஈடுபடலாம். திருவிழாவிற்கு வரும் ஆண்கள் எல்லோரும் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு வரவேண்டும். அப்படி வருபவர்களை சாமியாகக் கருதி, அவனிடமிருந்து விந்து தானம் பெற்று குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அப்படிப் பிறக்கும் குழந்தைகளை “சாமி புள்ள” என்று சொல்லி வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.


தமிழ்ப் பழங்குடியினரின் இனக்குழு வாழ்வு தாய்வழிக் கலாச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டதென மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆதி தமிழ்ப்பெண் தனக்குப் பிடித்த ஆண்களை சேர்த்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். பிடித்தவர்களுடன் உறவு பாராட்டியிருக்கிறாள் என்றும் கூறுகிறார்கள். விவசாயத்தை வாழ்வின் ஆதாரமாகக் கொண்ட சமூக வாழ்வு, குடும்ப கட்டமைப்பிற்கும், அதன் நீட்சியாக தந்தை வழிக் கலாச்சாரம் உருவாகவும் வித்திட்டிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் பின்னணியில் இயற்கை சார்ந்த சிறுதெய்வ வழிபாடும், அதன் பின்னர் பெருந்தெய்வ வழிபாடும் தோற்றம் கொண்டது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றும் கூட சில பழங்குடியினரிடம் இந்த முறை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன‌. ஆய்வாளர்கள் முன்னிறுத்தும் இந்தத் தொன்மைப் பின்னணியின் உதவி கொண்டுதான் சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் நாவலை நாம் கவனத்தில் கொள்ள் வேண்டும்.


நாவலின் முழு பக்கங்களையும் படிக்காமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே படிப்பது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும். அதற்கான வேலையைத் தான் சில அமைப்புகள் செய்துகொண்டு இருக்கின்றன. அதற்கான ஆதாயங்களும் காரணங்களும் அந்தந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கலாம். எனினும் படைப்பாளிகளை இது போன்ற செயல்கள் தான் முடக்குகின்றன. பெருமாள்முருகன் முகநூலில் எழுதியிருந்த நினைத்தகவல் அதற்கொரு உதாரணம்:


ஒருமுறை வாரணாசியில் அப்போதைய வைஸ்ராய் பங்கேற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியடிகள் பேசினார். வைஸ்ராய் வருகைக்காகப் பொதுமக்களுக்கு இடையூறு நேரும் வகையில் செய்திருந்த ஏற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து அவர் பேசினார். ‘பொதுமக்களின் ஒருநாள் வாழ்க்கையைவிட வைஸ்ராயின் உயிர் ஒன்றும் பெரிதல்ல’ என்னும் கருத்துப்பட அவர் பேச்சு அமைந்தது. காந்தியடிகளிடம் இருந்து நான் இந்தச் செய்தியை எடுத்துக்கொள்கிறேன். திருச்செங்கோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைவிட என் புத்தகம் ஒன்றும் பெரிதல்ல என்று கருதுகிறேன். நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப்பெயரையும் அதன் அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப்பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.


அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப்பெயரையும் அடையாளங்களையும் நீக்கித் திருச்செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


படைப்பாளிக்கும் படைப்பிற்கும் இதுபோன்ற சம்பவங்கள் துர்விதிகள். கால இடைவெளிகள் துர்விதிகளை பிரசிவித்துக்கொண்டே இருக்கின்றன. இதனை மீறியே படைப்பாளிகள் பயணிக்க வேண்டி இருக்கிறது.

*


அழுத்தங்களைத் தொடர்ந்து பெருமாள்முருகன் இனி எழுதப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்:


எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுளல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.


பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:


1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.


அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.


(மிரட்டல்கள்வழி படைப்பாளியின் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சிகள் அரசியல் சாசனத்துக்கெதிரானவை. இதில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும், ஆதரிக்கும் தனிநபர்களுக்கும் ‘தமிழ்’ இதழ் கண்டனத்தைப் பதிகிறது. சமகால தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவரான‌ பெருமாள்முருகன் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் எழுதவேண்டும். அதற்கு வேண்டிய மனோபலமும், ஆதரவும் அவருக்குக் கிட்டட்டும். – ஆசிரியர்)


***


ஓர் ஆண் - ஒரு பெண்
அசோகர்


பிறர் கவிதை விமர்சனத்தில்
எலியட், ஷெல்லி வம்பிற்கிழுப்பேன்
கலாச்சாரத்தின் பிரவாகப் பள்ளத்தில்
தாஸ்தாயெவ்ஸ்கி நிறைந்துள்ளார் என்பாய்

பெண்ணின் மனது
கற்றிட வேண்டிய வெற்றிடம் என்பேன்
ஆண்கள் காற்றில்
சுற்றிட வேண்டிய வெற்றுத்தாள் என்பாய்

அமெரிக்கப் பொருளாதார வீழ்விற்கு
ஹிட்லரின் மரணத்தை காரணமாக்குவாய்
மாங்காய் விலைச் சரிவிற்கும்
மார்க்சியத்திற்கும் தொடர்புள்ளதென்பேன்

பேருந்தின் நெரிசல் பயணத்தின்
வியர்வையில் நசுங்கி மீண்ட உனை
நீ அழகென நானுரைத்தபோது
அழகென்பது விழிவழி
வெளிவந்த பார்வைவலி என்பாய்

வாகனம் ஓய்ந்த பாலத்தினொரு
சாயங்கால நடையில்
எனைப் பிடிக்குமென நீ பகர்ந்தபோது
பிடிப்பதும் பிடிக்காதிருப்பதும்
மனப்பிறழ்வின் நெகிழ்தகவு என்பேன்

புரிதலில் சிலபடிகள் கடந்தவொரு
தூக்கம் தொலைத்த தொலையுரையாடலில்
காதல் துளிர்ப்பதற்கும்
கத்திரி சாகுபடிக்குமான
ஒப்புமை குறியீடுகளில் மூழ்கித் திளைப்போம்

அறிவு ஜீவியாய் நீடித்திருப்பது
அலுப்புத் தரும் விஷயம் தான்


வாயேன் காதலிப்போம்!


***

கானல்

மீனம்மா க‌யல்


மணி 5:00


லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது, செல்போன் டவர் விட்டு விட்டுக் கிடைத்தது. சார்ஜும் இல்லை. அடச்சை, இந்த நேரத்தில் தான் பெட்ரோல் தீர்ந்து போகனுமா என‌ ஆக்டிவாவின் தலை மேல் ஒரு குட்டு குட்டி விட்டு, ''இன்னைக்கு மழ கொல்லப் போகுது பாரேன்'' என்ற‌ குரல் கேட்டு திரும்பினாள்.


காட்டு வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் நடையும் ஓட்டமுமாய் வானத்தைப் பார்த்தபடி பேசிச் சென்றுகொண்டிருந்தனர். இவளும் அண்ணாந்து பார்த்து, உண்மைலேயே வருமோ என்று நினைக்கையில் ஒரு சொட்டு மழை அவள் அணிந்திருந்த குளிர்க்கண்ணாடியில் பட்டுச் சிதறியது.


எங்கோ மின்னல் வெட்டி ஒளி, இடி இடிக்கும் சப்தம், ஆள் நடமாட்டம் குறைந்து போனது, இவை எல்லாமே இனம் புரியாத ஒருவித பயத்தை அவளின் உள்ளங்காலில் ஏற்றியது.

செல்போன் ‘அயிகிரி நந்தினி நந்தித மேதினி’ எனக் கூப்பிட்டதும் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து யாரென்று பார்த்தாள், திரையில் ‘எருமை’ என ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது.


ஹலோ”


சனியனே எவ்வளோ நேரன்டி வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்து தொலை, மழை வேற வந்திட்டு இருக்கு.”


ஏ லூசு வண்டில பெட்ரோல் இல்லடி. உங்க ஊருக்கு வர்ற வழியில தான் எங்கேயோ நிக்கறேன். டவர் வேற இல்ல, எல்லாம் என் நேரம், இந்தப்பயல வண்டிய எடுக்கக்கூடாதுனு சொல்லிருந்தேன். எடுத்துட்டு போயி பெட்ரோல பூராம் தீர்த்துருக்கான்.”


எங்க நிக்கியோ அங்கேயே நில்லு, அப்பாவ எதுத்தாப்ல வர சொல்லுதேன்.”


அவள் சொல்லி முடிக்கவும் செல்ஃபோன் லோ பேட்டரியில் ஷ‌ட்டவுன் ஆகவும் சரியாக இருந்தது.


பத்தொன்பது வயதிற்கே உண்டான சகல வித வளர்ச்சிகளை மறைக்க முயன்று தோற்கும் ஆடைகளோடு அவ்வப்போது காற்று சில்மிஷம் செய்துகொண்டிருந்தது, சுடிதாரைக் கூட்டி எடுத்து கால்களின் இடையில் திணித்துக்கொண்டு, துப்பட்டாவை பரதநாட்டிய ஸ்டைலில் கட்டி ஆக்டிவாவின் மேல் சாய்ந்து நின்றாள்.


யாராவது பைக்கில் வந்தால் அவர்களிடம் பெட்ரோல் கடன் கேட்கலாம். யோசிக்கும் போதே சொல்லி வைத்தாற்போல் புல்லட் சப்தம். டுப்டுப்டுப் என ஒலி தேய்ந்து இவள் அருகில் வந்து நின்றது.


சரியென மனதில் பிம்பம் தராத‌ இரண்டு இளைஞர்கள். பார்வையால் அவளை அளவிட்டபடியே


யார் வீட்டுக்கு போணும்? இங்க எதுக்கு நிக்கறிக?”


பக்கென்று மனம் கனத்தாலும் “பெட்ரோல் இல்ல! ஃபிரண்டோட அப்பா வந்துட்டு இருக்காங்க.”


தைரியம் கூட்டிச் சொன்னாள், துப்பட்டாவை சரி செய்தபடி.


சரி வாரோம்”


கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த கிளிவேஜைப் பார்த்தபடி பூடகமாகச் சிரித்து புல்லட்டை கிளப்பினான்.


இன்கே நின்று நேரத்தைக் கொல்வதற்கு பதிலாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போனால் என்ன? யோசனை சரியெனப்படவே வண்டியை தள்ளலானாள்.


தீடிரென்று உள்ளுணர்வு சொல்லிற்று. யாரோ பின்புறத்தை ரசிப்பதாக. இத்தனை குளிர்ந்த காற்றிலும் மார்புக்கூடெங்கும் வெப்பம் பரவ, வறண்ட தொண்டையை ஈராமாக்கியபடியே திரும்பிப் பார்த்தாள்.


நூறடி தொலைவில் ஐம்பது வயதை ஒட்டிய ஒருவன், ஆடைகள் நைந்து போன நிலையில் இவளையே வெறிக்கப் பார்த்து பின் தொடர்ந்துகொண்டிருந்தான். திக்கென அதிர்ந்து, குப்பென வியர்த்தாள்.


*


மணி 5:30


தாயீ, பாதைல உன் பிரண்ட காணோமே! ரெம்ப தூரம் போயி பார்த்துட்டேன். எந்த வழியா வாரேன்னு சொன்னாளா? போன் போட்டு சரியா கேளு.” பதட்டத்துடனேதான் பேசினார்.


அப்பா! ஃபோன் ஸ்விட்ச் ஆப் ஆகிருக்குப்பா” சொன்னதுதான் தாமதம், உறங்கிகொண்டிருந்த மகனை எழுப்பி விட்டு,


ஏலே ஏய் எந்தி சைக்கிள எடுத்துட்டு தெக்கால போயி தாயோட கூடப்படிச்ச பொண்ணு நிக்குதான்னு பார்த்துட்டு வா!” அவசரமாக ஆணை பிறப்பித்தார்.


எப்பா மழை சன்னமா பேயுது எப்படி போறதாம்? நான் போமாட்டேன்!”


பொட்டப்புள்ள ஒத்தைல நிக்குது. தாயி வேற அழுதுட்டு இருக்கா? மூணு மாசம் முன்ன போஸ்ட் மேன் மகளுக்கு நடந்தது யாவமிருக்கா இல்லையா?”

அப்படிலாம் அந்த புள்ளைக்கு ஒண்ணும் ஆகாதுப்பா”


ஆகக்கூடாதுன்னா சீக்கிரம் கிளம்பு உன் கூட்டாளிக ரெண்டு பேர கூட சேர்த்துக்க.”


தகப்பனும் மகனும் ஆளுக்கொரு திசையில் தேடச் சென்றனர்.


*


மணி 5:45


மாதவிடாயின் முதல் நாள் அடிவயிற்றின் மூலாதார அவஸ்தை, பார்ப்பவர்கள் மீதெல்லாம் எரிச்சலாய் வெளிப்படும். அதே நிலையைத் தற்போது உணர்ந்துகொண்டிருந்தாள், நடையின் வேகத்தைக் கூட்டியதில் மூச்சு வாங்கியது, இறுக்கமாக ஹேன்டில் பாரை பிடித்திருந்தாலும் கை நடுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கால்களின் கீழ் பூமி நழுவுவதாய்ப் பிரமை. பள்ளியில் டென்ஷ‌ன் ஆகி ஒருமுறை மயங்கி விழுந்ததை நினைத்துக்கொண்டாள். அப்படி எதுவும் ஆகிடக்கூடாதென வேண்டிக்கொண்டாள்.


சொட்டுச் சொட்டாய் ச் சொட்டிய மழை இப்போது தன் தீவிரத்தைத் துவக்கியது, ஒதுங்க அரச மரம் தேடுவதற்குள் தெப்பமாய் நனைந்து விட்டாள்.


மரத்தடியில் நிற்கவா? வேண்டாமா? என்று குழம்பியபடியே திரும்பி பார்த்தாள். 'நல்ல வேளை கிழவன் போய்ட்டான். அவனைப் பார்த்து பயந்தோமே என தன்னைத்தானே திட்டிக்கொண்டு வண்டியை ஸ்டாண்ட் போட்டு, உடலோடு ஒட்டியிருந்த ஆடைகளைப் பிரித்து விட்டாள். கருப்பு பிராவில், மழை வெளிச்சம் போட்டது. துப்பட்டாவை வண்டியின் மேல் காயப்போட்டு, சுடிதாரின் நுனிப்பகுதியை குனிந்து பிழிந்து நிமிர்ந்தாள். ரோட்டின் எதிர்பக்கம் பற்களெல்லாம் கரையாய் சிரித்துக்கொண்டிருந்தான் கிழவன்.


தொலைவாய் புல்லட் சப்தம்.


*


மணி 6.30


ஏ பிள்ள அப்பாவ எங்க?”

இன்னும் வரலண்ணே. என்னாச்சுன்னேண்ணே?” விசும்பியபடியே கேட்டாள்.


அதுலாம் ஒண்ணுமில்ல. இந்தா வாரேன்” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வடக்கால் கிளம்பினான்.


எப்பா தெக்க நாலு மைல்ல ஒரு வெள்ள வண்டி கிடக்குப்பா. துப்பட்டாவும் செருப்பும் அங்கனதான் கிடக்குது.”


எனக்கென்னமோ பயமா இருக்கு. நம்ம வீட்டுக்கு வந்ததுன்னு விசாரணைல தெரிஞ்சா ஏதும் பிரச்சினை வருமாப்பா?” என்று கேட்டவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.


'நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கு. அதுவும் உனக்கு தங்கச்சிதான்”


“…”

வண்டி எந்த பக்கமா கிடந்துச்சு?”


என்னதுப்பா?”


முன்னாடி பைதா எங்கிட்டு பார்க்க கிடந்த்துச்சுல?”

வடக்க பார்த்து”


இந்தப் பக்கம் ஆரும் வரல அப்ப தெக்கூர் பக்கம்தான் போயிருக்கனும். நான் முன்ன போறேன் நீ நம்மாட்கள கூட்டியா!”

தாயோளி, இன்னைக்கு எவன்னு கண்டுபிடிச்சு அவன் சங்க அறுக்கறேன்.”


*


மணி 6.00


மூளையின் அத்துணை பாகங்களும் ஒரு கணம் ஸ்தம்பித்து மீண்டது. ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை, வந்த வழியிலேயே உயிரை கையில் பிடித்தபடி ஓடினாள்.


கிழவனும் பின்னாடியே ஓடி வந்தான். அவளின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து இந்த வயதில் இப்படி ஓடவைத்தது வெறியாகத்தான் இருக்கவேண்டும். எந்த மனிதனையும், எந்த வயதிலும், எந்த இடத்திலும், எந்தக் கீழ்மையும் செய்ய வைத்திடும் வெறி.


அப்போது தான் கவனித்தாள், புல்லட்டின் சப்தம் மெல்ல மெல்ல மறைந்து விட்டிருப்பதை.


தெக்கூரின் எல்லையை தொடும் போது மழை ஓரளவு நின்றிருந்தது. பெட்டிகடைகளில் தம் அடித்துக் கொண்டிருந்தவர்கள் இவள் வரும் கோலத்தை பார்த்து என்ன ஏதென்று விசாரிக்க தொடங்கினர். கோலம் போட வந்த பெண்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவசாப்டுத்தினர். கிழவனும் பின்னாலேயே வந்து விட்டான்.

மேலும் கேட்கவும் சொல்ல தொடங்கினாள். எல்லாரும் கெக்கே பிக்கே என சிரித்து “இந்தப்பைத்தியத்தைப் பார்த்தா பயந்தே” எனச் சொல்ல‌, இவளுக்கு கோபம் ஏறியது. இவ்வளவு நேரம் பட்ட அவஸ்தை ஒரு பைத்தியத்தாலா. அவமானமும் கோபமும் ஒருசேர எழ கிழவனின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் “இந்தப் பெருசுக்கு இதே வேலையா போச்சு. வயசு பிள்ளைக பின்னாடியே திரியறது. இப்படியே விட்டா சரிபடாது நாலு சாத்து சாத்துனாதான் ஒழுங்கா இருக்கும்” என்று சொல்ல,


இன்னும் சில ஜோடிக் கைகள் சேர்ந்து கிழவனை அடிக்கத்தொடங்கியது.


*


மணி 7.00


, தாயி இந்தாருக்கால்ல. யப்பாடி இப்பதான் நிம்மதில. என்னல வழி மாறிட்டியா? உன்னைய தேடி பெரிய கலோபரமே ஆகிட்டு.”


ஒண்ணுமில்லப்பா இந்த பைத்தியதாலதான் இவ்வளோ பிரச்சினையும்” எரிச்சல் கலந்தே சொன்னாள்.


கைகாட்டிய இடத்தில் கிழவன் சுருண்டு கிடந்தான், மேலெல்லாம் ரத்த சிராய்ப்பு, உதடு பிய்ந்திருந்தது, மேலாடை கிழிந்து நூலாய் தொங்கிக்கொண்டிருந்தது., மேலே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

உற்று பார்த்து கதறினார்.

ஐயோ போஸ்ட்மேன்”


என்ன ஆச்சு?”

இவர ஏன்டா அடிச்சிங்க?”


அந்த பொண்ணுக்கிட்டயே கேளுங்க”


கேட்க எத்தனித்தவரை கைப்பிடித்து இழுத்து மூன்று மாதங்களுக்கு பின் முதல்முறையாக பேசினான்.


''இந்த மகள நான் காப்பாத்திட்டேன்''


சொல்லிவிட்டு சிரித்து சிரித்து குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தார் அந்த பைத்தியக்கார கிழவர்.


***

சங்கத்தமிழ் FOR DUMMIES

கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)


தமிழ் என்னும் ஆறு, இன்றும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. சங்க இலக்கியம் அந்த ஆற்றின் அடியில் உள்ள ஊற்று. சில நேரங்களில், ஆற்றில் நீரில்லை எனினும், ஊற்று சுரக்கும்!


சங்கத் தமிழ் - 2500+ கவிதைகள்; 700+ கவிஞர்கள். மன்னன் x கள்வன், தலைவி x பரத்தை, ஆண் x பெண் - அனைவரின் எழுத்தும் அவையேறும்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!


சங்கத் தமிழாற்றில் குளிக்க வேண்டுமெனில் என்ன தேவை? ஒன்றுமே தேவையில்லை, உங்கள் டாம்பீக உடுப்பைக் கழற்றிக் குதிக்க வேண்டும். அவ்வளவு தான்! யாப்பு - சோப்பு, Life Jacket ஒன்றும் வேண்டாம். மனசுக்குள் காதல் இருந்தால் போதும் – சில்லென‌ இறங்கிச் சிலுசிலுவெனக் குளிக்கலாம்! காதல் - காமம், அன்பு – பகை, குடும்பம் - அலுவல், போர் – அமைதி, ஆட்சி - வணிகம், இன்னும் பலப்பல.


சங்க இலக்கியம் - இது ஒரு வாழ்வு! தொல் தமிழ் வாழ்வு!


*


சங்கத் தமிழ் வாசிக்க இலக்கணம் தேவையா? தேவை இல்லை. இலக்கியம், இலக்கணம், இரண்டும் தொடர்புள்ளவை. இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம் கிளைக்கும் (Standards). இலக்கணத்தை ஒட்டி, மற்ற இலக்கியங்கள் நடக்கும் (Life). As life progresses, new standards evolve. இது ஒரு தொடர் ஓட்டம்!


இலக்கியம் = இலக்கு + இயம் = இலக்கை இயம்புவது
இலக்கணம் = இலக்கு + அணம் = இலக்கை அடைய வழி அமைப்பது (அணம் - வழி)


நான் ஓர் இலக்கியம் எழுத வேண்டும். என் இலக்கு என்ன? 1) புகழ்சால் பத்தினி உலகம் போற்றும் 2) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் 3) ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். இது தான் இலக்கு! அதை இயம்பியாகி விட்டது (இலக்கு + இயம்). இந்த இலக்கை எப்படி அடைவது?


என்ன மாதிரி நாடகம்? என்ன காட்சிகள்? எங்கெல்லாம் இசை, பண் வர வேண்டும்? சீற்றத்தை எப்படி வல்லின ஓசையில் காட்டுவது? காதலை எப்படி மெல்லின ஓசையில் காட்டுவது? எதையெல்லாம் சேர்த்துக் கட்டினால், இலக்கை அடைய அணம் (வழி) கிடைக்கும்? (இலக்கு + அணம்).


*


தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் முதுகுருகு, முதுநாரை. இவை கிடைக்கவில்லை! கைக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் (கிமு 700க்கும் முன்னால்). பேரில் காப்பியம் என‌ இருந்தாலும், இது ஓர் இலக்கணக் காப்பியம். தொல்காப்பியமே தமிழுக்கு ஒரு செவ்விய அடித்தளம்!


சங்க இலக்கியம் என நாம் இன்று காண்பது பெரும்பாலும் கடைச்சங்க காலம் (கிமு 300). தொல்காப்பியம் இடைச் சங்கம் (கிமு 700). அதற்கும் முன்பே இருந்தது தலைச்சங்கம் எனும் முதற் சங்கம்.


சங்கம் என்பதே வடசொல்லோ? என்றொரு ஐயம் கூட எழுப்பப்பட்டதுண்டு. வடசொல் "ஸங்கமம்" வேறு; தமிழில் "சங்கம்" வேறு. (ஸ்கந்தன் - கந்தன் போலத் தான் இதுவும். பின்னாள் புராணத்தால், இரு பெயர்களும் முருகனையே குறிக்கத் துவங்கி விட்டாலும், இரு பெயர்களும் வேறு; பொருளும் வேறு!)


விளக்கின் ஒளியில் பெறுவது விளக்கம். அதே போல், சங்கு ஒலித்து ஒழுங்கு பெறும் அவை சங்கம்.


*


சங்க இலக்கியத்தின் அடிப்படைக் கூறு திணை: 1) அகம் - of the self (internal) 2) புறம் - of the world (external). திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள் - அக ஒழுக்கம், புற ஒழுக்கம்! திணையின் உட்பகுதி துறை.


அகத்திணை: 7 (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை). புறத்திணை: 10+ (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண் etc). திணைப் பெயர்களைக் கவனியுங்கள் - பலவும் பூக்களின் பெயர்கள். தமிழ் இலக்கியக் கூறுகள் இயற்கையை ஒட்டியே!


பத்துத் தலை அசுரன், பன்னிரெண்டு கை சாமி என்றெல்லாம் இயற்கைக்கு மாறான "புராண unbelievables" ஆதித்தமிழில் இல்லை! பின்னாள் சேர்க்கையே.


*


சங்க இலக்கியத்தின் 2 பெரும் பிரிவுகள் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு. கீழ்க்கணக்கு என்றால் கீழ்மை அல்ல‌ (ஆனானப்பட்ட திருக்குறளே கீழ்க்கணக்கு தான்!). குறைந்த அடியுள்ள பாடல்கள் கீழ்க்கணக்கு. அதிகபட்சம் 4 வரிகள். அதற்கும் மேல் உள்ள அடிகள் மேல்கணக்கு! பதினென் மேல்கணக்கு - எட்டுத்தொகை & பத்துப்பாட்டு; பதினென் கீழ்க்கணக்கு - குறள் முதலான 18 நூல்கள்.


இப்படி வகைப்படுத்தி வைத்தது பிற்பாடு தான். தமிழ் மன்னர்கள் / பெருங்கவிஞர்களின் ஆர்வத்தால், இப்படித் திரட்டித் திரட்டி வைக்கப்பட்டன! ஓர் ஒழுங்கு முறையை ஒட்டியே, இப்படி வரிசைப்படுத்தப் பட்டன. பாட்டின் எண்ணை வைத்தே குறிஞ்சியா? முல்லையா? என்று கூடச் சொல்லி விடலாம்.


இது கால வரிசை அல்ல! பல்வேறு காலம், பல்வேறு கவிஞர்களின் சிதறல். ஓவியத்தில் வண்ணச் சிதறல் போல! இந்த வண்ணத் திரட்டியே சங்க இலக்கியம்! எட்டுத் தொகை காலத்தால் முந்தி; பத்துப் பாட்டு சற்றுப் பிந்தி; கீழ்க்கணக்கு இன்னும் பிந்தி, சங்கம் மருவிய காலம்.


*


எட்டுத் தொகை: இதில் எத்தனை நூல்கள்?  எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று கேட்பது போல் தான்! 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து (மிகப்பழமையானது) 5. பரிபாடல் (கலப்புகள் நடு நடுவே எனினும், அழகிய இசை நூல்) 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு.


எட்டுத் தொகையின் சிறப்பே அது ஒரு தொகுப்பு (Team Work). ஒருவராலேயே எழுதப்பட்டு விடவில்லை! எனவே ஒருதலைச் சார்பு (bias) இல்லை! சில பாடல்கள் இடைச் சங்கம்; மற்ற பலவும் கடைச் சங்கம். இசையும் உண்டு! பரி-பாடல் பரிந்து வருதல் (Melody); கலி-தொகை கலி-வல்லோசை (Rock); தூக்கு / வண்ணம் போன்ற இசைக் கூறுகளையும் காணலாம். ஒரே பாட்டுக்குப் பல‌ சொந்தக்காரர்கள் உண்டு! பாட்டை எழுதுபவர் கவிஞர்; பாட்டுக்கு இசை அமைப்பவர் பாணர்; பாடுபவர் / ஆடுபவர் விறலி.


*


பத்துப் பாட்டு: இவை கிபிக்குச் சற்று பின். அனைத்தும் தனிப்பட்ட கவிஞர்களே; குழு நூல்கள் அல்ல!


1. திருமுருகாற்றுப்படை (காலத்தால் கடைசி எனினும், இறை என்பதால் முதலில் வைக்கப்பட்டது) 2. பொருநர்ஆற்றுப்படை 3. சிறுபாண் 4. பெரும்பாண் 5. மலைபடுகடாம். இவை ஆற்றுப்படை நூல்கள்; இந்த மன்னனை நோக்கி போனால், இந்தப் பரிசில் பெறலாம்; அங்கு செல்லும் வழி இது எனப் பேசுபவை; ஆறு - வழி (எவ்’வாறு’ வந்தாய் - எந்த வழியில் வந்தாய்?) 

6. குறிஞ்சிப் பாட்டு 7. முல்லைப் பாட்டு - இவை அகத்திணை; இயற்கைப் பாடல்கள். 8. மதுரைக் காஞ்சி (நெடுஞ்செழியன் மீது) 9. பட்டினப் பாலை (கரிகாற் சோழன் மேல்) 10. நெடுநல்வாடை (நெடுஞ்செழியன் மீது) - இவை புறத்திணை; மன்னர்களின் வெற்றியைப் பாடுபவை; ஊர்களின் நாகரிகத் தகவலும் உண்டு.


இயற்கை / அகம் என்றே பெரும்பாலும் இருந்த காலம் எட்டுத் தொகை. ஆனால், கால மாற்றத்தால், மன்னர்கள் / புறம் என‌ மிகுந்து விட்டது பத்துப் பாட்டில்.


*


கீழ்க் கணக்கு பெரும்பாலும் நீதி நூல்கள். முதலில் இயற்கையான சமூகம், பின்னர் பேரரசுச் சமூகம் / புராணக் கலப்புகள், பின்னர் நீதி போதனை துவங்கியது. ஏனெனில் புராணம் வந்த பின் அறம் குறைகிறது. வாழ்வியல் மாற்றங்கள்! இதுவே சங்கம் மருவிய காலம்! இந்த நூல்களும் தனிப்பட்டவர்கள் எழுதியதே!


நீதி நூல்கள்: 1. திருக்குறள் 2. நாலடியார் 3. நான்மணிக்கடிகை 4. இன்னா நாற்பது 5. இனியவை நாற்பது 6. திரிகடுகம் 7. ஆசாரக்கோவை 8. பழமொழி நானூறு 9. சிறுபஞ்சமூலம் 10. ஏலாதி 11. முதுமொழிக்காஞ்சி


அகத்திணை: 12. ஐந்திணை ஐம்பது 13. திணைமொழி ஐம்பது 14. ஐந்திணை எழுபது 15. திணைமாலை நூற்றைம்பது 16. கைந்நிலை (இன்னிலை என்னும் கட்சியும் உண்டு) 17. கார் நாற்பது

புறத்திணை: 18. களவழி நாற்பது


*


சில அழகியல் சங்க இலக்கிய வரிகள்:


  1. Laptop wallpaper-ல் காதலி படம்; screensaver bubbles முகத்தை மறைக்கிற‌து; விலக்க கை துடிக்கிற‌து. பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன (பூ கூட எங்களிடையே வரக்கூடா - குறுந்தொகை)


  1. நட்பாகவே பழகிப் பழகிக், காதலை வெளிப்படுத்த இருவருக்கும் தயக்கம். ஆனால் இளமை இன்பம் பாழாகிறதே? அதற்கு என்ன செய்ய? - கன்றும் உணாது கலத்திலும் புகாது


  1. இயற்கையே காலம் மாறலாம், ஆனால் என் காதலன் வாக்கு மாறமாட்டான் - கானம் கார் எனக் கூறினும், / யானோ தேரேன், அவர் பொய் வழங்கலரே


இப்படிப் பலப்பல பாடல், பற்பல‌ உணர்ச்சிகள், உங்களின் இன்றைய வாழ்வுக்கும் வெகு எளிதாகப் பொருந்தி விடும்! வாழ்வில் சங்க இலக்கிய வரிகள், பலப்பல தாக்கங்களை ஏற்படுத்தும். ஏற்படுத்தட்டும்! சங்கச் சித்திரங்கள் வெறுமனே வாசிப்புக்கு அல்ல; சுவாசிப்புக்கு!


*


மற்ற நொறுக்குத் தீனிகள்:


1. சங்கப் பாடல்களுக்கு கடவுள் வாழ்த்து என்பது பின்னாள் சேர்க்கையே! இலக்கியத்தில் மத அரசியல்; அவை சங்கப் பாடல்கள் ஆகா!  காதல் நற்றிணைக்கும், குறுந்தொகைக்குக்கும் என்ன கடவுள் வாழ்த்து?


2. இன்றைய சமய நிலைமை வேறு! இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்! இன்றைய நிலையை ஈடு கட்ட, தொன்மத்தில் கை வைக்கக் கூடாது! சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே அணுகல் - திரு. வி. க போன்ற மனசு, அறிஞர்களுக்கு வரவேண்டும்!


3.
நற்றிணை / குறுந்தொகையில் திருமால் / முருகன் பற்றிய குறிப்புக்கள் வரும்; ஆனால் அவை பக்திப் பாடல் அல்ல; அகப்பாடல்கள் - மக்கள் வாழ்வியலைக் காட்சிப் படுத்தும். காதலன் தன் காதலை நிரூபிக்க, நிலத்தின் தொன்மம் திருமால் மேல் சூள் (சத்தியம்) செய்தான் என‌ வரும்! அவ்வளவே!


4. யாகம், உடன்கட்டை ஏறல் புறநானூற்றில் சொற்ப இடங்களில் வரும்; ஹோமம் / உடன்கட்டை தொல் தமிழ்ப்பண்பாடு என முடிவு கட்டக்கூடாது. அவை கடைச்சங்க காலம் / புராணக் கலப்புக்குப் பின், என்றுணர்ந்து படிக்க வேண்டும்! அவை தொல்காப்பியம், முதல் / இடைச் சங்க நூல்களில் வாராது!


5. வடமொழி / வேத நெறி போலவே சமணமும், பெளத்தமும் கூடத் தென்னகம் வந்தன. ஆனால், தமிழ்த் தொன்மத்தை ஊடாடிச் சிதைக்காமல், சமண - பெளத்தம், தன் நெறியைப் புது நெறி என்றே சொல்லின! இயற்கை வழிபாட்டு முருகனை 12 கை கொண்ட‌ ஸ்கந்தன் என‌ ஆக்கியது போல், தமிழ்த் திருமாலை / முருகனை தீர்த்தங்கரர் என‌ ஆக்கவில்லை சமண - பெளத்தம்!


தமிழ் இலக்கியத்துக்குச் சமணம் ஆற்றிய தொண்டு அதிகம். ஆனால் இதன் பங்கு, சற்று அடக்கியே பேசப்படுகின்றது. இலக்கியத்தில் "பெரும்பான்மை மத ஆதிக்கம்" தான் காரணம். சிறுபான்மைச் சமூகம், மரபுச் சிறப்பில் "அடக்கியே வாசிக்கணும்" என்ற ஆழ்மனப் போக்கு.


6. சங்க காலப் பெண் கவிஞர்கள் 30+ பேர். மிக அதிகம் பாடியவர்கள் ஒளவையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார். சங்க கால ஒளவை வேறு; ஆத்திசூடி / பிற்கால 4 ஒளவையார்கள் வேறு!


7. மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் மட்டுமல்லர்; வள்ளல்கள் 7 பேர் உண்டு; தொண்டை, பரதவர், பூழியர், வேளிர், மழவர் போன்றவர்களும் உண்டு


8. ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம் & மணிமேகலை - முந்தியவை (கிபி 300); சீவக சிதாமணி, வளையாபதி, குண்டலகேசி - மிக மிகப் பிந்தியவை (கிபி 900). ஆழ்வார்/ நாயன்மாருக்குப் பிந்தியவை தான் சீவக சிந்தாமணி. ஐம்பெரும் காப்பியங்கள் போல், ஐஞ்சிறுங்காப்பியங்களும் உண்டு!


9.
திணைகள்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பதே சரியான வரிசை (தொல்காப்பியம்). இந்த நிலங்கள் இயல்பில் திரிந்து விட்டால் - பாலை! முல்லை - காடு; குறிஞ்சி - மலை; மருதம் - வயல்; நெய்தல் – கடல். ஒரே ஊரில் முல்லையும், குறிஞ்சியும் இருக்கலாம்.


10. பொருள் 3 - முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள். முதற் பொருள் - நிலம் & பொழுது (நிலம் ஏற்கனவே பார்த்து விட்டோம்) பெரும் பொழுது - கார் காலம், குளிர் காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். சிறுபொழுது - மாலை, யாமம், வைகறை, விடியல், முற்பகல், பிற்பகல்


உரிப்பொருள்: முல்லை - காத்திருத்தல்; குறிஞ்சி - புணர்தல்; மருதம் - ஊடல்; நெய்தல் - (துன்பத்தில்) இரங்கல்; பாலை – பிரிதல். கருப்பொருள் - அந்தந்த நிலத்துக்குரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, யாழ், பறை, பண் போன்றவை.

11.
சங்க இலக்கிய உரைகள்: உரைகளின் காலம் பின்னாளில் (கிபி 10ம் நூற்றாண்டுக்குப் பின்). அன்றைய அரசியல் - சமயத் தாக்கங்கள், உரைகளில் ஆங்காங்கே தெறிக்கும்; So, அதையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல், உரைகளை, அவற்றின் அழகியல் / ஒப்பு நோக்குக்கு மட்டுமே வாசிக்க வேண்டும்.
மற்றபடி, "to the roots" மூலப் பாடலையே அணுகுதல் நன்மை பயக்கும்!


12. ‘
உலகம்’ என்பதை முதலில் வைத்துப் பாடுதல் சங்கத் தமிழ் மரபு (உலகம், வையம், நிலம் etc)


The cause of the World (உலகம்) is dearer to சங்கத் தமிழ், than the cause of Religion! Our own அகம் & புறம் வாழ்வு, than சொர்க்கம் / நரகம்.

*


இக்கட்டுரை, சங்கத் தமிழுக்கு ஓர் எளிய அறிமுகமே! நுண்ணிய தகவல்கள் அதிகம் தராமல், Just a Quick Map of Sangam Landscape! ஒரு வரைபடமே நிலத்தின் அழகியல் இன்பத்தை ஈந்து விடாது; அதற்குப் பயணம் செய்ய வேண்டும். சங்கத் தமிழ்ப் பயணம் ஒரு வாழ்க்கைப் பயணம். சேரும் இடத்தை விடப், பயணமே சுவை. ஆதலால், பயணம் செய்வீர் - இன்பச் சங்கத் தமிழில்!



***

சிறகில்லாப் பறவைகள்

அல்டாப்பு வினோத்


2014 மார்ச் 24 2:30 PM.


"கணேஷ், ஆர் யூ ஹேப்பி?" சற்று உரக்க ஒலித்த குரல் மங்கலாக தெரிந்த மெய்யுலகினுள் என்னை திரும்ப மீட்டது. ஏமாற்றம் என்பது அதுவரை கற்றிருந்த மொழிகள் அனைத்தையும் ஒரே நொடியில் அழிக்க வல்லது. இந்த அப்ரைஸலைப் பெரிதாக நம்பியிருந்தேன். இதற்கு மேலும் கடன் வாங்க உலகில் எந்த திசைகளும் மிச்சமில்லை. நிலம் ஏலத்திற்கு வர இன்னமும் ஒரு வாரம்தான் என மனதிற்குள் ஓசையில்லாமல் எழுந்த ஓலங்களை மறுபடியும் கலைத்தது "கணேஷ்!".


"ஸ்ரீ, ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங்... உங்களுக்கே தெரியும். லாஸ்ட் ஃபோர் மன்த்ஸா ரிலீஸ்க்காக நான் டே அண்ட் நைட் ரொம்ப ஹார்ட் வொர்க். அதுக்கு இந்த ஹைக் அமவுண்ட், இந்த போனஸ்… ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் மோர்." தட்டு தடுமாறி வார்த்தைகளைச் சேகரித்துக் கோர்த்தேன். 


இனி என்ன பேசியும் பயனில்லை என்பது ஸ்ரீநிவாஸ் சாஸ்திரி மெதுவாக கண்ணாடியை கழற்றி வைத்த பாவனையில் உறுதியானது. உள்ளே ஓலங்களின் ஓசை மெல்ல மெல்ல அதிகமானது.


"கணேஷ்! நான் ரொம்ப ட்ரை பண்ணினேன். சொன்னா நம்ப மாட்டே. நேத்து ரெண்டு மணி நேரம் ஆர்க்யூ பண்ணினேன் உனக்காக. பட், இப்போ இருக்கற மார்க்கெட்ல 8% போனஸ் இஸ் ஹ்யூஜ். பிலீவ் மீ. நான் டீம்ல மத்தவங்க பேப்பர்ஸும் பாத்துட்டுதான் சொல்றேன். என்னாலே முடிஞ்சிருந்தா நான் கண்டிப்பா பண்ணியிருப்பேன். நீ இந்த டீமோட க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ். பட் இந்த வருஷ ரெவ்ன்யூ கம்மி. அதான் டீம்ல ஒருத்தருக்குதான் நல்ல ரேட்டிங் தரனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. டீம்லே ராமசுப்புதான்தான் சீனியர். அவன் இல்லாம போன ரிலீஸ் ப்ரடக்‌ஷன் போயே இருக்காது. சோ, யூ அண்டர்ஸ்டேண்ட் ரைட்?"


"புரியுது சார். நேராவே சொல்லுங்களேன், அவன் உங்க ஜாதின்னு" எனத் தொடங்கி வந்த வார்த்தைகள் வெளியே வராமல், தொண்டையோடு வறண்டு போய் வெறும் வறட்டு புன்னகையை பதிலாக உதிர்த்து விட்டு வெளியே வந்தேன்.


"என்ன மச்சி, ட்ரீட்டா? போனஸ் அமவுண்ட்டை எடுத்துட்டு போக மூணு லாரி அரேன்ஜ் பண்ணவா? போதுமானு சொல்லு". எல்லா வருடமும் சுரேந்தர் அடிக்கும், அவனுக்கு தெரிந்த ஒரே ஜோக் இதுதான். அடித்த ஜோக்கை தானே சிலாகித்து, சத்தமாக சிரித்து கொண்டிருந்த சுரேந்தரை, அவனுடன் சேர்த்து சாஸ்திரியை, பின் அமெரிக்க ஆன்சைட்டில் இருக்கும் ராமசுப்புவைத் தேடிக் கொன்று விட்டு தூக்கு தண்டனை வாங்குவது, சற்று முன்பு தோன்றி மறைந்த தற்கொலை யோசனையைவிட நல்ல முடிவாகத் தோன்றியது. என்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு புன்னகையை சுரேந்தருக்கு உதிர்த்து விட்டு நகர்ந்தேன்.


*


2004 ஜனவரி 24 6:00 PM.


பெருமாள் இந்த முறை இன்னும் அதிகமாய் கரிசனம் தோய்ந்த குரலில் கேட்டார்.


"ஆறுமுகம், நல்லா யோசிச்சுத் தானே பண்றே. நிலத்தை வச்சா திரும்ப எடுக்கறது கஷ்டம். பொண்ணை வேற பெத்து வச்சுருக்கே"


"என்ன சார் பண்றது, இவன் இன்னும் கொஞ்ச மார்க் அதிகம் எடுத்திருந்தா இந்த நெலமை வந்திருக்காது. நல்லாத்தான் படிச்சான். ஆனா எப்படியோ கோட்டை விட்டுட்டான். நமக்கும் பெத்த கடன். இதுவும் நல்ல காலேஜ்னு வேற சொல்றாங்க. அவங்க சொல்ற மாதிரி நல்ல‌ வேலை கிடைச்சுட்டா ரெண்டு மூனு வருஷத்துல நெலத்தை மீட்டுரலாம் சார்."


"நீ சொன்னா சரிப்பா. நாளைக்கு காலைல‌ கெளம்பி பேங்க் வந்துர்றேன். சுந்தரம் ஃபார்ம் எல்லாம் ரெடி பண்ணிட்டார்ல?"


"பண்ணிட்டார் சார். இந்த கஷ்டம் எல்லாம் பையன் நிக்கற வரைதானே சார். அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுட்டா அப்புறம் அவன் பாத்துக்குவான்."


தனக்குதானே சமாதானம் சொல்லித்திரும்பிப் போய்க்கொண்டிருந்த ஆறுமுகத்தின் முதுகைச் சிறிது நேரம் வெறித்தபடி நின்றிருந்த பெருமாளிடம் இருந்து தன்னிச்சையாய் ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.


*


2014 மார்ச் 27 3:30 PM


"ஏற்கனவே தங்கச்சி கல்யாணத்துக்கு, மத்ததுக்குனு எடுத்த லோனே இன்னும் முடிக்கலைடா. இன்னொரு லோன் எடுத்தா தர மாட்டாங்கறது வேற விசயம். தந்தாலும் திருப்பிக் கட்ட முடியாதுடா."


"இப்போதைக்கு பசங்க எவன்கிட்டையும் இருக்காது மச்சி. எல்லாருக்கும் ஹவுசிங் லோன்னு அது இதுனு. ஆன்சைட்ல இருக்கறவனுககிட்ட கேட்டு பாக்கலாம். உன் விசா என்னாச்சு?"


"ஒரு தடவை ரிஜெக்ட் ஆனா ஆறு மாசம் கழிச்சுதான் திரும்ப அப்ளை பண்ணுவாங்களாம். கேட்டா கம்பெனி பாலிசி, மயிரு, மட்டைங்கறான். இவனுக ஒழுங்கா பேப்பர் வொர்க் பண்ணாமதானே விசா ரிஜெக்டாச்சு. விடுறா. நெனைச்சாலே கடுப்பா இருக்கு." 


"சாஸ்திரி கிட்ட பேசி புஷ் பண்ண சொல்லிப்பாருடா. அந்தாள் மெய்ல் அனுப்பிச்சா பண்ணுவானுக"


"அவன்தானே! நல்லா புஷ் பண்ணுவான் வாயிலியே.. இன்னைக்கு எங்கம்மா ஃபோன் பண்ணினா என்ன பதில் சொல்றதுனே தெரியல மச்சி. இன்னும் ரெண்டு நாள்ல பேங்க்ல ஏலம் விடறாங்க நிலத்தை."


*


2012 செப்டம்பர் 14 5:30 PM. 


"செல்விம்மா, நல்லாருக்கியா? மாப்ளை நல்லாருக்காரா? தீபாவளிக்கு ஊருக்கு வந்துருவீங்கல்ல"


"இருக்கோம்மா. அப்பா வந்துட்டாரா?"


"வாத்தியாரோட வெளியே போய் இருக்காருமா. கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு?"


"அம்மா. கேக்க எனக்கே கஷ்டமாதான் இருக்கு. ஆனா என் மாமியார் சொல்லி சொல்லிக் காமிக்குது. கல்யாணத்தப்போ இவருக்கு பைக் வாங்கி தர்றேன்னு சொன்னது இன்னமும் பண்ணலைன்னு. அண்ணன்கிட்ட மறுபடி ஒருதடவை கேட்டு பாக்கறியா? இந்தப் பொம்பளை தெனமும் சத்தம் போட்டு மானத்தை வாங்குது."


"அவன் இன்னைக்கு போன் பண்றப்போ சொல்றேன்மா. அவன் ஏதோ புது கம்பெனி, வேலைனு அலைஞ்சுட்டுருக்கான்மா. கேட்டுப் பாக்கறேன்" 


"இதுனால அவருக்கும் சங்கடம்தான். தீபாவளிக்கு லீவு கிடைச்சா ஊருக்கு போலாம்னு சொல்லிருக்காருமா. டிக்கெட் போட்டப்பறம் சொல்றேன். அப்பா வந்தப்பறம் ஒருதடவை போன் பண்ண சொல்லு"


*


2014 ஜூன் 17 10:30 PM.


"என்ன பண்றதுனே தெரியலை ப்ரியா. நெலம் கையை விட்டு போனதுல இருந்து எங்கப்பா என்னோட பேசறதையே நிறுத்திட்டாரு. அவர் நினைச்ச மாதிரி நான் தங்கமுட்டை போடற வாத்து இல்லை. நான் வெறும் சாதாரண மக்கு வாத்துனு அவருக்கு இவ்ளோ லேட்டாதான் புரிஞ்சுருக்கு."


"எல்லாம் சரியாகிடும் கணேஷ். ஜஸ்ட் பி ஸ்ட்ராங்."


"இல்லை ப்ரியா. அது பூர்வீக சொத்து. அந்த ஏரியாலியே வருஷம் பூரா இருக்கற தண்ணி இருக்கற கெணறு எங்க இடம்தான். எனக்கே கையை காலை முடக்குனாப்டி இருக்கு. அவருக்கு எப்படி இருக்கும். ஆள் சுத்தமா ஒடிஞ்சு போய்ட்டாரு. எல்லாம் என்னாலேதான் இல்லை."


"ஏன்டா லூஸு மாதிரி பேசற? எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்."


"கடைசியா போன வாரம் வீட்டுக்கு போனப்போ அவர் என்னை பாத்தப்போ அதுல, அந்தப் பார்வைல எவ்ளோ வெறுப்பு இருந்தது தெரியுமா!"


"கணேஷ் ப்ளீஸ் அதையே நினைச்சு நினைச்சு மனசுல போட்டு குழப்பிட்டிருக்காதே. உனக்குதான் திரும்பவும் விசா ஆரம்பிக்கறதா சொல்லியிருக்காங்க இல்லை."


"ஹ்ம்ம். ஆமா"


 "அப்புறம் என்ன, சீக்கிரம் மீட்டுடலாம்.”


ம்.”


ஏய், உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லட்டுமா? எங்க வீட்டுல என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டாங்க." 


"ஹே! சூப்பர்!"


"இன்னும் அருண் வீட்டுல தான் அவங்கப்பா பிடிவாதமா இருக்காரு. அவர் ஓகே சொன்னா போதும். ஏன் கணேஷ், நான் அருண்கிட்ட சொல்லி அவங்க ஆபீஸ்ல ஓபனிங் எதாவது இருக்கானு கேட்கட்டுமா. அங்க பேக்கேஜ் நல்லாருக்கும்."


"கங்க்ராட்ஸ் ப்ரியா! ரொம்ப ஹேப்பி. அருண்கிட்ட எல்லாம் கேட்கவேண்டாம் ப்ரியா. நான் சமாளிச்சுக்கறேன். கங்க்ராட்ஸ் ஒன்ஸ் அகெய்ன்."


"தேங்க்ஸ்டா! ஹே அருண் லைன்ல வெய்ட்டிங்ல வர்றான். நாம காலைல பேசுவோம். அளவா குடிடா, ப்ளீஸ். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்."


*


2014 ஜூன் 18 5:30 AM. 


"சொல்லுங்க சார்! என்ன‌ இந்த நேரத்துல?"


"ஒரு என்கொய்ரி. உங்க பையன் பேரு கணேஷ்தானே? மெட்ராஸ்ல வேலை செய்யறாரா?"


"ஆமா சார். என்... என்னாச்சு?"


"எங்களுக்கு கொட்டிவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இப்போதான் போன் வந்தது. உங்களை உடனே கூட்டிட்டு வர சொல்லியிருக்காங்க."


***



நிறைவேறாத ஆசைகள்

மிருதுளா

ஒரு சிறுமியின் நிறைவேறாத ஆசை
இன்னொரு சிறுமி கையிலிருக்கும்
பொம்மையாய் இருக்கலாம்

ஒரு சிறுவனின் நிறைவேறாத ஆசை
நாளெல்லாம் விளையாட
அனுமதிக்கப்படுவதாக இருக்கலாம்

ஒரு பதின்மப்பெண்ணின் நிறைவேறாத ஆசை
பிடித்த நடிகனிடமிருந்து
முத்தமாய் இருக்கலாம்

ஒரு பதின்ம ஆணின் நிறைவேறாத ஆசை
தன் சகோதரியை விட அதிகமாக தன் தந்தையால்
கொண்டாடப்பட வேண்டும் என்பதாய் இருக்கலாம்

ஒரு காதலியின் நிறைவேறாத ஆசை
தன் காதலனைத் திருமணம்
செய்வதாய் இருக்கலாம்

ஒரு காதலனின் நிறைவேறாத ஆசை
தன் காதலியுடன் முதல் காமம்
தணிப்பதாய் இருக்கலாம்

ஓர் இளம் மனைவியின் நிறைவேறாத ஆசை
தன் காதல் தோல்வியைக் கணவனிடம் சொல்லி
அவன் தோள் சாய்ந்து அழுவதாய் இருக்கலாம்

ஓர் இளம் கணவனின் நிறைவேறாத ஆசை
தன் மனைவியை சமாதானப்படுத்த வேண்டியிராத

ஒரு முழு நாளாய் இருக்கலாம்

ஓர் இல்லத்தரசியின் நிறைவேறாத ஆசை
சாவகாசமாய் காலையில் காஃபியோடு
எழுப்பப்பட வேண்டுமென்பதாக இருக்கலாம்

ஒரு குடும்பத்தலைவனின் நிறைவேறாத ஆசை
உழைத்துக் களைத்து வீடு திரும்புகையில்

கொண்டாடப்பட வேண்டும் என்பதாக இருக்கலாம்

ஒரு கள்ளக்காதலியின் நிறைவேறாத ஆசை

கணவன் வேறு ஊருக்கு மாற்றலாகிச்

செல்ல வேண்டும் என்பதாக இருக்கலாம்

ஒரு கள்ளக்காதலனின் நிறைவேறாத ஆசை
தன் மனைவியும் தன் அருகாமைக்கு
ஏங்க வேண்டும் என்பதாக இருக்கலாம்

ஓர் ஏழைத்தாயின் நிறைவேறாத ஆசை
குழந்தை விரும்பிக் கேட்பதனைத்தும்

வாங்கித் தரும் வசதியாய் இருக்கலாம்

ஒரு திருநங்கையின் நிறைவேறாத ஆசை
எவராலும் வேடிக்கைப் பார்க்கப்படாத

ஒரு வாழ்க்கையாய் இருக்கலாம்

ஒரு வேசியின் நிறைவேறாத ஆசை
விருப்பமறிந்து மென்மையாகப் புணரும்
வாடிக்கையாளனாய் இருக்கலாம்


இழவு வீட்டின் நடுவே கிடத்தியிருந்த

பிணத்தின் நிறைவேறாத ஆசையை

யூகிக்க முயன்று தோற்றேன்

இறந்தவரின் கண்களில் வழியும்

நிராசைகளின் கனம் தாளாது தானே

இறந்தவரின் கண்கள் மூடப்படுகின்றன!

***


கேபியும் மூன்று பெண்களும்

ஜிரா


கதவு தட்டும் ஓசை கவிதாவின் ஞாயிற்றுக் கிழமை மதியத் தூக்கத்தைக் கெடுத்தது. அன்று மட்டும்தான் அவள் பகலில் தூங்க முடியும். எரிச்சலோடு அம்மாவைக் கூப்பிடும் முன் அம்மாவே அறைக்குள் வந்தாள்.


கவிதா, சிந்து வந்திருக்காங்க. ஒன்னப் பாக்கனுமாம். உள்ள அனுப்பட்டுமா?”


சரி என்று சைகையாலே வரச்சொல்லிவிட்டு மடமடவென எழுந்தாள். அதற்குள் சிந்து அறைக்குள் வந்து வணக்கம் சொன்னாள்.


மதியத் தூக்கத்துல தொந்தரவு பண்ணீட்டேனா. கொஞ்சம் மனசு சரியில்ல. ஒங்கிட்ட பேசிட்டுப் போலாமேன்னு வந்தேன். இங்க வர்றேன்னு ஜேகேபி சாருக்குக் கூடத் தெரியாது.”


அமைதியான புன்னகையோடு, “உக்காருங்க. என்ன சாப்டுறீங்க?” என்றாள் கவிதா.


தண்ணி மட்டும் போதும். காலைல இருந்து ஒரு விஷயம் மண்டைக்குள்ளயே ஓடிட்டு இருக்கு. கேபி சார் போயிட்டார். ஆனா நம்ம மட்டும் இந்த உலகத்துல தொடர்ந்து காலகாலமா இருக்கப் போறோம். அதான் அவரோட பெஸ்ட் கேரக்டர் கவிதாவைப் பாத்து பேசலாம்னு வந்தேன்.”


கவிதாவின் முகத்தில் வேதனை வந்ததையோ போனதையோ சிந்துவால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டவர்கள் முகத்தில் அமைதி அடுக்குமாடி வீடு கட்டும் போல.


நானும் கேள்விப்பட்டேன். நீங்க பேச வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”


நன்றி கவிதா. கேபி சார் ஒங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னு வருத்தமா?” படக்கென்று கேட்டுவிட்டாள் சிந்து.


எண்ணெயில் விழுந்த அப்பளப்பொரியாய்ச் சிரித்தாள் கவிதா. அது அபூர்வராகங்களாக ஒலித்தது.


எனக்கு மட்டுமா? ஒங்களுக்குந்தான் கல்யாணம் செஞ்சு வைக்கல அவர். நல்லவேள நூல்வேலி பேபி மாதிரி மாடில இருந்து தள்ளிக் கொல பண்ணலையே. என்ன? சொன்னது தப்பாத் தப்பா?”


சரியாக அம்மா உள்ளே வந்தாள். “கவிதா, செல்வின்னு யாரோ கார்ல வந்திருக்காங்க.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் செல்வி. சின்ன வயசுப் பெண். வயதுக்கு மீறிய பெரிய குங்குமப் பொட்டு. சுற்றிக் கட்டிய பட்டுச் சேலை. தீர்க்கமான கண்கள்.


மன்னிக்கனும் பேசிக்கிட்டிருக்குறப்போ குறுக்க வந்துட்டேன். நாந்தான் மூன்று முடிச்சு செல்வி. ஏதோ கல்யாணம்னு பேசிக்கிட்டிருந்தீங்களே என்ன அது?”


நீங்கதான அது. வாங்க வாங்க. சீட்டு விளையாட இன்னொரு கை கெடச்ச மாதிரி ஆயிருச்சு.” சிந்துதான் முதலில் சகஜமானாள். “எனக்கும் கவிதாவுக்கும் படத்துல கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுட்டாரே கேபி சார்னு பேசிட்டு இருந்தோம். அப்பதான் நீங்க வந்தீங்க.”


எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரே. அதுலயும் என் மேல ஆசப்பட்டவனோட அப்பாவையே எனக்குக் கணவனாக்கிட்டாரே. எது எப்படியோ. இப்ப நல்லா இருக்கோம். அந்தப் பையனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வெச்சிட்டேன். சின்னஞ்சிறுசுகளைக் கரையேத்திட்டா கடமை முடிஞ்சிரும்.”


என்ன விடச் சின்னப் பொண்ணா இருக்கீங்க. கடமையைப் பத்தி பாடமே எடுப்பீங்க போல இருக்கே.” கவிதாவின் கிண்டல்.


கடமைன்னாலே கவிதானே. அதுக்கப்புறம் வந்தவங்கதானே நாங்கள்ளாம்.”


செல்வி சொல்றது உண்மைதான். கடமையைப் பொறுத்த வரைக்கும் உங்களுக்குப் பிறகுதான் மத்தவங்க. எனக்குத்தான் கடமையே இல்லை. ஒரு ஃப்ரீ பேர்ட். நானொரு சிந்து. காவடிச் சிந்து”


இதுல ஒன்னு கவனிச்சிங்களா? நம்ம மூனு பேருக்குள்ள ஒவ்வொருத்தரும் ஒருவிஷயத்துல ஒத்துப் போறோம். இன்னொருத்தரோட ஒத்துப்போகல.” புதிர் போட்டுப் பேசினாள் செல்வி.


படக்கென்று பிரகாசமானாள் சிந்து. “ஆமா. செல்வி சொல்றது சரிதான். நானே சொல்றேன்.


கவிதாவுக்கும் செல்விக்கும் அடுத்தவங்க கொழந்தைங்கள தன்னோட கொழந்தைகளைப் பாத்துக்க வேண்டியிருக்கு. எனக்கு எந்தப் பொறுப்பும் இல்ல.


செல்விக்கும் எனக்கும் இல்லறசுகம்னா என்னன்னு தெரியும். கவிதாவுக்கு அந்த வாய்ப்பு இல்ல.


கவிதாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகல. செல்விக்குக் கல்யாணம் ஆயிருச்சு.”


மிச்சத்த நான் சொல்றேன்” என்று தொடர்ந்தாள் செல்வி.


கவிதாவுக்கும் சிந்துவுக்கும் அம்மா உண்டு. அந்தவகையில் இருந்த ஒரே அக்காவையும் இழந்த அனாதை நான்.”


எனக்கும் கவிதாவுக்கும் பி.சுசீலா பாடியிருக்காங்க. சிந்துவுக்கு சித்ரா.”


முடிச்சிட்டீங்களா? நம்ம மூனு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்ன தெரியுமா?”


செல்வியும் சிந்துவும் கவிதாவை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.


ஒண்ணு இல்ல. ரெண்டு ஒற்றுமை இருக்கு.


மூனு பேருமே காதலிச்சிருக்கோம். ஆனா அந்தக் காதல் கைகூடல.”


அந்த அறையில் சட்டென்று அமைதி அடர்ந்தது.


சரி. கேபி சாரோட மத்த கதாநாயகிகள்ள யாரா இருந்திருக்கலாம்னு நீங்க ஆசைப்படுறீங்க? எனக்கு பைரவி அக்கா மாதிரி இருக்க ஆசை. கணவனே உலகம்னு வாழ்றதும் ஒரு சந்தோஷந்தானே.” சிந்து சட்டென்று சூழ்நிலையை மாற்றினாள்.


எனக்கு வறுமையின் நிறம் சிவப்பு தேவியாகனும். ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்காளே.” கனவில் மூழ்கினாள் கவிதா.


எனக்கு அழகன் படத்துல வர்ற‌ பிரியா ரஞ்சன் பிடிக்கும். அவங்களும் என்ன மாதிரி ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரக் கல்யாணம் பண்ணிருக்காங்க. ஆனா பிரியா ரஞ்சன் அவரைத்தான் மனசாரக் காதலிச்சாங்க. என்ன மாதிரி காதலனைப் பறிகொடுக்கல.” செல்வியின் சிந்தனைகள் துடித்தோடின.


சரி. கேபி சாரைப்பாத்து எதாச்சும் சொல்லனும்னா என்ன சொல்வீங்க?” கவிதா புதுக்கேள்வி எழுப்பினாள்.


சட்டென்று பட்டுச் சேலையால் மையிட்ட கண்களைத் துடைத்துக் கொண்டாள் செல்வி. “என் காதலனத்தான் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுக் கொன்னீங்க. சரி. என் அக்கா என்ன பாவம் சார் பண்ணாங்க? வாழ்க்கைல எதுவுமே அனுபவிக்காத ஒரு தியாகி. நெருப்பு சுட்ட முகம். அவளையும் தற்கொலை செய்ய வெச்சி என்ன விட்டுப் பிரிச்சிட்டீங்களே கேபி சார். இது நியாயமா?” அக்காவை நினைத்து அழுதாள் செல்வி.


உனக்கு அக்கான்னா எனக்கு அண்ணன். அவன் குடிகாரனாவே இருந்திருக்கலாம். அவன் திருந்தி நல்லவன் ஆனதுக்குப் பரிசா அவனைக் கொல பண்றது? திருந்து திருந்துன்னு ஆயிரம் தடவை அவன் கிட்ட சொல்லிருக்கேன். அப்படித் திருந்தி வர்ரப்போ எங்கிட்ட இருந்து அவனப் பிரிச்சிட்டீங்களே கேபி சார். குடிகாரனா உயிரோடயிருந்திருந்தா அவன் தெய்வம் தந்த வீடு வீதியிருக்குன்னு நிம்மதியாயிருந்திருப்பானே!” கவிதாவின் கேள்வி இது.


கூடப் பொறந்தவங்களப் பிரியுறதுக்கே இவ்வளவு வேதனை. நான் பெத்த கொழந்தைய பிரிஞ்சிட்டு வந்திருக்கேன். ஜேகேபி சாரைப் பிரிஞ்சப்பக் கூட எனக்கு அவ்வளவு வலிக்கல. ஆனா பெத்த கொழந்தைய பரிசாக் குடுத்துட்டு வந்தப்போ உயிரே போயிருச்சு. பெத்த மகனைப் பிரியுற அளவுக்கு எனக்கு முற்போக்குத்தனம் தேவையா கேபி சார்?”


தட்டில் காபியோடு உள்ளே வந்தாள் அம்மா.


மொதல்ல மூனு பேரும் அழுறத நிறுத்துங்க. நம்ம இப்படிதான்னு தலைல எழுதுறவன் பிரம்மாவாம். சினிமா பாத்திரங்களான நம்ம தலைல எழுதுன பிரம்மா கேபி சார். சரியோ முறையோ, வாழ்க்கைல முன்னோக்கிதான் பாக்கனும். பழசையே பேசிட்டு இருந்தா வீணாப் போயிருவோம்.


ஓடிப் போன புருஷன் வருவாரான்னு காந்திருந்தேன். சாமியாரா வந்தாரு. குடிகாரனான மகன் திருந்துவானான்னு பாத்தேன். செத்தே போயிட்டான். எனக்கு மட்டும் இழப்பு இல்லையா. அதெல்லாம் அழுதாச்சு. உள்ள மருமக தையல் மிஷின்ல தச்சுக்கிட்டிருக்கா. பேரப்புள்ளைங்க விளையாண்டுட்டு சாப்பாட்டுக்கு வந்துரும். மடமடன்னு சமைக்கனும். அவங்கவங்க எடுத்த முடிவுகள் சரிதான். பழச யோசிக்காம அடுத்தடுத்த வேலைகளைப் பாருங்க. அதுக்கு முன்னாடி காபியக் குடிங்க.”


கவிதாவும் சிந்துவும் செல்வியும் காபி டம்ளரை எடுத்துக் கொண்டார்கள். ஒரு மெல்லிய அமைதியில் கொஞ்சம் கொஞ்சமாகக் காபியைக் குடித்தார்கள்.


வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள். நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!

***

அவர் ஒரு தொடர்கதை

கார்த்திக் அருள்


இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதில் இருந்தே வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் எப்போதும் இயங்கிக் கொண்டே துடிப்பான இளைஞர் போல் ஓய்வின்றி இருந்தவர். எப்படியும் மீண்டு(ம்) வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் அது பொய்யாகிவிடும் என்று நினைக்கவில்லை. உத்தம வில்லன் வெளியாகும் வரையேனும் இருப்பார் என்று நினைத்தேன்.


Eventually death gave him retirement! நண்பர், உறவினர் மத்தியில் கேபியின் தீவிர ரசிகனாக அறியப்படுபவன் நான். Orkut காலத்தில் பல கேபி படங்களுக்கு Community Owner-ஆக இருந்தேன். ஒத்த ரசனை நண்பர்களும் கிடைத்தனர். பலர் என்னை அழைத்து என் வீட்டில் துக்கம் நிகழ்ந்தது போல் வருத்தம் தெரிவித்தனர்.


கேபி எனக்கு முதலில் அறிமுகமானது சின்னத்திரை மூலம்தான். அப்போது பதின்வயது கூட தொடங்கி இருக்க‌வில்லை. இப்போது போல் மெகா சீரியல்கள் இல்லாத காலத்தில் 'பாலச்சந்தரின் சின்னத்திரை' என்று 1995ல் சன் டிவியில் வாரந்தோறும் திங்கள் இரவு 7.30க்கு ஒளிபரப்பப்பட்டது. அம்மா கேபி ரசிகை என்பதால் அவருடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வை அசலாய்ப் பதிவு செய்திருந்தார். ந‌ம் வீட்டில் நடக்கும் சம்பவங்களைப் போலவே இருந்ததில் ஈர்க்கப்பட்டேன். கையளவு மனசு, காதல் பகடை, ப்ரேமி, ஜன்னல் என ஒவ்வொரு தொடரையும் வாரந்தோறும் குடும்பத்துடன் பார்ப்போம். ரகுவம்சம் தினம் இரவு (125 பகுதிகள்) ஒளிபரப்பானது. தமிழின் முதல் மெகா சீரியல் அதுவே.


அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. பின்னாளில் அதுவே கே டிவியானது. கேபியின் படங்கள் அதில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதில்தான் அவரது பல படங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. எட்டாவது வகுப்பின் அரையாண்டு விடுப்பு முடிந்து பள்ளி சென்ற போது மாணவர்களுடன் தோழமையாகப் பழகும் ஆசிரியர் எல்லோரிடமும் விடுமுறையில் பார்த்த படங்களைப் பற்றிக் கேட்டார். என்னைக் கேட்டபோது ‘எதிர் நீச்சல்’ என்று நான் சொன்னதும் ‘அது பழைய நாகேஷ் படமாச்சே?’ என்றார். நான் 'அதே பழைய பாலசந்தர் படம் தான் சார்’ என்று சொன்னதும் சற்று அசந்துதான் போனார். 'பாலசந்தர் படம் எல்லாம் இந்த வயசுல பாக்குறியா? பெரியவங்களுக்கே அது புரிஞ்சுக்கறது கஷ்டம்!' என்று சொன்னபோது சக மாணவர்கள் முன் ஒருவித பெருமிதம் ஏற்பட்டது. மேலும் கொஞ்சம் intellectual என்று என்னைக் காட்டிக் கொள்ளவும் சற்று தனித்து தெரிய விரும்புபவன் என்பதாலும் தொடர்ந்து கேபியின் படங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு படமும் என்னை வசீகரித்து மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிலிருந்து புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வேன்.


அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் உள்ள ஷாக் வேல்யூ, உறவுச் சிக்கல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. என்னைப் புரட்டிப் போட்ட படம் என்றால் அது அவள் ஒரு தொடர்கதை. சிறு வயதில் அதன் வசனங்கள் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டால் 'பெரியவனானா புரிஞ்சுக்குவ' என்பார். அவள் ஒரு தொடர்கதை படத்தை அரங்கில் பார்த்துவிட்டு அதன் தாக்கத்தில் தான் சைக்கிளில் வந்ததை மறந்து வீட்டுக்கு நடந்தே சென்றதாகப்பின்னாளில் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


அரங்கேற்றம் படம் வீட்டில் பார்த்த போது என் அம்மா தானே அதைத் திருமணத்திற்குப் பிறகுதான் பார்த்ததாகவும் அதற்கு முன் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சொன்னார். 'இந்தப் படமெல்லாம் சின்ன பசங்க பாக்க கூடாது' என்று அவர் அம்மா போல் எனக்கும் சொல்லாததற்கு அவருக்கு நன்றி. அவரது நூறாவது படைப்பு என்று விளம்பரத்துடன் வந்த பார்த்தாலே பரவசம் படத்தை அம்மாவுடன் பார்த்து வருந்தி அவரைத் திட்டி ஒரு கடிதம் எழுதி இதுவரை அனுப்பாமலே வைத்திருக்கிறேன்.


கேபியின் மிகப் பெரிய பலம் அவரது பாத்திரப்படைப்பு. குறிப்பாக அவரது பெண் கதாபாத்திரங்களான கவிதா, லலிதா, பைரவி, கண்ணம்மா, சிந்து, நந்தினி சிஸ்டர், சஹானா என எத்தனை! திரையில் தோன்றாத பாத்திரங்களைக் கூட மனதை விட்டு நீங்காத வண்ணம் உருவாக்கியவர் - 'இருமல் தாத்தா', 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்', திருமதி.அர்தனாரி. அஃறிணை கதாபாதிரங்களுக்கும் உயிர் கொடுத்தவர்- 'அச்சமில்லை அச்சமில்லை' அருவி, 'அழகன்' தொலைபேசி என்று டைட்டில் கார்டில் பெயர் கொடுத்தவர். ஜேகேபி, உதயமூர்த்தி, அழகப்பன் போன்ற ஆண் கதாபாத்திரங்களை விட பிரசாத், ராமநாதன், பிரகாஷ் (கல்கி பிரகாஷ்ராஜ்) போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களை அதிகம் ரசிப்பேன்.


முதன்முதலில் இயக்குநருக்காக பார்க்கப்பட்ட படங்கள் என்று அவரது படங்கள் பாராட்டப்பட்டாலும் அதிக நாடகத்தன்மை கொண்டவை என்று விமர்சிக்கவும் பட்டன. ஆனால் அவற்றை நிராகரிக்க முடியாது. எழுத்துக்கு ஜெயகாந்தன் போல திரைக்கு பாலசந்தர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு பாத்திரப்படைப்பு, காட்சியமைப்பு, வசனம், பாடல் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தார்.


படம் பார்க்கையில் ஒவ்வொரு வசனத்தையும் மனப்பாடமாய் சொல்லிக் கொண்டே பார்ப்பேன் ('இது மாதிரி பாடத்த ஒழுங்கா மனப்பாடம் பண்ணிருக்கலாம்' என்று அப்பா சொல்வார்). படத்தைப் போலவே இசையும் சிறப்பானதாக இருக்கும். எம்எஸ்வி, வி. குமார், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், மரகதமணி, லக்ஷ்மிகாந்த் பியாரேலால், தேவா என்று எந்த இசையமைப்பாளரிடம் பணிபுரிந்தாலும் அவரது Best-ஐ வாங்கிவிடுவார். கர்நாடக இசை அறிந்தவர். அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களில் கர்நாடக இசைப் பின்னணியில் சமூக கருத்துகளைச் சொன்னார். எனக்கு கர்நாடக இசை மீது நாட்டம் ஏற்பட்டதற்கு அவர் படங்களும் முக்கிய காரணம். ‘சஹானா’ ராகம் அவருக்கு மிகப் பிரியமானது. அவர் படங்கள் மூலம் எனக்கும் பிடித்த ராகமானது. பெண் குழந்தை பிறந்தால் சஹானா என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று கல்லூரியில் படிக்கும் போதே எண்ணிக் கொண்டேன்.


பாடல்களைக் காட்சிப்படுத்தும் விதத்திலும் சிறப்பு. ஒரு நாள் யாரோ, அடுத்தாத்து அம்புஜதப் பாத்தேளா, தெய்வம் தந்த வீடு, கடவுள் அமைத்து வைத்த மேடை, ஜூனியர், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது, என்ன சத்தம் இந்த நேரம், இதழில் கதை எழுதும் நேரமிது, சங்கீத ஸ்வரங்கள் என்று ஒவ்வொரு பாடலும் பார்ப்பதற்கும் சுகம். பாடல்களைப் போல் பாடல்வரிகளும் மிகச் சிறப்பாய் கதையுடன் இழைந்த வண்ணம் இருக்கும். பாரதியையும் அவரது வரிகளையும் எப்படியாவது கொண்டு வந்து விடுவார்.


அவரது படங்கள் பார்த்து எனக்கும் படம் இயக்கம் கனவு உருவானது. அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவருடன் உதவி இயக்குனராக பணி புரிய வேண்டும் என்றும் மிகுந்த ஆசை இருந்தது, அது நிறைவேறாமலே போய் விட்டது. ஆனால் தோழி ஒருவர் கேபியின் மேனேஜர் மூலம் தொடர்பு கொண்டு கேபியை என் பிறந்த நாளன்று என்னிடம் பேச வைத்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது. முதலில் அவர் மேனேஜர் என்னிடம் பேசி கேபி பேசுவார் என்று சொன்னபோது நான் என் நண்பர்கள்தான் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து விட்டேன். சில நொடிகளில் அவர் குரலைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்றுகூட தோன்ற‌வில்லை. என் ஆகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்து அது!


அவரிடம் பலர் நேரடியாகப் பணிபுரிந்திருந்தாலும் அவரை துரோணராக பாவித்த, பாவிக்கின்ற பல ஏகலைவர்களும் உள்ளனர். அவர் இடத்தை இனி ஒருவர் அடைவது கடினம். இறந்தாலும் இன்னும் பல இயக்குனர்களை inspire செய்து கொண்டே இருப்பார். ஒரு ரசிகனாக அவருக்கு என் மனப்பூர்வ அஞ்சலி.


***


பொன்னாஞ்சலி

ஓவியம்: பரணிராஜன்