fbpx

மன்மதன் லீலைகள் – மின்னூல் வெளியீடு

அன்பு நண்பர்களே,
மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து) தொடர் வெளியான காலம், என் வலைப்பூவின் வசந்த காலம் என்று சொல்லலாம். அனைத்து நண்பர்களும் அந்த நேரத்தில் கொடுத்த ஆதரவு இன்னும் பசுமையாய் ஞாபகம் உள்ளது. தொடரின் அடுத்தபகுதி வெளியாக ஒருநாள் லேட் ஆனாலே, மின்னஞ்சலில் மிரட்டும் அளவிற்கு பலரின் மனதைக் கவர்ந்ததாய் இருந்தது அந்த தொடர்.
‘மன்மதன் லீலைகள்’ என்ற பெயரைப் பார்த்து படிக்காமல்விட்ட சில சகோதரிகள், தாமதமாக தொடர் பற்றி அறிந்து படித்த கூத்தும் அப்போது நடந்தது. பெண்களுக்கும், பெண்ணைப் பெற்றோருக்கும், பெண்ணை வாழ்க்கைத்துணையாய் ஏற்கப் போவோர்க்கும் சுவாரஸ்யமாய் ஒரு நல்ல செய்தியைச் சொன்னோம் என்ற மனநிறைவை இந்த தொடர் கொடுத்தது.
சிலநாட்களுக்கு முன் பதிவர் வினையூக்கி தொடர்பு கொண்டு, இதை மின்னூலாக வெளியிடுவோம் என்று கேட்டார். நான் எப்போதும்போல் ‘என்னாத்த வெளியிட்டு..என்னாத்த படிச்சு..ஏற்கனவே புக் ஃபேர் அலப்பறைகளால் புக்குன்னால அலர்ஜி ஆகற அளவுக்கு நிலைமை இருக்கு. நாம வேற மக்களை இம்சை பண்ணனுமா?’ என்றேன். ‘நீ ஒத்து..எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்’ என்று களமிறங்கி, கடந்த நான்கு நாட்களாக ப்ரூஃப் சரிபார்த்து, அட்டைப்படம் வடிவமைத்து, அன்பர் டான் அஷோக்கிடம் முன்னுரை வாங்கி மின்னூலை ரெட் செய்துவிட்டார். அவரது உழைப்புக்கு என் மரியாதை கலந்த நன்றிகள்.
முன்பின் அறிமுகம் இல்லாவிட்டாலும், வினையூக்கியின் சொல்லை நம்பி டான் அசோக் இந்த புத்தகத்தை படிக்கவும், பிடித்திருந்தால்(!) முன்னுரை எழுதித்தரவும் ஒத்துக்கொண்டார். மின்னூல் நம் மானத்தைக் காப்பாற்றிவிட்டதால், அருமையான முன்னுரையும் எழுதிக்கொடுத்துள்ளார். இரண்டு நாட்களாக, மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் படித்து, முன்னுரை வழங்கிய டான் அசோக்கிற்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துரை எழுதிக்கொடுக்க முன்வந்த முகநூல் பிரபலம் கிளிமூக்கு அரக்கனுக்கும் நன்றிகள். இந்த மின்னூலை வெளியிட்ட https://freetamilebooks.com/ நிர்வாகத்தாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் மின்னூலாக மன்மதன்லீலைகளைப் படித்தபோது, பழைய வசந்தகாலம் மனதில் வந்துபோனது. தொடருக்கு கொடுத்த அதே ஆதரவை மின்னூலுக்கும் தரும்படி, அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். மின்னூலை படிக்கும் நண்பர்கள், தங்கள் விமர்சனத்தையும் சொன்னால் என்னை செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.
அன்புடன்
செங்கோவி

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.