கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
ஜோதிஜி திருப்பூர்
மின்னஞ்சல் – [email protected]
வகை – வரலாறு
வெளியீடு: த.ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – ஜோதிஜி திருப்பூர், த. ஸ்ரீனிவாசன்
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூலைப்பற்றி சில வார்த்தைகள்
அடுத்த பத்து தலைமுறைகளை அழிக்க காரணமாக இருந்த தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் என்ற ஊரில் இருந்து இதை கனத்த மனதோடு எழுதுகின்றேன். கடந்த 20 வருடங்களாக இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இன்று உயர்ந்த பதவிக்கு வந்து இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் கோபமும், இயலாமையும் எழுத்தில் எழுத இயலாத அளவிற்கு கடந்து போய்விட்டது.
என்னளவில் உருவாக்கிக் கொண்ட சில கொள்கைகள் கோட்டுபாடுகளின் படி சுற்றுப்புறத்தை நாசம் செய்யாத நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்துள்ளேன். அது போன்ற ஒரு நிறுவனத்தில் தான் தற்பொழுது “பொது மேலாளர்” என்ற பதவியில் இருக்கின்றேன். எனது முதல் புத்தகமாக வெளிவந்துள்ள “டாலர் நகரம்” என்ற நூலில் இங்குள்ள சாயப்பட்டறைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளேன். நான் கண்ட காட்சிகளை, பார்த்த பாதித்த அனுபவங்களை முடிந்தவரைக்கும் ஆவணப்படுத்தி உள்ளேன்.
தன் துறையில் இருக்கும் தரம் கெட்ட செயலை வேறு எவரும் துணிச்சலாக எழுத மாட்டார்கள் என்று இந்த புத்தகத்தை வாசித்த பலரும் எனக்கு பாராட்டுரை வழங்கினார்கள். 2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக விகடன் குழுமம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியும், என் வாழ்வின் எதார்த்த கடமைகளும் இரண்டு தண்டவாளம் போல இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மின் நூலிலும் நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன். என் குற்ற உணர்ச்சியையும், மனதில் உள்ள குறுகுறுப்பையும் இதன் மூலம் ஓரளவுக்கேனும் இறக்கி வைக்க விரும்புகின்றேன்.
இதுவரையிலும் மூன்று மின் நூல்கள் வெளியிட்டு உள்ளேன். இது எனது நான்காவது மின் நூலாகும். ஒவ்வொரு மின் நூலிலும் எனக்கு படங்கள் தந்து உதவிய “இயற்கை ஆர்வலர்” திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
இதில் இரண்டாவது பகுதியாக வந்துள்ள மரபணு மாற்றம் குறித்த கட்டுரைகளை நச்சு ரசாயனத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் திரு செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனக்கு அறிமுகம் செய்து வைத்த சேலம் திரு. லெஷ்மணன் அவர்கள் என் நன்றி. திரு. நம்மாழ்வார் படம் தந்த பசுமை விகடனுக்கு மிக்க நன்றி.
“நிகழ்காலத்தில் உள்ள சாத்தியக்கூறுகளோடு நம்மை பொருத்திக் கொண்டு நாம் பிழைப்பதற்கான வழியை மட்டுமே எப்போதும் பார்த்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று என் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உடன்பிறந்தோரும் எப்போதும் எனக்கு அறிவுரையாக சொல்வது வழக்கம்.
ஆனாலும் சமூகத்தில் மனிதர்கள் வாழும் சமரசத்துடன் கூடிய சாதாரண வாழ்க்கை என்ற எல்லைக் கோட்டை உடைத்தே இதுவரையிலும் வாழ்ந்து வந்துள்ளேன். இயற்கை போல எல்லைகளை கடந்த வாழ நினைத்த காரணத்தால் என் எழுத்துப் பயணத்தில் எல்லாத் துறைகளையும் நேர்மையோடு எழுத முடிந்தது. அரசியல், சமூகம், வரலாறு, அனுபவம் என்று கடந்த மூன்று மின் நூலிலும் என்னளவில் தெரிந்த வரையில் இயல்பான மொழியில் கொடுத்துள்ளேன்.
படித்த உங்களுக்கு என் நன்றி.
இயற்கை குறித்து அக்கறைப்படாமல் பணம் மட்டும் தான் வாழ்வின் குறி என்று வாழ்பவர்களை திருப்பூரில் தினந்தோறும் அதிக அளவில் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்போதும் நினைவில் வந்து போவது நான் கீழே கொடுத்துள்ள படமே. ஆயிரம் பக்கங்கள் எழுதி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இந்த ஒரு படம் உங்களுக்கு புரிய வைத்து விடும். படிக்கத் தொடங்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளை எழுதி வைக்கின்றேன்.
நன்றி.
ஜோதிஜி திருப்பூர்
தேவியர் இல்லம்.
27/03/2014
இங்கே கொடுத்துள்ள யூ டியூப் இணைப்பை சொடுக்கி இந்த பாடலை அவசியம் கேட்கவும்
Leave a Reply