சிதம்பர ரகசியம் -முன்னுரை

ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. நீண்ட தொடராகவே எழுத முடியும் ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதினேன். அநுபவம் இல்லாத என் எழுத்தில் குறைகள் நிறைய இருக்கும். குறைகள் கண்ட இடத்தில் சுட்டிக்காட்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். சிதம்பரம் கோயில் காலத்தால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத அளவுக்குப் பழமை வாய்ந்த ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது இங்கே நடராஜரே பிரதானம். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவக் கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். கொஞ்சம் பல புத்தகங்களையும் படித்துத் தகவல்கள் திரட்டிக் கொண்டே எழுதி உள்ளேன். தவறுகளை மன்னித்துப் பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



சிதம்பர ரகசியம் -தல புராணம்

சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படிச் சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், தில்லைவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்" என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை" யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை அடுத்து வரும்.

புண்டரீகபுர மஹாத்மியம்:
தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும், "பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்", "மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில் உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.
திலவன மஹாத்மியம்:
ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.
வ்யாக்ரபுர மகாத்மியம்:
இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது

இன்னும் சிதம்பரம் குறித்து நிறையப் புத்தகங்கள் உள்ளன . அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்: இதிலே தான் முதன் முதல் "நந்தனாரை" பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். "நடேச விஜயம்" வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய "சங்கரவிஜயம்" என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் , அனந்தாச்சாரியா எழுதிய "ப்ரபன்ன மந்திரத்திலும்" சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்தராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.

கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர,"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் "வைதிக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன்.

சிதம்பர ரகசியம்- பூகோள அமைப்பு

தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூருக்குத் தென்மேற்கே உள்ள சிதம்பரத்தின் எல்லைகளாய் வடக்கே வெள்ளாறும், கிழக்கே வங்கக் கடலும், தெற்கே கொள்ளிடமும், மேற்கே வீராணம் ஏரியும் அமைந்துள்ளது. -ஆன்மீகத் தத்துவங்களின் படிச் சிதம்பரம் பற்றிக் குறித்திருப்பது என்னவென்றால்:
"இந்த பூமியும், மனித உடலும் சமமாக ரிஷி முனிவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித உடம்பில் உள்ள "இட" நாடியைப் போன்றது இந்தப் பூவுலகில் உள்ள ஸ்ரீலங்காப் பிரதேசம். "பிங்கள" நாடி என்று இமயமலைப் பிராந்தியத்தைச் சொல்வதுண்டு. மனித உடலில் "இட" நாடிக்கும் "பிங்கள" நாடிக்கும் நடுவில் "சுக்ஷ்ம" நாடி உள்ளதைப் போல் இந்தப் பூவுலகிற்குச் சிதம்பரம் அமைந்துள்ளது." இது ஆன்மீகப் பெரியார் வாக்கு.

சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ளது நடராஜர் கோயில். இந்தக் கோவிலின் பூர்வீகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்று சொல்ல முடியாது. உபநிஷதங்களிலேயும், புராணங்களிலேயும் ஸ்தல மஹாத்மியங்களிலும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் கோவில் தோன்றியது எப்படி எனச் சொல்ல முடியாது. இதுவும் தவிர, மற்றச் சிவன் கோவில்களில் பூஜை வழிபாட்டு முறைகள் "சைவ ஆகமம்" முறைப்படித் தான் நடக்கும். ஆனால் சிதம்பரம் கோவிலில் தினசரி வழிபாடு வைதிக முறைப்படி சிதம்பரம் கோவிலுக்கு உரிமையாளர்களான தீட்சிதர்களால் நடை பெறுகிறது. இதுவும் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்லமுடியாது.

"ஆகம வழிபாடு" என்பது பின்னாட்களில் வந்தது. கி.பி.யில் வந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வைதீக வழிபாடு அதற்கும் முன்னேயே தோன்றியது. சிதம்பரம் தீட்சிதர்கள் ஸ்ரீநடராஜராலேயே நேரடியாக அவருடைய வழிபாட்டிற்காகக் கொண்டு வரப் பட்டவர்கள் என்றும், கோவில் வழிபாட்டு முறைப் "பதஞ்சலி முனிவர்" ஏற்படுத்திக் கொடுத்த முறைப்படி நடக்கிறது என்றும் சொல்கிறார்கள். Tamilian Antiquary, Vol.1 and "The Cholas" Prof. K.A.Nilakanda Sastri, இருவரும் எழுதியுள்ள சரித்திர ஆதாரங்களின் படியும், கோவிலின் உள்ளே கிடைத்துள்ள சில கல்வெட்டுக்களில் இருந்தும், கோவிலின் பழமையில் இருந்தும் இது எந்தக் காலத்தில் ஏற்பட்டது எனச் சொல்ல முடியவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

சிதம்பர ரகசியம்- - பதஞ்சலி முனிவர் வரலாறு

பலரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. இவரின் அவதார காரணம் குறித்துச் சொல்லப் படுவது யாதெனில்: பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் சயனித்துக்கொண்டிருந்த விஷ்ணுவின் திடீர் கனம் தாங்க முடியாமல் தவித்தான் ஆதிசேஷன். ஆனால் விஷ்ணுவோ புன்னகை புரிந்து கொண்டிருந்தார். தன் மனதுள்ளே தன் மூச்சுக்காற்று உள்ளே செல்கையிலும், வெளியே வருகையிலும் நடைபெற்ற சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

"பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலைக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்."

"தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையைக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"

சித்தர்களில் ஒருவரான போகர் 7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தனக்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார்.
"அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!
அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். இங்கே சொல்லப்படுவது மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரம் சென்று பரிபூர்ணமாய் ஐக்கியம் அடைவதைக் குறித்து. இங்கே போகர் சொல்லி இருப்பது தனக்குக் குருவாய் அமைந்து யோகத்திற்கு வழிகாட்டியவர்களைக் குறித்தும், அந்த வழியைக் குறித்தும் சங்கேதமாய்ச் சொல்லி உள்ளார். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்."அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடைத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றிக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பிறக்கையிலேயே தன் ஆதிசேஷன் உரு மறவாமல் இருக்கவோ என்னவோ, பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார் என்று கண்டுபிடிக்க நினைத்தனர். ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். என்றாலும் வியாக்கிரபாதர் ஆசிரமமே காலத்தால் மூத்தது என்றும் சிலர் கூற்று.

சிதம்பர ரகசியம் கோயில் வந்த கதை!

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே, அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக் காடாக இருந்தது. "தில்லை" என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான ஒன்று எனப் புராணங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவின் படியும் இது தில்லை வனங்கள் சூழ்ந்து இருப்பதால் "தில்லை" எனப் பெயர் பெற்றதாய்ச் சொல்கிறார்கள். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்வதன் படி முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை எனவும் பின்னால் சாதாரண மக்களுக்கு இறை நம்பிக்கை ஊட்டும் பொருட்டு உருவ வழிபாடு ஏற்பட்ட காலத்தில் மரங்கள் சூழ்ந்த வனங்களில் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவத்தை அமைத்து வழிபட்டனர் என்றும் பின்னால் அந்தக்குறிப்பிட்ட மரமே அந்த ஊரின் ஸ்தல விருக்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். அப்படி ஏற்பட்டது தான் காஞ்சியில் -மாமரம்., நாகப்பழ மரம்-திருவானைக்காவல்., கடம்ப மரம்-மதுரை., தில்லை மரம்- சிதம்பரம் என்று ஏற்பட்டதாய்ச் சொல்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையின் படியும் புராணங்களின் வாயிலாகவும் தில்லையில் உள்ள நடராஜர் கோயில் அந்த ஈசனே தனக்காக ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்கள். தேவலோகச் சிற்பியான "விஸ்வகர்மா"வால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயிலில் உள்ள "சிதம்பர ரகசியம்" என்பதன் உள் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டதும் கட்டப் பட்டது என்பார்கள். இதை விஸ்வகர்மா "பதஞ்சலி" முனிவரிடம் இருந்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பக் கட்டியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோயிலில் நடராஜர் வருமுன்னேயே வியாக்ரம பாதர் ஆசிரமமும், பதஞ்சலி முனிவரின் ஆசிரமமும் இருந்து வந்ததாயும் அவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. இதில் வியாக்ரமபாதரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. சிவனுக்குப் பூஜை செய்யப் பூக்கள் பறிக்கவும், மற்ற வேலைகளுக்கு உதவியாக இருக்கவும் அவர் புலிக்கையும், காலும் வேண்டிப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்வார்கள். பதஞ்சலியோ என்றால் ஆதிசேஷனின் அவதாரம் ஆவார்.

பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் இங்கே தவம் செய்யும் காலத்தில் சிவனின் ஆனந்த தாண்டவத்தின் காட்சியைக் காண விரும்பினார்கள். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது அவர் தன்னுடன் காசி நகரில் இருந்து 3,000 வேத விற்பன்னர்களை வரவழைத்தார். இந்த வேத விற்பன்னர்கள் தான் சிதம்பரம் தீட்சிதர்கள். இதைப் பின்னால் பார்ப்போம். முதன் முதல் இந்தக் கோவில் இருந்த இடத்தில் தில்லை வனங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் காளி தான் கோயில் கொண்டு இருந்திருக்கிறாள். பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் மற்ற ரி்ஷி முனிவர்களும் முதலில் தானாக உருவான ஒரு சிவலிங்கத்தைத் தான் வணங்கி வழிபட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காணுவதற்கு முன்னால் நடந்தது இது. இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டித் தவம் செய்து இறைவன் காட்சி கொடுத்து தாண்டவம் ஆடத் தயாராக இருக்கும் வேளையில் அன்னையவள் அங்கே வந்து வழி மறித்தாள்.

சிதம்பர ரகசியம் - ஆடும் கூத்தனும், கூத்தியும்!

பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் செய்த இடைவிடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் ஈசன். ஈசனுக்கு அவர்களுக்கு அருளப் பிரசன்னம் ஆனபோது அவர்கள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என இறைஞ்சவே அந்த ஆதிசிவனும் மனம் இரங்கினார். ஆடத் தயார் ஆனார். ஆனால் இந்தக் காட்டிலா ஆடுவது? ஆட ஒரு மண்டபம் வேண்டுமே? குறைந்த பட்சமாய் ஒரு மேடையாவது இருக்கணுமே? என்ன செய்வது என யோசித்தார்.அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் நினைவு வந்தது. அவள் வேலை என்னமோ முடிந்து விட்டது. ஆனாலும் இங்கே கோயில் கொண்டு மற்றவர்களைத் த்டுத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கோபம் தீரவில்லையோ. என்ன செய்யலாம். ஆடவேண்டுமாமே முனிவர்களுக்கு! "ம்ம்ம்ம்ம் இதோ ஒரு வழி! நிருத்த சபை இல்லாமல் என்னால் ஆட முடியாதே"

என முனிவர்களிடம் சொல்லும் அந்த மூலப் பரம்பொருளின் முகத்தில் கள்ளப்புன்னகை. முனிவர்கள் இருவரும் தில்லை வனத்தில் வந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் இடத்தில் ஆடுமாறு வேண்ட இறைவனும் வருகிறார். அப்போது ஒரு ஹூங்காரம்.

ஹூம், என்று கேட்கிறது.

யாரது? என்கிறார் இறைவன்.

அன்னை மகாகாளி தன் வேலைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்த களைப்பில் அங்கே குடி கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் போலும். அவள் தன்னிலை மறந்து, தான் யார் என்பதை மறந்து ஈசனைத் தடுத்தாள்.

"யாரது அங்கே, இது என்னுடைய இடம். உள்ளே நுழையாதே!" என்கிறாள்.

சொல்வது யாரை என்று அவளுக்குத் தெரியாதா என்ன? கேட்டவருக்குத் தெரியாதா என்ன? அவர் நோக்கமே தனியாய் காளி உருவில் இருக்கும் அன்னையை மாற்றித் தன்னுடன் கோவில் கொள்ளச் செய்ய வேண்டும் என்பது தானே. பிரிவாற்றாமை தாங்கவில்லை போல் இருக்கிறது. ஒரு உடலில் குடி இருந்தவர்கள் தனித்தனியாய்ப் பிரிந்ததும் உலக நன்மைக்கே. இப்போது ஆடப் போவதும் உலக நன்மைக்கே. ஆனால் அதையே ஒரு நாட்டிய நாடகமாக்கிக் காட்டுகிறார்கள் இருவரும். ஏன் அதுவும் நமக்குப் பாடம் புகட்டத் தான்.

காளி தடுத்ததும் இறைவன் என்ன செய்வது என்பது புரியாது போல் நடிக்க, காளி கேட்கிறாள்:"ஏன் வந்தீர் இங்கே?" என.

புன்முறுவல் பூத்த ஐயன சொல்கிறார்: " ஆடவும், ஆட்டுவிக்கவும் தான்."

ஆவ்வளவு தான். என்னைப் போல் கோபக் காரியான அந்தக் காளிக்குக் கேட்கவா வேண்டும்? கோபத்தில் குதிக்கிறாள். "என்ன ஆட்டுவிப்பீரா நீர்? எங்கே என்னை ஆட்டுவியும், பார்க்கலாம். அல்லது என்னுடன் இணைந்து ஆடவாவது முடியுமா உம்மால்?"

இறைவனுக்கு வேண்டியதும் இது தானே. "அதற்கு என்ன? இருவரும் இணைந்து ஆடலாம். போட்டி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்." என்று சிரிக்கவேக் காளி கூத்தாடுகிறாள்.

"என்னுடன் போட்டியா? எங்கே பார்க்கலாம்." அவ்வளவு தான்.

ரிஷி, முனிவர்கள் பார்த்திருக்கப் போட்டி ஆரம்பிக்கிறது. நடுவர்கள் அந்த முனிவர்களும், தேவர்களும் தான். இருவரும் ஆட வேண்டியது. யார் ஆடுவதை யாரால் திருப்பி ஆட முடியவில்லையோ அவர்கள் தோற்றதாய் வச்சுக்க வேண்டியது. இதான் பந்தயம். அந்த உலகையே ஆட்டுவிக்கும் இருவரும் ஆடுகிறார்கள். நடந்தது என்ன?

"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின

அ்டிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடடக்-களித்

தாடுங்காளீ! சாமுண்டீகங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை

நாடச் செய்தாய் என்னை!"

"மூலப் பரம்பொருளின் நாட்டம்ிந்த

மூன்று புவியும் தன் ஆட்டம்:

காலப் பெருங்கள்த்தின் மீதே-எங்கள்

காளி நடமுலகக் கூட்டம்."

இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆடட்டும். நாளைக்குப் பார்ப்போம் ஆட்டத்தின் முடிவை. இப்போது ஒரு விஷயம். ஆதியில் தில்லையில் இந்த முனிவர்கள் பூஜித்த மூலநாத லிங்கத் திருமேனிக்கான கோயிலும், காளி குடி கொண்டிருந்த கோயிலும் தான் நடராஜர் வரும் முன் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் "நிருத்த சபை" என அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் காளிக்குச் சொந்தமாய் இருந்த இந்த இடம் தற்சமயம் கோவிலினுள் உள்ளது. அதற்குப் பின்னால் வருவோம்.
சிதம்பர ரகசியம் -ஜெயிக்கப் போறது யாரு?!!!
ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும் ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம், செருமிக் கொண்டு வருகிறாள் காளி யன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்:
"காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவு மொரு வண்டு-தழல்
காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும்
கால்களாறுடையதெனக் கண்டு- மறை
காணு முனிவோருரைத்தார் பண்டு."
ஆட்டம் ஆரம்பி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். "தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்!" அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார். காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும், பாவங்களுக்கும் சரியான பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில் இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளியன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன், சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால் இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன, போகும், போகப் போகிற தூரம் இவ்வளவு என்று வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனைப் பார்க்கிறார்கள். (அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச் சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார் எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்?எனக் கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும் செவி வழிச் செய்திகள்.)

காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம் ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான்.
அவனுக்குத் தெரியாதா?
"ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்கு முளவாகும்- ஒன்றே
யாகினாலுகனைத்தும் சாகும்வை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -இந்த
பேரறிவுதான் பரமஞானமாகும்."
இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வகர்மா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா!

சிதம்பர ரகசியம்-10 - சித்சபையின் வர்ணனை!

சிதம்பரம் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும், காலப் போக்கில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில் இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச் சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மன்னனின் திருப்பணிகள் பற்றிச் "சிதம்பர மஹாத்மியம்" புத்தகத்தில் காண முடிகிறது.

இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப் பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும், உமை அன்னையையும் தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும்.

இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் "ஆனந்தத் தாண்டவம்" ஆடக் கட்டப் பட்டது இந்த சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் "பொன்னம்பலம்" என்று உருகி உருகிப் பாடப் பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப் பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால் எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?

சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன்.இந்தச் சபைக்குச் செல்ல வெள்ளியில் ஆன படிகள் ஐந்து இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும் புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப் போகலாம்.

பிரம்ம பீடம்:இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.

விஷ்ணு பீடம்: இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

ருத்ரபீடம்: இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.

மஹேஸ்வர பீடம்: கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சதாசிவ பீடம்: 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் "சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.

மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28-ம் பெயர் வேணாம்னு தான் எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.

சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.

64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும் அவை.
அடுத்து நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?

சிதம்பர ரகசியம்-- நர்த்தன சுந்தர நடராஜா!


நடராஜர் உருவத்தைச் சிலையாகவோ படமாகவோ நாம் அனைவருமே பார்த்திருக்கோம். ஆனால் சிதம்பரம் நடராஜர் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவர். அவரை நடராஜராஜர், சபாபதி, சபாநாயகர் என்றெல்லாம் அழைப்பது உண்டு. ஏனெனில் எல்லாக் கோயில் நடராஜர்களை விடச் சிதம்பரம் நடராஜர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். ஆடவல்லான் தனக்கெனக் கோயில் கட்டிக் கொண்டு வசிக்க ஆரம்பித்தது நம்மை எல்லாம் ஆட்கொள்ளத் தானே! இப்போது நடராஜரின் உருவ அமைப்பைப் பார்ப்போம். ஆடும் கோலத்தில் இடது பதத்தை மேலே தூக்கிக் கொண்டு ஆடும் இந்த நடராஜரை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் முடிந்த வரை சொல்கிறேன். நாட்டியத்தின் ஆதிகுருவான சிவன் ஆடும் இந்த ஆனந்தத் தாண்டவம் விவரிக்க முடியாத அழகுடனும், அதே சமயம் ஒரு விதமான திகிலுடனும் கூடியதாய்த் தோன்றுகிறதா? எனக்கும் அப்படித்தான். இறைவனின் இந்தப் புனிதமான அசைவுகளில் நம் உள் மனதின் பாவங்கள் பொசுங்கிப் போகும். அவன் அபிநயத்திலோ எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது? ஆறு பாவங்களைக் காட்டுகிறது இந்த நாட்டியக் கோலம்.

அவை சிருஷ்டி, ஸம்ஹாரம், வித்யா, அவித்யா, கதி, அகதி போன்றவையாகும். அவன் ஆடவில்லையென்றால் நாம் இயங்குவது எப்படி? உலக நன்மைக்காகவே இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் அவன் ஆடுவது எந்தப் பாடலுக்கு? "ஆகாத பூம்" என்ற தொனிக்கு இடைவிடாது ஆடுகிறான். இப்போ அவன் கோலத்தைப் பார்ப்போம்., வலது மேல் கையில் டமரூ என்று சொல்லப் படும் ஓசை எழுப்பும் கருவி, வலது கீழ்க்கையோ அபயம் காட்டுகிறது. இடது மேல் கையில் நெருப்பும், இடது கீழ்க்கை அவருடைய திருப்பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய வலது கால் பாதம் முயலகனை அழுத்திக் கொண்டிருக்க, இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டு, மண்டை ஓட்டு மாலை தரித்திருக்கிறார்.

நடராஜ ஸ்வரூபங்கள் அநேகம் இருந்தாலும் இந்த ஆனந்தத் தாண்டவ ஸ்வரூபத்தின் விசேஷம் தனி. இது நமக்கு சிருஷ்டியின் தத்துவத்தை உணர்த்துகிறது. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம் போன்ற ஐந்து தொழில்களையும் குறிக்கும். நடராஜர் தெற்கே பார்த்துக் கொண்டும் இருப்பார். இவரின் வடிவே "ஓம்" என்னும் ஓங்கார வடிவானது. ஓங்கார வடிவினுள் உள்ள பஞ்சாட்சர மூர்த்தியான இவரின் இந்தத் தரிசனம் நமக்கு என்ன உணர்த்துகிறது என்றால் முயலகன் போன்ற அசுர மனம் நமக்கு. அது பாம்புகள் போல் சீறிக் கொண்டு மேலெழும்பும். அந்த மனத்தை அடக்க வேண்டும். தியானம் என்ற நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கடைசியில் இறைவனை அடைய வேண்டும்.

இவருடைய நாட்டியம் இவ்வுலகையே ஆட்டுவிக்கிறது. எப்படி என்றால் நம்முடைய மனம் எவ்வளவு வேகமாய்ச் சிந்திக்கிறது? வாயுவேக மனோவேகம் எல்லாம் போதாது அல்லவா மனோவேகத்துக்கு. அந்த மனோவேகத்திலும், உடல் உணர்வுகளிலும், சிரிப்பிலும், அழுகையிலும், பசியிலும், உணவு உண்ட திருப்தியிலும், ஆடலிலும், பாடலிலும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நடராஜர் இருக்கின்றார். இன்னும் கடல் அலைகள் சீறுவதிலும், சூரிய சந்திரர்கள் தோன்றுவதிலும், கிரஹங்களின் சுழற்சியிலும், பூமியின் இடைவிடாத சுற்றுக்களிலும், மஹா ப்ரளயத்திலும், கொடிய தொற்று நோய்கள் தோன்றும்போதும், பூகம்பத்திலும், எரிமலைகளிலும், சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளிலும், புயல் காற்றிலும், அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கும் இடிகளிலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியிலும், பெருமழையிலும், சூறைக் காற்றிலும், பட்சிகளின் கிளுகிளுப்பிலும், விலங்குகளின் சப்தங்களிலும், பூக்கள் பூப்பதிலும், காய், கனிகளிலும், இன்னும் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்திலும் நிறைந்திருப்பது அவரே!


நடராஜர் குறித்த விளக்கம்—என் பார்வையில்!



ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அளக்கமுடியாத அண்டங்கள் வளத்துடன் திகழும் அண்டங்களைச் சிவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஹா, முழுமையாக சிவ வடிவை, அதுவும் சிவ நடராஜ வடிவை, ஆநந்த தாண்டவம் ஆடும் வடிவைப் பார்த்தால்!!! அதிகாலையில் வீட்டில் நுழையும் சூரியக் கதிர்களில் காணப்படும் அணுத்துகள் களைப் போல் சிறியவன் என எண்ணமுடியுமா?? சூரியோதயத்தில் மலரும் தாமரை எப்படி முழுமையாக சூரியனைக் கண்டதும் மலருகிறதோ, அந்த மலர்ச்சியைப் போலவும், இவ்வுலகைப் படைத்துக் காத்து, ரட்சித்து, சம்ஹாரம் செய்யும் ஒவ்வொரு செயலையும், இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் சூக்ஷ்மமாகவும், தூலமாகவும், புயலில் அகப்பட்ட சிறு துரும்பு போலவும் எவ்வாறு அநுபவித்துச் செயல் படுகிறானோ அவ்வாறு நினைக்கலாமா? நமக்கு அவன் இருப்பு மலைகளில் உற்பத்தி ஆகி, மேடு, பள்ளங்களில் வேகமாய் இறங்கி தடையில்லாமல் ஓடி வரும் நீரோட்டத்தில் தெரிய வருகிறது. இந்த நடராஜரின் அற்புத வடிவம் கிழக்கு நாடுகளின் அதிலும் நம் திராவிடக் கலையின் சிற்பிகள் வடித்த அதி அற்புத உந்நதக் கலைச் செல்வம் இது என்றே சொல்லலாம்.

மனிதனின் தெய்வீகத் தன்மை எப்போது தெரிய வருகிறது?? நாம் நம்முடைய படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதாலோ, அதன் அருகாமையில் இருப்பதாலோ அல்ல, ஏனெனில் ஒவ்வொரு பிறவியிலும் நம்முடைய உருவ அமைப்பு மாறுவதில்லை, பின் எவ்வாறெனில் இவ்வுயிர்களைக் கட்டும் பாசப் பிணைப்பை அறுத்து அவற்றிலிருந்து விடுபடக் கூடிய வீடுபேறு அடைய வேண்டிய உயர்ந்த பக்குவத்தை உயிர்களிடத்தில் உண்டாக்குகிறான். எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்திலும் அண்டங்களிலும் நம்மைச் சுற்றிச் சுழற்றிக் கடைசியில் நாம் மோட்சம் அடைகிறோம். அத்தகைய ஆநந்தத்தை நாம் நம்மிடையே எப்போதும் வைத்திருக்கிறோமா?? இல்லையெனில் இழந்துவிட்டோமோ? ஆம், இது போன்ற சிற்ப அற்புதங்களைப் பார்ப்பதோடல்லாமல் அதன் உந்நத தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் உணர்வுகளை இழந்தே விட்டோம்.

இந்த அருமையான சிற்பங்களை இப்போது நாம் ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு பார்வையிலும் பார்த்தோமானால், இந்த சிவ வடிவம் ஒரு அழகான பிறைச் சந்திரனை ஒத்திருக்கிறது. என்ன ஒரு பெரும்பேறு? எவ்வளவு பெருமைப்படத் தக்க வடிவான உடலமைப்பு! இன்று இந்த மறக்கமுடியா அழகுடன் கூடிய இந்த வடிவத்தை உலோகச் சிலையாகப் பார்க்கிறோம். கருமேகத்தில் பளீரென ஒளிவிடும் அழகிய மின்னல் போன்ற ஒளியைக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சிலைதான், அசைவில்லைதான், ஆனால் ஒளியால் குளிப்பாட்டப் பட்ட அந்தச் சிற்பம், எந்த நேரம் உயிர் பெற்று அசைந்து ஆடத் தொடங்குமோ என எண்ண வைக்கிறது! இதோ இந்த ஒளி சற்று நகர்ந்தாலும் போதும், அசைந்து அசைந்து ஆடத் தொடங்கிவிடுமோ?? நம்மை ஆட்டுவிக்கும் அந்த ஆட்டம் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறதோ.!

வெகுநாட்களாக, ஏன் பல்லாண்டுகளாக இருந்த இருட்டில் இருந்து விலகி,அந்த இருள் என்ற மந்திரச் சொல்லின் வசியம் நீங்கிப் போய், இன்று ஒளியில் குளிப்பாட்டப் பட்டு, அவ்வாறு ஒளி வரும்போது இந்த அற்புத சிற்பத்தின் மேல் தென்படும் நிழல் அந்த சிவநடராஜாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் ஆடைபோல் போர்த்திப் போர்த்தி விலகுகிறது. நாம் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளி வருவதைப் போல! எங்கும் நீக்கமற நிறைந்த இந்த ஒழுங்கான வடிவின் அற்புதம்! மூடுபனி போன்ற மெல்லிய திரை போன்ற உடலமைப்பு! மற்றத் தெய்வங்களான பிரமன், மன்மதன், எமன், சந்திரன் போன்றவர்கள் அடையாளங்கள் மாறாமல் சிரம் அறுத்து, எரித்து, உதைத்து, தேய்ந்து போகவைத்து எனப் பல்வகைப் பட்டவாறு இருந்த போதிலும், இந்த சிவநடராஜ வடிவோ, எது எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

பெரிய மூங்கிலைப்போன்ற தோள்கள் ஆடும்போது எவ்வாறு வேகமாய்ச் சுழலுகிறது, அந்த வேகத்தையும் அதன் காரண, காரியங்களையும் மட்டும் நாம் புரிந்துகொண்டோமானால்,ஆஹா, நமக்குப் பரம்பொருளின் தத்துவமே பூரணமாய்ப் புரிந்துவிடுமல்லவோ? கைகளின் வளைவு, தோள்களின் வளைவு, புஜங்கள் ஏற்படுத்தும் அற்புதமானதொரு எழுச்சி, யானையின் துதிக்கையை நினைவூட்டும் வண்ணம் உருண்டு திரண்ட அந்தத் தோள்கள், அவை சூரியகிரஹணத்தின்போது சூரியனைச் சுற்றி ஏற்படும் மறைந்திருக்கும் சந்திரனின் சிவந்த ஒளிவட்டம்போன்ற காட்சி, நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்குக் காட்சி தருவது போல் தெரியும் விலா எலும்புகள், அவை சேர்ந்திருக்கும் விதம், தோள்களை அவை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு, இவற்றை உற்றுக் கவனித்தால், இது சிலையல்ல, எந்நேரம் வேண்டுமானாலும் ஆடத் தயாராய் இருக்கும் மனிதனோ என்னும் தோற்றத்தைத் தருகிறது.

உடுக்கை போன்ற சிறிய இடையோ உறுதியும் பலமும் கொண்டு விளங்குகிறது. தோள்களுக்கு அருகே விசாலமாய் இருக்கும் உடலானது போகப்போகக் குறுகி, இடைக்கு அருகே மிகக் குறுகி, மீண்டும் அகன்று பலம் பொருந்தியும், உறுதியாகவும் காட்சி அளித்து இரு தொடைகளாகக் கீழே இறங்குகிறது. கணக்குடன் செதுக்கப் பட்ட சிலை என்ற உணர்வே தோன்றுவதில்லை. இடுப்புப் பகுதி அந்தப் பருத்த தொடைகளைத் தாங்கும் வல்லமையுடன் அகன்று காணப்பட்டாலும், அவை காட்டும் அற்புதக் கோணங்கள்! ஆஹா, என்ன அற்புதமான, பரிபூரணமான கோணம்! அந்தக் கால்கள் எவ்வளவு மென்மையாகத் தன் பாதங்களைப் பூமியில் பதிக்கும்போது மாறுகின்றன! ஆச்சரியமாய் உள்ளது. அந்த மென்மையாகப் பதிக்கப்படும் பாதங்களிலிருந்தா இத்தனை வேகமான ஆட்டம் ஆடப்படுகிறது? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இல்லை??

நடராஜரின் சிற்பப் பகுதியின் தலை பாகத்தை ஒரு பக்கமாய்ப் பார்த்தால், ஆட்டத்தின் வேகத்தில் அந்த விரிந்த குழல்கற்றைகள் அலைவதைப் பாருங்கள். அந்த இரு கைகளும், மார்புப் பகுதிக்கும், வயிற்றுக்கும் உள்ள இடைவெளியைப் பிரித்திருப்பதைக் கண்டால், Venus de’ Medici, சிற்பம் நினைவில் மோதுகிறது. ஏனெனில் தன்னில் ஒரு பாதியாக உமையைக் கொண்டவர் அன்றோ? ஆகவே தன் பெண்மையின் அழகை அவ்விதம் மறைத்துக்கொள்கிறாரோ? அந்தக் கிரேக்கத்தின் காதல் தேவதை தன் எழிலை எவ்வாறு தன்னிரு கரங்களால், ஒரு நளினத்தோடு மறைப்பாளோ அதோடு போட்டி போடும் வண்ணம் இந்த சிவநடராஜா தன்னையும் மறைத்துக்கொள்கின்றாரோ? ஒரு நீண்ட நெடிய நிழல் இந்தச் சிற்பத்தின் உடல்பகுதியை இரண்டாகப் பிரித்தவண்ணம் தொடைகள் வரை செல்கிறதே! உடலின் ஒரு பகுதியை நிழல் மறைக்கிறது, மறுபகுதியில் அரை வெளிச்சம்! அந்த இருட்டே அதை ஆடையாய்ப் போர்த்தியது போல் காண்கின்றோம். மொத்தத்தில் இது புனிதத் தன்மையின் ஆழத்தைக் காட்டுகிறது, ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், இயங்காமையிலும், இன்னும் இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் இந்த ஆட்டத்தைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தால் அவை வெறும் அலங்காரச் சொற்களாகவே போய்விடும். அந்த நீண்ட, மெல்லிய கால்கள் வேகத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவையோ?

ஒரு விதத்தில் இது புனிதத்தின் ஆழம், அண்டப் பேரொளியின் காட்சி, சிவனோடு இணைந்த சக்தியின் தரிசனம், ஆனாலும் இவற்றை எல்லாம் சொல்லுவது, இந்த ஆட்டத்தின் வேகத்தையும், லயத்தையும், தாளம் தப்பாமல் ஆடுவதையும் அதனால் உலகமே இயங்கும் இயக்கதையும் நோக்கும்போது வெறும் வார்த்தைகளாகிவிடுகின்றன. அந்த இரு நீண்ட, மெல்லிய, அதே சமயம் உறுதியான கால்களைப் பார்க்கும் போதே அவை ஆடும் ஆட்டத்தின் வேகம் நமக்குப் புரியவருகிறது. நேருக்கு நேராகக் காணும்போதோ?? ஒரு கை தேர்ந்த சிற்பி வடித்த சிற்பம் என்று மட்டுமே தோன்றும். ஒவ்வொரு விதமான பார்வைகளிலும் மேலே, கீழே, பக்கவாட்டுப்பார்வை என எப்படிப் பார்த்தாலும், அதில் உள்ள இயற்கையான, இயல்பான தனித் தன்மையின் அமைப்பும் தெரிகிறது. என்றாலும் எல்லாவற்றுக்கும் மேல், அனைவராலும் கவனிக்கப் படாத ஒன்றும் உள்ளது. வாழ்க்கையின் மையம் என்ற நம் போன்ற சாதாரண மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆழமான புள்ளி தெரிகிறது. மிக மிக எழிலும், நளினமும் கலந்த படைப்பு, அதைவிட அதன் நேர்த்தி கண்ணைக் கவருகிறது. இன்னும் சொல்லலாம். இதை நாம் பரிசுத்தம், புனிதம் என்னலாமா?? மிகவும் சக்தி வாய்ந்ததொரு புனிதம் எனலாமா?? வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.. ஆஹா, அந்த நிழல்கள் ஒரு மாலைபோல் தோள்களிலிருந்து இடுப்பு வரை வழிகின்றது, இந்த வலப்பக்கக் கோணத்தில் பார்த்தால், அது மிகவும் அருமையாய்ப் புரிய வருகிறது.

மற்றொரு பக்கவாட்டுக் கோணத்தில் பார்த்தோமானால்,

இரண்டு கால்களிலும் விழும் வித்தியாசமான ஒளிக்கோணத்தில், இந்த ஒரு தொடையின் நீண்ட நிழல் மற்றொரு காலின் மீது விழுந்திருக்கும் கோணத்தைப் பார்த்தால்?? அடடா!!!!!! உள்ளார்ந்ததொரு நேர்த்தி இல்லையெனில் இந்த முழுமையும், வளைந்து கொடுக்கிற மிருதுத் தன்மையும் வந்திருக்க முடியாது. இல்லையெனில் அந்த நீண்ட நிழல் கூர்மையாக, நேராகச் சென்றிருக்கும். இந்தக் கால் இங்கே இத்தனை மென்மையுடனும், அழகான வளைவு, நெளிவுகளோடும் காணப்படுவதற்குக் காரணம் இந்த நடராஜா அன்னையைத் தன் உடலின் சரிபாதியாக ஏற்றதாலோ?? இடக்கால் அன்னையினுடைய பாகம் ஆயிற்றே??

சிவநடராஜாவின் இந்தச் சிற்பத்தை ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல் பார்க்கக் கூடாது. அதன் உள்ளார்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதன் தாத்பரியம் என்ன என்ற எண்ணத்தோடு ஆய்ந்து நோக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு என்ன புரியும்?? எதுவுமில்லை. வெறும் சிலை என்ற உணர்வோடு ஒரு அழகான சிற்பக்கலையை ரசிப்பதிலிருந்து அவன் விலகிவிடுகிறான். நடராஜ தத்துவத்தை ஒருவன் பரிபூரணமாக அறிந்திருப்பதோடு, பூரணமாய் உணர்ந்திருக்கவும் வேண்டும். இந்த நடராஜாவின் அழகைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமும் இல்லை. விரிந்த செஞ்சடை, ஆடும் ஆட்டத்தில் அதுவும் சேர்ந்து சுற்றுகிறது. சடை சுற்றும் வேகத்தில் அங்கே குடிகொண்டிருக்கும் கங்கையும் இங்கேயும், அங்கேயுமாய் அலைகிறாள். நீர்த்திவலைகள் தலை வழியே வழிந்து நேரே இடக்கையின் மூலம் பாதத்தை அடைவது கங்கை சிவனை நமஸ்கரிப்பதை ஒத்திருக்கிறது. சிவனின் இந்தத் தலைப்பாகத்தை ஒரு நீண்ட சிந்தனையுடன் கூடிய கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அந்த உப்பிய சற்றே வீங்கினாற்போன்ற தோற்றம் கொடுக்கும் அழகிய வாய் எவ்வளவு அற்புதமாகப் புலன்களைத் தாக்கும் உணர்வுகளைக் காட்டுகின்றது என்பது புரியவரும். அந்த அழகான வாயின் அமைப்பும், கண்களும் ஓர் ஒத்திசைவோடு கூடிய இந்திரிய சம்பந்தமான உணர்வுகளை ஒரே சமயத்தில் பிரதிபலிக்கின்றன. அந்த உதடுகளோ எனில் மெய் சிலிர்க்க வைக்கும் நாசித் துவாரங்களை விளிம்பாய்க் கொண்டு அசத்துகின்றன.

அமுதம் உண்டானோ என்னும்படிக்கு வாயினில் உள்ள ஈரம் அலைபோல் அடிக்கின்றது. ஏனெனில் தலையிலே அந்த விரிந்த செஞ்சடையிலே குடி கொண்டிருக்கும் கங்கையானவள் அங்குமிங்கும் அலைந்து தண்ணீரை அப்படி வர்ஷிப்பதால் அந்த வாயும், அதன் நாவும் எந்நேரமும் நீர் நிரம்பி அமுதம் உண்டவனைப் போல் காண்கின்றது. அதுமட்டுமா?? அந்த நாவிலிருந்து கிளம்பும் ஜதிக்கட்டுகளின் வேகத்தால் பாம்பு வேகமாகப் படமெடுத்து ஆடுகிறாற்போல் அசைகின்றது. கண்ணின் இரு கருவிழிகளுமோ எனில் மூடியுள்ள அந்த இமைகளுக்கிடையிலே இவ்வுலகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்பதை நிச்சயம் செய்வது போல சூரிய, சந்திரர் போல் பிரகாசிக்கின்றன. கண்களின் ஒளியோ மனதை மயக்கும் ஒளியாக இல்லாமல் மனதை அமைதிப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்தும் ஒளியாக உள்ளது. நம்மை இழந்து, நம்மை மறந்து அந்தக் கண்ணொளியில் நாம் ஆழ்ந்துவிடுகிறோம். கண் இமைகள் ஒரு மென்மையான பட்டு ஆடை போல் அந்தக் கண்களை மூடியுள்ளன. தீர்க்கமான நாசி, அளவெடுத்தாற்போல் செதுக்கப் பட்டுள்ளது. தானே தனது ஆட்டத்தில் மயங்கிவிட்டானோ என்னும்படியான பார்வை!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என அப்பர் பெருமான் சொன்னாற்போல ஒரு குமிண் சிரிப்பு அந்த உதடுகளில் நெளிகின்றது. உதடுகளின் வளைவுகளும், கன்னக் கதுப்புகளும், முகமும், ஏன் மொத்த உடலுமே அந்தப் புன்னகையால் பூத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இவ்வுலகத்து மர்மங்களை எல்லாம் நான் அறிவேன் என்னும் சிரிப்போ அது?? ஆடற்கலையின் அற்புதத்தைத் தன் கண்ணசைவால், தன் குமிண் சிரிப்பால், தன் கையசைவால் காட்டும் இந்த அதி அற்புத உந்நத வடிவம் , செழுமையான கன்னங்கள், சிரிப்பினால் கன்னத்தில் விளைந்த குழிவு, இடக்கையால் தன் பாதத்தைச் சுட்டும் அமைப்பு, தலையின் கங்கை சிந்த அந்த ஒவ்வொரு நீர்த்துளியிலும் தெரியும் ஆநந்த நடனம்! இந்த ஆநந்தம் எதற்காக? உலகு உய்யவன்றோ! விஷம் உண்டதால் நீலமான மேனி, திருமாலே கண்டத்தில் மாலையாக அமர்ந்தாற்போன்ற தோற்றத்தைத் தருகின்றது. ஆடும் வேகத்தில் அரையில் கட்டிய புலித்தோலின் அசைவு ஒரு புலியே வேகமாய் ஓடி வருவதைப் போன்ற தோற்றமளிக்கின்றது. நீண்ட மெல்லிய கால்கள், வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி இருப்பது, வலக்கால் அண்டத்தின் மையப்புள்ளியில் பதிந்திருப்பதையும், இடக்காலின் சுழற்சியால் அண்டபகிரண்டங்களும் இயங்குவதையும், அந்த இயக்கத்தின் வேகத்தையும் சுட்டுகிறது அல்லவோ?

நன்றி திரு விஜய்குமார், சிங்கை (கல்லிலே கலை வண்ணம் கண்டவர்)

சிதம்பர ரகசியம் -- "நம சிவாயா" வாழ்க!

படைத்துக் ,காத்து, அழித்து, மறைத்து, அருளும் நடராஜரின் திரு உருவில் உள்ள அர்த்தங்கள் தான் எத்தனை? இப்போது இந்தக் கட்டுரையை எழுதும்படி என்னைத் தூண்டியதும் அவர்தான், அதைப் படிக்கும்படியான உணர்வை உங்களுக்குத் தூண்டுவதும் அவர்தான். இப்படி எல்லாமாக நிறைந்திருக்கும் நடராஜரின் திரு உருவமே "ஓம்" என்னும் எழுத்தைப் போல் இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னேன். உலக மக்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தி கொடுக்கவும் தான் அவர் ஆடுகிறார். அவர் கையில் இருக்கும் "டமரூ"வின் சப்தத்தில் மக்களை அழைக்கிறார் எனக் கொள்ளலாம். இதைத் தவிர டமரூவின் சப்தத்தில் தான் சிருஷ்டியே நடக்கிறது. தன் கைகளால் பாதுகாப்பும் அளிக்கிறார் உலக மக்களுக்கு அபய ஹஸ்தத்தின் மூலம். இந்த அபய ஹஸ்தம் தான் ஸ்திதியையும் காட்டுகிறது. நெருப்பை ஏந்தி இருக்கும் கையானது அவர் நமக்கு அளிக்கும் சத்தியப் பிரமாணத்தைக் காட்டுகிறது. "என் காலடியில் நீ வந்தாய் உனக்கு என்னுடைய பாதுகாப்பு உண்டு" என்று காட்டுகிறார். அதைத் தான் தன்னுடைய நடனமாடும் இடது காலை இடக்கையால் சுட்டியும் காட்டுகிறார். முயலகனை அழுத்தும் வலக்கால் நாம் இவ்வாறு நம் மனத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் எனக் காட்டுகிறது. தூக்கி நிற்கும் இடக்காலோ சொல்லாத வி்ஷயங்களே இல்லை. அதைத் தான் "குஞ்சிதபாதம்" எனச் சொல்கிறார்கள். இந்தக் குஞ்சித பாதத்தைப் பணிந்தால் நமக்கு இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டுப் பேரானந்த நிலையை அடையலாம் என்று சொல்கிறார். இது மட்டுமா?
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே. (திருமூலர் திருமந்திரம்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.
மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான். (உண்மை விளக்கம்; திருவதிகை மனவாசகங்கடந்தார்)

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே. "" (திருமந்திரம், திருமூலர்)

டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

எல்லைகளைக் கடந்த இந்த நாட்டியம் ஆனது முடிவற்றது. இடைவிடாது ஆடப்படுவது. இந்த ஓங்கார ஸ்வரூபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. இதற்குக் காலமோ, நேரமோ, இடமோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்குக் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. இந்தப் பிரபஞ்சமே அவன் ஆடலரங்கம். அவன் ஆடலரசன். ஆடுவதும் அவனே! ஆட்டுவிப்பதும் அவனே!

"வேதங்களாட மிகு ஆகமமாடக்
கீதங்களாடக் கிளர் அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங்கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே!" திருமந்திரம்-திருமூலர்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் "சிதம்பர ரகசியம்" அடுத்து நாம் படிக்க இருப்பது.

சிதம்பர ரகசியம்-- ரகசியம், பரம ரகசியம்!

பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே? இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க விடப் பட்டிருக்கும்.அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது. எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும்.

ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது. ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன் என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய சௌகரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு. காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. கடுமையாக ஒரு மனதோடு யோகப்பயிற்சி செய்பவர்களாலேயே நினைத்துப் பார்க்க முடிந்த ஒன்று. அனைத்தையும் கடந்தவர்களாலேயே புரிந்து கொள்ளவும் முடியும்.

கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் தவத்தாலும், தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிபாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?

ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும், தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே மானசீகமாகக் கவிழ்ந்த மொட்டுப் போன்ற தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு அப்போது ஊற்றெடுக்கும் சச்சிதானந்தப் பேரானந்தத்தைத், தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின் மூலநாடிகளைக் கிளப்பி, மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.

சிதம்பர ரகசியம் - - மூச்சை இழுத்து விடுங்க!
யோகம் அறிந்தவர்களும், அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும், இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும், வியாக்ரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்களால் அடைய முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். இங்கே திருச்சியில் சமயபுரத்திற்கு அருகே சிறுகனூர் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள திருப்பட்டூர் என்னும் ஊரில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் ஜீவ சமாதி உள்ளது. தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்தச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" குறிக்கும்.

சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு, 900 முறையும், ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும், மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும், வாழ முடியும். உண்மை, பொய்யில்லை.

ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலில் பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக மூச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு உத்தேசமாக 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும், இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும், அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும், அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம். 6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போதும், நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். இதுவே மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்ணாகும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.

டிஸ்கி: அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.

சிதம்பர ரகசியம் - தெரியாமல் செய்யாதீங்க!

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும், இன்னும் சிலருக்கும் மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம்" என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ மோசமான விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ, வெளிவிடும்போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அல்சர் இல்லை எனினும் வேறு விதப் பக்க விளைவுகள் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப் படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும், அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனத் தோன்றியது.

நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூக்ஷ்ம நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக்குக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி, அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும், முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது.இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால்.

ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.

சிதம்பர ரகசியம் - குண்டலினி யோகம்னா என்ன?

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். யாரும் தனியாக முயல வேண்டாம்.
மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.
இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.
இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.
உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.
உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினியை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும்.
இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி
நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.
உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.
அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி
உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

சிதம்பர ரகசியம் - ரகசியமாவே இருக்கட்டும்!

நானும் யோகா கத்துக்கிட்டு தினமும் பயிற்சியும் செய்யறேன். ஆனால் என்னோட யோககுரு என்னுடைய உடல்நிலைக்குத் தகுந்த யோக ஆசனங்களைத் தவிர்த்து மற்றதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. குண்டலினி யோகம் பற்றிப் பேசி இருக்கிறோம் என்றாலும் அவர் அதை எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் கற்றுக் கொண்டது வெறும் மூச்சுப் பயிற்சி தான். சிலர் அதையே குண்டலினி யோகப் பயிற்சி எனவும் நினைத்துக் கொள்ளலாம். ஏனெனில் "சவாசனம்" என்னும் அசையா நிலை ஆசனத்தில் நம் உடலின் உள்ளங்கால் முதல் ஆரம்பித்து உச்சந்தலை வரை உடலில் அமைதிப் படுத்த முயற்சி செய்வோம். அந்த நிலையில் கூட ரொம்பவே ஆழமான அப்பியாசம் வேண்டாம் என என்னோட யோக குரு சொல்லி இருக்கிறார். திரும்பி வரத் தாமதம் ஆவதோடு இல்லாமல் உலக இயல்புக்கு மாறுபட்டு விடுகிறார்கள் என்றும் சொல்லுவார். யோக ஆசனங்கள் செய்யும்போது நம் மனது அதில் ஒருமைப் பட்டால் போதுமானாது என்பது அவர் எனக்குச் சொன்ன முக்கியமான ஆலோசனை. இதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கவும். திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன் எனத் தவறாக நினைக்க வேண்டாம்.

அனஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. 12 இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதுக்குக் காற்றின் சக்தி உள்ளது. இந்தக் காற்று இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? தவிர, நாம் உள்ளிழுப்பதும் காற்றுத் தான். வெளி விடுவதும் காற்றுத் தான். சித்தர்களின் கண்டுபிடிப்பின் அற்புதம். விஞ்ஞானம் எல்லாம் நிரூபிக்கும் முன்னேயே மெய்ஞானம் பெற்ற நம் சித்தர்கள் ஒரு நாளும் தவறாய்ச் சொல்லவில்லை இல்லையா?

உணர்வுகள்; ஏமாற்றுதல், ஏமாறல், குழப்பமான மனநிலை, வருந்துதல், நம்பிக்கை, ஆசை, எதிர்பார்ப்பு, பாரபட்சம் இன்மை, திமிராய் இருத்தல், மட்டம் தட்டுதல், பொஸஸிவாக இருத்தல்(தமிழிலே என்னங்க?)சுயநலம்னு சொல்லலாமா? , ஒருத்தரைத் தனக்கு மட்டுமே சொந்தம்னு எண்ணிக்கொள்வது. உதாரணம் சொல்லணும்னா மாமியார் பையரைத் தனக்கு மட்டும் சொந்தம்னும், மருமகள் கணவன் தனக்கு மட்டும் சொந்தம்னும் எண்ணுவது.

ஜீவாத்மா இங்கே தான் இருக்கிறது. என் மனசே சரியில்லை, நெஞ்சு வலிக்கிறது அவன் செய்த தப்பைப் பார்த்தால் என்றெல்லாம் சொல்கிறோமே, அப்படிப் பட்ட மனித மனத்தின் இன்ப, துன்ப நிலக்குக் காரணமான மனோதத்துவத்தைச் செயல் ஆற்றுவது இங்கே தான்.

அதி தேவதைகள்: வாயு, இஷா, காகினி.

உடலில் இது இருக்கும் இடம்: இருதயம், தோல், உடல்நிலையைச் சமமாக வைத்திருக்கும் இது சரியாகச் செயல்பட்டால்.

விஷுத்தா: கழுத்துப் பாகம். 16 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பு. இது எல்லை இல்லாத அகன்ற பரந்த ஆகாயத்தைக் குறிக்கிறது. ஆகையால் ஆகாயம் எவ்வாறு நிறமற்றதோ அவ்வாறே இதுவும் நிறமற்றது. நாம் செய்யும் வேலைகளில் எது சரி, எது தப்புன்னு முடிவு எடுக்கப் படும் இடம் இங்கே தான். நம்முடைய கற்பனா சக்தி பெருகுவதற்கும், நம்முடைய சுயம் வெளிப்படுவதும் இங்கே இருந்து தான். இது "பிந்து"சக்கரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே விஷமும் தயார் நிலையில் உள்ளது. அமிர்தமும் தயார் நிலையில் உள்ளது. நாம் எதை எடுத்துக்கறோம்னு சொல்றது நம்மோட எண்ணங்களைப் பொறுத்து. சிலபேர் சுடுசொல் சொல்லும் போது விஷம் போல் பேசுகிறான் என்கிறோம். அவன் வார்த்தையை விழுங்க முடியவில்லை. அவ்வளவு விஷம் என்கிறோம். எல்லாம் வருவது இங்கே இருந்து தான். நம் உள்ளம் பால் போல் இருந்தால் அமிர்த மயமான வாக்குப் பிறக்கும். நம்முடைய "விதி"யின் ரகசியம் இங்கே தான் உள்ளது. நம்முடைய பேச்சிலும், செயலிலும் விதி நிர்ணயிக்கப் படுகிறது. இது மூடிக் கொண்டால் மரணம் சம்பவிக்கும். திறந்து கொண்டால் நேர் எதிமாறாக நடக்கும். நாம் முக்தி நிலையைத் தன்னால் அடைகிறோம். எப்படி எனில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் மாறி ஞான மார்க்கத்தில் மனமும், உடலும் திரும்பும். ஞான மார்க்கத்தை விரும்பிக் கற்பர்.

அதி தேவதைகள்: அம்பாரா, சதாசிவம், ஷாகினி.

உடல் பாகம்: தைராயிடு சுரப்பிகளும், காதுகளும்.
இவை இல்லாவிட்டால் உடல் வளர்ச்சியும் இல்லை, மன முதிர்ச்சியும் இல்லை.

அஜ்னா/ ஆக்ஞா: நம்முடைய இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்கும் இடத்தில் உள்ளது. நெற்றிப் பொட்டைப் "பிந்து" என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இந்தப் பிந்து இதற்குப் பின்னால் தான் இருக்கிறது. அடுத்து அதைத் தான் பார்க்கப் போறோம். இந்த அஜ்னா இருக்கும் இங்கே தான் இட நாடி, பிங்கள நாடியுடன் சேர்ந்து வரும் சூக்ஷ்ம நாடியும் சேரும். இந்த மூன்று நாடிகளும் நம் நெற்றிபோட்டில் தான் ஒன்று சேர்கின்றன. இங்கே வரும் குண்டலினி சக்தியானது இங்கிருந்து மேலே உள்ள ஸஹஸ்ராரத்துக்கு மேல் எழும்பும்.

உணர்வுகள்: தூக்கத்தில் நாம் காணும் கனவு இதனால் உணரப் படுகிறது. நம்முடைய கற்பனைக் கனவுகளும் இதனால் உணரப் படுகிறது. நாம் படுத்துக் கொண்டு காணும் கனவு மட்டுமில்லாது, பகல் கனவும் கூட இதனால் உணரப் படுகிறது.
அதி தேவதைகள்: அர்த்த நாரீஸ்வரர், ஹாகினி சக்தி
பிந்து: இது சக்கர வடிவில் ஆனது. நம்முடைய தலைக்குப் பின்னால் நாம் சாதாரணமாய்த் தலையை முடிந்து கொள்ளும் இடத்தில் உள்ளது. இது ஒரு சின்னப் புள்ளியைப் போல் தோன்றும். இங்கே அடி பட்டால் என்ன வேணாலும் நடக்கலாம். நம் முன்னோர்கள் பின்னந்தலையில் மட்டும் அடி படவே கூடாது என்பதோடு அந்தக் காலங்களில் ஆண்களும் முடி வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள். அதன் காரணமே இந்தப் "பிந்து"வைப் பாதுகாக்கத் தான். இப்போதும் ஆங்கில மருத்துவத்தில் தலையில் குறிப்பாய்ப் பின்னந்தலையில் அடிபடுவது கூடாது எனச் சொல்லப் படுகிறது. இங்கே அமிர்தமும் உற்பத்தி ஆகும், விஷமும் உற்பத்தி ஆகும். நம்முடைய உடலும், மனமும் இயங்குவது இதன் மூலம் தான். தேக்கி வைக்கப் பட்ட வெள்ள நீர் போல் இங்கே நம்முடைய செயல்களைப் பொறுத்து "ஆனந்தப் பெருவெள்ளமும்" ஏற்படலாம். மாறாகவும் ஏற்படலாம். ஒண்ணுமே இல்லாமலும் இருக்கலாம். ஒரு நீர்த்தேக்கம் போன்றது. இங்கிருந்து தான் "ஓங்காரம்" பிறக்கிறது. தோன்றி மறைகிறது. அல்லது புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருகிறது. புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருவது தான் உத்தமம். இது நம் உடலின் விஷுத்திச் சக்கரத்தோடு சேர்ந்து வேலை செய்யும். இது சரியாக இயங்காவிட்டால் அசைவுகளே இல்லை. சிலருக்கு ஏற்படும் புத்தி மாறாட்டத்துக்கும் இதுவே காரணம்.

ஸஹஸ்ராரம்: கடைசியில் முடிவுக்கு வந்துட்டோம். இது தான் நாம் கிடைக்குமா, கிடைக்குமா என ஏங்கும் இடம். ஆயிரம் இதழ் தாமரைப் பூவின் உருவம் கொண்ட இது தான் எல்லாவற்றுக்கும் மூலப் பொருள். 20 மடிப்புக்கள் கொண்ட இந்தத் தாமரைப் பூவின் ஒவ்வொரு மடிப்பிலும் 50 இதழ்கள் கொண்டது.

நம்மைப் பற்றில் இருந்து விடுபடச் செய்யும் இது. இறை சக்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒன்றே தேவன், தேவனே ஒன்று" என அனைத்தையும் இறைவனாய்ப் பார்க்கும் பெருந்தன்மையான எண்ணம் இங்கே தான் தோன்றும். அனைத்துக்கும் ஆதாரம். இறைவனின் இருப்பிடம். சாக்தர்கள் அம்பாளின் இருப்பிடம்னு சொல்லுவார்கள். அப்படியும் சொல்லலாம். "ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி"யான "ஸ்ரீலலிதை" உறைவிடம்னும் சொல்லலாம். இதைக் கண்டு உணர்ந்தவர் வெகு சிலரே ஆவார். பாரதியார் அவர்களில் ஒருவர். இதைத் தான் அவர் தன்னுடைய "அக்கினிக் குஞ்சு" பாட்டின் மூலம் சொல்லுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!"

என்று தன்னுடைய மனதில் ஒரு சிறு பொறி போல் இருந்த இறை உணர்வு, மனதின் சகல ஆசா பாசங்களையும் பொசுக்கி விட்டு மனத்தை நிர்மலமாய் வைத்தது என்கிறார். பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடம் ஆடியும் பாடுகிறார். இறைவனைக் காணாமல் இவ்வாறு கவலை இல்லாமல் குதிக்க முடியுமா? பொறி என்னமோ சின்னது தான். இருந்தாலும் ஒரு பொறி போதுமே என்கிறார் மனதைச் சுட்டுப் பொசுக்க.

இதில் இருந்து தான் "சக்தி" மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். பிரதான சக்தி என்றும் சொல்லலாம். நீரில் இருந்து எவ்வாறு மின்சாரம் எடுக்கப் பட்டு நம் அனைவரையும் வந்து அடைகிறதோ அது போல் இங்கிருந்து தான் நமக்குத் தேவையான மூலசக்தி கிடைக்கிறது.

ஆனால் நாம் அதைச் சரியாகப் பிரயோகம் செய்வது இல்லை. மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும், அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுப்பிப் படிப் படியாக மேலே கொண்டு வந்து அது பிந்து வெள்ளத்துடன் ஒன்று சேர்ந்து ஸஹஸ்ராரத்தை அடையும்போது மனிதன் "சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில்" மூழ்குகிறான். யோக சித்தி கிடைக்கிறது. தான் யார் என்பதை உணருகிறான்.

இந்த யோகத்தை பின் பற்றித் தான் "சிதம்பரம்" கோயில் கட்டப் பட்டுள்ளது. அநேகமாய்த் தென்னாட்டில் குறிப்பாய்த் தமிழ்நாட்டுக் கோயில் அமைப்புக்களும் சரி, கோயில் கோபுரங்களும் சரி, இம்மாதிரியான யோகக் கலையைப் பின்பற்றித் தான் கட்டப் பட்டது. கட்டியவர்களும் இதன் அர்த்தத்தை முழுதும் உள்வாங்கிக் கொண்டு தான் கட்டினார்கள். காலத்தைக் கடந்து நம் கோயில்கள் நிலைத்து இருப்பதே இதனால்தான். அதுவும் மூலஸ்தானக் கோபுரங்கள் அநேகமாய் ஸஹஸ்ரார முறையில் தான் கட்டப் பட்டது. இனி சிதம்பரம் மறுபடியும் போவோம்.

சிதம்பர ரகசியம் சித் சபையின் உள்ளே!
சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள்.பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்மஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும் சொல்லப் படுகிறது. நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க் கருதப் படுகிறது. நடராஜர் "சொரூபம்" என்றால் சிதம்பர ரகசியம் "அரூபம்" ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ "ரூபரூபம்" அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும். இப்போ சித்சபையின் உள்ளே இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம்.

நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே "சந்திர மெளீஸ்வரர்" என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப் பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் கோவிலில் வைதிக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின் வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் , மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான் செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதிக முறைப்படி வழிபாடு. இதுபற்றி முன்னொருமுறை ஒரு நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் தீட்சிதர்களால். அபிஷேஹம், ஆராதனை செய்யப் படுகிறது, வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. அது தான் "ரத்ன சபாபதி"!

கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கருப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர புராணம் என்ன சொல்கிறது? நாளை பார்ப்போம்.

சிதம்பர ரகசியம் - சித்சபையின் உள்ளே - 2

இந்த ரத்னசபாபதியைப் பற்றியும் அவர் எவ்வாறு சிதம்பரம் வந்தார் என்பதும் கீழ்க்காணும் சிதம்பர மகாத்மியம் தல புராணத் தகவல் தெரிவிக்கிறது.

"ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் "அந்தர்வேதி" என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே ஈசனை நாட அவர் தம் பூத கணங்களை வைத்துச் செய்யச் சொல்லப் பூதகணங்கள் பிராமணர்களாய் மாறி அங்கு வந்தனர். பின்னர் இந்தப் பூத கணங்கள் ஏற்கெனவே ஈசன் தன் நடனத்திற்குத் தில்லையைத் தேர்ந்தெடுக்க அவரோடு இருக்க வேண்டி அங்கே சென்றுவிட்டனர். அவர்களே சிதம்பரம் தீக்ஷிதர்கள் எனப்பட்டனர். இந்தச் சிதம்பரம் தீட்சிதர்களையே மீண்டும் தன் யாகத்துக்காக பிரம்மா நாடினார். அவர்களை வரவழைத்தார். அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். யாகமும் இனிதே முடிந்தது. நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து "வைஸ்வதேவம்" என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர்களை உபசரிக்கும் முறை அது.

ஆனால் தீட்சிதர்களோ தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின் தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை நாடினார். சிதம்பரம் தீட்சிதர்களோ நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம். என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின் உதவிக்கு அந்தப் பரம்பொருள் செவி சாய்க்காமல் இருப்பாரா? திடீரென ஒரு ஒளி வெள்ளம். யாகத் தீ குபுகுபுவென எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து அந்த ஆதிசிவனே நடராஜ ஸ்வரூபத்தில் தோன்றினார் . திகைத்துப் போன தீட்சிதர்களும், மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து சந்தனம், தேன், பால் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர். காசியிலே தீக்ஷிதர்கள் வழிபட வேண்டி நடராஜராய்த் தோன்றிய அந்த அர்ச்சாவதார மூர்த்தியே பின்னர் அவர்கள் வழிபட்டதற்குப் பின்னர் அப்படியே ரத்தின சபாபதியாக மாறினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. நடராஜர் "மாணிக்ய மூர்த்தி" என்ற பெயரையும் பெற்றார்.



சிதம்பர ரகசியம் - சித் சபையின் உள்ளே - 3

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.

எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சந்திரசேகரர்: இவரும் சித்சபையின் உள்ளேயே பைரவருக்கு அடுத்து அதே மேற்குத் திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை "நித்யோத்சவ மூர்த்தி" என்று கூறுகிறார்கள். ஏனெனில் நடராஜர் தினமும் அல்லது அடிக்கடி வீதி உலாவோ, அல்லது கோவிலின் உள்ளே வரும் உலாவோ மேற்கொள்ளுவது இல்லை. ஆண்டுக்கு இருமுறைதான் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வருவார். மற்றச் சமயங்களில் நடராஜருக்குப் பதில் இந்த மூர்த்தியின் திரு உருவம்தான் பிரகாரங்களில் உலா வர எடுத்துச் செல்லப் படும். தீர்த்தவாரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற சமயங்களில் இவர்தான் கோவில் பிரகாரங்களை வலம் வருவார்.

இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர் பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும், சோமாஸ்கந்த மூர்த்தி ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள். இந்த சோமாஸ்கந்த மூர்த்தி பஞ்சமூர்த்திகளில் ஒருவராய்ச் சொல்லப் படுகிறார். இவர்களைத் தவிர நடராஜரின் பிரதிநிதிகளாய் இன்னும் இருவர் இந்த சித்சபையின் உள்ளே இருக்கிறார்கள். ஒருத்தர் "பலிநாதர்". இவர் ப்ரம்மோத்சவங்களில் நடராஜரின் பிரதிநிதியாக ரதவீதிகளை வலம் வருவதோடு அல்லாமல் (அஷ்டத் திக்பாலகர்கள்) எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் "பலி" விநியோகம் செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இவரை ஹஸ்தராஜா என்றும் அழைக்கிறார்கள். அடுத்த முக்கியமான பிரதிநிதி நடராஜரின் தங்கப் பாதுகைகள் இரண்டு. நடராஜரின் அருகேயே சித்சபையின் உள்ளேயே இவை இடம் பெற்றிருக்கும். நவரத்தினங்கள் பதித்த ஒரு தட்டில் வைக்கப் பட்டிருக்கும் இவை ஒவ்வொருநாள் இரவும் நடராஜரின் பிரதிநிதியாகக் கடைசி கால பூஜைக்குப் பின்னர் "பள்ளி அறைக்கு" எடுத்துச் செல்லப் படுகிறது. இவர் கால்களில் வெட்டிவேரால் கட்டப் படும் பூமாலையைக் "குஞ்சிதபாதம்" என்னும் பெயரால் அழைக்கின்றனர்.

சிதம்பர ரகசியம்- கனகசபைக்குப் போவோமா?


சித் சபையில் மேற்குறிப்பிட்ட இறை ரூபங்கள் தவிர "முக லிங்கம்" என்றொரு லிங்கமும் "சிதம்பர ரகசியம்" அருகே உள்ளது. எப்போது என்று சொல்ல முடியாத காலத்தால் முந்தைய இந்த லிங்கம் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தின் பிரதிநிதியாகவும் சொல்லப் படுகிறது. பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவன் அவருடைய ஐந்தாவது முகத்தைக் கிள்ளி எடுத்து இங்கே லிங்க ஸ்வரூபத்தில் வைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. (இந்த லிங்கம் நான் இன்னும் பார்த்ததில்லை.)சிலர் "பலிநாதர்" பற்றி எழுப்பிய சந்தேகத்துக்கு நான் சொன்ன விடை தவறு என்றும் என் கணவர் கூறுகிறார். பலிநாதர் சூல வடிவத்தில் இருப்பதாயும் கூருகிறார். பிரகாரங்கள் சுற்றி வரும்போது பார்த்திருக்கிறேன் என்றாலும் என்ன ஸ்வரூபம் என்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதையும் எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதரிடம் கேட்டுவிட்டே உறுதி செய்கிறேன்.


சித்சபைக்கு வெளியே சில முக்கியமான நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, சிறப்பு வழிபாடு செய்பவர்கள் நிற்கும் சிறிய மேடை உள்ளது. இங்கே வைத்துத் தான் "ஸ்வர்ணாகர்ஷண பைரவர்" அபிஷேகம் செய்யப் படுவார். இங்கே நடராஜர் சன்னிதிக்கு நேரேயே நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். சிவனின் அந்தரங்கக் காரியதரிசியாகச் சொல்லப் படும் இவர் கைலை மலையிலும் முக்கியமாகக் காணப்படுகிறார், ஒரு மலை உருவத்திலேயே. நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம். ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது. அதிலும் பிரதோஷ காலங்களில் இவருக்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இவரைத் தவிர நர்த்தன விநாயகர், இங்கே நடனம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து லிங்கோத்பவ மூர்த்தி, சிவனின் வழிபாட்டில் லிங்கோத்பவர் வழிபாடும் ஒன்று. இவரைப் பற்றிய புராணக் கதை அருணாசலம் மலையுடன் தொடர்பு கொண்டது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே! ஒரு சமயம் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. இருவரும் தாங்களே பெரியவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க, இறைவன் அவர்கள் முன்னால் நெருப்பால் எழுப்பப் பட்ட ஒரு லிங்கச் சுவர் போல் எழுந்தருளினார். சூடு தாங்கவில்லை இருவருக்கும், என்ன செய்ய முடியும்? ஊழித்தீயோ எனப் பயந்தனர்.அப்போது அங்கே எழுந்தது அசரீரியாக இறைவன் குரல். "என்னுடைய முடியையும், அடியையும் உங்கள் இருவரில் யார் கண்டுபிடிக்கிறீர்களோ அவர்களே பெரியவர்." இதுதான் இறைவன் சொன்னது. இருவரும் இது என்ன பிரமாதம் என ஒத்துக் கொண்டனர்.

முதலில் விஷ்ணு போய்ப் பார்த்துவிட்டு வர, என்னால் முடியவில்லை எனத் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பின்னர் ஒரு அன்ன ரூபத்தில் கிளம்பும் பிரம்மாவும் தேடுகிறார், தேடுகிறார். அவராலும் முடியவில்லை. அப்போது இறைவனுக்கு அர்ச்சிக்கப் பட்ட ஒரு மலரின் இதழ், தாழம்பூ , கீழே வருகிறது. பிரம்மா அந்தப் பூவை எடுத்துக் கொண்டுபோய் சாட்சியாக வைத்துத் தான் "கண்டுகொண்டேன், கண்டு கொண்டேன்", எனச் சொல்ல இறைவன் கோபம் அடைகிறார். "அனைவருக்கும் முதல்வன் நீ, உன்னால் தான் சிருஷ்டியே, நீ இப்படிப் பொய் சொல்லலாமா" எனக்கேட்டு "இன்று முதல் உனக்குத் தனியாகக் கோயில்களோ, ஆராதனையோ கிடையாது, பொய்சாட்சி சொன்ன இந்த மலரும் இனிமேல் என்னுடைய வழிபாட்டுக்கு உதவாது!" எனச் சொல்லுகிறார். இந்த ஸ்வரூபம் தான் லிங்கோத்பவர் எனச் சொல்லப் படுகிறது. அவர் மேல் பிரணவம் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்த விஷ்ணுவும், பிரம்மாவும் இவரே ஆதியாம் முதல்வன், அனைத்துக்கும் காரணன் எனவும் ஒத்துக்கொண்டனர்.

சிதம்பர ரகசியம் -இன்னும் கனகசபைதான்!

லிங்கோத்பவர் பத்தின புராணக் கதையைப் பார்த்தோம். இவரைத் தவிர வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி சன்னதியும் உள்ளது. ஆறுமுகங்களோடு காட்சி அளிக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்குத் தினமும் கால தீபாராதனை நடராஜருக்குக் காட்டும்போது காலையிலும், மாலையிலும் இந்த இறை ஸ்வரூபங்களுக்கும் காட்டி வழிபாடு நடத்தப்படுகிறது.

பள்ளி அறை: எல்லாச் சிவன் கோவில்களிலும் பள்ளி அறை உண்டு. அவற்றில் சிவனின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டு பள்ளி அறை மூர்த்தம் தனியாக இருக்கும். ஆனால் இந்தக் கோவில் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்களுக்கு எல்லாம் தலையாய கோயிலாகக் கருதப் படுவதால் இங்கே நடராஜரின் ரத்தினம் பதித்த தங்கப் பாதுகைகள் தான் தினசரி பள்ளி அறைக்கு எடுத்து வரப் படும். மிக மிக உன்னதமான வேலைப்பாடுடன் கூடிய இந்த அறையில் ஒரு வெள்ளி ஊஞ்சல் இருக்கும். அதில் தான் சிவகாமசுந்தரியோடு நடராஜரின் பிரதிநிதியான தங்கப் பாதுகைகளும் ஒவ்வொரு இரவிலும் கடைசி கால பூஜைக்குப் பின்னர் கொண்டுவரப் படும். தினமும் காலையில் ஒரு தங்கப் பல்லாக்கில் திரும்ப சித்சபைக்கு எடுத்துச் செல்லப் படும்.


ஆகாசலிங்கம்: பள்ளி அறைக்கு மேலே படிகள் ஏறிப் போய்ப் பார்க்கவேண்டும். (நான் இன்னும் பார்க்கவில்லை.)

ஜைமினி:ஜைமினி ரிஷியும் சிதம்பரத்துடன் நேரடியாகச் சம்மந்தப் பட்டவர். பதஞ்சலியையும், வியாக்ரமபாதரையும்போல அவரும் நடராஜரின் "ஆனந்தத் தாண்டவம்" தரிசனத்தைச் சிதம்பரத்தில் கண்டவர். ஆனந்த நடேசனின் தாண்டவம் பற்றி அவர் எழுதிய துதி "வேதபாத ஸ்தவம்" எனப்படும்.

பிக்ஷாடான மூர்த்தி: சிவனின் ஒரு ஸ்வரூபமான இவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். ரிஷி, முனிவர்களின் பல்வேறுவிதமான கோரிக்கைகளுக்காகவும், செயல்களுக்காகவும் பல்வேறு ரூபங்களில் அவ்வப் போது சிவன் எடுத்த ஸ்வரூபங்களில் ஒன்று தாருகா வனத்து ரிஷிகளுக்காக அவர் எடுத்த பிக்ஷாடன ஸ்வரூபம். தாருகாவனத்து ரிஷிகளுக்காக சிவன் பிக்ஷாடனக் கோலத்திலும், விஷ்ணு மோகினிக் கோலத்திலும் நடனம் ஆடி ரிஷிகளின் அகம்பாவத்தைத் தகர்த்தனர். முதன்முதல் சிவன் பிக்ஷாடனக் கோலத்தில் தான் நடனம் ஆடியதாயும் அதுவும் தாருகாவன ரிஷிகளுக்கு முக்தி கொடுப்பதற்காகவும், அதன் பின்னரே சிதம்பரம் சித்சபையில் பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர் போன்றவருக்காக ஆடியதாயும் சொல்லப் படுகிறது. தெற்கே பார்த்து பிக்ஷாடனர் கோயில் கொண்டிருக்கிறார்.

கால பைரவர்: எல்லாச் சிவன் கோவிலிலும் வெளிப்பிரகாரத்தில் இருப்பார், காவல் தெய்வம். கோவிலையும், கோவிலின் சொத்துக்களும் இவர் பொறுப்பு என்று சொல்லும் வண்ணம் முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியை இவர் சன்னதியில் வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. இவர் சன்னதியில் இருக்கும் சாவியை யாரும் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இவர் கூட இருக்கும் இவரின் வாகனம் ஆன நாயை இவர் ஏவி விட்டு அது வந்து பழிவாங்கும் என்றும் சொல்லப் படுவது உண்டு. காலப் போக்கில் இது மறைந்தாலும் இவரை வணங்குபவர்களுக்கு இவர் எல்லாவிதமான கஷ்டங்களையும் போக்குவார் என்றும், அஷ்டமி நாட்களில் இவரை வணங்குவது விசேஷமாகச் சொல்லப் படுவதும் உண்டு. அதுவும் பெளர்ணமிக்குப் பின்னர் வரும் அஷ்டமி நாளில் திருமணம் ஆகாத வாலிபர்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது. மேற்கே பார்த்து இவர் இருக்கிறார்.

சூரிய சந்திரர்: நவக்ரஹங்களுக்கு எனத் தனி சன்னதி இருந்தாலும், சூரிய, சந்திரர்க்கு மட்டும் கால பைரவருக்கு அடுத்தாற்போல் உள் பிரகாரத்தில் தனித் தனி சன்னதிகள் இருக்கின்றன.
இவர்களுக்கு அடுத்தாற்போல் வடக்கே பார்த்து தேவார மூவரின் சன்னதி இருக்கின்றது. முறையே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பர ரகசியம் - கனகசபைதான் இன்னும்!

*சிதம்பரம் கோவிலில் பத்து புனித தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். அதிலே கனகசபைக்குக் கிழக்கே சன்னதியின் மத்தியில் அமைந்துள்ள கிணறு ஒன்றைப் "பிரம்மானந்த கூபம்" என்று சொல்கின்றனர். (நான் வெறும் கிணறு என்ற வடிவிலே மட்டும் பார்த்துள்ளேன். அப்புறம்தான் அது ஒரு தீர்த்தக் கிணறு எனத் தெரிய வந்தது.) சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதப் படும் இது மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம் எனச் சொல்லப் படுகிறது. துலா மாதம் (ஐப்பசி) பஞ்சமி திதியில் கங்கை இந்தக் கிணற்றில் பொங்கிவருவதாயும் ஐதீகம். கங்கை மட்டுமில்லாமல் மற்றப் புண்ணிய நதிகளும் இங்கே வந்து சேர்வதாயும் ஐதீகம். தை அமாவாசையில் வரும் தீர்த்தவாரித் திருவிழாவின் போது நடராஜருக்கு இந்தப் பத்து தீர்த்தங்களில் இருந்தும் புனிதநீர் எடுத்து அபிஷேகம் செய்யப் படுகிறது. சிவனின் விருப்பத்தின் பேரில் கங்கை இங்கே ஆவிர்ப்பவித்தாள் எனவும் சொல்லப் படுகிறது.

இவற்றைத் தவிர "சண்டேஸ்வர" மூர்த்தியின் சன்னதியும் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேசரைத் தரிசனம் செய்தால்தான் சிவ தரிசனம் பூர்த்தி அடையும் என்று சொல்லப் படுவதுண்டு. கடவுளுக்கும், பக்தனுக்கும் நடுவே ஒரு தபால்காரர் போல் இவர் செயல்பட்டு நம் கோரிக்கைகளையும், விண்ணப்பங்களையும் கடவுளிடம் சேர்ப்பிக்கிறார் என்றும் சொல்வார்கள். கனகசபைக்குக் கிழக்கே பிரம்மானந்த கூபத்துக்கு அருகே இரு சண்டேஸ்வர மூர்த்திகளைப் பார்க்கலாம். ஒருவருக்கு ஒரு முகமும், மற்றவருக்கு 4 முகமும் உள்ளது. சதுர்முகச் சண்டேசர் பிரம்மா சண்டேசர் எனச் சொல்லப் படுகிறார். பிரம்மாவே சண்டேசராக அனுக்கிரகம் பெற்று இங்கே "சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்தி"யாகத் தரிசனம் கொடுக்கிறதாய்ச் சொல்கிறார்கள். பொதுவாய்ச் சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து திரும்பும் சமயம் சண்டேஸ்வரர் சன்னதிக்குப் போய் இரு கைகளையும் தட்டிக் காட்டி நான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை எனக் கூறிவிட்டுப் போவது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் சிவன் கோவிலாக இருந்தாலும் பிரசாதங்கள் எடுத்துச் செல்லலாம் எனச் சொல்லப் படுகிறது. கோவில் வழிபாடு வைதீக முறையில் நடைபெறுவதாலும் இங்கே பிரம்மாவே சண்டேசர் பதவி பெற்று அமர்ந்திருப்பதாலும் இவ்வாறு செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். அடுத்து இங்கே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார், அல்லவா? அவர் எவ்வாறு வந்தார் எனப் பார்ப்போம்!

சிதம்பர ரகசியம் - நடராஜருக்கு அருகே விஷ்ணு!

கனகசபைக்குக் கீழே பக்தர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் இருந்து சற்று மேலே கனகசபைக்குச் சமமாக ஒரு பெரிய மண்டபம் ஊள்ளது. அதில் சற்றுப் படி ஏறிப் போய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு பார்த்தோமானால் ஒரே நேரத்தில் நடராஜர் தரிசனமும், கோவிந்த ராஜர் தரிசனமும் கிடைக்கும். இந்தக் கோவிந்தராஜரும் உள் பிரகாரத்திலேயேதான் கிழக்குப் பார்த்துக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விஷ்ணு பக்தர்கள் "திருச்சித்திரக் கூடம்" என்று அன்புடன் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் யோகநித்திரையில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம், பிரம்மாவும் நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த நிலையில் காணப் படுகிறார். எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கத் தான் அவரும் இங்கே கோயில் கொண்டிருப்பதாய் ஐதீகம். வேறு எந்தச் சிவன் கோயில்களிலும் காணக் கிடைக்காத இந்தக் காட்சி இங்கே மட்டும் தான் கிடைக்கும். இதை முன் வைத்தே தற்காலத்தில் பலகோயில்கள் சிவ-விஷ்ணு கோயிலாகக் கட்டப் படுகிறது. இந்த கோவிந்தராஜரை முதலில் தீட்சிதர்கள் தான் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலப் போக்கில் மாறி இருக்கிறது. அது பின்னால்.

கோவிந்தராஜப் பெருமாளின் மூலஸ்தான விமானம் "சாத்வீக விமானம்" என்று அழைக்கப் படுகிறது. பலி பீடம், த்வஜஸ்தம்பம் போன்றவை தனியாக உள்ளன. தாயாருக்குத் தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருநாமம் புண்டரீகவல்லித் தாயார். உற்சவர்"பார்த்தசாரதி" என அழைக்கப் படுகிறார். இந்தக் கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிம்ம மூர்த்தி, வேணுகோபாலர், விஸ்வக்சேனர், பதஞ்சலி, கண்வர், ஆஞ்சனேய மூர்த்தி ஆகியோருக்குத் தனி சன்னதிகள் காணப் படுகிறது. "சேஷ சயனம்" "ராம பாதம்" காணப் படுகிறது. கோயிலில் பொதுவாக உள்ள சிவகங்கைத் தீர்த்தம் விஷ்ணு பக்தர்களால் "புண்டரீக சரஸ்" என அழைக்கப் படுகிறது. முதன்முதல் வியாக்ரமபாதரும், பதஞ்சலியும் நடராஜ தரிசனமும், ஆனந்தத் தாண்டவமும் காணச் சிதம்பரம் வந்த போதில் இருந்தே கோவிந்தராஜரும் கோயில் கொண்டதாகவும், அவரை முதன் முதல் கண்வ மகரிஷி வழிபாடு செய்து வந்ததாகவும், பிரத்யட்ச தெய்வமாக இந்தக் கோவிந்தராஜர் அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

பொதுவாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் காணப்படுவது போல் இங்கேயும் பிரசாதமாகத் துளசி தீர்த்தம், சடாரி சாதிக்கப் படுகிறது. இறைவனின் பாதங்கள் பதிப்பிக்கப் பட்ட அந்தச் சடாரியைத் தன் தலையில் வைத்துக் கொள்வதின் மூலம் இறைவனே தங்களை நேரில் வந்து ஆசீர்வதித்ததாக இன்புறுகின்றனர். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், ஆழ்வார்களில் முதல்வன்! அவன் அவ்வாறு செய்து தன் பக்தியை வெளிக்காட்டிக் கொண்டதில் இருந்து இவ்வழக்கம் ஆரம்பித்ததோ என்னமோ! இதை ஸ்ரீராமன் பாதுகை என்றே சொல்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் வேறு வேறு இல்லை, அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பதை நிரூபிப்பதற்காகவும், பக்தர்களுக்கிடையே உள்ள இந்த வேறுபாடுகளைக் களையவுமே இவ்வாறு கோயில் கொள்ள இறை அருள் பொங்கியதோ என்று தோற்றும் வண்ணம் இந்தக் கோயிலிலே கோவிந்தராஜனும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் - விஷ்ணு வந்தது எப்படி?

இந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்துவிட்டு அவர் உதவியை நாடும்படி சொல்ல, அவன் தான் தனியாகப் போகாமல் மகாவிஷ்ணுவையும் கூட வரும்படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு, அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல், சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகாவிஷ்ணு சிதம்பரத்தில் தங்கிவிட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில், கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும்போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (இந்த லிங்கம் நான் இன்னும் பார்க்கவில்லை!)

மற்றொரு கதை: ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகாலட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகாவிஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க, அவர் சொல்கிறார், தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும், இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். தன்னுள்ளே ஈசன் நடனமாடுவதைக்கண்டு களித்ததையும் சொல்கிறார். உடனேயே மகாலட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என அழைக்கப் பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்.

அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்துவிட்டு வரும்படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஸ்தாபிதம் செய்துவிட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார். விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும், காவலுக்கும்தான் என்றும் தோன்றுகிறது.

எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப் பாப்போம்.

சிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி?

சரித்திரபூர்வமாக இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.

என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டதோடு அதன் நிர்வாகம் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப் பட்டது. அத்தோடு நில்லாமல் "வைகானச சூத்ரம்" முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர்.

சிதம்பர ரகசியம் - நீங்க வைகானசமா/ பாஞ்சராத்திரமா?

ஒரு சிலர் கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் "பாஞ்சராத்திர" முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப் பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் "மணிப்ரவாளம்" என்னும் வடமொழியும், தமிழும் கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடாகக் கூட இருக்கலாம். நாம் அறிந்தவரையில்,

வைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:" "ஸ்ரீ" என்னும் மகாலட்சுமியானவள் அந்தப் பரம்பொருளான "நாராயணனி"டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய வாசம் செய்பவள். ஆகவே "ஸ்ரீ"யும் ஒரு பரம்பொருளே ஆவாள்." என்பதாகும்.

ஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: "ஸ்ரீ"யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள் பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப் பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்து நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்." இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும், என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ!. கோவில் வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது. இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது.

வைகானசம் என்பது என்னவெனில் வேதங்களை அசுரன் தூக்கிச் சென்ற காலத்தில் அவனை அழிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவை நாடினார்கள். மஹாவிஷ்ணுவைத் துதிக்க வேண்டிச் சொல்ல வேண்டிய தோத்திரங்கள் அனைத்துமே வேதங்களோடு சேர்ந்து அசுரன் கையில்போய்விட்டது. மஹாவிஷ்ணுவை எவ்வாறு வழிபடுவது எனத் தெரியாமல் திகைப்புடன் இருந்த அவர்கள் முன்னர் ஒருவர் தோன்றினார். அவரும் மஹாவிஷ்ணுவைப்போலவே இருந்தார். அப்போது அவர்கள் எதிரே மஹாவிஷ்ணு தோன்றி, இவன் வேறு யாரும் இல்லை; என் அம்சமே தான். என்னுடைய நிழல் இவன். இவனை நான் உயிர்ப்பித்திருக்கிறேன். வைகானசன் என்ற பெயரோடு இவன் என் வழிபாட்டு முறையைக் கற்பிப்பான். ரிஷிகளும், முனிவர்களும் இவனுக்குச் சீடனாக இருந்து வைகானச முறையைக் கற்றுக்கொண்டு பரப்பட்டும் என்று கூறினார்.

வைகானசன் தோன்றுவதற்கு முன்பு பிரம்மாவிடம் சென்ற தேவர்களுக்கு வேதங்கள் இல்லாமல் மஹாவிஷ்ணுவை வழிபட என்ன செய்வதெனத் திகைப்பு ஏற்பட்டு அவர்கள் பிரம்மாவை நாட, அவர் வாயினால் மந்திரங்களைச் சொல்லாமல் தன் கைகளாலேயே சைகைகள் காட்டித் தாந்த்ரீக முறையில் வழிபாட்டைச் சொல்லிக் கொடுத்தார். இது ஐந்து இரவுகள் நடைபெற்றது. இதைப் பாஞ்சராத்ரம் என்கின்றனர். இது எங்கள் ஊர்க் கோயில் பட்டாசாரியார் கூறியது. மாறுபட்ட விளக்கங்களும் இருக்கலாம்.

சிதம்பர ரகசியம் -விஷ்ணு இருப்பிடம் வந்தார்!

அச்சுத ராயன் ஏற்படுத்திய "வைகானச"வழிபாட்டு முறை பற்றி நன்கு விரிவாகவே பார்த்தோம். இதில் முக்கியமான விஷயம் விட்டுப் போய் விட்டது. அதாவது, நந்தி வர்ம பல்லவனால் புதுப்பிக்கப் பட்டுக் கட்டுவிக்கப் பட்ட விஷ்ணுவின் கோவில், அவனுக்குப் பின் 3 அல்லது 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த சோழகுல அரசன் 2-ம் குலோத்துங்கனால் நீக்கப் பட்டு, விஷ்ணு அவரின் இருப்பிடம் ஆன கடலுக்கு அனுப்பப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். இப்படியே பலவருடங்கள் இந்தக் கோவிலில் விஷ்ணு தன் இருப்பிடத்தில் இல்லாமலே இருந்திருக்கிறது.குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த பிற்காலப் பாண்டியர் காலத்தில், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய அரசனின் காலத்திலும், கிட்டத் தட்ட 15-ம் நூற்றாண்டு வரையிலும் விஷ்ணு கோவில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிகிறது. அரசர்களின் மான்யங்கள் அனைத்தும் நடராஜருக்கே அளிக்கப் பட்டு வந்திருக்கிறது. சிவ-விஷ்ணு பேதம் பார்க்காத பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல், பின்னர் வந்த கிருஷ்ணதேவ ராயரும் நடராஜருக்கே மானியங்கள் அளித்து வந்திருக்கிறார். அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஒரு சிலர் இந்த விஷ்ணுவின் அர்ச்சாவதார மூர்த்தம் தற்சமயம் திருப்பதியில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷ்ணு சந்நிதிக்கு எதிரே ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. அது தான், கமலமத்யம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் ஒரே சமயத்தில் நடராஜர் தரிசனமும், மகாவிஷ்ணுவின் தரிசனமும் கிடைக்கும். இவ்வாறு தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாய்க் குறிப்பிடுகின்றனர். இதை சிவ வழிபாட்டின் மூன்று முக்கியமான பகுதிகளாய்க் குறிப்பிடுகின்றனர். அவை யாவன:

அத்யாத்மிகி: இம்முறையான வழிபாட்டில் நாம் கடவுளை நம் உள்ளமாகிய தாமரையில் வைத்து வணங்குகிறோம். நம் உள்ளமே ஆகாயம், அங்கே வழிபடும் "ஒளிச்சுடரே" இறைவன் என்று அறிகிறோம்.

ஆதிதெய்வீகி: இம்முறையில் ஒருவன் "நாராயணனே" அனைத்தும் என்று அறிந்து நாராயணனை வழிபடும் அதே நேரத்தில், அந்த நாராயணன் தன் இருதயத்தில் வைத்துப் பூசிக்கும் சிவனும் வழிபாட்டுக்கு உரியவர் என்று உணர்கிறான். இம்முறையில் அவன் "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்ற பழமொழியின் உண்மையையும் உணரத் தொடங்குகிறான்.

ஆதிபெளதீகி: இம்முறையில் இந்தப் பிரபஞ்சமே அந்த நடராஜரின் ஆளுமைக்கு மட்டுமில்லால் அவனால் ஆட்டுவிக்கவும் படுகிறது என்றும், சகலமும் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இந்த ஆகாயமும் சரி, சூரிய, சந்திரர்களும் சரி, நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து, மலைகள், மேடுகள், நதிகள், காட்டாறுகள், வெள்ளங்கள், எரிமலைகள், வெயில், வறட்சி, சுபிட்சம், அனைத்துக்கும் காரணன் அவனே என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் பெரும் ஞானிகள் மட்டுமே அறிய முயற்சித்த ஒன்று. நம் போன்ற சாமானியர்களுக்கும் புரிய வேண்டுமென்று சற்று எளிமையாகவே கொடுக்கிறேன்.

மேற்சொன்ன மூன்று முறைகளையும் பின்பற்றித் தான் சித்சபையில் "சகலஸ்வரூபராக நடராஜரும்", "நிஷ்கலஸ்வரூபமாக சிதம்பர ரகசியமும்", "சகல-நிஷ்கலஸ்வரூபமாக ஸ்படிக லிங்கமும்" வழிபாடு செய்யப் படுகின்றன.

இந்தக் கமலமத்யமத்துக்குச் சற்றுத்தள்ளி மண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. பக்கத்திலேயே பலிபீடமும் உள்ளது. இந்த துவஜஸ்தம்பத்தில் தான், ஆனித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, பிரம்மோற்சவம் போன்ற திருவிழா சமயங்களில் கொடி ஏற்றுவார்கள். இனி அடுத்து நிருத்த சபைக்குப் போகலாம்.

சிதம்பர ரகசியம் -நிருத்த சபைக்கு வந்துட்டோமே!

நிருத்த சபை என்பது வெளிப் பிராகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது.

வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர "கால முனிவரின்" உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும், வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய, சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல், ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.

காலசம்ஹார மூர்த்தி: இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.

அடுத்தது ரொம்ப முக்கியமானவர். சரபர்: இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும், பறவைகள் போல் இறக்கைகளுடனும், மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராணங்கள், உபநிஷதங்கள், ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்னவென்றால்:

சிதம்பர ரகசியம் - சரபர் தோன்றிய காரணம்!

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

சிதம்பர ரகசியம் -நிருத்த சபையின் நாயகர்கள்!

நிருத்த சபைக்கு வந்த நாம் இப்போது அதன் முக்கியமான தரிசனத்துக்குத் தயாராகிறோம். உண்மையில் இந்த நிருத்த சபைதான் மிகப் பழமை வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. ஆதியில் காளியின் வசம் இந்தக் கோயிலில் இருந்தபோது காளி இங்கே தான் வாசம் செய்தாள் என்றும் கூறப் படுகிறது. கனகசபைக்கும், த்வஜஸ்தம்பத்திற்கும் தெற்கே இருக்கும் இந்தச் சபையில் தான் சிவன் காளியுடன் போட்டி போட்டு ஆடித் தன்னுடைய ஆட்டத்திறமையைக் காட்டி ஜெயித்தார். இந்தத் தாண்டவக் கோலம் "ஊர்த்துவத் தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. இந்த மூர்த்தி ரூபத்துக்கும் "ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி" என்றே பெயர். அருகாமையில் நாணத்துடன் நிற்கும் காளியின் அழகு கொள்ளையோ கொள்ளை! காணக் கண் கோடி வேண்டும்! சரபருக்கு அருகேயே கோவில் கொண்டிருக்கும் இந்த தாண்டவ மூர்த்தியும், காளியும் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த வெளிப்பிரகாரத்தில் லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி, மகாலட்சுமி சன்னதிக்கும், நிருத்த சபைக்கும் நடுவில் காணப்படுகிறார், வடக்கு முகமாய். அடுத்து வருவது மகா லட்சுமியின் சன்னதி. தனியாகக் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தாயாரின் மூல விக்ரஹம் "புண்டரீகவல்லித் தாயார்" என்று அழைக்கப் படுகிறது. உற்சவ விக்ரஹமும், கூடவே இந்தக் கோயிலில் காணப் படுகிறது. நவராத்திரிகளில் விசேஷ அலங்காரங்கள் செய்யப் படுவதாய்க் கூறுகிறார்கள்.

அடுத்துக் காணப் படும் பாலதண்டாயுத மூர்த்தியின் சிற்பம் ஒரு தூணில் காணப் படுகிறது. பழனிக்குப் போக விரும்பிய மக்கள் கொள்ளிடத்தின் வெள்ளப் பெருக்கால் போக முடியாமல் தவித்தபோது அந்தப் பழனி ஆணடவர் இந்தச் சிற்பத்தில் ஆவிர்ப்பவித்துத் தன்னை வணங்குமாறு சொன்னதாய்ச் சொல்கின்றனர். அடுத்து வருபவர் நம் நண்பர் விநாயகர் ஒரு அருமையான வேலை செய்தவர்! என்ன தெரியுமா? மறைந்து இருந்த ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தவர். அதுவும் யாருக்கு? சோழ மன்னனுக்கு!

சிதம்பர ரகசியம் - திருமுறை கண்ட விநாயகர்!




நிருத்த சபையில் சற்று உயரமான இடத்தில் மேற்கே பார்த்துக் கொண்டு ஒரு விநாயகர் சன்னதி காணப்படுகிறது. அந்த விநாயகரைத் தரிசனம் செய்வது என்றால் ஏணியின் படிகளில் ஏறிப் போய்த் தான் பார்க்கவேண்டும். "உச்சிப் பிள்ளையார்" என்று அழைக்கப் படும் இந்த விநாயகரைத் திருமுறை கண்ட விநாயகர் என்றும் சொல்கின்றனர். நாயன்மார்களால் எழுதப் பட்ட "பன்னிரு திருமுறைகள்' இந்தச் சிதம்பரம் கோவிலில் ஒரு அறையில் சுவடிகளாய் அடைபட்டுக் கிடந்தது. பத்தாம் நூற்றாண்டில் "நம்பியாண்டார் நம்பி' அவர்களின் வேண்டுகோளின் பேரில், அந்தச் சுவடிகள் அங்கு இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜன் அந்தச் சுவடிகளை அங்கிருந்து மீட்டு உலகுக்கு அதை அர்ப்பணித்தான். அப்போது நம்பியாண்டார் நம்பியின் வேண்டுதலின் பேரிலும், மன்னனின் வேண்டுதலின் பேரிலும் அவர்களுக்குப் பன்னிரு திருமுறைகள் இருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டியது இந்த விநாயகர் அருளினால் தான் என்று கூறுகிறார்கள். அன்றிலிருந்து இந்த விநாயகர் "திருமுறை கண்ட விநாயகர்" என அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகே உள்ள சிவலிங்கத்தைச் சிலர் "தாயுமானவர்" என்றும், வேறு சிலர் "மாயூர நாதன்" என்றும் அழைக்கின்றனர். எப்படி இருந்தாலும் சிவனருள் நமக்கு நிச்சயமாய்க் கிட்டும்.

இதே பிரகாரத்திலேயே தேவார நால்வர் ஆன அப்பர்,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்காக ஒரு கோவில் கிழக்கே பார்த்துக் காணப்படுகிறது. தினமும் தீவிர சைவர்களும், ஓதுவார்களும் இந்தச் சன்னதியில் அமர்ந்து தேவாரம் ஓதுவது வழக்கம். கோவிலுக்கென்று அமைந்த ஓதுவார்கள் இங்கே ஓதுவதோடு மட்டுமின்றி கனகசபையில் அவர்களுக்கென்று நியமித்த நேரத்தில் கால வழிபாட்டின் போதும், மற்றச் சமயங்களிலும் தேவாரம் ஓதுவது உண்டு. தினந்தோறும் தீட்சிதர்களில் யாராவது ஒருவரால் தேவார நால்வருக்கும் அந்த, அந்தக் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

அடுத்து வருபவர் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி. பெயருக்கேற்பத் தென் திசை நோக்கி இருக்கும் இவரின் தோற்றமும், சின்முத்திரை காட்டும் அழகும் எல்லார் மனதையும் கவர வல்லது. சிவனின் பல்வேறுவிதமான லீலா விநோதங்களில் அவர் பல ரூபங்கள் எடுத்தார். அப்படி எடுத்த இந்த ஞான ஸ்வரூபம் மெளனத்தின் மூலமே நமக்கு உண்மையை உணர்த்துகிறது. சனத்குமாரர், சனகர், சனந்தனர், சனாதனர் நால்வருக்கும் மெய்ப்பொருளை அறியும் ஆவல் ஏற்பட்டது, அதற்காக அவர்கள் தகுந்த குருவைத் தேடி அலைந்தபோது ஒரு கல் ஆல மரத்தின் அடியே அவர்கள் ஞான ஸ்வரூபம் ஆன ஒரு இளைஞன் சின்முத்திரை காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டனர்.

அவர்களை அறியாத உணர்வால் தூண்டப்பட்ட நால்வரும் அங்கே அமர்ந்து குரு உபதேசம் பெற முயற்சிக்க, உபதேசம் பெறாமலேயே அந்த ஞானகுருவின் மெளனத்தின் மூலமும், அவர் காட்டிய சின் முத்திரையின் மூலமுமே அவர்கள் மெய்ப்பொருளைக் கண்டறிந்தனர். அன்று முதல் எல்லாச் சிவன் கோவிலிலும் தட்சிணா மூர்த்தி ஸ்வரூபம் ஞானகுருவாக, வழிகாட்டியாக வணங்கப் படுகிறது. குருவாரம், அல்லது வியாழக்கிழமை என்று சொல்லப் படும் கிழமையில் வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊறவைத்து மாலை கட்டி இந்த தட்சிணாமூர்த்திக்குச் சாற்றி, வழிபட்டால் எல்லா ஞானங்களும் பெறலாம் என்பதோடு அல்லாமல் அஞ்ஞானமும் அகலும் என்று மக்கள் நம்பிக்கை. ஆனால் தக்ஷிணாமூர்த்திக்கு இதைச் செய்வது தவறு என்றும் ஆன்றோர் கூறுகின்றனர். குரு வேறு, தக்ஷிணாமூர்த்தி வேறு. குரு நவகிரஹங்களில் ஒருவர். தக்ஷிணாமூர்த்திக்கு இம்மாதிரிப் பரிகாரங்கள் செய்யக் கூடாது. முக்கியமாய்ப் படிப்பு நன்கு வராத மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் நன்கு பலன் பெறலாம். நம்பிக்கைதான் முக்கியம்.

சிதம்பர ரகசியம் - லிங்கத் திருமேனியை ஒரு தரிசனம்!



தட்சிணாமூர்த்திக்கு அடுத்துப் "பல்லிஸ்வரர்" என்பவரின் சன்னதி உள்ளது. பல்லியின் சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்றும், பல்லி உடலின் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல் பலன் உண்டு என்பதும் மக்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் கெடுபலன்கள் இந்த ஈஸ்வரரின் தரிசனத்தால் விலகும் என்றும் க்ஷேத்ரபாலகர்களில் இவரும் ஒருவர் என்றும் சொல்கின்றனர். அடுத்து வருபவர்

வல்லபகணபதி . சுப்ரமணியர் தாரகன் வதத்துக்குப் போகும்போது இவரை வணங்கி அருள் பெற்றுச் சென்றதாய் ஐதீகம்.

இந்த சன்னதிக்குப் பின் வருகிறது ஒரு சிறிய கோயில். நடராஜர் கோவில் கொள்ளும் முன்பு, இது தான் மூலஸ்தானமாய் இருந்தது எனச் சொல்லப் படுகிறது. லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் ஈசனை, மூலநாதர் எனச் சொல்கின்றனர். பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் இந்த மூலநாதரைத் தான் முதலில் வழிபட்டு வந்ததாயும், பின்னர் தான் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்று ஆனந்தத் தாண்டவக் கோலத்தைத் தாங்கள் எந்நாளும் கண்டு கொண்டு இருக்க வேண்டும் என்பதால் நடராஜரை இங்கே கோயில் கொள்ள வேண்டினார்கள் என்றும் சொல்கின்றனர். மேலும் இந்த மூலநாதர் ஜைமினி ரிஷியாலும், உபமன்யுவாலும், ராஜா ஹிரண்ய வர்மனாலும் வணங்கப் பெற்றிருக்கிறது. அம்மன் பெயர் உமாம்பிகை. அம்மன் சன்னதியும் பக்கத்திலேயே உள்ளது. இந்த மூலநாதருக்கும் அம்பிகைக்கும் அந்த, அந்தக் கால பூஜைகள், வழிபாடுகள் தீட்சிதர்களாலேயே செய்யப் படுகிறது.

மூலநாதர் கோவிலைச் சுற்றிக் காணப்படுகின்ற இறை ரூபங்களில் குணேச கணபதி, காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கல்பக விருஷம், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமியும், தையல்நாயகியும், 63 நாயன்மார்கள், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றவர்கள் ஆவார்கள். இதை அடுத்துக் காணப்படுவது, மத்யார்ஜுன க்ஷேத்ரம் என்று சொல்லப் படும் திருவிடைமருதுரின் ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமியின் லிங்கத் திருமேனியும், ப்ருகத்-குஜாம்பிகையும். இந்த மத்யார்ஜுன க்ஷேத்திரத்தில் அம்பாள், சிவனைத் தன் இருதயத்தில் வைத்து, "அதி தெய்வீகி" முறையில் வழிபட்டதால் இந்த லிங்கத் திருமேனியை மகாலிங்கம் எனக்குறிப்பிடுகின்றனர். அடுத்து அருணாசலேஸ்வரரும், தர்ம சாஸ்தாவுக்கும் என ஒரு தனி சன்னதியும் உள்ளது. இதை அடுத்துக் காணப்படும் கல்யாண மண்டபம், யாகசாலையை அடுத்து நாம் கோவிலின் வெளியே வந்து கோபுரங்கள் இருக்கும் திருச்சுற்று வழியாகப் போய் சிவகங்கைக் குளத்தையும் அதன் அருகே இருக்கும் அன்னை சிவகாமியையும் தரிசனம் செய்வோமா?



சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம் - பாப விமோசனம்!

கல்யாண மண்டபம், யாகசாலையை அடுத்து, உள்ள அர்த்த ஜாம சுந்தரரைத் தரிசனம் செய்துகொண்டு, பக்கத்தில் உள்ள சங்குடன் கூடிய "பாலகணபதி"யைத் தரிசனம் செய்யலாம். இதே பிரகாரத்தில் சனீஸ்வரருக்குத் தனி சன்னதி கிழக்கே பார்த்து உள்ளது, தவிரவும் நவகிரகங்களுடனும் சனீஸ்வரர் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து உள்ள தேவசபையானது, சித்சபைக்கு மேற்கே, தென் திசையை நோக்கி உள்ளது. உற்சவ மூர்த்திகள் இங்கே வைக்கப்பட்டுள்ளதோடு தீட்சிதர்களின் தினசரி கூடும் இடமாகவும் உள்ளது. இங்கே கூடித் தான் கோவில் நடைமுறைகள், வழிபாடுகள் பற்றிய முடிவுகள், கோவில் நிர்வாகம் பற்றிய முடிவுகள் முதலியன தீட்சிதர்களால் எடுக்கப் படும்.

சிதம்பரம் கோவிலில் 5 பிராகாரங்கள் உள்ளன. இதில் 2வது பிராகாரத்தில் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த 2-வது பிராகாரத்தைப் "பிராணமயகோசம்" எனவும் சொல்லுகிறார்கள். நம் உடலில் பிராணன் எவ்வளவு முக்கியமோ அவ்வலவு முக்கியத்துவம் கோபுரங்களுக்கும் உண்டு. "கோபுர தரிசனம் பாப விமோசனம்" என்பது ஆன்றோர் வாக்கு! கோவில் நடை கூடக் குறிப்பிட்ட காலம் வரைதான் திறந்து இருக்கும். இறையைத் தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட காலங்கள் உண்டு. ஆனால் இந்தக் கோபுரங்கள் நம்மால் இறை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் கோவில் மூடிய பின்பு கூட இவற்றின் தரிசனத்தால் நமக்கு இறை தரிசனம் கிடைத்த மாதிரி மனம் நிம்மதி அடைகிறது. இந்தக் கோபுரங்கள் அவ்வப் பொழுது வந்த அரசர்களால் பராமரிப்பும், திருப்பணியும் செய்யப் பட்டிருக்கிறது. இதில் முக்கியமான மன்னர்கள் எனச் சரித்திரம் குறிப்பிடுபவை பல்லவர்களின் நந்திவர்மன், ஹிரண்யவர்மன், சோழ அரசர்களில் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த முதலாம் பராந்தகன், பாண்டியர்களில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜய நகர அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தெற்குக் கோபுரம் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இதை ஒட்டி ஒரு சுப்ரமணியர் கோவில் வடக்கே பார்த்து உள்ளது. தவிரவும் சதாசிவ மூர்த்தி என்ற சிவனின் ஒரு ரூபத்திற்கு எனத் தனி சன்னதியும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே உள்ளாது. இதை அடுத்து நாம் காண்பது 8 அடிக்கு உயரமான மிகப் பெரிய "முக்குறுணி விநாயகர்". இவர் தான் தென் இந்தியாவிலேயே மிகவும் பெரிய விநாயக ரூபமாகக் கூறப்படுகிறது. இவருக்குப் பெரிய படி அளவு 6 படிக்கு அரிசியில் செய்யப் பட்ட கொழுக்கட்டையை ஒரே கொழுக்கட்டையாகச் செய்து நைவேத்தியம் செய்யப் படுகிறது. இங்கே தவிர, மதுரையில் மீனாட்சி சன்னதியில் இருந்து ஸ்வாமி சன்னதிக்குப் போகும் வழியில் தெற்கு கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு "முக்குறுணி விநாயகர்" அமர்ந்திருப்பார். அவருக்கும் இதே மாதிரி முக்குறுணி அரிசியால் செய்யப் பட்ட கொழுக்கட்டை நைவேத்தியம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்யப் படும்.

மேலே போட்டிருக்கும் சித்சபைத் தோற்றத்தின் படம் விக்கிபீடியாவில் இருந்து எடுத்தது. முன் பதிவில் போட்டிருக்கும் லிங்கத் திருமேனி, சிதம்பரம் மூலநாதரின் லிங்க ஸ்வரூபம் இல்லை. அது நான் புகுந்த ஊரான பரவாக்கரைக்கு அருகில் உள்ள "கருவிலி" எனப்படும் சற்குணேஸ்வரபுரத்தின் "சற்குணேஸ்வரர்" ஆவார்.

சிதம்பர ரகசியம் -கோபுர வாசலிலே!








மேலே நாம் காண்பது சித்சபையின் அற்புதத் தோற்றம். இதுவும் மூலஸ்தானத்துக்கு மேலே இருக்கும் கோபுர ம் என்ற அளவில் இருந்தாலும் இதன் தாத்பரியம் பற்றி நாம் முன்னாலேயே பார்த்து விட்டோம். படம் இப்போத் தான் போட முடிந்தது. இப்போ முக்குறுணி விநாயகருக்கு அடுத்து நாம் காணப் போவது பாண்டியன் "ஜடாவர்மன் சுந்தரனால்" திருப்பணி செய்யப் பட்ட மேலக் கோபுரம். இங்கே நாம் காண்பது கற்ப க விநாயகர் நடனமாடும் திருக்கோலத்தில். இவரை க்ஷேத்திர பால விநாயகர் எனவும் சொல்கின்றனர். இவர் இங்கே வந்ததுக்குச் சொல்லப் படும் காரணம் அல்லது புராணக் கதை என்னவென்றால்:

தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.

ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும், பசியும் தீர்ந்து சமாதானம் அடைகின்றார் துர்வாசர்."

உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட "கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம்" என்னும் ஸ்லோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க் கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு நந்தியெம்பருமானும், வில்வ மரமும், மிகப் புராதனமானது என்று சொல்லப் படுகிறது உள்ளன. இந்திரன் வல்காலி என்னும் அசுர வதம் செய்யும் முன்னர் நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச் சென்றதாயும், இங்கே உள்ள வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.

அடுத்துக் காண இருப்பது குமரகோட்டம் அல்லது பாலசுப்ரமணிய சன்னதி ஆகும். நவ வீரர்களுடனும் இங்கே சூர சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர் இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச் சுவர்களுக்கு உள்பக்கமாய் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன், தன் ஆறுமுகங்களோடும் காணப் படுவதோடு அல்லாமல், தன் இரு மனைவியருடனும் இருக்கிறான். சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய, அருணகிரிநாதர் தொழ அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் "சூர சம்ஹார"ப் பெருவிழா விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும், காணப் படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை மணந்த திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகிறது.



சிதம்பர ரகசியம் - சிவகங்கைக் குளத்தருகே!



மேலே நாம் காண்பது சிவகங்கை என்று அழைக்கப் படும் கோவிலைச் சேர்ந்த, கோவிலுக்குள்ளேயே இருக்கும் திருக்குளம் ஆகும். மீனாட்சி,சுந்தரேஸ்வரர் சன்னதியை அடுத்து நாம் காண்பது நூற்றுக்கால் மண்டபம் ஆகும். சோழர்களின் தளபதியான காளிங்கராயன் என்பவனால் கட்டிக் கோவிலுக்கு அளிக்கப் பட்டதாயும், முற்காலங்களில் நவராத்திரி சமயத்தில், அன்னை சிவகாமியை இங்கே தான் அலங்காரம் செய்து வைப்பார்கள் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன.

அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம். சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன. அவை1. சிவகங்கை மூன்றாவது வெளிப் பிராகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரேயும்,
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம், சித்சபைக்கு வெளியே கிழக்கே ஒரு கிணறாகவும் ,

3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும் இடத்துக்கு அருகே உள்ள "பாசமறுத்தான் துறை"யிலும்,
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தமும்,
5. வியாக்ரபாத தீர்த்தம், மேற்கேயும்,
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகேயும்,
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கேயும்,
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களஞ்சேரியிலும்,
9.சிவப்பிரியை, சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகேயும்,
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும் இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிவகங்கை முக்கியமானது.

"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப் படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும், விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென்பகுதியில் தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும், தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும் சொல்கிறார்கள். பல்லவ ராஜா சிம்மவர்மன் உடல்நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி, நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும், அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே, தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும், அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப் பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக் குளம் "ரஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரக்கால் மண்டபத்துக்கும், சிவகாம சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள் பாலிக்கிறாள்.
முஸ்லீம் மன்னர்கள் படை எடுப்பின் போது நடராஜரைத் தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும், திருச்சூரில்/ஆலப்புழாவில் சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் (எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதர்) என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர். வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் (அதுதான் தற்சமயம் அம்பலப்புழா என அழைக்கப்படுவதாய்க் கூறுகின்றனர்.) மறைந்து இருந்ததாயும், அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும் அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை.

சிதம்பர ரகசியம் - அன்னை சிவகாமி!






சிவகங்கைக் குளத்துக்கு மேற்கே நாம் காணப் போவது "சிவகாம கோட்டம்" என்று அழைக்கப் படும் சிவகாம சுந்தரியின் சன்னதி. இறைவனின் சக்தி மூன்றுவிதப் படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பவை. சக்தி எல்லாமே ஒன்று என்றாலும் அந்த அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளணும் இல்லையா? அதனால் நடராஜரை விட்டுப்பிரியாமல் அவருக்கு அருகேயே இருக்கும் சிவகாமசுந்தரியானவளை "இச்சா சக்தி" எனவும், இங்கே தனிக் கோயில் கொண்டு குடியிருப்பவளை "ஞான சக்தி" எனவும், இவளுக்கு அருகேயே துர்கையாக இருப்பவளை, கிரியா சக்தி" எனவும் உள்ளூர் மக்கள் நம்புவதோடு அல்லாமல் சில புராணங்களும் அவ்வாறு சொல்வதாய்க் கூறுகின்றனர். இந்தக் கோயில் சோழர் காலத்தில் இரண்டாம் குலோத்துங்கனால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது. தசமகாவித்யை பற்றிச் சொல்லும் "ஸ்ரீவித்யா உபாசனா", இந்தக் கோயிலை பூதேவியின் இருப்பிடம் எனக் கூறுவதாய்த் தெரிகிறது.

சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான மகாபாஷ்யத்தை எழுதியதாய்ச் சொல்கின்றனர். ஹயக்ரீவர், அகஸ்த்யர், லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர் போன்றோர் இங்கே வழிபாடு நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்தில் பிரம்மோற்சவத்தின் போது, சிவகாமசுந்தரிக்குத் திருமண விழாவும் நடராஜருடன் இங்கே நடை பெறுகிறது. வேறெங்கும் காணாத அதிசயமாய்ச் சித்திரகுப்தனுக்கு இங்கே தனியாய் ஒரு சன்னதி உள்ளே நுழையும்போது இடது பக்கமாய்க் காணலாம். சித்திரகுப்தனுடன் கூடவே பிரம்மாவும் இருக்கிறார்.

சிவகாமசுந்தரியை அடுத்துச் சிறிய அகிலாண்டேஸ்வரி சன்னதி காணப் படுகிறது. அதற்குப் பின்னர் துர்கை சன்னதி கிட்டத் தட்ட ஒரு தனிக் கோவில் போல் முக்கியத்துவம் பெற்றுக் காணப் படுகிறது. பராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான "மஹிஷாசுரமர்த்தினி"யாக வடக்கே பார்த்துக் கொண்டு இங்கே காணப் படும் அம்மனின் காலடியில் மஹிஷன் காணப் படுகிறான். இந்தக் கோயில் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாயும் இருக்கிறாள். நவராத்திரிகளில் இவளுக்குத் தனி அலங்காரம், பூஜைகள் முதலியன உண்டு.

பாண்டியநாயகன் கோவில்: இது ஒரு முக்கியமான கோவில். தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் இது மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டிருக்கிறது. ஆறுமுகங்களோடும், அருகில் தன்னிரு மனைவியரான வள்ளி, தேவானையோடும், மயில் வாகனனாய்க் காட்சி தருகிறான் அந்த வேலவன் இங்கே! பாண்டியனின் குலத்தைக் காக்க வந்த கடவுளான கந்தனுக்குப் பாண்டியன் இங்கே தனியே கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தமையால் இந்தக் கோயில் பாண்டிய நாயகன் கோயில் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இந்தக் கோயிலின் முன்பாகத்தில் ஷண்முகன் என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறான் குமரக் கடவுள்.





ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இங்கே இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆனால் நாங்க போனப்போ அந்தப் பக்கம் போகவே இல்லை. போய்ப் பார்க்காமல் எழுத முடியாதுனு நான் அதைப் பத்தி எழுதலை. சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய்ச் சிலர் கூறுகின்றனர்.
தீட்சிதர்கள் பத்தின கேள்வி ஒன்றுக்கு பதில்: தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும், நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்புக்களைத் தேடி ஆராய்ந்தபோது "திண்ணை"யில் அரவிந்தன் நீலகண்டன், எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும், இது பற்றி "அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை" விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சிதம்பர ரகசியம்—ரஜ சபையில்!

அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப் படும் ஆயிரக்கால் மண்டபம்.
சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும், இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான், ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர், தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும், இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப் படுகிறது. இதைத் தவிர, கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை முதல் முதல் அரங்கேற்றியதும், தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர், பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது.

சிதம்பர ரகசியம் - சிதம்பரத்தின் பெருமை!


கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் சிலர் எழுப்பி இருக்கிறார்கள். நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும், தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர், சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.
வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் "ஆகாயம்" சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே "விராட புருஷன்" எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது "அனஹதா" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும், இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும், தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும், எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள்.


ஐந்து சபைகளில் இது "கனக சபை" . மற்றதில் திருவாலங்காட்டில் "ரத்ன சபை" மதுரையில் "வெள்ளி சபை", திருநெல்வேலியில் "தாமிர சபை", திருக்குற்றாலத்தில் "சித்திர சபை". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும், நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. திருநெல்வேலியில் உள்ளது உண்மையான தாமிர சபை இல்லை எனவும், திருநெல்வேலி மாவட்டத்தின் செப்பறை என்னும் ஊரில் உள்ள நடராஜர் கோயில் தான் தாமிரசபை எனவும் சிலர் கூற்று. செப்பறை குறித்த தகவல் பின்னர் இடம் பெறும்.

மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும், இந்த ஸ்வரூபத்தை "அம்சி" எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம், அவ்வாறு இல்லை எனவும் அவை "அம்சரூபா" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப் படுகிறது.





சிதம்பர ரகசியம் -
"சித்சபை"யின் தோற்றமும், அங்கே உள்ள மூர்த்திகள் பற்றியும் விரிவாக ஏற்கெனவே பார்த்தோம். அந்த சித்சபையில் நடராஜரின் வலது பக்கமாய் ஒரு நீலத் திரை தொங்க விடப் பட்டிருக்கும். அதற்குத் தரிசனம் செய்யவும் தனியான சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத் தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையைத் திறந்து கற்பூர ஆரத்தி காட்டும்போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் எந்த உருவத்தின் மேலும் சாத்தப் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.

அருவமான இறைவன் எங்கும் நிறைந்து உள்ளான். எல்லா உயிர்களிடமும், காணப் படுகிறான். அனைத்தும் அவனே! என்றாலும் பாமர மக்களுக்குச் செளகரியத்திற்காக அவன் உருவம் எடுத்து வருவதே நடராஜர். உருவமாக "ரூப" தத்துவத்தை நிரூபிக்கிறார் இவர். இங்கே உள்ள ஸ்படிக லிங்கமோ "அருவுரு"வாகக் காட்சி அளிக்கிறது. இது படிப் படியாக இறைவனின் வழிபாட்டுக்கு உதவி செய்கிறது. முதலில் உருவத்தை வழிபடும் மனிதன், பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து மெய்ஞானம் பிறக்க, இறைவன் எங்கும் நிறைந்தவன் என உணருகிறான். இந்த அரிய தத்துவம் தான் சிதம்பர ரகசியம் எனச் சொல்லப் படுகிறது. தங்கள் ஞானக் கண்ணால் அனைவராலும் நம்முள்ளே உறையும் இறைவனைக் காண முடியாது என்பதற்காகவும், இறைவனின் மனோசக்தி இந்த இடத்தில் உறைந்திருப்பதாலும் தான் இங்கே அவனுக்கு உகந்த வில்வ தளங்களால் மாலையிட்டு அந்த உருவம் அற்றப் பரம்பொருளை வணங்கச் செய்கின்றனர்.

சிவனும், சக்தியும் ஐக்கியம் ஆகிய மந்திர சொரூபமான திருவம்பலம் எனவும் இதைச் சொல்லலாம். ஆனால் நாம் காண்பது என்னமோ ஒரு வில்வ மாலை தான். குறிப்பால் தான் உணர்த்துவார்கள். இந்த உலகை அதைப் படைத்த இறைவனாக, அதாவது விராட புருஷனாக வைத்துக் கொண்டால் அதன் நடுப்பாகம் ஆன இதயம் தான் இந்தச் சன்னதி. எல்லாக் கோவில்களையும் போல் இங்கே இறைவனின் மூலஸ்தானம் ஆன நடராஜர் சன்னதி நடுவிலும் இருக்காது. சற்றே இடப் புறம் ஒதுங்கியே இருக்கும். நம் இதயம் எவ்வாறு இடப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள் உறையும் ஜோதி தான் இறைவன். இங்கே தான் இதயத்தின் உள்ளே உள்ள தாமரை மலரில் ஜோதி ரூபமாக இறைவன் உறைகிறார் என்பது ஐதீகம். நம்முள்ளே உள்ள இறைவனை நாம் கண்டு உணர்ந்து ஞானம் அடைய வேண்டியே இத்தனை ரகசியமாக இதைப் பாதுகாக்கிறார்கள்.

நம் உடலையே ஒரு கோயிலாக எடுத்துக் கொண்டால், நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் இடம் ஆன ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தேவதைக்கு உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பதே இந்த இறைவனால் தான். ஆகவே தான் "சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள"ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள். நிறுத்தி அவனுக்குக் கோயிலும் கட்டினார். பூசலார் நாயனார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த யோக முறைப்படியும் இது "அனாஹதம்" எனப் படுகிறது.அனாஹதம் தான் சரியான வார்த்தை. ஒரு முறைக்குப் பலமுறையாகச் சரி பார்த்து விட்டேன். சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுகவாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டது தான் இந்தச் சிதம்பர ரகசியம்.

இன்னும் எளிமையாகச் சொன்னால் "ஜீவாத்மா"வும் "பரமாத்மா"வும் ஐக்கியம் ஆகும் இடம் எனவும் சொல்லலாம். ஆகாயத்தின் தன்மை இருப்பதால்,இந்த இடத்தில் உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால் தான் சிதம்பரம் நகரை பஞ்ச பூதத் தலங்களில் "ஆகாயத் தலம்" என்றும் சொல்லுவார்கள். எல்லாரும் மீண்டும் மீண்டும் சிதம்பர ரகசியம் குறித்துக் கேட்டதால் மறுபடி விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.



சிதம்பர ரகசியம், ஆடிய ஆட்டம் என்ன சொல்வேன்!
தீட்சிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பார்க்கலாம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்படக் காரணம் என்ன?

எல்லை அற்ற பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாகவும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை :

1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.
இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.



சிதம்பர ரகசியம் - ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே!


உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம்.



ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?





சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது.

டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.



ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே! -2



காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.



திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம்.

சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.



கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள்.

சிலர் கஜஹஸ்தம் என்றால் என்ன என நினைக்கலாம். நாட்டிய சாஸ்திரம் எனக்குத் தெரியாது என்றாலும், ஆடலரசனின் இடது கையானது, யானையின் துதிக்கையைப் போல் தோன்றும்படி அபிநயிப்பது தான் "கஜஹஸ்த முத்திரை" என்ற வரைக்கும் தெரியும். சிலருக்கு காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்று தோற்றுப் போனாள் என்பதை ஏற்க முடியவில்லை. என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து. படங்கள் கிடைத்த வரை போட்டிருக்கேன். ஊர்த்துவத் தாண்டவப் படம் கிடைக்கவே இல்லை. திரிபுர தாண்டவத்துக்கு திருக்குற்றாலம் என்று தேடினாலும் கிடைக்கவில்லை.

ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே - 3



ஊர்த்துவ தாண்டவம் : சிவனின் தாண்டவக் கோலங்களில் குறிப்பிடத் தக்கதான இது, காளிக்கும், இறைவனுக்கும் நடந்த போட்டியைக் குறிப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோலத்தில் ஆடலரசனின் வலக்காலானது அவரின் திருமுடியைத் தொட்டவாறு காணப் படும். நாட்டிய சாஸ்திர வகைகளில் இது "லலாட திலகா" என்னும் வகையைச் சேர்ந்தது எனச் சொல்லப் படுகிறது. வலக்காலால் தன் நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ளும் கோலம் எனச் சொல்லப் படுகிறது. இத்தனை மேலே ஒரு பெண்ணான தன்னால் காலைத் தூக்கி ஆட முடியாது என்பதால் காளி வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. "சண்ட தாண்டவம்" எனவும் "காளி தாண்டவம்" எனவும், "சம்ஹார தாண்டவம்" எனவும் அழைக்கப் படும் இந்தக் கோலம் திருவாலங்காட்டிலும் காணக் கிடைக்கிறது. சிதம்பரத்தில் மட்டுமே காளி, சிவனுடன் போட்டி இட்டுத் தோல்வி அடைந்தாள் எனச் சொல்லப் பட்டாலும், திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.



திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது. திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்ட ஐயன், தன் சிரிப்பாலேயே அவர்களை எரித்ததாய்க் கூறப்படும் வேளையில் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தை பிரம்மா தானே படமாய் வரைந்ததாய்ச் சொல்லப் படுகிறது. மிக அரிய வகையான சித்திரங்களையும் இறைவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிய அரிய சித்திரங்களையும் இங்கே காணலாம். இங்கே ஒரு தாமிரத்தினால் ஆன சிறிய நடராஜர் திரு உருவம் இருந்திருக்கிறது. நாங்கள் போன போது பார்க்க முடியவில்லை. :( எந்த நேரத்திலும் அழியக் கூடிய கோலத்தில் பாதி நிறம் மங்கியும், சில இடங்களில் நிறம் மங்காமலும் நடராஜர் மிகப் பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறார். வருகை தரும் மக்கள் தங்களாலான சித்திரங்களை அந்த உயரிய சித்திரங்கள் மீது வரைந்திருப்பதையும் காண முடிகிறது. அரிய பொக்கிஷம் என உணர இன்னும் எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை! :((((((

வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சியின் திருமணத்துக்கு வந்திருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற ரிஷி, முனிவர்கள், தாங்கள் தினசரி தரிசிக்கும் நடராஜத் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் உணவு உண்ண முடியாது எனச் சொல்லவே அவர்களுக்காக ஆடப்பட்டது வெள்ளியம்பலக் கூத்து. இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத் தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்". வலக்காலைத் தூக்கி ஆடும் இந்தக் கோலம் மதுரையில் மட்டுமே காணக் கிடைக்கும். யு.எஸ்.ஸில். ஹூஸ்டன் நகரின் மீனாட்சி கோவிலிலும் நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடிய வண்ணமே அருள் பாலிக்கிறார்.


இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகத நடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின் வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். அவற்றைப் பார்ப்போமா?



சிதம்பர ரகசியத்தில் இறைவனின் கூத்து!




சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே


திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்
வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்
நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்
திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்
திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்
திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்
திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.


சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்
"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."


சுந்தரக் கூத்து:
"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"


பொற்பதிக் கூத்து:
தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"


பொற்றில்லைக் கூத்து:
"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"


அற்புதக் கூத்து:
"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"

ரகசியம் தொடரும்......




சிதம்பர ரகசியம் –இறைவன் பொதுவானவன்!



மஹாவிஷ்ணு ஒரு சமயம் ஈசனையும் அன்னையையும் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார். அவருக்கு வரம் அளிக்க இறைவன், அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும், ஸ்கந்தனுடனும், சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து, நினைத்து, விஷ்ணு, அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது, அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு "அஜபா நடனம்" என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது. சமீபத்தில் கடலூர் மருத்துவர் திரு தி.வாசுதேவன் அவர்கள் அஜபா மந்திரம் என்பதற்கு வேறு வகையில் விளக்கம் அளித்தார். அதாவது மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே வர வர, நாளாவட்டத்தில் அது மனதுக்குள் ஓட ஆரம்பிக்கும். அப்போது வெளிநாட்டத்தை நிறுத்தி நாம் உள்ளே பார்க்க மந்திரம் ஓடுவது தெரியவரும். இது தான் அஜபா ஜபம் என்பது அவர் கொடுத்த விளக்கம்.

பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும், அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது, ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும், இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர்.


சிதம்பரத்தில் நடராஜா விழித்துக் கொண்டு இடைவிடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். ஸ்ரீரங்கத்திலோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும், வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன், போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால், மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார், போன்ற நாயன்மார்களும், பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள், போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.



சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்

மேலே உள்ள "ஊர்த்துவத் தாண்டவம்" திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு, சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில், சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலம் தான் "ரத்னசபை" ஆகும். இன்னொரு திருவாலங்காடு, ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் "ரத்னசபை" அல்ல. சிலர் ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் "லலாட திலகம்" எனச் சொல்லப் படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப் படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.


தில்லை வாழ் அந்தணர்கள்!
சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து, அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, அந்தணர்களாக மாறி, அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும், இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே "தில்லை வாழ் அந்தணர்கள்" என்று கருதப் படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
(தி. 7 ப.39 பா.1)
திருச்சிற்றம்பலம்.
என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்பந்தரும் தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்றுவரை தில்லைச் சிதம்பரம் கோயிலில் நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும், கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக் கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும், அவர்களின் பணி எத்தகையது என்பதையும் சிறிது பார்க்கலாம்.

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல், திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப் பட்ட வரியான "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல், தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை, வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை, இதன் காரணமாகவே "தில்லைப் பெண் எல்லை தாண்டாள்" என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர்.

தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும், தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும், இந்த சைவ ஆகமத்துக்கும், வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன். பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும், இன்றும் செய்வதாயும் சொல்லப் படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும், எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர, இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.

"மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூடசென்று சேர்மின்களே!" என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்,
"செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொரு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.


சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் 3

தீட்சிதர்கள் எப்போது இந்தக்கோவிலில் வழிபாடு செய்ய வந்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், சரித்திரச் சான்றுகளின் படி ராஜா ஹிரண்யவர்மன் காலத்தில் இருந்து இக்கோவிலில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்து வருவதாய்த் தெரிய வருகிறது சோழ அரசர்களுக்குப் பட்டாபிஷேஹம் செய்யும் உரிமையும் இவர்களுக்கு இருந்திருப்பதாய்த் தெரிய வருகிறது. ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும், திருநீலகண்டரின் கதை பற்றிய "சிவ பக்த விலாசம்' என்ற புத்தகத்தில் இருந்தும், தில்லை தீட்சிதர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகித்து வந்தது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் 3,000/- பேர் இருந்ததாய்ச் சொல்லப் பட்டாலும், தற்சமயம் 200 அல்லது 300 பேர் தான் இருக்கின்றனர். அதுவும் பிறப்பு, இறப்பு விகிதத்தை ஒட்டி ஏறி இறங்குவது உண்டு.

கிருத யுகத்தில் 3,000 பேரும், திரேதா யுகத்தில் 2,000 பேரும், துவாபர யுகத்தில் 1,000 பேரும், தற்சமயம் கலியுகத்தில் 200 பேரும் இருப்பார்கள் எனச் சிதம்பர ரகசியத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாயும் கூறுகின்றனர். கோவிலின் அனைத்து உரிமைகளும் தீட்சிதர்களையே சார்ந்துள்ளது. கோவிலின் பரம்பரை அறங்காவலர்களும் இவர்களே. இது தகப்பன் வழிச் சொத்து பிள்ளைக்கு என்ற முறைப்படி இல்லாமல் தீட்சிதர்கள் குடும்பங்களில் பிறக்கும் அனைத்து நபர்களுமே உரிமை பெற்று விடுகிறார்கள். தகப்பனும், பிள்ளையும் சம உரிமை அனுபவிக்கும் இந்தக் கோயிலுக்கு எனச் சொத்து எதுவும் தனியாகக் கிடையாது. பல அரசர்கள் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருந்தாலும் சில,பல சொத்துக்கள் அவர்கள் அளித்திருந்தாலும் தற்சமயம் கோவிலுக்கு என எந்தவிதமான சொத்தும் கிடையாது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் அளிக்கும் சிறு, சிறு மான்யத் தொகைகளில் இருந்து, பெரும் மான்யத் தொகைகள் வரை சேர்ந்து ஒரு வைப்பு நிதியாக மாறி, அதில் வரும் பணத்தில் இருந்து தினசரி வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இது தவிர சில "கட்டளை தாரர்"களும் இருக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் பெரும் தொகைகளும் கோவிலின் வழிபாட்டுக்கும், உற்சவங்களுக்கும் பயன்படுகின்றது. பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை, வி.எஸ்.எஸ்டேட், ராஜா தொண்டைமான், புதுக்கோட்டை அவர்களின் அறக்கட்டளை, தருமபுரம் ஆதீனம், முகையூர் சுப்ரமணியபிள்ளை அவர்களின் அறக்கட்டளை, ராஜா சர். முத்தையாச் செட்டியார் அவர்களின் அறக்கட்டளை போன்றவை கோவிலுக்கு நிரந்தரமாக ஒரு தொகை கிடைக்க வழி செய்துள்ளது.

அவற்றின் கணக்கு, வழக்குகள் அந்த, அந்தக் கட்டளை தாரர்கள் நியமிக்கும் நிர்வாகியைச் சேர்ந்தது. அவர்கள் கோவிலுக்குப் பணமாகவோ, பூஜையின்போது தேவைப்படும் பொருளாகவோ கொடுத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். தீட்சிதர்கள் இந்தக் கணக்கு, வழக்கு பற்றிக் கட்டளைதாரர்களிடம் கேட்டுக் கொள்ளுவது இல்லை. பிரம்மோற்சவங்களுக்கான செலவுகள், ஊரில் உள்ள அனைத்து ஜாதியினராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. இது போல மற்ற உற்சவங்களும், சில தனிப்பட்ட உபயதாரர்களாலும், பொதுவாக வசூல் செய்யப் பட்ட பணத்தாலுமே கொண்டாடப் படுகின்றது.

இது தவிர சில பக்தர்கள் தங்கள் பெயரிலோ, குடும்பத்தின் பெயரிலோ,குறிப்பிட்ட நாளில், நட்சத்திரத்தில் அபிஷேஹம், அர்ச்சனை செய்ய என வருஷத்துக்கு ஒரு முறை கொடுக்கும் பணமும் வழிபாடுகளுக்கு உதவுகின்றது. இந்தக் கோயிலில் எங்கேயும் உண்டியலும் கிடையாது. எல்லாச் செலவுகளும் போக மிகுந்திருக்கும் வருமானம் எல்லாத் தீட்சிதர்களுக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது.பொதுவாக யாரும் சிவன் கோவிலின் வருமானத்தையோ, சொத்தையோ வைத்துச் சாப்பிடுவது இல்லை. சிவன் சொத்து குலநாசம் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால் இந்தக் கோயிலில் சிவனே தீட்சிதர்களில் ஒருத்தன் எனச் சொல்லப் படுவதாலும், கோயிலை தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்தின் முக்கிய இருப்பிடமாய்க் கருதுவதாலும், இறைவனின் நித்திய வழிபாடுகளை, வீட்டில் செய்யும் பூஜை போல ஈடுபாட்டுடனும், வைதீக முறையிலும் செய்வதாலும் இறைவனே தங்களில் ஒருவன் என்பதாலும் அவனுடன் இருந்து உண்ணுவது தங்கள் உரிமை என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு.



சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் 4

இந்தக் கோயிலின் சகல நிர்வாகங்களும் தீட்சிதர்களையே சார்ந்தது. தீட்சிதர்கள் தவிர, மற்றப் பணியாளர்களும் உண்டு. ஓதுவார்கள், மடப்பள்ளிச் சமையல்காரர்கள், சுத்தம் செய்பவர்கள், மற்றப் பணியாளர்கள் என இருக்கின்றனர். முன் காலங்களில் அனைவருக்கும் கோயிலில் இருந்து உணவு கொடுத்து வந்த பழக்கம்போல தற்சமயமும் கொடுத்து வந்தாலும், தற்காலத் தேவையை அனுசரித்து அவர்களுக்குச் சிறிய அளவில் சம்பளமும் கொடுக்கப் படுகிறது. அவர்களுக்கு உள்ளேயே ஏற்படும் வழக்குகளைக் கோவிலில் கூட்டம் கூட்டி விவாதித்து அவர்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்கின்றனர். ஒரு பொது மனிதன் அனைத்துத் தீட்சிதர்கள் வீட்டுக்கும் சென்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். கூட்டம் "தேவசபை" அல்லது "கல்யாண மண்டபத்"தில் ஏற்பாடு செய்யப் படும். கட்டாயமாய் தீட்சிதர் குடும்பத்து அனைத்து ஆண்களும் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே கடைப்பிடிக்கிறார்கள். "கனகசபை"யிலிருந்து ஒரு விளக்கு மிகப் புனிதமாய்க் கருதப் பட்டு எடுத்து வரப் படுகிறது. அந்த விளக்கு வந்தாலே "நடராஜரே" நேரில் வந்ததாய்க் கருதப்படுகிறது.

அவர்களுக்குள் உள்ள தனிப்பட்ட மனமாற்சரியங்களைக் களைந்து விட்டுக் கோயிலின் பொதுவான நிர்வாகச் சீர்திருத்தத்தில் மாற்றங்களோ, முடிவுகளோ ஏகமனதாய்க் கொண்டு வரப் படுகிறது. ஒரு தனி தீட்சிதர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யலாம் எனினும் பொதுவாக அனைத்தும் ஏற்கப் படுகிறது. அவை தனியான ஒரு புத்தகத்தில் பதிவும் செய்யப் படுகிறது. கோவிலின் தினசரி நிர்வாகம் மட்டுமில்லாமல் உற்சவ காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வேலைகள்,கோவிலின் தினசரிப் பாதுகாப்பு, இரவுப் பாதுகாப்பு என அனைத்துமே விவாதிக்கப் பட்டு முடிவு எடுக்கப் பட்டு அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கோவிலின் மொத்த வழிபாடும் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. 1.நடராஜர் கோவில், 2. அம்மன் கோவில், 3. மூலஸ்தானக் கோவில், 4. தேவசபை, 5. பாண்டியநாயகர் கோவில் என ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு குறிப்பிடப் பட்ட தீட்சிதர் குழு எனவும் பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். இம்முறையில் அனைத்து தீட்சிதர்களும் அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றிப் பணிபுரிய முடியும். ஒரு முறை என்பது 20 நாட்களைக் குறிக்கும். அந்த நாட்களில் கோவிலின் சாவிகள், நகைப்பெட்டிகளின் சாவிகள் என அனைத்துமே மாறி மாறி ஒவ்வொருத்தர் பாதுகாப்பிலும் 20 நாட்கள் இருக்கும். பொது தீட்சிதர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகக்குழுவையும் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் ஒருத்தர் காரியதரிசியாக அந்த வருடம் நியமனம் பெறுவார். துணைக்காரியதரிசியை காரியதரிசி நியமிப்பார். கோவிலின் நந்தவனம் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களையே சாரும். இம்முறையில் இவர்கள் சுழற்சி முறையில் எந்தவிதமான வருத்தமோ, தடங்கலோ இல்லாமல் அனைத்து தீட்சிதர்களுமே கோவிலின் நிர்வாகத்திலும், பூஜை முறைகளிலும் பங்கு பெறுகின்றனர்.


சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள் 5

கோயில்களுக்கெல்லாம் கோயில் என்று சொல்லப் படும் இந்தச் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் "போதாயனர்" என்னும் ரிஷியின் சூத்திரங்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாய்ச் சொல்லப் படுகிறது. மேலும் பூஜாவிதிகள்"பதஞ்சலி" முனிவரால் நடராஜரின் ஆக்ஞைப் படி எழுதப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. "பூஜா பதஞ்சலம்" என்னும் இந்தப் பூஜாவிதிகளே இன்றளவும் பின்பற்றப் படுவதாயும் சொல்கின்றனர். ஸ்ரீ சிதம்பரேஸ்வர நித்ய பூஜா சூத்திரம் என்னும் இந்த பதஞ்சலி பத்ததியே இன்றளவும் அனுசரிக்கப் படுகிறது. நடராஜரும் தங்களில் ஒருவர் என்னும் இவர்கள் எண்ணமும் இன்றளவும் மாற்ற முடியாமல், யாராலும் அதை உடைக்க முடியாமலும் உள்ளது. சரித்திர பூர்வமாய்ப் பார்த்தால் இந்தச் சிதம்பரம் கோயிலுக்குப் பல அரசர்கள், சக்கரவர்த்திகள் திருப்பணிகள் செய்து வந்திருக்கிறார்கள் என்றாலும், அந்நிய தேசப் படை எடுப்புக்கும் இது ஆளாகி இருக்கின்றது. முஸ்லிம்களின் படை எடுப்பின்போது, மாலிக்காஃபூர் வந்து சிதம்பரம் கோயிலை ஆக்கிரமித்த போது நடந்த ஒரு விஷயம் இதோ: திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பார்வையில்:

"ஹிந்து சமுதாயத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தில்லை வாழ் அந்தணர்கள் ஆற்றியுள்ள சேவை அளப்பரிய ஒன்றாகும். மாலிக் காஃபூரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் போது தமது உயிரினைத் தியாகம் செய்து தமிழகத்தின் ஆன்மிக கலைப் பொக்கிஷங்களான தெய்வத் திருவுருவச்சிலைகளை காத்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அமீர் குஸ்ரு தாரிக்-இ-அலை எனும் நூலில் பின்வருமாறு தில்லைவாழ் அந்தணர் அனுபவித்த கொடுமைகளை கூறுகிறான்: 'மாலிக் மிகுந்த கவனத்துடன் அஸ்திவாரங்களை பெயர்த்தெடுத்தான். பிராம்மணர்கள், விக்கிர ஆராதனையாளர்கள் தலைகள் அவர்கள் கழுத்துக்களிலிருந்து நடனமாடியபடி தரையில் அவர்கள் கால்களில் விழுந்தது. இரத்தம் ஆறாக ஓடிற்று. ' என்ற போதிலும் அந்தணப்பெருமக்கள் தம் தலைகளை கொடுத்த போதிலும் தர்மத்தை விடவில்லை. தெய்வத் திருவுருவச்சிலைகளை காப்பாற்றினர். இன்று உலகெங்கிலும் நடராஜ தாண்டவச் சிற்பம் அடைந்துள்ள மேன்மையான வணக்கத்திற்கு தெய்வத்திருவருளும் உங்கள் முன்னோர்களின் தியாகங்களுமே காரணம். "

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்தக் கட்டுரை தீட்சிதர்களின் நடராஜ பக்தியை வெளிக்காட்டுகிறது.
இது தவிரத் திப்பு சுல்தான் வந்தபோது நடராஜத் திருமேனியை தீட்சிதர்கள் எடுத்துக் கொண்டு போய்த் திருச்சூரில் மறைத்து வைத்திருந்ததாயும், அம்பலப்புழை/ஆலப்புழையில் மறைத்து வைத்திருந்ததாயும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. 1781-ல் நடைபெற்ற 2வது மைசூர் யுத்தத்தில் "கூட்" என்னும் தளபதி சிதம்பரம் கோயிலைத் தாக்கியதாகவும், பின்னர் துரத்தி அடிக்கப் பட்டதாயும், கர்நாடக நவாபுகளைப் பற்றிய சரித்திரக் குறிப்புக்களில் காணக் கிடைக்கிறது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடம் மேலக் கோபுரம் என்றும் அதன் அடையாளங்கள் இன்னும் அந்தக் கோபுரத்தின் மாடங்களில் காண முடிகிறது எனவும் சொல்கின்றனர். இந்தச் சமயத்தில் தீட்சிதர்கள் நடராஜத் திருமேனியை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய் அங்கே சபாபதி மண்டபத்தில் மறைத்து வைத்திருந்ததாயும், தஞ்சையை அப்போது ஆண்டு வந்த மராட்டிய அரச வம்சத்தினர் இதற்கு உதவியதாயும் கூறப் படுகிறது. இதற்குச் சான்றாக ஆயிரக்கால் மண்டபத்தில் க்ரந்த எழுத்துக்களால் அமைந்த ஒரு ஸ்லோகத்தில் இந்த விஷயம் சொல்லப் பட்டு, நடராஜர் சக வருஷம், 1695, கலியுகாதி, 4874 அதாவது கி.பி. 1773-ம் வருஷம் திருவாரூரில் இருந்து "சித்சபை" வந்தடைந்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது.

சிதம்பர ரகசியம் - ஆகமங்கள் பற்றிய ஒரு தொகுப்பு!
The Agamas, though they constitute an equally large body of ancient Sanskrit source
material for a different concept of the same advaita philosophy of Vedanta, have not been
studied by any Orientalist; indeed they have not been studied at all or studied in depth
even by any Indian scholar except perhaps Dr. Surendranatha Das Gupta (October 1885 -
December 1952) of Calcutta, even under the great handicap of the grantha script.

The agamas had existed mostly in South India, in the Tamilnad, in palm leaf manuscript
book form in the homes of the Sivachariyas who had been entrusted with the duty of
organizing and performing the consecration and the congregational worship (parartha
puja) in the Siva temples for probably over two millennia and a half. These Agamas are not
available in north India to the extent they are available in the south, although they had
been responsible for the culture of the whole of India. Dr. Das Gupta has stated that "No
Agama manuscript of any importance is found even in Banaras, the greatest center of
Hindu religion, Sanskrit studies and culture."

Besides, all the Agamas manuscripts are available only in the grantha script, one which had
been invented by the Tamil people for writing their Sanskrit scriptures more than fifteen
hundred years ago. There is also a view that the grantha was the script used when the
Vedas were reduced to writing and that the new nagari script came into vogue when the
Vedic language gave place to classical Sanskrit (Samskrt well constructed); in other words,
grantha script was much earlier than the nagari script. This grantha script was not in use in
the north, and the devanagari script of the north was unknown in the south till the
beginning of the twentieth century. It is too much to expect Western Orientalists first of all
to known of the existence of two scripts for Sanskrit, and then to study two scripts for one
language; their study was confined to the devanagari script which was in use over a much
larger area of India and in the north.

It has been said that the Upanishads and the Agamas branched off from the same stem,
namely the Vedas, and that the two dealt with the theory and the practice of philosophic
thought respectively. The general assumption that the Agamas deal only with temples and
temple worship is wrong. The Agamas consist of four parts of which Kriya dealing with
temple construction and rituals is one, and jnana dealing with philosophy is another. They
are as much philosophic treatises as any other treatises like the Upanishads. The Agamas
are encyclopaedic in their treatment of all subjects pertaining to the religious life of the
worshipper and to the temple.

The Saiva Agamas are some of the earliest books in the Sanskrit language on the Saiva
religion and philosophy, written over a period of several centuries before the Christian era.
They represent an independent class of writing by very early seers who had an inward
experience and enlightenment from the Supreme Being, Siva, and who were also perhaps
influenced by the Vedas in their original form. These seers have to be considered as hailing
from the South and not from the North. But they were essentially representatives of all
India and they reflected in their thoughts, modes of meditation and worship, in their
writing, and in their very lives, the inherent theism of the South.

The theism of the south or rather, the Saivism of the Tamilians, was the growth of an
unbroken tradition, probably from the pre-historic past, and this had three elements fused
into it. These are 1)an external worship of images as the manifest abode of God, both in
the shrines throught the land and in the devotees' own homes, 2)symbolism, and 3)the
inward meditation and realization.

The Agamas claim Vedic authority for their doctrines. The Agama doctrines are indeed
theistic, and such theism is not foreign to the Upanishads. The following Agamic passages
may be seem to affirm the derivation of the Agamas from the Vedas:

"The siddhanta consists of the essence of the Veda. "(Suprabhedagama)

"This tantra is of the essence of the Veda. This siddhanta knowledge which is the
significance of Vedanta is supremely good." (Mukutagama)

The Agamas are deemed to have scriptural authority and are often callled the Veda and the
Fifth Veda. As a matter of fact, the Sanskrit Nighantu (lexicon) names the Veda as the
Nigama, and the Tantra as the Agama. The Veda and the Agama both seem to have been
denoted by the common term sruti up to the 11th century, after which period the above
distinction of Nigama and Agama seems to have been adopted. Swami Prajnanananda,
quoted by Sir John Wooddroffe, has clearly established that the Agamic (tantric) texts, as
we known them today, had for the most part preceded Buddhism, and only the Agamic cult
had been able gradually to swallow up Buddhism on the Indian sub-continent, and
ultimately to banish it altogether from the Indian soil; it was not the Upanishadic
philosophy but the Agamic cult that was responsible for the supplanting of Buddhism and
for the fusion of its salient features into the core of the Hindu religion. This is a very
important and pertinent observation deserving the careful attention of all scholars.

The four parts of the Agamas are likened to the four parts of the Vedas, namely the mantra
part or stotras comparable to charya of the Agamas, the brahmanas dealing with rituals
comparable to kriya, the aranyaka part analogous to the yoga, and the Upanishad or
philosophy part equivalent to the vidya or jnana pada of the Agamas. It should be noted
that the Agamas have their own mantras for all their kriyas. They employ vedic mantras
only for the stotra part. (It is in this sense that one can say Agamas have alsmost
completely replaced the Vedas as the basis of current day Hinduism in India)

Exponents of the Agamas would go further and say that the Supreme of Saivism, Siva, is
mentioned in the Vedic terms such as the following:

Isa vasyam idam sarvam.
Yah parah sa mahesvarah.
Sarve vai Rudrah.
Ambika pataye Umapataye.
Yo vai Rudras sa Bhagavan Bhurbhuvas suvah.
Tasmai namas tasmai tva jushtam
niyurajmi yasmai namas tat Sivah.
Haraya Rudraya Sarvaya Sivaya
Bhavaya Maha devaya Ugraya.

(All the names mentioned in the last lines are the specific mantra names of Siva.)

Pasupataya Rudraya Sankaraya Isanaya Svaha.
Siva ido dhyeyah, Sivam daras sarvam anyat parityajya.
Yada charmavat akasam veshtayishyanti manavah
Tada Sivam avijnaya duhkasyanto bhavishyati.

The Bharga sabda in the Gayatri mantra (Bharhgo devasya dhimahi) is considered to refer
to Siva. Besides, the introduction of Sri Uma in the Kenopanishad explicity enunciates the
Saiva Siddhanta doctrine that ignonance can be dispelled only with the bestowal of Siva's
Grace which is personified as Sakti or Uma.

Sa tasminneva akase striyam ajagama,
bahu sobhamanam Umah, Haimavatim.

The Kaivalyopanishad, one of the early Upanishads, claimed by many to be of the Advaitic
or Vedanta school, has the following lines (sloka 7):

Tam Aadi madhyanta vihinam Ekam Vibhum
Chidanandam Arupam Adbhutam
Uma sahayam Paramesvaram Prabhum
Trilochanam Nilakantham Parsaantam.

The Narada Parivrajakopanishad is a large Upanishad having nine upadesas of which the
eight deals with the Pranava. In the second sloka we find a phrase 'Sarvagamayas-Sivah'.
Though the Upanishad could not have been one of the early Upanishads, yet the mention of
the Agama here as the form of Siva is significant. The terms agama, tantra, siddhanta and
mantra are found used synonymously in many Agamic writtings.

The Saivagama is also a general term applied to four different schools; the Saiva,
Pasupata, Soma and Lakula. Of these, the Saiva is said to have had three branches : Vama,
Dakshina and Siddhanta. Kapala, Kalamukha, Agora are all contained in the Vama branch.
The Dakshina branch includes Kashmir Saiva darshanas, Svachanda Bhairavam, etc.,
making up a total of 18 Agamas. The Siddhanta branch has 28 Agamas, and this article
concerns with these 28 only.

The definition of Siddhanta often quoted by writers may be given here :

"Siddhanta nama yah parikshakaih bahu vitam parikshya
hetubhih sadayitva stapyate nurnayah sa siddhantah"

That which stands many tests andis finally established is the Siddhanta.

Gautama nyaya sutram, 1.26


The 28 Saiva Agamas are said to have been revealed from all the five faces of Siva. The
first four taught five Agamas each, while the last, Isana, gave rise to eight.

The Sadyojata face revealed the Kamika, Yogaja, Cintya, Karana and Ajita. These were
taught to Kausika Rishi.
The Vamadeva face gave rise to Dipta, Sukshuma, Sahasra, Amsumat and Suprabheda, and
taught them to Kasyapa Rishi.
The Aghora face revealed Vijaya, Nisvasa, Svayambhuva, Agneya (or Anala) and Vira, and
gave them to sage Bharadvaja.
The Tatpurusha gave rise to Raurava, Mukata, Vimala, Chandrajnana and Mukhabimba (or
Bimba), and taught them to Sage Gautama.
The Isana face revealed Prodgita, Lalita, siddha, Santana, Sarvokta, Parameswara, Kirana
and Vatula to Sage Agastya.

(Footnote: Manikkavasagar accepts this tradition. He says that Siva revealed the Agamas
from the Mahendra hill from his five faces: Tiruvasagam 2, lines 19, 20.)

(There is another tradition, probably local puranic, that Siva revealed the agamas to
Parvati and Nandi. Parvati in turn revealed it to Lord Muruga. Nandi in turn revealed it to
his 8 disciples; Tirumular, Patanjali, Vyaghrapada, Sanatkumar, Sivayogamuni, Sanakar,
Sanadanar and Sanandanar. The reason I am mentioning this tradition is that it is curious
that Rishi Nandi hailed from the Himalayas (north Indian?), whereas all his disciples were
south Indians, and are vedic rishis themselves.

We are all familiar with the mantras and strotras corresponding with the 5 faces of Siva.
Most importantly, here we see with clarity that the tatpurusha mantras (tatpurushaya
vidmahe...) refer to Siva, and again here we see that the original(tat or 'that') purusha is
Siva., tying Him straight to the Rig Veda, Purusha hymns and the Purusha Sukta. No
ambiguity.

In the light of these findings, much of the obscurity of the vedas, vedic mantras and vedic
gods becomes clear. Probably or this reason Tirumular said that the Vedas is general while
the Agamas are specific.

Another equally revealing fact is that these rishis to whom Lord Siva revealed the agamas
are the same vedic rishis too. In other words there is clear indication that the agamas and
vedas have similar authors, and that they could not have been written far apart in time.
Scholars should take note of this in dating texts and temple worship.

The French Institute of Indology, Pondichery, which has been able to gather in whole or in
parts, 28 principle Agamas so far (according to its Editor, Sri N. R. Bhatt) and 45 of the
Upagamas.

From the volumn of writing under each head; chariya, kriya, yoga and jnana, it can be
clearly seen that the emphasis of the Agamas was equally on the jnana and the kriya parts;
that is, both the philosophical and the ritualistic aspects. The Agamas accept the Veda and
build upon it. The Vedanta may be termed the basis for the Agamic philosophy.

The kriya pada considers not the individual man alone but considers man in society. It has
a concern and involvement in the community around. The temple is an outward expression
of this concern. Congregational worship, besides festivals, is the one great force that holds
together society without disintegrating and the kriya pada lays down an elaborate code
therefore which is both emotional and artistic, and rational at the same time.

It is this activity that has held together the Hindu society through so may centuries when
alien cultures and religions bombarded it through political and economic impact. The kriya
pada is in essence considered to be parallel to if not identical with the yajnas of the Vedas.

But there are several other equally important subjects which are also dealt with
extensively. As an instance, we may mention temple architecture. The details of temple
construction here given are beyond what an excellent modern architect can dream of.
Other allied subjects dealt with here are sculpture, iconography, construction of the temple
car, geology, horticulture, astronomy, town planning, home science, water supply, health
and hygiene, food and many others. In short, we may say no area of human activity of the
period about 2,000 years back has been left out.

The charya pada deals with the daily observance and the personal discipline of the
worshippers. The purificatory ceremonies for the individual from the time of his birth, the
dikshas (initiations), the ultimate funeral rites and similar other ceremonies are described
here.

India, particularly Tamilnad in South India, has an unbroken tradition in culture, civilization
and religion which has been continuing for several thousand years. India is probably the
only country which has retained the pristine character of its ancient culture and civilization
unbroken to this day. Even here, the North of India has fared badly under successive
onslaughts of invasions and cultures, but it is agreed on all hands that the South has
preserved its culture almost intact; onslaughts have been fewer, less devastating, less
disintegrating and less powerful here. We would say that the Agamas, through their
prescription of spiritual goals for man, have served as the sentinels of the ancient culture.

The publication of 2 Agamas and 3 Upagamas: Raurava and Ajita Agama, and Matanga,
Kalottara and Mrgendra Upagama in the nagari script in the recent years by the French
Institute of Indology, Pondichery, under the able and dedicated guidance of the late Dr..
Filliozat and Professor N. R. Bhat had brought the Agamas again into focus. The rest of the
agamas and upagamas are unpublished and only available in the grantha script.

source:
'The Saivagamas' by M. Arunachalam,
Prof. Tamil University of Tanjavur
Associate, Dharmapuram Aadheenam
Associate, Kasi Mutt
Publisher:
Gandhi Vidyalayam
Tiruchitrambalam, Mayuram Taluk
609 204 India

Printer:
Kalakshetra Publications Press
Thiruvanmiyur, Chennai.

ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதற்கு மன்னிக்கவும். முடிவைப் படிப்பவர்களே யோசித்துக் கொள்ளவும். திருமந்திரத்தில் ஆகமங்கள் பற்றிய பாடல்களைத் தொகுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

சிதம்பர ரகசியம் - ஆகமச் சிறப்பைப் பற்றித் திருமூலர்!

ஆகமங்களைப் பற்றித் திருமூலர் கூறியவை தொகுத்துக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
திருமூலரின் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே வேதத்தின் சிறப்பைப் பற்றி 6 பாடல்களும், அதற்குப் பின்னர் ஆகமச் சிறப்பு என்ற தலைப்பிலே 10 பாடல்களும் வருகின்றன.

1.அதில் ஆகமங்கள் மொத்தம் 28 எனவும் அவை யாவுமே சிவபெருமான் அருளிச் செய்தவை எனவும் கூறுகின்றார். ஈசனின் ஈசான முகத்தில் இருந்து இவ்வாக்கியங்கள் வந்து ஆகமமாய் நிலை பெற்றது எனவும் சொல்கின்றார். அதற்கான பாடல்:

//அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.//

2.இந்த ஆகமங்களை எண்ணினால் 28 என்றாலும் அவை இந்த அளவில் நில்லாமல் அளவின்றியும் உள்ளன. இவற்றைப் பற்றிக் கூறிய 66 பேர்களைத் தவிர, யானும் இது பற்றிச் சிந்தித்துத் துதிக்க ஆரம்பித்தேன்.

//அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.//

3.இறைவன் அருளால் அருளப் பட்ட இந்த ஆகமம் ஆனது வானோர்களாலும் அறியப் படாத ஒன்றாகும். இவை அனைத்தும் சொல்லப் பட்டால் பூவுலக மாந்தர்க்கு அறிய முடியாத ஒன்றாகும்.

//அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.//

4.சிவலோகத்தில் "சதாசிவ"மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலானோர்க்கு உணர்த்திய ஈசன், அவற்றைப் பூலோக மாந்தர் அறியும்படி உரைத்த போது,"சீகண்ட பரமசிவன்" ஆக இருந்து உணர்த்த, அதைக் கேட்ட நந்தி எம்பெருமான் மெய்யுணர்வோடு, அவற்றை உணர்ந்தவராய் மெய்யுணர்வோடு விளங்கப் பெற்றார்.

//பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.//

5.இத்தனை ஆகமங்களில் சிறந்ததான ஒன்பது ஆகமங்கள் நாத தத்துவத்தில் நிலைத்த சிவத்திடம் இருந்து வந்த காலத்தில், சிவமானது, விந்து தத்துவத்தில் நிலைத்த சத்தியினிடத்தில் இதை உணர்த்த, சத்தியானது, தன்னில் இருந்து தோன்றிய சதாசிவருக்கும், சதாசிவர், சம்பு பட்ச மகேசுவரருக்கும் அங்கிருந்து அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர், பின்னர் உருத்திரர், திருமால், பிரம்மா என அனைவருக்கும் சென்றடைந்த இந்த ஆகமங்களில் ஒன்பதை எங்கள் ஆசிரியர் ஆன நந்தி எம்பெருமான் சீகண்ட பரமசிவனிடமிருந்து பெற்றார்.
//சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவ ஆகமம்எங்கள் நந்திபெற் றானே.//

6. அந்த ஆகமங்கள் முறையே 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6......7.....8.... சுப்பிரபேதம், 9. மகுடம் ஆகியவை ஆகும்.

//பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.//

7. இறை அருளால் சொல்லப் பட்ட இந்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றின் உட்பொருளை, இப்பூவுலக மக்கள் அறியவில்லை எனில் அது அவர்களுக்குச் சரிவரப் பயன்படாது.

// அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.//

8.மக்கள் அனைத்து மெய்யுணர்வையும் உணராது, புலனுணர்வே மிகப் பெற்று வாழுங்காலத்து, அதைப் போக்கும் வண்ணம் சிவபெருமான், உமாதேவியார்க்கு "ஆரியம், தமிழ்" என்னும் இரு மொழிகளை உலகம் உய்யச் சொல்லித் திருவருள் செய்ய எண்ணங்கொண்டான்.

//மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.//

9.இறைவன் உயிர்களைப் பாசத் தளையினின்று விடுவிக்கின்ற முறையையும், பின் உயிர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பால் அவற்றைத் தன்னிலேயே நிலை நிறுத்தும் முறையையும், அவ்வாறு நிலை நிறுத்தும்போது, உயிரானது பண்டைய நினைவுகளால் மோதி அலைப்புண்டு, பாசத்திலே பொருந்தி நிற்பதையும், "தமிழ் மொழி, வடமொழி" இவ்விரு மொழிகளுமே ஒரே மாதிரியாக உணர்த்தும். அவற்றைச் சரியானபடி உணராதவருக்குச் சிவஞானம் கை கூடுவது அரிதே யாகும்.

// அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.//

10.மொழிகள் பதினெட்டு உள்ளன, அனைத்து மொழிகளுமே, சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் அனைவரும் உணர அமைத்த வாயிலே. அதை உணராத கற்றோர், எத்தனை தான் கற்றிருந்தாலும் "கல்லாதவர்" என்றே உணரப் படுவார்கள்.

//பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.//


ஆகமங்கள்ஆறு, ஏழு, எட்டு பற்றிய சிவசிவா அவர்களின் விளக்கம்


தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக உரையில் 6-வியாமளம், 7-காலோத்தரம், 8-சுப்பிரம்... என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், தருமை ஆதீன உரையில், "இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, 'நாயனார் திருமொழியன்று' என்பது தெளிவாய்த் தெரிகின்றது....." என்கிறார்கள். (தருமை ஆதீன உரை - quite reliable)

மகுடாகமம் பற்றிய சில குறிப்புக்கள்/வரலாறு.காமில் இருந்து!

மகுடாகமம் குறித்துச் சிலர் கேட்டிருக்கின்றார்கள். நான் தேடியவரை எனக்கு அது பற்றிச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாறு.காம். இல் இருந்து கிடைத்தவரை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.
'காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம், திருவாரூர் முதலான சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாக'ப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது.

'இராஜராஜீசுவரம் கருவறையில் உள்ள ஆவுடையாருடனான லிங்கத்திருமேனி கருவறையின் வாயிலைவிட அளவில் மிகப் பெரியதாகும். இத்திருமேனியை கருவறை கட்டிய பிறகு உளளே இருத்தியிருக்க முடியாது. அதனால், மூல மூர்த்தமான இத்திருமேனியை முதலில் பிரதிஷ்டை செய்து, பிறகே அதைச் சுற்றி விமானம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மகுடாகம மரபாகும்' எனும் பொருள்பட, 'தட்சிண கயிலாய' உரை நிகழ்வு அமைந்துள்ளது. மகுடாகம மரபு ஒருபுறம் இருக்கட்டும்; கருவறையிலுள்ள இலிங்கத்திருமேனி இப்போதுள்ள கருவறை நுழைவாயில் வழி உள்ளே சென்றிருக்க முடியுமா, முடியாதா என்பதைப் பார்ப்போம்.

இனி, 'பரசிவமும் மகுடாகமும்'. தம்முடைய 'தஞ்சைப் பெரிய கோயில்' என்னும் நூலின் 23ம் பக்கத்தில் திரு. பாலசுப்ரமணியன், மகுடாகமம் சிவலிங்க வழிபாட்டைக் கூறும்போது நவதத்துவம் எனறுரைக்கிறது. “சிவலிங்கத் திருமேனியின் நடுவே தூணாகத் திகழும் பாணமானது மூன்று வகை அமைப்புகளுடன் திகழும். இது அடியில் நான்கு பட்டையாகவும், இடையில் எட்டுப் பட்டையாகவும், மேலாக வட்டமாகவும் இருக்கும். சதுரத் தூண் வடிவை பிரம்மனாகவும் எட்டுப்பட்டை வடிவை விஷ்ணுவாகவும் வடடத்தூணை ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி எனப் பிரித்து உச்சிக்கு வரும்போது பரசிவம் எனப் பகுப்பர். பரசிவம் எனும்போது உருவமாகத் திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும். பிரமனில் வழிபாட்டைத் துவக்கி, 'பரசிவ' வணக்கம் கூறி பரவெளியான மலரஞ்சலியை முடிப்பர். இந்த நவதத்துவ வடிவமாகத் திகழும் சிவபெருமானை மணிவாசகர், 'நவந்தரு வேதமாகி வேதநாயகன்' என்று கூறுகிறார்' என்று முடிக்கிறார். மகுடாகமச் செய்தித் தொடர்பான மேற்கோள் குறிகள், 'சிவலிங்க' எனும் இடத்தில் தொடங்குகின்றன. ஆனால் முடியுமிடம் நூலில் சுட்டப்படவில்லை. அதனால், 'சிவலிங்க' எனத் தொடங்கும் மகுடாகமச் செய்தி இப்பத்தியில் எங்கு முடிகிறது என்பதை அறியக்கூடவில்லை. இநதச் செய்திக்கு அடிக்குறிபபும் இல்லை என்பதால், இது மகுடாகமத்தின் எந்தப் பிரிவில் எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய வாய்ப்பில்லை.
நன்றி: வரலாறு.காம்

சிதம்பர ரகசியம் - ஆகமம், ஒரு முற்றுப் புள்ளி!


தில்லைக் கூத்தன் ஆனந்த நடனம் ஆடிய இடம் தில்லையம்பதி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆகாசத்திலே பரந்து விரிந்த வெளியிலே, அவன் நடனம் தான் நித்தம், நித்தம் நடைபெற்று வருகிறது. இத்தகைய நடனத்தைத் தில்லையிலே ஆடும்போது இறைவன் அப்படியே தன் அம்சத்தோடும், தன் இறைசக்தியோடும் உறைந்த இடம் தான் தில்லைச் சிற்றம்பலம். தானே, அங்கு தன் முழு சக்தியோடு உறைந்த இடத்திலே கோயில் கொள்ள நினைத்த இறைவன், தனக்குத் தானே அங்கே கோயில் கட்டிக் கொண்டதாயும் சொல்லுவார்கள். இப்படி முதலில் இறை சக்தி இருந்து, பின்னர் மூலஸ்தான விமானம் கட்டிப் பின்னர் பிராகாரங்கள், பரிவார தேவதை சன்னதிகள், வெளிப்பிரகாரம், சுற்று மண்டபங்கள், ராஜ கோபுரம் என்று கோயில் கட்டுவது ஒரு மரபு. இம்முறையில் அமைக்கப் பட்ட கோயில்கள் "மகுடாகமம்" என்னும் முறையில் வந்ததாய்ச் சொல்கின்றனர்.

முதலில் கோயிலுக்குத் தேவையான அனைத்து அமைப்புக்களையும், கட்டுமானங்களையும் கட்டி முடித்துவிட்டுப் பின்னர் விக்ரஹப் பிரதிஷ்டை செய்து, அதில் இறை சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது இன்னொரு மரபு. இவை பின்னர் வந்த கோயில்கள் என்று சொல்லப் படுகிறது. முதலில் சொன்ன முறைப்படியான கோயில்கள் மிகவும் குறைவு. இவற்றில் முதலில் சொல்லப் பட்ட இறைவன் தானாகவே உறைந்து சக்தியுடன் இருக்கும் இடங்கள் மிக, மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாய்ச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் அத்தகைய ஸ்தலங்களில் முதன்மையானது. இறை சக்தியின் அற்புதம், பூரண வீரியத்துடன் வெளிப்படும் இடம் அது. ஆகவே இம்முறையில் குடி கொண்ட கோயில்களில் வழிபடும் முறையை "மகுடாகமம்" என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு வழிபடும் முறையும் மகுடாகம முறை என்று சொல்லி வந்திருக்கலாம். அப்போது தில்லையம்பதியிலே வழிபட்டு வந்த இறையாளர்கள் மேற்கொண்ட வழிமுறையைப் பின்னால் வந்த "தில்லை வாழ் அந்தணர்கள்" பின்பற்றவில்லை என்றும் சொல்லப் படுகிறது.

திருக்கைலையிலே இறைவனைக் காணாமல் அவரைத் தேடிவந்த அவர்தம் சிவகணங்கள், காசியிலேயும் இறைவன் இல்லாமல், அவர்தம் ஆனந்தத் தாண்டவத்தையும் காண முடியாமல் பரிதவித்த வேளையிலே இறைவனே, அவர்களைத் தில்லைச் சிற்றம்பலம் நாடி வரச் சொன்னதாயும், இந்தச் சிவகணங்கள் வந்ததும், பூஜை, வழிபாட்டு உரிமைகளை இவர்களிடமே இறைவன் ஒப்படைத்ததாயும், அது முதல் தில்லை வாழ் அந்தணர்களே, வைதீக முறைப்படி பூஜை, வழிபாடுகளைப் பதஞ்சலி தொகுத்துக் கொடுத்த "பதஞ்சலி பத்ததி"யில் மாற்றியதாயும் ஒரு கூற்று இருக்கிறது. முன்னர் செய்து வந்த மகுடாகமமுறை வழிபாடு தமிழா, வடமொழியா என்பது குறித்து, எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.





சிதம்பர ரகசியம்- தியாகராஜரும் நடராஜரும்


தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ, மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை, பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர், "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும்போது நடராஜர், "உலகெலாம்" என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோசமங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து, பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு, இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப் படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே, சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. இதைத் தான் "அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும்" என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப் படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப் பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை "அஜபா நடனம்" என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறுமுறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப் படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப் படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப் படுகிறது. மாசி-பங்குனியில் செய்யப் படுவது காலசந்தி, அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால், சித்திரையில் செய்யப் படுவது, உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும், ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும், ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும், புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப் படுகிறது.



சிதம்பர ரகசியம் - சித்தம் போக்கு, சிவன் போக்கு!


திருவாரூரில் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்வதில்லை. மாறாக "ஆரூரா, தியாகராஜா" என்றே சொல்லப் படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால், இது ப்ருத்வித் தலம் என அழைக்கப் படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப் பட்டு, பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று, இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம்.

"குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!" என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும், அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால்,

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும்,

கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும்,

பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை

பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய்

இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும், மணத்துக்காகவும் கூட இருக்கலாம். "சித்தம் போக்கு சிவன் போக்கு" என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்? தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும், அனைத்துக்கும் "நானே தலைவன்" எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம், தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே சரணம், அவன் திருவடிகளே போற்றி, போற்றி!

சிதம்பர ரகசியம் -ஆதிரைச் சிறப்பு



இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே ஈசன், அம்பிகை, கணபதி, சுப்ரமணியர், சண்டேஸ்வரர் என்றே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.


இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும்,சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப் படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். மேலே காணப்படும் "ககன கந்தர்வ கனக விமானம்" படம் கொடுத்து உதவிய திரு கைலாஷி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும், இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் எனச் சிலர் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.

நம் தமிழ்நாட்டு அசெம்பிளியிலும் சரி, லோக்சபா, ராஜ்யசபாவிலும் சரி, சபாநாயகருக்கு என்று ஒரு தனி மரியாதை கொடுப்பதோடு அல்லாமல், சபாநாயகர் இருக்கையில் பிரதம மந்திரி கூடவோ, அல்லது அசெம்பிளியில் முதல் மந்திரியோ கூட அமருவது மரபை மீறியது என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம் , யாருடைய வழிகாட்டுதலில் "சிதம்பர ரகசியம்" தொடரை எழுதுகிறேனோ, அந்த ராமலிங்க தீட்சிதர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரும் இதையே உறுதி செய்தார்.

//சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை அனைவரும் கண்டிருக்கலாம். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்!... ஆனால் தமிழ் !

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜரைக் காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசனக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்
மேற்கண்டவை "முகமூடி" என்பவர் ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் தேவாரங்கள் பாடப்படுவதாயே கூறி இருக்கிறார். அவரின் அனுமதி கிடைத்தால் அவர் பதிவும் இங்கே போடுவேன். விவாதத்துக்கு அல்ல.

திவாகர் சொல்லுவது!

அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!
ஏன் இந்தக் கூத்து?
நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம், 'வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும்போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூசைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும்போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க! (நீதான் எப்போதுமே கால்கடுக்க, அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...)

பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும், அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி!

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேதபாஷை புரிவதில்லை என்றுதானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின் முதல்சங்கத்தின் முதல்வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து?

யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய், அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!.

ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்டபோது, அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து, பிராணாதிஷ்டையும் செய்வித்து, அவர்களையும் தெய்வமாக்கியதோடு, தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்தபோது, காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. 'பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது' என்று நீ சொல்வது போலத்தான் பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இதுநாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து, அரவணைத்து அவர்களின் ஒழுங்கான, இதுவரை தவறாத, ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்..

மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக, வாராது வந்த மாமணி போல, அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே , எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.

சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்கவேண்டுமோ அதைக் கேட்டுவிட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால், என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன்.

எனக்கு, எனக்கென்றில்லை, எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும்
உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும்
உன் பக்தர்களிடத்தே, அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும்
பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும்
உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து'
ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும். அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!

உன் பக்தன்
திவாகர்



சிதம்பர ரகசியம் -உமாபதி சிவாசாரியாரின் கொடிக்கவி!


சிலர் கேட்டதுக்கு இணங்க முதலில் உமாபதி சிவாசாரியார் பற்றிய ஒரு முன்னுரையுடன் இன்றைய சிதம்பர ரகசியம் தொடங்குகிறது.
தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்டார். மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர், இயற்றிய பல நூல்களுள் "உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி" ஆகியன மிக மிக முக்கியமானவை. "கோயிற்புராணம்" என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் "சேக்கிழார் புராணம்" என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், "பெளஷ்கர ஆகமம்" என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.

தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.
கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.
கொடிக்கவி
1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.


சிதம்பர ரகசியம் -ஆனித் திருமஞ்சனம்!



ஆதிரையைத் தவிர நடராஜர் வீதி உலா தேரில் வரும் இன்னொரு நிகழ்ச்சி "ஆனித் திருமஞ்சனம்" ஆகும். இது ஒவ்வொரு வருஷத்திலும் தமிழ் மாதம் ஆன ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. உத்தர பால்குனி என்றே தீட்சிதர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். நடராஜருக்கு அப்போது அபிஷேகம் நடைபெறுகிறது. ஆங்கில மாதம் ஆன ஜூன் நடுவில் இருந்து ஜூலை நடுவரை உள்ள ஒரு நாளில் உத்திர நட்சத்திரம் வரும்போது இந்தத் திருவிழா நடைபெறும். கோடைக் காலத்தின் நடுவே நடைபெறும் இந்த உற்சவமும், வானமும், நட்சத்திரங்களும் சார்ந்தே இருக்கிறது. ஆகாயத் தலம் ஆன சிதம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளுமே ஆகாயம் சார்ந்து இருப்பதில் வியப்பு என்ன?

இந்த உத்திர நட்சத்திரம் "துருவ" நட்சத்திரம் என்று இந்தியர்களாலும், "pole star" என மற்றவர்களாலும் குறிப்பிடப்படும் நட்சத்திரத்துக்குச் சமானம் என்று சிலப் பழைய நூல்கள் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்கள். ஆனிமாதம் உத்திர நட்சத்திர நன்னாளில், ஆகாயத்தின் வடதிசையில், இந்தத் துருவ நட்சத்திரம் என்றழைக்கப் படும் நட்சத்திரம், தன் நட்சத்திரக் குடும்பத்து மற்ற நட்சத்திரங்களுடன், "ராஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேல் தெரிவதாயும் சொல்லுகிறார்கள். இதைத் தவிர, மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப் படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த குரு பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த குரு பூசம் என்பது 5 வருஷங் (அல்லது அதற்கு மேலும் சில சமயம் ஆகிறது,)களுக்கு ஒருமுறை,மட்டுமே வரும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப் படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும். இனி வரும் நாட்களில், சில சரித்திரச் சான்றுகளைப் பார்க்கலாம்.



சிதம்பர ரகசியம் - சில சரித்திரக் குறிப்புகள்


//கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி
ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ. //

மேற்கண்ட குமரகுருபரரின் பாடலுக்கு விளக்கம் கீழே காணலாம். இனி,
இறைவனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடத்தப் படுவது எதற்கு எனப் பலரும் நினைக்கின்றனர். சொல்லவும் சொல்கின்றனர். ஆனால் அந்த ஆராதனைகளுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது.

ஈசனை அவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் இருந்து எழுப்பி, பின்னர் ஆராதனைக்குரிய இடத்தில் எழுந்தருளச் செய்வது தோற்றம் என்னும் சிருஷ்டியையும், இறைவனின் திருமேனியைப் பாலாலும், தேனாலும், சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களாலும், அபிஷேகம் செய்விப்பது, திருமஞ்சன நீராட்டுவது காத்தல் என்னும் திதியையும், இறைவனுக்குக் கறுப்புச் சாந்து அணிவிப்பது, அழித்தல், சம்ஹாரம் என்னும் தொழிலையும், வெண்ணிற ஆடையை ஈசனுக்கு அணிவிப்பது, மறைப்பு அல்லது திரோபாவம் என்னும் தொழிலையும், இறைவனின் திருமேனியை ஊர்வலமாய்த் திருவீதிகளில் பவனி வரச் செய்தலை, அருளல், என்னும் அனுக்கிரகத் தொழிலாகவும், கருதப் படுகிறது. இனி, சிதம்பரம் கோயிலில் சில சரித்திர நாயகர்கள் செய்த திருப்பணிகள் பற்றிய குறிப்புக்கள்.

காலத்தால் முற்பட்டது என்று சொல்லப் படும் சிதம்பரம் கோயிலில் எப்போது கட்டப் பட்டது என்று சொல்ல முடியவில்லை என்ற பொதுவான கருத்து இருந்து வந்தாலும், முதல் முதல் கோயிலில் திருப்பணிகள் செய்து, கோவிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மன்னன் ஹிரண்யவர்மன் ஆவான். இந்த அரசன், கெளட தேசத்தை ஆண்டு வந்ததாயும் இவன் பெயர் சிம்ஹவர்மன் எனவும், பின்னர் இவன் பெயரை ஹிரண்யவர்மன் என மாற்றிக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த அரசன் தன்னுடைய உடல் நலத்துக்காக தல யாத்திரை செய்து வந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவன் உடல் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு நன்றி செலுத்தும் விதமாய் நடராஜ ராஜாவின் சன்னதியைச் சுற்றிப் பல மண்டபங்கள் ஏற்படுத்தியதாய்ச் சொல்லப் படுகிறது.

இந்த அரசன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப் பட்டாலும் அதற்கான உரிய சான்றுகள் கிட்டவில்லை. ஆனால் உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தில் இந்த அரசனைப் பற்றிய குறிப்புக்கள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவன் காஞ்சியை ஆண்டு வந்ததாயும் சொல்கிறார்கள். இவனுடைய காலம் கி.பி. 5 அல்லது 6-ம் நூற்றாண்டு என்றும் சொல்லப் படுகிறது. என்றாலும் கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே தில்லைத் தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் போன்றவர்களின் குறிப்புக்களில் இருந்து தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர். பதஞ்சலி முனிவர் என்று ஒருத்தர் மட்டும் இல்லை எனவும், பலர் இருந்ததாயும் சரித்திர ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆன்மீகவாதிகளோ எனில் காலத்தால் முற்பட்டது எனச் சொல்லுகின்றனர். இந்த நடராஜரின் ஆட்டத்தைப்பற்றிய பல பாடல்கள் பலராலும் பாடப் பட்டிருக்கிறது என்றாலும், குமர குருபரரின் ஒரு பாடலை இங்கே காண்போம்.



கூற்று இருக்கும் அடல் ஆழிக் குரிசின் முதலோர் இறைஞ்சக் கொழுந்து என்பில்கி
ஊற்று இருக்கும் தில்லை வனத்து அசும்பு இருக்கும் பசும் பொன்

மன்றத்து ஒரு தாள் ஊன்றி வண்டு பாடச் சுடர் மகுடம் ஆடப் பிறைத்
துண்டம் ஆடப் புலித் தோலும் ஆடப் பகிரண்டம் ஆடக்
குலைந்து அகிலம் ஆடக் கருங் கொண்டலோடும் குழற் கோதையோடும் கறைக்
கண்டன் ஆடும் திறம் காண்மினோ! காண்மினோ!"

இறைவனின் ஆட்டத்தை வர்ணிக்கும் குமரகுருபரரின் இந்தச் செய்யுள் "சிதம்பரச் செய்யுட் கோவை"யில் இடம் பெற்ற பாடல் ஆகும். இது தவிர, குமரகுருபரர் சிதம்பர மும்மணிக் கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகியவையும் பாடியுள்ளார். இப்பாடலில் இறைவன் தன் ஒரு காலை ஊன்றித் தன் மகுடமும், தன் சடாமுடியில் சூடி இருக்கும் பிறை நிலாவும், புலித் தோலும் ஆடுவதோடு மட்டுமில்லாமல் தன் ஆட்டத்தால் அண்ட பகிரண்டத்தையும் ஆட்டுவிப்பதையும் குறிக்கிறார்.

சிதம்பர ரகசியம் - சரித்திரக் குறிப்புகள் தொடர்ச்சி!

உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தின் படி சிம்மவர்மன் காஞ்சிபுரத்தை ஆண்டுவந்ததாயும் பல்லவர்களின் முன்னோர்கள் எனவும் சொல்கின்றனர். இந்தச் சிதம்பரம் கோயிலின் கட்டுமானங்கள் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்ல முடியாதபடிக்குக் காலத்தால் பழமை வாய்ந்ததாகவே சொல்லப் படுகின்றது. பதஞ்சலி முனிவர் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை வாய்ந்ததாய்க் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டமைப்பை வைத்துச் சரித்திர ஆய்வாளர்கள் இது பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப் பட்டிருக்கலாம் என்றும், சிவகாமி அம்மையின் கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்குச் சமீபத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். நூற்றுக் கால் மண்டபம் சோழத் தளபதியான நரலோகவீரனால் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப் பட்டதாயும் சொல்கின்றனர். இது தவிர, சோழ மன்னன் முதலாம் பராந்தகன் இந்தக் கோயிலின் கூரைக்குப் பொன் வேய்ந்ததாகவும் கேள்விப் படுகின்றோம்.

தற்சமயம் சிதம்பரம் கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் அனைத்துமே மன்னன் கோபெருஞ்சிங்கன் என்பவனைக் குறித்தே சொல்லப் படுவதாயும், அவன் பல்லவர்களின் பிற்கால அரசன் எனவும், பிற்காலச் சோழர்களுக்கு முன்னால் ஆண்டவன் எனவும் தெரிய வருகின்றது. தெற்கு கோபுரத்தை ஏழு மாடங்களுடன் அவன் கட்டியதாகவும், அது தவிர பல்வேறு பொருட்களையும் தினசரி வழிபாட்டுக்கு அளித்ததாகவும், புஷ்ப கைங்கரியம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அறிகின்றோம். பொதுவாகவேச் சோழமன்னர்கள் அனைவருமே சிவபக்தியில் ஊறித் திளைத்தவர்கள் மட்டுமின்றித் தில்லைக் கோயிலில் பெரும் ஈடுபாடும் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். சோழ அரசருக்கு முடி சூட்டும் உரிமையும் தில்லை வாழ் அந்தணர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தது. மன்னன் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தில்லைப் பதியில் மறைந்திருந்த திருமறைகளை மன்னன் கண்டெடுத்து, நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் தமிழ் நாடெங்கும் ஓதுமாறு பணித்தான்.


இவனைத் தவிர, வீர ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் என முறையே சோழ அரசர்கள் பலரும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கின்ரனர். முதலாம் பிராகாரத்தை ஏற்படுத்தியவன் குலோத்துங்க சோழன் என்பதால் அவன் பெயரால் அது "குலோத்துங்க சோழன் திருமாளிகை" எனவும், பின்னர் இரண்டாம் பிராகாரம் அவன் மகன் ஆன விக்கிரம சோழன் பெயரால், "விக்கிரம சோழன் திருமாளிகை" எனவும் அழைக்கப் பட்டு வந்தது. விக்கிர சோழன் இது தவிர, மேற்குக் கோபுர வாசல், கோயிலுக்கு எனத் தேர் ஆகியன ஏற்படுத்தினான். ஒரு தெருவே அவன் பெயரில் விளங்கியது. அவனின் தளபதியான நரலோக வீரன் நூற்றுக் கால் மண்டபம், சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுகள் ஒரு பிராகாரம், மண்டபம் ஒன்றும் மற்றும் சிவகாமி அம்மையின் வெளி மதில் சுவர் போன்றவற்றை எழுப்பினான்.

பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் சபாபதிக்கு முக மண்டபம், கோபுரம், சிவகாமி அம்மையின் கோயிலின் மதில் சுவரின் எஞ்சிய பாகம் போன்றவற்றை எழுப்பினான். பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் முதன் முதலாக நடராஜருக்கு அன்னப் பாவாடை சாத்தும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சோழர்களுக்குச் சற்றும் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் பிற்காலப் பாண்டியர்களும் சிதம்பரம் கோயிலின் பல கட்டுமானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.


13-ம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1, மற்றும் 2 இருவருமே கோயிலுக்கு எனப் பல நந்தவனங்கள், நிலங்கள் போன்றவற்றைத் தானமாய் அளித்தனர். அடுத்து வந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தில்லைக் காளி கோயிலுக்கும் திருப்பணி செய்தான். கனகசபையைப் பொன்னால் அபிஷேகம் செய்த அவன் "பொன் வேய்ந்த பெருமான்" என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். மேற்குக் கோபுரத் திருப்பணியும் செய்த அவன் காலத்தில் துலாபாரம் என்னும் வழிபாடும் ஏற்பட்டது. வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன் இருவருமே பல திருப்பணிகளைச் செய்தனர் என்றும் தெரிய வருகின்றது. சோழ அரசர்களைப் போலவே இந்தப் பாண்டிய அரசர்களும் தில்லைப் பதியிலேயே தங்கள் மகுடாபிஷேகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


அதன் பின்னர் சோழ, பாண்டியர் காலம் முடிந்து விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம் நடைபெற்றது, என்றாலும் அவர்களும் எதற்கும் சளைக்கவில்லை. கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணி செய்கின்றார்கள். பல நாடுகளையும் வென்ற கிருஷ்ணதேவராயர் அதைப் போற்றும் வகையில் தில்லை நடராஜருக்கு மூன்று கிராமங்களைப் பரிசளிக்கின்றார். கோயிலுக்கும் விஜயம் செய்து வழிபடுகின்றார். வடக்கு கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் கட்டிய அவர், அந்தக் கோபுரத்தில் தன் உருவத்தையும் பதிக்கச் செய்திருக்கின்றார். அவருக்கு அடுத்து வந்த அச்சுத தேவராயன், 82 கிராமங்களைப் பரிசளிப்பதோடு அல்லாமல் வழிபாட்டு முறையையும், திருவிழாக்களையும் மேம்படுத்தும் வண்ணம் பல பரிசுகளையும் அளிக்கின்றான்.




சிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!

சிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது, சிம்மவிஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல்நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும்.

சைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என்.சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர்கோனும் ஒரு பல்லவ மன்னர்தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ, அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திரத் திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள்தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயில்களில் குடிகொண்ட சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார்.
11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும், நம்பியாண்டார் நம்பியும், மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

அடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு): பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசைகொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டுவந்த சிற்றரசன்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்துக் கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சம்ஸ்கிருத நூல்)

சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

திவாகர்

திரு திவாகர் கொடுத்த மேல் அதிகத் தகவல்களை அவர் அனுமதியுடன் போட்டுள்ளேன். இன்னும் தகவல்கள் யாரானும் கொடுத்தாலும் நல்லது.

24 பாடல்கள் ஆன க்ஷேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி, திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).



சிதம்பர ரகசியம் - சம காலத் திருப்பணிகள்!



விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அச்சுத தேவ ராயர், ஸ்ரீரங்க ராயர், வெங்கட ராயர் போன்றவர்களுக்குப் பின்னர், நாயக்க வம்சத்தைச் சேர்ந்த திருமலை ராயன், வீரப்ப நாயகன் போன்றவர்களும் பெருமளவில் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள். சேர நாட்டை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் நாயனாரும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். ஆனால் இவர் காலத்தில் சற்றே குழப்பம் ஏற்படுகின்றது. சேர நாட்டின் கொல்லம் ஆண்டை ஒட்டி இவர் 9-ம் நூற்றாண்டு என்று சொல்லப் படுகின்றது. ஆனால் இவரும், சுந்தரரும் சமகாலத்தவர். இவர் காலத்தைப் பற்றி www.thevaaram.org என்ன சொல்கின்றது என்று பார்த்தால்:


//சுந்தரரும் சேரமான் பெருமாளும் சமகாலத்தவர். சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாண்டிய நாடடைந்தபோது பாண்டிய மன்னனும், சோழனும் வரவேற்றனர்.

கொல்லம் ஆண்டின் தொடக்கத்தோடு, சேரமான் பெருமாளின் ஆட்சிக் காலத்தை இணைத்து கி.பி. 825-க்கு முன்னும் பின்னும் எனக் கூறுதல் பொருந்தாதெனப் பலரும் மறுத்துள்ளனர். சுந்தரரை வரவேற்ற பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670-710).// ஆகவே இவர் காலம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியும், 8-ம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம். இவர் எழுதிய "திருக்கைலாய ஞான உலா" திருக்கைலையிலேயே ஈசன் முன்னால் அரங்கேற்றப் பட்டுப் பின்னர் மாசாத்துவான் என்பவரால் திருப்பிடவூரில் அரங்கேற்றப் பட்டது என்று சொல்வதுண்டு. பின்னர் கேரளத்தின் கொச்சியில் ஆண்டு வந்த மகாராஜா ராமவர்மனாலும் கட்டளை மேற்கொள்ளப் பட்டு "கொண்டமநாயகன் கட்டளை" என்ற பெயரால் நிறைவேற்றப் பட்டது எனவும் அறிகின்றோம்.

இப்போது பதினெட்டாம் நூற்றாண்டின் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகள்:
காஞ்சியைச் சேர்ந்த பச்சையப்ப முதலியாரால், கோயிலின் திருவிழாக்களில் முக்கியமான பிரம்மோற்சவம் முறைப்படுத்தப் பட்டதோடு அல்லாமல், திருவாதிரைத் திருநாளைப் போன்ற முக்கியத்துவம், ஆனித் திருமஞ்சனத்துக்கும் அளிக்கப்பட்டுப் பெரிய அளவில் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டது. நடராஜரின் ரதம் இருக்கும் பீடம் உள்பட, ரதங்களையும் மராமத்து செய்து, கிழக்குக் கோபுரத்தின் திருப்பணியையும் ஏற்றுச் செய்ய ஆரம்பித்தார் பச்சையப்ப முதலியார். அது பூர்த்தி அடைவதற்குள் இறந்து போகவே, அவரின் மனைவியும், சகோதரியும் சேர்ந்து அவர் ஆவலைப் பூர்த்தி செய்தனர். இவரின் தூண்டுதலின் பேரில் மணலியில் வாழ்ந்து வந்த சின்னையா முதலியாரும் சிதம்பரம் கோயிலுக்கு நந்தவனங்களைச் செப்பனிடுதல், மற்றும் கோயிலின் பல திருப்பணிகள், எல்லாவற்றுக்கும் மேல் சித்சபையின் படிக்கட்டுகளை வெள்ளியால் அமைத்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்தார்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது.



சிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்!


அடுத்ததாய் நாம் காணப் போவது, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கும், கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே, ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம், கருடனுக்கு ஒரு சன்னதி, பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து, மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும், இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப் பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல், மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்,

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள
அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்த ராஜருக்கு.
ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில், 12-ம் நூற்றாண்டில் ஆண்ட 2-ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப் பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரியவருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம், வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப் பட்டு, திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுக் கோயிலும் கட்டப்பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன், மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியதோடல்லாமல், விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும், அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு, புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு, கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான்.

தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர், 1934-க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும், நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன



சிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் என்பவர் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப் பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப் பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று, எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும், அதைச் சேர்ந்த இருப்புக்கும், அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது, வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை, அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும், வணங்கும் செளகரியத்துக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றே கடவுள் என்பது மட்டுமே.

புராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும், அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு, இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல், தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர், யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும், சிலசமயம் பிரம்மா எனவும், சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை.
இவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது, தன் இடைவிடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ, நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும், தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே? இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவ-சக்தி ஐக்கியம் சிவ-விஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.



சிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!


தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.

பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,
"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று"
எனப் பொய்கை ஆழ்வாரும்,

"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.

பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!"
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,

நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,

தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,

வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,

அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!
(இது அப்பர் தேவாரம்)
ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.


கர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா ?
மேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா ?
பதில் தாருங்கள் அம்மா ,
அன்புடன்,
எ.சுகுமாரன் //
மேற்கண்ட கேள்வியைத் திரு சுகுமாரன் என்பவர் கேட்டிருக்கின்றார். சமீபத்தில் சிதம்பரம் சென்றபோது தீட்சிதரிடம் பேசிய வகையில் மேற்படி கேள்விக்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றே தெரிய வந்தது. காட்டு ராஜா (மராத்திய மேலும் மாலிக்காபூர் பற்றியும், அப்போது தான் தமிழ்நாடு வந்த மாலிக்காபூரிடமிருந்து நடராஜரைக் காக்க வேண்டி, தீட்சிதர்கள் போராடியதாயும் தெரிவித்தார். அதற்கான சரித்திரச் சான்றுகள் பற்றி பேராசிரியர் திரு டி.என். சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இருப்பதாயும் தெரிய வந்தது. மேலும் நந்தனாருக்கு ஒரு போதும் கொடி மரத்திற்கு எதிரே சிலை இருந்ததில்லை எனவும் சொன்னார். தீட்சிதருக்கு 70 வயதுக்குக் கிட்டத்தட்ட ஆகின்றது. ஆகவே கொடி மரத்திற்கு எதிரே நந்தனாருக்குச் சிலை இருந்தாலோ, அப்புறம் அகற்றி இருந்தாலோ, கட்டாயம் தெரிய வந்திருக்கும். மேலும் நந்தனார் சிலை இருந்ததாய்க் கூறப்படும் இடம் விஷ்ணு கோயில் திருப்பணிக்கான கட்டுமானப்பொருட்கள் வெளியிலிருந்து உள்ளே கொண்டுவர வசதிக்காக இடிக்கப் பட்டது. அதைத் தான் இன்று பலரும் நந்தனார் சிலை இருந்ததாகவும், அதை தீக்ஷிதர்கள் அகற்றிவிட்டதாயும் கூறுகின்றனர். விஷ்ணு கோயில் ராஜ கோபுரத்தின் கலசங்களுக்கு அருகே பார்த்தால் பூர்வத்தில்/ ஆதி காலத்தில் இங்கே சிவன் கோயிலாக மட்டுமே இருந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாய் நந்தியின் உருவச் சிலை சுற்றுச்சுவரில் காணப்படும். அந்த இடத்தில் ஏற்கெனவே விஷ்ணு கோயில் இருந்திருந்தால் நந்தி வந்தது எப்படி? சுவரின் பழமையையும், நந்தியின் பழமையையும் கவனித்தால் சாதாரணக் கண்களுக்கே இது தெளிவாய்த் தெரிய வரும்.

இதே போல் விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நடத்த தற்சமயம் ஏற்பாடுகள் செய்தது பற்றியும் பேசினேன். அது பற்றி தீட்சிதர் கூறியது தவிரவும், வேறு சில தகவல்களும் கிடைத்தன. நண்பர் சிவசிவாவும் அதே போன்ற தகவல் ஒன்றின் குறிப்புக் கொடுத்திருக்கின்றார். அதைப் போய்ப் பார்த்துப் படித்துவிட்டு அது பற்றி எழுதுகின்றேன்.

கீழே உள்ள கேள்விகள் என்னால் கேட்கப் பட்டவை. அதற்கான பதில்கள் எங்கள் தீட்சிதர் சொன்னது:

//வணக்கம். சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன். மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது.

நந்தி குருவாகின்றார் அனைத்துச் சிவனடியார்களுக்கும். மேலும் அனைத்துச்சிவ கணங்களுக்கும் தலைவனும் ஆகின்றார். பதினெட்டுச் சித்தர்களுக்கும் அவரே குரு. அவர் ஈசனிடமிருந்து கற்றுப் பின்னர் சனகாதி முனிவர்கள், சித்தர்கள் நால்வர், அவர்களிடமிருந்து மற்றச் சித்தர்கள், அவர்களிடமிருந்து சிவனடியார்கள் என அனைவரும் வரிசைக்கிரமமாய்ப் பாடம் கற்றதாலே, நந்திக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்பதாலும் நந்திக்குக் கீழே இருந்தே தேவாரம் ஓதுவார்களால் இன்றளவும் ஓதப் பட்டு வருகின்றது. இது அனைத்துச் சிவாலயங்களிலும் காண முடியாது. சிதம்பரம் மட்டுமே கோயில் என்று அழைக்கப் படுவது. ஈசன் தன் ஜீவ சக்தியோடு இங்கே உறைவதாயும், ஈசனே நேரிடையாய்க் கோயில் கொண்டிருப்பதாலேயும், அந்தக் கைலைக்கு இது நிகர் என்று சொல்லுவதாலும் இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான். பொதுவாக இது கோயிலின் பரம்பரை ஓதுவார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் அப்படித் தான் பாடி வருகின்றார்கள் இன்றளவும். பலமுறைகள் நேரிலே கண்டுள்ளேன்.

//மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா?.


பல அந்தணர்கள் தங்கள் பெயரையோ, ஊரையோ, கொடுக்கும் பணத்தையோ பற்றி வெளியே சொல்லாமல் திருப்பணிகள் செய்து வருகின்றார்கள். தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்தெல்லாம் வரவில்லை. திருக்கைலையில் இருந்தே வந்ததாய்ச் சொல்கின்றனர். மேலும் ஈசனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராய்க் கருதுவதால் கோயிலின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியதாகவும் சொல்கின்றனர். இனி அடுத்து, விஷ்ணு கோயில் பற்றிய சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்.



சிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்!


சிதம்பரம் கோயில், எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும், சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப் படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும், மாணிக்கவாசகர் காலத்திலேயும், இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே:

"முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப் பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன், தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ, வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும், பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும், மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே, தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப் பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில், இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)


இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும், தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ளவேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும், சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப் படுகின்றது. இந்த அரசன், பற்றிய பட்டயச் செய்திகளில், இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர, இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப் பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே, இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும், தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள், எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே!

இதுபோலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும், பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார், என்பதும், "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பட்டிருப்பதும், அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
.. தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது, பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும், அப்போது நடந்தவை பற்றியும் நாளை பார்ப்போமா??





சிதம்பர ரகசியம் - ரவிசங்கருக்கு பதில்கள்!


நாம சரியா எழுதினாலும் சில சமயம் சில கேள்விகளால் ஏற்படும் குழப்பம் இப்போது எனக்கும் ஏற்பட்டது. அதிலே முக்கியமான கேள்வியாக குலசேகர ஆழ்வார் காலமும், திருமங்கை காலமும் எப்போ என்ற கேள்வி தான். குலசேகர ஆழ்வாரும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளைப் பத்திப் பாடி இருக்கார்னு நானே எழுதி இருக்கேன் தான் இல்லைனு சொல்லலை. திருமங்கை அதன் பின்னரா, முன்னரா என்ற தெளிவு ஏற்படவில்லை. பொதுவாக ஆழ்வார்கள் காலமோ, நாயன்மார்கள் காலமோ கொஞ்சம் குழப்பமாய்த் தான் போகின்றது எனக்கு. ஒருமுறைக்குப் பலமுறைகள் சரி பார்த்த பின்னரும், ஏழாம் நூற்றாண்டா, எட்டா என்பதிலே ஆரம்பித்து, பாடினது அவங்கதானா என்பது வரையில் குழப்பம் வந்துவிடுகின்றது. இம்முறை அப்படிக் குழப்பம் இல்லாமல் எழுதினாலும் கே ஆர் எஸ் குழப்பிவிட்டார். அவர் கேட்ட கேள்வி இதோ கீழே! என்னுடைய பதில் அடுத்து வருகின்றது. இதை
தேவாரம் தளத்தில் இருந்து எடுத்திருக்கின்றேன்.

3. முக்கியமான கேள்வி
//தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//

குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!

திருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்?

தீட்சிதரிடம் இதை வினவினீர்களா
July 18, 2008

//திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலயத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)

கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்."

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த
தில்லைத் திருச் சித்திர கூடம்"
என்று

திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது."

தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."
என்று

குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.
திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத்தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் - சிவபக்தன்:

மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.//

ஆகவே மாணிக்கவாசகர் காலத்திலே விஷ்ணுவுக்குக் கோயில் நடராஜர் சன்னதிக்குப் பக்கத்திலே இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது அவரின் திருக்கோவையாரில் உள்ள திருச்சிற்றம்பலக் கோவையில் இருந்து.
"புரங்கடந்தானடி காண்பான் புவி விண்டு புக்கறியா
இரங்கி எடந்தாயென்றீ ரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந்தானென்று காட்ட மற்றாங்கதுங்காட்டிடு என்று
வராய் கிடந்தான் தில்லை அம்பல முன் றிலம் மாயவனே!" என்று பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் தேவாரத்தில் எட்டாம் திருமுறையில் உள்ளது.

அடுத்து ரவிசங்கரின் கேள்வி இது:

//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//

ஏன் போனது ?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?

இப்போ வைணவர்கள் கைக்குப் போனவிதம் பற்றிக் கொஞ்சம் எழுதப் போறேன். அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப் பதில் இதோ!
தன் ஆட்சியின் முன்பகுதியில் சைவ, வைணவ சமயங்களில் சமநோக்குடையவனாகவே விளங்கிய நந்திவர்ம பல்லவன், பின்னாட்களில் திருமங்கை ஆழ்வாரின் சகவாசத்தால்தான், வைணவனாக மாறினான் என்றும், "முகுந்தன் திருவடிகளைத் தவிர மற்றொன்றிற்கு இவன் தலை வணங்கவே இல்லை." என தண்டந்தோட்டப் பட்டயம் கூறுவதாய்த் தெரியவருகின்றது. இவன் காலத்திலேயே திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் இருந்திருக்கின்றனர். இவனே முதன் முதல் விஷ்ணுவை இங்கே பிரதிஷ்டை செய்தது. பதஞ்சலி கேட்டதும், விஷ்ணு இங்கே வந்து நாட்டியம் பார்த்ததுக்குமான பதில் பின்னால் வரும்.


பணிந்த பல்லவன் எனத் திருமங்கை ஆழ்வார் நந்திவர்ம பல்லவனையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றார். இந்தக் கோயிலில் தில்லை மூவாயிரவர்களாலேயே வழிபாடுகள் நடந்து வந்தாலும், காலப் போக்கில், பிற்கால வைணவர்களில் சிலர் இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள். அவர்கள் செய்த தொல்லையால், தில்லையில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன. அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது அவன் அவைக்களப் புலவர் ஆன ஒட்டக்கூத்தரின் உலாவிலும், தக்கயாகப் பரணியிலும் குறிப்பிடப் பட்டுள்ளதாய்த் தெரியவருகின்றது.

சிதம்பர ரகசியம்- திவாகர் கேட்டதும், நான் சொன்னதும்!

//குழப்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்கள் முதல் பாரா சரியானதுதான். நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி விட்டுள்ளீர்கள்.//

குழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படியே சரியாத் தேதியைச் சொல்லணும்னு ஒவ்வொருத்தரும் கேட்டால் குழப்பம் எனக்குத் தான் வரும், வருது, வந்தது. சரித்திர ஆசிரியர்கள் கூட அனுமானமாகவே சொல்லி இருக்கின்றனர். அதை யாரும் எதுவும் சொல்லுவதில்லை, இல்லையா??

//கீதா! முதலில் ஆழ்வார்கள் கால அளவையெல்லாம் கணக்கில் எடுக்கப் பார்க்காதீர்கள். திருமங்கை மன்னனும் சரி.. குலசேகர ஆழ்வாரும் சரி.. சம காலத்தவர் என்று நீங்கள் எழுதியதற்கு என்ன ஆதாரம்? //

அப்பரும், ஞானசம்மந்தரும் மாதிரி இருவரும் ஒரே காலம் என்று சொல்லிக் கேள்வி தான் ஆதாரம் ஒவ்வொருத்தருடையதும் ஒவ்வொரு மாதிரி இருக்கு! ஆகவே சொல்ல முடியவில்லை.

//கோவிந்தராஜப் பெருமாள் ஏன் எப்படி வந்தார் என்பதெல்லாம் இனி ஆராய்வது முழுக்க முழுக்க வேஸ்ட். சிவ கதைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் விஷ்ணு ஆராதனைக்கும் இடம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே. சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையில் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். சிதம்பரத்திலும் விஷ்ணு வழிபாடு உண்டு. அதுவும் சிவ-விஷ்ணு வழிபாட்டில் சிறந்த பல்லவர் காலத்தில் இவை அதிகமாக போற்றப்பட்டுள்ளது. சிவனுக்குக் கோயில் எழுப்பித்த பல்லவமன்னர்களின் பெயர்கள் எல்லாமே திருமாலின் பெயர்கள்தான்.//

நான் இதை ஆராயவே இல்லை. எனினும் நண்பர் ஒருத்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இங்கே வந்திருக்கின்றது.

//சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்//

நான் எப்போவுமே அப்படித் தான் பார்க்கிறேன். அம்பிகையையும், விஷ்ணுவையும் ஒன்று எனச் சொல்லும்படியான பதிவும் போட்டிருக்கிறேன். என்றாலும் சில சமயம் என்னைக் குறித்து அப்படி ஒரு நினைப்பு வந்து விடுகின்றது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என நினைக்க வேண்டும். அதை மறந்துவிட்டேனோ??? சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது! என்றாலும் இதிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்கின்றேன்.

//மாணிக்கவாசகரின் காலகட்டத்தில் அவர் எழுதிய மணி மணியான பாடல்கள் திருச்சாழல். இந்தப் பாடல்கள் எதற்காக பாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை புத்த மதத்துப் பெரியவர்களுக்கும், மணிவாசகருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதத்தில் அந்த இலங்கை மன்னனின் ஊமை மகள் மூலமாகப் பாடச்செய்த அற்புதப் பாடல்கள் அவை. இலங்கை புத்தவம்ச சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்ற காலமாக மூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டார்களே என்று அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வில்லை. உலகத்துக்கு ஞானத்தை விட்டுச் சென்ற பெரியவர்கள் ஏன் அவர்கள் காலகட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அதற்கும் காரணம் உண்டு. நமக்குத் தேவை சாரம்தான்.. அது எங்கிருந்து எப்போது வந்தது என்ற ரிஷிமூலம் தேவை இல்லை.//

தெரியும், கேள்விப் பட்டிருக்கேன். மாணிக்கவாசகர் காலமும் நிச்சயம் இல்லை எது என்று. அதிலேயும் குழப்பம் தான் மிகுதி.

//இரண்டாம் குலோத்துங்கன் ஏதோ வைணவ எதிரி என்பது போல சித்தரிக்கிறார்கள். இதுவும் தவறு. இவன் திருமாலைப் போன்றவன் என்று அவன் மெய்க்கீர்த்திகள் பாடுகின்றன. விஷ்ணு திருத்தலங்களுக்கு இவன் சேவைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.//

இது தான் நான் சொல்ல வந்ததும், கல்வெட்டுக்கள் மட்டுமின்றி பாடல்களும் இருக்கின்றன என்பதே என் கருத்தும். ஆனால் இதை இப்போது நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அந்த "தசாவதாரம்" படத்தால் வந்திருக்கு! எல்லாம் நேரம்!

//பொதுவாக இந்த சைவ-வைணவ நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில் 1915 ஆம் வருடத்தில் ஆரம்பித்து 1950 வரை கிடைத்த சரித்திர செய்திகளின் ஆதாரங்களின் மீதே அனைவர் பார்வையும் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. தற்சமயம் நமக்கு ஏகப்பட்ட புதிய புதிய செய்திகள் கிடைத்துள்ளன. அவ்வப்போது இவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வந்து கொண்டே இருக்கிறது. டாக்டர் நாகசாமி, குடந்தை பாலசுப்பிரமணியம், மற்றும் டாக்டர் கலைக் கோவன், டாக்டர் நளினி இன்னும் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் சோழராஜாக்களைப் பற்றி புதிய புதிய செய்திகளை சொல்லிவருகிறார்கள். எஸ். பாலசுப்பிரமணியன் ஒரு இரண்டாயிரம் பக்கங்களுக்கு சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.//

மு.ராகவையங்காரின் குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். பாலசுப்பிரமணியனின் புத்தகம் பற்றித் தெரியவில்லை. குடவாயில்?? குடந்தை??? பாலசுப்ரமணியம் எழுதி உள்ளதும் கேள்விப் பட்டுள்ளேன்.

//கீதா அவர்களே.. உங்கள் சிதம்பரம் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டு வருகின்றன என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் தீட்சதர்கள் சொல்வதின் பேரிலேயே உங்கள் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன என்பதால் இவைகளை மற்றவர்கள் எழுதிய ஆதாரங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையில் எழுதுவது நல்லது என்று எனக்குப் பட்டதால் எழுதுகிறேன். மற்றபடி ஒரு நல்ல எழுத்தாளரை மனம் புண்படுத்த அல்ல.//

தீட்சிதர்களையும் நான் கலந்து கொள்வதால் ஆதாரங்கள் அனைத்துமே அதன் பேரிலே என்று சொல்கின்றீர்கள். தீட்சிதர்களும் நன்கு படித்து ஆராய்ந்தே எழுதி இருக்கின்றனர். தவிர, கோயிலோடு அவர்களுக்குத் தானே இன்றுவரையில் நடைமுறைப் பழக்கம் அதிகம் இருக்கின்றது. மற்ற ஆதாரங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் எல்லாம் மனம் புண்படாது. அப்படிப் புண்படும் அளவுக்கு மனது பலகீனம் இல்லை. எழுதுவதே மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்த்தே என்னும்போது, அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.

//நன்றி..

திவாகர் //

நன்றி நான் சொல்லணும். நன்றி.

சிதம்பர ரகசியம்- சில தகவல்களும், பதில்களும்!

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்கமுடியவில்லைதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல், உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும், குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப் பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.
இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் சரிவரப் பதிவு போடமுடியாததால் தாமதம் ஆகிவிட்டது. மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது.

கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அரசனால் நியமிக்கப் பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை, வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பின்னர் கொண்டமநாயக்கன் காலத்தில் இந்தச் சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையைப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும், போராட்டங்கள் நடத்தியும், கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும், தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும், அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்


The Aravidu Dynasty by Father Heras (P. 553)
1. A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A.D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava was there superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to "Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some refused, others by their legates importunatly urged and the Naiks of Gingee decreed to erect in the temple" These last words of Pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-install it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged'
This was the cause of the whole trouble. "The priests of the Temple which were the Treasuries" Continues, Pimenta (were) with standing, and threatening if it were done, to cast down themselves from the top. The Brahmanes of the temple swore to do the like after they buried the former, which yet after better advice they performed not". But Krishnappa Nayaka was unmoved by any such threat when the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple, "About twenty has perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so shot in this Zealous quarrel that she cut her own throat". Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.

தொடரும்.

சிதம்பர ரகசியம் - தொடர்ச்சி- சரித்திரத் தகவல்கள்

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.

ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.

டிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.

மேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த
சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.

பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.

சிதம்பர ரகசியம்- புதிய செய்திகள்

நேற்று தினமலர் பத்திரிகையில் திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்த சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியது. அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன்.
சிதம்பரம் கோயில் பற்றியும், அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற "வண்ணார் மடம்" பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் கால்த்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது.

விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அது பின்வருமாறு:

ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப் பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர்.
தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப் பட்டவளே காளி ஆவாள்.
இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப் பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப் பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப் படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப் பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார்.

திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும், அழுக்கான, கந்தலான வஸ்திரமும் கொண்டு, தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர்.

அடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். "ஐயா, தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ?" என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், "ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்." என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்?? சாமானியம் ஆனவரா?? இல்லை அல்லவா? சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா?? போடாத வேஷமா?? நடிக்காத நாடகமா?? ஆடல்கலையில் வல்லவன் அல்லவா?? ஆட்டுவிப்பவனும் அவனே, ஆடுபவனும் அவனே அல்லவா??

சிதம்பர ரகசியம் - திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி!

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார், திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்துவிட்டு, மேலும் சொல்லுவார்" ஆஹா, இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்துவிட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே!" என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய, தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன், சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்துவிட்டுப் பின்னர், மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியைப் பெற்றுக் கொள்கின்றார்.

குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இதுதானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர்.

ஆஹா, தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்துவிட்டோமோ? அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.
125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4
அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல், அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக் காக்க, நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான்.

மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.

நடராஜரும், தியாகராஜரும் - சில விளக்கங்கள்!

தில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ, தாளத்தை மறைத்துச் சொல்லப் பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப் படுகின்றது. திருவாதிரைத் திருநாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும், தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப் படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ, அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப் படும்.தில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால், திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப் பட்டால் திருவாரூரில் தியாகேசா, ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப் படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால், திருவாரூரோ, பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி, மண்ணாகி, எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி, மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப் படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம், அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப் படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால், திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும், நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும், மூலட்டான நாயகியும் தேவியர்.

நடராஜர் சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தைப் பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு, "தில்லை" என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும், மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.

சிதம்பர ரகசியம்- சில தகவல்கள்

பொதுவாக சிவன் கோயில்களில் விஷ்ணு ஒரு பரிவாரதேவதையாகவோ அல்லது தனி சன்னதியிலோ குடி இருப்பார். ஆனால் விஷ்ணு கோயில்களில் அப்படி சிவன் இருப்பதில்லை. ஒரு சில கோயில்கள் தவிர, அதில் திருமலையிலும், கடல்மல்லையிலும் சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து இருந்ததாய்த் தெரிய வருகின்றது. சில ஆழ்வார்களின் பாடல்களின் மூலமும் சிவ, விஷ்ணு சன்னதிகள் ஒரே கோயிலில் இருந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. அத்தகைய கோயில்கள் மிகப் பழமையானவை


புராணங்களில் தான் கடவுளர்களின் பல்வேறு வடிவங்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் முன்னால் பிரம்மம் என்ற ஒரே தத்துவமே இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. அந்த ஒரே சக்தியை பரமேஸ்வரன் என்று எடுத்துக் கொண்டால் அவரால் தோற்றுவிக்கப் பட்டவர்களே மும்மூர்த்திகள் என்று சொல்லப் படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர். இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர் என்பதும் முறையே முக்குணங்களின் சொரூபம் என்றும் (சத்வம், ரஜஸம், தமஸம்) சொல்லப் படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூவருக்குள் வேற்றுமையோ அல்லது ஒருவர் உயர்ந்தவர் மற்ற இருவர் தாழ்ந்தவர் என்றோ இல்லை எனினும் அந்த அந்தப் புராணங்களுக்கு ஏற்ப விஷ்ணு சில இடங்களில் உயர்ந்தவராயும், சிவன் சில இடங்களில் பிரம்மனையும், விஷ்ணுவையும் விட உயர்ந்தவராயும், இருந்து வந்திருக்கின்றனர். பிரம்மாவும் உயர்ந்தவராய் வெகு சில சமயங்களில் இருந்து வந்திருப்பதாயும், அவரின் வழிபாடு அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாய் நிறுத்தப் பட்டது என்றும் புராணங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

சிதம்பரம் கோயில் அத்தகைய சிவ, விஷ்ணு சேர்ந்து இருந்து வழிபடும் முறைக்கு ஒரு முக்கிய சான்று ஆகும். நடராஜர் எங்கே இருந்து ஆடுகின்றாரோ அதைத் தினமும் பார்க்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் கோவிந்தராஜரின் சன்னதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் தில்லை கோவிந்தராஜரின் தரிசனமும், தில்லை நடராஜரின் தரிசனமும் கிடைக்கும் வண்ணம் கோயிலின் சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகர் தம் திருக்கோவையாரில்,
புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
என்று சிவனின் அடி, முடி கண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றார். மேலும் சிவ புராணத்திலும், பத்ம புராணத்திலும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரே என்றும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இருவரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத சக்திகள் என்றும் குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியம் வேரூன்றப் பட்ட சமயங்களுக்குப் பின்னரே தனித்தனியாய்ப் பிரிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. ஆகவே அதற்கு ஏற்ப பின்னர் வந்த அரசர்களும் ஒரு சமயம் தீவிர சைவர்களாயும், ஒரு சமயம் தீவிர வைஷ்ணவர்களாயும் மாறி, மாறி இருந்து வந்திருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு அரசர்களும் ஒவ்வொரு வகையில் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.மேலும் பொய்கையாழ்வார்(???) தம் முதலாம்/மூன்றாம் திருவந்தாதி(???)யில், கீழ்க்கண்டவாறு ஹரியோடு ஹரனையும் கண்டதாயும் சொல்லுகின்றார்.
"தாழ் சடையும், நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னானுந்தோன்று மால் - சூழத்
திரண்டருவி பாயுந் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து!"

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன!

சிவகாமி அம்மனின் சன்னதிக்கு நேரே பாண்டிய நாயகர் கோயிலுக்குக் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கே ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளி யுள்ள நவலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் பாடியுள்ள 63 நாயன்மார்கள் தவிர, ஒன்பது தொகையடியார்களும் இருக்கின்றனர். இந்தத் தொகையடியார்களைக் குறித்து, அவர்களைப் போற்றும் விதத்திலேயே இந்தக் கோயில் ஒன்பது சிவலிங்கங்களும் எழுப்பப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. கல்வெட்டுக்களில் திருத்தொண்டத்தொகையீஸ்வரம் என இது குறிக்கப் பட்டிருப்பதாயும் தெரிய வருகின்றது. இப்போது சமீபத்தில் சென்ற போதும், அதற்கு முன்னால் ஜூலை மாதம் சென்ற போதுமே இந்தக் கோயிலைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையில் முடியவில்லை.

மேலும் சில சரித்திரத் தகவல்கள் வெள்ளை வாரணனார் கொடுத்தவற்றில் இருந்து மேற்கோள் காட்டுகின்றேன். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரத்து அரசர்கள், நாயக்க வம்சத்தவர் தவிர திருப்பணி செய்தவர்களில் மராட்டிய மன்னர்களும் இடம் பெறுகின்றனர் என்று இவர் தெரிவிக்கின்றார். சத்ரபதி சிவாஜியின் முதல் மகன் ஆன சாம்போஜி என்பவர் காலத்தில் தில்லை நடராஜர், சிதம்பரத்தை விட்டு வெளியே சென்று மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் வெளியே வந்ததாயும், இவர் காலத்திலேயே சிற்றம்பலத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடைபெற்றதாயும் தெரிவிக்கின்றார். இவரின் அதிகாரியான கோபால்தாதாஜி என்பவர் இவருக்காக இந்தப் பணிகளை நிறைவேற்றித் தந்ததாயும் அரசரின் குருவான முத்தையா தீட்சிதர் குடமுழுக்கை முன்னின்று நடத்தி வைத்ததாயும் சொல்லுகின்றார். இவரின் இந்தத் திருப்பணிகள் பற்றிய குறிப்புகள் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட, “தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50” என்னும் நூலில் சொல்லி இருப்பதாயும் சொல்லுகின்றார். அந்தக் குறிப்புகள் திருவாரூர்ச் செப்பேடுகளில் இருந்து எடுக்கப் பட்டதாயும், ஆரம்பத்தில் தில்லையிலே இருந்த இந்தச் செப்பேடுகள், நடராஜர் மறைந்து வாழச் சென்றபோது அவருடன் திருவாரூருக்கு எடுத்துச் செல்லப் பட்டு, காலப்போக்கில் திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் பட்டிருப்பதாயும் இவர் கூறுகின்றார். நடராஜர் மறைத்து வைக்கப் பட்ட வரலாறு பற்றிச் சில குறிப்புக்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் சமகாலத் திருப்பணிகள் பற்றியும் பார்த்துவிட்டு இதை முடிக்கலாம் என எண்ணம்.

மகமதியர் படை எடுப்பின் போது தென்னாட்டிற்கு வந்த ஒளரங்கசீபின் படைகள் செஞ்சியில் தங்கி இருந்ததாயும், அப்போது நடராஜருக்கும் கோயிலுக்கும் ஆபத்து நேருமோ என எண்ணிய தில்லை தீட்சிதர்கள் நடராஜரை இடம் பெயர்த்துத் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாய் ஒரு குறிப்பும், ஹைதர் அலி காலத்திலும், ஒரு முறை நடராஜர் இடம் பெயர்ந்ததாயும் சொல்லுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இருப்பதாயும் கூறுகின்றார்.

இது தவிர, மராட்டிய மன்னன் சாம்பாஜி காலத்துச் செப்பேடுகளிலும் இந்த விஷயம் வடமொழி, தமிழ் இரண்டிலும் பொறிக்கப் பட்டிருப்பதாயும் கூறுகின்றார். அவை பற்றிய விபரங்கள் நாளை!

சிதம்பர ரகசியம்- சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன.

தில்லைக் கூத்தனை ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைத்த இடம் பற்றிப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அனைத்துமே செவி வழிச் செய்திகள் ஆகவே காணப்படுகின்றன. புளியந்தோப்புப் பொந்தில் கூத்தனை ஒளித்து வைத்த இடம் சோழமண்டலத்தைச் சார்ந்த புளியங்குடி என்னும் சிற்றூர் என உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி 2-ம் பகுதி சொல்லுவதாய்த் தெரியவருகின்றது. ஆனால் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் "சிதம்பரம்" என்னும் நூலிலோ மலைநாட்டில் ஒளித்து வைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் பாண்டியநாடு மட்டும் சும்மா இருக்குமா என்ன? தங்கள் பங்குக்கு அவங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமம் தான் அந்த ஊர் என்றும் கூத்தன் ஒளிந்திருந்த இடம் இதுவே என்றும் அதற்குச் சான்றாக ராஜபாளையம் கடைவீதியை "அம்பலப் புளி பஜார்" என அழைப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்தப் பல்வேறுவிதமான தகவல்களும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கின்றன. அது கூத்தன் தன்னிருப்பிடத்தை விட்டு மறைந்து இருந்தார் என்பதே! தஞ்சை மாவட்டத்துக்காரர்களோ தங்கள் உடையாளூர் ஜமீனில் நடராஜரை வைத்துப் பாதுகாத்ததாய்ச் சொல்கின்றனர்.

ஆனால் மராட்டியர் செப்பேடுகளோ இதைப் பற்றிய தெளிவான குறிப்புகளைக் கொடுக்கின்றன. திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் படும் இவை எழுதிய காலம் சாம்போஜி மன்னன் காலம் ஆகும். மூன்று செப்பேடுகளிலும், வடமொழியிலும், தமிழிலும் எழுதப் பட்டிருக்கின்றது. செப்பேடுகள் எழுதப் பட்ட காலந்தொட்டே வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதப் பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இதுவும் அதைப் பின்பற்றியே எழுதப் பட்டிருக்கலாம். ஒரு செப்பேடு மட்டும் முழுதும் வடமொழியில் எழுதியிருக்கின்றது என்று சொல்கின்றார். செப்பேட்டின் ஒரு பகுதியில் வடமொழியும், மற்றொரு பகுதியில் தமிழிலும் எழுதி இருக்கின்றது.

கி.பி. 1684- எழுதப் பட்ட இந்தச் செப்பேட்டில் கூத்தனின் பெருமையைக் குறித்தும், மன்னனின் குருவான முத்தைய தீட்சிதரால் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப் பட்ட விபரமும் காணக் கிடைக்கின்றது. இந்தச் செப்பேட்டை அளித்ததோ சேரநாட்டுச் சிற்பி எனவும் தெரிய வருகின்றதாம். இதில் வடமொழிப் பகுதியில் காணப் படும் சில சொற்களால் கூத்தன் மறைந்திருந்த இடம் சேரநாடு எனவும் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எவ்வாறிருந்தாலும் கூத்தபிரான் சில காலம் தலைமறைவாய் இருக்க வேண்டி இருந்தது என்பது தெளிவு. மேற்கூறிய செப்பேட்டில் கண்டிருக்கும் பாடல் பின்வருமாறு உள்ளதாய்த் தெரிவிக்கின்றார்.

"இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிரவாரமும்
செயமான தசமியும் அத்த நட்சேத்திரமும்
திகழ்கும்ப லெக்கினமுமே
திருந்துபவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வாவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்ப அபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே"
இந்தப் பாடலின் படி சாலிவாகன சகாப்தம் 1606-ம் ஆண்டு, கி.பி. 1684-ம் ஆண்டு, தமிழ் ரத்தாட்சி வருடம், கார்த்திகை மாதம், இருபத்திரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும் ஹஸ்த நட்சத்திரமும் கும்ப லக்கினமும் சேர்ந்த சுபதினத்தில் தில்லையாண்டவர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்திய செய்தி செப்புத் தகட்டில் குறிக்கப் பட்டது எனச் சொல்லப் பட்டுள்ளது. மேலும் வடமொழிப் பகுதியில், கேரள தேசத்தில் மலைகளுக்கருகில் உள்ளவரும், மரங்களின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆடுபவரும், அருந்தும் குடிநீருக்கருகில் இருப்பவரும் அம்பலம் என்ற சொல்லின் இலக்கணமாய் அமைந்தவரும் ஆன சிவபெருமானுக்குக் கேரளத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு இது என்று சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிவிக்கின்றார்.

இந்த மேற்கண்ட தகவல்களின் படி தில்லைக் கூத்தனைக் கேரளத்தில் சிலகாலம் மலைகளுக்கிடையே மர நிழலில் மறைத்து வைக்கப் பட்டிருக்கவேண்டும் எனவும், தில்லையில் வாழ்ந்து வந்த திருச்சிற்றம்பல முனிவர் என்பவரின் பெரு முயற்சியால் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடத்தப் பட்டிருக்கின்றது என்பதும் புலனாகின்றது. "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை" என்பதில் இருந்து பொன்னோடுகள் ஒருவேளை அகற்றப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்.
இதனை அடுத்து வந்த ஒரு செப்பேடும் உறுதி செய்வதாய் அவர் சொல்லுவதாவது:
சர்வதாரி ஆண்டு மார்கழி மாதம் வெளியே சென்ற நடராஜருக்கு சாம்போஜி மன்னனின் ஆணையின் பேரில் கோபால் தாதாஜி என்பவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியதாகவும் இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் இருந்து ஆடவல்லான் தன் நடனத்தைப் பொன்னம்பலத்தில் தொடர்ந்ததாயும் சொல்லுகின்றார். விபவ ஆண்டு தை மாதம் 27-ம் நாள் வியாழக்கிழமை பெளர்ணமி திதியில், இந்தக் கனகசபை மீண்டும் முழுக்க முழுக்கப் பொன்னால் வேயப் பெற்றுப் புதுப் பொலிவோடு குடமுழுக்கு நடத்தப் பெற்றதாயும் கூறுகின்றார். இது பற்றிய மேலதிக விளக்கங்கள் நாளை காண்போம்.

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி!

தில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல், 1686-ம் வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரையிலும், கிட்டத் தட்ட 37 ஆண்டுகள், 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும், பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப் பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46-ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப் பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684-ம் ஆண்டு ஆரம்பித்து, 1686-ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு "ஊருடைய முதலியார்" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.

"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"

இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696-ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன்பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்துச் செல்லப் பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்குத் திரும்பும்போது திருவாரூரிலேயே தங்கிவிட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது.

அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டுமின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில்விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது.

எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ்ப் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால், திருவெம்பாவையும் ஓதப் படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப் படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர். வைணவக் கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பட்டாசாரியர்களே பிரபந்தச் செய்யுட்களையும் பாடுவதைப் போல் இங்கே தீக்ஷிதர்கள் தமிழ்ப்பாடல்களைக் கருவறையிலோ, அதை அடுத்த கனகசபையிலோ பாடுவதில்லை.
தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும், சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப் பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும், ராகமும் அமையாவிட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும், அன்பும், தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு காலபூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது.மேலும் பாலபிஷேகம் செய்யும்போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப் படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டுவந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும்போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும், பொதுமக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும், ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும், ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன.கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது முன்னும், பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும்போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் "தென்னாடுடைய சிவனே போற்றி!" "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" நடராஜா! திருச்சிற்றம்பலம்!" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப் படுகின்றது. நடராஜருக்குச் செய்யப் படும் அர்ச்சனைகளின்போது சொல்லப் படும் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ, பாடல்களோ, வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.

சிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்


சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி விஜயநகர சாம்ராஜ்யத்தின் கம்பண்ண உடையாரின் மனவியான கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.

1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.

சிதம்பர ரகசியம். கோயிலின் கட்டடக் கலைகள்.

இந்தக் கோயில் அவ்வப்போது பல்வேறு கட்டடக் கலைகளுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் கலாசாரத்துக்கும் வரலாற்றுக்கும் இந்தியக் கோயில்களே பெருமளவும் உதவி வந்திருக்கின்றன. முக்கியமாய்த் தென்னிந்தியாவில் உள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களின் கட்டுமானங்கள் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் சிதம்பரம் கோயிலும் பல்வேறு அரசியல் காலத்திலும் அந்த அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்றக் கட்டிடக் கலையைக் கொண்டு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.

முதலில் சரித்திரபூர்வமாய்ப் பார்த்தால் சிதம்பரம் கோயில் பல்லவர்கள் காலத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பனிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், பாண்டியர்கள் பனிரண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருப்பதாய்ச் சரித்திரப் பூர்வத் தகவல்கள் இருக்கின்றன. அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் வந்த நாயக்கர்களும் சிதம்பரம் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.
கோயிலின் அளவு கிழக்கு, மேற்காய் அளந்தால் குறைவாயும், வடக்கு, தெற்காய் அதிகமாயும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மற்றக் கோயில்களுக்கும் இதற்கும் உள்ள இந்த வேறுபாட்டினால் இந்தக் கோயில் செவ்வக வடிவில் அமைந்திருப்பதாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாய்ப் புராணங்களின்படி இந்தக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப் பட்டது எனவும், ஈசன் தானே கோயிலின் அமைப்பையும், கோபுரங்களின் அமைப்பையும் வடிவமைத்தான் எனவும் சொல்லப் படுகின்றது. மேலும் பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்களும் விஸ்வகர்மாவாலேயே இந்தக் கோயில் கட்டப் பட்டது எனச் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் நாம் பார்க்கும் கட்டிட அமைப்பு பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்தவையே என வரலாற்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். கோவிந்தராஜரின் கோயில் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்லுகின்றது.

இரு பெரும் நதிகளுக்கு இடையில் உள்ள வண்டல் மண்ணால் நிறைந்த பூமியில் கட்டப் பட்டிருக்கும் இந்தக் கோயிலுக்குக் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப் பட்டன என்பதை நினைத்து ஆய்வாளர்கள் வியக்கின்றனர். சுற்று வட்டாரம் 40 மைலுக்கு எங்கேயும் மலைகளோ அல்லது கற்கள் கிடைக்கக் கூடிய எந்த விதத் தடயமோ இல்லாத சூழ்நிலையில், சுற்றுச் சுவர்களில் ஆங்காங்கே சிற்பங்கள் செதுக்கப் பட்டும், உள்ளே தளங்கள் கற்கள் பதிக்கப் பட்டும் விளங்குவதோடு, ஒரே கல்லினால் செய்யப் பட்ட ஆயிரம் தூண்களைக் கொண்ட பெரிய ஆயிரக்கால் மண்டபத்தையும் கொண்டிருக்கின்றது. கோயிலின் குளமோ 150 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு மிகுந்த ஆழத்தோடு பெரிய கற்களால் ஆன நீளப் படிகளையும் கொண்டு விளங்குகின்றது.

சிதம்பர ரகசியமும், நவீன விஞ்ஞானமும்

தற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் நவம்பர் மாதத்திய இதழ் கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப் பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப் பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN, தலைமையகத்தின் முகப்பில் கிட்டத் தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது எனவும், அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர்.

"எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹரி, சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி, இந்திய அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்). இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தரவேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்??

கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும், அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும், சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது.

பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப் பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும், மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும், இயங்குவதும், பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.

நடராஜ வடிவின் உட்பொருள்: ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது.

நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும்போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல்,அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும்போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் , ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.

சிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்!

அக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா? இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குறிப்பிடுவதோடல்லாமல், பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப் பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்று சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி, பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.

இடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்? அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும், பிறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர்.

நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும், இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை, மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும், நடராஜர் ஆடி, ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும், அழித்தலையும் குறிக்கின்றது. கையில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது.

இந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப் படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும், மேலிருக்கும் இடக்கை அக்னியையும், மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும், சிரத்தில் உள்ள கங்கை நீரையும், கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.

கள வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். "Tao of Physics"என்னும் நல்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும், கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார். 1975-ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.

காப்ரா அவர்கள்" நவீன இயற்பியலின்படி ஆக்கல், அழித்தலின் தாளம், -Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்களுக்கு சிவ தாண்டவம் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப் படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்களுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது."

அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் "பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்" என்கின்றார். quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் "எண்ணற்ற பெருமைகளையும், வானம் போல் தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்" என்று பிரார்த்திக்கின்றார்.

பிரம்மா படைப்பார், விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும், அவரும் படைத்தல், காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சக்ருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ வடிவம்" என்ற நூலில் எழுதி இருக்கின்றார்.

நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம்.
நடராஜர் திருவடிகளே போற்றி!

சிதம்பர ரகசியம்- இது தான் சிதம்பர ரகசியம்!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

இங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும், பெண்களின் கூந்தலும், அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி, திருச்சிற்றம்பல நாதனின் புகழைப் பாடவேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும், அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும், எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம், நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும், எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர்.

ஈசனே முத்தமிழ். முத்தமிழே ஈசன். இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர், அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா?? அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும், அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி.

சிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே, உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும், உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே , ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும், நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளிவிட்டதாயும், ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும், உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான், பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி, முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான், பின்னரே பேச்சு வந்தது. என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும், கஷ்டப்பட்டு கற்கவேண்டிய இசை இரண்டாமிடத்திலும், அதைவிடக் கஷ்டமான நாடகமும், நடனமும் கடைசியாகவும் போய்விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி, அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.

சிதம்பர ரகசியம் - கோயிலின் கட்டிடக் கலை!


இப்போது மீண்டும் கட்டிடக் கலை பற்றிப் பார்க்கலாம். கோயிலின் முக்கிய பாகமும், மத்திய பாகமும் ஆன சித்சபை முழுக்க முழுக்க மரத்தால் ஆனது. அதன் அஸ்திவாரம் கல்லில் போடப் பட்டது. கூரையை முழுக்க தங்கத்தால் மூடி இருக்கின்றனர். விமானம் ருத்ரகோடி விமானம் என்ற பெயரில் வழங்கப் படுகின்றது. சித் சபையின் எதிரே நாம் பார்த்த கனக சபையும் கல்லால் ஆன அஸ்திவாரத்தின் மேலேயே நிற்கின்றது. மரக்கதவுகள், வெள்ளியால் மூடப் பட்டுள்ளன. இந்தக் கூடத்தின் கூரையைச் செப்புத் தகடுகளால் மூடி இருக்கின்றனர். அடுத்த முக்கிய இடமான நிருத்த சபையில் (இங்கே தான் சரபரும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றார் என ஏற்கெனவே பார்த்தோம்) 8 அடி உயரத்தில் உள்ள 56 தூண்கள் சித்திர விசித்திரமான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப் பட்டு தாங்குகின்றன. தென்னிந்தியாவிலேயே மிக
அலங்கரிக்கப் பட்டு தாங்குகின்றன. தென்னிந்தியாவிலேயே மிக அழகான அபிநய பாவங்களுடன் கூடிய சிற்பங்கள் இங்கே காணப் படுகின்றன.

சிவகாமசுந்தரியின் கோயில் தனியாகக் காணப்ப் படுகின்றது. தனி வாயிலும் உள்ளது . கற்களால் ஆன சங்கிலி இங்கே காணப் படுவதாயும் சொல்கின்றனர். அதை இன்னும் பார்க்கலை. என்றாலும் இவை எல்லாம் பிற்காலங்களில் விரிவு படுத்தப்பட்டவை என்றே சொல்லப் படுகின்றது. அது போலவே பாண்டியநாயகன் கோயிலும். சுப்ரமணியர் சந்நிதியோடு இருக்கும் இந்தக் கோயில் மிகவும் விரிவாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. கோயில்களின் கட்டிடக் கலையானது நிருத்த சபைக்கு அடுத்தபடியாக இங்கே அதன் உச்சத்தைக் காணலாம். இந்தக் கோயிலின் மத்திய மண்டபம் ஆனது விண்ணூர்தி போன்றதொரு அமைப்பில் சக்கரங்கள், யானைகள், குதிரைகள் துள்ளி விளையாடும் கோலத்தில் காணப் படுகின்றது. இது தவிர அநேக மண்டபங்கள் சிதம்பரம் கோயில் வளாகத்தினுள் காணப் படுகின்றன. அவற்றில் ஒற்றைத் தூண் மண்டபம் ஒன்று நூற்றுக் கால் மண்டபத்துக்கும் சிவகங்கைக் குளத்துக்கும் நடுவில் காணப் படுகின்றது. விநாயகருக்காக ஏற்படுத்தப் பட்டதாய்ச் சொல்லப் படும் இதை திருமூல விநாயக மண்டபம் என்று சொல்கின்றனர்.கோயிலின் வெளியே மூன்று பக்க மூலைகளில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபங்கள் இருக்கின்றன. இவை கோயில் திருவிழாக் காலங்களில் பலி பீடங்களாய்ப் பயன்படுத்தப் படுகின்றது. கோயிலின் ஈசான திசையில் 16 தூண் மண்டபம் இருக்கின்றது. நூற்றுக் கால் மண்டபம் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு அடுத்துக் காணப் படுகின்றது. இதன் எதிரே கோயிலின் வெளிப் பிரகாரத்தில் இருக்கும் சிவகங்கைக் குளம் இருக்கின்றது. சோழப் படைத் தலைவன் ஆன நரலோகவீரனால் இது கட்டப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. கிழக்கு மேற்காக 160 அடி நீளமும் வடக்கு தெற்காக 100 அடி அகலமும் கொண்டு உள்ளது. அஸ்திவாரம்41/2 அடி உயரத்தில் யாளி முகப்புடனும் அமைந்துள்ளது. இது பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.


சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம், பாப விமோசனம்!


அடுத்து ஆயிரக்கால் மண்டபம். இது தான் ராஜ சபை என்று அழைக்கப் படும். தேவாஸ்ரய மண்டபம் எனவும் அழைக்கப் படும். இந்த ஆயிரக்கால் மண்டபம் மூடியே இருப்பதால் நான் இன்னும் பார்க்கவில்லை. நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் மட்டுமே திறக்கப் படுகின்றது. உள்ளே 984 தூண்கள் போல் இருப்பதாயும், வெளியே உள்ள தூண்களும் சேர்ந்தே ஆயிரம் என்றும் சொல்லுகின்றனர். தூண்களில் பரத நாட்டிய சாஸ்திரத்தை விளக்கிக் கூறும் சிற்பங்கள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றனர்.

இது தவிர இந்தக் கோயிலின் கோபுரங்களின் அமைப்பும் வியக்க வைக்கின்றது. இவை பிற்காலச் சோழ மரபின் படி கட்டப் பட்டதாய் அறிய வருகின்றது.. கிழக்கு கோபுரம் மற்றவற்றை எல்லாம் பழமை வாய்ந்தது எனவும், அதுதான் மற்றவற்றை விடப் பெரியது எனவும் சொல்கின்றனர். 118 அடிகள் உள்ள அந்தக் கோபுரத்திலும் அருமையான, அழகான சிற்பங்களால் அமைந்துள்ளது. தெற்கு கோபுரம் பாண்டியனால் எழுப்பப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஏனெனில் கோபுரத்தில் மீன் சின்னம் உள்ளது என்றும் தெரிய வருகின்றது. கோபுரத்தின் நுழைவாயிலின் மேலே உள்ள மத்திய பாகத்தில் மீன் சின்னம் இருப்பதோடு அல்லாமல், கட்டிட அமைப்பும் பாண்டிய நாட்டுக் கோயிலான மதுரையின் சுந்தரேஸ்வரர் கோயில் கோபுர அமைப்பில் இருப்பதாகவும் சிலர் கருத்து என்றும் தெரிய வருகின்றது. நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துச் சொல்லும் சிற்பங்கள் அநேகமாய் அனைத்து கோபுரங்களிலும் காணப் பட்டாலும், கிழக்கு கோபுரத்தில் காணப்படும் 108 அபிநய முத்திரைகளுடனும், கிரந்த லிபியுடனும் கூடிய சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன மேற்கு கோபுரத்தில் சூரியன், சுப்ரமணியர், நர்த்தன விநாயகர் உருவங்கள் காணக் கிடைக்கின்றன. மேற்கு கோபுரத்தின் கீழ் பகுதியில் சுப்ரமணியர் தாரகனை மயில் மீது வந்து வதம் செய்யும் காட்சியைக் காண முடிவதாய்ச் சொல்லுகின்றனர். வடக்கு கோபுரத்தில் துர்கை, விஷ்ணு, கருடன் போன்றவர்களின் சிற்பத் திருமேனிகள் கிடைக்கின்றன. வடக்கு கோபுரத்தில் சிவ-பார்வதி திருமணக் காட்சி, பிரம்மா புரோகிதராய் இருந்து திருமணம் செய்து வைப்பதும், அனைத்து தேவாதி தேவர்களும் திருமணத்தைக் கண்டு களிப்பதும் காண முடிகின்றது. இது தவிரவும், நிருத்தசபையின் சிற்பங்களும் சிவகாமசுந்தரி ஆலயத்தின் சிற்பங்களும், பாண்டிய நாயகரின் கோயிலின் சிற்பங்களும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கண்ணையும், கருத்தையும் கவரக் கூடியவை.

கோபுரம் படங்கள் உபயம்:கூகிளாண்டவர் தயவில். ஆகவே தவறுகள் இருப்பதற்கு நானே காரணம்.

சிதம்பர ரகசியம் -திருவாதிரைச் சிறப்பு!

நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. பொதுவாக ஆதிரைத் திருநாள் அன்று சிவனைடியாரான சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனே அடியாராக வந்து சேந்தனாரிடம் களியும், குழம்பும் வாங்கிச் சாப்பிட்டதாயும், அந்தக் களி ஈசன் மேல் சிந்திக் கிடக்க, கோபம் கொண்ட தீட்சிதர்களுக்குச் சேந்தனாரின் பக்தியை வெளிப்படுத்த வேண்டி ஈசன் தன் தேரை ஓடாமல் தடைப்படுமாறு செய்கின்றார். அப்போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடாது கிடந்த தேரை நிலைக்குக் கொண்டு வருகின்றார் என்று சொல்லுவார்கள். இந்தப் பல்லாண்டு திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாம் திருமுறையில் கடைசி 29-வது சேர்க்கையில் கோயில் என்ற தலைப்பில் காணக் கிடைக்கின்றன.

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. 2

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3

சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்டகோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5

இந்தக் கதை எல்லாரும் அறிந்த ஒன்று. ஆகையால் நாம் காணப் போவது இந்த ஆதிரைத் திருநாளுக்கு உரிய நடராஜரின் திருமேனி சிதம்பரத்துக்கு வந்த கதை. அதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம். தன் தோல் நோயைத் தீர்க்க வேண்டி ஹிரண்யவர்மன் புனித நீராடியது சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது. எது எப்படியோ கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன், சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு. இவன் தான் பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்றொரு கூற்றும் உண்டு. இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் சிலை வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும்பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை வடிக்கச் சொல்கின்றான். சிற்பிகளும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. சிறிதாவது செம்பு கலவாமல் சிலை வடிக்க முடியவில்லை.அப்போது நமசிவாய முத்து ஸ்தபதி என்றொருவரை விட்டு வடிக்கச் செய்த செப்புச் சிலையின் வடிவழகு மன்னனின் கண்ணையும் கருத்தையும் மிகக் கவர்ந்தது. எனினும் அது செப்பு என்பதால் சிதம்பரத்தில் அதைப் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என எண்ணிய மன்னன் தூய பொன்னால் நடராஜத் திருமேனியை வடிக்கச் சொன்னான். இந்த முதல் சிலையை என்ன செய்யலாம் என யோசித்த மன்னனுக்கு இரண்டாவதாய் வடித்துக் கொண்டிருக்கும் சிலையைக் காட்டுவதற்காகச் சிற்பிகள் வந்து அழைத்தனர். சிற்பிகள் முகமோ குதூகலமாய் இல்லை. ஒரே கலவரம் கூத்தாடியது அவர்கள் முகங்களில். என்றாலும் தங்கள் குருநாதர் ஆணை! மன்னனை அழைத்துவர! ஆகவே மன்னனை சிலையைக் காண வருமாறு அழைத்தனர்.

சிற்பசாலையில் சிற்பியோ குழம்பிப் போயிருந்தார். நல்ல சுத்தமான பசும்பொன்னை உருக்கி எடுத்துச் சிலை வார்க்கும்போது எங்கிருந்தோ வந்தார் ஒரு முதியவர். பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேச்சில் கவனமாய் இருக்கையிலே தன் கையிலிருந்த செப்புக் காசுகளை பொன்னைக் குழம்பாய் உருக்கிக் கொண்டிருந்தவற்றில் போட்டுவிட்டு, இவற்றைச் சேர்த்துச் சிலை வடியுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். செப்பு உருகித் தங்கக் குழம்போடு கலந்து, அதை சிலையாகவும் வார்த்தாயிற்று. ஆனால் மன்னனுக்குத் தெரிந்தால்?? மன்னனிடம் சொல்லுவதா வேண்டாமா?? சிற்பி குழம்பிப் போய் இருந்தார். மன்னனும் வந்தான். சிலையைக் கண்டான். தூக்கிய திருவடியையும், ஊன்றிய திருவடியையும் கண்டான். கண் முன்னே அந்தக் கூத்தனே நடனம் ஆடுவதையும் உணர்ந்தான். சிலையைக் கைகளால் தொட்டுத் தடவிப் பார்த்தான். விரிந்த செஞ்சடை, அபய ஹஸ்தங்கள் என அனைத்துமே அவன் மனதில் பதிந்தன. என்றாலும் முழுக்க, முழுக்கப் பொன்னால் ஆனதா? சந்தேகம் கொப்பளிக்கச் சிற்பியை நோக்கினான்.

சிற்பி செய்வதறியாது மன்னனிடம் நடந்ததைச் சொன்னார். மன்னனுக்குக் கோபம் மூண்டது. தலைமைச் சிற்பியையும், உடனிருந்து உதவிய சிற்பிகளையும் சிறையில் இட்டான்.



சிதம்பர ரகசியம் - திருவாதிரைச் சிறப்பு! 2

சிற்பிகளைச் சிறையில் அடைக்கச் சொன்ன மன்னன் மீண்டும் ஒருமுறை சிலையைப் பார்த்தான். சுத்தச் சொக்கத் தங்கத்திலே செய்யச் சொன்ன சிலை இப்போது செம்பின் சிவந்த நிறத்திலேயே காட்சி அளித்தது. அன்றிரவு தூக்கம் இன்றித் தவித்த மன்னன் ஒருவழியாய்க் கண்ணயரும் தருணத்திலே அவன் முன்னே தோன்றியது ஓர் பேரொளி. கண்ணைக் கூசும் ஒளியைக் காணமுடியாமல் கண்ணை மூடித் திறந்த மன்னனின் கண்ணெதிரே நடராஜத் திருமேனி காட்சி அளிக்க, மன்னனுக்கு ஓர் அசரீரி போன்றதொரு ஒலி கேட்டது. "மன்னா! இது எம் விருப்பம். நாம் இங்கே செப்புத் திருமேனியாகவே காட்சி அளிக்க எண்ணம் கொண்டோம். உன் கண்களுக்கு மட்டுமே நாம் பொன்மேனியாகக் காட்சி அளிப்போம். இந்தச் சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்வாய். முன்னால் செய்த செப்புத் திருமேனியை இந்தச் செந்தமிழ் நாட்டின் தென் பாகத்துக்குக் கொண்டு போகச் சொல்! எந்த இடத்திற்கு அருகே வந்ததும், சிலையின் கனம் அதிகம் ஆகித் தூக்க முடியாமல் போகின்றதோ, அந்த இடத்தில் சிலையை இறக்கி வைக்கச் சொல்! மற்றவை எம் பொறுப்பு!" என்று ஆணை இடுகின்றார் கூத்தபிரான்.

அது போலவே மறுநாள் காலையில் சிற்பிகளை விடுதலை செய்த மன்னன், முதலில் செய்த செப்புத் திருமேனியை ஒரு அழகிய பல்லக்கில் வைத்துக் கூடவே சிற்பிகளையும் அனுப்பித் தெற்கே பயணம் ஆகச் செய்கின்றான். தெற்கே போகப் போக எதுவும் அடையாளம் தெரியவில்லையே எனக் கலங்கிய வீரர்களுக்கு தாமிரபரணியின் வடகரைக்கு வரவும் சிலையின் கனம் அதிகரித்து வந்தது தெரிய வருகின்றது. சிலையைக் கீழே வைக்கின்றனர். அசதி மிகுந்து போய்த் தூங்கிப் போகின்றனர் வீரர்களும், சிற்பிகளும். விழித்து எழுந்து பார்த்தால் சிலை அங்கே இல்லை. பதறிப் போனார்கள் அனைவரும்.

அந்தப் பகுதியின் அரசன் யார் என விசாரித்தார்கள். ராமபாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்ததாய்த் தெரிய வந்தது. சிவபக்தியில் சிறந்தவன் என்றும், தினமும் நெல்வேலி நெல்லையப்பரைத் தரிசனம் செய்யாமல், வழிபடாமல் உணவு உட்கொள்ள மாட்டான் எனவும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இச்சிலை தாமிரபரணிக் கரைக்கு வருவதற்கு முன்னர் ஓர் நாள், மன்னன் ராமபாண்டியன் கனவில் நெல்லையப்பர் தோன்றினார். ஏற்கெனவே பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் நெல்லையப்பரைத் தரிசிக்கச் செல்ல முடியாமல் மன்னன் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சமயம் அது. அப்போது தோன்றிய மன்னன் கனவில், நெல்லையப்பர் வந்து, "மன்னா வனத்துக்குப் போ. சிலம்பொலி கேட்கும். அந்தச் சிலம்பொலி கேட்கும் இடத்துக்கு எறும்புகள் சாரை, சாரையாய் ஊர்ந்து போவதும் தெரிய வரும். அந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து செல்வாயாக! அங்கே காணும் என் வடிவைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் எழுப்பு!" என்று சொல்கின்றார்.

விழித்தெழுந்த மன்னனுக்குக் கனவில் கண்டது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்திருந்த சமயம் வடக்கே இருந்து வந்த சிற்பிகளும், வீரர்களும் வந்து தாங்கள் கொண்டு வந்த அதி அற்புத நடனச் சிலையைக் காணோம் எனவும், ஈசனின் ஆனந்த நடன வடிவம் அது எனவும், சொல்லவே, மன்னன் மேலும் திகைத்தான். அவர்களையும் அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்றான். வனத்தினுள்ளே, உள்ளே, உள்ளே, சென்றான். திடீரென ஓர் இடத்தில் மத்தளம், கொட்டியது. பேரிகை முழங்கியது. தேவதுந்துபி முழங்கும் சப்தம் கேட்டது. தாளம் போடும் ஒலி, அத்தோடு யாரோ ஆடும் சிலம்பொலியும் கேட்டது. மன்னனுக்கு நினைவு வந்து கீழே பார்த்தால் எறும்புகள் சாரை, சாரையாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளைப் பின் தொடர்ந்தான் மன்னன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் நடராஜரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். மன்னன் ஆனந்தக் கூத்தாடினான்.
ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்கு அங்கேயே கோயில் எழுப்பவேண்டும் என்பதை அவர் குறிப்பால் அறிவுறுத்தியதையும் நினைவு கூர்ந்தான். அந்த இடத்திலேயே தில்லைக் கூத்தனுக்கு ஓர் அற்புதக் கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். திருநெல்வேலிக்கு வடகிழக்கே, 9 கி.மீ தூரத்தில் உள்ள ராஜவல்லிபுரத்துக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில். முழுக்க முழுக்கச் சிதம்பரம் கோயில் பாணியிலேயே கட்டப் பட்ட கருவறையோடு, கோயிலின் முகப்பில் காளிக்காகவும் ஒரு கோயில் இருக்கின்றது. சிதம்பரத்தின் எல்லையில் இருப்பது போல இங்கேயும் காளி குடி கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். இது மட்டுமா?? இதே போல் இன்னும் இரண்டு நடராஜர்கள் அதே சிற்பியால் செய்யப் பட்டு, இதே திருநெல்வேலி மாவட்டத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதைப் பற்றி நாளை காண்போமா??

சிதம்பர ரகசியம்- திருவாதிரைச் சிறப்பு பகுதி 3

ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா, இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன், இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள்.

ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர, வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன், வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும், கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப் பட்ட சிற்பி, அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர், அது சிலை என்பதையும் மறந்து, சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள, என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிகச் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை, அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம், அங்கிருந்து கருவேலங்குளம், கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்

சிதம்பர ரகசியம் - பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ, தான் பூக்களைப் பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால், புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம், மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும், கால்களும் இருப்பதால், ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள், தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு, பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம்.

அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து, நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??) இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும், வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள், ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப் படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி.

இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி, ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும், அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும், ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல, நந்தி சிரிக்கின்றார். "புலி, இது என்ன பெரியவிஷயம்?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?" என்று சொன்னார்.
இருவரும் பதஞ்சலியைப் பார்த்து, "உனக்குக் கொம்பும் இல்லை, கால்களும் புலிக் கால்கள் இல்லை, ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?" என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.


சிதம்பர ரகசியம்- பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!


பதஞ்சலிக்கு முகம் வாட்டம் அடைந்தது. தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, "பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்." என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

மேலும் கூறுகின்றார் ஈசன், "பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!"என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ "அப்படியே ஆகட்டும் ஈசனே!" என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தி எம்பெருமானின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி முழுமையாகக் கிடைப்பதற்காகக் காத்திருந்தேன், கிடைக்கவில்லை. கிடைத்த வரையிலும் கீழே போடுகின்றேன். வேறு யாரிடமாவது இருந்தால் போடலாம்.

"அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ!"

இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை "ஜல் ஜல்" என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.

இந்தப் பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது கண் முன்னே தெரியும்.

சிதம்பர ரகசியம் - பதஞ்சலி ஸ்தோத்திரம்



ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்

(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)


1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்

பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்|

கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்

சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||



2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்

விரிஞ்சிஸ¤ர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்|

பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்

சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||



3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸ¤ரஸரித்

தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்|

சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|

ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்

முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்|

சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்

ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்

கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்|

அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம்

ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்

முகுந்த ஸ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்|

அகம்ப மனுகம்பிதரதிம் ஸ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்

தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்

ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸ¤மனஸம் ஹிமருசிம்|

அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்

ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்

குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்|

முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்

ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||



9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்

ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ர வந்திதபதம்|

உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸ¤கந்தி வபுஷம்

பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||


10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:

ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்|

ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்

ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்||


|| இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம். ||

இந்த ஸ்லோகத்தின் முழுவடிவத்தையும் எனக்கு அனுப்பித் தந்த திரு சிவசிவா அவர்களுக்கும், திரு நடராஜஸ்வாமி தீட்சிதர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிதம்பர ரகசியம் - முடிவுரை!

சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும், பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம், இத்தனை மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்யமுடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும், நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள், யக்ஞங்கள் முறைப்படி செய்து, அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். ஹோமங்களும், யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது, பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ, இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப் படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்துவிடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும், பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ, பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும், பெண்களும் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும்.

சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் எனப் பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும், குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம்.

அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும், அபயஹஸ்தம் காத்தலையும், அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும், தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும், குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம், ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும், அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்டவ உண்மை கூறுகின்றது. ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் "ந" காரத்தையும், பாதாம்புஜங்கள் "ம" காரத்தையும், லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) "சி" காரத்தையும், டமருக ஹஸ்தம் "வா" காரத்தையும், அபய ஹஸ்தம் "ய" காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடைவிடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும், சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டைவிரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும், தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும், வெளி வந்தும், உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
*************************************************************************************

இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் கணவருக்குத் தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள முக்கிய காரணமாய் இருந்த எங்கள் குருவும் சிதம்பரம் கோயிலின் தீட்சிதரும் ஆன திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவருக்கே காணிக்கை ஆக்குகின்றேன்.

இந்தச் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதிலே என் பங்கு என்பது ஒண்ணுமே இல்லை, பல குறிப்புக்களைக் கொடுத்து உதவிய எங்கள் கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும், நண்பர் ஆகிரா அவர்களும், நண்பர் சிவசிவா அவர்களும், ஸ்வாமி சிவானந்தர் எழுதிய நடராஜர் பற்றிய தகவலகளும், சிவன் பற்றிய தகவல்களும்,பதஞ்சலி யோக சாஸ்திரம் பற்றிய வலைத் தளம், ஸ்ரீவித்யை பற்றிய வலைத்தளம், temple.net மற்றும் tamil.net போன்ற வலைத்தளங்களும், theevaaram.org, saivam.org, wikipedia.org, தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வலைத்தளம், தல புராணங்கள் என உள்ளனவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய வலைத்தளங்கள், இன்னும் கூகிள் தேடலில் கிடைத்த சில அரிய வலைத்தளங்களுமே இதற்குக் காரணகர்த்தாக்கள். அவற்றை நான் உபயோகம் செய்து கொண்டதைத் தவிர என் பங்கு ஏதுமே இல்லை. ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் என்னைப் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட மாலிக்காஃபூர் பற்றித் தகவல் தேடுகிறேன். "திண்ணை"யில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினது தவிர, கண்ணபிரான் கே.ஆர்.எஸ். கூகிளில் books.google.com -ல் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சுட்டி கொடுத்திருந்தார். என்றாலும் அதில் வரும் பிரமஹஸ்தபுரம் ஒருவேளை சிதம்பரத்தைக் குறிக்கலாம் என்ற அனுமானத்தைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. books.google.com -ல் புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பார்களோ, நம்மால் முடியாது என்று நான் மேலே போய் முயற்சி செய்தும் பார்க்கவில்லை!

துணைப் புத்தகங்கள்: A Study of Chidambaram and its Shrine, by T.Ramalinga Dikshithar M.A.Litt.,

Swamy Sivananda's Website: www.sivananda.org
Yoga details taken from : B.K.S. Iyengar's Books and சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.
சிதம்பர வைபவச் சுருக்கம்: நடராஜ ரத்ன தீட்சிதர், ஸோமஸேது தீட்சிதர், T.ராமலிங்க தீட்சிதர்.(புத்தகம் வெளிவந்த வருஷம் தெரியலை, மிகப் பழைய புத்தகம்,)
வைதிக சம்வர்த்தனி: ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மாவால் போடப் பட்டது. அதிலே உள்ள சிதம்பர புராணம் ஸோமஸேது தீட்சிதரால் எழுதப் பட்டது.
தில்லைக் கோயில் வரலாறு: கலைமாமணி, பேராசிரியர் அமரர் திரு க.வெள்ளைவாரணனார், தில்லைத் தமிழ் மன்றம் வெளியீடு.
தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் பழமையும் திருச்சித்திரகூட அமைப்பும்: ஆக்கியோர் தமிழ்ப்பெரும்புலவர், சித்தாந்தப் பேராசிரியர் திருவாளர் சபா. சிவப்ரகாசம் பிள்ளை அவர்கள், தில்லை. வெளியிட்டோர் தில்லைத் திருமுறைக் கழத்தோர்.
திருச்சிற்றம்பலமும், திருச்சித்ரகூடமும்: டாக்டர் ந. ராமசுப்ரமணியன், சட்ட நிர்வாக ஆலோசகர், பிருந்தாவன் அவென்யு, சென்னை -45.

இவற்றைத் தவிர, திரு சிவசிவா என்னும் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பலவிதத் தகவல்களையும், முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு ஆகிராவும் ஒரு சில சுட்டிகள் கொடுத்து உதவினார். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப் பட்டது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ராமலிங்க தீட்சிதரின் மகன் தங்க தீட்சிதர், தெற்குத் தெரு நடராஜ தீட்சிதர் ஆகியோரை நேரில் சந்தித்தும் , நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் மூலமும், ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.