வணக்கம். ஜோதிஜி என்ற பெயரில் ‘தேவியர் இல்லம்’ என்ற வலைபதிவில் 2009ஆம் ஆண்டு முதல் எழுதி வருகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி என்ற ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992முதல் தொழில் நகரமான திருப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன். ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் இருக்கின்றேன்.
எனது தளத்தில் தமிழர்கள், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள், எனது திருப்பூர் வாழ்வியல் குறித்த அனுபவங்கள் குறித்து பல கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்த போது 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ நான்காம் கட்ட போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் வந்த ஏராளமான புத்தகங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு புத்தகத்திலும் எழுதியவர் அவரவர் திறமைகளைக் காட்டியிருந்தார்கள். குறிப்பாக வணிக ரீதியாக அந்த புத்தகங்கள் அதிகம் விற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியிருந்தார்கள். இந்த சமயத்தில் ஈழம் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட பல நூறு புத்தகங்களை படிக்க வாய்ப்புகள் உருவானது.
நான் தொழில் ரீதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் நான் படித்த புத்தகங்கள் வாயிலாக நான் அறிந்த ஈழம் குறித்த விபரங்களை தவறாமல் என் வலைபதிவில் எழுதிக் கொண்டே வந்தேன். பல தரப்பட்ட விமர்சனங்கள் எனக்கு கிடைத்தது.
இதன் காரணமாக மேலும் மேலும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்கள் மூலம் என்னளவில் சில புரிதல்களை உருவாக்கிக் கொண்டேன்.
ஆனால் என் வலைபதிவில் நான் ஒவ்வொரு தொடர் தொடங்கும் பொழுதும் அதனை வாசித்தவர்கள் இதனை புத்தகமாக கொண்டு வரப் போகின்றீர்களா? என்று கேட்டனர். ஆனால் வரலாறு என்பது மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்று. அதன் தகுதிகள் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. இதுவரையிலும் நான் ஈழத்திற்குச் சென்றதும் இல்லை.
மேலும் தங்களின் தனிப்பட்ட வணிக லாபத்திற்காக ஈழத்தை வைத்து செயலாற்றியவர்கள் போல எனக்கு செயல்பட வேண்டும் என்று தோன்றாத காரணத்தால் திருப்பூர் குறித்து நான் எழுதிய “டாலர் நகரம்” நூல் ஸ்விஸ்சர்லாந்தில் இருந்து செயல்படும் இணையதளமான http://www.4tamilmedia.com/குழுமத்தின் சார்பாக திரு. மலைநாடன் அவர்களின் நேர்த்தியான கைவண்ணத்தின் மூலம் எனது முதல் படைப்பாக வந்தது. எனக்கு அதன் மூலம் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைத்தது.
விகடன் குழுமத்தின் மூலம் அது அனைவர் கையிலும் போய்ச் சேர்ந்தது.
நம்மால் இனி எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பின்பு நான் வலைபதிவில் எழுதியுள்ள ஈழம் சார்ந்த கட்டுரைகளில் உள்ள முக்கிய பதிவுகளை கட்டுரைகளாக இந்த மின் நூலில் மாற்றி உங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.
இது முழுமையான ஈழ வரலாறு அல்ல. ஆனால் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள ஈழம் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
இன்று வரையிலும் தமிழ்நாட்டில் ஈழம் குறித்து முழுமையாக அறிந்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் அறிந்து வைத்துள்ள விபரங்களின் அடிப்படையில் ஈழம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி பேசும் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்.
பிழைக்கப்போன இடத்தில் இவர்கள் ஏன் உரிமை கேட்கின்றார்கள்?.
ஏன் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்?
2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெல்ல முடியவில்லை?
இதை மட்டுமே மையமாக வைத்து இந்த மின் நூலை உருவாக்கியுள்ளேன்.
மீண்டும் சொல்கின்றேன். நான் தொழில் முறை எழுத்தாளர் அல்ல. எழுதியவற்றில் வரலாற்றுப் பிழைகள் இருக்கலாம்.
முடிந்தவரைக்கும் நான் வாசித்த பலதரப்பட்ட புத்தகங்களை, எதிர்மறை, நேர்மறை கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அதன் அடிப்படையில் எழுதி உள்ளேன். இதற்கு மேலாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாசித்த பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையிலும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்கள் புரிதலை அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள். எழுத்துப்பிழைகள் இருந்தால் அது என்னுடைய தவறாக எடுத்துக் கொள்ளுங்கள். எழுதியவற்றில் தவறு ஏதேனும் இருக்குமானால் தயை கூர்ந்து என் மின் அஞ்சல் வாயிலாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். பலருக்கும் கொண்டு சேர்க்க உதவுங்கள்.
இந்த கட்டுரைகளில் உள்ள பலவற்றை பல இடங்களில் படித்து இருக்கலாம். பலவற்றை செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டு கூட இருக்கலாம். ஆனால் இவற்றை எவராவது ஆவணப்படுத்துவார்களா? என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகியிருக்கக்கூடும். அந்த எண்ணமே என்னுள்ளும் இருந்தது. எனக்கு இதனை ஆவணப்படுத்தி வைத்து விடலாம் என்று உழைக்க வைத்தது. எவ்வித லாபநோக்கமின்றி நான் ஈழம் சார்ந்து கற்றதையும் பெற்றதையும் மின் நூலாக மாற்றி உங்களுக்குத் தந்துள்ளேன். இந்த மின் நூல் உருவாக காரணமாக இருந்த என் நண்பர் திரு. சீனிவாசன் (FreeTamilEbooks.com)அவர்களுக்கு என் நன்றி.
நான் வலைபதிவில் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அதிக அக்கறை கொண்ட நண்பர் திரு. இராஜராஜன் எனது ஈழம் சார்ந்த தேடலுக்கு தேவைப்பட்ட பலதரப்பட்ட புத்தகங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதை ஒரு கடமையாகவே வைத்திருந்தார். அவருக்கு எங்கள் தேவியர் இல்லத்தின் அன்பையும் பிரியத்தையும் இங்கே எழுதி வைக்க கடமைப்பட்டுள்ளேன். வாழ்க வளமுடன்.
நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
19.12.2013
மின் அஞ்சல் முகவரி – [email protected]
வலை தள முகவரி – http://deviyar-illam.blogspot.in/
வெளியீடு – FreeTamilEbooks.com
Download free ebooks
Download “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் epub” Ezham-Vandargal-Vendrargal.epub – Downloaded 51932 times – 14.57 MB Download “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் mobi” Ezham-Vandargal-Vendrargal.mobi – Downloaded 8119 times – 23.35 MB Download “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் A4 PDF” Ezham-Vandargal-Vendrargal-A4.pdf – Downloaded 59235 times – 4.53 MB Download “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் 6 Inch PDF” Ezham-Vandargal-Vendrargal-6-inch.pdf – Downloaded 10986 times – 20.97 MBபுத்தக எண் – 11
29/12/2013
Leave a Reply