அரசும் புரட்சியும்
லெனின்
எழுதியவர் | லெனின் |
---|---|
தமிழில் | ரா.கிருஷ்ணய்யா |
உள்ளடக்கம் | அரசைப் பற்றிய மார்க்சிய தத்துவமும், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும் |
நன்றி | முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ |
வெளியீடு | பாரதி புத்தகாலயம் |
முதல் பதிப்பு | ஜனவரி, 2013 |
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
முன்னுரை
லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? ‘வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு’ என்கிறார் லெனின். ‘சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது’ என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர். ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது. புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும்’ பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள். இந்த இலட்சிய ஈடேற்றத்தின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். ‘உலர்ந்து, உதிர வேண்டியதுதான்’ என்கிறார் லெனின். அது எப்படி ஏன்? இதைத்தான் இந்த நூல் முழுவதிலும் லெனின் விவாதித்திருக்கிறார்.
தேர்ந்த மொழி பெயர்ப்பாளர் அமரர் ரா. கிருஷ்ணய்யாவின் நடை நெருடல் இல்லாதது!
முதற் பதிப்பின் முன்னுரை
அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றப்படும் நிகழ்ச்சிப் போக்கை ஏகாதிபத்திய யுத்தம் அளவு கடந்த வேகமும் தீவிரமும் பெறச் செய்திருக்கிறது. அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவக் கூட்டுகளுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஒடுக்குவது மேலும் மேலும் அசுரத்தனமானதாகி வருகிறது. முன்னேறிய நாடுகள்_-அவற்றின் ‘உட்பகுதி’களைக் குறிப்பிடுகிறோம்_-தொழிலாளர்களுக்கு இராணுவக் கடுங்காவல் சிறைக் கூடங்களாகி வருகின்றன.
நீடிக்கும் யுத்தத்தின் முன்னெப்போதும் கண்டிராத கொடுமைகளும் துயரங்களும் மக்களுடைய நிலையைப் பொறுக்க முடியாததாக்கி அவர்களுடைய சீற்றத்தை உக்கிரமடையச் செய்கின்றன, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாய்த் தெரிகிறது. அரசின்பால் இதற்குள்ள போக்கு பற்றிய பிரச்சனை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி வருகிறது.
ஒப்பளவில் சமாதான வழியிலான வளர்ச்சி நடைபெற்ற கடந்த பல பத்தாண்டுகளில் திரண்டு பெருகிய சந்தர்ப்பவாதத்தின் கூறுகள் சமூக_-தேசிய வெறிப் போக்கினை உருவாக்கி அதற்கு ஊட்டமளித்திருக்கின்றன. இப்போக்கு உலகெங்கும் அதிகாரபூர்வமான சோஷலிஸ்டுக் கட்சிகளில் கோலோச்சுகிறது. சொல்லளவில் சோஷலிசம், செயலில் தேசியவெறி இதுதான் இப்போக்கு (ருஷ்யாவில் பிளெஹானவ், பத்ரேசவ், பிரெஷ்கோவ்ஸ்கயா, ருபனோவிச், ஓரளவு மறைமுகமான வடிவில் த்ஸெரெத்தேவி, செர்னோவ் வகையறாக்கள்; ஜெர்மனியில் ஷெய்டெமன், லெகின், டேவிட் மற்றும் பலர்; பிரான்சிலும் பெல்ஜியத்திலும் ரெனொடேல், கெட்டு, வண்டர்வேல்டே; இங்கிலாந்தில் ஹைண்ட்மன், ஃபேபியன்கள்,2 இத்தியாதி). ‘சோஷலிசத்தின் தலைவர்கள்’ ‘தமது’ தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கு மட்டுமின்றி “தமது’’ அரசின் நலன்களுக்கும் அடிபணிந்து இழிவுற்றுத் தொண்டூழியம் புரிவோராய் மாற்றமடைவது இந்தப் போக்கின் தனி விசேஷமாகும். வல்லரசுகள் எனப்படுவனவற்றில் பெரும்பாலானவை நெடுங்காலமாய் மிகப் பல சிறிய பலவீன இனங்களைச் சுரண்டியும் அடிமைப்படுத்தியும் வந்திருக்கின்றன, ஏகாதிபத்திய யுத்தம் இவ்வகைக் கொள்ளையைப் பகிர்ந்து கொள்வதற்கும் மறுபங்கீடு செய்வதற்குமான யுத்தமாகும். ‘அரசு’ குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.
முதற்கண், அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் போதனையைப் பரிசீலிக்கிறோம். இந்தப் போதனையில் கவனியாது புறக்கணிக்கப்பட்டிருக்கும் அல்லது சந்தர்ப்பவாத முறையில் திரித்துப் புரட்டப்பட்டிருக்கும் கூறுகளை மிகவும் முக்கியமாய் விளக்குகிறோம். அடுத்து, இந்தப் புரட்டல்களுக்குப் பிரதான காரணஸ்தராகிய கார்ல் காவுத்ஸ்கி குறித்து _ நடப்பு யுத்தத்தின்போது கையாலாகாததாகிப் பரிதாப முடிவை எய்தியிருக்கும் இரண்டாவது அகிலத்தின் (1889_1914) பிரபல தலைவர் அவர் _ தனிப்பட விவாதிக்கிறோம். இறுதியில், 1905_ஆம் ஆண்டு, இன்னும் முக்கியமாய் 1917_ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சிகளது அனுபவத்தின் பிரதான முடிவுகளைத் தொகுத்துக் கூறுகிறோம். 1917_ஆம் ஆண்டின் ருஷ்யப் புரட்சி இப்போழுது (1917 ஆகஸ்டுத் தொடக்கம்) அதன் வளர்ச்சியினுடைய முதற் கட்டத்தின் இறுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது மொத்தத்தில் இந்தப் புரட்சியை ஏகாதிபத்திய யுத்தத்தின் காரணமாய் மூளும் சோஷலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் கோவையில் ஓர் இணைப்பாய் அன்றி வேறு எவ்விதத்திலும் புரிந்து கொள்ள முடியாது, ஆகவே அரசின் பால் சோஷலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனை ஒன்றாகவும்_முதலாளித்துவக் கொடுங்கோன்மையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வெகுஜனங்கள் கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்_முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஆசிரியர் 1917 ஆகஸ்டு
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
அத்தியாயம் 2_க்கு 3_ஆம் பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர அநேகமாய் வேறு மாற்றம் எதுவும் இன்றி இந்த இரண்டாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.
மாஸ்கோ, 1918 டிசம்பர் 17 ஆசிரியர்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “அரசும்-புரட்சியும்” அரசும்-புரட்சியும்.epub – Downloaded 24454 times – 925.29 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அரசும்-புரட்சியும்” அரசும்-புரட்சியும்.mobi – Downloaded 8102 times – 2.39 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “அரசும்-புரட்சியும்” ArasumPuratchiyum_CustomA4.pdf – Downloaded 40814 times – 821.93 KB
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “அரசும்-புரட்சியும்” ArasumPuratchiyum_6inch.pdf – Downloaded 23754 times – 1.25 MB
புத்தக எண் – 123
டிசம்பர் 17 2014
Leave a Reply